கவிதை மூலமாக இலக்கிய பிரவேசத்தினை தொடங்குவது அநேகமாக தமிழில் அதிகமாக இருக்குமென நினைக்கிறேன். வெகு சன புத்தியில் குறிப்பாக எழுபதுகளில் இலக்கியமென்பது கவிதைதான் என்ற பார்வை இருந்தது. கதை -தொடர்கதை எழுதுவது என்பது சினிமாவின் நீட்சியாக பார்க்கப்பட்டது. திருமணங்களில் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் எவர்சில்வரில் கிடைக்கும் தட்டுகள் டம்ளர்களை வரிசை வைப்பவர்களிடையே, மாப்பிள்ளையின் ரசிகத்தன்மைக்கேற்ப (இதில் மணப்பெண்ணையெல்லாம் கணக்கிற்கொள்ள மாட்டார்கள்) எம்ஜியார் படத்தையோ சிவாஜிபடத்தையோ போட்டு வாழ்த்துமடல் தயாரித்து, சாஸ்திரிகள் ‘மாங்கல்யம் தந்துநானே’ சொல்லிமுடித்தாரோ இல்லையோ மைக்கை வாங்கி வாழ்த்து மடலை வாசிக்கும் வழக்கம் பின்னர் நடைமுறைக்கு வந்தது. அநேகருக்கு பள்ளியில் படித்த கவிஞர்கள் மறந்துபோகும், எதுகை மோனையைமட்டுமே இலக்கணமாகக்கொண்டு உள்ளூர் பெண்ணுக்கு காதல் கவிதை எழுத ஆரம்பித்த பயிற்சியில் திருமணங்களில் ஒரு பெரிய வாழ்ந்து மடலையே எழுதி சட்டமிட்டு மணமக்களுக்கு பரிசளித்துவிட்டு, அச்சடித்த மடலை கல்யாண மண்டபத்தில் சுண்டல்போல விநியோகிப்பதுண்டு. மணப்பெண்ணின் தோழிகளுக்குப் போய்ச்செரவேண்டுமென்பதில் குறியாக இருப்பார்கள். விநியோகித்து முடித்து ஆண்கள் கும்பலில் உட்கார்ந்தபடி பெண்கள் கூட்டத்தில் அதற்கு வரவேற்பு எப்படி என்பதை தெரிந்துகொள்ளும் ஆவலில் அவ்வப்போது தீனி தேடும் கோழிபோல தலையைத் திருப்பிக்கொண்டிருப்பார்கள். இவனுகளுக்கு வேற வேலை என்ன? என்று காதுபட முனுமுனுக்கும் பெருசுகளும் உண்டு.
என் நண்பன் ஒருவன் இருந்தான். மஞ்சள் நீர், திருமணம், தேர்திருவிழா நாட்களில் அம்மனுக்கு, இறப்பு நாட்களில் அஞ்சலி யென ஆசிரியப்பாவில் கவிதை எழுதியிருப்பான். ஒரு நாள் ரொம்ப வருத்தப்பட்டான். என்னம்மா ‘இத்தனை கவிதை எழுதிக்கொடுத்துட்டேன்’ என்னன்னுகூட கேட்கமாட்டேங்கிறா? என்றான். உனக்கு காதல் முக்கியமா கவிதை முக்கியமா எனக்கேட்டேன். காதல் என்றான். பேசாம கண்னதாசன் பாட்டுலே இரண்டு வரி எழுதிக்கொடு என்றேன். இவன் கண்ணதாசன் பாட்டை எழுதிக்கொண்டுபோனபோது அவளுடைய முறைப்பையனுக்கு நிச்சயித்திருந்தார்கள். வாலிபத்தில் முறுக்கேறும் இக்கவிதை யாத்தல் ஒரு பெண்ணிற்குத் தாலிகட்டின கையோடு அநேகருக்கு மறந்துபோகும். என்னிடம் கூடுதலாக சிலகாலம் தாக்குப்பிடித்திருந்தது. நண்பனிடம் பழகிய தோஷத்தில் இரண்டொன்றை அவ்வபோது அரைவேக்காட்டுக் கவிதைகளை (இப்போதைய பார்வையில்) பள்ளி இதழிலும்? கல்லூரி மலரிலும், சில வார சஞ்சிகைகளிலும் பார்த்து பரவசப்பட்டதுண்டு. பின்னர் காலப்போக்கில் சிற்றிதழ்களில் வருகிற கவிதைகளின் தரத்தைப் பார்த்து வேண்டாமென்று ஒதுங்கிக்கொண்டேன். அவற்றில் பரவாயில்லை சாதியைச் சேர்ந்தவற்றில் ஒரு சிலதை தளைத்தில் இட்டிருக்கிறேன், அதிலொன்று இங்கே இருக்கிறது, சகிக்க முடிந்தால் மற்றவற்றை வாசியுங்கள்:
ஞாபக அம்மா ‘(1990)
வாழ்வியல் கவித்துவத்தில்
குயிற்பாட்டாய் ஞாபகங்கள்
இளவேனிற்காலத்து
இலைநீர் முத்தென
காற்றில் கலந்து
மனதை விசிறிடும்
பசிக்கும் வாழ்க்கையில்
பழைய அமுது
நினைவு பதிப்பில்
பிழைதிருத்தப்படாமல்
பிரசுரமாவதில்
வருத்தமென்றில்லை
சுட்டதும் சுடாததும்
ஞாபகத்தில் உண்டு
சுட்டது அந்தரங்கமானது
சுடாதது அ(வ்)வைக்களிப்பது
ஒரு மழைநாளில்
எனக்காக அம்மா
இரவிரவாய் அலைந்து
நாய்குட்டி தோழனை
தேடித் துவட்டி
திண்ணையில் விட்டதாய்
ஞாபகம்
இப்போதும் எனக்குள்
நாய்குட்டிகள் உண்டு
அம்மா?
——-