Monthly Archives: மே 2026

ரா. கிரிதரன் என்றொரு இலக்கிய விமர்சகர்

 « துப்பாக்கிபோல் சொகுசாய்கிடக்கிறதுபேனா » மற்றும் « சாதகப் பறவையின் காத்திருப்பு » : ரா. கிரிதரன் விமர்சன நூல்களை முன்வைத்து….. )                                    

சொல்வனம் இணைய இதழை அறிந்தவர்களுக்கு, ரா. கிரிதரன் ஒரு பரிச்சயமான பெயர். கட்டுரைகள் (குறிப்பாக தமிழில் பிறர் அதிகம் தொட்டிராத இசை குறித்த திசையில்) சிறுகதைகள், இலக்கிய விமர்சங்கள் என தொடர்ந்து சோர்வின்றி இயங்கி வருபவர். இங்கே உங்களோடு நான் பகிர்ந்து கொள்வது அவருடைய இரண்டு விமர்சன நூல்கள் குறித்து. 

எண்ணிக்கையில், நானறிந்தவகையில் இவரளவிற்குத் திறனாய்வு என்கிற விமர்சன கட்டுரைகளையும் நூலறிமுகக் கட்டுரைகளையும் எழுதியவர்கள் தமிழில் இல்லை என்பதென் ஊகம். சகோதரர் ரா. கிரிதரன் எழுதியுள்ள கட்டுரைகளை வாசித்தவகையில் எடுத்துக்கொண்ட நூலை யார் எழுதினார்கள் என்பதைக்காட்டிலும் எப்படி எழுதப்பட்டுள்ளது என்கிற அடிப்படையில் வேண்டுதல் வேண்டாமைகளின்றி   விமர்சித்துள்ளார் என்பதை பதிவு செய்ய வேண்டும். இவ்விமர்சன நூல்களில் நவீன தமிழிலக்கியத்தின்   அனைத்து வடிவங்களிலும் : கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்களென அனைத்திலும் மனைதைப் பறிகொடுத்து, அறிவியலையும் அழகியலையும் ஒன்றிணைத்து படைத்துள்ள இக்கட்டுரைகள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. படைப்புலகம் என்கிற அரசவையில் வீற்றிருக்கும் படைப்பாளிகளின் ஆற்றலை, அவரவர் படைப்புகள் ஊடாக, விமர்சன துலாக்கோல்கொண்டு அளவிட முயற்சிக்கிறார். செட்டியார் மிடுக்கை பார்க்காது அதாவது படைத்தவர் யார் என்பதைக் காட்டிலும்(அதாவது சாதி, சமயம், சால்வைகள், ரசிகர்மன்ற உறுப்பினர், நூலின் எடை போன்ற எடைக்கற்களின்றி )   அன்னாருடைய சரக்கின் மிடுக்கைக் கணக்கிற்கொண்டு, நவீன இலக்கிய எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் அணுயுள்ளார்.   Criticism என ஆங்கிலத்திலும், critique என   பிரெஞ்சு மொழியிலும் சொல்லப்படும் வார்த்தையின் மூலம் criticus என்கிற இலத்தீன் சொல். அதன் பொருள் மதிப்பீடுசெய்பவர், சார்பற்று கருத்துரைப்பவர். அதாவது குறைகளை சுட்டியும், நிறைகளை பாராட்டியும் கருத்துரைக்கும் அல்லது தீர்ப்பெழுதும் ஒருவர். தமிழ்ச் சூழலின்  பெரும்பாலான வழக்கிற்கேற்ப ரசிக மனப்பாங்குடன் படைப்பினை கொண்டாடி எழுதுவது இக்கட்டுரைகளில் காண்பதரிது.

தமிழில் பொதுவில் விமர்சகர்கள் இருவகை. பிறமனிதர்களைக் காயப்படுத்தவென்றே விமர்சனங்களை வைப்பவர்கள் ஒருவகை.   குறைகளைக் களைந்து இனிவரும் நாட்களில் சம்பந்தப்பட்டவர் மேன்மையுற வேண்டும் என்ற நோக்கில் விமர்சனங்களை வைப்பவர்கள் பிரிதொரு வகை. விமர்சனம் அல்லது திறனாய்வு  ஒரு கலையெனில், உண்மையான விமர்சகர்களின் நோக்கம் இரண்டாவதாகத்தான் இருக்கவேண்டும். காரணம் கலையின் முயற்சி ஆக்கலேயன்றி அழித்தல் அல்ல.  

இன்றைய படைப்பிலக்கியம் நேற்றைய நெறிகளுக்கு உட்பட்டவை அல்ல, குறிப்பாக இலக்கணமென்கிற கைவிலங்கு கால்விலங்குகள் இன்றைக்கில்லை. சொல் புதிது, சுவைபுதிது, பொருள்புதிதென பாரதி வழியில் வாழும் காலத்தை கருத்திற்கொண்டு கலையும் இலக்கியமும் படைக்கப்படும் காலம்.  மரபுகளை சீர்தூக்கி பார்த்து, ஒவ்வாததை ஒதுக்கும் காலம்,

தவிர, பிறந்த மண்ணைத் துறந்து வாழ்பவர்கள் அனேகம்.  அவ்வாறு துறக்கிறபோது புலம்பெயர்ந்த மண்ணின் பண்பாடும், அரசியலும் அவர்கள் வாழ்க்கையில் ஏதோ ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. புலம் பெயர்ந்தவர்கள் வாழ்க்கை ஒருவகையெனில், சொந்தமண்ணில் வாழ்கிறவர்களின் நிலையென்ன ? அமெரிக்கர்கர்களாக ஐரோப்பியர்களாக வாழ்கிற தமிழர்கள் சென்னையிலும், கோவையிலும் இருக்கத்தானே செய்கிறார்கள். ஏன் இந்தியாவிலேயே பெங்களூரு, மும்பையென தமிழர்கள் வாழ்வதில்லையா ?  சிலப்பதிகாரம், மனோன்மணீயம் வாசித்த தமிழர்கள்  இன்று டால்ஸ்டாய், அல்பெர் கமுய் என வாசிக்கிறபோது, நடைமுறை வாழ்க்கை, உலக மயமாக்கலோடு ஒத்திசைந்து போகிறபோது, இன்றைய படைப்புகள்  அதை எதிரொலிக்கத்தானே செய்யும். இந்நிலையில் திறனாய்வாளர்களும் காலத்திற்கேற்ப படைப்புகளை அணுகவேண்டிய நெருக்கடி. பண்டங்களின் தராதரத்தை அதன் உற்பத்தியாளர்கள் செய்கிற விளம்பரங்கள் எங்ஙனம் தீர்மானிக்க முடியாதோ, அதுபோன்றே  விளம்பர உத்தியோடு  அல்லது அத்தகைய  நுட்பத்தோடு படைப்பிலக்கியத்திற்கு வைக்கப்படும் விமர்சனங்களை  நம்பியும் ஒரு படைப்பின் தராதரத்தை தீர்மானித்துவிடமுடியாது. இன்று படைப்பு வெளிவந்த கணத்திலேயே பதிப்பகமோ, எழுத்தாளர்களோ காட்டும் அக்கறையினால்  புத்தகங்கள் திறனாய்வாளர்களின்  கைக்கு வந்து சேர்ந்துவிடுகின்றன. இவர்களும் புத்தகம் கிடைத்த குறுகிய காலத்திலேயே எதையாவது எழுதித் தரவேண்டிய   நெருக்கடி. படித்து முடித்த படைப்பு உண்மையில் ஏற்படுத்தும் தாக்கமென்ன ? அனுபவமென்ன என்பதையெல்லாம் சிந்தித்து  எழுத  நேரம் கிடைப்பதில்லை. வாசித்த கணத்தில் எதை உணர்கிறார்களோ அதை உடனே எழுதிவிடுகிறோம். கலைப் படைப்பு என்பது கணத்திற்குரியது அல்ல, கணத்தைக் கடந்தது. காலத்தோடு எதிர்  நீச்சல் போடுவது. வாசித்து முடித்தபின், தொடரும் கணங்களில்,  நாட்களில் நமக்குள் அப்படைப்பு என்ன  நிகழ்த்துகிறது என்பது முக்கியம்.

அ. துப்பாக்கிப்போல் சொகுசாய் கிடக்கிறது பேனா

அண்மையில் நான் வாசிக்க நேர்ந்த நண்பர் கிரிதரனின் இரண்டு கலை இலக்கிய நூல்களில் இது முதலாவது. இந்நூல் நூலாசிரியர் மொழிபேதமின்றி வாசித்த கவிதைகள்,  கட்டுரைநூல்கள் பற்றிய எண்ணங்களை, ஏற்படுத்திய தாக்கங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறது. ஆயினும் இத்தொகுப்பில இடம்பெற்றுள்ள பாரதியாரின் குயிற்பாட்டு குறித்த இரணடு கட்டுரைகள் கவனத்திற்குரியன. பாரதியின் குயிற்பாட்டு நவீன தமிழில் சொல்லாலும், பொருளாளும், அதன் உட்பொருள் உணர்த்தும் தத்துவ மறையாலும் உயர்ந்து நிற்கும் கவிதைச்செல்வம்.

கட்டுரையாளர் வெறுமனே நுனிப்புல் மேய்ந்தவற்றை கட்டுத்தறி விலங்காக அசைபோடுபவரில்லை. « ஓர் எழுத்தாளனின் படைப்புகள் அத்தனையையும் ஒரு சேர படிக்கும்போது நமக்கு ஏதேனும் ஓர் ஒற்றுமை ஆங்காங்கே தென்படும். வாக்கிய பிரயோகங்கள், வார்த்தைகள், கருத்துக்கள் எனப் பலதரப்பட்டவகையில் நம்மால் எழுத்தாளரின் மொழி உலகுக்குள் பயணம் செய்யமுடியும் » என பாரதியின் குயிற்பாட்டுக் கட்டுரையின் ஆரம்பத்தில் கூறுவதற்கிணங்க, இத்தொகுப்பிலுள்ள நூல்களைப்பற்றிய கட்டுரைகளில் அன்றி, சாதகப்பறவையின் காத்திருப்பு என்கிற புனைவுகளைப் பற்றிய விமர்சன கட்டுரைகள் அடங்கிய நூலிலும், நவீன தமிழிலக்கிய இளையதலமுறையினருள் ஓர் அபூர்வ சுவைஞரைச் சந்திக்கிறோம்.

தொகுப்பில் 32 கட்டுரைகள் ; கவிதைகள், கலை, பண்பாடு, சுற்றுச்சூழலென சகோதரர் கிரிதரனின் பாடபேதமின்றி பலவும் அவரது வாசிப்பு நூலகத்தில் இடம்பெற்றுள்ளன. பாரதி,  ஆ.இரா வேங்கடாசலபதி, யா. மணிகண்டன்,பம்மல் சம்பந்த முதலியார், டாக்டர் தி.செ.சௌ.ராஜன், ஏ.கே.இராமானுஜன், சா.பாலுசாமி என தமிழறிஞர்களின் பட்டியல் நீள்கிறது.

 இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை எழுத்தாளர் சகோதரர், நமக்கு விமர்சன கட்டுரைகளென கூறுவதில்லை, அடக்கமாக அறிமுகக் கட்டுரைகள் என்கிறார். ஆயினும் அவை ஆர்வத்தோடு நண்பரால் தேர்வு செய்து விலைகொடுத்து வாங்கிய நூற்கள். இந்நூல்களைப் படைத்த பெருமக்களும் சடங்காக தங்கள் உழைப்பை தமிழுக்கு அளித்தவர்கள் அல்லர். தமிழின் பெருமையையும் பண்பாட்டையும் உயர்த்திப்பிடிக்க உழைத்துள்ள அறிஞர்கள். விளைவாக நூலில் பெருமைக்குறிய அவர்களுடைய உழைப்பைக் கோடிட்டுக் காட்டும் வகையில் சொற்கள் இயல்பாக வந்து விழுகின்றன.

அ.) «  கவிஞரின் சோகம் சொற்களையெல்லாம் உடைக்கவல்லது, மதியிழக்கச் செய்யும் வஞ்சகம் பெண்மையின் ரூபமாகவே ஆடவரை சூழ்ந்துகொள்ளும் காரணமென்ன ? ஆழந்தெரியா கிணற்றின் இருட்டிலிருந்து மேலெழும்பும் வித்தையை பன்நெடுங்காலமாய் நடத்திக்கொண்டு வந்தாலும், கவிஞனுக்கு என ஒரு வழியுள்ளதல்லவா ? » (பாரதியின் குயில்பாட்டு-1)

       ஆ.) « மாலையழகின் மயக்கத்தால் உள்ளத்தே

தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென

கண்டுகொண்டேன் கற்பனையே யானாலும்

வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க

யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ ?

      என பாரதி சட்டென முடித்துவிடுகிறார். கவிதை இத்தோடு முடிந்தாலும் கவிஞரின் சில கேள்விகள் கவிதையின் சாரத்தை அசைபோட்டு பார்க்க வைக்கின்றன. குயிலின் அழகை எப்படி தமிழில் இசைத்திடுவேன் ? கண்ணிரண்டும் ஆளை விழுங்கும் அதிசயத்தை எப்படி எழுதுவேன். »(பாரதியின் குயில் பாட்டு-2)

இ.) « பாடல் புனைவது, பத்திரிகையில் கட்டுரைகளெழுதுவதுபோன்ற செயல்பாடுகளுக்கிடையே கடிதங்கள் வழியாக ஞான விவாதங்களை பாரதி பலருடன் தொடர்ந்திருக்கிறார் எனும் செய்தியும் வெளிப்படுகிறது. பேராசிரியர் சுந்தரராம ஐயர் என்பவருடன் அத்வைதம் மற்றும் கீதைபற்றி கிட்த்தட்ட நான்கு மாதங்கள் விவாதம் நடத்தியுள்ளார்.

இதைப்போல இந்த நூல் பாரதியை புதுவெளிச்சத்தில் காட்டுகிறது. பாரதியைப் பற்றி அறியாதவர்கூட அவரது ஒன்றிரண்டு கவிதைகளை மேடையிலும் சினிமா பாடல்களிலும் கேட்டிருக்க முடியும். ஆனால் இக்கடிதங்களில் வெளிப்படும் பாரதி ‘இந்தியா’ நாளிதழில் கட்டுரைகள் எழுதிய பாரதியல்ல, காக்கைக்-குருவி எங்கள் ஜாதி எனும் மானுடப் பொதுமையைப் பேசிய பாரதியும் அல்ல. வளர்ச்சி எனவும், காலமாற்றம் எனவும் சமூகத்தின் இயக்கங்களை முடமாக்கிப்போடும் பல தீயசக்திகளோடு நித்தம் சண்டையிடும் ஒரு சாமுராய்போல இக்கடிதங்கள் பாரதியைக் காட்டுகின்றன »(பாரதி கருவூலம்-அ.இரா. வேங்கடாசலபதி)

ஈ) « பாரதியின் கடைசிக்கால கட்டத்திற்கு மிக முக்கியமான ஆவணமாகத் திகழும் இந்தப்படைப்பு இதுவரை பாரதி ஆய்வாளர்களுக்குக் கிடைக்காதது ஆச்சரியமே. மதம்பிடித்த யானையிடம் சிக்கிக்கொண்ட விதம் குறித்தும், அதில் அவருக்கு ஏற்பட்டத் துன்பம் பற்றியும் பலரது குறிப்புகளில் நாம் படித்திருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று முரணாகவே இதுவரை இருந்துவந்துள்ளன……

….யானை சம்பவம்தவிர பாரதியின் இறுதிக்காலம் எப்படிப் பட்டதாக இருந்தது ? அவரது கலைவெளிப்பாடு குன்றாத ஊக்கத்தோடு இருந்தது என்பதுதான் மணிகண்டன் ஆய்வில் தெரிகிறது. » (பாரதியின் இறுதிக்காலம்-கோவில் யானை சொல்லும் கதை :ய. மணிகண்டன்)

உ.) « தமிழ் நாடக இயல்பற்றி மிக முக்கியமான வரலாற்று ஆவணமாக இந்நூல் அமைந்துள்ளது. பம்மல் சம்பந்த முதலியார் பல நவீன நாடகங்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாது பண்டைய நாடகக் கலை பற்றி பல செறிவான நூல்களையும் எழுதியுள்ளார். இன்றைக்கு நமக்கு தமிழ் நாடகவியல் பற்றி அறிவு கொஞ்சமாவது கிடைப்பதற்கு உ.வே சாமிநாத ஐயர், பம்மல் ம்பந்த முதலியார் போன்ற பெரியவர்களே காரணம். »(நாடகத் தமிழ்-பம்மல் சம்பந்த முதலியார்)

ஊ.) « விஞ்ஞான காலகட்டம், தொழில்நுட்பங்கள் நம் விரல் நுனியில் எனப் பெருமைப்பட்டுக் கொண்டாலும், ஒரு சமுதாய மனிதனாக நாம் எவ்வளவு முன்னேறிவிட்டோம் எனும் கேள்வியைக் கேட்க வைக்கும் புத்தகம்…..

…..சொந்த அனுபவங்கள் மூலம் இதுதான் சரியான வழி எனக் கண்டடையும் முனைப்பு இந்நூலில் தெரிகிறது. அவ்விதத்தில் காந்தியின் சுயசோதனைகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன ».(நினைவு அலைகள்- டாக்டர் தி.சே.சௌ. ராஜன்)

« ராஜன் சுயசோதனையும் தேடலும் நிரம்பியவராக புத்தகம் முழுவதும் காணக்கிடைக்கிறார். அவரது வாழ்க்கையைப்பற்றி படிக்கும்போது, ஒரு மனிதன் தனது பிறப்பு அடையாளங்களை துறப்பதில் இருக்கும் கஷ்ட்டங்கள் , அவற்றை மீட்பதிலும் இருக்கின்றன எனும் உண்மை தெரியவருகிறது » ; »(நினைவு அலைகள்-டாக்டர் தி.சே.சௌ.ராஜன்)

எ) « பண்டைய இந்திய குகைகளில் வரையப்பட்டுள்ள குகை ஓவியங்கள் கலை மதிப்புக்காகவோ, ஆட்சியாளரின் பெருமைகளை பறைசாற்றும் விதமாகவோ, ஓவியர்களின் திறமைக்குச் சான்றாக அமைந்த தற்காகவோ வரையப்பட்டனவோ அல்ல. கலைமதிப்பில்லாத குகை ஓவியங்கள் அக்கால மக்களின் நம்பிக்கைச் சார்ந்து வாழ்வோடு ஒன்றியிருக்கும் அம்சங்களாக அமைந்துள்ளதால் அவர்களது அடையாளமாகக்கூட அச்சிற்பங்கள் கருதப்படுகின்றன. »

« மாமல்லபுரம் அருகே இருக்கும் சாளுவன் குப்பத்து புலிக்குகை என்பது கோவிலே அல்ல என வெளியான பிற அறிஞர்களின் ஆய்வை மறுபரிசீலனை செய்கிறார் ஆசிரியர். »

« குடைவரை  கோவில், ஒற்றைக் கற்றளி, காட்டுமான்கோயில், திறந்தவெளி புடைப்புச்சிற்பங்கள் என சிற்பங்கள் அமைப்பதில் பல பாணிகளை ஆசிரியர் விளக்கியுள்ளது சிற்பக்கலைபற்றி தெரியாத எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. »

« பெரும்பாணாற்றுப்படை, அகநானூறு, புறநானூறு பாடல்களில் ஆயர்களின் வாழ்வியல் நிகழ்வுகளைக் கொண்டு சிற்பத்தின் முக்கியமான பகுதிகளை விவரித்திருக்கும் பகுதி மிகவும் ரசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது »(மாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்- சா. பாலுசாமி)

ஏ.) « இழப்பும், தனிமையும் இவரது கவிதைகளில் நிரந்தரப் பேசுபொருளாக இருக்கிறது. வீடுகளுக்குள்ளே வாழும் அனாதைகள் என ஒரு வரியில் தனிமைக்கு மற்றொரு அர்த்த த்தைத் தரமுடிந்திருக்கிறது. வீடு என்றாலே விடுபடல், சமூகத்திலிருந்து விடுபட்டு சுதந்திதிரமாக இருக்கும் இடம் என்பதுதான். வீட்டிலும் ஒருவன் துணைக்கு ஏங்கி அனாதையாக இருப்பானென்றால் அந்த வீடு தரும் பாதுகாப்புணர்வு என்ன பொருள் தரும் ?(கணங்களில் தவிக்கின்ற ஜீவிதம் – சுப்பிரமணியன் ரமேஷ் கவிதைகள்)

இவ்வரிசையில் ரா.கிரிதரனின் முதற்தொகுப்பை அறிய இன்னும் இருமடங்கு நூல்களைப்பற்றிய கட்டுரைகளைப் பற்றி எழுதவேண்டும். இந்நூல்களூடாக அவர் வாசிப்புக்குத் தேர்வு செய்த அறிஞர்கள், படைப்பாளிகளின் திறனை மட்டுமல்ல அவற்றூடாக கிரிதரன் என்கிற  கலைஞரின் ஆற்றலையும் விளங்கிக்கொள்கிறோம்.

தொடரும்…

மனிதம்: சண்டையும் சமாதானமும்

ஊரிலேனும் நாட்டிலேனும்
உலகிலேனும் எண்ணினால்
நீர்நிறைந்த கடலையொக்கும்

நேர்உழைப்ப வர்தொகை!

தொழிலறிந்த ஏழை மக்கள்
தொழில்புரிந்து செல்வர்பால்

அழிவிலாமுதல்கொடுக்க
அம்முதல் பணத்தினால்

பழிமிகுந்த அரசமைத்துப்

படைகள்தம்மை ஏவியே
தொழில்புரிந்த ஏழைமக்கள்
சோற்றிலே மண்போடுவார்!

  • பாரதிதாசன்

இன்றைய உலக அரசியலில் இதுதான் நடக்கிறது. அது ரஷ்யா உக்ரைன் யுத்தமோ, இஸ்ரேல் காஸா அல்லது லிபான ; இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் யுத்தமோ  எதுவாயினும் இம்ம்கானுபாவர்களின் முயற்சி பாரதிதாசன் தெரிவிப்பதுபோல ஏழைமக்கள் சோற்றில் மண்போடும் முயற்சி அன்றி வேறில்லை.  அதுவே சிறுத்து குடும்பம், உறவுகள், நட்பு, பள்ளி, கல்லூரி, அலுவலகம், அரசியலென சுருங்கினும் ; எங்கும் எதற்கும் சண்டை அல்லது சமாதான வழிமுறைகளில் உலக வாழ்க்கை இப்படித்தான்  இயங்குகிறது. ஆயினும் பின்புலத்தில் பாரதிதாசனின் கவிதைச் சூத்திரத்தை நலிந்த்வர் வலியவர் என்று பொருள்கொண்டு அணுகினால் சண்டைக்கும் சமாதானத்திற்குமான நியாயங்கள் புரிந்துவிடும்.

“யுத்தம் ஏன், எதற்காக ?  இந்தக் கேள்வி பாதிக்கப்படுகிற மக்களுக்கோ விடைகாணவியலாத கேள்வி.  யுத்தத்திற்கு மார்தட்டிக்கொண்டு முன்நிற்கும் மனிதர்களிடமாவது, தங்கள் செயலுக்கு திட்டவட்டமாக  அவர்கள் வசம் ஒரு பதில் இருக்குமாவெனில் வாய்பில்லை, அப்படியே இருந்து, ஒன்றை அவர்கள் தெரிவித்தாலும், இரவைத் துலக்க முனையும் மின்மினி பூச்சியின் செயல் தந்திரத்தை ஒத்ததாகத்தான் அது இருக்கக்கூடும்.

போரும் கொலைகுற்றங்ளைச் சேர்ந்ததே.  பொதுவில் கொலைக் குற்றம்  பகையொன்றின் உச்சக் கட்டம்.  இரு மனிதர்களின்  நெடுநாளைய பகையை முடித்துவைக்கும் வினை.  தனிமனிதக் கொலைகளில், சம்பவத்தை அடுத்து கொலையாளி கொலையுண்டவர் இருவரின் பகைக்கான காரணங்கள் முச்சந்திக்கு வருகின்றன.  விசாரணையுண்டு, நீதிமன்றமுண்டு, குற்றம் உறுதியானால் குற்றவாளிக்குத் தண்டனையுமுண்டு. பெருவாரியான மக்களின் பிரதிநிதிகளாகத் தங்களை முன் நிறுத்தி « சுயநலம், அதிகாரபலம் » ஆகியவற்றின் பொருட்டு இரண்டு அரசாங்கம் வெளிப்படையாக அரங்கேற்றும் பெரும் எண்ணிகையிலான கொலைகளுக்கு, இன்றுவரை தண்டனைகள் இல்லை. அவ்வாறே வழங்கப்பட்டாலும், ஜெயித்தவன் தோற்றவன் அரசியலை அடிப்படையாகக் கொண்டவை அவை.

உலகில் எந்தப்பகுதி என்றாலும் புலிகளெல்லாம் ஒன்று போலவே இருக்கின்றன. குரங்குகள் எல்லாம் ஒன்றுபோலவே இருக்கின்றன புறாக்களில் இந்தியப் புறா என்றோ பிரான்சு புறா என்றோ, ஆமைகளில் நியூசிலாந்து ஆமையென்றோ, கௌத்தமாலா ஆமையென்றோ எதுவுமில்லை. மண்ணுக்கு மண் தாவரங்களில் வேற்றுமை இருந்தாலும் எல்லா தாவரங்களும் துளிர்க்கிறபோதும் சருகாகிறபோதும் ஒரு நிறத்தையே கொண்டிருக்கின்றன. மனிதர்களிடத்தில் ஏன் இப்படி.  ஆசியர், ஆப்ரிக்கர், ஐரோப்பியர், இலத்தீன் அமெரிக்கமக்களென  ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம். இது போதாமல் இந்தியத் துணைகண்டத்தில்  நூற்றுக்கணக்கான வகையினர்.  பிரிவினையை முன் நிறுத்தி அழிவை எட்ட இயற்கை கண்ட தந்திரமா? 

ஒரு நிறம்,ஒரே இனமென்று இருக்கிற மக்கள் மட்டும் கூடிக்குலவுகிறார்களா? என்ற கேள்வியும் எனக்குள் பிறந்தது. உடலால் தன்னையொத்த ஹூட்டுகள் டூட்சிக்களை கொன்றதும், சிங்களவர் தமிழர்களைக் கொன்றதும்; ரஷ்யர்கள் உக்ரைன் அப்பாவிமக்களைக் கொல்வதும் ; நாஜிகள் யூதர்களைக் கொன்றதும், இன்று யூதர்கள் பாலஸ்தீனியர்கொல்வதும், விளைவாக பயங்கரவாத தாக்குதலில் உலகெங்கும் இவற்றோடு தொடர்பற்ற மக்களின் தினசரிகளின் பாதிப்பும் நிறத்தால் தடைபட்டதா என்ன ?  அறிவியலோ, அறிவுத் தேடலோ  இவற்றுக்கு முடிவானதொரு பதிலைக் கண்டிருக்கிறதா? 

சீதையை இராவணன் கொண்டுபோனான், நியாயமாகப் பார்த்தால் அது இராமன் இராவணன் சண்டை.   இராவணனிடத்தில் ஆரம்பத்திலேயே இராமன் ஒற்றைக்கு ஒற்றையா நின்றிருக்கவேண்டும். சண்டை போட்டிருக்கவேண்டும் அத்தனை சக்தியும் இருக்கிற அவதார புருஷன் எதற்காக வானர சேனையையெல்லாம் மடிய விட்டான், மறுதரப்பில்  இராவணன் செய்த தவறுக்கு  எதற்காக இந்திரஜித், கும்பகர்ணன் என்றில்லாமல் ஆயிரமாயிரம் படையினர்  பலியாகவேண்டும். மகாபாரதத்திலேயும் அதுதானே நடந்தது பங்காளிச் சண்டைக்கு சம்பந்தமில்லாத சனங்கள் இரு தரப்பிலும் வெட்டி மடிந்தார்கள். இவர்களை இப்படித்தான் பார்க்கவேண்டும்: இராமன் இராவணன் துரியோதனன் தருமன் இவர்களெல்லாம் அரியணை சாதி, இவர்களுக்காக ஏதேதோ காரணங்களால் தன் பெண்டாட்டிப் பிள்ளைகளை மறந்து வீரமரணமென்ற பெயரில் செத்து மடிந்த பைத்தியக்கார மந்தையெல்லாம் சேவக சாதி.  

கோவலனைச் சிரச்சேதம் செய்த கொலையாளிக்கும் கொலையுண்ட கோவலனுக்கும் வரப்பு சண்டையா வாய்க்கால் சண்டையா.  பிரான்சு தேசத்துதில் குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகப்பட்ச தண்டனையாக மரணதண்டனை நடைமுறையில் இருந்தகாலத்தில் அனத்தோல் தெய்பிளெர் என்றொரு கொலையாளி இருந்தான. அவன் வேலை, மரண தண்டனை பெற்றவர்களின் தலையை அன்றைய வழக்கின்படி கில்லெட்டினால் சீவுதல். ஒருவர் இருவரில்லை, பல நூறு மனிதர்களின் தலைகளை அரசின் கொலையாளியாக ஊதியம் பார்த்த அனத்தோல் துண்டித்திருந்தான். அவனால் கொல்லபட்டவர்களெல்லாம் அவனுடைய எதிரிகள் இல்லை. அவனைக்கொல்லச் சொல்லி ஆணையிட்ட அதிகாரத்தின் எதிரிகள். கோவலனை சிரச்சேதம் செய்தவனின் ஐரோப்பிய அவதாரம் இக்கொலையாளி. நீதியின் நியாய அநியாயம் குறித்து யோசித்து பணியாற்ற அவர்கள் படைக்கப்படவில்லை. நீதியும் ஆட்சி அதிகாரத்தின் ஓர் அத்தியாயம். அதிகாரத் தீர்ப்பை   நிறைவேற்றினால்தான் கொலையாளியின் ஜீவனம் நடக்கும். அய்ய்யோ என பரிதாபப்பட்டால், கொலையாளி தலை மறுநாள் உருளும். அதிகாரம் உத்தரவு இடுகிறபோது அதனை நிறைவேற்ற அன்றைக்கு கத்தி, இன்றைக்குத் துப்பாக்கி. நீ வெட்டு, நானிருக்கிறேன் என்றது முடியாட்சி.  நீ சுடு நானிருக்கிறேன் என்கிறது இன்றைய அரசு. நான் பார்த்துகொள்கிறேன், உனக்கு எந்தச்சிக்கலும் வராமல் நான் பாதுகாக்கிறேன் என்கிற உத்தரவாதத்தை அதிகாரம் தருகிறபோது   கூலிப்படைகள் யாரைவேண்டுமானாலும், கொல்லும்.   

அண்ணனாவது தம்பியாவது, குருவாவது, குருகுலவாச சினேகிதனாவது, பாணத்தைவிடு நான் இருக்கிறேன், என்று அதிகாரத்தின் அவதாரமாக கண்ணன் சொல்லலையா?  இராமன், இராவணன் கர்ணன், துரியோதனன் அலெக்ஸாண்டர், பாபரென எதிரிகளைக் குறிவைத்த அதே காரணம், இன்றைய நாடாளும் அதிபர்களுக்கும் பொருந்தும். போரிலே சுட்டுக்கொல்ல இருக்கும் மனிதர்களுக்கும் அல்லது அவர்களைச் சுடுவதற்குப் போர்முனைகளில் காத்திருக்கும் படைவீர்ர்களுக்கும் பகையா என்ன? இரண்டாம் நூற்றாண்டோ, இருபத்தொன்றாம் நூற்றாண்டோ ஆட்சியாளர்களுக்கு தன் வல்லமை ஆயுத்தை வரலாறு பேசவேண்டுமென்கிற என்கிற வெறி, காமம் போல அவர்களிடம் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறது. முடியாட்சியோ, மக்களாட்சியோ அதிகார வாளைக் கையிலெடுத்தபின், தனது பரிவாரங்களின் கைத்தட்டலுக்காகவேணும் அதனைச் சுழற்ற்வேண்டும். ஆட்சஅதிகாரம் தனது எல்லைகுறித்த பிரச்சினைக்ளுக்கு ஏவலர்களைப் பயன்படுத்திக்கொள்கிது.  அடிமைகளை மோதவிட்டு அதிகாரம் பாதுகாப்பாக வாழக் கற்றிருக்கிறது. கொல்லப்பட்டசேவகத்தின் பெண்டாட்டிப்பிள்ளைகள் திக்கின்றித் தவிக்க, அதிகாரம் தன் மனைவி மக்களுடன் சொகுசாக வாழ கற்றிருக்கிறது. 

இஸ்ரேல் – பாலஸ்தீனம் ; ரஷ்யா- உக்ரைன் யுத்தம், தற்போது அமெரிக்கா- இஸ்ரேல் – ஈரான் யுத்தங்கள் இன்று பண்பில் தொலைக்காட்சி நாடகங்கள்போல முடியாத தொடர்களாகிவிட்டன. பொதுவாக யுத்தம் : தாக்குதல்xதற்காப்பு என்கிற காரணிகளின் அடிப்படையில் நிகழ்கிறது. அதாவது எபோதுமே தனிமனிதன்   எதிரியைவிட தான் பலம் வாய்ந்தவன் என்கிற நம்பிக்கையின்  அடிப்படையில் தன்னிலும் பலவீனமானவன் மீது தாக்குதல் நடத்துகிறான். அதுபோல எதிரியின் நாட்டைக்காட்டிலும் என் நாட்டின் படைபலம் வலிமையானது என்ற நம்பிக்கை  தாக்குதலுக்கு காரணமாகிறது. ஆயினும் தற்போதைய அமெரிக்க – ஈரானிய ஆட்சியாளர்களைப்போல :

« வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
        துணைவலியும் தூக்கிச் செயல்
. »

என்கிற குறள் அருமை தெரியாது யுத்தத்தில் இறங்கி, பின்னர் எங்கே எப்படி முடிப்பது என்கிற குழப்பத்தால் திருதிருவென்று விழிக்கும் நாடுகளும் உண்டு. ஆனால் இன்று பாதிக்கப்படுவது போரிடும் நாடுகள மட்டுமல்ல, வேடிக்கைப்பார்க்கும் நாடுகள் கூட. காரணம் அரசியல், புவியியலுக்கு எல்லை வகுத்த ஆட்சியாளர்கள், பொருளியல் பரிவர்த்தனைக்கு எல்லை வகுக்கத் தவறி அல்லது இயலாது, ஒருவர் மற்றவரை சார்ந்திருக்கும் நிலமைக்குச் சபிக்கப்பட்ட   உலகப் பொருளாதாரம்.

ஒற்றை மனிதராக அல்லது  தனியொரு நாடாக மோதிய காலம்போய், இம்மனிதர்களுக்கு அல்லது இந்நாடுகளுக்கு அடிமைப்பட்டோ அல்லது பரஸ்பர நலன் கருதியோ இரு அணிகளாகப் பிரிந்து மனிதர்கள் அல்லது  ஆட்சியாளர்கள் சண்டையிடுவதும் மனிதரினம் தோன்றிய நாள்தொட்டு தொடரும் அவலம். அக் காலத்திலாவது அதிகாரமும் ஒரு கட்ட த்தில் ஆயுதம் எடுத்து தனது எதிரியோடு நேருக்கு மோதியதைக் காப்பியங்களிலும் வரலாற்றிலும் படித்திருக்கிறோம்.  இராமயணத்திலும், மகா பாரதத்திலும் அதுதானே நடந்தது. அப்படியொரு நெருக்கடி, மாற்றம் இன்றைய அதிகாரத்திற்குள்ளும் நிகழவேண்டும். இறந்தால் நாட்டைக் கவனித்துக்கோள்ள துணை அதிபரோ துணை பிரதமரோ இருக்கிறார் என்பதால் (நடப்பதுதானே?) போர்முனையில் ஆயுதம்  ஏந்தி  எதிரிநாட்டு  பிரதமர் அல்லது  அதிபரோடு, ஒரு நாட்டின்  பிரதமர் அல்லது அதிபர் மோதவேண்டுமென அரசியல் சட்டத்தை திருத்தட்டும்,  எதிர்கால உலகில்  யுத்தங்கள் இல்லாதொழிய வாய்ப்புண்டு. .

யுத்தம் குறித்து இக்கட்டுரையாளன் என்றோ எழுதிய ஒரு கவிதை :

அமைதியை அறிந்ததில்லை

கேட்டதுண்டு

நம்பிக்கையும் உறவும், நட்பும் நெருக்கமும்

சந்தேகம், பகை, எதிரி, இடைவெளியென

வேற்றுமைப் பெயர்களானதில்

அமைதியை அறிந்ததில்லை

கேட்டதுண்டு !

இந்தியா – பாகிஸ்தான்

இஸ்ரேல் – பாலஸ்தீன்

ஈரான் – ஈராக்

குர்திஸ்தான் – கோசோவா

ஆப்கானிஸ்தான் இலங்கையென

தொடரும் பட்டியலில்

நாடுகள் எதுவாயினும்

படுகள உயிர்கள்

அமைதியை அறிந்ததில்லை

கேட்டதுண்டு !

புயலுக்குப் பின்னே ‘அமைதி’

போருக்குப் பின்னே ‘அமைதி’

படித்ததுண்டு அறிந்ததில்லை.

கொலைவாட்கள் தீட்டப்படும்

கோப விநாடிகளில்

இரு பீரங்கி முழக்கங்களின்

இடையிலான பிரசவ நிமிடங்களில்

இரு போர்களுக்கு

இடையிலான சூன்ய நாட்களில்

அமைதியைப் பார்த்ததுண்டு

அறிந்ததில்லை.

இடிபாடுகளுக்கிடையே சிக்குண்ட

எமதில்லங்களில்

குழிபெயர்ந்த கொல்லைப்புறங்களில்

டாங்கிகள் தடம் பதித்த வீதிகளில்

சமாதியுண்ட சந்தைகளில்

அமைதியைப் பார்த்ததுண்டு

அறிந்ததில்லை.

எங்கள் விடியலுக்காக

காகங்கள் கரைவதில்லை

சேவல்கள் கூவிடாது

எங்கள் தோப்புகளோடு

எரியுண்டது அழகியல் மட்டுமல்ல

வண்டுகள் மொய்த்த

சோலைகளெங்கும்

ஈக்கள் மொய்க்கும் மனிதம்

அலகு சிவந்து காத்திருக்கும்

கழுகுகள் அவற்றின் வம்சாவளிகள்!

மயானத்தில்  உயிர்கள்

காத்திருப்பது

‘அமைதி’ வேண்டியல்ல

கல்லறைகளுக்காக !

                        -நா.கிருஷ்ணா

 –

——————————————————————–

புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை– கி. அ. சச்சிதானந்தம்

ஓர் அசலான நாவல் தனித்தன்மையோடு இருக்கும்; தனக்கென்று ஒரு முகவரியைக் கொண்டிருக்கும்; அப்போதுதான் அது இலக்கியமாகிறது. மீண்டும் மீண்டும் படிக்கப்படுகிறது. நினைவில் எழுந்து அசைபோட வைக்கிறது. அதைப் பற்றிய வினாக்கள் எழுகின்றன; விடைகள் கிடைக்கலாம்; கிடைக்காமல் போகலாம். ஒரு சமயத்தில், கிடைத்த விடை சரியெனப்படுகிறது, பின்னால் சரியில்லை எனத் தெரிகிறது. இப்படிப்பட்ட நாவல்தான் ‘மாத்தா ஹரி – புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை.’

இது நாகரத்தினம் கிருஷ்ணாவின் இரண்டாவது நாவல். மனித வாழ்க்கையை வரையறுத்துவிடலாம். ஒரு சூத்திரத்தில் சொல்லிவிடலாம் என்பதெல்லாம் அர்த்தமற்றது. சொல்லிவிடலாம் என்பவன் முட்டாள்.

மாத்தா ஹரி – ‘புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை’ புறப்பட்டவள் எங்கு போய்ச் சேர்ந்தாள் என்று குறிப்பிடவில்லை. அவள் போய்ச் சேர்ந்தது பிரெஞ்சு நாட்டுக்கு. புதுச்சேரிக்குத் திரும்பி வராமலே அங்கு கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கிறாள். கதை என்றால் ‘இட்டுக் கட்டியது’, ‘கற்பனை செய்யப்பட்டது’ என்று பொருள். ஆனால் படிக்கும்போதும் படித்து முடித்துவிட்டபோதும் அப்படி ஓர் உணர்வே தோன்றவில்லை. இந்நாவலை நிதானமாகப் படித்துப் போகவேண்டும். கவனம் சிதறாமல் படிக்க வேண்டும், இல்லாவிட்டால் தடுமாற்றம், குழப்பம், என்ன படித்தோம் என்று பின்னோக்கி படித்த பக்கங்களைப் புரட்டவேண்டும். அப்படி நாவலின் சொல்லாடல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எல்லா கதைமாந்தர்களும் தன்மையிலும் படர்க்கையிலும் பேசுகிறார்கள். முக்காலமும் அதன் நேர் வரிசையில் வராமல் நிகழ்காலச் சம்பவங்கள் இறந்தகாலத்திலும், இறந்தகாலச் சம்பவங்கள் நிகழ்காலத்திலுமாக நாவலில் எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வப்போது ஆசிரியர் வந்துவிடுவார். அவர் வருவதற்கும் காரணம் இருக்கிறது. இந்தப் புதுச்சேரிப் பெண்ணான பவானியை ஆசிரியருக்குத் தெரியும் என்பதனால்.

இந்த நாவலின் தொடக்கம், பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திரைப்படமான ‘மகாத்மா காந்தி’ நினைவுக்கு வந்தது. இத்திரைப்படத்தின் முதற்காட்சியே மகாத்மா காந்தி சுடப்படுகிறார். காது செவிடுபட பின்னணி சப்தம். இப்படம் காந்தியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிப்பதாகும். காந்தி வாழ்க்கையைக் காட்டிவிட்டுத்தானே இறுதியாக அவர் இறப்பைக் காட்டி படத்தை முடித்திருக்கவேண்டும். மாறாக, இறப்பை முதலில் காட்டிவிட்டு வாழ்ந்த வாழ்க்கையைக் காட்டுகிறதே. திரைப்படம் என்பதனால் எப்படி வேண்டுமானாலும் சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளலாமா என்று எழும் வினா தர்க்கரீதியானதுதான். சிந்தித்துப் பார்த்தபோது காந்தி இறந்துவிட்டார்; ஆனாலும் அவர் வாழ்ந்துகொண்டிருப்பவர் என்பதைக் காட்டவேதான் அந்த உத்தி கையாளப்பட்டதாக உணர்ந்தேன். இது படைப்புச் சுதந்திரம்; இதுதான் கலை.

இந்நாவல் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பெண் பவானியின் வாழ்க்கை. அவளின் மரணம் நாவலின் தொடக்கத்திலேயே தெரிவிக்கப்படுகிறது. ‘ஸ்ட்ராஸ்பூர் நகரின் மத்திய கல்லறையில் அவள் இருப்பிடம் (பக். 19) ஒன்று, இரண்டு, மூன்றாவதாக இருந்த கல்லறையில், பவானி தேவசகாயம் பிறப்பு 27. 06. 1959, இறப்பு 10. 02. 1992’ (பக். 20).

ஹரிணி தன் தாய் பவானி தேவசகாயத்தின் மரணம் தற்கொலையா அல்லது இயற்கையாக சம்பவித்ததா என்பதைக் கண்டறிய அவளுடைய வாழ்வில் குறுக்கிட்டவர்களைச் சந்திப்பதால் கிடைக்கும் தகவல்களேதான் இந்த நாவல். பவானி வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டவர்கள்: பத்மா, தேவசகாயம் – இவர்கள் தமிழ் பிரான்சு குடிமக்கள், எலிசபெத், குளோது அத்ரியன், பிலிப் பர்தோ பிரான்சு நாட்டு வெள்ளைக்காரர்கள்.

ஹரிணி தன் பெற்றோர்களான தாய் பவானி, தந்தை தேவசகாயம் ஆகியோருடன் குழந்தையாக இருக்கும்போது பிரான்சு நாட்டுக்கு வருகிறாள். பவானி இறந்துவிடுகிறாள்; தேவசகாயம் போதைப்பொருள் விற்றதற்காகச் சிறையிலடைக்கப்படுகிறான். ‘எல்லா அனாதைக் குழந்தைகளையும் போலவே, பிரெஞ்சு அரசாங்கத்தின் மாவட்ட நிர்வாகம் பவானி தேவசகாயத்தின் மகள் ஹரிணியை வளர்க்கும் பொறுப்பையும் ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்தது. அதற்கான உதவித்தொகையையும் கொடுத்து வந்தது.’ (பக். 22). ஒரு கம்பெனியில் வேலை செய்யும் இளம் பெண்ணாக, சுதந்திரம் உள்ளவளாக, தனியாக வாழ்பவளாக அறிமுகமாகிறாள். ‘நேற்று மாலை நிர்வாக இயக்குநரான இளைஞன் சிரிலோடு பாதுகாப்பு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் உறவு’ கொண்டது. (பக். 23).

இந்நாவல் கதாமாந்தர்களின் செயல்பாடுகள், எண்ணங்கள், நடத்தைகள், நோக்கங்கள், காலவரிசைப்படி சொல்லப்படாமல், முன்னும் பின்னுமாகத் தாவித் தாவி, பாய்ச்சலோடு போகின்றன. அதாவது இறந்த காலத்தின் சம்பவங்கள் முன்னதாகவும், நிகழ்காலச் சம்பவங்கள் பின்னதாகவும் சொல்லாடல் நிகழ்கின்றது; இடையிடையே ஆசிரியரின் குரல் கேட்கிறது. எண்ணங்கள் தூலப் பொருள்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. புறத்திலுள்ள தூலப் பொருளா, மன ஓட்டங்களா? (எ. கா. பக். 44-45)

பவானியின் கதைதான் இந்நாவல். அவள் யார்? பிரெஞ்சுக்காரியான எலிசபெத் முல்லெர் சொல்கிறாள் ‘மயக்கமடையாத குறை. அப்படியொரு அழகுப் பெண்மணியை என் வாழ்நாளில் அதற்கு முன்பு சந்தித்ததில்லை. அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்களும் சரி, அன்றைக்கு அக்கட்டடத்தில் வேறுபணியில் இருந்த மற்ற ஊழியர்களும் சரி சிலையாகச் சமைந்து போனார்கள். வாளிப்பான உடல், பட்டினைப் போன்ற முகம், நாசி துவாரங்களை ஒளித்த மூக்கு, உலர்ந்திராத சிவந்த உதடுகள், இடையில் நிழலாடும் வெண்பற்களின் உதவியோடு உதடுகள், சிரிக்க முயல்வது போன்ற பாவனை, வெல்வெட் போல இரண்டு விழிகள். தீப்பொறி போல கண்மணிகள். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியதுபோல, தலை முதல் இடைவரை நீண்டிருந்த கூந்தல்.’ (பக். 27).

பவானியை புதுச்சேரியில் வழக்குரைஞராக அறிமுகமாகிறோம். அவள் சிந்தனை ‘பெண் என்பவள் பிறர் சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைப் பொதுவாக நான் விரும்புவதில்லை எனவே இதற்கு என்னால் உடன்பட முடியாது.’ (பக். 44). தேவசகாயம்தான் பவானியைத் தன்னை திருமணம் செய்துகொள்ள மன்றாடுகிறான். கெஞ்சுகிறான். அப்போது அவள் மனம் குழம்புகிறது, மூளையைக் கசக்கிப் பிழியும் கேள்விகள், சிந்தனை ஓட்டங்கள் இவையெல்லாமே அவள் திருமணம் செய்யமாட்டாள் என்ற முடிவையே சுட்டிக் காட்டுகின்றன. அவள் பாட்டியின் தீடிரென்று சம்பவித்த மரணம் திருமணத்திற்குக் காரணமாக இருக்கிறது. ஏனென்றால் அவள் சின்னக் குழந்தையாகவே இருந்தபோது அவள் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டாள். ஏன் என்றால் அவளுக்கு மீண்டும் சினிமாவில் நடித்துப் புகழும் பணமும் பெற வேண்டுமென்று ஆசை. ஓடிப்போனவளை நினைத்து வருந்திய அவளது தகப்பனும் செத்துப் போய்விடுகிறாள். ஆக அவளுக்கு இந்த உலகத்தில் ஆதரவாக இருந்தது அவள் தந்தைவழிப் பாட்டி. பாட்டி உயிரோடு இருக்கும் வரை பவானி திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தன் கவலையை வெளியிட்டுக்கொண்டிருந்தாள். அவளும் இறந்துவிட்ட பிறகு? அதனால்தான் என்னவோ தேவசகாயத்தைத் திருமணம் செய்துகொண்டாள். ஆக அறிவுபூர்வமாக வாழ்க்கை போவதில்லை… அவள் தேவசகாயத்தைத் திருமணம் செய்யாமல் இருந்தால் நாவலே இல்லை! பவானி திருமணம், பிரெஞ்சு நாட்டில் அவள் வாழ்க்கை எல்லாம் ஊழ்வினையா? வாழ்க்கையை அறிவுபூர்வமாகச் சிந்தித்த பவானி தன் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டாள். தலைவிதி இல்லாமல் என்ன?

தேவசகாயம் எப்படிப்பட்டவன்? ‘அவனால பத்துப் பெண்களுக்குத் தாலி கட்டவும், நூறு பிள்ளைகளைப் பெத்துக்கவும் முடியும். என்னுடைய தகப்பனாரைவிட அவனுடைய தகப்பனாருக்கு இருக்கிற சொத்தும் அதிகம், வாங்கற பென்ஷனும் அதிகம். அவன் கவிதைகள் எழுதுவான். அவன் கொஞ்சம் வித்தியாசமானவன். ஒரு சமயம் ரஜினி படத்தை முதல் நாளே பார்க்கணும் என்பான். இன்னொரு சமயம் மார்க்கோ, •பெரேரி என்ற இத்தாலிய இயக்குநரின் படங்கள் பாத்திருக்கிறாயா என்பான். தனது பிறந்த நாளைக்கு ஒரு பெரிய ஓட்டலில் எங்களுக்கு டின்னர் கொடுத்துட்டு, மறுநாள் மடத்துக்குச் சென்று அநாதைப் பிள்ளைகளோட சாப்பிடப் போறேன் என்பான்.’ (பக். 59). தேவா சின்னப் பையனாக இருந்தபோது, அவரின் தந்தையார் தெருவில் மாம்பழம், வெள்ளரிப்பிஞ்சு கூவி விற்பவளைக் கூட்டி வைத்துக்கொள்கிறார். அவளைத் தன் தாயாக தேவாவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. (பக். 117) இவனுக்கு கஞ்சா என்ற மரியுவானா பழக்கம் ஏற்பட்டது. ‘பௌர்ணமி இரவொன்றில், திருவக்கரை வக்கிரகாளியைத் தரிசிக்கச் சென்ற இடத்தில் சாது ஒருவர், ‘அம்மனைச் சாந்த சொரூபியாக இவனுள் காண உதவும் ‘ஒளடதம்’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார். நாளொன்றுக்கு இரண்டு முறை இம்மருந்தை எடுத்துக்கொண்டால், குறைந்தது 150 ஆண்டுகள் உயிர்வாழலாமென உத்திரவாதம் செய்கிறார்.’ (பக். 120) விளைவு? ‘சகல புவனங்களையும் மயக்கும் மோகினியாக இவனுள் வக்கிரகாளி அம்மன்… மாத்தா ஹரி… ம். இல்லை. பவானி’. (பக். 121).

தேவசகாயம் காளி உபாசகன் என்று சொல்லக் கேள்வி. புதுச்சேரியில் இருக்கிறபோது அடிக்கடி திருவக்கரைக்குச் சென்று வருவானாம். பழம் பூவென்று வீடு முழுக்க நிறைந்துவிடும். நாக்கைத் திருத்திக்கொண்டு, கண்களை விரியத் திறந்தபடி பக்கத்திற்கு ஒன்பது கைகளென்று, கபால மாலையணிந்த காளி. முகம் மட்டுமல்ல, கரிய அந்த உடலிலும் உக்கிரத்தைப் பார்க்கலாம். அதனருகிலேயே மாலை சாற்றிய மாத்தா ஹரியின் முழு உருவப்படம். விடிய விடிய பூஜை நடக்கும். கட்டி கட்டியாய் கற்பூரத்தை எரிப்பார்கள். கத்தை கத்தையாய் ஊதுபத்தி கொளுத்துவார்கள்.’ (பக். 189).

ஆக, தேவசகாயம் பவானியின் அழகிற்காக அவளைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவளிடம் மாத்தா ஹரியைக் காண்கிறான். பவானியைப் புணரும்போது தன் மனைவியாகவும், அதே சமயத்தில் வணங்கும் தாயாக மாத்தா ஹரியாகப் பார்க்கிறான். தேவசகாயம் ஒருவித மனநோயாளியா என்ன? பணக்காரனான தேவசகாயம் பவானியிடம் அப்படி மன்றாடி மண்டியிட்டு மணம் புரிந்துள்ளான். ஏன் கெஞ்ச வேண்டும்? “தேவா, பல முறை சொல்லிவிட்டேன். நான் மாத்தா ஹரி இல்லை. பவானி… பவானி… பவானி.” “உனக்கு பவானி, எனக்கு மாத்தா ஹரி.” காலில் விழுகிறான். மீண்டும் மீண்டும் பித்துப்பிடித்தவன் போல என் கால்களில் விழுகிறான். (பக். 88).

மாத்தா ஹரி யார்? 1917 ஆண்டில் தன் அழகான உடலை வைத்துக்கொண்டு செருமானிய நாட்டுக்கு உளவு வேலை செய்தாள் என்று பிரான்சுக்காக தூக்கிலிடப்பட்டாள். அவளைப் பற்றி ஏராளமான புத்தகங்களும், வந்திருக்கின்றன. அவள் வாழ்க்கை பற்றி விரிவான குறிப்புகள். (பக். 28லிருந்து 33; பக். 80-81) மாத்தா ஹரிக்கு என்று ஒரு சமயக்குழு அதாவது ‘கல்ட்’ உருவாகியிருக்கிறது. (பக். 176 -178).

எலிசபெத் முல்லர், குளோது அத்ரியன், பிலிப் பர்தோ ஆகியவர்கள் இந்த கல்ட்டுடன் சம்பந்தமுள்ளவர்கள்.

‘குளோது அத்ரியன் பிரெஞ்சுக்காரன். வயது அறுபது. ஹிப்பி, நியூடிஸ்ட், எக்கொலொஜிஸ்ட், மரணதண்டனைக்கு எதிரி. கடைசியில் மாத்தா ஹரியின் பரம ரசிகர்.

அவரது அறையின் நான்கு சுவர்களிலும் நீங்கள் பார்ப்பது அனைத்துமே மாத்தா ஹரியின் படங்கள் தாம். குழந்தையாக, விடலைப் பெண்ணாக, வாலைக்குமரியாக, தேவதையாக, குற்றவாளியாக சுவரெங்கும் மாத்தா ஹரி அலங்கரித்துக்கொண்டிருக்கிறாள்’. (பக். 136) பிரெஞ்சு நாட்டு அருங்காட்சியகத்திலுள்ள மாத்த ஹரியின் மண்டையோடு காணாமல் போய்விடுகிறது.

இந்தச் சூழலில் சம்பந்தப்பட்டவர்கள் யாரோ திருடியிருக்கிறார்கள்.‘குளோது பிஞ்சிலேயே பழுத்தார். போதைப் பழக்கம் அதன் தேவைக்காக சின்னச் சின்னத் திருட்டுகள். எழுபதுகளில் ஹிப்பி இயக்கத்தில் சேர்ந்து கோவாவில் முழுநிர்வாண வாழ்க்கையை விரும்பும் கூட்டத்துடன் சேர்மானம்… ஆரோவில் பகுதியில் தங்கி இருந்தார்.’ (பக். 138).

பவானி வாழ்க்கைக்கும், மாத்தா ஹரி வாழ்க்கைக்கும் பொதுவான, ஒற்றுமை அம்சங்கள் இல்லை. ஆனால் மாத்தா ஹரி சமயக் குழுவிலிருப்பவர்களினால் பவானி வாழ்க்கை பாதிக்கப்பட்டது அவ்வளவுதான்.

இந்நாவலின் களம் புதுச்சேரியிலும், பிரான்சு நாட்டிலும் இடம் பெறுகிறது.

புதுச்சேரி வாழ் தமிழ் பிரெஞ்சு குடிமக்கள் வாழ்க்கை துவக்கமாக வெளிப்படுகிறது. ‘பத்மாவிற்குப் பிறந்த நாள். பகல் விருந்தில் கோழி, ஆடு, ஐஸ்கிரீம் என அனைத்தும் இருந்தன. பிரெஞ்சு அரசாங்கத்தின் பணம். அவள் தகப்பன், பிரெஞ்சு ராணுவத்தில் துப்பாக்கி பிடித்த நேரத்தைக் காட்டிலும் வெள்ளைத்தோல் கேப்டனுக்கு பிரியாணி செய்துபோட்ட நேரங்களும், கால், கை பிடித்த நேரங்களும் அதிகம். பதினைந்து ஆண்டுகள் தெரிந்த இரண்டொரு பிரெஞ்சு வார்த்தைகளோடு பிரான்சில் தள்ளிவிட்டு புதுச்சேரியில் வீடு, கார் என்று வாங்கி வைத்துக்கொண்டு உள்ளூர்வாசிகளின் வயிற்றெரிச்சல்களைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்’ (பக். 42-43) ‘நம்ம பாண்டிச்சேரிக்காரங்களைப் பத்தித் தெரியுமே. சிலர் ஒழுங்காகவும் இருக்கலாம். அவங்களைச் சொல்லலை. ஆனால் நிறைய பேர், ஒருத்தன் மாத்தி ஒருத்தன், அடுத்தவங்க வீட்டுக்குப் போறதே தன் வீட்டிலே குடிச்சது போதாதுன்னு அங்கேயும் விஸ்கி பாட்டிலைத் திறந்து வச்சுக்கணும் என்பதற்காக. வந்தவுடனேயே ஆரம்பித்துவிடுவார்கள். பெண்கள் குசினிக்குள் இருப்போம். பிரெஞ்சு ராணுவத்துல பணிபுரிந்திருப்பார்கள், அவர்களை ராணுவ வீரர்கள் என்பதைவிட எடுபிடிகள்னு சொல்லலாம். துப்பாக்கியைத் தொட்டுப் பார்க்காதவன்கூட, தான் இல்லையென்றால் பிரெஞ்சு ராணுவமே இல்லையென்பதுபோலப் பேசுவான். பிறகு எம்.ஜி.ஆர் என்பான். சிவாஜி என்பான். வேறு ஒரு மசுறும் தெரியாது. விடிய விடிய குடிப்பார்கள். பெண்களாகிய நாங்கள் மீனையும் கறியையும் வறுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த தட்டை நிரப்பவேண்டும். ’

நாவலின் சொல்லாடலையும் தமிழ் நடையையும் குறிப்பிட வேண்டியது. பல இடங்களில் கவிதைச் செறிவாக, சுழன்று அடித்து ஓடும் நதியின் ஓட்டத்தைப்போல இருக்கிறது. (எடுத்துக்காட்டாக பார்க்க பக். 46-50, பவானியின் குழந்தை பற்றியும் அவனின் தந்தையைப் பற்றிய அத்தியாயம் 7ல்.)

ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும் பரந்துபட்ட வாழ்க்கை அநுபவமும், புற உலகத்தை உள்வாங்கிக்கொள்ள எப்போதும் விழித்திருக்கும் மனமும் இருந்தாலொழிய மாத்தா ஹரியை எழுத முடியாது.

***************************************************************