மலர்கள் விட்டு ச்சென்ற வெற்றிட த்தில்
……(கொரியகவிதைகள் மொழிபெயர்ப்பு தொகுப்பு) மொழிபெயர்த்தவர்கள் : பா. இரவிக்குமார், ப. கல்பனா
பரிசல் வெளியீடு
அ. « you don’t value a thing unless you have it »
அட்சதைகளுக்காக அடிமைச் சாசனமாக எழுதப்படும் அலங்காரக் கவிதைகளைக் காட்டிலும் « அம்மா இங்கே வா ! ஆசை முத்தம் தா, தா ! » என எழுதப்படும் உயிர்க்கண்ணிகளில் கவிஞன் வாழ்கிறான். « நூலுக்காக கவிதைகள் அல்ல , கவிதைகளுக்காக நூல் ». கவிதைக்கு மட்டுமல்ல கலை, இலக்கிய ஆக்கங்களுக்கும் இம்முத்திரை பொருந்தும். « The Lacuna » என்றொரு ஆங்கில நாவல், ஆசிரியர் Barbara Kingsolver. ஆழ்நீரில் மூழ்கும் விளையாட்டில் ஆர்வம் கொண்ட ஒருவனின் நாட்குறிப்பாக நீளும் நாவலில் மீன்கள் எழுப்பும் ஓசை குறித்து ஒரு சுவாரசியமான உரையாடல் உண்டு:
« மீன்கள் எழுப்பும் ஓசையை வெறும் சத்தமாகவும் கருதலாம், பேச்சாகவும் கருதலாம் », என்கிறான் ஒருவன் நூலின் கதை நாயகனிடம். « அதை எப்படி அறிவது ? » என்கிற கேள்விக்கு, « மற்ற மீன்கள் புரிந்துகொள்ள வாய்ப்பளித்து ஒரு மீன் எழுப்பும் ஓசை, பேச்சு » ; பதிலாக « தான் இருப்பதைக் காட்டிக்கொள்ள எழுப்பும் ஓசை, சத்தம் » என்பது கிடைக்கும் பதில். இதில் இன்னொன்றையும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். அவ்வோசை உண்மையில் வெறும் சப்தமாகவும் இருக்கலாம், செய்தியாகவும் இருக்கலாம். அவ்வோசையக் காதில் வாங்குகிற பிறவும் எது உண்மையில் பேச்சு, எது வெறும் ஓசை என்பதை என்பதைப் பகுத்தறியும் ஞானம் வேண்டும். இலக்கிய உலகிற்கும் இது பொருந்தும். இங்கு காதுகள் செவிடாகும் அளவிற்கு பறைகள் கொட்டப்படுகின்றன. சங்குகள் ஊதப்படுகின்றன. இருப்பதைக் காட்டுவதற்காகச் சத்தமிடும் இம்மீன்கள் எழுப்பும் ஓசைகளை பல நேரங்களில் « புரியாமல் புரிந்துகொண்டது போல » தங்கள் செவுள்களை அசைத்து அண்டங்காக்களைக்கூட குயில்களென சாதிக்கவும் ஒரு கூட்டமுண்டு , புரிந்து இதன் அடிப்படை « கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் » ஃபார்முலாக்கள். இச்செய்தியின் மறு விவரணதான் இத்தொகுப்பிலுள்ள « மீன் பாடல் » என்கிற கவிதை தெரிவிக்கும் செய்தி :
« தொட்டியில் ஒரு மீன் கவனிக்கிறது.
ஒரு பறவையின் பாடல் சன்னல் வழியே பாய்கிறது
பறவை வணங்கி வாழ்த்துகிறது
« எப்படி இருக்கிறீர்கள், திருமீனே ! »
தன் செவுள்களை நெகிழ்த்திக்கொண்டு
மீன் பதிலளிக்கிறது :
« இரண்டு நீர்க்குமிழிகள் ».
இம்மீன் அளிக்கும் பதிலில் கவிஞன் இருக்கிறான். இவ்விரு நீர்குமிழிகள் சொல்லவருவதென்ன ? வாசிப்பவரின் கற்பனைக்கொப்ப இட்டு நிரப்பிக்கொள்ளலாம். மீனின் “இரண்டு நீர்க்குமிழ்கள்” அதன ஓசை புரிந்த பறவைக்கு விளங்கும், காரணம் அதுபேச்சு வெறும் சத்தமல்ல. ஆக உண்மையான இலக்கியம் யாருக்கு சத்தமாகாதோ அவர்களுடனேயே உரையாடலை நிகழ்த்தும். எல்லோருக்கும் புரியவில்லையே என்ற வருத்தம் உண்மையான படைப்பாளிக்கு கூடாது. நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான சு. வெங்கிடசுப்பராய நாயகர் அனுப்பிய குறும்பட ஒளிப்பதிவில் தற்செயலாக வாசிக்க நேர்ந்த « you don’t value a thing unless you have it » வாசகம் தெரிவிக்கும் செய்தியும் இதுதான்.
« மலர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தில் » தமிழில் மொழி பெயர்க்கபட்ட கொரிய மொழிக்கவிதைகளின் தொகுப்பு. மொழிபெயர்ந்தவர்கள் கவிதை அனுபவங்களில் தோய்ந்தும், கவிதைகளை வாசித்தும், கவிதைகளை எழுதியும், கவிதைகளோடு பழகியும் வருகிற கவிஞர்கள் : பா இரவிக்குமார், ப. கல்பனா. கவிதைகள் கொரியமொழியிலிருந்து ஆங்கிலத்திற்குப் பயணித்து அங்கிருந்து தமிழுக்கு வந்துள்ளன. 78 கவிதைகள் கொண்ட ஒரு தொகுப்பு. பரிசல் வெளியீடு. தொகுப்பிற்கு மொழிபெயர்ப்பாளர்கள் எழுதியுள்ள முன்னுரைகள், மொழிபெயர்ப்புக்கான காரணங்களைத் தெரிவிக்கின்றன. தொகுப்பிற்குள் நுழைவதற்கு முன்பாக இம்முன்னுரையை அவசியம் வாசிக்கவேண்டும். பொறுப்புணர்ந்து சிரத்தையுடன் எழுதபட்ட முன்னுரைகள். ப. கல்பனா, கொரியமொழிக்கவிதைகள் பால் நாட்டம் கொண்ட காரணத்தை முன்வைக்க, பா. இரவிக்குமார் மொழிபெயர்ப்புக் கூட்டுமுயற்சியில் எதிர்கொண்ட சிக்கலையும் கண்ட தீர்வையும் எழுதுகிறார். இம்முன்னுரைகளை வாசிக்காமல் தொகுப்பிற்க்குள் நுழைவது வரவேற்பின்றி ஒரு வீட்டுக்குள் காலெடுத்துவைப்பதற்குச் சமம்.
மொழிபெயர்த்த இருவரும் கவிஞர்கள், கலை இலக்கியங்களில் ஈடுபாடுகொண்டவர்கள் எனவே சடங்காக அன்றி ஆர்வத்துடனும் அக்கறையுடனும் இக்கொரிய கவிதைகளை கொண்டுவந்திருக்கிறார்கள். ஒரு கட்டுரையை அல்லது ஆவணமொன்றை மொழிபெயர்ப்பதற்கும் இலக்கிய படைப்புகளை மொழிபெயர்ப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. சொல், சொல்லின் பொருள், சொல்லின் உபயோகம், அதற்கான காரணம் அனைத்தையும் உள்வாங்கி க்கொண்டு தாய்மொழியில் கொண்டுவருகிறபோது, மூலமொழியின் முகம் கோணாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய அக்கறை மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கிறது. ஒரு கவிஞனின் மொழியாடலை, உள்ளத்தை, அவன் உணச்சிகளை சமைத்தல் என்பது அவனுடைய சம தளத்தில் நின்று பெறுவோர்க்கே சாத்தியம். கவிஞர்களின் படப்புகளை கவிஞர்கள் இருவர் மொழிபெயர்த்திருக்கின்றனர் என்ற நம்பிக்கை நூலைத் தொடும்போது நமக்கு எழுவது இயற்கை.
ஆ. மொழிபெயர்ப்புக்காக ஒரு கவிதை
கீழ்க்கண்ட கவிதையை வாசியுங்கள், இது கொரியக் கவிதையின்
ஆங்கில வடிவம்:
The Rust Tree Inside Me by Jung Kut-byol
(내 안 녹나무)
I’ve been sitting on the windowsill. What has gone wrong?
Alongside a movie theater, a few bars, and a closed supermarket
absurd red insects disappear
I know there’s not any place better than here.
I feared the clock and the train,
wars and horror movies, too. I was young then.
………………………………………………
……………………………………………………
தொகுப்பில் இடம் பெற்றுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு இது :
எனக்குள் இருக்கும் துருவேறிய மரம் – யுங் கட் பையல்
சன்னலருகில் அமர்ந்த்திருக்கிறேன்
என்ன தவறு நேர்ந்துவிட்டது
திரையரங்குகளில்
சில மதுக்கடைகளில்
மூடிய அங்காடிகளில்
வேடிக்கையான சில பூச்சிகள் மறைகின்றன.
இந்த இடத்தைவிட
சிறந்த இடம்
வேறொன்றுமில்லை
என்பதை அறிவேன்
கடிகாரத்தையும் இரயிலையும்
கண்டு அஞ்சினேன்….
போரையும் பயங்கரத் திரைப்படங்களைப்
பார்த்தும்.
அப்போது நான்
இளையவள்.
இது வெறும் மொழியாக்கமல்ல, கவிதை ஆக்கம். மூலமொழியில் இக்கவிதையை நாம் அறிந்தது இல்லை. ஆனால் ஆங்கில மொழியில் அக்கவிதைக்குரிய அத்துணை அடர்த்தியும், செறிவும் நேர்த்தியும் தமிழுக்கு வந்திருக்கிறது, தமிழ்க்கவிதையாகப் படைக்கப்பட்டிருக்கிறது.
ஆ. சுவைக்காக ஒரு கவிதை
முதுமை என்பது வாழ்க்கைப் போரின் தோல்விக் கட்டம். எல்லாபோர்களையும் போலவே உயிர் வாழ்க்கை யுத்தமும்: எல்லைப்பிரச்சனைகள், எதிரிகள், திட்டமிடல்கள், சூட்சிகள், யுத்த தந்திரங்கள் ஆயுதங்கள், வெற்றிகள், சமாதானங்கள் என்கிற தொடர் அத்தியாயங்களால் எழுதப்பட்டவை. பலமுறை வில்லன்களுடன் போரிட்டும் வெற்றியை ருசித்துமிருப்போம் தோல்வியில் துவண்டு பினர் வீறுகொண்டு எழுந்துமிருப்போம். ஆனால் உயிர்வாழ்க்கை யுத்தகளத்தில் இறுதிக்கட்ட போரென்று ஒன்றுண்டு, அதில் தலைவன் வாகை சூடுவதில்லை. தோற்றேஆகவேண்டும். அவன் இராமனாக இருந்தால் கூட. எதிரியின் ஆயுதம் முதுமை எனும் ஈட்டி. எதிரி யாரென்று சொல்லவில்லையே, இயற்கை. இராவணனைக் காட்டிலும் பல தலைகள் கொண்ட விலங்கு. கடலைப்போல காற்றைபோல அமைதியையும் அறியும் வெகுண்டெழவும் செய்யும். இறுதிவெற்றி தமக்கென்ற இறுமாப்பு என்றைக்கும் அதற்குண்டு.
மகா அலெக்ஸாந்தர் மகாசீஸர் அவர்களைப்போல வெல்லமுடியாதென்று வீறாப்பு பேசிய மகாமகா மனிதர்கள் பலரும் இறுதியில் மண்ணுக்குள் புதையுண்டவர்கள், தீக்குள் சாம்பலானவர்கள்தான். ஏதோ ஒரு நாளில் இயற்கை விழுங்கி ஏப்பமிடும் மனிதர் வாழ்க்கையை . “இலை உதிர்கால நாள் » கவிதை நமக்குத் தெரிவிக்கும் உயிர் வாழ்க்கைப் பற்றிய சத்தியம் கவனத்திற்கொள்ள தக்கது.
பெர்சிமன் மரக்கிளையின் நுனியில்
அமர்ந்தது ஒரு தும்பி
மயங்கி யிருந்த ஒரு நாள் முழுவதும்
காற்றடித்தபோதும், அது அசையவில்லை
குளிர்மழைபெய்தபோதும்
மரக்கிளையை ருசித்தபடியே.
அது அசையவே இல்லை.
மெதுவாக அதனை நெருங்கியபோது
திடுக்கிட்டேன்
அதேஇடத்தில்
அது முக்திநிலை அடைந்திருப்பதைப் பார்த்து.
கவிதைகள் சில ஏமாற்றத்தைத் தரினும், அக்விதைகளில் இடம்பெறும் சில வரிகள் அந்த ஏமாற்ரத்தைத் தவிர்க்க உதவுகின்றன:
…………..
தயவு செய்து
உங்களை நீங்களே
ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்.
தாலாட்டைப் பாடி
மக்களை நிரந்தரமாக உறங்க வைக்கும்
போலிக் கவிஞர்களே…
நீங்கள் கவிதை எழுதவேண்டும்
என்பதற்காக
வறுமையை வணிகம்செய்து
ஒரு கவளச்சோற்றுக்குத்
தவிக்கும்
பசித்த வாயை அழுக்காக்காதீர்கள்.
——-
மலர்கள் மக்களின் கனவுகளாக
இருந்தால்,
எவ்வளவு அழகாக இருப்பார்கள்
மனிதர்கள்
_______
மேர்குறிப்பிட்ட கவிதைகள் அன்றி இத்தொகுப்பில் நான் வாசித்து மகிழ்ந்த பிற கவிதைகள்: பனிப்பாதை, பனி, மலர்கள் விட்டுச் சென்ற வெற்றித்ட த்தில், அன்றில், சொல், அறிமுகம், மலர்கள், என்னையே அழித்துகொள்ளுதல், ஒரு கதவு திறக்கிறது.
மீண்டும் தகவலுக்காக
மலர்கள் விட்டுசென்ற இட த்தில்…
கொரியமொழி கவிதை தொகுப்பு
மொழிபெயர்ப்பாளர்கள்
பா. இரவிக்குமார் – ப . கல்பனா
பரிசில் வெளியீடு.
———————————————————–