Monthly Archives: நவம்பர் 2019

மொழிவது சுகம் கட்டுரைகள் -4

ஒளியும் நிழலும்

ஒரு பொருளின் மாற்று வடிவங்களில்  நிழலுக்கென தனித்துவமுண்டு. சாயல், நகல், பிரதி, படிமம் எனவும் பொருள் கொள்ளலாம். உளப்பகுப்பாய்வியல் நிழலை மனசாட்சியென்கிறது. கருப்புவெள்ளைபடங்களில் கதை நாயகனோ நாயகியோ மனச்சிக்கலுக்கு உள்ளாகிறபோதெல்லாம் அவர்களினும் பார்க்க இருமடங்கு ஆகிருதியுடன் கலகலவென்று நகைப்பதுபோலவோ, இறுக்கமான முகத்துடன் எச்சரிப்பதுபோலவோ திரையில் தோன்றுகிற நிழல்களை நாம் அறிவோம். உள்மனமென்று நம்பப்படும் இந்நிழலுடைய குணத்தினை இணக்கமற்ற, முரண்படக்கூடிய, கலகக்குரலென்று சித்தரிக்கலாம். மனம் எரிமலையாகிறபோது வீசப்படும் எரிமலைக்குழம்பு இந்நிழல். எரிமலைகுழம்பால் அண்டை நிலங்களுக்குப் பிரச்சினை. உளப்பகுப்பாய்வு முன்னிருத்தும் நிழல் புறப்பட்ட இடத்தையே புல் பூண்டற்று போகச் செய்யும் தன்மையது. நிழலோடு கவனம் தேவை, உறவில் எச்சரிக்கை தேவை. உளப்பகுப்பாய்வியல் அறிஞர் கார்ல் யுங்கிற்கு இந்நிழல் நம்மினும் தாழ்ந்தது, பண்படாதது, செம்மையுறாதது, தொடக்க நிலை, முரண்பட்டது ஆனால் தப்பானதல்ல. அற்பாத்மாவுக்குரிய குணமும் சேர்ந்ததுதான் மகாத்மா. சுத்திகரிக்கபட்ட ஒழுகலென்று எதுவுமில்லை. வாழ்க்கையென்பது அப்பழுக்கதற்றதல்ல.  ஒழுங்கின்மையும் சேர்ந்ததுதான் உயர்வும் முன்னேற்றமும், ஆக நிழலின்றி ஒளியில்லை என்பதுதான் விதி.

தருமிக்கு ghostwriter யாரென்று கேட்டால் சிவபெருமானைச் சொல்வோம். The Count of Monte Cristo, The Three Musketeers, Twenty Years After புகழ் அலெக்ஸாந்த்ரு துய்மா (Alexandre Dumas) விற்கும் ஒரு Ghostwriter உண்டு பெயர் மக்கே என அழைக்கப்பட்ட ஒகுய்ஸ்த் மக்கே(Auguste Maquet). எட்டுவருடங்களுக்கு முன்பு அலெக்ஸாந்த்ரு துய்மாவை பாந்த்தெயோன் தேவாலயத்தில் மறு அடக்கம் செய்வதென பிரான்சு நாடு தீர்மானித்தபோது இந்த நிழலுக்கு ஆதரவாக ஒலித்த ஒரே குரல் பொதுவுடமைக் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ஹ¤மானித்தே தினசரியின் ஆசிரியர் குரல். அவர் தமது தலையங்கத்தில், “துய்மாவின் முக்கிய படைப்புகளுக்குப் பின்புலத்தில் உழைத்த ஒகுய்ஸ்த் மக்கேவை நண்பர் அருகில் மறு அடக்கம் செய்யக்கூடாதா? அதற்கு தேவாலயத்தில் கொஞ்சம் இடமில்லாமல் போய்விட்டதா?” என்று வருந்தினார். துய்மாவின் நிழலாகவிருந்த ஒகுய்ஸ்த் மக்கே 19ம் நூற்றாண்டைசேர்ந்தவர். பெரிய இடத்துப்பிள்ளை, கல்வி அறிவிலும் தேர்ந்தவர். இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று பதினெட்டுவயதில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். பணியிலிருந்துகொண்டு எழுதிய சில கவிதைகளும், கதைகளும் இலக்கிய இதழ்களில் பிரசுரமாகின்றன. பிடித்தது சனி. இலக்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்களின் சினேகிதம் வாய்க்கிறது. மனிதருக்கு இலக்கியத்தில் சபலமுண்டாக ஆசிரியப் பணியைத் துறக்கிறார். ஆசிரியப்பணியிலிருந்துகொண்டு இலக்கிய பணியை செய்யமுடியாதென நினைத்திருக்கிறார். ழெரார்ட் நெவால்(Gerard de Nerval) என்ற கவிஞரின் நட்புகிடைக்கிறது. இருவருமாக இணைந்து கட்டுரைகள் எழுதுகிறார்கள்.

ஒகுய்ஸ்த் மக்கேவும் தரித்திரமும் இரட்டையர்கள் என்றாலும் தரித்திர சகோதரர் இவரை முந்திக்கொண்டிருக்கவேண்டும். மூன்று அங்கங்கள் கொண்ட நாடகமொன்றினை எழுதி எடுத்துக்கொண்டு வாய்ப்புத்தேடி நாடக அரங்கு பொறுப்பாளர்களைப் பார்க்கச் சென்றிருக்கிறார். வியாபாரிகள் “கூட்டம் சேர்க்கிற பெயராக இல்லையே” எனப் பதில் கூறியிருக்கிறார்கள். ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திருப்பிய மக்கே நான்கைந்து படிகளெடுத்து அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த சஞ்சிகைகளுக்கு அனுப்பிவைத்திருக்கிறார். படைப்பாளரின் பெயரைப் பார்த்துவிட்டு படைப்பை தெரிவு செய்யும் மகானுபாவர்கள் சரக்கு எங்களுக்கு முக்கியமில்லை ஐயா, செட்டியார் முடுக்காக இருக்கவேண்டுமென அருள்கூர்ந்திருக்கிறார்கள்: எங்களுக்கு வேண்டியதெல்லாம் எழுதியிருப்பவர் யார்? என்ன எழுதப்பட்டிருக்கிறதென்பது எங்களுக்கு முக்கியமல்ல என்று பதில் வந்திருக்கிறது.  மனிதருக்குப் பொறுமையில்லை நண்பரும் கவிஞருமான ழெரார் நெவால் பெயரில் தமது படைப்பினை அனுப்பிவைக்க பிரசுரமாகிறது. படைப்பில் தமது பெயர் இல்லாவிட்டாலும் தமது படைப்பு பிரசுரமாகிறதே என்ற அற்ப சந்தோஷம். இந்த ழெரார் நெவாலுக்கு அலெக்ஸாந்த்ரு துய்மா சினேகிதர். 1838ம் ஆண்டு டிசம்பர் மாதத்து குளிர் நாளில் துய்மாவை ஒகுய்ஸ்த் மக்கேக்கு அறிமுகப்படுத்திவைக்கிறார். தம் கைவசமிருந்த படைப்பொன்றை திருத்தி எழுதிக்கொடுக்கும்படி துய்மா இப்புதிய நண்பரைக்கேட்கிறார். அவரும் திருத்திக்கொடுக்கிறார். அன்று தொடங்கிய  இருவருக்குமான நட்பு 18 ஆண்டுகாலம் நீடிக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ‘நீக்ரோ’வாக மாறுகிறார். பிரெஞ்சு படைப்புலகில் ‘Gostwriter’ ஆக இருப்பவர்களுக்கு அதாவது நிழல்படைப்பாளிகளாக இருப்பவர்களுக்குப் பெயர் நீக்ரோ. இந்த நிழலை வெளிச்சத்திற்கு வந்திடாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டவர் அலெக்ஸாந்த்ரு துய்மா. ஒக்குய்ஸ்த் மக்கேக்குவுக்கு அவருக்குண்டான ஊதியத்தை கொடுக்க தொடக்கத்தில் ஒப்புக்கொண்ட துய்மா தவறியதால், பிரச்சினை நீதிமன்றத்திற்குபோகிறது. ஒகுய்ஸ்த் மக்கே தமது படைப்புக்கான ஊதியத்தை மட்டுமல்ல, படைப்புகளில் தமது பெயரும் இடம்பெறவேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார். நீதிமன்றம் துய்மா மக்கேவுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தை கடன்தொகையாக பார்த்ததே அன்றி படைப்பின் அடிப்படையில் செய்துகொண்ட ஒப்பந்த ஈட்டுத் தொகையாக பார்க்கத் தவறுகிறது. 145200 பிராங் மக்கேவுக்குத் துய்மா கொடுக்கவேண்டுமென தீர்ப்பு வழங்கியபோதிலும், படைப்புரிமைபற்றி நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்பதைக் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். 1851ம் ஆண்டில் நடந்த வழக்கும் தீர்ப்பும் பிரெஞ்சு படைப்புலகிற்கு மிகப்பெரிய அவப்பெயரினை ஏற்படுத்தித் தந்ததென சொல்கிறார்கள்.

துய்மாவை விமர்சிப்பவர்கள் ஸ்க்ரீப்,லாபிஷ்(Scribe, Labiche)போன்ற படைப்பாளிகளை சுட்டிக்காட்டுகிறார்கள். ஸ்கிரிப் ஐநூறுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியவர். தாம் தனித்து எழுதியதில்லை என ஒத்துக்கொண்டவர் பிற்காலத்தில் தமக்காக எழுதியவர்கள் பெயர்களை சுவற்றில் பொறித்துவைத்தார். லாபிஷ் என்ற நாடக ஆசிரியரும், தமது படைப்புக்குக் காரணமான நண்பர் மார்க் மிஷெல் அருகிலேயே தம்மை அடக்கம் செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொண்டவர். துய்மா தமது நிழல் எழுத்தாளருக்கு அவ்வாறான நன்றிக்கடன் ஆற்றியதாக செய்திகளில்லை. மாறாக The Count of Monte Cristo, Twenty Years After என்ற இருநாவல்களையும் எழுதிய ஒகுய்ஸ்த் மக்கே என தமது கல்லறையில் எழுதிக்கொண்டு திருப்தி அடைந்ததுதான் அவர் கண்ட பலன்.

 

இம்மாதம் (பிப்ரவரி) பத்தாம் தேதி வெளிவந்துள்ள திரைப்படத்தின் பெயர் ‘L’autre Dumas – வேறொரு துய்மா. அலெக்ஸாந்த்ரு துய்மாவின் மற்றொரு முகத்தை இத்திரைப்படம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. படத்தில் மேற்கண்ட பிரச்சினகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவகையில் இத்திரைப்படம் ஒகுய்ஸ்த் மக்கேவுக்கு செலுத்தப்படும் அஞ்சலியெனலாம். நடு நிலையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் நேர்மையாக திரைக்கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஒகுய்ஸ்த் மக்கே பாத்திரம் துய்மாவுக்கு இணையாகச் சொல்லப்ட்டிருக்கிறது.  இப்படத்தினை முன்வைத்து பிரான்சு நாட்டு கறுப்பரின தலைவர் பத்ரிக் வொசே என்பவர் சில கேள்விகளை முன்வைக்கிறார். அவருக்கு அலெக்ஸாந்த்ரு துய்மா பாத்திரத்தை ஒரு கறுப்பர் ஏற்று நடித்திருக்கவேண்டும், தலைமுடியை சுருள்சுருளாக மாற்றிக்கொள்வது மட்டும் போதாதென்பது அவர் கருத்து. காரணம் அலெக்ஸாந்த்ரு துய்மாவின் தந்தை கலப்பின ஆசாமி, ஹைத்தியைச் சேர்ந்த அடிமை. அவரது தாயாரும் ஒரு கறுப்பின பெண்மணி, ஹைத்திநாட்டில் அடிமையாக இருந்தவள். துய்மா தமது வாழ்நாளில் இனவெறியினால் பாதிக்கப்பட்டதையும் இவர் நினைவுகூர்கிறார். குறைந்தபட்சம் துய்மாவாக நடித்த நடிகருக்கு ஒப்பனையிலாவது அவர் கறுப்பரினத்தைச் சார்ந்தவரென்பதை காட்டியிருக்கவேண்டுமென்கிறார். பிரெஞ்சு திரையுலகம் கவனமானதுதான், எப்படி தவறியிருப்பார்களென தெரியவில்லை. அவர்களுக்கு துய்மாவாக நடித்த ழெரார் தெபார்தியே கச்சிதமாக பாத்திரத்துக்குபொருந்துவது காரணமாக இருக்கலாம். எதிர்காலத்தில் பராக் ஒபாமாவாகவோ, மார்ட்டின் லூதர் கிங்காகவோ ஒரு வெள்ளையரை நடிக்க வைப்பார்களா அல்லது ஜூலியர் சீசராக ஒரு கருப்பரை நடிக்க வைப்பார்களா என்ற கறுப்பரினத் தலைவர் எழுப்பும் கேள்விகளும் நியாயமானவையே.

 

எனக்குப் பிரச்சினை, துய்மாவாக யார் நடித்தார்கள் என்பதல்ல? மக்கேவை ஏமாற்றிப்பிழைத்த துய்மாவின் சாமர்த்தியம். இன்றைக்கு எழுத்து  பணி அல்ல பிறவற்றைப்போல ஒரு தொழில்.  தொழில்களின் தலைவிதியை தொழிலாளர்கள் தீர்மானிப்பதல்ல பணமுதலீட்டார்கள் தீர்மானிக்கிறார்கள், பணம் தீர்மானிக்கிறது அது சார்ந்த கோட்பாடுகள் தீர்மானிக்கின்றன. முதலாளிய உற்பத்தி சமுதாயத்தில் இலாபத்தை அடைவதே குறிக்கோள் என்கிறபோது எல்லாதுறைகளையும் போலவே எழுத்துங்கூட தர்மம் அற்றுபோய்விட்டதென்கிற வருத்தம். புகழ் தரும் போதையும் சுகமும் எத்தனை பெரிய மனிதர்களையும் சிறுமைபடுத்தக்கூடியதுதான், துய்மாவும் மனிதர்தானே? இதுதான் எதார்த்தம் என்ற வியாக்கியானமும் வலுசேர்க்க துணையிருக்கிறபோது யாரை இங்கே குற்றஞ்சொல்ல முடியும்?

 

————————————————————-

 

 

 

 

மொழிவது சுகம் நவம்பர் 1 2019

 

 

அ. கேள்வியும் பதிலும்

அக்டோபர் மாதம் தமிழ் படைப்புலக நண்பர்கள் வருகையால் இல்லம் நிறைந்திருந்தது. ஒருவர் நாஞ்சில் நாடன், மற்றவர் பதிப்பாள நண்பர் கண்ணன். இரண்டாவது வாரத்தின் தொடக்கத்தில் வந்திருந்த நண்பர் நான்சில்நாடனை பாரீஸில் வழி அனுப்பிவிட்டு, இறுதியில் இரண்டு நாட்கள் காலச்சுவடு நண்பர் கண்ணனையும்  அவர் துணைவியாரையும் வரவேற்க ஸ்ட்ராஸ்பூர் திரும்பவேண்டியிருந்த து. பின்னர் அவர்களை வழி அனுப்பிவிட்டு விடுமுறையில் இருந்த பேரப்பிள்ளைகளுடமன் திரும்பவும் பத்து நாட்கள். 4 ந்தேதி ஸ்ட்ராஸ்பூ திரும்பினேன்.  இதற்கிடையில் விபத்து. பிரச்சினை வாகனத்திற்கென்றாலும், கடைபிடித்தாகவேண்டிய சில சடங்குகள் இருக்கின்றன.

இந்திய இலக்கிய நண்பர்களுடன்  உரையாட விடயங்கள் இருந்தன. அகத்தியரின் கமண்டலக் கங்கை நதி வற்றினாலும் நாஞ்சிலார் மனக்குடத்தில்அடைத்துவைத்திருந்த சொல் நதி   வற்றாதது என்பதைப் புரிந்துகொள்ள அனேகச் சந்தர்ப்பங்கள். போதாதென்று கம்பநாட்டானின் கவித்தேனை அள்ளி அளித் தருவார்.  இனிமையான தருணங்கள் அவை. அதுபோலவே சு.ராவின் எழுத்துக்களில் எனக்கு மோகம் உண்டு. பதிப்பாளர் கண்ணனை, சுராவாகவே பார்க்கிறேன். படைபாளிகள் பதிப்பாளர்கள் அரிதாக புத்தகவாசிப்புக்கு நேரத்தை ஒதுக்கும் மனிதர்கள் என அனைவரையும்  உள்ளடக்கிய எழுத்தாளர் உலகம், பிற மனிதர்களையும் பார்க்க பார்க்க மேன்மக்களைக் கொண்ட உலகம்.

அக்டோபர் பத்தொன்பது அன்று பாரீஸில் நண்பர் அலன் ஆனந்தன் சிறிய இலக்கிய நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார். சிறப்பு விருந்தினர் நாஞ்சில் நாடன்.  சொற்கள் குறித்து, அவற்றின் முக்கியத்துவம் குறித்து நல்லதொரு கருத்துரையை வழங்கினார். கலந்துரையாடலில் இருகேள்விகள் எனக்கு முக்கியமாகப் பட்டன. ஒன்று  அன்றாட வழக்கில் தமிழர்கள் மிக க் குறைவான சொற்களையே தமிழர்கள் கையாளுகிறார்கள் என்பதைக் கவலையுடன் நாஞ்சிலாருடன் தெரிவித்தபோது, தங்கள் உபயோகத்திற்கு அதுபோதும் என்று நினைக்கிறார்கள், அதை அப்படித்தான் பார்க்கவேண்டும் என்றார் ஒரு நண்பர். நாஞ்சிலார் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பிரத்தியேகமாக கையாளப்படுகிற சொற்கள் பல,  பழந்தமிழுக்குச்சொந்தம், இன்று வழக்கில் அவற்றினை உபயோகிக்கத் தவறுவதால் தமிழுக்குப் பெரும் தீங்கிழைக்கிறோம் என்ற பொருளில் பதில் அளித்தார். எனக்குச் சொற்கள் உபயோகம் விதவிதமாக உண்டு பசி ஆறுவதுபோல. கம்பன் விருந்து படைக்க நாஞ்சில்போன்ற மனிதர்கள் பரிமாறுகிறபோது, வெறும் சோறுபோதும் பசியாறிவிடுவேன் என்பது பேதைகுணம்.   மற்றொரு நண்பர் தமிழ்ச் சொற்களில் வடமொழியைக் கலப்பது தவறென்கிற தொனியில்   « கிருஷ்ணா » என்று எழுதுவது சரியா ? எனக்கேட்டார். கேள்வியை எழுப்பியவர் இயல்பாகவே அக்கேள்வியை வைத்தார். எங்களைச் சங்கடத்தில் ஆழ்த்தும் நோக்கம் கிஞ்சித்தும் இல்லை.  எனினும் பாரீஸில் இக்கேள்வியின் பின்புல அனுபவம் எனக்குப் புதிதல்ல. இதுபோன்ற கேள்விகளுக்கும் அல்வா, ஆப்பிள் போன்ற சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைத் தேடும் நண்பர்களுக்கும் எனது அனுபவ அறிவின் பாற்பட்டு ஒரு பதிலைச் சொல்லவேண்டி இருக்கிறது. அன்றாட உணவு, உடுத்தும் உடை,  சமயம் சடங்கு இவற்றில் தமிழ் மரபை மீறி இருக்கிறோம்.  ‘கிருஷ்ணா’ போன்ற பெயர்களை தமிழில் எழுத மறுப்பதால்  தமிழ் வளர்ச்சி தடைபடுகிறது என்பதை நான் நம்பத் தயாரில்லை. கள்ளை ஒதுக்கி விஸ்கி எடுக்கலாம், வேட்டியைத் தவிர்த்து பேண்ட்டைப் போடலாம், கறிச்சோறு பிரியாணி ஆகலாம். யாப்பிலக்கணத்தை உடைத்து புதுக்கவிதை எழுதலாம், யார்பெயரிலோ வடமொழிகலப்பது தமிழைப் பாழ்படுத்திவிடும் ? என்கிற திறனாய்வைச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.   எதிர் வீட்டுகாரன் நிலைப்படியை எப்படிவைத்திருந்தாலென்ன. அதுபற்றிய அக்கறை அவனைஅறிந்தவர்க்கும், அவன் தேடும் விருந்தினர்க்கானது.  தொல்காப்பியத்தையும் நவீன இலக்கியத்தையும் நன்கறிந்த பேராசிரியர்களுக்கு எனது பெயர் விமர்சனத்திற்குரியதல்ல.  முப்பது ஆண்டுகால பிரான்சு வாழ்க்கையில் எனக்கு உயிர் தந்த மொழிக்கும்,  நலம் சேர்த்த மொழிக்கும் அணில்போல ஏதோ செய்திருக்கிறேன். பிரெஞ்சு மொழி சிந்தனையாளர் René Descartes «  je pense donc je suis » (நான் சிந்திக்கிறேன் எனவே உயிர் வாழ்கிறேன்) என்பார்.   நண்பர்களிடத்தில் (அண்மையில் நாஞ்சில் நாடனிடமும்) அப்புகழ்பெற்றவரியை ‘நான் எழுதுகிறேன் அதனால் உயிர் வாழ்கிறேன்’ எனச் சொல்வதுண்டு. தாய்மொழியும் வாழ்க்கை மொழியும் என்ற இக்கட்டுரை ஆப்பிளுக்கும், அல்வாவுக்கும் தமிழ்ச்சொற்களைத் தேடி வியர்வைசிந்தும்  மேற்படி பேராசிரிய வகையறாக்களுக்காகச் சமர்ப்பிக்கப்படுகிறது.

ஆ. தாய்மொழியும் வாழ்க்கை மொழியும்

அமெரிக்க அதிபரோ, சீன அதிபரோ இந்தியாவிற்கு  வருகை புரிந்தால், மகாபலிபுரத்தை உத்தியோக பூர்வ சந்திப்பு தளமாக அமைத்துக்கொண்டால்கூட இந்திய உடைக்கு முன்னுரிமை தருவதில்லை. மாறாக  இந்தியத் தலைவர்கள்  இத்தலைவர்களின் எல்லைக்குள் இந்திய பாரம்பர்ய உடையில் கால்பதிப்பதில்லை. காமராஜரும் காந்தியும், இந்தியப் பெண் பிரமுகர்களும் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. மேற்கத்திய தலைவர்களோ பிறரோ உங்கள் தலைவர்கள் « கோட்டு சூட்டின்றி வரவில்லையெனில் கைகுலுக்கமாட்டோம் ஒப்பந்தங்களில் கையொப்பமிடமாட்டோம் » என்று உடைகுறித்த நெறியை இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் வற்புறுத்துவதாக செய்திகள் இல்லை. இருந்தும் இந்திய எல்லைக்குள் வேட்டி சட்டை அணிபவர்கள்,  அதன் எல்லைக்கு அப்பால் கால் பதிக்கிறபோது, வேறு உடையில் காணவைப்பது எது ? என்ற கேள்வியின்  அடிப்படையிலேதான் தாய்மொழியையும் வாழ்க்கைமொழியையும் புரிந்துகொள்ளவேண்டும்.

 

தாய்மொழி : உயிர்மொழி, கருவில் காதில் வாங்கிய மொழி, தாலாட்டு மொழி, வீட்டில் தம்பி தங்கைகளுடன் சண்டையிட்ட மொழி, கண்டிப்புச் சூட்டில் கரிசனத்தை விளாவும் மொழி, உறவுகளுடனும்   நெருங்கிய   நண்பர்களுடனும் இயல்பாக உரையாட உதவும் மொழி. சிந்தனை மொழி.

வாழ்க்கை மொழி : உடல்மொழி, வீட்டைவிட்டு வெளியில் வந்தால் கையாளும் மொழி. கடையில், பேருந்தில், அலுவலகத்தில், பொதுவெளியில், கல்விக் கூடங்களில், ஆய்வகங்களில், நமது குடிமரபுக்கு அந்நியப்பட்ட மனிதர்களிடத்தில் விருப்பமின்றி நிர்ப்பந்தத்தின் பேரில் உபயோகிக்கும் மொழி, பிழைப்பு மொழி.

ஆக தாய்மொழி  இயல்பாகவும், விரும்பியும்  உபயோகிக்கும் மொழி. வாழ்க்கைமொழி பிழைத்தெழவேண்டிய இடர்ப்பாடு காரணமாகவும், வேறுசில காரணங்களை முன்னிட்டும்  ஏற்றுக்கொண்ட மொழி.  

தாய்மொழியும் வாழ்க்கைமொழியும் ஒன்றாக வாய்க்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மன், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெய்ன், நார்வே, சுவீடன் ஜப்பான், தென்கொரியா என பல நாடுகளை இந்த வரிசையில் அடுக்கலாம்.

பிரான்சுநாட்டின் இன்றைய மக்கள்தொகை 7 கோடி. இவர்களில்  49 இலட்சம் மக்கள் அந்நியர்கள் என்கிறார்கள்.  பிரெஞ்சுக் குடியுரிமைபெற்றிராத அந்நிய மக்களின் தொகை இது. எஞ்சியுள்ள  69.5 கோடிமக்களில் பிரெஞ்சுக்குடியுரிமைபெற்ற அந்நியர்களும் அடக்கம்.. உலகத்தில் இனத்தால் சமயத்தால், நிறத்தால் வேறுபட்ட  நூற்றுக்கு மேற்பட்ட தாய்மொழிகொண்ட மக்கள்  பொருளாதார காரணங்களுக்காக பிரான்சு நாட்டில் குடியேறி  வாழ்கிறார்கள். சொந்த நாட்டில் பிரச்சனைகாரணம் என்று சொல்லமுடியாது. சிரியா நாட்டில் பிரச்சினையெனில் அண்டை நாடான துருக்கியில் தஞ்சம் புகலாம், இடையில் குறுக்கிடும் நேற்றுவரை கம்யூனிஸப்பிடியிலிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் கோரலாம். ஆனால் அவர்கள் அகதிகளாக குடியேறுவது ஜெர்மன் பிரான்சு போன்ற நாடுகாளில். பொருளாதாரக் காரணங்களை முன்வைத்து பல மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட நாங்கள்  வீட்டில் தமிழ், அரபு, சீனம் என்று ஏதோ ஒரு மொழியைப் பேசினாலும், வீட்டை விட்டு   வெளியில்வந்தால்  உபயோகித்தே ஆகவேண்டிய மொழியாக இருப்பது  பிரெஞ்சு மொழி.  காரணம் எங்கள் வாழ்க்கை மொழி அது. விரும்பியோ விரும்பாமலோ வீட்டில் எந்த மொழி பேசினாலும்  அந்நியர்கள் வாழ்க்கைமொழியான பிரெஞ்சு மொழியில் நாட்களைச் சுமப்பது கட்டாயம்.  பிரான்சுநாட்டில் வாழும்  அந்நிய மக்களின்  தாய்மொழி இடத்தையும், அவர்களின் முதல் தலைமுறைக்குப்பின்னர் வாழ்க்கைமொழி ஆக்ரமித்துக்கொள்ளும். முப்பது ஆண்டுகள் தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து 31 வயதில் பிரான்சு வாழ்க்கையை ஏற்கிற்போது வீட்டில் தமிழையும், வெளியில் வந்தால் வாழ்க்கைமொழியாக பிரெஞ்சு மொழியை நாங்கள் ஏற்கிறோம். எஞ்சிய காலத்தில்  தாய்மொழியும் வாழ்க்கைமொழியும் ஒன்றாக வாய்க்கப்பெற்ற மனிதர்கூட்டத்துடன்   போட்டியிடமுடியாமல் இரண்டாம் குடிகளாக வாழவேண்டிய சிக்கல். பின்னாட்களில் இங்கேயே பிறப்பும் வாழ்க்கையும் என்கிறபோது மூதாதையர் மொழியைக் காட்டிலும் எதார்த்த வாழ்க்கைக்கான மொழி எது என்ற தேடல் முன்னுரிமை பெற்றுவிடுகிறது.  மொரீஷியஸ் தொடங்கி பல காலனி நாடுகளில் அரங்கேறிய உண்மை இது.

இன்று தமிழ் நாட்டின் நிலமை என்ன. பிரெஞ்சுக்கார ர்கள்போல  ஜெர்மனியரைப்போல,  ஜப்பானியரைப்போல  தாய்மொழியும் வாழ்க்கை மொழியும்  தமிழர்களுக்கு ஒன்றா ?  புலபெயர்ந்த எங்களைப்போலத்தான் தமிழர்கள், வாழ்க்கைமொழியாக தாய்மொழி அல்லாத ஒன்றை கல்விக்கூடங்களில், அலுவலங்களில், பொது வெளிகளில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டின் வரலாறு  சுதந்திர வரலாறல்ல. களப்பிரர் தொடங்கி இன்றுவரை இதுதான் உண்மை. நம்முடைய உடலில்  நூறு விழுக்காடு  கீழடி மரபணு இருக்கக்கூடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தெலுங்கர்களும், மராத்தியர்களும், கன்னடர்களும், பிறரும் வீட்டில் எந்த மொழி பேசினாலும் அன்று  தமிழ்நாட்டில் வாழ்க்கைமொழியாக தமிழை ஏற்றுக் கொண்டார்கள், பேசினார்கள், எழுதினார்கள்.  காரணம் தமிழே அன்றி தமிழர்களல்ல.

இன்று தமிழ்நாட்டில் குடியேறும் அந்நியர் நேற்றைய தெலுங்கரைப்போல, மராத்தியரைப்போல தமிழை வாழ்க்கைமொழியாக கொள்ளவேண்டிய நெருக்கடி உண்டா ? தமிழ் நாட்டில் வீட்டைவிட்டு வெளியில் வந்தால் காலை முதல் மாலைவரை தமிழ்பேசாமலேயே நாளைத் தள்ளிவிட்டு வீட்டிற்குத் திரும்பலாம். புலம்பெயரும் மக்கள் வேறுவழியின்றி  உய்யும்பொருட்டு  பிறமொழியை வாழ்க்கை மொழியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்களெனில்  தாய்த் தமிழகமக்கள் விரும்பியே அந்நியமொழியை வாழ்க்கைமொழியாக தெரிவு செய்கிறார்கள் என்பது ஒப்புகொள்ளபட்ட உண்மை.  தமிழ்நாட்டின் கல்விக் கூடங்களும் பெதுவெளிகளும் தெள்ளத் தெளிவானச் சாட்சியங்கள்.

ஒரு மொழியின் வளர்ச்சி வாழ்க்கைமொழியாக அதை வளர்த்தெடுப்பதில் உள்ளது. ஆங்கிலமும் பிரெஞ்சும்  இலக்கியமொழி மட்டுமல்ல இன்று பலகோடி மக்களின் கல்விமொழி, அறிவியல் மொழி, வணிகமொழி, நவீன மொழி. மானுட வாழ்க்கையின் மாறுதல்களுக்கு இணையாக நித்தம் நித்தம்  தம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழி.  ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களுளும் தங்கள் அறிஞர் பெருமக்களுக்கு குலம் கோத்திரம் தேடி நேரத்தை செலவிடுபவர்கள் அல்லர். தவிர, நவீன உலகின் நகர்வுகள் அனைத்தும் இம்மொழிபேசும் மக்களை முன்நிறுத்தி பின்செல்வதாக இருப்பதால் இம்மொழிசார்ந்த உடமைகளுக்கும் நாகரிகத்திற்கும் உபரிமதிப்பு கிடைத்துவிடுகிறது. நமக்கு தமிழ்ப்பற்று என்பதும் ஓர் பிழைப்பு, அரசியல். புறவாசல் களஞ்சியத்தில் பெருச்சாளிகளை அனுமதித்து.  தெருவாசலில் பந்தல்போட்டு வள்ளுவன் எந்த சாதியென வாக்குவாதம் செய்கிறோம்,  ஆப்பிளுக்கும் அல்வாவிற்கும் தமிழ்சொற்கள் தேடி வியர்வை சிந்துகிறோம்.

——————————————————-