Monthly Archives: மார்ச் 2012

கதையல்ல வரலாறு- 4

இட்லரின் பிணம் -(தொடர்ச்சி)

3. ஜெர்மனியை நான்குதிசைகளிலும் நேசப்படைகள் சூழ்ந்து கடுமையான தாக்குதல மேற்கொண்டிருந்தார்கள். சோவியத்படைகள் பெர்லிநுக்குள் நுழைந்திருந்தன. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக தீர்மானித்த நேசப்படைதலைவர்களின் கவனம் முழுக்க இப்போது இட்லரை குறிவைத்திருந்தது. பெர்லின் நகரில் கடுமையான பாதுகாப்பு வளையத்தின் உதவியுடன், எவ்விதத் தாக்குதலையும் தாக்குபிடிக்கக்கூடிய இரும்புப்பெட்டகம்போன்ற ரகசிய அறையொன்றில், சோவியத் படைகளின் தம்மை நெருங்கிக்கொண்டிருக்கும் செய்தியை காதில்வாங்கியவண்ணம் முகத்தில் தோல்வியில் நிழலைத் தவிர்த்து அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு அதிசயம் நடந்து தாம் தப்பிக்கக்கூடும் என்ற நம்பிக்கையும் மனிதருக்கு இருந்திருக்கிறது. கடந்த காலத்தில் பிரஷ்ய நாட்டு மன்னர் பிரெடெரிக்கிற்கு இக்கட்டான நேரம் அவரது தலையெழுத்து அவ்வளவுதான் என நினைத்திருந்த நேரத்தில் அவரது எதிரியான ரஷ்ய பேரரசி எலிசபெத் இறப்பு அவரை மீட்டுத்தந்தது எனலாம். அதுபோன்றதொரு அதிட்டம் தமக்கும் வருமென இட்லர் நினைத்திருந்ததாகவும் அதை தமது நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டதாகவும் சொல்கிறார்கள். அவர் நினைத்ததுபோலவே கோயபெல்ஸ¤ம், போர்மெனும் கையில் ஒரு தந்தியுடன் பாதாள அறைக்கு வரவும் செய்தார்கள். அவர்கள் கையிலிருந்த தந்தி ரூஸ்வெல்ட் இறந்த செய்தியை தெரிவித்திருந்தது.

அவ நம்பிக்கைகொண்ட நண்பர்களே பார்த்தீர்களா? கிடைத்திருக்கும் செய்தி என்னவென்று தெரியுமா? ரூஸ்வெல்ட் இறந்து விட்டாராம்., என்ன நான் சொல்வது காதில் விழுந்ததா? எதிர்பார்த்ததுபோலவே ர்ருஸ்வெல்ட் இறந்திருக்கிறான்! – என மகிழ்ச்சியில் கூற, அங்கே உடனடியாக இறுக்கம் குறைந்து சந்தோஷத்தில் மிதக்க ஆரம்பித்தார்கள். ஷாம்பெய்ன் உடைக்கபட்டிருக்கிறது. அடுத்த வந்த நாட்களில் மனிதர் மீண்டும் பழைய தெம்புடன் மிச்சமிருந்த தளபதிகளுக்கும் அவரது படைகளுக்கும் ஆனை பிறப்பித்திருக்கிறார். முதலாவது தளபதி வென்க் (Wenck) படை. பிறபடைகளின் எஞ்சிய வீரர்களெல்லாம் இப்போது இவரது தலமையில் இருந்தனர். அது தவிர இட்லர்மீது இன்னமும் அபிமானம் வைத்திருந்த இளைஞர்கள், முதல் உலகப்போரில் பணியாற்றிய ஜெர்மானியர்களென பலருமிருந்தனர். பூஸ்ஸெ (Bousse)மற்றொரு தளபதியிடம் 40000பேர் வீரர்கள் இருந்ததாகச் சொல்லப்பட்டது. பின்னவர் நென்க் படையுடன் சேர்ந்துகொண்டார். தாக்குதலை கைவிடவேண்டாம் என்கிறார் இட்லர், ‘பழைய நெனைப்புடா பேராண்டிஎன்ற தொனியில் கட்டளையும் பிறப்பிக்கிறார். ஆனால் தளபதிகள் இருவருமே தங்கள் எஜமானர் கட்டளையை அலட்சியம் செய்கின்றனர். இருவருமே மோதுவதைத் தவிர்த்து குறைந்த பட்சம் இருக்கின்ற தங்கள் வீரர்கள் உயிருக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாதென நினைத்தவர்கள்போல அமெரிக்கர்வசமிருக்கும் ஜெர்மன் எல்லைக்குத் திரும்புகிறார்கள். ரஷ்யர்களிடம் தங்கள் உயிருக்கு உத்தரவாதமிருக்காதென்பதை ஊகித்திருந்தார்கள். பாதாள அறைக்குள்ளிருந்துகொண்டு தமது குரலுக்கு இன்னமும் செவிமடுக்கிறார்களென என நினைத்ததுபோல தொடர்ந்து இட்லரிடமிருந்து ஆணைகள் இவர்களுக்குக் கிடைத்தன. அவர்தான பிறப்பித்தாரா என்பது ஆய்வுக்குரிய விஷயம். ஏனெனில் பாதாள அறைக்குள் பதுங்கியிருந்ததாகசொல்லப்பட்ட இட்லர் உலகத்தையே நடுங்கவைத்த பழையவரல்ல. இவர் வேறு.

4. ஜூலை 20, 1944ம் ஆண்டு இட்லர் மீது அவரது கடந்தகால அபிமானிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் தோல்வியை அடைந்ததென்றாலும், அச்சம்பவம் அவரை அரைமனிதராக மாற்றியிருந்ததாகச் சொல்கிறார்கள். வலதுகாலை அசைக்கமுடியாத நிலை. வலது கரமோ எந்நேரமும் நடுங்கிக்கொண்டிருந்தது. முகத்தில் தசைநார்களோ சுருங்குவதும் விரிவதுமாக இருந்திருக்கிறது. தலைவேறு ஆட்டம்போட்டபடி இருந்திருக்கிறது. ஆகமொத்தத்தில் மிகப் பரிதாபமானதொரு நிலை. ஏப்ரல் மாதம் 28ந்தேதி (1945) பெர்லின் ஒரு சில பகுதிகளில் நாஜிப்படையினர் தாக்குப்பிடிக்க முடிந்த இடங்களைத் தவிர்த்து மற்றபகுதிகளில் ரஷ்யர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர்.

பங்க்கர் என அழைக்கப்டும் மிகப்பாதுகாப்பான இட்லர் பதுங்கியிருந்த பாதாளை அறைஇருந்த இடமும் அதனைச்சுற்றியிருந்த ஏனைய பகுதிகளும் பெர்லின் நகரின் பிற பகுதிகளைப்போலவே கடுமையானத் தாக்குதலுக்கு உள்ளாயிற்று. அந்த நேரத்தில் அங்கே என்ன நடந்ததென சொல்ல நமக்குக் கிடைத்துள்ள ஒரே ஆதாரம், இட்லருடன் பங்க்கரில் இருக்க நேர்ந்த ராணுவ அதிகார் ஜெரார்ட் போல்ட் (Gerhard Boldt) என்பவர் அளித்துள்ள வாக்குமூலம். மிகத் தெளிவாக அப்பங்க்கரை விவரிக்கிறார் அவர். வெளியில் மனிதர் நடமாட்டங்களின்றி இருந்த அந்த பாதாள் அறைகளில்தான் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும், அதிகாரிகளும், முக்கிய நிர்வாகிகளும் இருந்திருக்கின்றனர். உள்ளே நுழைய கடுமையான காவலுடன் ஒளித்துவைக்கப்பட்டதுபோல ஒரு கதவு. அதனைக்கடந்தால். இட்லரின் பிரத்தியேக பாதுகாப்பு படைப்பிரிவைச்சேர்ந்த (S.S. -Schutzstaffel) காவலர் ஒருவர் இருட்டிலிருந்து வெளியில் வருவார். பார்வையாளரில் அத்தாட்சிகளையும், அனுமதிப்பதற்கான உத்தரவையும் மிகக் கவனமாகப் பரிசீலிப்பார். அவருக்கு திருப்தியென்றால் உங்களை உள்ளே அழைத்துச் செல்வார். சுவரைஒட்டி நீள் வரிசையில் ஆயுதம் தாங்கிய காவலர்களைக் கடந்து செல்லவேண்டும். சிலர் புகைபிடித்துக்கொண்டு இருக்கலாம். வேறு சிலர் உரையாடியபடி இருக்கலாம். ஒரு சிலர் நீண்ட நடைகூடங்களில் உறங்குவதையும் பார்க்கலாம். வியக்கும் வைக்கும் விஷயம், அப்பாதாள அறைகளின் இன்னும் கட்டிமுடிக்காதன் அடையாளங்களும் ஆங்காங்கே இருந்தனவென்று போல்ட் தரும் சாட்சியம். இருப்பொனாலான சிறிய கதவுகளை தள்ளித் திறந்துகொண்டு ஐம்பது அல்லது அறுபது சிறிய அறைகளை கடந்து வந்தால் இறுதியாக பத்து வாயில்களைச் சந்திக்கலாம். அவற்றில் மூன்று மீண்டும் திரந்த வெளிக்கு அழைத்துசெல்ல மற்ற்வை பூமிக்குக்கீழே நம்மை வழி நடத்தி அழைத்துபோகுமாம். கீழே மறுபடியும் சிறு சிறு அறைகள். அவ்வறைகள் முழுக்க ரொட்டிகளும், பதனிடப்பட்ட உணவுக் குப்பிகளும் இருக்கும். மீண்டும் அங்கேயும் கூடங்களிலும், அறைகளிலும் ஏராளமான ராணுவவீரர்கள். இறுதியாக மிகக்குறுகிய வாயிலொன்று. அதைக்கடந்து செல்லும்போது கூடமெங்கும் தண்ணீர் தேங்கி நின்றிருந்ததாகச் சொல்கிறார். வெளிச்சமும் சொல்லிக்கொள்ளுபடி அங்கில்லையாம். இறுதியாக ·பூரரின் ஒளிந்திருந்த இடத்திற்குச் செல்ல 37 படிகள் கீழே இறங்கவேண்டுமாம். அங்கே மூன்று வாயில்கள் மூன்று கதவுகள். இங்கிலாந்து அரசால் அனுப்பட்ட ட்ரோவர் கூற்றின்படி முதல் கதவைத் தாண்டிசென்றால் இட்லரின் பிரத்தியேக பணியாளரின் அறை. இரண்டாவது அறை வெளிவிவகாரத்துறை அமைச்சருக்குச் சொந்தமானது. மூன்றாவது வாயில் இரண்டு குடியிருப்புகளுக்கு அழைத்து செல்லும். முதலாவது குடியிருப்பு பன்னிரண்டு மிகச்சிறிய அறைகள். இருபக்கமும் ஆறாறு அரைகளிருக்க இடையில் கூடம். வேண்டாத பொருட்களைவைக்க, இட்மரின் பிறபணியாளர்கள் தங்க, சைவை உணவு தயாரிக்க என்று அவை உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. இறுதியாக மத்திய கூடத்தை அடைந்தால் சாப்பிடுதவற்கான அறையாகவும், அனைவருக்கும் மிக ஆபத்தான வேளையில் அடைக்கலம் தரவவும் அது உபயோகத்திலிருந்திருக்கிறது. அங்கிருக்கும் சுழல்படிகளை உபயோகித்தால் இரண்டாவது குடியிருப்பினை நெருங்கியிருப்போம். மிகவும் அகலமாகவும் ஓரளவு வசதிகூடியதாகவும் இருந்த அக்குடியிருப்பில்தான் இட்லரின் இறுதிமூச்சு புழங்கிற்று. சிறியதும் பெரியதுமாக மொத்தம் பதினெட்டு அறைகள் அங்கு இட்லரின் உபயோகத்திலிருந்தன என்கிறார் பேராசிரியர் ட்ரோவர். ஒரு மிகப்பெரிய அறை இரண்டாகப்பிரிக்கபட்டு ஒரு பகுதி இட்லருக்கும் மற்றொன்று பார்வையாளர்களுக்கென்றும் இருந்திருக்கிறது. பிற அறைகள் அன்றாட உயிர் வாழ்க்கை தேவைகள் அவ்வளவையும் நிறைவேற்றும் வகையிலிருந்திருக்கின்றன. தவிர மருத்துவர், செவிலிகள், செல்ல நாய்க்கான அறை, தப்பிக்க வழி என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு கட்டியிருந்திருக்கின்றனர்.

தளபதி வென்க்கும் அவரது படைகளும் எங்கே போய் தொலைந்தார்களென்ற எரிச்சலில் மீண்டும் ஆணைகள் பிறப்பிக்கபட்டன. கிடைத்த பதில் வென்க் என்ற தளபதியோ அவரின்கீழ் இன்னமும் செயல்படக்கூடுமென்று நம்பப்பட்ட படையோ இல்லை என்பதுதான். ஆக இட்லர் மிகுந்த ஏமாற்றமடைந்திருக்கிறார். வார்த்தைகளேதுமில்லை இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் இழந்திருந்த நிலையில் தளர்வுற்று அவரது அறைக்குள் திரும்பியதை மிகுந்த கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தவர்கள்: கோயெபெல்ஸ், போர்மன், மூத்த ராணுவ தளபதிகலுள் ஒருவரான க்ரெப்ஸ் (Krebs). தவிர அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவ்ர்களென நம்பப்பட்ட முன்னாள் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக எதிரிகளிடம் சமரசம் பேச தொடங்கிவிட்டதகவல்களும் வந்து சேருகின்றன. அந்த நேரத்திலும் நம்பிக்கை துரோகிகள் என சந்தேகித்தவர்களை கொலைசெய்யுமாறு ஆனபிறப்பிக்க அவர் தயங்கவில்லை. அப்படி சுடப்பட்டவர்களில் இட்லர் மணந்துகொண்ட நடிகை ஏவா பிரவுன் சகோதரியின் கணவ்ரும் ஒருவர்.

இட்லரின் இறுதிக்காலம் வரை மிக நெருக்கமாக இருந்தவர்கள் என்ற பட்டியலில் இருவர் மிக முக்கியமானவர்கள் ஒருவர் ஏவா பிரவுன், மற்றவர் ¨?ன்ஸ் லின்ழ். இந்த ¨?ன்ஸ் ஒரு ராணுவ அதிகாரி. இட்லரின் அருகிலேயே இருந்தவர். ஏவா பிரவுனை மணப்பதற்கும் அவரே காரணமென்கிறார்கள். அவரது ஆலோசனையின் பேரில் திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம். ஏபரல் 27ந்தேதி ஏவாவை மணக்குமாறு ¨?ன்ஸ் வழங்கிய யோசனையை இட்லர் உடனே ஏற்கவில்லை. ஆனால் மறுநாள் சம்மதித்தார். ஏவா சகோதரியின் கணவர் ·பெகலென் (Fegelein) நம்பிக்கை துரோகியென இட்லரால் குற்றம்சாட்டப்பட்டு அவரது பாதுகாப்புபடையினரால் கொல்லபட்ட மறுநாள் நள்ளிரவில் அதாவது 29ந்தேதி திருமணம். திருமணச் சடங்கினை நடத்த ஏற்பாடு செய்யபட்ட அதிகாரி நாஜிகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இட்லரையும், ஏவாவையும் நீங்கள் ஆரியர்கள்தானே என உறுதிபடுத்திக்கொள்ளவும் தவரவில்லை. மணமக்கள் இருவரும் தாங்கள் ஆரியர்களென உறுதிசெய்தார்கள். அடுத்து சில மணி நேரங்களில் தமது இறுதி விருப்பத்தையும் தமது பெண் செயலர் உதவியுடன் எழுதிகையொப்பமிடுகிறார். முகல் உலப்போருக்குப்பின்பு தமக்கு பிரிட்டனுடனோ அமெரிக்காவுடனோ யுத்தத்தில் இறங்க விருப்பமில்லையென்றும் முழுமுழுக்க யூதர்கள் செய்த சதியென்றும் அதில் குறிப்பிட்டார். இடையில் நடந்து முடிந்த திருமணத்திற்கு எளிமையாக ஒரு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டது. அவருடைய நெருங்கிய சகாக்களான கோயெபெல்ஸ், போர்மன், இட்லரின் இளைஞர் பேரவைத் தலைவர் ஆர்தர் ஆக்ஸ்மன், இரண்டு பெண்செயலாளர்கள், ¨?ன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டிருக்கின்றனர். விருந்து முடிந்து நண்பர்கள் கலையும் தருவாயில், ” சோஷலிஸத்தைப் புதைத்தாயிற்று. இழக்கக்கூடாததை இழந்தாயிற்று. இனி நாம் செய்யவேண்டியது கௌரவமாக மரணத்தை தழுவுவதுதான்“, எனக்கூறியபோது நண்பர்கள் அமைதியாக கேட்டுக்கொண்டார்கள்; இட்லரின் பெண்செயலாளர் ப்ரௌ ஜங் மாத்திரம் வாய்விட்டு கதறியபடி அவளுடைய அறைக்குள்சென்று கதவடைத்துக்கொண்டாளாம்.

 

அதிகாலை நான்குமணி, கொஞ்சம் ஓய்வெடுக்க விரும்பியவர்போல இட்லர் தமது படுக்கைக்குத் திரும்பினார். இனி வாழ்ந்து ஆகப்போவதில்லை என்பதில் அவர் தீர்மானமாக இருந்தாரென்பதை சுற்றியிருந்தவர்கள் புரிந்துகொண்டார்கள். எதுவும் நடக்கலாம் என்கிற நிலமை. படுப்பதற்கு முன்பாக நண்பர்களிடத்தில் வேறொன்றையும் கூறியிருக்கிறார்? இரஷ்யர்களிடம் பிடிபட்டு ஒரு காட்சிப்பொருளாக என்னை அவர்கள் நடத்துவதை தாம் விரும்பவில்லை, என்றாராம். ஆனால் மறுநாள் அவர் நடந்துகொண்ட விதம்தான் வியப்புக்குரியது. அந்த மறுநாள் ஏப்ரல் 29 ந்தேதி. எதுவுமே நடக்காததுபோல வழக்கம்போல அதிகாலையிலேயெ விழித்துக்கொண்டிருக்கிறார். மதியம் வழக்கம்போல தமது நெருங்கிய சகாக்ககளுடன் யுத்த நிலவரம் விவாதிக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு கூட்டம் இரவு பத்துமணிக்கு நடைபெற்றிருக்கிறது. அக்கூட்டம் நடபெற்றபோது, சோவியத் படைகள் 300 மீட்டர் தூரத்தில் இவர்களை நெருங்கிகொண்டிருந்தார்கள். இரவு பங்கரிலிருந்த எல்லா பெண்களுக்கும் அழைப்பு விடுக்கும்படி தமது மெய்க்காவலரைக்கேட்டுக்கொண்டார். உணவு மண்டபத்தில் செயலர்கள், சமையல் பெண்கள், இதரப்பணிப்பெண்கள் என பெண்கள் அனைவரும் கூடினர். அவர்களோடு வெகுநேரம் உரையாடினார். உரையாடியபோது கண்கலங்கியதாவும் சொல்கிறார்கள்.

(தொடரும்)

இசைவானதொரு இந்தியப்பயணம்-6

பிப்ரவரி-6

காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு கல்லூரி புதுச்சேரி இலாசுபேட்டையில் இருக்கிறது. புதுச்சேரிமக்களும் கல்விநிறுவனங்கள் புதுச்சேரி பல்கலைகழகம் எனத் தொடர்புவைத்துக்கொண்டு பணியாற்றும் நண்பர்களும் அதனை அறிவார்கள்.அங்குள்ள பிரெஞ்சு மொழித் துறையில் நண்பர் வெங்கட சுப்புராய நாயக்கர் என்கிற நாயகர் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பிப்ரவரி ஆறாம் தேதி நண்பரும் அவரது துறைதலைவர் பேராசிரியர் தனியல் ஜெயராஜும் ஓர் ஹைக்கூ பயிற்றரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து எங்களை அழைத்திருந்தார்கள். எங்கள் குழுவிலிருந்த ஆசிரியையான பிரான்சுவாஸ் என்பவருக்கு அவ்வழைப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. காரணம் அவர் ஆசிரியை என்பது ஒன்று. மற்றொன்று அவருக்கு கவிதையில் ஹைக்கூ வடிவம் மிகவும் பிடித்தமானதென்பது மற்றொன்று. இதனை முதல் நாள் நாயகர் இது குறித்து அவர்களோடு எங்களோடு பேசவந்திருந்தபோதே அறிந்திருந்தேன். அதுவும் தவிர இதுபோன்ற எழுத்து பயிற்றரங்கங்களில் மிகவும் ஈடுபாட்டுடன் பணியாற்றிய முன் அனுபவங்கள் இவ்வழைப்பை ஓர் ஈடுபாட்டுடன் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை அவருக்குக் கொடுத்திருந்தன.

காலையிலேயே நண்பர் நந்திவர்மனின் உதவிஉயுடன் ஒரு சிறிய வாகனத்தை வாடகைக்கு எடுத்திருந்தோம். அதற்கு முன்னால் தமது வீட்டிற்கு வந்தால் அங்கிருந்து பக்கத்திலிருக்கும் அரவிந்தர் ஆஸ்மரத்தின் செயலரை சந்தித்துவிடலாம். அச்சந்திப்பு பிரெஞ்சு நண்பர்களின் பிற்பகல் ஆரோவில் பாரவையிடலுக்கு உதவியாக இருக்குமென்கிற யோசனையை முன்வைத்திருந்தார். எனக்கும் சரி பிரெஞ்சு நண்பர்களுக்கும் சரி வியப்பினை அளித்த விஷயம் அரவிந்தர் ஆஸ்ரமத்தின்மீது மிகக்கடுமையாக விமர்சனங்களை நந்திவர்மன் வைக்கிறபோதும், எவர்க்கும் அஞ்சாமல் தமது எண்ணங்களைத் உள்ளூர் தமிழ் தினசரிகளில் மட்டுமின்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஆங்கிலத் தினசரிகளில் எழுதுகிறபோதும் அதையும் தவறாமல் அந்நிறுவனத்தைச் சேர்ந்த பிரமுகர்களும் காரியதரிசிகளும் வாசிக்கிற நேர்கிறபோதும் எப்படி இரு தரப்பினரும் சுமுகமாக காய்த்தல் உவத்தலின்றி உறவாடமுடிகிறதென்பதுதான். அதை எனது நண்பர்கள் ஆஸ்ரமத்தின் காரியதரிசியிடம் கேட்கவும் செய்தார்கள். அவர் ‘Lui, C’est un bon bandit’ என வேடிக்கையாகக் கூறினார். பின்னர் அதனை விளக்க முற்பட்டவர்போல “எங்களுக்குள் முரண்கள் இருந்தாலும் நாங்களிருவரும் நல்ல நண்பர்கள் என்றார். தமது எதிரிகள்கூட பாராட்டும் குணத்தை நந்திவர்மன் பெற்றிருந்தார் என்பதை இங்கே  கட்டாயம் பதிவு செய்யவேண்டும். ஆஸ்ரம செயலரிடம் அவர்கள் கல்வி முறை, அக்கல்விமுறையில் பிரெஞ்சு மொழிக்குள்ள பங்கு, அவர்கள் அமைப்புக்குள் வரவிரும்புகின்றவர்களிடம் அவர்களின் எதிர்பார்ப்புகளென பல்வகைப்பட்டப் பொருள்களில் நீண்ட எங்கள் உரையாடல் முடிவுக்குவந்தபோது காலை 9.30. பத்துமணிக்கு நாங்கள் நாயகர் கல்லூரியில் இருக்கவேண்டுமென்பதால் விடைபெற்றுக்கொள்ள் வேண்டியதிருந்தது. எங்கள் வாகனம் சரியான நேரத்திற்கு வந்ததும் எங்கள் உரையாடல் துண்டிக்கப்பட ஒருகாரணம்.

எங்கள் வாகன ஓட்டி நாங்கள் செல்லவேண்டியது புதுச்சேரி பல்கலைக் கழகமென தவறாக புரிந்துகொண்டிருந்தார். நாயக்கருடனான தொலைபேசி உரையாடல் காலாபட்டிற்கு என்றிருந்த எங்கள் திசையை இலாசுபேட்டைக்கு மாற்றஉதவியது. நாயக்கர் பத்துமணியென ஹைக்கூ பயிற்றரங்கத்திற்கான நேரத்தை ஒதுக்கியிருந்ததால் ஐந்து நிமிட தாமதத்தை பிரெஞ்சு நண்பர்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஆக பதற்றத்துடன் கல்லூரியில்நுழைந்தோம். நுழைவாயிலிலேயே மாணவர்கள் இருவர் எங்களை எதிர்பார்த்தவாறு இருந்ததால் கூடுதல் தாமதம் தவிர்க்கப்பட்டது. தங்கள் இயக்குனர் வந்தால் நிகழ்ச்சியை தொடங்கிவிடலாமெனக்கூறி திரு தனியல் ஜெயராஜ் சொன்னார். பிரெஞ்சு மொழித்துறையின் அலுவலகத்தில் காத்திருக்கவேண்டியிருந்தது. இந்த இடைபட்டநேரத்தில் எங்களுக்கு இனிப்பு, காரம், தேனிரென உபசரிப்பிற்கும் குறைவில்லை.

நிகழ்ச்சி தொடங்க 10.40 ஆகியிருந்தது. சுமார் முப்பது மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர் துறை தலைவர் வரவேற்புரை நிகழ்த்தினார். எங்களைஒருவர் பின் ஒருவராக அறிமுகப்படுத்தினார்கள். கல்லூரி இயக்குனரின் உரைக்குப்பிறகு பொன்னாடை, நினைவுப்பரிசுகளென இந்தியச்சடங்குகள் அரங்கேறின. பிரெஞ்சு நண்பர்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் புதிது. அவர்கள் முகத்த்தில் இதுவரை கண்டிராத மகிழ்ச்சி. பயிற்றரங்கத்தின் பார்வையாளர்களாக உள்ளூர் இலக்கிய நண்பர்கள் சீனு தமிழ்மணி, பக்தவச்சலம் ஆகியோர் வந்திருந்தனர். நண்பர் சீனு தமிழ்மணி நாயகர்,தேவமந்தன் ஆகியோரால் எனக்கு அறிமுகமானவர். புதுச்சேரியில் தீவிர நவீன தமிழிலக்கிய வாதிகளுக்கு நன்கு பழக்கப்பட்ட பெயர். ‘இலக்கியம்’ என்ற பெயரில் ஒரு புத்தககடையை குயவர்பாளையத்தில் நடத்துகிறார். ஹைக்கூவின் தமிழ் வடிவமான துளிப்பா அபிமானி. அவரது குடும்பமே கவிஞர்கள் குடும்பமெனில் மிகையில்லை. மற்றொரு நண்பரான பக்தவச்சலம் அண்மைக்காலம்வரை பிரான்சு நாட்டில் வாழ்ந்துவிட்டு இப்பொழுது புதுச்சேரியில் வசிக்கிறார். தமிழ் பிரெஞ்சு இரண்டிலும் ஆழ்ந்த ஞானமுடையவர், சைவை சித்தாங்களின் தீவிர அபிமானி, அவற்றின் மொழிபெயர்ப்பில் தீவிரமாக இறங்கியுள்ளார். புதுச்சேரி அரசு இவர்களைப் போன்றவர்களுக்கு உதவலாம். இது குறித்துத் தனியாக எழுதவேண்டும்.. நிகழ்ச்சியின் மையக் கருவினைத் தொட்டிருந்தபோது பதினோருமணி ஆகியிருந்தது. பிரான்சுவாஸ் உற்சாகமடைந்து கையில் சாக்பீஸை எடுத்துக்கொண்டு மீண்டும் ஆசிரியபணிக்குத் திரும்பியிருந்தார். ஹைக்கூவின் இலக்கணத்தை விளக்கினார். மாணவர்களைக்காட்டிலும் அன்றைக்கு ஹைக்கூவின் உற்சாகத்தைக் காட்டியவர்கள் நால்வர் ஒருவர் பிரான்சுவாஸின் கணவர் பிரான்சிஸ் மனெ,மற்றொரு நண்பர் சவியெ தெபெல், பக்தவச்சலம், நான்காவதாக வகுப்பெடுத்த பிரான்சுவாஸ். எனக்கதில் ஆர்வமில்லை. பொதுவாக இலக்கியத்திற்கு பெரும்பலானாவர்களைப்போலவே வடிவம், விதிகள் இலக்கணங்களென்கிற தளைகள் கூடாதென்பதென் கட்சி. மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு Hiver – Winter – குளிர்காலம். Hiver என்ற பிரெஞ்சு சொல்லை குளிர்காலம் என்று மொழிபெயர்த்துவிடலாம். ஆனால் பண்பாடு, புவியியல் நோக்கில், உணர்வில் குளிரும் winterம் ஒன்றல்ல. வந்திருந்த மாணவர்கள் தமிழ்நிலப்பரப்பைச் சார்ந்தவர்கள் என்பதால அவர்கள் ஹைக்கூவில் மார்கழி இடம்பெறுமென்ற எனது நம்பிக்கை பொய்த்துபோனதில் எனக்கு ஏமாற்றம். ஒரு குழுவிற்கு ஐந்து மாணவ மாணவிகள் வீதம் ஆறுகுழுக்களாகப் பிரிக்கபட்டு, கவிதைகள் முயற்சிக்கப்பட்டன. பெரும்ம்பாலான மாணவர்கள் தொடக்கத்தில் குழம்பினாலும் பின்னர் ஆர்வத்துடன் எழுதினார்கள். ஒப்பேற்றிய புனைவுகள், பிறழ்வான சொற்கள் எனவிருந்தாலும் ஓரளவு ஹைக்கூ இலக்கணத்தை புரிந்துகொண்டவைகளாகவே அக்கவிதைகளிருந்தன. ஒரு சில மாணவர்களின் கவிதைகள் கூடுதலாகவே எங்களைக் கவர அனைவருக்கும் உண்மையில்மகிழ்ச்சி. இப்பயிற்சி அரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்த பிரெஞ்சு மொழித்துறையை எவ்வளவு பாராத்தினாலும் தகும்.

பயிற்றரங்கத்தில் கலந்துகொண்ட அனைவரும் கும்பலாக நின்று நிழற்படமெடுத்த்துக்கொண்டோம். பிரெஞ்சு நண்பர்கள் ஆரோவில்லை பார்ப்பதற்காக காரில் விடைபெற்றார்கள். பயிற்றரங்கில் கலந்து கொண்ட மாணவமாணவிகளுக்குப் உள்ளூர் கட்சி அரசியல் நடத்துபவர்களின் பாணியில் பிரியானி பொட்டலங்களை வழங்கினார்கள். எங்களுக்கும் விநியோகிக்கப்பட்டன. நண்பர் நாயகர் அவரது வீட்டிற்கு அழைத்த்திருந்தார். திருவாளர் பக்தவச்சலம் நாயகர் மூவருமாக மதிய உணவை அங்கேதான் உண்டோம்.  நாயகருடன் எப்பொது பேசினாலும் நேரம் போதாது. வேடிக்கையாக உரையாடக்கூடியவர். அவரே என்னைபுதுச்சேரியில் உரிய இடத்தில் கொண்டுபோய் சேர்த்தார். எனது அறையில் உறவினர் மணிவண்ணன் எனக்காகக் காத்திருந்தார். பிரெஞ்சு நண்பரகள் ஆரோவில் பார்க்கப்போனது எனக்கு வசதியாகப்போயிற்று. எனது மனைவி தரப்பு உறவினர்கள் ‘வானவில்’ நகர் என்ற இடத்தில் இருக்கிறார்கள். தாம்பரத்திலிருந்த வந்திருந்த உறவினர் மணிவண்ணனுக்கும் அவர்கள் உறவினரென்பதால் இருவருமாக அங்கே சென்றோம். நண்பர்களின்றி இருந்ததால் இரவு உணவை அடையாறு ஆனந்தபவனில் நான்கு நாட்களுக்குப்பிறகு எனக்காகசாப்பிட்டேன்.
————————————————————————————————

கதையல்ல வரலாறு 4 -1

 இட்லரின் பிணம்

-1. 1945ம் ஆண்டு நேசநாடுகளின் படைத் தளபதிகள் பெர்லினின் கூடினார்கள். இச்சம்பவத்திற்கு 28 மணிநேரத்திற்கு முன்பாக ஹிட்லர்வசமிருந்த ஜெர்மன் எவ்வித முன்நிபந்தனைமின்றி சரணடைந்திருந்தது. ஏறக்குறைய இதற்கெல்லாம் முன்பாக ஒரு பாதாள அறையில் உலகனைத்தும் ஜெர்மனால் ஆளப்படவேண்டும் எனக் கனவுகண்ட ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டிவிட்டாரென்று பேச்சு. உலக அரசியலில் ஹிட்லர் மரணமென்ற வதந்தி ஒரு பூம்பத்தையே நிகழ்த்தியதெனலாம். வெற்றியின் களிப்பில் நேசநாடுகள் திளைத்திருந்தாலும் அதைக்காட்டிலும் உலக நாடுகளுக்கிடையான உறவில் பரஸ்பர நல்லெண்ணத்தையும், சுமுகமான நட்பையும் வளர்த்து அமைதியை நிலைநாட்டுவது அவர்களுக்கு முதற்பணியாக இருந்தது. பத்திரிகையாளர்களும், இதழியிலாளர்களும் முக்கியத்துவமறிந்து பெருந்திரளாக நேசநாடுகளில் ராணுவ தலைவர்களின் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். குறிப்பாக ரஷ்ய படையின் தளபதி ஜூக்கோவ் அங்கே பத்திரிரிகையாளர்களின் கவனத்திற்குள்ளானார். காரணம் இவர்தான் ஹிட்லரின் இறுதி நாட்கள் குறித்து விளக்குவதற்கென பத்திரிகையாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். நடிகை ஏவாவுடனான ஹிட்லரின் திருமணத்தை வெளி உலகிற்கு அறிவித்தவரும் இவரே. ஆனால் அன்றையதினம் ஒரு நடிகையையுடனான ஹிட்லரின் திருமணத்தைக் காட்டிலும் பத்ரிகையாளர்களுக்கு ஈர்ப்பினை தந்த தகவல், அவரது மரணம் சம்பந்தமானது.

நடந்ததனைத்தும் புதிராக உள்ளது. ஹிட்லரில் உடலை எங்களால் அடையாளப்படுத்தவியலாததால், அவருக்கு நேர்ந்த முடிவை உறுதிப்படுத்த முடியாவர்களாகவிருக்கிறோம். பெர்லினிலிருந்து கடைசி நிமிடத்தில் எங்கேயாவது இட்லர் தப்பித்திருக்கவும் சாத்தியமுண்டுஎன்ற ஜூர்க்கோவின் வார்த்தைகள் முக்கியமானவை.

பெர்சாரின் என்ற மற்றொரு ராணுவ அதிகாரியின் குறுக்கீட்டிலும் இச்சந்தேகம் உறுதிப்பட்டது:

முக்கியமான ஜெர்மன் அதிகார வட்டத்தைச் சேர்ந்தவர்களின் பிணங்களைக் கண்டோம். ஆனால் அப்பிணங்களில் ஹிட்லர் பிணமென்று எதனையும் குறிப்பிட்டு சொல்ல எங்களால் முடியாது. எனவே அவர் மரணத்தை சந்தேகிக்க வேடியிருக்கிறது. ஐரோப்பாவில் எங்கோ ஒரிடத்தில் இன்னமும் பதுங்கியிருக்கலாமோவென சந்தேகிக்கிறோம். எங்கள் சந்தேகம் ஸ்பெயின் சர்வாதிகாரியான பிரான்க்கோ அவருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கலாமென்பது, அது அபத்தமாகக் கூட இருக்கலாம். இப்போதைக்கு எங்கள் நிலை இதுதான்.”

இச்செய்தி ஐரோப்பிய அரசியல் சூழலைக் கலவரப்படுத்தியது. நேசநாடுகளின் படைகளிடம் பிடிபட்டால் அவருடைய தலைவிதி எப்படி முடியும் என்றறியாதவரல்ல இட்லர். எனவே அவர் தப்பியிருக்கக்கூடுமென சோவியத் ராணுவத்தினர் அறிவித்தபோது பலரும் நம்பவே செய்தனர். ஆனாலும் யுத்தத்தின்ப்போது அமெரிக்க ராணுவத்தின் தலைமையை ஏற்றிருந்த ஜெனரல் ஐசனோவர் அத்தனை சுலபமாக ரஷ்யர்களின் பேச்சை நம்ப மறுத்தார். கூன் 9ந்தேதிவரை அவரைபொறுத்தவரை இட்லர் உயிரோடிருக்கிறார் என்பதை நம்பத் தயாரில்லை. ஜூன் பத்தாம் தேதி நேரிடையாகவே ரஷ்யர்களிடம் கேட்டார். ‘ ரஷ்யர்களான உங்களுக்கு இட்லர் இறப்பு பற்றிய திடீர் சந்தேகங்கள் தோன்ற காரணமென்ன? என கேட்ட ஐசனோவினவினார்.

முதல் நாள் தாம் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்த தகவலை ஜூக்கோவ் மீண்டும் உறுதிபடுத்தினார்

கிடைத்த பிணங்களில் இட்லரின் உடலைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதுதான் காரணம்வேறென்ன சொல்ல, எனக்கூறிவிட்டு, இட்லர் ஸ்பெயின் நாட்டிற்கோ அல்லது அர்ஜெண்டைனாவிற்கோ தப்பித்து சென்றிருப்பாரென நினைக்கவும் சாத்தியங்கள் நிறைய உண்டென்றார். இக்கூற்றை ஏற்கின்றவகையிலிருந்தது பின்னர் டைம்ஸ்இதழுக்கு ஐசனோவர் அளித்திருந்த பேட்டி. நான்கு மாதங்களுக்குப் பிறகு ஜாலந்து நாட்டிற்குச்சென்றிருந்த அவர் தமது பேட்டியில், உண்மையில் இட்லர் இறந்ததாக ஆரம்பத்தில் நம்பியது உண்மை, அவர் இப்போது உயிரோடிருக்கவேண்டுமென நம்புவதும் உண்மை, அதற்கான காரணங்களுமுண்டென தெரிவித்தார்.

2. ரஷ்யர்களைப் பொறுத்தவரை தொடக்கத்திலிருந்தே அவர் உயிரோடிருக்கவேண்டுமென என்பதில் உறுதியாகவிருந்தார்கள். செப்டம்பரில் அவர்களின் இந்த சந்தேகம் ஆங்கிலேயர்களுடனான அவர்களின் உறவையே சீர்குலைக்கும் வகையில் வளர்ந்தது. “இட்லரும் ஏவாவும் உங்கள் வசமிருக்கும் ஜெர்மனிலேயே ஒளிந்திருக்கவேண்டும்என ஆங்கிலேயர்களைக், குற்றம் சாட்டினார்கள். இக்குற்றச்சாட்டை மறுதலிபதற்கான நடவடிக்கையாக ஆங்கிலேயர்கள் ஒரு பேராசிரியை நியமித்து இட்லரின் இறப்பு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் திரட்டுமாறு வேண்டிக்கொண்டார்கள். இப்பேராசிரியர், பிராங்பர்ட்டிற்கு வந்திருந்த ஐசனோவரிடம், இட்லர் இறந்துவிட்டாரென உறுதிபடுத்த இயலாதெனினும் அவர் உயிரோடிருப்பதாக நம்புவதும் அபத்தமானதென்று, கூறியிருக்கிறார். மாறாக ஸ்டாலின் அமெரிக்க அதிபரின் பிரதிநிதியிடம், இடலரும் அவரது சகாக்களான போர்மன் (Bormann), கோயபல்ஸ், (Goebells) கிரெப்ஸ் (Krebs) ஆகியோரும் தப்பித்து எங்கோ ஒளிந்திருக்கவேண்டுமென, கூறியிருக்கிறார், காரணம் சோவியத் தரப்பில் நுணுக்கமாக ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும் அவர் இறந்திருப்பாரென சொல்வதற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லையெனவும் மீண்டும் தெள்ளத் தெளிவாகச் சொல்லப்பட்டது. இதை படித்துக்கொண்டிருக்கும்போதே உலகில் எங்கேனுமொரு வரலாற்றாசிரியர் தோன்றி இரண்டாம் உலகபோருக்குப்பின்னும் இடலர் உயிர்வாழ்ந்தார் என்று எழுதிக்கொண்டிருக்கலாம். ஏற்கனவே நேதாஜியைக்கொண்டு எழுதப்பட்ட வரலாற்று புனைவுகளுண்டு, நாளை தமிழீழ தலைவர் பிரபாகரனைச் சுற்றியும் வரலாறு கதைகள் எழுதலாம். ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும் வரலாறு அறிவியலல்ல, கலைப்பிரிவைச் சார்ந்தது எனவே புனைவுகளுக்கு அங்கே பஞ்சமில்லை. ஜூக்கோவ் என்கிற ரஷ்ய ராணுவ தளபதியும், ஸ்டாலினும் இட்லர் உயிரோடிருக்கிறாரென திரும்பத் திரும்பச் சொல்லிகொண்டிருந்தபோது இடலர் இறந்துவிட்டாரென்பதும் உண்மை அதனை ரஷ்யர்கள் அறிவார்களென்பதும் உண்மை என்கிறது மற்றொரு வரலாறு.

(தொடரும்)

இசைவானதொரு இந்தியப் பயணம் -5

பிப்ரவரி -5- தொடர்ச்சி

பிற்பகல் எனது உறவினர் நண்பர்  தாம்பரத்திலிருந்து வந்திருந்தார். அவரோடு எங்கள் குடும்பக் கதைகளைப் பேசிக்கொண்டிருந்ததால் நேர்ம் போனது தெரியவில்லை. பிரெஞ்சு நண்பர்கள் லப்போர்த் வீதியிலிருந்த ‘சொசியத்தே ரெவெய் சோசியால்’ என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு வந்துவிடுவதாக சொல்லியிருந்தார்கள். ஆனால்  மாலை 5மணிக்குத்தான் என்னால் அங்குபோக முடிந்தது.

பொதுவாக தமிழ்நாட்டில் விழா எடுக்கின்றவர்களை இருவகைப்படுத்தலாம். வரமளிக்கும் இடத்திலுள்ள மூர்த்த்திகளுக்கு எடுக்கும் விழாக்கள் முதல்வகை. பூசாரிகள் செலவில் உற்சவமும் அர்ச்சனையும், நடக்கின்றன. பிரார்த்தனையில் பலனடையும் பக்தர்களின் பங்களிப்பும் இதிலுண்டு. வேறுசிலருக்கோ தங்களை உற்சவமூர்த்தியாக பிறரை நம்பும்படிச்செய்ய வேண்டும் அதற்காக தங்கள் கைப்பணத்தை செலவு செய்யவும் அவர்கள் தயார். .தமிழ்நாட்டில் பாம்பே ஸ்வீட்ஸ்டாலுக்குப் பிறகு ஜாம் ஜாமென்று நடக்கும் வியாபாரம் அநேகமாக விருது வியாபாரமாகத்தான் இருக்கவேண்டும். புல்லுக்கு இறைக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டிருப்பதால் சாமர்த்தியமாக ஒன்றிரண்டு நெல்லுக்கும் சேர்த்தே இறைக்கிறார்கள். உரையிலிட்டு தரும் ஒரு நூறுக்கோ இருநூறுக்கோ பத்திரிகைகளில் விளம்பரமும் கிடைக்கிறது. மேறகத்திய நாடுகளில் பொன்னாடைகள் மாலைகளின்றிதான் நான்பார்த்த வகையில் கவிதை வாசிப்புகள் நடக்கின்றன. அதையே எங்கள் விழாக்களிலும் கடைபிடிப்பதென தீர்மானித்தேன். ஐந்தாம் தேதி மாலை புதுச்சேரியில் நாங்கள் நடத்தியது ஒரு சந்திப்பு. அழைத்திருந்த பெருமக்களும் அதனை உணர்ந்திருந்தார்களென்பதால் பிரச்சினைகளில்லை. நிகழ்ச்சிக்கான இடத்தை தேர்வு செய்து வாடகைக்கு இடத்தினை பிடிக்கின்ற பொறுப்பினை எனது வேண்டுகோளுக்கிணங்க ஏற்பாடுசெய்தவர் நண்பர் நந்திவர்மன். நிகழ்ச்சிக்குத் தமிழ்க் கவிஞர்கள் தேர்வு நண்பர் இந்திரனுடையது. அழைப்பிதழ் பொறுப்பை நண்பர் நாயகர் ஏற்றுக்கொண்டிருந்தார். எல்லோரையும் காத்திருக்கவைத்து கொஞ்சம் தாமதமாகவே அந்நிகழ்ச்சிக்கான இடத்தை திறந்து விட்டிருக்கிறார்கள். சரியானமுறையில் இடத்துக்குடையவரை அழைக்கவில்லை என்று இரண்டு நாட்களுக்கு முன்னமேயே நந்திவர்மன் சொல்லிக்கொண்டிருந்தார். அதை நியாயப்படுத்தவே இந்த தாமதமென்று புரிந்தது.

நிகழ்ச்சிக்கு புதுச்சேரியில் இன்றைய தேதியில் பிரெஞ்சு இந்தியப்பண்பாட்டின் ஏக அடையாளமாகவும் பிரதிநிதியாகவுமுள்ள கல்விமானும் முன்னாள் நீதிபதியுமான திரு தாவிது அன்னுசாமி தலமை தாங்கினார்கள்; சிறப்பு விருந்தினர்களில்  திருவாளர்கள் இந்திரனும், எஸ் ராமகிருஷ்ணனும் கலந்துகொண்டனர். இது தவிர கீழைதேசத்து பண்பாட்டாய்வில் புதுச்சேரியிலிலிருந்து செயல்பட்டுவரும் நிறுவனத்தில் ஆய்வாளராக பணிபுரியும் பேராசியர் விஜெய வேணுகோபாலும், தமிழ் கவிஞர்களில் இந்திரன், மாலதி மைத்ரி, கடற்கரயும் கலந்துகொண்டார்கள். இங்கே ஒர் அதிசயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் கவிதை வாசிப்புக்கு மாலதிமைத்ரியின் கவிதை பூமித்தாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இக்கவிதை அவருடைய நீலியென்ற தொகுப்பிலிருக்கிறது. அக்கவிதையினை வாசிப்புக்கு தேர்வு செய்த ஒரு வாரத்திற்குப்பிறகு, எங்கள் குழுவின் பிரெஞ்சு பெண்மணி எழுதியிருந்த கவிதையும் பூமியைப் பற்றியதாக இருந்தது. எந்த நாட்டில் இருந்தாலென்ன பெண்கள் அடிப்படையில் ஒரே குணம்கொண்டவர்கள் என்பதை மெய்ப்பிக்கின்ற வகையில் இது நடந்ததென சொல்லவேண்டும்.

இலக்கியவாதிகள் கூடினால் சர்ச்சை வரவேண்டுமில்லையா அன்றும் வந்தது. மீண்டும் அப்பிரச்சினையை இங்கே எழுப்புவது கூடாதுதான். எல்லாவற்றையும் எழுதுகிறபோது அதை எழுதாமல் விட்டால் எப்படி.? நீங்களே சொல்லுங்கள் உங்களை நண்பரொருவர் நிகழ்ச்சிக்கு அழைக்கிறார். அழைக்கிற நண்பர் நீங்கள் விரும்பாத ஒருவருக்கும் நண்பர் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவரையும் அழைத்திருக்கிறாரென தெரியவந்தால் ஒன்று அந்த நண்பரிடம் எனக்குக் கூடாதவர் ஒருவரை அழைத்துவிட்டீர்கள் எனவே வருவதற்கில்லையென மறுத்திருக்கலாம், அப்படி இல்லையா அடுத்த பந்தியிலோ முன் பந்தியிலோ உட்கார்ந்துவிட்டு எழுந்து போயிருக்கலாம். அதைவிடுத்து அன்றைக்கு கவிஞர் மாலதிமைத்ரியின் பேச்சு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. எஸ். ராவிடம் நடந்தவற்றிர்க்கு மன்னிப்புகேட்டேன். இருவருமே எனது விருந்தினர்கள். நான் வருத்தப்படாவிட்டால் எப்படி? மீண்டும் எஸ்.ராவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.

திரு நந்திவர்மன் தமது வரவேற்புரையில்  பிரெஞ்சு தமிழ் மொழிபெயர்ப்பில் கடந்த காலத்தில் ஈடுபட்டவர்களை மறந்துவிடமுடியாதென்றார். தாவீது அன்னுச்சாமி மொழிபெயர்ப்புக்கு வேண்டிய மாணவர்களை உரியவகையில் தயார் செய்யவேண்டிய கடமையை வற்புறுத்தினார். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் எங்கள் முயற்சியை பாராட்டியதோடு வழங்கிய அரியயோசனை:மாதந்தோறும் ஒரு நல்ல தமிழ்ச்சிறுகதையை பிரெஞ்சில் வெளியிடுவது, பின்னர் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டுவருவதென்பதாகும். நண்பர் நாயகருடன் இத்திட்டத்தைச் செயல்படுத்த நினைத்திருக்கிறேன்

திருவாளர்கள் தாவீது, விஜெய வேணுகோபால், திருமதி மதனகல்யாணி, முருகேசன், பக்தவச்சல பாரதி, மு.இளங்கோ,சீனு தமிழ்மணி, வெங்கிடேசன் என பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பல பெயர்கள் விடுபட்டிருக்கலாம். இந்த நேரத்தில் ஐந்தாம் தேதி நிகழ்ச்சியின் வெற்றிக்கு மூவரது உழைப்பை என்றைக்கும் என்னால் மறக்கமுடியாத நண்பர்கள் நந்திவர்மன், நாயகர், கவிஞர் இந்திரன்.

நிலழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த கவிஞர்கள் மாலதிமைத்ரி, கடற்கரய் இருவருக்கும் நன்றி.

siinu thamizmaNiபல்வேறு அழைப்புக்கிடையிலும், நெருக்கடிக்கிடையிலும் எனது அழைப்பை ஏற்று பெருமைபடுத்திய நண்பர்கள் இந்திரனையும்,  எஸ்.ராமகிருஷ்ணனனையும் நான் மறக்கவே முடியாது.
——————————————————————

மொழிவது சுகம் -March 20

பிரெஞ்சு-இந்திய கலை இலக்கிய பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் பகிர்ந்துகொள்ளல்: 

 பிரான்சு நாட்டில் சில நண்பர்கள் உதவியுடன் தோற்றுவித்துள்ள மேற்கண்ட அமைப்பு குறித்து இதே பகுதியில் பகிர்ந்துகொண்டுள்ளேன். அமைப்பின் நோக்கங்கள் குறித்தும் அதில் சொல்லியிருந்தேன். இரு தரப்பிலும் (நவீன) இலக்கியம், கலை, பண்பாட்டு பரிமாற்றங்கள் சம அளவில் நடைபெறவேண்டுமென்பது அடிநாதம். கனவுகள் ஏராளம். அவற்றில் ஒரு சிலவற்றையாவது நனவாக்கவேண்டும் என்ற உறுதியுமுள்ளது. பிரச்சினை அங்கிருந்து கொண்டு வருவதிலில்லை. இங்கிருந்து கொண்டுபோவதில்தானுள்ளது. பிரபஞ்சன், இந்திரன், தமிழவன், எஸ்.ரா. ஜெயமோகன், பாவண்ணன் போன்ற மூத்த படைப்பாளிகளையும்; காலச்சுவடு கண்ணன், சந்தியா நடராஜன் போன்ற பதிப்பாள நண்பர்களின் ஆலோசனையையும் கருத்தில் கொண்டு இயங்கத் திட்டம். முதல் கட்டமாக கடந்த மாதம் ஐந்தாம் தேதி புதுச்சேரியில் பிரெஞ்சு மற்றும் தமிழ்க் கவிதை வாசிப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம். இக்கவிதை வாசிப்ப்பில் பிரெஞ்சு கவிதைகளாக பொதுலேர், சேவியர், பிரான்சுவாஸ் கவிதைகளும்; தமிழ்க் கவிதை வாசிப்பில் நண்பர் இந்திரன், மாலதிமைத்ரி, கடற்கரய் கவிதைகளும் வாசிக்கபட்டன. ஆக முதற் சந்திப்பு இரு தரப்பு கவிஞர்களுடன் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு முன்னாள் நீதிபதியும், தமிழ்- பிரெஞ்சு பண்பாட்டின் ஏக பிரதிநிதியாக புதுச்சேரியில் இன்றளவும் திகழ்கிற பெருந்தகை தாவீது அன்னுசாமி தலமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நண்பர் எஸ். ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பல அரிய யோசனைகளை வழங்கியிருக்கிறார். இனி வடம்பிடித்து தேரை இழுத்துச்செல்லவேண்டும்-முடிந்தவர்கள் கைகொடுங்கள்.

எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது, இந்திரனுக்கு மொழி பெயர்ப்பு விருது:

இந்திரன் எனக்கு வாய்த்துள்ள இனிய நண்பர்களில் ஒருவர், இங்கே கவிஞர் மதுமிதாவுக்கு நான் நன்றி சொல்லவேண்டும். அவர் ஊடாகத்தான் இவரது அறிமுகம் கிடைத்தது. கவிஞர், கலை விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர் என பலமுகங்கள் கொண்டவர் . அவரது அறைக்குள் வந்த ஆப்ரிக்க வானம் (மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு) எனது அறைக்கும் வந்தது. இயல்பிலேயே கவிஞர் என்பதால் அவர் சொற்களை தேடுவதில்லை, சொற்கள் அவரைத் தேடிவரும் போலும்; சொற் தேர்வில், அதனைக் கையாளும் திறனில் ஒரு தேர்ந்த பொற்கொல்லனுக்குரிய கலைஞானம் ஒளிர்வதைக் கண்டு பிரம்மித்திருக்கிறேன்.  ஒரியக் கவிஞர் மனோரமா பிஸ்வாஸ் பத்ராவின் கவிதைத் தொகுப்பு “பறவைகள் ஒருவேளைத் தூங்கிப்போகலாம்” என்கிற தலைப்பில் இந்திரன் அவர்களால் மொழிபெயர்க்கப்படிருப்பதை நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். சாகித்ய அகாடமியின் 2011 மொழிபெயர்ப்பு விருதினை கவிஞர் இந்திரனுக்கு, இந்த ஒரிய மொழி கவிதை பெற்று தந்துள்ளது. இந்தியத் துணைக்கண்டம் தொடங்கி உலகம் முழுக்க பரவியுள்ள அவருடைய நண்பர்கள் மகிழ்ச்சிகொண்டிருக்கும் தருணம், அவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம். காலம் கடந்து வழங்கப்பட்டிருப்பினும் உரிய நபருக்கு இவ்வருடத்திய மொழிபெயர்ப்பு விருது அளிக்கப்பட்டுள்ளதென்கிற வகையில் அகாடமிக்கு நன்றி.

2011ம் ஆண்டுக்கான இயல் விருது நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.  கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இவ்வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, படைப்புலகில் மிக முக்கியமான விருது. வெயிற் போதின் செவ்வியை ஒளியூட்டவும், மூச்சிரைப்பற்ற சொற்களால் உணர்வுகளோடு உசாவவும் அறிந்தவர் நண்பர். வெயிற் காதலர் யாமத்தின் மீது மையலுற்ற செயல்கண்டு அதிசயித்திருக்கிறேன், அவர் படைப்புகளின் உள்ளார்ந்த எளிமை கண்டு மலைத்ததுமுண்டு. அவரது உழைப்பை நன்கறிவோம். ஒரு சாதனையாளருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருப்பதில் ஆச்சரியங்களில்லை. வெம்புழுதி வீசுகிற தமிழ்ச்சூழலில் கதிராகியும் நாணல்போல நிலைத்து நிற்க பக்குவம் வேண்டும் நண்பருக்கு நிறையவே உண்டென்பதை அண்மையில் நேரில் அறிந்தேன். வாழ்த்துக்கள்.

இந்தியாவும் சாலை விபத்துக்களும்:

இந்தியாவில் பயணம் செய்யும் ஒவ்வொருமுறையும் விபத்தில்லாமல் திரும்பவேண்டுமே என நினைத்துக்கொள்வேன். எனது சகோதரர் துணைவியார் வாகன விபத்தில் இறந்தார். இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் உறவினர் நண்பர்களென்று யாரேனும் ஒருவர் விபத்தில் இறந்திருக்கிறார்கள். உலகில் இந்தியாவில்தான் சாலைவிபத்துகள் அதிகமென்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசின் நெடுஞ்சாலை மற்றும் தரைவழி போக்குவரத்துத் துறையின் உத்தியோகபூர்வமான அறிக்கையின்படி  படுகாயமுற்றவர்கள், கால் கை இழந்தவர்களைத் தவிர்த்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மாத்திரம்

2010ஆம் ஆண்டில் 1.3 இலட்சம்பேர். 2009ம் ஆண்டைக் காட்டிலும்(125660) 4,1 சதவீதம் அதிகம். இந்தியாவின் ஆறில் ஒரு பகுதி நிலபரப்பையும், மிகக்குறைவான மக்கட் தொகையையும் கொண்ட பிரான்சு நாட்டில் 2011ம் ஆண்டில் வாகனவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3970பேர்கள், 2010 ஆண்டைக்காட்டிலுல் (3992) 22 உயிர்களை அரசு காப்பாற்றி யிருக்கிறது. இந்த ஆண்டு மேலும் சில சதவீதத்தை குறைப்பதென்று விதிகளை மேலும் கடுமையாக்கியுள்ளது. இந்திய சாலைவிபத்துகளுக்கு மக்கட் தொகையையும், பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையும் காரணமெனக்கூறி அலட்சியபடுத்திவிடமுடியாது. போக்குவரத்து விதிமீறல்கள் இங்கு அதிகம். தவிர சாலை பாதுகாப்பு குறித்த ஞானமோ அல்லது விழிப்புணர்வோ இங்கில்லை. மத்தியமாநில அரசுகள், காவல்துறை, பொதுமக்களென அனைவருக்கும் இதில் பங்குண்டு. இவ்விடயத்தில் ஐரோப்பிய நாடுகள் மிகக் கடுமையான விதிமுறைகளைப் பின் பற்றுகின்றன. ஓட்டுனர் உரிமம் இதற்கு நல்லதொரு உதாரணம். எழுத்துத் தேர்வு, ஓட்டுனர் தேர்வு என இரண்டிலும் தேறவேண்டும். இரண்டாண்டிலிருந்து ஐந்தாண்டுகள்வரை இதற்குத் தேவைப்படும், அல்லது சோர்ந்து ஓட்டுனர் உரிமம் வேண்டாமென ஒதுங்கிக்கொள்கிறவர்களும் உண்டு. ஒருமுறைபெற்றுவிட்டால் வாழ்நாள் முழுதும் வைத்திருக்கலாம். இதற்கிடையில் 1992ம் ஆண்டிலிருந்து ஓட்டுனர் உரிமத்தில் புள்ளிகள் மதிப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றவுடன் அவருக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும் அடுத்த மூன்றாண்டுகளில் அவர் எவ்வித விதிமீறல்களுக்கும் உள்ளாகவில்லையெனில் கூடுதலாக 6புள்ளிகள் பெறுவார் ஆக மொத்தத்தில் 12 புள்ளிகள். ஒவ்வொரு தவறுக்கும் இழைக்கும் விதிமீறலுக்கொப்ப அபராதத் தொகையோடு ஒன்றிலிருந்து பல புள்ளிகளை இழக்கவேண்டிவரும். அடுத்த மூன்றாண்டுகளில் தவறேதும் இழைக்கவில்லையெனில் இழந்தப் புள்ளிகளைத் திரும்பப் பெறலாம். அனைத்துப் புள்ளிகளையும் இழக்க நேர்ந்தால் திரும்பவும் ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பித்து மீண்டும் தேர்வுகளில் வெற்றிபெற்றாக வேண்டும். விண்ணப்பமும் இழந்த நாளிலிருந்து ஆறுமாதங்கள் கழித்தே ஏற்கப்படும். தவிர பாதுகாப்பான வாகனமும் முக்கியம். புதிதாக வாங்கப்பட்ட வாகனம் நான்காண்டுகளுப்பிறகு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை அரசாங்கத்தின் அங்கீகரிக்கபட்ட நிறுவனங்களில் பல சோதனைகளுக்குப் (டயர், பிரேக், விளக்குகளென கிட்டத்தட்ட இன்று 70க்கும் மேற்பட்ட சோதனைகளுள்ளன.) உட்படுத்தவேண்டும். பாதுகாப்பான வாகனமென அத்தாட்சி பெற்றபிறகே அவ் வாகனத்தை மீண்டும் உபயோகிக்க முடியும்.

Le Silence du bourreau:

« ஒரு கொலையாளியின் மௌனம் » என்று தமிழில் கூறலாம். அண்மையில் பிரெஞ்சு படைப்புலகை உலுக்கிய ஒரு நூல். மரணத் தண்டனை தீர்ப்பான பிறகு, எந்த நேரமும் அது நிறவேற்றப்படலாமென தவித்து மாய்வதற்கு ஈடான மன உளைச்சல் வேறொன்றிருக்க முடியாதென்பதை அண்மைக்காலத்தில் நாம் கவனம் பெற்றிருந்தோம். அது மனசிதைவுக்கும் காரணமாகலாம். பிரான்சுவா பிஸோ(Francois Bizot) ஓர் இனவரைவியலறிஞர்(ethnologist), நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 1971ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஓர் ஆய்வின் பொருட்டு இரண்டு நண்பர்களுடன் கம்போடியா சென்றவரை கேமர் ரூழ் என்ற கம்போடிய பொதுவுடமைக் கட்சியின் படைவீரர்கள்  கைது செய்து அவசர அவசரமாக மரணதண்டனை விதிக்கப்பட்டு, அடர்ந்த காட்டில் காவலில் வைக்கின்றனர். அவரது சிறைக்காவலனின் பெயர் டூஷ் (Douch), 28 வயது. அவரைக்காட்டிலும் மூன்று வயது குறைவான இளைஞன். சிறைக்காவலனென்றாலும், நன்கு கற்றறிந்தவன் என்கிறார் ‘பிஸோ’. பிரெஞ்சு நன்கு பேசிய காவலன், கேமர் ரூழை வழிநடத்திய மார்க்ஸிய தலைவரான போல் போட்டின் (Pol Pot) தீவிர அபிமானி. ஒரு கிறிஸ்துமஸின் போது அதிர்ஷ்ட்டவசமாக மேலிடத்து உத்தரவுப்படி பிஸோவுக்கு விடுதலை என்று கூறி சிறைக்காவலன் விடுவிக்கிறான். பிசோவின் நண்பர்கள் இருவருக்கும் விதி வேறாக இருந்தது. பிரான்சுக்குத் திரும்பிய பிஸோவுக்கு அவரது சிறைக்காவலனின் முகம் சுத்தமாக மறந்துபோனது. வருடங்கள் கடக்கின்ற்ன. காலம் மாறுகிறது கேமர் ரூழின் கொலைதாண்டவத்தில் பங்களித்த பலரும் ஒருவர் பின்னொருவராக கைதுசெய்யப்படுகின்றனர். செய்தித் தாளில் இவரைப் பொறுத்தவவரை மிக அமைதியாகவும் இனிய நண்பராகவும் விளங்கிய சிறைக்காவலர் பற்றிய செய்தியை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகிறார். கம்போடிய கேமர் ரூழ் பற்றி அறிந்தவர்களுக்கு S21 வதைமுகாம் அந்நியமல்ல. அந்த வதைமுகாமின் சூத்ரதாரியாகத் திகழ்ந்த ‘டூஷ்’ போல் போட்டிற்கு எதிரானவர்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் 40000 உயிர்கள் கொலை செய்யப்பட நேரிடையாகவும் குறைந்தது 1.7 மில்லியன் மக்களின் படுகொலைக்கு மறைமுகமாகவும் காரணமாக இருந்திருக்கிறான். பத்தாண்டுகளுக்கு முன்பு தமது சிறை அனுபவத்தைத் தொகுத்து நூலாக படைத்திருந்த பிஸோ, இப்போது டூஷின் ஆளுமை, தனித்தன்மைகள், பிற குணங்களென உளப்பகுப்பாய்வு செய்திருக்கிறார்.

கொலையாளிக்குள்ளும் எல்லாமிருக்கிறது. சமூகப்பார்வையில் குற்றவாளிகள், கொலையாளிகள் இடத்தை மறு கட்டமைப்பு செய்கிறார். பிஸோவுக்கு  கொலையாளியும் நம்மைபோலவே ஒரு மனிதன். சவப்பரிசோதனைசெய்யும் ஒரு மருத்துவருக்குள்ள திட்பமும், திறனும் கொலையாளிக்கும் பொருந்தும். இலட்சகணக்கான மனிதர்களை, உயிர்ப்பலியை ஒரு சடங்குபோல நிறைவேற்றிய டூஷ், பிஸோவை பொறுத்தவரை சராசரி மனிதன், இந்த சராசரிக்கு இலக்கணங்கள் ஏதும் தேவையில்லையெனில் சற்று மிகையாக சொல்லவேண்டுமெனில், விபத்தை சர்வசாதாரண்மாக எட்டிப்பார்த்த கையோடு வீடு திரும்பி சுவைத்துண்ணும் மனிதர்களுள் ஒருவன். பிரான்சுவா பிஸோ படைப்பில் தம்மையொரு மானுடவியலறிஞராகவோ, மெய்மைவாதியாகவோ முன்னிறுத்தவில்லை ஒரு கைதியின் பார்வையில் சிறைக்காவலனை பகுப்பாய்வு செய்திருக்கிறார். ஆசிரியருக்கு தீங்கென்பது வானத்திலிருந்து குதிப்பதல்ல, அல்லது எதிரெ இருப்பவன் அல்லது இருப்பவளுமல்ல. நமக்குச்சொந்தமானது, நம்மோடு உண்டு உறங்கி நமக்குள் தசையாக நரம்பாக, இரத்தமாக நம்முள் வாழ்ந்து நம்மிடமிருந்து தன்முகம்காட்ட தருணத்திற்காக காத்திருப்பது.

—————

 

மொழிவது சுகம்: உள்ளத்தில் ஒளியுண்டாயின்

எல்லோரும் எழுதுகிறார்கள். சில எழுத்துக்கள் ஈர்க்கின்றன. சிலவற்றை வாசிக்கிறபோது அருவருப்புடன முகத்தைச் சுளிக்க வேண்டியிருக்கிறது. தமிழில் நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆற்றல்களுக்கும் குறைவில்லை. ஆனால் உள்ள சோகம் பெரும்பானமையான எழுத்துக்கள் Fabrication ஆக இருப்பது. அண்மைக்காலங்களில் சிற்றிதழ்களில் வரும் படைப்புகள் குறிப்பாக கவிதைகளில் பல இந்தப் Fabrication சரக்குகுகளாக உள்ளன.

இந்தமாதம் சிற்றிதழொன்றில் கட்டுரையொன்றை வாசிக்கநேர்ந்து இடையிலிருந்த ஒரு வரி என்னை அதிர்ச்சிக்குள்ளாகியது. இப்படிகூட படைப்பாளியொருவரால் கற்பனை செய்யமுடியுமா? என நினைத்துக்கொண்டேன். குடம் பாலில் ஒரு துளி விஷத்தைக் கலந்ததுபோலவிருந்த அந்த வரியைக் கொண்டு கட்டுரையாளரின் மனத்தை எடைபோடமுடிந்தது. தொடக்க காலத்தில் கசாப்பு கடை வைத்திருப்பாரோ என்ற சந்தேகம். ஆனால் அங்கே கூட நிச்சயம் மனித உயிர்களைப் பலிகொடுக்கும் சந்தர்ப்பம் அமைந்திருக்காதென நம்பலாம்.

தமது கட்டுரையில் காலத்தின் பாய்ச்சலை சொல்லவந்த கட்டுரையாளர்:

“குழந்தையின் அறுக்கப்பட்ட குரல்வளையிலிருந்து பெருகும் குருதியைப்போல் பாய்கிறது காலம்” என்று எழுதுகிறார். வளரும் எழுத்தாளர்கள் இதுபோன்ற விபரீதமான Avant -Guarde’ களைத் தவிர்ப்பது அவசியம். அவ்வரியை மீண்டும் எழுதுவதற்குக்கூட தயங்கினேன். கற்பனையென்றாலுங்கூட, இத்தனை பயங்கரமாகவா? தாதா -மற்றும் மீ எதார்த்த ஓவியக் கண்காட்சிக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். படைப்பில் மட்டற்ற சுதந்திரத்தை சுவாசித்தவர்கள் அவர்கள். அவர்களால்கூட குரல்வளையை அறுப்பதையெல்லாம் கற்பனை செய்ய காணாது.

பிரிட்டனிலுள்ள தொலைகாட்சியொன்று சிங்கள ராணுவத்தின் அட்டூழியங்களின் ஒரு பகுதியாக பன்னிரண்டு வயது சிறுவனின் மார்பில் குண்டுகள் துளைத்திருந்த காட்சியை ஓளிபரப்ப நாம் துடித்தோம். உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதென்று சொல்ல இயலாதென்றாலும் தமிழினத்திடத்தில் மிகப்பெரிய அதிர்வை அக்காட்சி உண்டாக்கியிருந்தது. இன்னாருடைய மகன் என்பது மட்டும் ஒரு காரணமல்ல, வேட்டை மிருகங்களின் கூரிய நகங்களினால் சிதையுண்டவன் ஒரு சிறுவன் என்பதால், அக்கொடூரக் காட்சி நம்முள் பாதிப்பைத் தந்தது. யுத்தமென்றாலும் கடைபிடிக்கவேண்டிய அறங்கள் தெளிவாக இருக்கின்றன. ஆனால் அறிவுஜீவிகளென சொல்லிக்கொள்கிறவகளுக்கும் ஓர் அறம் வேண்டாமா?  குழந்தையின் குரல்வளையை அறுத்தெடுத்து கற்பனைசெய்ய எத்தகையை மனம் வேண்டும். காலத்தின் பாய்ச்சலை உவமைபடுத்த இவருக்கு வேறு உதாரனங்கள் இல்லையா அல்லது வறட்சியா? அதனை விரும்பியே எழுதினாரெனில் இவர்களுக்கும் ராஜ பக்ஷேக்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கமுடியும்?

1973ல் வட சென்னையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபொழுது வேதாச்சலம் என்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பேசவந்திருந்தார். தமது உரையைத் தொடங்கிய அவர், கூட்டத்தில் அமர்வதற்கு முன்பு பசியோடிருந்தேன். தெம்பாக பேசமுடியுமா என்றிருந்தவேளை எனக்குச் சிற்றுண்டியும் சிறுநீரும் அளித்தீர்கள், ” என அடுக்குமொழியில் பேசுவதாக நினைத்துக்கொண்டு உளற, அந்த உளறலை இதோ இன்றுகூட மறக்காமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழில் வித்தியாசமாக சிந்திக்கிறேன் எழுதுகிறேனென பலபேர்வழிகளின் எழுத்தில் இதுபோன்ற விபரீதங்களை வாசிக்க நேரிடுகிறது. பாரதி சொன்னதும் நினைவுக்கு வருகிறது “உள்ளத்தில் ஒளியுண்டாயின் வார்த்தையில் ஒளியுண்டாகும்
———————————-

மார்க்ஸின் கொடுங்கனவு – தனியுடமை என்பது தொடர்கதையா ?

      புதிய சித்தாந்தத்திற்கான நேரம்?

மார்க்ஸை மறுவாசிப்பு செய்ய இதைக்காட்டிலும் உகந்த தருணம் இருக்க முடியாது. 1989 ம் ஆண்டு பெர்லின் சுவர் இடிந்ததும், கிழக்கு ஐரோப்பாவை பொறுத்தவரை பொதுவுடமையும் உடன் இடிந்ததென சொல்லவேண்டும். குடியில்லாத வீட்டில் குண்டுபெருச்சாளி உலாவும் என்பதுபோல பாசாங்குகாட்டி  பொதுவுடமையை சுற்றிவருகிற நாடுகளும் ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்கின்றன. இவற்றுக்கெல்லாம் மார்க்ஸை குறை சொல்ல முடியுமா? சோவியத் நாட்டில் காம்ரேட்டுகள் தோற்றதற்கு சோவியத் மார்க்ஸிஸம் (லெனினிஸமும், ஸ்டாலினிஸமும்)  காரணமேயன்றி கார்ல்மார்க்ஸின் மார்க்ஸிஸம் காரணமல்ல என்பதை நினைவுகூர்தல் வேண்டும்.  இன்றைக்கும் எதிர்கால வல்லாதிக்க நாடுகள் என தீர்மானிக்கபட்டிருக்கிற இந்தியாவிலும் சீனாவிலும்(?) என்ன நடக்கிறது, ஏன் இந்த நாடுகளைத் தேடி மேற்கத்தியநாடுகளின் மூலதனம் வருகிறது? மார்க்ஸிடம் கேட்டால் காரணம் சொல்வார். தொழிலாளிகளின் ஊதியத்தை முடிந்த மட்டும் குறைத்து உபரிமதிப்பை அதிகரிப்பதென்ற விதிமுறைக்கொப்ப முதலாளியியம் தொழிற்பட இங்கு சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன என்பதுதான் உண்மை.

ஆக மார்க்ஸின் தீர்க்க தரிசனம் சாகாவரம்பெற்றது, ஆனால் பாதி கிணறுமட்டுமே  தாண்டுகிறது. முதலாளியியமோ நெருக்கடியிலிருந்து மீளும்  சாமர்த்தியம் பெற்றதாக உள்ளது. எனவே யோசிக்க வேண்டியிருக்கிறது. இவ்வுண்மைகளின் அடிப்படையில் மார்க்ஸ் அன்றைய காரணகாரியங்களின் அடிப்படையில் கட்டமைத்த கருத்தாக்கத்தை மாறுபட்ட இன்றைய சூழலில்  மறு ஆய்வுசெய்வது அவசியமாகிறது. அவர் கருதுகோள்களில் சில இன்றைக்கு ஒத்திசைவானவை அல்ல. உ.ம். மார்க்ஸ் காலத்தில் ஓரிடத்தின் இயற்கை மூலகூறுகளை சரக்காக மாற்றும் போக்கு, உற்பத்தி நிகழ்முறையாக இருந்தது. உலகமயமாக்கல் என்ற பெயரில் இன்று உற்பத்திநிகழ்முறையில் பங்கெடுப்பவர்களையும், இறுதியில் இலாபம் பார்ப்பவர்களையும் அத்தனை சுலபமாக அடையாளபடுத்திவிடமுடியாது. தொழிலாளிகளுக்கு எதிராக முதலாளிகள் என்றவரிசையில்  இடைத்தரகர்களாக செயல்படும் அரசியல்வாதிகள் போன்றோரையும் கணக்கிற் கொள்ளவேண்டும். அதுவன்றி ஆயிரத்தெட்டு காரணங்கள் இருக்கின்றன.

பொதுவுடமையை வீழ்த்தியதாக பரணிபாடும் முதலாளியியம் வென்றிருக்கிறதென்று உருதியாய் சொல்வார்களா என்றால், இல்லை. எத்தைத் தின்றால் பித்தம் தெளியலாம் என்ற நிலமை. மேற்கத்திய நாடுகளும்; தன்னை வெல்வார் இல்லையென இருமாந்திருந்த அமெரிக்காவும் தலையில் கைவத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. சீனாவும் இந்தியாவும் பிரேசிலும், ரஷ்யாவும் இவர்களுக்கு கைகொடுத்து கரையேற்றவேண்டிய கட்டாயம் நாளை நிகழலாம். ஆக மார்க்ஸை மறுவாசிப்பு செய்து மாற்று வழிமுறைகளை கண்டெடுத்தாக வேண்டிய சூழலில் உலகம் இன்றிருக்கிறது. நூலாசிரியர் டெனிஸ் கொலன் தன் பங்கிற்கு சிலவற்றை முன்வைக்கிறார்.

தத்துவ பேராசியராக பணியாற்றிவரும் டெனிஸ் கோலன்(Denis Collin). கார்ல்ஸ் மார்க் சிந்தனையில் தோய்ந்தவர். மார்க்ஸிய சிந்தனையை பழமைவாதிகளிடமிருந்து விடுவித்து நவீன காலத்திற்கொப்ப மாற்றங்களை கொண்டுவர நினைக்கும் சிந்தனாவாதி. பதினைந்துக்கு மேற்பட்ட அவரது நூல்கள் (தத்துவம் மற்றும் மார்க்ஸிய சிந்தனையை மையமாகக்கொண்டவை) அனைத்துமே உலகின் கவனத்தைப் பெற்றவை, விவாதத்திகுரியவை.

மார்க்ஸின் கொடுங்கனவு -தனியுடமையென்பது தொடர்கதையா (Le Cauchemar de Marx Le capitalisme est-il une histoire sans fin ?, Max Milo னditions, 2009) இந்த நூல் நிச்சயம் வரவேற்பை பெறுமென்பதில் ஐய்யமில்லை. இந்திய மொழிகளில் ஏனைய மொழிகளுக்கு கிடைக்காத வாய்ப்பு தமிழுக்கு கிடைத்திருக்கிறது. நூலுக்க்காக திரு தியாகுவின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த தமிழ் ‘மூலதனம்’ நூலையும், பிரெஞ்சு மொழி பெயர்ப்பில் வெளிவந்த ‘Le Capital’ நூலையும் படிக்கவேண்டியிருந்தது. நூலின் வெற்றிக்கு தியாகுவும் மறைமுகமாக உதவி செய்திருக்கிறாரென சொல்லவேண்டும். அவருக்கு நன்றிகள். இந்நூலின் பதிப்பிற்கு வழிவகுத்த காலச்சுவடு பதிப்பகத்திற்கும்  நண்பர் கண்ணனுக்கும், வழக்கம்போல அரிய யோசனைகளை வழங்கி மொழிபெயர்ப்பு சிறப்பாக அமைய காரணமாகவிருந்த மரியாதைக்குரிய திரு.எம்.எஸ் அவர்களுக்கும் நன்றிகள் பல.

“மனிதன் என்பவன் இயல்பிலேயே தனித்தவன் பிறருடனான சூழலில் மகிழ்ச்சிகொள்பவனல்ல” என்ற ரூஸ்ஸோ வின் வரிக்கும் இந் நூலுக்கும் நிறையவே தொடர்புள்ளது அன்னாருக்கு இந்நூல் சமர்ப்பணம்.

(மார்க்ஸின் கொடுங்கனவு – தனியுடமை என்பது தொடர்கதையா ?

நூலுக்கு  மொழிபெயர்ப்பாளர் முன்னுரை)

மார்க்ஸின் கொடுங்கனவு

–          தனியுடமை என்பது தொடர்கதையா ?

விலை ரூ 200

Kalachuvadu Publications Pvt.Ltd.

669 K.P. Road, Nagarcoil -629001

இசைவானதொரு இந்தியப் பயணம் – 5

பிப்ரவரி -5

நேற்றையைபோலவே இன்றும் காலை உணவு நேரு வீதிக்கருகிலிருந்த ‘Hot Bread’ ல் என்றானது பிரான்சு நாட்டிற்கு வந்ததிலிருந்து ஐரோப்பிய உணவு முறையை வழக்கப்படுத்திக்கொண்டாயிற்று. பிரெஞ்சு நண்பர்களுக்கு இந்திய உணவுகளில் அதிக நாட்டமிருப்பதில்லை, குறிப்பாக தென்னிந்திய உணவுகளில். வட இந்தியர்களைப்போலவே தோசையை மட்டும் விரும்பிச்சாப்பிடுகிறார்கள். சில புதுச்சேரி நண்பர்கள் தங்கள் வீட்டிற்கு வரும் பிரெஞ்சு நண்பர்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பார்கள். அவர்கள் காசு கொடுத்து சாபிடும்போது எதைச் சாப்பிடுகிறார்களென்று பாருங்கள் அதுதான் அவர்களது விருப்பமாக இருக்குமென அவர்களிடம் சொல்வதென் வழக்கம். மனிதர் வாழ்க்கைப் பன்முகக் கலாசாரத்தை  ஏற்றுக்கொண்டிருக்கிறது. வரலாறு மட்டுமல்ல உலகின் பண்பாடும் வாகைசூடியவர்களுக்கும், எஜமானர் இருக்கையில் நீண்டகாலமாக அமர்ந்து கோலோச்சியவர்களுக்கும் சொந்தமானது. இந்திய முதுகுகள் வெகுகாலமாகவே மேற்குலக பண்பாட்டை சுமந்துகொண்டிருக்கின்றன. எனக்கும் காலை நேரத்தில் இட்டளி, தோசையென்று உண்டு இந்தியாவிற்கு வந்து போகும் நாட்களைத் தவிர்த்து வெகு காலமாயிற்று:

நாங்கள் தங்கியிருந்த குடியிருப்பு ஏனம் வெங்கிடாசலப்பிள்ளை வீதியில் இருந்தது. அங்கிருக்கும் பள்ளிவாசலைக் கடந்தால் முல்லா வீதி சந்திப்பு வருகிறது. முல்லா வீதி யில் இறங்கி வடக்கு நோக்கிநடந்தால் லால் பகதூர் சாஸ்திரி வீதி. அதற்குப்பிறகு எங்களது தேவைக்கான திசையில் கால்கள் பயணிக்கும். நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்து வாசலிலேயே எதிர்பட்டார் அவர். அதிகம்போனால் 25 வயதிருக்கலாம். பள்ளிக்கல்விவரை முடித்திருக்கலாமென்பது என் ஊகம், ஆனால் பிரெஞ்சில் தட்டுதடுமாறி பேசினார் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, எனது பிரெஞ்சு நண்பர்களை குறிவைத்து பேசத் தொடங்கினார். அவரது பெயரை தவிர்த்திருக்கிறேன். தாம் பிரெஞ்சு ஓரளவு கற்றிருப்பதாகவும், மொழியை மறந்துவிடக்கூடாதென்பதற்காக பிரெஞ்சு சுற்றுலாவாசிகளை தேடிப்படித்து அவர்களோடு பழகுதாகவும், நான் உங்களுடன் இருப்பதில் தயக்கமெதுவுமில்லையே என தடாலடியாக எங்களிடம் விண்ணப்பமும் போட்டார். எனக்கு இது வேண்டாத வேலையாக இருந்தது. வேறு சில ஐயங்களிருந்தன. கேட்டவர் ஒர் இளம்பெண் என்பதால் தயக்கங்கள். ஆனால் பிரெஞ்சு நண்பர்கள் அதற்கென்ன தராளமாக வாயேன் என்றார்கள்; அந்தப் பெண்ணும் ஓரளவு சமாளிக்ககூடிய பிரெஞ்சில் உரையாடியபடி எங்களைத் தொடர்ந்துவந்தார். சுஜாதா எழுதும்போது பல்லி சொன்னதென எழுதுவார். எனக்கும் அப்படி ஏதோவொன்று அவரைத் தவிர்க்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்தது. எனது பிரெஞ்சு நண்பர்களைத் தனியாக அழைத்து அப்பெண்ணிடம் பிரான்சுவாஸ் – அவர் எங்கள் குழுவிலிருந்த ஒரே பெண்மணி- வேண்டுமானால் அப்பெண்ணிடம் உரையாடட்டும் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகவே உரையாடுவது நல்லது, நாம் வந்திருப்பது இரண்டுவாரத்திற்கு, இதில் என்னால் போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் அலைந்துகொண்டிருக்க முடியாது. கிளம்பிப் போய்க்கொண்டே இருப்பேன், என்றேன். அதற்குப் பிறகு பெண்ணுடனான அவர்கள் பேச்சு நிதானத்திற்கு வந்தது. தேவையற்ற உரையாடல்களைத் தவிர்த்தார்கள். தவிர நான் அறிவுறுத்தியதைப்போன்றே, பிரான்சுவாஸ் என்பவரை அப்பெண்ணிடம் உரையாடவிட்டு ஒதுங்கிக்கொண்டார்கள்.

இன்றைக்கு சவியே காலையில் இந்திய உணவு விடுதிக்குச் செல்லலாமே என்றான். மனே (பிரான்சிஸ் பிரான்சுவா) தம்பதியினருக்குத் தங்கள் உணவுமுறையை மாற்றிக்கொள்ளும் உத்தேசங்களில்லை என்பது புரிந்தது. அவர்களுக்காக ‘ஹாட் பிரெட்”டுக்குள் நுழைந்து வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு அனைவருமாக இந்தியவிடுதியொன்றிர்க்குச்சென்று சாப்பிடுவதென தீர்மானித்தோம். நண்பர் பிரான்சிஸ¤ம், அவரது மனைவியாரும் பிறகு அங்கேயே சாப்பிடுவதென தீர்மானித்து சுயமாக பறிமாறிக்கொள்ளும், அந்த விடுதியின் வழக்கப்படி ஒரு தட்டில் காலை உணவுக்கான ரொட்டிகளை தேர்வு செய்து எடுத்துவந்தனர். அப்பெண்ணும் அவருக்குத் தேவையானவற்றை  எடுத்துவர அதற்குண்டான பணத்தை மனே தம்பதியினர் செலுத்தினர். மூவரும் சாப்பிட்டு முடித்ததும், இப்போது நானும் சவியேவும் சாப்பிடவேண்டும். இந்திய உணவு விடுதி அருகிலிருந்தது. மேசையை பிடித்து மனே தம்பதியினர், சவியே, காலையிலிருந்து எங்களை தொடர்ந்து வந்த இளம்பெண், பிறகு நான் என அனைவரும் அமர்ந்தோம். நாங்கள் சாப்பிடலாமென்று சர்வரைக்கூப்பிட்டு ஆர்டர் செய்ய நண்பர் சவியே ஏதாவது சாப்பிடுகிறாயா என்று அப்பெண்ணிடம் விசாரித்தார். நீங்களெல்லாம் ஏதாவது சாப்பிடுவதாக இருந்தால் நானும் சாப்பிடுகிறேன் எனக்கூற, பிறகு அவரவர்க்கு விருப்பமானதை கொண்டுவரசெய்து சாப்பிட்டோம்.  இடையில் நடைபெற்ற உரையாடலில் இளம்பெண் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிவதாகவும், பிரெஞ்சு நண்பர்கள் வேலை கடினமா எனக்கேட்க ஆம் ஒரு நாளைக்கு பத்திலிருந்து பன்னிரண்டு மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறதென்றும், ஒரு குடிகார சகோதரனிருப்பதாகவும், அம்மாவுக்கு மகளை எப்படியாவது பிரான்சுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென்கிற கனவுகள் இருப்பதாகவும், அதற்காக மாப்பிள்ளைப் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்தன. அம்மா இப்படி பிரெஞ்சுக் காரர்களோடு இருக்கிறேன் எனக்கூறினால் மிகுந்த சந்தோஷப்படுவார்கள், என முடித்தார்.

சவியேவிற்கு எனது கிராமத்தையும் எங்கள் ஊர் மக்களையும் பார்க்கவேண்டுமென்று தெரிவித்திருந்தான். எனவே நண்பர் நந்தி வர்மனிடம் வாகனத்திற்கு சொல்லிவைத்திருந்தோம். முதல் நாள் சொல்லாததால், காலையில் அவரிடம் சொன்னபோது உடனே வாடகைக் கார்கிடைப்பது அரிதென்ற பதில் வந்தது. வாடகைக்கார் கிடைக்கவில்லையெனில் பேருந்து பிடித்து போவதென்று நினைத்திருந்தோம். இளம்பெண் எங்களை விடுவதாக இல்லை. எங்களோடு கிராமத்திற்கு வர விருப்பம் வரலாமலில்லையா? என்றார். பிரெஞ்சு நண்பர்கள் வருவதால் எந்த பாதிப்புமில்லை என்பதுபோல இருந்தார்கள்; எனக்கென்னவோ ஆரம்பத்திலிருந்தே அப்பெண்¨ணைக் கூட்டிக்கொண்டு அலைவதில் உடன்பாடில்லை. இதோ பாரம்மா நாங்கள் ஏற்கனவே நான்கு பேர் இருக்கிறோம் டிரைவரோடு சேர்த்து ஐந்துபேர் ஆகிறது என்னதான் வருவது பெரிய வண்டியென்றாலும் வேறொரு நண்பர் வருவதால் உன்னை அழைத்துச்செல்லமுடியாதென்று தெளிவாகக் கூறிவிட்டேன். புறப்பட்டுப்போனபோது அப்பெண் என்னைத் திட்டியிருப்பாளென தெரியும்.  ஆனாலும் அவள் புறப்பட்டுபோனபிறகே என்னால் நிம்மதியாய் மூச்சு விடமுடிந்தது.

காலை 9.30மணி அளவில் புறப்பட்டு புதுச்சேரியிலிருந்து 20.கி.மீட்டர் தொலைவிலிருந்த எங்கள் கிராமத்தை அடைந்திருந்தோம். காலை பத்து பதினைந்துக்கு,  சிதிலமடைந்திருந்த எனது பால்ய வயது வீட்டின் முன் வாகனம் நின்றது. எனது பிள்ளைத்தமிழ் இடிபாடுகளுக்கிடை சிக்கி முனகிக்கொண்டிருப்பதைக் காணச் சகியாமல் கண்களை இறுக மூடினேன். ஒரு துளி கண்ணீர். அதற்குமேல் சிந்த ஒன்றுமில்லையென்பதுபோன்ற பாலை வெக்கை எனக்குள் இருந்தது. செரிபடாத நினைவுகள் குமட்டிக்கொண்டு விடுபட கசப்புகள் வாய் நெஞ்சு இதயமென்று நிறைந்து வழிந்தன. மனம் பல்லியின் நாக்கிற்கு எட்டாத தூரத்தை தேடி பாச்சையாக அலைந்தது. இலை உதிர்த்த மரக் கிளையின் கூடுபோல உடல் கால் மாற்றி நின்று வெந்து தவித்தது. கடைசிப் பந்தியிலும் உனக்கு இடமில்லை எழுந்திரு என்பதுபோன்றதொரு மூர்க்கமானதொரு குரல் காதில் விழக் கேட்டேன்.

இளநீர்வந்தது, சிந்திய ஒரு துளிகண்ணீரை இட்டு நிரப்பவாக இருக்கலாம். நெஞ்சில் நிழலாய், நுணி மடிந்த பழுப்பேறிய, காலத்தின் வடுக்களை வயதுடன் சுமக்கமுடியாமல் சுமந்தமடி கைகளைப் பற்றும் மனிதர்கள். கண்களைத் தொட்டிருந்த அவர்கள் மூப்பு எனது இளமையைக் கசக்கி ஆசுவாசப்பட்டது. அந்தி வேளையில் வீடு திரும்பும் மாடுகள்போல, தெருவில் இறங்கி நடக்கிறோம். வயதையும் வாழ்க்கையையும் இழந்து திண்னைகளில் ஒருக்களித்து படுத்திருந்தவர்கள் எழுந்து உட்காருகிறார்கள்.

– யாரு சின்னத் தம்பியா?

– ம்…

– உள்ளே வாயேன். ம். நீதான் எங்களையெல்லாம் மறந்திட்ட .

என்னிடத்தில் பதிலில்லை. நெஞ்சு வெப்பத்தால் நிரைகிறது. மூச்சுமுட்டுகிறது. வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்கொள்கின்றன. தலையாட்டுகிறேன். பற்றிய கைகளை விலக்கி நடக்கிறேன். வழியெங்கும் விசாரிப்புகள். அவர்கள் முந்திக்கொள்கிறார்கள்.  அவர்கள் விசாரிப்பு எனது அக வாழ்க்கைப்பற்றியதா புற வாழ்க்கைக்குறித்ததா?  வாழ்க்கை பண்டமாற்றுகளால் கொண்டுசெலுத்த முடியுமெனில் எவ்வளவு சௌகரியமாக இருக்கும். நாகரீகங்கருதி பல நேரங்களில் நட்டத்திற்கு விற்கவேண்டியிருக்கிறது. என்ரேனும் ஒருநாள் இலாப தரிசனத்திற்கு ஓடி வருகிறபோது நடைவாசல் மூடும் நேரம் என்கிறார்கள்.

சவியேவும் மனே தம்பதியினரும் புகைப்படக் கருவிகொண்டு தருணங்களை ஆவணப்படுத்துகிறார்கள். புதுச்சேரி திரும்பியபொழுது நண்பர் இந்திரன், அகவெளி நண்பர்களுடனும் கடற்கரையுடனும் வந்திருந்தார். இந்திரன் கொண்டு வந்திருந்த கவிதை வாசிப்புக்கென தாயாரிக்கபட்ட சிறிய புத்தகங்களை நந்தி வர்மன் வீட்டில் இறக்கிவைத்துவிட்டு நாங்கள் மதிய உணவிற்கு வந்தோம். வெகுநேரம் கழித்து நண்பர் எஸ். ராமகிருஷ்ணன் எங்களோடு இணைந்துகொண்டார். சாப்பிட்டு முடிந்ததும், நண்பர் எஸ். ஆரிடம் அவரிடம் தங்க ஏற்பாடு செய்திருப்பதைக்கூறினேன்.

– இல்லை கிருஷ்ணா நாளைக்கு வேறொரு நிகழ்ச்சி இருக்கிறது. அவர்கள் ஏற்கனவே அறை எடுத்திருக்கிறார்கள். எதற்காக வீண் செலவு என்றார்.

– கொஞ்சம் ஓய்வெடுக்கலாமே என்றேன். – பிரெஞ்சு நண்பர்கள் இருந்ததால், அவருடன் செல்ல முடியவில்லையே என்ற வருத்தம்

– இல்லை நண்பர்களுடன் பேசியிருந்துவிட்டு மாலை நிகழ்ச்சிக்கு வந்து விடுகிறேன் என்றார்

அன்று மாலை நடந்த கவிதை வாசிப்பு குறித்து தனியாக எழுதுகிறேன்.

(தொடரும்)

Vanakkam

அன்புடையீர்

இந்திய மொழி இலக்கியங்களை பிரெஞ்சு நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தும் வகையில் ஒர் வலைப்பூவை கூடிய விரைவில் எளிய வகையில் அறிமுகப்படுத்த உள்ளோம்.

உங்களுக்கு எங்கள் முயற்சியில் ஆர்வமும், பிரெஞ்சிந்திய மொழிகளில் ஞானமும், பிரதிபலன்களை எதிர்பார்க்காது உதவ முடியுமென்ற நம்பிக்கையுமிருப்பின் தங்கள் ஆதரவும் பங்களிப்பும் அவசியமாகின்றன
ஏப்ரலில் தொடங்கவிருக்கும் இவ்வலைத்தளம் குறித்து நண்பர்களுக்கு உரியகாலத்தில் தெரிவிப்பேன்.

கதையல்ல வரலாறு 3-3:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…

இலைய எரென்பர்க் (Ilya Ehrenbourg, புகழ்பெற்ற சோவியத் எழுத்தாளர்களில் ஒருவர். ஸ்டாலின் ஆட்சியின் கொடூரத்தை நேரில் கண்டவர். ‘மருத்துவர்கள் கூட்டு சதி’ என்கிற பிரச்சினையைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டபோது குறிப்பாக யூதர்கள் பலர் கைதானபோது இவரும் பிறப்பால் யூதர் என்ற நிலையில் கைது செய்யப்படவேண்டியவர். ஸ்டாலின் மரணம் குறித்து இவரிடம் சில உண்மைகளிருந்தன. எரென்பர்க் மேற்கத்திய நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளக்கூடியவராக இருந்தார். அவற்றில் பிரான்சுநாடும் ஒன்று. அவருடைய பாரீஸ் நண்பர்களில் ழான் போல் சார்த்துருவும் ஒருவர்.

இலைய எரென்பர்க் கூற்றின்படி:

« 1952ம் வருடம் அக்டோபர் மாதம் சோவியத் யூனியன்  பொதுவுடமைக் கட்சியின் 19வது காங்கிரஸ் மாநாட்டிற்குப் பின்னர் ஸ்டாலின் ஒரு வெறிபிடித்த மனிதர்போல ஆனது உண்மை.  சந்தேகப் பட்டவர்களையெல்லாம் அவர் கைது செய்ய விரும்பினார். அது தவிர தமது பழைய சகாக்களான மொலொட்டோவ், மிக்கோயான், ககனோவிச் ஆகியோர் கூட்டு சேர்ந்து தம்மை கொல்ல சதிசெய்வதாகக் கூறிக்கொண்டார். 1952ம் ஆண்டில் ‘மருத்துவர்கள் கூட்டு சதி’ என்ற விவகாரம் வெடித்த பொழுது ஸ்டாலினால் நாட்டிற்கு மிகப்பெரிய கேடு வர இருக்கிறதென புரிந்துகொண்டோம் ».

பதினெட்டாம் காங்கிரஸ் நடந்து முடிந்தபிறகு 19வது காங்கிரஸ¤க்குத் தேர்ந்தெடுப்பட்டிருந்த உறுப்பினர்களில் பலரை கொன்று குவித்தபோதே நடக்கவிருக்கும் விபரீதத்தின் பாரிய வீச்சு உணரப்பட்டது. 1934க்கும் 1938க்கும் இடையில் பதினேழாவது காங்கிரஸில் பொதுவுடமைக் கட்சியின் மத்திய கமிட்டிக்கு தேர்வுசெய்யப்பட்ட 130 அங்கத்தினர்களில் 48பேர்களும் 1966 பிரதிநிதிகளில் 1108 பேரும் கொல்லப்பட்டார்கள். இந்நிலையில் தலைமைக்குழு உறுப்பினர்கள் ஏதேனும் செய்தாகவேண்டும். உரிய தருணத்தில் பிரச்சினையை கையிலெடுக்கத் தவறினால் அவர்களுடைய உயிருக்கும் பிற தோழர்களுக்கும் ஏற்படவிருக்கும் ஆபத்தை புரிந்துகொண்டார்கள். கிரெம்ளினில் மத்திய குழு உறுப்பினர்களின் பிரத்தியேகக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டப்பட்ட காலம் 1953ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ந்தேதி. இத்தேதியைக் குறித்து கொடுத்தவர் குருஷேவ். சோவியத் விவசாயத் துறையின் ஐந்தாவது ஆண்டுவிழா தொடர்பாக என  கூட்டத்திற்கு காரணம் சொல்லப்பட்டது. ஸ்டாலின் சந்தேகப்பட ஒன்றுமில்லை, எனவே அவரும் கலந்துகொண்டார். ஆனால் வழக்கமாக அவருடன் இருக்கிற செயலர் வரவில்லை. அதற்கு முன்பாகவே கிரெம்ளின் ஹாலில் அவரது நம்பிக்கைக்குரிய ராணுவ தளபதி ஜூக்கோவ்(Joukov) அனுப்பிய வீரர்கள் செயலரை கைது செய்திருந்தனர் என்ற உண்மையை ஸ்டாலின் அறியவில்லை.

கூட்டத்தின் தொடக்கத்திலேயே ஒலிவாங்கியை கையிலெடுத்த ககனோவிச்  ரகசிய காவற்படையின் தலைவரை உடனடியாக கைதுசெய்யவேண்டுமென்றும், ‘மருத்துவர்களின் கூட்டு சதி’ என்றபிரச்சினையை ஒதுக்கிவிட்டு உருப்படியான வேறு காரியங்களை பார்க்கும்படியும் கட்சியின் முதன்மைச் செயலரான ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறார். ஸ்டாலின் இதை எதிர்பார்க்கவில்லை. அதுநாள்வரை அவரது அரசியல் நடவடிக்கைகளை விமர்சிக்க ஒருவருக்கும் துணிச்சல் வந்ததில்லை, எனவே ஆத்திரம்கொண்டார். கடும் சொற்களால் ககனோவிச்சை விளாசுகிறார். தொடர்ந்து பேசினால் ஆபத்தை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என எச்சரிக்கிறார். ககனோவிச் விட்டுகொடுப்பதாக இல்லை. கோபத்தில் எழுந்தவர். தோழர் லெனின் உருவாக்கிய மிகப்பெரிய கட்சி உன்னால் இன்று மிகப்பெரிய அவமானத்தை அடைந்துள்ளது. நீ ஒரு கொலைகாரன், கட்சியில் இனி அடிப்படை உறுப்பினனாகக்கூட இருக்கப்போவதில்லை எனக்கூறி கட்சி உறுப்பினருக்கான தமது அடையாள அட்டையை ஸ்டாலின் முன்னே கிழித்தெறிகிறார்.

கோபமுற்ற ஸ்டாலின் ககனோவிச்சை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க விரும்பி அருகிலிருந்த தொலைபேசியைக் கையிலெடுத்தபோது மிக்கோயானும் மொலொட்டோவும் குறுக்கிடுகிறார்கள்.

– ஜெசெப் இது வீணான வேலை. வெளித் தொடர்புகளை நாங்கள் முன்பே துண்டித்துவிட்டோம்.  ஜூகோவ்வும் மோஸ்காலென்க்கோவும் இப்போது எங்கள் பக்கம். இதையும் மீறி எங்களுக்கு ஏதாவது நேர்ந்து அடுத்த கால்மணிநேரத்தில் நாங்கள் பத்திரமாக வெளியேறமுடியாத சூழ்நிலை உருவாகுமெனில் ஜூக்கோவ் தமது ஆட்களுடன் கிரெம்ளினுக்குள் நுழைவது உறுதி, என்கிறார்கள்(1).

நேற்றுவரை தன்முன்னே வாய்மூடிக்கிடந்த தோழர்கள் குரலுயர்த்தி பேசுவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அடுத்த சில கணங்களில் ஸ்டாலின் சரிய ஆரம்பித்தார். வாயிலிருந்து இரத்தநுரை தள்ளுகிறது. முகம் வெளுக்க ஆரம்பிக்கிறது அவருடைய இரண்டுகைகளும் முன்னும் பின்னும் இழுபடுகின்றன. கடைசியாக தரையில் சுருண்டு விழுகிறார். சில நொடிகளில் மரணம் அவரை அழைத்துக்கொள்கிறது. மூளையில் இரத்தநாளங்கள் சிதைந்திருந்தன என்பது பின்னர் தெரியவந்தது. எந்த மருத்துவரையும் அங்கிருந்தவர்கள் அழைக்கவில்லை. ஆக கிரெம்ளினிலேயே அவருக்கு மரணம் ஏற்பட்டிருந்ததென்பதுதான் உண்மை.

ஸ்டாலின் மரணத்தோடு இணைந்த இரண்டாவது உண்மைக்குச் சொந்தக்காரர்1957ம் ஆண்டு வார்சோவியில் சோவியத் யூனியனின் தூதுவராக பணியாற்றிய பொனோமரேன்க்கோ (Ponomarenko). இவரது பேச்சை அவ்வளவு சுலபமாக அலட்சியப்படுத்திவிடமுடியாது. காரணம் பத்தொன்பதாவது காங்கிரஸ் மாநாட்டிற்கு பிறகு ஏற்படுத்தபட்ட மத்திய புரவலர் குழு செயலர்களில் இவருக்கு மூன்றாவது இடத்தை ஸ்டாலின் கொடுத்திருந்தார். ஆகக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவர். அவருடைய கூற்றின்படி:

1953ம் ஆண்டு பிப்ரவரிமாதம் 28ந்தேதி நடைபெற்ற செயற்குழுவின் பிரத்தியேகக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் ஸ்டாலின். கிரெம்ளினிலிருந்த மத்திய குழுவின் அரங்கத்திலே இக்கூட்டம் நடந்தது. தகுந்த காரணமின்றி இதுபோன்ற கூட்டத்தை ஸ்டாலின் ஏற்பாடு செய்யமாட்டாரென சகாக்கள் நினைத்தார்கள். செயற்குழுவின் 25 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். (அவர்களில் பொனோமரேன்க்கோவும் ஒருவர்). ஒலிவாங்கியைக் கையிலெடுத்த ஸ்டாலின், தாம் முன்னதாக தயாரித்திருந்த நான்கு பிரேரணைகளை வாசித்தார். அவற்றின் மைய நோக்கம் பெரும் எண்ணிக்கையில் சோவியத் யூதர்களை மத்திய ஆசியாவிலிருந்த பிரோபிட்ஜான் (Birobidjan) பிரதேசத்திற்கு குடியேற்றுவது தொடர்பானது. அங்கு ஏற்கனவே இருபத்தைந்து ஆண்டுகளாக பல்லாயிரக் கணக்கில் யூதர்கள் கடுங்குளிரிலும் கொடிய வறுமையிலும் போராடியபடி வாழ்ந்துவந்தனர். உண்மையில் இப்புதிய ஆணையின் உதவியின்றியே பல ஆயிரம் யூதர்களை கடுங்குளிர் நிலவும் அப்பிரதேசத்திற்கு வலுக்கட்டாயமாக அனுப்பி ஸ்டாலின் தண்டித்திருக்கிறார். சோவியத் யூதர்களைத் தாம் தண்டிப்பதற்கு அவர்களுடைய  தீவிர மதவாதமும், ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக அவர்கள் இருப்பதும் காரணமென்றார். வந்திருந்தவர்களில் இந்நடவடிக்கைகள் குறித்து எதிர்ப்புக்குரல் கொடுக்க விரும்பினார்கள். ஆனால் ஸ்டாலினை எதிர்த்து பேச அஞ்சி அமைதி காக்கிறார்கள். அந்த மௌனத்தை முதலில் உடைத்தவர் ககனோவிச். உறுப்பினர்களில் அவர் யூதர். “இந் நடவடிக்கை சோவியத் யூனியனிலுள்ள எல்லா யூதர்களுக்கும் எதிரானதா?” என்று கேட்கிறார். இல்லை தேர்ந்தெடுத்த சிலர்மேல் மட்டுமே இச்சட்டம் பாயும் என பதிலளிக்கிறார், ஸ்டாலின். ககனோவிச் அமைதியானார். அடுத்து எழுந்தவர் மொலோட்டோவ், காரணம் அவரது மனைவி யூதப்பெண்மணி. இப்பிரச்சினையால் இஸ்ரேலுக்கும் சோவியத் யூனியனுக்கும் பிரச்சினைகள் வரலாம், என்பது அவர் வாதம். அவருக்குப் பதில்சொல்ல ஸ்டாலின் முனைந்தபோது, தோழர் வொரோச்சிலோவ்(Vorochilov) என்பவர் குறுக்கிட்டார், “இச்சட்டம் பயன் பாட்டிற்குவருமெனில், பொதுவுடமைக் கட்சியில் தொடர்ந்து உறுப்பினராக இருக்கும் எண்ணம் தமக்கில்லை”,  என்று கூறிவிட்டு தம்மிடமிருந்த உறுப்பினர் அட்டையை எடுத்து மேசைமீது எறிந்தார். ஸ்டாலினுக்கு கோபம் வந்தது. முகம் சிவந்துபோனது

– தோழரே ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். அதை முடிவெடுப்பது நானே தவிர நீங்களல்ல,  என்கிறார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களுள் பலர் எழுந்துநின்று ஒரே நேரத்தில் பேச அங்கே சில கணங்கள் கூச்சலும் குழப்பமும் நிலவின. பேரியா என்பவர் ஸ்டாலினை நோக்கி ஓடுகிறார், அடுத்த நொடி ஸ்டாலின் சுருண்டு விழுந்திருக்கிறார். வந்திருந்த உறுப்பினர்கள் மருத்துவர்களை அழைக்க விரும்பியதாகவும், முக்கியமான மருத்துவர்கள் அனைவருமே சிறையிலிருந்ததால் ஸ்டாலினைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதாகவும் பொனோமரேன்க்கோ சொல்கிறார். பேரியா, “அரக்கன் ஒழிந்தான், இனி எல்லோருக்கும் விடுதலை!” என கூச்சலிட்டதாகவும், அங்கே ஸ்டாலின் மகள் ஸ்வெட்லானா வந்து சேர்ந்ததாகவும், அப்பா! அப்பா! என அரற்றியதாகவும் பொனோமரேன்க்கோ சொல்லும் கதைகள். அடுத்தடுத்து நடந்ததாக இவர்கூறும் தகவல்களில் பல குருஷ்சேவ் தகவல்களோடு ஒத்துபோகின்றன.

ஆக ஸ்டாலின் மரணம் தொடர்பான மேற்கண்ட தகவல்களில் எது உண்மை என்பது இன்றுவரை விளங்காத மர்மம். இவற்றுள்  இலைய எரென்பர்க், பொனோமரேன்க்கோ இருவர் தகவல்களிலும் சிலவற்றில் ஒற்றுமை இருப்பதை பார்க்கிறோம். தவிர பொனோமரேன்க்கோ தரப்பில் தெரிவிக்கப்பட்டத் தகவல் அவர் சோவியத் யூனியனின் தூதுவராக வார்சோவியில் பணியாற்றியபோது தெரிவித்தது. தவிர அவர் பொதுவுடமைகட்சியில் செயலர் இடத்தில் இருந்ததால் அவரது தகவலை  நம்பிக்கைக்குரிய தகவல் எனக் கருத இடமுண்டு. ஆனால் சிலர் ஸ்டாலின் மரணத்தை தயக்கமின்றி கொலையென எழுதுகிறார்கள். அவர்களில் ஒருவர் கப்பனாட்ஸ் என்பவர். இவர் மேற்குலகில் பணிபுரிந்த சோவியத் யூனியனின் உயர் அதிகாரி. ஸ்டாலின் கொலை பலருக்கும் அப்போது தவிர்க்கமுடியாததாக இருந்தது என்பது அவர் வாதம். ‘ஸ்டாலின் கொலையுண்டதை நிரூபிக்க சாட்சியங்கள் கிடையாது ஆனால் அவர் மரணம் இயற்கையானதல்ல என்பதை உறுதியாகச்சொல்ல முடியும்(2) என்ற அமெரிக்க பத்திரிகையாளர் சாலிஸ்பரி கூற்றும் கவனத்திற்கொள்ளதக்கது.

——————————————————————————-

1. Histoire pour tous mai 1965 Victor Alexandrov

2. Dossier secret de l’histoire page 371-Alain Decaux