சொல்வனம் இணைய இதழில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த சிறுகதை. இதை ஒலிவடிவம் செய்து குரலும் அளித்துள்ளவர் தோழியர் சரஸ்வதி தியாகராஜன். சொலவனம் இணைய இதழுக்கும், தோழியருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
« …..ஏன் ஹரிஜன் என்று பெயர்வைக்கவேண்டும், எனப் பலர் என்னிடம் வினவுகிறார்கள். வினவும் அன்பர்கள், நம்முடைய ஹரிஜன சேவா சங்கத்தினராக இருக்கமுடியாது. « ஹரிஜன் என்கிற பெயர் எதற்காக, இதைவிட வேறு நல்ல பெயர் உலகில் இல்லையா ? »எனறு சிலர் முணுமுணுத்ததையும் காதில் வாங்கியுள்ளேன். ஹரிஜன் என்ற சொல் அசாதாரணமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இச்சொல்லுக்கென்று ஒரு முக்கியத்துவம் இருந்தது. ஒட்டுமொத்த மனிதர்களையும் கடவுளின் குழந்தைகளாகவே அன்றைக்குப் பார்த்தனர். தற்போது அச்சொல் வழக்கில் இல்லை என்பதால் மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக நீங்கள் கருதக்கூடாது. ஒருமுறை நம்முடைய அபிமானி ஒருவர் « ஒடுக்கப்பட்ட மனிதரென்று சித்தரிக்கிற எந்தப் பெயரும் எங்களுக்கு வேண்டாம் » எனத் தெரிவித்தார். அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டதால், நீங்களே ஒரு பெயரைத் தெரிவு செய்யுங்கள் என்றேன். குஜராத் கவிஞர் நரசிம்ம மேத்தா, தமது கவிதைகளில் பல இடங்களில் கையாண்ட ‘ ஹரிஜன் ‘ என்ற சொல் பரவாயில்லையா என வினவினார். மறுகணம், என் சந்தோஷத்திற்கு அளவில்லை. மிகப் பொருத்தமான பதமாக எனக்குத் தோன்றியது. தமிழில் « திக்கற்றவருக்குத் தெய்வம் துணை என்கிற பழமொழி » இருப்பது எனக்குத் தெரியும். அக்கூற்றிற்கு மிகப்பொருத்தமாக அமைந்த ஒரு சொல், ‘ஹரிஜன்’. அவர்கள் கடவுள்களின் குழந்தைகள்; அக்குழந்தைகளை வாரி அணைக்க, முத்தமிட நாம் பாக்கியவான்களாக இருக்க வேண்டும். நம்முடைய ஹரிஜனக் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருந்தேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஹரிஜன மக்கள் அல்லாதோர் பலரது மனசாட்சியை என்னுடைய போராட்டம் உலுக்கியது என்ற உண்மையைப் பகிர்ந்துகொள்வதில் எனக்குச் சந்தோஷம். இப்போராட்டத்தின் காரணமாகப் பிறந்ததே நம்முடைய ஹரிஜன சேவா சங்கம். அதன் கிளைகளில் ஒன்றை இன்று உங்கள் புதுச்சேரியும் கண்டிருக்கிறது. சேவாதள அன்பர்கள் தீண்டாமை ஒழிப்பிற்கு அயராது பாடுபடுவார்கள் என மனப்பூர்வமாக நம்புகிறேன். சமத்துவம், சகோதரத்துவம் ஆகியசொற்களின் பொருளை இந்தியாவின் பிறபகுதி மக்களைக் காட்டிலும் புதுச்சேரிவாசிகள் நன்கறிந்தவர்கள். எனவே ஜாதி மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராகப் புதுச்சேரி அன்பர்கள் போராடக்கூடியவர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சமூக விழிப்புக் கொண்ட புதுச்சேரி சனங்கள் எனது அபிலாஷையைப் பூர்த்தி செய்வீர்கள் என்கிற நம்பிக்கையுடனும் சந்தோஷத்துடனும் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் »
காந்தி உரையை முடித்துக்கொண்டார்.புதுச்சேரி ஹரிஜன சேவா சங்கத்தின் ஏற்பாடு. காலை நேரம். ஒதியஞ்சாலைத் திடலெங்கும் சமுத்திரம்போல மக்கள் கூட்டம். எங்கும் மாவிலைத் தோரணங்கள். புழுதி மண்டலம்.புதுச்சேரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தெல்லாம் சனங்கள் திரண்டிருந்தார்கள். முன்னதாக மகாத்மாவை வரவேற்ற, சேவா சங்கத்தின் தலைவர் சவரிநாதன், காந்தியின் தென் ஆப்ரிக்க அரசியல் சம்பவங்களை நினைவு கூர்ந்து காந்தி, இந்த நூற்றாண்டின் மிகப் பெரியமனிதர் என்றார்.
இந்தியாவின் விடுதலை பற்றிப் பேசவோ, பிரெஞ்சுக் காலனி அரசுக்கு எதிராக எதையாவது கொளுத்திப்போடும் யோசனையோ கூடாதெனக் காலனி நிர்வாகம் தெளிவாக விழா ஏற்பாட்டாளர்களை எச்சரித்திருந்தது. ஆட்சிக்கு எதிராகக் காந்தி வாய் திறக்க வரவில்லை. பதிலாக இந்தியர்களிடையே ஏற்றத்தாழ்வு கூடாது எனப்பேச வருகிறார் எனக் காலனி அரசுக்குச் சொல்லப்பட்ட சமாதானம் ஒருவகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்புடைய விஷயம்.
காந்தி மேடையிலிருந்து இறங்கும்போது கூட்டத்தில் ‘மகாத்மா காந்திக்கு ! ’ என்றார் ஒருவர். தொடர்ந்து வழிமொழிவதுபோலப் பல குரல்கள் ஜே ! ஜே ! என்றன. மேடையில் பிரிட்டிஷ் இந்தியக் காங்கிரசாரின் சீருடையில் இருந்த ஒருவர், ‘வந்தே மாதரம்’ என முழங்க, « அதெல்லாம் கூடாதுப்பா » என்று விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவர் உரத்த குரலில் கையை உயர்த்திக், குரல்களை அடக்கினார். இதையெல்லாம் கூர்மையாக அவதானித்தபடிக் கூட்டத்தில் ஓரமாக அமர்ந்திருந்த காவல் அதிகாரி முகத்தில் திருப்தி. அசம்பாவிதமாக எதுவும் நடந்துவிடக்கூடாதென்கிற கவலை அவருக்கு. அலுவலகத்திலிருந்து பந்தோபஸ்துக்கெனச் சிப்பாய்களுடன் கிளம்பியபோது சகுனம் பார்த்தார்.முதல் நாள் பெருமாள் கோவிலுக்குச் சென்று அர்ச்சனையும் செய்திருந்தார். ஐரோப்பியருடன் சகவாசமென்றாலும் இவற்றையெல்லாம் விட முடிகிறதா என்ன ? தமது தலைக்குக் கேடு வரக்கூடாதென்கிற கவலை அவருக்கு.
அவர் கவலைக்குக் காரணங்கள் இருந்தன. இரண்டுவருஷத்துக்கு ஒருமுறை கவர்னர்களை மாற்றியும் புதுச்சேரிக் காலனிவாசிகளைக் கட்டி மேய்ப்பது பெரும் சிக்கலாகவே இருந்தது. சிக்கல், வயலில் இறங்கி உழைத்த ஏழைவிவசாயிகளால் வருவதில்லை; வரப்பில் குடைபிடித்து உட்கார்ந்திருந்த சண்முக வேலாயுத முதலி போன்ற மிராசுகளால் வருகிறது. கூலிக்கு வலைவீசிய மீனவர்களால் பிரச்சனையில்லை; அவர்களைக் கொத்தடிமைகளாக வைத்திருந்த செல்வராஜு செட்டியார் போன்றவர்களால் பிரச்சனை. ஆலைத்தொழிலாளிகளால் அல்ல, ஆலை முதலாளியான கெப்ளே போன்ற ஐரோப்பியர்களின் அரசியல் விளையாட்டினால் தீராத தலைவலி. மொத்தத்தில் பிரெஞ்சுக் காலனி அரசுக்குப் பெரும் சங்கடத்தை அளித்தவர்கள் புதுச்சேரிக் காலனியின் ஐரோப்பிய, இந்திய மேட்டுக்குடிகள்
.
பிரெஞ்சு மேட்டுக்குடிகள் எனில் அவர்கள் கிறித்துவக் குருமார்கள், காலனி அதிகாரிகள், ஐரோப்பிய வணிகர்கள். இவர்களைப் பொறுத்தவரை, « புதுச்சேரி இந்தியருக்கு ஐரோப்பியரின் அரசியலையோ, பண்பாட்டையோ புரிந்துகொள்ளப் போதாது ». இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதோ, பிரான்சு மக்களவையில் பிரதிநிதித்துவம் தருவதோ அவர்களைப் பொறுத்தவரை ஆபத்தாக முடியும். புதுச்சேரி ஊரையும் இரண்டாகப் பிரித்து ஐரோப்பியர் ஒதுங்கி வாழ்ந்தனர். இந்திய மேட்டுக்குடியினர் இருவகையினர். முதலாமவர் பழமைவாதிகள்;இரண்டாம்வகையினர், ஐரோப்பிய வாழ்க்கைமுறையில் மோகம்கொண்டவர்கள். இந்தியப் பழமைவாதிகளுக்குத் தங்கள் பண்பாட்டில் ஐரோப்பியர் குறுக்கிடாதவரை காலனி ஆட்சி, ஐரோப்பியப்பண்பாடு- இரண்டின்மீதும் தங்களுக்குப் பகையோ, வெறுப்போ இல்லை என்கிற மனநிலை.பிரெஞ்சுக் கல்வி கிடைத்த புதுச்சேரி வாசிகளுக்கு மேற்கத்திய பண்பாடு மேலானது; அவர்கள் வாழ்க்கைமுறை உயர்ந்தது.
பிரெஞ்சுக் காலனி அரசின் மன நிலை என்ன? சைகோன் உங்களிடம் அது பற்றி விரிவாகப்பேசியிருக்குமென நினைக்கிறேன். புதுச்சேரி சார்பாக எனக்கும் சொல்ல இருக்கிறது. ஆட்சியென்பது அதிகாரம், நலன் என்கிற இருசொற்களுக்குச் சொந்தமானது. இரண்டுமே ஆட்சியாளர்களுக்கானது. இதற்காக எதையும் அவர்கள் செய்வார்கள். நல்லவேளை எல்லைதாண்டிக் கொள்ளை அடிக்க இன்றைய ஆட்சியாளர்களுக்குச் அதிகம் சாத்தியமில்லை. ஆனால் நேற்று இருந்தது. நேற்றெனில் இக்கதை நடக்கின்ற இருபதாம் நூற்றாண்டுவரை. ஒரு மனிதனை அடிமைப்படுத்த வேண்டுமா, அவனைச் சிறுமைப்படுத்து, உன்னை உயர்ந்தவன் என்று நம்பும்படிச் செய்.இதுதான் சகமனிதர்களை ஒடுக்குவதற்குப் புத்திசாலிகள் கடைப்பிடிக்கும் தந்திரம். காலனியத்தின் கொள்கையும் இதுதான். இலாபம் , முதலீட்டாளர்க்கு என்கிற வணிக அரசியலுடன் உள்ளே நுழைந்தவர்கள், காலனி நாடுகளின் சமூக அமைப்பையும், அவலங்களையும் ஆதிக்க அரசியலுக்கு பயன்படுத்திக்கொண்டார்கள். சந்தேகித்த காலனி மக்களிடம் ‘Civilizing Mission’க்காக வந்திருக்கிறோம் என்றார்கள், ஏதோ காலனிவாசிகள் காட்டுமிராண்டிகளாக வாழ்வதைப்போல.
ஐரோப்பியர்களுக்கிடையிலான காலனிப் போட்டியில் அதிகம் ஜெயித்தது ஆங்கிலேயர்கள். அரசியல் யுத்தத்திலும், ஐரோப்பியரல்லாத பிறர் மீதான மொழி மற்றும் பண்பாட்டுத் திணிப்பிலும் ஆங்கிலேயர் அடைந்த வெற்றி உலகமறிந்தது. ஒரு சிலரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வதற்கெனவே அண்டைவீட்டுக்காரன் அமைந்து விடுவதுண்டு. பிரிட்டிஷ் முடியாட்சி, பிரெஞ்சு முடியாட்சிக்கு அப்படி அமைந்த அண்டைவீட்டுக்காரன். பங்காளிகளுக்குள் நடந்த சண்டைகள், சமாதானங்கள் என்கிற நீண்டகால அரசியலிலும் ஆங்கிலேயர் கைகளே ஓங்கி இருந்தன.
ஐரோப்பியர்களுக்கிடையிலான ஏழாண்டுப்போர் முடிவில் ஜெயித்த இங்கிலாந்து, தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு வேண்டாதவற்றை « பாவம் நீ என்ன செய்வ ,மொத்தத்தையும் நான் எடுத்துக்கக் கூடாதில்லையா » என பிரான்சுக்குத் தானமாக அளித்தவைகளில் பிரெஞ்சிந்தியக் காலனிகளும் அடக்கம். இது நடந்தது 1763இல். அதன் பின்னர் இருவரும் உனக்கா எனக்காவென நடத்திய குடுமிப்பிடிச் சண்டையில் பாரீசுக்கும் இலண்டனுக்குமெனப் பந்தாடப்பட்டு பிரெஞ்சிந்தியக் காலனிகள், மீண்டும் ஒருபோரின் முடிவில் தோற்ற பிரான்சு வசம், பிரிட்டன் சில நிபந்தனைகளுடன் 1815ல் பிரெஞ்சிந்தியக் காலனிகளைத் திரும்ப ஒப்படைத்தது. காலனிய அரசியலில் பிரான்சுக்கு, இங்கிலாந்துடன் ஒப்பிடுகிறபோது « கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்டக் காலில்லை » என்கிற கதைதான்.
பிரிட்டிஷ் முடியாட்சி இந்தியச் சமூகத்தின் பிரச்சனைகளில் அதிகம் தலையிடுவதில்லை. இந்தியப் பண்பாடுகளின் கட்டமைப்பை இடித்து மாற்றி எழுப்புவது எளிதல்ல என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். சுரண்டவந்தோம், அதைச் சரியாகச் செய்வோம் என்ற மனநிலையில் அவர்கள் இருந்தனர். பிரெஞ்சுப் புரட்சியூடாக மனிதர் உரிமைக்கு வாதிட்ட பிரான்சு அரசாங்கத்திற்கு மனசாட்சி உறுத்தி இருக்கவேண்டும். சைவப்பூனையாக அவதாரம் எடுத்தது. சைகோனில் பேசாத மனிதர் உரிமையைப் புதுச்சேரியில் பேசியது. இந்தியர்களுக்கு, ‘ பிரிட்டிஷ் ராஜ்’ ஐக் காட்டிலும் ‘பிரெஞ்சு ராஜ்’ மேலானது என்பதைச் சொல்லவேண்டும். பிரெஞ்சு அரசு, காலனி மக்கள் பிரெஞ்சுக் குடிமக்களாக மாறுவதற்கு உதவும் அரசாணையைப் பிறப்பித்தது. மாறிய காலனி மக்கள் இந்தியப் பிறப்பு வழங்கியுள்ள சமூக அடையாளத்தைத் துறக்கவும், பிரான்சுதேசத்துக் குடிமக்களுக்கு ஈடாகச் சலுகைகள், உரிமைகள் பெறவும் உறுதி அளித்தது. அரசாணைகளும் சட்டங்களும், விரைவான மாற்றத்திற்கு ஓரளவேனும் உதவக்கூடியவை என்பதை மறுக்கமுடியாது. ஆயினும் அவை ஏட்டுச்சுரக்காய் என்பதுதான் புதுச்சேரியிலும், சைகோனிலும் பிரெஞ்சுக் குடியுரிமைபெற்ற புதுச்சேரிக் காலனிமக்களின் சொந்த அனுபவம்.
சைகோனுக்கும் புதுச்சேரிக்கும் அநேக விஷயங்களில் ஒற்றுமை இருந்தது. ஆயினும் புதுச்சேரிமக்கள் இருநூறு ஆண்டுகாலம் கூடுதலாக அடிமைப்பட்டுக் கிடந்தோம் என்கிற பெருமைக்குரியவர்கள். இதைப் புதுச்சேரியாகிய நான் சொல்லிக் கொண்டிருக்கிறபோது, வியட்நாம் மக்கள் அங்கே தங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்திருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. புதுச்சேரி சனங்கள் நாள், நட்சத்திரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லாம் கூடிவந்தால் ஏதாவது நடக்கலாம். புதுச்சேரியில் ஆயிரத்தெட்டுச் சாதிகள். அவர்களை வழிநடத்தும் மக்கள் தலைவர்களுக்குத் தங்கள் அரசியல் செல்வாக்கு பற்றிய கவலைகள்.
ஒருவர் தன் புலன்கள் உள்வாங்கியதை, மனம் உணர்ந்ததை சகமனிதருக்குக் கொண்டு செல்ல்லும் முயற்சி, கலைகளும் இலக்கியமும். இம்முயற்சிக்கானப் பட்டறை அவருடைய மூளை. அவர் உள்வாங்கிய உணர்வை, அதன் புரிதலை பிறர் உணர, சுவைக்க அறிவையும் அழகியலையும் பிணைத்து எழுத, தீட்ட, செதுக்க, இசைக்க, சமைக்க தேர்வு செய்யும் களம்.
ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அடிப்படையில் ஒரு கலைஞன் தனது இதயத்திற்கு வெப்பமூட்டிய , உடல் சூட்டைத் தணித்த உணர்வை « யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் » என ‘புற வெளிக்கு’ அழைத்து வருகிறான். இயற்கைக்கு மாறாக மனிதர் தோப்பில் ஒரு சில மரங்களே இனப்பெருக்க கடமைக்காக மட்டும் இன்றி அதிசயமாக பிறரை மகிழ்விக்க, கிளர்ச்சியூட்ட, காரணம் தேட கலை இலக்கியம் என்ற பெயரில் பூக்கவும் , காய்க்கவும் செய்கின்றன. பழுத்த கனியைக் கடிக்கவோ அல்லது கொத்தவோ எல்லா அணில்களும் அல்லது கிளிகளும் வரவேண்டுமென்பதில்லை. திசைமாறிய, ருசியை வேறாகக் கொண்ட அணிலோ, கிளியோ ஒரு குறிப்பிட்ட கனியை விலக்கிச் செல்ல சாத்தியமுண்டு. அவை தேர்வு செய்த மரமும், பறந்து செல்லும் பாதையும் மாறுபட்டதாக இருக்கலாம். கலையும் இலக்கியமும் ஒருவகையில் கனிகளே, சில மானுடமரங்களின் இயற்கை நிகழ்வு. இப்பிரத்தியேக, மானுடமரங்களை ஔவைகள் எனக்கொண்டால், அம்மரத்தின் கனிகளைச் சுவைக்கும் பேறுபெற்ற அதியமான்கள் அனைவரும் நாவில் ஒருபடித்தான சுவை அரும்புகள் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை. அதற்காக ஒவைகள் அழவேண்டியதும் இல்லை.
மார்கெரித் யூர்செனாஎர் (Marguerite Yourcenar)என்ற பிரெஞ்சு பெண்படைப்பாளி, புகழ்பெற்ற ‘ அதிரியன் நினைவுகள் (Mémoires d’Hadrien)என்கிற நாவலின் ஆசிரியர். நேர்காணலொன்றில் « பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டும் விஷயங்களை நான் கையாளுவதில்லை என்கிற எளிய காரணத்திற்காகவே, எனது புத்தகங்களை எத்த்னைபேர் படிக்கிறார்கள் என்கிற எதிர்பார்ப்புகளில்லை ” என்கிறார்.
கலை, மற்றும் இலக்கியபடைப்பாளிகளில் , பண்பியல் அல்லது அருவக் கலை படைப்பாளிகள் தனி இனம். இவர்கள் வெளித்தோற்றங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல, « கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் » என்கிற மெய்யியல் வாதிகள். உண்மையில் ஆழ் மனதில் உளர்ந்த உணர்ச்சிகளில் கலவையைப் பிரித்துணர்ந்து தங்கள் அறிவின் துணைகொண்டு பூரணங்கள் மற்றும் குறைபாடுகளுடன் கலையாக வடிக்கிறார்கள். பொருளின் பூரணம் அல்லது அதன் முடிவற்ற அழகு படைத்தவனோடு நிற்பதில்லை, உள்வாங்குகிற பிறமனிதர்களிடத்திலும் பிரிதொரு நிறத்தில், பிரிதொரு பொருளில் அடையாளம் பெறுகிறது. ஆயிரமாயிரம்பேர் உரை எழுதலாம, பிரித்து பொருள் காணலாம். இவையே அவற்றின் சிறப்பு. பெனுவா தெக் (Benoît DECQUE) இத்தகைய ஓவியர் அவரை அண்மையில் சந்தித்தேன். அவருடனான நேர்காணல் இது.
———————————————–
வணக்கம். பிரான்சு இந்தியா என்ற இரு நாடுகளின் பண்பாட்டையும், கலை இலக்கியத்தையும் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் சில வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டத் வலைத்தளம் Chassé-Croisé: France -Inde. இதன் சார்பாக உங்களைத் தொடர்பு கொள்கிறேன். உங்களைச் சுருக்கமாக அறிமுகப்படுத்திக்கோண்டு, ஓவியத்த்துறையைத் தேர்ந்தெடுத்தக் காரணத்தைத் தெரிவியுங்கள்?
1951ல் பிறந்த நான், வளர்ந்தது, வாழ்வது அனைத்தும் இங்குதான் அதாவது ஸ்ட்ராஸ்பூரில். அறிவியல் துறை எனத் தேர்வு செய்த கல்வி என்னை கட்டடக் கலைக்குக் கொண்டு சென்றது. 1976 இல் கட்டடக்கலை க்கான பட்டத்தைப்பெற்றேன். 1982 முதல், கட்டடக் கலைத் துறையோடு என்னிடமிருந்த கலை ஆர்வத்தால் நகரிலிருந்த மிகப்பெரிய ஓவியக் கலைப்பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றினேன். 2008 ஆம் ஆண்டு சமகால ஓவியத்துறையில் ஆற்றிய பணியைப் பாராட்டி ஸ்ட்ராஸ்பூரிலுள்ள “Le Centre Européens d’Actions Artistiques Contemporaines”பரிசளித்து கௌவுரவித்தது. , தற்போது என்னை முழுமையாக ஓவியத்திற்கு அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறேன்.
2. உண்மையைச் சொல்வதானால், சமகால கலை பற்றிய எனது அறிவு சுமாரானது, ஆனாலும் நீங்கள் உருவாக்கிய படைப்புகளை வைத்து பார்க்கிறபோது அவை பண்பியல் (l’art Abstrait) ஓவியமென நினைக்கிறேன். எனது முடிவு சரியெனில் நீங்கள் ஏன் பிறவற்றில் ஆர்வம் காட்டாது இவ்வடிவத்தை தேர்ந்தெடுத்தீர்கள்?
ஓவியங்கள்(Paintings) அன்றி பெரிய வடிவிலான சித்திரங்கள்(Drawings), சுவரோவியங்கள் நகர்ப்புற அல்லது ..கிராமபுற காட்சிகள் என பன்முகத் தன்மைகொண்ட ஆர்வத்துடன், சுதந்திரமாக செயல்படுகிறேன். எண்ணற்ற கற்பனை மற்றும் சிந்தனை முரண்கள் ஒருவகைப் பன்மைத் தன்மைகொண்ட களத்தை உருவாக்கிக்கொள்ள உதவ, அக்களத்தில் எனது கலைமுயற்சி கட்டமைப்பது எளிதாகிறது
3. உங்கள் படைப்புகளில் பலவித சேர்மங்கள், வடிவங்களை ஒன்றிணைத்த ஒட்டுச் சித்திர(Collage) தோற்றங்களையும் காண முடிகிறது. இவ்வகையான படைப்புகளுக்கு ஆரம்பம் ஒன்று இருக்கலாம், ஆனால் முடிவைத் தீர்மானிப்பது எளிதல்ல, இதுதான் இப்படைப்பிற்குரிய முடிவு என “ஒன்றையும்” அதற்கான தருணத்தையும் எப்படி தீர்மானிக்கிறீர்கள்? மேலும் இதன் மூலம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
எனது படைப்புகள் பண்பியலுக்கும்(Abstraction), உருவியலுக்கும்(Figuration) இடைபட்டவை. இதைநான் விரும்பியே செய்கிறேன், பண்பியல் படைப்பு என்கிறபோதும், ஒரு “பார்வையாளர்” தனது சொந்த கற்பனைகளின் எண்ணிக்கையைப் பெருக்கிகொள்ள போதுமானக் குறிப்புகளைக் கொண்டதொரு படைப்பு. முடிந்ததொரு படைப்பு என்கிறபோதும், பார்வையாளர்கள் தங்கள் கற்பனையில் வெகு தோரம் செல்ல உதவும். உண்மையில் எனது படைப்புகள் முடிவற்றவை, படைக்கிற போது முடிவின்றி அவற்றை விருத்திசெய்யவே மனம் விரும்புகிறது மேலும், உண்மையில் ஒவ்வொரு படைப்பாக்கத்தின்போதும், பணியை முடிக்காத உணர்வே மேலோங்குகிறது, நிறைவின்றி திரும்பத் திரும்பத் கையிலெடுக்கிறேன், யாரேனும் கேட்டால், “இன்னும் முடியவில்லை, வேலை நடந்து கொண்டிருக்கிறது …”என்றே சொல்லத் தோன்றும்.
4. கூடுதலாக, பெரும்பாலான வடிவமைப்புகள் பிரகாசமான நிறங்களைக் கொண்டிருப்பதுடன் அவை உயிர்த்துடிப்புடன் இருக்கின்றன. அத்தகைய உயிர்த்துடிப்புள்ள வடிவமைப்புகளை உருவாக்க தூண்டுவது எது?
துவாலை மீதான வண்ணங்கள், உயிர்ப்புள்ள நிறங்களாக இருக்கிறபோது ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. வண்ணகளுக்கிடையேயான இவ்வேறுபாடு அவைக்கிடையே மோதலை மட்டுமல்ல இணக்கத்தையும் பராமரிக்கின்றன. கிளர்ச்சியாளர்களாக மாறும் நிறங்கள் விதிமுறையை ஏற்பதில்லை, அவவை தங்களுக்கு எது ஒழுங்கின்மையாகப் படுகிறதோ அவற்றில் தலையிடுகின்றன. நிறம் எனப்படுவது கட்டமைத்தல், கட்டுடைத்தல்,மறுதலித்தல் என அனைத்திற்கும் பொருந்த்தும். படைப்புக்கான கருப்பொருள்? அது எதுவென்றாலும் இதொரு படைப்பு, ஓவியம், அதன் களம் சந்தடி மிக்கது. அதொரு யுத்தகளம்!
5. உங்கள் உந்துதலுக்கு எது காரணம்?
பல வேறு கூறுகளில் பெறும் அனுபவங்கள், படைப்புக் குறித்த அக்கறை, எண்ணற்ற தேடல்கள் : குறிப்பாக எங்கும் எதிலும் உள்ள ஆர்வம். இன்று உங்கள் முன் நிற்கும் பெனுவா தெக் தமக்கென ஏற்படுத்திக்கொண்ட புலனாய்வுகள் களத்தில் உருவானவர். இப்புலனாய்வுகள் களம் என்னைப் பொறுத்தவரை பன்முகத் தன்மை கொண்டது. இப்பன்முகத் தன்மைகொண்ட புலனாய்வுகள் களமே என்னுடைய கலை உத்வேகத்திற்கு அடிப்படை.
6. உங்கள் படைப்புகள் மூலம் என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?
படைப்புகள் மூலம் செய்தியா? என்னுடைய படைப்புகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக செய்திகள் உள்ளனவென்று உறுதியாக என்னால் தெரிவிக்க இயலாது. ஒருவேளை விழிகளுக்கு இன்பமூட்டுவதாக இருக்கலாம், அதாவது எளியதொரு விழித்திரை இன்பம் … அதனூடாக உலகாயத விடயப் புரிதல்களில் எளிய அணுகுமுறைகளை வேண்டலாம், ஆனால் எப்போதும் சுதந்திரத்திற்கான அவாவை தூண்டச்செய்யும் எண்ணமுண்டு, காரணம் நான் ஓவியம் தீட்டுவதே என்னுடைய சுதந்திர இருத்தலுக்காக!
‘புலி வருகிறது, புலிவருகிறது’ என சைகோன் – புதுச்சேரி நாவல் வெளிவரும் தேதி திட்டவட்டமாக தெரியாதவரை நானும் சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால் புலிக்கும் நாவலுக்கும் தொடர்பு இருக்கிறது. வியட்நாம் ஹோசிமினும் தன்னை புலி எனச் சொல்லிக்கொண்டவர். ஐந்து மாதங்களுக்கு முன்பு நண்பர் பேராசிரியர் க. பஞ்சாங்கம் இநாவலைக் குறித்து ‘காக்கைச் சிறகினினிலே இதழுக்கு எழுதிய கட்டுரையை வேறு எழுத்தாள நண்பர்களெனில் உடனே முகநூலில் பதிவிட்டிருப்பார்கள். மிகச் சிறந்த கட்டுரை. வெறும் சடங்கான கட்டுரை அல்ல. மனம் உவந்து,, நாவலைப் பாராட்டியிருந்தார். பஞ்சுவின் பாராட்டுகளுக்கு பல படைபாளிகள் காத்திருபதையும் ஏங்குவதையும் அறிவேன். எனக்கது நெஞ்சு தளும்ப வாய்த்திருக்கிறது. சைகோன் – புதுச்சேரி நாவலுக்கும் அப்படியொன்றை எழுதினார். நாவலின் அணிந்துரையாக அதைச் சேர்க்கச் சொல்லியிருக்கிறேன். நாவல் புத்தகவடிவம் கிடைத்த தும், காக்கைச் சிறகினிலே இதழில் வெளிவந்த நண்பர் பஞ்சுவின் கட்டுரையை முகநூலில் பகிர்ந்துகொள்வேன்.
சைகோன்- புதுச்சேரி நாவலில் வரும் சைகோனுக்கும் இன்றைய ஆப்கானிஸ்தான் விடுதலைக்கும் தொடர்பிருக்கிறது. ஆனால் வித்தியாசம் அன்றைய வியட்நாம் பொதுவுடமை வாதிகள் கைக்குச் சென்றது, இன்றைய ஆப்கானிஸ்தான் மதவாதிகள் கைக்குச் சென்றிருக்கிறது.
புதுச்சேரி ஒதியஞ்சாலை(தற்போது அண்ணா) திடலில் சிவாஜி கணேசனின் (தமிழகத்திற்கு கிடைத்த ஓர் அற்புத நடிகர்) வியட்நாம் வீடு நாடகத்தைப் பார்த்தேன்( 1968 என்று ஞாபகம்). வியட்நாம் என்ற பெயரை காதில் வாங்கியது அன்றைக்குத்தான். நாடகத்தில் பத்மினி இடத்தில் ஜீ. சகுந்த்தலா. பத்திரிகை தெரிவித்ததைக் காட்டிலும் இந்நாடகமும் குறிப்பாக இதன் தொடர்ச்சியாக வந்த வியட்நாம் வீடு திரைப்படமும் தமிழ் மக்களிடம் வியட்நாம் பெயரையும் அங்கு நடந்த நீண்டகால யுத்தம்பற்றிய மக்களையும் பாமர மக்களும் அறியுமாறு செய்தது எனலாம்.
ஆஃப்கானிஸ்தான் யுத்தத்தில் « தலிபான்கள் – சோவியத் யூனியன் -அமெரிக்கா» என்பதுபோல வியட்நாம் யுத்த த்தில் « வியட்மின்கள் – பிரான்சு- அமெரிக்கா » என்று நடந்த யுத்தம். இரண்டுமே அதிக காலம் நடந்த யுத்தங்கள். ஆனால் வியட்நாமைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் தலையீடு தென்வியட்நாமிற்கு ஆதரவாக வட வியட்நாம் கம்யூனிஸ்டுகுகளுடன் மோதிய வரலாறு, ஸ்டாலினுக்கு எதிராக கென்னடி நடத்திய யுத்தம்.
இந்தோ சீனா யுத்தமும் – சைகோன் புதுச்சேரி நாவலும்
இந்தியாவின் கிழக்கிலும், சீனாவுக்குத் தெற்கிலும் அமைந்த நாடுகள் இந்தோசீன நாடுகள். இந்தோ-சீனாவின் ஆரம்ப பெயர் கொச்சின் சீனா, சூட்டியவர்கள், இந்தியாவைக் கொச்சின் மூலமாக அறியவந்த போர்த்துகீசியர்கள். ஆனால் இந்நாவல் 1858லிருந்து 1954வரை பிரெஞ்சுக் காலனி அரசாங்கத்தின் கீழிருந்த இந்தோசீனாவை(1858லிருந்து 1907வரை சிறிது சிறிதாக தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த) கதைக்களனாக கொண்டது,அதாவது மலேசியா, சிங்கப்பூர், மியான்மர் நீங்கலாக இருந்த இதரப்பகுதிகள். இவறில் பழைய கொச்சின் சீனா பெயரிலிருந்த வியட்நாமின் தென்பகுதியைதியைத் தவிர்த்து பிறபகுதி முடியாட்சிகள், பிரெஞ்சுக் காலனி அதிகாத்தின் நிழலில் இருந்தன. கொச்சின்சீனா பிரான்சு தேசத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழும், பிறபகுதிகள் குறிப்பாக வியட்நாமின் மத்திய (Annam) மற்றும் வட பகுதி (Tonkan), சயாம், கம்போடியா, லாவோஸ் ஆகியவை பாதுகாப்பு விஷயத்தில் பிரான்சு தேசத்தைச் சார்ந்தும் இருந்தன. தொடக்கத்தில் தேசியவாதிகளாலும், அதன் பின்னர் சீனாவில் ஏற்பட்ட பொதுவுடமைத் தாக்கம் வியட்நாமில் செல்வாக்குப் பெற்றதாலும் ஹோசிமினை தலைவராக் கொண்ட வியட்மின்கள் கொரில்லா தாக்குதல்களில் ஈடுபடலானார்கள். பிரெஞ்சுக் காலனிய அரசு வழக்கமான ஒடுக்குமுறைகளைக் கையாண்டது. 1946 தொடங்கி 1953வரை நடந்த முதல் இந்தோ சீன யுத்தம், வியட்நாம் மட்டுமின்றி இந்தோசீனாவின் பிறநாடுகளும் விடுதலைபெற காரணம் ஆயின. வடவியட்நாமை இரண்டாண்டுகளுக்கு (1954) முன்பே போரில் பறிகொடுத்திருந்த பிரான்சு தென்வியட்நாமை விட்டு 1956 ஏப்ரல் 28 அன்று நிரந்தரமாக வெளியேறியது. தென்வியட்நாம் வியட்நாம் தேசியவாதிகள் கைக்குப் போவதை விரும்பாத வடவியட் நாம் ஜெனீவா ஒப்பந்தத்தை மறுத்து போரைத் தொடங்க, பிரான்சு கைவிட்ட நிலையில் அமெரிக்கா தென்வியட்நாமிற்கு ஆதரவாக போரில் இறங்கியது. பின்னர் 1975 போர் முடிவுக்கு வர , தென் வியட்நாம் வடவியட்நாம் இரண்டும் இணைந்தன.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வியட்நாம் பிரான்சு தேசத்தின் காலனியாக இருந்திருக்கிறது. பிரான்சுக்கும் ஹோசிமின் தலமையிலான வியட்மின்களுக்கும் நடந்த ஏறக்குறைய பத்தாண்டுகள் போரில், ஹோசிமின் படையில் இணைந்து சொந்த நாட்டிற்கு எதிராக போரிட்ட பிரெஞ்சு பொதுவுடமைவாதிகள் அதிகம். பிரெஞ்சு கம்யூனிஸ்டுகள் தங்கள் தாய்நாட்டின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்த தோடு, ஹோசிமினுடனும் கைகோர்த்து நாட்டிற்கு எதிராக போரிட்டவர்கள். ழார்ழ் பூதாரெல், ஹாரி மர்த்தென் போன்ற பிரெஞ்சு கம்யூனிஸ்டுகளை உதாரணமாக சொல்லமுடியும். பிரான்சு தேசத்தின் காலனி ஆதிக்க அரசியலை எதிர்த்துத் தேசத்துரோகிகள் எனப் பழிச்சுமக்கவும் தயாராக இருந்தார்கள். இன்றைய உலகில் அரிதாக க் காணக்கூடிய மனிதப் பண்பு. அதே வேளை புதுச்சேரியில் என்ன நடந்த து. ஹோசிமினுக்கு ஆதரவாக இங்கும் ஊர்வலம் போனார்கள் ஆனால் புதுச்சேரி காலனி ஆட்சிக்கு எதிராக ஒரு சொல் உரத்துடனில்லை. பிரிட்டிஷ் இந்தியா விடுதலை பெற்றபிறகே தங்களுக்கும் மீசை இருப்பது நினைவுக்குவந்திருக்கவேண்டும். .
சைகோன் – புதுச்சேரி நாவலின் முதல் அத்தியாயம் இந்தோ சீனா யுத்தம் பற்றிய சைகோன் நகரின் குரலாக ஒலிக்கிறது. பிறகு அதனை பதிவிடுகிறேன்.