Monthly Archives: ஜூன் 2013

அயர்லாந்து எழுத்தாளன்

– யூகொ ஹாமில்டன்(Hugo Hamilton)

(அண்மையில் லியோன் (Lyon- France) நகரில் கடந்த மே 27 ஆரம்பித்து ஜூன் 2வரை நாவல் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் தமது 7வது வருடாந்திர அமர்வை ஏற்பாடு செய்திருந்தது. நிAVT_Hugo-Hamilton_1183கழ்வின் போது அயர்லாந்து நாவலாசிரியர் ‘அயர்லாந்தியம்’ பற்றித் தெரிவித்திருந்த கருத்தைப் பிரெஞ்சு நாளிதழ் L’Express அதனைப் பிரசுரித்திருந்தது . ஆங்கிலத்தில் எழுதிய அல்லது தெரிவித்த உரையை பிரெஞ்சில் மொழிபெயர்த்திருந்தவர் கத்தியா ஓம்ஸ் (Katia Holmes), வாசிக்க நன்றாக இருந்தது. எனவே நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.)

அன்றிரவு டப்ளினில் இடியும் மின்னலுமாக மழைகொட்டிக்கொண்டிருந்தது. சன்னற்கதவை மூடுவதற்காக எனது அறைக்குத் தகப்பனார் வந்தார். செல்லரித்த நாளான சாஷ்(Sash)வகைச் சன்னல் அது. கைகொடுத்து அப்பா மேலே இழுத்தார், கையோடுவந்த கண்ணாடியின் சட்டம் கேக் துண்டொன்று உடைத்து உதிர்வதுபோல பொலபொலவென்று கொட்டியது. தற்போது திறப்பை அடைத்தாகவேண்டிய கட்டாயம். அப்பா சுற்றுமுற்றும் பார்க்கிறார். முதலிற் கண்ணிற் பட்டது அறைமூலையிற் கிடந்த ஓர் உலகவரைபடம், பள்ளி சிறுவர்களுக்கானது.  பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபொழுது அப்பா வகுப்பறையில் உபயோகித்தது. இரண்டு அரைக்கோளமாகவிருந்த உலகப் படத்தை சன்னலின் பிரதானச் சட்டங்களிற் கொடுத்து ஆணி அடித்தார். தற்காலிகத் தீர்வொன்றைக் கண்ட திருப்தியில் என்னிடம், “இனி தூங்கலாம்”, – என்றார். வெளியே காற்று பேயாட்டமிட, கடல் இரவெல்லாம் வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக இரைந்துகொண்டிருக்க, நான் உறங்கப் பழகிக்கொண்டேன். மறுநாள், சூரியனின் முழுவீச்சுடன் விடிந்தது.

‘அயர்லாந்துகாரன்’ என்ற எனது ‘இருப்பே’ கூட ஓர் தற்காலிக தீர்வுதான். அயர்லாந்தில் பிறந்தேன், வாழ்ந்தேன். இன்றுங்கூட எனது சிறுபிராயத்து அனுபவப் பார்வையூடாக வெளி உலகைப்பார்க்கிறேன், எனது சக டப்ளின் வாசிகளைப்போல. டப்ளின் எனக்கு நுழைவாயில், பேசும்வகைமை; ஓவியத்தின் மீது விழும் பகற்பொழுதின் ஒளிக்கோணத்தோடு ஒப்பிடக்கூடியது, எனது பூர்வீகத்தின் பூகோளப் பின்புலம்: ஓரிடத்தில் நிலைபெற்று உலகத்துடனான பந்தத்தை வழிநடத்துவது. எனது எழுத்திலும் ஏன் என் காலில் அணிந்துள்ள சப்பாத்திலுங்கூட  டப்ளின் வழிகாட்டுதல் இருக்கவே செய்கிறது.

எனினும், எனது பூர்வீகத்தின் ஒரு பகுதி, ஓரிடத்திலும் நிலைபெற்றுவிடாததொரு துணிச்சலையும் எனக்குத் தருகிறது; நாடோடியாகத் திரியவைக்கிறது. ஓர் அயர்லாந்து எழுத்தானின் பார்வையில் ‘ஊர் சுற்றுதலுக்கு’ இடமுண்டு, உலக வரைபடத்தில், இன்னொரு பிரதேசத்தை எட்டிப்பார்த்துவிட்டு, அயர்லாந்தையும் போதிய இடைவெளியில் தள்ளிநின்று பார்ப்பதென்று அதைக் கருதலாம். நாங்கள் கற்பனையில் வாழ்கிறோம்,  எப்போதும் வேறிடம் தேடுகிறோம். அயர்லாந்து அடையாளத்தை மறுப்பதேகூட அயர்லாந்துக்காரன் என்கிற அடையாளத்தேடல் எனலாம். ‘அடையாளம்’, ‘பிறந்த மண்’ போன்ற சொல்லாடல்களெல்லாம் எங்களைப் பொறுத்தவரை மாற்றத்திற்கு உட்பட்டவை. இயல்புத்தன்மைக்கு எதிரான அந்நிலமை ஓர் முரண்நகை. சொற்கள் பொதுவில் தங்களைச் சிறைபடுத்திக்கொள்கின்றன. அதேவேளை, இணக்கமான பொருள் தரும் சூழலிலிருந்து விடுதலைப்பெற தேடலில் இறங்கவும், எதைக்கூற நினைக்கிறோமோ அதற்கு எதிரான பொருளில் விரும்பியே தமக்கு மீண்டும் விலங்கிட்டுக்கொள்ளவும் செய்கின்றன. மகிழ்ச்சிகரமானதொரு முரணிலும், வேடிக்கயான தொரு எதிர்வினையிலும், வேண்டாமென்று கடந்துவந்தவற்றை மீண்டும் தள்ளிநின்று திரும்பிப்பார்ப்பதிலுங்கூட ஐரிஷ் இலக்கியம் மிக நன்றாகச் செயல்படமுடியும் என்பதெங்கள் கருத்து. இயற்கையில் எழுத்தாளர்கள் தோட்டிகளாவும், அரும்பொருள் சேகரிப்போராகவும், தொல்பொருளியல் அறிஞகளாகவும், குற்றபுதிர்களை விடுவிக்கிற காவலற்துறை அறிவியல் வல்லுனர்ககளாகவும் செயல்படுகிறவர்கள் நமக்கு நேர்ந்ததென்ன என்பதை துப்பறிவதே அயர்லாந்து இலக்கியம், உண்மைகளென்று அதுகண்டறிந்தது எதிர்காலத்தில் பொய்த்தும் போகலாம்: வேறிடங்களுடன் ஒப்பிட்டு நம்மைக்கொண்டே சாட்சியங்களை கட்டமைக்கிறோம். கண்காணாத பிரதேசத்திலிருந்து வந்தவர்களைப்போல சொந்த மண்ணில் காலைவைக்கிறபோது, முதல்முறையாக வந்திருப்பதுபோல நடந்துகொள்கிறோம். அயர்லாந்தை பற்றி எழுதுகிறபோதும் கற்பனையில் மட்டுமே சஞ்சாரம்செய்த இடங்களைப்பற்றி எழுதுவோம், ஏற்கனவே அறிமுகமானவற்றின் துணையுடன்,
எங்களை ஏற்றுக்கொண்ட  உலகவரைபடத்தை புரிந்துகொள்ள, முயற்சிக்கிறோம்.
——-

அதிபர் வந்த தினம் – மரி தியாய்

– பிரெஞ்சிலிருந்து தமிழில்

————————————————————————————————————–

மரி தியாய்( Marie NDiaye)  பிரெஞ்சு படைப்பிலக்கிய  marie Ndiayeஆளுமைகளுள் முக்கியமானவர். நாவல்களுள் Trois Femmes puissantes (Three Strong Women) குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்று. 2009ல் வெளிவந்தபோது படைப்பிலக்கியங்களில் பெஸ்ட்- செல்லர்எனப்பெயரெடுத்தது. திருகலான நடைக்குச் சொந்தக்காரர். வாசிப்பவர்கள் திக்குதெரியாதக்காட்டில் அலைவதும், புதைமணலில் சிக்குவதுமான அனுபவத்தை பெற நேரிடுமெனச் சொல்லப்படுவதுண்டு. அவரது நாவலொன்றில் ஒருவரி 100 பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கிறதென அண்மையில் வெளிவந்திருக்கும் ‘La divine’ நாவலுக்கு எழுதப்பட்ட விமரிசினத்தைப் படித்துப் தெரிந்துகொண்டேன். ‘La divine’ இன்றைக்கு பெஸ்ட்- செல்லர்.

———————————————————————————————————

 அதிபர் வந்த தினம்

                                        –     மரி தியாய்

அந்தத் திங்கட்கிழமை, அதிபர் முதன்முதலாக ஹாவ்ரு நகருக்கு வருகைதரும் நாள். காலையில் மெதுவாகவே  எழுந்தாள். எழுந்திருக்கிறபோதே உடல் பாரமாக இருந்தது. இத்தனைக்கும் அவள் எடைபோட்டவளல்ல, அதுவன்றி சிலகிழமைகளாகவே, அவள் மிகவும் பலவீனமாக இருந்தாள் – வெறும் வயிற்றின் களக் களக்கென்று சப்தம் – மளுக்கென்று முறிந்துவிடக்கூடிய எலும்பும் தோலுமான தேகம் – அத்தேகம்,  சிறிது ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாமென அவள் உட்கார்ந்தபோது தங்கக் காலணிகளுடன் தரையைமூடிய பனியை உரசிப் பறப்பதாய்க் கண்ட ‘எல்ப்’ தேவதைகளின் மெல்லிய அமானுட தேகம்போன்றதல்ல; தீனி எடுக்காத பெட்டைக்கோழிக்குரிய தேகம் அல்லது குளிர்காலத்தில் துறைமுகப் பகுதியில் தாழப்பறக்கிற ஏதோவொரு நோஞ்சான் பறவையின் தேகம். உறக்கத்திலிருந்து இன்னமும் முழுதாக மீளவில்லை, பிற்பகல் நகரமன்றத்திற்கு வருகைதரவிருக்கும் அதிபரைப் பற்றிய பேச்சுக் காதில் விழுந்தது. அவளுடன் அதே வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கிற பெண்கள் இருவர், காதைத் துளைப்பதுபோல கீச்சுக்குரலில், மூச்சுவிடாமல், கீழே பேசிக்கொண்டிருந்தார்கள், பேச்சு அரை குறையாகக் காதில் விழுந்தது, புரிந்துகொள்வது கடினமாக இருந்தது. இங்கே பாரு, நான் என்ன சொல்ல வறேன்னா, வீட்டுக்கு உரிமையானவள் குறுக்கிட்டாள், தாழ்ந்த குரலில் சரிசமமாக வாதாடுவதைப்போல பேசிக்கொண்டிருந்தார்கள் என்பது மட்டும் தெளிவு.

ஒல்காவிற்கு, பெண்களிருவரின் அதிபரை பற்றியப் பேச்சில், அவரை தங்கள் சிநேகிதராகப் பாவித்து பேசுவதுபோல தெரிந்தது. அல்லது இவர்களுக்கு அவர் மிகவும் வேண்டியவராக இருந்து, அண்மைக்காலத்தில் தொடர்பு விட்டுப்போனதுபோலவும், மீண்டும் அவரைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்வது போலவும் அப்பேச்சுகள் இருந்தன, அவர்கள் உரையாடலில் இடம்பெறும் அதிபர் யாராக இருக்கக்கூடுமென்ற தெளிவற்ற கேள்வியும் அவளிடம் பிறந்தது, தூக்கமயக்கத்திலிருந்து விடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், அவர் யாரென்பதை முடிந்த அளவு சீக்கிரமாக தெரிந்துகொள்ள விரும்பினாள். இரண்டு பெண்களும், வீட்டுக்குச்சொந்தக்காரியும் ஏதோ திட்டமிடுகிறார்கள். உடல் பலவீனத்தின் காரணமாக நீண்டநேரம் ஒல்கா ஆழ்ந்து உறங்கிவிடுவது அவர்களுக்கு வசதியாகப்போயிற்று; அவள் தங்களுடன் இல்லாமையை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள், அந்நேரங்களில் அவர்களுக்கு உபயோகமான எல்லா விஷயங்கள்பற்றியும் பேச்சு வருகிறது,  ஒல்காவுக்கு நல்லதெதுவும் நடந்துவிடக்கூடாதென்பதைப்போலவும், அவர்களுக்குப் பலன்தரும் வகையிலும் திட்டங்களை முன்வைக்கிறார்கள். எல்லோரையும் போல, பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு உருப்படியான யோசனைகளின் தேவைகள் ஒல்காவிற்கும் இருந்தன. அதற்கான நல்ல தருணம், குருட்டுயோகம் வாய்க்காதது ஒரு குறை. மர்த்தின், கொரீன்; ஒருவேளை சந்த்ரின், கரினோ? போகட்டும் தற்போதைக்கு ‘ன்’ ல் முடியும் பெயர்களைக்கொண்ட இரு பெண்கள் – கேட்பவர்களிடம் ஒல்காவின் நெருங்கிய தோழியெனக் சொல்லிக்கொள்பவர்கள் –  அவளை ‘ஒல்கானூஷ்க்கா’ என உரிமையோடு அழைப்பவர்கள் (அவளை ரஷ்யப்பெண்ணாக்கிப் பார்ப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி), எனினும் எந்தவொரு விஷயம் குறித்தாவது பேசவேண்டும் அல்லது முடிவெடுக்கவேண்டுமெனில் அது அற்ப விஷயமாகக்கூட இருக்கலாம்,  தங்களுக்குப் பெரும்பலன் கிடைக்குமாறு பார்த்துக்கொள்வார்களேதவிர மருந்துக்குங்கூட ஒல்காவுக்கு சாதகமாக முடிவெடுக்கக்கூடாதென்பதிற் கவனமாக இருப்பார்கள். முரணாக எதுவும் நடக்கலாம் அல்லது அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடமில்லை என்பதுபோன்ற பிரச்சினைகளில் ஒல்காவை நிறுத்தி வேடிக்கைப்பார்க்க அவர்களுக்குப் பெரிதும் விருப்பம், வேறுவகையான சிந்தனைக்கு அவர்கள் அருகதையானவர்களுமல்ல, அவர்கள் வளர்ப்பு அப்படி. ஒல்கா கால்கள் இரண்டையும் டைல்ஸ் தரையில் கவனமாக ஊன்றினாள், கட்டில் விளிம்பில் உட்கார்ந்தாள். பெண்களிருவரின் பெயரைத் தெளிவாக நினைவுபடுத்த முடியாமற்போவதுதான் எவ்வளவு எரிச்சலை தருகிறது? நுணுக்கமான தகவல்கள் தனக்கு மறந்துபோகின்றன என்பதை ஒத்துக்ககொள்ள வேண்டும்.  உறவுகளைத் துண்டிக்கும் இயல்புகொண்ட இதுபோன்ற மறதிகள், இன்னொருபுறம் தன்முன்னேற்றதிற்கு உதவக்கூடுமென நினைத்தாள். கீழே அவர்கள் தொடர்ந்து உரையாடிக்கொண்டு இருந்தனர்.  சக்தியைப் உரிய வகையில் பயன்படுத்ததெரியாது, சோர்வின்றி மும்முரமாக உரையாடலில் ஆழ்ந்திருந்தனர். பெண்களிருவரிடமும் பணம் இருந்தது. வயதென்னவோ இருவருக்கும் இருபத்தைந்துதான் சொல்லமுடியும் ஆனால் அதற்குள் தங்கள் பெயரில் பன்னாட்டு கடனட்டையொன்றை வைத்திருந்தார்கள், அதனைக்கொண்டு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு பணத்தை எடுக்கமுடியுமென்று ஒல்கா நினைத்தாள். ஆம், பணம் குறித்த கவலைகள் எதுவும் அப்பெண்களுக்கு இருக்க முடியாது. அவர்களை அலைக்கழித்தது வேறொரு பிரச்சினை, அத்தேவைக்காக பல நாட்கள் இரவு முழுக்க வீட்டுக்குச்சொந்தக்காரியின் வரவேற்பறையில் ரகசியதிட்டங்களைத் தீட்ட வேண்டியிருந்தது. உள்ளூரில் ஒருவகையான புகழ் தேவைபட்டது, நகரத்திலும், மாவட்டத்திலும் எல்லோருக்கும் அவர்களைத் தெரிந்திருக்கவேண்டும். அவர்கள் ‘எத்ரெத்தா’விலிருந்து வந்திருந்தார்கள், அங்கே எல்லோரும் அவர்களை அறிந்திருந்தார்கள், மாறாக ‘ஹாவ்ரு’ நகரில் எதிர்ப்படுகிற மனிதர்கள் முகமன் கூறாததோடு, கண்டுகொள்வதுமில்லை. ஒல்கா, ‘வெலெத்-சுர்-மேர்’லிருந்து வந்திருந்தாள். “என் அப்பா அதிபரைச் சந்திக்கிற மேயரைச் சென்றுபார்த்தார்” கிரிஸ்டின் அல்லது அலின் இருபெண்களில் ஒருத்தி உரத்தக் குரலிற் கூறினாள். வீட்டுரிமையாளர்ப் பெண்மணி அவள் பேச்சை மறுப்பவள்போல,” நாம எப்படி வேண்டுமானாலும் நினைக்கலாம், ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றல்ல”, என்றாள்..

எழுந்திருப்பதற்கு வேண்டிய பலத்தைக் காணாத நிலமையில் அவளுடைய வெளுத்த, மெலிந்த பாதங்களிரண்டும், துடைத்து சுத்தமாக இருந்த டைல்ஸ் தரையில் இன்னமும் ஊன்றியிருந்தன.  ( சாக்ஸ்களிரண்டும் தூரத்திற் கிடந்தன, அவற்றை எடுத்து காலில் மாட்டுவதென்றால் அங்கே செல்லவேண்டும், இதற்கிடையில் உடலில் மிச்சமிருக்கிற தெம்பைக்கொண்டு சிதறிக்கிடக்கிற சக்தியை திரட்டினால்தானுண்டு),  பெண்களிருவரின் உரையாடலுக்கிடையில் விழும் சொற்களிலும், தொனியிலும் அதிபர் பெயரைக் கண்டுபிடித்து விடலாமென்கிற நம்பிக்கையில், அவர்களின் உரையாடலில் எதையும் தவறவிடக்கூடாதென பிரயத்தனம் செய்தாள். இருவரில் எவளிடம் தனக்குப் பிரச்சினையென்று தெரியாதபோது எந்த தைரியத்தில் கீழே இறங்குவது? மனதில் அழுந்தப் பதிந்திருந்ததொரு கடந்தகால சம்பவத்தை மிகத் துல்லியமாக நினைவுகூர்ந்தாள்.  அம்மாவின் முகபாவத்தைத் தெள்ளத்தெளிவாக அதிற் பார்க்கமுடிந்தது. ‘வெலெத்’ திலிருந்து ‘ஹாவ்ரு’க்கு பேருந்தில் வந்திருந்தாள், அறையொன்றின் வாடகை எவ்வளவு என்பதைக்குறித்து  வீட்டுக்கார பெண்மணியிடம் ஒல்காவிற்காகப் பேசவேண்டியிருந்தது. (என் பெண் கணக்கியல் படிக்கப்போகிறாள், ‘கோ’ (Caux) மாவட்டத்தில் கணக்கியல் கற்க சிறந்த பள்ளி எதுவோ அதில் அவளைச் சேர்த்திருக்கிறோம்), வீட்டுக்குச்சொந்தக்காரி, ஒல்காவிற்கென சொல்லப்பட்ட அறையில் நுழைந்திருந்தாள்- அந்த அறை, பட்டினியால்வாடும் பறவைபோல சரீரத்தைத் தனதியல்பிற்கு கொண்டுவர ஒவ்வொரு நாளும் காலையில் அவதியுறும் ஒல்காவினுடைய இதே அறை- அவள் கண்கள் செயற்கை இழை பின்னல்வேலைகளைக்கொண்ட கட்டில் விரிப்பின் மீதும், அதே வேலைபாடுகளைக் கொண்ட வட்டவடிவ சிறு சிறு சிறு குஷன்கள் மீதும் சென்றன, குஷன்கள் சுவரையொட்டி, வெட்டிய தலைபோல கிடக்கும்- சிற்சிலசமயங்களில் அவை தவறி துவள்வதுபோல கட்டிலில் விழும் – ஒல்காவின் அம்மா அவற்றைக்கண்டதும் மனதைப் பறிகொடுத்தாள், தனது மகளுக்கு இப்படியொரு இடம்கிடைத்ததே என்கிறப் பரவசம். பிறகு அவள் பார்வை, இரண்டு மார்பிளுக்குமேலே நின்றிருந்த நல்லமரத்தினாலான சிறுமேசை,  தூசுபடிந்த உலக உருண்டையின் கீழ் பொன்வண்ணத்திலிருந்த சிறுகடிகாரம், சாட்டின் துணியில் மெத்தைவைத்து தைத்த பழைய நாற்காலி ஆகியவற்றின் மீது சென்றது. அங்கு நிலவிய பாசாங்குத்தனமான பகட்டும், படாடோபமும்; அவை காட்டிய நெருக்கமும், வெளிப்படுத்திய அந்நியமும் ஒல்காவின் தாய்க்கு 1800 பிராங் மாத வாடகைக்குரிய போதுமான நியாயங்கள்.  தனது தாய், உடனே தலையாட்டுவாளென்பதையும்; கணக்கியலும், செயலாளர் பணிக்கும் படிக்கப்போகிற தனது ஒரே மகளுக்காகவும்,  ‘வெலெத்’ திலிருந்து நேராகப் புறப்பட்டு வந்திருக்கும் மகள் இப்படியொரு மேட்டுக் குடியினருக்குரிய டாம்பீகமான அறையில் தங்கி படிப்பினைத்தொடர்வதென்பது எத்தனை பெரிய கௌரவம் என்பதற்காகவும் வாடகையாக எவ்வளவு கேட்டாலும், அம்மா கொடுக்க ஆயத்தமாக இருக்கிறாளென்பதையும் ஒல்கா அறிவாள்.  “இங்கே நீ ராணி மாதிரி இருப்ப”, சந்தோஷத்துடன் ஒல்கா காதில் அவள் முணுமுணுத்தாள். ‘வெலெத்’ நகரத்தில் அவள் தாயுடைய கட்டில் விரிப்பு பருத்தியினாலானது, அங்குள்ள சிறு மேசை ஊசி இலைமரத்தில் செய்து, வார்னீஷ் அடித்திருந்தது. யாராவது வந்தால் உடனே ஒளித்துவைக்கப்படுகிற ஜோடி பொருத்தமற்ற சிறு தலையணைகள் அலங்கராங்களுடன் உண்டு ( பார்க்க சகிக்காத சூரியன் மறையும் காட்சி, மினுங்கும் அன்னங்கள், தொப்புள் தெரிய அழும் சிறுவன்..), அவை தரையில் உருண்டோடவும், அதன் ஜிப் கண்ணிற்படவும் இலேசாக காற்று வீசினாலே போதுமானது.  அம்மா கொண்டுவந்திருந்த ஸ்காட்லாந்து பாவாடையின் மடிப்பிலிருந்த நாப்தாலின் வாசம், சலவைக்கட்டியின் இனிமையான பூமணம் ஆகியவற்றைக்காட்டிலும், அன்றைக்கு அம்மாவின் முகத்தில் கண்ட வியப்பையும் – அதைக்குறித்து இலேசான வருத்தமும் (எதனையும் முழுமையாக விரும்பப்போதாத தன்மீது நம்பிக்கையற்று ) அவளுடைய முழு சரணாகதியையும் (என் பெண் கணக்கியல் படிக்கப்போகிறாள், அங்கிருந்தவற்றுள் நல்ல ரோசா நிறத்திலிருந்த தரை விரிப்பையும், வெள்ளீயக் கைப்பிடியுடனுமிருந்த பதினைந்தாம்லூயி காலத்திய சிறு மேசையையும் தவிர்த்து, விரும்பும் வகையில் வேறெதுவுமில்லை.) ஒல்காவால் மிகத்துல்லியமாக நினைவுகூர முடிந்தது. அவ்வாறிருக்கையில், ஹாவ்ரு நகரில் அவளுக்குத் தோழியென்றிருக்கிற பெண்கள் இருவரின் பெயரை நினைவு படுத்த இயலவில்லையெனில் எப்படி?  தனது அறையிலிருந்து ஒல்கா வெளியில்வந்தபோது, நடைகூடத்தில் பெண்களிருவரும் எதிரில் வந்தார்கள்- அவர்கள் தோற்றம் ஒல்காவின் அம்மாவுக்கு ஏமாற்றமளித்தது. நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கென்று அவள் வகுத்திருந்த நியதியின்படிப்பார்க்க, அப்பெண்களிருவரும் படுமோசமாக உடுத்தியிருக்கிறார்கள்: மனதில் எவ்வித உறுத்தலுமின்றி அணிந்திருந்த,  வீட்டிற்கு வண்ணபூசும் தொழிலாளர்களைப்போல முரட்டு ஜீன்ஸில் டங்கரீவகை காற்சட்டை; விறைத்துக்கொண்டிருந்த சிவப்பு சாயம் பூசிய தலைமயிர்; ஆக மொத்தத்தில் வெலெத் நகரில் பலரும் வெறுத்தொதுக்கும் இழிவான பெண்களைப்போல- அம்மா மனதில் என்ன இருக்கக்கூடுமென்பதைத் தெளிவாகவே கணித்திருந்தாள். அப்பெண்களிடம் வெளித்தோற்றத்திற்காக வற்புறுத்தப்படுகிற சில சில்லரை ஏற்பாடுகளை மிகக்கவனமாக தவிர்க்க வேண்டிய பொறுப்புகள்,  நல்ல ரசனைக்கும் பண்புக்கும் இருக்கின்றன என்பதை ஒருக்காலும் புரியவைக்க இயலாது. வீட்டுக்குடையவள் இப்பெண்களைப்பற்றி முன்பின்யோசிக்காமல் ஏன் வாடகைக்கு விட்டாளென்ற கேள்வியும் அவளுக்குள் இருந்திருக்ககூடும், அவ்வாறு நினைக்கிறபொழுது மனதிற் தேவையின்றி இரக்கம் பிறந்தது. மிகப்பெரிய அலங்கார கணப்படுப்பு, பழங்காலத்து மார்பிள் தரை, பொன்னிற கால்கள்கொண்ட சிறுமேசை நடுவிலிருக்க எதிரெதிரே போட்டிருந்த தோலினாலான சோபாக்கள் இவைகளெல்லாம் ‘எத்ரெத்தா’ வில், இளம்பெண்களிருவரின் பெற்றோர்களுடைய கடற்கரை பங்களாக்களில் இருக்கிற எண்ணற்ற விலையுயர்ந்த பொருட்களில் ஒரு சில. அப்பெண்களைப்பற்றிய அம்மாவின் எண்ணத்தில், இவை குறுக்கிட்டிருக்க வாய்ப்பில்லை. பெண்ணொருத்தியின் தந்தை,  ‘வீடு மனை விற்பனை’ நிறுவனம் வைத்திருப்பதோ; மற்றொருத்தியின் தாய், பல் மருத்துவரென்பதோ; இதுபோன்ற குடும்பப் பின்னணிகளைக்கொண்ட பிள்ளைகளும் காலணிநாடாவற்ற சிவப்பு நிற டென்னிஸ் ஷக்களை போடக்கூடுமென்றோ அம்மா யோசித்திருக்கமாட்டாள். பேருந்தைப் பிடிக்கவேண்டிய அவசரத்தில், ‘வெலெத்’ நகரத்திலிருக்கும் தனது வீட்டோடு மௌனமாக ஒப்பிட்டு அப்பெண்களைத் தாழ்வாக நினைத்து அம்மா கடந்திருக்கலாம். ஆ.. எனது மகள் கணக்கியல் படிக்கப்போகிறாள், வீட்டுக்கூரையில் ஒரு டிஷ் ஆண்டெனா வைக்கபோகிறோம், என் பெண்ணுக்கு கணக்கியலறிந்த பெண்காரியதரிசியாக வரவேண்டுமென்ற கனவு, அதை கோ(Caux) மாவட்டத்திலொரு நல்ல பள்ளியில் சேர்ந்து சாதிக்கவேண்டுமென்ற எண்ணமிருந்தது… அம்மா, கூறியவை மீண்டும் மனதில் ஓடின. முக்கியமான நாட்களில் மட்டும் வெளியில் எடுக்கிற தன்னுடைய நீண்ட மேலங்கியை அம்மா அணிந்தாள், வெடிப்புகளில் பூச உபயோகிக்கிற பசைநிறத்தைக்கொண்ட மேலங்கி அது, அவளுடைய குட்டைப் பாவாடையை முழுவதும் மறைக்கப்போதுமானதாக மேலங்கி இல்லை, சிறியது.  காலுறை பழுப்பு நிறத்திலிருந்தது. சாம்பல்நிற குதியுயர்ந்த அவளுடைய காலணிக்கு அவளுடைய தேர்வு எப்போதுமிந்த பழுப்பு நிற காலுறைகளே. ஏறக்குறைய ‘பிஜியெ’ போலவே இருக்கும்; உங்களுக்கு ‘பிஜியெ’ மார்க் காலணிகள் தெரிந்திருக்குமில்லையா? கிட்டத்தட்ட அதுபோலத்தான், விலைகூட அவ்வளவுதான். என் மகளிற்குக் குழந்தையிலிருந்து இப்படியொரு ஆசை இருந்துவந்திருக்கிறது. அலுவலகத்தில் வேலை பார்க்கவேண்டும், தலை நிமிர்த்தாது விசைப்பலகையைத் தட்டிக்கொண்டிருக்கவேண்டும். பிறகு கிசுகிசுக்கிறாள், கிசுப்பினூடே சட்டென்று குரல் தூக்கலாக ஒலிக்கிறது: செல்லம்! நீ இராணிபோல இருப்பாய். தியாகங்களுக்கு அம்மா தயாரென, ஒல்கா நன்றாகவே அறிவாள்: அவளுடைய கல்விக்காகவும், தங்கிப் படிக்க ஆகும் செலவிற்கும், சனிக்கிழமை மாலைகளில் கோதுமை அப்பம் சாப்பிட ஆகும் நேரத்திற்கும், வார இறுதியில் ‘டியெப்’வரை போகவேண்டுமென்ற விருப்பத்திற்கும் பலவவற்றை விட்டுக்கொடுக்க அம்மா தயார். இதுபோன்ற சங்கதிகளில் அப்பாவிடம் ஒல்காவிற்கு பெரிய எதிர்பார்ப்புகளில்லை. பெற்றோர் இருவருமே, பொதுவாக எண்ணிச் செலவிடுபவர்கள், திட்டமாக செலவு செய்து திருப்திகாண்பவர்கள். என் மகளுக்கு வெகு காலமாகவே எண்கள் மீது நிறைய விருப்பம், அதற்காகத்தான்… ஆ! எங்கள் மகள், அவளை நினைக்க எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. ம்..ம்.. அவளுடைய சில்லறை பிரச்சினைகளை கொஞ்சம் பார்த்துக்குங்க.  நடைகூடத்தில், வீட்டுக்குச்சொந்தகாரி உடன் வர  ‘அதெலி’னையும், ‘கொரினை’யும் எதிர்கொண்டவள், எந்த தைரியத்தில், எந்த ஆதாரத்தைக்கொண்டு கேவலமான இப்பெண்களிருவரும்  இப்படியொரு மரியாதைக்குரிய வீட்டுரிமையாளரின் இல்லத்தில் குடியிருக்கிறார்களென நினைத்தாள்,  வந்தவேலை ஒருவழியாக முடிந்ததென்ற கட்டத்தில், அண்டைக் குடித்தனகாரிகளாக இருக்கத் தகுதியற்ற அப்பெண்களிருவரின் அறைகளை எட்டிப் பார்த்தாள்,  வீட்டுக்குச்சொந்தக்காரியின் முழுச் சம்மதத்துடன், பளபளவென்றிருந்த தங்கள் அறைச்சுவர்களில் தகாத சுவரொட்டிகளை (Power Zone அல்லது Red Dead Electrics இரண்டில் ஏதோவொருக் குழுவைசேர்ந்த பாடகரின் சிவப்புசாயம் தோய்ந்த தலைமயிர், பிறப்புறுப்புக்கிணையாக உயர்த்தப்பட்டிருந்த கிட்டார்மீது விழுந்திருந்தது) ஒட்டியிருந்ததும்; கட்டிலுக்குக் கீழே குஷன்களை போட்டுவைத்திருந்த விதமும்; சற்றுமுன்பு அவள் வியந்து பாராட்டிய கடிகாரத்தினை, சிறுத்தை சித்திரத்துடனான ஸ்கார்ப் ஒன்றால் மூடியிருந்ததும்;  நல்ல சிவப்புநிற சிறிய நாற்காலியில்  சரடுகள், வியட்நாம் யுத்தத்திலிருந்து திரும்பிய அமெரிக்க ராணுவ வீரர்களிடம் காண்கிற சகலவிதமான பொருட்கள், ‘டெக்ஸாஸிலிருந்து உன்னைப் புணர வந்திருக்கிறேன்’, ‘ நானொரு சூப்பர் – அப்பா’, ‘தற்போது எனதிடம் காலியாகத்தான் இருக்கிறது’ என்பதுபோன்ற வார்த்தைகள்; மற்றும் சிலுவையுடனான பலவித இயேசு உருவங்கள் அச்சடித்த பனியன்களென ஏராளமாகக் குவிந்துக்கிடந்ததைக் கண்டு அம்மா பெரும் வியப்புள்ளாகியிருக்கவேண்டும். இதைப்போல உனது அறையை நீ பாழாக்கக்கூடாது, எதையும் தொடவேண்டாம், அதது அங்கங்கே இருக்கவேண்டும், என ஒல்காவின் காதில் இரைந்தாள். வீட்டுச்சொந்தக்காரியிடம், தனது மகள்மீது நம்பிக்கை வைக்கலாம் என்பதுபோல அசட்டு சிரிப்புடன்: என் பெண்ணுக்கு எல்லாம் சுத்தமா இருக்கணும், அவளை நான் வளர்த்தவிதம் அப்படி, அவளுடைய அறையில் தூசு தும்பென்று எதுவும் இருக்காது, என்றாள். வீட்டுக்குடையவள் தோளைக் குலுக்கினாள், அவளுக்கு, பேச்சை முடித்து சீக்கிரம் அம்மாவை பேருந்தில் அனுப்பிவைத்தால் தேவலாம் என்றிருந்தது, மாதம் 500 பிராங் கூடுதலாக செலுத்தமுடியுமெனில் ( 2003ல் பெண்களிருவரும் குடியிருக்க வருவதற்கு நான்குமாதம் இருந்தது, அப்போதே, அவர்கள் பெற்றோர்கள் செலுத்திய தொகை), வாடகைக்குக் குடியிருப்போர் எவ்வித முன் அனுமதியின்றி அறையை மாற்றி அமைக்கவும்; விரும்பும் அசிங்கங்களை சுவரில் ஒட்டவும், மாட்டவும்; எவ்வித தயக்கமுமின்றி அரசியல் கருத்துக்களைத் துணிச்சலாகப் பேசவும் செய்யலாமென்பது பின்னாளில் ஒல்கா அறியவந்த சேதி. ஒல்கா அம்மா சீக்கிரம் புறப்பட்டால் தேவலாம் என்றிருந்த வீட்டுக்காரிக்கு அவற்றை விபரமாக தெரிவிக்கும் எண்ணமெல்லாம் இல்லை. வாயிலில் கால்வைத்தபோதும் அம்மா நிறுத்தாமல் நன்றியைத் தெரிவித்துக்கொண்டிருக்க பொறுமை இழந்த வீட்டுக்குடையவள், வாயிற்கதவை மூடப்போனாள். அந்தநேரத்திலும் தயக்கமின்றி, வாடகைப்பணத்தை முதல் தேதி என்றிராமல் அதற்கான தவணைவரும்போது செலுத்தலாமாவெனக் கேட்ட அம்மா, அப்படி கேட்டதற்கு தனது வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டாள். அவள் ஏன் அப்படிக் கேட்டாள், பின்னர் அதற்காக ஏன் வருத்தம் தெரிவிக்கவேண்டும்  என்பதை புரிந்துகொண்ட ஒல்கா வியந்தாள்: அம்மா கண்ணியமானவள், தனக்கெதிரில் இருப்பவள் தன்னைக்காட்டிலும் மரியாதைக்குரியவளென்று நினைத்துக்கொண்டிருந்ததுபோக, பொதுவில் நேர்மையானவர்கள் எதிர்பார்க்கிற நியாயங்களேதுமின்றி பிறரை துச்சமாக கருதும் அப்பெண்மணியின் மனப்பாங்கும், பணிவின்மையும், அறிவின்மையுமே தன்னை அப்படி நடந்துகொள்ளத் தூண்டியவை என்பதுபோல அம்மா தனது நடத்தைக்கு நியாயம் கற்பித்திருந்தாள். அம்மாவின் பலவீனத்தை குறைத்து மதிப்பிடமுடியாது, பிடிவாதக்காரி, மனதையும் அத்தனைச் சுலபமாகப் படித்துவிடமுடியாது, வெளித்தோற்றத்தைக்கொண்டு எடைபோடவியலாத மனிதரினத்தைச் சேர்ந்தவள், உறுதியானவள். எதிரிலிருந்த பெண்மணி இதனை எதிர்பாக்கவில்லை, அதற்கென்ன? அப்படியே செய்தாலாயிற்று, என்ற வார்த்தைகள் விருப்பமின்றி முணுமுணுக்கப்பட்டன. சரி, அடுத்தமாதம் தொடக்கத்தில் ஒல்கா வாடகைக்கு வரலாமென சிறிது முகச்சுளிப்புடன் கூறிவிட்டு கதவைத் தடாலடியாக மூடினாள். ஒன்றின் பயனை அடைவதற்கு முன்பாக அதற்கான பணத்தை கொடுப்பதில் எவ்வித நியாமுமில்லை. வீட்டுக்குடைவளின் வார்த்தையில் நம்பிக்கை பிறந்தது, அணிந்திருந்த காலணிகளும் சுகமாக இருக்க அம்மா புறப்பட்டாள், நடந்ததனைத்தும் திருப்தியாக இருந்தன, அவளுடைய சாம்பல் நிற தலைமயிர் பளீரென்றிருந்தன, பல வருடங்களாக அணிந்தணிந்து மூக்கில் இரு சிவந்த சொட்டைகளை ஏற்படுத்தியிருந்த கண்ணாடியின் உலோகப்பிரேம்களும் தலைமயிர்போலவே வெயிலில் மினுங்கின.

– அதிபர் இயல்பான மனிதர், தயக்கமின்றி உன்னிடத்தில் பேசுவாரென்று தோன்றுகிறது. அவர் ரொம்ப எளிமையானவரென்று அப்பா சொன்னதாக ஞாபகம், இளைஞர்களை மிகவும் நேசிக்கிற நபரென்றும் கேள்வி.

– நம்ம மாதிரி வயசுப் பெண்களையும் நேசிப்பவர் என்கிறார்கள். நம் வயது பெண்களின் மனதில் என்ன இருக்கிறதென தெரிந்துக்கொள்ள விரும்புபவராம்.

– அவரிடம் பேசும்போது ‘மேன்மைமிகு அதிபர் அவர்களே’  என அழைக்க மறக்கவேக்கூடாது, என்ன? – வீட்டுக்குச்சொந்தக்காரி குரலில் சிறிது கடுமையைக்கூட்டிக்கொண்டு எச்சரித்தாள்.

வெலெத் நகரத்திற்கு வாகனத்தில் அம்மாவுடன் வீடு திரும்பொழுது மனதிற் பெரிதாய்ச் சந்தோஷமெதுவுமில்லை. ஹாவ்ருபோன்ற பெரிய நகரத்தில் வசதியானதொரு வீடு கிடைத்ததென்ற மகிழ்ச்சி அம்மாவிடம் வெளிப்படையாகத் தெரிந்தது. குடி அமரப்போகும் இடத்தின் பெருமையை நினைக்கிறபொழுது அழுது வடிந்துகொண்டிருந்த கணக்கியல் பள்ளியும் (எண்களை அதிகம் விரும்புவாள் என்ற எண்ணத்தை தாயிடம் ஏற்படுத்திய கட்டிடம், அதுவன்றி வேறெதைப்பற்றி அவளிடம் சொல்ல இருந்தது?), எளிதிற் புரிந்துகொள்ளமுடியாத பண்பாட்டுத் தளத்தின் அநேகக் குணங்களில் ஏற்கனவே தங்களுக்குள் ஒற்றுமைகண்டிருந்த இரண்டு பெண்களும், நல்ல சிவப்பு நிறத்திலிருந்த அறையின் தோற்றமும், அவளுக்காக செலவிடவிருந்த பணத்தின் அருமையும் நினைவுக்கு வர ஒல்காவிற்குக் குமட்டிக்கொண்டு வந்தது, அடக்கிக் கொண்டாள். கருத்திருந்த கடலின் பின்புலத்தில் அம்மாவின் பாதியுடல் துண்டித்துக்கொண்டு தெரிந்தது. அழுக்கடைந்த வாகன கண்ணாடி ஊடாக இருவரும் தெளிவின்றி பார்த்த கடல் ‘வெலெத்’ திலோ அல்லது ‘ஹாவ்ரு’ விலோ கண்டதல்ல. அதிலும் வீட்டுக்குடையவளின் கூடத்திலிருக்கும் குறுகிய சன்னல் வழியாகப் பார்க்க கூரையைத் தாங்கிப்பிடிக்கிற இரு முக்கோண வடிவ தலைப்பு சுவர்களுக்கிடையில் முடிந்தால் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்பதுபோல சின்னஞ்சிறு துண்டாகச் சோர்வுடனும் சாம்பல் நிறத்துடனும் கடல்   பரிதாபமாகத் தெரியும்.

பெண்களில் ஒருத்தியின் பெயர் ‘கொரின்’ என்றும்  தலைமுடியை ஒட்ட வெட்டியிருந்த மற்றவள் கரோலின் என்றும்  ஒல்கா முடிவுக்குவந்தாள். எழுந்திருக்காமலேயே கட்டில்மீதுக் கிடந்த பேண்ட்டையும், நிட்டெட் பனியனையும் கை நீட்டிஇழுத்தாள், சோர்ந்தும் களைத்துமிருந்தவள் மூச்சை இழுத்துவிட்டபடி இரண்டையும்  அணிந்தாள். பெல்ட்டிலிருந்த கடைசித் துளைவரை உபயோகித்தும் இடுப்பில் பேண்ட் இறுகாமல் மிச்சமிருந்தது. தனதெலும்புகளை பாரமாக உணர்ந்தாள், சுமக்க வியலாத அளவிற்கு அப்பாரமிருந்தது. மிதமிஞ்சிய அளவில் இளைத்திருப்பதை வைத்து, உடல் அபௌதிக நிலமையில் இருக்கிறதென்றோ அல்லது மென்மையான தேகமென்றோ பொருள்கொள்ளாமல் அது கடும் பாரத்திற்குரியதென எண்ணவேண்டும். சதைக் குறையும்போது, எலும்புகளின் எடைமட்டும் மாறாமலேயே இருக்கின்றன. ஆடைகளை ஒரு வழியாக அணிந்து முடித்தவள், காலையில் வராமற்போன தலைச்சுற்றலை எதிர்பார்த்தவள்போல ஜாக்கிரதையாக எழுந்து நின்றாள். படிகளின் கைப்பிடிகளில் சரிவதுபோல இறங்கும் வேளை, உரையாடிக்கொண்டிருந்த மற்றவர்களின் வலிந்த குரல்கள் பதட்டத்துடனும் நாடகத்தன்மையுடனும் காதில் ஒலித்தன.

– அட நம்ம.. ஒல்கானூஷ்கா… – கரோலினிடமிருந்து ஓர் அலட்சிய வரவேற்பு.

– எழுந்திருக்க உனக்கு இன்னும் நேரமிருக்கிருக்கிறதே? அதற்குள்ளாகவா! – வீட்டுச்சொந்தக்காரி.

காலை உணவை முடித்ததன் அடையாளமாக காலிக்கோப்பைகளும், பாதிக் கடித்த வெண்னெய் ஜாம் தடவிய ரொட்டித்துண்டுகளும் மேசைவிரிப்பிற் கிடந்தன. அம்மேசையை விட்டு சற்றுதள்ளியிருந்த நாற்காலியில் ஒல்கா அனிச்சையாக உடலைச் சரித்தாள். ‘ஏத்ரெத்தா’ நகரிலிருக்கும் அப்பெண்களின் சொந்த இல்லங்களில் ஒவ்வொருநாளும்  சரியாக காலை எட்டுமணிக்கு வந்து நிற்கிற  வேலைக்காரிகளுண்டு.

– நீங்கள் ஏதோ அதிபரென்று பேசியது காதில் விழுந்தது, அவருக்கென்ன?

ஒல்கா பார்வை கெஞ்சுவதுபோல கொரினிடம் சென்றது, மூவரில் ஒல்காவிடம் சிறிது இரக்கம் காட்டுபவள் அவள்.

– அதிபர் இன்றைக்கு ‘ஹாவ்ரு’ வருகிறார். அவருக்கு நகரமன்றத்தில் கோக்டெய்ல் விருந்து கொடுக்கிறார்கள், எங்களுக்கும் அழைப்பு வரும். அதிபருடன் நேரடியாக உரையாடவேண்டுமென்ற விருப்பமிருக்கிறது, அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம்.

– அதிபரென்றால்? எனக்குப்புரியலை-  எதற்கு அவர் பிரசிடெண்ட்?

– இதென்ன கேள்வி,  தூங்குமூஞ்சி! நாங்கள் குடியரசுத் தலைவர்பற்றி பேசறோம். நீ என்ன நினைச்ச.. காற்பந்தாட்ட சங்கத்தின் பிரெசிடெண்ட் என்றா? அல்லது ஹாவ்ரு நகரத்திலிருக்கிற ஏதாவதொரு முட்டாப்பசங்க சங்கத்தின் பிரெசிடெண்ட்  என்றா? எனக்கேட்ட அப்பெண், வேறெங்கும் கண்டிராத பொல்லாமையுடன், வெறுப்பை உமிழும் வகையில் புருவங்களைச் சுருக்கினாள், சிகரெட் ஒன்றை பற்றவைத்தாள். ஒன்றிரண்டு புகைக் கவளங்கள் எந்திரத்தனமாகவும் சோம்பேறித்தனத்துடனும் உள்ளே இழுபட்டதும்,  எந்த நேரமும் அந்த சிகரெட் காலில் போட்டு நசுக்கப்படலாமென்பதை ஒல்கா அறிவாள்.

– ஹாவ்ரு நகருக்கு மித்தரான்(1) வருகிறாரா? அதுவும் இன்றைக்கா? – ஒல்கா ஆச்சரியத்துடன் வினவினாள்.

– அசடு! வருவது மித்தரான் இல்லை, சிராக்.  சிராக் என்ற பெயரை இதற்கு முன்னாலே கேள்விப்பட்டதுண்டா?

– வீட்டுக்குடையவளும் மற்றவளும் ஒல்காவைப் பார்த்த பார்வையில் கசப்பும் வியப்பும் கலந்திருந்தன, முதலாவது பெண் வெளிர் நீல வீட்டுடையில் தனதுணர்ச்சிகளை வெளிப்படுத்த விரும்பாதவள்போல அமைதியாக இருந்தாள். தோலின் ஓட்டை உடைசல்களை அடைக்க நினைத்தவள்போல கிரீம் தடவியிருந்தாள், சாயம்பூசிய தலைமயிரின் அடிப்பாகம் கன்னங்கரேலென்று தெளிவாக நெற்றியைப் பிரித்துக்காட்டியது. புகை பிடிக்கிற பெண்களை மட்டும் ஒருபோதும் நம்பாதே, அம்மா அடிக்கடி சொல்வாள். ஒல்காவிற்கு சட்டென்று நினைவுக்கு வந்தது, வெட்கத்தில் தலை குனிய வேண்டியிருந்தது: அண்மையில் நடந்தது, என்றைக்கென்று நினைவில்லை, ஆனால் இரவு வேளை. வியப்பின் உச்சத்தில் அம்மா சத்தமிட்டாள், அக்குரல் ஜெயித்தவளின் குரல்: மித்தரான் கதை முடிந்தது, சிராக் வாழ்க! அம்மா சிராக்கை விரும்புவாள், சிராக் என்றால் பலதும் மறந்துபோகும். சரி, ஒல்கா எப்படி அதை மறந்தாள். கண்களில் நீர்கோர்த்தது. நினைவோடு சேர்ந்து தசையும் அவ்விடத்திலில்லை, இருந்ததெல்லாம் எலும்புகளும் சோர்வும், இருண்டதொரு நிச்சயமற்ற மூலை, விவேகமற்ற கண்ணீர் சமுத்திரம், நியாயப்படுத்த முடியாதது மட்டுமல்ல, தடுக்கமுடியாமலுமிருந்தது. பசியில் வாடிய அவளுடல், அந்த உப்புநீரைக் குடித்து வயிற்றை நிரப்புவதுபோலிருந்தது, சில நேரங்களில் நிரம்பிவழிவதும் உண்டு, தற்போதும் அதுதான் நடந்தது. எல்லோரும் வீட்டுக்குடையவளின் சமயலறையில் கூடியிருந்தார்கள். இவளுக்கும் சரி அந்த இரு பெண்களுக்கும் சரி முட்டாள்தனமாக அதுபோல திடீர் திடீரென உடைந்து அழுகிற வழக்கம் இருந்ததென்றாலும், தற்போது ஒல்காவைத் தவிர பிறரிடம் இல்லை.. இயேசுவே ( அம்மாவுக்க்கு ‘எல்லாம் வல்ல இயேசுவே! எனகூறவேண்டும் அதுதான் மரியாதை!), காலை உணவாக ரொட்டியும், குடிப்பதற்கு பாலும் ஏற்பாடு செய்யேன்!

ஒல்கா தனது உள்ளங்கை இரண்டையும் ஒன்றன்மீது ஒன்றை வைத்து அழுத்தினாள்

– அதிபருக்குக் கொடுக்கவிருக்கிற கோக்டெய்ல் விருந்தில் அழைப்பிதழ் இல்லாதவர்கள் கலந்துகொள்ள முடியுமா?

– முடியவே முடியாது, கரோலின் கத்தினாள்

– பெரிய மனிதர்களின் சிபாரிசின்றி உள்ளே நுழைய முடியாது. உன்னுடைய பெற்றோருக்கு நகரமன்றத்தில் மேயரைத் தெரிந்திருக்கவேண்டும் அல்லது குறைந்த பட்சம் ஒரு பெண்காரியதரிசியை தெரிந்து வைத்திருந்தால் கூட போதும், வாய்ப்புண்டு.

அவளுடைய அம்மா வெகுகாலமாகவே சிராக்குடைய அபிமானியாக இருந்தாள், அவள் பிறப்பதற்கு முன்பிருந்தா? சிராக், சிராக்கிற்கு மட்டுமே அவள் இரசிகை. வேறொரு நடிகருக்கோ, பாடகருக்கோ அல்லது மூச்சுவிடாமற் பேசி அப்பாவை வாய்விட்டு சிரிக்கவைக்கிற பெரிய  நகைச்சுவையாளர்களுக்கோ அம்மா இரசிகை அல்ல. மேசையிற் கிடந்த ரொட்டியை நோக்கி கை நீளுவதுபோலவும், அதை வாய்க்குக் கொண்டுவருவருவது போலவும் ஒல்கா கற்பனையில் ஆழ்ந்தாள், தனது கரத்தை ரொட்டியிடம் கொண்டு செல்ல விரும்பவும் செய்தாள், ஆனால் முன்பு போலவே அதனை செயல்படுத்த கை மறுத்தது. எல்லா வல்ல இயேசுவே, காலை ரொட்டிக்கு ஏற்பாடு செய்.

– என் பெற்றோர்களின் வாக்குகள் ஒவ்வொருமுறையும் அவருக்கே போடப்பட்டிருக்கின்றன.- முணுமுணுத்தாள்.

– தற்போதைக்கு அது முக்கியமல்ல. உன்னை உள்ளே விடுவார்களா, மாட்டார்களா?  என்பதுதான் முக்கியம்.

– அம்மா ஒரு சிராக் பைத்தியம், – வாய்திறக்கக் கூடாதென ஒல்கா விரும்பியபோதிலும், அழுத்தமாக பதில் வந்தது.

வீட்டுக்குசொந்தக்காரியும் இரண்டுபெண்களும் குலுங்ககுலுங்கச் சிரித்தார்கள். பெண்மணி கிண்டலடிப்பதுபோல பேசினாள், அதன் பொருள் ஒல்காவிற்கு விளங்கவில்லையென்றாலும், அம்மாவின் பிறப்புறுப்பு குறித்து பேச்சுவந்தது. நடுத்தர வயதினளான வீட்டுக்காரபெண்மணி பார்க்க சவம்போல தோற்றம்தரினும், சிற்சில சமயங்களில் அவள் உபயோகிக்கும் வார்த்தைகள் காதுகொடுத்து கேட்கக்கூடியவை அல்ல, இளம்பெண்களிருவரும் தேவலாம். அவளொரு விதவை. மேசையை சுத்தம் செய்வதற்காக எழுந்தாள். ஒல்கா மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கிறபோதே ரொட்டி, பால், ஜாம் அனைத்தும் மாயமாய் மறைந்தன. இதைத் தொடர அனுமதிக்கமாட்டேன். ஒரு நாள் இல்லாட்டி ஒருநாள் எங்கேயோ பசியிற் சுருண்டு விழத்தான் போகிறேன், என்னை வீட்டிற்குத் தூக்கிக்கொண்டு வரத்தான் போகிறார்கள். அவள் கைகளில் துளியும் அசைவில்லை, இரு உதடுகளுக்கும் அதே கதி, சிறுத்தும் உலர்ந்துமிருக்கிற தொண்டை,  இம்மி அளவு உணவைக்கூட இறங்க அனுமதிக்காது, என்று பட்டது.

– அங்கு போவதற்கு வேறுவழிகள் இருக்கின்றனவா, பார்க்கணும். சிராக்கைப் பார்க்கத்தான் போறேன், அவருடன் பேசத்தான் போறேன் – குரல் தீர்க்கமாக ஒலித்தது.

– நல்லதுதான், ஆனால் உன்னுடைய கிழட்டு அம்மாவுக்கு அவர்மேல இருக்கிற காதலைச் சொல்லி சந்தோஷப்படலாம் என்ற எண்ணத்தை விட்டுடு – இரண்டுபெண்களிலொருத்தியின் அடைகோழி குரல்.

வீட்டுக்காரபெண்மணி கருமையான தனது புருவங்களை ( அவள் புருவத்திற்கு மையிடுவதுண்டு) நெரித்தவள், கூறினாள்

– ‘வெலெத்’ நகர கிழட்டு அம்மாக்களைப்பற்றி, அவரிடம் கரிசனங்களிருக்க வாய்ப்பில்லையென நினைக்கிறேன். நானாக இருந்தால் அவரிடம் அதுபோன்ற விஷயங்களை வாய் திறக்கமாட்டேன்.

மூவரைக் குறித்தும் அடுத்தடுத்து யோசித்து பார்த்ததில் அதிபர் சிராக்கை தான் நினைத்ததைக் காட்டிலும் அவர்களுக்கு நன்றாகத் தெரியுமென்கிற முடிவுக்கு ஒல்கா வந்தாள்; வயிற்றுக்குள் சிறிய உலர்ந்த கடினமானதொரு பந்து உண்டானதைப்போல இருந்தது; இருபக்கமுமிருந்த விலா எலும்புகளைத் தட்டினாள். ஒரு வாரம் ஆகப் போகிறது வாயில் உணவை வைத்து. ஏன்? எதற்காக? ஏனென்று சொல்ல எவராவது முன்வருவார்களா?  சிராக்குடைய இரண்டாவது பெயரென்ன? கொரின் என்பவளிடம் கேட்க நினைத்து, பிறகு வேண்டாமென்று முடிவெடுத்தாள். பியர், பிரான்சுவா, லூயி? நிறைய அவளுக்கு நேரமிருக்கிறது, குறைபொழுதிற்குள் பெயரைத் தெரிந்துகொள்ளமுடியுமென நினைத்தாள். அப்பெயரை இத்தனைக்கும் எத்தனை முறை அம்மா இவளிடம் கூறியிருப்பாள், இருந்தாலும் ஞாபகப்படுத்த முடியவில்லை.

அதன் பிறகு, வானம் சாம்பல் வண்ணத்திலிருந்த அன்று காலை ஒல்கா இரண்டுபெண்களுடன், கணக்கியல் படிக்கும் பள்ளிக்குச் சென்றாள். கொரினும் கரோலினும் முன்னால் நடந்தார்கள். தையல் விட்டிருந்த மடிப்புகளைக்கொண்ட ஆண்களுக்கான பழைய ஜாக்கெட்டுகளை ( கசங்கிய ஆடைகளை அதிகம் விரும்புவர்கள்)அணிந்திருந்ததின் காரணமாக பெண்களுடைய மெல்லிய தோள்களிரண்டும் கூடுதலாக விரிந்து விநோதத் தோற்றத்தை அளித்தன. வணிகவியல் கற்பிக்கும் அப்பள்ளியின் வாசலில் பெண்கள் இருவரும் நின்றார்கள். ஒல்காவின் உயிர்ப்பான கன்னங்களில் முரட்டுத் தனமாக முத்தமிட்டார்கள். தனது வகுப்புவரை போவது போல ஒல்கா பாவனை செய்தாள், ஒருவரும் பார்க்கவில்லையென்பதை உறுதிப்படுத்திக்கொண்டதும் கடற்கரையை நோக்கி நடந்தாள். கடைசியாக வகுப்பில் கால வைத்தது எப்போது? வருடத்தின் ஆரம்பத்தில் கட்டாயம் போயிருக்கவேண்டும், சிரமத்துடன் நினைவுகூர்ந்தால் சாம்பல் நிற சுவர்களுடன் வகுப்பும், எதிர்காலம் நன்றாக அமையவேண்டுமென்ற கட்டாயத்தில் சேர்த்திருந்த,  படிப்பில் அக்கறையும் நம்பிக்கையும் கொண்ட பெண்களின் முகங்களும் கண்ணிற் தெரிகின்றன (ஒல்கா அம்மாவிற்கு: வாழ்க்கையில், இன்றைய சமூகத்தில் எவற்றையெயெல்லாம் அடையவேண்டுமென்று நினைக்கிறோமோ; அவ்வளவையும் மகள் கணக்கியல், காரியதரிசி பட்டய தேர்ச்சி மூலகாகப் பெற்று வெளியில் வருவாள், உறுதி). இரண்டுபெண்களையும் பிரிந்த சூட்டில் முதன்முதலாக கடற்கரைக்கு அல்லது அத்துறைமுகத்தின் திசைக்கு கால்கள் திரும்புவதற்கு முன்பாக, இரண்டொருமுறை அல்லது அதற்குங்கூடுதலாக ஒருவேளை பள்ளிக்குச் சென்றிருக்கலாம். பிறகு வந்த இடத்தில் மணிக்கணக்கில் நேரத்தைக் கழிப்பாள்; குறுங்கற்கள் மீது அமர்ந்ததும்; சோர்வு, பற்றின்மை, அடைத்திருக்கும் தொண்டை, இறுகிப்போன வயிறு, அவ்வளவும் மறைந்துபோகும். கடற் பறவைகளோ; கப்பல்களோ; ஒரு முறை எதிர்பாராமல் வியப்புக்குரியவகையில் குறுக்கிட்டு அவளிடம் மிகுந்த கவனத்துடன் தங்கள் மென்மையான அழைப்பை விடுத்து ( எலும்புக்கூளங்கள் நிரப்பிய பாரமானதொரு குப்பை பையாக அவர்களுக்கு இவள் தெரியவில்லையா?) பின்னர் மெதுவாகக் கூழாங்கற்களில் தடுமாறியபடி விலகி, திரும்பவும் அவளை நெருங்கி, வற்புறுத்தலுக்குப் பிறகு சோர்ந்து; கவர்ச்சியற்றுமிருக்கும் கடற்கரையில் ஒருபெண்ணை இனியவார்த்தைகளைக்கூறி எழுந்திருக்கசெய்ய இயலாதென்பதால் நம்பிக்கை இழந்து; முகம் கருத்து ஒடுங்கிய முகத்துடன் வேலையற்ற மீன்களைப்போல, எந்திரத்தனமான பிடிவாதத்துடன் அவளைச் சுற்றிவரும் கொரின் கரோலின் போல ஜாக்கெட் அணிந்த நடுத்தரவயது ஆண்களோ முதலிற் கண்ணிற் படவில்லை.

அன்றைய தினம் அவர்களில் ஒருவன் ஒல்காவை நெருங்கினான். அவள் முகத்தருக்கே, அவநம்பிக்கையுடனான தனது முகத்தைக்கொண்டுவந்தவன் மிகுந்த துணிச்சலுடன் அவளை மயக்க முற்பட்டான். குறும்பாகச் சில வார்த்தைகள் வந்தன, அவள் ஒளித்துவைத்துள்ள மகத்துவங்களைப்பற்றி சாடைகாட்டி பேசினான், அவளுக்குப் புரியாமலில்லை, டீ ஷர்ட்டின் கீழுள்ளதைபற்றி பேசினான்.( மார்பகங்கள் ஆகக்கூடுதலாக இருக்கிற பெண்களை நம்பக்கூடதென்றும், அளவாய் உள்ள பெண்களை மட்டுமே நம்பவேண்டுமென்றும்,  அம்மா சொல்வாள்) என்பது அவளுக்கு விளங்காமலில்லை. அவன் ஏற்கனவே தன்னிடம் இதுபோல நடந்துகொண்டிருக்கிறான் என்பது தெரியவந்ததும் முதலில் எரிச்சலும் கோபமும் கொண்டாள். பின்னர் அவன் உதவ முடியுமென்று தோன்றியது.

– அதிபர் சிராக்கின் முதற் பெயர் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

– யாரு?

– சி…ராக். அவர் முதற்பெயர் எனக்குத் தெரியலை, குஸ்த்தாவ், ரொபெர், அந்த்துவான்?  நான் அவசியம் தெரிஞ்சுக்கணும்.

அவன் உதடுகளில் கீழ்த்தரமான சிரிப்பொன்று எட்டிப்பார்த்தது, அவளது கேள்விக்குள் ஆபாசமாக எதையாவது கண்டுபிடிக்கமுடியுமா, சிராக் என்ற பெயருக்குப்பின்னே தன்னைச் சந்தோஷப்படுத்தும் தகவலேனும் ஒளிந்திருக்குமாவென ஆள் பிரயாசைப்படுவதும் தெரிந்தது.

– நீ என்ன சொல்றேன்னு புரியலை, – முகத்தைச் சுளித்தபடி பதிலிறுத்தான்.

– சிராக் என்ற பெயதை கேட்டதில்லை? இந்த நாட்டின் ஜானாதிபதி!

– ஹ¥ம்.. எனக்கு அவரை யாரென்றே தெரியாது.

ஏமாற்றத்தின் அடையாளமாக ஒல்கா தனது தோளைக் குலுக்கினாள். முழந்தாளிட்டு ஒல்காவின் பக்கத்தில் உட்கார்ந்தான். குறுங்கற்களிடையே கிடந்த சில பிளாஸ்டிக் துண்டுகளை பொறுக்கியெடுத்தவன் மிகவும் அழுக்காகவிருந்த தனது உள்ளங்கையில் வைத்து துள்ளிக் குதிக்கச் செய்தான். சற்று முன்பிருந்த சிரிப்பு மறைந்துபோனது, மனதின் அழுக்கை வெளிப்படுத்தும் விதமாக கீழுதடு மேலுதட்டை கவ்வியிருந்தது.

– அநேகமாக நீங்கள் வெளிநாட்டவராக இருக்கவேண்டும், அதனாற்றான் எங்கள் அதிபரை உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை – கரிசனத்துடன் மீண்டும் அந்த ஆளிடம் பேசினாள்.

கோபத்தை அடக்கமுடியாதவன்போல அவளைப் பார்த்தவன், வார்த்தைகளைத் துப்பினான்:

– என்னைப்பார்க்க வெளிநாட்டான் மாதிரியா தோணுது? எதையும் சொல்றதுக்கு முன்னாலே, கொஞ்சம் யோசிச்சுப் பேசணும்.

இலேசாகச் சிவந்தும், பெரிய துளையுடனுமிருந்த அவன் தடித்த மூக்கு அவமானத்தில் மேலும் பெரிதானது, அதற்குத் துணைபோவதுபோல அவன் கண்களை ஈரமாக்கும் குடிகாரர்களின் கண்ணீர். காயப்பட்ட தனது மரியாதையின் கௌவரவத்தைக் காப்பாற்றுவதற்கான பிரயத்தனங்களில் இறங்கினான்.

– என்னைக்காட்டிலும் ஒரு பிரெஞ்சுக்காரனா? எங்கிட்ட வேண்டாம். அந்த ஆளின் பெயர்தானே உனக்கு வேண்டும், ‘ழாக்’ போதுமா?

கேட்டவுடன் அம்மா அடிக்கடி கூறிக்கொண்டிருந்த முதற்பெயர் அதுவல்லவென்பது உடனே நினவுக்கு வந்தது. மனிதர் தவறியிருக்க வேண்டும், அல்லது அவளைச் சந்தோஷப்படுத்த முனைந்து இச்சிறிய விளையாட்டுகான உரிமையை எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். சிரமத்துடன் எழுந்து நின்றாள், தலை சுற்றலும், கால்களில் நடுக்கமும் தெரிந்தன.

– இல்லை. அது ‘ழாக்’ என்று இருக்க முடியாது.  சொல்லப்போனால் அது மாதிரியான முதற்பெயருக்கும் நமக்கும் வெகுதூரமென்று நினைக்கிறேன்.

தொனி கொஞ்சம் எள்ளலாக ஒலித்தது, அது கேலிக்குரியதாகவுமிருந்தது. பலவீனமாக வெளிப்பட்ட தனது சிரிப்பை அவளால் அடக்கவும் முடியவில்லை. கன்னமிரண்டையும் கண்ணீர் நனைத்தது. முடிந்த அளவிற்கு அந்த ஆளிடமிருந்து சீக்கிரம் விலகிச்செல்ல தீர்மானித்தாள், அவளைத் தொடர்ந்துவரும் எண்ணமேதுமில்லை என்பதுபோல அசையாமல் அவன் நின்றிருந்தான், அவள் திரும்பிப்பார்த்தபொழுது, சாம்பல் நிற தலை மினுங்கிற்று, அணிந்திருந்த பழைய ஜாக்கெட்டிற்குள் தோள்களின் வளைவுகளைக் கண்டாள், ‘எத்ரெத்தா’ பெண்களின் தோள்களுக்குள்ள சரி நிகரான அதே வளைவுகள்.

பிற்பகல், எவ்வித சுவடுமின்றி சிலமணி நேரங்களைக் கழித்திருந்தாள். கால்களிரண்டும் நகரமன்றம் வரை அவளை கூட்டிக்கொண்டு போயின. நுழைவாயில் செயற்கையான வேலிகளிட்டும், நகரசபை பொலிசாரைக்(2) கொண்டும் தடுக்கப்பட்டிருந்தது. எனினும் காவலிலிருந்த ஓட்டை வெளிப்படையாக தெரிந்தது, தன்னை அதிபரின் கோக்டெயில் விருந்துக்கு அழைத்திருப்பதாகத் தெரிவித்தபோது கேள்வின்றி அனுமதித்தார்கள். அங்கிருந்த ஓர் ஊழியை இன்னும் நேரமிருக்கிறதென்றாள். வரவேற்பு மண்டபத்தில் அப்போதுதான் மேசைகளை ஒழுங்குபடுத்தி யிருந்தார்கள், நகரசபை மேயர் மாடியில் பதிவுத் திருமணமொன்றை நடத்திக்கொண்டிருப்பதாக அறிந்தாள். மூலையில் கௌண்ட்டர் அருகே நாற்காலியொன்றிருந்தது, அங்கே காத்திருக்க முடிவு செய்தாள். இணக்கமான சோர்வொன்று அயற்சியை மேலும் கூட்ட கண்கள் இருண்டன. நகரத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் போவதும் வருவதுமாக இருப்பதை அரை உறக்கத்தில் கவனித்தாள், பிறகு எதிர்பாராததொரு குபீரென்றவெளிச்சம் மண்டபத்தின் பளிங்குத் தரைக்கு ஒளியூட்டியது. கூதிர் காலத்தின் பிற்பகலில் இன்றாவது ஹாவ்ரு நகரில் சூரியனைப் பார்க்கமுடிந்ததென்கிற சந்தோஷம். நாற்காலியில் அமர்ந்திருக்க சுகமாக இருந்தது, பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்குமென்றும், அவளுக்கென உதவிக்கரம் கூடிய சீக்கிரம் நீட்டப்படுமென்றும் மனதில் உறுதிப்பட்டது. கண்ணீர் மீண்டும் பெருக்கெடுத்தது. அவருக்கு முதற்பெயர் எதுவென்றாலும் இருக்கட்டும், அதிபரிடம் பேசுவேன்; மிகமோசமான எனது பள்ளியைப் பற்றியும், செயற்கை இழை பின்னல்களைக்கொண்ட படுக்கை விரிப்பு குறித்தும், எனது தொண்டை பிரச்சினைக் குறித்தும்? மற்றும் … தற்போது அதிக எண்ணிக்கையில் மனிதர்கள் உள்ளே நுழைந்தார்கள், எல்லோரும் வரவேற்பு மண்டபத்திற்காய்ச் சென்றார்கள்.  பெண்களிருவரையும் ஒல்கா பார்த்தாள், நிமிர்ந்து நின்றிருந்த அப்பெண்களின் தலைகளில் ஒட்டவெட்டிய முடி ஆரஞ்சு நிற சாயத்தில் மினுங்கியது; கணக்கியல் பள்ளியின் தலைமை ஆசிரியையும்; கர்வங்கொண்ட வீட்டுக்கார பெண்மணியை ஆடம்பர உடையிலும் கூட்டத்தில் அடையாளம் கண்டாள். அவளுக்குத் தூக்கிவாரிபோட்டது, அம்மாவும் கும்பலில் இருந்தாள். மகளிடம் எதுவும் கூறாமலேயே,  தனது அபிமான தலைவரை அம்மா காணவந்திருக்கிறாள் என்பதை விளங்கிக்கொண்டாள், இருபது ஆண்டுகளாக தான் கொண்டாடும் ஒருவரை, மிக நெருக்கத்தில் காணக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை துய்க்கவேண்டுமென்ற மனநிலைக்கு அவள் தயார் என்பதுபோலவும் இருந்தாள். அம்மாவைப் பார்த்ததும் முதலில் அதிர்ச்சியும் சற்று எரிச்சலும் வந்தது, எனினும் சமாளிப்பதுபோல அவளைப்பார்த்து சிரித்துவைத்தாள். அம்மா ஏடாகூடாமாக ஏதேனும் செய்து தொலைப்பாளோ என்ற அச்சமும் பிறந்தது, சொந்தப்பெண்ணை கணநேரம் மறந்து, தன்னுடைய அதிபரை கூடுதலாக விரும்பக்கூடும்- அதிலென்ன தப்பு? அம்மா அவளுடைய அழகான சாம்பல் வண்ண ஆடையையும், கருப்பு வண்ண காலுறையையும் அணிந்திருந்தாள். அட இந்த முறையாவது தோற்றத்தில் கவனமெடுத்துக்கொண்டு வந்திருக்கிறாளே, என்பதில் மகிழ்ச்சி. திடீரென்று சந்தேகம் முளைத்தது: அம்மா பள்ளி தலைமை ஆசிரியயைச் சந்திக்க நேர்ந்து, அவளிடம் தான் ஒழுங்காகப் பள்ளிக்கு வராதிருப்பதை தலைமை ஆசிரியைக் கோள்மூட்டிவிடுவாளோ என்பதால் முளைத்த ஐயம். எல்லாம் ஒரு நிமிட நேரம், இதுபோன்ற முக்கிய தினமொன்றில் அதைப்பற்றி நினைக்கக்கூடாதென்பதுபோல, உடனே மறந்தாள். கண்ணாடி வழியாக வந்த சூரிய ஓளி சுள்ளென்று உறைத்தது. தலைவலிப்பது போலிருந்தது, விரல்களைக்கொண்டு அழுத்தினாள், நெற்றி கொதித்ததோடு மட்டுமின்றி, வேர்க்கவும் செய்தது. என்ன இருந்தாலும் சூரியனைப் பார்ப்பதென்பது ஒரு வரம். குறைகளற்ற அம்மாவின் அன்பும், திடீரென்று  ஒளிவெள்ளத்தில் மூழ்கிய நகரமும் கொடுத்துள்ள இச்சந்தோஷத்தை தவறவிடக்கூடாது. அவளுங்கூட தன் பங்கிற்கு நகரசபையின் பெரிய மண்டபத்தின் மின்சாரம் பாய்ச்சப்பட்ட திடீர் சூழலையும், அதிர்வையும் அனுபவிக்கவேண்டும் என நினைத்தபோது ஒரு சந்தோஷக்குரல்: ஆ! வந்துட்டார்! சின்னதாக ஒரு துள்ளல், பின்னர் உடலில் ஓர் அதிர்வு. என்ன நேர்ந்தது?  அவள் தலையில் புள்ளியொன்றைக் குறிவைத்து வெப்பம் தாக்கியிருந்தது. அது அவளுடைய நினைவாற்றல் மற்றும் கவனத்திறனை அபகரித்திருந்தது. பிறகு? தொடர்ந்து குரல் கேட்கிறது: இதோ ஜனாதிபதி! அடுத்து கூச்சலும் குழப்பமும், வரவேற்புவிழா மணடபத்தின் வாயிலைநோக்கி மகிழ்ச்சிப்பெருக்கில் மனிதர்கள் ஓடுகிறார்கள். வெடுக்கென்று எழுந்தாள், தலை வெடித்தது. அப்படியொரு நம்பிக்கை அவளிடம் ஒருபோதும் ஏற்பட்டதில்லை, கண்களுக்கிடையில் ஏற்பட்ட வலிக்கும் அது பொருந்தும் -சூரியனே வலிய  அவள் மூளையில் கொஞ்சம் இடத்தைப் பறித்துக்கொண்டதுபோல இருந்தது. இருக்கையை நீங்குவது அத்தனை எளிதான காரியமல்ல, என்பதும் அவளுக்குத் தெரியும். சற்றுதள்ளி, வீட்டுக்கார பெண்மணியின் முகத்தில் செயற்கைத்தனமான சிரிப்பு. அம்மா பின்னால் நின்றுகொண்டிருந்தாள், ஒல்கா வந்திருப்பதை அறியாத அவளிடத்தில் பிரியமும், சிலிர்ப்பும் தெரிந்தன. வழிவிடுங்கள், ஆ.. வந்துட்டேன். மைனாபோல ஒரு குதிப்பு, மண்டபத்தின் நடுவில் இருந்தாள். அதிபரின் முதற்பெயர் என்னவென்று இப்பொழுது அவளுக்குத் தெரியும், ஞாபகப்படுத்திக்கொண்டாள்: ரெனே! ஆம் அதுதான். நிற்க சங்கடமாக இருந்தது. அவற்றை கால்களென்று சொல்ல முடியாது புற் கற்றைகள், எலும்புகளைச்சுமக்க அவற்றிடம் பலமில்லை, மிகவும் மெலிந்தவை. உரக்க குரலெழுப்ப நினைத்தாள். ரெனே! வீட்டுக்குடையவள் பெண்கள் இருவரிடமும், “மேதகு அதிபர் அவர்களே!” என்று அழைக்க சிபாரிசு செய்திருந்தாள். ரெனே என்ற பெயருக்கும் அதிபருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையெனில்? புற்களென நம்பப்பட்ட கால்கள் கழலுகின்றன. வெப்பமான டைல்ஸ் தரையில் சுருண்டு விழுந்தாள், மனிதர்களின் வியப்பும், கூச்சல்களும் காதில் விழுந்தன, அடுத்து நிறைய சுருக்கங்களுடன் ஒரு முகம், அலங்கரிக்கப்பட்டது, வினோதமான சாயமிட்ட ஒரு மனித முகமூடி,  கடுகடுத்த பார்வையுடன் அவளை நோக்கி குனிந்தது. அதிபரென்று விளங்கிக்கொண்டாள்- ழான்? ரெமொன்? அவரிடம் என்ன பேசுவது? தொண்டை அடைத்தது, புன்னகைக்க மட்டுமே முடிந்தது.

————————————————————————————————————-

1. முன்னாள் பிரெஞ்சு அதிபர்

2. Polices Municipaux, பிரான்சு நாட்டில் நகரசபைகளுக்கென தனிக் காவலர் படையுண்டு

ஐரோப்பிய சிந்தனையாளர்கள் – எழுத்தின் தேடுதல் வேட்டை – நாகரத்தினம் கிருஷ்ணா

                                                                      
முன்னர் ஒரு விவாதத்தில் என்னுடன் விவாதித்த நண்பர் ஒருவர் வரிசையாகப் பல மேற்குலக சிந்தையாளர்களின் தத்துவங்களை பொளந்து கட்டிக்கொண்டிருந்தார். இணையத்தில் கொஞ்சம் நோண்டினால் கிடைக்கக்கூடிய பல விவரங்களை வரிசையாகச் சொல்வது பெரிய விஷயம் அல்ல என்பதால் விவாதத்தில் இருந்தவர்கள் பெரிதும் ஆச்சர்யப்படவில்லை. கொஞ்ச நேரத்தில் விவாதம் திசையறியாமல் சென்றபோது அவர் வார்த்தை விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்தார். அதற்குக் காரணமும் நண்பரிடம் இருந்தது. நமது சிந்தனைகள் எதுவும் மொழியியல் வரலாறு பற்றிய அறிமுகமில்லாதவர்களை சென்றடைய முடியாது என்றார். வெறும் பெயர் உதிர்ப்புகளாக அல்லாமல் மிக விரிவாக ஒரு சிந்தனைத்தளத்தைத் தொடரும் போது தவிர்க்க இயலாதபடி நாம் மொழியியலின் அடிப்படைகளோடு சண்டை போட்டுக்கொண்டிருப்போம் என்றார். அவரது வாதத்தில் உண்மை இருந்தாலும், கட்டுடைப்பு என சில வாதங்களை மொழி அடிப்படைகளை மட்டும் கொண்டு தகர்க்க முடியும் எனும் நம்பிக்கை எங்களுக்கு வரவில்லை.
நாகரத்தினம் கிருஷ்ணாவின் `எழுத்தின் தேடுதல் வேட்டை` கட்டுரைத் தொகுப்பைப் படிக்கும் போது நண்பர் கூறியது சரிதானோ எனும் எண்ணம் மேலோங்கியது. ஒரு குறிப்பிட்ட மொழியில் ஒரு காலகட்டத்தில் மிகத் தீவிரமான சிந்தனைகள் வெளிப்படும்போது, அப்போது புழங்கிய மொழி வளங்களை நாம் கணக்கில் கொள்ளாமல் இருக்க முடியாது. பண்டைய இந்தியாவின் சமஸ்கிருத மொழி ஆகட்டும், கடந்த நூற்றாண்டின் பிரெஞ்சு மொழியியல் ஆய்வாளர்கள் முன்மொழிந்த சிந்தனைகள் ஆகட்டும் இந்த கூற்றை ஊர்ஜிதம் செய்வது போலுள்ளன. தீவிரம் கூடாத படைப்புகள் வெளிவரும் மொழியில் அமைந்திருக்கும் சிந்தனைத்தளமும் மிகவும் மேலோட்டமாக மட்டுமே இருக்க முடியும். மொகலாய ஆட்சியிலும், ஆங்கிலேய ஆட்சியிலும் நம் மொழியில் வெளியான படைப்புகளை சங்க இலக்கியங்களோடும் , பக்திகாலகட்ட இலக்கியங்களோடும் ஒப்பிட முடியாது அல்லவா?

பிற மொழி இலக்கியம் பற்றி எழுதும்போது ஒரு குறிப்பிட்ட படைப்பாளியின் ஆக்கங்களை மட்டும் கணக்கில் கொள்ள முடியாது. அதேபோல அம்மொழியின் அழகியலை ரசிக்காமல் நம்மால் பல பண்பாட்டு கூறுகளோடு இயைந்து போக முடியாது. மொழி, பண்பாடு, இலக்கியம், மொழியியல் போன்றவை நண்டின் கால்கள் போன்றவை. ஒன்றிரண்டு கால்கள் ஒரு திசையில் இழுத்துச் சென்றால், மற்றவை வேறொரு திசையில் இழுத்துச் செல்லும். ஆனால் நண்டின் மொத்த இயக்கமும் இப்படிப்பட்ட முரணான நகர்வுகளை நம்பியே உள்ளது. அதனாலேயே மணலில் அதன் கால் தடங்கள் நேர்கோட்டில் இருப்பதில்லை. அது போல, மொழி, பண்பாடு, இலக்கியம், ரசனை என ஒவ்வொன்றும் ஒட்டுமொத்த புரிதலை ஒவ்வொரு திசைக்கு அழைத்துச் செல்லும். ஆனால் இதுபோன்ற ஒட்டுமொத்தப் புரிதல் இல்லாமல் ஒரு மொழிக்குள் நம்மால் நுழையவே முடியாது.அதனாலேயே மூல மொழியில் படைப்புகளை ஆராய்பவர்களுக்கும், மொழியாக்கத்தில் அணுகுபவர்களுக்கும் ஒரு இடைவெளி உள்ளது.
நாகரத்தினம் கிருஷ்ணா தனது பிரெஞ்சு மொழி அறிவால் அந்த இடைவெளியைக் கடக்கிறார். பிரான்சின் வடகிழக்குப் பகுதியான ஸ்ட்ராஸ்பெர்கில் வாழ்ந்து வரும் நாகரத்தினம் கிருஷ்ணா பிரெஞ்சு இலக்கியங்களையும், ஆய்வுகளையும் பிரெஞ்சு மொழியில் படித்து வருபவர். பல தமிழ் படைப்புகளை பிரெஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்தவர். நீலக்கடல், மாதாஹரி போன்ற நாவல்களும், சிமான் தெ பொவார், பிரெஞ்சு சிறுகதைகள் அறிமுகம் போன்ற கட்டுரை தொகுப்புகள் தவிர தமிழில் பல சிறுகதைகளும் எழுதியுள்ளார்.
`எழுத்தின் தேடுதல் வேட்டை` கட்டுரை தொகுப்பு பல ஐரோப்பிய சிந்தனையாளர்களை அறிமுகப்படுத்துகிறது. பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமல்லாது, ஆப்ரிக்கா, சீனா நாட்டு படைப்பாளிகள் பிரெஞ்சு மொழியில் எழுதும் நூல்களையும் இவர் அறிமுகப்படுத்துகிறார். பல தேசத்து படைப்பாளிகள் இக்கட்டுரைகளில் இடம்பெற்றிருந்தாலும், அவர்கள் அனைவரும் ஐரோப்பா பண்பாட்டை மையமாகக் கொண்டு படைப்புகளை இயற்றியவர்கள். ஐரோப்பாவை குறிவைத்து எழுதினாலும், முன்வைக்கும் பேசுபொருளால் உலகலாவிய சிந்தனை தளத்திலும் பெரிதும் பேசப்பட்டவையாகவும் அவை இருக்கின்றன.
பிலேஸ் பஸ்க்கால், மார்கெரித் துராஸ், குளோது லெவி-ஸ்ற்றோஸ், ட்ரூமன் கப்போட், சார்த்தரு, தாய்சீஜி, சிமான் தெ பொவார் போன்றவர்களது சிந்தனைதளங்களுக்கு மிகச் சிறப்பான அறிமுகமாக இந்தத் தொகுப்பு அமைந்துள்ளது.
இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்.ஆத்மாவின் துணிச்சல் மிக்க பயணம் எனும் கட்டுரை குளோது லெவி-ஸ்ற்றோஸ் ஆய்வுகளை அறிமுகப்படுத்துகிறது. மானிடவியலை `அமைப்பியம்(Structuralism)` ஊடாக கட்டுடைத்தவர் குளோது லெவிஸ்ற்றொஸ். அமைப்பியம் அல்லது அமைப்பியல் வாதம் உண்மையில் மொழியோடு தொடர்புடையது. அமைப்பியம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் ஃபெர்டினான் தெ சொஸ்ஸியர் என்ற சுவிஸ் நாட்டைச் சேர்ந்த மொழியியல் வல்லுனர். இவரது படைப்புகள் உணர்ச்சிக்கும் அறிவுக்குமுள்ள வேறுபாட்டினைக் குறித்து நிறைய பேசுவதாகக் குறிப்பிடுகிறார். பண்டைய சமூகங்களின் அமைப்புகளையும், பழங்குடியினரோடு வாழ்ந்து அனுபவங்களை சேர்கரித்துள்ளார். பண்டைய பண்பாட்டை மட்டும் ஆராயாமல் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களது மந்திரச் சொற்கள், மரபு வழி சிந்தனைகளுக்கும் இன்றைய வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பு எனப் பல விஷயங்களைப் பற்றி குளோது செய்து ஆய்வுகளை மிக அற்புதமாக நாகரத்தினம் கிருஷ்ணா நமக்கு வழங்குகிறார்.
குண்ட்டெர் கிராஸ் எழுதிய `நண்டு நடை` நாவலைப் பற்றிப் பேசும்போது ஜெர்மன் ஆன்மாவுக்கும் தூய்மைவாதத்துக்கும் உள்ள தொடர்பை முன்வைக்கிறார். குண்ட்டெர் கிராஸ் சொல்வது போல, நாவலாசிரியரின் பணி உண்மைகளை மட்டும் எழுதுவது. ஆனால் யாருடைய உண்மைகள்? சரித்திரத்தின் அலையில் உண்மை என ஒன்று தனித்து இருக்கிறதா என்ன? நியாயங்களும், அதிகாரங்களும் மட்டுமே தராசுகளின் ஏற்ற இறக்கங்களை நிறுவும் கூறுகளாக இருந்தாலும், வெண்ணை திரண்டு வருவதைப் போல உண்மை என்றேனும் ஒரு நாள் குழப்பங்களைத் தள்ளிவைத்துவிட்டு, இடர்பாடுகளை ஊடுருவி வெளியே வரும் என்கிறார். அதற்கானப் பயணப்பாதையை நண்டு நடை என்கிறார். எங்கெங்கோ செல்வது போலத் தோன்றினாலும், உண்மையை நோக்கி மட்டுமே மானுட மனம் எழும் என்கிறார் கிராஸ். நாஜிக்களின் பயிற்சியில் சில காலம் ஈடுபட்டு, வரலாற்றின் அவலங்களை தன் முன்னே பார்த்தவருக்கு எத்தனை திடமான மானுட நம்பிக்கை என ஆச்சர்யமாக இருக்கிறது. ஆஸ்விச் கேம்ப்புகளுக்குப் பின்னர் கவிதை என்பதே கிடையாது என அடார்னோ கூறியதுக்கும் இவரது கூற்றுக்கும் எத்தனை வித்தியாசம்!
பிரென்சு வார்த்தைகளுக்குள்ளே விரியும் அர்த்தத்தின் மங்கலான நிழலுருவங்களைத் தொடர்ந்து சென்றுச் சிக்கெனப் பிடித்து தமிழ் வாசகப் ப்ரப்புக்குள் கொண்டுவரும் சிரமமான பணியைத் தன்னாலான வகையில் எளிய முறையில் தன் எழுத்தின் மூலமாகத் தொடர்ந்து செய்துவருபவர் `நாகி` என்று பிரியமாக அழைக்கப்படும் நாகரத்தினம் கிருஷ்ணா
ஒரு எழுத்தின் அல்லது இலக்கிய ஆசிரியனின் சமூகம், அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றுடன் அவன் அல்லது அவள் கொண்டிருந்த பகைத்தனமான அல்லது நட்பார்ந்த உறவுகளை எல்லாம் தன் கட்டுரைகள் முழுவதிலும் நாகி பேசிச் செல்கிறார் என அறிமுகத்தில் இந்திரன் எழுதுகிறார். இது முற்றிலும் உண்மை. உண்மையை மட்டுமே படைப்பாளிகள் காண வேணும் என குண்ட்டெர் கிராஸ் சொன்னதுக்கும் இந்திரன் சொல்வதற்கும் அதிகம் வித்தியாசம் இல்லை.
                 நன்றி தமிழ்மணம்
————————————————————————-
புத்தக தலைப்பு- எழுத்தின் தேடுதல் வேட்டை
எழுத்தாளர் – நாகரத்தினம் கிருஷ்ணா
பதிப்பகம் – சந்தியா பதிப்பகம்
இணையத்தில் வாங்க – எழுத்தில் தேடுதல் வேட்டை

மொழிவது சுகம்: ஜூன் 22-2013

1. அண்மையில் புதுவையில் சந்தித்த நண்பர்களும் எழுத்தாளர்களும்

துளிப்பா சீனு தமிழ்மணிTamizh maNi -2ஏதோ ஒரு பறவை அல்லது விலங்கு, தின்றதைப் போடுகிறது, பூமிப்பெண் சூல்கொள்கிறாள், விதைகருவாகிறது; மேகமும் சூரியனும் நீராகவும் ஒளியாகவும் உதவிக்கு வருகிறார்கள்; விதைகள் முளைவிடவும், துளிர்விடவும் அவை கன்றாகி மரமாகி, பூவும் காயுமாகி மீண்டும் ஒரு சுழற்சிக்கு காரணமாகி, காரியங்களைச் செய்கிறது. இவ்வுலகும் நேற்றுக்கும் மேலானதொரு நாளை சமைத்து திருப்தியுறுகிறது. தன்னை வளர்த்த மனிதனுக்கு மட்டுமே நிழல், தன்னை உபயோகிக்கத் தெரிந்தோருக்குமட்டுமே எதிர்காலமென மரமோ, ஞானமோ அல்லது உலகின் ஏனையோ கூறுகளோ இயற்கையோ நியதிகளை வகுத்துக்கொண்டு ஒழுகுவதில்லை. மனிதன்மட்டுமே, தன்னைச்சுழன்றுவரும் வெளி என்ற மையத்தை மனதில் வைத்து இயங்குகிறான்; தான், தன் நலனை அடிப்படையாகக்கொண்ட உறவுகள் என வாழப் பழகியிருக்கிறான். தனது பசியும், தன் காமமும், தன் கோபமும், தன் தேவையும் அவனது அக்கறை பட்டியலில் மட்டுமல்ல; உறவுகள் நட்புவட்டங்கள், அண்டைமனிதர்கள், இவனை யாரென்றே அறிந்திறாத மனிதர்கள் ஆகியோர் பட்டியலிலும் முதலில் இடம்பிடித்து பராமரிக்கபடவேண்டியவை என நினைக்கிறான். தான் எத்தனை பெண்களைத் தேடினாலும் படுத்தாலும் தப்பில்லை, மனைவி இன்னொரு ஆணிடம் பேசானிலேத் தப்பு, தான் எத்தனை நண்பர்களைத் தேடினாலும் தப்பில்லை ஆனால் தன் நண்பன் இன்னொரு நண்பனைத் தேடிக்கொண்டால் அவனோடு நேரத்தை செலவிட்டால், இவனுக்குக் காய்ச்சல், தூக்கம் பிடிப்பதில்லை. மனிதரிடமுள்ள இந்த இயற்கை குணத்தோடு முரண்படும் மனிதர்களும் இல்லாமலில்லை. இவ்வுலகம் தொடர்ந்து இயங்கவும் மானுடம் மேலானதொரு வாழ்க்கையை நாளை எட்டவும் அமைதியாக எவ்வித சலசலப்புமின்றி உயிர்வாழ்க்கையை நகர்த்த அறிந்திருக்கிறார்கள், ‘பிறருக்காக’ வாழ்கிறோம் என்ற பிரக்ஞைகூட அவர்களுக்கு வருவதில்லை, புதுவை ‘இலக்கியம் சீனு தமிழ் மணி’ அவர்களில் ஒருவர்.

குயவர்பாளையம் என்ற பகுதி புதுச்சேரியின் தோள் போன்றது. புதுச்சேரியில் நூற்பாலைகளின் மின் தறிகள் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்த காலங்களில், ஆலைத்தொழிலாளர்களால் நிறைந்திருந்த பகுதி, அதன் எச்சசொச்சங்கள் இன்றும் ஆங்காங்கே அப்பகுதியின் சந்துபொந்துகளில் தங்கள் கடைசிமூச்சை விடுவதற்கான தருணத்தை எதிர்பார்த்து நிலைகுலைந்திருக்கின்றன. அங்கே மருத்துவர் இல்லங்கள், மருந்துக்கடைகள், தேனீர்கடை, பெட்டிக்கடை, நொறுக்குத் தீனி கடைகள், இரு சக்கர வாகனங்கள், மனிதர்கள் – அவற்றின் பேரிரைச்சல்களுக்கு மத்தியில் –  லெனின் வீதி என்ற பெயரில் தெற்கு வடக்காக ஒருவீதி. அங்கு நீங்கள் வருகிற திசைக்கேற்ப வலப்புறமோ இடதுபக்கமோ ஒருவீட்டில் மாடியில் இலக்கியம் என்ற பெயரில் பலகையொன்று தொங்கும். எழுபதுகளில் அதிகம் படித்திராத சமைந்த பெண்கள் தரிசனம் வீடுகளில் அபூர்வமாகத்தான் நிகழும், ‘இலக்கியம்’ புத்தக விற்பனைகடையும் அந்த வகைதான்.

சீனு தமிழ்மணியை முதன் முதலாகச் சந்தித்தது அப்புத்தகக்கடையில்தான். புதுவை அரசு அச்சககத்தில் பணியாற்றும் நண்பர் சீனு தமிழ்மணியும் சரி அவரது சகோதரரும் சரி அன்றிலிருந்து நேற்றுவரை என்ன காயகல்பம் சாப்பிடுவார்களோ இளமையுடன் இருக்கிறார்கள், நண்பர் நாயக்கரின் இளமை இரகசியம் வெந்நீரில் இருக்கிறது, சீனு தமிழ்மணியின் இளமைக்கு எது காரணமென்று அடுத்தமுறை இந்தியா வருகிறபோது அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும். கணீரென்ற குரல், ஆனால் அளந்துதான் பேசுவார், தேவையின்றி சொற்களை விரயம் செய்வதில்லை. சொல்லவேண்டியதைச் சுருக்கமாக, பொருத்தமான வார்த்தைகளின் உதவிகொண்டு, வெளிப்படுத்திவிட்டு, தனது காரியத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவார், தமிழ் மொழியும் தமிழ் தேசியமும் இரு கண்கள். உடல் வாழ்க்கைக்கு அரசு உத்தியோகத்தையும், உயிர்வாழ்க்கைக்கு ‘இலக்கியத்தையும்’ சார்ந்து வினைபுரிகிறார். பிற (தமிழ்) புத்தகக்கடை விற்பனையாளர்களிடமிருந்து வேறுபட்டவர், இவருக்கு படைப்புலகையும், படைப்பாளிகளையும் அவர்களது படைப்புகள்குறித்தும் சொல்ல இருக்கின்றன, மதிப்பீடுகள் உள்ளன. அடிப்படையில் ஓர் படைப்பிலக்கியவாதியாக இருப்பது காரணமாக இருக்கலாம். சீனு. தமிழ்மணியின் குடும்பமே தமிழுக்காக வாழ்கிற குடும்பமென அறியவந்தபோது பிரமித்துவிட்டேன். அவரது சகோதரர் தமிழ் நெஞ்சனும் ஓர்  சிறந்த கவிஞர், வாரிசுகளும் இவர்களின் வழித் தடத்திலேயே பயணிக்கிறார்கள், நடுத்தர குடும்பமாக இருந்தபோதிலும், தந்தை பெயரில் ஓர் அறக்கட்டளை நிறுவி வருடந்தோறும் அறிவுஜீவிகளைக்கொண்டு சொற்பொழிவு ஏற்பாடு செய்துவருகிறார்கள்.

துளிப்பா கவிஞர்:

சொற்களின் கடைவிரிப்புகளின்றி ஆழமாகவும், நுணுக்கமாகவும், சாதுர்யமாகவும் கையாளப்படவேண்டிய கவிதை வடிவம் ‘ஹைக்கூ’ கவிதைகள். ஜப்பான் நாடு அதன் நதிமூலம். இன்று உலகமொழிகள் ஒவ்வொன்றிலும் அதன் இயங்குதளத்தை விரிவாக்கிக்கொண்டிருக்கிறது. தமிழில் துளிப்பா துறையில் நாட்டம்கொண்டு, தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர் சீனு. தமிழ்மணி. இலக்கிய நண்பர்கள் பலரும் அவரை துளிப்பா சீனு தமிழ்மணியென்றே அறிந்திருக்கிறார்கள். தமிழில் துளிப்பாவுக்கென முதல் இதழைக்கொண்டுவந்த பெருமை சீனு. தமிழ்மணியெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இதழின் பெயர் ‘கரந்தடி’. அவ்வாறே பத்தாண்டுகளுக்கு முன்பு ‘காவியா’ பதிப்பகத்தின் “இருபதாம் நூற்றாண்டு புதுச்சேரித் துளிப்பாக்கள்” என்ற நூலுக்குத் தொகுப்பாசிரியராக இருந்திருக்கிறார். இவர் கவிஞர் மாத்திரமல்ல சுற்றுசூழல் போன்ற சமூல நலன் சார்ந்த துறைகளிலும் நாட்டம் கொண்டவர். அண்மையில் அவரும் அவர் நண்பர்களும் கடுமையாக உழைத்து வே. ஆனைமுத்துவின் கருத்துக் கருவூலம்வர காரணமாக இருந்திருக்கிறார்கள்

துளிப்பாக்களில் சில பாக்கள்:

ஆங்கிலம்பேசும்
தமிழ் குழந்தை
தமிழ் பேசும் ஆங்கிலப்படம்
——
விற்ற மனையே
விற்கப்படுகிறது
“ரியல்” எஸ்டேட்
——

கோடை
மிந்துறையைத் திட்டியபடி
ஓய்வுபெற்ற மின் ஊழியர்
———-
நன்றி:
தகவல்கள் மற்றும் படங்கள்
என்விகடன் -புதுச்சேரி,

வெ.சுப.நாயகர்

நண்பர் மு.இளங்கோ வலைப்பூ

————————————————————————————

2. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்

இசைவிழா

திருவையாறில் இசைகலைஞர்கள்கூடி தியாகராசர் ஆராதனைசாக்கில், இசை வல்லுனர்களும், மேடை ஏறாத கலைஞர்களுமாக கலந்து இசைமுழக்கம் செய்வதில்லையா? அப்படியொரு விழா பிரான்சிலும் நடப்பதுண்டு.

ஒவ்வொரு வருடமும் ஜூன் 21ந்தேதியன்று நடைபெறும் இவ்விழாவுக்கு அடிகோலியவர், பிரெஞ்சு அரசாங்கத்தின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஜாக் லாங் என்ற மனிதர். அதிகாரபூர்வமாக 1983ம் ஆண்டு ஜூன் 21ந்தேதி கொண்டாட ஆரம்பித்தார்கள்.

எதற்காக ஜூன் 21ந்தேதி?

கோடைகாலத்தின் கதிர் திருப்ப நாளாம் -Solstice- அதாவது சூரியன் தனது பயணநேரத்திற்கு அதிகம் அல்லது குறைந்த நேரத்தை எடுத்துக்கொள்வதை கதிர் திருப்ப நாள் எனச்சொல்லப்படுகிறது -தகவல் உபயம் விக்கிபீடியா. அந்த வகையில் ஜூன் 21ந்தேதி சூரியன் மறையாமல் வெகுநேரம் இருக்கும் நாள்.

Fête de la musiqueஇந்த இசைவிழா பிரான்சின் குக்கிராமங்கள், கிராமங்கள், நகரங்கள், பெருநகரங்கள் எங்கும் பொது வெளிகளில், மிகப்பெரிய அரங்குகளை அமைத்து, பெருந்திரளான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுவதோடன்றி; ஆங்காங்கே நாற்சந்திகளில், வீதிமுனைகளில், தெருவோரங்களில் பத்து அல்லது பதினைந்து ரசிகர்கள் கூடியிருக்க அமெச்சூர் கலைஞர்கள் பங்கேற்கிற எளிய நிகழ்ச்சிகள்வரை ஆயிரக்கணக்கில் நடபெறுகின்றன. நேற்று எங்கள் ஊரில் (ஸ்ட்ராஸ்பூர்)மட்டும் இருநூறுக்கும் குறையாத நிகழ்ச்சிகள். விடியவிடிய நடந்தன. திரும்பியபக்கமெல்லாம், கிடார், ட்ரம்ஸ் ஆகியவற்றின் ஓசை, கும்பல் கும்பலாக இளைஞர் பட்டாளம், ஜோடி ஜோடியாக இசை எல்டராடோவில் திளைத்த ஹிப்பிகால மனிதர்கள். எங்கும் சந்தோஷத்தின் மூச்சு. உலகம் இப்படியே நீடித்தால் எத்தனை சுகம்…

———————————————

எழுத்தாளன் முகவரி -15 : தன்மைக் கூற்று கதை சொல்லல்

இன்று, ‘அம்மா இறந்திருக்கிறார்’, ஒருவேளை சம்பவம் நடந்தது நேற்றாகக் கூட இருக்கலாம். ‘அம்மா இறந்தது  இன்றா? ஒருவேளை நேற்றா? என்னிடத்தில் பதில் இல்லை. காப்பகத்திலிருந்து தந்தி வந்திருந்தது, “அம்மா இறந்துவிட்டார்கள்”, நாளை அடக்கம் – ஆழ்ந்த அனுதாபத்துடன்” என்கிற வாசகங்களில் என்ன பெரிதாய் புரிந்துகொள்ள இருக்கிறது. ஒருவேளை நேற்றுகூட நடந்திருக்க வாய்ப்புண்டு. முதியோர் காப்பகம் ‘அல்ஜீயஸ்’ நகரிலிருந்து 80. கி.மீ தூரத்திலிருக்கும்  ‘மராங்கோ’ வில் உள்ளது. அதிகாலை இரண்டுமணி பேருந்தைப் பிடித்தால், பிற்பகல் அங்கிருக்க முடியும், ஆதலால் ‘அடக்கத்தை’ முடித்துக்கொண்டு நாளை மாலை ஊர் திரும்பலாம். முதலாளியிடம் இரண்டு நாள் விடுமுறை கேட்டிருக்கிறேன், இதுபோன்ற காரணத்திற்கு விடுமுறையை அவரால் மறுக்க முடியாது. மனிதரிடத்தில் சந்தோஷமில்லை. ‘தவறு என்னுடையதல்ல’, என்றேன். மனிதர் வாய் திறக்கவில்லை. அப்படி சொல்லியிருக்கக்கூடாதென நினைத்தேன்.  இவ்விவகாரத்தில் வருத்தத்தை தெரிவிக்க வேண்டியவன் நானில்லை, அவர்.  தனது வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவிக்கவேண்டிய நிலையில் அவர்தான் இருந்தார். நாளை மறுநாள் அடக்கத்திற்குப் பிறகு, துக்கச் சடங்கைக் கடைபிடிக்கிற சூழலில் என்னை சந்திக்கிறபோது தெரிவிப்பாரென நம்பலாம். இதைக் கொஞ்சம், தற்போதைக்கு அம்மா இறக்கவில்லை’  என்பதாக வைத்துக்கொள்ளலாம். அடக்கத்திற்கு பிறகு நிலமை வேறு, அது முடிந்தபோனதொரு விடயம், அவ்வளவிற்கும் உத்தியோக பூர்வமானதொரு புதிய வடிவம் கிடைத்துவிடும்.” – ‘அல்பெர் கமுய் எழுதிய ‘அந்நியன்’  நாவலின் தொடக்க வரிகள் இவை.

இவ் வரிகள் சொந்தத் தாயின் மரணச் செய்தியைக்கேட்ட, பிள்ளையின் கூற்றாக வருகின்றன. இவ்வரிகளை படர்க்கைக் கூற்றாக எழுதிப் பாருங்கள். என்ன சொல்ல முடியும் என யோசித்துப் பாருங்கள். படைப்பாசிரியனுக்கும் கதைமாந்தர்களுக்கும் இடையே உள்ள இலட்சுமணக்கோட்டை உங்களால் உணரமுடிகிறதா? அல்பெர் கமுய் ஏன் இவ்வகை எடுத்துரைப்பை தேர்வு செய்தார் என்பதற்குக் காரணம் தெரிந்ததா? படர்க்கையில் கதைசொல்ல முற்படுகிறபோது ஆசிரியர் எதை எழுதுவார்?

– தந்தியைபடித்த கதைநாயகனின் கண்ணீரை, சிவந்த கண்களை, மூடிய இமைகளை, உதடுகளின் அதிர்வுகளை, கன்னக்கதுப்புகள், முகவாய் இரசாயண மாற்றங்கள் ஆகியவற்றைப் பற்றி பேசலாம் எழுதலாம்.

கதை மாந்தனின் புற உலகின் முள்வேளியை தாண்டமுடியாத ஒரு கணம் அங்கே வரும், அந்நேரத்தில் படைப்பாசிரியர், கதைநாயகனின் சமூகம் அதன் பண்புகள், மரபுகள், வழக்காறுகள், வாழ்க்கை நெறிகள் ஆகிய சட்டப்புத்தகங்களைப் புரட்டி அதன் அடிப்படையில் கதைநாயகனைப் புரிந்துகொள்ள நம்மைக் கூவி அழைப்பார்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அகம், புறம் என்ற இரண்டு இயக்கங்கள் உள்ளன. புறவாழ்க்கை நமது அக உணர்வுகளைத் தண்டித்தே வாழப் பழகியிருக்கிறது, பெண் என்ற பிறப்பு ஆணுக்கென்று பழகிக்கொண்டதுபோல. அதன் சுதந்திரமெல்லாம் அடுக்க¨ளைவரை என்கிற ஆணாதிக்கத்திற்கேயுரிய அறமும், கோட்பாடும் செல்நெறியும், மனித வாழ்க்கையின் புற உலகு அரசியலோடு பெரிதும் பொருந்தக்கூடியது. இந்த அகமென்ற அடுக்களை பெண்ணை எப்படி புரிந்துகொள்வது, எளிதான வழி அவளாக வாழ்ந்து பார்ப்பது, அவளாகச் சிந்திப்பது, அவளை பேச வைப்பது, அவளை செவிமடுப்பது, அவளை செயல்படவிடுவது. அதைத்தான் தன்மைக்கூற்றில் கதை சொல்ல நினைக்கும் ஆசிரியர்கள் செய்கிறார்கள். ‘அந்நியன்’ கதை நாயகன் என்ன சொல்கிறான் எனக் காதைக் கூர்மைப்டுத்திக் கேளுங்கள்; அச்சொற்களை மூளையின் உணர்வுதளத்தில் இசைகோர்வையை எடைபோடுவதுபோல இரசியுங்கள், அதன் துடிப்பும் சுவாசமும் சொல்லவருவதென்ன என்பது எளிதாக விளங்கும். ‘அம்மா இறந்துவிட்டாள் இன்றா நேற்றா என்றைக்கு நடந்ததென்ற ஒரு கேள்வி? தந்தி வந்திருக்கிறதே போய்த்தானே ஆகவேண்டுமென்பதுபோல பேருந்து பிடித்து அடக்கத்தில் கலந்துகொண்டு நாளை திரும்பிவிடுவேன் என, சமூக எதிர்பார்ப்பிற்கு, சமூக நியதிகளுக்காக ஒரு பதிலை வைத்திருக்கிறான். சொந்தத் தாயின் இறப்பு அவனுள் எவ்வித நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என்ற ஓர்மை நாவலின் தொடக்கத்தில், ஒரு சித்தன் போல உரைப்பதில் தெளிவுபடுத்தப்படுக்கிறது. சொல்லப்படவிருக்கும் நாவலில் கதைமாந்தனின் பிரம்மாண்டமான ‘இருப்பை’ அவ்விருப்பில் ‘நாடா புழுக்களாக நெளியும்’ முரண்களுக்கு, கதைமாந்தனின் ஆரோக்கியத்தில் உள்ள பங்கை கோடிகாட்டிவிடுகிறது. வாசகன் முதல் வரியைப் படித்ததும் அதிர்ந்து போகிறான். கா·ப்காபின், ‘விசாரணை’ நாவலையும் தன்மைக் கூற்றுக்கு உதாரணமாகச் சொல்லலாம்.

பன்மைக்கூற்றில் பொதுவாக என்ன நடக்கிறது. கதைமாந்தர்களிடையே கூடுபாய்ந்து விவரணையைகூட்ட முடியுமென்கிற பொதுவானதொரு உண்மையைத் தவிர, கிடைக்கும் பிறபலன்கள் என்ன? என்ற கேள்வியை நானும் பலமுறைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்குக் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை, ஆக அதற்கேற்ப ஒரு தந்திரத்தை கைவசம் வைத்திருக்கிறேன். அதற்கு முன்பாகப் பன்மைக்கூற்றில் என்ன நடக்கிறதென்று பார்ப்போம். வேணியோ வாணியோ ஒருத்தியை கூடுதலாகவோ குறைத்தோ – பெண்னென்றால் குறைத்து என்பதற்கு சாத்தியமில்லை, எழுதுகிறோம் முதல் அத்தியாயத்தில் என்றில்லாவிட்டாலும் மூன்று அத்தியாயங்களுக்குள் கூந்தலை முடித்துக்கொண்டோ  முடியாதவளாகவோ வந்துவிடுவாள், அவள் கதை நாயகனை அலுவலகத்திலோ, பேருந்து பிடிக்கிறபோதோ சந்திக்கலாம், தற்போது கதைநாயகி ஊடாக ஆசிரியர் கதைநாயகனின் மகோன்னதங்களை எழுதுவார். படைப்பாளி ஆணாக இருந்தால் கதை நாயகனை முதலிலும், படைப்பாளி ஒரு பெண்ணாக இருந்தால் பெண்ணை முதலில் அறிமுகப் படுத்துவது நடைமுறையில் உள்ளது.

வாசகராக இருந்து இதற்குப் பதில் நேடுவோம். ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரம்; நான் நிறைய வாசித்திருக்கிறேன், எனக்கு எல்லாவற்றையும் குறித்து அபிப்ராயங்கள் இருக்கின்றன, அதுபற்றி சொல்லப்போகிறேன்:. கத்தரிக்காய் பிஞ்சாக இருந்தால் நல்லது, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பிற்கோ, கொத்ஸ¤ செய்து சாப்பிடாலோ அத்தனை ருசி; அடுத்து இந்தத் திராவிடக் கட்சிகளெல்லாம் குப்பை தமிழர்களின் மூளையை பிரச்சாரமொழிக்குப் பழக்கி, வெட்கமின்றி பிறர்காலில் விழவைத்துவிட்டன; மார்க்ஸ் மூலதனம் நூல் ஓர் பழங்கதை என்று எதையாவது மூச்சுவிடாமற் பேசிக்கொண்டிருக்கலாம், பேசுவதை அல்லது நினைத்ததை எழுத படைப்பாளிக்கு பூரண உரிமை இருக்கிறது, ஆனால் வாசகனாகிய நாம் இதனைச் சகித்துக்கொள்வோமா?

சில எழுத்தாளர்களுக்கு அதில் வெற்றியும் கிடைக்கும் படர்க்கையில் சொல்லப்படுகிற படைப்புகள் வெற்றி பெறாமலா இருக்கின்றன, உலகமெங்கும் நாள் தோறும், பல மொழிகளில் வரத்தான் செய்கின்றன, வாசகர்களால் வாசிக்கவும் படுகின்றன. வியாபார அளவில் போட்டமுதலை எடுக்கவே செய்கிறார்கள், அதுவும் தமிழ்நாட்டில் நூலக ஆ¨ணைகிடைத்தால் போதாதா, அதை நம்பித்தானே பதிப்பகங்கள் இருக்கின்றன. ஆனால் படர்க்கையில் சொல்லப்படுவது கேமரா கொண்டு படம் எடுப்பதுபோலவென்றும் அது வெளிப்புற காட்சிகளை படம் பிடிக்க மட்டுமே உதவும், பாத்திரங்களுக்குள் உள்ளே நுழைந்து அவர்கள் மனங்களை எடைபோட அவ்வெழுத்துக்கு இயலாது என ‘டொனால்டு ஹாமில்டன் என்ற அமெரிக்க எழுத்தாளர் கூறுகிரார். இவர் தீவிர இலக்கியவாதி அல்ல, குற்றபுனைவுகளையும், வட அமெரிக்காவின் மேற்குலகு மரபு கதைகளையும் எழுதி இருக்கிறார். ஒரு நல்ல வாசகன் கங்காரு வகை எழுத்தை ( ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொன்றிர்க்குத் தாவும்), அதாவது படர்க்கையில் சொல்லப்படும் எழுத்தை இரசிப்பதில்லை என்கிறார். தனது எழுத்தை உணர்ச்சி பூர்வமாக சொல்லவிரும்பும் எந்த எழுத்தாளனும் தன்மை கதைசொல்லல் வகையையே தேர்வு செய்வார்கள் என்கிறார்.  கா·ப்கா, அல்பெர் கமுய், துராஸ், பிரான்சுவா சகாங், குந்தெரா  தன்மைக்கூற்று எடுத்துரைப்பை தேர்வு செய்து, படைப்பை சாசுவதப்படுத்தியிருக்கிறார்கள். தமிழில் சங்ககால கவிதைகளிலேயே இம்மரபுக்கு வித்திடப்பட்டுள்ளது.

உண்மையைச் சொல்வதெனில் தன்மைக்கூற்று கதை சொல்லலில் சில நெருக்கடிகள் இருக்கின்றன. அவற்றை வெல்ல தனித் திறமையும் பயிற்சியும், ஆழ்ந்த உளவியல் ஞானமும் தவிர்க்க முடியாதவை. இவற்றில் எத்தனை விழுக்காடுகள் நீங்கள் தேர்ச்சி பெற்றவரோ அதற்கு நேர்மறை விகிதத்தில் உங்கள் படைப்பும் சோபிக்கும், எழுத்தும் வெற்றி பெறும். தன்மைக்கூற்று எடுத்துரைப்பில் உள்ள தலையாய பிரச்சினை விளிம்பையும் மையத்தையும் கையாளும் திறன். இத்தன்மைக் கூற்றில் ஒற்றை உயிரியை  முதன்மைப்படுத்துகிறோம் அதாவது மையம்; பிற பாத்திரங்கள் விளிம்புகள், மையக்கோளைச் சுற்றிவருபவை.  இவ்விளிம்புநிலை பாத்திரங்கள், மையத்தை நம்பி இருக்கின்றன, இவற்றின் இருப்பும் அசைவியக்கமும் மையத்தினால் தீர்மானிக்கப்பட்டவை – ஆக விரும்பியோ விரும்பாமலோ படைப்பாளி இம்மையத்தின் ஊடாக விளிம்புகளைப்பார்க்கிறான். ஒருவித ஒற்றை பார்வை, எதேச்சதிகார நோக்கு- எனக்கு முன்னால் நீங்கள் (விளிம்புகள்) எல்லாம் குப்பைகள் என்ற பார்வை. இச்சர்வாதிகாரபோக்கு பிறமனிதர்களை -பிற உயிரிகளை பருண்மை அற்றவைகளாக -செல்லாக் காசுகளாக மாற்றிவிடுகின்றன.

இந்த அபாயத்திலிருந்து தப்பவும், இந்த ‘உப’ பாத்திரங்களுக்கு சாப விமோசனம் தரவும் எனது நாவல்களில் அப்பாத்திரங்களுக்கு அவ்வப்போது தன்மைக்கூற்றின் குரலை இரவல் கொடுப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன், இவ்வுபாயம் ஓரளவு வெற்றியையும் ஈட்டியுள்ளது.படர்க்கையில் சொல்லுகிறபோதும் எனக்கென ஒரு வழிமுறை வைத்திருக்கிறேன். ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொன்றிர்க்குத் தாவுகிறபோதும் அங்கே ஆசிரியனாகிய என்னை ஒளித்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பாத்திரங்களே கதையை நடத்துவதுபோல கொண்டு செல்வேன். வாசக நண்பர்களுக்கு ஒரு படர்க்கை கதை சொல்லலில் தன்மைக்கூற்று எடுத்துரைப்பிலுள்ள அத்தனை நன்மைகளையும் அளிக்க முயற்சிக்கிறேன்.

——————————————-

கலகம் செய்யும் இடதுகை

1நண்பர் வெங்கட சுப்புராய நாயக்கர் மொழிபெயர்ப்பில் நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ள சிறுகதை தொகுப்பு- பிரெஞ்சிலிருந்து மொழி பெயர்க்கபட்டவை -. இத்தொகுப்பில் எட்டு கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒருவிதம்.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நாயகரை அறிவேன். மொழிபெயர்ப்பாள நண்பரிடம் அதிசயிக்கும் விடயம், எந்தத் தகவலையும் நகைச்சுவையுடன் சொல்லும் ஆற்றல். ஏதோ சட்டை பையிலிருந்து எடுப்பதுபோல உரையாடலின் போது  வேடிக்கையாக வாரத்தைகள் வந்துவிழும். சொல்லிக்கொண்டிருப்பதை துண்டித்துவிட்டு, அவரது சாதுர்யமான வார்த்தை விளையாட்டினை இரசித்து, சிரிக்கவேண்டிவரும். அவரது இந்த இயல்பான குணம், நாள்தோறும் கி.ராவை சந்திப்பதை அவர் வழக்கமாக்கிக் கொண்டிருப்பதால்  கூடுதலாக மெருகேறி இருக்கிறதென்பது என் அனுமானம். இந் நகைச்சுவை உணர்வு, மொழிபெயர்ப்பிற்கு  தேர்வு செய்த கதைகளிலும் எதிரொலிக்கிறது, .

ஒவ்வொரு சிறுகதைக்கும் முன்பாக அக்கதை ஆசிரியர் பற்றிய சிறு குறிப்புகள் தொகுப்பில் இருக்கின்றன. சுருக்கமான இந்த அறிமுகம் அக்கதை குறித்த பொதுபார்வையை வாசகனுக்கு அளித்து, வாசிப்பிற்கு அவனை தயார்படுத்துகிறது. அடுத்து குறிப்பிடவேண்டியது சிறுகதைகளுக்கான பெயர்கள். ஜோடி பொருத்தம் என்ற சிறுகதை பியர் கிரிப்பாரி என்பவர் எழுதியிருக்கிறார். மூலக்கதையில் ஆசிரியர் என்ன பெயர்வைத்திருந்தாலும், மொழி பெயர்ப்பாளர் சூட்டிய பெயர் மிகக் கச்சிதமாகப் பொருந்துகிறது, அவ்வாறே ‘கலகம் செய்யும் இடதுகை’ என மற்றொரு சிறுகதையின் பெயர். இச்சிறுகதையின் தலைப்பே நூலுக்குரிய பெயராகவும் அமைந்துள்ளது. மொழிபெயர்ப்பாளர் ஒவ்வொரு சிறுகதைக்கும் தமிழ்சூழலுக்குப் பொருந்துகிற, தமிழ் வாசகனை அந்நியப்படுத்தாதப் பெயர்களை கொடுத்திருக்கிறார்: சொர்க்கத்தின் கதை, அந்த பச்சை டைரி, திருடா என்ன வாழ்க்கையடா உன் வாழ்க்கை ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம்.. ஒரு படைப்பிற்குப் பெயர் சூட்டுவதில் உள்ள சிக்கல், மொழிபெயர்ப்பிலும் உள்ளன. மூலநூலின் பெயர், மொழிப்பெயர்ப்பு செய்யவிருக்கிற மொழியுடனும், மண்ணுடனும் மக்களுடனும் இணங்கிப்போக சாத்தியமில்லையெனில் பொருத்தமான வேறு பெயரை தேர்வு செய்யவேண்டும். நாயகர் அதை மிகச்சிறப்பாகவே செய்திருக்கிறார்.  பெயரை படிக்கிறபோதே அக்கதையையும் படித்தாக வேண்டுமென்கிற ஆவலை, நூல் நம்மிடத்தில் ஏற்படுத்தித் தருகிறது, நூலுக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் கிடைக்கும் முதல் வெற்றி இது.

பன்முகத் தன்மைகள் கொண்ட கதைகள்:

இத்தொகுப்பிலுள்ள எட்டுகதைகளும்: மனித வாழ்க்கையின் ‘இருப்பு’ மற்றூம் அசைவியக்கத்தைக் குறியீடுகளாக அடையாளப்படுத்துகின்றன:  மொழி, உத்தி, நடை, காலமென்ற கூறுகளால் ஊட்டம் பெற்ற அவற்றுள் தன்னை எழுதுதலும் உண்டு, தன்மையிற் சொல்லப்பட்டதுமுண்டு; உருவகக் கதைகளும் இருக்கின்றன. ஜோடிப்பொருத்தம் என்ற பெயரைக்கேட்டதும், ஆண் பெண் சம்பந்தப்பட்ட சிறுகதையென நினைப்போம், ஆனால் அச்சிறுகதை ஒரு ஜோடி செருப்புகளின் கதை. முழுக்கதையையும் இங்கே சொல்வது அறமாகாது. மற்றொரு உருவகக்கதை, கலகம் செய்யும் இடதுகை.

எனக்கு இத்தொகுப்பிலுள்ள கதைகளில் ‘அந்த பச்சை டைரி’, ‘அவளுடைய கடைசிக் காதலன்’, ‘அடையாளம்’,  ‘நெஞ்சத்தைத் துளைத்தவள்’ ஆகியவை நான் விரும்பி வாசித்த கதைகள், மனித மனதின் பல்வேறு வடிவங்களை, சூழலின் எடுப்பார் கைப்பிள்ளையாக அவை செயல்படும் விந்தையை கதைப்போக்கில் சந்திக்கிறோம்.

“வெங்கட சுப்புராய நாயகரின்’ மொழி எளிமையானது. அதோடு இயல்பானது. சாதாரண வாசகரும் அவரை வாசிக்கக்கூடும் என்பது இந்தப் புத்தகத்தின் பலம். புலமையை விரிப்பதல்ல இலக்கிய தளம். மனங்களை இணைப்பதே மொழியாக்கத்தின் முக்கிய பணி. சுப்புராய நாயக்கர் அதைச் செய்திருக்கிறார்.” (முன்னுரை -பிரபஞ்சன்)

மேற்கண்டவரிகளை இந்நூலுக்கு அளித்துள்ள முன்னுரையில் இறுதியாக பிரபஞ்சன் எழுதியிருக்கிறார். இந்நூலின் மொழியாக்கப் பெருமையை விவரிக்க இவ்வரிகளே போதுமானவை. நண்பர் பஞ்சாங்கமும் ‘தீராநதி’ இதழில் இதற்கு மதிப்புரை எழுதி இருப்பதாக அறிகிறேன். மொழிபெயர்ப்பிற்கென இலக்கண வரைவுகள் இருக்கின்றனவா? எதை மொழி பெயர்க்கலாம், எப்படி மொழி பெயர்க்கலாம்?  என்ற பெயரில் அவரவர்க்கு கருத்துகள் இருக்கின்றன. இப்போதைக்கு எனக்குத் தெரிந்த எளிமையான வழி, புதிதாக மொழி பெயர்ப்பு துறைக்கு வருபவர்கள் நாயக்கரின், ‘கலகம் செய்யும் இடது கை நூலை’ கட்டாயம் வாசிக்க வேண்டும். இவற்றிலுள்ள சில கதைகள், தமிழில் புதிய முயற்சிகளில் இறங்க நினைக்கும் படைப்பாளிகளுக்கும் உதவும்.

………………………………………………….

கலகம் செய்யும் இடதுகை

பிரெஞ்சு மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
ஆசிரியர் வெங்கட சுப்புராய நாயகர்

வெளியீடு:
நற்றிணை பதிப்பகம்
பழைய எண்:123A, புதிய எண்:243 A
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை-600005
இந்தியா
———————————————————-

மொழிவது சுகம்: ஜூன் 1-2013

1. அண்மையில் சந்தித்த நண்பர்களும் எழுத்தாளர்களும்:

முனைவர் இளங்கோவன்: blog mu.e

புதுச்சேரிக்கு செல்கிறபோதெல்லாம் அண்மைக்காலங்களில் நானும் நண்பர் நாயகரும் அதிகாலையில் நடப்பதற்குச் செல்வது வழக்கம். சரியாகக் காலை 5.30க்கெல்லாம் வீட்டிற்கு வந்திடுவார். நடந்து முடித்ததும் சிற்சில சமயங்களில் நண்பர்களை சந்திக்க காலைநேரத்திலேயே நாயக்கர் ஏற்பாடு செய்திடுவார். அப்படித்தான் இம்முறை நண்பர் இளங்கோவனைச் சந்திக்க நேர்ந்தது. முதன் முதலாக மு.இளங்கோவனைச் சந்தித்தது நண்பர் இலக்கியம் சீனு.தமிழ்மணி நடத்திவரும் புத்தக விற்பனை அகத்தில். அங்கே சிறியதொரு கலந்துரையாடலை சீனு. தமிழ்மணி ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் ஓரிரு நிமிடங்கள் உரையாடியிருப்போம். மரியாதை நிமித்தமாக நடந்த அவ்வுரையாடல் அறிமுகம், நலன் விசாரிப்பு என்று சுருக்கமாக முடிந்தது.

பாரதிதாசன் கல்லூரியில் பேராசியராகப் பணியாற்றும் இளங்கோவன் முனைவர் பட்டம் பெற்றவர். பொதுவாக இம்முனைவர்களின் ரிஷிமூலங்களை அறித்திருப்பதால், இந்த அலங்காரங்காரங்களை கண்டு அதிகம்  மிரள்வதில்லை. விதிவிலக்காக 25 விழுக்காடு முனைவர் பட்டங்கள் சரியானவர்களை சென்றடைந்து பெற்ற இழுக்கை நேர் செய்து விடுகின்றன. அதுபோன்ற முனைவர்களையும் நிறைய சந்தித்திருக்கிறேன். நண்பர் நாயக்கர், மு.இளங்கோவன் ஆகியோர் இந்த 25 விழுக்காட்டினர் வரிசை.

பொதுவாகப் பேராசிரியர்கள், தங்கள் கல்விகாலத்தில் வாசித்திருப்பார்கள், அன்றி பாடம் எடுக்கவேண்டுமே என்ற தலையெழுத்திற்காக புத்தகத்தைப் புரட்டும் பேராசிரியர்களும் இருக்கிறார்கள்; இவர்களால் மொழியோ, கல்வியோ மேம்பாட்டினை அடையாதென்று தெரியும், வாங்கும் சம்பளத்திற்கு வஞ்சமின்றி வகுப்பில் பாடம் நடத்தி மாணவர்களை ஏய்க்க முடியாதென்றோ என்னவோ மரத்தடியிலும் கல்லூரி சிற்றுண்டி சாலைகளிலும் தங்கள் வக்கிரங்களைக்கொட்டித் தீர்த்து களைத்து போவார்கள் அப்படியொரு ஆங்கில பேராசிரியர் ஒருவரை அண்மையிற் பாரதிதாசன் கல்லூரியில் கண்டேன். நண்பர்களும் நானும் தலையிலடித்துக்கொண்டோம்.

முனவர் மு. இளங்கோவன் இளைஞர், “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும்’ அவர் உடன்பிறந்தவை என நினைக்கிறேன். வயதிற்கும் பெற்றுள்ள கீர்த்திக்கும் நிறைய வேறுபாடுகள். செம்மொழி இளம் அறிஞர் விருதை இந்தியக் அரசு அளித்துள்ளது, குடிரசு தலைவரிடமிருந்து அண்மையில் இவ்விருதைப் பெற்றுள்ளார். இவரது ‘இணையம் கற்போம்’ நூல்  மொழியன்றி கணினி தொழில் நுட்பத்திலும் நண்பருக்குள்ள நுண்மான் நுழைபுலத்தைத் தெரிவிக்கின்றன. இதுவன்றி ‘அயலகத் தமிழர்கள்’ என்கிற நூல், பிறநாட்டில் வாழ்ந்து விளம்பரமின்றி தமிழ்த் தொண்டாற்றும் பெருமகன்களின் சிறப்பை பேசுகிற ஒரு நூல். நாட்டுபுற கலையிலும் தேர்ந்த ஞானம், அவ்வியல்சார்ந்து நூலொன்றையும் படைத்திருக்கிறார். உலகில் எங்கெல்லாம் தமிழ் மேடையேற்றப்படுகிறதோ அங்கே நண்பரும் மேடை ஏற்றப்படுக்கிறார். அவரால் தமிழுக்கும் தமிழால் அவருக்கும் பெருமை. நண்பர் மு. இளங்கோவன் பேசும் தமிழ் கேட்கவே அவர் நடைவாசலில் காத்திருக்கலாம்.

http://muelangovan.blogspot.fr/
———————————

2. வாசித்து கொண்டிருக்கிற நூல்: பஞ்சாங்கம் கட்டுரைகள் 11

மாதத்தில் ஒருநூலையேனும் வாசித்து முடிக்கவேண்டும் என்ற சபதத்தில் அண்மையில் ஓட்டை விழுந்திருக்கிறது, கூடிய சீக்கிரம் அதை அடைத்தாக வேண்டும். நண்பர் பஞ்சாங்கத்தின் இலக்கிய திறனாய்வு கட்டுரைகளின் இரண்டாம் பாகத்தை அண்மையில் வாங்கினேன் வாசித்துக்கொண்டிருக்கிறேன். பதிப்புரை ஆசிரியர் இந்நூலில் 60 கட்டுரைகள் இருப்பதாகக் கூறுகிறார்.  முதற்கட்டமாக இக்கால இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். அடுத்த இரண்டுகிழமையில் இதை பற்றி எழுதுகிறேன்.

———–

3. பிரான்சில் என்ன நடக்கிறது: Salle de Shoot

அரசியல்வாதிகளுக்கு ஆளும் திறன் இருக்கிறதோ இல்லையோ, மக்களை திசைதிருப்புவதில் அசகாய சூரர்கள். பிரான்சு நாட்டு ஆளும் கட்சியும் விதிவிலக்கல்ல. பிரெஞ்சு வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத அளவு வேலையில்லா திண்டாட்டம், பொருளாதாரத்தில் தேக்கம். தொலைத்தொடர்பு, மின்சக்தி , மின்சார சாதனங்கள், மின்னணுப்பொருட்கள் ஆகிவற்றின் சரிவென்றாலும் அத்தியாவசியப்பண்டங்களின் விலை உயர்வு மிக மோசமாக இருக்கிறது. நாட்டில் அத்தியாவசிய உணவான பகத் என்கிற நீண்ட ரொட்டி 2002க்கு முன்னால் அதாவது பிரெஞ்சு நாணயமான பிராங் உபயோகத்தில் இருக்கையில் 3 பிராங்கிலிருந்து 4 பிராங்வரை விற்றது, சராசரியாக 0,50 செண்ட்ஸ், இன்று 1யூரோ. இந்நிலையில் கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மணையில் வை என்பதுபோல ஆளும் இடது சாரிகள் ஓரின திருமணத்திற்கு சட்டவரைவு கொடுக்க, எதிர்ப்பாளர்கள் இப்பிரச்சினையை விடப்போவதில்லையென வீதியில் இறங்கியிருக்கிறார்கள். அதன் ஆதரவாளர்களில் பலருக்குங்கூட நாட்டில் வேறு முக்கியமான பிரச்சினைகளிருக்க அரசாங்கம் இதனை ஏன் கையில் எடுக்கவேண்டுமென கேட்கிறார்கள். இந்நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல Salle de Shoot திறக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். பாரீஸ் மாநகராட்சி, கார் துய் நோர் என்ற பகுதியில் ( தமிழர்கடைகள் நிறைந்துள்ள பகுதி) முதற்கட்டமாக Salle de Shoot ஐ திறக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இது எதற்காக? போதை மருந்து உபயோகிப்பாளர் இடம்தேடி  திருட்டுத் தனமாக அலையவேண்டியதில்லை. ஹாய்யாக வந்து புகைத்து ‘ஆனந்தப்படலாம். நாட்டின் தற்போதைய நிலமைக்கு ஒரு முழம் கயிறு கொடுத்தால் தேவலாம் என அரசாங்கத்தைப் பலரும் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

—————————————-