Monthly Archives: பிப்ரவரி 2012

மொழிவது சுகம்- பிப்ரவரி 2012

தனிமை:

அண்மையில் பிரான்சு நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வின்முடிவு ஏழு பிரெஞ்சுக்காரர்களுக்கு ஒருவர் தனிமையில் வாழ்வதாகத் தெரிவிக்கிறது. மேற்கத்திய நாடுகளில் இத்தனிமை வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் இன்னார்தான் எனக் குறிப்பிட்டுச் சொல்லமுடியாத நிலை. இந்நோய்க்கு இதுதான் உகந்த காலம், இவர்கள்தான் பொருத்தமானவர்கள், இப்பிரிவினரைக் இலக்குவைத்தே தாக்குகின்றது எனகணிக்கமுடியாத சூழலில் சமூக வியல் அறிஞர்களை குழப்பத்தில் இத்தனிமை நோய் வைத்திருக்கிறதென்று சொல்லவேண்டும். காரணம் கீழைநாடுகள்போலன்றி மாணவர்கள், மணவாழ்க்கையை விரும்பாதவர்கள், வாழ்க்கைத்துணையை இழந்தவர்கள் என பலரும் இந்நோயின் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் உள்ளனர்.

இப்போதும் எங்கள் கிராமத்தில் கூட்டுக்குடும்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நல்லது கெட்டது நடக்கின்றபோது பார்க்கவேண்டும் ஒருவர் வண்டியை பூட்டிக்கொண்டிருப்பார், இன்னொருவர் வெள்ளைவேட்டி சட்டை சகிதம் பக்கத்து டவுனுக்கு புறப்பட்டுப்போவார், கிழவி அதிகாரம் பண்ணிக்கொண்டிருக்கும், மருமகள் வாயிலிருந்து சலித்துக்கொண்டு பதில் வரும். அடுத்தமாதத்தில் விசேடமிருக்க அப்போதே கெட்டிமேளமும் நாதஸ்வரமும் அந்த வீட்டில் ஒலிக்க ஆரம்பிக்கும், வீட்டிற்கு போனால் யாரு மணியக்காரர் வீட்டு சின்னத்தம்பியா? உட்காருங்க, அடியே இரண்டு முறுக்கும் ஒரு லட்டும் வச்சு பிள்ளைகிட்டே கொடு என்று அன்புகலந்த உபசரிப்பு தவறாமல் வரவேற்கும்.  விவசாயக்குடும்பங்களைத் தவிர்த்து வியாபாரக் குடும்பங்களும் (இதில் அரசியலும் அடக்கம்) கூட்டுக்குடும்பங்களாக வாழும் பேற்றினை பெற்றிருக்கிறார்கள். இவ்விரண்டு பிரிவினரைத் தவிர்த்து நமது இந்தியச் சமூகத்தை அனுகினால் குறிப்பாக நடுத்தரவர்க்கத்தினருக்கு விரும்பியோ விரும்பாமலோ உயிர்வாழ்க்கையின் ஒரு பகுதி தனிமைக்கு என்றாகிவிடுகிறது. மேற்கத்திய நாடுகளைப்போன்றே இந்திய நகரங்களிலும் பிள்ளைகளை தொலைதூர நகரங்களுக்கும் நாடுகளுக்கும் அனுப்பிவிட்டு தனிமையில் வாழும் பெற்றோர்களை பார்க்கிறோம். ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் இன்று புலம்பெயர்ந்துவாழ்கிறார்கள், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் சொந்தமண்ணில் தனிமைதான் துணை: நினைவுகளைத் தின்று , ஏக்கங்களைக் குடித்து அவர்கள் பசியாறவேண்டியிருக்கிறது. பிறர்பார்வாவையில் அவன் அல்லது அவள் தனிமையில் வாழ்வதில்லை, தனிமையில் வாடுகிறான் அல்லது வாடுகிறாள்

மனிதன் தனித்திருக்கப் படைக்கப்பட்டவல்ல தன் இனத்தைத் தேடி, (இங்கே -அவனை அடையாளப்படுத்தக்கூடிய எதுவும்) உரையாடவும், உறவாடவும் படைக்கபட்டவன். இயல்பிலே மனிதவாழ்க்கை பிறர் சார்ந்தது. ஒற்றைக்குரியதல்ல. அவன் இருப்பு பிறால் தீர்மானிக்கப்படுவது. தந்தை, தாய், அக்காள், தங்கை, முதலாளி, தொழிலாளியெனத் தனிமனிதனை அடையாளப்படுத்தும் எந்தச் சொல்லையும் எடுத்துக்கொள்ளுங்கள்: இன்னாரின் தந்தை, அவளுக்குத் தாய், அவனுக்குச் சகோதரன், அவர்களுக்கு முதலாளி என்ற உறவுகளால் உருவானவை. இந்த மற்றமைகளிடத்தில் வெறுமைகளையிட்டு நிரப்பினால் தனிமை. இன்றையச்சூழலில் தனிமையைத் தவிர்க்கமுடியுமா, விலக்குவதற்கான வாய்ப்புகள் எவ்வளவு? இந்த நூற்றாண்டின் கொடிய கொள்ளை நோயென்று சொன்னாலும் மிகையில்லை. இருந்தாலும் அதற்காக நாம் மனம் சோர்ந்துவிடமுடியாது. நாம்மை நாமே புரிந்து கொள்வதற்கு தனிமையைக்காட்டிலும் வேறு சந்தர்ப்பம் வாய்க்குமா சொல்லுங்கள் என்கிறவர்களும் இல்லாமலில்லை. அப்படியான சந்தர்ப்பம் அறுபதில் வாய்ப்பதால் என்ன இலாபமென்று அவர்கள் கொஞ்சம் விளக்கினால், தேவலாம். .

 ஜேன் ஏர்

ஜேன் ஏர் (Jane Eyre) என்ற நாவலை நம்மில் பலர் வாசித்திருக்ககூடும். நம்மில் பலர் என்ன இருந்தாலும் ஷேக்ஸ்பியர் போல் ஆகுமா என்பார்கள். எனக்கு ஜேன் ஏர் நாவலையும் அதன் ஆசிரியர் சார்லத் ப்ரோண்ட்ட (Charlotte Bronte) என்கிற பெண் எழுத்தாளரையும் கொண்டாடவேண்டும். நமது தமிழ் பேராசிரியர்கள் கம்பனைப்போல் ஆகுமா, சங்க இலக்கியங்களைப்போல ஆகுமா என குரல்கொடுப்பதுபோலவே ஆங்கிலபேராசிரியர்கள் ஷேக்ஸ்பியருக்கு ஈடாக ஒருவர் பிறக்கவில்லை என்கிறார்கள். எனக்கு முதலில் இலக்கியம் என்பதே ஒப்பிடுசெய்வதல்ல. நளவெண்பாவிற்கு ஒரு புகழேந்தியெனில் வானம் வசப்படும் நாவலுக்கு ஒரு பிரபஞ்சன். இருவரும் அவரவர் காலத்தில் சாதித்தவர்களே. கம்பனே இன்றிருந்தாலுங்கூட அவரது படைபாற்றல் ஒர் உரைநடை இலக்கியத்தை தருவதற்கே உதவியிருக்கும். கணினியின் உதவியால் நாம் ஆயிரம் பக்கங்களில் படைப்புகளை கொண்டுவருகிறபொழுது, எழுத்தாணிகொண்டு பழகியவரென்பதால் பத்தாயிரம் பக்களில் நாவல் எழுதியிருப்பார் அவ்வளவுதான்.  என்ன இருந்தாலும் இராமயணம்போல வருமா என்றெல்லாம்  அவரை விமர்சிக்க முடியாது. அந்தக் கம்பன் காலம் வேறு. இந்தக் கம்பன் காலம் வேறு. மீண்டும் ஜேன் ஏர் நாவலுக்கு வருகிறேன். சொந்த வாழ்க்கை முழுவதையும் படைப்பில் பேசிய முதல் நாவல் ஆசிரியர் அநேகமாக இவராகத்தான் இருக்கக்கூடும். 1847ம் ஆண்டு பதிப்பிக்கபட்ட இந்நாவல் பல பதிப்புகளை கண்டது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் ஆசியரின் முதல் நாவல்(The Professor) பல பதிப்பாளர்களால் திருப்பி அனுப்பப்பட்டது. நவலுக்குகிடைத்த வரவேற்பு திரைப்படத் துறையினரின் கவனத்தைப்பெற்றது 1915ம் ஆண்டிலிருந்து நாவல் பலரின் திரைக்கதைகளில் வெள்ளித் திரையை ஏற்கனவே கண்டிருக்கிறது. இந்நிலையில் பத்தாவது முறையாக நாவல் திரைப்படமாக அண்மையில் வெளிவந்துள்ளது. படத்தின் இயக்குனர் காரி ·புக்குனாகா (Cary Fukunaga).. தொலைக்காட்சியில் ஜோன்போன்ஸ்டெய்ன்(Joan Fontaine) ஜேர் ஏர் ஆக நடித்த பழைய திரப்படத்தைப் பார்த்திருக்கிறேன். புதுப்படம் எப்படி இருக்கிரதென்று பார்க்கவேண்டும். நாவலை படிக்கப் பொறுமையில்லாதவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம். இளம்வயதில் தாயைப்பறிகொடுத்து பின்னர் தந்தையையும் இழந்து சித்தியின் ஆதரவில் வளரும் பெண்ணுக்கு ஏற்படும் சோதனைகளென்ற உலகமறிந்த கதை எப்படி அலுக்காமல் இத்தனை வருடங்களுக்குப்பிறகும் சினிமாவாக மீண்டும் மீண்டும் அவதாரமெடுத்து வெற்றிபெறுகிறதென்பதை அவசியம் இலக்கியத்தை முழம்போடுகிறவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

அழகான ராட்சசன்

பிராசுவாஸ் சகாங் (Françoise sagan) என்ற பிரெஞ்சு பெண் நாவலாசிரியைக்கு அழகான ராட்சசி என்ற பட்டப்பெயருண்டு. அவரது ‘வணக்கம் துயரமே’ நாவலைப்படித்துவிட்டு மொரியாக் என்கிற இலக்கிய விமர்சகர் அவருக்கு சூட்டிய பெயர். பெண்ணுக்கு சரி குழந்தைக்கு வைப்பார்களா? அதுவும் அக்குழந்தையின் பெற்றோர்கள்! பிரான்சு நாட்டின் வடபகுதி மாகாணமொன்றில் நடந்த அதிசயமிது. உள்ளூர் நகராட்சி அலுவலகத்துக்குச்சென்ற பெற்றோர்கள்  பிறப்பு இறப்பு அலுவலகத்தில் தங்கள் குழந்தையின் பிறப்பை பதிவு செய்யும்போது, ஊழியர் குழந்தையின் பெயரைக்கேட்க அவர்கள் ‘ராட்சசன் (Démon) எனக்கூறியிருக்கிறார்கள். ஊழியர் பெற்றோரிடம் இப்பெயர் நன்றாக இல்லையே, நாளை குழந்தையைப் பாதிக்காதா என்றிருக்கிறார். பெற்றோர்கள் உறுதியாக இருக்கவே வேறுவழியின்றி குழந்தையின் பெயரை ‘ராட்சசன்’ என்று பதிவு செய்துவிட்டார். ஆனாலும் அரசு ஆட்சேபனை தெரிவித்தது. தனது கடிதத்தில் “நாளை குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும்” எனவே வேறு பெயரை தேர்வுசெய்யவேண்டுமென வற்புறுத்தியது. ஆனால் பெற்றோர்கள் விடுவதாக இல்லை. தற்போதைய சூழலில் பெற்றோர்கள் என்ற தகுதியில், குழந்தையைத் தவிர வேரெவரும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாதென்ற நிலையில் தங்களுக்கு எந்தப்பெயரையும் குழந்தைக்கிட உரிமையுண்டு என்று வழக்குபோட்டு குடும்ப நீதிமன்றத்தில் தங்களுக்கு ச் சாதமாகத் தீர்ப்பையும் பெற்றுள்ளனர்;கீழ் நீதிமன்றத்தில் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் மேல் முறையீடு செய்யப்போவதில்லையாம். ஆகப்பையன் வளர்ந்து ஆட்சேபம் தெரிவிக்கும்வரை ‘ராட்சசன்’. எனக்குள்ள சந்தேகம் ஒருவேளை இது குழந்தையின் தாய் செய்த தந்திரமாக இருக்கலாம். மகனைக் கொஞ்சும் சாக்கில் கணவனை திட்டுவதற்கு அவர் தீட்டிய தந்திரமோ என்னவோ?  இதுபோன்ற விஷயங்களில் பெண்கள்கெட்டிக்காரர்கள்.  ராட்சசன் என்ற பெயருக்கு ஆட்சேபம் தெரிவித்த பிரெஞ்சு அரசாங்கம்தான் இந்தோசீனா யுத்தத்தின்போதும் இரண்டாம் உலகப்போரின் போதும் பிரெஞ்சு ராணுவத்தில் சேரவந்த தமிழர்களின் பெயர்கள் நீளமாக இருக்க திங்கள், செவ்வாய், புதன் என்று வார நாட்கள் பெயர்வைத்தது.  தரை, வானம், திராட்சை, கறுப்பு வெள்ளை, பச்சை, நாய், கழுதை என்றெல்லாம் புதுச்சேரி தமிழர்களுக்குப் பெயர் விநோதங்களுண்டு. யாரேனும் புதுச்சேரிதமிழரை பெயரைக்கேட்க அவர் ‘இல்லை’ (Rien) எனலாம். உண்மையில் அது அவர் பெயர், கனவான் பிரெஞ்சுக்காரன் சூட்டியது.

இலக்கியமென்பது….

இலக்கியமென்பது சான்றோர் சொல் பின்னர் காலப்போக்கில் ஆன்றோர் நூல் அதாவது அறிவுடையோர் கூற்று என்றாயிற்று? இலக்கியமென்றாலே ஏதோ ஓர் அறத்தை வற்புறுத்துவது என்றகாலத்தில் அது சான்றோர்களால் சொல்லப்பட்டது. அதன்பின்னர் வால்மீகியில் ஆரம்பித்து ழான் ழெனேவரை இலக்கியம் பேச ஆன்றோர் –  நூலாயிற்று. கோட்பாடு மரபு அமரத்துவமான விழுமியங்களையும், உலகளாவிய பார்வையையும் வைத்து படைப்பொன்றின் இலக்கிய தராதரத்தை தீர்மானிக்கிறது. வரலாறு மரபு  இலக்கியமென்பது காலம், எல்லைகளென்ற தளைகளிலிருந்து விடுபட்டு நிலைத்திருப்பவை என்கின்றது மேற்கத்திய உலகில் synchrony, diachrony என்ற இரு பார்வைகள் உள்ளன.  இலக்கியம் எழுதப்பட்ட நேற்றைய காலத்திற்கு நம்மையும் அழைத்துச்சென்று ஓர் இணக்கத்தை தன்னுடன் ஏற்படுத்திக்கொள்வது அல்லது கடந்தகால படைப்புகளை நமது சமகாலத்தைவையாக நடத்துவதென்பது முதலாவது வகை. எவ்வகை வாசிப்புக்காக அல்லது எவ்வகை வாசகர்களை மனதிற்கொண்டு எழுதப்படுகின்றதென்பதைவைத்து தீர்மானிக்கபடுவது இரண்டாம் வகை.

ஆனால் எல்லாகாலத்திலுமே இலக்கியமென்பது வெகுசனப்புரிதலுக்கு அப்பாற்பட்டதாகவும், புதிர்களும் சூட்சமங்கள் கொண்டதாகவும் இருந்து வந்திருக்கிறது. சைகைகளை மட்டும் நம்பி வாழ்ந்த காலத்தில் முக்கல் முனகல்கூட இலக்கியம் தான், ஓசைகளை மொழியாக வடிவமைத்தபோது ஓசைகளை மட்டுமே கேட்கப் பழகிய உலகில் ஒன்றிரண்டு சொற்கள் இலக்கியங்களாக இருந்திருக்கலாம். பின்னர் சொற்களுக்கும், அச்சொற்கள் இடம்பெற்ற வாக்கியங்களுக்கும் நகாசுவேலைகள் நடைபெற்றன. ஒன்றிரண்டு வார்த்தைகளில் எதிரே இருப்பவர்களுடன்மட்டும் உரையாடியபோதும், பிறர் அனுபவித்திராத அல்லது பிறர் அறிந்திருந்தும் உரிய சொற்களால் அடையாளப்படுத்த முடியாத தகவல்கள் என்னிடம் உள்ளன என ஆரம்பித்தபோது நீண்ட உரைகளும் (Discours), அந்த உரைகள் நிரந்தரமாக அறியப்படவேண்டியவையென்ற நிலைவந்தபோது எழுத்துகளின் தயவால் உரைநடை இலக்கியங்களும் பிறந்தன. ஆக இலக்கியம் என்பதற்கு ஒரு நிரந்தரமான வெளித்தோற்றமும் அதன் உட்கட்டமைப்பில் தொடர்ந்து மாறுதல்களும் உள்ளாகிவருகிறது. இலக்கியம் தொடக்கமுதலே நிரந்தரமாற்றங்களை பெற்றுவருகிறது. நேற்றிருந்த இலக்கியவாதிகளின் இடத்தில் இன்று வேறு சிலரைப்பார்க்கிறோம். அந்த மாற்றம் படைப்புகளிலும் வெளிப்படையாக தெரிகிறது. எழுத்துகளில் கடந்தபத்தாண்டுகளாக நடந்துள்ள மாற்றங்களுக்கு கீழ்க்கண்ட நூல்கள் உதாரணம்

புதிய புத்தகங்கள் இங்கே செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் வெளிவருகின்றன. பிரசுர வாய்ப்பிற்கும் உழைத்து; இலக்கிய விமர்சகர்களின் நன்மதிப்பை பெற்றாகவேண்டிய நெருக்கடிக்கும் புதியவர்கள் உள்ளாவதால் இவ்விளைஞர்கள் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது. தனித்தன்மையை நிறுவவேண்டியிருக்கிறது. இன்றைய பிரசினைகளை மையப்படுத்திய எழுத்துகளாகவே அவை இருக்குமென்ற எதிர்பார்ப்பும் வாசகர்களிடமிருக்கிறது. இணையதளம், சமூக உறவுகளில் வலைத்தலங்களின் பங்கு, பொருளாதார நெருக்கடி, அரபு நாடுகளில் எதேச்சதிகாரங்களுக்கெதிராக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு போன்றவை உலகம் இதுவரை காணாத அளவில் அண்மையில் நடந்துள்ளன. எனவே புதிய இலக்கியங்கள் இக்கருப்பொருளை மையமாகக்கொண்டே எழுதப்பட்டிருக்குமென பரவலாக நம்பப்பட்டது. இதுபோன்றதொரு பொதுவான எதிர்பார்ப்பை நிராகரித்து, தீவிர படைப்பென்பது பொதுநீரோட்டத்தோடு கலப்பதல்ல என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்துவதுபோல இந்நாவல்கள் உள்ளன. குடும்பம், இயற்கை, ஒப்பீட்டளவில் தமது மூதாதைகளிடமிருந்து நினைவுகள், அடையாளங்கள் ஆகியவற்றில் அவர்களுக்குள்ள விலகல் இடைவெளி ஆகியவற்றைபற்றி இப்புதியதலைமுறை படைப்புகள் பேசுகின்றன. சுயகதைகள், தன்முனைப்புடன் கூடிய பயணம் ஆகியவற்றை எழுதுபொருளாகக்கொண்டு கடந்த பத்தாண்டுகளில் நாவல்களின் பெயரைமட்டுமே நவீனப்படுத்திவந்த மூத்த பிரெஞ்சு எழுத்தாளர்களின் படைப்புகள் அவர்களுக்கு அலுப்பைத் தந்திருக்கலாம்.

இவ்வருடத்தில் நான் வாசித்த அளவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு நாவல்களை எனது இரசனைக்கு உன்படுத்தி வரிசைபடுத்தியுள்ளேன். பிரெஞ்சு:
1. La carte et le territoire – Michel Houellebecq -Flammarion
2. Hygiène de l’assassin -Amélie Nothomb – Albin Michel
3. Du Domaine des Murmures – Carole Martinez -Gallimard
4. Le Premier mot – Vassilis Alexakis -Stock
5. Le cimetière de Prague -Umberto Eco – Grasset
6. Pas son genre – Philippe Vilain – Grasset
7. La faute de goût -Caroline lunoir–  Actes Sud
8. Pondichéry – Thierry Ardisson -Albin Michel

ஆங்கிலம்:

1. The Ghost writer -Philip Roth -Vintage Books
2. Tinkers -Paul Harding -Bellevue Literary press
3. The Land of Green Plums -Herta Muller -Henry Holt and Company
4. The Laguna – Barbara Kingsolver-HArper Perennial
5. Death With Interruptions -José Saramago -Mariner Books
———————————————-

நன்றி: அம்ருதா பிப்ரவரி 2012

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -15

Mademoiselle சொல் இனி இல்லை:

ஆங்கிலத்தில் Miss அல்லது My young lady என்ற பொருள்கொண்ட மத்மசல் (Mademoiselle )

என்ற பிரெஞ்சு சொல்  இளம்பெண்களையும், திருமணம் ஆகாத பெண்களையும் குறிப்பிடும் சொல்லாக வழக்கிலிருந்தது. நீங்கள் ஆண்களெனில் Bonjour Monsieur என்றோ, பெண்களெனில் உங்கள் தோற்றம் வயதைப்பொறுத்து Bonjour Mademoiselle என்றோ Bonjour Madame என்றோ பொதுவிடங்களிலும், அலுவலகங்களிலும் (பிரான்சு நாட்டில்) முகமன்கூற கேட்டிருப்பீர்கள்.

பல காரணங்களை முன்னிட்டு  Mademoiselle (Miss- குமரி அல்லது யுவதி) என்ற சொல் பெண்களைப் புண்படுத்துவதாகவும், அதன் தேவை பொருளற்றதெனவும் கொள்ளப்பட்டு ஜனவரி 1- 2012லிருந்து Cesson-Sévigné நகரசபை (Ille-et-Vilaine, Bretagne)  தமது அலுவலக நடவடிக்கைகளிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்தது. இம்மாதம் 21ந்தேதியிலிருந்து பிரான்சுநாட்டின் பிரதமர் பிரான்சுவா ·பிய்யோன்(François Fillon) இச்சொல்லை நாடு முழுவதும் அரசு அலுவலக உபயோகத்திலிருந்து அதிகாரபூர்வமாக  நீக்கியுள்ளதாக தெரிவித்திருக்கிறார். ஆக பிரான்சு நாட்டில் Mademoiselle என்ற சொல் உத்தியோகபூர்வமாக இனியில்லை. பெண்கள் அனைவரும் வயது வேறுபாடின்றி அவர்களுடைய மணவாழ்க்கையைக் கணக்கில் கொள்ளாது இனிமேல் Madame (மதாம்) என்றே அழைக்கப்படுவார்கள். அவ்வாறே இன்னார் மகள், இன்னார் மனைவி என்ற சொற்களும் அரசாங்க ஆவனங்களில் இனி தொடராது.

அண்மையில் பிரெஞ்சு பெண்ணுரிமை அமைப்புகள் எழுப்பிய உரிமைக்குரலுக்கு அரசு அளித்திருக்கும் அனுகூலமான பதிலிது. இரண்டொரு மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்க இருப்பது காரணமாக இருக்கலாம். இங்கே வேறொரு செய்தியையும் குறிப்பிட்டாகவேண்டும். தொடக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு Mademoiselle, Madame என பெண்களுக்கு இருந்ததைப் போலவே ஆண்களுக்கும் Demoiselle என்ற சொல்லுக்கு ஈடான Damoiseau, Monsieur சொற்கள் இடைக்காலத்தில் இருந்திருக்கின்றன. காலப்போக்கில் Damoiseau என்ற சொல்லை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு Monsieur என்ற சொல்லை மட்டும் உபயோகிப்பதென தீர்மானித்திருக்கிறார்கள். ஆக பெண்களுக்கு காலம் கடந்து நீதிவழங்கியிருக்கிறார்கள்.

——————————

 

இசைவானதொரு இந்தியப் பயணம் -2

பிப்ரவரி- 2

சென்னை சூளைமேட்டிலிருந்த இந்தியன் வங்கி விடுதியில் விழித்தபோது காலை 7 மணி. நண்பர் சவியே கிடைத்த நேரத்தைச் சிக்கெனப் பிடித்து பராபரமேயென குறட்டைக்குள் உறங்கினார். உறங்குவதற்கும் புண்ணியம் செய்திருக்கவேண்டும். எனக்கும் படுத்தால் உடனே உறங்கிவிடும் பழக்கமுண்டு. சென்னையில் அன்றைக்கு வாய்க்கவில்லை. ஆக விழித்தும் விழியாமலும் படுத்திருந்தேன். நண்பர் எழுந்து உட்கார்ந்தார். ஏற்கனவே மேசையில் திறந்து வைத்திருந்த மடிக் கணினி முன்பாக அமர்ந்தார். அதை ஒரு வேடிக்கைபோல பார்த்துக்கொண்டிருந்தேன். கணினிக்கு உயிர்ப்பூட்டி இணைப்புக்கு முயன்று அதில் வெற்றியும் பெற்றதை வெளிச்சம் பூசிய அரையிருட்டில் தெரிந்த முகத்தில் காணமுடிந்தது. ஆனால் அடுத்த கணம் ஓ Merde! என்றார். அதனை இங்கே மொழி பெயர்த்து ஆகப்போவதொன்றுமில்லை. என்னதான் புற உலகுக்கென நமது நடை உடை பாவனைகளுக்கு முலாம் பூசினாலும், இப்படி இயல்பு குணங்கள் சொற்களூடாக திடீரென்று பல்லை இளிக்கும். சாயம் வெளுத்துவிடும். மனிதரின் பண்பு அவன் எழுதும் வார்த்தைகளில்லை பேசும் சொற்களில்தானிருக்கிறது. பொதுவிடங்களில் கவனத்துடன் காப்பாற்றப்படும் இயற்கைக்குணம் தனித்திருக்கும்பொழுதும், நெருங்கியவர்களுடன் உரையாடும்பொழுதும் வெளிப்பட்டு நாம் இன்னாரென்று காட்டிக்கொடுத்துவிடும்.

கணினியை மடித்து ஒதுக்கிவிட்டு என்னைப்பார்த்தார். அவருடைய கணினி எதிர்பாராமல் கிடைத்த இணைப்புகாரணமாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. அப்பிரச்சினையைத் தொடவில்லை. புரிந்து கொண்டவிதமாக தலையாட்டினேன். இருவருமாக ஒருவர் பின் ஒருவராக காலைச் சடங்குகளை முடித்துக்கொண்டு விடுதிக் காவலரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு காப்பிவரவழைத்து குடித்தோம். நண்பர் சவியேக்குள்ள பிரச்சினை, கறுப்புக் காப்பி குடிப்பது. இந்தியாவில் பால் கலந்த காப்பி நன்றாக இருக்கிறது. கறுப்புக் காப்பியை தயாரிக்க நமக்குப் போதாதென்பது நண்பரின் அபிப்ராயம். மேலை நாடுகளில் எஸ்ப்ரெஸ்ஸோ காப்பிகளை குடித்துப்பழகியவர்களுக்கு நிலமை சங்கடந்தான். நட்சத்திர ஓட்டல்களில் அப்படியான சங்கடங்கள் இருக்காதென நினைக்கிறேன். வயிற்றில் பசி தலைகாட்டியது. விடுதிக் காவலரை அழைத்து நண்பருக்கு பிரெட் பட்டரென்றும், எனக்குப் பொங்கல் வடையென்றும் தீர்மானித்து வாங்கிவரும்படி அனுப்பினேன். எனது தொலைபேசிக்கு சிம் கார்டும் தேவைபட்டது. அதிலுள்ள சிக்கல்களை கூறிய விடுதிக்காவலர் கடவுச்சீட்டு அல்லது வேறு ஆதாரங்கள் வேண்டுமென்றார். என்னிடத்தில் OCI (Overseas Citizen of India) இருந்தது கொடுத்தேன். எங்கள் இருவருக்கும் நல்ல பசி சீக்கிரம்வந்தால் நல்லதென்று கூறி அனுப்பினேன். அவர் தலையாட்டியவிதம், அற்புதவிளக்கு பூதம்போலிருக்க அறைக்கதவை தாழ்ப்பாள்கூட போடாமல் விட்டுவைத்திருந்தேன். முதல் நாள் இரவு உணவென்ற பேரில் லூப்தான்ஸா எங்களைப் பழிவாங்கியிருந்தது. விமானம் இறங்க ஒரு மணிநேரமிருக்க  அவசர அவசரமாக ஒரு சாண்ட்விச். பின்னர் கொடுத்த தட்டை திரும்ப வாங்கும்போது கெச்சப்பும், டிஸ்யூவும் விநியோகித்தார்கள். நண்பருக்கு அதுபோல நான்கு சாண்ட்விச் வேண்டும்.

காலை மணி எட்டு. விடுதிக் காவலர் வரவில்லை. 8.30 ஆயிற்று வரவில்லை. சென்னையில் வந்திறங்கி ஆறு மணி நேரம் ஆகியிருந்தது. இந்திரனுக்கும், பதிப்பாள நண்பர் நடராஜனுக்கும் வருகையைத் தெரிவிக்கவேண்டும். குறிப்பாக நண்பர் இந்திரனுடன் பிப்ரவரி 5ந்தேதி புதுவையில் நடபெறவிருந்த கவிதை வாசிப்புக்காக தயாரிக்கவிருக்கும் ஒரு சிறிய கையடக்கமான புத்தகம் தொடர்பாக பேசவேண்டியிருந்தது. மறுமுனையில் கிடைத்தார். காலையில் என்ன திட்டமென்றார். எங்கள் அட்டவணையில் உங்களைச் சந்திப்பதென்று இருக்கிறது,  தொந்தரவுகளேதுமில்லையெனில் சந்திக்கலாமே என்றேன். அவரும் உங்களௌக்குக்காகத்தான் நேரத்தை ஒதுக்கியிருக்கிறேன் பேசலாமென்றார். அவர் வீட்டிற்கு ஏற்கனவே சென்றிருந்தாலும் முகவரி தேவைபட்டது. ஆட்டோகாரருக்குச் சொல்லவேண்டிய அடையாளத்தையும் தெளிவுபடுத்திக்கொண்டு காலை பத்து மணிக்கு வந்துவிடுவோமென தெரிவித்தேன்.

காலை 9மணி. உணவுடன் வந்துவிடுவதாகச் சொல்லிச்சென்ற காவலர் வரவில்லை:

சார்லி சாப்ளின் நடித்த பழைய கறுப்பு வெள்ளை படமொன்றுண்டு. அதில் சாப்ளின் பனிமலையொன்றில் கடும் பனிப்பொழிவால் கிடைத்த சிறுகுடிலொன்றில் தங்க நேரும். அக்குடிலில் வேறொரு மனிதரும் இவரைப்போலவே பனியிலிருந்து தப்பிக்க ஒதுங்கியிருப்பார். இருவரும் கொடூரப்பசிக்கு ஆளாகி எதையும் தின்னலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள். எதிராளியின் பார்வையில் சாப்ளின் கோழியாகத் தோற்றம் தருவார். நண்பர் சவியே என்னைப் பார்த்தபோது சாப்ளின்போலவே எனக்கும் இறக்கை முளைத்திருக்க தப்பிக்க வேண்டியிருந்தது.

விடுதியின் கீழே இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் அலுவலகம். ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரிகள் பிரிந்து கிடந்தன. கதவைத் தட்டினேன், எட்டிப் பார்த்த நபரிடம்:

– விடுதிக்காவலரின் பெயரைத்சொல்லி தேடுவதாகக் குறிப்பிட்டேன்.

– வெளியே போயிருக்கிறார் வந்துவிடுவார்- என்றார்.

அந்த வந்துவிடுவார் என்கிற சொல் தந்த உத்தரவாதத்தில் மயங்கி தெருவைப்பார்த்தேன். இந்தியப் பெரு நகரங்கள், தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்புக்குட்படாமல் தமது ரகசிய குணங்களை போற்றிக் காக்கும் இலட்சோப இலட்ச தெருக்களில் அதுவுமொன்று. போடிகோவும் வண்ணப்பூச்சுமாக நிற்கிற கவர்ச்சிகரமான ஒற்றை வீடுகள், சோகையான நிறத்திற்கு வாழ்க்கைப்பட்டு மூக்கைச் சிந்தும் குடியிருப்புத் தொகுதிகள், முதலீட்டாளர்களை எதிர்பார்த்து நிற்கும் ஒண்டிக் குடித்தனங்களை உள்ளடக்கிய வீடுகள், அண்ணாச்சி கடை, நான்கு சக்கர தள்ளுவண்டியில் துணிக்கு இஸ்திரிபோடும் மனிதர், குப்பையை வாரலாமா விடலாமா என யோசித்து யோசித்து பதுகாப்பு எதுவுமின்றி குப்பைகளை சைக்கிள் வண்டியில் நிறுத்திய பிளாஸ்டிக் கூடைகளில் நிரப்பிக்கொண்டு மிகுந்த சிரமத்துடன் இருபக்கமும் தலையை திருப்பியவண்ணம் தமது வாகனத்தை முட்டி இழுத்து செல்லும் நடுத்தரவயது பெண்மணி. அரசு பெண்கள் விடுதியென்று எழுதியிருந்த ஒரு மாடி வீட்டின் தெருக்கதவு விசுக்கென்று திறக்கப்பட வெளிப்பட்ட இளம்பெண் ஒருத்தி தோளில் தொங்கியிருந்த பையை அவ்வப்போது முன்னால் தள்ளி பிடித்தபடி இடது கை கைக்குட்டையால் முகத்தில் அரும்பிய வியர்வையை ஒத்தியபடி நடந்துபோனார். இரண்டு ஆட்டோகாரர்கள் அருகருகே வண்டியை நிறுத்தியபடி உரையாடுகிறார்கள்.  சென்னை மொழியில் திட்டியபடி சிறுவனொருவனை திட்டிக்கொண்டு ஓடினான். சுவரொட்டியில் கண்ணீர் அஞ்சலி.

காலை மணி 10. விடுதிக்காவலர் வருவதாக இல்லை. பொறுமை இழந்து தொலைபேசியில் பிடித்தேன்.

– என்னங்க ஏதாச்சும் கிடைச்சுதா? நாங்க இன்றைக்கு காலமைதான் ஏதாவது சாப்பிடவேண்டுமென்று உங்களிடம் சொன்னது, நாளைகில்லை.

– அஞ்சு நிமிடத்திலே வந்துவிடுவேன் சார்.

ஐந்து நிமிடத்தில் வரவும் செய்தார். ஆனால் கைகளை வீசிக்கொண்டு 2G ஸ்பெக்ட்ரம் வழக்குக்கு முந்தைய ராஜா போல நடந்துவந்தார்.

– என்னங்க சும்மா வறீங்க..

– கோபிச்சுக்காதீங்க சார். ஒரு வேலையா போயிட்டேன். நீங்கள் ஒரு மிஸ்டு கால் கொடுத்திருந்தால் அப்போதே வாங்கி வந்திருப்பேன். பத்து நிமிடம் பொறுக்கமுடியுமா?

மிஸ்டு காலையோ கையையோ கொடுக்கவிருப்பமில்லாததால்

– இல்லைங்க பரவாயில்லை. நாங்கள் போகிற வழியில் பார்த்துக்கொள்கிறோம், என்று கூறிவிட்டு கீழிருந்தபடியே நண்பரை அழைத்தேன். பிரெஞ்சு நண்பர் இறங்கிவந்தார்.

ஒரு ஆட்டோவைப் பிடித்து, நண்பர் இந்திரன் முகவரியைக் கூறினேன். ஆட்டோகாரர் புரிந்துகொண்டார் ஐம்பது ரூபாய் கேட்டார். நண்பரும் நானுமாக ஏறிக்கொண்டோம். வழியில் ஐரோப்பிய மற்றும் இந்திய உணவுகள் சேர்ந்தாற்போல கிடைக்கும் உணவு விடுதி தென்படுகிறதா எனபார்த்தோம். எதுவுமில்லையென்றானது. நண்பர் இந்திரன் வீட்டிற்கு பத்து நாற்பதுக்கெல்லாம் வந்தாயிற்று. எதிர்பார்த்ததுபோலவே காலை உணவு ஆயிற்றா என்றார். இல்லையென்றேன். இங்கேயே சாப்பிடலாமே, தோசை இருக்கிறதென்றார். தோசையுடன் பூரியும் வந்தது. பிரெஞ்சு நண்பர் விருப்பமாக சாப்பிட்டார், நானுந்தான்.

மூவருமாக காலை உணவுக்குப்பிறகு ஏற்கனவே கூறியதுபோல கவிதைக் கையேடு தொடர்பாக நண்பர் இந்திரனுக்குத் தெரிந்த கணினி அலுவலகத்துக்குச் சென்றோம். காலை பதினோரு மணிக்கே வெயிலின் கடுமை தெரிந்தது. சில பிழைகளை திருத்தியதோடு எங்கள் பணி முடிந்தது.  சிறிய கலைபெட்டகமாக வடிவமைக்கப்பட்ட அப்புத்தகத்தின் வெற்றிக்குரியவர் இந்திரனென்று சொல்லலாம்.  இந்திரனுக்குள் ஒரு பிரம்மனும் உடன்வாழ்ந்ததை அன்றுதான் கண்டேன். மனதில் நிறைவுடன் மதிய உணவுக்கு ஒரு மலேசியன் அசைவ விடுதிக்குச் சென்றோம்.  விலை, தரம், அமைதி நன்றாக இருந்தன. மீண்டும் கணினி  கூடத்திற்கு செல்லவேண்டியிருந்தது. இறுதியாக ஒருமுறை படிவத்தைப் பார்த்து மனதுக்கு நிறைவு ஏற்பட்டவுடன் திரும்பினோம். திரும்பியபோது மாலை மணி ஏழு. அன்று நண்பர் எஸ்.ராவுக்கு இயல்விருது பெற்றமைக்காக ரஜனியின் தலமையில் பாராட்டுவிழா இருந்தது. நேரம் இணக்கமாக இல்லாததாலும், சுதா ராமலிங்கம் கிரீன் பார்க் ஓட்டலில் எங்களுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்ததாலும் செல்ல முடியவில்லையென்கிற வருத்தம்.

மாலை வெகுநேரம் இந்திரனுடன் ச¨ளைக்காது இலக்கியம் பேசினோம். நண்பர் சவியே தமது Philomensurable குறித்து இந்திரனுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினார். இடையில் நான் மொழி பெயர்க்கவேண்டியிருந்தது. என்ன இருந்தாலும் இருவருக்கும் தெரிந்த மொழியில் இடைமனிதரின்றி உறவாடுவதிலுள்ள புரிதல் சாத்தியம் மொழிபெயர்ப்பில் கிடைக்காதென்பது நிச்சயம். நேற்றைய இன்றைய இலக்கிய ஆளுமைகள் சிற்பக் கலைஞர்கள் ஓவியர்களென்று பேச்சு நீண்டது. இடைக்கிடை நண்பர் இந்திரன் யாளிப்பதிப்பகத்தின் வெளியீடுகளைப் பகிர்ந்துகொண்டார்.

பிரான்சிலிருந்து புறப்படும்போதே காய்ச்சலுடன் புறப்பட்டிருந்தேன். காய்ச்சல் தோள்வலியையும் சேர்த்திருந்தது. அவருக்குத் தெரிந்த மருத்துவரிடம் நண்பர் இந்திரன் அழைத்துப்போனார். அவர் நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்ப செயல்படுகிற மருத்துவரென்று விளங்கிக்கொண்டேன். அபூர்வமான மனிதர். நண்பர் இந்திரன் அவரைப்பற்றி முன்னதாகக் கூறியிருந்த வார்த்தைகளுக்குப் பழுதின்றி நடந்துகொண்டார்.

இரவு எட்டு மணிக்கு நண்பர் இந்திரனின் சகோதரர் வாகனத்தில் கிரீன்பார்க் ஓட்டலுக்குச்சென்றோம். சுதாராமலிங்கம் அவர் துணைவர் ராமலிங்கம் அடுத்தவாரம் மணமுடிக்கவிருந்த அவர்கள் பிள்ளை, பெங்களூர் சட்டக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் அவர் மகளென்று அனைவரும் வந்திருந்தனர். பெரிதாக வயிற்றுக்கு ஈயப்படுவதற்கு முன்பாக சிறிதாக செவியையும் கவனிக்க நினைத்ததால் அரசியல், இலக்கியம், பெண்ணுரிமை, உளப்பகுப்பாய்வு, கீழைநாடுகளைப்பற்றிய ஐரோப்பிய பார்வையென உரையாடல் நீண்டது.

தொடரும்…

இசைவானதொரு இந்தியப்பயணம் -1

பிப்ரவரி 1.

முதல்நாள் எனது துணைவி, தனது மகள் வயிற்று பேரனுடைய முதல் ஆண்டு பிறந்த நாளைக்கொண்டாட அமெரிக்கா சென்றாள். தனித்து அவ்வளவுதூரம் பயணிக்க தயக்கம் காட்டினாள் நான் நவீன பெண்கள்  அவதாரத்தையெல்லாம் விளக்கி, ஊக்கப்படுத்தினேன். இங்கே பார், உண்மையில் நீ இல்லாமல் இந்தியா செல்ல எனக்குங்கூட பயமென்றேன்.  பொய் சொல்லாதப்பா, உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? என்ற கண்களைச் சமாதானபடுத்த வேண்டியிருந்தது. ஊடியவளை உணராமல் போனால் எழுத்தாளானாக இருந்து என்ன பயன் சொல்லுங்கள்.

அமெரிக்கா புறப்படும் முன்னரேயே எனது பெட்டிபடுக்கைகளையும் பதினைந்து நாளுக்காக துணிமணிகளையும் வேண்டிய பணத்தையும் கொடுத்து, எனது பயணத்தையும் ஒழுங்குபடுத்தியிருந்தாள். என்னை ஊருக்குத் தயார்படுத்திய பட்டியலில் மூன்றாவதாகக் கைசெலவுக்கான பனத்தையும் சேர்த்திருக்கிறேன் கவனித்தீர்களா? ஏதோ வியாபாரம், கடை, எழுத்தென்று அலைந்துகொண்டிருக்கிறேனே தவிர, உண்மையில் நிதிமந்திரி அவள்தான். எழுத்தாளனாக இருக்கிறோமில்லையா? எனது புனைவு பிற இடங்களில் ஜெயிக்கிறதோ இல்லையோ அவளிடத்தில் ஜெயிப்பதற்கு கவனம் எடுத்துக்கொள்கிறேன்.

பிப்ரவரி ஒன்றாம் தேதி. வழக்கம்போல நான்கு மணிக்கு எழுந்தேன். கடந்த சில நாட்களாக Strasbourg நகரில் நல்ல குளிர். கவனமாக உடுத்திக்கொண்டு மனைவி குறித்துவைத்திருந்த கட்டளைகளின் படி வீட்டை இருத்திவிட்டு காரில் இரு பெட்டிகளையும் ஏற்றிக்கொண்டு, அங்கிருந்து எனது பிரெஞ்சு நண்பர் வீட்டிற்குச் சென்று அவரையும் அழைத்துக்கொண்டு, இரயில் நிலையம் அருகிலிருக்கும் எனது கடைக்கருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, மூச்சிரைக்க பெட்டிகளை நண்பரும் நானுமாக இழுத்துக்கொண்டு ஓடி, இரயில் நிலையத்துக்கருகிலுள்ள லூப்தான்ஸாவின் பேருந்து நிறுத்தத்தை அடைந்தபோது அதிகாலை நான்கு மணி பத்து நிமிடம் இருக்கலாம். பேருந்தில் எங்களைப்போலவே பிராங்க்பர்ட் விமானதளத்திற்குச் செல்லவிருந்த சக பயணிகள் வரிசையில் குளிரும் பெட்டியுமாகக்  காத்திருந்தார்கள். பேருந்து ஓட்டுனருக்கு குளிரைப்பற்றிய கவலை இல்லையென நினைக்கிறேன். நான்கு மணி பதினைந்து நிமிடத்திற்கு முன்பாக கதவைத் திறக்கமாட்டேன் என்பதுபோல நிதானமாகத் தினசரியைப் புரட்டிக்கொண்டிருந்தார். ஏதோ தயவு பண்ணவிரும்பியவர்போல ஓரிரு நிமிடங்களுக்கு முன்பாக சொர்க்கவாசலைத் திறந்துவிட்டார். ஸ்ட்ராஸ்பூர்கிலிருந்து 250 கி.மீட்டரிலுள்ள பிராங்பர்ட் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகிறது. பேருந்தில் ஒரு குட்டித் தூக்கம். ஏழேகால், ஏழரைக்கெல்லாம் பிராங்பர்ட்டை அடைந்துவிட்டோம். நுழைவாயிலில் பிரெஞ்சு நண்பருக்கல்ல எனக்குச் சோதனை. அந்நியர்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள், கறுப்பர்கள் (இந்தியர்களும் அதிலடக்கம்) என்றால் கையில் குண்டினை வைத்துக்கொண்டு அலைகிறார்களென்ற பார்வை ஐரோப்பியர்களுக்கு இருக்கிறது. வேண்டா வெறுப்பாக அவனிடம் எனது கடவுசீட்டையும் மற்ற அத்தாட்சிகளையும் காண்பித்துவிட்டு ‘புறப்பாடு’ வரிசைக்கு வந்தோம். கையில் மிண்ணனு பதிவுச்சீட்டு அதை எந்திரத்தில் கொடுத்து பயணத்தைப் பதிவு செய்து அதற்கான அட்டையை எடுக்கவேண்டும். எந்திரத்திற்குக்கூட நான் கறுப்பனென தெரிந்திருக்கவேண்டும் அடம் பிடித்தது. அதைச் சமாதானப்டுத்துவதற்குள் போதுபோதுமென்றாகிவிட்டது. ஒருவழியாகச் சமாளித்து பெட்டிகளை பதிவு செய்துவிட்டு, சுங்க அதிகாரிகளையும் கடந்து பாதுகாப்புசோதனையை முடித்துக்கொண்டு, கை பைக்காக காத்திருந்தோம். நண்பரின் பை வந்தது. எனனுடையதில்லை. ஓர் ஆரியப்பெண் -இடலரின் தூரத்து சொந்தமாக இருக்க வேண்டும். கையை அசைத்தாள். பின்னாலிருந்த நண்பரைப் பார்த்தேன், அவர் வேறு திசையில் கைகாட்டினார். எனது கைப்பையை திறந்துவைத்துக்கொண்டு ஏதோ இரணிய கசிபுவின் வயிற்றைக் கிழித்த நரசிம்ம அவதாரம்போல மற்றொருத்தி. அருகிற் சென்றேன். விஸ்கி போத்தல் கைப்பையிற்கூடாதென்றாள். பத்துவருடங்களுக்கு மேலாக ஒரு விஸ்கி போத்தல் எங்கள் வீட்டில் சீண்டுவாரின்றி இருந்ததென்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களாவென்று தெரியாது. சிகரேட், மது, இத்யாதிகளை தொட்டது கிடையாதென சத்தியமெல்லாம் செய்யமாட்டேன். ஆனாலும் எனக்கு விருப்பமானவை பட்டியலில் அவைகளெல்லாம் இல்லை. எப்போதாவது இந்த எப்போதாவதிற்கு இரண்டு மாத இடைவெளியிளியிலிருந்து ஆறுமாதம்வரை பொருள் கொள்ளலாம். ஆகப் பாட்டிலுக்காக கைப்பையை பதிவு  செய்து விமானத்தில் அனுப்பிவிட்டு பறந்து, ஓடி, நடந்து, நீந்தி எல்லா பரிசோதனைகளையும் மீண்டும் கடந்து விமானத்தின் நுழைவாயிலைக் கடந்தபோது காத்திருந்த  கொத்தவரங்காய் பணிப்பெண் களின் குட்டன் மோர்கனை ஏற்றுக்கொண்டு நொண்டி நடந்து கபினுக்குள் கையிருப்பை துருத்திவிட்டு நாற்காலிக்குள் அடைபட்டபோது காலை பத்து. மிக மோசமான சேவை. சென்னையில் எங்களை வரவேற்க தோழி சுதாராமலிங்கம் வந்திருந்தார். அதிகாலை சென்னையை தரிசித்துக்கொண்டு இந்தியன் வங்கி விருந்தினர் விடுதியில் படுத்தபோது விடிந்துவிட்டிருந்தது.

தொடரும்…