Monthly Archives: ஜூலை 2017

மொழிவது சுகம் 23 ஜூலை 2017

அ. அண்டை வீட்டுக் காரரும், அடுத்த ஊர்க்காரரும்

 

எங்கோ இருந்த ஒருவர் அல்லது அடுத்த தெருவில் வாழ்ந்து வந்த ஒருவர்  அண்டைவீட்டுக்காரராகிறார். அவரோடு முதல் ஆறுமாத த்திற்குப் பிரச்சினை இல்லை. ஆனால் எழாவது மாதத்திலிருந்து  பிரச்சினை ஆரம்பிக்கிறது.

« நம்மைவிட அவர் வைத்திருக்கும் டூ வீலர் விலை கூடியது »

«  தெருவில் குடியிருக்கும் அரசியல்வாதி அவரிடம் நின்று பேசிவிட்டுப் போகிறார் »

«  கீரை விற்கிற பொம்பிளை அவர் பொண்டாட்டிக்கிட்ட பத்துபைசா குறைச்சு கொடுத்துட்டு போவது, நம்ம வீட்டுல இருக்கிறதுக்கு அதமாதிரி பேரம்பேசி வாங்க துப்பில்ல »

இப்படி புகையும் பகை, ஒரு நாள் வீட்டைத் திருத்துகிறேன், என செங்கல்லையும், ஜல்லியையும் அதே அண்டைவீட்டுக்காரர் இறக்குகிறபோது எங்க வீட்டுக்கு எதிர்த்தாற்போல கொட்டீட்டீங்க என ஆரம்பித்து பற்றி எரிய ஆரம்பித்த மனம் கோர்ட் கேசு என போகும் கதைகள் உண்டு.

அண்டை வீட்டுக்கார ர் விபத்தில் அடிபட்டார் என்கிறபோது, பதறி ஓடி  உதவும் மனம், அவர் மகன் மாநிலத்தில் முதலாவதாகத் தேறினான் என்கிறபோது பாராட்டுவதற்குப் படியேற மனைவி ஞாபகமூட்ட வேண்டியிருக்கிறது.   சில நேரங்களில் அண்டை வீட்டுக்காரர் பிள்ளையைப்  பாராட்டவும் செய்வோம்.  பத்திரிகைகாரர்கள் கேமராவுடன் வந்திருப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம்,   விதிவிலக்காக, உண்மையிலேயே அண்டைவீட்டுக்காரனின் வளர்ச்சியை ஏற்கும் மனம் கொண்டவர்களாகவும் சிலர் இருக்கவும் கூடும். அவர்கள் கடலுள் மாய்ந்த இளம்வழுதி பாட்டுடைத் தலைவர்கள்.

இதே அண்டை மனிதர் கள் அடுத்த தெருவில், நமக்கு அறிமுகமற்ற மனிதராக இருக்கிறபோது  அடையும் வளர்ச்சி குறித்து நாம் கவலைப் படுவதில்லை . அமெரிக்கா கொண்டாடும் தமிழன் என முக நூலிலும் எழுதுவோம். ஆனால் அவர் அண்டை வீட்டுக்காரனாக  வந்த பிறகு அடையும் வளர்ச்சி தூக்கத்தைக் கெடுக்கிறது

இப்பிரச்சினை நமக்கு மேலே அல்லது கீழே உள்ளவரிடம் எழுவதில்லை  ஆனால் சக அலுவலர்களிடை, சக ஆசிரியரிடை, சக பேராசிரியரிடை, சக எழுத்தாளரிடை, சக கவிஞர்களிடை, சகமொழிபெயர்ப்பாளரிடை. அதாவது சம நிலையிலுள்ள மனிதர்களிடை எழலாம். பதவிக்கு வரும்வரை மோடிக்கு சோனியா காந்தி மீது எரிச்சல் இருந்திருக்கலாம், பதவிக்கு வந்த பின் மோடியின்  எரிச்சல் ட்ரம்ப்பிடம்  என்றாகிறது. ட்ரம்பின் எரிச்சல் கடந்த காலத்தில் இதே பதவியில் ஒபாமா அடைந்த புகழின் மீதாக இருக்கலாம். திருச்சி கிளையில் எங்கோ ஊழியம் பார்க்கிறபோது பிரச்சினையில்லை, சென்னை கிளையில் பக்கத்து நாற்காலிக்கு  அவர் மாற்றலாகி வருகிறபோது  அவர் வளர்ச்சி உறுத்தும். தவிர சக அலுவலக நண்பர் மேலதிகாரியிடம் திட்டு வாங்குகிறபோது, அந்த ஆள் ஒரு முசுடு என நண்பரைச் சமாதானப்படுத்தும் மனம் , மேலதிகாரியால் அவர் வேலைத்திறன் புகழப்படும்போது நெஞ்சு பொறுப்பதில்லை.

காரணம் ஒருவரின் பலவீனத்தைவெறுப்பதில்லை, அவரின் பலத்தையே  வெறுக்கிறோம். ஒருவரின் தோல்வியை வெறுப்பதில்லை, அவரின் வெற்றியைத்தான் வெறுக்கிறோம் .  ஒருவரின் அறிவின்மையை வெறுப்பதில்லை அவரின் அறிவுடமையை அதனால் வந்து சேரும் கீர்த்தியை வெறுக்கிறோம். நமது நாற்பது வருட சர்வீஸுக்குப் ன்பிறகு கிடைத்த பாராட்டை மேனேஜரிடம்நேற்றுவந்த கிளார்க்  கொண்டுபோய்விடுவாரோ, நமது  பதவி உயர்வுக்கு போட்டியாகி விடுவாரோ  என்பதால் விளையும் அச்சம். நம்மில் பெரும்பான்மையோர் அப்படித்தான். அண்டைவீட்டுக்கார ருட னான இவ்வுறவை சமாதானப்படுத்திக்கொள்ளும் வகையில் மூன்று வகையினராக பிரிக்கலாம் :   1. வளர்ச்சிக்கண்டு வெறுக்கத் தொடங்கி தம் நிலையிலிருந்து மாறாமல் இருக்கும் மனம் 2.  அண்டை வீட்டுக் கார ரின் புகழை ஈடுகட்ட  தம்மை வளர்த்துக்கொள்ளும்  வழிமுறைகளில் கவனம் செலுத்தும் மனம்,  3. மனிதர்  வாழ்க்கையில் இதொரு அங்கமெனத் தொடக்கத்திலேயே தேற்றிக்கொள்ளப் பக்குவப்பட்ட மனம்.

மூன்றாம் வகையினர் மகாத்மாக்கள்.

முகநானூறு

இரண்டு முக நூல் முகவரியை  எப்படியோ தொடங்கிவிட்டேன். இன்று ஒன்று போதுமென நினைக்கிறேன். ஒன்றை மூடலாமென நினைத்து தள்ளிக்கொண்டே போகிறது. கடந்த ஜனவரி மாதம்வரை கிட்ட த் தட்ட 4000 நண்பர்கள் தற்போது அந்த எண்ணிக்கையை இரண்டிலுமாக 300க்குத் தற்போது  கொண்டுவந்திருக்கிறேன்.

 

இந்த எண்ணிக்கைக்குக் காரணம் தேடப்போய் கண்டறிந்ததே இப்பதிவின் முதற் பகுதி பிற காரணங்கள் :

  • அநேக நண்பர்கள் பிறரை விமர்சிக்கிறபோது நாகரீகமாய் விமர்சிப்பதில்லை

 

  • அருமை, சூப்பர் என எழுதும் நண்பர்கள், லைக் போடுகிறவர்கள் இவர்களில் உண்மையில் எத்தனை பேர் பதிவிடுவதை வாசிக்கிறார்கள் என்ற ஐயம்

 

  • பல நண்பர்கள் சிஷ்யர்களையோ, தாஸர்களையோ தேடுகிறார்கள், நான் நண்பர்களைத் தேடுகிறேன்

 

  • ஒரு சிலர் ஒவ்வொரு நாளும் உபதேசங்களைச் சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள்.  எனக்கு உபதேசங்களை கேட்கும் வயதில்லை.

 

  • சில நேரங்களில் முகநூல் வரி விளம்பரங்களைப் படிப்பதுபோல ஆகிவிடுகிறது.

 

  • இறுதியாக, முகநூல் நண்பர்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொண்டு என்ன ஆகப்போகிறது. தேர்தலுக்கா நிற்கப்போகிறேன்.

 

 

  • முடிந்தவரை வாசிக்கிறேன், பிடித்திருந்தால் கருத்தை பதிவும் செய்கிறேன், சில நேரங்களில் காலம் கடந்து வருகிறபோது, நல்ல பதிவுகள் கவனத்திற்கொள்ளாமற்போக சந்தர்ப்பங்களுண்டு. இது இரு தரப்பிலும் நிகழலாம். எனவே குறைத்துக்கொண்டு, ஒத்திசைவான நண்பர்களுடன் மட்டுமே முகநூல் நட்பை  வைத்துக்கொள்வது இரு தரப்பிற்கும் உதவக்கூடும்.

————————————–

 

கடல் கொண்ட மனிதர்கள் : சூறாவளி(குறுநாவல்) [ஆசிரியர் லெ கிளேஸியோ, பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு சு. ஆ வெங்கட சுப்புராய நாயகர்]

1காலச்சுவடு வெளியீட்டில்,  தமிழ் வாசகர்வெளியில் பரவலாக அறியப்பட்ட  பேராசிரியர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரின் மொழிபெயர்ப்பில் வந்துள இரு குறுநாவல்களின் தொகுப்பு சூறாவளி.  மொழிபெயர்ப்பாளர் மட்டுமல்ல நூலின் மூல ஆசிரியர் லெ கிளேஸியோவும் தமிழுக்குப் புதியவரல்ல. பிரெஞ்சுமொழியின் முதன்மை எழுத்தாளர், நோபெல் பரிசினை அண்மைக்காலத்தில் வென்றவர் என்பதால் உலகின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென்ற அடையாளத்தையும் பெற்றிருக்கிறார்.  இச்சூழலில், இலக்கிய உலகின் எதிர்பார்ப்பென்ன ? தம்முடைய வாசகர்கள் யார் ? போன்ற கேள்விகளுக்கும் முன்னுரிமைக் கொடுக்கவேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு. லெ கிளேஸியோ போன்ற எழுத்தாளர்களின் நோக்கம் கதை சொல்வதல்ல, இலக்கியத்தை படைப்பது. எனவேதான் லெ கிளேஸியோவின் இக்குறுநாவல்கள் இரண்டுமே சொல்லப்படும் கதையின் சுவைக்காக அன்றி, இலக்கியசுவை கருதி வாசிக்கப்படவேண்டியவை.  நூலாசிரியர் வார்த்தைகளைக்கொண்டு நடத்திக்காட்டும் அணிவகுப்பு(பசுமை நிறத்தில் பிளாஸ்டிக் திரைசீலையுடன் ஒரு மஞ்சள் நிற வீடு ; ஒரு வேலி ; வெள்ளை நிறத்தில் கதவு ; அங்கே ஒரு நிழற்சாலை. வேலியில் ஒரு ஓட்டை, தெருப்பூனைகள் திரியும் இடமாகத்தான் இருக்கவேண்டும்.  அந்த வழியாகத்தான் நான் நுழைவேன்.(பக்கம் 178) ») நம்மைப் பிரம்மிக்க வைக்கிறது. மனித மனங்களின் சலசலப்புகள் அவ்வளவையும் சொற்களில் வடிப்பதற்கு, அசாத்திய மொழித்திறன் வேண்டும். மனிதர்களைக் கடலின் துணையுடன் இயக்குவதும், குறுநாவல் வடிவங்களில் நூலாசிரிரியருக்குள்ள ஈடுபாடும், ஹெமிங்வேயிடம் இவருக்குள்ள இலக்கிய பந்தத்தை உறுதிப்படுத்துகின்றன.

ksp517லெ கிளேஸியோ பிரான்சுநாட்டைச்  சேர்ந்த குடிமகன் மட்டுமல்ல, மொரீஷியஸ் குடிமகனுங்கூட, இதற்கும்மேலாக ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற தமிழ்க் கூற்றின் வழிநிற்கும் தேசாந்திரி, கடலோடி, கடல் மனிதன். சூறாவளி என்ற சொல்லை உச்சரிக்கிறபோது,  கடல் என்ற சொல்லும் இணைந்து ஒலிப்பது இயற்கை. கடலின் பரிமாணம், ஆர்ப்பரிப்பு, அமைதி, ஆழ்கடல், நீரின் மேற்பரப்பு, கடற்காற்று, மீன் பிடிக்கும் பெண்கள், அவர்கள் மூழ்கும் விதம், மூழ்கியவர்கள் நீரின் மேற்பரப்பிற்கு வருகிறபோது எழுப்பும் ஓசை,  கடற்பாசிகள், கிளிஞ்சல்கள், நத்தைகள், பவழங்கள் ஆகிய வார்த்தைகள் கதைமாந்தர்களாக நீந்துவதையும் கரையொதுங்குவதையும் நூலெங்கும் காணமுடிகிறது. « கடல், உலகத்திலுள்ள எல்லாவற்றையும் விட நான் அதிகம் விரும்புவது இதைத்தான். இளம் வயதிலிருந்தே பெரும்பானமையான நேரத்தை கடலோடுதான் கழித்திருக்கிறேன்(பக்கம் -26) » « கடல் என்பது முழுக்க முழுக்க புதிர்களால் நிறைந்தது. ஆனால் அதெனக்கு அச்சத்தை உண்டாக்கவில்லை. அவ்வப்பொழுது யாராவது ஒருவரைக் கடல் விழுங்கிவிடும். ஒரு மீனவப்பெண்ணையோ, மீன் பிடிப்பவரையோ, அல்லது தட்டைப்பாறையில் கவனக் குறைவாக நின்றிருக்கும் சுற்றுலா பயணியையோ பேரலை இழுத்துக்கொள்ளும். பெரும்பாலான நேரத்தில் உடலைக் கடல் திருப்பிக்கொடுப்பதில்லை(பக்கம் 32)  »,  தொடர்ந்து « அவர்கள் பேசுவது கடவுள் மொழி அது நம் மொழிபோல இருக்காது. அதில் கடலுக்கு அடியில் கேட்கும் சப்தங்கள் நீர்க்குமிழிகளின் முணுமுணுப்புகள்(பக்கம்32) »  என ஜூன் கூறும் வார்த்தைகள், கடல் மீது ஆசிரியருக்குள்ள தீராக் காதலை வெளிப்படுத்தும் சொற்கள்.

இரண்டு குறுநாவல்கள் : ஒன்று நூலின் பெயராகவுள்ள « சூறாவளி », மற்றது « அடையாளத்தைத் தேடி அலையும்பெண் ».  இரண்டு குறுநாவல்களும் கடல்தான் அடித்தளம். இருவேறு கண்டங்களை, இருவேறு தேசங்களைக் கதைக்களனாகப் பயன்படுத்திக்கொண்டு நூலாசிரியரை பிரபஞ்ச படைப்பாளரென்று முன்நிறுத்துபவை.  முறையாகப் பிறந்திராத பெண்களின் கதைகள்.  ‘சூறாவளி’க் கதை தென் கொரியாவைச்சேர்ந்த தீவிலும், ‘அடையாளத்தைத் தேடி அலையும் பெண்’ ஆப்ரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கானா நாட்டில் ஆரம்பித்து ஐரோப்பிய கண்டத்திலிருக்கும் பிரான்சு நாட்டிற்குத் தாவும் கதை. இரண்டிலுமே கடந்த கால நினைவுகளைக் கிளறி அத்தணலில் வேகின்ற மனிதர்கள், வாழ்க்கைத் தந்த மன உளைச்சலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறவர்கள்.

அ. சூறாவளி

ஏற்கனவே கூறியதுபோல நூலின் முதல் குறு நாவல். கதையில் இரண்டு கதை சொல்லிகள். முதல் கதைசொல்லி போர்முனைகளில் பணியாற்றிய பத்திரிகையாளர், பின்னர் எழுத்தாளர் ஆனபின் கடந்த காலத்தில் பணியாற்றிய தீவுக்கு 30 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிவருகிறார், பெயர் பிலிப் கியோ. ஏன் திரும்பிவருகிறார் ? « எதற்காக நான் திரும்பிவந்தேன் ? எழுத வேண்டும் எனும் வேட்கையிலுள்ள எழுத்தாளர் ஒருவர்க்கு வேறு இடங்கள் இல்லையா ? மனிதச் சந்தடிக்கப்பால், அதிகச் சப்தமில்லாமல் , ஆரவாரம் குறைந்த இடமாக, சுவருக்கு அருகில், அலுவல் மேசையின் முன் உட்கார்ந்து, தன் எழுத்துக்களைத் தட்டச்சு செய்ய வேறு புகலிடம் இல்லையா ? (பக்கம் 13)» எனத் தனக்குத்தானே சிலகேள்விகளையும் கேட்டு அவற்றிர்க்குப் பதிலிறுப்பதுபோல « இத்தகைய தீவை, உலகின் ஒரு பகுதியை, எவ்வித வரலாறும், நினைவுமில்லாத இந்த இடத்தை, கடலால் தாக்கப்பட்டு, சுற்றுலாபயணிகளின் அலைகழிப்புக்குள்ளான இப்பாறையை மீண்டும் கானவேண்டுமென்று விரும்பினேன்.(பக்கம்13) »   என நமக்கெழும் சந்தேகத்தை ஆசிரியர் நீக்கியபோதிலும் அவர் திரும்பவருவதற்கென்றிருந்த உண்மையான காரணம் வேறென்பதை அடுத்துவரும் பக்கங்களில் அவர் மனத்துடன் பயணிக்கும் நமக்குத் தெரிய வருகிறது அவற்றிலொன்று  கடலில்  திடுமென்று விரும்பியே இறங்கி உயிர்விட்ட அவருடைய முன்னாள் காதலிபற்றிய வாட்டும் நினைவுகள்.

ஒவ்வொரு மனிதர் வாழ்க்கையிலும்ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு இடங்களும் மனிதர்களும் குறுக்கிடுகிறார்கள். எல்லா இடங்களையும், மனிதர் அனைவரையும் நாம் நினைவிற்கொள்வதில்லை. ஆனாலும்  சில இடங்களைப்போலவே சில மனிதர்களும் நம்மில் பதிந்துவிடுகிறார்கள், நம்மோடு கலந்து விடுகிறார்கள், அதுபோலத்தான் அவர்களோடு இணைந்த சம்பவங்களும் : நமது நிலை மாறும்போதும் வடிய மறுத்து, நம்மோடு தேங்கிவிடுபவை, கொசுமொய்ப்பவை;  அவற்றின் ஆழ்பரப்புக் கசடுகள்,  நமது வாழ்க்கை இழை அறுபடும்போதெல்லாம், கலைக்கப்பட்டு, மேற்பரப்பிற்கு வருகின்றன. ஆனால் இக்கடந்த தருணங்களின் மறுபிறப்பிற்குக் காரணம் வேண்டும். குப்பையை எறிந்த இடத்தைத் நாம் தேடிவருவதில்லை, ஆனால் குன்றிமணி அளவுடயதென்கிறபோதும், தொலைத்தது தங்கமெனில் திரும்பவருவோம், தேடிப்பார்ப்போம். குற்ற உணர்வும் தொலைத்த தங்கத்திற்குச் சமம். உயிர் வாழ்க்கைக் கோட்பாடு நியாயத்தின் பேரால் கட்டமைக்கபட்டதல்ல. ‘என்னுடைய வயிறு’ , ‘என்னுடைய  உடமை’, ‘எனது மகிழ்ச்சி’யென்று அனைத்தும் ‘எனது’ மீது கட்டமைக்கபட்டவை. இந்த ‘எனதை’ மறக்கிறபோது,(அந்த ‘எனது’வின் நலனுக்காகவேகூட அதிருக்கலாம்) தவறைத் திருத்திக்கொள்ளும் முயற்சியில் ஆரம்பக் கட்டமாக குற்ற உணர்வு, உறுத்துகிறது. அது ஊழ்வினையாகாது.  நமது முதல் கதைசொல்லியான எழுத்தாளரும் அப்படியொரு குற்ற உணர்வில் தவிப்பவர் : « கதவருகே அசையாமல் எதுவும் நேராமல் அதைப் பார்த்துக்கொண்டிருந்த நான் ; என் கொலைகார கண்கள் ;  இந்த பிம்பங்களின் காரணமாகத்தான் நான் இருக்கிறேன்…….இவற்றை எது வைத்துள்ளது என்பதைத் தேட ; அதாவது நிரந்தரமாக உள்ளே போட்டுப் பூட்டி வைத்துள்ள கறுப்புப் பெட்டியை கண்டுபிடிப்பதற்காகத்தான் நான் இங்குவந்திருக்கிறேன். பிம்பங்களை அழிப்பதற்காக  அல்ல..(பக்கம் 52)

சூறாவளி குறுநாவலின் இரண்டாவது கதை சொல்லி ஒரு பதின்வயதுப்பெண். தனக்காக மீனவர் வாழ்க்கையை எற்றுக்கொண்ட  தாயுடன் தீவில் வசிப்பவள். அவள் கடந்தகால வாழ்க்கையின் அவலங்களை மறந்து, அவ்வாழ்க்கையை அறிந்த மனிதர்களிடமிருந்து விலகி, வெகுதூரத்தில் இருக்கவேண்டி,  மகளுடன் வயிற்றுப்பாட்டுக்கு நத்தைகளையும் கிளிஞ்சல்களையும் கடலில் மூழ்கி சேகரிக்கும் ஆபத்தான தொழில் செய்பவள். பெண்ணின் வயது 13 என்றாலும்,  கேட்பவர்களிடத்தில் தனது வயதைக் கூட்டிச்சொல்லி  தன்னைச் சிறுமியாக ஒருவரும் கருதிவிடக்கூடாதென்பதில் கவனாமக இருப்பவள், பெயர் ஜூன்.   இந்த இருவருக்குமிடையே விளையாட்டைப்போல உருவான நட்பு அதன் போக்கு, அதனூடாக எழும் சிக்கல்கள், இப்புதிய உறவில் இருவேறு வயதுகளில் எழும் குழப்பங்கள், தடுமாற்றங்கள் ஆகியவற்றை கதைமாந்தரின் வயது, அறிவு, அனுபவம் கொண்டு உளவியல் பார்வையில் கதையை நகர்த்துகிறார். பிலிப் கியோ தனது பத்திரிகையாளர் தொழிலின்போது ராணுவ வீரர்களின் வன்புணர்ச்சிக்குச் சாட்சியாக இருந்தவர். « அவன் சாட்சி மட்டுமல்ல, அதில் பங்குவகித்தவர்களில் ஒருவன் (பக்கம் 65) » என்ற எழுத்தாளரின் குற்ற உனர்வுதான்  இக்கதைக்கான அடித்தளம்.

. அடையாளத்தை த் தேடி அலையும் பெண்.

இங்கே கதை சொல்லியாக நாம் சந்திப்பது ரஷேல் என்ற இளம் பெண். தக்கோரதி கடற்கரையில்வைத்து தன் கதையைச் சொல்லத் தொடங்குகிறாள்.  « எட்டுவயதாகியபோது எனக்கு அம்மா இல்லையென தெரிந்துகொண்டேன். » என்கிறாள். ‘சூறாவளியில்’ஜூன் அப்பா இல்லாத பெண். இக்கதையில் ரஷேல் தாயில்லாப் பெண். சிறுமியிலிருந்து அவள் வளர்ந்து பெரியவளாவதுவரை கதை நீள்கிறது. அவள் வயதுடன்  சக பயணியாகக் கதையுடன் பயணிக்கிறோம்.  அவள் ஆப்ரிக்காவில் பது குடும்பத்தில் பிறக்கிறாள். தந்தை பதுவுடனும் சிற்றன்னை மதாம் பதுவுடனும்  வசிக்கிறாள், மூன்றாவதாக அந்த வீட்டில் அவளுடைய  மிகப்பெரிய பந்தமாக இருப்பது, அவளுடைய சிற்றன்னை மகளும் தங்கையுமான பிபி.  இக்கதையிலும் வன்புணர்ச்சி இடம்பெறுகிறது.  பொதுவாக கிளேஸியோ கதைகளில்  தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமே அறியாத அநாதை சிறுவர் சிறுமியர் கதைமாந்தர்களாக இடம்பெறுவதைக் காணலாம். இக்கதைகளும் அவற்றிர்க்கு விதிவிலக்கல்ல. அவளைப் பெற்றவுடனேயே தாய், தான் விருப்பிப் பெற்றவளல்ல என்பதால் குழந்தையை அநாதையாக்கிவிட்டு,  சொந்த நாட்டிற்குத் திரும்பி, புதிதாய் ஒரு குடும்பம் பிள்ளைகள் எனவாழ்கின்றவள். திருவாளர் பதுவின் குடும்பம் சண்டைச்  சச்சரவுகளில் காலம் தள்ளும் குடும்பம். சிற்றன்னைகள் அனைவருமே மூத்த தாரத்தின் அல்லது கணவனின் வேற்றுப்பெண்ணுடனான உறவில் பிறந்த பிள்ளைகளை வெறுப்பவர்கள் என்ற இலக்கணத்திற்குரிய மதாம் பது, ஒரு நாள் கணவனுடன் போடும் சண்டையில்போது, தன்னைப்பற்றிய உண்மையைக் கதைநாயகி ரஷேல் அறியவருகிறாள்.  ரஷேலுக்கு உண்மையில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள பெயரோ, உரிய அத்தாட்சி பத்திரங்களோ இல்லை. ஆனால் பிரச்சினை, பது குடும்பம் பணக்கார அந்தஸ்தில் இருக்கும் வரை எழுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் இழந்து தெருவில் நிற்கும் போது, நாட்டில் யுத்த மேகமும் சூழ்கிறபோது எழுகிறது. பெரும்பாலான ஆப்ரிக்கர்களைப்போலவே அவர்கள் மேற்குலக நாடுகளை நோக்கி பயணிக்கிறார்கள்.

குறுநாவலின் இரண்டாவது பகுதி பாரீஸில் தொடருகிறது. பெரு நகரங்களின் வாழ்க்கைக் கவனத்தை வேண்டுவது, தவறினால் படுபாதாளத்தில் விழவேண்டியிருக்கும். மது, போதை மருந்துகள் ஆகியவை எளிதில் கிடைக்க அதற்குரிய வாழ்க்கையில் சகோதரிகள் தள்ளப்படுகிறார்கள். கணவர் ‘பது’வை விட்டுப்பிரிந்து வேறொருவடன் வாழ்ந்தாலும் தனது மகளை அரவணைக்க மதாம் பது இருக்கிறாள்.  ஆனால் அநாதையான ரஷேலுக்கு அத்தகைய அரவணைப்புக் கிடைப்பதில்லை. சகோதரி பிபியின் தயவினால் அந்த அரவணைப்பு திரும்ப அவளைத் தேடிவருகிற போது, விலகிப்போகிறாள். உண்மையில், அவளுடைய அடையாளத் தேடலில் கைவசமிருந்த அடையாளங்களையும் இழக்கிறாள்.  அவளுடைய இழப்புப் பட்டியல் சகோதரி பிபி, தந்தை, சிற்றன்னை எனத் தொடருகிறது.  புகலிட அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள மறுக்கவே, திரும்ப பிறந்த மண்ணிற்கு நூலசிரியர் அவளை அனுப்பி வைக்கிறார்.

இந்நெடிய பயணத்தில்,கதைசொல்லியான பெண்ணின் ஊடாக பலமனிதர்களைச் சந்திக்கிறோம். அடையாளம் தேடும் பெண் என்பதால்  காவல்துறை மனிதர்களும் அவள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்கள். புகலிடம் தேடும்அந்நிய மக்கள்,  அண்மைக்காலங்களில் மேற்குநாடுகளில் எவ்வாறெல்லாம் நடத்தப்படுகிறார்கள்   என்பதற்குச் சின்ன உதாரணம் :  « அப்புறம் நான் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லும் ஒரே புத்தகம் ‘ப்ராபெட்’  எனும் கலீல் ஜிப்ரான் எழுதிய புத்தகம். …..ஒரு முறை போலீஸ் என்னைச் சோதனையிட்து ; என்னிடம் அந்தப் புத்தகத்தைப் பார்த்துவிட்டு காவல்துறை பெண்மணி , ‘நீ என்ன முஸ்லீமா’ எனக்கேட்டாள்(பக்கம் 182) »  எனும் வரிகள்.

« நான் பிறந்த போது இங்கும் சரி , கடற்கரையிலும் சரி எதையும் பார்த்த தில்லை. கைவிடப்படப்பட்ட ஒரு சிறிய மிருகம்போல வாழ்ந்திருக்கிறேன். »என்ற ரஷேலுடையது வரிகள், பிறந்த மண்ணுக்குத் திரும்பியபின்னரும் அவளைத் துரத்துகின்றன, அவளை மட்டுமல்ல  புலம்பெயர்ந்த மனிதர் அனைவரையும் துரத்தும் வரிகள்.

நன்றி : திண்ணை

 


சூறாவளி  மொழிபெயர்ப்பு குறு நாவல்கள்

பிரெஞ்சுமொழியிலிருந்து தமிழ்

சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்

காலச்சுவடு பதிப்பகம்  வெளியீடு

நாகர்கோவில், தமிழ்நாடு

 

—————————————————————————————-

 

சிமொன் வெய்

Simon veil

அரசியல், சமூகம் இரண்டிலும் முத்திரையைப் பதித்து புகழையும் பெருமையையும் ஒருசேர சம்பாதித்த பெண்மணி. இரண்டு கிழமைகளுக்கு முன்பு(ஜூன்30) தமது 89 வயதில் மறைந்த இவருக்காக, பிரான்சு நாட்டின்  ஒட்டுமொத்த சமூகமும், ஊடகமும் தங்கள் திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளை இரத்துசெய்துவிட்டு, இவர் சார்ந்த வரலாற்றை மீள்வாசிப்பு செய்தனர். அதிபர் முன்னிருந்து செலுத்திய அஞ்சலியில் அரசியல் பேதமின்றி  எல்லா தரப்பினரும் கலந்து கொண்டனர். முத்தாய்ப்பாக மறைந்த இப்பெண் தலைவரின் உடலுக்கு ‘பாந்த்தெயோன்’ ஆலயத்தில் இடமுண்டு என்பதை அதிபர் மக்ரோன் தெரிவிக்கவும் செய்தார்.  பாரீஸில் இருக்கும் இவ்வாலயம், ஐந்தாம் நூற்றாண்டில்  பாரீஸ் நகரின் நிர்வாகியாகப் பொறுப்பேற்றிருந்த புனித ழெனெவியெவ் (Sainte Geneviève) பூத உடலுக்கென எழுப்பிய ஆலயம். பின்னர் பிரான்சு வரலாற்றின் தவிர்க்கமுடியாத  தலைவர்களின் உடல்களுக்கும் அங்கு இடமளிக்கபட்ட து. இன்றைய தேதியில் ரூஸ்ஸோ, வொல்த்தேர், விக்தொர் யுகொ, எமில் ஸோலா, க்யூரி தம்பதியினர் என  ஒரு சில  பிரமுகர்களுக்கே இடம் அளித்திருக்கிறார்கள்.  நாட்டின் தந்தை எனக்கொண்டாடப்படும் முதல் அதிபரும் படைபாளியுமான ஜெனரல் தெகோலுக்கோ (Général De Gaulle)  உலகப்புகழ்பெற்ற பிற பிரெஞ்சு அரசியல்வாதிகளின் உடல்களுக்கோ அங்கு இடமளிக்காதது வியப்புக்குரிய செய்தி. ஒரு சில வருடங்களுக்கு முன்பு அல்பெர் கமுய் உடலை அங்கு கொண்டுபோகலாமென, அவருடைய நூற்றாண்டு விழாவின்போது அப்போதைய அதிபர் விருப்பத்தினைத் தெரிவித்த போது. அல்பெர் கமுய் குடும்பத்தினர் அதனை நிராகரித்துவிட்டனர். பெண்களின் வேதநூல் என அழைக்கப்படும் ‘இரண்டாம் பாலினம்’ நூலை எழுதிய சிமொன் தெ பொவ்வாருக்குக்கூட இடம் அளிக்கவில்லை. இது பற்றிய சர்ச்சைகளுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

 யூதத்தால் நேர்ந்த சோதனை

இரண்டாம் உலகப்போர் சூழல், நாஜிகளின் பிடியிலிருந்த பிரான்சு, பிறப்பால் யூதர்,  போன்ற காரங்களை வைத்து பெண்மணிக்கும் அவருடைய குடும்பத்தைச்சேர்ந்த பிறருக்கும் என்ன நேர்ந்திருக்குமென்பதை எளிதாக கணிக்கமுடியும். யூதர்கள் என்கிறபோதும் சமயக் கொள்கையில் முற்போக்காளர்களாக இருந்ததால் தம்பதிகள் இருவருமே நடைமுறை வாழ்க்கையில் சமய நெறிகளை கடைப்பிடிப்பதில்லை. நாஜிகளுக்கு அடிமைப்பட்டுக்கிடந்த விஷி அரசாங்கம் யூத இனத்தை அழிக்க முனைந்தபோது, சிமொன் தந்தை ஜாக்கோப்(Jacob) என்ற யூதப்பெயருக்குப் பதிலாக ழாக்கியெ (Jacquier) என்று பெயரைக்கூட மாற்றிப்பார்த்தார். சிமொன் பெற்றோர்களின் மதநம்பிக்கையின்மையோ, தந்தையின் பெயர்மாற்றமோ நாஜிகளின் ‘கெஸ்ட்டாபொ’ என்ற ரகசிய காவற்படையினரின் கைது நடவடிக்கையைத் தடுக்கவில்லை. 1944 ஆம் ஆண்டு, சிமொன் பள்ளி இறுதிவகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மறுநாள் கைது செய்யப்படுகிறார்.  பின்னர் அவருடைய சகோதரி, பெற்றோர்கள் சகோதரர் என அனைவரும் கைதாகிறார்கள். வதைமுகாமுக்கு கொண்டுசென்று விஷவாயு, அல்லது நாஜிகளின் வேறு மரண உத்திகளால் கொல்லப்படுவது உறுதி, இனி உயிருடன் திரும்பசாத்தியமில்லை என்ற  நிலையிலேயே அவுஸ்விட்ஸ் (Auschwitz)வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே அவர்களைத் தனித்தனியாகப் பிரித்து பெயருக்குப் பதிலாக எண்ணைத் தந்து, அந்த எண்ணை சூட்டுக்கோலால் உடலில் பதிக்கவும் செய்தனர். சிமொன் எண் 78651. இவர்கள் கைதுக்கு உதவி செய்தது, அன்றைய பிரான்சு நாட்டின் விஷி அரசாங்கம். இந்த அரசாங்கம் மட்டுமே ஈவிரக்கமின்றி தமது சொந்த நாட்டின் பிரஜைகளை கிட்ட தட்ட 73000 பேர் கைது செய்ய காரணமாக இருந்தது. போர்முடிவுக்கு வந்து விடுவிக்கப்பட்டபோது அவுஸ்விட்ஸ் வதை முகாமிலிருந்து 3 சதவீத மக்களே மீட்கப்பட்ட னர். அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் நமது சிமொனும், அவரது சகோதரியும் அடக்கம். சிமொனின் தாய், தந்தை, சகோதரர் அனைவரும் கொலையுண்டனர். அவுஸ்விட்ஸ் கொலைமுகாமின் பாதிப்பில் வெகுநாட்கள்  பிறரிடம் உரையாடுவதற்குக்கூட சிமொன் தயங்கினார்.

பெண்விடுதலையில் சிமொனின் பங்களிப்பு

இட து சாரி மனோபாவம் கொண்டவர் என்கிறபோதும் கணவர், பிள்ளைகள், குடும்பமென அக்காலத்திய பெண்கள் வாழ்நெறி கோட்டைத் தாண்டாத அன்னை ; நாஜிகள் வதைமுகாம்களில் பெண்களை நடத்திய விதம், பிரான்சு நாட்டில் சமைப்பது, பெருக்குவது, பிள்ளைபெறுவது எனவாழ்ந்த பெண்களின் இக்கட்டான நிலை ; இவைகளெல்லாம் இளம்வயது சிமொனை அதிகம் யோசிக்க வைத்திருக்க வேண்டும். விளைவாக, சட்டப்படிப்பை விரும்பி தேர்வு செய்கிறார், மாஜிஸ்ட்ரேட் ஆகவும் பணியாற்றுகிறார். அந்நாளில் பெண்கள் கனவு காணமுடியாத அரசியலுக்குள் துணிந்து பிரவேசிக்கவும் செய்தார். 1969 ஆம் நாட்டின் முதல் பெண் அமைச்சர் என்ற தகுதியுடன் சட்ட அமைச்சரானார். 1974 ஆம் ஆண்டு வலெரி ழிஸ்கார் தெஸ்த்தென்  (valéry Giscard d’Estaing) அதிபராக தேர்வானபோது, ழாக் சிராக் (Jacques chirac) அமைச்சரவையில்  சுகாதார அமைச்சர்.  நாட்டின் முதல் பெண் அமைச்சர்  என்பதைத் தவிர, ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் பதவியில் அமர்ந்த முதல் பெண்மணி என்ற பெயரும் கிடைத்த து. அடுத்து 2010 ல் பிரெஞ்சு மொழி அகாதமி உறுப்பினராகும் வய்ப்பும் அமைகிறது. இவ்வளவு பெருமைகளுக்கு உரியவர் என்கிறபோதும்,1974 ஆம் ஆண்டு இவரால் கொண்டுவரப்பட்ட கருக்கலைப்பு உரிமைச் சட்டமே இவரது பெருமையை பெரிதும் உயர்த்தியது எனக்கூறலாம்.

 கருகலைப்பு உரிமைச் சட்டம்

சிமொன் தெ பொவ்வாருடைய ‘இரண்டாம் பாலினம்’  நூல் 1949 ஆம் ஆண்டில்  வெளிவந்தது என்கிறபோதும், பிரான்சு நாட்டில்பெண்கள் நிலமையில் பெரிதாக மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை. 1968 ஆம் ஆண்டு மாணவர்கள் தொழிலாளர்கள் கிளர்ச்சி, பிரெஞ்சு பெண்களையும் தங்கள் நிலைகுறித்து சிந்திக்க வைத்தது. 1970 ஆம் ஆண்டு பெண்கள் விடுதலை இயக்கம் (Mouvement de la libération des femmes) உருவானது.அப்போதெல்லாம் கருக்கலைப்பு என்பது சட்டப்படிக் குற்றம். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டுமின்றி சோஷலிஸ நாடுகளிலும் பெண் என்பவள் பிள்ளை பெறும் எந்திரம். இந்நிலையில் 1971 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டுப் பெண்ணியில்வாதிகள் வீதியில் இறங்குகிறார்கள். கருக்கலைப்பு, தாய்மைப்பேறு ஆகியவற்றில் பெண்களும் தங்கள் கருத்தினை சொல்ல இருக்கின்றன. அது குறித்த முடிவினை எடுக்க ஆண்களைக்காட்டிலும் பெண்களுக்கே முழு உரிமையும் வேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி வீதியில் இறங்கினர். Manifeste des 343  என்ற பெயரில் 343 பிரெஞ்சு பெண்மணிகள் (படைப்பாளிகள், நடிகைகள், பத்திரிகையாளர்கள், பேராசிரியைகள்) 1974 ஆம் ஆண்டு சிமொன் தெ பொவ்வார் முன்னின்றுதயாரித்த அறிக்கை யொன்றில் தாங்களெல்லாம் கருக்கலைப்பு செய்துகொண்ட பெண்கள் என பகிரங்கமாக அறிவித்து கையொப்பமிட்டிருந்தனர். கருக்கலைப்பு  சட்டப்படி குற்றம், குற்றத்திற்குரியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றிருந்த நிலையில் இப்படியொரு அறிவிப்பின் மூலம் அரசுக்கு சவால்விட்டது நாட்டில் பெரும் புயலை உருவாக்கியது. இப்பெண்களை வேசிகள் என ஆணுலகம் அழைத்தது. இத்தகைய சூழலில் தான், பெண்களின் உரிமைக்குரலுக்கு செவிசாய்த்து அவர்களின் கனவினை மெய்ப்பிக்கின்றவகையில் சட்டப்படியான கருக்கலைப்பு உரிமையை சிமொன் வெய் பிரெஞ்சு பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார். பாராளுமன்றம் முழுமுழுக்க ஆணுறுப்பினர்களால் நிரம்பியிருந்தது. விவாத த்தின் போது, சிமொன் கடுமையான ஏச்சுக்களையும், விமர்சனத்தையும் தாங்கிக்கொள்ளவேண்டியிருந்த து. இருந்தும்  துணிச்சலுடன் தம்மை அமைச்சராகிய அதிபர், தமது பிரதமர், சக அமைச்சர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் அவையில் இச்சட்டத்தை நிறைவேற்றியது மிகப்பெரிய சாதனை.

—————————————————————–

 

 

 

மொழிவது சுகம் 8ஜூலை 2017: உரிமையின் பேரால் செய்வதனைத்துமே நியாயமா ?

 

. « Tout ce que j’ai le droit de faire est-il juste ? » உரிமையின்  பேரால்  செய்வதனைத்துமே நியாயமா ? அல்லது சரியா ?

 

இக்கேள்வி அண்மையில் பள்ளி இறுதி வகுப்பு பொது த் தேர்வு மாணவர்களில்  இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாக தேர்வு செய்திருந்தவர்களுக்கு  தத்துவப் பாடத்தில் கேட்கப்படும் இரண்டு கேள்விகளில்  இரண்டாவது.

இக்கேள்வி சட்டம் நமக்கு அனுமதிக்கிற உரிமைகள் பற்றி பேசுகிறது. அனுமதிக்காத உரிமைகள் அல்லது மறுக்கிற உரிமைகள் பற்றி கேள்வி எழுப்புவதில்லை.  அடுத்தவர் சொத்து உன்னுடையது அல்ல,  சாலை விதிகளை மீறக்கூடாது, இலஞ்சம் கொடுப்பதோ வாங்குவதோ குற்றம் போன்றவையெல்லாம்  சட்டப்படி மறுக்கப்படும் உரிமைகள். சட்டப்படி மறுக்கப்பட்ட உரிமைகளை, அவை அனைத்தையும்  ஏற்று நடப்பது நியாயம் ஆகுமா ? சரியா என்பது இங்கு கேள்வி இல்லை. அனுமதிக்கப்பட்ட உரிமைகளை, சட்டம் வழங்கும் உரிமைகள் மொத்த த்தையும் நாம் செயல்படுத்துதில் அல்லது சொந்தம் கொண்டாடுவதில்  நியாயம் இருக்கிறதா என்பதுதான் கேள்வி. நீதியா ? என்பதல்ல அறம் ஆகுமா ?

அடுத்தக் கட்டமாக இக்கேள்வியில் ‘உரிமை’, ‘அனைத்தும்’, ‘சரியா ?’, ஆகிய  மூன்று சொற்களையும் விளங்கிக்கொண்டால் விடை கிடைத்துவிடும்.

சட்டமும் உரிமையும் :

உரிமை என்றால் என்ன ? உரிமை என்ற தும் நாம் அச்சொல்லோடு இணைத்துப் பார்ப்பது முதலில் சட்ட த்தை த்தான். இவற்றைத்தவிர மரபு, சமயம், பண்பாடு சார்ந்த உரிமைகளும் உள்ளன.

பொதுவில் உலகில் ஜனநாயக நாடு சுதந்திர நாடு என்ற  சொல்லுக்கு அருகதையுள்ள நாடுகள் அனைத்தும் அடிப்படையாக தமது பிரஜைகளுக்கு அரசியல் சட்டங்களை வகுத்து அதனூடாக சில உரிமைகளை வழங்குகிறது. பின்னர் சற்று விரிவான அளவில் ஒத்திசைவான சமூகத்தைக் கருத்திற்கொண்டு மக்களின் தினசரிவாழ்க்கையைச் சிக்கலின்றி முன்னெடுக்க, அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண  தமது குடிகளின் மரபு, சமயம், பண்பாடு இவற்றினைக் கருத்திற் கொண்டு, நாகரீகமான உலகின் எதிர்பார்பார்ப்பிற்கிணங்க சட்ட வல்லுனர்கள், துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள் உதவியுடன் சட்டங்களைத்  தீர்மானிக்து, உரிமைகளை வழங்குகிறார்கள். இவ்வுரிமைகளுக்குப் பாதுகாப்பாக காவல்துறையும், நீதிமன்றமும் உள்ளன.  ஆக இவை சட்டம் அளிக்கும் உரிமை.

 

 மரபு, சமயம், சமூகம் பண்பாடு தரும் உரிமை :

இவ்வுரிமைகளைப் பற்றியும் விவாதிக்க வேண்டியிருக்கிறது.  சட்டங்கள் நம்முடைய மரபு, சமயம் போன்றவற்றையெல்லாம் கருத்திற்கொண்டே இயற்றப்பட்டவை என்பது உண்மைதான். இருந்தும் நீதிமன்றமோ, காவல் துறையின் கண்காணிப்போ ஒட்டுமொத்த மனிதர்களின் தினசரி வாழ்க்கைக்கு கடிவாளம் இடமுடியாத நிலையில், சாத்தியமுள்ள களத்தில் ‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ ஆகிற  உரிமையுள்ளது. தந்தை வழி சமூகம்  காலம்காலமாக தந்தைக்கு கொடுக்கும் ; ‘நான் குடும்பத்தின் தலைவன்’, ‘நான் மூத்தவன்’, ‘நான் ஆண்’ ; பின்னர் ‘எங்க கிராம வழக்கம்’, எங்க சமயத்தில் குறுக்கிட இவன் யார்’ ; நான் நாட்டாமை, நான் அரசியல் வாதி, போன்ற திமிர்த்தன உரிமைகள் இருக்கின்றன. சட்டத்தை ஏய்க்க, சட்டத்தை வளைக்க, நீதி த்துறையையும் காவல்துறையையும் விலைக்கு வாங்க முடிந்த இடங்களில் இவர்களெல்லாம் தாங்களாகவே  எடுத்துக்கொள்கிற  இதுபோன்ற சட்டங்களை மிதிக்கிற உரிமைகள் குறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை.   இத்தகைய போக்கிற்கு உலகம் முழுவதும் அவரவர் அரசியல், அவரவர் சமூகம், அவரவர் சமயத்தின் மொழிக்கேற்ப வார்த்தைகளுண்டு.

 

« நான் உரிமையுடன் செய்வதனைத்துமே நியாயமா ? அல்லது சரியா ? »

இக்கேள்வி சட்டத்தை மதிக்கிற, சட்டத்தை வேதவாக்காக நினைக்கிற, , சட்டத்தை நீதியை  கலியுக கடவுளாக நம்புகிற மக்களைப் பார்த்து எழுப்ப்ப்பட்ட கேள்வி . இக்கூட்டத்திலும்  இருவகை மக்கள் இருக்கிறார்கள். ஒருவகையினர் உண்மையிலேயே சட்டத்தை மதிப்பவர்கள் : ஏழைகளும், பெருவாரியான நடுத்தர வர்க்கமும் இந்த வகையினர்தான். சட்டத்தைத தவிர வேறு நாதியில்லை என்றிருக்கும் மக்கள். இவர்களுக்குச் சட்டப்படியான உரிமைகள் குறித்தே தெளிவில்லைஎன்கிறபோது தங்கள் உரிமைகளில்  எவற்றை நியாயத்துடன் பிரயோகிக்கிறோம், எவற்றை நியாயமின்றி பிரயோகிக்கிறோம் என்பதுபற்றிய பிரக்ஞையெல்லாம் இருக்குமா ? என்பது ஐயத்திற்குரியது தான்.  இக்கேள்வி மெத்த படித்த, வசதி படைத்த சட்ட த்தை வளைக்கத் தெரிந்த புத்திசாலிகளுக்கு, என வைத்துக்கொள்ளலாம். கல்கத்தா முன்னாள் நீதிபதியும் தனக்கு சட்டப்படி உரிமை இருக்கிறதென சொல்கிறார். முன்னாள் தலைமைசெயலர், விதிமுறைப்படி என்னுடைய வீட்டில் சோதனை இடவில்லை என்கிறார். நிரூப்பிக்கபடாத குற்றம் என்றொரு சொல்லை அகராதியில் ஏற்றிய தமிழினத்தலைவர்கள் பற்றிய வியாசத்தை நீதிபதி சர்க்காரியாவைக் கேட்டால் தெரியும்.  நியாயமற்ற இவ்வித ஒழுங்குமீறல்கள்  தமிழ்நாட்டில் மட்டும் காணக்கிடைப்பதல்ல, சட்ட த்தின் பேரால் குற்றத்தின் தன்மையில் எவ்வித மாற்றமும் இல்லை என்கிறபோதும் வெள்ளையர்கள் விடுவிக்கப்படுகிறார்கள், அமெரிக்க கறுப்பரின மக்களுக்கு மரணதண்டனை  உறுதிசெய்யப்படுகிறதென்பதுதான் வரலாறு, ஒபாமாக்கள் அதிபராகலாம் ஆனால் கறுப்பரினத்திற்கு நியாயமான நீதி என்பது எட்டாக் கனி. ஆக உண்மையில் சட்டத்தின் துணையுடன் இம்மக்களுக்கு நியாயம் மறுக்கப்படுகிறபோது அமெரிக்க நீதிபதிகளைப்பார்த்து நீங்கள் சட்டத்தின் பேரால் வழங்கும் நீதிக்கான உரிமைகள் அனைத்துமே சரியா ? என்ற கேள்வியை எழுப்பவே தோன்றும்.

பிரான்சு நாட்டில் அண்மைக்காலத்தில் அரசியல்வாதிகள் மீது தங்கள் சுயநலத்தின்பொருட்டு, அரசுப்பணத்தை தவறாக கையாண்டிருக்கிறார்கள் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சம்பந்தபட்ட அரசியல்வாதிகள் சட்டப்படி நாங்கள் எந்த தவறையும் இழைக்கவில்லை என்றார்கள். ஒருபாராளுமன்ற உறுப்பினர், தங்கள் பணிக்காக  அரசாங்க செலவில் உதவியாளர்களை வைத்துக் கொள்ளலாம் எனச் சட்டம் சொல்கிறது. ஆனால யாரை வைத்துக்கொள்ளலாம், அதிகபட்சம் எவ்வளவு ஊதியம் என்பதைப்பற்றிய விளக்கமில்லை என்பதால் அனேக பிரெஞ்சு மக்களவை உறுப்பினர்கள்  தங்கள் மனவியை, பிள்ளைகளை குடும்ப உறுப்பினர்களாக நியமனம் செய்வதும், அவர்கள் தகுதிக்கு மீறிய  ஊதியம் கொடுப்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. (இனி கூடாதென சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்).

இத்தகைய அரசியல்வாதிகளைப்பார்த்து மக்கள் எழுப்பிய கேள்வி « உரிமையின் பேரால நீங்கள் செய்த து சரியா, நியாயம் ஆகுமா ? »  ஹாலந்து நாட்டின் ஓர் அமைச்சர், தமது அமைச்சர் பதவிக்கென வழங்கப் பட்டக் கடனட்டையை, உணவு விடுதி ஒன்றில் குடும்பத்துடன் சாப்பிட பயன்படுத்தினார் என்பது செய்தியான போது, அந்த அமைச்சர் பதவி விலக நேர்ந்த அதிசயக் கதைகளும் பூலோகத்தில் உண்டு.

பொதுவில் பிறருக்கு மட்டுமே சட்டம், நாம் அப்படி இப்படி நடந்துகொள்ளலாம், வரிசை மீறலாம், நம்ம குலமா, நம்ம கோத்திரமா ?  நம்ம குரூப்பைச் சேர்ந்தவனா? , நம்ம கட்சியா ?  நம்ம சாதியா, நமக்கு வேண்டியவனா  பத்தியிலே உட்காரவை, இலையைப்போடு!

அல்லது

இத்யாதிகளும் பொருந்திவந்தால், வழக்கறிஞர்கள் சாமர்த்தியமாக வாதிட முடிந்தால்,  குமாரசாமிகள் நீதிபதிகளாக இருந்தால், ஆடிட்டர் கெட்டிக்காரர் என்றால், சாட்சிக்கூண்டில் சாமர்த்தியமாகப் பொய் சொல்லத்  தெரிந்தால், கொடுக்கவேண்டியதை கொடுக்க முடிந்தால், வாக்குகள் விலைபோகுமென்றால் எந்த நாட்டில்தான் நடக்கவில்லையென எனவெட்கமின்றி  வாதிட்டுவிட்டு, மலர்ச்கிரீடம் சூட்டிக்கொள்ளலாம், செங்கோலை ஏந்தலாம், பொன்னாடைப்போர்த்திக்கொள்ளலாம், சட்ட த்தின் துணையுடன் எதையும் செய்யலாம்.  நியாயம் நமக்கு மட்டும் வளைந்து கொடுக்குமென்றால் சந்தோஷம்தான்.

சரி, ” உரிமையின் பேரால் நான் செய்வதைனைத்தும் சரியா » ? ” என்ற கேள்வி யாருக்கு?  கவலையை விடுங்கள் , இது நமக்கல்ல!

‘ஙே’ என்று இவ்வளவையும் வேடிக்கைபார்த்துக்கொண்டு, வாழ்க்கையை தள்ளுகிறதே அந்த ஒன்றிரண்டு மனிதர்களுக்கு! பிழைக்கத் தெரியாத  ஜென்மங்களுக்கு!

——————————————————————

——————————————————————————

 

 

குற்றவாளி நானல்ல பிரான்சு !

 

 

நீதிமன்றத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளனாக கடந்த வாரம் சென்றிருந்தேன். தவறா னத் தகவல்களைத் தெரிவித்து பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவித்தொகையைப் பெற்றதாகக் குற்றச்சாட்டு. சம்பந்த ப்பட்ட துறை தமிழ்ப்பெண்மணியிடம் தவறாகப் பெற்றதொகையை திரும்பச்செலுத்தவேண்டுமெனத் தெரிவித்து அவர் அதைச் செலுத்தியும் வருகிறார். பிரச்சினை அரசின் உதவியைப் பெற விண்ணப்பத்தில் உண்மைத்தகவல்களை மறைத்தார் என்பதால் நீதிமன்றத்திற்கு வரவேண்டியிருந்தது. தமக்கு விண்ணப்பத்தை நிரப்ப மொழி தெரியாதெனவும், தமது 18 வயதுமகனைக்கொண்டு நிரப்பியதில் இது நிகழ்ந்துள்ளது எனப் பெண்மணி நீதிமன்றத்தில் தெரிவித்தார் . குற்றம் சுமத்தப்பட்ட பெண்மணி இதுவரை எந்தக்குற்றத்திற்கும் ஆளானவர் அல்லர் என்பதைக் கருத்திற்கொண்டும், அவர் மறை த்தாரெனசொல்லப்பட்ட வருவாய் அவ்வளவு முக்கியமானதல்லவென்றும்., பதினெட்டு வயது மகன் பொறுப்பின்றி விண்ணப்பத்தை நிரப்ப வாய்ப்புண்டு என்பதையும் ஏற்றுக்கொண்டு குற்றத்திலிருந்து அப்பெண்மணிட்யை நீதிமன்றம் விடுவித்த து.

ஆனால் இது சுவாரஸ்யமான விடயமல்ல , அன்றைய தினம் வேறொரு வழக்கு வந்திருந்த பத்திரிகையாளர், பார்வையாளர் கவனத்தைப் பெற்றது. குற்றவாளி ஒரு ஹாலந்து நாட்டவர். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சு நாட்டில் இருக்கிறார். விசாரனையின் போது சிறைவாசத்திலிருந்த அவரை விலங்கிட்டே அழைத்து வந்தார்கள். அவர் செய்த குற்றம் அல்லது செய்யும் குற்றம் பெரிய நகைக்கடைகள், உயர்ந்த ஆடைக் கடைகள் நட்சத்திர ஓட்டல் கள் இங்கே தங்கி விலையுயர்ந்த நகைகளை வாங்குவது, உயர்ந்த ஆடைகள் வாங்குவது, நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது. அதற்குரிய பணத்தை கடனட்டைகளில் அல்ல காசோலைகளில் செலுத்துவது. இம்மோசடியை பலமுறை செய்து தொடர்ந்து சிறை, விடுதலை என்று காலத்தை கழிக்கிறார்.

உங்களைப்பார்க்கிறபோது குற்றவாளிபொல தெரியவில்லை பார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள். எப்படி இக்குற்றங்களை தொடர்ந்து செய்கிறீர்கள் இதிலிருந்து விடுபட நினைத்த தில்லையா ? என்று கேட்ட நீதிபதி அக்குற்றவாளி பற்றி தெரிவித்த செய்திகள் வியப்பூட்டுபவை. பத்துவருடங்களுக்கு முன்புவரை

அவர் ஒரு பத்திரிகயாளர், எழுத்தாளர், ஒரு நிறுவனத்தின் உரிமையாளருங்கூட, பெரிய குடும்பத்து பிள்ளை. இந்நிலையில்தான் பாடகி ஒருத்தியுடன் அறிமுககம், கவிதைகளும் எழுதுபவள். அவளின் நட்பில் அவளை முன்னுக்குக்கொண்டுவர அவளை நம்பி ஏராளமாக செலவு, ஒரு நாள் அவர் வெறும் ஆள் என்றவுடன் அந்தப் பெண்மணி வெளியேறுகிறாள். மனம் உடைகிறது, நடுத் தெருவில் விடபட்டார், பழைய ஆடம்பர ர வாழ்க்கையிலிருந்து வெளிவர இயலாமற்போக மேற்கண்ட குற்றங்களில் இறங்குகிறார்.

சரி எதற்காக பிரான்சு ?

பிற ஐரோப்பிய நாடுகளினும் பார்க்க பிரெஞ்சு வங்கிமட்டுமே
எனது சொற்பத் தொகை இருப்பை நம்பியும், எதற்காக
பிரான்சு நாட்டில் கணக்குத் தொடங்குகிரீர்கள் என என்னைப்பற்றியத் தகவல்களை சேகரிக்காமல் கணக்குத் தொடங்க அனுமதி த்தது . ஆயிரம் யூரோவுக்கு மேற்பட்டத் தொகைக்கு இங்கே கடைகளில் பணமாக செலுத்த முடியாது என்ற சட்டம் எனக்குச் சாதகமாக இருக்கிறது. அதிலும் இங்குள்ள பெரிய கடைகளில் கடைக்கு வருபவர்களையெல்லாம் கனவான்களாகப் பார்க்கும் வழக்கமுள்ளது அதிலும் இரண்டாயிரம் மூவாயிரம் என்று காசோலை தருகிறபோது பிரச்சினை எளிதாக முடிகிறது. ஐயாயிரம் பத்தாயிரமென காசோலையை நீட்டியிருந்தா ல் ஒரு வேளை சந்தேகம் வரலாம், எனவே எதுவரை செல்ல லாம் என ஓர் அளவு வைத்திருக்கிறேன். ஒருவகையில் பிரான்சும் என் குற்ற எண்ணிக்கையைப்பெருக்க காரணம். என்னுடைய வக்கீல் இதுபற்றி விரிவாக கோரிக்கை வைப்பார், என்றார். அவருக்காக வாதாடிய வக்கிலும் குற்றவாளி பிரச்சினையை பரிவுடன் அணுகுமாறு வேண்டுகோள் வைத்தார். அரசுதரப்பு வக்கீல் கடுமையாக ஆட்சேபித்து ஏழு ஆண்டுகள் சிறைதண்டனையும் பாதிக்கபட்டவர்களுக்கு இழப்பீடும் கேட்டார். பாதிக்கப்பட்ட வர்களில் ஒரு தமிழர் நகை கடையும் அடக்கம். நீதிமன்றம் மூன்றாண்டு தண்டனை மட்டுமே வழங்கியது. அவர் குற்றத்திற்கு இதுபோன்ற நிறுவன்ங்களும் ஒருவகையில் பொறுப்பு என்ற கருத்தினை தீர்ப்பிடையே கூறினார்.

குற்றவாளிகளின் முகம்.

குற்றவாளிகளெக்கென முகமுண்டா ? தமிழ்ச்சினிமாக்களில் அக்காலத்தில் சிங்கப்பூர் பெல்ட்டும், தூக்கிக் கட்டிய லுங்கியும், அடர்ந்த புருவங்களும் பெரிய கண்களும், உப்பிய கன்னத்தில் மருவும், « இன்னா நைனா ?« jj »என அறிமுகமாவார்கள். நவீன உலகில் அவர்கள் கனவான்கள், பெருங்கனவான்கள். தண்டிக்கபடாதவரை திறமைசாலிகள். பிழைக்கத் தெரிந்தவர்கள் :

இந்திரன் மார்பத் தாரமும் எய்துவர்

இவ்விடம் இப்பொருள் கோடற் கிடமெனின்

அவ்விடத் தவரை யார்காண் கிற்பார்

காலங் கருதி அவர்பொருள் கையுறின்

மேலோ ராயினும் விலக்கலு முண்டோ (சிலப்பதிகாரம்)

பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 4 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி) – கவிதை,,ஓவியம் உரைநடை

சென்ற கட்டுரையில் பதினேழாம் நூற்றாண்டு  கலை இலக்கியத்தின் தொடர்பாக நாடகத்துறையையும், நாடகவியலாளர்களையும் பார்த்தோம். இம் முறை எஞ்சியுள்ள பிறதுறைகளைக் காணலாம். பொதுவாக ஒரு நாட்டின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம், அரசியல், சமூக அமைப்பு இவை அனைத்தையும் முழுமையாக விளங்கிக்கொள்ள அக்காலகட்டத்தின்  கலை இலக்கியச் சான்றுகளைக் காட்டிலும் வேறு சாட்சியங்கள் இருக்க முடியா.

 

. இலக்கிய விவாத அரங்குகள்

இந்நூற்றாண்டில் கலைஇலக்கியங்கள்  பெருமளவில் தழைத்தோங்கியமைக்கு , அரசைப் போன்றே நாட்டின்  பெரும் செல்வந்தர்கள், உயர்குடிமக்கள்  ஆகியோர் ஆதரவும் கலை இலக்கியத்துறை ஆர்வலர்களுக்கு கிடைத்த து. பிரபுக்களைப்போலவே அவர்களின் துணைவியரும் இவ்வளர்ச்சிக்கு உதவினர். அவர்கள் அவைகளில் புதிய  ஓவியங்கள், நூல்கள் பற்றிய கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்ட ன, விமர்சனங்கள் வைக்கப்பட்டன. உரைநடைகளை, கவிதை நூல்களை , ஒருவர்  வாசிக்க பிறர் அமர்ந்து பொறுமையுடனும் ஆர்வத்துடனும் செவிமடுத்தார்கள். உதராணமாக மதாம் ராம்பூய்யெ கூட்டிய இலக்கிய  அவையில் ரீஷ்லியெ, மாலெர்ப் முதலானோர் கலந்துகொண்டனர். 1620-1625 வரை இச்சீமாட்டியின் இலக்கிய மண்டபம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கியது. அவ்வாறே மத்மஸல் ஸ்குய்தேரி  என்ற சீமாட்டி ஏற்பாடு செய்திருந்த இலக்கிய அவையும்  1652-1661  ஆண்டுகளில் பெரும் பங்களிப்பை நல்கியது.

. கவிதைகள்

கவிதைக்கு அடிப்படை ஏனைய கலைகளைப்போலவே உணர்வு, மனக்கிளர்ச்சி, கற்பனைதிறன், கருத்து ஆகியவை. ஆகையால்  இசை, ஓவியம் நடனம் ஆகியவற்றையெல்லாங்கூட கவிதையாகப் பார்க்கும் மனப்போக்கு அந்நாளில் இருந்தது. அந்நாளில் நாடகங்கள் அனைத்தும் கவிதை வடிவிலே இருந்தனவென்பதை நீங்கள் அற்வீர்கள்.

 

பிரான்சுவா தெ மலெர்ப் (François de Malherbe 1556-1628)

malherbe

17 ஆம் நூற்றாண்டு  கவிஞர்களில் பிரான்சுவா தெ மாலெர்ப் முக்கியமானவர்.  பரோக், கிளாசிக் இருவகை தாக்கமும்  இவருடைய கவிதைகளில் இருந்தன.  நான்காம் ஹாரியின் மனைவியும் பதின்மூன்றாம் லூயியின் தாயுமான மரி தெ மெடிசியைப் போற்றும் வகையில்  கி.பி 1600ல்  எழுதிவெளிவந்த ‘A la Reine ‘ கவிதைப் பெரும்புகழை ஈட்டித் தந்தது. ஆனால் இவருடைய கவிதைகளில் இன்றளவும் கொண்டாடப்படும் ‘Les larmes de Saint Pierre’ இத்தாலி நாட்டு கவிஞர்  ‘Luigi Tansillo’ வின் கவிதை யின் நகல் என்ற குற்றச்சாட்டு உண்டு.  எனினும் பிரெஞ்சுக் கவிதைஉலகிற்கு அடித்தளமிட்டவர் மலெர்ப்.

 

ழான் தெ  லாஃபோந்த்தேன்( Jean de la Fontaine 1621-1695)

la fontaineஇந் நூற்றாண்டின் மற்றுமொரு முக்கிய மான கவிஞர். நாற்பது வயதுக்குமேல் கவிதை எழுத த் தொடங்கி உலகப்புகழ்பெற்றவர்.  .  மொலியேர், ராசின் போல் நாடகங்களை எழுத இவர் கவிதையைப் பயன்படுத்தவில்லை. மலெர்ப் போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் இவர் கவிதை எழுத  உட்கார்ந்தவரல்ல.  லாஃபோந்த்தேன் கவிதைகள் ‘Fable’ எனும் நீதிக்கதைகள் வகைசார்ந்தவை, விலங்குகளை கதைமாந்தர்களாகப் பயன்படுத்தி , அவற்றினைக்கொண்டு மனிதர்களுக்கு நீதியை அங்கதச் சுவையுடன் போதித்தார்.

 

. ஓவியங்கள்

இந்நூற்றாண்டு ஓவியங்களின் முக்கியப்பண்புகள் : கண்களை உறுத்தாத வண்ணங்கள் , ஆர்ப்பாட்டமற்ற அமைதியான காட்சிகள், ஒளி. சமயம் மற்றும் பழங்கதைகளின் தாக்கம். லெ நேன் சகோதர ர்கள் (Les frères le Nain), ழார்ழ் துமெனில் (George du  mesnil  de la Four) நிக்கோலா பூஸ்ஸன்(Nicolas Poussin) ,பியர் போல் ரூபன் (Pierre paul Rubans) ஆகியோர் ஓவியர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.

 

. உரைநடை இலக்கியம்

 

ரெனெ தெக்கார்த் (René Descartes 1596 -1656) 

Réné

தத்துவ வாதிகளில் ரெனெ தெக்கார்த் தனித்துவம் பெற்றவர். ரெனே வாழ்க்கையைத்  தத்துவத்தின் வாழ்க்கை என ஒப்பிட முடியும். அவருடைய வரலாறு ஒரு நூற்றாண்டுகால சிந்தனையின் வரலாறு. தத்துவத்தோடு, கணிதம், இயற்பியல் மூன்றிலும் புகழடைந்தவர். இளம் வயதிலேயே வெளியுலகம் குறித்த  நினைவின்றி நாள்முழுக்க சிந்தனைவயப்பட்டவராக வீட்டிலும் பள்ளியிலும் இருந்துள்ளார். இதன் காரணமாக குட்டி தத்துவவாதி எனப்பெயரிட்டு குடும்பத்தினர் அழைத்திருக்கிறார்கள். பள்ளிக் கல்வியை முடித்த போது புத்த கங்களும் பாடமுறையும் ஏமாற்றத்தை அளிக்தனவாம். ‘உலகப் புத்தக வாசிப்பும்’ ஏமாற்றத்தை அளிக்க,  சொந்த வாழ்க்கையையே ஒரு புதிராக அமைத்துக்கொண்டு தேடலைத் தொடங்குகிறார். தேசாந்திரியாக ஜெர்மன், இத்தாலி, ஹாலந்து, என்று அலைகிறார். இயற்கையையும் மனிதர்களையும் நிறைய படித்தார். 1637ம் ஆண்டில் அவருடைய அறிவியல் மற்றும் தத்துவக் கட்டுரைகள் (Discours de la Méthode, la Dioptrique,les Mééores et la Géométrie)  வெளிவந்த போது, பிரெஞ்சு சிந்தனை உலகில் மட்டுமின்றி  உலகெங்கும் பெரும் புயலைக் கிளப்பியது. தெக்கார்த் தன்னை அறிந்த, நன்குணர்ந்த கருத்தாவாக (Sujet connaissant) எண்பித்து உலகின் உண்மைகளை கண்டவர். « சிந்திக்கிறேன்,  எனவே இருக்கிறேன் ! » என்ற அவருடைய சிந்தனை விவாத த்திற்குரியது. கலிலியோ புவிமைய வாத த்தினர் ஆதவுடன்  தண்டிக்கப்பட்டபோது(1633), தமக்கும் அப்படியொரு பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக   எச்சரிக்கையுடன், தம்முடைய « Traité  du monde et de la lumière(The World) » என்ற  நூலை வெளியிடத் தயக்கம் காட்டினார் என்கிறார்கள்.

 

பிலேஸ் பஸ்க்கால்  (Blaise Pascal 1623 -1662)

தெக்கார்த்தை போலவே அறிவியல்  த த்துவம் இரண்டிலும் மேதை, கூடுதலாக ஆன்மீகத்தில் கூடுதல் ஈடுபாடு. இளம் வயதிலேயே சாதி த்தவர். அறிவியல், ஆன்மீகம் இரண்டிலும் அளவற்ற ஞானம் என்கிறபோதும், மரணத்தைவெல்ல இரண்டுமே உதவ வில்லை. இளம் அறிவியலறிஞராக கணித த் துறையில் வீழ்ப்பு வடிவ இயல் (Projective geometry)  மற்றும் நிகழ்தகவு கணிப்புமுறைகளை(Probability theory)  அறிமுகப்படுட்தினார். இயற்பியல் துறையில் காற்றழுத்தம், வெற்றிடம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு, கோட்பாடுகளை உருவாக்கினார். வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தந்தை ஒவ்வொரு நாளும் கணக்கெழுதுவதற்குபடும் வேதனைகளைக் கண்டுமுதல் எண்கணித கணிப்பானை வடிவமைத்தபோது அவருக்கு வயது 19. பஸ்க்கால் என்றவுடன் நாம் கவனத்திற்கொள்ளவேண்டிய படைப்புகள் ஒன்று பாமரனுக்கு (provinciales), மற்றதுசிந்தனைகள் (Pensées).

பதினேழாம் நூற்றாண்டு நிறைவுற்றது.

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’