இடது பக்கம் கத்தீட்ரல், வலது பக்கம் சேன்-போல் தேவாலயம்; நேர் எதிரே அவர் தீவு என்று குறிப்பிட்ட நதி. தம்மை அவர்கள் கடந்துசெல்லும் ஒவ்வொருமுறையும்கையை அசைத்து தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார். அவர்கள் சுற்றுலா பயணிகள், படகில் நகரைச் சுற்றிப் பார்ப்பவர்கள். அறை எண் 243, பால்கணியில் நிற்கிறார். இப்படியொரு அதிசயத்தை அவருக்களித்த அல்லாவிற்கு மாத்திரமின்றி, ஒருவகையில் இந்த அதிசயத்திற்குப் பங்களித்த சகோதரர் நஃபிசாட்டு, அவர் பேரன் அப்துலயே, வெகுதொலைவில் இருக்கிற உமார் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
இப்புதியப் பயணத்தைத் தொடங்கியாயிற்று, தற்போது இதுவும் அவருடைய புனைவுகளில் ஒன்றாக தொடருகிறது. இயலாமைக்கு அல்லா ஒர் எல்லையை வகுத்திருந்தார். அவரைப் பொருத்தவரை “நீ போவது உறுதி” என்கிற நஃபிசாட்டுவின் வார்த்தைகள் போதுமானவையாக இருந்தன.
அவரது புனைகதை நகருக்கு வந்தாயிற்று. காலை மணி எட்டு. வயிறு புடைக்க உண்ணும் ஒரு சிறுவனைப்போல இரண்டு சாக்லேட் திணித்த ரொட்டியை காலை உணவாகக்கொள்ள கீழே இறங்கவேண்டும்.
நஃபிசாட்டு, இவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டபோது, இவருடைய எள்ளல் புன்னகைக்கு மயங்கியதாகத் தெரியவில்லை. சகோதரருக்கு உண்மையில் நம்பிக்கை ஏற்படவில்லை. எதிர்பார்த்ததுதான். கதைசொல்லி முதியவரின் சகோதரர் நஃபிசாட்டு வெளிப்படையாக எதையும் கூறாமல்தான் புறப்பட்டுச் சென்றார். ஆனால் டக்கார் நகரை அடைந்ததும், தம்முடைய பேரன் அப்துலாயே வுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்லாபூகூம் என்ற பெயரை முன்னிறுத்திக் கூறப்பட்ட நகரத்தைக்குறித்து எழுதவே செய்தார் :
“ உனது பெரிய தாத்தாவின் கற்பனை மிகவும் சுவாரசியமானது , அதேவேளை மனதை நெகிழ்விக்கக் கூடியதுமாகும் என்பதை நீ புரிந்துகொள்வாயென எனக்குத் தெரியும். அவருடைய சினேகிதனின் நகரத்திற்குத் திரும்பும் சூழலுக்கு நீயும் முயற்சி செய் , அவ்வாறு செய்தால், உனது கனவிற்கும் ஏதேனும் பலன் கிடைக்கும்”
அப்தூலயே சிரித்தான். ஒரு மாற்றத்திற்கு முதன்முறையாக பிடிவாதம் என்ற வார்த்தையைத் தவிர்த்துவிட்டு , கனவென்ற சொல்லைத் அவனுடைய தாத்தா உபயோகித்திருந்தார்.
இரண்டாண்டுகளுக்கு முன்பு உமரைப் பார்க்க்கும் எண்ணம் வந்தது. ஸ்ட்ராஸ்பூர் லூயிபாஸ்ட்டர் பல்கலைகழகத்தில் இயற்கை இடர்ப்பாடுகள் மற்றும் மண்பராமரிப்பு துறையில் நிபுணத்துவம் பெறுவதர்க்குரிய கல்வியை உமர் முடித்திருந்தான். அப்தூலமயே அவனை மிகவும் நேசித்தான். உமரைச் சென்று பார்க்காதது ஒரு குறையாகத் தோன்றியது. அவனிடம் கூறுவதற்கென்றிருந்தவற்றை மூன்று பக்கங்களில் ஒரு கடிதமாக எழுதினான். CROUS Cité Universitaire Gallia ; 1- Quai du maire Dietrich என்று முகவரியை எழுதியபோது, கை நடுங்கியது. அவன் எதிர்பார்த்ததுபோலவே உமருடைய பதிலும் இருந்தது :
“என்னைப் பார்க்கவிரும்பியது, உண்மையில் நல்ல யோசனை. எனக்கும் உன்னைக் காணாதது ஒரு குறை. உன்னைப்பற்றித்தான் மேடம் சொடெவ் விடம் பேசினேன். பல்கலைக்கழக த்தின் மாணவர்நலனுக்கென இயங்கும் CROUS அமைப்பின் கலை பண்பாட்டுத்துறையின் பிரதிநிதி அந்த அம்மாள். அன்பான பெண்மணி, உதவும் மனப்பான்மை நிறைய உண்டு. நியாயமான வாடகைக்கு ஒரு மாதத்திற்கு அந்த அம்மாள் உதவியுடன் ஓர் அறையை எடுக்க முடியும். உன்னுடைய வருகையினால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நகரத்தைச் சுற்றிவரலாம். உன்னை எங்கெல்லாம் அழைத்துச் செல்வதென்கிற திட்டங்களெல்லாம் தயார். » கடிதம் ஏதோ சுற்றுலா கையேட்டுக்குரியத் தகவல்களுடன் தொடர்ந்தது.
அப்தூலயே தனது சகோதரனை மிகவும் நேசித்ததென்னவோ உண்மை, கண்ணாடி ஒவியம் கற்க வேண்டுமென்ற தாத்தாவினுடைய விருப்பத்தை நிறைவேற்ற பேரனுக்கு ஆர்வமில்லை. எனினும் திடீர் பயணத்திற்குக் காரணமும் இருந்தது. இவனுடைய சகோதரன் உமருக்கும், குடும்பத்தின் பிற உறுப்பினர்களுக்கும், இப்பயணம் ஸ்ட்ராஸ்பூர்கில் சில நாள் தங்கித் திரும்பும் உத்தேசத்திற்குரிய ஒரு பயணம். ஆனால் அப்தூலயேவுக்குத் திரும்ப செனெகெல் நாட்டிற்கு வரும் எண்ணமெல்லாம் இல்லை. . அவனுடைய விசாவில் ஒரு முத்திரையும் சில நொடிகளும் போதும், சுற்றுலா பயணியென்கிற தகுதிக்குப் பதிலாக வந்தேறி , கள்ளத்தனமான குடியேற்றவாசி என்கிற அந்தஸ்த் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது.
– உனக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது !
– தங்கி விடுகிறேன்.
– அப்படித் தங்க முடியாது.
– எனக்குப் போக விருப்பமில்லை.
– அறிவுபூர்வமாக யோசி ! குடும்பத்தை யும் நினைத்து பார். உன்னுடைய இப்பயணத்திற்காக நம் குடும்பத்தில் நிறைய சிரமப்பட்டிருக்கிறார்கள். ஊரில் உனக்காக அவர் காத்திருக்கிறார்கள்.. என்னால் உனக்கு உதவ முடியாது. எங்கே போகப் போகிறாய் ? அதிலும் இங்கிருந்து என்ன செய்வதாய் உத்தேசம்.
– எடுத்த முடிவு எடுத்ததுதான். நான் இங்குதான் தங்கப்போகிறேன்.
– அதற்குச் சாத்தியமே இல்லை, அப் தூலயே. முட்டாள் தனமான காரியம். வீணாகப் பிரச்சினைகளைத் தேடுகிறாய் !
– என்ன சொன்னாலும் முடிவில் மாற்றமில்லை.
– இதற்கு மேல நான் என்ன சொல்ல, இருந்து தொலை !
கிளேபர் சதுக்கத்தில், ஒரு காப்பி பாருக்கு வெளியில் அமர்ந்து தாழ்ந்த குரலில் ஆரம்பித்து சகோதரர்கள் இருவரும் உரத்து முடித்திருந்தார்கள். விவாதம் சர்ச்சையாக மாறியிருந்தது. உமர் தொடர்ந்து வற்புறுத்த வில்லை. மேசையில் பில்லுக்குரிய பணத்தை வைத்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றான். சர்வரிடம் அதனைக்கொடுத்தனுப்பிவிட்டு மீதிச் சில்லறைக்காக இவன் காத்திருந்தான். சிறிது தூரத்தில், வீதிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழுவொன்று ஆர்ம்ஸ்ட்ராங்கை இசைத்துக்கொண்டிருந்தது : « கொடுத்துவைத்த வாழ்க்கை ! » என நினைத்தான். ‘Stormy weather’, ‘Sweet Lorraine’, ‘Cheeck to cheek’ ஆகியவற்றை சீழ்க்கையில் இசைத்தான். ஒரு கிளாஸ் பீருடன் அவர்கள் முடிக்கும்வரை காத்திருந்தான்.
குழுவில் மிகவும் இளம் வயதாகத் தோன்றியவன், தன்னுடையைக் கிடாரை வாசிப்பதை நிறுத்தியதுபோல பக்கத்தில் வைத்தான். காப்பி பாருக்கு வெளியில் அமர்ந்திருந்தவர்களை நோக்கி வந்தான். கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இதொரு இலவச நிகழ்ச்சியல்ல என்பதை உணரவேண்டியக் கட்டாயம். அப்தூலயே இசைநிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டதைப் புரிந்து கொண்டான். நாற்காலியிலிருந்து எழுந்தான். காசுகேட்டுவந்த இளைஞனைத் தவிர்க்க நினைத்தவன்போல முகத்தைத் திருப்பிக்கொண்டான். ‘What a wonderful world’ பாடலை முனுமுனுத்தவாறு அவ்விடத்தைவிட்டு அகன்றான்.
‘கிராண்ட் ஆர்க்காட்‘ வீதிக்கு வந்தவன் சிறிது நின்றான் அவனுக்கு முன்பாக மனிதர் கூட்டம். கிட்டத்தட்ட வீதியின் கணிசமானதொரு பகுதியியை அடைத்துக்கொண்டிருந்தார்கள். காலத்திற்குச் சம்பந்தமற்ற ஹிப்பித் தோற்றத்தில் இருந்தார்கள். தலைமயிர் பராமரிக்கப்படாமல் புதர்போல மண்டிக்கிடந்தது. மூக்கு, காது, உதடுகளென்று வளையங்கள் அணிந்திருந்தார்கள். இதுவரை அவன் காணாதது. சுதந்திரத்தை ஊக்கத்தொகையாகப்பெற்ற மகிழ்ச்சி. அவர்களைக் கடந்து சென்ற காவற்துறை மனிதர்கள், அம்மனிதர்களிடம் மரியாதையான பார்வையைச் சிந்தினார்கள். தவிர அவர்களின் புன்னகையில் வெளிப்பட்டது இரக்கமா ? ஏக்கமா என்ற் கேள்வியும் பிறந்தது.
அப்தூலயே அவர்களை நெருங்கினான். பெட்டை நாயொன்றின் வயிற்றில், குட்டிகளுக்குக் கோபமூட்டுகின்ற வகையில் கிழவரொருவர் தலைவைத்துப் படுத்திருந்தார், அருகில் இளைஞனொருவன் ஹார்மோனிகா போல சத்தமெழுப்பிக்கொண்டிருந்தான். இருவருக்கும் இடையில் அமர்ந்தான். ஒரே சமயத்தில் முரண்பாடான இரு அனுபவங்கள்.பொருண்மையில் இரு அனுபவங்களுக்குகிடையில் பேதங்களுமில்லை. : மகிழ்சி, விரக்தி இரணடும் சமவீதத்தில் இருந்தன.
அந்தி பிறந்தது, குளிரையும் கொண்டுவந்திருந்தது. மகிழ்ச்சியைக் காட்டிலும் விரக்தி கூடுதல் வலிமைகொண்டதாக ப் பட்டது. சுதந்திரம் தற்போது ருசியாக இல்லை. தலையை மொட்டை அடித்திருந்த பெண் அளித்த ரொட்டியும், சாசேஜ்ஜும், விநோதமாக இருந்தன. எப்படி அவர்களை வந்தடைந்தானோ அதுபோலவே அவர்களிடம் எவ்வித பேச்சுமின்றி புறப்பட்டுச் சென்றான். பெண் கெட்ட வார்த்தையை உபயோகிக்க, வயதான ஆசாமி, நல்லது நடக்கட்டுமென வாழ்த்தினான்.
வீதி வீதியாக நடந்தான். உமருடன் சேர்ந்து நடந்த வீதிகள் அவை. தனியாக, சுற்றுலா பயணியாக , மெதுவாக, ஒரு திசையைக் குறிவைத்து, பின்னர் அத்திசையைத் தொலைத்து என்பது போன்ற அனுபவங்கள் திரிந்ததில் கிடைத்தன. தற்செயலாகவா, மனமிட்ட கட்டளையின் படியா, சுய நினைவின்றியா அல்லது விரும்பியா ஆனால் அதை வெளிப்படையாகக் கூற விருப்பமின்றி ஒருவழியாக கடைசியில் தீவென அழைக்கப்டுகிற ‘L’ill’ நதிக்கரை அருகே வந்து நின்றான். அப்பகுதி அவனுக்குப் புதிதல்ல. வலது பக்கம் கதீட்ரல், இடதுபக்கம் சேன்-போல் தேவாலயம், எதிர்த் திசையில் ஒரு பெரிய கட்டிடம், இரவு நேர மின்சார ஒளியில் அதன் காவி நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தது அக்கட்டிடம் ஸ்ட்ராஸ்பூர் பூர்க் ‘CROUS’ க்குச் சொந்தமான பல்கலைக் கழக மாணவர்களின் உணவு விடுதிக் கட்டிடம் : ‘Gallia’. அப்தூலயே அங்கு நிறைய மாணவர்களை நண்பர்களாகக் கொண்டிருந்தான். அவனுடைய சகோதரன் வேலைசெய்தபோது, நண்பர்களை காப்பி விடுதியில் சந்திப்பதுண்டு. அங்கு சென்றான். தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பாக ஒரு பெருங்கூட்டமிருந்தது. ஒரு காற்பந்து போட்டி நடந்தது அதிற்கவனம் செல்லவில்லை. நடுவர் விசிலை ஊதி இடைவேளையை அறிவித்தபோது இரண்டாவதாக ஒரு பீரை குடித்துமுடித்துவிட்டு, பணிப்பெண்ணை முத்தமிட்டுக்கொண்டிருந்தான். அவளிடமிருந்து இவன் கற்றது அதிகம், கைமாறாக முத்தம் தரலாம், தவறில்லை. முத்தமிட்டுவிட்டு, அவளிடம் திரும்பவும் கேட்டான்.
– உண்மைதானா, நன்றாகத் தெரியுமா ?
– உன்னிடம் எதற்காகப் பொய் சொல்லப் போகிறேன்? பதினைந்து நாளில் அவன் போகப்போகிறான். இதுவரை அவனுடைய வேலையைச் செய்ய எவரும் கிடைக்கவில்லை.
– பதினைந்து நாளிலா ! அது வரை நான் தாக்குப்பிடிக்க முடியும்.
பிரச்சினைத் தீர்ந்தது. தங்குவதற்கு அனுமதிக்கும், அரசாங்கத்தின் அத்தாட்சி தாள்கள் கைக்கு வந்தபிறகு அதிட்டம் வீரியத்துடன் இருக்கிறது. மினோத்தோர் காப்பி விடுதியில் அப்தூலயே சொகோனுக்கு சர்வர் வேலை கிடைத்தது. உமர் செனெகெலுக்குத் திரும்பிவிட்டான். அங்கிருந்துகொண்டு அவ்வப்போது கடிதமும் எழுதுகிறான். உள்ளூர் விவசாயிகளுடன் அவன் செய்கிற வேலைகள் பற்றியும் எழுதுகிறான். குடும்பத் தகவல்களும் உண்டு. தாத்தா நஃபிஸாட்டு பற்றியும் அவருடை புகழ்பெற்ற கண்ணாடி ஓவியங்கள் பற்றியும் கூட எழுதுகிறான். இந்தத் தாத்தா விடமிருந்துதான் அப்தூலயேவிற்கு, துபாம்பூல் நகர் முதிய வர் பெரிய தாத்தா கதைசொல்லிப்பற்றியத் தகவல் கடிதம் மூலமாகத் தெரியவந்தது.
முயற்சி செய் ! என்றுய் டாக்கா நகரிலிருந்துகொண்டு எழுதுவது மிகம் சுலபம். ஒருமுறை புத்தான்டுப் பிறப்பிற்கு ‘போஸ்‘ நகருக்கு கதைசொல்லி முதியவர் வந்திருந்தார், சுவாரஸ்யமான மனிதராகவும் எல்லோரிடமும் குறிப்பாக இவனையொத்த பையன்களிடத்தில் நன்றாகப் பழகினார்.
நஃபிஸாட்டு மிகத்தெளிவாக பலவிபரங்களையும் அப்தூலயேவிற்கு எழுதியிருந்தார். அக்கடிதத்திலிருந்த பயணம்பற்றிய விவரம் வேடிக்கையாக இருந்தது. சுவாரஸ்யாமாக இருந்ததென்றாலும், முட்டாள்தனமான யோசனையென நினைத்தான். ஒரு கதைசொல்லியை, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த நண்பனுடைய ஸ்ட்ராஸ்பூர் நகருக்கு, ஒருவித ஆயிரத்தொரு இரவுகள் நாடொன்றில் அந்நகரைக் கற்பனைசெய்து தமது ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் என்பதற்காக அவரை அனுப்புவது என்ன யோசனையோ ? ‘சுவாரஸ்யமானது‘, ‘நெகிழ்ச்சியானது‘ என்றாலும் ‘முட்டாள் தனமானது‘. இம்மூன்று அடைமொழிகளையும் தனது தாத்தா நஃபிசாட்டுக்கு எழுதிய பதிலில் குறிப்பிட்ட அப்தூலயே கடைசி அடைமொழியை மட்டும் அடித்துவிட்டு, ‘இயலாதது என்று மாற்றினான்.
“அதுவும் தவிர, விடுதிகளிலெல்லாம் வாடகைக்கு எடுத்து அவரைத் தங்கவைப்பது கடினம், இந்த யோசனைக்கு நீ எழுதியிருப்பதைப்போலவே அதிகப்பணம் தேவைப்படும். எப்படிச் சமாளிக்கப் போகிறேனோ. தவிர அவருடைய உணவுச் செலவுகளும் இருக்கின்றன. ஒன்றிரண்டு நாட்கள் சமாளிக்க முடியும், அதற்கு மேல் சாத்தியமில்லை. நான் புலம்புகிறேன் என நினைக்கவேண்டாம். இரண்டுபேர் செலவினைச் சமாளிக்க என்னிடம் பணமில்லை என்றுதான் சொல்கிறேன். அடுத்ததாக அவர் முதியவர், இந்நிலையில் நீயோ அல்லது வேறு யார் துணையுடனோதான் வரமுடியும். அப்படிவந்தால் கவனித்துக்கொள்ள எனக்கு நேரமுமில்லை. நம்முடைய ஊருக்கே அவர் வந்ததில்லை, அப்படியிருக்க தனியே அவர் ஸ்ட்ராஸ்பூர் வரை வருவாரா என்பதும் சந்தேகம். அதுமட்டுமல்ல, எந்நேரமும் என் கண்காணிப்பிலும் அவரை வைத்திருக்கவேண்டிய பிரச்சினையுமுள்ளது. நான் வேலை செய்கிறேன், எப்படி அவரருகில் இருப்பது ? என் பொறுப்பிலில்லாமல் அவரை அனுப்பி வைத்தால் நேரம் கிடைக்கிறபோது சென்று அவரைப் பார்ப்பேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை ஊரையும் சுற்றிக்காட்டுவேன். ஆனால் எல்லா நாட்களிலும் என்னால் அவரைபார்த்துக்கொள்ள வேண்டுமென்றால் என்னால் முடியாது. »
இக்கடிதத்திற்கு நஃபிசாட்டுவின் பதில் சுருக்கமாக இருந்தது. ஒரு சில வரிகளில் இருந்த அப்பதிலில் , ‘அதுவும் தவிர‘ போன்ற சொற்களையெல்லாம் பயன்படுத்து வேண்டாமென்று சொல்லவில்லை, ஆனால் அச்சொல்லைத் தவறாகப் பயன்படுத்தாதே, என எழுதிவிட்டு, சாத்தியமாகும்எனக்குறிப்பிட்டு ஒன்றுக்கு மூன்றாக அடிக்கோடிட்டு ‘முயற்சி செய்‘ என முடித்திருந்தார்.
அப்தூலயே கடித்தத்தை வீசி எறிந்தான். அவன் பதில் எழுதவில்லை,. அவன் வேலைசெய்யும் சகப்பணியாளர்களிடம், மாணவர்களிடம், மாணவிகளிடமென யார்யாரையெல்லாம் தெரிந்துவைத்திருந்தானோ அவர்களிடத்திலெல்லாம் இக்கதையைக் கூறினான். நாளடைவில் இக்கதை, சுவாரஸ்யம் குறைந்து கேலிக்குரியதாக மாறி இருந்தது. வெகுசீக்கிரம் பல்கலைக் கழக மானவர் விடுதியில், இக்கதையை அறியாதவர் ஒருவருமில்லை என்றாயிற்று. அப்தூலயே எதிர்கொள்ளும் மாணவர்கள் , அவனை ‘நலம்‘ விசாரிப்பதுபோல ” ஊரிலிருந்து அங்க்கிள் எப்போது வருகிறார் ? » எனக் கேட்க ஆரம்பித்தார்கள்.
வந்ததென்னவோ புதிதாக ஒரு கடிதம். இம்முறை ‘முயற்சி செய்‘ என்ற வார்த்தைக்குக் கீழ் நான்குமுறை அடிக்கோடிட்டு இருந்தது. அவ்வார்த்தையை கண் முன்னால் அவை நிறுத்தின. அதன் கட்டளைக்குப் பணிந்து சொந்தப் பிரச்சினையாகப் பார்க்கத் தொடங்கினான். ஏதாவதொரு தீர்வினைக் காணவேண்டிய நெருக்கடி உருவாயிற்று. காப்பிவிடுதியில் வைத்திருந்த தகவல் விளம்பரம் அவனை ஈர்த்தது. ‘l’afges’ எனும் பல்கலைக் கழக மாணவர் பேரவை வைத்திருந்த தட்டி அது. பிரான்சு நாட்டின் கிழக்குப்பகுதியிலுள்ள ‘லா பூர்கோஜ்ன்‘ பிரதேசத்தைச் சேர்ந்த கவிஞர் ஒருவர், கவிதை வாசிக்கப்போவதாக அதில் குறிப்பிடிருந்தது. கடந்த சில மாதங்களாக தள்ளாடும் வயதிலுள்ள தாத்தாவின் மூத்த சகோதரரை பிரான்சு நாட்டிற்கு எப்படி அழைத்துவந்து தங்கவைப்பதென்ற விடயத்தில் மிகவும் குழம்பிப்போயிருந்த அப்தூலயேவுக்கு தீர்வு அத்தட்டிச் செய்தியில் இருக்கக்கூடுமென்று நினைத்தான். ‘CROUS’ பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் அனைவரையும் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யும், அமைப்பு. பேராசிரியர்கள் ஆய்வின் பொருட்டும், எழுத்தாளர்கள் சொற்பொழிவுக்காகவும் வந்து தங்குவார்கள்.
– ஒரு ஆப்ரிக்கக் கதைசொல்லியும் ஏன் அதுபோல வரக்கூடாது ?
– என்ன சொல்கிறாய் ?
‘ பாரீஸ் சாலட் ‘ என்ற ஒன்றைத் தயார் செய்துகொண்டே தனக்குத்தானே சத்தமாக அவன் பேசிக்கொண்டிருந்தான்.
– ஆப்ரிக்கர் கதைசொல்லியை அழைத்துவருவதில் என்ன பிரச்சினை ? அதிலும் அனைவரினும் பார்க்க புகழ்பெற்றவர் என்கிறபோது.
– அப்படியா ?
– எனது தாத்தாவின் சகோதரர்பற்றி வேண்டுமானால், உனக்கு விளக்கமாக சொல்கிறேன்.
– நிறைய தடவை நீசொல்ல நாங்கள் கேட்டாயிற்று.
இவனிடம் காதுகொடுத்துக் கேட்ட சர்வர் பெண்ணிடம், தனது யோசனையைத் தெரிவித்தான். அன்று மாலையே ஒரு மாணவனைக் கலந்தான். அவனுடைய தந்தை ரைன் நதி புதிர்களென ஒரு நூலை எழுதியிருந்தார். ஏராளமான சொற்பொழிவுகள், மாநாடுகள் என அடிக்கடி கலந்துகொண்டு பல்கலைக்கழக விடுதியில் தங்கியதுண்டு. 2000 ஆம் ஆண்டில் ஸ்ட்ராஸ்பூர் நகரவாசியான டொமினிக் நாட்டைச் சேர்ந்த ழான் டொலெர்(Jean Tauler) என்பவரின் ஏழாவது நூற்றான்டு விழாவிலும் கலந்துகொண்டார்.
– என் தந்தைக்கு இங்கு தங்கியபோது எந்தக் குறையுமில்லை, அவருக்குத் திருப்தி.
– ஓரு கதைசொல்லியை, அதுவுமொரு ஆப்ரிக்க கதைசொல்லியை உண்மையில் இங்கே அனுமதிப்பார்கள் என்று நினைக்கிறாயா ?
– ஏன் கூடாது ? எதற்கும் மாணவர் பேரவையைச் சேர்ந்தவர்கள் யாரையேனும் போய்ப்பார்.
– நானும் அதைப்பற்றி யோசித்தேன்.
மறுநாள் அப்தூலயே மாணவர் பேரவையைச் சேர்ந்த இருவரைச் சந்தித்து விஷயத்தைத் தெரிவித்தான். அவர்கள் இருவரும் பல்கலைகழகத்தில் புதிதாய் எதையேனும் செய்வதில் ஆர்வம்கொண்டவர்கள். இவன் யோசனையைக் கேட்டதும் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. விஷயத்தை அவர்கள் மதாம் சொடெவ்விடம் கொண்டு போனார்கள். பல்கலை கழகத்தின் கலைப்பண்பாட்டுத்துறை நிர்வாகியான அபெண்மணி யோசனையையைக் CROUS இயக்குனரிடம் கொண்டுசென்றார்.
இயக்குனரைச் சந்திக்கவேண்டியிருந்தது. அப்தூலயே இயக்குனரின் அலுவலகம் வரை வந்தவன் உள்ளே செல்ல தயங்கினான். என்ன சொல்லலாம் ? எப்படி ? என்பது போன்ற கேள்விகள் அவனுக்குள் எழுந்தன. இந்தச் சின்னக் காரியத்திற்காக இயக்குனர் அலுவலகக் கதவையெல்லாம் தட்ட வேண்டியிருக்குமென அவன் யோசித்ததில்லை. அவனுக்கு தைரியம் காணாது. தாத்தாவின் கடிதத்திலிருந்த ” முயற்சி செய்” என்ற வார்த்தைக் காதில் ஒலித்தது.
இயக்குனரின் அலுவகத்திற்குள் நுழைந்தவன் முதல் அடியை எடுத்துவைக்க சில நொடிகள் எடுத்துக்கொண்டான். சன்னல் அருகே ஒரு ஒட்டகச் சிவிங்கியின் படம். ல்ல சகுனமாகப்பட்டது. ” ஆப்ரிக்காவில் கவனம் செலுத்தும் ஸ்ட்ராஸ்பூர்” என்கிற வார்த்தைகள் மனதில் ஓடின, எனினும் அதைச் சொல்லத் தயங்கினான்.
– உட்கார் ! ஏதோ கதை சொல்லி ஒருவரை அழைத்து வரும் திட்டம் உன்னிடம் இருக்கிறதென்று கேள்வி.
– எப்பச் சொல்வது…ஆமாம் ஒரு கதைசொல்லி … நான் சொல்ல வந்தது …
– சரி அதற்குத்தானே வந்திருக்கிறாய், சொல்லேன்.
அவனுடையத் தயக்கத்தை இயக்குனரின் கனிவான வார்த்தைகள் போக்கின. வசதியாக நாற்காலியில் உட்கார்ந்தான். ஆப்ரிக்க நாட்டைச்சேர்ந்த மிகப்பெரியக் கதை சொல்லியைப் பற்றித்தான் அவன் பேச வந்தது. அவரின் புகழ் செனெகெல் நாடு மட்டுமின்றி ஆப்ரிக்கக் கண்டம் முழுதும் தெரிந்திருக்கிறது. எனக் கூறியபோது, சற்று மிகைபடக் கூறியதாக உணர்ந்தானே தவிர அதை நிறுத்தவில்லை, அதொருவகையில் கேள்விகளைத் தள்ளிப்போட உதவியதும் காரணம் . அவன் கூறியதை வேடிக்கையாகக் கேட்டுக்கொண்டிருந்த இயக்குனர் கோப்பு ஒன்றை எடுத்து வைத்தார். தமக்குள்ள சங்கடத்தை தெரிவிக்க வும் அவர் தயங்கவில்லை.
– கதை சொல்லி உனது உறவினரில்லையா ? அதுவும் தவிர மிகவும் வயதான மனிதர். சரிதானே ?
– ஆனால் நெறிதவறாதவர்.
– மிஸியே சொகோன் என்பவரை நீ பல்கலைக்கழக விடுதியில் தங்கவைக்க நினைக்கிறாய் ?
– அவர் பெயர் உண்மையில் ஸ்லாபூம்.
– ஸ்லாபூல்கூம் ? கதைசொல்லியின் பெயரா அது ?
– ஆமாம் அவருடைய பெயர்தான் ஸ்லாபூகூம்
– அவர் இங்கே தங்கவைக்கவேண்டுமா ? முடியாததில்லை. எனினும் சில விதிமுறைகள் இருக்கின்றன. நீ முதலில் ‘DRAC’ ஐ சென்று பார்க்கவேண்டும். அதற்கு என்ன அர்த்தமென்று தெரியுமா ?
– அதாவது……
– கலை பண்பாட்டுத்துறை அமைச்சகத்தில் பிரதேசக் கிளை அலுவலகம். அவர்களைச் சென்று பார்த்துவா. எனக்கு முதியவரை இங்கே தங்க வைக்க எந்தவிதப் பிரச்சினையுமில்லை.
– மிக்க நன்றி மிஸியே, அழகா இருக்கிறது !
– என்ன சொல்கிறாய் ? எனக்குப் புரியலை.
– உங்க ஒட்டகச்சிவிங்கி, அழகாக இருக்கிறதென்றேன். சன்னல் வழியாக வெளியே பார்ப்பதுபோல இருக்கிறது.
– ஆமாம் களைப்பின்றி அதைத்தான் செய்கிறது. அது அழகா இருப்பதும் உண்மைதான்.
இத்தனை அழகா வேறொன்றைப் பார்த்ததில்லையென அப்தூலயே தெரிவித்தான். அவன் உயரத்திற்கு இருந்தது, துணிகொண்டு செய்திருந்தார்கள். கடைசியாக ஒருமுறை பார்த்தவன், நாற்காலியிலிருந்து எழுந்துகொண்டான்.
இயக்குனர் அலுவலகத்திலிருந்து வெளியேறியவன், கூடம் படிகள் என வேகமாகக் கடந்தான். இதை உடனே அவனுடைய தாத்தாவிற்கு எழுதவேண்டுமென்ற ஆர்வம் இருந்தது.
இயக்குனரைச் சென்று பார்த்தேன். அவருடைய அலுவலகத்தில் ஒரு ஒட்டகச்சிவிங்கி இருக்கிறது . உண்மையானதல்ல. ஆனால் ஆப்ரிக்காவைப் பற்றி அவரிடம் பேச எனக்குப் பெரிதும் உதவியது. பின்னர் அவரிடம் என்னுடைய பெரியத் தாத்தாவை அழைக்கக்போகிறேன், அவருக்கு நமது பல்கலைக்கழக விடுதியில் ஓர் அறையை நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றேன். சில விதிமுறைகள் இருக்கிறதென்றார். மாநில கலைப்பண்பாட்டுத்துறை அலுவலகத்தைப் பற்றி என்னிடம் தெரிவித்தார். எனக்குத் தற்ஓதைக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. உங்கள் ச்கோதரர் மிகப்பெரியக் கதைசொல்லியென்றும், அவர் ஆப்ரிக்காவெங்கும் அடைந்த புகழை ஸ்ட்ராஸ்பூர்கிலும் அடைவார் என்றேன். கதைசொல்லி தாத்தாவை உடனே அழைக்கலாம் என்ற பதில் அவரிடமில்லை. அதற்கென்று சில விதிமுறைகள் இருகின்றன. ஆனால் அவரிடம் அச்சமின்றி பேசமுடிந்தது எனது கோரிக்கையை மறுக்கக்கூடாதென்று சொல்லியிருக்கிறேன். காதுகொடுத்து அனைத்தையும் கேட்டவர் இறுதியில் சம்மதம் தெரித்திருக்கிறார். நீங்கள் சொன்னதுபோலவே எனது முயற்சியில் ஜெயித்தியிருக்கிறேன். அவ்வார்த்தைக்கு ஐந்து முறை அடிக்கோடிட்டான். அவர் வருகைக்காக நான் காத்திருக்கிறேன், என்று முடித்தான்.
(தொடரும்[
Like this:
Like ஏற்றப்படுகின்றது...