Monthly Archives: பிப்ரவரி 2020

ஆனந்தரங்கப்பிள்ளை – 4

கருமமே கண்ணாயினார்

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார் கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயினார்

இவை ஒரு துறையில் தன்னை முன்நிறுத்தி அத்துறையில் ஒளிர்கிற மனிதர்களுக்கான இலக்கணங்கள். நமது பிள்ளயும் இவ்விலக்கணப்படி வாழ்ந்தார் என்பதை ஆதாரபூர்வமாகத் தெரிவிப்பவை பணிக்காலத்தில் தினந்தோறும் எழுதிய நாட்குறிப்பு. இந்த நாட்குறிப்புகள் குறித்து பல்வேறு புலங்களின் ஆய்வதும் விவாதிப்பதும் அவசியமாகிறது. பிள்ளையைப் பற்றிய இத்தொடருக்கு முதுகெலும்பாக இருப்பவை அவை. எனினும் அவற்றைக்குறித்து தொடரின் இறுதியில் விரிவானதொரு பார்வையை முன்வைக்கத் திட்டம். காரணம் இடைபட்ட அத்தியாங்களில் சொல்லப்படும் செய்திகள் அவருடைய நாட்குறிப்பு பற்றிய இறுதி அத்தியாயத்தை ஓரளவு புரிதலுடன் அணுக உதவும்.

தலைமை என்பது இருத்தல் சார்ந்த விடயமல்ல,ஆட்டுவித்தல் சார்ந்த பண்பு. பிடித்துவைத்த பிள்ளையாராக தலைமையில் அமர்ந்திருக்கிற மனிதர்களைப் பார்த்திருக்கிறோம். எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத காரணங்களால் தலைமைப்பொறுப்பேற்று, துணை நிற்கும் நபர்களால் வழி நடத்தப்பட்ட தலைமைகளுக்கு உலகில் சான்றுகள் நிறைய உண்டு. பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் புதுச்சேரி கவர்னர் பதவி வகித்த துய்ப்ளே என்கிற தலைமைப் பம்பரத்தை சுழலச் செய்த நூல்கயிறும் கைகளும் பிள்ளைக்குரியவை. அவர் துரியோதனன் தலைமையை அழிவில் நிறுத்திய சகுணியல்ல, அவசியம் நேர்ந்தபோது பார்த்தனுக்கு தேரோட்டியாகவும் அமர்நது பாண்டவர்களுக்கு வெற்றியைத் தந்த மகாபாரதக்  கண்ணன்.

 

நண்பர்களே ! நமக்குக் கிடைத்திருக்கும் பிள்ளையின் நாட்குறிப்புகளில் முதல் நாட்குறிப்பு நளவருடம் ஆவணி மாதம் 25ந்தேதி எழுதப்பட்டுள்ளது அல்லது ஜூலியன் நாட்காட்டிப்படி 1736ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ந்தேதி தொடங்குகிறது. அதிசயமாக இந்த நாளில் நடந்ததாகப் பிள்ளை பதிவு செய்யும் சம்பவம் முக்கியம் :

அன்றைய தினம் காலை எட்டுமணிக்குக் கூடிய நிறுவனத்தின் ஆலோசனைக்குழு தங்கள் குழுவில் புதியதொரு அங்கத்தினரை நியமனம் செய்கிறார்கள் அவர் பெயர் துய்லொரான் (M. Dulaurens). நியமனப்பத்திரத்திரத்தில் இப்பொழுது புதிய உறுப்பினர் உட்பட பிறஉறுப்பினர்கள் கையொப்பம் இடவேண்டும். பழைய உறுப்பினர்களில் ஒருவர் துமெலியா (M. Dumeslier). அவர் தன்னுடைய கையெழுத்தைப் போடுகிறபோது, உறுப்பினர் வரிசையில் புதிய உறுப்பினர் பெயர் அவர் பெயருக்கு மேலே இருக்கிறது. ஏற்கனவே இப்படியொரு பிரச்சனையில் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் அப்போதைய முதன்மை நிர்வாகி இக்குறையைப் பிறகாலத்தில் தவிர்ப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். இருந்தும் அது தொடர்வது துமெலியா என்பருக்கு ஒரு மானப்பிரச்சினை. அலோசனைக்குழு கூட்டத்தின் முடிவுக்குப்பிறகு, பிற்பகல் கவர்னர் துய்மா (Dumas)வைச் சந்தித்து தமது மனக்குறையைத் தெரிவிக்கிறார் :

« முசே துலோராம் எனக்குப் பிறகு கையெழுத்துப் போடுகிறதானால் நானிந்த உத்தியோகத்திலேயே இருப்பேன் ; இல்லாவிட்டால் எனக்கு முன்னே அவன் கையெழுத்துப் போடுகிறதானால் எனக்குக் கும்பெனியார் உத்தியோகம் கவலை இல்லை » என்கிறார். அதற்குக் குவர்னர் : « கும்பெனியார் எழுதியனுப்பின படிக்கு நான்கொண்டு நடப்பிக்க வேணுமே யல்லாமல் அதைத்தள்ளி நடத்துகிறது எனக்கு ஞாயமில்லை » எனப் பதில் தருகிறார். « நீர் நானந்தப்படிக்கு நடப்பிப்பேன் என்று வார்த்தைப்பாடு கொடுத்தீரே ! அந்தப்படிக்கு ஒரு வருஷம் நடப்பித்தீரே ! இன்னும் பன்னிரண்டு மாதம் நடத்துகிறதானால இந்த உத்தியோகத்தில் இருக்கிறோம் இல்லாவிட்டால் எனக்கு இந்த உத்தியோகம் கனவில்லை » என்பது துமெலியா கவர்னருக்கு அளிக்கும் பதில். இவை அனைத்தும் பிள்ளையின் மொழியில் நாம் வாசிக்க கிடைக்கும் செய்தி. வியப்பான தகவலும் கூட. இந்நிகழ்வோடு பிள்ளை தன் நாட்குறிப்பைத் தொடர்வது நமக்கு வியப்பை அளிக்கிற்து.

பணியையும் அப்பணிசார்ந்த நெறியையும் கடைபிடித்த நம்முடைய துபாஷ், பணியை நிறைவேற்றுகிறபோது சுயமரியாதைக்கு இழுக்குவருமெனில் எத்தகைய முடிவுக்கும் வரக்கூடியவர் என்பதைக் கோடிட்டுக் காட்டும் கட்டளைக் கல்லாக இச்சம்பவத்தை நாம் அணுகலாம்.

நாட்குறிபில், ஒவ்வொருநாளும் தம் வாழ்க்கையில் குறுக்கிட்ட சம்பவங்கள் அனைத்தையும் பிள்ளை எழுதினார் என்கிற பார்வையை, பொதுவில் நாம் வைக்கிறோம். வாசிக்கின்ற நமது மன நிலையை வைத்து அவற்றை எடைபோடவும் செய்கிறோம். ஆனால் எழுதியவரின் மனப்பாங்கென்று ஒன்றுண்டு. பிள்ளையின் பெற்றோரோ, பிள்ளையோ பிறரிடம் சேவகம் பார்த்து பசியாறவேண்டிய நெருக்கடியில் இல்லை. வறுமை வெகுதூரத்தில் இருந்தது. பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்துடனான உத்தியோகம் சமூகக் குறியீடாக பிள்ளையின் தந்தையையும் பிள்ளையையும் அடையாளப்படுத்த உதவியது என்பது உண்மை. அதேவேளை இப்படியொரு பிரச்சனை அவருடைய வாழ்க்கையில் குறிக்கிட்டிருப்பின் இதனை எப்படி அணுகி தன்னை முன்னெடுத்திருப்பார் என்பதற்கும் உதாரணங்கள் இருக்கின்றன.

பிள்ளையின் உறவினர் நைனியப்ப பிள்ளை பதவிக்காலத்தில் தவறான குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டு இறந்த செய்தி உங்களுக்கு புதியது அல்ல. அவருடைய மகன் குருவப்ப பிள்ளை அக்குற்றச்சாட்டை மறுத்து உரிய நீதிகேட்டு பாரீஸ் சென்றார், வழக்கில் வென்றார், நட்டயீட்டைப் பெற்றார் என்பதெல்லம் பழையசெய்திகள். எனினும் தந்தை வகித்த துபாஷ் பதவியைத் திரும்பத் தனக்குப் பெற குருவப்ப பிள்ளை கிறித்துவ மதத்தை த் தழுவுகிறார். அவருடைய இறப்பிற்குப் பிறகு அனுபவம், திறமை இவற்றை நன்கறிந்து பாராட்டிவந்த கம்பெனியின் மூத்த நிர்வாகிகளின் ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் நமது பிள்ளை துபாஷாக நியமனம் செய்யப்பட்டிருக்கவேண்டும், ஆனால் அது நடைபெறவில்லை. காரணம் அவர் கிறித்துவர் இல்லை. கிறித்துவர் அல்லாத ஒருவரை துபாஷாக பதவி நியமனம் ஆவதை புதுச்சேரி கிறித்துவமத குருமார்கள் விரும்பவில்லை. ஆனந்தரங்கப்பிள்ளை மதம் மாறியிருப்பின் குருவப்ப பிள்ளையைப்போலவே துபாஷாக வந்திருப்பார்.ஆனால் ஆந்தரங்கப்பிள்ளை தமது சுயமரியாதையை இழக்கவிரும்பவில்லை. தமது வினைத் திட்பத்தில் பிள்ளைக்கு அளவற்ற நம்பிக்கை இருந்தது. தன்னுடைய நேர்மையும், சாதுர்யமானப் பேச்சும்

தனக்குரிய சன்மானத்தை பெற்றுத்தருமென உறுதியுடனிருந்தார். பிள்ளை குடும்பத்திலிருந்து பறிக்கப்பட்ட துபாஷ்பதவி, இவரைத் தேடிவருகிறது.

பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தின்போது குருவப்ப பிள்ளைபோல தங்கள் பூர்வீக அடையாளத்தை ‘ La rénonciation ‘ என்ற பெயரில் துறந்து பிரெஞ்சு பெயரைக் குடும்பப் பெயராக (surname or famaily name) மாற்ரிக்கொண்டு, மதத்தையும் மாற்றிக்கொண்டு பலன் பெற்றவர்கள் அனேகர். இன்றைக்கு பிரான்சுநாட்டின் குடியுரிமைச் சட்டம் மதம் மாற வற்புறுத்தவில்லை. எனினும் சில சலுகைகள் கிடைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறபோதும் பிரெஞ்சுக் குடியுரிமைக்கு விண்ணப்பிகிறபோது, புதுச்சேரி தமிழர்கள் கிறித்துவ பெயர்களை குடும்பப் பெயராக ஏற்றுக்கொள்கிறவர்கள் உண்டு. Dumont வடிவேலு, Antoin ராமசாமி என்று அழைக்கபடும் தமிழர்கள் பிரான்சில் ஏராளம். இக்கட்டுரையாளனான எனக்கும் அத்தகைய நெருக்கடி எற்பட்ட து. என்னுடைய பெயர் உண்மையில் நாகரத்தினம்( மதுராந்தகம் தாலுகாவில் செய்யூர் என்ற ஊரில் நாகரத்தினம் பிள்ளை என்ற உறவினர் செல்வாக்காக வாழ்ந்தவர், அவர் பெயரை எனக்கு வைத்திருந்தார்கள் ) என்னுடைய தகப்பனார் பெயர் இராதாகிருஷ்ணப்பிள்ளை. அவர் கிராம முன்சீப்பாக இருந்தவர். 1985ல் மனைவிமூலம் (அவர்கள் குடும்பப் பெயர் Eboly) பிரெஞ்சுக் குடியுரிமைப்பெற்றேன். பிரான்சுக்கு வந்ததும் ஏதாவதொரு கிறித்துவ பெயரை குடும்ப பெயராக ஏற்கின்ற நெருக்கடிக்குத் தள்ளப்பட்டேன். நீதிமன்றத்தில் விண்ணப்பமிட்டு, குடும்ப பெயராக நாகரத்தினத்தையும், முதற்பெயராக (First name) எனதகப்பனார் பெயரில்ருந்து கிருஷ்ணாவையும் வைத்துக்கொண்டேன். அன்றியும் காவல் நிலையங்கள் நீதிமன்றங்கள் ஆகியவற்றில் பிரெஞ்சு மொழி பேசவராத பிரச்சனைக்குரியத் தமிழர்களுக்கு மொழிபெயர்க்க அவ்வப்போது அழைக்கப்படுகிறேன். அவ்வகையில் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு 9 நூல்கள், தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு 2 நூல்கள் ஆக பிள்ளையின் பெருமையைப் பேச யாம் இதழ் வாய்ப்பை அளித்ததில் மிக்க மகிழ்ச்சி.

தொழில் திறம்(Professionalism)

பிள்ளையின் ஆளுமைப் பண்பில் நான் முதலாவதாப் பார்ப்பது அவருடைய தொழில் பக்தி அல்லது தொழில் திறம். கல்வியோ, பணியோ, குடும்பமோ, நட்போ எதுவென்றாலும் அந்த ஒன்றில் உண்மையாகவும் அர்ப்பணிப்பு ஈடுபாட்டுடனும் நடந்துகொள்வது சம்பந்தப்பட்டவர் வெற்றிக்கு உதவுகிறது. ஒரு வகுப்பில் இருபது மாண்வர்கள் இருக்கிறார்கள் அவர்களில் பதினைந்து பேர் இறுதி த் தேர்வில் தேவாகிறார்கள், அவர்களில் முதல்வகுப்பில் தேர்வாகிற்வர்கள் நான்கு அல்லது ஐந்துபேர். இந்த ஐந்து பேருக்கும் பிற பனினைந்து பேருக்கும் என்ன வேறுபாடு, முதல் வகுப்பில் தேறிய ஐவரும் தல்விக்கு உண்மையாகவும் அர்ப்பணிப்பு ஈடுபாட்டுடனும் நடந்துகொண்டிருக்கிறார்கள் என்று பொருள். தொழில்திறத்திற்கும் அத்தகைய கடப்பாடு தேவைப்படுகிறது.

முடியாட்சியில் ராஜபக்தி ராஜவிசுவாசம் போன்ற சொற்களை கேள்விப்பட்டிருப்பீர்கள், ஜனநாயக உலகில் உண்மையான விசுவாசம் என்ற சொல்லை அறிந்திருக்கிறோம். கண்மூடித்தனமான விசுவாசம் தொழில் திறம் ஆகாது.

« கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. »

என்கிற குறள் வகுத்த வினைத்திட்பத்தை நெறியாக கொண்டு வாழ்ந்து காட்டியவர் பிள்ளை. சொந்த தோற்றத்தில் காட்டிய அக்கறை, பணிசார்ந்த கோட்பாடுகளில் கொண்டிருக்கும் மரியாதை, செய்யும் தொழிலே தெய்வம் எனும் தெளிவு, இம்மியும் பிசகாத செய் நேர்த்தி, ஆகிய உட்பிரிவுகளை தன்னுள் அடக்கியது தொழில் திறம். இதனைச் சுருக்கிச் சொல்வதெனில் முழுமையன ஈடுபாடு, நேர்மை மற்றும் செயல் திறன், எண்ணிய முடித்தல் .

குணங்களைச் சொல்லிவிட்டோம் . இக்குணங்களின் நோக்கம் என்னவாக இருக்கமுடியும் ?

பலன்கள்.

இறுதியில் அடையும் பலன்களால் ஒருமனிதனின் தொழிலாற்றலை அளப்பதென்பது ஒருவகை. சுற்றியுள்ள மனிதர்களால் ஒருவரின் தொழில் திறத்தை அளப்பதென்பது இன்னொரு வகை. செய்பவரைக் காட்டிலும் செய்யும் மனிதரை அருகிலிருந்து பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், நமது பெருந்தகைகளிடம் பணி சார்ந்த பலன்களை எதிர்பார்ப்பவர்களாக இருக்கலாம். சக ஊழியர்களாகப் பணியாற்றி, ஒருவருடைய செயல்திறம், தனது வளர்ச்சியைப் பாதிக்கிறது எனக் மனம்

புழுங்கலாம். நமது பிள்ளையின் தொழில் திறமையைக் கண்டு வியப்பவர்களாக துய்ப்ளே முதலான கவர்னர்கள் இருந்தார்கள். அவர் வளர்ச்சிகண்டு பொறாமையில் புழுங்கியவர்களாக கனகராய முதலியாரும் பிற தமிழர்களும் இருந்தார்கள். நமக்கு அவர் துபாஷ் உத்தியோகத்தின் பெருமையை உரத்துச் சொல்வது, அவர் காலத்தில் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி அடைந்த வளர்ச்சியும் இலாபமும்.

—————————————————————————

 

ஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை– 3,

அ. துய்ப்ளே வருகையும் ஆனந்தரங்கப்பிள்ளையின் துபாஷ் உத்தியோகமும்

ஆனந்தரங்கப்பிள்ளை தமது விடலைப்பருவத்திலேயே, பரங்கிபேட்டையிலிருந்த பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நெசவுச் சாலையையும், சாயக்கிடங்கையும் நிர்வகிக்க லெனுவார் என்கிற புதுச்சேரி கவர்னரால், கவர்னரின் சுய விருப்பத்தின் பேரில் தேர்வு ஆனார் என்பதை சென்ற இதழில் வாசித்திருப்பீர்கள்.

லெனுவார் என்பவருக்குப்பிறகு,பியர் பெனுவா துய்மா (Pierre Bênoit Dumas) என்பவர் 1735 ஆம் ஆண்டு கவர்னர் பொறுப்பை ஏற்கிறார். லெனுவார் போலவே துய்மாவும் திருவேங்கடம் பிள்ளை அவர் மகன் ஆனந்த ரங்கப்பிள்ளை இவர்களின் நேர்மை, திறமை இரண்டிலும் அதீத நம்பிக்கை கொண்டிருந்தவர். பொதுவாகவே புதுச்சேரி கவர்னராக நியமிக்க்ப்பட்டவர்கள் அனைவரும் திடீரென்று இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலகத்தில் வேறு பணிகளை ஆற்றிய அனுபவசாலிகள். எனவே நிறுவனத்தோடு தொடர்பிலிருந்த புதுச்சேரி இந்தியர்களின் நடத்தைகளை, பண்புகளை அருகிலிருந்து பார்த்து சில கருத்துகளை வைத்திருந்தார்கள்.

பிரெஞ்சு கிழக்கிந்திய வணிக குழுமத்தை ஓர் முழுமையான ஓர் அரசு நிறுவனம் என்றும் கூறமுடியாது. பிரெஞ்சு மன்னர் ஆட்சியின் ஆசியுடன், ஆதரவுடன் இயங்கிய குழுமம். அதனை நிர்வகித்த கவர்னரும் பிறருங்கூட(துபாஷ்களும் அடக்கம்) குழுமத்தின் ஆசியுடன் முமுதலீடு செய்து இலாபம் ஈட்டினார்கள். பொதுவாகவே நிர்வாக அரசியலைக் காட்டிலும் பணம் புரளும் வணிக அரசியலுக்கு விசுவாசம், திறமை போன்றவை ஊழியத்திற்கென எதிர்பார்க்கப்படும் பண்புகள் என்கிறபோதும் நேர்மையும் நானயமும் கூடுதலாக எதிர்பார்க்கப்படும் பண்புகள். இத்தகைய சூழலில் புதியவர்களை நியமித்து அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அறிந்த மனிதர்களை துபாஷாக நியமிப்பது புத்திசாலித்தனமென கவர்னர்கள் கருதி இருக்கலாம். இந்நிலையில் துய்மாவின் பதவிக்கு ஆபத்தை அளிக்கின்ற வகையில் இந்திய துணைக்கண்டத்தில் ஆதிக்கப் போர்கள் பரவலாக இடம் பெற்றன. தென்னிந்தியாவும் இத்தொத்து வியாதியிலிருந்து தப்பவில்லை.

1740ஆம் ஆண்டு மராத்தியர்களால் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் வணிக செயல்பாட்டுக்கு உதவிய தரங்கம்பாடி தாக்குதலுக்கு உள்ளானது. புதுச்சேரி அருகிலிருந்த ஆட்சியாளர்கள் மாராத்தியர்களுடன் தொடர் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த காலம். தரங்கம்பாடி இழப்பு பெரிய இழப்பு என்கிறபோதும் புதுச்சேரியில் பாதிப்பு இல்லை என்று தேற்றிக்கொண்டு பிரெஞ்சு கிழக்கிந்திய நிர்வாகத்தினர் இருப்பதையும் இழந்துவிடக்கூடாதே என்பதற்காக பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பதுதுபோல நடந்துகொண்டனர்.

இத்தகைய சூழலில் தான் துய்ப்ளே (Joseph François Dupleix) 1742 ஆம் ஆண்டு புதுச்சேரி கவர்னராக நியமனம் ஆகிறார். ஏற்கனவே தெரிவித்ததைப்போல துய்ப்ளே புதுச்சேரிக்குப் புதியவர் அல்லர். 1720 லிருந்து 1730 வரை பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாக குழுவின் உறுப்பினராக இருந்த அனுபவம் அவருக்கு உண்டு. எனவே முந்தைய கவர்னர்களைப்போலவே திருவேங்கடம் பிள்ளையையும், ஆனந்தரங்கப்பிள்ளையையும் நன்கு அறிந்தவர். துய்ப்ளே கவர்னர் பொறுப்பேற்றபோது துபாஷ் பணியில் இருந்தவர் கனகராயமுதலியார். நைனியப்பப்பிள்ளை தரகுத்தொழிலைத் தவறாகப்பயன்படுத்தி தன்னை வளர்ந்துக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டு இறந்ததும், அவர் மகன் குருவப்ப பிள்ளை பிரான்சு சென்று சந்திக்க வேண்டியவர்களச் சந்தித்து தன் தந்தை குற்ற மற்றவர் என நிரூபித்ததும் ; அதற்கு நன்றிக் கடனாக கிறித்துவ மதத்தை அவர் தழுவியதும் ; இந்த மதமாற்றமே அவருடைய துபாஷ் நியமனத்தை கிறித்துவ மதகுருமார்கள் அனுமதிக்க காரணம் ஆயிற்று என்பதும் பழைய செய்தி. கிறித்துவராக மதம் மாறிய குருவப்ப பிள்ளை ஆயுளைக்கூட்டிக்கொள்ள சரியாக மண்டியிட்டு பிரார்த்திக்கவில்லை போலிருக்கிறது, விளைவாக குறுகியகாலத்தில் பரலோகம் அழைத்துக்கொள்கிறது.

குருவப்பப் பிள்ளை இறந்த பிறகு திருவேங்கடம்பிள்ளைக்கு துபாஷ் உத்தியோகம் கிடைத்திருக்கவேண்டும், திறமை மட்டும்போதாதே, திருவேங்கடம்பிள்ளைக்கு சுபாஷாக தகுதியிருந்தும் அப்போதையை கவர்னர் மதகுருமார்களின் பேச்சைக்கேட்டு ( அவர் கிறித்துவர் இல்லை என்கிற காரணத்தை முன்வைத்து) கனகராயமுதலியாரை (1725 ) துபாஷாக நியமனம் செய்கின்றனர். துய்ப்ளே 1742 ஆம் ஆண்டு கவர்னராக பொறுப்பேற்றபோது ஆக இந்த கனகராய முதலியாரே துபாஷ் பணியைத் தொடர்கிறார். அதுபோலவே ஆனந்த ரங்கப்பிள்ளையிடத்தில் துய்ப்ளேவுக்கும் அவருக்கு முந்தைய கவர்னர்களுக்கும் அபிமானம் இருந்தும் அவரை துபாஷாக நியமிக்க முடியாத நிலை. இந்நிலையில்தான் உடல்நிலைப் பாதிப்பினால் நிகழ்ந்த கனமுதலியாரின் இறப்பு, பிள்ளைக்குச் சாதகமாக முடிந்தது. நியமனத்தில் குறுக்கிட்ட மதகுருமார்கள் அவ்ர்ளுக்கு ஆதரவாக இருந்த மனைவி ஆகியோரின் கருத்துக்களை ஒதுக்கிவிட்டு எடுத்த முடிவில் உறுதியாக இருந்த துய்ப்ளே ஆனந்தரங்கப்பிள்ளையை அதிகாரபூர்வமாக 1747ஆம் ஆண்டில் சுபாஷாக பதவியில் உட்காரவைக்கிறார். பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் வரலாற்றில் துப்ளேவும் ஆனந்தரங்கப்பிள்ளையும் இணைந்து பணியாற்றிய வருடங்களே பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் பெருமைமிகு வருடங்கள் எனச் சொல்லவேண்டும்.

ஆ. ஆனந்த ரங்கப்பிள்ளை என்கிற என்கிற பெருந்தச்சன் :

இத்தொடரின் தலைப்பு « ஆன ந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை, வரலாறு ஆளுமை» என்று உள்ளது. பல நண்பர்களுக்குக் குறிப்பாக ஆனந்தரங்கப்பிள்ளையை பற்றி அறிந்தவர்களுக்கு  தலைமையை ஆளுமையுடன் இணைத்துக் காண்கிறவர்களுக்கு ஒரு கேள்வி எழக்கூடும். அவர் பிரெஞ்சுக்கார்களின் துபஷாகத் தானே இருந்தார், புதுச்சேரி ஆட்சி அரசியலில் எந்த அரியணையிலும் அமர்ந்ததாக செய்திகள் இல்லையே என யோசிக்க இடமுண்டு. பிள்ளை பிரெஞ்சு நிர்வாகிகளின், உள்ளூர் மக்களின், ஆன்றோர்கள், கவிஞர்களின் இதய அரியாசனத்தில் இடம்பிடித்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது. இது « வெந்த சோற்றைத் தின்று விதி வந்தால் சாகிறது » என்ற கோட்பாடுடைய சராசரி மனிதர்களுக்கு வாய்ப்பதில்லை.

நண்பர்களே தலமை என்பது இரு வகையில் கிடைக்கிறது :ஒன்று பிறப்பால் மற்றது உழைப்பால். பிறப்பால் தலைமைப்பொறுப்பை அடைவதை முடிமன்னர்கள் வரலாற்றில் காண்கிறோம். இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும், ( சர்வாதிகார நாடுகளை தவிர்த்துவிடுவோம்) ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து பெருவாரியான மக்களின் ஆதரவு பெற்றவர்களே ஆட்சிக்கட்டிலில் அமரமுடியும் என்கிற நாடுகளிலும் பிறப்பால் தலமையைத் திணிக்கும் வாரிசு அரசியல் நடைமுறை உண்மை.

ஆனந்தரங்கப்பிள்ளையின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். அரியாசனத்திற்கு உரியவர்கள் மட்டுமின்றி, பிற நிர்வாகிகளும் மன்னரின் வாரிசாகவோ, உறவினர்களாகவோ இருக்கவேண்டும் என்பது முடியாட்சியின் எழுதப்படாத அரசியல் சாசனம். « அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், குடிமக்களுக்குப் பதில் சொல்லும் அவசியமில்லை » அதுவே Divine right of kings* என்பது முடியாட்சியின் கோட்பாடு. பிரெஞ்சு மன்னராட்சி அப்போதைய ஐரோப்பியா ஆட்சிகளுக்கிடையே நிலவிய அரசியல் மற்றும் வணிக போட்டிளின் படி தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காலூன்றிய பின், பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகச் சங்கத்தை கவனித்துக்கொள்ள அரசகுடும்பத்தினரையோ அல்லது அவர்களுக்கு வேண்டியவர்களையோ அனுப்பி வைத்தனர், என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும்.

வணிகச் சங்கத்தின் புதுச்சேரி நிர்வாகியாக தலைமை ஏற்க ஐரோப்பியருக்கே கூட எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்கிறபோது ஆனந்தரங்கப்பிள்ளை போன்ற ஒரு ஆசியர், ஐரோப்பியரால் காலனி நாட்டில் இரண்டாம் வகை குடிமக்களாக நடத்தப்பட்ட தமிழர்களில் ஒருவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திப்பார்க்க அவர்களுக்குத் தலை எழுத்தா என்ன ? தவிர பிரெஞ்சு கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்ட உள்ளூர் ஆசாமிகள் கிறித்துவர்களாக இருக்கவேண்டும் என்பதில் ஐரோப்பிய மதகுருமார்கள் கறாராக இருந்தனர் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இந்நிலையில் கிறித்துவர்கள் அல்லாத நைனியப்ப பிள்ளை அவர் மைத்துனர் திருவேங்கடம்பிள்ளை, அவருக்குபின் அவருடைய திருக்குமரன் மூவரும் துபாஷ் பொறுப்பில் அமர முடிந்ததெனில் அவர்கள் உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைத்த பரிசு ஆகும். ஆனால் பிற துபாஷ்களுக்கும், துபாஷ் ஆனந்தரங்கப்பிள்ளைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. மற்றவர்கள் துபாஷாக மட்டுமே பணி ஆற்றினார்கள். ஆனால் நமது பிள்ளை கவர்னரின் நண்பராக, அரசியல் ஆலோசகராக, அந்தரங்க காரியரிசியாக, மொழிபெயர்ப்பாளராக, ஏற்றுக்கொண்ட பணியை செவ்வனே முடிக்கும் வல்லமைக்குச் சொந்தக் காரராக, ஆட்சியாளரின் மன நோய் தீர்க்கும் குணவானாக வாழ்ந்தார் என்பது வரலாறு தரும் செய்தி.

தலைமை ஏற்பவர்கள் அனவருமே தலைமைக்குரிய பண்புகளைக் கொண்டிருப்பார்கள் என்பதில்லை. தலைமை என்பது 1. ஏற்றுக்கொண்ட பொறுப்பில் காட்டும் உண்மையான ஆர்வம் 2. ஒழுங்கு, நேர்மை 3. சொல்வன்மை 4. சுற்றியுள்ளவர்களிடம் காட்டும் விசுவாசம், ஏற்படுத்திக்கொள்ளும் நம்பிக்கை 5. முடிவில் தெளிவு 6. நிர்வாகத் திறன் 7. மனிதர்களின் திறனறிந்து பொறுப்பை ஒப்படைக்கும் தேர்வறிவு 8. ஈர்ப்புத் திறன். எனும் முக்கியப்பண்புகளைக் கொண்டது.

வெற்றிபெற்ற தலைவர்கள் பொதுவில் இப்பண்புகளை கொண்டிருப்பார்கள், அல்லது இப்பண்புகளை கொண்டவர்களால் வழிநத்தடப்படிருப்பார்கள். விக்கிரமாதித்தனுக்கு ஒரு பட்டிபோல, சந்திர குப்த மௌரியனுக்கு ஒரு கௌடியல்யர் போல ஒவ்வொரு தலமைக்குப் பின்பும் நிழல் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களே உண்மையான தலைவர்களும் ஆவார்கள். இம்மனிதர்களின் பண்புகளாலேயே ஒரு தலைவனின், அவனை நம்பியிருக்கிற ஆட்சிபரப்பின் அதற்குட்பட்ட குடிமக்களின் உயர்வும் தாழ்வும் சபிக்கப்பட்டிருக்கிறது நண்பர்களே ! துய்ப்ளேயின் பிரெஞ்சு புதுச்சேரியிலும் உண்மையான தலைமை பிள்ளையிடமிருந்தது, அதனால்தான் அக்காலக் கட்ட ம் ஒளிரவும் செய்தது.

« கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு »

எனும் குறள் நெறியை, தமது பணியில் பரிசோதித்து, சாதித்துக் காட்டியவர் பிள்ளை.

(தொடரும்)

———————————————————————————————

* Divine right of kings – the doctrine that kings derive their right to rule directly from God and are not accountable to their subject.

ஆனந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை வரலாறு ஆளுமை – 2

சென்னையில் பிறந்த  ஆனந்தரங்கப்பிள்ளை பிரஞ்சு நிர்வாகத்தில் உள்ளூர் மக்களின் தலைவராக,  துபாஷாக ஆட்சியாளர்களை பின்னிருந்து இயக்கிய கர்த்தாவாக மாறுவதற்கு முன்பாக புதுச்சேரி வரலாற்றைச் சுருக்கமாக அறிவது நண்பர்களுக்கு உபயோகமாக இருக்குமென நினைக்கிறேன்.

புதுச்சேரி பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் வரலாறு என்பது ஆனந்தரங்கப்பிள்ளையின் வரலாறு என்றால் அது மிகையில்லை. பதினேழாம் நூற்றாண்டில் சென்னையும் புதுச்சேரியும், மதுரையைப் போலவோ தஞ்சையைப்போலவோ  வரலாற்றுத் தலங்கள் அல்ல, நெடிய வரலாற்றினை கொண்டவையும் அல்ல.  பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சுக்காரரர்கள் வசம் புதுச்சேரியும் அதனைச் சூழ்ந்த கிராமங்களும் வருவதற்கு முன்பாக வெகுகாலம் அவை செஞ்சி குறுநில மன்னர்களின்  ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய முடியாட்சிகளுக்கிடையில் ஆசிய நாடுகளை வணிக நோக்கில் கைப்பற்றுவதில் போட்டிகள் நிலவின. பிரெஞ்சுகாரர்களின் முதல் வணிகக்கிடங்கு ஔரங்கசீப் அனுமதியுடன் கி.பி.1666 ஆம் ஆண்டு சூரத் அருகே உருவாயிற்று. 1672ம் ஆண்டில் பிளாங்க்கே தெ லா ஹயே (Blanquet de la Haye) கோல்கொண்டா ராணுவத்தைத் தோற்கடித்து சென்னை சாந்த்தோமை கைப்பற்றுகிறார்.  செஞ்சி அதன் கட்டுப்பாட்டிலிருந்த வலிகொண்டாபுரம்(பெரம்பலூர் அருகிலுள்ள) பகுதிகளில் ஆட்சியிலிருந்த ஹைதராபாத் நிஜாமின் பிரதிநிதிகள் பிரெஞ்சு ராணுவம் தங்களுக்குப் பக்க பலமாக இருக்குமெனக் கருதி  புதுச்சேரி மற்றும்  பறங்கிப்பேட்டையில் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியை நிரந்தரமாக அமைத்துக்கொள்ள(கி.பி1673) அனுமதிக்கின்றனர். பின்னர்,  நிறுவனத்தின் முதல் நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றவர் பிரான்சுவா மர்த்தேன்(François Martin). பிரெஞ்சு ஆதிக்கத்தை இந்தியாவில் பரவச்செய்யும் நோக்குடன் வணிக முயற்சியோடு இவர் ஆதிக்க அரசியலிலும் கவனம் செலுத்துகிறார்.  வலிகொண்டபுர ஹவில்தார் ஷெர்கான் லோடியிடமிருந்து பணம்கொடுத்து புதுச்சேரியிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் வரிவசூலிக்கும் உரிம ம் பெறுகிறார். செஞ்சி ஆட்சி கைதராபாத் நிஜாம் பிரதிநிதிகளிடமிருந்து மாராட்டியர் கைக்குப் போகிறது. அவர்களிடமும் அன்பளிப்பாக 50000பகோடாக்களை (ஒரு பகோடா – அக்காலத்திய 3 ரூபாய்க்குச் சமம்.) கொடுத்து பிரான்சுவா மர்த்தேன் வரி வசூல் செய்துகொள்ளும் உரிமத்தை உறுதி செய்துகொள்கிறர். தொடர்ந்து கோட்டைக் கட்டிக்கொள்ளவும் அனுமதி பெறப்படுகிறது. இதற்கிடையில் செஞ்சி ஹவில்தார் பணமுடை காரணமாக புதுச்சேரியை டச்சுகாரர்களுக்கு விற்றுவிட, அவர்களால் முற்றுகை இடப்பட்ட புதுச்சேரி கோட்டை இடிக்கபட்டு, கவர்னரும் சிறைபிடிக்கபட்டார். ரிஸ்விக் ஒப்பந்தம் புதுச்சேரியையும் கவர்னரையும் பிரெஞ்சுக்காரர்கள் திரும்பப் பெற காரணமாகிறது. மீண்டும் ஒரு கோட்டையைப் புதுச்சேரியில் ழுப்பிய பிரான்சுவா மர்த்தேன் 1706ல் புதுச்சேரியிலேயே மரணமடைந்தார். நம்முடைய ஆனந்தரங்கப்பிள்ளையின் வாழ்க்கைச் சரித த்தை இங்கேதான் தொடங்க வேண்டியுள்ளது.

பிள்ளையின் பிறப்பும் புதுச்சேரி  வருகையும் :

அதிகம் அறிதலின்றி நிகழும் ஒரு மனிதரின் பிறப்பு பெருமை அடைவது ஊரறிய தனது இறப்பை அது முடித்துக்கொள்கிறபோதுதான். ரா. தேசிகன் பிள்ளையின் ஆனந்த ரங்கப்பிள்ளை வாழ்க்கைக் குறிப்பின்படி சருவதாரி வருடம் (கி.பி 1709) பங்குனி மாதம்  21 ந்தேதி (மார்ச் மாதம் 30) பிள்ளை சென்னை பெரம்பூரில் பிறந்தார். ஆந்தரங்கப்பிள்ளையின் தந்தை திருவேங்கடம்பிள்ளை வணிகம் செய்து பொருளீட்டி வந்தவர்.  பொருள்தேடி புலம்பெயரவேண்டிய நெருக்கடிகள் எதுவும் அக்குடும்பத்திற்கு சென்னையில்  இல்லை. இதேவேளை பிள்ளையின் தந்தை திருவேங்கடம் பிள்ளையின் மைத்துனர்  நைனியப்ப ப்பிள்ளை என்பவர் சென்னையிலிருந்து வணிகம் செய்வதற்கென்றே புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்திருந்தார். அங்கு தொடங்கப்பட்டிருந்த பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனி, தன் வணிக அறிவுக்கு உரிய பலனைத் தரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

உள்ளூர் (இந்திய) மொழி அறிவற்ற பிரெஞ்சுக்கார்களுக்கு உள்ளூர் வணிகத் தொடர்புகட்கு  குறிப்பாக பருத்தி நெசவு அது சார்ந்த உற்பத்திப்பொருட்கள், மேற்கத்திய நாடுகளில் கீழை நாடுகளிலிருந்து எதிர்பார்க்கப்படும் பொருட்கள் அல்லது அங்கு விலைபோகக்கூடியவை இவற்றை பேரம்பேசிவாங்கவும், உரியகாலத்தில் ஏற்றுமதி செய்யவும், இறக்குமதி செய்யப்படும் மேற்குலப் பொருட்களை இந்திய வணிகரிடத்தில் விற்கவும் முதலான பணிகள்  நிமித்தமாக  உள்ளூர் மனிதர்களுடன் தொடர்புகொள்ள, புதுச்சேரி நிலப்பகுதி சார்ந்த ஆட்சியாளர்கள், பிரதிநிதிகள் ஆகியோருடன் தங்கள் வணிகத்திற்கு பிரச்சனைகள் வராது காத்துக்கொள்ளும் வகையில் இணக்கமான உறவினைப் பேண நம்பிக்கைக்கு உரிய, கூர்மையான அறிவும் பக்குவமான அணுகுமுறையும்கொண்ட, பிரெஞ்சு மொழியும் தமிழ் மொழியும் நன்கு அறிந்த இடைத் தரகர்கள்  தேவைபட்டனர். அவர்கள் இரு மொழிகள் அறிந்தவர்கள் என்பதால்  துபாஷிகள் – அக்காலத்தில் இப்பகுதி  இஸ்லாமியர் ஆதிக்கத்தின் கீழிருந்தது காரணமாக இருக்கலாம்,  தோ பாஷா, துபாஷி  –  நைனியப்ப பிள்ளைக்கும் துபாஷ் ஆகும் யோகம் வாய்த்தது. பிரெஞ்சுக் காரர்களின்  வணிபத்திற்கு உதவியதோடு, தங்கள் சொந்த வாணிபத்தையும் இவர் வளர்த்துக்கொண்டார். இந்நிலையில் எல்லாவற்றையும், தாம் ஒருவரே கவனிக்க முடியாத நிலையில் சென்னையிலிருந்த  நெருங்கிய உறவினர் திருவேங்கடம்பிள்ளையை தமக்குப் பணிகளில் துணையாக இருக்க புதுச்சேரிக்கு அழைக்கிறார். திருவேங்கடம்பிள்ளையும் அதனை ஏற்று மைத்துனருக்குத் துணையாக புதுச்சேரி வருகிறார். ஆனால் நைனியப்ப பிள்ளைக்கு வேறுவிதமான  முடிவை விதித் தீர்மானித்து வைத்திருந்த து. எந்த பிரெஞ்சு அதிகாரத்திற்கு உறுதுணையாக இருந்து அவர்களையும் வளர்த்து தன்னையும் வளர்ந்துக்கொண்டாரோ அதே பிரெஞ்சு கம்பெனியின் தலைமையால் சிறையில் அடைக்கப்பட்டு, மாளவும் வேண்டியிருந்தது.

« அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். »

அதிகார கட்டிலில் இருப்பவர்களுடன் பழகுகிறபோது நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும் அதிகமாக நீங்கிவிடாமலும் பழகவேண்டும் என்கிறார் வள்ளுவர். ஆனந்த ரங்கப்பிள்ளையின் யின் உறவினரான நைனியப்ப பிள்ளை கவனமாக இருந்திருக்கலாம். தலைமை என்பது ஒற்றைச் சொல் அல்ல அது பல்வேறு பல்வேறு பண்புகளின் கொலாஜ்.சம தளத்தில் நடக்கிறபோது சங்கடங்கள் அதிகமில்லை. ஆனால் மலையேறுகிறபோது எச்சரிக்கையுடன் கால் வைக்கவேண்டும்.

நைனியப்ப பிள்ளைக்கு நேர்ந்த முடிவு

பிரான்சுவா மர்த்தேனுக்குப்பிறகு கியோம் ஆந்த்ரே எபேர் என்பவர் பிரெஞ்சு கிழக்கிந்திய நிர்வாகியாக  ஆனார். அப்போது முத்தியப்ப முதலியார் என்பவர் தரகராக  அதாவது துபாஷாக பணிபுரிந்தார். முத்தியப்ப முதலியாரின் தரகுப் பணியைச் சந்தேகித்த  எபேர் அவரை நீக்கிவிட்டு அவருக்குத் துணையாக பணிபுரிந்த நைனியப்ப பிள்ளையை1708 ஆம் ஆண்டு பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய தரகராக அதாவது துபாஷாக நியமித்தார். ஆனால் நைனியப்ப பிள்ளையின் தரகர் நியமனத்தை  புதுச்சேரி கிறித்துவ மதகுருமார்கள் ஏற்கவில்லை, கடுமையாக எதிர்க்கின்றனர். எனவே பிரெஞ்சு முடியாட்சி எபேரை நீக்கிவிட்டு முதல் அதிகாரியாக  பியர் துலிவேர்(Pierre Duliver) என்பவரை நியமனம் செய்கிறது. துபாஷ் நைனியப்ப பிள்ளைக்குப் பதில் ஒரு கிறிஸ்துவரை நியமிப்பது என்றும் முடிவாயிற்று. ஆலோசனை சபையில் நைனியப்ப பிள்ளை நீக்கம் குறித்து விவாதிக்கபட்டது. « அவர் தரகரகராய் அமர்ந்தது முதல், மொகலியர்களால் ஏற்பட்ட சகல சங்கட ங்களிலிருந்து , புதுச்சேரியை நிவர்த்தி செய்திருக்கிறார் » என்றும் «  பிரஞ்சு சங்கத்தின் உள் விஷயங்களையும் வெளி விஷயங்களையும் நன்கறிந்தவரான படியால், அவர் வேலையைப் பிடுங்கிவிட்டால், உடனே மொகாலியர் ஆளும் பிராந்தியத்தில் குடியேறி தலைமறைவாய் உள்ளுக்குள் பழிவாங்கும் சிந்தனையுடன் , மொகாலியர்களைத் தூண்டிவிட்டு புதுச்சேரியின் நாசத்தை த் தேடிவிடுவார். » என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு அவருடன் ஒரு கிறித்துவரை துணை  தரகரகராக நியமனம் செய்து பிரச்சனையைச் சமாளிக்கலாம் என முடிவெடுத்து  நைனியப்ப பிள்ளையுடன் சவரி முதலியார் என்ற கிறிஸ்துவரையும் தரகராக நியமித்தனர்.  இக்காலக் கட்டத்தில்தான் நைனியப்ப பிள்ளை தம் உறவினர் திருவேங்கடம் பிள்ளையை (ஆனந்தரங்கப்பிள்ளையின் தந்தையை) புதுச்சேரிக்கு வருமாறு அழைத்தது நிகழ்ந்தது.

ஒரு துபாஷ் இருக்கவேண்டிய இட த்தில் இருவர். இருவரையும் ஒரு நுகத்தடியில் கட்டி பிரெஞ்சிந்திய கம்பெனி சவாரி செய்ய நினைத்தது.  பின்பற்றிய சமயத்தால் வேறுபடினும் இரண்டுபேரும் தமிழர்கள்.  அவர்கள் விலங்குகள் அல்ல மனிதர்கள். நைனியப்பிள்ளையின்  திறமையும் சாமர்த்தியமும் சகித்துக்கொள்ளக்கூடியதா ? அடுத்த் தெருவில் இருப்பவன் வளர்ந்தால் கொண்டாடுவோம், அண்டைவீட்டுக்காரன் வளர்ச்சியை மனிதர்கள் அங்கீகரிப்பது எப்படி ? அதுவும் தமிழராய் இருந்துகொண்டு.  நைனியப்ப பிள்ளை முதல் துபாஷ், சவரி முதலியார் துணை சுபாஷ் என்பது எத்தனை நாளைக்கு ? தவிர, சவரி முதலியார் அதற்கு முன்பாக சுபாஷ் பதவியிலிருந்து விலக்கிவைக்கப்பட்ட முத்தியப்ப முதலியாரின் மருகர்.

பிரெஞ்சு வணிப நிறுவனத்தின் முதல் அதிகாரியாக இருந்த எபேர் மகன் புதுச்சேரி நிர்வாக சபையின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்று புதுச்சேரி வந்தவர், கிறித்துவ மத குருமார்களின் தூண்டுதலால் தன் தகப்பனார் கொடுத்த தரகுவேலையைத் தவறாகப் பயன்படுத்தி நைனியப்பப் பிள்ளை பொருள் சம்பாதித்ததாகக் குற்றம் சாட்டி, அப்படிச் சம்பாதித்த தொகையை த் தம்மிடம் ஒப்படைக்கவேண்டுமென கட்டளையிட்டார். பொய்யான வழக்கை ஜோடித்து வழக்கின் முடிவில் 50 சவுக்கடிகள், மூன்றுவருஷம் சிறைதண்டனை, 8888 வராகன் கம்பெனிக்கு நஷ்டை ஈடு, 4000 வராகன் அபராதம், சிறை தண்டனை முடிந்து நாடுகடத்தல் என தீர்ப்பாகிறது. இந்நிலையில் நைனியப்ப பிள்ளைக்கு நேர்ந்த நெருக்கடியால் திருவேங்கடம்பிள்ளை சென்னை திரும்புகிறார். பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் நைனியப்ப பிள்ளையைச் சிறையில் அடைக்கிறது. புதிய துபாஷாக முத்தியப்ப முதலியாரின் மகன் கனகராய முதலியார் நியமனம் ஆகிறார். சிறையிலேயே நைனியப்ப பிள்ளை இறக்கவும் செய்கிறார்.

நைனியப்ப பிள்ளையின்  மூத்தமகன் குருவப்பா பிள்ளை என்பவர் தன் தகப்பனார் குற்றமற்றவரென்றும், அவருக்கு எதிராக பொய்சாட்சிகளை உருவாக்கினார்கள் என்பதையும் பிரான்சு சென்று அரசரிடம் முறையிட அவர் தந்தை மீதான் வழக்கு மறுவிசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படுகிறது. இறந்த பிள்ளையிடம் அபராதமாக பெற்ற தொகையை கம்பெனி வட்டியுடன் கொடுக்கவேண்டுமென்றும், அதுபோல குற்றம் சாட்டிய எபேர் குடும்பம் பிள்ளையின் குடும்பத்துக்கு நட்ட ஈடு கொடுக்கவேண்டும் என்றும் தீர்ப்பாகிறது. நன்றிக்கடனாக குருவப்பாபிள்ளை கிறிஸ்துவ மத த்தைத் தழுவுகிறார். குருவப்பிள்ளை துபாஷ் ஆகிறார். திருவேங்கடம்பிள்ளை சென்னையிலிலிருந்து திரும்பி பிரெஞ்சுகிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றுகிறார். தந்தையுடன் வந்த  ஆனந்தரங்கப்பிள்ளைக்கும் கம்பெனியின் அதிகாரிகளுடன் நெருக்கம் எற்படுகிறது.  குருவப்ப பிள்ளையின் இறப்பிற்குப்பிறகு (கி.பி. 1725) தரகராக அதாவது துபாஷ் ஆக கனகராயமுதலியார் நியமனம் ஆனபோதும் திருவேங்கிடம்பிள்ளையையும் அவர் இறப்பிற்குப் பிறகு (கி.பி.1726)  உடன் பணியாற்றிய அவருடைய மைந்தர் ஆனந்த ரங்கப் பிள்ளையின் திறமையையும் ஆற்றலையும் அருகிலிருந்து பார்த்த   கம்பெனியின் அப்போதைய முதன்மை அதிகாரி லெனுவார் (Le Noire Pierre Christope(1721 – 1735) பதினேழே வயதான பிள்ளைக்கு பரங்கிப்பேட்டையில் கம்பெனிக்காகவும் சில்லறை வியாபாரங்களுக்காகவும் ஒரு நெசவுச் சாலையையும் , சாயக் கிடங்கையும் ஏற்படுத்தி அவற்றீர்க்கு தலவராக்கினார்.

ஆனந்த ரங்கப்பிள்ளையின் வருகையை எதிர்பார்த்து புதுச்சேரி  வரலாறு காத்திருந்திருந்தது.  பிள்ளையின் வருகைக்குப் பிறகு அவர் காலத்திய நிர்வாகிகளால்  புதுச்சேரி பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி  உயர்வுற்றதைப்போலவே,  அவர் காலத்துக்குப்பின் « ……..தேய்ந்து கட்டெறும்பும் ஆனது ». «ஆய வாழ்வு உற்றாருடன் போம்’ » என்ற அவ்வைக் கூற்றுக்கு இணங்க  ‘ஆனந்தரங்கப்பிள்ளையோடு பிரெஞ்சிந்திய கம்பெனியின் பெருமைபோய்ச் » சேர்ந்தது எனலாம்.

(தொடரும்)

 

உதவிய நூல்கள் :

  1. புதுவை வரலாறு, ஆசிரியர் க. நாராயணசாமி, பிருந்தா பதிப்பகம், புதுச்சேரி
  2. தமிழகம் புதுவை வரலாறும் பண்பாடும், முனைவர் சு. தில்லைவனம் சிவசக்திபதிப்பகம், புதுச்சேரி
  3. ஆன ந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு, தொகுதி 1 கலைபண்பாட்டுத் துறை, புதுவை அரசு.

 

____________________________________________________________

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம்- உரைநடையில் – க பஞ்சாங்கம்

 நெஞ்சை அள்ளும் இளங்கோவடிகளின்   உரைநடை சிலப்பதிகாரம்’

                                               நாகரத்தினம் கிருஷ்ணா

‘ நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று   பேச்சிலும் எழுத்திலும் பாரதியின் பாடல்வரியை மேற்கோள் காட்டும் பலர் அம் மகாகவியைப்போல   இளங்கோவடிகளின் படைப்பை  சுவைத்திருப்பார்களா ?  எனக் கேட்டால், இல்லை என்பதுதான் பதிலாகக் கிடைக்கும்.  இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம்  பேரிலக்கியங்களில் ஒரு மலைத்தேன்.  மலைத்தேனைப்போலவே காவியச்சிலம்பும் கடும் முயற்சியின்றி  மாந்தக்கூடிய தீஞ்சுவை அல்ல.   காலத்தாலும், கற்றோர்  தொழும் மொழியாலும் பாமரர்க்கு எட்டாத உயரத்தில், கட்டப் பட்டத் தேன்கூடு அது. இளங்கோவடிகள் எனும் தேனீ, தமிழ் நிலத்தின் காடுமேடெல்லாம் அலைந்து, அழகியல் பூக்களைத் தேடி மோந்து, அவற்றின் சுவைதரும் மதுரத்தை புலன்களில்  சுமந்து ஒராயிரம் தேனிக்களின் பணியை தான் ஒருவனாக  கலை நயத்துடன்  கட்டி எழுப்பிய  தேன்கூடு சிலப்பதிகாரம். இன்றைக்கிந்த மலைத்தேன் குடத்தை, முடவர்களாக அண்ணாந்துபார்த்துக்கொண்டிருந்த  நம் கைகளில் தந்து  எளிதாக மாந்துவதற்குரிய நற்காரியத்தைச் செய்திருக்கிறார், பேராசிரியர்.

பேராசிரியர்  க. பஞ்சாங்கம் இந்நூலைக்குறித்து எனதுக் கருத்தை  எழுத்துவடிவில் கேட்டிருந்தார். அக்கருத்தை அணிந்துரை என்றபெயரில் அழைப்பதென அவர் தீர்மானித்திருந்தாலும் எனக்கதில் உடன்பாடில்லை. சிலப்பதிகாரம் என்ற பெருங்காப்பியத்தை –  மூல ஆசிரியரின் கவிதைமொழியை, உரைநடை மொழியாக உருமாற்றம் செய்யும் துணிவும் ஆற்றலும் எல்லாருக்கும் ஆகிவராது. இவரோ சிலப்பதிகாரத்தின் மீதும் தமிழ் மொழி மீதும் கொண்டுள்ள தீராத காதலினால், விரும்பி இப்பணியைத் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.  இவருக்கு பல முகங்கள் உண்டு : தமிழ்ப் பேராசிரியர், படைப்பிலக்கிய நிலத்தின் நஞ்செய், புஞ்செய்களான தொன்மம் நவீனம்  இரண்டிலும் ஆழமான அறிவும் தேர்ச்சியும் பெற்றவர், கவிஞர், கட்டுரையாளர், புனைகதையாளர் அனைத்துக்கும் மேலாக   நெஞ்சில் கோடாமையை நிறுத்திய திறனாய்வாளர் எனத் தமிழுலகம் ஏற்றுக்கொண்ட மனிதர், பெரியர், செயர்க்கரிய செயல்களைச் செய்வார். நான் சிறியன், இத்தகையை முயற்சியை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளக்கூட போதாதவன். அறிந்ததெல்லாம் தற்கால இலக்கியங்கள் மற்றும் புனைவுலகம்.  எனவே இது முன்னுரை அல்ல  ஒரு சராசரி படைப்பிலக்கிய இரசிகனின் கருத்து.

இம்முயற்சியில் மூன்று கூறுகள் இருக்கின்றன. முதலாவதாக உரைநடைமொழிக்குப் பேராசிரியர் தேர்வு செய்த நூல் ; அடுத்து  தம் முயற்சியைத் திருவினையாக மாற்றிய  உரைநடை ஆசிரியரின் ஆற்றலும், உழைப்பும் ;  இறுதியாக இந்நூல் தரும் வாசிப்புப் பலன்.  இம்மூன்றும் இந்த நூலைக்குறித்த எனது கருத்தைத் தெரிவிக்க உதவியவை.

படைப்பிலக்கியத்தின் வடிவம் என்கிறபோது கவிதை , உரைநடை என்ற இரண்டு சொற்களும் நம் கண்முன் நிற்கின்றன. இரண்டும் உடன்பிறந்தவை என்கிறபோதும், குணத்தால் பங்காளிகள்:  கவிதை என்ற சொல்  இன்றைக்கும் புதிராகவும், எளிதில் விளங்கிக் கொள்ள இயலாததாகவும், பண்டித மொழிக்குரியதாகவும்,  அதனால் கற்றறிந்த மேலோரின் அறிவுப் புலனுக்கு மட்டுமே எட்டக்கூடிய இலக்கிய பண்புகளைக் கொண்டதாகவும், படைப்பாளியின் நெஞ்சை வெகு அருகில் நின்று புரிந்துகொள்ள உதவும் ஊடகமாகவும் இருக்கின்றது.  மாறாக உரைநடை என்ற சொல் மகிழுந்தில் பயணிப்பதல்ல, பேருந்தில் பயணிப்பது, அன்றாடம் நீங்களும் நானும் உரையாடும் மொழியில், பெருவாரியான மக்களின் வாழ்வியலோடு  தொடர்புடைய மொழி.  அடர்த்தியும் சொற் சிக்கனம், இவற்றிலிருந்து விடுபட்டு வாசிப்பவருடன் நெருக்கம் காட்டும் மொழி.  உலகெங்கும் படைப்பிலக்கிய மொழியாக கவிதையே  தொடக்கத்தில் இருந்துவந்திருக்கிறது.  முடியாட்சி அரசியலில்  இலக்கிய சமூகத்தில்  கவிதைமொழி  மேட்டிமை அடையாளத்தைப் பெற்றிருந்தது. உரையாசிரியர்கள், இல்லையெனில்  நம்மில் பலரும் சபை நடுவே நீட்டு ஒலை வாசியாத, குறிப்பு அறியமாட்டாத நன் மரங்களாக மட்டுமே  இருந்திருப்போம்.   முடியாட்சியை மக்களாட்சியாக மாற்றுவதற்கு நடத்திய புரட்சியை ஒத்ததுதான் அந்த நாளில் இலக்கிய வெளியில் கவிதை சிம்மாசனத்தில் உரைநடையை உட்காரவைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளும்.  கவிதை உரைநடை வடிவத்திற்கு உட்படாமல் இருந்திருந்தால், கல்விப்புலத்திலும், கருத்துப்புலத்திலும் இன்று நாம் கண்டிருக்கிற நுட்பமான வளர்ச்சிகள் இல்லையென்று ஆகியிருக்கும். இலக்கண பண்டிதர்கள் பெருகி இருப்பார்கள், இலக்கிய படைப்பாளிகள் சுருங்கி இருப்பார்கள்.       பேராசிரியர் க. பஞ்சாங்கம் பல நூற்றாண்டுகளுக்கு  முன்பு எழுதப்பட்ட இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை

பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்குங் கயிறு

குறளாரின் மூதுரைக்கிணங்க இன்றைய படைப்புலகின் முதன்மை மொழியில், எழுதியிருக்கிறார். ‘ 20ம் நூற்றாண்டு என்பது உரைநடைத் தமிழின் எழுச்சி காலம்’ என்பதற்கொப்ப இயங்கியுள்ளார். கவிதை மொழியை உரைநடைமொழியில் கொண்டுவந்திருக்கிற இப்பணி, நகல் அல்ல அசல். சிலம்புக்கு நிகரானதொரு காவியம் உலகில் எழுத்துவடிவில் எங்குமில்லை. குடிமக்களை காவிய மாந்தர்களாக உயர்த்திய பெருமை,  கதைமாந்தர்களின்  கலை இலக்கிய ஈடுபாட்டினையும் நுண்நோக்கி  எழுத்தில் சேர்த்த அருமை, படைப்பினத் தொடங்கும் உத்தி, கதை சொல்லும் பாங்கு, இயற்கையின் ஊமை வினைகளை சொல்லோவியமாகத் தீட்டும் திறன் என சிலப்பதிகாரத்தை  எழுதிய படைப்பாளிக்கும், நிகராக அவர்காலத்தில் ஒருவருமில்லை.

இத்தகைய சீர்மை மிக்கதொரு நூல்  பெருவாரியான  மக்களைச் சென்றடையவேண்டும் அதன் பெருமையை அவர்கள் தாமே வாசித்து உணரவேண்டும்  என்ற நோக்குடன், படைப்பாளியை மேலும் கொண்டாடும் வகையில் பேராசிரியர். க பஞ்சாங்கம் உழைத்திருக்கிறார். கணியன் பூங்குன்றனாரின் ‘உண்டாலம்ம இவ்வுலகம் ‘ என்ற பாடலையொத்து துஞ்சலின்றி, அயர்வின்றி, தமிழ்கூறும் நல்லுலகிற்கென எடுத்துக்கொண்ட முயற்சி. முயற்சியின் பொருண்மையை அவரது முன்னுரை கோடிட்டுக் காட்டுகிறது.  ஒவ்வொரு சொல்லையும், அச்சொற்களை சுமக்கும் பாடல் வரியையும், அவற்றின்  சுவை குன்றாமல் நயம் குலையாமல்  ‘ செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து.’   என்ற குறளுக்கிணங்க, உரைநடை காப்பியமாக எழுதியிருக்கிறார்.  தான் செயல்பட்ட விதம், முன்னோடிகள் முயற்சிக்கும் இவருடைய முயற்சிக்கும் உள்ள வேறுபாடு, எழுதியகாலத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் என  தம்  முன்னுரையில்  இளங்கோவடிகளின் சிலப்பதிகார உரைநடை படைப்பாளி   பகிர்ந்துகொண்டுள்ளவற்றை   நண்பர்கள் கட்டாயமாக  வாசிக்க வேண்டும்.  இன்றைய இலக்கியத் தேவைக்கேற்ப காலம்கருதி  இளங்கோவடிகளே இவருள் புகுந்து, இதனை எழுதியிருப்பாரோ என்ற ஐயம் எனக்குண்டு.

« இந்த நூற்றாண்டு வாசகன் தன் நெஞ்சிற்கு நெருக்கமாக, இதம் தரும் ஒன்றாக உரைநடைத் தமிழை உணர்வதில் எந்த வியப்புமில்லை » என நூலாசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவதுபோல இப்படைப்பும் வாசகர் நெஞ்சிற்கு நெருக்கமாக இதம்தரும் உரைநடை சிலப்பதிகாரமாக உணரப்படும்,  இளங்கோவடிகளின் புகழோடு இணைத்து நூலாசிரியரும், நூலும்  பேசப்படுவார்கள் என்பது உறுதி.


இளங்கோ அடிகளின் ”   சிலப்பதிகாரம்”

பேராசிரியர் க பஞ்சாங்கம்

அன்னம் பதிப்பகம்,மனை எண் -1, தஞ்சாவூர்.