Monthly Archives: நவம்பர் 2013

புலம்பெயரியத் தமிழிலக்கியம் : சில உட்பொருண்மைகள் – தமிழவன்

Tamizavan(எதிர்வரும் ஜனவரி 20, 21, 22 தேதிகளில் மூன்று நாட்கள்கோயம்புத்தூரில் தாயகம் கடந்த தமிழ் என்ற பெயரில் அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்கள். கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்சு என்று கலந்துகொள்ளும் நிகழ்வு. அதுபற்றிய  விபரத்தினை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்  அதிகாரபூர்வமாக வெளியிட்ட பிறகு இங்கு வெளியிடுகிறேன். இந்த ஆய்வுக் கட்டுரை  சிங்கப்பூரில் நவம்பர் 2011ல் நடைபெற்ற முதல் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் முன்னாள் ஆந்திர திராவிடப் பல்கலைகழக தமிழ் துறை தலைவரும், இலக்கிய விமர்சகரும், அமைப்பியல்வாதியும், பின் நவீனத்துவத்துவ முதன்மை படைப்பிலக்கியவாதியுமான முனைவர் தமிழவன் வாசித்தது, அவர் ஓப்புதலுடன் இங்கே பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. )

 அறிமுகம்

தேச அமைப்புகள் உருவாகி அதன் பல்வேறு  பரிமாணங்களையும் பெறும்போது புலம்பெயர்தல் தேச அமைப்பை ஏதோ ஒருவகையில் மீறுவதாகும். உள்நாட்டுபோர், பஞ்சம் பட்டினி, அல்லது வேலையின் பொருட்டு , அல்லது சரித்திரக் காரணங்களின் (இதில் நாடுகள் சுதந்திரம் பெறுவதும் புதிய ஆட்சி ஏற்படுவதும் கூட அடங்கும்) பொருட்டுத் தேசத்தையும் பிறந்த மண்ணையும்விட்டுப் பெயர்தல் ஏற்படுகிறது.  இவ்வாறு நிலம் பெயர்ந்து வாழ்தல் புதிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு புதிய உண்மைகளையும் உருவாக்குகிறது. இப்படி பெயர்பவர்கள் புதிய மண்ணில் வாழ்க்கையை, தமது குடும்பத்தை நிலைநாட்டும்போது புதுப்புது உணர்வுகள், மனநிலைகள், வரலாறுகள்? ஞாபகங்கள்? உலகப் போக்குகள் படைக்கப்படுகின்றன. (இவற்றை ஆங்கிலச் சொற்களாம் தங்களுக்குள் Diaspora, International, Expatriate, Exile என்று எல்லாம் பறிமாறிக்கொள்கிறார்கள் ஆய்வாளர்கள்.)

இத்தகைய புலம்பெயர் நிலைமை பற்றிய ஆய்வுகள் தமிழில் இல்லை. சமீபகால பல்கலைக் கழக ஆய்வாக மானுடவியல், அரசியல், வரலாறு, இலக்கியவியல் துறைகளில் இது மேற்கில் மிகுந்த அக்கறையுடன் நடத்தப்பெறுகின்றது. எனினும் புலம்பெயர் நிலைமைக்குத் தமிழ்ச்சமூகம் பல காலமாக ஆளானது என்பது உண்மை. தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கும் தென் ஆப்ரிக்கா, பிஜி, மேற்கிந்திய தீவுகள், பர்மா, மலேஷியா போன்ற நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தார்கள். இதுபோல அடுத்தகட்டமாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா என்று தென்னிந்தியாவிலிருந்தும் தமிழீழத்திலிருந்தும் புலம்பெயர்ந்தார்கள்.

இந்தப் புலம்பெயர் நிலைமை பற்றிய இலக்கியங்கள் இன்று போதிய அளவில் எழுதப்பட்டுள்ளன அவற்றைப் பற்றிய இந்த ஆய்வில் ஈடுபடுமுன்பு நாம் சில கருத்தாக்கங்களைப் பற்றிக் குறிப்பிட்டுத் தெளிவு பெற வேண்டும். வலைப் பின்னல்களில் பொதுவாய்ப் பலராலும் பலவிதமான புரிதல்களுடன் புலம்பெயர் நிலமைசார்ந்த கருத்தாடல்கள், விவாதங்கள், வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் இக்கட்டுரை இவற்றில் வெகுசில வரையறைககளையே பயன்படுத்தித் தன்கருத்தியல் உலகை முன்வைக்கிறது. பொதுவாகப் புலம்பெயரியம் பற்றிய சர்ச்சைகள் கீழ்வரும் கருத்தாடல்களை முன்வைப்பதுண்டு.

புலம் பெயரியம் பற்றிய சர்ச்சைகள்

குவலயமாக்கம் (Globalsation) வேறு; புலம்பெயர்தல் வேறு. குவலமயமாக்கத்தில் பொருளாதார அலகுகள் (economic units) மற்றும் தொழில் நுட்பக்கூறுகள் சம்பந்தப்பட்டிருக்கும்போது புலம் பெயரியத்தில்ஒரு வாழ்வியக்கம் சம்பந்தப்பட்டிருக்கிறது. என்ற வரைவிலக்கணம் பயனுள்ளது. அதாவது ஒரு நாட்டைவிட்டு புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் ஞாபகம், கனவு, மீள்நினைவு (Nostalgia) பிரிவால்  மன உளைச்சல், புதிய நாடுகள் தரும் ஆசைகள், புதிய அனுபங்கள் இப்படி ஒரு கலப்பான மன எதார்த்தம் தோன்றுகிறது.

இதுபோல வேறொரு அம்சமும் தொழில்படுகிறது புதிய உலகம்  அல்லது புதிய நாடு  தனது அல்லது தனது குடும்பத்தின் எதிர்காலத்தோடு இணைக்கப்படும்போது அங்கு ஒரு மேல்-கீழ்  என்ற தாரதம்மியம் (Hierarchy) ஏற்படுகிறது. அதில் தனது புதியநாடு ஒளியாகவும் தன் பழைய நாடு அல்லது பிறப்பிடம் ஓரளவு இருளாகவும் மனதில் பதிவுறுகின்றன. தனது குழந்தைகள் ஒளிரும் நாட்டிலும் தனது தாய் தந்தை மற்றும் உறவுகள் தன் இருள் சூழ் நாட்டிலும் வாழ்வது தெரிகிறது. ஆகப் பிறப்பிடம் கடந்து போனதாகவும் வாழ்விடம் நிகழ்காலமாகவும் ஆகிறது. அதாவது காலம் தனது பரிமாணத்தைப் பழையது/புதியது என்று பிரித்து எதிரிணையைப் படைக்கிறது. நாடு இரண்டுபடுகிறது. எனவே இந்தப் புலம்பெயரியல் ஆய்வு எப்போதும் தவிர்க்கவியலாமல் இரண்டு நாடுகளின் குடிமகனைப் (Dual Citizenship) பற்றிப் பேசும் புது சிந்தனையாகிறது. இவ்வித ஆய்வு அர்ஜுன் அப்பாத்துரை போன்ற ஆய்வாளர்களுக்குக் கற்பனை (imagination)யிலிருந்து மிகவும் வேறுபாடுள்ளதல்ல. (1)

 பல சிந்தனையாளர்கள் புலம்பெயரியம் பற்றிச் சிந்திக்கும்போது ஒரு முன்னாலும் பின்னாலும் முகங்கொண்டு பார்க்கிற கிரேக்கத் தேவதையான ஜேனஸ் பற்றிப் பேசுவதை இங்கு நாம் நினைவுகொள்வது நம் சிந்தனைக்கு ஓர் அகில உலக முக்கியத்துவத்தைத் தரும். இந்த உருவகம் (Metaphor) ஒற்றைமுக கருத்தாக்கங்களால் நாடு கடந்த உண்மைகளைப் பேசுவதில் உள்ள கஷ்டத்தைச் சுட்டிக்காட்டும். எனவே இந்தத் துறையில் ஆய்வுகளின் முறையியல் (Methodology) கூட புதியதாக இருக்க வேண்டுமென்பது முக்கியமாகிறது.

அடுத்ததாக இடம் பற்றிய பெயர்ப்புப் (Dislocation of site) பற்றி யோசிக்கவேண்டும். அதாவது இடம், தனது முந்தைய காலத்தோடும் அதுபோல் தனது இன்றைய காலத்தோடும் முதன்முதலாகத் தொடர்கிறது. அதனால் மனித உணர்வு, அதன் வரலாறு அதன் ஞாபகம், கற்பனை முதலியன எந்த முன்மாதிரியும் அற்றதாகிறது. அதாவது முந்தைய காலத்திலும் இன்றைய காலத்திலும் ஒரே நேரத்தில் இருக்கிறான் நாடு பெயர்ந்தவன். இது புரிதலுக்கு ஓர் இருண்மையையும் வளைவு நெளிவுத்தன்மையையும் ஏற்படுத்துகிறது. ஒன்று இன்னொன்றோடு சதா முரண்பட்டுக்கொண்டே (perpetual contestation) இருக்கிறது. இறுகிப்போன கருத்தாங்களாய் எதையும் பார்க்கக்கூடாது.

நம் கவனத்திலிருந்து தப்பக் கூடாத இன்னொரு சிந்தனை தன்னிலைகள் (Subjectivities) பற்றியது. தன்னிலை என்பது மனித ஆன்மா அல்ல. மனிதனின்/ மனுஷியின் உள் ஆளுமை அது. அது முக்கியமாக, பொருள்மயமானதென்றனர் அமைப்பியல் சிந்தனையாளர்கள். நாம் பேசுகின்ற மொழிகளின் பொது அமைப்பால் உருவானது தன்னிலை. இந்தத் தன்னிலை எழுதப்படுகிற பிரதியில் (text) அமைந்திருக்கின்ற விதம் பற்றிய ஆய்வு புதிய உண்மைகளைப் பிரதிகளிலிருந்து நமக்குக் கொண்டுவந்து தருகின்றது.

பியர் மாஷெரி (Pierre Machery) போன்ற பிரெஞ்சு நாட்டு சிந்தனையாளர்கள் எழுத்தை ஒருவித உற்பத்தியாகப் பார்த்தனர். அதுபோல புலம்பெயர்வியல் ஆய்வாளர்கள் புலத்தில் உள்ள வாழ்வு என்பதை ஒரு கலாசார உற்பத்தியாகப் பார்க்கிறார்கள். அதாவது பெயர்ந்து வாழ்வது என்பது ஒரு கலாசாரத்தைவிட்டு இன்னொரு கலாசாரத்தைத் தழுவுதல் அல்ல. இரண்டு கலாசாரங்களும் முடிந்து போனவையோ, கல் போன்று இறுக்கமானவையோ அல்ல. மனிதர்கள் அந்தக் கலாசாரத்தில் உயிர்வாழும்போது அவ்விரு கலாசாரங்களும் தம்மை உற்பத்தி செய்கின்றன. அவை ஒரு செயலில் இருக்கின்றன. இது முக்கியமான காரியமாகும். இதனை நாம் புலம்பெயர்ந்தவன் எழுதும் எழுத்தில் எதிர்கொள்கிறோம். கலாசாரம் எப்படி உற்பத்தியாகிறதென்று அறிகிறோம்.

மேலே விவரிக்கப்பட்டுள்ள பண்புகளைப் பொதுவாகப் புலம்பெயரியம் பற்றிய கருத்தாக்கங்களாக இன்றைய அகில உலகச் சிந்தனையாளர்கள் முன்வைக்கிறார்கள். இந்தப் பின்புலப் பரிச்சயத்துடன் தமிழ்மொழியில் புலம் பெயர்ந்தவர்களின் இலக்கியம் எப்படி வடிவமைப்புக்கொண்டு  வருகிறதென்பதைப் பார்க்கலாம்.

புலம் பெயர்ந்தவர்களின் இலக்கியம்.

இக்கட்டுரை புலம் பெயர்ந்த எழுத்தாளர்களாக எஸ். பொன்னுத்துரை, அ.முத்துலிங்கம், பொ. கருணாகரமூர்த்தி, ஷோபா சக்தி, மெலிஞ்சி முத்தன் ஆகிய ஈழத்து எழுத்தாளர்களையும் அதுபோல் காஞ்சனா தாமோதரன் என்ற அமெரிக்கா வாழ் எழுத்தாளரையும் நாகரத்தினம் கிருஷ்ணா என்ற பாரீஸ் வாழ் எழுத்தாளரையும் அணுக விழைகிறது. இவர்கள் அத்தனைபேரும் நாவல், சிறுகதை என்ற இரண்டு இலக்கிய உரைநடை வடிவங்களைப் பயன்படுத்தி எழுதக்கூடியவர்கள். எனவே மிகக் குறுகிய இரண்டு இலக்கிய வடிவங்களைக் கையாளும் எழுத்தாளர்கள் – அதுவும் பரிமாணம் கொண்ட ஒரு புதிய வாழ்முறைத் தன்மையை எப்படி உருவம் பெற வைக்கிறார்கள் என்ற நோக்கில் இக்கட்டுரை ஆய்கிறது.

பொதுவாகப் பார்க்கும்போது இந்த எழுத்தாளர்கள் எல்லோரிடமும் இருநாடுகளுக்கிடையில் நடத்தும் ஒரு இருதலைக் கொள்ளிவாழ்க்கை நிலை ஏற்பட்டிருப்பது மிக மேம்போக்காக்கப் பார்ப்பவர்களுக்கே தெளிவாகும். இந்த இருவகைநாடுகளும் ஒரே தரத்தனவாக எழுத்தாளர்களிடம் இல்லை. பிறந்த நாடு என்பது ஒருவகை விதைபோல் இவர்களிடம் செயல்படுகின்றது. இங்குக் குறிப்பிட்ட எழுத்தாளர்களிடம் ஈழமும்  அதுபோல இந்தியாவின் பகுதியான தமிழ்நாடு என்ற மாநிலமும் (காஞ்சனா தாமோதரன்) பாண்டிச்சேரி மாநிலமும் (நாகரத்தினம் கிருஷ்ணா) இந்தத் தாய்பூமி (Home land) எனும் விதை நிலமாகின்றன. ஒரேவிதை இருவித நிலங்களில் வேறுபட்டு வளர்வதுபோல தாய் நிலத்தின் உறவும் ஞாபகமும் பிள்ளைப் பருவமும் சரித்திரமும் எதார்த்தமும் அது பற்றிய கனவும் அது பற்றிய படிப்பறிவும் அங்கு நடக்கும் தற்கால வாழ்வும் போராட்டமும் சமாதானமும் இன்னொரு நாட்டின் தற்சமயத்துடன் பின்னிப்பிணைகின்றன. இரு நாடுகளின் உறவும் சரளமானதோ, கொள்வினை கொடுப்பினை உறவோ, பயணி ஒருவரின் உறவோ இல்லை. ஆங்கிலத்தில் இன்று பலர் எழுதுவதுபோல (ஸல்மான் ருஷ்டி, ஷ்யாம் செல்லதுரை, நைப்பால், சிவானந்தன், ரோஹிண்டன் மிஸ்ரி முதலியோர்) அமையாமல் இரு தேசங்களில் காலூன்றி இதயத்தின் மொழியான தாய்மொழியில் எழுதும் எழுத்து  அகில உலக முக்கியத்துவமுள்ள புது மனோநிலைகளைக் கண்டுபிடிக்கும் காரியமாகும். தமிழர்கள் என்ற பழம் பெருமைகொண்டு காலம் காலமாகத் தனது பிறந்த பூமியை மறக்கமால்  அப்பூமியின் நினைவிலிருந்து தன் வாழ்வுக்கு ஒரு புது உந்துதலையும் புதுப்பொருளையும் காணும் இனம் ஒன்று நிலம் பெயர்ந்து வாழ்வில் அடையும் அனுபவம் வெறும் இலக்கியத்துறை ஆய்வுப் பொருண்மை மட்டுமல்ல. இவ்வெழுத்தாளர்கள் சென்று வாழும் நாடுகள் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா போன்றவையாதலால் இது அனைத்துலகப் பண்பு மாற்றம் பற்றிய ஆய்வில் முக்கியமான தரவாகவும் அமைகிறது. எனவே இலக்கிய வரையறைகளை மட்டும் கருத்தில் கொண்டு அத்துறையின் குணவியல்புகளுக்கு ஏற்ப மாற்றம் பற்றிய ஓர் ஆழமானதும் பொருள் பொதிந்ததுமான ஆய்வாகவே அது அமையும்.

இங்குப் பெருவாரி எழுத்தாளர்கள் ஈழத்தமிழ் எழுத்தாளர்களாக இருந்தாலும் அமெரிக்காவிற்குப் பணியின் பொருட்டுப் புமபெயர்ந்த மிக முக்கியமான எழுத்தாளரான காஞ்சனா தாமோதரனின் புது இலக்கிய பரப்பும் ஆழமும் இவரை ஒரு அனைத்துலகப் புலம் பெயரிய எழுத்தாளராக (ஆனால் எழுதுவது தமிழில்) அடையாளம் காணத் தூண்டுகிறது. அதுபோலவே நாகரத்தினம் கிருஷ்ணாவும் பாண்டிச்சேரி என்ற பிரெஞ்சுநாட்டுக் காலனி ஒன்றின் தமிழ் எழுத்தாளராய் இன்றைய அனைத்துலகப் பரிமாணம் கொண்டு விளங்குகிறார். அனைத்துலக இலக்கிய அடையாள அள்வுகோலால் அவரை அளக்க வேண்டியதன் தேவையைத் தமிழரங்குக்குக் கொண்டு வருபவராய் தனித்து விளங்குகிறார். இவ்விருவரில் எழுத்துகள் பற்றிய சர்ச்சையோ முக்கியத்துவமோ இன்றைய தமிழிலக்கிய சூழலில் இல்லாதது இவ்விருவரின் எழுத்தின் கோட்பாட்டு அறிவு தமிழிலக்கிய சூழலில் இல்லாததால் என்றும் கூறலாம். எனவே “தமிழ்ப் புலம்பெயரியம்” ஒரு கோட்பாடாய் வடிவப்படுத்தப்படவும் அதை ஒரு பொது இலக்கிய விவாதத்திற்குக் கொண்டுவரும் அவசியத்தை ஏற்படுத்துவதும் இன்றைய தமிழின் நிலையை அனைத்துலக மட்டத்திற்குக் கொண்டுவருவதும் ஒன்று இன்னொன்றோடு பிணைந்ததாகும். இவ்விரு படைப்பாளிகளில் காஞ்சனா அவர்கள்(2) எதார்த்த இலக்கிய நடை மூலம் உச்சமான இடங்களைத் தொடுவதும் கிருஷ்ணா பன்மைக் கதையாடல் ( Multilevel Narration) மூலம் தன் நாவலைத் தொடங்கி மேலெடுத்துச் செல்வதும் காணக்கூடியதாகும்(3). அ. முத்துலிங்கம்(கனடா) நாவல் (பார்க்க முன்னுரை) என்று அழைத்து ஒருவித கதைக் கோர்வையை உண்மைகலந்த நாட்குறிப்புகள்  என்ற பெயரில் தந்துள்ளார்(4). எஸ்பொ. அவர்கள் (ஆஸ்திரேலியா) மாயினி என்ற நாவலாய் ஒரு இலங்கை சரித்திரத்தை மறுவரைவு செய்கிறார்(5). ஷோபாசக்தி தனது நாவல் மூலம் இலங்கையின் தமிழ்ப்போரை உள்ளடக்கமாக்குகிறார்(6) கருணாமூர்த்தி பல்வித வடிவங்களில் ஈழத்தையும் தமிழகத்தையும் பெருவாரியாய் எழுதுகிறார்(7) மெலிஞ்சிமுத்தன் என்ற எழுத்தாளர் தான் கண்ட புது உலகையும் ஈழத்தையும் கதை என்னும் புது அறிதலாய் மாற்றுகிறார்(8). இங்கு குறிப்பிட்ட இவர்களின் எழுத்துகள் இக்கட்டுரையில் பல்வேறு உட்பொருண்மைகளாய் ஆயப்படுகின்றன.

இங்கே குறிப்பிட்ட ஆசிரியர்களை மையமாக்குவதில் உள்ள பிரச்சினைகளைத் தவிர்த்துவிட்டு மேலே சென்று கற்றல்(study) மேற்கொள்வதும் தேவை இல்லை. எஸ்.பொ. அவர்கள் பிறந்து தன்னாளுமையை உருவாக்கிய நாட்டில் இருக்கும்போதே பல படைப்பாக்கங்களுக்கு ஆசிரியர். அவரே பிற்காலத்தில் வேறொருநாடு சென்று எழுதும்போது அப்படைப்பு எவ்வாறு புலம்பெயரிய படைப்பாகுமென்று சிலர் கேட்கலாம். இங்கு மாயினி நாவலின் சிறப்பு ஒன்றைச் சுட்டலாம். மிகை எளிமைக்குட்பட்ட கதைசொல்லல் முறை இருந்தாலும் இன்றைய பின் நவீனத்துவ அகில உலகக் கதை உத்தியைத் தமிழில் உள்ளிருந்தே மாயினி என்ற பிரதி பெற்றுள்ளது. அதாவது வெளியில் இப்படியொரு உத்தி இருக்கிறதென்று தேடிச்சென்று அதைக் கற்காமலேயே தன் புலம்பெயர் ஆதங்கத்திலிருந்து (Expatriate anxiety) உள்முகமாகத் தன் கதைச்சொல்லல் உத்தியை நிறுவியுள்ளது இந்த நாவல். இலங்கையின் சிங்கள ஆட்சி குடும்பங்கள் மற்றும் தனி நபர்களின் கதையைப் பிரதியாக்கம் (textualize) செய்கிறது மாயினி. இது போலவே ஏற்கனவே தமிழ் எழுத்தாளராய் ஈழத்தில் வாழ்ந்த அ.முத்துலிங்கம் உண்மை கலந்த நாட்குறிப்புகள்மேற்கொள்ளும் பிரதியாக்க முறை அதனைப் புலம்பெயர் நுட்ப உணர்வுகளை உள்வாங்கிய ஒரு பிரதியாய்க் கருத வைக்கிறது. அந்நாவல் வேறு நாவல்கள் போன்று எழுதப்பட்டதல்ல . நாற்பத்தாறு இயல்களும் நாற்பத்தாறு அனுபவங்கள்போல தொகுக்கப்பட்டவையாகும். நாற்பத்தாறு இயல்களும் ஒரு நபர் (அதாவது அது முத்துலிங்கமா?) அனுபவமாய் வருகின்றன. நாவலில் கதைசொல்லியின் அனுபவம் வேறு; எழ்துபவரின் அனுபவம் வேறு. நாவல் என்று அழைக்கப்படும் இந்த நூலும் சுய அனுபவங்களைத் தாண்டி இன்னொருவராய் எழுதுபவரைக் காட்டக்கூடிய தொனிகளுடன் பல இயல்களை அமைத்திருக்கிறது. உதாரணமாய் இயல் 41இல் அமைந்துள்ள கதையில் கதைசொல்லி (ஆசிரியனல்ல) ஒரு பாலஸ்தீனியரை முதன்முதலாய் சந்திக்கும் செய்தி வருகிறது. கற்பனையும் உண்மையும் சேர்ந்து எழுதப்பட்ட நாட்க்குறிப்புபோன்ற  இந்த நூல்  பாலஸ்தீனியரை ஒரு கற்பனையாகவும் படைக்கமுடியும். இந்தச் சாத்தியப்பாடு நாட்குறிப்புபோன்று கட்டமைக்கப்பட்ட பிரதியை நாட்குறிப்பின் உண்மைத்துவத்திலிருந்து நாவலின் கற்பனைக்குள் கொண்டு செலுத்துகிறது. இந்த உண்மை/ கற்பனைதான்  தேசக்கற்பனையின் தோற்றுவாய் என்கின்றனர் பெனடிக்ட் ஆண்டர்சன் போன்றோர்(9).

மற்ற எழுத்தாளர்களின் உந்துதல் நிலம் பெயர்ந்த வாழ்க்கைக்கும் தாங்கள் ஏற்கனவே எதுவாக இருந்தார்களோ அதற்குமான முரணினிலிருந்து தோன்றியவை எனலாம். எழுத்தாளுமை நிலம் பெயரியக்கத்திலிருந்து  இங்கு முகிழ்க்கிறது. இதில் பல்வேறுவகை மாதிரிகளை ஒவ்வொரு எழுத்தாளரும் முன் வைக்கிறார்கள்.

 எழுத்தாளுமை – பல்வேறுவகை மாதிரிகள்

பொ.கருணாகரமூர்த்தி, மெலிஞ்சி முத்தன், ஷோபா சக்தி போன்றோரிடத்தில் தாங்கள் பிறந்த நாடுகள் பற்றிய கதைகளே தங்கள் கதைகளாக வெளிப்படுகின்றன. கருணாகரமூர்த்தியின் கதையாகிய சிநேகிதனைத் தொலைத்தவன்என்ற கதையில் பாலசந்திரன் என்ற பழைய நண்பனைத் தேடிக்கொண்டுவரும் கதைசொல்லி தனது பள்ளிக்கால நண்பனைக் கண்டு பிடிக்கறதில் பெரிய மகிழ்ச்சி அடைகிறான். கடைசியாகப் பாலச்ந்திரனைக் கண்டு இளம்வயதில் இருவரும் கழித்த நாட்களை நினைவூட்டும் கதைசொல்லியை நோக்கிப் பாலசந்திரன் தனக்கு யுத்தத்தில் இடப்பெயர்வு ஏற்பட்டதாலும் யுத்தத்தின் விளைவாலும் ஞாபகமறதி அடிக்கடி ஏற்படுவதைக் கூறி தன் வாழ்வின் துயரை மறைமுகமாய் தெரிவிக்கிறான். கதைசொல்லி ஜெர்மனியிலிருந்து வந்து தனது நாட்களைப் பழைய ஞாபகத்தில் திளைக்கவிட்டுத் திரும்ப நினைக்கயில் யார் மச்சான் நீஎன ஒரு கேள்வியைப் போடுகிறான் பாலசந்திரன்.

மெலிஞ்சி முத்தனின் ஒரு கதையின் பெயர் பனி மூடிய நதி‘  என்பது. வெளிநாட்டில் நடந்து திரிகிற கதைச்சொல்லி தான் எதற்கு வீட்டிற்குப் போகவேண்டும் என்று யோசிக்கிறான். நிலம் முழுக்க பனி கொட்டி வெள்ளை வெளீரெண்டு கிடக்கேக்க ஏதோ ஒரு பிரச்சினையுமில்லாத வெள்ளை உலகத்தில் நடந்து திரிகிற உணர்வு தான் எனக்குள வருதுஎன்று கூறும் கதைச்சொல்லி தன் கிராமத்தை நினைக்கிறான். பள்ளிக்கூட நாட்களில் அவனும் அம்மய்யாவும் சேர்ந்து காணி துப்புரவாக்கியதும் அவர் ஆசீர்வதித்துத் தந்த உப்பை மோட்டுவளையில் கட்டியதும் ஞாபகம் வருகிறது. சிவன் கோயிலடியில் ஆமிஇறங்கி வாறான் என்று கேட்டு இடம் பெயர்கிறார்கள். கடைசியில் அம்மய்யாவின் மனப்பிறழ்வுடன் தன் வாழ்க்கையும் ஒரு மனப்பிறழ்வுதான் என ஞாபகம் கொண்டு கதை முடிகிறது.

ஷோபாசக்தியின் லைலாஎன்ற கதையும் தனது நாட்டைப்பற்றிய ஞாபகத்தில் புனையப்பட்ட ஒரு கதைதான். இந்தக் கதையானது கதைசொல்லியின் புலம் பெயர் வாழ்க்கையைப் பற்றிக்கூறிவிட்டு ஈழ போராட்ட குழுக்களில் இருந்த ஒரு பெண் பற்றிய கதையைச் சொல்கிறது. “பிரான்சில் ஆப்ரிக்கர்களும் அரபுக்களும் சிந்திரோமா நாடோடிகளும் ஆசிய நாட்டவர்களும் செறிந்துவாழும் பகுதியில் ” கதைச்சொல்லி பிரான்சின் அதிபர் நிக்கோலா சார்க்கோசி சுத்திகரிக்க ஆசைப்படும்பொரு நபராய் வாழ்கிறான். அவன் வாழ்வது பதின்மூன்று மாடிகளைக்கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பு. கதைசொல்லி ஒருநாள் வெள்ளை நாயுடன் ஒரு பெண்னை லிப்டில் பார்க்கிறான். பின்பு அவள் முன்பு ஒரு விடுதலை இயக்கத்தில் இருந்தவள் என்று கதை விரிவடைகிறது. கதை முடியும்போது இறந்து இரண்டு மூன்று நாள் ஆன பிணத்தைப் போலீஸ்வந்து எடுத்து செல்கிறது. சில நாட்களுக்கு முன்பு பாரிஸில் நடக்கும் ஒரு போராட்டத்தில் பிரபாகரன் படத்துடன் பிரஞ்சு மொழியில் உரக்க முழங்குகிறாள் அப்பெண். போராட்ட இயக்கம் பற்றிய கதாசிரியனின் நுட்பமான கிண்டல் வெளிப்பட எழுதப்பட்ட கதை இது. இக்கதை புலம்பெயர் எழுத்துகள் ஒரு பார்வை உடையன அல்ல என்பதை விளக்குவதுபோல் எழுதப்பட்டுள்ளது(10).

இதுபோன்று பல கதைகளாகக் கொண்டு வந்து பல மலர்களால் கட்டப்பட்ட மாலைபோல் அமைக்கப்பட்ட புத்தகமான உண்மை கலந்த நாட்குறிப்பில்ஒரு கதை எழுத்தாளரின் / கதை சொல்லியின் தந்தை சொன்ன ஒரு வாசகத்தை மையமாக்குகிறது. இலங்கையில் மவுண்லவினியா என்ற, கொழும்புவிற்குச் சற்று தூரத்தில் இருந்த ஊரில் 1958ம் ஆம் ஆண்டு மே மாதம் பண்டாரா நாயக்கா தனிச் சிங்களம் சட்டத்தைக் கொண்டு வந்ததால் அதனைத் தமிழர்கள் எதிர்த்த போது நடந்த கலவரத்தில் கதை சொல்லியின் குடும்பத்தை ஒரு சிங்கள்வர் பாதுகாக்கிறார். பின்பு கதைசொல்லியின் குடும்பம் அகதி முகாமுக்குப் போகிறது. சிறுவனான கதைசொல்லிக்குக் கிடைத்த நான்குபேர் நுழையக்கூடிய பெரிய சட்டையுடன் முகாமில் தஞ்சமடைகிறான். பின்பு நாலுநாள் கப்பல் பயணம் செய்து “தங்கள் தேசத்துக்குச்” (யாழ்ப்பாணம்) செல்கிறார்கள். கதை சொல்லி தான் அகதிமுகாமுக்கு விரட்டப்பட்டபோது எடுத்துவைத்துக்கொண்ட ராபின்சன் குருசோ நாவலைக் கப்பல் சத்தத்துக்கிடையே படித்தபடி இருக்கிறான். குருசோ தனியாய் தாஅள் இல்லாத தீவில் பல ஆண்டுகள் வாழ்ந்தவன். மீண்டும் கதை சொல்லி கொழும்புபோகப் புறப்படுகையில் அவரது தந்தை ஒருதடவை அடித்து ருசிகண்டவன் திரும்பவும் அடிப்பான். இது பாதுகாப்பான நாடு இதை யாரும் பறிக்கமுடியாது என்கிறார் யாழ்ப்பாணம் பற்றி.  கதை கேர்ணல் கிட்டு விளக்கத்துடன் முடிகிறது. கதையின் தலைப்பு “ஐயா சொன்னது” .

இங்குக் குறிப்பிடப்பட்ட நான்குவித கதையுண்மைகளிலும் பல்விதமான கருத்தம்சங்கள் பின்னியுள்ளன. “சிநேகிதனைத் தொலைத்தவன் கதையில் ஞாபகம் பற்றிய உள்ளடக்கத்தோடு புலம்/பிறப்பிடம் என்ற எதிரிணை தொடர்பு கொள்கிறது பிறப்பிடத்தின் யுத்தம் பின்னணிக் கரு ஆகிறது. மெலிஞ்சி முத்தனின் கதை புலத்தில் ஏற்படும் நினைவுப்பிறழ்வுடன் பிறப்பிடத்தின் கொடூர யுத்தத்தால் ஏற்படும் அம்மபய்யனின் நினைவுப் பிறழ்வுடன் சம்பந்தப்படுகிறது. “லைலா” கதை இன்னும் சுவாரஸ்யமாய் யுத்தத்தில் (ஓர் இயக்க செயல் பாட்டாளியாய் இருந்ததால்) இலங்கை நாயகி தன் அழிவை உள்ளேற்று ஒரு நாள் பாரிஸின் ஒரு மூலையில் கதைசொல்லியின் கேலிக்குள்ளாகிப் பிணமாய் நாறுகிறாள். முத்துலிங்கம் கதையில் கதைசொல்லியின் ஞாபகத்தில் ஐயா சொன்ன வாக்கியம் அடிப்பதில் ருசிகண்டவன் நிறுத்தமாட்டான் என்பது தனது தாயக நினைவாகிறது. எல்லா கதைகளிலும் (ஜெர்மனி-ஈழம்; கனடா-ஈழம்; பிரான்சு-ஈழம்) இரு நாடுகளுக்கு மத்தியில் அலைபடும் நினைவு-நினைவினமை, உடல்(புலத்தில்) – உயிர் (ஈழத்தில்) என்ற இரு முக மன முரணில் (Tension) ஏற்படும் பலவித இழைகள் கதையாடலாகின்றன. கோட்பாட்டளவில் அறிஞர்கள் இருநாடுகளுக்கு மத்தியில் ஏற்படும் மனமுறுகல், உரையாடல் தீர்வுகள் (Negotiation) என்று விவரணப் படுத்தப்படும் கருத்துகள் இலக்கிய ஆக்கங்களில் எவ்வாறு இன்னும் ஆழம் பெறுகின்றன என்பதை இந்த நான்கு கதைகளை உதாரணமாய் வைத்துப் புரிந்து கொள்ள முடிகிறது.

வேறுபட்ட புலம் பெயரியம்

புலம்பெயரிய இலக்கியம் (Diaspora or Transnational Literature) என்று தமிழ்ச்சூழலில் வழக்கமாய் பேசும்போது ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த எழுத்துக்களை மட்டுமே மனத்தில்வைத்து எழுதுகிறார்கள். இன்றைய தமிழ் எழுத்துச் சூழல் மிகவும் ஆழமானதாகவும் அகலமானதாகவும் உள்ளது. தமிழ்த்துறைகள் பழைய இலக்கியங்கள் மீது அதிக முக்கியத்துவம் கொடுத்தும் தற்கால இலக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமலும் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து செயல்படுவதால் தமிழில் எழுதும் எல்லா எழுத்தாளர்களையும் பற்றிய அறிமுகம் இல்லாதிருக்கும் சூழலில் இரண்டு முக்கியமான புலம்பெயர் எழுத்தாளர்கள் காஞ்சனா தாமோதரன் மற்றும் நாகரத்தினம் கிருஷ்ணா ஆவர்.

இவ்விருவரும் முற்றிலும் வேறுபட்ட புலம்பெயர் அனுபவம் கொண்டவர்கள். தமிழகத்தின் கலாசார மற்றும் எழுத்துச்சூழலைப் பெரும்பாலும் உள்வாங்காமல் புலம்பெயர்ந்தபின்பு ஏற்பட்ட பன்முக உந்துதலில் இருந்து இலக்கியத்தை ஒரு வாழ்நிலைச் சட்டகமாய் (Life Paradigm) இயல்பில் கண்டிருப்பவர்கள். இது இவர்களுக்கு முக்கியத்துவத்தைப் பெற்று தருகிறது. ஈழத்தவர்களின் புலம்பெயரியம் வேறு, இவர்களின் புலம்பெயரியம் வேறு என்று சொல்லுமளவிற்கு இவர்களின் எழுத்துக்களின் தத்துவ பின்னணி மாறுபட்டதாகவுள்ளது.

முதலில் இவ்விருவரின் புனைகதைகளின் ஒட்டுமொத்த வடிவமைப்பே வித்தியாசமாகவுள்ளது. காஞ்சனா அவர்களின் “மரகதத்தீவு” என்ற கதைத் தொகுப்பும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ஒரு நாவலும் (மாத்தா ஹரி) இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவர்களின் புலம்பெயர்க் காரணமும் வேறு. தாயகத்தில் எந்த இனயுத்தமுமில்லை. இவ்வாறு முற்றிலும் வேறான புலம்பெயரியம் இவர்களின் வாழ்விலும் எழுத்திலும் காணப்படுவதை மறக்காமல் இவர்கள் எழுத்துக்களைப் பார்க்கவேண்டும். இலக்கியம் என்பது எழுதப்பட்ட பிரதி(written text) மாத்திரமே என்ற நிலைபாட்டை புலம்பெயரிய ஆய்வாளர்கள் சற்று சிந்திக்க வேண்டும். இலக்கியத்தையும் வாழ்வையும் சேர்த்து ஒரு பிரதியாகக் கருதி அணுக வேண்டும். இலக்கியம் எழுத்துக்கு வெளியில் வந்து பரவுகிறது. வாழ்வால் அது ஒரு புதுத் தன்மை அடைகிறது. அது ஒரு நிகழ்த்தலாகிறது.

மரகதத்தீவு” தொகுப்பில் புலம் எவ்வாறு கட்டமைக்கபடுகிறது? அத்தொகுப்பின் ஐந்து நீண்ட கதைகளும் புலம்பெயர் இலக்கியம் பற்றிய ஒரு பெரிய கருத்து ஆவணமாகத் தெரிகின்றன. “மரகதத் தீவு” என்ற 42 பக்கக் கதையும் ஒரு மிக வித்தியாசமான கதைசொல்லலை அறிமுகப்படுத்துகின்றன. கெல்லி என்ற இளம்பெண் அமெரிக்காவுக்கு அயர்லாந்திலிருந்து  வந்து குடியேறிய ஒரு குடும்பத்திலிருந்து வந்து பிறந்தவள். அவள் கீழ்நிலைப் படிப்பை முடித்துவிட்டுப் பல்கலைக்கழகத்துக்குப் போகையில் தந்தை வாங்கிக்கொடுத்த விமான டிக்கெட்டை பயன்படுத்தி அயர்லாந்து செல்கிறாள். அந்த  மண்ணையும் தன் தந்தையின் குடும்பத்தையும் முதன்முதலில் பார்க்கும் பரவசய்த்தையும் அங்கு அவள் கண்டு லேசாகக் காதல் கொண்ட இளைஞனை மீண்டும் அமெரிக்காவில் காண்பதையும் கதை கூறுகிறது.

அடுத்த கதையான கூபாவுக்குப் போன க்யூப அமெரிக்கர்கள் அமெரிக்காவின் ஒரு பகுதியில் வாழ்ந்த க்யூபர்களைப் பற்றியது. ஒபாமாவுக்கு ஓட்டுப்போடும் தலைமுறையைச் சார்ந்த கூப இளைஞர்களும் இளம்பெண்களும் பிறந்த பிறகு மீண்டும் புரத்ட்சிகர க்யூபாவைத் தேடிச்செல்லும் க்யூபர்களையும் படம் பிடிக்கிறது கதை. அவர்களின் பழக்க வழக்கங்கள், சாப்பாடு; நம்பிக்கை, ஆட்டம் பாத்தம் என எல்லாம் மிகத் துல்லியமாய்ச் சொல்லுகிற கதை.

 இந்த இரு கதைகளையும் சொல்வதற்குக் காஞ்சனா இரு புலம்பெயர்ந்து வாழும் அமெரிக்க இளைஞர்களைத் தேர்ந்தெடுப்பதில் கதை வேறொரு களத்தில் புலம்பெயர்த் தத்துவத்தோடு பயணிக்கிறது. தமிழிலக்கியத்தில் ஒரு புது -இதுவரை இல்லாத அம்சத்தைத் தொட்டு ஒரு உயரத்தை எட்டுகிறது. கதை சொல்லிகளான இந்தப் பிரத்தியேகமான பாத்திரங்கள் மூலம் காஞ்சனாவும் தமிழ்க் கலாசாரத்தின் புலம்பெயர் அம்சம் பற்றிய வேறொரு விஷயத்தை நம் முன் வைக்கிறார். ஒரு எழுத்தாளர் தன் வாழ்விலிருந்து தன் மொழிக்குள் ஒரு பிரத்திதேக வழிப்பயனத்தைக் கண்டுபிடிக்கிறார். தன் புலன் அனுபவத்திற்குள் தன்னைப்போன்று இன்னும் சிலகாலத்துக்கு முன்பே அமெரிக்காவுக்கு வந்தவர்களின் உகலத்துக்குள் அவர்களிடமிருந்து வந்த ஒரு கதைசொல்லியின் மூலம் புகுகிறார். தமிழ் என்பது ஓர் உலகளாவியப் பரந்த வேர்ப்பற்றைக்கொண்டதென  சொல்லாமல் சொல்லும் கதைசொல்லலாகிறது. வெறும் எதார்த்த நடையில் புனையப்ட்ட இக்கதைகள் கண்ணுகுத் தெரியாத ஆழமான அர்த்தங்களைப் படைக்க வல்லனாவாகின்றன. இவ்விரு வந்தேறி சமூக இளஞர்களாய், காஞ்சனாவின் உள்ளே இருக்கும் தமிழ்க்குணம் பரிவர்த்தனை அடைகிறது. தமிழ் என்பது குறுகியதல்ல. அகில உலகத்தின் மூலை முடுக்குகளிலுள்ள தாய் நிலத்துக்குத் தமிழனின் தாய்நிலைப்பற்று இட்டுச்செல்லும்  என்று கதையமைப்பு மூலம் புரியவைக்கிறார். இதில் உள்ள ஆச்சரியம் கதை எந்தக் கருத்தையும் வலியுறுத்தவில்லை. கதையின் அமைப்பே வாசகனுடன் பேசுகிறது.

மாத்தா ஹரி” என்ற நாவலின் புனைவும் ஒரு முக கதைச்சொல்லலைப் பல்வேறு தளங்களில் நகர்த்துகிறது. ஒரு தளத்தில் மாத்தா ஹரி என்ற பெயரில் அக்காலத்தில் பிரான்ஸ் மற்றும் பிறநாடுகளில் பேசப்பட்ட ஒரு பெண்ணைப்பற்றி விளக்குவதும் இந்த நாவலின் கதாநாயகியான பவானி என்ற வழக்கறிஞர் பெண்மணியை மாத்தா ஹரியுடன் இன்னொரு தளத்தில் ஒப்பிடுவதும் நாவல் கதைக்கு வேறு பொருள்களைத் தருகின்றன.

இந்த நாவலின் புனைவுவழியாக பல நபர்கள் பேசுகிறார்கள்; கிழக்கத்தியர் பேசுகிறார்கள்; மேற்கத்தியர்கள் பேசுகிறார்கள்; மூன்று அல்லது நான்கு தலைமுறையினர் பேசுகிறார்கள்; பல்வேறு காலங்கள் பிரதிக்குள் நுழைந்து பேசுகின்றன. புலம் என்பது ஒரு பெரிய வாசல்போல் திறக்கப் பல அறைகள் உள்ளே இருப்பது தெரிகிறது. ஓரிடத்தில் நாவலாசிரியனும் ஒரு பாத்திரம்போல் நாவலின் பிரதியியல் வெளியில் (textual space) நுழைந்து இப்படி சொல்கிறான்.

பவானி நீ இன்னுமா இங்கே இருக்கிறாய்? போகவில்லை?

….இது நான் கேட்கவேண்டிய கேள்வி. அகால நேரத்தில் இப்படி எழுந்து உட்கார்ந்துகொண்டு..

வேண்டுமானால் இன்னொருமுறை படித்துபார்க்கிறாயா? நீ நினைக்கிறமாதிரிதான் மாத்தா ஹரியைப் பத்தி சொல்றதான்னு குழம்பிப்போறேன்.”

இந்த இடத்தில் இருநாடுகளின் சரித்திரங்கள், கதை சொல்முறைகள், ஒரு நாட்டின் காலனியம், அதுபோல் காலனியத்திலிருந்து விடுபட்டாலும் அதன் ஞாபகத்திலிருந்து விடுபடாமை, காலனியத்தின் ஆச்சரியங்கள் , ஏமாற்றங்கள், குற்றங்கள், மன்னிப்புகள் எல்லாம் கதையின் இழைகளாய் ஆகின்றன. இரண்டு தேசங்கள் வெறு வரை படங்களல்ல. அடுத்த தலைமுறையான ஹரிணி (பவானியின் மகள்) கதையை இழுத்துக்கொண்டு பல்வேறுநபர்களை ஒருமுனைபடுத்தியபடி பாரீஸில் அலைகிறாள். நாகரத்தினம் கிருஷ்ணாவிடம் மாறுபட்ட புலம்பெயர் இலக்கியம் உருவாவதை இங்கு அறிகிறோம். புனைவை ஒரு அந்நியப்பெண்ணின் பெயரில் மையப்படுத்தி நாவல் அவள் பெயரான மாத்தா ஹரியைத் தலிழுலகுக்குப் பறை சாற்றுகிறது. காஞ்சனாவின் புலம்பெயரியம் ஒருவிதமென்றால் இருநாடுகளை ஊடாடவிட்டுக் கதையமைப்பைக்கொண்டு வந்த நா.கிருஷ்ணா இன்றும் ஒரு காலை பாரீஸிலும் இன்னொரு காலை புதுச்சேரியிலும் ஊன்றியுள்ள தமிழினக் கதையாடலைத் தருகிறார்.

காஞ்சனா தன் கதையாடலை ஓர் உலகப் பொது ஓர்மையோடு (எல்லோரும் வந்தேறிகள்) இணைக்கிறார். தன்னதிலிருந்து பிறத்தியாரை நோக்கிய அக்கறை அங்கு முகிழ்க்கிறது ஆனால் நா.கிருஷ்ணாவிடம் தனதும் பிறரதும் பின்னிப் பிணைந்திருக்கும்  எதார்த்தத்தின் பல்வேறு கண்ணிகள் முடிச்சவிழ்ப்பதற்காய் வேண்டுகோள் விடுக்கின்றன. புலம்பெயரியம் எவ்வளவு வேறுபட்ட உலகத்தையெல்லாம் திறந்து விடுகின்றது என்று ஆச்சரியப்படுகிறோம்.

புலம்பெயர்ந்துவாழும் எழுத்தாளனின் கதைகளில் தன் தாய் நாடு பற்றிய தேட்டம் அவனை முதுகுக்குப் பின்னாலிருந்து தள்ளி உந்துவதுபோல இன்னொரு அம்சமும் அவனை விரட்டுகிறது. தனது அன்றைய வாழ்நிலையோடு பிணைந்திருக்கிறது எதிர்காலம், எனவே சென்ற நாட்டை அறிந்துகொள்ளவும் தனது வாழ்வை வளமாக்கவும் விரும்பும்போது அந்த மண்ணில் காலை ஊன்ற விரும்புகிறான். அதனால் ஒன்று சேர்ந்த மண்ணையும் அவனால்/ அவளால் விட்டுவிட முடியவில்லை. பொ. கருணாகரமூர்த்தியின்  “ஒரு கஞ்சலுடன் உல்லாசப்பயணம் போதல்” என்றொரு கதையும் “முட்டர்பாஸ்”  என்ற ஜெர்மன் மொழித் தலைப்பைக்கொண்ட கதையும் ஜெர்மன் நிலத்தில் நடக்கும் அனுபவங்களைக் கதையாக வனைகின்றன. முதல் கதை ஒரு நகைச்சுவைக்குரிய வெளியைத் (space)  தன் எழுத்தில் ஏற்படுத்துகிறது. இது தன் தாயகத்தைத் தவிர எதுவும் தெரியாமல் புலத்தில் வாழ்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை  மறுக்கிறது. கஞ்சத் தனத்துடன் வாழும் ஜெர்மன் வகுப்புத் தோழி பற்றி ஒரு ஈழ மாணவி (காருண்யா) ஞாபகப்படுத்துவதுபோல கதை அமைந்திருக்கிறது. காருண்யா ஈழக்குடியேறியின் மகளாய் ஜெர்மன் மாணவியைக் கஞ்சத்தனமானவள் என்பது புலம்பெயர்ந்தவர்கள் தமக்கான ஒரு வெளியை (நகைச்சுவை உணர்வுடன்) உருவாக்குகிறார்கள் எனக் காட்டுகிறது. மெலிஞ்சி முத்தனின் “வேருலகு” என்ற கதை “எனது ஆடைகளைக் களைந்தார்கள்; நாக்கை உயர்த்தி ஆவெனும்படிக் கட்டளையிட்டார்கள்…” என்று தொடங்கி, ஐரோப்பாவில் தான் எப்படி அலைய நேரிட்டது எனக்கூறும் பாத்திரத்தை மையமாகக்கொண்டு விளக்குகிறது. பாரிஸ், ஸ்பெயின், மெக்ஸிகோ என்று அலைகிற புலம்பெயர்ந்த அகதி வாழ்க்கையைக் கூறுகிறது. நான் படுத்து கிடக்கிறேன் எனது மார்பகங்கள் வீங்கிக்கொண்டே வருகின்றன. எனது ஆண்குறியின் கீழே ஒரு பெண்குறியும் முளை விடுகிறது..என்று கதைசொல்லி பாலின அடையாளமற்றவனாக மாறுகிறான்.

புலம் பெயர்ந்தவன் தன் தாயை நினைப்பதுபோல் தாய் மண்ணை நினைக்கிறான். அப்படி புலம்பெயர்ந்தும் தன் தாய் மண்ணைப்பற்றி எழுதாத எழுத்துகளில் ஒன்றில் நகைச்சுவை தோன்றுகிறது. அல்லது கதை சொல்பவனின் உடல் ஆணாகவும் பெண்ணாகவுமின்றி மாற்றமடைகிறது.

ஓர் அமெரிக்க நெடுஞ்சாலை பயணம்” என்றொரு கதையைக் காஞ்சனா தாமோதரன் எழுதுயுள்ளார். இக்கதையையும் ஆசிரியரின் உள்ளடக்கக் கவனம் பிற கதைகள் போல் ஐயர்லாந்து என்றோ க்யூபா என்றோ இல்லை. இக்கதைஆசிரியர் வாழும் அமெரிக்கா பற்றிய கதை. சுமார் 50 பக்கங்களுள்ள இக்கதை நியுயார்க்கின் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் இறந்துபோன மணி என்பவனின் காதலி மனைவியின் அனுபவமாய் விரிகிறது. அவள் ஓவியம் வரைபவள். அவள் அமெரிக்காவின் உடப்பரப்பையும் காலத்தின் நீட்சியை அளந்து அதன் ஆதிவாசிகள் மூகம் அம்மண்ணின் ஆதியையும் தொடுகிறார். பழையனவும் புதியனவுமாய் எல்லாரின் கடவுள்களும் கை கோர்த்து உலாவுகிற அமெரிக்காவில் ஓராண்டுக்குப் பிறகு செப்டம்பர் 11 மீண்டும் வருகிறது. இந்தியப் பெண் தனது அமெரிக்கா வாழ் புலம்பெயர் வாழ்வில் ஓரளவு அமெரிக்கனாகி விடுவதாய்  நம்மைப்போன்ற  இந்தியர்களுக்குப் படும்போது கதை முடிகிறது. அல்லது அயர்லாந்து கதைசொல்லியாக மாறும் தமிழ் மனம் அமெரிக்கனாக/ளாக மாறுவதில் முரண் ஏதும் இல்லை என்று கூறலாமா? ஆனால் கதை எழுத்து அசாத்தியமான வலுவுடன் அமைந்து நமக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது.

முட்டர்பாஸ்என்ற கதையில் மகிமாவும் ஆனந்த சிவனும் கணவன் மனைவியாய் வாழமுடியாமல் பிரிகிறார்கள். அவர்களின் இருபெண்குழந்தைகள் தந்தையோடு ஒரு கார் சவாரி செய்கின்றனர். குழந்தைகள் பிங்கலையும்  சாதனாவும் வழியில் போகிற அதியுல்லாச டிரக் வண்டியை ஜெர்மன் மொழியில் திட்டுகின்றன, பிரிந்துபோன அம்மா கொடுக்கும் இட்லியைச் சாப்பிட்டுவிட்டுப்போகலாமா எனத் தொலைபேசியில் பிங்கலை கேட்கிறாள். ஆனந்தகுமார் சரி என்ற பின் புறப்பட்டு பயணம் வரும் வழியில் குழந்தைகளிடம் ஒரு ஆண்ட்டியுடன் பேசிவிட்டுவருகிறேன் என்று கூறி அவன் ஒரு பெண்ணுடன் சல்லாபிக்கிறான். அவள் இவன் பெயரின் அர்த்தம் பற்றிக் கேட்டபோது சதா உல்லாசமாக இருப்பவன் என்று கூறி அவள் உடலைச் சேர்த்து இறுக்குகிறான். பின்பு அவனது மகள் தாய்க்கு இவன் மூலம் பிறக்கப்போகும் மூன்றாவது குழந்தைக்கு ஒரு நல்ல தமிழ்ப்பெயர் கேட்கச்சொல்கிறாள் என்கிறாள்.. அதற்குப் பார்க்கலாம் என்கிறான் ஆனந்த சிவன்.

இங்குப் புதிய நாட்டின் மூலம் தமிழ் பண்பாட்டில் வந்துசேரும் முற்றிலும் புதிதான வாழ்க்கைமுறையும் ஆனந்த சிவனின் குழந்தைகளிடம் அவன் காட்டும் சாவகாசமும் பொ.கருணாகர மூர்த்தியால் எழுதப்படுகின்றன. மொத்தத்தில் இந்த கதை உலகத்தில் ஜெர்மன் மாணவியின் கஞ்சத்தனம், ‘வேருலகுகதையின் ஆண்-பெண் பாலின மாற்றமாய் விளக்கப்படும் அலைதல், ‘முட்டர்பாஸ்கதையில் வெளிப்படும் புதிய தாம்பத்தியம், நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் இறந்த கணவைன் துக்கம் தாளாமல் அமெரிக்காவை அதன் ஆதிக்குடிகளின் வழி தன் ஓவிய மனத்தில் பதிவு செய்யும் தமிழ்ப்பெண் – இவர்கள் எல்லோரும் தங்கள் பிறந்த இடத்திலிருந்து கொண்டுசென்றவற்றை(பழக்கமாகவோ, நியதியாகவோ, விழுமியங்களாகவோ, நாகரிகமோ இருக்கலாம்) மட்டும் மீண்டும் வாழவில்லை. இவர்கள் சென்ற இடத்தில் ஏதோ ஒன்றைக் கற்றிருக்கிறார்கள். ஏதோ ஒரு புது அம்சத்தை தம்முடையதாகப் படைத்திருக்கிறார்கள். தாம் கொண்டுவந்ததும் அங்கு பெற்றதும் ஓர் உற்பத்திப் பண்பை பெற்றுள்ளன. பழைய உலகமும் புதிய உலகமும் இங்கு ஓர் உரையாடலை மேற்கொள்கின்றன. 21ம் நூற்றாண்டில் தமிழுலகம் விரிவடைந்து  அகில உலக நாகரிகத்தில் தனக்கும் ஒருபங்கு இருக்கிறதென காட்டுகிறது. யாப்பு உடையாக் கவிதையைக் கைவிட்டு புதுக்கவிதையை ஏற்றுக்கொண்டதுபோல் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் பேசிய சமூகம் உலகின் எல்லா தலை நகர்களிலும் தன் காலைவைத்து நடமிட ஆரம்பித்துள்ள போது அதுவரை நினைத்து பார்க்காத வாழ்வை எதிர்கொள்வது தவிர்க்க இயலாதது. இச்சமூகம் அதற்குத் தயார் என்று கூறுகிறது.

இத்தகைய புலம்பெயர் எழுத்தாளர்கள் தம் தாய்மண்ணைப் பற்றி எழுதாதபோது வாழ இடம் கொடுத்த நாட்டைப்பற்றி எழுதுகிறார்கள். முட்டர்பாஸ்கதையில் நிறைய ஜெர்மன் மொழி சொற்களும் வாக்கியங்களும் வருகின்றன. அதுபோல் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலில் நிறைய பிரெஞ்சு மொழி சொற்களும் வாக்கியங்களும் உள்ளன. இது தமிழ் மொழி அமைப்பையும் அதன் உலகப்ப்ரவலின் போது ஏற்படும் உலகமொழிப் பாதிப்பையும் காட்டுகின்றது. இப்படி மெதுமெதுவாகத் தமிழ் பேசப்படும் மனங்களில் புதிய உலக, மொழிஅனுபவக் கூறுகள் நுழைவது ஆய்வுக்குறியதாகும். அதுவும் சமஸ்கிருதம், பர்ஷியன், அராபிக், ஆங்கிலம் என்ற வரிசையில் இப்போது ஜெர்மனும் பிரஞ்சும் சேர்ந்துகொள்கின்றன. அமெரிக்கா வாழ் காஞ்சனா கதையில் ஆங்கில மொழி எழுத்துக்கள் கதைக்குள் வருவதற்குப் பதில் கதையாடலில் உடலுக்குள் கதைவித்தை மூலம் அமெரிக்கா மனத்துள் நடத்தும் பாய்ச்சல் கவனிப்புக்குரியதாகும்.

இன்னொரு சிந்தனையாகப் புலம் பெயர் எழுத்துக்களில் காணப்படும் தாய் நாட்டின் அழிவு என்னும் ஒருவகை பேரழிவு சார் உருவகம் (Holocauste Trope) பற்றிக் குறிப்பிடவேண்டும்^. இது பொ.கருணாகரமூர்த்தியின் பதுங்கு குழி‘  என்ற கதையில் வெளிப்படுகிறது. சிங்களப்படைகள் பதுங்கு குழியில் யுத்தத்திற்குப் பயந்து ஒளிந்த மக்களை மண்போட்டு புல்டோசரால்மூடி நிரவிவிட்டு அதன் மேல் நின்றும் சுழன்றும் ஊழித்தாண்டவம் ஆடியது என்ற வாக்கியத்தில் கதை முடிகிறது. மெலிஞ்சி முத்தனின் கதை (“பேர்த்தோக்கள் எப்போதாவது வருகிறார்கள்”) பிரேதங்களுக்கு வாழ்வுபற்றிய பயம் இருக்காதென்னும் நினைப்பு எனக்குள்ளிருந்து எழுவதால் நான் இன்னமும்  பிரேதமாகவில்லையென நினைக்கிறேன்என்ற வாக்கியத்துடன் தொடங்குகிறது.  அதிகமும் கதை அம்சம் இல்லாத கதை இந்த ஈழ எழுத்தாளரின் மன நெருக்கடிபோல்  பசி மற்றும் பிணங்கள்  என்ற இரண்டு நினைவுகளையே சுற்றிசுற்றி வருகிறது. நான் மரணித்த பின்னர்என்னுடலைத் தின்பீர்களா? என்று கேட்கும் கதை சொல்லியின் குரல் தெளிவடையும்போது புலத்திலிருந்து இங்கே இப்பொ பத்து மணியாக இருக்கலாம் ஈழத்தில் இரவாக இருக்கும்என்று பிறந்த மண்ணின் காலத்தைத் தன் ஆன்மாவிலிருந்து மறக்க முடியாமல் நினைக்கிறது. கடைசியாக யுத்தங்களை நிறுத்துங்கள்‘  என் குரலை தயவு செய்து மொழி பெயருங்கள், மனித இனம் பிரபஞ்ச பேரியக்க பெருவட்டத்தின் சத்திய ஞான தளத்தில் பரிணமிக்க வேண்டியிருக்கிறதுஎன்ர விண்ணப்பத்தை முன்வைத்து கதை முடிவடைகிறது. இது கதையா கதைபோன்ற மனதின் கூக்குரலா என்று கூறமுடியவில்லை. அதாவது மெலிஞ்சி முத்தனின் சிறுகதை வடிவம் உணர்ச்சிக்கொந்தளிப்பால் வடிவ ஞாபகத்தை மீறியே செல்கிறது. இதுபோல் ஊரின் யுத்தத்தைப் புராண படிமங்கள், பேய்கள், ராட்சசர்களை ஞாபகங்களாகப் பார்க்கிர வேறு கதைகளையும் இவர் எழுதுயுள்ளார். (பார்க்க: கூட்டிச் செல்லும் குரல்‘(11) . பேய்களுக்கும் யுத்தத்துக்கும் உள்ள உறவு புறநானூற்றிலிருந்தும், கலிங்கத்துப் பரணியிலிருந்தும் தொடர்கிறது. இங்கு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் காஞ்சனாவின் ஒரு கதை ஏற்கனவே பார்த்ததுபோல் தாய்நாடுபற்றிய விபரீதத்தை ஈழத்திலிருந்து சென்றவர்கள் பேசுவதுபோல் புகலிட நாட்டின் இரட்டைக் கோபுரத் துயரத்தை கதை வடிவமாக்கியிருப்பதாகும். அதாவது புகலிட ஞானத்தில் (Expatriote Memory) இந்த பேரழிவு உருவகம் தவிர்க்கவியலாததாக இருக்கிறது.

இலக்கிய கதையாடல் வழி உணர்வுருவங்கள்

இனி இத்தகைய இலக்கிய கதையாடல்கள் (Literary Narratives) வழியாக ஊடி பரவிச் செல்லும் உணர்வுருவங்கள் பற்றிய விளக்கத்துக்குப் போகவேண்டும். பல இலக்கிய பிரதிகளில் ஒருவிதமான தோற்றம் தேடுதல் (search for the origin) உள்ளது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலில் வரும் ஹரிணி பாரிஸில் இயற்கையாய் தன்னை இடம் பெயர்த்து வைக்கிறாள். அவளுக்கான தோற்றம் புதுச்சேரியில் உள்ளது. தன் தாயையும் அவளது வரலாற்றையும் மாத்தா ஹரியைப் பற்றி ஐரோப்பா தேடுவதுபோல் தேடுகிறாள். கடைசியில் கிருஷ்ணாவின் கதையாடல்தான் அதன் மூலம்-தோற்றம் என்று வாசகர்கள் நம்பும்படி கதை முடிகிறது. ஹரிணி தேடுகிறவளும் தேடப்படுகிரவளுமாகிறாள். அ. முத்துலிங்கத்தின் கதைசொல்லி தனது தன்மையை (அகம்-நான்) மீண்டும் மறு கட்டமைப்பு(Reconstitue) செய்ய முடியாமல் அமைவதால் வெறும் உதிரி நாட்குறிப்புகளாகவே முடிக்கிறார். தன் தோற்றம் (நாடு) பற்றிய கண்டுபிடிப்புத் தனது நாவலெழுத்தாய் மாறுகிறது. எஸ்.பொ.வின் எதிர்வரலாறு (Anti-history)  அதீத சக்தி படைத்த மருந்து ஒன்றால் வரலாறு கடந்து எப்போதோ இறந்துபோன மனிதர்களோடு உரையாடல் மேற்கொண்டு மனம் மகிழ்கிறது.  அதாவது எதார்த்தமும் புனைவும் மீண்டும் மீண்டும் வித்தியாசமில்லாமல் இணைகின்றன. இந்த இடத்தில் காஞ்சனாவின் இதுவரைக் குறிப்பிடாதக் கதையைக் கொண்டுவரவேண்டும். “சியர்ரா நெவாடா”  என்ற தலைப்பு கொண்ட கதையில் பனிமலையேறும் உள்ளடக்கம் வருகிறது. பல நூறுவருடங்களுக்கு முன்பு மலையேறிய ஒரு பெண்ணின் உடல் பனிக்கிடையில் கண்டுபிடிக்கப்டுவது கதையாகிறது. நவீனகாலத்தைச் சேர்ந்த ஒருவன் கடைசியாய் வந்து பார்க்கும்போது குகைக்குள் பெண்ணுடலுடன் கண்டுபிடிக்கப்பட்ட பைக்குள் ஒரு காகிதப் புத்தகத்தில் பழைய ஆங்கில எழுத்துரு காணப்படுகிறது. அங்குக் கிடப்பவள் பனிக்கட்டி யுகத்துக்கு முற்பட்ட பெண். இந்தக் குறிப்பிட்ட மலையுச்சியில் நீர் வீழ்ச்சி இருந்திராத காலத்தைச் சார்ந்த பெண் அவள். நிலம் கண்டங்களாய் பிரிந்து கிடந்த காலத்தைச் சார்ந்த பெண். அதாவது இக்கதையின் முக்கியத்துவம் ஒரு மிகப்பழைய பெண்ணின் கோணத்தில் கதைச்சொல்லி கதையை அமைத்ததாகும். புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் தன் நாட்டின்  மொழியின் பழமையைத் தன் கதையின் கதைசொல்லிக்கு மறு அடையாளமாய் (Made-up Identity) வழங்கியுள்ளார். தோற்றத்தைத் தேடுதல் என்பது புனைவு தந்திரோபாயமாகிறது.

முடிவுரை

இதுவரை பார்த்தக் கருத்துகளிலிருந்து அகில உலகச் சிக்கல்கள், நாகரிகப் போக்குகள், மனோநிலைகள் போன்றவை சார்ந்த அளவைகள் தமிழின் வழியும் செல்லக்கூடியனவாக உள்ளன என்றறிகிறோம். தமிழ்ச் சமூகம் எங்கோ தென்னாசியாவின் ஒரு மூலையில் தன் பழமை என்னும் ஓட்டுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு உள் சுருங்கி தனக்குள் மட்டும் பார்த்துக்கொண்டு முடங்கிப்போன சமூகமல்ல என்றறிகிறோம். ஐயர்லாந்தின் பிரச்சினையும் பிரான்சின் பிரச்சினையும் க்யூபாவின் பிரச்சினையும் பொதுத்தன்மையும் தனித்தன்மையும் கொண்டிருப்பதுபோல் தமிழ் பேசுவோரின் பிரச்சினையும் இவற்றோடு இணைகின்றன. தன் சமூக அழிவு விபரீதத்தை மறக்க முடியாவிட்டாலும் புதிய -தனது கலாசாரத்துக்குச் சம்பந்தமே இல்லாத – சமூகங்களோடு உரையாடத் தமிழ் சமூகம் கற்றுள்ளது என்பதை அறிகிறோம். பிறரைக் கேலிசெய்வதுபோல் தன்னையும் கேலிசெய்யக் கற்றுகொண்டுவருகிறது இச்சமூகம் அந்த வகையில் முட்டர்பாஸ்காதை பல பிரச்சினைகளோடு முகம் கொடுக்கிற கதையாகிறது.

தனது பழமையான மொழியைவைத்துக்கொண்டே மிக நவீனமான சமூகங்களில் கண்டுகொண்ட மொழிச்சொற்களையும் வாக்கியங்களையும் மட்டுமல்லாமல் நினைவுகளையும் விழுமியங்களையும் அறிய முயல்கிறது. இங்கு குறிப்பிடப்பட்ட எழுத்துக்கள் தமிழிலக்கிய உலகில் அதிக பிராபல்யம் பெறாததும் நம் விவாதத்துக்கு உட்படவேண்டும். தமிழ் சினிமா அளவு இன்னொரு கலை வெளிப்பாடான தற்கால இலக்கியம் தமிழர்களிடம் கால் கொள்ளாததோடு  அனைத்துலக அடையாளங்களையும்  சிக்கல்களையும் பற்றிப் பேசும் உலக மட்டத்தில் அமைந்துள்ள காஞ்சனா மற்றும் நாகரத்தினம் எழுத்துக்கள் தமிழர்களாலேயே கண்டுகொள்ளபடாதிருப்பது நமக்கு வியப்பைத் தரலாம். முத்துலிங்கம் மற்றும் எஸ்.பொ. எழுத்துக்கள் ஈழ வாசகர்களிடமின்னும் அதிக பிராபல்யம் பெற்றிருக்கின்றன என்ற கூற்று உண்மையானால் மகிழ்ச்சிக்குரியதாகும்.

இன்று அகில உலகமும் வர்த்தக அடிப்படைகளை அடையாள அடிப்படைகளாக மடைமாற்றிச் செயல்படுகின்றன. சமீபத்தில் ஆஸ்லோவில் நடந்த ஓர் இளைஞனின் செயல் உலகைத் திகைக்க வைத்துள்ளது. மரபான சமூகங்கள் இருக்கக்கூடிய நாடுகளில் இனங்கள், மதங்கள், மொழிகள் எவ்வாறு ஒன்று இன்னொன்றோடு இணைந்தும் பிணக்குண்டும் செயல்படுகின்றன எனவும் இவற்றிற்கிடையேயுள்ள இயக்கியலும் ஆயப்படுகின்றன. இந்த ஆய்வும் அத்தகையதே.

குறிப்புகள்

 1. Appadurai, arjun Ed. Globalization, Duke University  Press 2001

2. தாமோதரன், காஞ்சனா, மரகதத்தீவு, உயிர்மை, 2009

3. கிருஷ்ணா, நாகரத்தினம், மாத்தாஹரி, எனி இந்தியன் பதிப்பகம் 2008

4. முத்துலிங்கம்.அ. உண்மை கலந்த நாட்குறிப்புகள், உயிர்மை 2008

5. பொன்னுதுரை எஸ். மாயினி, அர்ச்சுனா பதிப்பகம் 2007

6. ஷோபா சக்தி லைலா காலம் 36 2010

7. கருணாமூர்த்தி பொ. பதுங்குகுழி, உயிர்மை 2009

8. முத்தன், மெலிஞ்சி வேருலகு, உயிர்மை 2009

9. Anderson, Benedict Imagined communities, Verso

10. ஷோபா சக்தி லைலா காலம் 34 2010

11. காலம் 34, 2010

————————————————————

 

 

 

முனைவர் க.பஞ்சாங்கம்

 Senji -5 JPGமுனைவர் க.பஞ்சாங்கம்:

நண்பர் முனைவர் வெ.சுப்புராயநாயக்கரின் அறிமுகத்தால் வாய்த்த பேறு. கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் குறித்த திறனாய்வு ஒன்றை செஞ்சியில் புதுவை சீனு தமிழ்மணியின் நண்பர் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற முனைவர் பஞ்சாங்கம் நூலைக்குறித்து வைத்த கருத்துகள் அவருடன் நெருங்க வைத்தது. உலகில் மனிதமும் மனிதர்களும் அருகிவிட்டார்களோ என்ற அவ நம்பிக்கையில் வாழ்ந்தவன்.  அறுபது வயதில் உறவுகள், நண்பர்கள்  கடந்தும் மறந்தும் வந்திருக்கிற பாதையைப் பார்க்கிறேன். இளமை வாழ்க்கை மிகக் கடினமானது. நாங்கள் வாழ்ந்து கெட்ட குடும்பம். கல்லூரி நாட்களில் தீக்கதிர் இதழ், மார்க்ஸியம், திராவிடக் கட்சிகளில் ஆர்வம் என்றிருந்தது. திராவிடக் கட்சிகளின் வேடதாரிகள் அதிகரித்த நிலையில் துக்ளக் சோ, ஸ்தாபன காங்கிரஸ் என்று ஒதுங்கினேன். இன்றைக்கு எந்த அரசியலும் உகந்ததாக இல்லை, எப்போதும் ஆளுகின்றவர்களுக்கு எதிரான மன நிலையில் இருப்பதும், பாதித்தவர் எவராயினும் அவர்பக்கம் துணை நிற்கும் உணர்ச்சிப்பிண்டமாகவும் உணருகிறேன். சட்டென்று கோபப்படவும் செய்வேன் மறுகணம் அதற்காக வருந்தி  எதிர்தரப்பில் நியாயமிருப்பின் மன்னிப்புக்கேட்கவும் தயங்குவதில்லை. அநீதி இழைத்தவர்களை மன்னிப்பதுமில்லை. இந்த எனக்குள் ஒருவராக நான் கண்டெத்த நண்பர்தான் க.பஞ்சாங்கம். அவரது எழுத்துக்களை ஊடாக அறியவந்த நாள்முதல், அவருள் நானா  என்னுள் அவரா என விளங்கிக்கொள்ள முடியாத குழப்பம். அவரது பாசாங்கற்ற மொழியும், நலிந்தோருக்கான குரலும் என்னை வசீகரிப்பவை.  நண்பரின் நவீன இலக்கிய கோட்பாடுகளும், திறனாய்வு கட்டுரைகளும் கைக்கு கிடைத்துள்ளன வாசித்துக்கொண்டிருக்கிறேன். தமிழ் மொழியிலும், தொல் இலக்கியங்களிலும் எனக்குப் போதாமைகள் உண்டு, அவை அடக்கமல்ல உண்மையும் அதுதான் என்பதால் அவருடைய நவீன இலக்கியங்கள் திற்னாய்வுகளை முன்வைத்தும், பிற ஆளுமைகள் குறித்தும் (நாவல், கவிதைகள்) பஞ்சாங்கமென்ற பிரபஞ்சம் என்றொரு தொடரை ஜனவரியிலிருந்து எழுத இருக்கிறேன். வேறு நல்ல தலைப்பு கிடைத்தால் அது மாறவும் கூடும்.

—————————-

மொழிவது சுகம் நவம்பர் 22 – 2013

கடந்த வாரம்?

கடந்த 3  ஆண்டுகளாக பாரீஸிலுள்ள ‘les comptoirs de l’Inde’  சங்கத்தினர் இந்திய புத்தக விழா என்ற ஒன்றை நடத்திவருகிறார்கள். இரண்டு நாட்கள் நிகழ்ச்சி. சனிக்கிழமை (16 நவம்பர்)அதில் கழிந்தது. மகன், மருமகள், பேரன் இளையமகள் என்று எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி பாரீஸில் இருக்கிறது.  நவம்பர் மாதத்தில் குடும்பத்தில் மூவருக்குப் பிறந்த நாள்  அதில் இருவருக்கு மாதத்தின் தொடக்கத்தில் வருகிறது. அதனை விமரிசையாக கடந்த ஞாயிறன்று பாரீஸில் கொண்டாடினோம். பேரன் உடல் நலம் சரியில்லாததால் கூடுதலாக இரண்டு நாட்கள் தங்க வேண்டியதாகிவிட்டது. எதிர்வரும் ஜனவரி 20, 21,22 தேதியில் கோவையில் தாயகம் கடந்த தமிழ் என் பெயரில் மாநாடொன்றை நடத்த இருக்கிறார்கள். நிகழ்ச்சிக் குழுவில் எனக்கும் இடம் அளித்திருக்கிறார்கள், கட்டுரை ஒன்றும் வாசிக்கிறேன். முதலில் எனக்கு தாயகம் பெயர்தல் வலியும் வாழ்வும் ” என்ற தலைப்பில் கட்டுரை வாசிக்க  கூறினார்கள், ஆனால் அமெரிக்க ஐரோப்பிய தமிழிலக்கியம் குறித்து கட்டுரை வாசிக்க இருந்த நண்பர் அதனைத் தவிர்த்ததால், அத் தலைப்பில் எனக்கு வாசிக்க சாத்தியமாவென நண்பர் மாலன் கேட்க சம்மதித்துவிட்டேன். சிறுகதைகளின் அடிப்படையில் ஐரோப்பிய அமெரிக்க எழுத்தாளர்களை அணுகுவது படைப்பாளிகளின் ஆளுமையை கூடுதலாக புரிந்துகொள்ள உதவுமென நினைக்கிறேன். நாவல்களை வாசிக்கிறபோது எல்லோருடைய படைப்புகளும் உரிய நேரத்தில்கிடைப்பதில்லை பல எழுத்தாளர்களை தவறவிட சாத்தியமிருக்கிறது. இணையத்தில் முக்கிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் கிடைப்பது மற்றொரு அனுகூலம்.

—————————————————

The Lunch Box

Lunch box

ஏறக்குறைய ஐந்து நாட்களை முழுவதுமாக வீணடித்துவிட்டு (எழுதாமல்) செவ்வாய் இரவு கிட்டட்ட ஐந்து நாட்களும் 1000 கி.மீட்டருக்கு மேல் காரோட்டிய களைப்பில் படுக்கசென்றவனின் மறுநாளும் சோர்வில் கழிந்ததென்று சொல்ல வேண்டும், கடுமையான காய்ச்சல் மனைவியை காலையில் கடையில் விட்டுவிட்டு வீட்டுக்குத்திரும்பிய பிறகு, அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு. வாடிக்கையாளர் ஒருவர்  The Lunch Box திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சிக்கு இரண்டு அனுமதி சீட்டுகள் இருக்கிறதென்கிறார், வேண்டுமா என்று கேட்டார். திரைப்பட அரங்கில் படம் பார்த்து ஒரு மாமாங்கம் இருக்கும். எனினும் பெயரைக்கேட்டவுடனேயே காய்ச்சல், களைப்பு போயே போய்விட்டது. 2013 கான் திரைப்படவிழாவில் கலந்துகொண்டு தீவிர விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டுதலைப் பெற்றிருந்த படம். எனவே படத்தைப் பார்த்தே ஆகவேண்டும், அழைப்பிதழைக் கடையில் கொண்டுவந்து கொடுக்கச் சொல் என்றேன். நேற்று மாலை ஏழுமணிக்கு எங்கள் கடைக்குசென்று அழைப்பிதழை  பார்த்தபோதுதான் டிசம்பர் 12ல் ஐரோப்பாவெங்கும் திரையிட இருக்கும் படத்தின் பிரத்தியேக காட்சி என்று புரிந்தது. படம் துவக்குவதற்கு முன்பாக படத்தின் மகாத்மியங்களை மிகையின்றி தெரிவித்த அறிவிப்பாளர் பெண்மணி, திரையிட்டு முடிந்ததும் படக் குழுவினருடன் உரையாடலாம் எனத் தெரிவித்தார். இதனை நான் எதிர்பார்க்கவில்லை. கையில் புகைப்பட கருவி இல்லாதது ஏமாற்றத்தை தந்தது ஒரு பக்க மெனில், கைத்தோலைபேசி காமெராவை சோதித்து பார்த்தபோது பாட்டரி காலி என்றது. நொடிந்து போய்விட்டேன்.

இனி படத்திற்கு வருகிறேன்:

பம்பாய் என்றவுடன்  எது ஞாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ டப்பா வாலாக்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். இவர்களைப்பற்றி முழுமையாக தெரியவந்தது, ஓர் பிரெஞ்சுக்காரர் தயாரித்திருந்த குறும்படத்தின் மூலமாக. ஒரு தேர்ந்த ராணுவப் படையைப்போல காலம் மற்றும் ஒழுங்கில் இம்மியும் பிசகாமல் இயங்கும் அம்மனித ரொபோக்களின் வினைத்திறன் கண்டு பிரம்மித்திருக்கிறேன். பம்பாய் நகரின் எஸ்தெட்டிக்கில் நீளமான சுமைகூடைகளில் பயணிக்கும் Lunch Box களும் ஓர் அங்கம். ஆனாலும் அதனை முதன் முறையாக ரித்தேஷ் பத்ரா என்ற இளைஞர் நன்றாக பயன்படுத்திக்கொண்டு தானொரு சிறந்த கலைஞர் என்பதை நிரூபணம் செய்திருக்கிறார். வாழ்க்கை என்பது எதிர்பாராத சம்பவங்களால் முன் நகர்த்தப்படுவது. ஒழுங்குடனும் தவறுதலுக்கு வாய்ப்பே இல்லை என நம்பப்படுகிற டப்பாவாலாக்களின் செயல்பாட்டில் எங்கோ ஓரிடத்தில் தவறு நிகழ்ந்துவிடுகிறது, அப்படியான தவறு நிழ்வதற்கான சாத்தியத்தையும் நடந்தால் விளைவு என்னவாக இருக்குமெனவும் இளஞர் ரித்தேஷ் மித்ரா யோசித்ததின் பலன் இத்திரைப்படம். நல்ல சிறுகதைகளில் இடையில் திடீரென்று கதையோட்டத்திற்கு முரண்படுவதுபோல ஒரு பத்தி வரும், வாசகனுக்கு அவகாசம் கொடுக்க கதையாசிரியர் இந்த உத்தியைக் கையாண்டிருப்பதுபோல தோன்றினாலும், அச்சிறுகதைக்கான பொறியே அந்த விதிவிலக்கான பத்தியில் இருக்கிறதென்பது தெரியவரும். இந்தியாவின் கோடானுகோடி மத்திய வர்க்கப் பிரிவுக்குள் ஒர் இளம் பெண் – ‘இலா சிங்'(நிம்ரத் கௌர்)கிற்கு ஏழெட்டு வயதில் ஒரு மகளும் உண்டு. அவள் குடியிருப்புக்கு மேலே வசிக்கும் ஓர் வயதான ஆண்ட்டியின் சமையல் ஆலோசனையின்படி கணவனுக்கு அலுவலகத்திற்குக் கொடுத்தனுப்ப மதிய உணவு தயார் செய்கிறாள், டப்பாவாலா வருகிறார் ஒரு பெரிய சங்கிலித்தொடர்போல பயணித்த அந்த லன்ச் பாக்ஸ் அரசாங்க அலுவலகமொன்றை அடைகிறது, மனைவியை இழந்த வயதான அரசாங்க உத்தியோகஸ்தர் ஒருவர் சாப்பாட்டு அடுக்கைப் பிரித்து ருசித்து சாப்பிடுவதாக அடுத்த காட்சி. வீட்டிற்கு லன்ச் பாக்ஸ் மாலை திரும்ப வருகிறது. அது காலியாக இருப்பதைப்பார்த்து அவளுக்கு சந்தோஷம். முன்னிரவு அழைப்பு மணி கேட்டு, இளம்மனைவி கதவைத் திறக்கிறாள். உள்ளே நுழைய இருப்பவன் வயதான அரசு அலுவலன் என நாம் நினைக்க அவள் கணவனாக வேறொருவனை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர். இவள் தயாரித்து அனுப்பிய மதிய உணவை சாப்பிட்ட ஆசாமி (Irrfan Khan) வேறு ஆள் என நமக்குப் புரிகிறது. பிறழ்வதற்கு வாய்ப்பே இல்லையென நம்பப்படுகிற டப்பாவாலாக்கள் செயல்பாட்டில் தவறு நிகழ்ந்திருப்பதும் கணவனுக்குப் போகவேண்டிய லன்ச் பாக்ஸ் வேறொருவருக்குப் போய் சேர்ந்ததையும் எப்பொது அறிய வருகிறோமோ அப்போதே திரைப்படம் நம்மை அணைத்துக்கொள்கிறது. வீடு திரும்பிய கணவனிடம் மாடிவீட்டு ஆண்ட்டியின் யோசனையின்படி செய்த சமையல் நன்றாக இருந்ததா? எனகேட்கிறாள் அவள் செய்தனுப்பாத காய்கறியின் பெயரைக் கூறி நன்றக இருந்தது என போகிற போக்கில் கணவன் கூறுகிறான். இளம் மனவிக்கு என்ன நடந்திருக்கும் என்பது விளங்குகிறது. மறுநாளும் மேல் மாடி ஆண்ட்டியிடம் யோசனை. ஆண்ட்டி தனது சமையற் குறிப்பின் பலாபலனை தெரிந்துகொள்ளும் ஆவலில்,  லன்ச் பாக்ஸைப் பிரித்து உணவைச் சாப்பிட்டவனைத் துண்டுக் காகிதம் எழுதி விசாரிக்கத் தூண்டுகிறாள். முகம் தெரியாத ஆசாமியுடனான கடித உறவு லன்ச் பாக்ஸ் மூலமாக தொடருகிறது. தொடக்கத்தில் மேல் மாடி ஆண்ட்டி தூண்டுதலில் கடிதம் எழுதினாலும், பின்னர் இளம்பெண்ணுக்கும் சரி வயதான அலுவக ஊழியருக்கும் சரி அதைத் தொடர்வதற்குக் காரணங்கள் உள்ளன. மெல்ல இரு தரப்பிலும் காதற்கோட்டைவகையினாலான காதல் அரும்புகிறது. டப்பாவாலாக்கள் தவறை இருவருமே சுட்டிக்காட்டுவதில்லை. எத்தனை நாளைக்கு இப்படி எழுதிக்கொண்டிருப்பது சந்திக்கலாமே என்கிறாள். வயதான ஊழியரும் சம்மதிக்கிறார், சந்திக்க வந்த அரசு ஊழியர் தனது வயது உறைக்க, இளம்பெண்ணை சந்திக்காமலேயே, மாற்றல் கேட்டு பெற்று நாசிக் போய்விடுகிறார்

தமிழில் அடிக்கடி நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள் என்பார்கள். அப்படித்தான் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் இர்பான் கான், நிம்ரத் கௌர், இர்பான் கானிடம் பயிற்சி பெற வரும் சித்திக் என்ற நடிகர் எவரையும் நடிகர்களாகப் பார்க்க முடிவதில்லை. திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லை. லன்ச் பாக்ஸ்யையும் நடிகர் பட்டியலில் சேர்க்கவேண்டும். மேல் மாடி ஆண்ட்டியின் முகத்தை கடைசிவரை இயக்குனர் காட்டவில்லை. பார்வையாளர் ஒருவர் கலந்துரையாடலில் ஆண்ட்டியாக நடித்தவரை ஏன் கடைசிவரை காட்டவில்லை எனக்கேட்டதற்கு. இயக்குனர், “பெண்கள் இருவருமே சிறையில் இருக்கிறார்கள் (மேல் மாடி ஆண்ட்டியின் கணவன் கோமாவில் இருக்கிறான், அவனைப் பராமரிப்பதன்றி அவருக்கு வேறுவேலைகள் இல்லை என இடையில் வசனம் வருகிறது)  பக்கத்து சிறைவாசியுடன் பேசுகிறபொழுது ஒரு முகம் போதும்”, என்றார். இன்னொரு ரசிகர் டப்பாவாலாக்கள் மெல்ல எண்ணிக்கையில் குறைத்துவருவதாகக் கேள்விபட்டேன், அதுவும் தவிர நவீனமயமாகிறது என நம்பப்படும் நகரத்தில் டப்பாவாலாக்கள் தொழில் நீடிக்க முடியுமா எனக்கேட்டதற்கு, இயக்குனர் கூறிய பதில்: “டப்பா வாலாக்கள் பம்பாய் வாழ்க்கையின் ஓர் அங்கம், மரபாக ஒரு நூற்றாண்டுக்கு மேலாக எங்களுக்குப் பழகிவிட்டது, இன்னொரு நூறாண்டுக்குப் பிறகும் எங்கேனும் ஒரு டப்பாவாலாவை நீங்கள் பம்பாயில் எதிர்கொள்ள நேரும் அதுதான் இந்தியா என்றார். படம் முடிந்த போது பார்வையாளர்கள் வெகு நேரம் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். நடிகை படத்தில் தோன்றியதைவிட மிகவும் இளபெண்ணாக இருந்தார். நல்ல ஆங்கிலத்தில் உரையாடினார். முதல் நாள்  சென்ற லியொன் (Lyon) நகரைவிட இந்த நகரில் (Strasbourg) குளிர் அதிகம் நல்ல வேளை ஒயின் என்னைக் காப்பாற்றியது எனச்சொல்லி சிரித்தார்.

—————————————————————-

L’Inde de livres

L’Association les comptoirs de l’Inde organise son 3ème salon de livres à Paris le 16 et le 17 novembre 2013 à la Marie du 20ème ,6 – Place de Gambetta

Pour tout renseignement complémentaire, visitez leur site

http://www.comptoirs.inde.org Tél. : 0146590212

மொழிவது சுகம் நவம்பர் 10 2013

1. வ.ஐ.ச.ஜெயபாலனின் ‘குறுந்தொகை’ -இந்திரன்

தீராநதி அக்டோபர் இதழில் க்ரியா வெளியீடாக வந்துள்ள கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் ‘குறுந்தொகை’ கவிதைத் தொகுப்புக் குறித்து இந்திரன் நூல் மதிப்புரை எழுதியுள்ளார். இன்று தமிழ்க் கவிதை வெளியில் இயங்குகிறவர்களுள் வ.ஐ.ச. ஜெயபாலன் எனக்கும் மிகச மிக மிக முக்கியமான கவிஞர். ‘இந்த வாரத்திற்கு ஒன்று, அந்த இதழுக்காக ஒன்று’ என எழுதும் படைப்பிலக்கியவாதியல்ல. ஓர் அசலானக் கவிஞர்.

சிலவற்றை சிலர்தான் மதிப்பிடவேண்டும். தங்கத்தை உரசிப்பாரென்று இரும்பு அடிக்கும் கொல்லனிடம் கேட்கமுடியாது, பொற்கொல்லனைத்தான் அனுகவேண்டும். வ.ஐ.ச. ஜெயபாலன் குறித்தும் அவர் கவிதை நரம்புகளைச் சுண்டி அவற்றின் உறுதிப்பாட்டையும் நெகிழ்ச்சியையும் பேசவல்லவர் இந்திரன். மதிப்புரையில் ஜெயபாலன் கவிதைக்குறித்து சற்று கூடுதலாக எழுதியிருக்கலாம் என்கிற மனக்குறை எனக்கு இருந்தபோதிலும், அக்கவிதை தொகுப்பைக் குறித்து முன்வைத்திருக்கும் கருத்து புறம் தள்ளக்கூடியது அல்ல. தமிழகத்து எழுத்தாளர்களின் புனைவுகளோடு ஒப்பிடுகிறபோது அண்மைக்காலங்களில், கவிதைகளில் நமது எதிர்பார்ப்பு மழுங்கடிக்கப்டுகிறது என்பது உண்மை. எனது மனநிலைக்கு இசைவாக நண்பர் இந்திரன் கருத்து இருப்பதால் அதனை நண்பர்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி:

“தற்கால தமிழகத்துக் கவிஞர்களுக்கு வாழ்க்கையிலிருந்து சவால்கள் ஏதுமில்லை. எனவே அவர்கள் மொழிக்குள் சவால்களை உருவாக்கிக்கொண்டு கவிதைகளைப் புனைகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஈழத்துக் கவிஞர்களின் முன்னால் வாழ்க்கை பல்வேறு சவால்களை முன்வைத்திருக்கிறது. எனவே ஈழத்துக் கவிஞர்கள் தாங்கள் பாடுபொருள்களை அன்றாட வாழ்க்கையிலிருந்து எடுத்துக்கொள்கிறார்கள்.  அடுத்ததாக வ.ஐ.ச.ஜெயபாலன் போன்ற கவிஞர்கள் நார்வே போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கிறபோது தான் ஒரு தமிழன் என்று சொல்லவேண்டிய கட்டாயம் அவர்கள் வாழ்தலுக்கு அத்தியாவசியமாகிறது. ஆனால் தமிழகத்துக் கவிஞனுக்கு தமிழ் அடையாளம் பேசவேண்டிய கட்டாயமில்லை. அவன் தன்னை ஒரு சர்வதேசக் கவிஞனாகக் கருதிக்கொள்வதற்கான உல்லாசமும், தான் தமிழனல்ல இந்தியன் என்று பேசக்கூடிய ஒரு மருட்சியும் வாய்த்திருக்கிறது. அடுத்ததாக தமிழகத்தில் தோன்றிய புதுக்கவிதையின்  பிறப்பே மரபுக் கவிதையை மறுதலித்து அதற்குப் பதிலியாக வேறொரு கவிநடையை  உருவாக்கும் நோக்கம் கொண்டதாக இருந்திருக்கிறது எனவேதான் சங்கக் கவிதை நோக்கி புதுக்கவிதை நகரவேண்டும் எனப் பல தமிழகத்து நவீன கவிகள் பேசிய போதிலும் வ.ஐ.ச. ஜெயபாலனைப்போல சங்கத் தமிழின் மரபார்ந்த மொழி வெளிப்பாட்டை அவர்கள் கைக்கொள்ளவில்லை” (தீராநதி இதழ் அக்டோபர் 2013 பக்கம் 47)

இது துறைசார்ந்த நண்பர்கள் கவனத்திற்கொள்ளவேண்டிய ஒன்று. இந்த இடத்தில் புலம்பெயர்ந்து தமிழ் படைப்பிலக்கியத்தில் ஆர்வம்காட்டுகிறவன் என்ற வகையில் எனக்கும் ஒன்றைச் சொல்லவேண்டும்.  சிறு புரட்சி என்று ஒன்றிருக்கிறது. ஆங்கிலத்தில் அதனை தற்போது Micro Revolution’ என்கிறார்கள். இது வேறொன்றுமல்ல தனிமனிதனின் மறுதலிப்பு, கலகக் குரல், உடன்பாடில்லை என்கிறபோது ‘இல்லை’ சரியல்ல எனும் குணம். ஆரோக்கியமான சமூகத்திற்கு இணக்கமாக இருப்பது எத்துணை அவசியமோ, மறுதலிப்பும் அவசியம். பிறரைக் காட்டிலும் அறிவையும் உணர்ச்சியையும் சமமாகப் பாவிக்கிற கலை இலக்கிய படைப்பிலக்கியவாதிகளுக்கு இப்பொறுப்புக் கூடுதலாக இருக்கிறது. தமிழ் நாட்டிலும் சவால்கள் இல்லாமலில்லை, ஆனால் அங்குள்ள பிரச்சினை அவர்கள் அதனைக் கணக்கில் கொள்வதில்லை. வெளிநாட்டில் வாழும் படைப்பாளிகள் வ.ஐ.ச. ஜெயபாலன்போன்றவர்கள் செயல்படுகிறபொழுது படைப்பு மட்டுமே அவர்கள் சிந்தனையில் குறுக்கிடுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் எழுதுகிற பலருக்கும் வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்கள் கவனமெல்லாம் சக கவிஞனை, சக படைப்பாளியை, சக மொழிபெயர்ப்பாளனை,  எப்படி வீழ்த்துவதென்ற சிந்தனைக்கு நேரத்தை அதிகம் செலவிடுகிறபோது எங்கிருந்து அதில் படைப்பு  பிறக்கும்? இந்திரன் கருத்து போய்ச்சேரவேண்டியவர்களிடம் போய்ச்சேரவேண்டும்.

2. பிரான்சில் என்ன நடக்கிறது.

கொன்க்கூர் இலக்கிய பரிசு 2013.

கடந்த நவம்பர் 4ந்தேதி அன்று பிரெஞ்சு புத்திலக்கிய உலகு 2013ம் ஆண்டுக்கான கொங்க்கூர் இலக்கிய பரிசை (Le prix Goncourt ) அறிவித்திருக்கிறது. பரிசுபெற்ற நாவலின் பெயர் ‘Au Revoir Lதூ-Haut’ நாவலாசிரியர் Pierre Lematre. தேர்வு அனைத்தும் வெளிப்படை. பன்னிரண்டு சுற்றுகள் தேர்வு நடைபெற்றது இறுதிச்சுற்றில் பத்து நடுவர்களில் ஆறுவாக்குகள் மேற்கண்ட நாவலுக்கும், நான்கு வாக்குகள் Frederic Verger எழுதிய ‘Arden’ நாவலுக்கும் கிடைத்தன. இங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய இலக்கிய பரிசை இம்முறை ஓர் குற்ற புனைவு நாவலுக்கு முதன்முறையாக வழங்கியிருக்கிறார்கள்.

————————-

‘உலக எழுத்தாளர் வரிசை – 6: டுயோங் த்யூயோங்

Duong Thu Huong - Viet Nam two

டுயோங் த்யூயோங் ( Duong Thu Huong) வியட்நாமைச் சேர்ந்த பெண் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். சிறந்ததொரு நாவலாசிரியை, தீவிரமாக சோஷலிஸம் பேசிய முன்னாள் தோழர். தேசியத்தில் நம்பிக்கைவைத்து மேற்கத்திய திக்கதிற்கு எதிராக ஆயுதமேந்தியவர். வியட்நாம் நாட்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பிதாமகள். பின்னாளில் உள்நாட்டு மார்க்ஸியதோழர்களின் பிரபுத்துவ வாழ்க்கை இவரை சிந்திக்கவைத்ததது மாத்திரமல்ல, பொதுவுடமையின்பேரில் மக்களை அடிமைகளாக நடத்திய அம்மார்க்ஸிய முதலாளிகளின் போக்கு எரிச்சல் கொள்ளவும் செய்தது.இவரது குடும்ப வாழ்க்கை சிறப்பித்துச் சொல்லும்படியில்லை. துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திமணம் செய்துகொண்டவனோடு நடத்திய இல்லறவாழ்க்கை நரகம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு கணவரிடமிருந்து மணவிலக்குப் பெற்றிருக்கிறார். உள்நாட்டுப் போரின்போது 30பேர்கொண்ட கலைக்குழுவொன்றை உருவாக்கி, போர்முனைக்குச் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார். ‘வேட்டுச் சத்தத்தினும் பார்க்க எங்கள் பாட்டுக்குரல் உரத்து ஒலித்தென’ என்ற பெருமிதம் அவருக்குண்டு. ‘எனக்கு அப்போதெல்லாம் நன்றாக பாடவரும், அதுபோலவே அபாயமான காரியங்களில் ஈடுபடுத்திக்கொள்ளும் துணிச்சலும் “திகம்’ என்கிறார். 1973ம் “மெரிக்கத் துருப்புகள் வடவியட்நாமிடம் நடத்திய யுத்தத்தில் தோல்வியுற்று விலகிக்கொண்டபிறகு நடந்த இரண்டாண்டுகால சகோதர யுத்தத்தின் இறுதியில் தென்-வியட்நாம் வட-வியட்நாம் நிர்வாகத்தின்கீழ் வருகிறது. டுயோங்கைப் பொறுத்தவரை வட-வியட்நாம் திக்கத்தின் கீழ்வராத தென்-வியட்நாம் மக்களின் வாழ்க்கை நன்றாகவே இருந்தது. 1979ம் ண்டு கம்யூனிஸ கட்சியுடன் இணைத்துக்கொள்ள அறிவுறுத்தி அழைப்பு வர, அந்நாட்களில் வியட்நாமியர்களின் பொதுவான மனநிலைக்கிணங்க, விருப்பமில்லாமலேயே கட்சியில் உறுப்பினரானார்.

‘காட்சித் திரிபுகளைக் கடந்து'(Beyond Illusions). என்ற முதல் நாவல் 1987ல் வெளிவந்தது. தொடக்க நாவலே நாட்டின் முதன்மையான நாவலாசிரியர்களில் அவரும் ஒருவரென்ற அங்கீகாரத்தை வழங்கியது என்கிறார்கள். ஒரு இலட்சம் பிரதிகள் விற்றனவாம், பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் பின் அட்டையில் எழுதியிருக்கிறது. வியட்நாம் போன்றதொரு சிறிய நாட்டில் அதற்குச் சாத்தியமுண்டா என்று தெரியவில்லை. போரினால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் நாவலில் விரிவாகப் பேசபடுகின்றன. கம்யூனிஸத் தலைவர்களின் அதிகார அத்துமீறல்களை கடுமையாக நாவலில் விமர்சனம் செய்திருந்தார். 1988ம் ண்டு வெளிவந்த  குருட்டு சொர்க்கம் (Paradise of the Blind), மற்றொரு நல்ல நாவலென்ற கருத்து நிலவுகிறது. விற்பனை அளவிலும் சாதனை புரிந்திருக்கிறது. இம்முறையும் ள்பவர்களும், ட்சிமுறையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு எழுத்தாளர் கையைக் கட்டிப்போட பேரம் பேசுகிறார்கள், அரசாங்கத் தரப்பில் ஒரு பெரிய வீடொன்றை தங்கத் தாம்பாளத்தில் வைத்துப் பரிசாகத் தர தயார் என்கிறார்கள். எழுத்தாளர் மறுக்கிறார். மறுப்பதோடு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் ஆட்சியாளர்களைக் கண்டிக்கிறார். ஒருகட்சி ஆட்சிமுறையை ஒழித்து, ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கு அரசு முன் வரவேண்டுமென வற்புறுத்துகிறார். எனவே 1989ம் ண்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மறு ஆண்டு வியட்நாமிய எழுத்தாளர் அமைப்பிலிருந்தும் அவரை நீக்குகிறார்கள். 1991ம் ண்டு எட்டுமாதங்கள் சிறைவாசம். அவரது நூல்கள் அனைத்தும் உள் நாட்டில் தடை செய்யப்படுகின்றன. வெகுகாலம் வியட்நாமில் வீட்டுக் காவலிலிருந்த எழுத்தாளர் விடுதலைக்குப் பிறகு 2006ம் ண்டிலிருந்து பிரான்சுநாட்டில் வசித்துவருகிறார். பிரெஞ்சு மொழியை அறிந்தவரென்ற போதிலும் வியட்நாமிய மொழியில் எழுதப்பட்டு பின்னர் பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் அவரது படைப்புகள் மொழிபெயர்ப்பு செய்யப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.

டுயோங் த்யூயோங் எழுத்தில்  அண்மையில் வெளிவந்துள்ள நாவல் Au Zenith(1). புரிதலுக்காக ‘உச்சம்’ “ல்லது ‘சிகரம்’ என்று மொழிபெயர்க்கலாம். பொதுவாக சிகரத்தைத் தொட்டவர்களுக்கு இறங்கிவரப்போதாது, பெரும்பான்மையோருக்கு விபத்தென்பது தீர்மானிக்கபட்டது. அவர்கள் நிலை தடுமாறி விழுகிறபோது பரிதாபமான முடிவையே சந்திக்கின்றனர். உள்ளன்போடு நேசிக்கிறவர்களின் அழுகுரலைக் கேட்கக்கூட வாய்ப்பின்றி தனித்து போகின்றனர் என்பது வரலாறு தரும் உண்மை. பூமி அனைத்தும் எனது காலடியில்; வானம் எனது வெண்கொற்றகுடை; தீயும், காற்றும் நீருங்கூட என்னைக்கேட்டே செயல்படவேண்டுமென நினைத்த அசுரர்களுக்கு நேர்ந்த முடிவுகளும் நமக்கு இதைத்தான் கூறின.  Au Zenith என்ற பெருங்கதையாடலைக்கொண்டு பெரியதொரு இலக்கியபோரையே படைப்புகளத்தில் நடத்தி முடித்திருக்கிறார் இவர்.

இம்முறை வியட்நாமியர்களின் தந்தையெனப் போற்றப்படும் அதிபரின் பிம்பம் ஆட்டம் காண்கிறது. வியட்நாம் தேசத்தந்தை அதிபர் ஹோசிமின்குறித்து வெளியுலகு அறிந்திராத தகவல்களையும், இரகசியங்களையும் கருப்பொருட்களாகக் கொண்டு புனைவு நீள்கிறது. இழப்புகளை எண்ணி அழும் அந்திமக்காலம் அதிபர் ஹோசிமினுக்குச் சொந்தமானதென்பதைச் சொல்லுகிற புனைவு. நாவலில் ஹோசிமின் என்றபெயர் சாதுர்யமாகத் தவிர்க்கப்பட்டிருந்தபோதிலும் அதிபர் என்றசொல்லுக்குள்ளே ஹோசிமின் ஒளிந்திருப்பதை வெகு சுலபமாகவே கண்டுபிடித்துவிடுகிறோம். தூரதேசங்களிலிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும், உள்ளூர் அபாவிகளுக்கும் ஹோசிமின் என்ற சொல் தரும் புரிதல் என்ன? உத்தமர், பெண்களை ஏறெடுத்தும் பாராதவர். உடல் பொருள் ஆவி அவ்வளவையும் வியட்நாமுக்கு அளித்து தமது சொந்த வாழ்வைத் தியாகம் செய்தவர் போன்ற புகழுரைகள் – சர்வாதிகாரிகள் அனைவருக்குமே பூணப்படும் கவசமென்று நாமும் அறிவோம். ஆனால் அவர்கள் அந்தரங்கம் புனித நீரல்ல, மாசுபடிந்தது. துர்நாற்றம் கொண்டது. அதிபராக அவதாரமெடுப்பவன் கட்சிக்கும் நாட்டுக்கும் அன்றி வேறு பயன்பாடுகளற்றவன் என்பதை அவன் தீர்மானிப்பதல்ல, அவன் அவனுக்காகவே வடிவமைக்கிற “திகாரமையம் தீர்மானிக்கிறது; அவர்களுக்கு உடற் தினவுகள் கூடாது; காமம், காதல், பெண்கள் விலக்கப்பட்டது, விலக்கப்பட்டவர்கள் என்ற சர்வாதிகார ஓர்மத்திற்கு வலு சேர்க்கிறவகையில் தங்கள் தேச நாயகனை சுத்திகரிக்க நினைக்கிறார்கள். விளைவு அதிபரின் பெண்துணை அழிக்கப்படுகிறது. தடயமின்றி கரைந்துபோகிறாள். சுவான் என்ற ஒருத்தி, அதிபரைக் காதலித்தாளென்ற ஒரே காரணத்திற்காகவும், அவருடன் படுக்கையைப் பகிர்ந்து ஒரு மகனுக்கும் மகளுக்கும் தாயானவள் என்ற குற்றத்திற்காகவுவ் தண்டிக்கப்படுகிறாள். மகன்,மகள், மனைவி என்ற உறவுகளை ஒரு சராசரி மனிதன் விரும்பலாம், குடும்ப வாழ்க்கை ஊர் பேரற்ற மனிதர்களுக்கு அவசியமாகலாம், ஆனால் நாட்டின் அதிபருக்கு, தேசத்தின் நலனையே மூச்சாகக் கொண்ட மனிதருக்கு அம்மனிதரே விரும்பினாலுங்கூட சர்வாதிகார கவசம் அதை அனுமதிக்காதென்பது நாவல் வைக்கும் உண்மை. விசுவாசிகளென்று சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டம் இளம்பெண் சுவா¨னை(Xuan) கொலைசெய்து தெருவில் வீசிவிட்டுப்போகிறது. அவளுடன் பாலியல் வல்லுறவு கொள்பவன் உள்துறைமைச்சராக இருப்பவன். பெண் செய்த குற்றம் அதிபரைக் காதலித்தது அல்ல மாறாக சட்டபூர்வமாக அது அங்கீகரிக்கப்படவேண்டும் என்று விண்ணப்பித்ததற்காக. அவள் கொலை வாகன விபத்தென்று அறிவிக்கப்படுகிறது. பெண்ணுக்கும் அதிபருக்குமான உறவினை தொடக்கமுதல் அறிந்திருந்த அவளது ஒன்றுவிட்ட சகோதரியும் பின்னர் கொலை செய்யப்படுகிறாள், எதேச்சையாக இப்பெண்மூலம் அவளது காதலன் அறிந்திருந்த – ஆட்சியாளர்களால் மறைக்கபட்ட உண்மை வெகுகாலத்திற்குப் பிறகு வெளி உலகுக்குத் தெரியவருகிறது. பொதுவாக சோஷலிஸநாடுகளில் தனிமனிதன் அவனது இருப்பு, மகிழ்ச்சி, உறவு முதலான காரணிகளிலிருந்து அந்நியப்படுத்தப்படுகிறான். “காம்ரேட், உண்மையான Bolcheviqueற்கு குடும்பம் எதற்கென” கேட்ட ஸ்டாலினை இங்கே நினைவுகூர்தல் வேண்டும். ஸ்டாலின் மனைவி தற்கொலை செய்துகொண்டதும், அதை இயல்பான மரணமென்று வெளி உலகிற்கு அறிவித்ததும், மகன் போதைப்பொருளுக்கு அடிமையானதும், இரண்டாம் உலகபோரின்போதும் அவனுக்கேற்பட்ட சோகமான முடிவும் மறக்கக்கூடியதல்ல. ‘பெரிய அண்ணன்கள்’ அநேகரின் வாழ்க்கை வரலாறுகள், நமக்கு வாசிப்பு அலுப்பினை ஏற்படுத்துவதற்கு அவற்றின் ஊடுபாவாக ஒளிந்துள்ள இதுமாதிரியான ஒற்றுமை நிகழ்வுகளே காரணம். உலக வரலாற்றில் மாவீரர்களாக சித்தரிக்கபட்ட சர்வாதிகாரிகள் அனைவருக்குமே சொந்தவாழ்க்கை ஒளிமயமானதல்ல, அது இருண்ட குகைக்குச் சொந்தமானது. உடலும் மனமும் சோர தங்கள் இறுதி நாட்களை கடந்தகாலமாக உருமாற்றம் செய்து வேதனைகளோடு அவர்கள் மடிந்திருக்கிறார்கள்.

பொதுவுடமை சித்தாந்தம்- காலங்காலமாய் போற்றப்படும் மரபுகள் என்ற இரு கைகளுக்குள்ளும் சிக்குண்டு எவ்வாறு ஒரு தனிமனிதன் வாழ்க்கை அலைகழிக்கபடுகிறது என்பதே புனைவு மையப்படுத்தும் பொருள். டுயோங்குடைய முந்தைய நாவல்களும் தனிமனிதனை தேசாந்திரம் செய்யும் சோஷலிசஸ அரசியலை விமர்சித்திருக்கின்றன என்றாலும் இந்நாவலில் வரம்பற்ற அதிகாரத்தின் முடிவாக இருக்கும் ஒருவனே, தனிமனித தீண்டாமை கோட்பாட்டின் விளைவாக எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பது நாவல் தரும் விளக்கம். தங்கள் வாழ்நாளில் அதிகாரத்தில் உச்சியிலிருந்துகொண்டு ஆடிய மூர்க்க தாண்டவமனைத்தும், பதவி மோகத்தில் காயப்படுத்தப்பட்ட தனிமனித உணர்வுகளுக்காகத் தேடிக்கொண்ட களிம்பென்று விளங்கிக்கொள்ள வேண்டும். டுயோங் நமக்கு அறிமுகப்படுத்துகிற ஹோசி
மினைக் கண்டு பரிதாபப்படவேண்டியிருக்கிறது. தேசத்தந்தையென கோடானகோடி வியட்நாமியர்கள் புகழ்பாடிய நேற்றைய ஹோசிமின்
அல்ல இவர், விரக்தியின் உச்சத்தில், இறையின்றி மெலிந்துபோன நோஞ்சான் கழுகு. வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில்
அனைத்துவகையிலும் தனிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கும் முதியவர்.

ஆசிரியர் நாவலின் தொடக்கத்திலேயே வாசகர்களைக் கனிவாய் எச்சரிக்கிறார். கற்பனையை மட்டுமே முழுமையாக நம்பி ஒரு நாவலைப் படைப்பதற்கான ஆற்றல் “வருக்கில்லையாம். ‘நான் எழுதுகிற புனைவுகள் அனைத்தும் உண்மைகள் அடிப்படையில் எழுதப்பட்டவை என்பது ஆசிரியர் தரும் வாக்கு மூலம். நாவலின் தொடக்கத்தில் அப்பா!.. அப்பா!.. என்றொரு அலறல். மலை அடிவாரத்திலிருந்து புறப்பட்ட இளஞ்சிறுவனின் அபயக்குரல் மலைகளெங்கும் எதிரொலிக்கிறது; மரங்கள் அதிர்ச்சியில் அசைந்துகொடுக்கின்றன, நிசப்தமான வெளியில் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டு அடங்குகின்றன. ஒருகணம் தம்மை மறந்த அதிபர் சுய நினைவுக்குத் திரும்புகிறார். ‘இல்லை, அவன் குரலில்லை’ இக்குரலுக்குடையவன் வேறு யாரோ’, தம்மைத்தாமே சமாதானம் செய்துகொள்கிறார்.. எனினும் அக்குரல் வெகுநாட்களாய் நெஞ்சுக்குள் கனிந்துகொண்டிருந்த சோகத்தை விசிறிவிட பற்றிக்கொள்கிறது- அவர் மீள்வாசிப்பு செய்யும் கடந்தகாலத்திற்குள் பிரவேசிக்கிறோம். தொடர்ந்து பையனின் அழுகுரல். ‘பையனின் தகப்பன் ஒருவேளை இறந்திருக்கக்கூடும், பாவம், இனி அவனொரு அனாதைச் சிறுவன். சட்டென்று அதிபர் மனதில் ஒரு கேள்வி, நான் இறப்பதாய் வைத்துக்கொள்வோம், என் மகனும் இந்தப்பையனை போலத்தான் அழுவானோ?(பக்கம் -23)

இளமைக்கால பாரீஸ் வாழ்க்கை, கடந்த கால காதல் ஆகியவற்றை எண்ணி எண்ணி ஆற்றொணாத துயரத்தில் மூழ்கும் அதிபரின் கதைக்கு இணைகதைகளாக மூன்றுகதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. முதலாவதுகதை ‘வூ’ என்பவர் குறித்தது. வூ, அதிபரின் நம்பிக்கைக்கு உரியவர்மட்டுமல்ல அவருக்கு நெருக்கமான நண்பருங்கூட, ஹோசிமின் மகனை ரகசியமாக வளர்க்கின்ற பொறுப்பை ஏற்றிருப்பவர். பிறகு அவரது மனைவியாக ‘வான்’ என்பவளைப் பார்க்கிறோம்.   கடந்த காலத்தில் உழைக்கும் வர்க்கத்தில் ஒருத்தி, தீவிரமாக பொதுவுடமைக் கொள்கைக்கு வக்காலத்து வாங்கியவள்.  செம்படையில் சேர்ந்து எதிரிகளை விரட்டியவள். காலம் மாறுகிறது. இன்றைக்கு பொறுப்பான அதிகாரி. அதிகாரமும்  பதவிதரும் சுகமும் அவள் குணத்தை முற்றாக மாற்றி அமைக்கிறது. நாட்டின் விடுதலைக்குப் பிறகு சுகவாசியான அதிகாரவர்க்கத்துள் அவளும் ஒருத்தி என்று சுருக்கமாக முத்திரைகுத்திவிட்டு நாம் மேலே நகரலாம். ஊழலும் தன்னலமும் கொண்ட ஆட்சியாளர்களுக்கு அவள் உதாரணம். இரண்டாவது கதைக்குச் சொந்தக்காரன் செல்வாக்கான ஒரு கிராமத்துவாசி. ஹோசிமின் போல அல்லாது உறவும், கிராமமக்களும் விமர்சித்தபோதும், மகன்களும் முதல் மனைவியின் சகோதரர்களும் எதிர்த்தபோதும் தமது இருப்பிற்கும், சொந்த உணர்ச்சிகளுக்கு செவிசாய்த்து, முதல் மனைவியின் இறப்பிறகுப் பிறகு எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்த கூலிப்பெண்ணை மணக்கும் துணிச்சல்மிக்க கிழவன். மூன்றாவது கதை, சுவானுடைய சகோதரி கணவனுடைய கதை. சுவான் கொலைக்குப் பின்புலத்திலிருப்பவர்களைப் பழிவாங்கத்துடிக்கும் இளைஞனை ஆளும் வர்க்கத்தின் ஏவலர்கள் துரத்துகிறார்கள். நாவலில் சொல்லப்பட்டிருக்கிற அத்தனை கதைமாந்தர்களின் பண்பும், செயலும், விதியும் ஏதோ ஒருவகையில் ஹோசிமின் வரலாற்றோடு, வாழ்க்கையோடு முடையப்பட்டிருக்கிறது. “ம்மனிதர்களின் நிகழ்காலமும், கடந்தகாலமும், மனித வாழ்க்கையின் அகம் புறம், பொதுவாழ்க்கையில் அவர்களுக்கான பங்களிப்பென கதை பின்னல் நிகழ்கிறது.

நாவல் களம், சொல்லப்படும் அரசியல், கதைமாந்தர்கள், கொள்கை முழக்கங்கள் என்றபேரில் மக்களை ஏமாற்றும் ஆளும் வர்க்கம், அப்பாவி மக்கள், வெள்ளந்தியாய் வாழப்பழகிய கிராமங்கள், கவலை பூத்த முகங்கள், நம்பிக்கை வறட்சிகள், நிலைப்பாடு மோதல்கள்,அலைக்கும் காற்று, மொத்தத்தில் இந்திய நாவலொன்றை படிப்பதுபோன்ற உணர்வு, எனவே இவரது நாவலை அக்கறையுடன் வாசிக்க முடிகிறது. உயிர்ப்புள்ள படைப்புக்குரிய கலாநேர்த்தியும், கூர்மையும் ஆழமும் இப்படைப்டப்பிற்கான தனித்துவம். எழுத்தென்பது சம்பவமொன்றின் சாட்சிமட்டுமல்ல, எழுத்தாளனின் மனசாட்சியாக இருக்கவேண்டும், அது சத்திய வார்த்தைகளால் நிரப்பப்படவேண்டும். சகமனிதர்கள், சமூகமென்ற என்ற கடப்பாட்டுடன் ஒலிக்கும் படைப்பாளுமைகள் போற்றுதலுக்குரியவை. இலக்கியங்கள் இதைத்தான் சொல்லவேண்டுமென்றில்லை ஆனால் ஏதோவொன்றை சொல்லவே படைக்கப்படுவை. ட்யோங் த்யோங்கிற்கும் அந்த நோக்கம் நிறையவே இருந்திருக்கவேண்டும்: ஏராளமாக ஆளும் வர்க்கத்திடம் அவருக்குக் கோபம் இருக்கிறது, அது கடுங்கோபம். பிரான்சையும், அமெரிக்காவையும் அத்தனை திடத்தோடு எதிர்த்த மக்கள், எப்படி சர்வாதிகாரத்திற்கு அடிபணியும் கோழைகளாய் மாறிப்போனார்கள் என்றகோபம்; தேச நலன் என்பது தனிமனிதச் சுதந்திரத்தினால் மட்டுமே கட்டமைக்கப்படவேண்டும் என்ற சிந்தனைப்பள்ளிக்கு ஆசிரியர் சொந்தங்கொண்டாடுகிறார். இந்நாவலை நடத்திச்செல்வது கதைமாந்தர்களின்  மேதைமைக்கொத்த உரையாடல்கள், சல்லிவேர்கள்போல பரவி ஆனால் நாவலை நிறுத்த அவை முதற்பக்கத்திலிருந்து இறுதிவரை உதவுகின்றன. மனிதர் குரலுக்கான அதிகார
அளவையும், வீச்சையும் வயதே தீர்மானிக்கிறதென்பதும் நாவல் தரும் செய்தி. அதிபர் தனக்குத்தானே நடத்தும் உரையாடல்; அவரது காவலர்களுடனும், நம்பிக்கைக்குரிய ‘வூ’ வுடனும் நடத்தும் உரையாடல்;  ‘வூ’தம்பதிகளுக்கிடையேயான உரையாடல்; விவசாயியான கிழவன் குவாங் மகன்களுடன் நடத்தும் உரையாடல் என்ற பெரிய பட்டியலை அடுத்து வேறு சில பட்டியல்களும் உள்ளன. உரையாடல்களில் ஒன்றைப் புரிந்துகொள்கிறோம். குறைந்தபட்சம் இருவரின் பங்களிப்பு தேவையெனச்சொல்லபடுகிற உரையாடலில் ஒன்று மற்றொன்றை நிராகரிக்கும் போக்கே பெரிதும் காணகிடைக்கிறது. நவீனத்தால் அல்லது யுகமாற்றங்களால் புறக்கணிக்கமுடியாதவற்றுள் மரபான உரையாடலையும் சேர்க்கவேண்டும். உ.ம்.:  “தாய் சோன் மலையை மதிப்பதுபோல உனது தகப்பனையும் நினை’, ‘ஊற்று நீரை நேசிப்பதுபோல பெற்ற தாயையும் நேசிக்க வேண்டும்’.” ஓவியததையோ, சிற்பத்தையோ அவதானிக்கிறபோது சில புள்ளிகள், சில தடயங்கள், சில பகுதிகள் படைப்பாளியின் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடும், ஓர் ஆசிரியனின் இருப்பை, சுவாசத்தை, அசைவை உணர்த்தும் கணங்கள் அவை. சங்கீதத்தில் கமகங்கள் போன்றவை.டுயோங் த்யூயோங் நாலிலும் அத்தகையை கமகங்களை இடைக்கிடை நிறைய உண்டு. அறைக்குத் திரும்பியவர், கட்டிலில் இயல்பாய் எப்போதும்போல படுக்கிறார். குண்டு காவலாளி, கதவினைச் சாத்திவிட்டு  புறப்படுகிறான். படிகளில் அவனது கனத்த பாதங்கள் எழுப்பும் ஓசை, புத்தவிகாரங்களெழுப்பும் சீரான மணியோசையில் கரைந்துபோகின்றன”, ஓர் நல்ல உதாரணம்.

புரட்சிகள் தரும் மாற்றங்கள் வரலாற்றை மாற்றி எழுத உதவியதேயன்றி மானுட நெருக்கடிக்களுக்குத் தீர்வினைத் தந்ததில்லை. “வாழ்க்கைதரும் இன்னல்களுக்கு ஆறுதலாக இருந்த புத்த விகாரங்களின் பிரார்த்தனையும்- சேகண்டி ஓசையும் எங்கே போயின?” என்ற கேள்வியைக் கேட்டு குற்ற உணர்வில் வருந்தும் அதிபருடைய மனப்போராட்டத்தினூடாகவே புனைவுக்குண்டான விவரணபாணியை உருவாக்கமுடியுமென்பது இந்நாவலின் சாதனை.
—————————————————————————————————————————–
1. Au Zenith – Duong Thu Huong translated from Vietnamese Phuong Dang Tran-Sabine Wespieser Editeur, Paris

நாகரத்தினம் கிருஷ்ணாவின் “மொழிவது சுகம்” – நூலை முன்வைத்து

– பேரா.க.பஞ்சாங்கம்,

(கீற்று இணைய இதழில் வந்த கட்டுரையின் மறு பதிவு – கீற்று இணைய தளத்திற்கும் நண்பர் பஞ்சாங்கத்திற்கும் மனமார்ந்த நன்றி)

நாகரத்தினம் கிருஷ்ணாவை இந்த ஆண்டு ஏப்ரலில் நண்பர் பிரெஞ்சுப் பேராசிரியர் நாயக்கர் மூலமாகச் சந்தித்துப் பழகுகிற வாய்ப்பு கிடைத்தது; பிரான்சில் வாழும் அவர் அடிக்கடித் தனது சொந்த மண்ணுக்கு வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறார்; ஆனால் இந்தத் தடவைதான் அவரோடு உரையாடுகிற அனுபவம் கிட்டியது. மனிதர்களுக்கிடையேயான உறவுகளைக் கூடச் சந்தர்ப்பங்கள்தான் நிர்ணயிக்கின்றன போலும். அவரது எழுத்துக்கள் சிலவற்றைக் காலச்சுவடு போன்ற சிறுபத்திரிக்கையில் வாசித்திருக்கிறேன். ஆனால் புத்தகமாக எதையும் வாசித்ததில்லை. அந்த வாய்ப்பும் இப்பொழுது கிடைத்தது. செஞ்சி நாயக்கர் வரலாற்றைக் களமாகக் கொண்டு அவர் எழுதியுள்ள ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்ற நாவலை, செஞ்சியிலே வெளியிட்டு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதன்பொருட்டு நாவலை வாசிக்க வாசிக்க அவருடைய எழுத்துக்குள்ளேயே வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியொரு எடுத்துரைப்புப் பாணியில் எழுதியுள்ளார். அந்நாவலைக் குறித்து ஒரு மதிப்புரையும் எழுதியுள்ளேன். இப்பொழுது இங்கே நான் சொல்ல வந்தது அவருடைய மற்றொரு நூலான “மொழிவது சுகம் (சிந்தனை மின்னல்கள்)” என்பது குறித்தாகும். 24 கட்டுரைகளின் தொகுப்பாக அமையும் இந்நூலுக்குச் சிந்தனை மின்னல்கள் என்று தமிழில் அடைமொழி கொடுத்துள்ளார்; ஆங்கிலத்தில் ‘சுதந்திரச் சிந்தனைகள்’ என்று பொருள்படும் Free thoughts என்று அடைமொழி தந்துள்ளார். உண்மையில் இரண்டுமே பொருந்தும் படியாக இந்நூலிலுள்ள செய்திகள் மின்னல் போன்று பன்முகப்பட்ட திசையில் ஒளி பாய்ச்சுபவைகளாகவும், யாருக்கும் அஞ்சாத சுதந்திரமான எண்ணவோட்டங்களாகவும் அமைந்துள்ளளன. கூடவே, மொழியின் நுட்பங்களை உணர்ந்து அதை வேலை வாங்கும் ஓர் ஆளுமைமிக்க எழுத்தாளராக ஆழமாகப் பதிவாகிக் கொண்டே போகிறார்;

கால் நூற்றாண்டிற்கும் மேலாக ஐரோப்பியச் சூழலில் வாழ்ந்தாலும், தமிழ் மண்ணையும் அதன் வாழ்வையும் குறித்துப் பெரிதும் அக்கறையோடு சிந்திப்பவராகவும், அதனால் பாரம் சுமப்பவராகவும் தன் எழுத்தின் மூலம் வெளிப்படுகிறார்; எந்தப் பொருள் குறித்து எழுதினாலும் தமிழ்ப் பின்னணி, ஐரோப்பிய பின்னணி என்ற இரண்டு களத்திலும் நின்று கொண்டு அலசுவதால் அவர் எழுத்துப் பளிச்செனத் தன்னைத் தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளுகிறது.

‘பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம்’ எனச் சொல்லும் எழுத்தாளர் மரிதியய் (Marie NDiay) என்பாரை அறிமுகப்படுத்த முயலும் கிருஷ்ணா, தமிழ்நாட்டில் நிகழும் வாரிசு அரசியலை, வாரிசு சினிமா உலகத்தை எல்லாம் முதலில் கேலி செய்கிறார்; நல்லவேளை எழுத்தாளர் உலகத்தில் அந்த வாரிசுத்தொல்லை இல்லை என அமைதி அடைகிறார்; இதற்கும் காரணம் எழுத்தாளனை அடையாளப்படுத்தப் பயன்படுகின்ற “தரித்திர சூழல்தான்” என்கிறார்; இங்கேயும் “பெட்டி பெட்டியாய்ப் பணத்திற்கும் வானளாவிய அதிகாரத்திற்கும் வாய்ப்பிருக்குமென்றால்” வாரிசுகள் உற்பத்தி ஆகிவிடுவார்கள் என்று கேலிமொழியைக் கையாளும்போது வாசிப்பதும் மொழிவது போலவே சுகம் பெறுகிறது. தொடர்ந்து அங்கே எவ்வாறு தர்க்கப்பூர்வமாகத் தேர்வுக் குழுவினர் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அவர் விளக்கிக் கொண்டே போகும்போது, இங்கே எப்படிப் பரிசு என்பது தரம் சார்ந்து இல்லாமல், ‘வேண்டியவர்’ என்ற தளத்தில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிற நம் இலக்கிய உலகின் இழிநிலையைச் சுட்டிக்காட்டி விடுகிறார். இன்னொரு முக்கியமான தகவலையும் தருகிறார். 2007 – ஆம் ஆண்டு பிரான்சு நாட்டு அதிபராக நிக்கோலாஸ் சர்க்கோசி அறிவிக்கப்பட்டவுடன், “அந்த ஆள் ஒரு மிருகம், இனவாதி, அவரது ஆட்சியின்கீழ் பிரான்சில் வசிக்க எனக்கு விருப்பமில்லை” என்று வெளியேறி கடந்த மூன்று ஆண்டுகளாகப் பெர்லினில் வாழ்ந்து வருகிறாராம் அந்த 43 வயது பெண் எழுத்தாளர்; ஆனாலும், பிரெஞ்சு இலக்கிய உலகம் அவருக்குத்தான் 2009-இல் கொன்க்கூர் இலக்கியப் பரிசை அளித்து மரியாதை செய்கிறது. நம் தாய்ப்பூமியில் இது நிகழுமா?

அங்கேயும் வலது, இடது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் அரசியல்வாதிகள் பரிசுக்குரியவர் பிரான்சு தேசத்தின் பெருமையைப் போற்றவில்லை; பிரான்சு நாட்டு அதிபரையும் நாட்டையும் சிறுமைப்படுத்திப் பேசி இருக்கிறார் என்று விமர்சித்துள்ளனர்; ஆனால் தேர்வு செய்த படைப்பாளிகள் அவர் என்ன எழுதியிருக்கிறாரெனப் பார்த்துதான் பரிசளிக்கிறோமே தவிர என்ன பேசினார் எனப் பார்த்துப் பரிசளிக்கவில்லை. தவிர சுதந்திரம் சுதந்திரமென்று வாய்கிழியப் பேசுகிறோம், ஓர் எழுத்தாளரை இப்படிப் பேசக்கூடாது, அப்படிப் பேசக்கூடாதென்று தெரிவிப்பதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? சுதந்திரமான நாட்டில்தானே இருக்கிறோம்?” என்றும் அரசாங்கத்தைப் பாரத்துக் கேட்டிருக்கிறார்கள். ‘நாமார்க்கும் குடியல்லேம்’ என்று இந்தக் கடடுரைக்குத் தலைப்புக் கொடுத்துள்ளார். கூடவே அதிபருக்கு விசுவாசமாக இருந்த இடதுசாரி அமைச்சரை ”ஐம்பது பைசாவிற்குக் கால் மடக்கிக் கையேந்துகிறது எங்கள் ஊர் யானை’ என்று கவிஞர் சுயம்புலிங்கத்தின் வரியை எடுத்துப் போட்டு விமர்சிக்கும்போது இவருக்குள்ளும் வினைபுரியும் சுதந்திரயுணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட நிகழ்வோடு சாதிவெறி காரணமாக உத்தபுரத்தில் எழுந்த சுவரை இணைத்தொரு கட்டுரை இட்லராவது தனது இனத்தை நேசித்தான்; ஆனால் ஸ்டாலின் தன் நிழலைக்கூட நம்பியவனல்ல என்கிறார்; 1945 ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடியும் தருவாயில் ஜெர்மன் விழ்ந்து சோவியத் யூனியன் படைகள் பெர்லின் நகரத்திற்குள் நுழைந்தபோது இரண்டு மில்லியன் (20லட்சம்) பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள் என்ற தகவலைத் தந்துவிட்டு, நாஜிப்படைகளைவிட இம்மியளவும் தரத்தில் ‘செம்படைகள்’ குறைந்ததல்ல என்கிறார். போரினால் ஜெர்மன் கிடைத்தது; இரண்டு ஏகாதிபத்தியங்களும் அதைக்கூறு போட்டுக் கொண்டன. ஆனால் சோவியத்தின் கீழ் இருந்த கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கத்தியரின் அரவணைப்பில் இருந்து மேற்கு ஜெர்மனிக்கு மக்கள் புலம்பெயரத் தொடங்கினர் (2-7 மில்லியன் மக்கள்) இதைத் தடுப்பதற்காகத்தான் 1961 – இல் பெர்லினை இரண்டு துண்டாக்கும் சுவர் எழுப்பப்பட்டது. 165 கி.மீ நீளம் 302 காவல் அரண், மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலி, தானியங்கி துப்பாக்கிப் பொருத்தப்பட்ட காவல் தூண்கள், குறி பாரத்துச் சுடுவதில் வல்ல காவலர் – இப்படிக் கட்டப்பட்ட சுவர் 1989 – ஆண்டு நவம்பர் மாதம் 9-ஆம் தேதி இடிக்கப்பட்டது. அதே ஆண்டில்தான் தமிழ்நாட்டின் உத்தபுரத்தில் தலித் மக்களுக்கு எதிராக உயர்சாதியினர் சுவர் எழுப்புகிறார்கள். இதேபோல் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களின் நிலத்தை ஆக்ரமித்ததோடு மட்டுமல்லாமல் 2005 – ஆம் ஆண்டில் இருந்து சுவரும் எழுப்பிக் கொண்டிருக்கிறது. காலத்தின் முன்னால் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது போல இவைகளும் இடிக்கப்படும். இலங்கைத் தமிழினமோ பாலஸ்தீனமோ உத்தபுரமோ ஒடுங்கிவிடாது என்கிறார். இதோடு நின்றுவிடாமல், அப்போதும் எங்கோ வேறு இடத்தில் வேறொரு சுவர் எழுந்துகொண்டுதான் இருக்கும் என்று கிருஷ்ணா எழுதும்போது மனிதவாழ்வு குறித்த அவரது புரிதல் ஆழமாகப் பரவுகிறது.

பெற்றோர் தொடங்கி ஆசிரியர், சமூகமென அனைவரும் வளரும் குழந்தைகள் போல் நிகழ்த்திக் காட்டும் வன்முறைதான், பின்னால் அவர்கள் மழலையர் பள்ளிகளில் கடித்துக் கொள்வதற்கும், தொடக்கப் பள்ளிகளில் கட்டிப்புரண்டு சண்டையிடுவதற்கும், நடுநிலைப் பள்ளிகளில் ரவுடிகள் போல் நடந்து கொள்வதற்கும் பருவ வயதில் பெண்களைச் சீண்டுவதற்குப் பாலியல் வன்கொடுமை செய்வதற்கும் காரணமாக அமைகிறது என்று கூறுகிற பிரான்சு நாடடுக் குழந்தை நல மருத்துவர் ‘எட்விஜ் ஆந்த்தியே’ என்பார் கூற்றை எடுத்துக்காட்டி ‘அடித்து வளர்க்காத பிள்ளை உருப்படாது’ என்கிற நம்முடைய அணுகுமுறையைக் குப்பைத் தொட்டியில் தலைகுப்புறத் தூக்கிப் போட்டுப் புதைத்தொழிக்கக் சொல்லுகிறார். இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து ‘ஊடகங்கள்’ இந்தத் திசையில் திரும்பினால் ஆக்கப்பூர்வமாக இருக்கும்.

இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருந்த ஹைத்தியில் நடந்த நிலநடுக்கம் 15 லட்சம் மக்களை அனாதை ஆக்கியதும், 70000 உயிர்களுக்கும் இறந்த தேதியில் ஒற்றுமை என்பதும் கொடுமை”  “உயிரற்ற உடல்களின் மௌனத்தினைச் சகித்துக் கொள்ள எனக்குப் போதாது. முடிவின்றி அவை நிகழ்த்தும் கதையாடல் என்னை அச்சுறுத்துவன (31 – 32) என்பது.. புர்க்காவும் முகமும் என்ற கட்டுரையில் முகத்தின் மொழியைக் குறித்துப் பேசுகிறார். மகன் தந்தைக்காற்றும் உதவி என்ற கட்டுரையில் 1960 –இல் கார் விபத்தில் இறந்துபோன புகழ்பெற்ற எழுத்தாளர் அல்பெர்கமுய் – யின் உடலை ஒரு தேவாலயத்திற்கு மாற்றுவது என்ற பிரெஞ்சு அதிபரின் யோசனையை அ.சமுய்-வின் மகன் உறுதியாக நின்று மறுத்துவிட்டார் என்கிற தகவலைத் தரும் கிருஷ்ணா, அதையும் ஆளும் வர்க்கத்தினை விமர்சிப்பதற்குக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.

ஒளியும் நிழலும் என்ற கட்டுரை எழுத்துலகில் நடக்கும் பல மோசடிகளில் ஒன்றான கோஸ்ட் ரைரட்டர் பற்றிய கட்டுரை.  புகழ்பெற்ற அலெக்ஸாந்தரு துய்மாவிற்கு இருந்த கோஸ்ட் ரைரட்டர் ஒகுய்ஸ்த் மக்கே பற்றிய கட்டுரையில் பல தகவல்களைச் சுவைபடச் சொல்லிவிட்டு இறுதியாக இப்படி எழுதுகிறார்!. “இன்றைக்கு எழுத்து, பணி அல்ல; பிறவற்றைப் போல ஒரு தொழில்”.. (ப. 55)/ மனுநீதிச் சோழனை முன்னிறுத்தி, மரணதண்டனை குறித்த ஒரு விசாரணையை நடத்துகிறார். வருடத்திற்கு 7000 பேர் மரணதண்டனைக்குள்ளாகின்றனர். இதில் சீன அரசு மடடும் தன் பங்கிற்கு 1000 பேரைக் கொல்லுகிறதாம்; அடுத்த வரிசையில் அமெரிக்காவும் ஈரானுமாம். அமெரிக்காவில் மட்டும் குற்றவாளியெனக் கருதி மரணத்தண்டனை வழங்கப்பட்டவர்களில் 7% மறுவிசாரணையில் குற்றமற்றவர்களெனத் தெரிய வந்திருக்கிறதாம். மீதமுள்ள 93% -லும் 20% னரே மரணதண்டனைக்குள்ளான குற்றவிதிகளுக்குப் பொருந்துகிறார்களாம் – இப்பொழுது புரிகிறதா மரண தண்டனை நீதியின் பொருட்டா? அல்ல அரசு அதிகாரத்தின் பொருட்டா?

அந்தமான் நிக்கோபார் தீவில் வாழ்ந்த போவா(Poa) இன மூதாட்டி (85-வயது) இறந்து போனாள்; அவளோடு இந்தியாத் துணைக்கண்டத்தில் பேசப்பட்டு வந்து ‘போ’ மொழியும் இறந்துபோய்விட்டது. இப்படி எத்தனை மொழிகள் இன்றைக்கு அழிந்து கொண்டிருக்கின்றன. யுனெஸ்கோ அறிக்கையின்படி இந்தியாவிலுள்ள 1635 மொழிகளில் 196 மொழிகள் வெகுவிரைவில் அழிந்துபோகும்; இதில் தமிழும் ஒரு மொழியாகிவிடக்கூடாது என்று ஆதங்கப்படுகிறார் ” நமது வாழ்க்கை மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் வணிகத் தந்திரங்களாலானது என்றான பிறகு, மொழியில் தமிழராக நீடிப்பது எத்தனை தலைமுறைக்கு சாத்தியம்” என்றொரு அடிப்படையான, மிக முக்கியமான கேள்வியைத் தமிழர்கள் முன்வைக்கிறார்.

நமக்குள் இருக்கும் இன்னொருவனாகிய ஏமாற்றுப் பேர்வழி குறித்து ஒரு கட்டுரை பல அரிய மேனாட்த் தகவல்களுடன் (66 – 72) அமைந்துள்ளது,

நம்மிலுள்ள அந்த ஒன்றரை பேருக்கு நன்றி’ என்ற கட்டுரை” எஜமான மனங்களைக் காட்டிலும் சேவக மனங்கள், ஆபத்தானவை” என்பதையும் நம்மில் பலரும் அதிகாரத்திற்கு வளைந்து போகிறவர்கள்தாம்; மேலும், அதிகார ஆதரவு உண்டெனில் எவரையும் கொலை செய்யவும் – தயாராக இருக்கிறவர்கள்தாம் என்பதையும் உளவியல் சோதரென அடிப்படியில்ல் விளக்கிவிட்டு, இதையும் மீறி சிலபேர் மானுட அறத்தைக் காப்பாற்ற ஒவ்வொரு காலகட்டதிலேயும் முன் வருகின்றனர். காந்தியடிகள் போல; தினன்மென் சதுக்கத்தில் டாங்கியை வழிமறித்த கணத்தில் விஸ்வரூபமெடுத்த அந்த முகமற்ற மனிதர்களைப் போல.

புன்முறுவல் செய்ய 17 தசைகளில் ஒத்துழைப்பு தேவை என்ற அறிவியல் உண்மைகூறி, திருமுகத்து அழகு குறுநகையை விதந்தோதுகிறார். பிரெஞ்சுக் காலனித்துவத்தின் கொடூர முகத்தைப் பல மேற்கத்தியர் நீது? என்ற கட்டுரையும் பிரான்சு சாட்டின் பண்பாட்டு அரசியல் என்ற கட்டுரையிலும் நுட்பமாக அலசிவிடுகிறார். “அரசியல் வரலாறு என்பதே ஆதிக்க வரலாறுதான் காலனிய வரலாறுதான் தடியெடுத்த சிறுகூட்டத்தின் வரலாறுதான்” என்றெல்லாம் பேசும் கிருஷ்ணா, பிரெஞ்சு கலை இலக்கிய உலகமும் இன்றைக்கு ஆங்கிலத்தோடு ஒப்பிடுமபோது எவ்வளவு பின்தங்கி விட்டது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

முயற்சி திருவினையாக்கும் என்ற கட்டுரையில் நீதி, தண்டனை, சிறை, ஆதிக்க அரசு குறித்தெல்லாம் பிரான்சு நாட்டுப் பின்னணியில் விளக்கமாக எடுத்துரைத்துவிட்டு, சமுதாயத்தின் நலம், நீதி போன்ற சொற்களைத் தந்திரமாகக் கையாளும் அணியோர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் மனதை உலுக்குகின்றன” என்று வருத்தப்படுகிறார்.

மிலென் குந்தெராவையும் குண்ட்டெர் கிராஸையும் எழுத்தும் அரசியலும் என்ற பொருளில் அறிமுகப்படுத்திவிட்டுத் தமிழர்களின் எழுத்தாளர்கள் எவ்வாறு பரிசுக்கும் பொருளுக்கும் புகழுக்குமாகத் தம்மை விற்றுக் கொள்ளுகிறவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லிக் காட்டுகிறார்.

இறப்பும் அனுதாபமும் என்ற கட்டுரையில் டயானா கார் விபத்தில் இறந்தபோது ஐரோப்பிய வெள்ளை இன அரசுகள் அனுதாபச் செய்திகளை எப்படி வெளியிட்டன அதேநேரத்தில் மைக்கேல் ஜாக்ஸன் என்ற பெரும் இசைக்கலைஞன் இறந்தபோது அவைகள் எப்படி நடந்து கொண்டன என்பதை ஒப்பிட்டுக் காட்டி இறப்பில்கூட நிறவெறி ஐரோப்பியாவில் வெளிப்படுகிறது; அதுபோலவே இந்தியாவில் ஆந்திரமுதல்வர் விபத்தில் இறந்தபோது போட்டிப்போட்டுக் கொண்டு எட்டுத் திசைகளிலும் இருந்தும் அனுதாபச் செய்திகள் பறந்தன. இலங்கைத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது அனுதாபச் செய்திகளில் ஒன்றுபடாத தமிழ்நாட்டுத் தலைவர்கள்கூட ஆந்திரமுதல்வர் இறந்துபோது ஒன்றுபோல் அனுதாபச் செய்திகளை அனுப்பித் தங்கள் இருப்பை உறுதிபடுத்திக் கொண்டனர். தமிழர்கள் தமிழர்களுக்காக ஒன்றுபடுவார்களா? எனக் கேட்கிறார். ஒரு கட்டுரையில் ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான நிறவெறி நிகழ்கிறது என்பது இருக்கட்டும். இந்தியாவிற்குள் நிலவும் நிறவெறியை என்ன சொல்வது எனக் கேட்கிறார். நமது ஊடகங்களும் விளம்பரங்களும் சிவப்புத் தோலைத்தானே அழகு அழகென முன்னிறுத்துகின்றன. இந்த அடிமைத்தனத்திற்கும் பெயரென்ன?

உலக அளவில் நடக்கும் பிள்ளை கடத்தில் பற்றியும் ஒரு கட்டுரை. தொண்டு நிறுவனம் என்ற பேரில் நடக்கும் மோசடி குறித்தெல்லாம் புள்ளிவிவரத்தோடு பேசுகிறார்; உலகமயமாதல், என்ற பொருளாதாரச் சூழலில் தாம் செழிக்கலாம் என்று கருதிய ஐரோப்பியாவும் அமெரிக்காவும் எப்படி இடர்ப்பாடுக்குள் சிக்கிக் கொண்டன என்பதையும் இச்சூழலைச் சீன எவ்வாறு வெற்றிக்கரமாகக் கையாண்டு இன்றைக்கு மிகப்பெரிய வல்லரசாக வளர்ந்து நிற்கிறது என்பதையும் ‘ஆறாவது கதவு’ என்ற கதையில் நுணுக்கமாக எடுத்துரைக்கிறார். எல்லாக் கட்டுரைகளிலுமே அதிகாரத்திற்கும் ஆதிக்கத்திற்கும் ஆக்கிரமிப்பிற்கும் எதிரான ‘குரல் பதிவாகிக் கொண்டே போவதால் அவரது அலைவரிசையும் நம் அலைவரிசையும் ஒரே நேர்கோடடில் வந்துவிடுகிறது அதானல் சுகமான வாசிப்பு வாய்த்துவிடுகிறது. மிகச் சிறப்பாக அலிகாரை எடுத்து வெளியிட்டுள்ளது என்பதையும் சொல்லியாக வேண்டும். கிருஷ்ணா எழுத்து பல்வேறு பத்திரிக்கைத் தகவல்களின் அடிப்படையின் மேல் நடந்தாலும், வாசிப்பதற்கு இதமான எழுத்தாக அது மாறுவதற்குக் காரணம் அவர் கையாளும் மொழியும் கேலி கலந்த முறையும் கூடவே அடிப்படையில் அழமாக இயங்கும் அறச்சீற்றமும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

முட்டாள்களைக் குறித்துப் பேசும் ஒரு கட்டுரை அவரது கல்லூரிக் கால நிகழ்வை ஒன்றைப் பதிவு செய்கிறது. அடுக்குமொழியானால் கழக உறுப்பினர்களை எந்த அளவிற்குக் கொண்டு சென்றிருக்கிறது என்பதை விளக்குகிறது அந்த நிகழ்வு. கல்லூரி விழாவிற்குப் பேச வந்த கழக சட்டமன்ற உறுப்பினர் ‘அடுக்குமொழி மோகத்தால்’ சற்றுமுன்னர் சிற்றுண்டியும் சிறுநீரும் அருந்தினோம். என்று பேசினாராம். பேச்சினூடே, நான் என்ன சொல் வருகின்றேன் என்றால்என்று அவர் பேசும்போது எதிர்க்கட்சிக்கு காங்கிரஸ் மாணவர்கள், சற்றுமுன்னர் சிற்றுண்டியும் சிறுநீரும் அருந்தினீர்கள் என்று எதிர்ப்பாட்டுப்பாட , விழா மோதலில் முடிதந்தாம். மொழிபெயர்ப்பைக் குறித்தும் கிருஷ்ணா சில நுட்பமான பார்வைகளைப் பதிவு செய்துள்ளார். ஒரு படைப்பேயே ‘மொழிபெயர்ப்பாளனைத் தவிர்த்து வேறொருவர் அத்தனை ஆழமாகப் படிப்பதில்லை’ என்று தொடங்கும் அந்தக் கட்டுரை, மொழிபெயர்ப்பாளன் என்பவன் எதைச் சொல்லவேண்டுமோ அதைத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமற்ற ஓர் எழுத்தாளன் என்ற ஜார்ஸ் ஆர்த்தர் கோல்ட்ஸ்மித் கூற்றை எடுத்துக்காட்டி விளக்குகிறது. ஒரு மாநில மொழியாலான படைப்பு நிகழ்கிறது என்பதை மிக நுட்பமாக விளக்குகிறார்ஸ“நல்ல வாசகனை மொழிபெயர்ப்பாளன் வாசிப்பின் முடிவில் தனது உணர்வுகளுக்குச் செவிச் சாய்க்காது பொதுமதிப்பீட்டிற்கு உட்பட்டு மொழிபெயர்ப்புக்கான நூலைத் தேர்வு செய்கிறான்” என்கிறார்.

நாகரத்தினம் கிருஷ்ணா, ‘மொழிவது சுகம், (சிந்தனை மின்னல்கள்)’ அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை.11, 2012. விலை. ரூ.90/- பக். 152

– பேரா.க.பஞ்சாங்கம், புதுச்சேரி.

மொழிவது சுகம் நவம்பர் 1 2013

1. பிரான்சில் என்ன நடக்கிறது

 பிரெஞ்சு அரசாங்கத்திற்குக் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடி. வருவாயை அதிகரிக்கவும், வீண் செலவுகளைக் குறைக்கவும் கணக்கியல் துறையும், ஐரோப்பிய நிதி நிர்வாகத் துறையும், கண்டிப்பான சில வழிமுறைகளைப் பிரெஞ்சு அரசாங்கம் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கமும் நிதி வருவாயைப் பெருக்கிக்கொள்ள சிக்கன நடவடிக்கைகள் மட்டுமே போதாதென்ற நிலையில் நாள்தோறும் புதிய புதிய வரிகளை விதித்துவருகிறார்கள். ஏற்கனவே அன்றாட உபயோகத்துகான மின் சக்தியும், எரிவாயுவும் கடுமையான உயர்வை சந்தித்து உள்ளன. காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை கடந்த சில வருடங்களைக் காட்டிலும் பன் மடங்கு அதிகரித்துள்ளன. தற்போதையை கருத்துகணிப்புகள்  அதிபர் பிரான்சுவா ஒலாந்துக்கு எதிராக இருக்கின்றன. நாட்டில் அறுபது சதவீத்தினருக்குமேல் அதிபர் மீது அவநம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இனவாதக் கட்சி,  நிலவும் அவநம்பிக்கையைக்கொண்டு தன்னை ஊட்டப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. இரண்டு இடைத்தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் வென்றிருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆப்ரிக்க நாடுகளில் பணயக் கைதிகளாக இருப்பவர்களில் நால்வரை இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து நைஜீரிய நாட்டின் தலையீட்டினால் மீட்டிருப்பினும் தீவிரவாதிகள் கேட்டப் பணயத் தொகையைக் கொடுத்தே மீட்டிருப்பதாக ஒரு குற்றசாட்டு. ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க இயலாமல் பிரெஞ்சு அரசாங்கம் தவித்துக்கொண்டிருக்கிற நிலையில், தங்கள் கூட்டணி அரசாங்கத்தில் பங்கேற்று இருக்கிற பசுமைவாதிகளை சமாதானப்படுத்தவென சுற்றுப்புற சூழலை மேம்படுத்த அறிமுகமான வரிக்கு எதிராக கடும் எதிர்ப்புகிளம்ப, அதனையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று. இப்போது வேறொரு பூதம் கிளம்புஇருக்கிறது. இனி நட்சத்திர விளையாட்டுவீரர்கள் தங்கள் வருவாயில் 75 சதவீதத்தை வரியாகச் செலுத்தவேண்டும். நாட்டின் பெரும் நகரங்களில் உள்ள காற்பந்தாட்டக் குழுமங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. நட்சத்திர விளையாட்டுவீரர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவேன் என அச்சுறுத்துகிறார்கள்.

 2. மொழிபெயர்ப்பு குறித்து:

அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் தனது முக நூலில் இப்படியொரு அறிவிப்பை செய்துள்ளது இந்திய மற்றும் உலகமொழிகளிலிருந்து தமிழ்ப்படுத்துவதற்கான மொழிபெயர்ப்பாளர்களைத் தேடும் முகமாக வந்துள்ள அறிவிப்பு அது.

 « Kalachuvadu Publications wishes to establish contact with translators from Indian and world languages to Tamil. We are keen to translate literature directly from Marathi and Punjabi to Tamil. We are also looking to work with translators from world languages. Friends with command of foreign languages can either translate a work or be a ‘mentor’ i.e. oversea and edit a translated text. We are particularly looking for Tamils with a working knowledge of Korean, Swedish, German, Arabic, Spanish, Norwegian and Danish.”

தமிழ் நாட்டில் சில விதிமுறைகள் வைத்திருக்கிறார்கள்; எழுத்தில் ஏது சீனியர் ஜூனியர் என்பவர்கள் கூட என்னிடத்திலா இலக்கிய சர்ச்சை என்ற முகத்தோடு நம்மை எதிர்கொள்கிறார்கள். இவர்கள் அரசியல்வாதிகளுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. எதைப்பற்றியும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்துக்கள் வைக்கலாம், வெறும் கையை முழம்போடலாம், மணலை கயிறாகத்திரிக்கலாம். அவர்கள் கருத்துக்களை மேற்கோள்காட்டி சொல்பவர்கள் கூட சொன்னவர் யாரோ எவரோ அல்லதமிழில் பன்னிரண்டு கதைகளை தழுவல் செய்தவர், பரமார்த்த குருவின் சீடர்களில் ஒருவர் அவரே சொல்லியிருக்கிறார் எனவே நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது எனக் கட்டுரை எழுதுவார். இந்த மனைநிலைதான் நம்மை பிள்ளையார் சதுர்த்தி, களிமண் பிள்ளையார்களை  ஆயிரக்கணக்கில் நகலெடுத்து கடலிலும் கரைக்க முடியாமல், கரையொதுங்கினாலும் தப்பில்லையென்று பெருமூச்சு விடுகிறோம்.

மொழிபெயர்ப்புக்கு இதுதான் இலக்கணம் என சொல்ல ஒன்றுமில்லை. ஒரு வாசகனாக படைப்போ மொழிபெயர்ப்போ என்னை எப்படி உள்வாங்கிகொள்கிறதோ அதைப்பொறுத்தே உகந்ததா இல்லையா எனத் தீர்மானிக்கிறேன். எனக்கு உகந்ததாக இருப்பது உங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை, அதுபோலவேதான் இல்லாததுகுறித்து முரண்படவும் என்னைப்போலவே உங்களுக்கும் உரிமையுண்டு. மொழிபெயர்ப்பு படைப்பைப்போலவே அனுபவம் சார்ந்தது, எழுத எழுத மேம்படுவது. ஒருகட்டத்தில் ஓரளவு புரிந்துகொண்டு நல்லதொரு மொழிபெயர்ப்பை எந்த மொழிபெயர்ப்பாளனாலும் தர முடியும். 

காலச்சுவடு பதிப்பக அறிவிப்பினை வைத்து இங்கே சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள்வேண்டும். இதொரு நல்ல முயற்சி. நவீன இலக்கியங்களின் தீவிர வாசகன் என்ற அடிப்படையில் காலச்சுவடு இதழின் முயற்சி பெரிதும் வரவேற்க தக்கது. தமிழில் எத்தனை பதிப்பகங்கள் காப்புரிமை பெற்று பதிப்பிகின்றனவென்று தெரியாது. காலச்சுவடு அவ்விஷயத்தில் தெளிவாக இருக்கிறது. தற்போது மூல மொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டுவரவேண்டுமென்கிற இப்புதிய முயற்சியும் வரவேற்கதக்கது.

இந்த ஆண்டு ‘Livres Hebdo’ என்ற பிரெஞ்சு சஞ்சிகையின்படி 554 நாவல்கள் பிரெஞ்சில் வந்துள்ளன. அவ்வளவா என வியக்க வேண்டாம், பிரெஞ்சு பதிப்புலகம் இந்த எண்ணிக்கைக்கே மூக்கைச் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே படிப்படியாக எண்ணிக்கை குறைந்துவருகிறதாம்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு (2007ல்) மொழிர்ப்புகளையும் சேர்த்து 727 படைப்புகள் வந்திருக்கின்றன, சென்றவருடம் 646. இவ்வருட 554படைப்புகளில் 356 நாவல்கள் நேரடியாக பிரெஞ்சில் எழுதப்பட்டவை, 198 மொழிபெயர்ப்புகள். 

முக்கிய பிரெஞ்சு பதிப்பகங்கள் அனைத்துமே இரண்டு விஷயங்களில் கறாராக இருக்கிறார்கள். பிறமொழிக்கு பிரெஞ்சு படைப்பை கொண்டு செல்வதென்றாலும், பிறமொழியிலிருந்து பிரெஞ்சுக்குக் கொண்டுவருவதென்றாலும்:  1. மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்படவேண்டும், 2. கொண்டு செல்லப்படும் மொழியைத் தாய்மொழியாக மொழி பெயர்ப்பாளர் கொண்டிருக்கவேண்டும். பொதுவில் எந்த மொழிபெயர்ப்பும் முழுமையானதல்ல. மூலத்தை நூறு சதவீதம் மொழிபெயர்த்திருக்கிறேன் என்பதெல்லாம் ஓர் ஏமாற்று வேலை, மொழிபெயர்ப்பாளன் மூல ஆசிரியனல்ல, ஓர் உரை ஆசிரியன் அவ்வளவுதான், அவன் விளங்கிக்கொண்டதை அவனுடைய மொழியில் சொல்கிறான். பிரெஞ்சில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கிறபோதெல்லாம், நான் கையாளும் உபாயம், முழுவதுமாக பிரெஞ்சிலிருந்து தமிழுக்குக்கொண்டுவந்ததும்  அதன் ஆங்கில மொழிபெயர்ப்போடு ஒத்திட்டு பார்ப்பது. ஒவ்வொரு முறையும் எங்கேனும் ஒன்றிரண்டு வார்த்தைகள் தவறுதலாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கும், வாக்கியங்கள் விடுபட்டிருக்கும். இக்குறை நேரடியாக மொழிபெயர்க்கிற எனக்கும் நேர்கிறது. பிரெஞ்சு நண்பர்களுடன் விவாதித்தே முடிவுக்கு வருகிறேன். ஒரு உதாரணம் Le Procès verbal என்ற Le Clèzio எழுதிய நாவலை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். அதில் ஓரிடத்தில் sous-verre என்றொரு சொல் வரும் அது வேறொன்றுமில்லை கண்ணாடி டம்ளரின் கீழ்வைக்கிற சிறு தட்டு அல்லது குறுவட்டு என்று கொள்ளலாம். மேற்குலகில் வீட்டிலும் சரி, உணவு விடுதிகளிலும் சரி, தண்ணீர், குளிர்பானங்கள், மது என எதைவழங்கினாலும் மேசையில் அந்தக் சிறுதட்டைவைத்து அதன்மீதே பானமுள்ள கண்ணாடிக்குவளையை வைப்பார்கள். இந்த sous-verre ஐ ஆங்கில மொழிபெயர்ப்பாளர் (அமெரிக்கர்)  (cup and) Saucer என்று மொழிபெயர்த்திருக்கிறார். இந்த saucerக்கு பிரெஞ்சில் sous coupe என்று பெயர். இந்த ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து பிரெஞ்சு தெரியாத இந்திய நண்பர் மொழிபெயர்க்கிறார் எனில், (அமெரிக்கரெடுத்த நகலை xerox எடுப்பவர்) நிச்சயமாக கிளேஸியோ சொல்கிற சிறுதட்டு அல்லது குறுவட்டு அந்த ஆங்கில வழி தமிழ்படுத்தும் நண்பருக்கு கண்ணிற்படாமலேயே போகும் ஆபத்திருக்கிறது. தவிர இந்திய நண்பர் அந்த ‘Saucer’ ‘Soccer’ என்று பொருள்கொண்டு காற்பந்து என மொழிபெயர்க்க அதற்காகவே காத்திருக்கும் புண்ணியவான்கள் தீவிரமாக கட்டுரை ஒன்று எழுதி இலங்கைத் தோழர்கள் உதைப்பந்துஎனச்சொல்வதைஎப்படிக் காற்பந்து என மொழி பெயர்க்கலாம் இதில் ஏதோ சதி இருக்கிறது, மேகத்திய நாடுகளுக்கு பங்கிருக்கிறது எனக் கட்டுரை எழுதும் ஆசாமிகளும் இருக்கிறார்கள். இதை உதாரணத்திற்குத்தான் சொன்னேன். மொழி பெயர்ப்பு என்பது இரு மொழிகளிலுள்ள ஆளுமை சார்ந்த தொழில் நுணுக்கமல்ல, கலாசாரம் பண்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்களெல்லாம் அதில் அடங்கிக்கிடக்கின்றன. இணைய தளங்களில் இன்று பல குழுமங்கள் இருக்கின்றன. மேற்கத்திய மொழி பெயர்ப்பாளர்களே பலரும் விவாதித்துப் பொருள்கொள்வதை இன்று பார்க்கிறோம், அப்படியான ஆரோக்கியமான சூழல் பிற இந்திய மொழிகளில் நிலவுகிறதா எனத் தெரியவில்லை, ஆனால் நமது தமிழில் இல்லை. தமிழில் ஆயிரத்தெட்டுவகை மொழியாடல்கள் இருக்கின்றன.முறையான அகராதிகள் இல்லை, அப்படியொரு மரம், ஒருவகைப் பிரபந்தம் எனச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் “கால்வினோதப்பு “கல்வினோதான்” சரி என விவாதிப்பவர்கள், செஞ்சிக்குப்பக்கத்திலிருக்கிற தீவனூர் பள்ளி மாணவர்கள் செஞ்சியை Gingee எனப்படிக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். இப்போதெல்லாம் பிரெஞ்சு பெயர்களை மிகச்சரியாக எழுதவேண்டுமென கிரிவலம் வருகிறவர்களையெல்லாம் தமிழில் பார்க்கிறேன். ஆங்கிலத்தில் பீட்டர் என்ற பெயரைத்தான் பிரெஞ்சில் பியெர் என்கிறார்கள், ஸ்பானிஷ் மொழியில் பெட்ரோஎன்கிறார்கள். மொழிபெயர்ப்பாளன் அக்கறைகாட்ட வேண்டிய வெளிகள் வேறு. அம்பையின் சிறுகதைகளைப் பிரெஞ்சு பதிப்பகத்திற்காக பிரெஞ்சு பெண்மணி ஒருவருடன் மொழி பெயர்த்துகொண்டிருக்கிறேன். இந்தியாவிலிருந்து வந்தவன் என்றாலும் ‘Tiffin’ என்ற சொல் என்னைப்பாடாய் படுத்துகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தவர் Tiffin என்ற சொல்லைப்போட்டு வெகு சுலபமாக இக்கட்டிலிருந்து தப்பித்திருக்கிறார் ( ஆனால் ஆங்கிலேயேரிடம் கொஞ்சம் விசாரித்துப்பாருங்கள் அப்படியொரு சொல் எங்களிடத்திலில்லையென்று சத்தியம் செய்வார்கள். ஆனால் இந்திய வழக்கில் காலையில் tiffin சாப்பிடுகிறோம், ஆபீஸ¤க்குப் போகிறபோது tiffin கட்டியாச்சா என்று கேட்கிறோம், மனைவியும் tiffin boxல் போட்டுத் தருகிறாள். மாலை ஆபிஸிலிருந்து வீட்டிற்கு வந்ததும் மீண்டும் இன்றைக்கு என்ன tiffin என்று கேள்வி. பிரெஞ்சில் அப்படி Tiffin என்ற ஒற்றை சொல்லை கூறித் தப்பிக்க எனக்கு விருப்பமில்லை. இப்படி நிறையச்சொல்லிக்கொண்டு போகலாம், வாசகனுக்கு வேண்டுமானால் ரொலான் பார்த் சொல்வதுபோல எழுதியவனை மறந்து வாசிப்பது உகந்தது, ஆனால் மொழிபெயர்ப்பாளன் மொழிபெயர்க்கிறபோது ஆசிரியனையும் வாசிக்க இருப்பவனையும் மனதில் நிறுத்தி மொழிபெயர்த்தாலே ஐம்பது சதவீதம் மொழிபெயர்ப்பு தேறிவிடும்.

 

——————————