Monthly Archives: மார்ச் 2014

மொழிவது சுகம் மார்ச் 2014

வணக்கம் நண்பர்களே!

ஜனவரி மாதம் 12ந்தேதி இந்தியா சென்றது. கிட்டதத்த ஒன்றரை மாதம் இந்தியாவில் இருக்க நேர்ந்தது, கைவசம் மடி கணினியை கொண்டு சென்றிருந்தும் பல பிரச்சினகள். அதிகம் உபயோகிக்க முடியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் பழுதுபார்த்து இணைப்பை கொடுக்கவே பத்து நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டனர். புதுச்சேரி வீட்டில் சில சில்லறை வேலைகள் இருந்தன. ஒப்பந்தப்படி மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிற ‘அம்பை சிறுகதைகளில் ‘அடவி’ கதையை முடித்தாக வேண்டும். 17ந்தேதி புத்தக கண்காட்சியில் லெ கிளேசியோவின் ‘குற்ற விசாரணை’ நாவல் வெளியீடு நடைபெற்றது. அன்றைக்கு காலச்சுவடு பதிப்பகத்தின் மூன்று நூல்களை வெளியிட்டார்கள். அதில் ‘குற்றவிசாரணையும்’ ஒன்று. பிரபஞ்சன் வெளியிடுவதாக இருந்தது. திடீரென்று ஏற்பட்ட அவரது உடல் நலமின்மை காரணமாக நண்பர் பஞ்சாங்கத்தை வெளியிடக் கேட்டுக்கொண்டேன், அவரும் எவ்வித மறுப்புமின்றி சம்மதித்தார். நிகழ்வன்று பல நண்பர்களை சந்திக்க முடிந்தது. பி.எ. கிருஷ்ணன், இரா.முருகன், சுகிர்த ராணி, பேராசிரியர் நாச்சிமுத்து. ஆகியோரை குறிப்பிட்டு சொல்லவேண்டும். நிகழ்ச்சிக்கு வந்திருந்த கவிஞர் தமிழ்நதியுடன் பேசமுடியாதது ஒரு குறை. பிறகு 20, 21, 22 கோவையில் தாயகம் கடந்த தமிழ் நிகழ்வு. அது பற்றி தனியாகவே ஒரு கட்டுரையை இப்பகுதியில் எழுதியிருந்தேன். ஜனவரி 23ந்தேதி நண்பர் நாயக்கரின் கல்லூரியில் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் பற்றிய ஓர் உரையை ஏற்பாடு செய்திருந்தார். துறைத் தலைவர் திரு டானியலுக்கும், நாயக்கருக்கும் நன்றிசொல்லவேண்டும். இதற்கிடையில் கொஞ்சம் ‘அடவி’ சிறுகதை மொழிபெயர்ப்பை முடிக்க கால அவகாசம் கேட்டிருந்தேன்.

பிப்ரவரி 1 நண்பர் க. பஞ்சாங்கத்தின் ‘அழுததும் சிரித்ததும்’ கட்டுரை தொகுப்பு வெளியீட்டுவிழாவை ஏற்பாடு செய்திருந்தோம். கோவையிலிருந்து சிறப்பு சொற்பழிவாற்ற க.பஞ்சாங்கம் படைப்புகளின் முதல் வாசகரும், அவருடைய இனிய நண்பரும், கோவை அரசு கலைகல்லூரியின் பேராசிரியருமான முனைவர் துரை வந்திருந்தார். விழா சிறப்பாக நடந்தது. பல்கலை கழக அளவில் முனைவர் க.பஞ்சாங்கம் படைப்புகள் பற்றிய ஆய்வரங்கம் ஒன்றை கட்டாயம் நடத்தவேண்டும். பிப்ரவரி மாதம் நான்காம் தேதி திருவாரூர் மத்திய பல்கலை கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் நாச்சிமுத்து, தங்கள் மாணவர்களுடன் ஓர் கலந்துரையாடலை, திடீரென்று ஏற்பாடு செய்திருந்தார். சீனு தமிழ்மணியை அழைத்துக்கொண்டு திருவாரூர் சென்றேன். தமிழவன், க.பஞ்சாங்கம் போல நாச்சிமுத்துவும் நவீன தமிழ் இலக்கியத்தில் அக்கறைகொண்டு இயங்குபவர். ஏற்கனவே புது தில்லியில் ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் மொழிபெயர்ப்பு மாணவர்களோடு ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்து அறிமுகமாகி இருந்தார்.
பிப்ரவரி 7 ந்தேதி அமெரிக்காவிலிருந்து வந்த மூத்த மகள் குடும்பத்தை வரவேற்க சென்னை விமான நிலயத்திற்கு சென்றிருந்தோம், அங்கிருந்து நேராக மதுரை, எங்கள் சம்பந்தி வீட்டிற்கு. மறு நாள் மதுரை கல்லூரி ஒன்றில் வெ. இறையன்பு நூல்கள் பற்றிய ஆய்வரங்கம் இருக்கிறது, வாங்களேன் பேசிக்கொண்டிருப்போம் என நண்பர் ந. முருகேசபாண்டியன் அழைத்திருந்தார். வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம் மதிய உணவை கல்லூரியிலேயே முடித்துக்கொண்டோம். வெ. இறையன்புவிடம் அறிமுகமும் செய்துவைத்தார்.  மூத்த கவிஞரான கலாப்பிரியாவை அங்கே சந்திக்க நேர்ந்தது மற்றொரு வரம். இளைஞரும் கவிஞருமான ஆத்மார்த்தியையும் சந்தித்தேன். அவருடைய கவிதை நூல் ஒன்றை என்னிடம் வழங்கினார். மதுரையிலிருந்து ஒரு நாள் எங்கள் சம்பந்தியின் பூர்வீக ஊரான வத்திராயிருப்புக்கு சென்றுவந்தோம், பரமக்குடி அருகே இருக்கிறது. அதற்கடுத்த நாள் எங்கள் மருகமனின் சகோதர் பெங்களூருக்குத் தனது சகோதரர் குடும்பத்தை அழைத்திருந்தார். எங்களையும் அவர்களுடன் வரச்சொல்லி வற்புறுத்தினார். ஆக எல்லோருமாக பெங்களூர் சென்றோம். மார்த்தஹல்லியில் இரண்டு நாள் இருந்தோம். நண்பர்கள் தமிழவனையும், பாவண்ணனையும் வாய்ப்பிருந்தால் சந்திக்கலாம் என நினைத்தேன். பெங்களூர் பயணம் திட்டமிடல் இல்லை. தொலைபேசியில் இரண்டொருமுறை தொடர்புகொண்டும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு துணைவியுடன் புதுச்சேரி வந்து சேர்ந்தேன்.

பிப்ரவரியில் (16) மூத்த எழுத்தாளரும், சிறந்த விமசகருமான திரு வே.சபாநாயகம் அவர்களின் 80 வது அகவையை முன்னிட்டு அவரது முன்னாள் மாணாக்கர்களும், நண்பர்களும், இலக்கிய அன்பர்களும் ஒரு பெருவிழாவை விருத்தாசலத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள், பெற்றோர்களைச் சுற்றினால் உலகையை சுற்றிவந்ததுபோல எனச்சொல்லபடுகிற நமது புராணக் கதைக்கு ஒப்ப எனக்கு அந்நிகழ்ச்சி உதவியது எனலாம். என்னை அடையாளம் காட்டியவர்களில் வே.சபாநாயகம் ஒருவர். ஒவ்வொரு முறையும் இந்தியா செல்லும்போதெல்லாம் அவரை காணவேண்டும் என நினைப்பேன். தொலைபேசியில் அவ்வப்போது உரையாடி இருக்கிறேன். மென்மையான குரல், வயது குரலுக்கு ஒரு மிருதுத் தன்மையையும் ஏற்படுத்தியிருந்தது. ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டுக்காக கோவை செல்லவேண்டியிருந்தது உண்மைதான். எனினும் திரு வே.சபாநாயகம் அவர்களின் அகவை நிகழ்வு எனது இந்தியப் பயண நாட்களில் அமைந்தது எந்த திடமிடலாலும் நேர்ந்ததல்ல. ஒன்றை அல்லது ஒருவர் மேல் உண்மையாக அன்பு வைக்கிறபோது இதுபோன்ற அதிசயங்கள் நிகழும் போலும். தமிழ் நாட்டில் முக்கிய எழுதுதாளர்கள் அவ்வளவு பேரையும் சந்தித்திருக்கிறார், அவர்களோடு சடங்காக அல்ல சரிசமதையாக உட்கார்ந்து உரையாடி இருக்கிறார், உண்டு மகிழ்ந்திருக்கிறார். அதனால் தான்  80வது அகவை நிகழ்ச்சியில் என்னையும் மேடையேற்றி அவர் அருகில் அமர்த்திக்கொண்ட அக்கணத்தை நமது புராண கதையோடு ஒப்பிட்டேன். அன்றலர்ந்த தாமரைபோல என்று ஓர் உவமை சொல்வார்கள் அப்படியொரு முகம். மாணவர்கள், நண்பர்கள், உறவினர் இவர்களுடன் அவர் எப்படி நடந்துகொண்டிருப்பார் என்பதற்கு அன்று திரண்டிருந்த கூட்டமே சாட்சி. கவிஞர் பழமலை தலைமையில் ஒரு பெரிய குழு விழாவை மிகச்சிறப்பாக முன்னின்று நடத்தினார்கள். நாயக்கர், சீனு.தமிழ்மணி மூவருமாக சென்றிருந்தோம். அன்பிற்குரிய குறிஞ்சிவேலன், திரு. பி.ச. குப்புசாமி ஆகியோரை சந்தித்தேன். கண்மணி குணசேகரனை சந்திக்க நேர்ந்ததும் மகிழ்ச்சியை அளித்தது. கைகளைப் பற்றிக்கொண்டு முகத்தில் பரவசத்தை ஏற்றியவராய் ‘அண்ணே அண்ணே’ என்று அழைத்தபோது மயங்கித்தான் போனேன். ‘ பி.சுசீலா வின் ‘அத்தான்.. அத்தான்..’ கூட அதனை நேர் செய்ய முடியாது. பிப்ரவரி 21 மதுரையிலிருந்து எங்கள் மகளும் மருமகனும் புதுச்சேரி வந்திருந்தார்கள். மூண்று நாட்கள் தங்கிதியிருந்தார்கள், சென்னையில் அவர்கள் வாங்கியிருந்த ஓர் அப்பார்மெண்ட்டிற்கு சின்னதாக சடங்கு செய்துவிட்டு வந்தோம். பிறகு 27ந்தேதி அமெரிக்கா புறப்பட்டுபோன பெண்ணிற்கு வழி அனுப்புதல். 28ந்தேதி குற்ற விசாரணை நாவலுக்கும் நண்பர் நாயக்கரின் ‘அப்பாவின் துப்பாக்கி’ நாவலுக்கு புதுவையில் ஓர் அறிமுகவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. காலச்சுவடு கண்ணன், கவிஞர் சுகுமாரன், பா. ஜெயப்பிரகாசம், க. பஞ்சாங்கம் கலந்துகொள்ள நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.

nayakar

மார்ச் 3ந்தேதி பிரான்சுக்கு வந்த நாளிலிருந்து, தொழில் சம்பந்த பிரச்சினைகள், அம்பையின் ‘பிரசுரிக்கப் படாத கைப்பிரதியை’ மார்ச் 15க்குள் அனுப்ப வேண்டியதை மார்ச் 25 அன்றுதான் அனுப்பிவைத்தேன். பிரெஞ்சு இணையதளத்தை இரண்டு மாதங்களாக கவனிக்காமல் இருக்கிறேன், பஞ்சாங்கத்தைப் பற்றிய தொடரில் இப்போது கவனம். இடையிடையே முடிக்க வேண்டிய கடை கணக்கு என சொல்ல பிரச்சினைகளை சொல்ல்கொண்டேபோகலாம். தீர்வாகாது, ஒரு நாளைக்கு 48 மணி நேரம் கொடுத்திருந்தால் கூடுதலாக உழைக்கலாம்!

நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட படங்களை எனது புகைப்படகருவிலிருந்து எடுத்துப்போடுவதில் தற்போது சில சிக்கல்கள் இருக்கின்றன. தீர்ந்ததும் எடுத்துப்போடுகிறேன்.
———————————

 

 

தாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு

 

DSC_0250

கடந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதமாக இருக்கும், நண்பர் மாலனிடமிருந்து கடிதம் வந்திருந்தது. கோவையில் நடைபெறவுள்ள ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டில் கலந்து கொள்ள இயலுமா எனக்கேட்டிருந்தார். என்ன பதில் சொல்வேன் எதிர்பார்ப்பீர்களோ அப்பதிலை மிக்க மகிழ்ச்சியுடன் எழுதினேன். கரும்பு தின்ன கூலியா என்பார்கள். ‘கோவை தமிழ் பண்பாட்டுமையம்’ கருப்புத்தோட்டத்தையும் கொடுத்து கருவூலத்தையும் திறந்துவைத்திருந்தார்கள். உயிர் உள்ளவரை மறக்கவொண்ணாத கனிவான விருந்தோம்பல்

கோவ தமிழ்பண்பாட்டு மையம் (http://www.centerfortamilculture.com):

கோவையில் தமிழ்ப்பண்பாட்டு மையம் என்றால் வியக்க என்ன இருக்கிறது? வள்ளுவன் காலத்தில் ‘திருவேறு, தெள்ளியராதல் வேறு” ஆக இருந்திருக்கலாம் ஆனால் அது உண்மையல்ல என்பதுபோல மையத்தின் புரவலர் மருத்துவர் நல்ல பழனிச்சாமியும் மருத்துவர் திருமதி பழனிச்சாமியும் மாநாடு நடைபெற்ற நாட்களில் ஒரு பெரிய மாநாட்டிற்கு முதுகெலும்பாக இருந்துவிட்டு எவ்வித ஆரவாரமுமின்றி நிகழ்ச்சிகளின் பார்வையாளர்களாகக்  கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மக்கள் வரிப்பணத்தில் மகேசன்களாக வலம் வருகிற தமிழனத் தலைவர்களுக்கு மத்தியில் இத்தம்பதிகள் விதிவிலக்கு.

கோவை மருத்துவ மையத்தின் தலைவரும்  டாக்டர் என்.ஜி.பி கல்விநிறுனங்களின் தலைவருமான  மருத்துவர் நல்ல பழனிசாபி அவர்கள் ‘தமிழின் வளம் தமிழர் நலம்’ எனும் இலக்கோடு கடந்த ஆண்டு தொடங்கிய தொண்டு நிறுவனம் ‘தமிழ் பண்பாண்பாட்டு மையம்’:  நிறுவனம் தமிழ் இலக்கியம், தமிழறிஞர்கள் என்ற கருத்தியத்தின் அடிப்படையில் இயங்கிவருகிறது அறக்கட்டளை உறுப்பினர்களாகவும் டாக்டர் நல்ல பழனிச்சாமிக்கு வழிநடத்துகிறவர்களாக கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியமும், முனைவர் ப.க. பொன்னுசாமி அவர்களும் இருக்கிறார்கள். இம்மூவர் பேராதரவுடனும் திரு.மாலன் ஏற்பாடு செய்திருந்ததே ‘தாயகம் கடந்த தமிழ்’ கருத்தரங்கு. அன்பிற்குரிய ரெ.கா. ஏற்பாட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்தது கூடுதல் மகிழ்ச்சியை அளித்திருந்தது.

19ந்தேதியே சென்னை வந்துவிட்டேன். நண்பர்  கண்ணன், அண்மையில் காலச்சுவடு இதழோடு தொடர்புடைய படைப்பாளிகள் பெற்றிருந்த பரிசுகளுக்காக அவர்களைப் பாராட்டும் வகையில் ஒரு சிறிய விருந்தொன்றைக்கொடுத்தார். அதில் கலந்துகொண்டு சென்னையிலேயே தங்க வேண்டியதாகிவிட்டது. பிரான்சு நாட்டிலிருந்து வருவதற்கு முன்பாக நண்பர் பஞ்சாங்கத்திடம் கோயம்புத்தூர் வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். அவரும் சம்மதித்திருந்தார். 20ம் தேதி காலையில் நண்பர் க.பஞ்சாங்கம் தனது மகன் வீட்டிலிருந்து சொந்த வாகனத்தில் வந்திருந்தார். அவருடனே விமான நிலையத்திற்கு சென்றேன். மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த திருவாளர்கள் எஸ்.பொ., சேரன், பெருந்தேவி, மலேசியாவைச்சேர்ந்த டாக்டர் கிருஷ்ணன் மணியன், முனைவர் சீதாலட்சுமி  ஆகியோரைக் காணமுடிந்தது. நண்பர் பஞ்சு, எஸ்.பொ. ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அப்பக்கமாகச் சென்ற ஒருவர், காலடியில் பாருங்கள் கண்ணாடி கிடக்கிறது என்றார். குனிந்து பார்த்தேன். எனது மூக்குக் கண்ணாடி இரண்டாக கிடந்தது, வலதுபக்க கண்ணாடி சில்லும் கழண்டுக்கிடந்தது. பிரச்சினை புரிந்தகணம் சோர்வு தட்டியது. கோயம்புத்தூர் சென்ற உடனேயே ஏதேனும் செய்தாக வேண்டும் என நினைத்தேன். நண்பர் பஞ்சும் இது பெரிய பிரச்சினை அல்ல கோயம்புத்தூரில் சரி செய்துவிடலாம் என்றார். அவர் பேச்சு தெம்பினை அளித்தபோதிலும் உற்சாகத்தை இழந்திருந்தேன். கோயம்புத்தூர் விமானத்தில் ஏறியதும் நண்பர் பஞ்சுவும் நானும் எங்கள் இருக்கையில் அமர்ந்தபோது பக்கத்து இருக்கையில் மலேசியாவிலிருந்து வந்திருந்த டாக்டர் கிருஷ்ணன் மணியன். “இலங்கையில் மணியனுடன் தங்கியிருந்தேன் இரவெல்லாம் சிரிந்து வயிறு புண்ணாகிவிட்டது”, என்றார் பஞ்சு. அவர் கூறியதைப்போலவே அடுத்தடுத்து டாக்டர் கிருஷ்ணன் மணியன் கூறிய சம்பவங்களைக் கேட்டுக்கேட்டு அப்படி சிரித்தோம்.  உடைந்த மூக்குக் கண்ணாடியை எப்படிச் சரி செய்யப்போகிறோம் என்றிருந்த கவலைகளையெல்லாம், மணியன் பேச்சினால் காணாமற் போயிருந்தன.

உரியநேரத்தில் கோவைக்கு வந்துவிட்டோம். விமானநிலையத்திற்கு டாக்டர் நல்ல பழனிச்சாமி, சிற்பி, பொன்னுசாமி மூவருமே வந்திருந்தது எதிபாராத இன்ப அதிர்ச்சி. கவிஞர் சிற்பியை முதன் முதலாகச் சந்திக்கிறேன்.  திரு பொன்னுசாமி ஒழுங்குகளுக்கு பழகிக்கொண்டிருக்கவேண்டும், சிரிப்பதாகட்டும், கை குலுக்குவதாகட்டும் உரையாடுவதிலாகட்டும் கச்சிதமும் ஒழுங்கும் கைகோர்க்கின்றன. சிற்பி வேறு மாதிரியான மனிதர் முதல் நாள் சந்திப்பிலேயே ஏதோ வெகு நாட்களாக நம்மை தெரிந்து வைத்திருப்பபவர்போல கைகுலுக்கலில் ஒரு நெருக்கம்மும் அக்கறையும் இருந்தது. முகத்தில் நகைக்கடைவெள்ளிபோல வசீகரமான ஒரு சிரிப்பு. முகத்துடன் சிரிப்பா, சிரிப்புடன் முகமா? என்பதான குழப்பம் நமக்கு வருகிறது. பசி வேளையிலும்,  உண்டுமுடித்து பிறருடன் அவர் உரையாடுகிறபோதும் கவனித்தேன். நிறைகுடத்தில் நீர் தளும்பி சிந்துவதுபோல சிரிப்பை சிந்திக்கொண்டிருக்கும் முகம். கருத்தரங்கு முடித்து புதுவை திரும்பி நான்கைந்து நாட்கள் ஆனபிறகு ஒரு நாள் தொலைபேசியில் அவரிடம் பேசினேன், அப்போதும் சிரிப்புடன்கூடிய  அதே முகம் மறு முனையில். கோயம்புத்தூரில் இருந்த மூன்று நாட்களும் மறக்கமுடியாத இன்னொருவர் ஓர் இளைஞர். நண்பர் மாலன் மின் அஞ்சலில் அவரைப்பற்றி குறிப்பிட்டிருந்தார். தொலைபேசியில் முதன் முறையாக தொடர்புகொண்டேன். கோயம்புத்தூர்காரர்போலத்தான் பேசினார்( அவர் கோயம்புத்தூர்காரர் இல்லை என்பதை பின்னர் புரிந்துகொண்டேன்).  பயண ஏற்பாடுகள், பிற தகவல்களுக்கென தொடர்பிலிருந்த கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர்தான் அந்த இளைஞர். சுறுசுறுப்பானவர், பெயர் மணிகண்டன். அவர் பேச பொழுதெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கலாம். கருந்தரங்கு ஏற்பாடுகளுக்கு முன்பாக, கருத்தரங்கு முடிந்தபின்னர் சற்று கணயர்ந்திருக்கலாம். விழா நாட்களில் அவர் உறங்கியிருக்க வாய்ப்பே இல்லை. கருத்தரங்கின் வெற்றியில் மணிகண்டனுக்கும் பெரும்பங்குண்டு.

ஓட்டலில் எங்கள் அறைக்கு வந்து சிறிது ஓய்வெடுத்தபிறகு மணிகண்டன் நண்பர்களிடம் எனது மூக்குக் கண்ணாடியை பழுதுபார்க்கும் பொறுப்பை அளித்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் சரிசெய்யப்பட்ட கண்ணாடியுடன் மணிகண்டன் நண்பர்கள் வந்தார்கள். மாலை நான்கு மணிக்கு தொடக்க விழா¡ ஏற்பாடு செய்திருந்த அரங்கிற்கு சின்னங்சிறு பேருந்துகளில் அழைத்துச்செல்லப்பட்டோம்.  முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு ராமசுப்பிரமணியன் கருதரங்கைத் தொடங்கிவைத்தார். சிலம்பொலி செல்லப்பன் சிறப்புரை ஆற்றினார். கருத்தரங்கு கட்டுரைகள் அடங்கிய நூலும் வெளிப்பட்டது. மாலன் தாயகம் கடந்த தமிழ் கருத்தரங்கு குறித்து ஓர் அறிமுக உரையை நிகழ்த்தினார். ரெ.கார்த்திகேசுவை முதன்முதலாக பார்க்கிறேன். மெலிந்த உருவம் கூர்மையான பார்வை, தெளிவான பேச்சு. இந்திரனை எங்கே காணவில்லை என நினைத்தேன். அவர் அறிவித்தபொழுது அவர் கையை உயர்த்த அவர், வந்திருப்பது தெரியவந்தது. நலன் விசார்த்துக்கொண்டோம். நாஞ்சில் நாடன் மூன்று வரிசை தள்ளி அமர்ந்திருந்தார். தொடக்கவிழா நிகழ்ச்சி முடிந்தபின்னர் பார்க்கலாம் என நினைத்த போது அவர் இல்லை. .

DSC_0316
21ந்தேதி காலையில் புதுச்சேரியிலிருந்து வெங்கட சுப்புராய நாயக்கரும்,  இலக்கியம் சீனு தமிழ்மணியும் வந்திருந்தார்கள்  தாயகம் கடந்த தமிழ் ஓர் அறிமுகம் என்ற அமர்வில் ரெ.கார்த்திகேசுவின்கீழ் கட்டுரை வாசித்தனுபவம் மறக்க முடியாது. முதல் அமர்வு தேநீர் இடைவேளையின்போது நாஞ்சில் நாடன் அவ்ர்களிடம் பேசினேன். நான் விரும்பி வாசிக்கிற எழுத்தாளர்களில் நாஞ்சிலார் ஒருவர். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன், பிரபஞ்சன் இவர்கள் எழுத்தில் தலைகாட்டும் அறச்சீற்றத்தை சமூக அக்கறைகொண்ட எவரும் விரும்பவே செய்வோம். அவர்கள் எழுத்தின் தனித்தன்மைக்கு அக்கோபமும் ஒரு காரணம். என் வாழ்நாளில் தேடிப்போய்பார்த்த படைப்பாளிகள் சொற்பம். அந்த சொற்ப எண்ணிக்கைக்குள் நாஞ்சில் நாடனையும் கொண்டுவந்து சேர்க்கவேண்டும். கோயம்புத்தூர் அருகே நாஞ்சிலார் வசிக்கிறார் என்பதை அவர் கூறியபோதுதான் தெரியவந்தது. முன்னதாகச் தெரிந்திருந்தால் ஒரு நாள் கோவையில் இருந்துவிட்டு வந்திருக்கலாம் என நினைத்தேன். நாஞ்சிலாரையும் சென்று பார்த்திருக்கலாம். நாஞ்சிலார் தவிர, அ. ராமசாமி, இமையம், சுப்ரபாரதிமணியன், கவிஞர் குடியரசு ஆகியோரையும் சந்தித்தேன். மிக மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டாம் நாளில் சந்திக்க நேர்ந்தவர்களில் இலங்கையிலிருந்து வந்த கவிஞர் சகோதரி அனார்.  அவரது கவிதைதத்தொகுப்புகள் சிலவற்றை அன்போடு அளித்தார். அக்கவிதைகள் குறித்து எழுதவேண்டும் நன்கு அறியப்படவேண்டிய படைப்புகள் அவை. அவரது கவிதை ஒன்றை பல மாதங்களுக்கு முன்பு எனது வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறேன். அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. கணவர் குழந்தை சகிதம் இலங்கையிலிருந்து வந்திருந்தார். ரெ.காவிற்கு பிறகு மலேசியாவலிருந்து வந்திருந்த டாக்டர் ஷண்முகம் சிவாவும் மறக்கமுடியாத இன்னொரு நபர். நண்பர் பஞ்சாங்கம் அவருடைய சிறுகதையை வாசித்துவிட்டு, மகனைப் பார்க்க சிங்கப்பூர் சென்றபோது அவரைச் சந்திக்க வேண்டும் என நினைத்தாராம். அக் கனவு கோயம்புத்தூரில் நிறைவேறியதாகத் தெரிவித்து மகிழ்ந்தார். நாயகரும், தமிழ்மணியும் இரவு உணவிற்கு பிறகு புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார்கள்.

22ந்தேதி எனது அமர்வில் கல்ந்துகொண்ட கலைமகள் என்ற சீனப்பெண்தான் மொத்த விழாவிற்கும் நட்சத்திரம் போல வலம்வந்தார். பத்திரிகைகாரர்களும் அவரை விடவில்லை. நல்லவேளை அவர் கட்டுரையை வாசிக்காமல் தன்னோடு கொண்டுவந்திருந்த ஆல்பத்தை காட்டி சமாளித்ததால் தப்பித்தோம். இரவு வெகு நேரம் உண்டு முடித்துவிட்டு பேசிக்கொண்டிருந்ததால் எங்களைச் சந்திக்கவந்த கவிஞர் சிற்பியையும், திரு. பொன்னுச்சாமியையும் தவறவிட்டிருந்தோம். இரண்டாம் நாள் அமர்வில் தொழில் நுட்ப அமர்வு முக்கியமானது. மறுநாள் கால உணவிற்குப்பிறகு  நண்பர். பஞ்சாங்கம் ஈரோட்டில் ஒரு கருந்தரங்கில் கலந்துகொள்ள கிளம்பிப்போனார். மொத்தத்தில் கோயம்புத்தூர் அனுபவம் என்றும் நினைவு கூறத்தக்கது.

மீண்டும் ஒருமுறை விருந்தோம்பலுக்கு இலக்கணம்படைத்த தமிழ் பண்பாட்டு மையம் தலைவர் நல்லபழனிச்சாமி, அறங்காவலர்கள் கவிஞர் சிற்பி, முனைவர் ப.க.பொன்னுசாமி, நண்பர் மாலன், ரெ.கார்த்திகேசு, பம்பரம்போல் சுழன்று வந்திருந்த விருந்தினர்களைக் குறையின்றி கவனித்துக்கொண்ட திரு.மணிகண்டன் குழுவினர்,  அனைவரையும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.

————————–