Monthly Archives: செப்ரெம்பர் 2011

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-7

இங்கிதமும் மரியாதையும்

பிரான்சு நாட்டைப்பற்றி சொல்கிறபோது அவர்கள் தலைக்கணம் பிடித்தவர்கள் என்ற விமர்சனங்கள் எழுவதுண்டு. அதில் உண்மை இல்லாமலில்லை. எனது சொந்த அனுபவங்கள் அதை உறுதி செய்திருக்கின்றன. காலனி ஆதிக்கத்தில் முன்னூறு நானூறு ஆண்டுகள் ஊறி வெள்ளையர்கள் அல்லாதவர்களின் மூளையைக் குறைத்தே மதிப்பிட்டு வந்தவர்கள் அவர்கள். எனவே இதுபோன்ற கருதுகோள்களிலிருந்து விடுபடமுடியாமல் இருப்பதில் அவர்களுக்குள்ள சங்கடங்கள் புரிகின்றன.

நாம் தமிழரின் பெருமையை பேசுவதில்லையா? தமிழன் அடையாளத்திற்கு சங்க கால அடையாளத்தை மட்டுமே நம்பி இருப்பதிலிருந்து என்ன தெரிகிறது? காதலும் வீரமும் தமிழனுக்கே சொந்தமென்று நாம் சொல்வதில்லையா? ஏதோ உலகில் வேரெவரும் ஆயுதத்தை எடுக்காததுபோலவும், இனவிருத்தியை பெருக்கிக்கொள்ளாததுபோலவும்…

என் பிள்ளை கால் பரிட்சையில் பாஸ் செய்தான், அரை பரிட்சையில் நூற்றுக்கு 95 மார்க் வாங்கினான் எல்லாம் சரி.. ஆனால் முழுபரிட்சையில் நாம் தேறவில்லை என்கிறபோது யோசிக்க வேண்டியிருக்கிறது.

வரலாறென்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுவது. இறுதி வெற்றியை தங்கள் இனத்திற்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் சாதுர்யத்தில் தேர்ந்தவர்கள் மேற்கத்தியர்கள். அவர்கள் பேசுவது குறைவு. செயல்திறன் அதிகம். எனவே முடிவு அவர்களுக்குச் சாதகமாக இருந்தது இருக்கிறது. எனவே மேற்கத்தியர்களிடமுள்ள கர்வத்தை புரிந்துகொள்கிறேன்.

ரோமில் இருக்கிறபொழுது ரோமானியர்கள்போல நடந்துகொள் என்ற பழமொழியுண்டு,  தமிழிலும் ஊருடன் ஒத்து வாழ் எனச் சொல்வதுபோல. எனவே நீங்கள் பிரான்சுக்குள் வந்தால் பிரெஞ்சு கலாசாரத்தை ஓரளவு புரிந்துகொண்டு நடக்கவேண்டுமென பிரெஞ்சுக் காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். பொது இடத்தில் காறி உமிழ்வது, சாப்பிடும்போது தொண்டையைச் செருமுவது, பல் துலக்கும்போது ஆ-ஊ வென்று ஊளையிடுவது பிரெஞ்சுக்காரர்களுக்கு பிடிக்காதவிஷயம். கண்டிப்பாக பிரான்சுக்குள் வருகிறபோது bonjour, merci போன்ற சொற்களையும் சில அடிப்படை சொற்களையும் பிரெஞ்சில் தெரிந்துகொண்டு வருவது நல்லது. பிரான்சில் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள், தெரிந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளமாட்டார்கள். வெளிநாடுகளில் தேவையெனில் உபயோகிக்கிறவர்கள் தங்கள் நாட்டில் (பிரான்சில்) கூடுமானவரை தவிர்ப்பார்கள். ஆங்கிலம் உலகமொழியாக இருக்கலாம் ஆனால் ஆங்கிலம்  மட்டுமே உலகமொழி அல்ல என்பதும் உங்களுக்குத் தெரியும், ஆக பிரெஞ்சுக்காரர்கள் இந்த உண்மையை வெளிநாட்டவரிடம் உணர்த்த விரும்புபவர்கள். ஆங்கிலத்தைவிட்டால் வேறு நாதியில்லை என்றால் Bonjour Monsieur, parlez-vous anglais? என முதல் வாக்கியத்தையாவது குறைந்த பட்சம் பிரெஞ்சில் உபயோகித்தால்தான் ஆங்கிலம் தெரிந்த பிரெஞ்சுக்காரர் உங்களிடம் வாய் திறப்பார்.

பிரெஞ்சுக்காரர்களை பொறுத்தவரை தங்கள் மொழி மட்டுமல்ல, தங்கள் கலை, தங்கள் படைப்பு, தங்கள் உணவுமுறை உயர்ந்தவையென்ற கர்வம் அதிகம். உலகில் எல்லா நாட்டு உணவகங்களும் பிரான்சில் இருக்கின்றன. எனினும் பிரெஞ்சுக் காரர்கள் தங்கள் பாரம்பரிய உணவுமுறை, அவற்றின் செய்முறை குறித்த ஞானம்,  அவற்றை பறிமாறும் கலை, சுவை அறியும் திறனென்று பல நுட்பங்களையும் இன்றளவும் போற்றி பாதுகாத்துவருபவர்கள். ஒரு பிரெஞ்சுக்காரனுக்கு உணவும் ஒரு கலை, பண்பாட்டின் விழுமியம். அவர்களுக்குச் சமையற்கலை வெறும் வார்த்தை அல்ல சுவைத்துண்ணும் அழகியல் அனுபவம்.
——-

அடித்து வளர்க்கிற பிள்ளைகள்

சராசரி தமிழனுக்கு சூடுபிடிக்கும் தேர்தல் முக்கியம்.. புவி வெப்பமாதல் குறித்து ஒரு மாநாடு கோபன்ஹேகனின் கூட்டப்படுகிறது. அதுபற்றிய செய்திக்குறிப்பு எதையும் தமிழ் தினசரிகளில் பார்க்க நேர்ந்ததில்லை. இயற்கைக்கு எதிராக நிகழும் இப்பயங்கரவாதம் குறித்து தமிழ் தினசரிகள் கவலைகொள்ள எதுவுமில்லை. கடந்த ஆண்டு மும்பை தாஜ் ஓட்டலில் பலியாவனர்களின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்ட செய்தியைத் தமிழ் தினசரிகளில் பார்க்க முடிந்தது. நாடுமுழுவதும் கண்ணீர் அஞ்சலி. கூட்டுபிரார்த்தனை. பலியானவர்கள் தாஜ் ஓட்டல் வாடிக்கையாளர்கள் என்பது காரணமாக இருக்கலாம். வி.ஐ.பி. உயிர்கள். தெருவோரம், புகைவண்டி இரயிலில், கடைவீதிகளில் பயங்கரவாதத்தால் பலியான உயிர்களுக்கு இத்தனை மரியாதையை எதிர்பார்க்க முடியாது.

குழைந்தைகளைக் கொஞ்சி, திரைப்படம் பார்த்து, தினசரியில் மூழ்கி, கோபம் வருகிறபோது காரணகாரியமின்றி சண்டையிட்டு, கோவிலைப் பார்த்த நேரங்களில் கையெடுத்துக் கும்பிட்டு வாழப்பழகிய சராசரி உயிரின் அன்றாட வாழ்க்கை சட்டென ஒரு நாள் இதுபோன்ற சம்பவங்களால் பிறழ்கிறது, தடம் புரண்டுபோகிறது. எங்கே யாரிடமும் அழ முடியும்? இவர்களில் எத்தனைபேருக்கு சம்பவத்திற்குப் பிறகு வாய்க்கிற வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறனுண்டு? உயிரிழந்தவர்கள், காயமுற்றவர்கள், கால்கை இழந்தவர்களென்று பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். சம்பவத்தின்போது பத்திரிகைகாரர்களுக்காக அரசாங்க எந்திரங்கள் ஓடோடிவந்திருக்கும், பொலபொலவென்று கண்ணீரைச் சிந்தியிருக்கும், ஆறுதல் சொற்களுக்கும் பஞ்சமிருந்ததில்லை. இன்றைக்கு அந்த அப்பாவிகளின் கதியென்ன? பயங்கரவாதத்திற்கும் சரி, அதனை அடக்க நடவடிக்கைகள் எடுக்கிறேன் என்று சொல்லும் அரசாங்க வாய்ச்சவடால் முயற்சிகளுக்கும் பலியாவதென்னவோ அப்பாவி உயிர்களே. தலிபான்களைக் காட்டிலும், அமெரிக்க மற்றும் மேற்கத்திய படைகளின் தாக்குதலுக்குப் பலியாகும் ஆப்கானியர்கள் எத்தனைபேர். பயங்கரவாதமும் தங்கள் இருப்பை உணர்த்த ஆடுகளைத்தான் தேடி அலைகின்றன. இருதரப்பினருமே எதிரிகளோடு நேரடியாக மோத வக்கற்றவர்கள், தங்கள் பலத்திற்கு நோஞ்சான்களை பலிகொடுப்பது இருவருக்கும் ஒருவகையில் சௌகரியமாக இருக்கிறது. இரக்கமற்று மெலிந்தவர்களை பலிகொடுத்துவிட்டு சந்தர்ப்பம் வாய்க்கிறபோது இரத்தத்தில் தோய்ந்த நாக்கும் பல்லிடுக்கில் சதை துணுக்குமாக சமாதானம் பேச அமர்வார்கள்.

”வெடிபட்டு சாகாமல்

வெகுளியாய்

விஷக்காற்றைக் குடித்துப் பின்

நலிவுற்று முடமாய் துடிக்காமல்

முழு உடம்பாய்

இயற்கையாய் சாவது

அரிது, அரிது இன்று மிக அரிது!’

கவிஞர் வைதீஸ்வரனின் ‘மைலாய்’ வீதி நினைவுக்கு வருகிறது.

எதிரெதிராக மோதிக்கொள்கிறபோது புலிகளை வென்ற சிங்கங்கள், உண்ட மயக்கத்தில் நித்திரைகொள்கிற நேரத்தில் வாலைக் கடிக்கிற எலிகளைத் துரத்த வகையறியாது விழிக்கின்றன. கடிபடுவது வால் என்பதால் அவ்வபோது உறக்கம் கலைந்து தலையை உயர்த்தி கர்ஜிப்பதோடு சரி, கழுத்தினை எலிகள் நெருங்காதென்கிற நம்பிக்கை சிங்கங்களுக்கு நிறையவே உண்டு. வால் அப்பாவி உயிர்கள், எலிகள் தீவிரவாதிகள். பயங்கரவாதம் தீர்வுகாணமுடியாத, குணமாவாதற்கு வாய்ப்பற்ற மற்றொரு பறவைக் காய்ச்சல் அல்லது பன்றிக்காய்ச்சல். காரணமில்லாத பகை ஏது. பின் நவீனத்துவவாதிகள் சொல்வதுபோல பகை-நட்பினை, கோபம்- அன்பினை விளிம்பு நிலைக்குத் தள்ளியிருக்கிறது. ஆண் பெண், பணக்காரன் ஏழை, பகல் இரவு, மகிழ்ச்சி துக்கம், வெற்றி தோல்வியென நீங்கள் சோர்வுறும்வரை இருமைப் பண்புகளால் ஆன இவ்வுலகை கட்டுடைத்துக்கொண்டுபோகலாம். பின் நவீனத்துவாதிகள் இவை அனைத்தையும் மையம் விளிம்பு என்று இரு பெரும் பிரிவுக்குள் அடக்கினர். இருப்புகளில் ஒன்று மற்றமையை மறுக்கிறது, மற்றொன்றின் இருப்பினை ஏற்க அதற்குச் சம்மதமில்லை. ஆக யுத்தம், மோதல், போட்டி ஆகியன பிறமைகளை விளிப்புநிலைக்குத் தள்ளும் முயற்சி. டோம் ஜெரி விளையாட்டு. உண்மையில் யுத்தமோ மோதலோ சமபலம் கொண்டவர்களிடம் ஏற்படுவதில்லை. பிற உயிர்கள் மீது நிகழ்த்தும் அநேக தாக்குதல்களுக்கு ஏற்ற தாழ்வுகள் காரணமாக இருக்கின்றன. ஈராக் மீது யுத்தம் செய்ய தாயாராக இருக்கும் மேற்கத்திய நாடுகள் சீனா, வடகொரியா என்றால் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றன. சீனாவுக்கு திபெத்தை விழுங்குவது சுலபம். ஓரளவு ஆயுதபலங்கொண்ட தைவான் நாட்டினை சொந்தமாக்கிக்கொள்வதில் அத்தனை அவசரம் காட்டுவதில்லை.

இந்த மனம் எங்கிருந்துவந்தது? இதற்கான ஆரம்பம் எங்கே? அலுவலகத்தில் ஒரு மேலதிகாரி  அவனுக்குள்ள பதவி பலத்தில் கீழீருக்கும் ஊழியனைத் திட்டுகிறான். மாலையில் வீடு திரும்பிய ஊழியனுக்கு, கணவன் என்ற தகுதி தரும் பலத்தைப் பிரயோகிக்க தம்மினும் பார்க்க எளியதொரு உயிர் தேவை, மனைவி கிடைக்கிறாள், அவள் தம் பங்கிற்கு கோபத்தைக் குழந்தைமீது செலுத்துகிறாள் ஆக எதிர்ப்பவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம். கோபத்திற்கென தனி உயிரணு இருக்கிறதா, அதை பிரித்தெடுத்து சிகிச்சை அளிக்க்கும் பட்சத்தில் அத்தனைபேரும் சாந்த சொருபீகளாக மாறிவிடமுடியுமா? எப்போதோ ஒரு முறை படித்த நூலில் வன்முறைக்கு உணவும் காரணமென்று படித்திருக்கிறேன். அசைவ உணவுகாரர்கள் கோபக்காரர்களென்றும், சைவ உணவு பிரியர்கள் அமைதியானவர்களென்றும் படித்த நினைவு.விலங்குகளிடத்தில்கூட இப்பேதங்களைப் பார்க்கத்தான் செய்கிறோம்.

மருத்துவர் எட்விஜ் ஆந்த்தியெ இங்கே (பிரான்சு நாட்டில்) ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு பெண்மணி. இவரொருபுகழ்பெற்ற குழந்தைகள் நல மருத்துவருங்கூட. உலகில் வன்முறையைக் குறைக்கவேண்டுமெனில், பெற்றோர்கள் பிள்ளைகளைத் தண்டிப்பதை தடைசெய்யவேண்டும் என்கிறார். சிறுவயதில் அடித்து வளர்க்கப்படுகிற பிள்ளைகள் அனைவருமே பின் நாட்களில் வன்முறையைத் தேடுபவர்களாக இருப்பார்கள் என்பது இவரது கருத்து. இதற்காக பிரான்சு நாட்டின் சிவில் சட்டத்தில் போதிய திருத்தம் செய்வதற்கான யோசனையை அரசுக்குக் வழங்கியிருக்கிறார். அடித்து வளர்க்காத பிள்ளைகள் உருப்படமாட்டார்களென இந்தியர்களில் பெரும்பாலோனோர் நம்புவதுபோல ஐரோப்பியர்களும் தமது பிள்ளைகள் உருப்படவேண்டுமெனில் தண்டிக்கப்படவேண்டுமென நினைப்பவர்கள். பிரெஞ்சு மக்களில் 87 விழுக்காடு மக்கள் இன்றைக்கும் தம்பிள்ளைகளைத் தண்டிப்பற்கு உகந்த இடம், அவர்களின் பின்புறமென நம்புகிறார்கள். கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம்,  குழந்தைகளின் பின்புறத்தில் அடிக்கின்ற பழக்கத்தைப் பெற்றோர்கள் கைவிடுவதற்கு ஆவன செய்யவேண்டுமென தமது உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டது. அதனை ஏற்று இத்தாலி, ஸ்பெயின், சைப்ரஸ் சட்டங்கள் இயற்றின. பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுதலைப் பூர்த்திசெய்யவேண்டிய நிர்ப்பந்தம். எட்விஜை இது பற்றி ஆய்ந்து ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கப் பிரெஞ்சு அரசாங்கம் கேட்டுக்கொண்டது. அவ்வறிக்கையில் சொல்லப்பட்டதுதான் மேலே நீங்கள் படித்தது. தமது 30 ஆண்டுகள் மருத்துவ அனுபவத்தில் மழலையர் பள்ளிகளில் பிள்ளைகள் கடித்துக்கொள்வதற்கும் தொடக்கப்பள்ளிகளில் கட்டிப்புரண்டு சண்டையிடுவதற்கும், நடுநிலை பள்ளிகளில் பேட்டை ரவுடிகள்போல நடந்துகொள்வதற்கும், பருவ வயதில் பெண்களைச் சீண்டி, அவர்களை வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவதற்கும் ஒரே காரணந்தான், சின்ன வயதில் அவர்கள் பெற்ற தண்டனைகளுக்கு பழிதீர்த்துக்கொள்கிறார்கள் அதாவது எட்விஜ் ஆந்த்தியே கூற்றுப்படி.

——-

பிரான்சைத் தெரிந்துகொள்ளுங்கள்-6: பாந்த்தெயோன்

பாந்த்தெயொன் (Panthéon) என்பது பாரீஸிலுள்ள ஒரு நியோ-கிளாசிக்கல் வகை நினைவுக்கூடம். சொர்போன் பல்கலைகழக வளாகமிருக்கும் Quartier latin பகுதியில் இருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் Sainte Geneviève (புனித ழெனேவியேவ்) சவப்பெட்டியைப் பாதுகாப்பதற்கென கட்டப்பட்ட இத்தேவாலயம் பின்னர் பிரான்சு நாட்டின் பெருமைக்கு உதவிய மாமனிதர்களின் பூத உடல்களுக்கு புகலிடம் தரும் நினைவுக்கூடமாக உருமாறியது. இத்தேவாலயத்தில் 72க்கு மேற்பட்ட சரித்திர நாயகர்களின் உடல்கள் சவப்பெட்டிகளில் உள்ளன ரூஸ்ஸோ, ஸோலா, மால்ரோ என்ற அவ்வரிசை நீளமானது. இது தவிர பிரசித்திபெற்ற எழுத்தாளர்களின் வாசகங்களையும் சுவர்களில் பொறித்துள்ளனர். இப்பட்டியலில் Négritude இயக்கம் கண்ட அண்மையில் மறைந்த கறுப்பரின கவிஞர் ‘எமே செசேர்’ம் அடக்கம். அண்மையில் அல்பெர் கமுய் நினைவு தினத்தை பிரெஞ்சு அரசு கொண்டாடியது. அப்போது பிரான்சு அதிபர் சர்க்கோசி படைப்பாளருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக சொந்த கிராமத்தில் புதைத்திருந்த அன்னாரது உடலை இந்த தேவாலயத்துக்கொண்டுவரப்போவதாக அறிவித்தார். அதிபர் அறிவித்தபோதிலும் பாந்த்தெயோன் தேவாலயத்திற்குள் எவரது உடலை அல்லது எஞ்சியவைகளைக் கொண்டுவரலாமென முடிவெடுக்க ஒரு குழு உள்ளது. அல்பெர் கமுய் சவப்பெட்டியை பாந்த்தெயோன் கொண்டுவர அக்குழுவிலிருந்த அவ்வளவுபேரும் சம்மதித்திருந்தார்கள். ஆனால்  கமுய் மகன் அதற்கு சம்மதிக்கவில்லை.  அதிபர் மாளிகை பலமுறை தூதுவிட்டது, இரண்டுமுறை அதிபரின் செயலர் நேரில் சந்தித்து மகனிடம் சமாதானம் பேசினார். அதிபரின் விருப்பத்தை மறுக்க அவருக்குக் காரணங்களிருந்தன. அப்பா லூர்மரைனில்
(- அல்பெர் கமுய் உடலடக்கம் செய்யப்பட்டுள்ள சிறுகிராமம்) அமைதியாக உறங்குகிறார் அவரைத் தொந்தரவு செய்யவேண்டாமென்கிறார். அதிபர் சர்க்கோசியின் அல்பெர் கமுய் மீதான திடீர்ப்பாசத்தை எழுத்தாளரின் மகன் சந்தர்ப்பவாதமென்கிறார். பிரான்சு நாட்டில் அல்பெர் கமுய் பேரில் நூற்றுக்கணக்கான வீதிகளிருக்கின்றன, ஆனால் நெய்லி என்ற நகரில் அப்படியொரு வீதி இல்லையே என்கிறார். நெய்லி அதிபர் சர்க்கோசி இருபது ஆண்டுகாலம் மேயராக இருந்த நகரம். அதாவது அல்பெர் கமுய் மகனுக்கு அதிபர் சர்க்கோசி கற்பூர வாசனையை அறியாதவர். இவ்வாதத்தை பொதுவாகப் பலரும் ஏற்பதில்லையென்றபோதும் அல்பெர் கமுய்யின் மகன், அதிபரிடம் எழுப்பும் அடுத்த இரண்டு கேள்விகளும் நியாயமானவை என்கின்றனர்:

முதலாவது :
அப்பா விரும்பி வாசித்த மூன்று நாவல்களுள் ‘கிளேவ்ஸ் இளவரசி’யும் ஒன்று என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

(‘கிளேவ்ஸ் இளவரசியை’யெல்லாம் படித்து நேரத்தை வீணாக்கவேண்டமென கல்விநிறுவனமொன்றில் அதிபர் சர்க்கோசி மாணவர்களுக்கு ஆற்றிய உரை சமீபத்தில் பெருஞ்சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தது.)

இரண்டாவது:

அப்பா மதங்களைக் குறித்து வைத்திருந்த அபிப்ராயங்கள் என்னவென்று நீங்கள் அறிவீர்களா?

அல்பெர் கமுய் இடதுசாரி சிந்தனையாளர், கிறித்துவத்தை பலமுறை கண்டித்திருக்கிறார். எனவே அவரது உடலை பாந்த்தெயோன் தேவாலயத்துக்குள் கொண்டு போவது அவரது மகனை பொறுத்தவரை நியாயமில்லை.

———————————————————–

மொழிவது சுகம்: செப்.20

Paris-Delhi-Bombay

கடந்த 16-17 தேதிகளில் பாரீஸ¤க்கு சென்றிருந்தேன்.  நானிருக்கும் Strasbourg லிருந்து சுமார் 500 கி.மீட்டர் தூரத்தில் பாரீஸ் இருக்கிறது. தொடக்கத்தில் சிலகாலம் பாரீஸில் இருந்துவிட்டு இப்போதிருக்கிற நகரத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். எனக்கு பாரீஸ் வாழ்க்கை பிடிப்பதில்லை. உலகில் எல்லா பெருநகரங்களுக்கான வாழ்க்கை பாரீஸ¤க்கும் பொருந்தும். சென்னையில் எப்படி வடசென்னை தென் சென்னை இருக்கிறதோ அப்படியான பிரிவு பாரீஸிலும் உண்டு. பாரீஸின் வடபகுதியில் பிற பகுதிகளைக் காட்டிலும் மூன்றாவது உலகநாடுகளிலிருந்து வந்தவர்கள் இங்கு கூடுதலாக உள்ளனர். பொதுவாக உடலுழைப்பை நம்பி இருக்கிறவர்கள் வாழும் பகுதி, ஆப்ரிக்கர்களும் தமிழர்களும் பிற பகுதிகளைக் காட்டிலும் இங்கு அதிகம்.

கடந்த ஆறுமாதகாலமாக பாரீஸிலுள்ள நவீன கலையகமான Centtre Pompidou வில் Paris-Delhi-Bombay என்கிற கண்காட்சி நடைபெற்று  செப்டம்பர் பத்தொன்பதாம் தேதி முடிவுற்றது. பிரான்சு மற்றும் இந்திய நவீன ஓவியக்கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. அதன் ஒரு பகுதியாக(?) மேலே நான் குறிப்பிட்ட தேதிகளில் “எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் பார்வையில் இந்தியா” என்ற கருத்தரங்கு இரண்டு நாட்கள் நடபெற்றது. பார்வையாளர்களில் ஒருவனாக நானும் கலந்துகொண்டேன். முதல் நாள் இந்தியாவின் வேதகால ஞானத்தைப் பற்றிய ஒரு கலந்துரையாடலில் மூன்று பிரெஞ்சு பல்கலைகழக பேராசிரியர்கள் கலந்துகொண்டார்கள். அவர்கள் மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டு கிரகஸ்தா, சம்சாரா, நிர்வாணா என்று விவரித்துக்கொண்டிருந்தது எரிச்சலூட்டியது. இன்று நேற்றல்ல வெகுகாலமாகவே இவர்களுக்கு இந்தியா என்றாலே வேதகால இந்தியா  அல்லது மக்களின் அவல நிலை. மேற்கண்ட கண்காட்சியில்கூட கலை படைப்புகள் என்ற பெயரில் வைத்திருந்தவைகள்: இந்தியாவின் சாதிப்பிரிவுகள், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், தலித்மக்கள், சேரிகள், தெருவில் அலையும் மாடுகள், மும்பை மூன்றாம் பாலினமக்கள்.   இந்திய எழுத்தாளர்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் நால்வரும் ( Manil suri, Sudhir Kakar, Preeta Samarasan et Kunal Basu.) ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் இந்தியாவிலிருந்துகொண்டு ஆங்கிலத்தில் எழுதினால் கூட பரவாயில்லை வெளிநாடுகளில் இருந்துகொண்டு எழுதுபவர்கள். இந்தியாவில் பிறந்ததோடு சரி. இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்தபட்ட மூவரில் ஒருவர் மேற்கு வங்காளம், ஒருவர் மகாராஷ்டிரா, மூன்றாமவர் குஜராத். நான் நினைத்ததுபோலவே மூவரும் மேட்டுக்குடியினர். கல்லூரிபடிப்பை முடித்து மேலைநாடுகளில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள்; வீட்டில்கூட அவர்களுடைய தாய்மொழியை பேசுவதில்லையாம். காரணம் சிறுவயதுமுதலே ஆங்கிலத்தில் படித்ததுதானாம், ஆக தாய்மொழியில் எழுதவோ படிக்கவோ தெரியாதென்பதை பெருமையாகச் சொல்லிக்கொண்டார்கள். நான்காவது பெண் மலேசியாவைச் சேர்ந்தவள், தமிழ்ப் பெண். அவளும் தம் பங்கிற்குத் தமிழ் தெரியாது என்பதை பெருமையாகச்சொல்லிகொண்டாள். நால்வரின் நூல்கள் இந்தியாவில் பிரதேச மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதா என்ற கேள்விக்கு இல்லை என்று கூறியதோடு அதற்கான அவசியமில்லை என்றார்கள்.

ஆங்கிலத்தில் எழுதினாலும் அமெரிக்காவிலிலோ இங்கிலாந்திலோ வசித்தாலும் இவர்கள் இந்திய எழுத்தாளர்களுமல்ல ஆங்கில எழுத்தாளர்களுமல்ல என்றொரு பார்வை மேற்கத்திய படைப்புலகில் இருப்பதை உணர்ந்திருப்பார்கள் எண்றே நம்புகிறேன். இந்த நால்வரின் எழுத்தையும் இதுவரை வாசித்ததில்லை. வாசிக்கும் உந்துதலை ஏற்படுத்தித்தருவதாக அவற்றின் பெயர்களுமில்லை. பொதுவாக இந்திய ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறவர்களில் பெரும்பான்மையோர் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபடாதவர்கள் என்பதென் அவதானிப்பு.

—–

Echanges et Partages Franco-Indienne:

இது அண்மையில் நான் ஏற்படுத்தியுள்ள அமைப்பு. இதற்கு நான் தலைவராகவும், Xavier என்ர பிரெஞ்சு நண்பர் பொருளாளராகவும், Fraçoise என்ற பெண்மணி செயலாளராகவும் உள்ளனர்.  எங்கள் சங்கத்தின் நோக்கம் நவீன தமிழ் படைப்புகளை  பிரெஞ்சுக்குக் கொண்டுவருவது, பிரெஞ்சு மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் சத்திப்பிற்கு இந்தியாவிலும் பிரான்சிலும் ஏற்பாடு செவது ஆகியவை. தமிழிலிருந்து பிரெஞ்சுக்குக் கொண்டுவருவதென்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்பது தெரியவந்துள்ளது. வங்காள மொழியிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்க்கும் பிரெஞ்சு பெண்மணி தமது போராட்டத்தைப் பற்றி சுருக்கமாக தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மூன்று நாவல்களை மொழிபெயர்த்துவைத்துக்கொண்டு பதிப்பாளர்களை தேடி ஓய்ந்துவிட்டாராம். வாழ்த்துக்கள் என்றார். மனதில் தைரியமிருக்கிறது, தமிழுக்குத் ஏதாவது செய்யவேண்டுமென்ற உந்துதலுமிருக்கிறது, முயன்று பார்ப்போம்.
————————————–

நந்திவர்மன் வலைத்தலம்.

நந்திவர்மன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இன்றைய பல அரசியல் கட்சி தலைவர்கள் பலருடனும் வடக்குத் தெற்கு என பேதமின்றி நட்பு பாராட்டி வந்திருக்கிறார். திராவிடப் பேரவை செயலாளர். எனக்கு அவருடைய கொள்கைகளில் முரண்கள் இருப்பினும், அவரது உழைப்பை போற்றுகிறேன். புதுச்சேரி மாநிலத்தை  பொறுத்தவரை அம்மண்ணிற்கும் மக்களுக்கும் ஓயாமல் குரல்கொடுத்து வருபவர். காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டு அரசியலில் இலாபம் பார்க்கும் மனிதர்களில் இவரைப்போன்ற மனிதர்கள் அபூர்வம் என்பது எனது சொந்த அனுபவம்.

அனத்திற்கும் மேலாக அண்மையில் புதுச்சேரி அரசின் தமிழ் மாமணி விருதை பெற்ற்வர் என்பதையும் இங்கே நினவுகூர்தல் வேண்டும்.

உலகத் தமிழர்களுக்காகவும் வக்காலத்து வாங்குகிற நண்பரின் வலைப்பூ கீழ்க்கண்ட முகவரிகளில் வாசிக்கக் கிடைக்கின்றன.

http://nandhivarman.wordpress.com/
http://annaist.livejournal.com/
http://dravidaperavai.blog.co.uk/tags/nandhivarman/

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-5: Métro – Boulot -Dodo

« Au déboulé garçon pointe ton numéro
Pour gagner ainsi le salaire
D’un morne jour utilitaire
Métro, boulot, bistro, mégots, dodo, zéro ».

மே 1968 பிரெஞ்சு கலவரத்தின் போது பாரீஸ் சொர்போன் பல்கலைகழகச் சுவரில் முதன் முறையாக எழுதப்பட்டிருந்த வாசகம்.

நகரவாழ்க்கையை எந்திர வாழ்க்கையோடு ஒப்பிட்டு சலித்துக்கொள்வது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பாரீஸ் நகர வாழ்க்கையை அங்குள்ள மக்கள் Métro – Boulot -Dodo – ஆங்கிலத்தில் subway – work- Sleep என நேரடியாக மொழிபெயர்க்கலாம். இது உரிய பொருளை தருவதாக இருந்தாலும் ஆங்கிலேயர் வழக்கில் the daily grind பொருத்தமான சொல் என்கிறார்கள். மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல் இது. ஒரு சொல்லை மொழிபெயர்க்கிற பொழுது, அதற்குரிய சரியான பொருள்தரும் சொல்லை கண்டுபிடித்தால் மட்டும் போதாது அதற்கு ஈடான மரபான சொற்கள் வழக்கிலிருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும். இது குறித்து தனியாக ஒரு கட்டுரை எழுதவிரும்புகிறேன்.

மேற்கொண்ட சொல்வழக்கிற்கு வருகிறேன். எழுபதுகளில் சென்னையில் கல்லூரியில் படித்தபொழுது குரோம்பேட்டையிலிருந்து தினசரி மின்சார ரயில் பிடித்து சென்னைக் கடற்கரைவரை செல்வது வழக்கம். அப்போதெல்லாம்(?) அரக்கோணம், காஞ்சிபுரம், விழுப்புரமென்று வசித்துக்கொண்டு சென்னைவரை தினசரி இரயிலில் பயணம் செய்து பணியாற்றுவர்களை அப்பகுதிகளிலிருந்து வரும் பாசஞ்சர் இரயில்களில் காண்பதுண்டு. அவர்கள் வாழ்க்கையை மேற்கண்ட Metro – Boulot -Dodo என ஒப்பிட தோன்றும். இன்றைய தேதியில் எல்லா பெரு நகரங்களிலும் பணிசெய்து வாழ்க்கையை நகர்த்துபவர்களின் தினசரிகளுக்கு இது பொருத்தமான சொல்லே.

பாரீஸில் Métro – Boulot -Dodo என்றால் பிரான்சு நாட்டில் பிறபகுதிகளில் தினசரி வாழ்க்கையை எப்படி காண்கிறார்கள் அல்லது அந்த வாழ்க்கையை எந்தச் சொற்றொடரால் அடையாளப்படுத்துகிறார்களெனில் “Les Français bouffent, se logent et roulent’ என்பார்கள். அதாவது சம்பாதிப்பது சாப்பாட்டிற்கும், வீட்டிற்கும், வாகனத்திற்கும் சரியாக இருக்கிறதென்கிற பொருளில்:

பிரெஞ்சுக்காரர் ஒருவர் 100 யூரோ சம்பாதிக்கிறார் என்று வைத்துக்கொண்டால் அவர்:

25,40 யூரோ உணவுப்பொருள்களுக்கும்
17,40 யூரோ வீட்டு வாடகை அல்லது வீடுவாங்கிய கடன், வீட்டு பராமரிப்பு செலவுக்கும்
14,30 யூரோ போக்குவரத்து செலவு இதி சொந்த வாகனசெலவுகளும் அடங்கும்
10,30 யூரோ துணிமணிகளுக்கும்
9,10 யூரோ வீட்டு உபயோகப்பொருட்களுக்கும்
7,90 யூரோ பொழுதுபோக்கு சமாசாரங்களுக்கும்
4,80 யூரோ உடல் நலத்திற்கும்
2,70 யூரோ விடுமுறைக்கும்
8,10 யூரோ பிறவற்றுக்கும் செல்விடுவதாக அண்மையில் தெரியவந்த செய்தி அதாவது சேமிப்பும் இதிலடங்கும்.

மேற்கண்ட தகவல் அசலான பிரெஞ்சுகாரருக்கு மட்டுமே பொருந்தும். வேண்டுமெனில் இங்குள்ள ஐரோப்பியருக்கு என்று கூடுதலாகப் பொருள்கொள்ளலாம்.

ஒரு கொசுறு செய்தி இந்த Métro – Boulot -Dodo என்கிற ஸ்லோகத்தை அறிமுகப்படுத்தியவர் பத்திரிகயாளரும், வானொலியில் கலைஞராகவும் திகழ்ந்த Pierre Béarn (Louis Gabriel Besnard). அவர் இயற்றிய பாடலொன்றில் இந்த ஸ்லோகம் வருகிறது. Pierre Béarn104 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து 2004ல்தான் இறந்தார்.

___________________________________

பிரெஞ்சு சினிமா -2: ஒளியும் நிழலும்

ஒரு பொருளின் மாற்று வடிவங்களில் நிழலுக்கென தனித்துவமுண்டு. சாயல், நகல், பிரதி, படிமம் எனவும் பொருள் கொள்ளலாம். உளப்பகுப்பாய்வியல் நிழலை மனசாட்சியென்கிறது. கருப்புவெள்ளைபடங்களில் கதை நாயகனோ நாயகியோ மனச்சிக்கலுக்கு உள்ளாகிறபோதெல்லாம் அவர்களினும் பார்க்க இருமடங்கு ஆகிருதியுடன் கலகலவென்று நகைப்பதுபோலவோ, இறுக்கமான முகத்துடன் எச்சரிப்பதுபோலவோ திரையில் தோன்றுகிற நிழல்களை நாம் அறிவோம். உள்மனமென்று நம்பப்படும் இந்நிழலுடைய குணத்தினை இணக்கமற்ற, முரண்படக்கூடிய, கலகக்குரலென்று சித்தரிக்கலாம். மனம் எரிமலையாகிறபோது வீசப்படும் எரிமலைக்குழம்பு இந்நிழல். எரிமலைகுழம்பால் அண்டை நிலங்களுக்குப் பிரச்சினை. உளப்பகுப்பாய்வு முன்னிருத்தும் நிழல் புறப்பட்ட இடத்தையே புல் பூண்டற்று போகச் செய்யும் தன்மையது. நிழலோடு கவனம் தேவை, உறவில் எச்சரிக்கை தேவை. உளப்பகுப்பாய்வியல் அறிஞர் கார்ல் யுங்கிற்கு இந்நிழல் நம்மினும் தாழ்ந்தது, பண்படாதது, செம்மையுறாதது, தொடக்க நிலை, முரண்பட்டது ஆனால் தப்பானதல்ல. அற்பாத்மாவுக்குரிய குணமும் சேர்ந்ததுதான் மகாத்மா. சுத்திகரிக்கபட்ட ஒழுகலென்று எதுவுமில்லை. வாழ்க்கையென்பது அப்பழுக்கதற்றதல்ல. ஒழுங்கின்மையும் சேர்ந்ததுதான் உயர்வும் முன்னேற்றமும், ஆக நிழலின்றி ஒளியில்லை என்பதுதான் விதி.

தருமிக்கு ghostwriter யாரென்று கேட்டால் சிவபெருமானைச் சொல்வோம். The Count of Monte Cristo, The Three Musketeers, Twenty Years After புகழ் அலெக்ஸாந்த்ரு துய்மாவிற்கும் ஒரு Ghostwriter உண்டு பெயர் மக்கே என அழைக்கபட்ட ஒகுய்ஸ்த் மக்கே(Auguste Maquet). எட்டுவருடங்களுக்கு முன்பு அலெக்ஸாந்த்ரு துய்மாவை பாந்த்தெயோன் தேவாலயத்தில் மறு அடக்கம் செய்வதென பிரான்சு நாடு தீர்மானித்தபோது இந்த நிழலுக்கு ஆதரவாக ஒலித்த ஒரே குரல் பொதுவுடமைக் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ஹ¤மானித்தே தினசரியின் ஆசிரியர் குரல். அவர் தமது தலையங்கத்தில், “துய்மாவின் முக்கிய படைப்புகளுக்குப் பின்புலத்தில் உழைத்த ஒகுய்ஸ்த் மக்கேவை நண்பர் அருகில் மறு அடக்கம் செய்யக்கூடாதா? அதற்கு தேவாலயத்தில் கொஞ்சம் இடமில்லாமல் போய்விட்டதா?” என்று வருந்தினார். துய்மாவின் நிழலாகவிருந்த ஒகுய்ஸ்த் மக்கே 19ம் நூற்றாண்டைசேர்ந்தவர். பெரிய இடத்துப்பிள்ளை, கல்வி அறிவிலும் தேர்ந்தவர். இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று பதினெட்டுவயதில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். பணியிலிருந்துகொண்டு எழுதிய சில கவிதைகளும், கதைகளும் இலக்கிய இதழ்களில் பிரசுரமாகின்றன. பிடித்தது சனி. இலக்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்களின் சினேகிதம் வாய்க்கிறது. மனிதருக்கு இலக்கியத்தில் சபலமுண்டாக ஆசிரியப் பணியைத் துறக்கிறார். ஆசிரியப்பணியிலிருந்துகொண்டு இலக்கிய பணியை செய்யமுடியாதென நினைத்திருக்கிறார். ழெரார்ட் நெவால்(Gerard de Nerval) என்ற கவிஞரின் நட்புகிடைக்கிறது. இருவருமாக இணைந்து கட்டுரைகள் எழுதுகிறார்கள்.

ஒகுய்ஸ்த் மக்கேவும் தரித்திரமும் இரட்டையர்கள் என்றாலும் தரித்திர சகோதரர் இவரை முந்திக்கொண்டிருக்கவேண்டும். மூன்று அங்கங்கள் கொண்ட நாடகமொன்றினை எழுதி எடுத்துக்கொண்டு வாய்ப்புத்தேடி நாடக அரங்கு பொறுப்பாளர்களைப் பார்க்கச் சென்றிருக்கிறார். வியாபாரிகள் “கூட்டம் சேர்க்கிற பெயராக இல்லையே” எனப் பதில் கூறியிருக்கிறார்கள். ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திருப்பிய மக்கே நான்கைந்து படிகளெடுத்து அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த சஞ்சிகைகளுக்கு அனுப்பிவைத்திருக்கிறார். படைப்பாளரின் பெயரைப் பார்த்துவிட்டு படைப்பை தெரிவு செய்யும் மகானுபாவர்கள் சரக்கு எங்களுக்கு முக்கியமில்லை ஐயா, செட்டியார் முடுக்காக இருக்கவேண்டுமென அருள்கூர்ந்திருக்கிறார்கள்: எங்களுக்கு வேண்டியதெல்லாம் எழுதியிருப்பவர் யார்? என்ன எழுதப்பட்டிருக்கிறதென்பது எங்களுக்கு முக்கியமல்ல என்று பதில் வந்திருக்கிறது. மனிதருக்குப் பொறுமையில்லை நண்பரும் கவிஞருமான ழெரார் நெவால் பெயரில் தமது படைப்பினை அனுப்பிவைக்க பிரசுரமாகிறது. படைப்பில் தமது பெயர் இல்லாவிட்டாலும் தமது படைப்பு பிரசுரமாகிறதே என்ற அற்ப சந்தோஷம். இந்த ழெரார் நெவாலுக்கு அலெக்ஸாந்த்ரு துய்மா சினேகிதர். 1838ம் ஆண்டு டிசம்பர் மாதத்து குளிர் நாளில் துய்மாவை ஒகுய்ஸ்த் மக்கேக்கு அறிமுகப்படுத்திவைக்கிறார். தம் கைவசமிருந்த படைப்பொன்றை திருத்தி எழுதிக்கொடுக்கும்படி துய்மா இப்புதிய நண்பரைக்கேட்கிறார். அவரும் திருத்திக்கொடுக்கிறார். அன்று தொடங்கிய இருவருக்குமான நட்பு 18 ஆண்டுகாலம் நீடிக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ‘நீக்ரோ’வாக மாறுகிறார். பிரெஞ்சு படைப்புலகில் ‘Gostwriter’ ஆக இருப்பவர்களுக்கு அதாவது நிழல்படைப்பாளிகளாக இருப்பவர்களுக்குப் பெயர் நீக்ரோ. இந்த நிழலை வெளிச்சத்திற்கு வந்திடாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டவர் அலெக்ஸாந்த்ரு துய்மா. ஒக்குய்ஸ்த் மக்கேக்குவுக்கு அவருக்குண்டான ஊதியத்தை கொடுக்க தொடக்கத்தில் ஒப்புக்கொண்ட துய்மா தவறியதால், பிரச்சினை நீதிமன்றத்திற்குபோகிறது. ஒகுய்ஸ்த் மக்கே தமது படைப்புக்கான ஊதியத்தை மட்டுமல்ல, படைப்புகளில் தமது பெயரும் இடம்பெறவேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார். நீதிமன்றம் துய்மா மக்கேவுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தை கடன்தொகையாக பார்த்ததே அன்றி படைப்பின் அடிப்படையில் செய்துகொண்ட ஒப்பந்த ஈட்டுத் தொகையாக பார்க்கத் தவறுகிறது. 145200 பிராங் மக்கேவுக்குத் துய்மா கொடுக்கவேண்டுமென தீர்ப்பு வழங்கியபோதிலும், படைப்புரிமைபற்றி நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்பதைக் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். 1851ம் ஆண்டில் நடந்த வழக்கும் தீர்ப்பும் பிரெஞ்சு படைப்புலகிற்கு மிகப்பெரிய அவப்பெயரினை ஏற்படுத்தித் தந்ததென சொல்கிறார்கள்.

துய்மாவை விமர்சிப்பவர்கள் ஸ்க்ரீப்,லாபிஷ்(Scribe, Labiche)போன்ற படைப்பாளிகளை சுட்டிக்காட்டுகிறார்கள். ஸ்கிரிப் ஐநூறுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியவர். தாம் தனித்து எழுதியதில்லை என ஒத்துக்கொண்டவர் பிற்காலத்தில் தமக்காக எழுதியவர்கள் பெயர்களை சுவற்றில் பொறித்துவைத்தார். லாபிஷ் என்ற நாடக ஆசிரியரும், தமது படைப்புக்குக் காரணமான நண்பர் மார்க் மிஷெல் அருகிலேயே தம்மை அடக்கம் செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொண்டவர். துய்மா தமது நிழல் எழுத்தாளருக்கு அவ்வாறான நன்றிக்கடன் ஆற்றியதாக செய்திகளில்லை. மாறாக The Count of Monte Cristo, Twenty Years After என்ற இருநாவல்களையும் எழுதிய ஒகுய்ஸ்த் மக்கே என தமது கல்லறையில் எழுதிக்கொண்டு திருப்தி அடைந்ததுதான் அவர் கண்ட பலன்.

L’autre Dumas – வேறொரு துய்மா. அலெக்ஸாந்த்ரு துய்மாவின் மற்றொரு முகத்தை இத்திரைப்படம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. படத்தில் மேற்கண்ட பிரச்சினகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவகையில் இத்திரைப்படம் ஒகுய்ஸ்த் மக்கேவுக்கு செலுத்தப்படும் அஞ்சலியெனலாம். நடு நிலையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் நேர்மையாக திரைக்கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஒகுய்ஸ்த் மக்கே பாத்திரம் துய்மாவுக்கு இணையாகச் சொல்லப்ட்டிருக்கிறது. இப்படத்தினை முன்வைத்து பிரான்சு நாட்டு கறுப்பரின தலைவர் பத்ரிக் வொசே என்பவர் சில கேள்விகளை முன்வைக்கிறார். அவருக்கு அலெக்ஸாந்த்ரு துய்மா பாத்திரத்தை ஒரு கறுப்பர் ஏற்று நடித்திருக்கவேண்டும், தலைமுடியை சுருள்சுருளாக மாற்றிக்கொள்வது மட்டும் போதாதென்பது அவர் கருத்து. காரணம் அலெக்ஸாந்த்ரு துய்மாவின் தந்தை கலப்பின ஆசாமி, ஹைத்தியைச் சேர்ந்த அடிமை. அவரது தாயாரும் ஒரு கறுப்பின பெண்மணி, ஹைத்திநாட்டில் அடிமையாக இருந்தவள். துய்மா தமது வாழ்நாளில் இனவெறியினால் பாதிக்கப்பட்டதையும் இவர் நினைவுகூர்கிறார். குறைந்தபட்சம் துய்மாவாக நடித்த நடிகருக்கு ஒப்பனையிலாவது அவர் கறுப்பரினத்தைச் சார்ந்தவரென்பதை காட்டியிருக்கவேண்டுமென்கிறார். பிரெஞ்சு திரையுலகம் கவனமானதுதான், எப்படி தவறியிருப்பார்களென தெரியவில்லை. அவர்களுக்கு துய்மாவாக நடித்த ழெரார் தெபார்தியே கச்சிதமாக பாத்திரத்துக்குபொருந்துவது காரணமாக இருக்கலாம். எதிர்காலத்தில் பராக் ஒபாமாவாகவோ, மார்ட்டின் லூதர் கிங்காகவோ ஒரு வெள்ளையரை நடிக்க வைப்பார்களா அல்லது ஜூலியர் சீசராக ஒரு கருப்பரை நடிக்க வைப்பார்களா என்ற கறுப்பரினத் தலைவர் எழுப்பும் கேள்விகளும் நியாயமானவையே.

எனக்குப் பிரச்சினை, துய்மாவாக யார் நடித்தார்கள் என்பதல்ல? மக்கேவை ஏமாற்றிப்பிழைத்த துய்மாவின் சாமர்த்தியம். இன்றைக்கு எழுத்து பணி அல்ல பிறவற்றைப்போல ஒரு தொழில். தொழில்களின் தலைவிதியை தொழிலாளர்கள் தீர்மானிப்பதல்ல பணமுதலீட்டார்கள் தீர்மானிக்கிறார்கள், பணம் தீர்மானிக்கிறது அது சார்ந்த கோட்பாடுகள் தீர்மானிக்கின்றன. முதலாளிய உற்பத்தி சமுதாயத்தில் இலாபத்தை அடைவதே குறிக்கோள் என்கிறபோது எல்லாதுறைகளையும் போலவே எழுத்துங்கூட தர்மம் அற்றுபோய்விட்டதென்கிற வருத்தம். புகழ் தரும் போதையும் சுகமும் எத்தனை பெரிய மனிதர்களையும் சிறுமைபடுத்தக்கூடியதுதான், துய்மாவும் மனிதர்தானே? இதுதான் எதார்த்தம் என்ற வியாக்கியானமும் வலுசேர்க்க துணையிருக்கிறபோது யாரை இங்கே குற்றஞ்சொல்ல முடியும்?

————————————————-

மொழிவது சுகம் -Sep 9

எழுத்தாளனும் சினிமாவின் கதா நாயகனும்

ஒரு சினிமாவைப் பார்த்து கதாநாயகனின் பிம்பத்தை மனதில் வரித்துகொள்ளும் கடைநிலை ரசிகனின் மனப்பான்மைக்கும், எழுத்தை வைத்து படைப்பாளியின் பிம்பத்தை கையிலெடுத்துக்கொண்டு ஒத்திட்டுப் பார்க்க வருகிற வாசகனுக்கும் அதிக பேதமில்லை என்பதென் எண்ணம்.

இருவருமே வெகுசன தளத்தில் இயங்குகிற ரசிகர்கள்தான். எழுத்தாளன் தமது புனைவுக்குள் கட்டமைக்கும் கதாநாயக விலாசத்திற்குள் நான் போகவிரும்பவில்லை. ஆனால் பொதுவாகவே எல்லாமனிதர்களுக்குள்ளும் அவரவர் அறிவின் வழிபட்டு -அந்த அறிவை எல்லாமுமாக – ஓர் absolu (முழுமை) இந்த முழுமையை ஓர் instant absolu எனவும் கொள்ளலாம், அத்தருணத்தில் ஒரு பொருள் பற்றிய வாய்த்திருக்கும் அறிவு அல்லது அனுபவம் பிறருக்கு தட்டையானதாக இருந்தாலும் – தான் அதில் முழுமைபெற்றிருப்பதாக உறுதிபடுத்திக்கொண்டே, அம்முழுமையின் நெகிழ்ச்சி த்தன்மைகள் (Elasticity) ) குறித்த பிரக்ஞையின்றியே அத்தருணத்தைத் தொடங்குகிறான். விவாதத்தில் இறங்கும்போதோ அல்லது எழுதிக்கொண்டு போகிறபோதுதான் நிஜவாழ்க்கையின் அவன் சந்தித்த மறுப்புகளுக்கு இடம் தேடவேண்டும், அவ்வகையில் அவனது போதாமைக்கு, இல்லாமைக்கு களிம்பு பூசவேண்டும், சஞ்சலத்திற்கு கற்பனையிலாவது விடுதலை வாங்கித் தரவேண்டுமென ஏங்குகிறான். இதைத்தான் தொடக்ககாலத்தில் நமது இதிகாசங்களும், புராணங்களும் செய்தன. திராவிடம் பேசிய எழுத்தாளர்களும், அடுத்துவந்த வெகு சன இலக்கியங்களும் இதைத்தான் செய்தன. தீவிர இலக்கியங்களில் அதன் விழுக்காடுகள் குறைவு எல்லோருமே ஏதோவொரு உன்னதத்தை கட்டமைக்க காய்கறி வியாபாரி தொடங்கி கா·ப்கா வரை அவரரவர் ஞானத்தின் வழி முயல்கிறார்கள். அறிவொளி இயக்கங்கள் பிரபஞ்ச நோக்குகள் பற்றி பேசியதும் இந்தப்பொருளில்தான். பின்னர் அவர்களிடையே பேதம் வந்தது. பிரெஞ்சு தத்துவவாதி பிளேஸ் பஸ்க்கால் (Blaise Pascale)கூறுவதை இங்கே நினைவு கூர்தல் தகும்: “மனிதர் கடமைத் தேர்வென்பது உண்மை சார்ந்ததல்ல, அவனது அகவயமான விருப்பத்தை பூர்த்திசெய்யும் தன்மை சார்ந்தது. அவனது அகவய தேர்வுக்கு எழுத்துவேறு வாழ்க்கை வேறு என்று இனம் பார்க்கத் தெரியும். தமது சொந்த கதையை சுயகதை –autofiction- என்ற பெயரில் எழுதுகிற்போதும் ஒளிவட்டத்தில் கூடுதல் கவனமெடுத்து எழுதும் எழுத்தாளர்கள் தான் மிக மிக அதிகம். எழுத்தினை வைத்து எழுத்தாளர்களின் அசலான பிம்பத்தை ஒருபோதும் நிறுவமுடியாதென்பதுதான் எனது கருத்தும். இப்படியெல்லாம் பிம்பத்தை வரித்துக்கொண்டு எழுத்தாளர்களை தேடிப்போகும் வாசகர்களைக் கண்டால் எனக்கு அனுதாபந்தான் பிறக்கிறது.

எழுத்தாளனும் ஒரு சராசாரி மனிதன் என்பதில் மாற்று கருத்திருக்க முடியாது. நீதிபதிகள் குற்றவாளிகளாக இருக்கமுடியாதென்பது விதியா என்ன?

உரையும் உரையாடலும்

உறவுக்கார நண்பரிடம் சென்னையில் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது தெருவோர உணவகங்களைப்பற்றி பேச்சு வந்தது. அவர்கள் உபயோகிக்கும் எண்ணை மோட்டார் வாகனங்களில் உபயோகிக்கப்படும் lubricating oil என்றார். தெருவோர உணவகங்களில் கலப்பட எண்ணையை உபயோகிக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் மோட்டார் எந்திரங்களில் பிஸ்ட்டனின் உராய்வினை மட்டுப்படுத்துவதற்கென்று பயன்படும் எண்ணையை சமையலுக்குப் பயன்படுத்துவார்களா? அந்த எண்ணையின் அடர்த்தியென்ன சமையல் எண்ணையின் அடர்த்தியென்ன என்று யோசிக்க வேண்டியதில்லையா?

சிலர் இப்படித்தான் தடாலடியாக தங்கள் முடிவுகளைத் திணிப்பார்கள். அதை மற்றவர்கள் ஏற்கவேண்டுமென்றும் எதிர்பார்ப்பார்கள். இதுபோன்றதுதான் ‘செப்டம்பர் 11 இரட்டைக்கோபுர தாக்குதல் உண்மையல்ல’ என்று வாதிடுவதும்; ‘நிலவில் மனிதன் நடக்கவே இல்லை’, என்று வாதிடுவதும், இவர்களைக் கொஞ்சம் உட்காரவைத்து பேசிப்பாருங்கள், ‘இறைவனே அகத்தியரிடம் பேசினார்’, என்று சத்தியம் செய்வார்கள். இறைவன் அகத்தியரிடம் பேசினார் என்பதை நம்பத் தயாராயிருப்பவர் நிலவில் மனிதன் நடந்தான் என்பதை நம்பத் தயாரில்லை.

உண்மை, உண்டு, ஏற்பு, இணக்கம் போன்ற சொற்களை அறிந்த நமக்கு பொய், இல்லை மறுப்பு, முரண் போன்ற சொற்களை தெரியாமலிருக்க நியாயமில்லை. எதிரெதிர் அணியைச்சேர்ந்த இவ்விரு வார்த்தைக் குழுமத்தின் தயவுடனேயே நமது உரையாடல்களையும், கலந்துரையாடல்களையும், விவாதங்களையும் கட்டிஎழுப்புகிறோம். அவற்றின் அடிப்படையிலேயே ஒரு கருத்தியத்தை அல்லது முடிவை மிக ஆழமாகப் புரிந்துகொள்ளவும், வரையறுக்கவும், அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கவும் செய்கிறோம். அதேவேளை ஒரு கருத்தியத்தை அல்லது ஒரு முடிவை தீர்மானிக்கும் முன்பாக மேற்கண்ட உரையாடலோ, விவாதமோ இரு தரப்பினருக்கும் சமபலத்தையும், சமகாலத்தையும், சமவாய்ப்பினையும் வழங்கினாலன்றி உரையாடலின் முடிவில் ஒரு நேர்மையான முடிவினை எட்டுவது இயலாது. எங்கேனும் எதிர்வினை ஏதேனும் சில காரணங்களால் மறுக்கப்படுகிறதெனில் அங்கே வழங்கப்படும் நீதி, எடுக்கப்படும் முடிவு ஒரு பக்க சார்புடையதென்று பொருள்.

தகவல் தொழில் நுட்பம் பெருகியுள்ள இந்நாட்களில் திரும்பிய திசைகளிலெல்லாம் முடிவுகள் திணிக்கப்படுகின்றன. உரை (Discours) மட்டுமே நிகழ்த்தப்படுகின்றன, உரையாடல்களில்லை (Dialectique). நேருக்கு நேர் உரையாட இயலாதகட்டத்தில் ஒரு மூன்றாம் மனிதனை தேர்வு செய்து உங்கள் மறுப்பையோ, முரணையோ தெரிவியுங்கள்!என்றாவது எங்காவது ஒரு நேர்மையான முடிவினை அக்குறிப்பிட்ட கருத்தியம் ஒரு நாள் எட்டக்கூடும். இப்போதைக்கு அதுவொன்றுதான் வழி

——–