Monthly Archives: திசெம்பர் 2015

நன்றி நன்றி

கடந்த  டிசம்பர் 27 மாலை நண்பர் பேராசிரியர் க.பஞ்சு தலைமையில் எனது நாநன்கு நாவல்கள் பற்றிய  திறனாய்வும் , திறனாய்வாளர் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு  – ‘வாழ்வின் பன்முகப் பிரதிகள்’ , நண்பர் பஞ்சுவைப் பற்றிய ‘இலங்கு நூல் செய வலர் – க. பஞ்சாங்கம்’  ஆகிய இரண்டும் வெளியிடப்பட்டன.

நண்பர் சீனு தமிழ்பணி கடந்த ஆண்டு ‘காப்காவின் நாய்க்குட்டி’ புத்தக வெளியீட்டின்போது எனது நூல்கள் பற்றிய திறனாய்வை  நடத்தவேண்டும் என விரும்பினார். உணர்ச்சி வேகத்தில் சொல்லிவிட்டார் என்றுதான்  நினைத்தேன். ஆனால் தொடர்ந்து வற்புறுத்திவந்தார். இந்த வற்புறுத்தல் பின்னர் நண்பர்கள் பஞ்சு, நாயகர் இருவர் ஊடாக வலுப்பெற்றது . நான்கு நாவல்கள், ஐந்து  சிறுகதைத் தொகுப்புகள் ஒன்பது கட்டுரை தொகுப்புகள் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு ஐந்து மொழிபெயர்ப்புகள், தமிழிலிருந்து  பிரெஞ்சுக்கு அம்பையின் சிறுகதைகள் என செய்திருந்தும் எனது இருத்தல் அத்தனை முக்கியத்துவம் பெற்றதல்ல.   நான் அறியப்படவேண்டும் எனவிரும்பிய நண்பர்களுக்கு நன்றி. தமிழர்கள் நினைவுகொள்ள மறந்தாலும் தமிழ் என்னை நினைவுகொள்ளூம் என்ற நம்பிக்கையிலேயே எழுதிவருகிறேன். இப்படிச்சொல்வதற்குக் காரணம் இருக்கிறது  நான் தனியே தமிழுலகில் ஈட்டாத புகழை அம்பையின் சிறுகதைகளை ஒரு பிரெஞ்சு பெண்மணியின் ஒத்துழைப்புடன்  இணைந்து செய்ததில் இன்று பிரெஞ்சு படைப்புலகில் எனது பெயரும் பதிவாகி இருக்கிறது. எனது சிறுகதையை Cousins de personnes  என்ற இதழும் பிரசுரித்துள்ளது.  கார்த்திக் தேவராஜ் என்றகணினித் துறை இளைஞர், ஆங்கிலத்தைத் திறமையாகவும் இலாவகமாகவும் கையாளக்கூடியவர்,  பெங்களூரிலிருந்து நீலக்கடலை மொழிபெயர்க்க விரும்பி  முதல்  அத்தியாயத்தை மொழிபெயர்த்தும் அனுப்பியுள்ளார்.  நாயகர், ஒரு பிரெஞ்சு நண்பர் ஆகியோரின் உதவியுடன் பேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி அவர்களால் மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்படுகிறது.

 

தமிழில்  நல்ல எழுத்துக்களைக் காழ்ப்பின்றி பாராட்டுகிற மனிதர்களும் இல்லாமில்லை. திருவாளர்கள் க. சச்சிதானந்தம், வே. சபா நாயகம், ரெ. கார்த்திகேசு, பிரபஞ்சன், தமிழவன்,க. பஞ்சசாங்கம்,  நா. முருகேசபாண்டியன் , தேவமைந்தன்; இன்றைக்குப் பா. ரவிக்குமார், க. முத்துகிருஷ்ணன், இலண்டனிலிருந்து சிறந்த வருங்க்கால புலம்பெயர்ந்த எழுத்தாளராக பரிணமிக்க உள்ள புதுச்சேரியைச் சேர்ந்த ரா. கிரிதரன் ஆகியோர் நான் கேட்டுக்கொண்டு மதிப்புரை எழுதியவர்களல்ல என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.  ஆக எவ்வித எதிர்பார்ப்புமின்றி உழைத்தால் எழுத்தும் ஊட்டத்துடன் இருந்தால்  நமது எழுத்துக் கவனிக்கப்படும் என்ற  நம்பிக்கை வேண்டும்(குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு).    இது கணினி உலகம், 30 ஆண்டுகளுக்கு முந்தைய நிலமை இன்றில்லை.நல்ல படைப்புகள் காலம் தாழ்ந்தும் கவனிக்கப்படும், உங்கள் மீது நம்பிக்கை வையுங்க்கள். இல்லையென்றால்  சு.ரா வின் இனிய நண்பர் எம். எஸ் தொலைபேசியில் அழைத்து ‘காஃப்காவின் நாய்க்குட்டி’  நாவலைப் பாராட்டுவாரா? பா ரவிக்குமார், நறுமுகை, கார்த்திக்  தேவராஜ், ரா. கிரிதரன் போன்ற இளைஞர்களின் ஆதரவு எனது எழுத்திற்கு வாய்த்திருக்குமா?இங்கே  செஞ்சி இலக்கிய வட்டத்தின் துணைகொண்டு இளைஞர்களை உற்சாகப்படுத்திவரும்  நறுமுகை இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் ஒன்றிரண்டுபேர் இருக்கவே செய்கிறார்கள்.குறுகிய காலத்தில் நான் பெற்ற அடையாளத்திற்கு இந்த நல்ல உள்ளங்க்களே காரணம். இளைஞர்களே சோர்வின்றி எழுதுங்கள்.

மீண்டும் 27 ந்தேதி நிகழ்ச்சிக்கு வருகிறேன்  வித்திட்ட நண்பர் சீனு தமிழ்மணி எனது இலக்கிய பயணத்திற்கு வழித்துணையாக அமைந்து உடன் பயணிக்கும்   நண்பர் சு. ஆ வெங்கிட சுப்புராய நாயகர், எழுத்தாளன் என்பவன் எழுதுவதுபோல இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பவன்  நான். அத்தி பூத்தாற்போல சிலர் இருக்கவே  செய்கிறார்கள்.  அவர்களில் நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன், பாவண்ணன் , வண்ணதாசன், வண்ண  நிலவன், கண்மணி குணசேகரன் என்பவர்களோடு அதிகம்  நெருக்கம் இல்லையென்றாலும்  அப்படியானவர்களாகத்தான் இருப்பார்கள்  என்பதற்கு அவர்கள் வாழ்க்கையே சாட்சி.   பொய்யான, பகட்டான தமிழ்ச் சூழலில் அண்மைக்காலத்தில்  நெருங்கிப்பழகி பிரம்மிக்கின்ற ஒருவர்  பேராசிரியர் பஞ்சு, அவர் வழிகாட்டுதலில்  நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடங்கி  சிறப்பாக முடிந்தது.    நண்பர்கள் சீனு தமிழ்மணி, நாயகர், பேராசிரியர் பஞ்சு  ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்

காலசுவடுபதிப்பகம் ஐந்து  நாட்களில் புத்தகத்தை முடித்து அனுப்பி வைத்தார்கள்  நண்பர் கண்ணன் எளிமைக்கும் வெள்ளந்தியான உள்ளத்திற்கும் அறியப்பட்ட இனிய நண்பர் களந்தை பீர் முகம்மது அவர்களை  நிகழ்ச்சியில் பங்க்கேற்க அனுப்பியும் வைத்தார். காலச்சுவடு பதிப்பகத்திற்கு மிகவும் நன்றி

நண்பர்கள் மற்றும் எனது அழைப்பின் பேரில் நிகழ்வில் கலந்துகொண்ட திருவாளர்கள் அ.ராமசாமி, ந முருகேசபாண்டியன், பாரதிபுத்திரன் , பா. ரவிக்குமார், நறுமுகை ஜெ ராதாகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றிகள்

 

எனது பள்ளி தமிழாசிரியர்கள் திருவாளர்கள் நாகி, ராஜேந்திரன், மூத்த இலக்கியவாதியும் திறனாய்வாளர்மான வே. சபா நாயகம், தேவமைந்தன், நந்திவர்மன் என என்மீது அன்புகொண்டுள்ள பெருந்தகைகள் கலந்துகொண்டது பெரும் பேறு. அவ்வாறே அ. பெருமாள் , பூங்குழலி பெருமாள் தம்பதிகளுக்கும் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற நண்பர்களுக்கும்  நெஞ்சார்ந்த  நன்றிகள்

 

அன்புடனும் பணிவுடனும்

நா.கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல்கள் திறனாய்வு

வணக்கம்

அன்பினிய நண்பர்களுக்கு

தற்போது புதுச்சேரியில் இருக்கிறேன், கைத் தொலைபேசி எண் / 98 43 13 93 03

எதிர்வரும் டிசம்பர்  27 அன்று மாலை 4மணி அள்வில் எனது நான்கு நாவல்கள் குறித்த திறனாய்வு நண்பர்கள் முயற்சியால் புதுச்சேரியில் நடைபெற உள்ளது  மூத்த திறனாய்வாளர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.  நிகழ்ச்சி பற்றிய விபரம் விரைவில்

வணக்கத்துடன்

நா கிருஷ்ணா

முனைவர் க. பஞ்சு வின் தலித் இலக்கிய பார்வையை முன்வைத்து

panchu
பேராசிரியர் பஞ்சு இடதுசாரி சிந்தனையாளர், மொழி அறிஞர், திறனாய்வாளர், நவீனப் படைப்பிலக்கியத்தில் ஆர்வங்கொண்டவர், பெண்ணியவாதி என்றெல்லாம் அறியப்பட்டிருக்கின்ற நிலையில், அவர் தலித் இலக்கிய ஆதரவாளராகவும் இருப்பதில் வியப்புகளில்லை. இன்றைய இலக்கியம் என்பது தலித் இலக்கியமே என்று தமது படைப்புகளைக்கொண்டும்(1), உரைகளிலும், தமது தலித் ஆதரவு நிலையை தொடர்ந்து உறுதி செய்துவருபவர்.
தமிழ்ச் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களும், தலித் மக்களும் கடந்த காலத்தினும் பார்க்க இன்றைக்குக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேம்பட்டிருக்கிறார்கள். இதற்குப் பெரியார், அம்பேத்கார் போன்றவர்களின் பங்களிப்பை மறுக்கவியலாதென்றாலும், அவர்கள் இன்றியும் இம்மாற்றம் நிகழ்ந்திருக்கக்கூடும். பேராசிரியர் கட்டுரைகளிலேயே அதற்கான விடைகள் உள்ளன. மனிதர்களைக் காட்டிலும் நீதியை எண்பிக்க, ‘காலம்’ ஒருபோதும் தவறியதில்லை எனினும் அதற்கு நாம் காத்திருக்கவேண்டும். எப்போது அதனைச்செய்யும் இன்றா நாளையா, அடுத்த தேர்தலிலா? நூறு வருடங்கள் கழித்தா? நமக்குத் தெரியாது என்பது அதிலுள்ள சிக்கல். அதுவரை? ஒடுக்கப்பட்டவர்களின் கதியென்ன? பள்ளிகூடத்தைத் திறந்துவிட்டிருக்கிறார்கள் என்பதால் மழைக்கு அங்கு ஒதுங்கிக்கொள்ளலாமா? பொறுமையுடன் சகித்துக்கொண்டு அல்லது மைக் கிடைத்ததென்று படபடவென்று பொறிந்துதள்ளி கண்ணைக் கசக்கி மீடியாவில் இடம்பிடித்ததால் தீர்வு கிடைத்துவிடுமா? பிறவிடயங்களைப்போலவே இப்பிரச்சினையிலும் அடிப்படையில் ஓர் உண்மை இருக்கிறது. அது, பொதுவில் பாதிக்கப்பட்டவர்கள்தான் தங்கள் முயற்சியில் விமோசனத்திற்கு வழிகாணவேண்டுமென்கிற உண்மை. மீட்பதற்கு ‘மெசியா (Messiah) என்றொருவர் வரமாட்டார் என்ற உண்மை. இன்னொரு அய்யோத்தி தாசரோ பெரியாரோ, அம்பேத்கரோ, உடனடியாக வருவார்களென்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை என்ற உண்மை. ஏழேன் பொத்தியே (Eugène Pottier) என்றொரு பிரெஞ்சுக் கவிஞர் பாடிய புரட்சி பாடல்வரிகள்தான் இந் நேரத்தில் நினைவுக்கு வருகிறது:

மகா இரட்சகரென்று எவருமில்லை
கடவுளில்லை, சீசரில்லை,
மனிதர் உரிமையைக் காட்டிக்காக்கும்
ரொமானியர்களின் ட்ரிப்யூனும் இன்றில்லை
உற்பத்தியாளர்களே, நம்மை நாமே
காப்பாற்றிக்கொள்வோம்! (1)
இங்கே கவிஞர் உற்பத்தியாளர்கள் என்றழைப்பது முதலாளிகளை அல்ல, தங்கள் உழைப்பை நல்கி உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கும் தொழிலாளர்களை. உழைக்கும் வர்க்கம் புத்தி தெளிந்தாலன்றி விமோசனமில்லை என்கிறார் கவிஞர்.
ஒடுக்கப்பட்ட மனிதர்கள் அனைவர்க்கும் பாடல் பொருந்தும். இந்தியாவை பொறுத்தவரை வெகுகாலமாகவே இங்கே வர்க்கபேதம் பற்றிய புரிந்துதுணர்வை சாக அடிப்பதே சாதிய வெறிதான். ஓரிடத்தின் சமூகம், பூகோளம், பண்பாடு, தனி மனிதனின் அபிலாஷைகள் இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாத மார்க்ஸியமும் இதற்குப் பெரிதும் உதவமுடியாது. இந்தப்பின்னணியில்தான் இந்தியாவில் தலித் அரசியல், தலித் இலக்கியம் போன்றவற்றைப் பார்க்கவேண்டும்
க. பஞ்சாங்கம் தலித் சமூகத்திற்கு எதிரான அவலங்கள், தலித் இலக்கியம் இரண்டையுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார். ஓடி ஒளிதலோ, மழுப்பலோ இன்றி மனதிற்கு நேர்மையாகத் தோன்றுபவற்றைச் சொல்வதில் வழக்கம்போல தெளிவும் துணிவும் இருக்கின்றன. ‘தலித்’ சமூகத்தை முன்வைத்து கட்சி அரசியல், இலக்கிய அரசியல் இரண்டையும் பேசுகிறார். இரண்டிலுமே விடியல் என்பது முற்றாக அச்சமுதாயமக்களைச் சார்ந்தது என்பதை நம்பும் க.பஞ்சு, அச்சமூகத்திற்கு தலித் ஆதரவாளர்களின் பங்களிப்பும் அவசியமானதுதான் என்பதைத் தெரிவிக்கும் பஞ்சு, அதனைத் தலித் அல்லாத பிறமக்களின் கண்ணோட்டத்துடன் எடைபோட்டுப் பார்க்கிறார்.
‘தலித்’ என்ற சொல்லை தலித் அல்லாதவர்கள் பயன்படுத்துகிறபோது பொதுவில் சந்தேகிக்கவேண்டியிருக்கிறது. தலித் ஆதரவாளர்கள் அனைவருமே பேராசிரியர் க. பஞ்சாங்கத்தைப் போன்றவர்கள் அல்ல. இங்கு தலித் ஆதரவாளர் எனப் பிரகடனபடுத்திக்கொண்டு அரசியல், இலக்கியம் போன்றவற்றில் ஒரு பாசாங்கு அரக்கு மாளிகையை எழுப்புபவர்கள் அநேகம். நூறு குறைகள் இருந்தாலும், புல்லுக்கும் நீர்பாய்ச்சுபவர்களாக இருப்பினும், தலித் மக்களுக்கு நம்பகமானவர்களாக தலித் தலைவர்களே இருக்க முடியும். அதுபோலவே பூரணமானதொரு தலித் இலக்கியத்தைத் தலித் அல்லாதார் படைத்துவிடமுடியாது. தலித்திற்கு ஆதரவாக இருப்பதுபோல தலித் தலைவர்கள் அல்லாத கட்சிகளும் காட்டிக்கொள்கின்றன. இடது சாரி கட்சிகளைத் தவிர்த்து பிறவற்றை இவ்விடயத்தில் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. கட்சி சார்ந்த தலித் அரசியலை மறந்துவிட்டு, இலக்கிய அரசியலில் தலித்’ என்ற சொல்லின் நிலமைஎன்ன? அதன் ஆகிருதி என்ன, வீச்சு என்ன? நிகழ்த்தும் விளையாட்டுகள் என்ன? தன் இருத்தலை ஆழமாக வேரூன்றிக்கொள்ள போதுமான அடியுரம் அதற்குண்டா? பிறர் ஆதரவு அவசியமா என்பதை இனி பேராசிரியர் எழுத்துக்கொண்டே பரிசீலிக்கலாம்.
1. தலித் இலக்கியத்தில் ஆதரவாளர்களின் பங்கு
இக்கட்டுரை முழுக்க முழுக்க தலித் அல்லாத பிறர், தலித் இலக்கியவாதிகளுக்கு, தலித் எழுத்துக்களுக்கு உதவக்கூடிய யோசனையை வழங்குகிறது. ‘இது தலித் இலக்கியத்திற்கான காலம்’ என்ற முழக்கத்துடன் கட்டுரை தொடங்குகிறது. அதை நியாயப்படுத்த தலித் எழுத்துக்களும், எழுத்தாளர்களும் இலக்கியத்தில் முன்னெப்போதும் கண்டிராத வகையில் விருதுகளையும் பரிசுகளையும் வென்றிருப்பது முனைவர் க. பஞ்சுவினால் சுட்டப்படுகின்றன.
தலித் எழுத்து’ யார் எழுதுவது? என்ற கேள்வியும் ‘தலித் ஆதராவளர்’ செய்ய வேண்டியதும்.
தலித் எழுத்தை தலித்தாகப் பிறந்தவர்தான் எழுத வேண்டுமா? தலித் அல்லாத பிறர் எழுத முடியாதா என்ற கேள்வியைக்கேட்டு, அதற்குப் பதிலளிக்கின்ற வகையில் நீண்டதொரு விளக்கத்தைப் பஞ்சு தருகிறார். இங்குதான் ‘தலித் ஆதரவாளர்’ என்ற பதம் கட்டுரை ஆசிரியரின் உபயோகத்திற்கு வருகிறது.
“படைப்புத் தளத்தில் தலித் ஆதரவாளர்கள், தலித்தியத்திற்கு சார்பாக நின்று கவிதையோ, கதையோ, நாவலோ எழுதலாம். ஆனால் அந்த எழுத்துக்கள் « தலித் ஆதரவாளர்களின் எழுத்துக்கள் அல்லது படைப்புகள »” என்ற தனித் தலைப்பின் கீழ் பகுக்கப்பட்டு தலித் இலக்கியத்திற்குப் பக்கபலமாக நின்றுதான் வினை புரிய முடியுமே ஒழிய தலித் இலக்கியமாகக் கருதிவிட முடியாது.” எனக்கூறும் பேராசிரியர், ” இலக்கியத்திற்கு உயிர் நாடியாக விளங்குவது ‘நம்பகத் தன்மை’ இந்த ந்ம்பகத் தன்மையை தலித்தாகப்பிறந்து, வாழ்ந்து வளர்ந்த ஓர் உயிரிதான் சரியாகக் கட்டமைக்க முடியும்” எனக்கூறி தலித் இலக்கியத்தை யார் எழுதவேண்டுமென்ற விவாதத்திற்கு முற்றுபுள்ளி வைக்கிறார்.
இந்த இடத்தில் எனக்கு அமெரிக்க வரலாறு நினைவுக்கு வந்தது. 17ம் நூற்ராண்டில் அடிமைகளாக வட அமெரிக்காவிற்குக் கொண்டுவரப்பட்ட கறுப்பின மக்கள், ஆப்ரிக்க அமெரிக்கர்களாக அடையாளம் பெற்றபோதும், ஐரோப்பாவிலிருந்து வட அமெரிக்க மண்ணிற் குடியேறிய ஐரோப்பிய அமெரிக்கரோடு ஒப்பிடுகிறபோது வாழ்நிலை மெச்சத்தகுந்ததாக இல்லை. ஒரு மனித உயிரிக்குத் தரவேண்டிய அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு பலகாலம் துன்பத்தில் உழன்று, விரக்தியின் உச்சத்தில் புரட்சியில் குதித்தனர். அமெரிக்க வெள்ளை இனத்தவருக்குத் தாங்கள் எந்தவிதத்திலும் குறைந்தவரில்லை என்பதை நிரூபித்தாகவேண்டும் என்ற சூழலில் அவர்கள் கையிலெடுத்த ஆயுதம் இசை, தங்கள் உள்ளக் குமுறலைப் பறையடித்து தெரிவிக்க விரும்பியர்களைப்போல Drums அவர்களுக்குப் பயன்பட்டிருக்கிறது. ( ஆய்வு மாணவர்கள் கவனத்திகொள்ளவேண்டிய பொருள்) கையில் கிடைத்தவற்றையெல்லாம் (கரண்டி, தட்டு, எதையும் விடுவதில்லை) தட்டி ஓசையை எழுப்ப ஆரம்பித்து அதன் தொடர்ச்சியாக பின்னாளில் ஜாஸ் இசை, இலக்கியம் எனத்தொட்டு அவர்களின் எதிர்ப்புக்குரலைப் பதிவு செய்தனர்:
“The black folks make the cotton
And the white folks get the money.”
என்றெல்லாம் எழுதி, தங்கள் ஆறாத் துயரை வெளிப்படுத்துகிறார்கள். இவர்களின் எஜமானர்களாக இருந்து இவர்களை துன்புறுத்தி வேலைவாங்கிய வெள்ளை துரைமார்களில் ஒன்றிரண்டு நல்ல துரைமார்களும் இருக்கவே செய்தனர். ஆனால் அவர்களால் இவர்களின் வலியை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த முடியுமா? அதை பாதிக்கப்பட்ட கருப்பரின மக்களின் குரலாகக் எடுத்துக்கொள்ள முடியுமா? இசைக்கும் இலக்கியத்திற்கும் நேர்மையாக நடந்துகொண்டதாகப் பொருள்படுமா?ஆக, நண்பர் க. பஞ்சு கூறுவதுபோல தலித் இலக்கியத்தையும் ஒரு தலித் படைப்பதுதான் முறை, நியாயம். பேராசிரியர் கூறுகிற நம்பகத் தன்மைக்கும், இலக்கிய நேர்மைக்கும், அவை மட்டுமே உதவும்.
அ. வாசகர்கள்
தலித் ஆதரவாளர்கள் செய்யவேண்டியது தலித் இலக்கியத்திற்கு பக்கபலமாக நிற்பது. க.பஞ்சு தரும் யோசனை. வாசகர்களாக இருந்து, அப்படைப்புகளுக்கு முன்னுரிமைதருவது: “வாசகர் என்ற தளத்தில் தலித் ஆதரவாளர்கள் தலித் கலை, இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பினை தலித் எழுத்துக்களை விலைக்கு வாங்கி விற்பனைக்குப் பக்க பலமாக நிற்க முடியும்” என்கிறார்.
ஆ. திறனாய்வாளர்கள்
“தலித் இலக்கியத்தினை ஒரு தலித்தாகப் பிறந்தவர்தான் படைக்கவேண்டும் என்கிற கருத்தாக்கத்தைக் கட்டமைத்ததுபோல தலித் இலக்கியத்தை மற்றொரு தலித்தே திறனாய்வு செய்யவேண்டும் என்கிற கருத்தாக்கம் உருவாகவில்லை” – என க. பஞ்சு வருத்தப்படுவதில் முழுவதாக உடன்பாடில்லை. தலித் இலக்கியங்கள் ‘தலித்’ அடையாளம் என்கிற சிறப்பு அடையாளத்தைக் கொண்டிருந்தாதுலும், அவை தமிழ் இலக்கியத்தின் கிளைப் பிரிவை சேர்ந்தது. மாராத்திய தலித் இலக்கியமும், தமிழ்த் தலித் இலக்கியமும் வேறுபட்ட மொழியையும், வேறுபட்ட உரையாடலையும் நடத்த வாய்ப்பிருக்கிறது இதனையெல்லாம் உள்வாங்கிக்கொள்கிற திறனாய்வாளர் பொது நிலத்திலிருந்துதான் வரவேண்டும். தலித் திறனாய்வாளர் தலித் சார்பு நிலை எடுக்கும் ஆபத்துமுள்ளது. தலித் இலக்கியத்தின் குரல், தலித் மக்களுடைய குரலென்றாலும், தலித் அல்லாத பிறரிடத்திலும் போய்ச்சேரவேண்டும், அவர்கள் வலிகளை தலித் அல்லாத பிறர் உணர்வதுதான் அதன் உள்நோக்கமாக இருக்க முடியும். இந்நிலையில் அவ்வலியை பகிர்ந்துகொள்ள முடிந்த, இலக்கியம் அறிந்த, வாசிப்புத் திறன்கொண்ட நடுநிலை திறனாய்வாளர்கள் திறனாய்வு செய்வதில் எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாதென நினைக்கிறேன். முனைவர் க.பஞ்சுவே நல்ல உதராணம்.
இ. இதழ்கள் பதிப்பகங்கள்
இங்கே தமி¢ழ் ஊடகங்கள், சிற்றிதழ்கள் தலித் இலக்கியத்திற்குச் செய்துவரும் பங்களிப்புகளும், இவற்றைத் தவிர தலித் படைப்பாளிகளால் நடத்தப்படும் இதழ்கள் அளித்துவரும் பிரத்தியேகப் பங்களிப்புகளும் நினைவுகூரப்படுகின்றன. தலித் இலக்கியத்திற்கு ஆதரவாக இருந்துவரும் பதிப்பகங்களைப் பட்டியலிடும் க.பஞ்சு அவற்றை சந்தேகிக்கவும் செய்கிறார். “தலித் அரசியலும் தலித் இலக்கிய சொல்லாடலும் முதலிடத்தை நோக்கி நகர்கிற ஒரு காலகட்டத்தில், அவைகளை நுகர்வுபண்டமாக மாற்றிச் சந்தைச் சரக்காக விற்க முயல்கிற பதிப்பகத்தாரையும் வெகுஜன ஊடகத்தையும் தனியே அடையாளம் கானவேண்டும் என்றும் சொல்லத் தோன்றுகிறது” என்கிற பஞ்சுவின் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் தலித் இலக்கியத்தின்மீது பதிப்பகங்கள் காட்டும் அக்கறைக்குக் காரணம் எதுவாயினும், அவர்கள் தரும் ஒத்துழப்பு தலித் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
2. தலித் இலக்கியமும் தலித் ஆதரவாளர்களும்
க.பஞ்சுவின் இக்கட்டுரை தலித் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் என்னென்ன சிக்கல்களைப் எதிர்கொள்கிறார்கள் என்பது பற்றி பேசுகிறது.

அ. ‘பிராமணர் அல்லாதவர்களும்’ – ‘தலித் அல்லாதவர்களும்’
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறியவந்த ‘பிராமணர் அல்லாதவர்கள்’, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறியவந்த தலித் அல்லாவதர்கள்’ ஆகிய இரண்டு சொற்களையும் கொண்டு சில உண்மைகளை விளக்குகிறார்.’ « பிராமணர் அல்லாதவர்’ என்று கட்டும்போது அல்லாதார் நடுவில் பிராமணர்களுக்கு ஆதரவாளர்களாகச் சிலரும் உருவாயினர் என்பதைப்போல, ‘தலித் அல்லாதவர்’ என்ற மனப்பான்மை உயர்சாதியினர் நடுவில உருவாகும்போது ‘தலித் ஆதர்வாளர்கள்’ எனச் சிலரும் உருவாலியுள்ளனர். ஆனால் ‘பிராமணர் ஆதரவாளர்களாக’ இயங்குவதும் ‘தலித் ஆதரவாளர்களாக’ இயங்குவதும் ஒன்றல்ல என்பதை யாரும் எளிதாக புரிந்துகொள்ள முடியும் »” – என்கிற பேராசிரியரின் கூற்று முழுக்க முழுக்க உண்மை . இதனை அடிப்படையாகக்கொண்டு தலித் ஆதர்வாளர்கள் எதிர்கொள்கிற பிரச்சினைகளை வரிசைப்படுத்துகிறார்.
ஆ. தலித் ஆதரவாளர்கள் புறக்கனிக்கப்படுகின்றனர்
“பிராமண ஆதரவாளராக இயங்கும்போது சமூக அந்தஸ்தும் உயர்வும் கூடுவதற்குத் தமிழ்ச் சமூகத்தில் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது; ஆனால் தலித் ஆதரவாளராக இயங்கும்போது தலித்துகளுக்கு ஏற்படுவதுபோலவே தாழ்வும் புறக்கனிப்பும் இழிவும் வந்து சேர்கின்றன” – என்கிறார்
பிராமண ஆதரவாளர்கள் ஒரு படிமேலே போய் பிராமணர்களே வியக்கும்வகையில் தங்களைப் பிராமணர்களாக கற்பிதம் செய்துகொண்டு வலம் வந்ததும் இங்கு நடந்துள்ளது. அதற்கு மாறாக தலித் ஆதராவாளர்கள், தாங்கள் தலித் அல்லவென்று அவ்வப்போது சமூகத்திற்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்கள். பேராசிரியர் கூறுவதைப்போல தலித்துகளுக்கு ஏற்படும் தாழ்வும் புறக்கணிப்பும் தமக்கு நேர்ந்துவிடக்கூடாதென்கிற எச்சரிக்கை அதற்குக் காரணமாக இருக்கலாம்.
இ. தலித் ஆதராவளர்களிடத்தில் தலித் மக்கள் கொள்கிற சந்தேகம்.
‘தலித் ஆதரவாளர்கள்’ தங்களை முன் நிறுத்திக்கொள்ளாமல் தங்களைத் தாங்களே கண்கானித்துகொள்ளவேண்டியதிருக்கிறது, காரணம் தலித் ஆதரவாளர்களிடத்தில் தலித் மக்கள் முழுமையாக நம்பிக்கை கொள்வதில்லை. குறிப்பாக இலக்கிய தளத்தில் இத்தகைய சந்தேகப் பார்வைகள் தீவிரமாக வெளிப்படுகின்றன. இலக்கிய தளத்தில் இயல்பாகவே விளங்குகின்ற போட்டி, பொறாமை, தன்னை நிலைப்படுத்த முயலும் தந்திரம் எல்லாம் சேர்ந்து தலித் ஆதரவாளர்களாக இருப்பது பன்மடங்கு சிக்கலுக்குரியதாக இருக்கிறது . இந்த நிலையில் “மேல் சாதி மேட்டிமைப்பார்வை உனக்குள்ளும் இறைந்து கிடக்கிறது” என்ற குற்ற சாட்டிற்கு உள்ளாவோம் என்ற நிலைக்கு தலித் ஆதரவாளர்கள் தள்ளப்படுகின்றனர்.” என்கிற பேராசியரின் கூற்றும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.
தலித்துகள் நம்மை ஏன் சந்தேகிக்கிறார்கள்?” எனத் தலித் ஆதரவாளர்கள் யோசிக்க வேண்டும்; “நம்மை ஆதரிக்கிறவர்களை ஏன் சதேகிக்கிறோம்?” என்ற கேள்வியைத் தலித்துகளும் தம்மிடம் கேட்டுக்கொள்ளவேண்டும்

.
தலித் ஆதராவளர் ஒரு சிலரின் திருதராட்டிர தழுவலை, தலித்துகள் புரிந்துகொண்டிருப்பது அவற்றில் ஒன்று. சூடுபட்ட பூனைகள் எல்லா பாலையும் சந்தேகிக்கவே செய்யும் என்பதுமனித இயல்பு. தவிர மனிதர் பண்பில் ‘ஆதரவாளர்’, ‘பாசக்காரர்’, ‘உடன் பிறவா’ சொற்களெல்லாம் பயணாளிக்கு இலாபத்தைத் தருமென்றால் கொண்டாடப்படுவதும், நட்டத்தைத் தருமென்றால் தூக்கி எறியப்படுவதும் இயற்கை. நம்வீட்டுக் குழந்தையைக் தூக்கலாம், கொஞ்சலாம், பரிசுகள் அளிக்கலாம். தவறிழைக்கிறபோது தண்டிக்கவும் செய்யலாம். ஆனால் அடுத்தவீட்டுக் குழந்தையென்றால் தூக்கவும் கொஞ்சவும் பரிசளிக்கவும் மட்டுமே உரிமையுண்டு. பத்து நாள் கொஞ்சியிருக்கின்றேனே, ஒரு நாள் கண்டித்தால் என்ன தப்பு என்று நினைத்தோமென்றால் முடிந்தது. இனி எங்கள் வீட்டிற்கு வராதே எங்கள் குழந்தையைத் தூக்காதே என்கிற கண்டிப்புக் குரலைக் கேட்க வாய்ப்புண்டு. தலித் படைப்பாளிகளும் தங்களுடைய எழுத்தைப் பாராட்டுகிற தலித் அல்லாதாரை வாழ்த்துவதும், அதே தலித் அல்லாதார் எதிர்மறையான கருத்துகளை வைக்கிறபொழுது அவர் நேர்மையைச் சந்தேகிக்கவும் செய்வதென்பது இயல்பு.
ஈ. தலித் ஆதரவாளரின் இருப்பு
« தலித் இலக்கியத்தைத் தலித்துதான் படைக்க முடியும் என்ற நிலையில் தலித் ஆதரவாளர் எழுத்தும் தலித் எழுத்தாக முடியாத நிலையில், அவருடைய இருப்பே வினாக்குறியாகிவிடுகிறது. இன்னிலையில் தலித் இலக்கியம் குறித்தே பேசிக்கொண்டிருந்தால், தன் எழுத்துக்குறித்து பேசுவதற்கான சூழலைஎப்படிக் கட்டமைப்பது » என்ற நெருக்கடி அவருக்கு ஏற்படுகின்றது. எனவே « சிந்தனைத் தளத்திலும் அரசியல் தளத்திலும் தலித் ஆதரவாளராக வெளிப்படுகிற படைப்பாளிகளில் சிலர், இலக்கிய தளத்தில் தலித் இலக்கியம் குறித்துப் பேசுவதைத் தவிர்க்கின்றனர் » எனப் முனைவர் க.பஞ்சு கூறுவதிலும் பொருளுண்டு. தலித் எழுத்தாளர்களே தங்கள் இருப்பை நிலைநாட்டிக்கொள்ள மந்திர தந்திர பிரயத்தனங்களில் பெரும் பொழுதைக் கழித்துக் கவனமாக இருக்கிறபோது, ஊருக்கு உழைத்து என்ன பலன் கண்டோம் என்ற கேள்வி ஆதராவாளருக்குத் தோன்ற தவறினாலும், அவர் நலனின் அக்கறைகொண்ட நான்குபேர் நினைவூட்டவே செய்வார்கள். « தலித் இலக்கியம் தோன்றிய அளவிற்குத் தலித் இலக்கியம் குறித்த எழுத்துகள் பெரிதும் தோன்றவில்லை » என்கிற க.பஞ்சுவின் ஆதங்கத்தை துறைசார்ந்த மக்கள் புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்.

உ. தலித் இலக்கியங்கள் இரக்கத்தை எதிர்பார்க்கின்றனவா?
“பொதுவாக எல்லா இலக்கியத்திற்குள்ளும் உள்ளோடும் ரத்தத் துடிப்பாக நின்று இயங்கிக்கொண்டிருப்பது “இரக்க உணர்வை- கருணை மனோபாவத்தை” உற்பத்தி செய்கிற முயற்சிதான், தலித் இலக்கியத்திற்கும் இந்த இரக்க உணர்வை உற்பத்தி செய்வதுதான் அடிப்படையாக அமைந்துள்ளது; தலித் கவிதைகளிலாவது ஒரு வகையான முழக்கமிக்க அர்சியல் கவிதைகளைக் கானமுடிகிறது. புனைகதைகளில் இந்த இரக்க உணர்வு உற்பத்திதான் பிரதானமான ஒன்றாகச் செயல்படுகிறது. அதனாலேயே கூடத் தலித் புனைகதைகள் பலவும் எல்லா மொழியிலும் சுயசரிதை இலக்கியமாகவே வெளிப்பட்டு பலருக்கும் வாசிப்புப் பொருளாக விளங்குகின்றன, எனக் கருத வாய்ப்பிருக்கிறது” – என்ற பஞ்சுவின் கருத்திற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. “தலித் இயக்கமும், தலித் இலக்கியமும் பாரதம் தழுவியதாக உலகம் தழுவியதாக பரந்து விரிந்த தளத்திற்கு நகர்ந்திருக்கின்றன” என்கிற பஞ்சாங்கத்தின் கூற்றை ஏற்றுக்கொண்டாலும், பஞ்சு தெரிவிக்கிற உலகத்தில் ( நமக்கு உலகம் எனப்படுவது இன்றுவரை மேற்குலகும், வட அமெரிக்காவுமாக இருப்பதன் அடிப்படையில்) தலித்துகளின் குரலாக ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக பார்க்கப்படுகிறதே அன்றி இலக்கியமாக பார்க்கப்படுவதில்லை, என்பதையும் நாம் கவனத்திற்கொள்ளவேண்டும். ஒரு எமே செசேரோ (Aimé Césaire,) லெயோ போல்ட் செதார் சங்கோர்( Léopold Sédar Senghor) ஈடான கவிஞர்களைத் தலித் இலக்கியம் தரவில்லை அல்லது அவ்வாறான கவிஞர்கள் இருந்தும் அவர்களை முன் நிறுத்த தமிழ்ச்சூழல் மட்டுமல்ல இந்தியாவேகூட தவறிவிட்டதோ என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.
தொடர்ந்து க.பஞ்சு வெகுசனப்பரப்பில் தலித் இலக்கிய வாசகர்கள் குறைவு என்றும், கல்லூரிகளிலும் தலித் படைப்புகளிடத்தில் தலித் அல்லாத மாணவர்கள் காட்டும் அக்கறை குறைவென்றும் வருத்தப்படுகிறார். தொடர்ந்து தலித் அல்லாத பேராசியர்களிடத்திலே கூட இத்தகைய மனநிலை இருக்கிறதென்று அவர் குமுறுவது கவலை அளிக்கிற ஒன்றுதான். அதுபோலவே இடது சாரி இயங்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள், பெண்ணிய அமைப்புகள் ஆகியவை தலித் இயக்கத்தையும் தலித் இலக்கியத்தையும் தங்கள் செயல்திட்டத்தில் ஒருபகுதியாகப் பார்ப்பதும் பேரசிரியரைச் சங்கடப்படுத்துகிறது.

3. இன்றைய இலக்கியம் என்பது தலித் இலக்கியமே!
புதுச்சேரி மாநிலத்தைச்சேர்ந்த காரக்காலில் பேரசிரியர் நிகழ்த்திய சொற்பொழிவின் கட்டுரை வடிவம் இப்பகுதி. தொன்றுதொட்டு தமிழர் சமூகத்தில் தலித் மக்களின் நிலமை என்ன? சமயசீர்திருத்தவாதிகள் தலித்துகளை ஆதரித்ததில் உள் நோக்கம் இருக்க முடியுமா? ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் தலித் மக்களின் வாழ்க்கையில் ஏதேனும் மாற்றங்களைக் கொண்டுவந்ததா? கடந்த காலத்தில் தலித மக்களின் முன்னேற்றத்திற்கென உழைத்த தலித்தின தலைவர்கள் யார் யார்? அவர்களின் எழுச்சி இடையில் தொய்வு அடைய எதுகாரணம் ? என்றெல்லாம் பேசிவிட்டு இன்றைய தலித் இலக்கியம் குறித்து ஓர் விரிவான விளக்கத்தைத் தருகிறார். கவிஞர்கள், புனைகதை ஆசிரியர்கள், திறனாய்வாளார்கலென தலித் படைப்பிலக்கியவாதிகளின் பட்டியலையும்; தலித் மக்களைப் பொருளாகக்கொண்டு எழுதுகிற தலித் அல்லாத எழுத்தாளர்களைப் பற்றிய பட்டியலையும் க.பஞ்சு தருகிறார். இன்றைய தலித் எழுத்துக்களில் காணப்படும் பண்புகளென்று சிலவற்றைக் குறிப்பிடவும் அவர் தவறுவதில்லை: அ. “புனித உடைப்புக்களை, அதன் மூலம் வெளிப்படும் ‘அதிர்ச்சிகளை’ உற்பத்தி செய்வதைத் தனது எழுத்துப்பாணியாக கொள்ள முயலுகிறது”. ஆ. தலித் மக்களின் வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை, பண்பாட்டு அடையாளங்களைத் தங்கள் எழுத்தில் பதிவு செய்வதன் மூலம் மனித நாகரீக வளர்ச்சிக்குத் தாங்கள் ஆற்றியிருக்கும் பங்களிப்பினை உரத்து கூவுதல். இ. தலித்து இலக்கியம் உயிரோட்டமுள்ள பேச்சுமொழியை அதனுடைய எல்லாவிதமான கூறுகளோடும் பயன்படுத்த முயலுகிறது. ஆகியவை அவை.
எனினும் « கொடியன் குளம் நிகழ்வு, பொருநையாற்றில் அடித்து தூக்கி எறியப்பட்ட நிகழ்வு, இவையும் பல சாதிக் கலவரங்களும் கள ஆய்வு செய்யப்பட்டுக் கட்டுரைகளாக , தகவல் படங்களாக வெளிவருகின்றன. ஆனால் ஒரு கவிதையாக, ஒரு நாவலாக, ஒரு சிறுகதையாக ஏன் எழுதப்படவில்லை? » என்ற பேராசிரியரின் கேள்விக்கு சம்பந்தப்பட்டவர்கள்தான் பதில் காணவேண்டும்.

இறுதியாக நண்பர் பஞ்சுவின் கட்டுரையை முன்வைத்து:

அ. ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள்
முதலாவதாக இன்றையத் தமிழ் சமூகத்தில் பெருவாரியான மக்கள் தலித் ஆதரவாளர்களாக இல்லாமலிருக்கலாம், ஆனால் தலித்தியத்திற்கு உண்மையில் -சுயத்தில் – எதிரானவர்களும் அல்ல. தினசரிவாழ்க்கையே போராட்டமாக இருக்கிறபோது, அவர்களுக்கு இதுபோன்ற அரசியல் வீணற்றவேலை. ஆனால் தன் இருத்தலை சமூகத்தில் முன் நிறுத்துகிறபோது, அச்சமூகத்தின் தராசு தன்னை எப்படி எடைபோடுமென்கிற கேள்வி எழுகிறது. இதில் படித்தவர்களேகூட ‘பரம்பரைபரம்பரையாக’, ‘தொன்றுதொட்டு’, ‘முன்னோர்கள்’ ஏற்படுத்திய அறமென்று சாதி அரசியலை நம்புவதோடு, தங்களைச் சுற்றியுள்ள நாலுபேர் என்ற இருட்டைக் கண்டு அஞ்சுகிற இந்திய சமூகத்தில், பாமரர்களைப்பற்றி சொல்லத் தேவையில்லை. இந்த நாலுபேர் பற்றிய அச்சம் தலித் அல்லாத மக்களிடம் மட்டுமில்லை, தலித்துகளிடமும் இருக்கிறது. இக் கற்பிதம் செய்யப்பட்ட அச்சத்தை தங்களுக்குச் சாதகமாகத் திசைதிருப்பி, அதன் பலனை அறுவடை செய்ய, பலவீனமானவர்களைத் தேர்வு செய்து அவர்களை மீட்கவந்த இரட்சகர்களாக சிலர் தங்களை முன் நிறுத்துகிறபோது, ‘நாலுபேர் இருட்டை’க்கண்டு அஞ்சும் மனோபாவம் உடைய மனிதர்கள் வழித்துணைக்கு ஆள் கிடைத்தால் வேண்டாமென்றா சொல்வார்கள். தலித்தியத்திற்கு எதிராகக் களத்தில் இறங்குவது இப்படித்தான் தொடங்குகிறது. இன்று தலித்தியத்திற்கு அதிகம் எதிரிகளாக இருக்கிறவர்கள் ‘பிராமணர் அல்லாதவர்கள்தான்’, பிராமணர் அல்லாத பிற சாதியினர்தான் அதாவது கிராமங்களைப் பொறுத்தவரை அல்லது முகங்கள் அதிகம் தெரிந்தவையாக உள்ள இடங்களில்.
அவ்வாறே தலித் மக்கள் ஆதரவாளர்களெனக் கூறிக்கொண்டு அடிமடியில் கை வைக்கிற ‘அனுகூல சத்ரு’க்கள் பற்றிய எச்சரிக்கையாகவும் க.பஞ்சுவின் கட்டுரைகளை எடுத்துக்கொள்ளலாம். அரசியல் கட்சிகளில், தலித்திய ஆதரவில் இடதுசாரிகளின் நேர்மையை எவ்வாறு சந்தேகிக்க முடியாதோ அவ்வாறே இலக்கியவாதிகளில் க.பஞ்சு அ.மார்க்ஸ் போன்றவர்களைச் சந்தேகிக்கமுடியாமலிருக்கலாம், ஆனால் தலித் ஆதரவாளரென நேசக்கரம் நீட்டுகிற எல்லா கைகளும் சூதற்றவை அல்ல.
ஆ. தலித் தலைவர்களும் தலித் எழுத்தாளர்களும்
க.பஞ்சுவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் பல தலித் அறிவுஜீவிகளைப் பட்டியலிட்டு, பின்னாளில் அதுபோன்ற முயற்சிகள் தொய்வடைந்துபோனதற்கு என்ன காரணமென ஓரிடத்தில் கேட்டிருக்கிறார். அதுபோலவே காரைக்காலில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் தலித்மக்கள் சாதிக்கட்சிக் காண்பதில் தவறில்லை என்ற கருத்தையும் வைத்திருக்கிறார். கட்சி அரசியலில் நியாயங்கள் இருப்பதாகவே வைத்துக்கொண்டாலும், அது தலைவர்களை அடையாளப்படுத்த மட்டுமே உதவியிருக்கிறது. சமூகத்திற்கு அவர்கள் சாதித்ததென்ன என்ற கேள்வி எழுகிறது. தலிதியசாதிக் கட்சிக்குள்ள நியாயத்தை தலித் அல்லாத அறிவு ஜீவிகள் புரிந்துகொள்ளலாம், ஆனால் படிக்காத பிற சாதியிலுள்ள பாமரமக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் அதன் விளைவுகள் என்ன? என்பது பற்றியெல்லாம் யோசிக்கவேண்டும். பஞ்சுவைப்போன்ற நடுநிலை மனிதர்கள்தான் இது குறித்தும் ஆழமாக விவாதிக்கவேண்டும்.தலித் மக்களின் விடுதலைக்கு, கட்சி அரசியலைக்காட்டிலும் சமூக அரசியல்தான் நம்பகமானது. அரசியல் கட்சிவைத்து திராவிடக் கட்சிகள சாதித்ததைகாட்டிலும்(?) பெரியார் என்ற தனிமனிதர் சமூகத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்வு அதிகம். அயோத்திதாசர் போன்றவர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை, நிரப்ப தலித் அறிவு ஜீவிகளில் எவரும் முன்வராதது இங்க்கு பெருங்குறை, அவ்வாறு வந்திருந்தால் இன்று தலித்துகள் கூடுதலாகப் பலனடைந்திருப்பார்கள்.
தலித் கட்சித் தலைவர்க்கு ஏற்படும் நெருக்கடி தலித் எழுத்தாளர்களுக்கும் இருக்கிறது. தலித் அல்லாத வசிஷ்ட்டர்களின் ஆசீர்வாதத்திற்கு அவர்கள் காத்திருப்பது ஒரு பக்கமெனில் ; தலித் அல்லாதவர்களின் இதழ்களால், தலித் அல்லாத பிற ஜாம்பவான்களால் அரவணைக்கப்படாதத் தலித் எழுத்துகள், அடையாளம் பெறாமற்போகிற ஆபத்தும் இங்கிருக்கிறது. மேற்குலகில் கறுப்பரினத்தைச் சேர்ந்த தீவிர இலக்கிய வாதிகள் Négritude’ என்ற சொல்லாடல் கொண்டு நிகழ்த்திய ‘இலக்கிய அரசியலை’ தலித் இலக்கியவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்; அதன் வீச்சும் வேகமும் தலித் இலக்கியத்துடன் கலக்கவேண்டும்; தலித் எழுத்தென்பது ஒடுக்கப்பட்டவர்களின் பரிதாபக் குரலாக இல்லாமல், கலகக் குரலாய் ஒலிக்கவேண்டும். பேராசிரியர் க.பஞ்சு போன்றவர்களின் கனவை நானவாக்குவதற்கு அதொன்றுதான் வழி.

——————————————————————
1. நவீன இலக்கியக் கோட்பாடுகள் (காவ்யா வெளியீடு) கட்டுரைத் தொகுப்பிலிருந்து
2. N’est pas de sauveurs suprêmes
Ni Dieu, ni César, ni tribun ;
Producteurs, sauvons-nous nous-mêmes !

——————————————-