Monthly Archives: ஓகஸ்ட் 2022

பிரியாவிடை

                  பிரியாவிடை (Adieu)

( கதை பிரெஞ்சில் பிரசுரமான ஆண்டு 18 மார்ச் 1884)

  • கி மாப்பசான்
  • தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

நண்பர்கள் இருவரும் இரவு உணவை முடித்துக் கொண்டிருந்தனர். உணவகச் சன்னலில் இருந்து  பார்க்க வெளியே பெருஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக மனிதர்கள். கோடை இரவுகளில் பாரீசில் வீசும் இதமான காற்று உடலைத் தொட்டது. பாதசாரிகள் தலைகளை உயர்த்தி நடப்பதற்குரிய காரணம் விளங்க, உணவகத்திலிருந்து வெளியேறவேண்டும் என்கிற உந்துதல். அங்கே செல்லவேண்டும், காற்றுதரும் கனவுகளில் ஏதேதோ வருகின்றன : தழையத் தழைய இலைகளுடன் நிற்கும் மரங்கள்,  நிலவொளியில் ஜொலிக்கிற நதிகள், மின்மினிப் பூச்சிகள், வானம்பாடிகள், இவற்றிறில் எதைத் தேர்ந்தெடுப்பது, எங்கே செல்வது என்பதில் நண்பர்கள் இருவருக்கும் குழப்பம்.  

அவர்களில் ஒருவரான ஹாரி சிமோன் ஆழ்ந்த பெருமூச்சுடன் கூறினார்:

–  ம்,  எனக்கு வயதாகிவிட்டது, தற்போது அதுபற்றிய கவலைதான். முன்பெல்லாம், இதுபோன்ற மாலைவேளைகளில்,  துர்த்தேவதை இறங்கினதுபோல எனதுடல் இருக்கும். தற்போது மனதில் விசனத்தைத் தவிர வேறொன்றுமில்லை. வாழ்க்கை வேகமாக ஓடுகிறது.

மனிதருக்குக் கனத்த உடல், நாற்பத்தைந்து வயது இருக்கலாம், தவிர வழுக்கையும் அதிகம்.

மற்றவர், பியர் கர்னியெ, கொஞ்சம் கூடுதலான வயது, நன்கு மெலிந்திருந்தார், அதேவேளை உற்சாகமான ஆசாமி.  நண்பர் சொல்லி முடிக்கட்டுமெனக் காத்திருந்தவர்போல இவர் தொடர்ந்தார்:

” அன்பிற்குரிய சினேகிதரே, எனக்கும் வயதாகிவிட்டது,  அதைச் சிறிதும் உணராமலேயே நானும் இருந்திருக்கிறேன்.  மகிழ்ச்சி, திடகாத்திரமான உடல், சுறுசுறுப்பென்று பலவும் என்னிடம் இருந்தன. இருந்தும் கண்ணாடிமுன் நிற்கிற ஒவ்வொரு நாளும்    ​​வயது தனது கடமையை நிறைவேற்றுவது கண்களுக்குப் புலப்படுவதில்லை, காரணம்  அப்பணியை மெதுவாகவும், அதற்கான நியதிகளின் அடிப்படையிலும் நிறைவேற்றுகிறது. மாற்றங்களை உணரமுடியாத வகையில் மெல்ல மெல்ல நம் முகத்தை அது திருத்தி எழுதுகிறது.

இந்த ஒரு காரணத்திற்காகவே வயதின் இரண்டு அல்லது மூன்றாண்டுகால கபளீகரத்திற்குப் பிறகு  நாம் அதிகம் மனம் உடைந்துபோவதில்லை. அதேவேளை  இம்மாற்றங்களை நாம் கொண்டாடவும் இயலாது. குறைந்தது ஆறு மாதங்கள் கண்ணாடி முன் நின்று முகத்தைப் பார்க்காமலிருக்க நமக்குப் பொறுமை வேண்டும், அப்போதுதான்  இப்பிரச்சினையின் உண்மை தெரியவரும்.  அன்று,  தலையில் இடி விழுந்திருக்கும்!

சரி பெண்கள் நிலமை என்ன, அருமை நண்பா!, அதை  எப்படிச்சொல்ல?, மிகவும் பரிதாபத்திற்குரிய ஜீவன்கள் அவர்கள்! அவர்களுடைய  ஒட்டுமொத்த மகிழ்ச்சியும்,  பலமும், உயிர்வாழ்க்கையும் எதில் அடங்கியுள்ளது  தெரியுமா? சுமார் பத்துவருடகாலம் மட்டுமே நிலைத்திருக்கிற அவர்களுடைய அழகில்.

என் விஷயத்திற்கு வருகிறேன்,  நானும், எப்படியென்று சந்தேகிக்காமலேயே முதுமையை அடைந்துவிட்டேன், இன்னமும் நானொரு பதின் வயது இளைஞன் என்று எண்ணிக்கொண்டிருக்க, ஐம்பதுவயதை நெருங்கியிருந்தேன். குறைபாடுகள் ஏதுமின்றி வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் சென்றது. முதுமையின் வருகை கவனத்தைபெற்றதில்லை, இருந்தபோதிலும் அது கொடுமையானது, உண்மையைப் புரிந்துகொண்டபோது கிட்டத்தட்ட ஆறுமாதங்கள்  அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் கிடந்து, பிறகு அதன் வழியில் செல்வதென முடிவெடுத்தேன்.

எல்லா ஆண்களையும் போலவே நானும் அடிக்கடி காதல் வயப்பட்டிருக்கிறேன், அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்று உண்டு.

சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யுத்தம் முடிந்து சிறிதுகாலமிருக்கும், ஏத்ருத்தா(Etretat) கடலோரம்   அவளைச் சந்தித்தேன்.  காலைவேளையிலும், கடல் நீராடுகிறபோதும் அக்கடற்கரையின் அழகே தனி. குதிரை இலாடம்போல வளைந்து, செங்குத்தான வெண்ணிற பாறைகளால் சூழ்ந்திருக்கும். ஆங்காங்கே புதுமையான வகையில் வெடிப்பில் உருவான சிறு சிறு பிளவுகள். அவற்றுக்குக் ‘கதவுகள்’  என்று பெயடரிட்டிருக்கிறார்கள்.  செங்குத்தான பாறைகளில் ஒன்று மிகப்பெரியது, கடல் நீருக்குள், ஒரு பக்கம் தன்னுடைய பிரம்மாண்டமான காலை நீட்டிக் கிடத்தியதுபோலவும்,எதிர்பக்கம் மற்றொரு காலை, குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பது போலவும் தோற்றம் தரும் ; கடற்கரையெங்கும் பெண்கள் திரண்டிருப்பார்கள், சிறு நாக்குகள்போல பரவிக்கிடக்கும் கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையில், பாறைகளுக்கிடையில் பெண்கள் குவிந்திருக்கும் காட்சி ஜொலிக்கும் வெள்ளாடைகளால் ஆன தோட்டமோ எனும் வியப்பைத் தரும். போதாதற்கு கடற்கரையும், பச்சை நீல வண்ணங்கள் கலவையிலான   கடல் நீரும், நிழலுக்கென விரித்திருந்த விதவிதமான குடைகளில் முழுவீரியத்துடன் காய்கிற சூரியனும் கண்களுக்கு விருந்தென்பதோடு, அக்காட்சி பரவசத்தையும் புன்னகையையும் நமக்கு அளிப்பவை.  கடல் நீருக்கு எதிரே  அமரலாமென்று செல்கிறோம். நீராடும் பெண்களைப் பார்க்கிறோம்.  சிலர் நீரை நோக்கிச் செல்கிறார்கள், பெரிய அலைகளைத் தவிர்த்துவிட்டு சிற்றலைகளின் நுரை விளிம்பை நெருங்குகையில், தங்கள் உடலைச் சுற்றியிருந்த மெல்லிய பருத்தித் துவாலையை  ஒயிலாக அவிழ்த்து எறிகிறார்கள். நீருக்குள் அடியெடுத்துவைப்பதில் பதற்றம் தெரிகிறது, தவிர நீரின் குளிர்ச்சி தரும்  சுகமான சிலிர்ப்பும், கணநேர சுவாச நெருக்கடியும் சிற்சில சமயங்களில் அவர்கள் தயக்கத்திற்கு காரணமாகின்றன.

கடல் நீராடலின் இச்சோதனையில், வீழ்பவர்களே அதிகம்.  கெண்டைக்கால் தசைப்பகுதியிலிருந்து மார்புவரை அதனை அவதானித்து தீர்மானிக்க முடியும். என்னதான்  மென்மையான  சரீரங்களுக்கு கடல் நீர் ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்ப்பென்கிற போதும் நீராட விரும்பாமல் கரைக்குத் திரும்புவதென்பது ஒரு சிலரின் பலவீனத்தையே காட்டுகிறது.  அந்த இளம் பெண்ணைக் முதன்முறையாகப் பார்த்தகணத்திலேயே  மனதில் பரவசம், ஒருவித மயக்கம். கடல் நீரின் சோதனைக்கு அவள் தாக்குப் பிடித்தாள், உறுதியாக நின்றாள். தவிர சிலரின் தோற்றங்களுக்கென்று ஒருவித வசீகரம் உள்ளது, அது கணத்தில் நமக்குள் நுழைந்து, எங்கும் பரவி நிரம்பும். நாம் எந்தப்பெண்ணைக் காதலிக்கப் பிறந்தோமோ அவளே நமக்கு அறிமுகமாகிறாள் என்பதென் கருத்து. இவ் உணர்வு தோன்றிய மறுகணம் உடலில் ஒரு சிலிர்ப்பு.

என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். முதன் முறையாக பெண்ணொருத்தியின் பிடிமானத்தில்சிக்குண்டது அப்போதுதான். எனது இதயத்தை  சூறையாடியிருந்தாள் கபளீகரம் செய்திருந்தாள்.  இப்படி ஒரு பெண்ணின் ஆதிக்கத்திற்கு அடிபணியும் அனுபவம் என்னை பயமுறுத்தியது என்கிறபோதும் அது இனிமையானது. கிட்டத்தட்ட ஒரு வகையில் சித்திரவதை,  அதே நேரத்தில், நம்பமுடியாத வகையில் மகிழ்ச்சி. அவள் பார்வை, புன்னகை, காற்றில் எழுந்தடங்கும் அவள் புறங்கழுத்து தலைமயிர், முகத்தில் காண்கிற மெல்லிய கோடுகள், முகக்கூறின் எந்த ஒரு சிறிய மெலிதான  அசைவும் என்னை மகிழ்வித்தன, புரட்டிப்போட்டன, பைத்தியமாக்கின. அவளுடைய தனித்தன்மையும், முகபாவமும், சமிக்கையும், செயல்பாடுகளும் என்னை ஆட்கொண்டிருந்தன, ஏன் உடைகளும், அணிகலன்களுங்கூட  என்னை வசியம் செய்திருந்தன. மரத்தளவாடத்தின் மீது கிடந்த அவளுடைய முகத்திரையையும், ஒரு நாற்காலியில் வீசப்பட்டிருந்த அவள் கையுறைகளையும்கண்டு  என் மனம் சலனப்பட்டிருக்கிறது. அவளுடையை ஆடைகளைப்போல  உடுத்தவேண்டுமென  எந்தப் பெண்ணாவது முயற்சித்தால்  அவளுக்குத் தோல்வி நிச்சயம் என நான் நினைப்பேன்.  விதவிதமான தொப்பிகள் அவளிடமிருந்தன, அவற்றைப் பிறபெண்களிடம் கண்டதில்லை.

அவள் திருமணமானவள், கணவன் வார இறுதியில் மட்டும் வீட்டிற்கு வருவான், என்னைக்கண்டும் காணாமலிருந்தான். எனக்கு அம்மனிதனிடத்தில் பொறாமையில்லை, அதற்கான பதிலும் என்னிடத்தில் இல்லை. மிக் கேவலமான ஓரு பிறவி,  சிறிதளவும் பொருட்படுத்தவேண்டிய மனிதனே அல்ல. அப்படியொரு மனிதனை என் வாழ்நாளில் அதற்கு முன் சந்தித்த தில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அவளைத்தான் நான் எப்படி நேசித்தேன்! அவள்தான் எவ்வளவு அழகு, எத்தனை நேர்த்தி, இளமை! அதாவது அவளே இளமையும், வனப்பும், புத்துணர்ச்சியுமாக இருந்தாள். பெண்ணென்றாலே அழகானவள், மென்மையானவள், தனித்தவள், வசீகரமும் கருணையும் ஒரு சேர உருப்பெற்றவள் என்றுணர்த்தியதும் அவள்தான், முன்னெப்போதும் அப்படியொரு எண்ணம் உதித்ததில்லை. தவிர கன்னங்களின் வளைவிலும், உதட்டின் அசைவிலும்,  சிறிய காதுகளின் வட்டமான மடிப்புகளிலும், மூக்கெஎன்று நாம் அழைக்கும்  இந்த கவர்ச்சியற்ற உறுப்பின் வடிவத்திலும்  என்னை மயக்கும் அழகு இருக்கிறதென்று ஒருபோதும் நான்புரிந்து கொண்டதில்லை.

இது மூன்று மாதங்கள் நீடித்தது, பின்னர் நான் அமெரிக்காவிற்கு புறப்பட்டேன், என் இதயமோ விரக்தி காரணமாக  நொறுங்கிப்போனது. இருந்தபோதும், அவளைப்பற்றிய நினைவுகள் உறுதியாகவும், வெற்றிக்களிப்புடனும் என்னுள் இருந்தன, அருகில் இருக்கையில் என்னை தன் வசம் எப்படி வைத்திருந்தாளோ அதுபோலவே நான் வெகு தூரத்திலிருந்தபோதும் என்னை  தன்வசம் வைத்திருந்தாள். வருடங்கள் கடந்தன.  அவளை மறந்தவனில்லை. அவளுடைய வசீகரமான உருவம் என் கண்ணெதிரிலும், இதயத்திலும் குடிகொண்டிருந்தது. என்னுடைய காதல் உண்மையாக இருந்தது, ஒருவகையில்  ஆரவாரமற்ற அன்பு. இன்றைக்கு அது   நான் சந்தித்த மிக நேர்த்தியானதும் கவர்ச்சியும் மிக்க  ஒன்றின் நினைவுப்பொருள்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் பன்னிரெண்டு வருடங்கள் என்பது  மிகவும் சொற்பம்! எப்படி போனதென்றே நமக்குத் தெரியாது! ஒன்றன் பின் ஒன்றாகச் வருடங்கள் உருண்டோடுகின்றன, அமைதியாகவும் வேகமாகவும், மெதுவாகவும், அவசரமாகவும், ஒவ்வொன்றும் நீண்டதென்கிறபோதும், கணத்தில் முடிந்துவிடும்!   வருடங்களின் எண்ணிக்கை வெகுசீக்கிரத்தில்  அதிகரித்துவிடும், அவை விட்டுச் செல்லும் தடயங்களும் மிகவும் சொற்பம். காலம் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்க, அங்கே ஒன்றுமிருக்காது, அவை முற்றாகத் தொலைந்திருக்கும், நமக்கு முதுமையை வருடங்கள் எப்படித் தந்தன என்பதையே  புரிந்துகொள்ள முடியாது.

கூழாங்கற்கள் நிறைந்த ஏத்ருதா(Étretatetat)கடற்கரையில் கழித்த அந்த அழகான காலத்தை விட்டு விலகி சில மாதங்களே ஆகியிருந்தனபோல எனக்குத் தோன்றியது.

கடந்த வசந்த காலத்தில் நண்பர்களுடன் விருந்துண்ண  மெய்சோன்-லாஃபித்(Maisons-Laffitte)வரை செல்லவேண்டியிருந்தது.

இரயில் புறப்படவிருந்த நேரத்தில், கனத்த சரீரம்கொண்ட  பெண்மணி,  நான்கு சிறுமிகளுடன் எனது பெட்டியில்  ஏறினார். ஓரிரு நொடிகள் கவனம் அவரிடம் சென்றது: நல்ல அகலம், கையெது காலெது என்று சொல்லமுடியாத அளவிற்கு பருமன், முழு நிலவை யொத்த பெரிய  முகத்திற்குப் பொருத்தமாக ரிப்பன் கட்டியத் தொப்பி, தலையில். வேகமாக நடந்துவந்திருக்கவேண்டும் மூச்சிரைத்தது, குழந்தைகள் சளசளவென்று பேச ஆரம்பித்தனர். நான் தினசரியைப் பிரித்து வாசிக்கத் தொடங்கினேன்.

எங்கள் இரயில் அனியேர்(Asnières) நிலையத்தைக் கடந்திருக்கும், என் பக்கத்து இருக்கைப் பெண்மணி   திடீரென்று என்னிடம் :

–மன்னிக்கவும், நீங்கள் மிஸியெ கர்னியெ தானே? எனக்கேட்டாள்.

–  ஆமாங்க…நீங்க?

என்று நான் இழுக்க கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள். அது துணிச்சலான பெண்களுக்கே உரிய சிரிப்பு என்கிறபோதும், சிறிது வருத்தம் தோய்ந்திருந்தது. 

– உங்களுக்கு என்னைத் தெரியவில்லை?

அந்த முகத்தை நான் எங்கோ பார்த்திருக்கிறேன் என்பது உண்மை, ஆனால் எங்கே ? எப்போது ? என்கிற கேள்விகள் இருந்ததால் பதிலளிக்கத் தயங்கினேன்.

— ம்… என்ன சொல்ல … உங்களை அறிந்திருக்கிறேன் என்பது  நிச்சயம், ஆனால் பெயரை நினைவு கூர இயலவில்லை.

பெண்மணியின் முகம் வெட்கத்தால் சிறிது சிவந்தது.

–  நான் மதாம் ழூலி  லெஃபேவ்ரு.

முகத்தில் அறைந்ததுபோல இருந்தது, இதற்கு முன்பு அப்படியொரு அனுபவமில்லை. ஒரு நொடியில் எனக்கு எல்லாம் முடிந்துவிட்டதென தோன்றியது. என் கண்களுக்கு முன்பாக முகத்திரையொன்று கிழிந்தது போலவும் கொடுமையான, மனதுக்கு ஒவ்வாத செய்திகளை   அறியப்போவதாகவும் உணர்ந்தேன்.

அவளா இவள்! பருமனான இந்தச் சராசரி பெண்மணி, அவளா? நான் கடைசியாக பார்த்தபிறகு இந்த நான்கு  பெண்களைப் பெற்றிருக்கிறாள். இந்த நான்கு சிறு ஜீவன்கள்  தங்கள் தாயைப் போலவே என்னை அன்று ஆச்சரியப்படுத்தின. அவர்கள் அவள் வயிற்றில் பிறந்தவர்கள்; நன்கு வளர்ந்தும் இருந்தார்கள், வாழ்க்கையில் அவர்களுக்கென்று விதிக்கபட்ட இடத்தையும் பிடித்தாயிற்று. மாறாக எழிலும், நேர்த்தியும், பகட்டுமாக இருந்த அற்புதப் பெண்மணியின் கதை முடிந்திருந்தது, நேற்றுதான் முதன்முறையாக அவளைச் சந்தித்தது போல் இருக்கிறது, இதற்குள் இப்படியொருமாற்றம்.  இது சாத்தியமா? கடுமையான வலியொன்றை இதயத்தில் உணர்ந்தேன், அவ்வலியை   கொடூரமானதொரு படைப்பை, இழிவானதொரு அழிவைக் கண்முன்னே நிறுத்திய இயற்கைக்கு எதிரானதொரு கிளர்ச்சி அல்லது பகுத்தறியப்போதாத ஒரு கோபம் எனவும் எடுத்துக்கொள்ளலாம்.

அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தேன். அவளுடைய கைகளைப் பற்றினேன்.  என் கண்களில்  நீர்கோர்த்தது. அவளுடைய இளமைக்காகவும், அதன் மரணத்திற்காவும்  அழுதேன், காரணம் என்னைப் பொறுத்தவரை கனத்த சரீரத்திற்குரிய பெண்ணை நான் அறிந்தவனில்லை.

அவளிடமும் சலனம் தெரிந்தது,  தடுமாற்றத்துடன் வார்த்தைகள் வெளிப்பட்டன:

“நான் நிறைய மாறிஇருக்கிறேன், இல்லையா? என்ன செய்வது, நமக்காக எதுவும் காத்திருப்பதில்லை. நீங்கள்தான் பார்க்கிறீர்களே, இன்று நானொரு தாய், அதாவது தாய்மட்டுமே ;  ஆம் நல்ல தாயாக இருக்கிறேன், பிறவற்றுக்கெல்லாம் பிரியாவிடை கொடுத்தாயிற்று,  எல்லாம்  முடிந்தது.  உண்மையில் நாம் மறுபடியும் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் என்னை அடையாளம் காண்பது கடினம் என்றுதான்  நினைத்திருந்தேன். நீங்கள் மட்டும் என்ன, அன்றிருந்தது போலவா இருக்கிறீர்கள், நிறைய மாற்றம் ;  தவறுதலாக எதையும் சொல்லிவிடக்கூடாது என உறுதிபடுத்திக்கொண்டு உங்களிடம் பேச எனக்கும் சிறிது நேரம் பிடித்தது. தலை, முகம் அனைத்திலும் நரை தெரிகிறது . யோசித்துப்பாருங்கள், பன்னிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன! பன்னிரண்டு ஆண்டுகள்! என் மூத்த மகளுக்கு தற்போது பத்து வயது.

அவள் மகளைப் பார்த்தேன். தாயின் முந்தைய  அழகை சிறுமியிடம் கண்டேன், இருந்தும் அவ்வுருவில்   முழுமையில்லை, சில முடிவு செய்யப்படாமலும், அடுத்து நிகழலாம் என்பதுபோலவும் எனக்குத் தோன்றியது. வாழ்க்கையை அன்று வேகமாகக் கடந்து செல்லும் இரயிலாகத்தான் கண்டேன்.

மெய்சோன் லாஃபித் நிலையத்தில் இரயில் நின்றது. என்னுடைய அந்த நாள் தோழியின் கையில் மெல்ல முத்தமிட்டேன். மனம் உடைந்திருந்ததால்,  அசட்டுத்தனமான சில உளறல்கள் அன்றி பெண்மணியிடம் சொல்லிக் கொள்ள  அன்று என்னிடம் வார்த்தைகளில்லை.  

மாலை, தனித்து என் வீட்டில், கண்ணாடி முன் நின்றவன் அகலவேயில்லை, நீண்டநேரமாக என்னை நானே பார்த்துக்கொண்டிருந்தேன். இறுதியில் இளமை பூரித்த எனது உடலும் முகமும்,  பழுப்பு மீசையும், கருத்த தலை முடியும்  மனதில் நிழலாடின.  தற்போது நான் முதியவன், அனைத்திடமிருந்தும் விடைபெற்றாயிற்று.

—————————————————-

“எப்போதும் கைபேசி, காதுபேசி என அலைந்து திரிந்து மற்றவர்களை அலட்சியம் செய்தே அழிந்த மனிதனின் வம்சம்தானே”   – (காலாழ் களரில் உலகு ) – வித்யா அருண்

                         

சிறுகதைகள் அளவிற் சிறியவை, முக்கிய கதை மாந்தர்களாக ஒன்றிரண்டுபேர் இடம்பெற்றிருப்பார்கள். களமும் பொழுதும் குறுகிய பரப்பிற்குள் அடங்கியவை, உண்மையில் அவை மனித உயிர்வாழ்க்கையின் காட்சித் துணுக்குகள், அடிக்கோடிட்டு சொல்லப்படுபவை.  ஒருதேர்ந்த சிறுகதையாளர், தன்வாழ்க்கையில் தான்சார்ந்த சமூக நிகழ்வை, தனது படைப்பென்கிற புகைப்படக் கருவியில் ‘கிளிக்’ செய்கிறார். கலைஞரின் கலைத்துவ ஞானம், புகைப்படக் கருவியின் செயல்திறனுடன் இணைந்து எது சிறந்ததோ, எது முக்கியத்துவம் வாய்ந்ததோ, எது பின்னாட்களில் நினைவூகூரப்பட்டு மனதிற்கு ஆறுதல், மகிழ்ச்சி, சுகம்,  தரவல்லதோ அதை தன் கருவியில் பதிவு செய்து வாழ்க்கையின் ஈரத்தை, வறட்சியை, தென்றலை, புயலை, வெறுமையை, அபரிதத்தை  சகமனிதரோடு பகிர்ந்துகொள்கிறார். ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளரிடமும் இத்திறனைச் சந்திக்கிறோம். 

« காலாழ் களரில் உலகு » அண்மையில் கிடைத்த ஒரு சிறுகதை தொகுப்பு, படைப்பாளி சிங்கப்பூரைச் சேர்ந்த ஓர் இளம் குடும்பத் தலைவி. பெயர் வித்யா அருண். அவர் குடுபத்தலைவி மட்டுமல்ல, உயர் கல்விபெற்று, பன்னாட்டு நிறுவனத்தில் மேலாண்மை பொறுப்பில் இருக்கிறவர், இந்தியப்பண்பாடு  தமிழ்மரபு என்கிற பின்புலத்திற்குச் சொந்தக்காரர்,நவீனம் தொன்மமென இலக்கியத்தின் இருகூறுகளிலும் ஆழமான ஈடுபாடு கொண்டவர்.  இவை அனைத்தும் புனைவின்  மையப் பொருளில், சொல்லும் மொழியில், உத்தியில், கதையைக் கட்டமைக்கும் திறனில், பெரும்பாலான இவருடைய கதைகளில் தெளிவாக வெளிப்படுகின்றன.

நூலுக்கு  முன்னுரை எழுதியுள்ள  எழுத்தாள நண்பர் நாஞ்சிலார் « காலாழ் களரில் உலகு » என்ற  சிறுகதைநூலின் பெயர்  குறித்து அவருக்கே உரித்தான ஆர்வத்துடன்  வேர்மூலத்தைத் தேடி வியக்கிறார். கவித்துமான மொழியில், நூலின் பெயர்கொண்ட சிறுகதையில் அன்றி பிறகதைகளிலும், அவற்றைக்  காட்சிப்படுத்த கையாளும் காலப் பிரமாணங்களினாலும் பேராசிரியர் க. பஞ்சாங்கம் மொழியில் சொல்வதெனில் சுகமான வாசிப்புக்குச் சிறுகதை ஆசிரியர் துணைசெய்கிறார்.

ஏழாம் அறிவு, மோனம், வழித்துணை, தொட்டால் பூ மலரும், கானல் காலங்கள், வெட்டென மற எனத் தொகுப்பில்  பன்னிரண்டு சிறுகதைகள். ஒவ்வொரு கதையும்  ஆசிரியரையும், ஆசிரியரைச் சூழ்ந்துள்ள உலகையும், மனிதர்களையும், அவர்கள் மனங்களையும் அவற்றின் வாசத்தை உணரவும் அவர்களோடு பயணிக்கவும் உதவுகின்றன. செயல்பாடுகளே மனிதர் இருத்தலைத் தீர்மானிப்பதாக பிரெஞ்சுத் தத்துவவாதி சார்த்துரு கூறுவார். இப்பன்னிரண்டு சிறுகதைகளும் ஓர் எழுத்தாளரின் « தன் »னையும்,  « பிறரை »யும் கூர்ந்து கவனித்து அவர்கள் இருத்தலைப் பேசுகின்றன. கட்டுரையின் தொடக்கத்தில் நூலாசிரியர் யார், என்பதைத் தெரிவித்திருந்தேன் இந்த « யார் ? » சிறுகதைகளாக, வாழ்க்கைச்சித்திரங்களாக பிக்காசோ மொழியில் – பூடகமும் நவீனமும் இணைந்து- இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலமென்று மூன்று உலகிலும் பயணிக்கிறது.

« ஏழாம் அறிவு », « காலாழ் களரில் உலகு » இரண்டும் அறிவியல் புனைகதைகள். இரண்டும் வித்தியாசமான கற்பனை ( கொரோனா வுக்கு நன்றி), பிற்காலத்தில் நம்முடைய மனிதச் சந்ததியினர் இக்கதையில்  நடமாடும் உயிரினங்களாக மாறவும் நேரலாம், நேற்றுவரை குரங்காக இருந்தவர்கள்தானே நாம் எதுவும் நடக்கலாம்.

« மோனம் », « தொட்டால் பூ மலரும் », இருகதைகளும் ஒரு தாயின், ஒரு சாராசரி குடும்பப்பெண்ணின் ஆசைகள், நிராசைகள் ; எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் ; மருட்சிகள் மன உளைச்சல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கின்றன.

« வழித்துணை », « வெட்டென மற », « போகாதே » மூன்று சிறுகதைகளும் இன்று உயர்கல்வி பெற்று ஆண்களுக்கு நிகராக பணியாற்றுகிற பெண்களுக்குள்ள நெருக்கடிகளையும் சிக்கல்களையும் அவிழ்க்கின்றன. மேற்குநாடுகளில், பெண்விடுதலை என்பது ஓரளவிற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒன்று ஆனால்  இந்தியப்பெண்களுக்கு இன்றளவும் அது எட்டாகனி. இப்புதுமைப் பெண்ணின்  அடையாளம் அலுவலகத்தில் திறமைசாலி, ஐம்பதுபேரை வைத்து வேலை வாங்குகிறாள், ஸ்கூட்டியில் வேலைக்குப் போகிறாள், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவாள், என்பதெல்லாம் பெற்றோருக்கும் ஏன் அவளை மணமுடித்த கணவனுக்குக்கூட  மகிழ்ச்சி அளிப்பவைதான். இருந்தும் அவள் பிறந்தவீட்டையும்,  புகுந்த வீட்டையும் மறக்காமல் இருக்கவேண்டும், எத்தனை மணிக்குத் திரும்பினாலும், எவ்வளவு பிரச்சினைகளை சமாளித்துவிட்டு வீடு திரும்பினாலும், வீட்டின் பராமரிப்பு, பிள்ளைகளுக்கு வீட்டுப் பாடம், குடும்பத்தின் வரவு செலவு அனைத்தும் அவள் தலையில்தான் விடியும். வேலைசார்ந்து பயணம் மேற்கொள்கிறபோது  « அம்மா ஏன்போற ? எப்போ வருவே அம்மா ? » என பெட்டியை மூடும் நேரத்தில் மகன் கேட்டால், இவளுக்கு வயிறு பிசையத் தொடங்கும்.  « ஆத்திலே ஒருகால் சேத்திலே ஒருகால் »என்பார்கள் படித்த வேலைக்குப் போகும் பெண்களுக்கு’ » என்கிறார், ‘போகாதே’ சிறுகதையில் நூலாசிரியர். இக்கதைகள் உயர் அலுவலராக பன்னாட்டு நிறுவங்களில் வேலை பார்க்கும் பெண்கள் எதிர்கொள்கிற பிரச்சனைகளை மூன்று விதமான கதைக் களனில் தன்மையில் வளவளவென்றில்லாமல் சிக்கனமான மொழியில் எதைச் சொல்லவேண்டுமோ அதைக் கச்சிதமாகத் தெரிவிக்கின்றன.

இத்தொகுப்பில் « அதிர்வலைகள் », நவீன யுகத்தின் உறவுச் சிதைவுகளையும், « கானல் காலங்கள் » மனப் பிறழ்வுக்கு உள்ளான மனைவியின் நிலைமை கண்டு ஆற்றாமையில் தவிக்கும் ஒரு நடுத்தர குடும்பக் கணவனின் குமுறலையும் பேசுபவை. இவை இரண்டுங்கூட தரமான சிறுகதைகள்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, « புதையல் » என்ற சிறுகதையையும். « அது இருளால் செய்த ஒரு வழிச்சாலை » என்ற சிறுகதையையும். முதல்கதை பொதுக்கழிவறையைச் சுத்தம் செய்கிற ஒரு தமிழ்ப் பெண்மணியின் கதை, அப்பணியின் அத்தனைக் கூறுகளும், தொழிலாளிப் பெண்மணியின்  ஒருநாள் வாழ்க்கை கொண்டு மனச்சுளிப்பின்றி சொல்லப்படுகின்றன. அதுபோல பெண்களின் தலையாய பிரச்சனைகளை, பலரும் சொல்லத் தயங்கும் சபிக்கபட்ட பெண்பிறவியின் உயிரியல் பிரச்சனகளை, துணிச்சலுடன் « அது இருளால் செய்த ஒரு வழிச் சாலை » என்கிற கதையில் பெண்ணுக்கேயுரிய வலிகளுடன், அவள் சுமக்கும் பாரத்தை மொழி மருத்துவரின் துணைகொண்டு இறக்கிவைக்கிறார். ஒவ்வொரு ஆணும் தன் மனைவியுடன் உள்ளன்போடு கைகோர்க்க, இதனைக் கட்டாயம் வாசிக்கவேண்டும்.

ஓர் ஆரம்பம் ஒரு முடிவு,   இடையில் எதையாவது நிரப்பி நானும் கதைஎழுதினேன், என கதைவிடும்  உலகில், மனித உணர்வுக்கும், உள்ளத்தின் குரலுக்கும் செவிமடுத்து அழகான வார்த்தைகள் கொண்டு தொய்வற்ற நடையில் கதைசொல்லும் நூலாசிரியரை திறனைப்  பாராட்டுகிறென்.

——————————————————————–

காலாழ் களரில் உலகு- வித்யா அருண்

தொடர்புக்கு :kavidhya@gmail.com

மானுடம் காலாண்டிதழ்: அறத்தின் குரல்

மானுடம் காலாண்டிதழ் நண்பர்கள் அண்மையில் தங்கள் இதழ்கள் சிலவற்றை எனக்கு அனுப்பி வைத்தனர். அவற்றை அனுப்பிய நண்பர், அறந்த்தின் குரல் என்ற பெயரிட்டே அவற்றை மின் அஞ்சலில் அனுப்பியும் வைத்தார்.

மானுடம் என்பது, நிற இன வேற்பாடுகளைக்கொண்ட மனிதர்கூட்டம் முழுமைக்கான சொல் என்கிற போதும் அறத்தின் குரல் தேசத்துக்குத் தேசம் வேற்படுகிறது, அவரவர் பண்பாடு, சமூகம், சார்ந்து ஒலிப்பது. இந்தியாவின் அறமும் பாகிஸ்தானின் அறமும் ஒன்றல்ல. கீழைநாடுகளின் அறமும் மேற்கத்திய நாடுகள் அமைத்துக்கொண்ட அறமும் ஒன்றல்ல. ஈரான் அறம் வேறு, அமெரிக்காவின் அறமும் வேறு வேறு, கற்காலத்தின் அறம் வேறு இருபதாம் நூற்றாண்டின் அறம் வேறு, கண்ணகிக்கும் மாதவிக்கும் வேறு வேறு அறங்கள். அறிவியல் உண்மையின் அடிப்படையில் அது எழுதப்படுவது அல்ல அவரவர் பார்வையின் உண்மையில் எழுதபடுவது. மானுடம் என்ற உயிரியின் உறுப்புகள் என்கிறபோதும் புலனுக்கு வகுக்கப்பட்ட  அறத்தின் வழி ஒழுக கடமைபட்டுள்ளன. ஆம் அறம்,  பெற்ற ஞானம், உற்ற அனுபவம்,  சார்ந்த சமூகம் என்கிற அடிப்படைகளின் உண்டியல் சேமிப்பு. அவை கடமை, செஞ்சோற்றுக் கடன், மூடத்தனம் இதுபோன்ற திசைமானிகளால் வழி நடத்தப்படும் அபாயங்கள் இருக்கின்றன.

தமிழில் பருவ இதழ்கள் ஏராளமாக வருகின்றன. தமிழ், மொழி, இலக்கியம், சமூகம், மனித வாழ்க்கை அது சார்ந்த  ஆய்வுகள் கருத்துக்கள், விசாரணைகள், விவாதங்கள் அவற்றில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இலக்கிய திங்களிதழ், மாத இதழ், காலாண்டிதழ், என்றபெயரில் அச்சிலும், காலத்தோடு இணைந்து மின்னிதழ், இணைய இதழ்களும் வருகின்றன. புரட்டுகிறபோதே அவற்றின் வாசனைகளை முகர்ந்துவிடுகிறோம், அவற்றில் சுகந்தம் துர்நாற்றம் இரண்டுமுண்டு. குழுவின் குல தெய்வ இலக்கியத்திற்கு  பிரார்ந்த்தனைகளை நிறவேற்றவேண்டிய கடமைகள் ஒருசிவலவற்றிற்க்கு  இருக்கின்றன. புரவலர்கள், ஆயுள் சந்தாதாரர்கள், சந்தாதாரர்கள் எடைக்கேற்ப பால் காவடி, பன்னீர்காவடி, தீ மிதித்தல், அலகு குத்துதல், செடல் தேர் இழுத்தல் உண்டு. உக்கிரத்தைப்பொறுத்து கோழியோ, ஆடோ காவு வாங்கியபின் மலையேறி திரும்ப பாதைக்கு வரலாம்.

‘மானுடம்’ எவ்வித ஒய்யாரங்களுமின்றி இலக்கியபணி ஆற்றுகிற, அக்காலத்திய  டி.ஸ். பட்டணம்பொடி போல  காரசாரமான கட்டுரைகளுடன் வருகின்றன. பெரும்பாலானவை புருவத்தை உயர்த்தவைக்கின்றன, மனித இனம் சார்ந்த கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சிகள் அவை. இதழ்கள் ஒவ்வொன்றிலும் பேராசிரியர்கள், மூத்த இலக்கியவாதிகள், ஆரோக்கியமான சிந்தனைக்குச் சொந்தக்காரர்கள் எனபலரும் பங்களிப்பு செய்திருக்கின்றனர். இதழ்களைப் புரட்டும்போது கலைக் களஞ்சியமொன்றை புரட்டும் அனுபவம்.

இக்கட்டுரைகள் இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமின்றி, உயர்கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு, ஆய்வு மாணவர்களுக்கு உதவக் கூடியவை. தமிழை வளர்ப்பதென்பது, தமிழ் அறிவை வளர்ப்பதென்பது இது போன்ற இதழ்களை ஆதரித்து முன்னெடுத்துச் செல்வதில் இருக்கிறது. மானுட த் தேரை தமிழிலக்கிய வெளியில் வலம்வரச் செய்ய உழைக்கும் நண்பர்களைப் பாராட்டுகிறேன்.