பிறந்த மண்ணையும், பேசும் மொழியையும் துறந்து அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களால், புதிய புதிய நாடுகளுக்குப் புலம் பெயர்வது என்பது, இன்றைய வாழ்வியல் விதியாகிவிட்டது.
மனித குலத்தின் வரலாறு அறிந்தவர்களுக்குப் புலம்பெயருதல் புதியதல்ல என்பது விளங்கும். தன் வாழ்வை மேம்படுத்திக்கொள்வதற்காக, இயற்கையாகவும் செயற்கையாகவும் புலம்பெயருதல் உலகம்தோன்றிய நாட்தொட்டு நடந்து வருகின்றது. குறுகிய காலத்திற்கு ஓரிடத்திற்கு அல்லது ஒரு நாட்டிற்கு சுற்றுலா, கல்வி, மருத்துவம், உறவினரைப் பார்க்கவென்று சென்று வருபவர்கள் இருக்கின்றார்கள். இவர்களைப் புலம்பெயர்ந்தவர்களாக எவரும் கணக்கிற் கொள்வதில்லை. ஏனெனில் புலம்பெயர்ந்த இடங்களில் அல்லது நாடுகளில்இவர்களது குறுகியகால வாழ்க்கை ஒரு பார்வையாளர் வாழ்க்கை. ஷாப்பிங் சென்று தனது கையிலிருக்கும் பணத்திற்கும், தனது தேவைக்கும் பொருட்கள வாங்கும் தம்பதியினரைப் போல அற்ப காலத்தில் அதீதச் சந்தோஷத்துடன் திரும்பவேண்டும் என்ற நோக்குடன் பயணிக்கும் மக்கள் இவர்கள். இத்தகு மக்களை திக்குத்தெரியாதக் காட்டில், பல ஆண்டுகளுக்குப் பிறகும் தனது தேவையும், இருப்பும் என்ன? எங்கே? என்று அறியாமலேயே பயணிக்கும் மக்களோடு ஒப்பிடமுடியாது.
நீண்டகாலப் புலம்பெயருதலில், கலாச்சாரம், மொழி இவற்றில் அடிப்படை ஒற்றுமைகள் கொண்ட அரசியல் எல்லைக்குள் பொருளாதாரத் தேவையைமட்டும் கருத்திற் கொண்டு நடப்பது ஒருவகை உ.ம். தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கோ, இங்கிலாந்திலிருந்து பிரான்சுக்கோ இடம்பெயருவது. மொழி கலாச்சாரத்தையொதுக்கிவிட்டு, அரசியல் நிர்பந்தங்களுக்காகவும், பொருளாதாரக் காரணங்களுக்காகவும் முற்றிலும் புதிய மண்ணிற்குப் புலம்பெயருதல் மற்றொருவகை, உ.ம் மூன்றாவது உலக நாடுகளிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கோ அல்லது அமெரிகாவிற்கோ இடம்பெயருவது. புலம் பெயருதல் என்ற சொல், குறிப்பாக இவ்விரண்டாம் நிலை மக்களோடே அதிகத் தொடர்புடையதாகும்.
குடியேற்ற நாடுகளுடைய பூர்வீக மக்களின் அடையாளங்களை முற்றிலுமாக எரித்துவிட்டு வந்த நாட்டை சொந்த நாடாக வரித்துக்கொண்டு வாழுகின்ற அமெரிக்கர்கள் மற்றும் ஆஸ்திரேலியர்கள் போன்றவர்கள் ஒருபுறமிருக்க, புதிய மண்ணுக்குப் வாழ்க்கைப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் இனம், கலாச்சாரம், மொழி இவைகள் தன்னிடமிருந்து விலகிச் செல்வதைத் தெரிந்தோ தெரியாமலோ ஏற்க பழகிய மக்களே இன்றைக்குப் பரவலாக புலம்பெயர்ந்தவர்கள் அடையாளத்துடன் வாழுகின்றார்கள். இவர்களின் உணர்வுகள், அனுபவங்கள், துயர்கள், சங்கடங்கள், சந்தோஷங்கள் முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் படைப்புகளாக வலம் வருகின்றன.
பொதுவாகவே இன்றைக்கு, தெற்காசிய எழுத்தாளர்களின் படைப்புகள் முன் எப்போதுமில்லாத அளவிற்கு மேற்கத்திய புத்தக விற்பனைக் கூடங்களிற் காணக் கிடைக்கின்றன. மேற்கத்திய மொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்தில் ஏன் பிரெஞ்சில்கூட இந்தியம் பேசுகின்ற படைப்புகள் நிறைய வருகின்றன. இவைகளுக்கு மேற்கத்திய நாடுகளில் அமோக வரவேற்பு. இந்தியாவைக் களனாகக் கொண்ட படைப்புகள் சுலபமாய் விற்றுத் தீருகின்றன. ஆங்கிலத்தில் எழுதிய, எழுதும் இந்தியப் படைப்பாளர்களுள் ஆர்.கே நாராயணன், குஷ்வந்த் சிங், எம்.ஆர். ஆனந்த் இவர்களோடு சமீபகாலமாக அருந்ததிராய், விக்ரம் சேத், யு. ஆர் அனந்தமூர்த்தி, உபமன்யு சட்டர்ஜீ, கமலா தாஸ், முகுந்தன், தமிழ்நாட்டின் பாமா ஆகியோரது படைப்புகளும் இங்கே நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. மேற்கத்தியர்களும் இந்தியமண்ணின் வரலாறுகள், நிகழ்வுகள், வாழ்வியல் நேர்மைகளைக் களனாகக்கொண்டு படைப்புகளை எழுதி வெற்றிபெறுகின்றார்கள் என்பதற்கு, போல் ஸ்காட், ஷரோன் மாஸ், பெத்தி கிறிஸ்டியன், வில்லியம் டால்ரிம்பிள், எரிக் தெஷொ- ழான் குளோது லாத்தே போன்றவர்களைக் குறிப்பிடமுடியும்.
ஆனால் மேற்கண்ட இரு கூட்டத்திலும் சாராமல், இந்தியாவிற் பிறந்து அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் வாழ்ந்தபோதிலும் இரு நாடுகளையும் கருவாகவும் களனாகவும் கொண்டு ஆங்கிலத்தில் எழுதுகின்றவர்கள் அதிகரித்து வருகின்றார்கள். இவர்களுடைய எழுத்தில் தங்கள் மூதாதையர் மண்ணின் ஈரப்பதம் உலறாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதன் நிறைகளும் குறைகளும், இரத்தமும், தசையும் நரம்புமாக எழுத்தில் வந்துவிழுகின்றன. அதே குணத்தோடு குடியேறிய நாட்டுப் பிரச்சினைகளையும் துணிவோடு தெளிவாகச் சொல்ல முடிகிறது. தன் வாழ்நாளில் கணிசமாகவொரு பகுதியைப் பிறந்த நாட்டில் அல்லது சொந்த மண்ணில் கழித்துவிட்டு, எஞ்சிய ஆயுளை இன்னொரு மண்ணில் அல்லது இன்னொரு நாட்டில் கழிக்க நேரும்போது, அவனுடல் மாற்றத்தை ஏற்றுகொண்ட அளவிற்கு, அவனுள்ளம் மாற்றத்தை ஏற்பதில்லை. இதையே வேறுவகையிற் சொல்வதென்றால், உணர்ச்சிகள் மாற்றத்தைச் சுலபமாக ஏற்க, அறிவு விலகி நின்று போராடுகின்றது. இப்போராட்ட வாழ்க்கை முதற் தலைமுறையைச் சார்ந்த அனைத்து மக்களுக்கும் உண்டு. சுடர் மிகும் அறிவுள்ள அவன், அதன் நலங்கெடப் புழுதியில் எறிவதில்லை. மாறாகத் தனது அடையாளத்தை வெளிப்படுத்த அறிவைப் பயன்படுத்திக்கொள்கிறான். புலம்பெயர்ந்தவர்களிடம் கிடைக்கும் சொந்த நாட்டின் சிந்தனைகளும் வந்த நாட்டின் அனுபவங்களும் உலக இலக்கியங்களுக்கு ஓரு புதிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது. உலகின் ஏனைய புலம்பெயர்ந்த எழுத்தாளர்களைப் போலவே சொந்த மண்ணின் உணர்வுகளை, அனுபவங்களை, பார்வைகளை எழுத்தில் வடிக்கும் படைப்புகளைக் கொண்டுவந்ததுபோக, வந்த மண்ணின் உணர்வுகளை, அனுபவங்களை, பார்வைகளை எழுத்தில் வடிக்கும் படைப்புகள் சமீபகாலங்களில் இத்தகு படைப்பாளிகளாற் பெருகிவருகின்றன.
ஆங்கிலத்தைத் தவிர, தமிழில் வருகின்ற பெரும்பாலான இன்றைய இலக்கியபடைப்புகளில் உற்பத்தி இலக்கணம் இருக்கின்றதேயொழிய படைப்பிலக்கணமில்லை. இவர்களின் நோக்கங்களனைத்தும் புகழுக்கும், விற்பனைக்குமான தந்திரம். இதற்காக எல்லா உபாயங்களையும் (அடிதடி உட்பட..) கையாளுகின்றார்கள். உற்பத்திப் பொருளின் விற்பனைச் சந்தைக்குக்குப் பயன்படும் யுக்திகளான ‘ஒப்பீட்டு விளம்பரம்’, நுகர்வோர் சார்பில் ஆகா.. ஓகோச் சான்றிதழ்கள்.. இன்னபிறவற்றைத் திட்டமிட்டு நகர்த்துகின்றார்கள். இத்தகு தந்திரங்கள் அன்றன்றைய பங்குச்சந்தைக்கு உதவுமேயொழிய, காலத்தை எதிர்த்து நிற்க உதவாது. வெற்றியைத் திட்டமிட்டு செய்வது படைப்பாக முடியாது, வியாபாரம். அவ்வாறு செய்பவர்கள் படைப்பாளிகலல்ல வியாபாரிகள்.
அதற்குமாறாக படைப்பிலக்கணம் சார்ந்து, துணிச்சலுடன் எழுதுகின்ற வி.எஸ் நேப்போல், சல்மான் ருஷ்டீ, கமலா மார்க்கண்டேயா, அனிதா தேசாய் போன்றவர்களும் பாங்களா தேஷைச் சேர்ந்த தலிமா நஸ்ரீன், இலங்கையைச் சேர்ந்த ஷியாம் செல்வதுரை போன்ற புலம்பெயர்ந்த படைபாளிகளைப் பார்க்கிறோம். இவர்களின் எழுத்தில் நேர்மையும், துணிவும் இயல்பாய் அமைந்திருக்கின்றன.
தமிழிலும் இன்றைக்குப் புலம் பெயர்ந்த எழுத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.. தமிழ்நாட்டிற்கு வெளியே, சிலநூற்றாண்டுகளுக்கு முன்பு வேறு நாடுகளுக்குக்(சிங்கப்பூர், மலேயா,..) குடியேறி இன்றைக்கு அவற்றைத் தாய்நாடுகளாக வரித்துக்கொண்டு தமிழில் எழுதுபவர்கள் ஒருபக்கமெனில், சமீபத்தில் கட்டுரையின் ஆரம்பத்திற் குறிப்பிட்டதுபோன்று அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக உலகின் பலநாடுகளிலும் குடியேறி, புதிய கலாச்சாரத்தினைச் சந்தித்து அதனைத் தமிழில் சொல்பவர்கள் மறுபக்கமென இவர்களைப் பிரிக்கலாம். தாயக எழுத்தாளர்களில் சிலர் மிகச் சுலபமாக வைக்கும் குற்றச்சாட்டு, “அங்கேபோயும் அவர்கள் இதைத் தானே எழுதிக்கொண்டிருக்கிறார்கள்”, என்பது. இதற்கான பதில், “கொழும்பிலிருந்துகொண்டு மட்டக்கிளப்பு, கிளிநொச்சி என்று எழுதுவதற்கும், சென்னையிருந்துகொண்டு வடுகப்பட்டியையும், திருவரங்கத்தையும் எழுதுவதற்கும் தாயகத் தமிழர்களுக்கு என்ன உரிமையுண்டோ, நியாயங்கள் உண்டோ, அவைகள் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் உண்டு என்பதாகும். புலம்பெயர்ந்த எழுத்துக்கள் எதைச் சொல்கின்றன என்பதைவிட எப்படிச் சொல்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும். புலம் பெயர்ந்தவர்களின் சொற்கள் தமிழுக்குப் புதிது, எழுதும் பொருள் தமிழுக்குப் புதிது, களம் தமிழுக்குப் புதிது.
ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், கனடாவிலும், வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியாவென தமிழர்கள் பரவியுள்ள இடங்களிலிருந்து ஏற்கனவே தமிழுலகம் அறிந்த படைப்பாளிகளிடமிருந்தும், இளம் படைப்பாளிகளிடமிருந்தும் நல்ல தமிழில், அறிவியல், இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்பதாகப் பல தேர்ந்த படைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தாயகத் படைப்பாளிகளுடன் இணைந்து, இணையக்குழுமங்களிலும் இணையத்தளங்களிலும் தமிழிலொரு முதிர்ச்சிபெற்ற இலக்கியச் சூழலுக்காகப் பங்காற்றிவருகின்றார்கள், உழைத்து வருகின்றார்கள்.
தமிழிலக்கியவரலாறு, இருபத்தோராம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த தமிழர்களால் முக்கியத்துவம் பெறும். தாயக ஏக்கமும், குடியேற்ற நாடுகளில் அவன் சந்திக்கின்ற பிரச்சினைகளும் படைப்புகளின் தரத்தைக் கூட்ட உதவுமேயன்றி குறைக்க ஒருபோதும் உதவாது. இது தவிர தமிழகத் தீவர இலக்கியவாதிகள் கட்டியழும், மேற்கத்திய காலாவதியாகிவிட்ட இஸங்களைக் காட்டிலும், .குடியேற்ற நாடுகளில் எழுதப்படும் புலம் பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளான இனவெறி, நிறவெறி, பாலியற் பிரச்சினைகள் அந்தந்த நாடுகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். தமிழிலக்கியங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பேசபட்டவையே மேற்கத்திய படைப்பாளிகள் இஸங்கள் என்ற பெயரால் குழுக்களமைத்துக்கொண்டு எழுதப்போக, இன்றைக்கவை மேலைநாடுகளில் முகவரி இழந்து கிடக்கின்றன. ஆகவே இந்தியாவில் கூச்சலிட உதவும் இஸங்கள் இரண்டுங்கெட்டான் இந்தியவாசகனை மிரட்ட உதவுமேயன்றி மேலை நாடுகளை மிரட்டாது. ஜெயகாந்தனிலிருந்து – பாமாவரை அசலான தமிழ்ப் படைப்புகளே மேலைநாடுகளை எட்டிப்பா¡ர்த்திருக்கின்றன. இந்தச் சூழலில் எதிர்காலத்தில் தமிழிலக்கியத்தை மேற்கத்திய மக்களுக்குக் கொண்டு செல்வதில் தாயக மக்களைவிட புலம்பெயர்ந்தவர்களின் பங்கு கணிசமாகவிருக்கும் என்பது சத்தியம்.
அவ்வாறே மொழி பெயர்ப்பிலும் புலம்பெயர்ந்தவர்கள் கணிசமானப் பங்கினை ஆற்றமுடியுமென நம்புகிறேன். எந்த எழுத்தையும் மொழிபெயர்க்கும்பொழுது, மூலமொழியை வாங்கிக்கொள்ளும் திறனும் சொந்தமொழியில் அதை வெளிபடுத்தும் ஆளுமையும் அவசியம். மொழி அறிவோடு, மூல ஆசிரியனின் காலம், சமூகம், கலாச்சாரம் பற்றிய அடிப்படை அறிவில் தெளிவாக இருக்கவேண்டும். சென்னையிலிருந்துகொண்டு ரஷ்ய நாவலை மூலத்திலில்லாமல், இரண்டாவது மொழியிலிருந்து மூன்றாவதாக ஒரு மொழியில் சொல்ல வருவதென்பது சரியாகாது. மலையாள நாவலொன்றை பக்கத்து எல்லையிலிருக்கும் தமிழ்நாட்டில் மலையாளமறிந்த ஒரு தமிழரால் தமிழுக்குக் கொண்டு வரும்போது பிரச்சினைகளில்லை. ஆனால் மலையாளத்திலிருந்து ஆங்கிலத்திலும் அங்கிருந்து வடகிழக்கிலுள்ள ஒரியாவில், கேரளாபற்றிய பூகோள அறிவைமட்டுமே துணையாகக்கொண்டு மொழிபெயர்ப்பது அபத்தம். தமிழிலுள்ள பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் மூலத்தோடு பக்கங்களின் எண்ணிக்கையில் ஒத்துபோகின்றனவேயொழிய, மொழியிலோ, படைப்பாளியிடமோ அல்ல. இக்குறைகளைப் போக்க இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மன், நோர்வே, கனடா என வாழும் தமிழர்கள் முயன்றார்களெனில் பல நல்ல படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வரமுடியும்.
“புலம் பெயர்ந்தவர்கள் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதால் அவர்களால் பெரியதொரு இலக்கியத்தைப் படைத்து விட முடியாது” என்கின்ற ஜெயமோகனின் அபிப்ராயத்தை மிக எளிதாக ஒதுக்கலாம். அவ்வாறே “உலக அரங்கில் தமிழ் இஇலக்கியத்தைப் புலம்பெயர் இஇலக்கியம் தலைமையேற்று வழி நடத்தும்” என. எஸ்.பொ. கூறுவதும் சற்று மிகையானக் கூற்று. ஆனால், இந்த நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழ் இஇலக்கியத்திற்கான அங்கீகாரத்தினைப் புலம் பெயர்ந்தத் தமிழர்கள் கணிசமாகப் பெற்றுத்தருவார்கள் என்பதனை மறுக்கவியலாது.
……
Like this:
Like ஏற்றப்படுகின்றது...