Monthly Archives: ஏப்ரல் 2017

பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) : 3. பதினேழாம் நூற்றாண்டு

L_honnête homme

பிரெஞ்சு ஓவியத்துறையும், இலக்கியங்கள் குறிப்பாக நாடகத்துறை புகழின் உச்சத்தில் இருந்த காலம் பதினேழாம் நூற்றாண்டு. தத்துவ உலகெங்கும்  கொண்டாடப்படுகிற ரெனெ தெக்கார்த்(René Descartes) , நாடகவியலாளர்களும் படைப்பாளியுமாகப் புகழ்பெற்ற பியர்கொர்னெய் (Pierre Corneille) ழான் ரசீன் (Jean Racine) மொலியேர்(Molière) ஆகியோரும் ; லெ நேன் சகோதர ர்கள் (Frères Le Nain), ழார்ழ் துமெனில் (Georges Dumensil de la Tour ), நிக்கொலா பூஸ்ஸன் (Nicolas Poussin)  போன்ற ஓவியர்களும் இந்த நூற்றாண்டில் முக்கியமானவர்கள்.  பதினைந்தாம் நூற்றாண்டு   இத்தாலியைப் போலவே  பதினேழாம் நூற்றாண்டில் பிரெஞ்சு படைப்புலகமும், அரசியலும் ஐரோப்பிய சரித்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.  லிபெர்த்தினிஸம்(Libertinisme), ழான் செனிஸம் (Le Jansénisme), கிளாஸ்ஸிஸம் (Le Classicisme) ஆகிய மூன்று இயக்கங்களினாலும் இந்நூற்றாண்டு பெயர் பெற்றது. இது தவிர பிரெஞ்சு அரசியலில் பதின்மூன்றாம் லூயி, பதினான்காம் லூயி ; சமய குருக்களான கார்டினல் ரிஷ்லியெ, கார்டினல் மஸாரின் ஆகியோரின் தாக்கத்தையும் கொண்ட து. முதலாவது கார்டினல் ரிஷ்லியெ(Richelieu) என்பவர்தான் பிரெஞ்சு அகாதமியை (1634) ஏற்படுத்தியவர். முதல் அகராதி,  பிரெஞ்சு மொழிக்கென உருவானதும் இக்காலக் கட்டத்தில்தான்,ஆண்டு 1690, உருவாக்கியவர் அந்த்துவான் ஃயூர்த்தியெர் (Antoine Furtière) என்ற மொழியறிஞர்.

பதினேழாம் நூற்றாண்டும் பிரெஞ்சு அரசியலும் :

சுதந்திரம் பெற்றத் தொடக்கத்தில் இந்தியா எப்படி சிதறுண்டிருந்ததோ, அப்படியான நிலையில்தான் பிரான்சு நாடும் இருந்தது. இன்றிருக்கும் எல்லைப் பரப்பைக் கொண்ட நாடாக அன்று இல்லை. அதற்குப் பல காரணங்கள். அன்றைக்குங்கூட பிரான்சுநாட்டின் பூர்வீகமக்களென குறிப்பிட்ட இனத்தவரைச் சுட்டுவது கடினம். கிழக்கு ஐரோப்பிய குடிகள், ரொமானியர்கள், ஹன்ஸ் என்கிற நோர்டிக் இனத்தவர்  இப்படி பல இனத்தவர்களும் கலந்து உருவானவர்களே பிரெஞ்சு மக்கள். இவர்களுடன் இன்று கணிசமாக நேற்றைய காலனி மக்களும் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளிலிருந்து அகதிகளாக வந்தவர்களும் சேர்ந்து கொண்டுள்ளனர். உண்மை இப்படியாக இருக்கையில் அதிபர் வேட்பாளராக இருக்கிற வலது சாரி பெண்மணி  வருங்காலத்தில் பிரெஞ்சுக் குடியுரிமையைப் பெற  பிரெஞ்சு மண்ணில் பிறந்தால் மட்டும்போதாது ஐரோப்பிய வம்சாவளியினராகவும் இருக்க வேண்டுமென்ற என்ற கருத்தை முப்ன்மொழிந்திருக்கிறார்.  வருங்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்றாலும் அசலான பிரெஞ்சு மக்களை அடையாளப்படுத்துவது எளிதானதல்ல.

பதினேழாம் நூற்றாண்டு பிரான்சு,  சமயப்போரினால் பாதித்த நாடு, இரண்டு லட்சத்திற்கும் குறைவான  மக்கள். போக்குவரத்து, தகவல் தொடர்புகளை அறிந்திராத வாழ்க்கை ; நகரங்களைக் காட்டிலும் கிராமப்புறங்கள் அதிகம். ஆகவே இவைகளெல்லாம் மனிதர் சிந்தனையில் எதிரொலிக்கவே  செய்தன. ஒரு நூற்றாண்டு சமயப்போர் தணிந்திருந்த போதிலும் புரொட்டஸ்டண்ட் மற்று கத்தோலிக்க மத த்தினரிடையே பெரும் பிளவை உண்டாக்கியிருந்தது. இத்தகைய சூழலில் பிரெஞ்சு மக்கள் புணர்வாழ்விற்கு ஏங்கினார்கள். அரசு நிர்வாகத்தின் கட்டமைப்பு குலைந்திருந்த நிலையில் சீரமைக்க வேண்டியிருந்தது. நான்காம் ஹாரி (1553-1616) என்ற பிரெஞ்சு மன்ன ன் சமயப்போரினால் மிகவும் பாதித்திருந்த புரொட்டஸ்டண்ட் மக்களை சமாதாப் படுத்தவேண்டி அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கின்ற வகையில் ஒரு பிரேரணையில் கையொப்பமிட்டான். அதற்கு நாந்த் பிரேரணை (l’Edit de Nantes) என்று பெயர். கத்தோலிக்க மத தீவிர வாதிகளாற் பாதிக்கபட்ட புரொட்டஸ்டண்ட்டுகள் பாதுகாப்பான உறைவிடங்களை அமைத்துக்கொள்ள்வோ, ஆயுதபல்த்தை அதிகரித்துக்கொள்ளவோ, சுதந்திரமாக தங்கள் சமயவழிபாட்டினைத் தொடர்வதற்கோ எவ்வித தடையுமில்லை என்று அதில் அரசு உறுதி அளித்திருந்தது. புரொட்டஸ்டண்ட் மக்களுக்கு மட்டுமன்றி பிற மக்களுக்கும் சுதந்திரமான சிந்தனைக்கு, இதொரு வகையில் வழி வகுத்த து எனலாம். இதன் காரணமாகவே கத்தோலிக்க தீரவாதிகள் நான்காம் ஹாரி மன்னனைக் கொலை செய்கிறார்கள். இவரது கொலைக்குப்பிறகு அவரது ஒன்பது வயது மகன் பதின்மூன்றாம் லூயி  பட்டத்திற்கு வருகிறான். இந்நிலையில் உண்மையான நிர்வாகப்பொறுப்பை அவர் தாயார் மரி தெ மெடிஸி, ஆலோசகர்கள் உதவியுடன் நடந்த்துகிறார். எனினும் நிர்வாகத்தில் தொடர்ந்து குழப்பங்கள், ஒரு கட்டத்தில் தாய்க்கும் மகனுக்குமே பகை ஏற்படுகிறது. நிர்வாகம் முழுமையாகத் தன் தாயின் கைக்குப் போனதை  விரும்பாத அரசன் தாய்க்கு அனுசரணையாக இருந்த கோன்சினி(le conte Concini) பிரபுவைக் கொல்வதோடு, நிர்வாகர்த்திலிருந்து தாயையும் ஒதுக்கிவைக்கிறான்.  அதன் பின்னர் உருவான அரசியல் சிக்கலைத் தீர்த்துவைத்ததில் கார்டினல் ரிஷ்லியெவிற்குப் பெரும்பங்குண்டு.  பதின்மூன்றாம் லூயி மன்னன் இறந்து பதினான்காம் லூயி பட்டத்திற்கு வந்த போது அவருக்கும் வயதென்னவோ ஐந்துக்கும் குறைவுதான். திரும்பவும் ஆட்சி நிர்வாகம் இறந்த மன்னனின்  மனைவியான ஆன் என்பவளிடம் போகிறது. ஆன் ஆதரவுபெற்ற ழூல் மஸாரன்(Jules Mazarin) அதிகாரம் கொடிகட்டிப்பறக்கிறது. நிர்வாகம் தள்ளாடுகிறது, மக்கள் வரிச்சுமையால் அல்ல்படுகின்றனர். ழூல் மசாரன் ஊழலுக்குப் பெயர்போனா ஆசாமி, இவரைப்பற்றிக் கூற சுவாரஸ்யமான விடயங்கள் நிறைய இருக்கின்றன. நாட்டுமக்களைப்போல்வே   பதினான்காம் லூயியும் சுதந்திரத்திற்கும்  முற்றுமுதலான அதிகாரத்திற்கும் விழைகிறான்.

நேர்மையான மனிதன் :

பதினேழாம் நூற்றாண்டு  மேல் தட்டுமக்களின், பெண்களின் அபிமானம் பெற்ற , கலை இலக்கியத்தின் மையப்பொருளாக இருந்த சொல் « நேர்மையான மனிதன் »  பதினான்காம் லூயி காலத்தில் அரசு நிர்வாகத்தில் பொறுப்பிலிருந்துகொண்டு ஏராளாமாக சம்பாதித்து,   மக்களின் வெறுப்பைக் கணிசமாகப் பெற்றிருந்த  கார்டினல் மஸாரன் கூட,  நேர்மையான மனிதன் என்ற சொல்லை மக்கள்  அதிகம் நேசிக்கக் காரணமாக இருக்கலாம். சமயப்போர் நேரிடையாகவும், மறை முகமாகவும் மக்களைப் பாதித்திருந்தது. ஆண்கள் சமயம், அரசியல் என்று ஏதாவதொரு காரணத்தை முன்னிட்டுச் சண்டையிட்டுக்கொண்டிருக்க, பெண்கள் படைப்பிலக்கியங்களில் ஆர்வம் செலுத்தினார்கள்.  நேர்மையான மனிதன் என்பவன் பெண்களின் அபிமானத்தைப் பெறவேண்டும் ; உழைப்பைக்காட்டிலும் பிறரை மகிழ்விக்கக் கூடியவனாக  இருப்பது ;  மரபுகளை, ஒழுங்குகளை, சமயத்தை துச்சமாக மதிப்பது ; நாத்திக சிந்தனை, நெறிமீறல் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தகைய சூழலில் தான் நொர்மாந்தி பகுதியைச் சேர்ந்த ஹர்க்கூர் (Harcourt) பிரபுவின் அவையைச் சேர்ந்த   நிக்கொலா ஃபொரெ (Nicolas Foret) என்பவர் « நேர்மையான மனிதன் அல்லது சபையை மகிழ்விக்கும் கலை » (L’honnête homme ou l’art de plaire à la cour) என்றொரு நூலை சூழலுக்கேற்பப் படைத்தார், பெண்கள் அபிமானத்திற்குரிய இலட்சிய மனிதனுக்கென சில  இலக்கணங்களையும் அதில் சிபாரிசு செய்தார். ஆக மொத்தத்தில் பதினேழாம் நூற்றாண்டு பிரான்சு நாடு நேர்மையான மனிதனுக்கென்று சில இலக்கணங்களை வகுத்திருந்தது : அவன் சகலகலாவல்லவன், ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் அறிந்தவன். பிரபுக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன் ,மேல்தட்டுமக்களுக்கு உரிய பண்புகளைத் தவறாமற் பெற்றவன். அவன் இருக்குமிடம், புழங்குமிடம் ஒளியூட்டப்பட்டது, பிரகாசிக்கும் தன்மையது. அவனுடைய நளினமான பாவங்களும் நேர்த்தியான உடையும், சுவைநயமிக்க பேச்சும், நுட்பமான செயல்களும்  பிறர் கவனத்தைப் பெறுபவை. ஆக மொத்த த்தில்  ஒரு கூட்டத்தில் அல்லது பலரும் கூடியிருக்கிற சபையில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விழைப்பவன். தன்னலத்திலும் பிறர் நலத்திலும்சேர்ந்தாற்போல அக்கறை செலுத்தும் மனிதன்.

(தொடரும்)

 

 

 

 

 

 

நிலா அழகாயிருக்கில்லே ?

(எனது நாவல்கள் அனைத்துமே சிறுகதைகளாக முதலில் வெளிவந்தவை

பார்த்திபேந்திரன் காதலி (ஆனந்த விகடன்) –நீலக்கடல்

நிலா அழகா இருக்கில்லே ? (நிலா இதழ்)   – மாத்தா ஹரி

புஸுபுஸுவென்று ஒரு நாய்க்குட்டி  (திண்ணை இதழ்) –  காஃப்காவின் நாய்க்குட்டி)

 

அருகிலிருந்த தேவாலயத்தின் மணி இரவின் நிசப்த த்தைக் குலைத்தது. விழித்துக்கொண்டேன். ஓசையை எண்ணத் தவறியிருப்பினும் பன்னிரண்டு முறை அடித்திருக்கவேண்டும். இந்த எண்ணிக்கையில் தவறு இருக்கலாம். அது இங்கே முக்கியமல்ல. நான் விழித்துக்கொண்டதும், வியர்வையில் நனைந்திருந்த தும் இங்கே முக்கியம், நிஜம்.

 

இந்த அவஸ்தை எனக்குக் கடந்த இரண்டு மாதங்களாகவே இருக்கிறது. சொல்லிவைத்தாற்போல், நள்ளிரவில் சர்ச்சின் மணியோசையோடு புதைந்து பூச்சாண்டி காட்டுகிற அவஸ்தை. சிலந்தி வலையில் சிக்கிய பூச்சியாய்ப் போராடிக் களைத்து, இறுதியில் சித்தியை எதிர்பார்த்துக் காத்திருக்கிற மரண அவஸ்தை.

 

எலிஸா என்னோடு படுக்கையைப் பகிர்ந்துகொள்ளும் பிரெஞ்சு நண்பி. ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறாள். அவளுக்கு நான்படும் அவஸ்தையின் பரிமாணம் தெரியாது இரண்டு கைகளையும் பிணைத்து, மடக்கியிருக்கும் கால்களுக்கிடையில் துருத்திக்கொண்டு கம்பளிப்போர்வைக்குள் அடங்கிக் கிடந்தாள்.

போர்வையை ஒதுக்கிவிட்டு, இரவ உடையில் உடலை மறைத்து, பாதங்களில் ஸ்லிப்பரைச் சூடி சபதமின்றி எலிஸாவின் தூக்கம் கலைந்துவிடக்கூடாது என்ற அதீத கவனத்துடன், கதவினைப் பின்புறம் தள்ளிச் சாத்திவிட்டு வரவேற்பறைக்குள் நுழைந்தேன்.

காத்திருக்கும் என் கம்ப்யூட்டரை கண்டதும் பெருமூச்சு. எதிரிலிருந்த நாற்காலியில் என்னை இருத்திக்கொண்டு, மின்சாரத்தை இட்டு உயிர்ப்பித்தேன். மானிட்டர் விழித்துக் கண்களைக் கசக்கிக் கொண்டேன். தமிழ் சாஃப்ட்வேரை உயிர்ப்பிக்கும்வரை பொறுமையில்லை. விரல்கள் கீ போர்டைச் சீண்ட ஆரம்பித்து தடதட வென்றன.

கற்பனையும் நிஜமும் வார்த்தைகளாக உயிர்பெற, விரல்கள் அவற்றுக்கு வடிவம்கொடுக்கப் பரபரபரத்தன.  எழுத்தாளன் மனத்துடன் கண்தை மட்டுமின்றி  காணாததையும் இறக்கிவைக்க ஆரம்பித்தேன். இல்லையெனில் எந்த நேரமும் தலைவெடித்துவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.

பெரும்பாலான ஐரோப்பியப் பெண்களைபோலவே எலிஸாவும் புகைபிடிப்பவள். குறிப்பாகஅவள் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் புகை வருவதைக்கண்டு அருவருப்பதுண்டு. ஆனால் அதனை அவளிடம் சொல்ல எனக்கு வழக்கம்போலத் தயக்கம், காரணம்  நானும் புகைபிடிப்பவன், தவிர அவள் பெண்கள் விடுதலைப்பற்றி அதிக விவாதிக்கும் பெண்.

எலிஸாவிற்கு எல்லாவற்றிலும் சுதந்திரம் வேண்டும், செக்ஸ் உட்பட. விமலாவிற்கு நேர் எதிர். விமலாவிற்குப் பிடிக்காத தெல்லாம் எலிஸாவிற்குப் பிடிக்கும். எனக்கு எலிஸாவைப் பிடித்து, விமலாவைப்பிடிக்காமற் போனது இப்படித்தான்.

விமலா…

அம்மி மிதித்து அருந்ததிக் காட்டி, ‘மாங்கல்யம் தந்து நானே’விற்கு ப் பிறகு ‘ராமனிருக்கும் இடம் அய்யோத்தி என’  பிரான்சு நாட்டிற்கு வந்த என்னுடைய சீதா பிராட்டி, தாலிகட்டிய பந்தம். ‘பின் தூங்கி முன் எழுந்து ‘ கேட்டிருந்தால் எலிஸா வீடுவரைக் கூடையில் என்னைச் சுமந்து செல்ல தயாரகவிருந்த இருபத்து நாலு காரட் பத்தினிப்பெண்.

வழக்கம்போல தலையைக் காட்டிவிட்டு வந்துவிடுவது என்றுதான் இந்தியாவிற்கு வந்திருந்தேன். அப்பாவிற்கு ஏற்பட்ட நெஞ்சுவலி, அம்மாவை மூக்கு சிந்தவைக்க ‘எலிஸா’ வைத் தற்காலிகமாக மறக்க நேரிட்டது. விமலாவிடம் அம்மாவின் எதிர்பார்ப்பும், அவள் தகப்பனிடம் அப்பாவின் எதிர்பார்ப்புமிருக்க, என்னுடைய எதிர்பார்ப்பு பற்றிக் கவலைப் படாமல் அவசரத்தில் போட்ட மூன்று முடிச்சு. கோழையா ஒரு புழுவைப்போல பெற்றோருக்கு வளைந்து, அவளைக் கைப்பற்றி பிரான்சுக்கு வந்த பிறகுதான் எனக்கும் விமலாவிற்குமுள்ள இடைவெளி இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் உள்ள தூரமென புரிந்தது.

எலிஸா, எங்கள் இருவரையும் ஒட்டவைக்க முயற்சி எடுத்தது என்னவோ உண்மை. மஞ்சள் குங்குமத்தைவிட லிப்ஸ்டிக் பர்ஃப்யூம்களில் எனக்கிருந்த கூடுதல் இச்சையில் விமலா வேண்டாதவளானாள். பிறகு ? பிறகென்ன ஒரு நாள் போயே போய்விட்டாள். மணெண்னெய் இன்றி, ஸ்டவ் விபத்தின்றி, அவளை முடித்துவிட்டேன். அந்நியர் விவகாரங்கள் என்றால் அலட்சியத்தோடு கையாளும் போலிஸாரின் விசாரணை, நீதிமன்றம், தீர்ப்பு எல்லாமே நான் நினைத்தபடி அமைந்தது. எலிஸா கூட ஆரம்பத்தில் சந்தேகப் பட்டு இப்போது நான் அப்பாவி என்கிறாள்.

இரண்டு மாதத்திற்கு முன்புவரை நிமதியாகத்தானிருந்தேன். எப்போது, எங்கே என்பதில் குழப்பமிருக்கிறது. ஆனால் விமலாவால் துரத்தப்படுகிறேன். ஓட முடியாமல் களைத்திருக்கிறேன். இந்த பயம் அங்கே இங்கேயென்று படுக்கைவரை வந்துவிட்டது.

அள்தான் எழுந்துவிட்டிருந்தாள். இரண்டு நாட்களாக க் காய்ச்சல் வேறு,  தொடர்ந்து இருமுவது கேட்ட து. சில விநாடிகளின் மௌன ஓட்டத்திற்குப் பிறகு, அந்தக் காலடி ஓசை. எப்போதும் பதிய மறுக்கும் பாதங்கள். காற்றுக்குக் கூட துன்பம் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் அக்கறைகொண்ட நடை. அது ஓசையல்ல, முணுமுணுப்பு. விமலாவைப்போலவே, என் வெறுப்புக்கு ஆளாகும் காலடிகள். திடீரென்று நடக்கும் சப்தம் அறுபட்டது.  சிலநொடிகள் அமைதிக்குப் பிறகு கதவு திறக்கிறது, பருத்தியியினால் ஆன இரவாடையில் விமலா.

« விமலா.. ! » அதிர்ச்சியில் மேல் அண்னத்தில் நாக்கு ஒட்டிக்கொண்டது. அவள் மெல்ல நெருங்கினாள்.

« என்ன பரத் மறுபடியும் பிரமையா ? நான் விமலா இல்லை. எலிஸா. நாளைக்கு முதல்வேலையா சைக்கியாஸ்ட்ரிட்டைப் போய்ப் பார்க்கறீங்க. »

என் தோளில் சாய்ந்து, தனது மெல்லிய கரங்களை என் கழுத்தில் கொண்டுபோய்வருடி, மெள்ளக் குனிந்து தன் அதரங்களை என் கழுத்தில்  ஒற்றியெடுத்தாள். நான் கற்பனையில் விமலாவை நிறுத்திக் கலவரப்பட்டேன். .

« என்ன இப்படி வேர்க்குது ? » என்றவள் தன் தலையை அவளது மார்பில் இறக்கிக்கொண்டாள். நான் எழுதியிருந்ததைப் படிக்க ஆரம்பித்தாள். »

எங்களிடையே நிசப்தம் ஆக்ரமித்துக்கொண்டிருந்த து. மேசையிலிருந்த அலாரம் தேவையில்லாமல் அலற, அவள் என்னிடமிருந்து விடுவித்துக்கொண்டாள்.

« எனக்குத் தண்ணீர் வேணும். தாகமாயிருக்கு » என்றவள், சமயலறைக்குச் சென்றாள். அடுத்த சில விநாடிகளில், தண்ணீர் பாட்டிலைத் திறப்பதும் பின்னர் குடிக்கின்ற ஓசையும் தெளிவாக க் கேட்டது.

« பரத் சிகரட் தீர்ந்துபோச்சு வாங்கி வாயேன். »

«  இந்த நேரத்திலா ? » என்ற கேள்வி மனசுக்குள் எழுந்தாலும், என மன அழுத்தத்திற்கும் உடற்முழுக்கத்திற்கும் எனக்கும் சிகரெட்டும்  ‘சில்’ என்ற வெளிக்காற்றும்தேவைப்பட்டன. லெதர் ஜாக்கெட்டை அணிந்து தலைமுடியைக் கையால் ஒதுக்கிக்கொண்டு வெளியில் வந்தேன்.

வீதி வெறிச்சோடியிருந்தது. சாலயோர மரங்க்களின் பயமுறுத்தலை யொதுக்க, மேகத்திலிருந்து வேளிப்பட்டு  நிலா முழுசாக வெள்ளை வெளேரென்று புத்தம் புதுசாக.–  இன்று பௌர்ணமியோ ? நடைபாதையில் சாம்பல் நிறத்தில் ஒரு பூனை. தலையை உயர்த்தி என்னைப் பார்த்தபின்னர் இறக்கிக் கொண்டது, நிலவொளியில் மின்னும் கண்களில், நீலத்தில் தீ ஜுவாலை.

மீண்டும் அந்த ஓசை, பின் தொடர்வதுபோன்ற காலடிஓசை. எனக்குப் பழக்கப்பட்ட என்னைத் துரத்தும், நான் அறிந்த விமலாவின் காலடிகள். ஏதோ ஒரு திட்டத்தோடு நிராயுதபாணியாக இருக்கும் இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்து நெருங்கும் காலடிகள். குளிர்ந்த காற்று, அணிந்திருந்த லெதர் ஜாக்கெட்டில் இறங்கி முதுதுத் தண்டில் இறங்க உடலொருமுறை சிலிர்ந்து அடங்கியது.

« நிலா அழகாயிருக்கில்லே ? » என் தோளில்  குளிர் காற்றோடு கலந்த வார்த்தைகளின் ஸ்பரிஸம். திரும்பிப் பார்க்கிறேன்.

பனியில் நனைந்த ஒரு பெண்ணுருவம். முகம், விமலாவினுடையது தான் சந்தேகமில்லை.

« விமலா நீயா ? »

«நானேதான் பரத் ! இங்க பாருங்க நீங்க கட்டின தாலியில் மஞ்சளின் ஈரங்கூட இன்னும் காயலை. என்னோட உதட்டைப்பாருங்க, உங்களுக்குப் பிடித்த  எலிஸாவின் உதடுகள்போல இருக்க  பச்சை இரத்தத்தில் தோய்ந்துவச்சிருக்கேன்..  பரத் கிட்ட வாங்க.. »

« இல்லை விமலா, என்னை விட்டுடு. ஏதோ நடந்துபோச்சு »

«  அதை த்தான் நீங்க சரியா புரிஞ்சுக்கணும். வாவிலும் சாவிலும் என்னைப்போலப் பெண்ணுக்கு  கணவன் துணையில்லாம இல்லாம எப்படி ? மாட்டேன்னு சொல்லிடாதீங்க. »

அவள் என்னை நெருங்கியிருந்தாள். அபோது தான் அதனைக் கவனித்தேன். அதிர்ச்சியில் உறைந்து நிற்க,  நிலவொளியில் பளபளவென்று  மின்னிய அந்தக் கத்தியை என் வயிற்றில் மெள்ளச் இறக்கினாள். நான் துவண்டு சரியத் தொடங்கினேன்.

« என்ன இன்னுமா எழுதற ? நான் சிகரெட் கேட்டேனே என்ன ஆச்சு ? »

« எலிஸாவின் குரல் கேட்டு நான் எழுதிய கதையை அப்படியே வைத்துவிட்டுத் திருப்பினேன்.

« மன்னிச்சுக்க டியர்.. கதையிருந்த கவனத்துல உன்னை மறந்துட்டேன் »

அவளுக்குச் சிகரெட் இல்லாம எதுவும் நடக்காது.  இந்த நேரத்தில் கடைகள் ஏது ? ஏதாவதொரு தானியங்கி எந்திரத்த்தை த் தேடியாகனும் அல்லது ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகனும். லெதர் ஜாக்கெட்டை  அவசரம் அவசரமாகப் போட்டுக்கொண்டு வெளிக்கதவைக் கவனமாகச் சாத்திவிட்டு இரண்டு இரண்டு படிகளாகத் தாவி இறங்கி  வீதியில் கால்வைத்தேன்.

வீதி வெறிச்சோடியிருந்த து. சாலயோர மரங்களின் பயமுறுத்தலை யொதுக்க, மேகத்திலிருந்து வேளிப்பட்டு நிலா முழுசாக வெள்ளை வெளேரென்று. இன்று பௌர்ணமியோ ? நடைபாதையில் சாம்பல் நிறத்தில் ஒரு பூனை. தலையை உயர்த்தி என்னைப் பார்த்தபின்னர் இறக்கிக் கொண்டது, நிலவொளியில் மின்னும் கண்களில், நீலத்தில் தீ ஜுவாலை….

(மாத்தா ஹரி நாவலின் மூலக் கதை. இச்சிறுகதை  நிலா இதழில் 2002ல் வெளியாயிற்று. )

 

மொழிவது சுகம் ஏப்ரல் 24 2017

 

 

பிரான்சு நாடும் அதிபர்  தேர்தலும்

Election 2017

பிரான்சு நாட்டின் அதிபர் தேர்தல் முதற் சுற்று முடிவு தெரிந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக  தேர்வு செய்யப்பட்டு,  மாறி மாறி ஆட்சிசெய்த  கட்சிகளின் வேட்பாளர்களைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்.  இரண்டாவது சுற்றில் தேர்வாகி இருப்பவர்கள் ஒருவர் எம்மானுவல் மக்ரோன், மற்றவர் மரின் லெப்பென்.  இம்முடிவு மற்றொரு உண்மையையும் தெரிவித்துள்ளது, தற்போதைக்கு இட து சாரி வேட்பாளர்கள் பிரெஞ்சு அரசியலுக்கு வேண்டாம் என்பது தான் அது,  பிரெஞ்சு வாக்காளர்கள் அவர்களைக் கூடாதென நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்திவிட்டார்கள்.

முதல் சுற்றில் பதினோரு வேட்பாளர்கள்.  அவர்களில் முதல் ஐந்து இட த்தைப் பெற்ற முக்கியமானவர்கள் 1. எம்மானுவெல் மக்ரோன்2.  மரின் லெப்பென் 3. ஃபிரான்சுவா ஃபிய்யோன் 4. ழான் லுயிக் மெலான்ஷோன் 5. பெனுவாஅமோன்

பிரான்சுவா பிய்யோன்(François Fillon)

கடந்த காலத்தில் RPR , இன்றையUMP மொத்தத்தில்  தெகோல் கட்சியென (Charles de Gaulle) புதுச்சேரி முன்னாள் பிரெஞ்சு ராணுவ வீரர்கள் அபிமானத்துடன்அழைக்கும் கட்சியின் வேட்பாளர். உட்கட்சி தேர்தலில் கட்சியின் சக வேட்பாளர்களான முன்னாள் அதிபர் நிக்கோலா சர்க்கோசியையும், கருத்துக் கணிப்பில் அதிபராக வரக்கூடும் என நம்ப ப்பட்ட மிதவாத வலதுசாரியும், முன்னாள் பிரதமருமான  அலென் ழுப்பேயையும் வென்று, கட்சியின் ஆஸ்தான வேட்பாளராகக் களத்தில் இறங்கினார். இவர் தேர்வுக்கு தீவிர கிறித்துவ மதவாதிகள் பின்புலத்தில் இருந்த தாக நம்பப்பட்டது. உட்கட்சி தேர்தலில் வென்றபின்பு ஃபிரான்சுவா  ஃபிய்யோன் அதிபராவது உறுதி என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. அதன் பின்பு புலனாய்வு பத்திரிகைகள்  அவர் வீட்டுக் குப்பையைக் கிளறியதில்   எது வெளிவருமோ அதுவெளியில் வந்தது.

Affaire Penelope Fillon’   அல்லது பெனெலோப் ஊழல் :

திருமதி பெனெலோப், திரு ஃபிய்யோன் மனைவி, வழக்கறிஞர். குற்றச்சாட்டின்படி 1998 -2007 அடுத்து 2012 இந்த ஆண்டுகளில் வேட்பாளர் ஃபிய்யோன் தமது மனைவியை மட்டுமல்ல தமது பிள்ளைகளையும் தமது அலுவலர்களாக நியமித்து மனைவிக்கு 813440 யூரோவை ஊதியமா க க் கொடுத்தார் என்பது முதற் குற்றசாட்டு,  அடுத்து ‘Revue des deux monde’  பிரதியின் ஆலோசகர் என்ற வகையில் 100 000 என்ற தொகையை பெனெலோப் பெற்றார் என்பது  இரண்டாவது குற்றசாட்டு, இத்தம்பதிகளின் பிள்ளைகளும் 2005-2007ல் அவ்வாறான அலுவல்களுக்கு 84000 யூரோக்களை ஊதியமாக பெற்றனர் என்ற குற்றசாட்டுமுண்டு.  மேற்கண்டவை முதன்மைக் குற்றசாட்டுகள். இவற்றைத் தவிர வேறு சில குற்றச்சாட்டுகளும் உள்ளன.பாரளுமன்ற உறுப்பினர் தமது அலுவல்களைக் கவனிக்க உறவினர்களை அரசு செலவில் நியமித்துக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் இப்பிரச்சினையில் உண்மையில் அவர்கள் அப்பணியைச் செய்தார்களா ? என்பதும் ஊதியத் தொகையின் அளவும் பிரசினைக்கு வித்திட்டுள்ளன. இது தவிர ஃபிய்யோன் பரிசாகப்பெற்ற பொருட்கள் குறித்தும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடகட்சி அதிபர்வேட்பாளர் தேர்வின்போது தம்மை அப்பழுக்கற்ற வேட்பாளர் எனகூறிகொண்டவர், சக வேட்பாளரான சர்க்கோசியை (அவர் மீதும் வழக்கு, விசாரணை அளவில் உள்ளது) கடுமையாக விமர்சித்த மனிதர்,  பிரச்சினை வெளிவந்த பிறகு சட்டப்படி அதில் எந்த த் தவறுமில்லை என்றார். அவரது கட்சியிலேயே ஒரு சாரார் அவரை விலக்கிக்கொண்டு மாற்று வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்றார்கள். ஃபிய்யோன்  விலகமாட்டேன் என அடம் பிடித்தார். அவருக்கு எதிராக இருப்பவர்களைச் சமாதானப்படுத்தினார், கட்சியின் தீவிர அபிமானிகளின்  வாக்கும், தீவிர கிறித்துவ மதவாதிகளின் வாக்கும், ஆளும் கட்சிமீதான கோபமும் தம்மைக் காப்பாற்றிவிடுமென நம்பினார். ஆனால் முதல் சுற்று முடிவு அவரை ஏமாற்றிவிட்டது. நாட்டின் முதன்மையான கட்சியின் வேட்பாளர்  மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு இரண்டாம் சுற்றிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

 

பெனுவா அமோன்(Benoit Hamon)

தற்போதைய ஆளுங்கட்சியான மிதவாத இடதுசாரிகள் கட்சியின் சார்பில் பெனுவா ஹமோன் முதல் சுற்றுக்குத் தேர்வானார். கடந்த அதிபர் தேர்தலில் இருந்தே சோஷலிஸ்டுகளின் மூத்த தலைவர்களிடையே பிளவு இருந்த து. 2007லும், 2012லும் தீவிர சோஷலிஸ்டு அபிமானிகள் உட்கட்சி அதிபர் வேட்பாளர் தேர்வில் தொடர்ந்து தோல்வியைத் தழுவினார்கள்.  உட்கட்சி தேர்தல் முடிந்த தும், வெற்றிபெற்ற தங்கட் கட்சி எதிரணி வேட்பாளரை, கட்சியின் நலனை முன்னிட்டு அதிபர் தேர்வில் ஆதரிப்பது  என்கிற சடங்கு தொடரும். கடந்த 2012 அதிபர் தேர்தலில் ஹொலாந்து எனும் மிதவாத சோஷலிஸ்டு வென்றார். உட்கட்சி அதிபர் வேட்பாளர்  தேர்தலில் அவருக்கு எதிராகப்போட்டியிட்ட மர்த்தின் ஒப்ரி போன்ற  தீவிர சோஷலிஸ்டை வென்று பொது வேட்பாளராக களத்தில் இறங்கினார். வழக்கம்போல சோஷலிஸ்டுகள் தங்கள் வேட்பாளரை ஒற்றுமையாக ஆதரித்தனர். ஹொலாந்து அதிபரானார். தமது கட்சியின் எதிரணியினரை அவர் ஆசிபெற்ற அமைச்சரவையில் அமைச்சர்களாக வைத்து பிரச்சினையை முடித்துக்கொள்ள நினைத்தார்.  அமைரவையில் பதவிக்காலம் நெருங்க நெருங்க அதிபர் ஹொலாந்தும், அவருடைய  அமைச்சரவையும் மக்கள் செல்வாக்கை இழந்துகொண்டிருந்தது  மூழ்கும் கப்பல் எனத் தெரிந்து, ஹொலாந்து ஒரு வலதுசாரிபோல நடந்துகொள்கிறார் என்ற குற்றசாட்டினை ஒரு சாக்காகவைத்து, அதிபரின் எதிரணியினர்  அமைசரவையிலிருந்து, (பழைய பகையும் காரணம்)  ஒவ்வொருவராக விலகிக் கொண்டனர், அவர்களில் ஒருவர்தான் பெனுவா அமொன்.

உட்கட்சி அதிபர் வேட்பாளர் தேர்வில் கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மையோர் ஆதரவினால், அதிபர்ஹொலாந்தின் அமைச்சரவை பிரதமராக இருந்த மனுவல் வால்ஸ் என்பவரைத் தோற்கடித்து வேட்பாளராக பெனுவா அமோனால் முடிந்த து. எனினும்  முதற்சுற்றுத் தேர்வில் ஹொலாந்து ஆதரவாளர்கள் இவரை ஆதரிக்காததும்,  முன்னாள் சோஷலிஸ்டும்,  கம்யூனிஸ்டுகள் ஆதரவுபெற்ற தீவிர இடதுசாரி மெலான்ஷோன் இட து சாரி  வாக்குகளைப் பங்கிட்டுக் கொண்ட தும் இவருடைய மிக மோசமான தோல்விக்குக் காரணம். ஆளுங்கட்சியின் வேட்பாளர் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெறாதது மட்டுமல்ல நான்காம் இட த்திற்குத் தள்ளப்பட்ட து மிகப்பெரிய கொடுமை.

எம்மானுவெல் மக்ரோன்(Emmanuel Macron)

39 வயது இளைஞர். அதிக வாக்குகள் பெற்று முதற் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள வேட்பாளர். 2006 -2009 வரை  ஆளும் சோஷலிஸ்டு கட்சியின் உறுப்பினராக இருந்தவர். நிர்வாகத்துறையில் உயர் கல்வி முடித்தவர். திடீரென்று 2012ல் அதிபர் ஹொலாந்து தமதுஅலுவலக முதன்மைசெயலராக நியமித்தார். அதன் பின்னர் அவரது செயல் திறனின் அடிப்படையில் நாட்டின் முக்கியமான நிதி அமைச்சர் பதவியை 2014ல் வழங்கினார்.  சக அமைச்சர்களுக்கு இவர் மீது பொறாமையுங்கூட. தமது செல்வாக்கு சரிந்திருக்கும் உண்மையை உணர்ந்த ஹொலாந்து மீண்டும் அதிபர் தேர்தலில் நிற்கப்போவதில்லை என அறிவிக்க நேரம் பார்த்து இவரும் விலகிக்கொண்டு அதிபர் தேர்தலுக்குக் கட்சிகள் சாராத வேட்பாளராகத்  தம்மை அறிவித்து நாடெங்கும் ஆதரவு திரட்டினார்.  வலது சாரிகள், இடது சாரிகள், கல்விமான்கள், வல்லுனர்கள், கலைஞர்கள் ஆதரவுகள் கிடைத்தன.  ஹொலாந்து ஆதரவு பெற்ற பிரதமர் வால்ஸ் உட்கட்சி தேர்தலில் தமக்குரிய வாய்ப்பின பெனுவா அமோனிடம் பறிகொடுக்க, இவரோ கட்சி சார்பின்றி போட்டியிட்டு பிரான்சு நாட்டின் அடுத்த அதிபராக வரகூடிய வாய்ப்புள்ள முதல் வேட்பாளர்.

மரின் லெப்பென் (Marine Le pen)

தீவிர வலது சாரி. இனவாதி. வாரிசு அரசியலின் பிரெஞ்சு உதாரணம். அப்பா jean Marie Lepen  பல அதிரடி கருத்துக்களை வெளியிட்டு அவ்வப்போது அபராதம் செலுத்தும் நபர். மரின் லெப்பென் தந்தைக்குத் தப்பாத வாரிசு. டொனால் ட்ரம்ப்பின் பெண்வடிவம்.  பாரம்பர்ய வலதுசாரிகளின் வீழ்ச்சி, பாமர மக்களின் செல்வாக்கு, தேசியவாதம், இனவாதம், பயங்கரவா த த்திற்கு எதிரான நட வடிக்கைகள் என்று அறிவிக்கும் அதிரடியான கொள்கைகள் இவரை முன்னிறுத்துகின்றன. கருத்துக் கணிப்பின்படி இரண்டாவது சுற்று தகுதி த் தேர்வில்  முதலிடம் பெறுவார் என நம்பப் பட்ட து.  மக்ரோன் இவரைப் பின்னுக்குத தள்ளி முதலிட த்தில் இருக்கிறார். 2002 அதிபர் தேர்தலில் இவருடைய தந்தை ழான் மரி லெப்பென் இவரைப்போலவே இரண்டாம் இட த்தைப் பெற்றார்.  அவருக்கு எதிராக நின்றவர் இன்றைய ஃபிய்யோன் கட்சியைச்சேர்ந்த  சிராக். இனவாத கட்சி பிரான்சு அதிபராக வந்துவிடக்கூடா தென கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒன்று திரண்டு சிராக்கிற்கு ஆதரவளிக்க ழான் மரி லெப்பென் தோற்றார். தற்போதும் இடதுசாரிகளைக் காட்டிலும் வலது சாரிகள் எம்மானுவெல் மக்ரோனுக்கு ஆதரவை பகிரங்கமாக த் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அபிமானிகள் எந்த அளவிற்கு மரின் லெப்பெனை எதிர்த்து வாக்களிப்பார்களெனத் தெரியவில்லை.  மரின் லெப்பென் தோற்கடிக்கப்படவேண்டும் என்பது தான் பெரும்பான்மையோர் ஆசை. பிரான்சு நாட்டின் தலைவிதி வாக்காளர்கள் கையில் இருக்கிறது. இன்னொரு  ட்ரம்ப் உருவாகிடக் கூடாது என்பதுதான் எல்லோருடைய கனவும்.

—————————————————————————–

மொழிவது சுகம் ஏப்ரல் 18 2017

விலைபோகும் மானம் : சென்னை முதல் பாரீஸ்வரை

ஜனநாயக நாடுகள் என்று அழைக்கப்படுபவைகளை இனி பணநாயக நாடுகள் என்று அழப்பதுதான் முறை. இன்றைக்குப் பணம்தான் வேட்பாளரைத் தீர்மானிக்கிறது, வாக்குகளைத் தீர்மானிக்கிறது, வெற்றியைத் தீர்மானிக்கிறது முடிவில் ஆட்சியையும் ஆள்பவரையும் தீர்மானிக்கிறது. மக்கள் வெல்வதில்லை, பணம்தான் வெல்கிறது. எதையும் பணம் தீர்மானிப்பதுபோல ஜனநாயகத்தையும் பணமே தீர்மானிக்கிறது. ஆர்கே நாகர் இடைத்தேர்தல் ஓர் உதாரணம். பிறநாடுகளில் பணம் இலைமறை காயாக அல்லது, பிறருக்குத் தெரியவந்தால் தப்பு, என்ற நிலைபாட்டுடன் நாகரீகமாக வேடமிட்டு  மனிதர்களைக் கவர்கிறதெனில்,  நம்மிடத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தாலும் பரவாயில்லை என்பதுபோல, சாலை நடுவே,  ஊரறிய, நாடறிய   எதைக்குறித்தும், எவர் குறித்தும்  கவலைப்படாமல் பகிரங்கமாகக் குத்தாட்டம் போடுகிறது. அண்மைக்காலத் தமிழகச் சம்பவங்கள் தெளிவானச் சாட்சியங்கள்.

மானம் எனும் உணர்வு எல்லா மொழியிலும், எல்லா நாடுகளிலும், எல்லா இனங்களிலும் அவரவர் சமயம், மரபு, பண்பாடு,  பழக்கவழக்கங்கள், சமூகப்படிநிலைகள், கல்வி, பணம், வயது சார்ந்து இருக்கவே செய்கிறது.  ‘அப்பாவிகளைக் கொல்வது’ வெட்க கேடானது எனப் பயங்கரவாதிகளை இடித்துரைக்கும் அரசுகள், ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொல்லும் வெட்கக் கேடான வரலாற்றைத் தொடர்ந்து வாசிக்கிறோம்.  « பிச்சை எடுக்க வெட்கமாயில்லை, உழைத்து சாப்பிட என்ன கேடு ? » எனக்கேட்பவன் அலுவலக நாற்காலியில் அமர்ந்ததும், « கையெழுத்து  சும்மாவராது, வீட்டில் போய் அம்மாவை பாரு » என்கிறான்.

கூச்சம், வெட்கம், மானம், தலை குனிவு, பழிச்சொல், அவமானம் அனைத்துமே பரிமான அளவில் வேறுபடினும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனிதர் வாழ்க்கையில்  நேற்றைய பொருளில்தான் இன்றும் இச்சொற்கள் பொருள்கொள்ளப்படுகின்றவனவா ? என்பதுதான் இன்றைக்கு நம்முன்னே உள்ள கேள்வி.

தமிழ் இலக்கியமும் மானமும் :

« பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின »தாக வாழ்க்கை இருக்கவேண்டும் என்கிற அறத்தை இல்லறவாழ்க்கைக்கும் வற்புறுத்தும் வள்ளுவன், பொருட்பாலில் பிற்சேர்க்கையாக   « மானம்  » என்ற அத்தியாயத்தை எதற்காக இணைக்கவேண்டும் ? அறங்களை பகுக்க அறிந்தவனுக்கு, நியதிகளையும் வாழ்க்கைக் கூறுகளையும் இனம் பிரித்து கையாளத்தெரிந்த வள்ளுவனுக்கு, இனி வருங்காலத்தில் மானம் பொருளோடு பிணைக்கபட்டதென்கிற தீர்க்க தரிசனமும் தெள்ளத் தெளிவாக இருந்துள்ளது.   காரணம் எதுவாயினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே « மானம் » என்ற பண்பின் அவசியம் கருதி அதற்கொரு அத்தியாயத்தையும் பத்து குறளையும் ஒதுக்கினான், வள்ளுவனின் உயர்மக்கள் « இளிவரின் வாழாத மானம் உடையார் ».

தமக்கு ஓர் இழிவு வந்தபின் வாழக்கூடாது எனத் தீர்மானித்து உயிரை விடுதல் என்ற பண்பு உலகமெங்கும் இருக்கின்றது. இன்றும் பெரும்பாலான தற்கொலைகளுக்கு அதுவே முக்கிய காரணம்.  புறநானூற்றில் :  «சிறுவன் படை அழிந்து மாறினன் என்று பலர்கூற, மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்ட என் முலை அறுத்திடுவென் யான் » என ஒரு தாய்  சூளுரைப்பது, பழிக்கு அஞ்சியே.  சிலப்பதிகார கண்ணகிக்கு கணவன் கொலையுண்டதைக் காட்டிலும் அவன் கள்வனென பழியுற்றது அவமானம். « காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ, என் கணவன்?’- என வினவுகிறாள் அவள். முதலாம் நெடுஞ்செழியன் இன்றிருந்தால் ஐந்து லட்சமோ, பத்துலட்சமோ கண்ணகிக்குக் கொடுத்து சமாதானம் செய்திருப்பான். பிழைக்கத்தெரியாத  நெடுஞ்செழியினும் அவன் துணைவியும் வழக்கம்போல பிழைக்கு அஞ்சி  உயிரை விடுகிறார்கள்.  மகாபாரதத்தில் கர்ணன் தேர்ப்பாகனால் எடுத்து வளர்க்கப்பட் டது அவமானமல்ல, பலர் அறிய அந்த உண்மைச் சொல்லப்படுவது அவமானம். துரியோதனன் சபைதன்னில் விழுந்தது மானப்பிரச்சினை அல்ல, ஆனால் திரௌபதி  அவனைப்பார்த்து சிரித்தது,  வெட்க க்கேடானது.  « அந்த ஏந்திழையாளும் எனைத் சிரித்தாளிதை எண்ணுவாய் » என்று வெப்பமான வார்த்தைகளில் அவன் பட்ட அவமானத்தை வெளிப்படுத்துகிறான். தொடர்ந்து பாஞ்சாலியை சபைநடுவே   நிறுத்தி நிர்வாணப்படுத்த முயன்றதும், அதன் உச்சமாக   பாரதப்போர் நடந்தேறியதும் காவிய உண்மை. மானத்தின் இழப்பிற்கு தற்கொலைதான் முடிவு என்பது பரவலாக கடைபிடிக்கப்பட்ட ஒரு சமூக அறம். இன்று அம்மரபு, சமூகத்தைச் சார்ந்திராமல், சமூகத்தின் பழிக்கு அஞ்சாமல்  தனிமனிதன் தனது நெறி சார்ந்து மனத் திட்பம் சார்ந்து  ஒழுகும்  அறமாக பரிணாமம் பெற்றுள்ளது. ந்நிலையில் அவமானம் என்பதென்ன ? எதை அவமானமாக எடுத்துக்கொள்வது, அவமானமாக ஒன்றைக் கருதும்  மனநிலை அனைவருக்கும் பொதுவானதாக எப்படி இல்லாமற் போனது ? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைதேவை.  அவமானத்திற்குரிய செயலை செய்துவிட்டேன் அல்லது என்னைச் சேர்ந்தோர் எனக்கு அவமானத்தைத் தேடித் தந்துவிட்டார்கள்  என்றொருவன் எண்ணி வருந்துவது அவமானம் தரும் அனுபவம்.  என்றாலும் இந்த அவமானம் படிப்படியாக தனது பொருளை இழந்து வருவது கண்கூடு.

சங்க காலத்தில் அறம் அல்லாதவற்றைத் தவறுதலாகச்  செய்து, பின்னர் செய்தவனே அக்குற்றத்தை அவமானாக க் கருதும்போக்கு இருந்தது பின்னர் அது

ஓர் ஆணோ பெண்ணோ விரும்பியோ விரும்பாமலோ தனது நலனை முன்னிட்டோ, தன்னைச் சார்ந்தோர் நலன் கருதியோ தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தில், பெரும்பாலோர் (சட்டங்களோ, சமயமோ, நீதியோ என்ன சொல்கிறதென்பது இங்கு முக்கியமல்ல)  நம்பும் அறத்திற்கு மாறாக ஒரு காரியத்தைச் செய்தாலுங்கூட அந்த உண்மையை சமூகத்தின் பெரும்பாலோர் அறியாதவரை அவமானமில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. «  ஏன் இப்படி கத்திப் பேசறீங்க, அக்கம்பக்கம் இருக்கிறவங்க என்ன நினைப்பாங்க ? »,« மரவள்ளி கிழங்குக்காரி ஒருத்தி சந்தியடியில் வந்துகொண்டிருந்தாள். ‘அவளுக்குத் தெரியவா போகிறது’ என்று நந்தாவில் தோட்ட த்து மதகடியின் பக்கலில் குந்தினார் (அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள்)» என்பதெல்லாம் பிறருக்குத் தெரியாதவரை அவமானமில்லை என்ற விதியின் பாற்பட்டதுதான். எனவே பிறர் என்ற பெரும்பான்மையினருக்குத் தெரியாமல், புகைபிடிக்கலாம்,  மது அருந்தலாம், கள்ள உறவு வைத்திருக்கலாம் தவறில்லை ஆனால் அந்த பிறர் அறிய வந்தால் தவறு, அவமானம், என்றொரு சமூக அறத்தை இடையில்  கடைபிடித்தோம்.

இன்றைக்கு மானப் பிரச்சினையின் எடைஎவ்வளவு ?   

பிரான்சு நாட்டில் அதிபர் தேர்தலுக்கு நிற்கும் வலதுசாரிவேட்பாளர்கள் இருவர் மீது பொது நிதியை தன்னலத்துடன் பயன்படுத்திக்கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனினும் வெட்கமின்றி அவர்கள், «  குற்றம் இழைக்காதவர்களென நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் வேட்பாளர்களைக் காட்டிலும், குற்றம் சாட்டப்பட்ட நாங்கள் திறமைசாலிகள் » என்கிறார்கள், அதாவது அவர்கள் தகாச் செயல் அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களை ஆதரிக்கிற தீவிர கிறித்துவ மதவாதிகளுக்கும் அவமானத்திற்குரியதல்ல. தமிழ் நாட்டில் தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல்வரையும் அவரது தோழியையும், சீடர்களையும் வெட்கமின்றி கொண்டாடும் கூட்டத்தைபார்க்கிறோம்.  ஒரு  வாக்கின் சந்தை மதிப்பை நாலாயிரம் ரூபாய்க்கு உயர்த்தி இருப்பது கின்னஸ் சாதனை. நீதியை விலைக்கு  வாங்கியவர்கள்,  ஆட்டைக் கடித்து மாட்டைக்கடித்து, இன்று எதையோ கடித்து தமிழர்களை அவமானத்தின் உச்சத்தில் நிறுத்தியிருக்கிறார்கள். தமிழர்களின் இச்சாதனை இந்தியாவெங்கும் பரவும், இதற்கும் கூடுதலான விலைகொடுத்து இச்சாதனையை முறியடிப்பவருக்குத்தான் இனி ஆட்சி என்ற நிலை வரலாம். ஒரு வாக்கிற்கு நாலாயிரம் என்பது அடிமை வியாபாரம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு  கொத்தடிமைகளாக இருக்க வாக்காளர்களுக்குத் தரும் விலை.   நவீன யுகத்தில் தகாச்செயல்கள் அறத்தின் பாற்பட்டதல்ல, சட்டம் மற்றும் நீதியின் பாற்பட்ட து. இங்கே சாட்சிகளும் தடயங்களும் மட்டுமே ஆதாரங்கள். நாலாயிரம் ரூபாயைக் கொடுக்கின்ற ஓரிருவர் எதிர் தரப்பில் அந்த நாலாயிரம் ரூபாயை கைநீட்டி பெறும் பெரும்பான்மையோர், இதில் இரு தரப்பினருமே தகாத செயலின் கூட்டுக் களவாணிகள் என்கிறபோது அவமானம் எங்கிருந்து வரும் ?

. « மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் » இன்று நம்மில் எவருமில்லை. தலைகுனிவு  என்பது பெரும்பாலான மனிதர்களுக்கு இன்றைக்குஒரு ‘தகுதி’. நேற்றுவரை அவமானம் ஓர் இழிவான அனுபவம்; சமூகம் என்ற பெரும்பான்மையினர் நம்பும் அறத்திற்கு மாறாக தனிமனிதன் தகாச் செயலில் இறங்கிச் சம்பாதித்த மனநோய்.  இன்று அந்த அவமானம் இழிவானதல்ல. முன்னோர்கள் காலத்தில்  ஒன்றிரண்டு மனிதர்களே இம்மனநோய்க்கு ஆளாகி இருந்தனர்.  பெரும்பான்மையோர் தகு செயலை செய்யாதபோதும் அறத்தை நம்பினார்கள். இன்று அறத்தை நம்புபவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள்,அவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர். நம்மில் பெரும்பாலோர் இன்று அறத்தை நம்பாதவர்கள். எனவே நமது தலைவர்களும் அறத்தை நம்பாத தில் வியப்பில்லை.   குற்றவாளிகளுக்குத் தமது பெரும்பான்மை பலம் குறித்த சந்தேகங்கள் இல்லை. எனவேதான்,  கூச்சமின்றி அவர்களால் பேட்டிகொடுக்கமுடிகின்றது. எந்தச் சமூகத்திற்குத் தனது குற்றம் தெரியவந்தால் அவமானம் என ஒரு மனிதன் நினைத்தானோ அந்தச் சமூகத்தில் அனைவருமே தன்னைப்போன்றவர்கள் என்ற எண்ணம் தரும் துணிச்சல்,  ஆபத்தானது;

———————————————————————

மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில்

மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில்

La couverture

எனி இந்திய பதிப்பகம் வெளியிட்டிருந்த என்னுடைய  இரண்டாவது நாவல்‘மாத்தா ஹரி ‘ ‘Bavani, l’avatar de Mata Hari’ என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் எனது முதல் நாவலாக வெளிவருகிறது. புதுச்சேரியைச் சேர்ந்த  தமிழன் என்ற வகையில் எனது படைப்பு பிரெஞ்சு மொழியில் வருவதில் பிரத்தியேக மகிழ்ச்சி. சிறுகதைகள், நாவல்கள் அனைத்துமே பிரெஞ்சுமொழியில் வரவேண்டும் , வருமென்ற கனவுடன் எழுதப்பட்டவை,  புதுச்சேரி,யையும்  பிரான்சு  நாட்டையும் களனாகக் கொண்டவை, எனவே பிரெஞ்சு வாசகர்களுக்கு அந்நியத் தன்மையைத் தராது என்பது நிச்சயம்.

 

மாத்தா ஹரி நாவலுக்கு தமிழில் பிற எனது படைப்புகளைப் போலவே மனமுவந்து பாராட்டி எழுதியவர்கள்  அதிகம்

Matahari1

மாத்தாஹரி நாவலை வாசித்த  திரு. கி. அ. சச்சிதானந்தம் வார்த்தை இதழ் ஆசிரியர் குழுவிலிருந்த திரு. தேவராஜுவிடம், இந்நாவல் குறித்து உங்கள் இதழில் எழுதுகிறேன் என தொலைபேசியில் தெரிவித்து அவ்வாறு எழுதி த் தந்த து தான் முதல் மதிப்புரை, நாவலைக் குறித்து  அவர் எழுதிய கடைசி நான்கு வரிகள் என்னால் மறக்க முடியாதவை:

“ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும் பரந்துபட்ட வாழ்க்கை அநுபவமும், புற உலகத்தை உள்வாங்கிக்கொள்ள எப்போதும் விழித்திருக்கும் மனமும் இருந்தாலொழிய மாத்தா ஹரியை எழுத முடியாது.”Matahari-2

https://nagarathinamkrishna.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b9%e0%ae%b0%e0%ae%bf/

அதன்பிறகு எழுத்தாளர்கள் ரெ. கார்த்திகேசு, வே.சபாநாயம் ; பேராசிரியை  ராஜலட்சுமி, பேராசிரியர், பா. ரவிக்குமார்  என இந்நாவலுக்கு மதிப்புரைகள்  எழுதினார்கள். பிரபஞ்சன் நூலின் முன்னுரையிலும், கோ. ராஜாராம் பதிப்பாசிரியர் என்றவகையில் எழுதியதிலும் இருவருமே பாராட்டியிருந்தனர்.. இதன் தொடர்ச்சிபோல ஓர் அதிசயம் நிகழ்ந்த து.

2011 ஆம் ஆண்டு நவம்பரில் சிங்கப்பூரில்  நடைபெற்ற முதல்  தமிழ் எழுத்தாளர்  மாநாட்டில் கலந்துகொண்ட தமிழவன் தமிழவன் « புலம் பெயரியத் தமிழிலக்கியம், சில உட்பொருண்மைகள்  » என்ற கட்டுரையில் மாத்தாஹரி  நாவலைப் பற்றியும் குறிப்பிட்டதோடு, மாநாடு முடிந்த பின்னும் அந்நூல் குறித்து ரெ, கார்த்திகேசுவிடமும் கோ. ராஜாராமிடமும் சிலாகித்து பேசியிருக்கிறார்.,

அமெரிக்கா திரும்பிய திரு ராஜாராமிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது, மாத்தாஹரியைப் பிரெஞ்சில்  கொண்டுவந்திருக்கலாமே எனத் தெரிவித்தார். ஆக இந்நூல் பிரெஞ்சில் வர முதற்காரணம் திரு. கோ.ராஜாராம்.  பின்னர் மெல்ல மெல்ல அந்த எண்ணம் உறுதிப்பட்டபோதிலும் எனது நூலை  நானே செய்ய தேவையின்றித்  தயக்கம். அக்கனவு நிறைவேற சில வருடங்கள்  பிடித்த தென்கிறபோதும் அக்கனவு நிறைவேற மூல மொழிபெயர்ப்பும் முதல் மொழிபெயர்ப்புமான பிரதியை மிகச் சிறப்பாக  செய்து,   நூலுக்கு ப்பெருமைச் சேர்த்தவர்,  நண்பர்  சு. வெங்கடசுப்புராய நாயகரின்  முன்னாள் பேராசிரியர், முனைவர் திரு.  கிருஷ்ணமூர்த்தி அவர்கள்kichanamourthy 1.  நண்பர் நாயகரின் மீதுகொண்டுள்ள அன்பின்பாற்பட்டு இதனைச் செய்தார். நாயகருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன். அடுத்ததாக இந்நூலின் பொருட்டு  நான் நன்றி தெரிவிக்கவேண்டிய நபர்  எனது நெடுநாளைய பிரெஞ்சு நண்பன் திரு சவியெ தெபல். « சந்திக்கிறபோதெல்லாம் உனது எழுத்தை நாங்கள் எப்போது படிப்பதாம் » என்பான்.  அவனுடைய பிடிவாத த்தினாலும் இந்நூல் வெளி வருகிறது.

« எங்காத்துகாரரும்  கச்சேரிக்குப் போனார் என்ற கதையாக ஆகிவிடக்கூடாது » என்ற அச்சம்  மகிழ்ச்சியை அடக்கமாக அனுபவிக்கச் சொல்லி எச்சரிக்கிறது. அதுவும் நியாயம் தான்.

 

Bavâni, l’avatar de Mata Hari (roman)

  • Krishna NAGARATHINAM

Edilivre :

175 Bld Anatole France

93200 Saint-Denis

 

பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்):

 

மறுமலர்ச்சி காலம் (la Renaissance) (1453-1600)

 

கலை, இலக்கியத்துறையில்   பதினைந்தாம் நூற்றாண்டில்  நிகழ்ந்த மாற்றங்களை ஒருவித பகுத்தறிவு அணுகுமுறை என வர்ணிக்கலாம். சமயத்தை விமர்சனத்திற்கு உட்படுத்தி,  இயற்கையைப் போற்றிய கிரேக்க- இலத்தீன் தொன்மத்தின்மீது உருவான பற்றுதல் அல்லது  அமைத்துக்கொண்ட நோஸ்ட்டால்ஜியா தடமே மறுமலர்ச்சி. இடைக்காலத்தில் ஆதிக்கச்சக்தியின்கீழ் அண்டிப்பிழைத்த படைப்பாளிகள், கலை இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமின்றி சமயத்தின் நிழலிலிருந்தும் தங்களை விடுவித்துக்கொண்டு  தொன்மத்திற்கு பயணிக்க முடிவுசெய்ததின் விளவு அது.

பொதுவாகவே ஐரோப்பிய நாடுகளில் கலை இலக்கிய துறையில் இத்தாலிநாட்டின் பங்களிப்பினை குறைத்துமதிப்பிடமுடியாது, அதிலும்குறிப்பாக ஓவியம் சிற்பம் ஆகியவற்றில் உலகப்புகழ்பெற்ற கலை வல்லுனர்களை வழங்கிய பெருமை அந்நாட்டிற்குண்டு. பதினைந்தாம் நூற்றாண்டு முழுக்க முழுக்க இத்தாலி நாட்டின்  சாதனை, அச்சாதனையின் தாக்கம் பிரான்சு நாட்டில் இலக்கியத்திலும் ஓவியத்திலும் ஏற்படுத்திய விளைவுகள் என்ன? அதற்கான சூழல்கள் எவை என்பதை மிகச் சுருக்கமாக இப்பகுதியில் காண்போம்.

இடைக்கால அரசியல் சூழலும், மறுமலர்ச்சியும்:-

இடைக்கால இலக்கியங்களின் பண்பாடு, அவை செயல்பட்ட விதம் உண்மையான கலை இலக்கியவாதிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை.  நிலமானிய அமைப்புமுறை கட்டமைத்திருந்த அரசியல்,  அதிகாரத்தில் இருப்பவர்களை, அரசவையில் கொலுவீற்றிருப்பவர்களை துதிபாடும் இலக்கியத்திற்கு,  காணாத வீர தீர சாகசங்களை அவர்களிடம் கண்டதாக,  இட்டுக்கட்டிப் பிழைப்பதைத் தொழிலாகக்கொண்ட இலக்கியத்திற்கு வழிவகுத்திருந்தது.  ஒரு சிலரை அரியாசனத்தில் அமர்த்தி  புகழ்ந்துரைக்கும் இழிநிலைக்குத் தாங்கள் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு வெதும்பிய உண்மையான படைப்பாளிகளுக்கு இத்தகைய நெருக்கடியிலிருந்து தப்பிக்க மாற்றுவழியொன்று தேவைபட்ட து. இப் “ புதிய வாழ்க்கை(nouvelle vie)”  நிலமானிய பிரபுக்களின் காலடியில் கலையையும் இலக்கியத்தையும் கிடத்தி வயிறுவளர்க்க விரும்பாத படைப்பாளிகளுக்கு ஓர் ஔட தமாக வாய்த்தது.  இதே காலக் கட்டத்தில் இத்தாலி நாட்டில் ஓவியர்கள் தனிமனித உணர்வுகளுக்கு கொடுத்த முன்னுரிமை பிரெஞ்சு படைப்பாளிகளையையும் அவ்வழியில் சிந்திக்க வை த்தது. இத்தாலியர்களின் வழியில்  சக மனிதனை மையப்பொருளாக (centre d’intérêt) இலக்கியத்தில் இடம்பெறச் செய்தார்கள். சாமானிய மனிதனும்  கவனத்திற்கொள்வதற்குரிய தகுதி (dignes d’intérêt ) பெற்றவன் எனக் கருதினார்கள். அடிமை-ஆண்டான் என்ற உறவுமுறையில் விதந்தோதும்,  பரணிபாடும் இடைக்கால இலக்கியத்தின் தட த்தைச் சகமனிதருக்கென செப்பனிட்டு மனித வாழ்க்கைமீதான தீராப் பசியை,  கலை இலக்கியத்தில் ஆற்றிக்கொண்டார்கள். அறிய நேர்ந்த புதிய உண்மைகளும், புதிய எந்திரங்களின் வருகையும் – குறிப்பாக எச்சு எந்திரம்- மறுமலர்ச்சிகாலத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு வித்திட்டன. அனைத்திற்கும் மேலாக கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழி  தொன்ம இலக்கியங்கள் மனிதரை போற்றியவை என்ற சிந்தனை, அவ்வுணர்விற்குக் கூடுதலாக உந்துதலை அளித்தது.

இடைக்கால சமயச் சூழலும் மறுமலர்ச்சியும்:-

ப்ரோட்டஸ்டண்ட்  எனும் கிறித்துவ சீர்திருத்த சபை உருவானதும் பதினைந்தாம் நூற்றாண்டில் அல்லது மறுமலர்ச்சி காலத்தில் என்பதை மறந்துவிடமுடியாது. இந்து மதத்தில் இப்படி ஏதும் நடந்து விடக்கூடாது என்பதைப்போல, தீயைத் தணிக்கின்ற வகையில் சைவம் வைணவம் எனப் பிரித்து உண்மையான சீர்திருத்தத்திற்கு வழியின்றி செய்துவிட்டார்கள். இடைக்காலத்தில் கிறித்துவ சமயத்தில் கடைபிடிக்கப்பட்ட கடுமையான வழிபாட்டுச் சடங்குகள்; அச்சடங்குகளிற் பின்பற்றபட்ட,  பெருவாரியான விசுவாசிகளுக்குப் புரியாத இலத்தீன்மொழி வழிபாடுகள்; சமயத்தின் பேரால் திணிக்கப்பட்ட மூட நம்பிக்கைகள்; பாவமன்னிப்பிற்கிடையே புகுந்த பணம் ஆகியவனவெல்லாம் மார்ட்டின் லூதர் என்ற ஜெர்மானிய இறையியல் அறிஞரை, கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரான இயக்கத்தைத் தோற்றுவிக்க காரணமானது. அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதனால், விவிலியம் வெகுசனமொழிக்குக் கொண்டுசெல்லப்பட்டு மதகுருமார்களில் கைகளில்  இருந்த இலத்தீன் மொழி பிரதிகள், விசுவாசிகளான சாதாரண மக்களின் கைகளுக்குச் சென்றன, விளைவாக  சமயத்திலும் சாதாரண மக்களின் முக்கியத்துவத்தை உணரத்தொடங்கிய காலம் மறுமலர்ச்சிகாலம்.

மானுடவாதம் (l’humanisme)

மேற்கண்ட சூழலில், மனிதர் நலனில் அக்கறைகொண்ட மானுடவாதம்  என்ற கலை இலக்கிய கோட்பாடு உருவானதில் வியப்பில்லை.  மனிதரைக் கலை இலக்கிய படைப்புகளில் கொண்டாட வீரதீரங்கள் அவசியமல்ல, நற்பண்புகளே போதுமானவை என்றும், தொல் இலக்கியப் பண்புகள் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை என்றும்   இக்கோட்பாடு வாதிட்டது. இக்கருத்தியத்தின் அடிப்படையில் படைக்கப்பட்ட மறுமலர்ச்சிகால கவிதைகள் மற்றும் இதர படைப்புகள்  கிரேக்கம்-இலத்தீன் தொல் இலக்கியங்களின் சாரத்தைக் குறிப்பாக மானுடப்  பண்புகளை எதிரொலிப்பவையாக இருந்தன.

மறுமலர்ச்சிகால ஓவியர்கள்

இவர்கள் அனைவருமே, மனிதர் உணர்வை ஒளியுடன் கலந்து மனித உடலை கலை நயத்துடன் ஓவியங்களாக படைத்த மறுமலர்ச்சிகால ஓவியர்கள் அனைவருமே ஏற்லனவே கூறியதுபோல இத்தாலி நாட்டவர்கள். லியோனார்டோ டாவின்சி(Leonardo di ser Piero da Vinci)  ஓவியரும் சிற்பியுமான ‘மைக்கலாஞ்சலோ’ (Michelangelo di Lodovico Buonarroti Simoni ), இளம் வயதிலேயே புகழின் உச்சத்தைத் தொட்ட ‘ரஃப்பாயெல்’(Raffaello Sanzio), பின்னர் புகழ்பெற்ற வீனஸ் ஓவியத்தைப் படைத்த ‘தீத்தியன்’(Titian), கரவாஜியோ(Michelangelo Merisi da Caravaggio) அனைவருமே இன்றும் கொண்டாடப்படும் ஓவியர்கள்.  பிரான்சு நட்டில் இவர்களின் தாக்கத்தில் பிரான்சுவா க்ளூஏ(François cluet), ழான்க்ளூஏ(Jean Cluet) இரண்டே இரண்டு ஓவியர்களைத்தான் காண முடிகிறது. இவர்கள் முறையே தந்தையும் மகனும் ஆவர், இவர்களை பிரெஞ்சு ஓவிய வரலாறு லெ க்ளூஏ(Les Cluet)  என அழைக்கிறது. ஆனால் இவர்களை இத்தாலிய ஓவியர்களுடன் ஒப்பிட முடியாது.

 

மறுமலர்ச்சிகால படைப்பாளிகள்

இலக்கியதுறையில்  பிரெஞ்சு படைப்பாளிகள் குறிப்பிடத்தக்க்க வகையில் கவனம் பெற்றுள்ளனர் அவர்களில் முதலாம் பிரான்சுவா மன்ன னின்  சகோதரியும் ஒருவர், முதல் பிரெஞ்சு பெண்கல்விமான் என்ற அடைமொழிக்கும்  சொந்தக் காரர், பெயர் மார்கெரித் தெ நெவார் (Marguerite de Navarre). L’Heptaméron என்ற சிறுகதை தொகுப்பு இவருடையது; எழுத்தாளர் பிரான்சுவா ரபெலே ஒரு மானுடவாதி, நான்கு நாவல்களை எழுதியுள்ளார். அவற்றில் Pantagruel, Gargantua முக்கியமானவை. இவ்விருவரைத்தவிர, ப்ரோட்டஸ்டண்ட் சார்பானவர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகி தண்டனைப்பெற்ற கவிஞர் கிளெமொன் மெரோ (Clémont Merot), தொடங்கி, பியெர் தெ ரொன்சார் (Pierre de Ronsard), ழோஆகிம் துபெல்லே (Joachim du Bellay) போன்ற கவிஞர்களும் மறுமலர்ச்சிகாலத்தில் குறிப்பிடத் தக்கவர்கள்.

——————————————————

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மொழிவது சுகம் – ஏப்ரல்1, 2017

அ. மரங்களின் வாழ்க்கை ரகசியம், ஆ. இலக்கிய சொல்லாடல் : இலக்கிய காப்பிக்கூடம் (Café littéraire) ; இ.  பிரான்சில் என்ன நடக்கிறது ?

அ. மரங்களின் வாழ்க்கை ரகசியம்.:

பீட்டர் வோலீபன் (Peter Wohlleben) என்ற ஜெர்மன் இயற்கையியல்  la vie sécreteஅபிமானி ஜெர்மன் மொழியில் எழுதி பல இலட்சம் பிரதிகள்   விற்பனையில்  சாதனை புரிந்துள்ள  நூல் அண்மையில் பிரெஞ்சு மொழியில்   வந்துள்ளது. மொழிபெயர்ப்பாளர்,  Bernard Mangiante.  நூலின் பெயர் « மரங்களின் வாழ்க்கை ரகசியம்.(‘La vie sécrète des arbres ) » . பிரான்சுநாட்டிலும் நூலுக்கு நல்ல வரவேற்பென்று,  பிரெஞ்சு மொழியில் கலை இலக்கியத்திற்கென்று பிரத்தியேகமாகச் செயல்படும் France Culture வானொலி மூலம் அறியவந்தேன்.  நூல்,  மரங்களின் வாழ்க்கை நெறிகளை பேசுகிறதென்று சொல்லப்படுகிறது, இதுவரை வாசித்ததில்லை.

இயற்கை என்றால் பசுமை, வயல்கள், காடு, மரங்கள் செடி, கொடிகள் என்றே பொருள்கொண்டு பழகியிருக்கிறோம். ஆனால் ஆதனை இப்பிரபஞ்சத்தின் இயல்பு நிலை எனபொருள்கொண்டால்  மனிதர் உட்பட, பாரதி சொல்வதுபோல நிற்பது, நடப்பது, ஊர்வது பறப்பது அனைத்தும்( அவற்றின் தோற்றம்,  இயல்பான வாழ்க்கை முதலான), பிரபஞ்சத்தின் உண்மை நிலை (Reality), இயற்கை ஆகிறது. பிரெஞ்சு மொழியில் « tel qu’il est » என்றும்,  ஆங்கிலத்தில்   « As it is » என்றும் ஒன்றைப் பார்ப்பது. தமிழில் சொல்வதெனில்  எதுவாக இருக்கிறதோ அதனை அதுவாகப் பார்ப்பது. « Il vaut mieux être que paraître. »   என பிரெஞ்சு மொழியில் சொல்வதைப்போல , « பாசாங்கு தோற்றத்தைக்காட்டிலும் உண்மைத் தோற்றம் மேலானது » . ஆனால் அது மனிதரால் முடிகிற காரியமா ?

எதையும் கூட்டியோ குறைத்தோ ; பார்த்து, மதிப்பிட்டு விலை பேசி , விமர்சித்து வாழப்பழகிய மனித குணம் இயற்கைக்குரிய நியாயமான மதீப்பிட்டை அளித்து, உள்ளது உள்ளவாறு வாழப்பழகியதுண்டா என்றால் இல்லை. தேவைசார்ந்து பழகிய கண்களுக்கு மலரும் முள்ளும் அதனதன் கடமையை, அதனதன் இருத்தலை  அதனதன் கடப்பாட்டை நிறைவேற்றப் பிறந்தவை என்பதை மறந்து போவதும் இயற்கை. ஏன் எனில் அந்த « முள்ளும் மலரும் » எனக்கென்ன செய்கிறது என்ற பார்வை எடுத்த முடிவு. இதற்கு மலரோ முள்ளோ பொறுப்பு அல்ல. இங்கே « இயற்கையைப் பூதம் » என வர்ணித்து  எழுதுகிறேன் எனவைத்துக்கொள்ளுங்கள், என்னுடைய பூதத்திற்கும்,  நீங்கள்  கற்பனையில் காண்கிற பூத த்திற்கும் வேறுபாடிருக்கலாம்.  இந்த இரண்டு அணுகு முறைகளும்கூட ஒரு வகையில் இயற்கைக்கு, எதார்தத்திற்கு சேதம் விளைப்பவைதான். நகைக் கடையின் பெயர்கள் தான் வேறு, ஆனால் செய்கூலியில் சேதாரத்தைச் சேர்க்காத மனித வியாபரிகள் இருப்பதில்லை. இம்மனித உயிரிகளைத் தவிர பிற ‘இயற்கைக்’கூறுகள்  பொய்யின்றி அலங்காரமின்றி, ஜோடனையின்றி, வாசனாதி தைலங்களின்றி, அறிவை விருத்தி செய்யும் முனைப்பின்றி, அகந்தையின்றி ஆசையின்றி, கனவுகளின்றி  பிரபஞ்சத்தில் தமது பிறப்பையும் பதிவு செய்கின்றன. இறப்பையும் மருத்துவரிடம் போகாமல் ஏற்கின்ற பக்குவம் அவற்றுக்கு மட்டுமே உண்டு. தமது பிறப்பின் பயனை  தமக்கென கொள்ளாமல் இப்பிரபஞ்சத்திற்கு அர்பணித்துவிட்டு,  கல்லறை பற்றிய கனவுகளின்றி, ஈமச்சடங்குகள் குறித்த எதிர்பார்ப்புகளின்றி, சமயச் சடங்குகளின்றி மண்ணில் அவை மக்கிப்போகின்றன. மக்கி எருவாகி இறந்த பின்னும் ஈட்டிய கடனை திருப்பித் தரும் நேர்மை இயற்கைக்கு மட்டுமே உண்டு.

அண்மையில் மொழிபெயர்த்திருந்த ‘புரட்சியாளன்’ நூலில் அல்பெர் கமுய் (Albert Camus), கலை இலக்கிய படைப்பாளிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறபொழுது, இயற்கையை, இவ்வுலக உண்மையை , எதார்த்தத்தை  தாம் எதிர்பார்க்கின்ற வகையில் திருத்த முற்படுபவர்கள் என்ற  பொருளில் குறிப்பிட்டிருப்பார். அவ்வாறு மனிதர்கள் முயல்வதற்கு  இயற்கையின் குறைய நிவர்த்தி செய்யவேண்டும் என்ற விருப்பம் மட்டுமே  காரணமல்லவென்றும், இயற்கையை உள்ளது உள்ளவாறு முழுமையாகச் சொல்வதற்குரிய இயலாமையும் காரணமென்று அதில் விளக்கியியுமிருப்பார். உண்மைதான் ஒரு காட்சியை, ஓர் எதார்த்தத்தை  எத்தனை வரிகளில், எத்தனைச் சொற்களில் உபயோகித்தாலும், முழுமையாக மொழிப்படுத்த, கலையில் வடிக்க, சித்திரமாகத் தீட்ட சேதாரமின்றி இயலாததுதான், இயற்கை எந்தவொரு கண்ணிக்கும் , பொறிக்கும், வலைக்கும் பிடிபடாத விலங்கு.

அண்மையில்,  பியர்லெமேத்ர் (Pierre Lemaître) என்பவர் எழுதியிருந்த ‘Au revoir la-haut)  எனும் புதினத்தை வாசிக்க நேர்ந்தது. அவருடைய இவ்வரிகள் மறக்கமுடியாதவை : « Son cerveau mélangeait la réalité et des dessins, des tableaux, comme si la vie n’était rien d’autre qu’une œuvre supplémentaire et multiforme dans son musée imaginaire. »Au-revoir-la-haut

« வாழ்க்கை என்பதும் ஒரு கலை படைப்பு, பல வடிவங்களால் ஆனது என்பதன்றி வேறல்ல என்பதைப்போல எதார்த்தத்தடன் சித்திரங்களையும், ஓவியங்களையும் தனது கற்பனை அருங்காட்சியகத்தில், ஒன்று திரட்டினான் » என்ற படைப்பாசிரியரின் வரிகளை அல்பெர் கமுய் எழுப்பும் பிரச்சினை சார்ந்த தீர்வாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது. ஆசிரியர் சொல்வதைப்போல வாழ்க்கையையும் கலைபடைப்பாக அது எத்தனை கோணல்மாணலாக தீட்டப்படிருப்பினும், எதார்த்தத்திற்கு அல்லது இயற்கைக்குச் சமதையாக, கதை மாந்தனைப்போல  (அவன் முதல் உலகப் போரில் படுகாயமுற்று சிகிச்சைபெறும் வீரன், ஓவியனும் கூட)   மனதில்  நிறுத்தி திருப்தியுறுவதைத்  தவிர மனிதர்க்கு வேறுவழிகள் இருப்பதாக தெரியவில்லை. அதுவொன்றுதான், மனிதரினும் பார்க்க பெருமை மிக்க இயற்கையை, அதன் அகந்தையை வெல்ல பொய்யாகவே வாழப்பழகிய  மனிதன் கைகொள்ளக்கூடிய நிரந்தர தந்திரமாக இருக்க முடியும்.

. இலக்கிய சொல்லாடல் : இலக்கிய காப்பி கூடம் (Café littéraire) 420px-Café_de_Flore

இலக்கிய காப்பிக்கூடம் என்ற பெயரில் காப்பி இருப்பினும் காப்பி, தேநீர், பீர், தண்ணீர், பழரசங்கள், சோடா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பரிசாரகரிடம் கொண்டுவர பணித்துவிட்டு  உரையாட, விவாதிக்க, அல்லது தன்னந்தனியாக அமர்ந்து எழுத இலக்கியவாதிகள், ஓவியர்கள் தேர்வு செய்யும் விடுதிகளுக்கு இலக்கிய காப்பிக்கூடம் என்று பெயர். பிரான்சு நாடெங்கும் முக்கிய நகரங்களில் இத்தகையை கலை இலக்கிய காப்பிக்கூடங்கள் பிரசித்தம் என்றாலும் பாரீஸ் நகரத்திற்கு கூடுதல் பெருமையுண்டு. தவிர கலைஇலக்கியத்தின் பல பிரிவினரும் தொன்று தொட்டு இத்தகைய இடங்களுக்கு வந்து போவதை ஆண்டுகள் பலவாக தொடர்ந்து பின்பற்றிவருகின்றனர்.

இவர்கள், முழுக்குடியர்களாக  சட்டையைப் பிடித்துக்கொள்வதற்கென்றே பாருக்குச்  செல்லும் படைப்பாளிகள்  அல்ல, தவிர குருவை அரியாசனத்தில் அமர்த்தி, அவரின் பிரதாபத்தை அரசியல் தலைவர்- தொண்டர்கள் உறவின் அடிப்படையில் வாய்பிளந்து கேட்கும் சிஷ்யர்கள் இலக்கணத்தையும் அவர்கள் படித்ததில்லை, எனவே இந்தக் காப்பிக் கூடங்களின் இலக்கிய உரையாடல்கள் அனைத்துமே சக படைபாளிகளுடன், சிந்தனையாளர்களுடன், கவிஞர்களுடன், ஓவியர்களுடன் மூத்தவர் இளையவர் என்ற வேறுபாடின்றி சரி சமமாக அமர்ந்து உரையாடும், விவாதிக்கும் களம். பதினேழாம் நூற்றாண்டிற்கு முன்பே le cabaret என்கிற இரவு விடுதிகள், மதுவை பிரதானமாக அருந்துகிற le taverne  விடுதிகள் ஆகியவற்றிற்குச் சென்று உரையாடும் வழக்கம் படைப்பாளிகளுக்கு இருந்துள்ளது.  ஆனால் இத்தகைய காப்பி பார்களுக்கான செல்வாக்கு பதினேழாம் நூற்றாண்டில்தான் கிடைத்திருக்கிறது. அழகியல், தத்துவம், அரசியல் ஆகியவற்றில் ஈடுபாடுகொண்டிருந்தவர்களின் வாழ்க்கையில் தங்கள் சொந்த இல்லங்களைத் தவிர்த்த சிறப்பு பொதுவெளியாக துறைசார்ந்த நண்பர்களுடன் விவாதிக்கும் களமாக காப்பி பார்கள்  உருவான காலமிது. அந்தவகையில்  முதலாவது இலக்கிய காப்பிக்கூடம் என்ற தகுதியைப் பெற்றது ‘le Procope’ (1986). இங்கு நாடகம் சார்ந்த புதிய முயற்சிகள் குறித்த கருத்துக்களை அத்துறை சார்ந்த நண்பர்கள் பகிருந்துகொண்டதாகச்  சொல்லப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவரை இக்காப்பிக்கூடம் நாடக ஆசிரியர்களிடை பயன்பாட்டில் இருந்த இந்த இடம், பின்னர் பிரெஞ்சு புரட்சியின் போது முன்னணி தலைவர்கள் பலரும் அவ்வப்போது கூடி விவாதிக்க உதவி இருக்கிறது.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறுகிய வீதிகளில் இருந்த காப்பி பாரை  விரும்பாத கலை இலக்கிய படைப்பாளிகள் அந்நாளில்  பாரீஸ் நகரில் Les grands boulevards எனப்புகழ்பெற்ற  பகுதியில் இருந்த காப்பிபார்களுக்கு வந்து செல்ல தொடங்கினர். இப்ப்குதியில் அவரவர் ஈடுபாட்டிற்கொப்ப துறை சார்ந்த நண்பர்களுடன் ஒரு பகுதியில் அவான் கார்டிஸ்டுகளும் (les avant-gardes), குறியீட்டாளர்களும்  சேன் நதியின் இதுடப்பக்கமிருந்த le Soleil d’or, le café de Cluny, le Vachette போன்ற காப்பி பார்களுக்கு வந்துபோக ;  சேன் நதியின் வலது பக்கமிருந்த காப்பிபார்களுக்கு போல்-ழான் தூலெ, கூர்த்தலின், ப்ரூஸ்ட் போன்றவர்கள் வந்து சென்றார்கள் அதேவேளை பாரீஸ் நகரின் மோன்மார்த்ரு  (Monmartre)பகுதியிலிருந்த  le chat noir காப்பி பாருக்கு வான் காக் முதலான நாடோடி வாழ்க்கை நடத்திய ஓவியக்கலைஞர்களும், க்யூபிஸ (Cubism) அபிமானிகளும்   வத்துபோவது வாழக்கமாயிற்று.  இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மோன்மார்த்ரு பகுதியிலிருந்து மோன்பர்னாஸ் பகுதியிலிருந்த காப்பிபார்களுக்கு போக ஆரம்பித்தார்கள், மீ எதார்த்த்வாதிகள் தங்கள் கொள்கைக்கு ஏற்ப இப்பகுதியிலிருந்து விலகி வெகுதூரத்திலிருந்த காப்பிபார்களில்  சென்று உரையாடினார்கள். நாற்பதுகளில் (1940) இத்தகைய காப்பி பார்கள் கலை இலக்கியவாதிகள் கூடும் இடமாக மட்டுமின்றி, அவர்களுக்கு எழுதவும் பயன்பட்ட து. அவ்வகையில் சிமொன் தெ பொவ்வார் அதிகம் வந்துபோகும் காப்பி பாராகLe Flore இருந்த து. பிரான்சு நாடெங்கும் முக்கிய நகரங்களில் இன்றும் இலக்கியவாதிகள் மட்டுமின்றி, தத்துவத்தில் ஈடுபாடு கொண்டோரும் காப்பி பாரில் கூடுகிறார்கள், அவற்றிர்க்கு Café Philosophique என்று பெயர்.

 

. பிரான்சில் என்ன நடக்கிறது.

அடுத்த மாதம் பிரான்சில் அதிபர் தேர்தல். இதுபற்றி விரிவாக அடுத்த மாத த்தில் எழுதுகிறேன். அமெரிக்க அதிபர் தேர்தலில் ட் ரம்ப் போன்ற மனிதர்களைத் தேர்ந்தெடுத்த முகூர்த்தம் பிரான்சிலும் அதுபோன்ற தலவர்களுக்கு இன்று செல்வாக்கு.  அந்நியர்களை வெளியேற்றினால், பிரான்சு  ஐரோப்பாவிலிருந்து  வெளியேறினால் நாட்டின் மொத்த பிரச்ச்சினைகளும் தீர்ந்துவிடும் என்கிற பேச்சை நம்பும்  வெகுசன அரசியல் பிரான்சிலும் பிரசித்தம். அண்மைக்காலங்களில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கும் இந்த மாற்றத்தில் பங்கிருக்கிறது. இன்று பரவலாக ஐரோப்பிய நாடுகளில் வலது சாரிகளின் பேச்சு சாதாரண மக்களை எளிதாக ஈர்க்கிறது.  ஏற்கனவே ஆஸ்த்ரியா, நோர்டிக் நாடுகள் சிலவற்றில்  தீவிரவாதம் ஜெயித்துவிடுமோ என்ற அச்சத்தில் நடுநிலையாளர்கள் கவலைப்பட,  தேர்தல் முடிவுகள் தீவிர வலது சாரிகளுக்கு எதிராகவே இருந்தன.  அந்த  அச்சம் பிரான்சில் இன்று இருக்கிறது. Front National  எனும்`பாசிஸக் கட்டியின் தலைவர் மரி லெப்பென்(Marie Le pen)  என்ற பெண்மணி கருத்துக் கணிப்பின்படி தற்போது போட்டியாளர்களில் அதிக சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ள வேட்பாளர். பொதுவாக பிரான்சு நாட்டில் இனவேற்றுமை இல்லை என்று சொல்லிவிடமுடியாது. அமெரிக்காவில் ஒபாமா அதிபராகலாம், பிரான்சு நாட்டில் சாத்தியமில்லை.   இந்த நிலையில் அண்மைக்காலத்தில் பிரெஞ்சு பொலீசாரின் தாக்குதலுக்கு ஒரு கறுப்பரின இளைஞர் உள்ளானார், பெரும் கொந்தளிப்பு உருவாகித் தணிந்தது. தற்போது சீனர் ஒருவர் பாரீஸில் சுடப்பட்டுள்ளார். இறந்த சீனர் கத்தியால் தாக்கவந்ததாகவும் தற்காப்புக்காக தாங்கள் ஆயுத த்தை உபயோகித்த தாகவும் பொலீஸார் கூறுகின்றனர். பாதிக்கபட்டவர் தரப்பினர் வாதமோ அதை முற்றாக மறுக்கிறது. விளைவாகத் தொடர்ந்து சீனர்கள் வீதியில் போராடுவது தொடர்கிறது(இப்போராட்டத்திற்குப் பின்புலத்தில் சீன அரசு இருக்கிறதென்ற குற்றச்சாட்டை, பிரான்சு உளவுத் துறை தெரிவிக்கிறது, அதைக் இறந்த சீனரின்  வழக்கறிஞர் கடுமையாக மறுத்திருக்கிறார்) இதற்கிடையில் சீன அரசு தங்கள் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என பிரெஞ்சு அரசுக்குத் தெரிவிக்க, அடுத்த சில நாட்களில்   பிரெஞ்சுக்கார ர் ஒருவர் சீனாவில் தாக்கப்பட்டாரென்று செய்தி.

உலகெங்கும் தேசியவாதம் தலைதூக்கியிருக்க, இதே ஐரோப்பாவில்  பிரான்சுக்கு அண்டை நாடான சுவிஸ்ட்ஸர்லாந்து,  நான்கு மொழி பேசும் மக்கள் அவர்களின் வெவ்வேறு கலாச்சாரம், கணிசமான புலம்பெயர்ந்த மக்கள்  என்ற நிலையிலும் அமைதியான வாழ்க்கையைப் பேதமின்றி தம் பிரஜைகளுக்கு வழங்கிவருகிறதென்ற  உண்மையையும் தெரிந்துகொள்ளவேண்டும்.

—————————————————————————–