குறவர்கள், ஜிப்ஸிகள், ழித்தான்கள்(Gitans): தென் இந்தியா – ஐரோப்பா: ஓர் உறுத்தும் உண்மை
முழங்கால் முட்டியைத் தாண்டாத சிறுகட்டங்களிட்ட நிறமங்கிய பாவாடை, மார்புகளின் பாரத்தை மறக்க அடிவயிற்றையும், மேற்கைகளையும் கடித்து சமாளிக்கும் இரவிக்கை, வெத்திலை சாறில் ஊறி காவியேறிய மஞ்சள் பற்கள் கத்திரிவெயிலில் வேர்ப்பதும் உலர்வதுமாக இருக்கிற பின்கழுத்து, செம்பொன்நிறப் புழுதிவாடை தணியாத கொண்டை, கடுகளவுமணிகளின் கறுப்பு, வெள்ளை, மஞ்சள், காவி வண்ண அலங்கார அணிவகுப்பு, தோளில் தொங்கும் தூளியில் ஈக்கள் மொய்க்கும் குழந்தை, தலைச் சும்மாடில் ஒரு கோரைப்பாய் என வருடங்கள் தோறும் சித்தேரிக்கரையில் புளியமரங்களுக்கடியில் டால்டா டின்களுடன் வந்திறங்கும் குறத்திகள், வெக்கை சூடிய பரதேவதைகள்.
கிராமத்து நண்பணிடம் அப்போது நடத்திய உரையாடல் பசுமையாக நினைவில் இருக்கிறது. பூனையாக இருந்த நாம நாயாக அலையறோமே இது தேவையா? என்ற எனது கேள்விக்கு, ஆசிரியர் பயிற்சியை முடித்திருந்த அவன் பதில், நாம எப்போது பூனையாக இருந்தோம்?
அதற்குப் பிறகு கல்லூரி நாட்களில், படித்த நூல்களில் ஆர். எல். ஸ்டீவன்ஸன் என்று நினைவு. நூலில் பெயர் Kidnapped அல்லது The Black arrow வாக இருக்கலாம், அல்லது இரண்டுமே அல்லாத வேறொரு நூலாக இருக்கலாம், ஜிப்ஸி பெண்ணொருத்தி வருவாள். வயதான பெண்மணி என்றாலும் அவளை எனக்குப் பிடித்திருந்தது. பிறகு ‘ஷோலே’ இந்திப்படத்தில் ஜட்கா ஒட்டுகிற பெண்ணாக வந்து வளவளவென்று பேசியே கவனத்தை ஈர்க்கிற ஹேமாமாலினி உடை அலங்காரம், ஜிப்ஸிபெண் தோற்றத்தில் அத்தனை ரம்மியம், எந்தக் காரணத்திற்காக ‘ஷோலே’ படம் சக்கைபோடுபோட்டதோ எனக்குத்தெரியாது, நான் ஐந்துமுறை படத்தைப்பார்க்க ஹேமாமாலினி என்கிற ஜிப்ஸி தேவதை ஒரு காரண அருவம். அண்மையில் ஜெய்ப்பூரில், முழங்கை மறைத்த சட்டையும் கண்ணாடிச்சில்லுகள் பதித்த மஞ்சளும் அரக்குவண்ணமும் கலந்த கணுக்கால் பாவாடையும், முலைக்காம்பைக் கவ்வியிருந்த குழந்தையை பக்கத்திலிருந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு, ப்ரும்ப்ரும்ர்ர்ர்ம்.. என்று முழங்கிய மேளத்திற்கு, இராஜஸ்தானியா இந்தியா என்ற குழப்பமானதொரு மொழியில் பொம்மலாட்டம் நிகழ்ச்சிக்குப் பாட்டுபாடினாள்.
பிரான்சு நாட்டிற்கு 1985ல் வந்தேன். பிரான்சு நாட்டில் எல்லா நாட்டினரும், எல்லா மதத்தினரும், எல்லா நிறத்தினரும் இருக்கிறார்கள், அவர்களில் தனித்த ஒரு கூட்டம் என் கவனத்தைக் கவர்ந்தது. கணுக்கால்வரையிலான பாவாடை, மார்புகள் புடைத்திருக்கும் சோளி, முன் தள்ளிய வயிறு, நைலான் ஸ்கார்பிற்குள் பத்திரப்படுத்தப்பட்ட தலை. இருபது முப்பது வாகனங்களில் அநேகமாக பென்ஸ், பிம்டபுள்யு, காரவான் என விலையுயர்ந்த வாகனங்களாக இருக்கும், நகராட்சி இவர்களுக்கென தண்ணீர் வசதி, மின்சாரவசதி ஏற்பாடு செய்துள்ள ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் தங்குவார்கள், அநேகமாக நகரத்தில் திருடு, கொள்ளை என்று நடந்தால் போலீஸ்காரர்கள் நேராக இவர்களைத்தான் தேடிவருவார்கள். பிரெஞ்சு மொழியில் இவர்களை ‘Gitanes’கள் என அழைக்கிறார்கள். இதே பெயரில் குறைந்தது மூன்று பிரெஞ்சு திரைப்படங்கள் வந்திருக்கின்றன. என்பங்கிற்கு ஒரு சிறுகதையை எழுதினேன். காரணம் இருக்கிறது.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த கதைபோல ஐரோப்பாவிற்கு இந்தியாவிலிருந்து வந்த கதையொன்று இருக்கிறது. 1760 ஆம் ஆண்டு அங்கேரி நாட்டைச்சேர்ந்த வயி இஸ்தவன் (Valyi Istvan) என்ற இளைஞர் இறையியல் படிக்க லேய்து (Leyde) பல்கலைகழகத்தில் சேருகிறார். ஊரில் அவர் குடும்பத்திற்கு பெரியதொரு பண்ணை இருந்தது. அப்பண்ணையில் Tsigans (Gitans) உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படும் நாடோடிமக்கள் வேலை செய்தார்கள். அவர்கள் பேசும் மொழிக்கும் அதே பல்கலைகழகத்தில் சகமாணவர்களாகவிருந்த மலபாரிகள் பேசிய மொழிக்கும் ஒற்றுமை இருப்பதைக் கண்டாராம். ஆயிரம் மலபாரி சொற்கள் அடங்கிய பட்டியல் ஒன்றைத் தயாரித்து தனது பண்ணை ஆட்களிடம் -Tsigans- காட்டியிருக்கிறார். அவர்கள் அச்சொற்களின் பொருளை சரியாகச் சொன்னார்களாம். இப்பட்டியல் எதிர்பாராதவிதமாக ஜார்ஜ் ப்ரே (George Pray) என்கிற பல்கலைக்கழக ஆசாமி ஒருவரிடம் சிக்க அவர் 1776ம் பல்கலைகழக ஜர்னல் ஒன்றில் பதிசெய்ததாக ஒரு கிளைக்கதையும் உண்டு. .
1990 ஆண்டு இயான் ஆன்கோக் (Iyan Hancock) என்ற டெக்ஸாஸ் பல்கலைக் கழக ஆசிரியர் ஒருவர், ரொமனிகளைப் பற்றி நிறைய ஆய்வு செய்தவர், ரொமானியர். ருமேனிய நாட்டில் இந்நாடோடிமக்களுக்கு ரொமானிகள் என்றுபெயர். இன்றும் ஐரோப்பாவெங்கும் பயணிக்கிற இந்நாடோடிமக்கள் (Gitans) அதிகம் வசிப்பது ருமேனிய நாட்டில்தான். இயான் ஆன்கோக், வயி இஸ்தவன் ஆய்வு செய்ய நினைத்தார். உண்மையில் அப்படி ஒருவர் இருந்தாரா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. லேய்டு பல்கலைக்கழகத்திற்கும் சென்றார். பல்கலை ஆவணங்களை ஆய்வுசெய்ததில் அப்பெயரில் எவருமே அங்கே படித்ததில்லை என்ற உண்மையைக் கண்டறிகிறார். அவ்வுண்மை தெளிவற்ற பல பதில்களுக்குக் காரணமாயிற்று. பல்கலைகழக மாணவராக இல்லாமலிருந்து அங்கு அவ்வப்போது வந்துபோனவராக இருக்கலாமென்று சிலரும், அக்கண்டுபிடிப்பே அவருடையது இல்லை என்பவர்களும் இருக்கின்றனர்.
எது எப்படியிருப்பினும் இந்நாடோடிகளுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பூர்வீகப்பந்தம் குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் நடபெற்றுவருகின்றன. மொழிவகையில் ஒற்றுமைகள் இருக்கின்றனவாம். உதராணமாக ‘சூரி’ (கத்தி), நாக் (மூக்கு) போன்ற சொற்கள் அதே பொருளில் ரொமானி மொழியிலும் உபயோகத்தில் இருக்கிறது என்கிறார்கள். அதேபோல பீஸ் (இருபது) என்ற சொல்லும் ரொமானி மொழியில் இருக்கிறதாம். இவற்றைத் தவிர வேறு வார்த்தைள் இல்லையெனவும் நினைக்கிறேன். நான் சந்தித்த ழித்தான்கள் (நாடோடிகள்) இரண்டு மூன்று பேர் , எங்களுக்கு இந்தியா பூர்வீகமென்று கூறிவிட்டு இச்சொற்களை மட்டுமே நினைவுபடுத்துகிறார்கள். ‘ஷோலே படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறார்கள், இந்திப்படங்களை விரும்பிப் பார்க்கிறார்கள். தவிர இந்நாடோடிமக்களில் ஒரு பிரிவினரின் பெயர் சிந்திகள்.
அவர்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கலாமென்பதற்கு ஆதாரமாக பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக, அவர்கள் ஓரிடத்திலும் நிலையாக இருப்பவர்களில்லை என்பதால், இந்தியாவின் வடமேற்குபகுதிகளில் குடியேறி சிலகாலம் தங்கிவிட்டுப் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போயிருக்கலாம், என்கிறார்கள். ஆனால் அரபு மொழியின் தாக்கமேதும் அவர்களிடத்தில் இல்லையென்பதால் குறுகிய காலத்திலேயே அங்கிருந்து பைஸாண்ட்டின் பேரரசு ஊடாக ஐரோப்பாவிற்குள் வந்திருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்து.
அங்கேரிய நாட்டு மொழியியலாளர் ஜோசெப் வெக்ரெடி (Jozef Vekredi)யின் ஆய்வுப்படி (1988) இவர்கள் குற்றபரம்பரையினரென்றும் 7ம் நூற்றாண்டில் அரசாண்ட இந்திய மன்னர்களுக்கு வேண்டாதவர்களாகிஇருக்கலாம் என்கிறார். மாறாக அமெரிக்கப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த கென்னத் ப்ளாசு (Kenneth Blachut) 2005ல் வரையறுத்துள்ள முடிவின்படி, இவ்வெளியேற்றம் 6ம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கலாம். கி.மு. 1500ல் தென் இந்தியாவிலிருந்து வெளியேறி (அவரது கருத்தின்படி ஆரியர்கள் இப்பிரதேசத்திற்கு வந்ததும், இவர்கள் வெளியேற்றமும் ஒரேகாலத்தில் நிகழ்ந்தனவாம்.) பஞ்சாபில் பலகாலம் வசித்துவிட்டு அதன் பின்னர் ஐரோப்பாவிற்குள் வந்தவர்கள்.
ஆன்கோக் வேறொரு கருத்தையும் முன்வைக்கிறார். கஜின்யின் படையெடுப்பால் இது நிகழ்ந்திருக்கலாம் என்பது அவர்கருத்து. அவரால் கைது செய்யப்பட படைவீர்கள் (ஷத்திரியர்கள்) பின்னாளில் துருக்கியருடன் கலந்து ரொமானி என்ற இனத்தவ்ர்களாக மாறியிருக்கலாம் என்கிறார்.
ஆனால் இன்று Tsigans, Roms, Gypsys, Gitans என பலபெயர்களில் அழைக்கப்படும் இம்மக்கள் ஐரோப்பியர்களுக்கு வேண்டாதவர்கள். நாடற்றவர்களான இவர்கள் இரண்டாம் உலகப்போரில் யூதர்களைவிட அதிக எண்ணிக்கையில் நாஜிப்படையினரால் கொல்லப்பட்டபோதிலும், இவர்களைப்பற்றி எவரும் பேசுவதில்லை.அண்மையில் பிரான்சுநாட்டின் ஒரு நகரத்தின் மேயர் தனது நகரத்தில் இம்மக்களின் தொல்லை அதிகமாக இருக்கிறதென்று சொல்லவந்தவர், ‘இட்லர் இன்னும் அதிகம்பேரைக் கொன்றிருக்கலாம், அப்படிக்கொன்றிருந்தால் நமக்கு இவர்களால் பிரச்சினகள் வந்திருக்காது’ – எனத் தெரிவிக்கப்போக, மனித உரிமைகள் அமைப்பு வழக்குபோட்டிருக்கிறது, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றி உள்ளது.
நன்றி : Courrier International le 18 juillet 2013, Cidif
———————————————————————-