Monthly Archives: ஏப்ரல் 2016

இடையனும் இடைச்சியும்

எதிர்த்த கிடைக்காரி

இவரைப் பார்த்து சிரித்தாள்

எரிச்சலுடன். இரண்டாவது முறையாக

பட்டியில் இட்ட ஆடுகளை எண்ணினார்

முன்னூற்றுச்  சொச்சம் !

சொச்சம் வேறு கிடைக்குச் சொந்தமானது !

மூதாதையர் சொத்தாக  முப்பது

பேனைப் பெருமாளாக்கியதில் முன்னூறு !

என்ண்ணிக்கைத் தவறோ ?

மறுபடியும்

பங்காளி இடைச்சியின் நமட்டுச் சிரிப்பு !

ஐயத்துடன்

எதிராளியின் கிடையைப் பார்த்தார்

ஆடுகளுக்குப் பதில்

அடக்கமான மாடுகள் !

‘புல்’லுக்கும் தண்ணிக்கும்

புழுக்கைக்குப் பதிலாகச் சாணம் !

ஆடுகளை என்ன செய்திருப்பாள் ?

என்ற கேள்வி

எலும்புகளுடன்  எறியப்பட்ட

இலைகளைப் பார்க்கும்வரை

நீடித்த து !

கண்ணீரைப் பொலபொலவென்று

சிந்தினார் !

ஆடுகளுக்காக அல்ல- தமது

காவல் நாய்கள்

வேலிதாண்டிவிடுமோ  என்ற அச்சத்தில் !

–             நாகரத்தினம் கிருஷ்ணா

 

மொழிவது சுகம் ஏப்ரல் 24 – 2016

ஆண்டையும்  அடிமையும்

 

பிரெஞ்சில்  l’Individu – roi   என்ற சொல் ஒன்றுண்டு. தத்து வாதிகளின்  உபயோகத்தில் உள்ள சொல். சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பதெனில்  தனிமனித -அரசன். உண்மையில் அவன்  சுற்றியுள்ள கூட்டத்திடைத்  தன்னைப் பெரியவனாக, வல்லவனாக, திறமைசாலியாக, உயர்ந்தவனாக காட்டிக்கொண்டு தனது சுயத்தை முன்னிருத்த முனைபவன் . « நானே ராஜா ! நானே மந்திரி ! » – யோசனை வழங்கும் மந்திரியும் நானே, அதை அதிகாரத்தின் பேரில் செயல்படுத்துபவனும் நானே, என்ற பொருளில். அதாவது அவன் ராஜாவாகவும், மந்திரியாகவும் மட்டுமே இருக்க விழைபவன், «  நானே சேவகன் ! » எனக் கூறி அக்கோஷத்தை முடிக்கும் விருப்பம் துளியும் இல்லாதவன் .  இது உலகில் எல்லா உயிரினங்களிடத்திலும்  உள்ள அடிப்படை உணர்வு, இயற்கையான உணர்வு . இந்த ‘நானே ராஜா !’  ஆதியில் தனி நபரின் உடற்பலத்தை பொறுத்து இருந்த து,அதுவே பின்னர்  இரத்த உறவுகளின் எண்ணிக்கை தரும் பலத்தால் தீர்மானிக்கப் படுவதாக ஆயிற்று, ராஜாவாக  உருமாறியதும் அதைக் கட்டிக்காப்பது அவனுக்கு அவசியமாயிற்று,  சமயத்தையும் மரபையும் முன்வைத்து, சுற்றியுள்ளவர்களை அடிமைப்படுத்தினான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடிமைப் படுத்த நடத்தும் யுத்தம் உலகம் தோன்றிய நாள்தொட்டு இன்றுவரை தொடர்கிறது.  ஒரு வித்தில் அது அ நீதியை  நீதியாக்கும் கலை. யுத்தத்தில் ஜெயிப்பவன் ஆண்டை , தோற்பவன் அடிமை.  இருபத்தோராம் நூற்றாண்டில்  ஆண்டையாகும் பண்பை நாகரீகமாகத் ‘தலைமைப் பண்பு ‘ என நிர்வாக அறிவியல்  தெரிவித்து, குப்பையைக் கூட்டக்கூட ஒரு தலைமை தேவையென வற்புறுத்துகிறது. இந்த யுத்தத்தில்  ஜெயித்து « நானே ராஜா ! » என்று தெரிவித்து எல்லையை விரித்துகாணும் கனவு, ஆக, நம் எல்லோரிடமும் உள நிலையாக  இருக்கிறது. தம் பலத்தை – (ஒரு வகையான வன்முறையை )அடுத்துள்ளவர்மீது  பிரயோகிக்க காலம் காலமாய் இனம், நிறம், சாதி, உயிரியல் பாகுபாடு, பொருள், அழகு, தந்திரம், பேச்சு  என பல ஆயுதங்கள்.  இன்று அவற்றோடு  விளம்பரம்,  ஊடகங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.  இந்த யுத்தம் இரு வல்லரசு நாடுகளின் அணு ஆயுத யுத்தமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, இரண்டு மனிதர்களுக்கிடையேயான  தெருச்சண்டையாக க் கூட இருக்கலாம். ஜெயித்து  « நானே ராஜா ! » என அறிவிக்கிற ஆண்டைக்கு  ஜெயித்துமுடித்த தும்  வெற்றியை நிரந்தரமாக்கிக் கொள்ளும் கவலை சேர்ந்துகொள்கிறது, எதையும் எவரையும் சந்தேகித்து தூக்கமின்றி  அவதியுறுகிறான். இக்கவலை அரசியல் ஆண்டைகளுக்கு மட்டுமில்லை,  இந்த நூற்றாண்டின் எழுத்து  ஆண்டை நான் தான் என வாழ்கிற  எழுத்தாளர்களுக்கும், பிறதுறை ஆண்டைகளுக்குமுண்டு.

 

இன்று உலகில் பகுத்தறிவு (   என்றாலே கடவுள் மறுப்பு என்று  பொருள் கொள்வதைத் தவிர்க்கவும்)  வளர்ந்துள்ளது, அதற்கு நேர் விகிதாச்சாரத்தில்  அடிமைகளும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வளர்ந்திருப்பதுதான் விந்தை. குளிர் சாதன பெட்டிகளிடைத்தலைவரையும்,  100 °  வெயிலின் கீழ் தலைகாய்ந்த அடிமைகளையும் வேறு நாட்டில் இத்தனை வெளிப்படையாகக் காணக் கிடைப்பதில்லை.

—————————————————-

மொழிவது சுகம் ஏப்ரல் 20 – 2016 “Ludothèque”

கடந்த  இரண்டு நாட்களாக பாரீஸில் இருக்கிறேன். நேற்று எனது மருமகள் பணிக்குச் செல்வதற்கு முன்பாக பிற்பகல் எனது பேரனை அழைத்துக்கொண்டு ‘Ludothèque’ – வரை சென்று வரமுடியுமா என்று கேட்டார். எனக்கு அச்சொல் புதித.  லுய்தோதேக்  என்றால் என்னவென்று கேட்டேன். பிள்ளைகளுக்கான விளையாட்டுப்பொருட்களுகான மையம், எனக் கூறிவிட்டு அலுவலகம் சென்றுவிட்டார்.

பிரான்சு நாட்டில் ‘Thèque’  என்ற பின்னொட்டு சொல் கொண்டு பல சொற்கள் வழக்கில்  உள்ளன, அக் கிரேக்க சொல்லுக்கு ‘ திரும்ப எடுப்பதற்கு வசதியாக பொருட்களை ஒழுங்க்காக அடுக்கி வைக்கும் பெட்டி என்று பொருள். Ludus என்ற இலத்தீன் சொல்லுக்கு விளையாட்டு என்று பொருள். என பின்னர் தெரிய வந்தது

இங்குள்ள ல் நூலகங்களுக்கு Bibliothèque (பிப்லியோதேக்)  என்றுதான் பெயர், Librairie  என்றிருந்தால் அது புத்தக விற்பனைக் கடை அக்கடையில் எழுதுபொருட்களும் விற்கப்படலாம்.

ஸ்ட் ராஸ்பூரில் (Strasbourg)  Bibliothèque, தவிர Médiathèque, sonothèque, Photothèque  என்றெல்லாம் அறிந்திருந்தேன்.  Ludothèque என்ற வார்த்தையை அதாவது பிள்ளைகளுக்கான  அறிவு சார்ந்த  விளையாட்டுப் பொருட்களை  வருடச்சந்தாவின் பேரில் இரவல் பெற்றுத் திரும்ப ஒப்படைக்கும் இடம் என்ற பொருள் கொண்ட சொல்லை அறிய நேர்ந்தது தற்போதுதான்.

இச்சொற்களை அறிந்திராத நண்பர்களூக்காக இரண்டொரு வரிகளில் விளக்கங்கள்:

Médiathèque =  நல்ல திரைப்படங்கள், இசைதட்டுகள்  கிடைக்கும். வருடச் சந்தாவின் பேரில் வீட்டிற்குக் கொண்டுவந்து திரும்ப ஒப்படைக்கலாம்.

Photothèque  நிழற்படங்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள்.  புகைப்பட  ரசிகர்களுக்கு, கலைஞர்களுக்கு பார்வைக்குக்   கிடைக்கிறது. வீட்டிற்குச் சொண்டு செல்ல அனுமதிப்பதில்லை.

Sonothèque அல்லது la Bibliothèque de sonore எனப்படுவது  பார்வை குறைந்தோருக்கும், பார்வை இழந்தோருக்கும் நல்ல நூல்களை ஒலி வடிவில் இரவல் தரும் நூலகங்கள்.  L’Association des donneurs de voix (குரலை  நன்கொடையாக க் கொடுப்போர் அமைப்பு)ம், பதிப்பகங்கள், புத்த்க விற்பனைக் கடைகள்  கூட்டாக இணைந்து செய்கிறார்கள்.  பிரான்சு நாட்டில் தற்போதைக்கு முக்கிய நகரங்கள் அனைத்திலும் Sonothèque இருக்கின்றன அதாவது  தற்போதைய நிலவரப்படி 1800.

———————–

பாரீஸ் நிழல்

அண்ணாச்சி கடைபோல ஒன்றை வைத்திருந்தாலும் அதாற்கும் சில கடமைகள் இருக்கின்றன. பலனை எதிர்பாப்பது  தொடரும் வரை அதற்குரிய கடமைகளிலிருந்து வில்கச் சாத்தியமில்லை. கடை தவிர  சிறியயதொரு SCI எனப்  பிரான்சு நாட்டு கம்பெனி சட்டத்திற்குட்பட்ட   நிறுவனமும் உள்ளது. கடையைப்போல திட்டமிட்டுத் தொடங்கியதல்ல. 1990 களில்  பிரெஞ்சு நண்பரின் இடத்தில் வாடகைக்கு  இருந்த கடையை சற்று விரிவாக்கலாமென  வேறொரு இடத்தை வாடகைக்குத்  தேடிக்கொண்டிருந்தபோது , அப்படியொரு இடம் வாடகைக்கும் வந்தது. இடத்திற்குச் சொந்தக்கார பெண்மணி வெளியூரில் இருந்தார். விளம்பரத்திற் கூறியிருந்த  தொலைபேசி எண்ணுக்குப் பேசிணென். குறிப்பிட்டிருந்த வாடகைக்கு சம்மதம் தெரிவித்தேன்.  மறு நாள் போனில் பேசிய இடத்தின் உரிமையாளர், இரண்டு இந்தியர்கள் தொடர்புகொணடு கூடுதலாக 500 பிராங்க் கொடுக்கத் தயாராக உள்ளத் தகவலைத் தெரிவித்தார். இரு இந்தியர்களும் இங்கு உழைத்து ஜெயித்திருக்கிற பஞ்சாபிகளோ குஜராராத்திகளோ இல்லை. தமிழர்கள். கடையிலும் பிற இடங்களிலும் என்னைச் சந்தித்த போது முறுவலுடன் கைகுலுக்குகிறவர்கள். இப்பிரச்சினையில் இராண்டு விடயங்கள்  உறுத்தின. முதலாவது இடத்தின் உரிமையாளர் வாயால் அறியப்பட்ட உண்மை. அந்த இடத்தை நான் வாடகைக்கு எடுக்க இருக்கும் விருப்பத்தை அவர்ளிடம் கூறினீர்களா எனக் கேட்ட  போது, அவர்களுக்குத் ‘தெரிந்திருக்கிறது’ என்றார். அவர்களின் இந்த முயற்சி யில் எதத்தப்பில்லை, ஆனால் 3000 பிராங்க் இடத்திற்கு தடாலடியாக 500 பிராங்க்  அதிகம் கொடுக்க முனைந்த விருப்பத்தை – அசட்டுத் துனிச்சலைச் சந்தேகித்தேன். பதினைந்து வருடங்களாக பிரான்சில் இருக்கிறார்கள், இருந்தும் பெரிதாக எதையும் கிழித்திராததால் அவர்கள் முயற்சியை அலட்சியம் செய்துவிட்டு வேறு இடங்களைப் பார்ப்பதில் நேரத்தைச் செலவிட்டேன்.  மூன்று நாட்கள் கழிந்திருந்தன.  சனிக்கிழமை பிற்பகல் பிரெஞ்சு நண்பர் வீட்டிற்கு வந்திருந்தார். பேச்சின் நடுவில் கடைக்கு இடம் தேடும் முயற்சி எந்த அளவில் இருக்கிறது என்னிடம் கேட்டார். முடிந்தவரை தனித்து முயற்சி செய்துவிட்டு உதவித் தேவையெனில் அவரிடம் செல்வதென் பழக்கம். தேடிக்கொண்டிருக்கிறேன் என் முயற் சி பலனளிக்கவில்லையெனில்  உன்னிடம் வருகிறேன் என்றேன்.  பரவாயில்லை  முயற்சி எந்த அளவில் இருக்கிறாதென கேட்டபோது, நடந்ததைச் சொல்ல வேண்டியிருந்தது.   அப்பெண்மணியின் தொலைபேசி எண்  இருக்கிறதா எனகேட்டார்.  உடனே அப்பெண்மணியிடம் பேசினார். இருவரும் பிரெஞ்சுக்காரர்களாக இருந்ததால்  வெகு எளிதில் உரையாடலில் நெருங்கி இருந்தார்கள். அந்த இடத்தை வாடகைக்கு விட்டாயிற்றா எனகேட்டார். இல்லை புதன் கிழமை தொடர்புகொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள், எனப் பதில் வந்தது.  தொலைபேசி எண்ணிலிருந்து அவர் எங்கள் பிரதேசத்தில் வசிப்பவரல்ல என்பதை நண்பர் விளங்க்கிக் கொண்டார்,  பெண்மணி  தான் Nice ல் இருக்கிறேன்.  அங்கிருந்துகொண்டு அம்மா  வழியில் வந்த இடத்தைக் கவனிப்பது சங்க்டமாகத்தான் இருக்கிறது, என்றார். உடனே பிரெஞ்சு நண்பர் “விற்றுவிட்டு உள்ளூரிலேயே வேறு இடத்தை வாங்கிக் கொள்ளலாமே “, என்றார். “நல்ல யோசனைதான்,  கூடிய சீக்கிரம் அப்படித்தான் செய்யவேண்டும்” எனக்கூறியவரிடம் நண்பரின் பதில் “நாங்கள் வாங்கிக்கொள்கிறோம்,  ஒரு மணி நேரம் கழித்து  அதுபற்றிப்  பேசுகிறேன்” என்பதாக இருந்தது.  முதலில் நண்பர்தான் அந்த இடத்தை வாங்கி என்னிடம்  வாடகைக்கு விடப்போகிறாரென நினைத்தேன்.  பெண்மனியிடம் , தொலைபேசியில் விடைபெற்றுக்கொண்டு என்பக்கம்  திரும்பிய நண்பர் எனது மனத்தைப் படித்தவர்போல “ நான் வாங்கவில்லை, நீதான் வாங்குகிறாய் என்றார்” Notaire  எனப்படும் பிரெஞ்சு பத்திர எழுத்தாளரிடம் இங்கே பொறுப்பை ஒப்படைத்தால் போதும் அவர் அனைத்தையும் பார்த்துகொள்வார், பணிக்கானக் கட்டணத்தைச்  செலுத்தினால் போதும். பத்திர அலுவலகம் செல்லவேண்டிய வேலை இல்லை. கைவசம் Notaireக்கு இடத்தின் விலைமதிப்பில் கொடுக்க வேண்டிய  8`%  கட்டணத் தொகைதான் இருந்தது. நண்பரின்  யோசனையின்  பேரில்  SCI 3RC  என்ற  நிறுவனம்  என்னையும் என் மனைவியையும் பங்குதாரர்களாகக் கொண்டு ஆரரம்பிக்கப்பட்டது, முறைப்படி  பதிவும் செய்யப்பட்டது.  அதன்படி SCI 3 RC நிறுவனம் India Entrepriseக்கு  வாடகைக்கு  விட்டுள்ளது. இரண்டுமே எங்களுடையது  என்றாலும் சட்டத்தின் பார்வையில் இரண்டும் தனித்தனி . SCI 3RC யின் கீழ் ஒரு அப்பார்ட்மெண்ட்டும்  வாங்க்கி வாடகைக்கு விடப் பட்டடுள்ளது.  இதைத் தவிர  பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி  எதுவுமில்லை.

ஆகக வருடந்தோறும் இ ந் நிறுவனங்களின் கணக்குகளை நான் தான்  செய்கிறேன். கடை ஒரு Entreprise Individuelle  என்பதால்  ஆடிட்டரிடம்  கொடுக்க வேண்டியதில்லை . SCI 3 RC கணக்கும் அப்படித்தான் . ஆனால் ல் இதறற்கென Software  இருப்பது சௌகரியம்  EBP  என்ற பிரெஞ்சு நிறுவனத்தின் நுண்பொருள்.  அவ்வபோது  மாற்றிவந்தாலும்  2006லிருந்து EBP Comptabilité என்பதை மட்டும் தொடர்ந்துஉபயோகித்துவந்தேன் அது கடைக்கென இருந்த ஒரு Windows XP  யில் இருந்தது. திடீரென  Windows XP  உயிரை விட்டு விட்டது.  எழுதுவதற்கும் பிற உபயோகத்திற்கும்  என்றிருந்த கணினி,  Windows 10 ஆக  இருந்தது. அதில் EBP Comptabilité Version 2006 ஒத்துவரவில்லை. எனவே புதிதாக வெளிவந்திருக்கிற  EBP Pratic 2016  வாங்கினேன் . Backup ல் இருந்தததை  பதிவிறக்கம் செய்யலாம் என நினைத்தபோதுதான்  பிரச்சினை தெரிய வந்தது  புதிய Comptabilité logiciel,  பழைய logiciel தரவுகளை  ஏற்க மறுத்தது. EBP நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது, அப்பணிக்கான உத்தரவாதத்தை நீட்டிக்க, பழைய மென்பொருள் அடிப்படையில் பதிவு செய்திருந்த தரவுகளை புதிய மென்பொருருளில் மாற்ற என  1200 யூரோ  கேட்டார்கள்.  யோசித்துதுப் பார்த்தேன் இரண்டு மாதமாக கொஞ்சம் கூடுதலாக உழைத்து கடந்த வெள்ளிகிழமை கணக்கை முடித்துவிட்டு பிள்ளையின் வற்புறுத்தலின் பேரில் பாரீஸ்  நிழலில் ஒதுங்கி இருக்கிறேன்.  பத்து நாளைக்கு பாரீஸில் தங்கி இருக்கிற நாட்களில்  ‘புதுச்சேரி ‘ என்ற பெயரில் எழுத இருக்கும்  நாவலுக்குத் தகவல் சேகரிக்க இங்குள்ள முக்கிய நூலகங்களில் நேரத்தைச் செலவிடத் திட்டம்.

கரந்தடி சீனு. தமிழ்மணி

Tamize புதுவை சீனு . தமிழ் மணியை இனி கரந்தடி சீனு. தமிழ்மணி  என்று அழைக்கலாம்.

‘இலக்கியம்’  என்ற புத்தகக் கடையைப் புதுச்சேரியைச் சேர்ந்த குயவர்பாளையம் பகுதியில்  நடத்துகிறார் என்று தொடங்கியது அவரது அறிமுகம். மாத்தாஹரி நாவல் வந்திருந்த நேரம். புத்தகக் கடையில்  அவரது வாடிக்கையாளர்களும் இலக்கிய அபிமானிகளுமாக இருந்த ஒரு சிலருடன் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தார்.  நன்றிக்கடன் அவர்மீது அன்பு செலுத்த வழிவகைசெய்தது. அது நாள்முதல்  அவதானித்து  வருகிறேன்.  இனப்பற்று, தமிழ்த் தேசியம், பெரியார் மீது தீராக் காதல், பூவுலக நண்பர்கள், துளிப்பா கவிஞர், துளிப்பா புரவலர் என பலமுகங்களுக்கு அவர் சொந்தக்காரர், என்கிறபோதும் அவருக்கு சமூகப் போராளி என்கிற ஒற்றைச்சொல் கச்சிதமான கவசம். தமிழ்மணி அதிசயமணியாக எனக்குப் பட்டார்.  நல்ல மனிதர்களை அடையாளப்படுத்துகிற  நண்பர் வெ.சுப நாயகருக்கு இதற்கும் நன்றி சொல்லவேண்டும்.  அகம், புறம் இரண்டிலும் அவர் தமிழ் மணிதான், தன் குடும்பத்தைக் காட்டிலும் சமூகப் பிரச்சினைகளில், நண்பர்கள் நலனில்  கூடுதல் அக்கறை, அநீதிகண்டு கொதிக்கும் மனம்,  எனப் பார்க்கிறபோது அவர் பெயருக்கு முன்னொட்டாக கரந்தடி பொருந்துகிறது.  அடுத்ததாக இந்தப் பெயர் அவருக்கு ஏற்றதுதான் என நான் நினைப்பதற்குக் காரணம்,  ‘கரந்தடி’ துளிப்பா இதழைத் தொடங்கி நடத்தினார் என்றச் சிக்கலில்லாத உண்மை.

அவருடைய இலக்கிய பங்களிப்பை  ஆழமாக உணரத் தவறி இருக்கிறேன்.  ஹைக்கூ என் கிற துளிப்பாக்களை அக்கறைகொண்டு வாசித்தவனல்ல. அன்பிற்குரிய  ஈரோடு தமிழன்பன் எழுதியவை என்னிடம் இருக்கின்றன, அவற்றை வாசித்து மகிழ்ந்த துண்டு, அதன் பின்னர் வாசித்தவை முழுக்கமுழுக்க  தமிழ் மணி குடும்பத்தாருக்குச் சொந்தமானவை. நண்பர் தமிழ்மணி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வரம் வாங்கி வந்தவர்கள்போல துளிப்பாக்கள் எழுதுகிறார்கள். நன்றாக எழுதவும் செய்கிறார்கள்.

அண்மையில் அவருடைய  காவ்யா வெளியீடான ‘ஆய்வுப் பதிவுகள்’ என்ற நூலை வாசித்தேன். ஆலா, ம. ஞானசேகரன், ‘ஓவியம்’ தமிழ்ச்செல்வி, அர. சந்திரசேகரன், கரசூர் பத்ம பாரதி, புதுவை யுகபாரதி ஆகியோரின் துளிப்பா  தொகுப்புகள் குறித்த கட்டுரைகள் அடங்கிய நூல்.   கட்டுரைகள் விரிவாகவும் ஆழமாகவும் எழுதப்பட்டுள்ளன.  ஹைக்கூ எனப் பொதுவில் அறியப் பட் டதைத்தான், சீனு. தமிழ்மணி துளிப்பா என அழகாகச் சொல்கிறார். துளிப்பாவின் தோற்றம், வளர்ச்சி, தற்காலத்  தமிழுக்கு அவற்றின் பங்களிப்பு, கவிதகள் பற்றிய விளக்கமான ஆய்வு, அவ்வாசியர்களைபற்றிய அறிமுகம்  என விரியும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் பத்து பக்கங்களுக்கு மேல்  எழுதப் பட்டுள்ளது.

ஆய்வுப் பதிவுகள் என்ற இந்த நூலில் இரண்டு விடயங்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. முதலாவதாக வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம துளிப்பாவின் வரலாற்றையும், உடற்கூற்றையும் தெளிவாய்ச் சொல்ல நினைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். துளிப்பா எப்போது பிறந்தது, எங்கே பிறந்தது ? பெற்றோர்கள் யார் ? எப்படி எழுதினால் சிறப்பு ? துளிப்பாவில் படிமத்தின் பங்கு என்ன ? குறியீடு எப்படி ? இப்படி  எல்லாச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன. இதனால் புதிதாக துளிப்பா எழுத நினைக்கிறவர்கள் நல்ல துளிப்பாக்களைத் தரமுடியும் என்பதோடு, எழுதிக்கொண்டிருப்பவர்களும் தங்கள் துளிப்பா வடிக்கும்  திறனை வளர்த்துக்கொள்ள உதவும். அடுத்ததாக நான்  இந்த நூலில் வியந்தது, அவர் துளிப்பாக்களைக்குறித்தும் அவற்றின் பொருள் குறித்தும், படிமம் குறியீடு ஆகியவைப் பற்றி மட்டும் பேசாமல், கவிஞர்களின் பின்புலம், துளிப்பாவின் கருப்பொருளாக ஒன்றைத் தேர்வு செய்யக் காரணம் முதலானவற்றை  விரிவாக எவ்வித சமரசத்திற்கு இடம் கொடாமல் தயக்கமின்றி பேசுகிறார். உள்ளத்தில் ஒளி உண்டாயின் வார்த்தையில் ஒளியுண்டாகும் என்பது, அவர் உபயோகிக்கும் சொற்கள் தெரிவிக்கும் உண்மை. இனி நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

  1. இங்கும் தோகுவா காலம்

‘ஆலா’ என்ற கவிஞரின் துளிப்பா நூலைப்பற்றிய இலக்கிய ஆய்வு இக்கட்டுரை.  நூலைக்குறித்த  விமர்சனத்திற்குள் நுழைவதற்கு முன்பாக புதுச்சேரி துளிப்பாவின் வளர்ச்சியை, தன் குழந்தையின் வளர்ச்சிக்கண்டு பெருமைபடும் இளந்தாயின் மனக்கிளர்ச்சியுடன் தமிழ்மணி  விவரிக்கிறார். தமிழக அரசு நடத்திய துளிப்பா கருத்தரங்கில் புதுச்சேரி கவிஞர்கள் கலந்து கொண்டமை, புதுச்சேரியில் சீனு தமிழ்மணியின் தலைமையில் வாசிக்கபட்ட கட்டுரைகள், தமிழ் நாட்டிலும், புதுச்சேரியிலும் துளிப்பா  நூல்கள் வெளியீடு. இன்றைய தேதியில் யார் யாரெல்லாம் துளிப்பாவையில் அக்கறை செலுத்துகின்றனர் என்ற விவரங்களை நூலாசிரியர் நமக்குத் தருகிறார்.  புதுச்சேரிக்கும் தமிழ்த் துளிப்பா உலகிற்கும் உள்ள உறவை பெருமித த்தோடு குறிப்பிடுகிறார்.

ஆலா வின் துளிப்பாக்கள் : :

«  விழுதுகள் தாங்கும்/ஆலமரம் /முதியோரில்லம் »

« மாலையில்/சந்திக்குமிடம்/கோலத்தில் குறியீடு ; »

«  தூரம் அதிகமாக/ஈர்ப்புவிசைக்கூடும்/காதலின் விதி ! »

 

2. புதுச்சேரி துளிப்பாக்களின் தொட்டில்

இக்கட்டுரை  புதுச்சேரி ம, ஞானசேகரனின் துளிப்பா  தொகுப்பு பற்றியது

தொகுப்பிலுள்ள துளிப்பாக்கள், நாத்திக விமர்சனப் பார்வையுடனும், சமயம்,  சாதி வழக்கைக் கண்டித்தும்  சொல்லப்பட்டுள்ளன.

சக்கிலி குளம்/வண்ணான் குளம் / பெரியார் நகர்

மரம் வெட்டி/கட்டிய வீட்டில்/ பறவைகள்  உச்சம்

மாடு விரட்டுகிறான்/மறத்தமிழன்/ ஊரில் மார்வாடி

போன்ற கவிதைகள் நல்ல உதாரணங்கள்

 

3 .ஓவியர் தமிழ்ச்செல்வி எழுதிய துளிப்பாக்களைக் குறித்த ஆய்வு

இக்கட்டுரையில்  நல்ல துளிப்பாவிற்குரிய  அடையாளங்களை மேனாட்டு அறிஞர்களின் கருத்தூடாக  கோடிட்டுக் காட்டப்படுகின்றன.

« ஓரளவு சரியானச் சொல்லைப் பயன்படுத்தலாம் என்றில்லாமல் மிகச்சரியான சொல்லையே பயன்படுத்த வேண்டும்,  பாவலன் என்ன உணர்ந்தானோ அதை அப்படியே வாசகன் உணரும்படி வெளியிடவேண்டும் » என்பது போன்ற துறைசார்ந்த அறிஞர்களின் படிமக் கொள்கைகளை ஆசிரியர்   நினைவூட்டுகிறார்.தவிர « துளிப்பாவின் வடிவ உத்திகளை சரிவர புரிந்துகொள்ளாமல் பலர் கிளம்பிவந்துவிட்டதால் தமிழ்த் துளிப்பா சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது பேருண்மையே. துளிப்பா எழுத முனைவோர் சபானியத் துளிபாக்களின் மொழிபெயர்ப்பைக் கட்டாயம் படிக்க வேண்டும் . சப்பானிய துளிப்பா குறித்த கட்டுரைகளையும் படிக்க வேண்டும் » என்ற கட்டுரை ஆசிரியரின் ஆதங்கத்தையும், ஆலோசனையையும் புதிதாகத் துளிப்பா எழுதுகிறவர்கள் மனதில்  நிறுத்துவது நல்லது.

துளிப்பா கவிஞர் தமிழ்ச்செல்வி பாக்கள் மணக்கொடை என் கிற வரதட்சணை, பெண்விடுதலை ஆகியனவற்றைக் குறித்து பேசுபவையாக  உள்ளன.

உருவம் இல்லாத பூதம் /பெண்ணையே அழிக்கும் /வரதட்சனை

பெண்கள் விரும்பி ஏற்கும்/ விலங்கு/ தாலி

 

  1. சிற்றுளி நன்றாகச் செதுக்குகிறது

அர. சந்திரசேகரன் என்பவரது கவிதைத் தொகுப்பை முன்வைத்து எழுதப்பட்ட  கட்டுரை.

நீர் நிலைகளை ஆக்ரமித்து வீடுகள் கட்டப்பட அந்த வீடுகளுக்கு ஏற்பட்ட முடிவினை அண்மையில் சென்னை வெள்ளம் போதித்தப் பாட த்தால் அறிந்தோம்.

பொய்யாக்குளத்துள்/ புதுப்புது வீடுகள் /பொய்த்த மழை

என்ற இக்கவிதைக்கு, வழக்கமாகவே ஒரு கவிதையின் பொருள் குறித்துப் பேசுவதற்கு முன்பாக நீண்ட விளக்கத்தின் ஊடாக கவிதையை நெருங்குகிற  தமிழ் மணி,  இயற்கை உபாசகர் என்பதால் எழுத்துஇரட்டிபாகிறது :

« வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி, வையை என்னும் பொய்யாக் குலக்கொடி எனத் தமிழிலக்கியப் பதிவுகளில் ‘பொய்யா’ எனும் அடைமொழி ‘வற்றாத’  எனும் பொருள் தரும். ஆகப் பொய்யாக்குளம் வற்றாத குளமாக இருந்திருக்கிறது. பொய்யாக்குளம் பொய்த்த குளமாகிப் போனதற்குக் காரணம்மக்களே. சுற்றுச் சூழல் பாதிப்பால் மழை சரிவரப் பெய்யாததால் பள்ளமான இடத்தில் வீடுகள் கட்டிவிட் டனர். அப்படி மழைப் பெய்தால் பள்ளத்தில் நீர்த் தங்கத்தானே  செய்யும் …. » (பக்கம்-59)

 

  1. முகங்கள்

கரசூர் பத்மபாரதி என்ற பெண்கவிஞரின் துளிப்பா தொகுப்பு பற்றிய ஆய்வுக் கட்டுரை.

இக்கட்டுரையிலும் ஆசிரியர், பெண்ணியம் குறித்து பல தகவல்களை அளித்தபின்பே தொகுப்பை பரிசீலிக்கிறார்.

உதாரணத்திற்கு எடுத்தாண்டுள்ள துளிப்பாக்களில் சில

இச்சைக் கணவன்/ ஏங்கும் மனைவி /அந்த மூன்றாம் நாள்

தேனீருட ன் /தேக க் கட்டை வணிகம்/ பெண்பார்க்கும் படலம்

 

  1. அரசமரம்

புதுவையைச் சேர்ந்த அரசு அலுவலர் யுகபாரதி என்பவர் எழுதிய துளிப்பாக்கள் தொகுப்பு குறீத்து எழுதப்பட் டக் கட்டுரை.

யுகபாரதியின் கவிதைகள் அர்த்தம் பொதிந்தவை ஒரு வகையில் அரசு அலுவலர்கள் பற்றிய சுய விமர்சனமும் கூட

மின்விசிறிகள் விளக்குகள்/வெறும் நாற்காலிகளுடன்

பல அரசு அலுவலகங்கள்

நூலில் இறுதியாக இடம் பெற்றுள்ள ‘புதிய புதிய சிந்தனைகளில்புதிய புதிய நகைத் துளிப்பாக்கள்  என்ற கட்டுரை மிகவும் முக்கியமானது. இது ஹைக்கூ வகைப்பாட்டில் ‘சென்ரியு’ வகைக் குறித்துப் பேசுகிறது.

கட்டுரையாளரும் அவர் சகோதர ர் தமிழ்  நெஞ்சனும் இணைந்து வெளியிட்ட தீவின் தாகம், இருபதாம் நூற்றாண்டு புதுச்சேரித் துளிப்பாக்கள்  நூலிலும் நகைத் துளிப்பாக்களை (சென்ரியு) துளிப்பாக்கள் என்ற பெயரிலேயே வெளியிட்டிருந்த தாகவும் ஆனால் 2007இல் கரந்தடி என்ற நூலில் துளிப்பா, நகைத்துளிப்பா, ஈறுதொடங்கித் துளிப்பா, இயைபு துளிப்பா ( லிமரைக்கூ ), உரைத் துளிப்பா ( ஐபுன் ) எனத் தனித் தனியாகப் பிரித்தெடுத்துத் தமிழில் முதன் முதலாக  வெளியிட்தாகவும் தெரிவிக்கிறார். இது தவிர விரிவான வேறு உபயோகமுள்ள செய்திகளும் உள்ளன.

நூலின் பதிப்பாசிரியர் இப்படி எழுதுகிறார் :

« நண்பர் சீனு தமிழ்மணி புதுவையில் இலக்கியா மூலம், பல புதுமைகள் செய்து வருகிறார். நல்ல நூல்களை விற்பதோடு நல்ல நூல்களை எழுதவும் முயன்றுவருகிறார். சமீபத்திய அவருடைய ஆர்வம் ஹைக்கூ பற்றிய ஆய்வுகளாகும்.  இதுவரை ஹைக்கூ பற்றி வெளிவந்துள்ள ஆய்வுகட்டுரைகளை தொகுக்கும் முயற்சியில் வெற்றிகண்டுள்லார் என்றே சொல்ல வேண்டும். அதற்கான அடையாளம் இந்த நூலில் உள்ளது »

நூலைப்பற்றிய ஒரு  முடிவுடன் வாசிப்பதில் கவனம் செலுத்த பதிப்பாளரின் இந்த அறிமுக வரிகள் உதவுகின்றன. எதனால் இதைக்குறிப்பிட வேண்டியிருக்கிறதெனில், துளிப்பா என்று அழகான தமிழ்பெயரைக் கொண்ட இவ்வகை பாக்களோடு எனக்கு அதிகப் பரிச்சயம் கிடையாது. பொருள் பொதிந்த, உபயோகமுள்ள பலச் செய்திகளை இந்த நூல் மூலம்  பெறமுடிந்த து.  கவிஞர் சீனு. தமிழ்மணி ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட 8 நூல்களில்  உள்ள படைப்புகள் அவரது மன நிலைக்கு ஒத்திசைவானவை, அவரது கொள்கைகளை எதிரொலிப்பவை. சமூக உணர்வு கொண்டவர்கள், தன்னைச்சுற்றியுள்ள மக்கள் உணர்வுடன் இருக்கவேண்டும் என்று  விரும்புவர்கள், வீட்டில் கட்டாயம் இருக்கவேண்டிய நூல். உலகச் சமூகத்தில் காண்கிற மையப்பிரச்சினைகளையும், தமிழ் சமூகத்தில் காண்கிற தனித்துவமான சிக்கல்களையும்   பேசுகிற துளிப்பாக்கள் தொகுப்புகளை கட்டுரையாளர் பொறுப்புடன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார். பகுத்தறிவு, தமிழ்த் தேசியம், பெண்ணியம், இன்றைய சமூகத்தைக் குறித்த கடுமையான விமர்சனங்கள்,  சுற்றுபுற சூழலென்று  இன்றைய உலகளாவிய மானுட பிரச்சினைகளை மையமாகக் கொண்ட நூல்கள் என்பது ஒரு புறம், அவற்றூடாக கரந்தடி சீனு தமிழ் மணி ஹைக்கூ கவிதைகளுக்கு வலிமை சேர்க்கும் புரிதலை நிகழ்த்தியுள்ளார் என்பது இன்னொருபுறம். இந் நூல் ஹைக்கூ பற்றிய ஆய்வுப் பதிவு மட்டுமல்ல, கையடக்கமான ஹைக்கூ குறித்த கலைக் களஞ்சியமும்  ஆகும்.

 

ஆய்வுப்பதிவுகள்

ஆசிரியர் புதுவைச் சீனு தமிழ்மணி

காவ்யா பதிப்பகம்

சென்னை624

 

 

 

 

மூத்த இலக்கியவாதிகள் திறனாய்வாளர்களின் விமர்சனங்கள்-10: ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ நாவல் குறித்து -க. பஞ்சாங்கம்

 வலியை உற்பத்தி பண்ணும் எழுத்து-க. பஞ்சாங்கம்

panchu

மொழி அறிந்த மனிதராகப்பட்டவர் எழுத்தாளராக மாறும் புள்ளி பிறரைப் பார்ப்பதுபோலத் தன்னைப் பார்க்கத் தொடங்கும்போதுதான் என்று சொல்லத் தோன்றுகிறது; கூடவே, தன் கண்கொண்டு பார்க்காமல் பிறர் கண்கொண்டும் பார்க்க வேண்டும். பாரீஸ் பண்பாட்டோடு வாழ்வதற்கு விதிக்கப்பட்ட நாகரத்தினம் கிருஷ்ணாவிற்கு உலக அளவில் பன்முகப்பட்ட பண்பாட்டைச் சார்ந்த பல்வேறு மனிதர்களாகத் தன்னை மாற்றிப் பார்த்துக்கொள்வதற்கான சூழலில், அவரின் எழுத்து மொழி தமிழாக இருந்தாலும், புனைவெழுத்து உலகம் தழுவி நீட்சிபெறுவதை அன்னாரின் நாவல்களை வாசிக்கிற கூர்மையான வாசகர் உணர்ந்து கொள்ளலாம். ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ என்ற இந்தப் புனைவும் செக்நாட்டைச் சேர்ந்த பிராஹா, பிரஞ்சு நாட்டைச் சார்ந்த பாரீஸ், கொல்மார், ஸ்ட்ராஸ்பூர், ஜெர்மனியைச் சார்ந்த பிராங்பர்ட், ஈழத்தைச் சேர்ந்த முல்லைத்தீவு, இந்தியாவின் வடக்குப் பகுதியான புதுடில்லி, ரிஷிகேஷ், தென்பகுதியான தமிழ்நாடு, புதுச்சேரி, கன்னியாகுமரி என உலகம் தழுவிய ‘களத்தில்’ கட்டமைக்கப்படுகிறது. அதுபோலவே பருவ காலம் – பொழுதுகள் என்ற முதற் பொருளும், தெய்வம், உணவு, மரம், விலங்கு, பறவை, ஆறு முதலிய கருப்பொருட்கள் பலவும் உலகம் சார்ந்ததாக அமைந்துள்ளன. எடுத்துரைப்பின் இந்தப் புதிய பின்புலங்கள் அது பேசும் புதியபுதிய வடிவங்களுக்குக் கூடுதலான அழகைக் கொண்டுவந்து சேர்க்கின்றன. எப்பொழுதுமே எழுத்தின் அழகியல் அது பேசும் பொருளில் மட்டும் இல்லை, புதிய களங்களைக் கட்டமைக்கும் வடிவ நேர்த்தியிலும்தான் குடிகொண்டுள்ளது.

இவ்வாறு உலகம் தழுவிய பின்புலத்தில் மனித வாழ்வின் அபத்தங்கள், ஆண் – பெண் உறவின் ஊடே வினைபுரியும் அசிங்கங்கள், மரணம் குறித்த மனித உயிர்களின் விளக்கங்கள், ஈழப் போராட்டத்தால் புலம்பெயர்ந்து பிரான்ஸ் தேசத்தில் வாழநேர்ந்தாலும் போட்டி, பொறாமை, காமக் குரோதம், சூழ்ச்சி என ஒன்றிலும் சிறிதும் குறையாமல் ஒரு சிறிதும் மாறாமல் வழக்கம்போல் தரமற்ற வாழ்க்கையையே எவ்வாறு நடத்த முடிகிறது என்ற வியப்பில் எழும் எழுத்துக்கள், பிரான்ஸில் வாழ ஆசைப்பட்டு, ஏதாவதொரு பிரான்ஸ் நாட்டுக் குடிமகளைத் திருமணம் முடித்துக்கொண்டு, அவளின் ‘நாய்க்குட்டியாக’த் தன் ஒட்டுமொத்த வாழ்வையும் வாழ்ந்து தீர்க்கும் புதுச்சேரி வாழ் தமிழர்களின் துக்கம், ஈழத்திலிருந்து பிரான்ஸில் முறையற்றுக் குடியேறியதால் வழக்கில் சிக்கிக்கொண்ட ஈழத் தமிழர்கள், நீதிமன்றத்தில் கூறும் வாக்குமூலங்களை பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த்துத் தரும் அனுபவங்களைச் சித்திரிப்பதன்மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளைக் காட்சிப்படுத்துதல், ‘அங்கே இங்கே’ என்று விவரிக்கும் தன்மை என நாவல் பன்முகமாக விரிகிறது; வாசகர்களையும் தன்னோடு உரையாடியே தீருமாறு தனது எடுத்துரைப்பு மொழிமூலம் சாதித்துக்கொள்கிறது.

புலம்பெயர்ந்து வாழநேர்ந்த ஒருவர்க்குள் தன் மண்சார்ந்த நினைவுகளும் விசாரணைகளும் கூடிவந்து வினைபுரிவதைத் தவிர்க்க முடியாது. நாவலாசிரியர் காஃப்காவின் நினைவுகளோடு உலகம் தழுவிய ஒரு சூழலில் நாவலை நடத்திக்கொண்டு போனாலும், தன் மண்சார்ந்த தமிழர்களின் வாழ்வு இருக்கும் நிலை குறித்து உள்ளம் நோகாமல் இருக்க முடியவில்லை. இன்று உலகப் பரப்பு முழுவதும் தமிழர்களாக அறியப்பட்டவர்கள் படர்ந்து வாழ்கிறார்கள். ஆனால் சீக்கியர்கள்போல, வங்காளிகள்போல, குஜராத்திகள்போலச் சென்ற இடங்களில் பெருமைப்படும்படியான சுயமரியாதை வாழ்வு வாழ்கிறார்களா? படைப்பாளி நேரில் பார்க்கும் வாய்ப்புப் பெற்றவர் என்பதால் புண்பட்ட மனத்தைத் தன் எழுத்தின் ஊடே பல இடங்களில் பதிவுசெய்துகொண்டே போகிறார்:

கிரகங்களிடம் தங்கள் தலை எழுத்தை ஒப்படைத் திருக்கிற தமிழர்கள் (ப.223)

தமிழ் படிச்சவரு புண்ணியக்கோடி. அவர் குதிரைபோல் கனைத்தார்; வேறொன்றுமில்லை; அவர் சிரித்தது அப்படி. காபி அடித்துப் பேரு வாங்கும் கூட்டம் (ப. 225)

ஒரு விஷயத்தை நிறைய வார்த்தைகளிட்டுப் பேசுகிறார்கள் (ப.248)

தமிழர் பேச்சில் போலியும் பகட்டும் அதிகம் (ப142)

புலம்பெயர்ந்து வாழும் ஒருவரின் பார்வையில் தமிழ் வாழ்வின் தரமற்ற தன்மை பளிச்செனப் புலப்படுத்துகிறது. இந்தப் பார்வையின் நீட்சியாக, ‘அங்கே, இங்கே’ என்று ஒப்பிட்டுப் பார்க்கும் எழுத்து முறையும் நாவலில் இடம்பெறுவதைப் பார்க்க முடிகிறது. புலம்பெயர்ந்து வாழும் மனத்தின் ஒரு வெளிப்பாடு இது. ஒரே ஒரு சான்று:-

ஒரு மரணத்தால் ஏற்படும் துக்கமோ மகிழ்ச்சியோ பிறருக்கேயன்றி, அம்மரணம் நிகழ்ந்த உடலுக்கில்லை என்கிறபோது எதற்காக அனுபவித்திராத மரணத்தை நினைத்து ஒருவர் கவலையுறவோ அஞ்சவோ வேண்டும்? தெரிதா முதல் எபிகூரஸ் வரை சொல்வதும் இதுவே. மரணத்தினால் ஓர் உயிரின் இருப்பு முடிவுக்கு வருகிறது என்பதைத் தவிர வேறு சொல்ல என்ன இருக்கிறது… கிழக்கில் வேறு சிந்தனை இருக்கிறது. இறைவன் நம்மைப் படைத்தது, எடுத்த தேகம் இறவா நிலையைப் பெறுவதற்காக, மீண்டும் பிறவாத பேரின்ப நிலையை அடைவதற்காக…(252-253)

புலம்பெயர் வாழ்வு தரும் வலிகளையும் சலுகைகளையும் சிக்கெனப்பிடித்துக் கச்சிதமாகப் பொருத்திக்கொள்ளும் படைப்பாளி, எழுத்தின் நுட்பம் அறிந்தவராதலால் பலவிதமான சோதனைகளையும் நாவலுக்குள் செய்துபார்க்கிறார். அவற்றில் தலையாயது ஒரு கணம் தோன்றும் மாயத்தோற்றங்களை நூலேணிபோலப் பிடித்துக்கொண்டு மேலேறும் எழுத்துமுறை சிறப்பாகக் கூடிவந்துள்ளது. விவேகசிந்தாமணியில் ஒரு காட்சி: பொழில் விளையாட்டிற்காகக் காட்டிற்குள் செல்லும் தலைவி, நாவல் மரங்கண்டு காலிழுக்க அடியில் போய் நிற்கிறாள்; ஒரு பழம் உருண்டுதிரண்டு கர்ரேரென்று கிடக்கிறது; கையில் எடுக்கிறாள்; ஆனால் அது தேனுண்டு மயங்கிக் கிடக்கும் வண்டு. தலைவியிடம் ஒரு கணம் தோன்றிய அந்த மாயத் தோற்றத்தைப் பிடித்துக்கொண்டு கவிஞர் மேலேறுகிறார்; அந்த வண்டு தலைவியின் உள்ளங்கையைத் தாமரைப் பூவின் இதழ் என்று அறிவது போலவும், விழித்துப் பார்த்தால் அவள் முகம் முழுமதிபோன்று தெரிவதால், தாமரைப்பூ உடனே கூம்பிவிடுமே, நாம் பூவுக்குள் மாட்டிக்கொள்வோமே என்று பயந்து அவசரம்அவசரமாக ‘றெக்கையை’ விரித்து விர்ரென்று பறந்து போனதாம்; அதைப் பார்த்த தலைவி மீண்டும் ஒரு கணம் மாயத்தோற்றத்திற்கு உள்ளாகிறாள்; ‘பறந்தது வண்டோ பழமோ’ என்று சொல்லும்போது கவித்துவத்தின் அழகியலுக்குள் நாமும் வண்டாய் மயங்கிவிடுகிறோம்.

இந்தப் படைப்பு நுட்பத்தை நாவலாசிரியர், பிராஹாவில் சுற்றுலாப் பயணிகளோடு பயணியாக, ‘இளம் மஞ்சள் வெயிலில்’ சுற்றி வரும்போது அனை வரும் ஒரு கணம், ஓரிடம் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டேயிருக்கும் நாய்களாகத் தோற்றம் அளிக்கிறார்கள்; அந்தக் கணத்தைப் பயன்படுத்திக்கொண்டு நூலேணியில் ஏறுகிறார். மனிதர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் எளிமையாக அதிகாரம் செலுத்துவதற்கான ஒருமுறையில் மற்றவர்கள் தங்களிடம் ‘நாயாக’ நடந்துகொள்ள வேண்டுமென நனவிலி மனத்தில் எதிர்பார்க்கிறார்கள் என்ற ஒரு பாவனையில் எழுத்தை அற்புதமாக நடத்திச் செல்கிறார்.

துணை, நட்பு, உறவு, அன்பு என்ற பதாகையின் கீழ் புதைந்துகிடக்கும் அதிகார வேட்கையின் அம்மைபோட்ட முகத்தை, போலான முறையில் நாவலா சிரியர் புனைவெழுத்தாக்கி உள்ளார். இந்த மாயத்தோற்றத்தைப் பயன்படுத்தி “விலங்குகள் வேற, மனிதர்கள் வேற இல்லை” என்றும் உரையாடுகிறார்.

“மனிதர்களுக்கு நம்முடைய மொழியைப் பேசவோ புரிந்துகொள்ளவோ போதாது. அவர்கள் அனைவரும் விலங்குகள்” என விலங்குகள் சொல்லித் திரிவது உங்கள் காதில் விழுந்திருக்குமா? அவைகளுக்கு வேறு மொழிகள் இருக்கின்றன. வேறுவகையான உரையாடல்கள் இருக்கின்றன” (292) என்று எழுத்து வேகமாக நகரும்போது வாசிக்கின்ற வாசகர் உட்பட எல்லோரையும் காஃப்காவின் ‘நாய்க் குட்டிதான்’ என்ற தீச்சுட்டு, ஒரு கணம் மரத்துப்போய்க் கிடக்கும் நாம் உயிர்ப்புறுகிறோம்.

எலும்பின் மஜ்ஜைக்காக ஒன்றையொன்று கடித்துக் குதறிக்கொள்ளும் காஃப்காவின் நாய்கள்தாம் நாமும் என்ற பார்வை நாவல் முழுவதும் உள்ளோடிக் கிடந்தாலும், வெளிப்படையாக அது புலப்படுவது ஈழப் போராளியாய்ச் செக்குச் சுமந்து வேறு வழியின்றி பாரீஸில் இருக்கும் தமக்கையின் கணவனாகிய மத்யூஸிடம் வந்து மாட்டிக்கொள்ளும் போராளி ‘நித்திலா’ பற்றிய பக்கங்களில்தான். தனது மனைவி கமலாவின் தங்கை நித்திலாவை அடைவதற்காக மத்யூஸ் போடுகிற திட்டங்களும் நடத்துகிற கபட நாடகங்களும் நிகழ்த்துகிற கொடுமைகளும்

மஜ்ஜைக்காக நாயைவிடக் கேவலமாக நடந்துகொள்ளும் மனிதர்களின் பேரவலத்தைப் படம் பிடிப்பவையாக அமைந்துள்ளன. இவ்வாறு எல்லாவிதமான கயமைத் தனத்தையும் பயன்படுத்தி அடையப்பட்ட மஜ்ஜை, அடைந்த அந்தக் கணத்திலேயே விஷமாகி விடும் யதார்த்தத்தை நாவல் வலுவாக முன்வைக்கிறது. ஈழப் போராட்டமானாலும், நீதிமன்ற நடவடிக்கைகளானாலும், ஒருத்தரையொருத்தர் நாயாய் நடத்த முயலும் ஆண் – பெண் உறவானாலும், கன்னியாகுமரி முதல் பிராஹாவின் வெல்ட்டாவா நதிவரை அலைந்து திரியும் சாமியாரானாலும் கவர்ச்சி காட்டி அங்கும் இங்கும் அலைபாயவிட்ட அனைத்தும், கைப்பற்றிய அந்தக் கணத்தில் மனிதர்களுக்கு எதிரானவைகளாக அப்படியே தலைகீழாக மாறிவிடுகிற நெஞ்சைச் சுடும் மெய்மையினால் பிறக்கும் வியப்பின் வெளிப்பாடுதான் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ என்ற இந்த நாவல்.

ஒரு நல்ல எழுத்து, வாசகருக்குள் புதைந்துகிடப்பதை அவருக்கு எடுத்துக் காட்டுவதன் மூலம் ‘வலியை’ உற்பத்தி பண்ணிவிட முயற்சிப்பதுதான். இந்தநாவல் அதைச் செய்கிறது

நன்றி : காலச்சுவடு பிப்ரவரி 2016 இதழ்

———————————————————————

காஃப்காவின் நாய்க்குட்டி
நாகரத்தினம் கிருஷ்ணா
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. ரோடு
நாகர்கோவில் & 629 001
பக்கம்: 312
விலை: ரூ.295

 

அமைதியைப் பார்த்ததில்லை, கேட்டதுண்டு(2002)

Image1.png

 

 

 

 

 

 

 

அமைதியைப் பார்த்ததில்லை, கேட்டதுண்டு(2002)
 
நம்பிக்கையும் உறவும், நட்பும் நெருக்கமும்
 
சந்தேகம், பகை, எதிரி, இடைவெளியென
 
வேற்றுமை பெயரானதில்
 
அமைதியைப் பார்த்ததில்லை
 
கேட்டதுண்டு !
 
இந்தியா – பாகிஸ்தான்
 
இஸ்ரேல் – பாலஸ்தீனம்
 
ஈரான்-ஈராக்
 
குர்திஸ்தான் -கொசொவா
 
ஆப்கானிஸ்தான், இலங்கையென
 
தொடரும் பட்டியலில்
 
நாடுகள் எதுவாயினும்
 
படுகள உயிர்கள்
 
அமைதியைப் பார்த்ததில்லை
 
கேட்டதுண்டு !
 
புயலுக்குப் பின்னே அமைதி
 
போருக்குப் பின்னே அமைதி
 
படித்ததுண்டு அறிந்ததில்லை !
 
கொலைவாட்கள் தீட்டப்படும்
 
கோப வினாடிகளில்
 
இரு பீரங்கி முழக்கங்களின்
 
இடையிலான பிரசவ நிமிடங்களில்
 
இரு போர்களுக்கு இடையிலான
 
சூன்ய நாட்களில்
 
அமைதியைப் பார்த்ததில்லை
 
கேட்டதுண்டு !
 
இடிபாடுகளுக்கிடையே சிக்குண்ட
 
எமதில்லங்களில்
 
குழிபெயர்ந்த கொல்லைப்புறங்களில்
 
டாங்்கிகள் தடம் பதித்த வீதிகளில்
 
சமாதிகண்ட சந்தைகளில்
 
அமைதியைப் பார்த்ததுண்டு
 
அறிந்ததில்லை !
 
வண்டுகள் மொய்த்த சோலையெங்கும்
 
ஈக்கள் மொய்க்கும் மனிதம்
 
அலகுடைந்து காத்திருக்கும்
 
கழுகுகள் !
 
மயானத்தில் பிணங்கள்
 
காத்திருப்பது
 
அமைதிவேண்டியல்ல
 
கல்லறைகளுக்காக !
 
– நாகரத்தினம் கிருஷ்ணா

 

 

 

என்றோ எழுதியது-3

மழையின் கால்கள் (1977)

 

தடதடவென மத்தள இடிகள்

தம்புராச் சுருதியில் தனிச் சுழற்காற்று

சலசலவென சங்கீதமழை

நீர்க்கோடுகளாய் நிலத்தில் இறங்கும்!

 

இலையும் கிளையும் துளிகள் வாங்க

இன்பச்சுகத்தின் இறுதியில் வேர்த்து

நின்று மூச்சிடும் மழையின் கால்கள்!

 

குக்கூவென்றும் அக்கோவென்றும்

குளறும் மொழியில் குளிரும் மழையில்

கூடத் துடித்திடும் கொஞ்சும் கால்கள்!

 

தாழங்குடையில் தலையை வாங்கி

வீழும் துளிகளை விரலால் வழித்து

உழவு மாட்டுடன் ஓடும் கால்கள்!

 

மழையில் நனைந்த மகிழுவுடன் கன்று

தாய்ப்பசு மடியில் தலையைத் துவட்ட

தாய்மைச் சுகத்தில் தவித்திடும் கால்கள்!

 

சவுக்கு மரங்கள் சாய்ந்திட-அந்த

சத்தம் கேட்டுப் பெண் முயல் விலக

அச்சம் தவிர்க்கும் ஆண்மையின் கால்கள்!

 

களையை முடித்து மழையில் நனைந்து

முந்திக் குடையில் முகத்தை மறைத்துக்

கனத்த மார்புடன் பிணக்குங்கால்கள்!

 

கொட்டும் மழையில் கூச்சலிட்டோடி

மூக்கு சளியை முழங்கை வாங்க

ஆட்டம் போடும் அறியாக் கால்கள்!

 

மழையின் கால்களில் மகத்துவம் தேட

ஒழுகும் துளிகளின் ஊடே புகுந்தேன்

காலடி மழையில் கரைந்து ஒளிந்து

தாளடி இயற்கைத் தருமம் அறிந்தேன்!

 

–  நாகரத்தினம் கிருஷ்ணா

 

மொழிவது சுகம் ஏப்ரல் 2 2016

சொல்வனம்  இதழ் 147  (22 -3 -2016)

 

. மணிபத்மம்ஆபிரகாம் எராலி

 ஆபிரகாம் எராலி என்பவர் எழுதி பெங்க்வின் பதிப்பாக வெளிவந்துள்ள இந்திய வரலாறு குறித்த நூல்களைப் பற்றிய அறிமுக க் கட்டுரை,  வெ. சுரேஷ்  என்பவர் எழுதியுள்ளார்மிகவும் பயனுள்ள கட்டுரை   இந்திய வரலாற்றை முற்றிலும் புதிய பார்வையுடன் –  விமர்சன  நோக்கில் எழுதப்பட்டதென்கிற கட்டுரையாளரின் வார்த்தைகளை  நம்பமுடிந்தால்-, அவசியம்  நாம் படிக்க வேண்டியவை.   ஒரு  நல்ல நூலொன்றை  அறிமுகம் செய்கிறபோது எவற்றைப் பதிவு செய்வது, எப்படிச்சொல்வது போன்ற விதிகளையெல்லாம் வகுத்துக்கொண்டு கூறவந்ததுபோல கட்டுரை வெகு துல்லியமாக தனது பணியை நிறைவேற்றுகிறது. பல அறிந்திராத புதிய தகவல்கள் நூல்களில் இருக்கின்றன  என கட்டுரையாளர் தெரிவிக்கிறார். ஆபிரகாம் எராலிக்கும், அவர் நூல்களைவெளியிட்டுள்ள பதிப்பகத்திற்கும், அ ந் நூல்களை நமது கவனத்திற்குக் கொண்டுவந்த  கட்டுரையாளருக்கும், சொல்வனத்திற்கும் நன்றி.

 . அரவிந்த கண்மருத்துவ குழுமமும அரசு நிர்வாகமும்

 மிகப்பெரியக்கட்டுரை, அரவிந்தக் கண்மருத்துவமனையின் செய்தித்துறைத் தயாரித்த கட்டுரைபோல எழுதப்பட்டுள்ளது. இதுபோன்ற மருத்துவ மனைகள் இந்தியாவெங்கும் உள்ளன. எதிலும் அமெரிக்க நடைமுறையைக் கையாளும் இந்தியாவில் மருத்துவத்தின்  கொள்ளை  தெரிந்த கதைதான்ஆனால் அமெரிக்காவில்  பாதிக்கப்படுகிறவர்கள் உரிய நீதியைப் பெற முடியும்.  எது எப்படியிருப்பினும் அரவிந்த கண்மருத்துவ மனை தமது பணியை குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக ஏழைகளுக்கு வழங்குவது வரவேற்கக் கூடியதே.  ஆனால்  மருத்துவசேவையை கின்னஸ் ரெக்கார்டுக்கு என்பதுபோல அவர்கள் நினைத்து செயல்படுவதைச்  சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. ஊழியர்களுக்கும் செவிலியர்களுக்கும் ஊதியத்தைக் குறைத்து மருத்துவர்களின் ஊதியத்தைக் குறைக்காமல் அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரித்திருப்பதாக கட்டுரையாளர் வாதிடுவது அபத்தம். அம்மாதிரியான  உற்பத்திமுறையில், சந்தைக்கு வரும் பொருட்களின் தரத்தைப் பற்றிய தரவுகளையும் கட்டுரை வழங்கியிருக்குமானால் அரவிந்த கண்மருத்துவ குழுமத்தின் சேவையைத் தராளாமாகப் பாராட்டலாம்.  ஆனால் அதே சிகிச்சைக்கு25000 ரூபாய் வாங்குகிற மற்றவர்களும் பெரிய உத்தரவாதத்தைத் தருவதில்லை என்கிறபோது  கண்ணை மூடிக்கொண்டு அரவிந்த கண் மருத்துவ குழுமத்தின் சேவைக்கு ஒரு பெரியபோடலாம்.

 

பாரத நாடு

 

ராமபதசௌத்ரி வங்காள மொழியில் எழுதி சு.கிருஷ்ணமூர்த்தி என்பவரால் தமிழ் படுத்தப்பட்ட சிறுகதை

இச்சிறுகதையைத் தேர்வு செய்து பிரசுரித்துள்ள சொல்வனம்` இணைய இதழுக்கு நன்றிசொல்ல வேண்டும் . மொழிபெயர்ப்பென்று சொல்லமுடியாதவகையில் மொழிபெயர்ப்பாளார் கதையைத் தமிழ்ப் படுத்தியுள்ளார். கதை ஆசிரியருக்கு இந்திய நாட்டின் மீதும் அதன் பிரஜைகள் மீது என்ன கோபமோ  கதைக்கருவும், பொருத்தமான கதைசொல்லலும் சிறுகதையின் மதிப்பினை உயர்த்தியிருக்கின்றன. தலை நிமிர்ந்து பாரதத்தின் மானத்தைக் காப்பாற்துவார்  என நாம் நம்புகிற  மகோதக் கிழவனும் வீசுகின்ற சில்லறைகளை பொறுக்கி எடுக்கிறபோது, இந்தியச் சமூகத்தையே  தலை குனியவைத்திருக்கிறார் கதையாசிரியர்  ராமபத சௌத்ரி..

« தொரை பக்க்ஷீஸ் ! தொரை பக்க்ஷீஸ் !  ஒரு கிராமமே திரண்டு ராணுவ வீர ர் களிடம் கையேந்துகிறபோது, தமிழ்னாடு வாக்காளர்களும் தமிழகத் தேர்தலும் ஏனோ தேவையின்றி நினைவில் குறுக்கிட்டது.

 

. முகம்தெரியாத ஒரு பறவையின் கூடு சிறுகதை

கே. ஜே அசோக்குமார் எழுதிய சிறுகதை. எதிஎர்காலத்தில் பிரகாசிக்க உள்ள இளைஞர்.   இவரது கதைசொல்லல் எனக்கு ஏமாற்றத்தைத் தருவதில்லை. திடீரென்று அகதிகளாக காலி மனையில் குடியேறும் நாடோடி ஆட்டிடையர் குடும்பமும், சன்னலுக்கு மறுபுறம் கண்ணிற்படுகிற குருவிக்கூடும் மையப்பொருட்கள், இரண்டின் சந்தோஷத்தையும் வழக்கம்போல இயற்கை நியதிக்கு மாறாக உலக நியதிகள் உருக்குலைக்கும் தந்திரத்தை   அதிகச் சிக்கலில்லாமல் கதைப் படுத்தியிருக்கிறார்

இவற்றைத்தவிர பாவண்ணன், எழுதிய வஞ்சினங்களின் காலம்  என்ற ஆங்கிலத் திரைப்படம் பற்றிய கட்டுரை, பாலாஜி பிரித்வராஜ் என்பவர் எழுதிய நிலையாட்டம் என்ற சிறுகதை ஆகியவையும், வேறு சில கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

 வாசிக்க : http://solvanam.com/

 ————-