Monthly Archives: ஓகஸ்ட் 2013

மூச்சு முட்டி வளர்ந்ததொரு செடி

“இன்னும் நல்லா இழு”

“எனக்கு முடியலைடா”!

” தோ பாரு! நல்லா உதடுகளை முன்தள்ளிக்குவித்து, ஆள்காட்டிவிரலையும் கட்டைவிரலையும் சேர்த்து பீடிக்கு ஒரு கிடுக்கிப்பிடியிட்டு புகையைத் தம்கட்டி இழுக்கணும்.

” இழுத்தால்”?

” நாளைக்கே என்னைப்போல பெரிய மனுஷன் நீ!” -சொல்லிவிட்டு கலகலவென்று சிரிக்கிறான். அப்போ என்ன வயசிருக்குமென்று நினைவிலில்லை. ஏழாம் வகுப்பு கோடைவிடுமுறையென்று ஞாபகம். வாள் கொண்டு மரம் அறுப்பதற்காக பெரிய பள்ளம் தோண்டிவைத்திருந்தார்கள். பள்ளத்தின் இருகரையையும் பிடிமானமாகக்கொண்டு நீள்வாக்கில் மரம் போடப்பட்டிருக்கும் பள்ளத்தில் ஒருவரும் மேலே ஒருவரும் நின்றுகொண்டு மேலும் கீழுமாக சீரான கதியில் வாளை இழுப்பார்கள். அப்பள்ளந்தான் முதலும் கடைசியுமாக பீடியைக் குடித்துப்பார்க்க எனக்கு பயிற்சிகளமாக அமைந்தது. எனக்குக் குரு மண்ணாங்கட்டி.

அவன் பெயர் பதிவேடுகளில் சின்னத்தம்பி என்றிருந்தாலும், அவனுடையை பெற்றோர் மண்ணாங்கட்டியென்றே அழைக்க எங்களுக்கும் அது பழகிப்போயிற்று. அவன் அப்பா ராசு கவுண்டருக்குக் கடைசிகாலத்தில் பிறந்த ஒரே வாரிசு. கிராமத்தில் அப்போது ஆரம்பப் பாடசாலை என்ற பெயரில்கூட எதுவுமில்லை. எங்கள் கிராமத்திலிருந்து அரை கி.மீ தள்ளியிருந்த மற்றொரு கிராமத்திற்குச் செல்லவேண்டும். முதல் இரண்டு வகுப்புகள் அவனுடன் படித்திருப்பேன் பின்னர் நானும் எனது சகோதரரும் இரண்டு ஆண்டுகள் தாத்தா கர்ணமாக இருந்த அனுமந்தையென்ற ஊரிலும், பின்னர் ஐந்தாம் வகுப்பிலிருந்து எங்கள் பாட்டி சமைத்துப்போட புதுச்சேரியிலும் படிப்பைத்தொடர்ந்தோம். மண்ணாங்கட்டி பக்கத்து ஊரில் தொடர்ந்து படித்துவந்த ஞாபகம். பிறகு எட்டாம் வகுப்பிலிருந்து  எங்கள் கிராமத்திலிருந்து ஐந்து கி.மீட்டர் தூரத்திலிருந்த புதுச்சேரி மாநிலத்தைத் சேர்ந்த காலாப்பட்டு என்ற ஊரில் படிப்பைத் தொடர வேண்டியதாயிற்று. மண்ணாங்கட்டியுடனான நட்பு தொய்வின்றி தொடர்ந்தது.

எங்கள் வீட்டில் அவனோடு சேராதே என்று உத்தரவு. இருந்தும் வீட்டிற்குத் தெரியாமல் அவனைத் தேடிபோய் பழகுவேன். எனக்கு அப்போது சிவாஜிபடங்கள் என்றால் பிடிக்கும் அதற்கு இரண்டுகாரணங்கள். அப்பா காங்கிரஸ்காரர் என்பது ஒரு காரணம். மற்றது மண்ணாங்கட்டி. சிவாஜிபோல வசனம் பேசுவான். கிராமத்தில் தெருக்கூத்தோ, நாடகமோ நடந்தால் மறுநாள் அதில் வரும் முக்கிய பாத்திரங்களாக மாறி என்னைப்போல பையன்களைக் கூட்டிவைத்துக்கொண்டு நடித்துக்காட்டுவான். தவலையைத் தலைக்குப்புற கவிழ்த்து நீச்சலடித்துக்கொண்டு மறுகரைக்கு போய்வருவான். பெண்கள் முன்னால் திடீரென்று காற்சட்டையை அவிழ்த்துப்போட்டு நிர்வாணமாக இடுப்பை ஒடித்து ஆடுவான். அவர்கள் ‘எடு துடைப்பக் கட்டையை! ‘எனக்கூவிக்கொண்டு துரத்துவார்கள், நின்று சிரிப்பார்கள், இவனும் பதிலுக்குச் சிரிப்பான். எனக்கு மட்டுமல்ல விடலைப்பருவத்தில் என் வயது பையன்கள் பெண்கள் என எல்லோருக்கும் அவன்தான் ஹீரோ. ஒருநாள் உள்ளூர் குளத்தில் வெகு நேரம் ஆட்டம்போட்டுவிட்டு கரையேறியபோது அவன் போடவிருந்த கால் சட்டையிலிருந்து பீடியொன்று விழுந்தது.

– ஐய்யயோ நீ பீடியெல்லாம் பிடிப்பாயா? எனக்கேட்டேன்.

– நான் பெரியமனுஷன் ஆயிட்டேன் பிடிக்கிறேன்

– எனக்கும் பிடிக்கணும்போல இருக்குது கொடேன்.

– இல்லை ஒரு பீடிதான் இருக்குது, நாளைக்கு உங்க வீட்டுலேயிருந்து காசு எடுத்துவா. பீடி புடிக்கக் கற்றுதரேன்- என்றான்.

மறு நாள் மரமறுக்கும் பள்ளத்தில் அவன் பீடிபிடிக்க எனக்குக் கற்றுதந்தபோது, பதட்டமாக இருந்தது. முதற்புகையைவிட்டபோது அவன் கூறியதைபோலவே சட்டென்று வளர்ந்து பெரிய மனுஷன் ஆன நினைப்பு. ஆனால் வீட்டிற்குத் திரும்பும்போது அச்சம் நெஞ்சுகொள்ள இருந்தது. யாராவது பார்த்திருப்பார்களோ என்ற கவலை. அப்பாவுக்குத் தெரிந்தால் தோலை உரித்துவிடுவாரென்று தெரியும். அவருக்கு அது மகா பெரிய தப்பு. ரொம்பக் கோபக்காரர். அன்றைக்கு ஒளிந்து புகைவிட்டபோது அப்பா முகத்தில் விட்டதுபோலத்தான் இருந்தது. அப்பாவை ஜெயித்துவிட்டதாக உணர்ந்தேன். நன்றாக ஞாபகம் இருக்கிறது வீட்டிற்கு நுழைந்ததும் நான்செய்த முதல் காரியம், அப்பாவின் கதர்த் துண்டை வாய்க்கு நேராகவைத்து, வாயில் இன்னமும் புகை பத்திரமாக இருப்பதைப்போல அதில் பலமுறை ஊதிய ஞாபகம். விடலைப்பருவம் அன்றையதினம் மனதிற் ஏற்படுத்திய இரசவாதத்திற்கு ஒப்பீடுகளில்லை.

*                         *                                       *                                     *

– அப்பா என் பிரண்டுக்கு பிறந்த நாள்.

– நான் காரில் கொண்டுபோய் விடவா.

– இல்லை அவள் அம்மா வந்து அழைத்து போவாங்க, நிகழ்ச்சிக்குப்பிறகு அவங்களே கொண்டு வந்து விடுவாங்க..

-*                                     *                                             *                          *

– பன்னிரண்டு மணி ஆகப்போகுது கம்ப்யூட்டர்ல என்ன பண்ற? வேளையா படுக்கணுமென்று எத்தனை முறை சொல்லியிருக்கேன்.

*                                    *                                       *                                    *

– ஒரு நண்பர் வீட்டுலே திருமணம், வீட்டுக்கு வந்தவங்க உன்னையும் தானே அழைச்சாங்க வாயேன்.

– இல்லை நான் வரலை. நீங்க போயுட்டு வாங்க, எனக்கு யாரையும் அங்கே தெரியாது.

*                              *                                     *                              *-

மேற்கண்ட உரையாடல்கள் எனக்கும் எனது இளையமகளுக்கும் ஆனது. அவளை இலேசாக கண்டித்தால் போதும், சட்டென்று அழுதுவிடுவாள். அவள் அம்மா, “இன்றைக்கு உனது பிறந்த நாளாயிற்றே, வேண்டுமென்பதைச் சொல்லேன், செய்துதரேன்”- என்பாள். எங்களுக்குக் கிடைக்கும் அவளுடைய எதிர்வினை தோளைக்குலுக்கி, உதட்டை பிதுக்குவது. ஏறக்குறைய இதேபோன்றதொரு உரையாடலை, அனுபவத்தைக் கடந்த காலத்தில் எனது பிற பிள்ளைகளுடன் பெற்றிருப்பேன்.

எனது பெற்றோர்களுக்கும் எனக்குமான விடலைப்பருவ உறவு எப்படி?  அப்பா நடைவாசலில் நுழையும்போதே, வீட்டைவிட்டு ஓடிவிடுவேன். அப்பாவின் மூர்க்கம் ஊரறிந்தது. அம்மாவிடம் அப்பா சொல்லுவது, ‘உனக்கு சமைக்கமட்டுமே தெரியும்’. அதையே கொஞ்சம் மாற்றி எங்களிடம், ” நீங்க சின்னப்பையன்கள், உங்களுக்கு ஒன்றும் தெரியாது” -என்பார். இதில் என்னைவிட மூன்று வயது பெரியவராக இருந்த அண்ணனிடத்தும் இதே அபிப்ராயத்தை வைத்திருக்கிறாறே என்பதில் எனக்கு சந்தோஷம். கொஞ்சம் தைரியத்துடன் அவரிடம் நாங்கள் பேசிவிட்டால் போதும், பிறகு இரண்டொரு மாதத்திற்கு  மறக்க முடியாதென்றாகிவிடும்.  தலைமுடி எப்படியிருக்கவேண்டும், சட்டை எப்படி இருக்கவேண்டும். எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கலாம், வீட்டில் என்ன சமைக்கலாம் எல்லாம் அவர்.. அவர்.. அவர். எனது விடலைப்பருவம் அப்பா நிழலில் மூச்சு முட்டி வளர்ந்ததொரு செடி.

சொல்லப்போனால் விடலைப்பருவத்தை உடல் ஏற்றுக்கொண்ட தருணம் தொடங்கி அதன் இயல்புக்குகந்த சில எதிர்வினைகளை நடத்தியிருக்கிறது. உடல், மனம் இவற்றிலேற்பட்ட மாறுதல்களைப் பற்றிய பிரக்ஞையில்லை. விரல் முனையில் ஊடகங்கள் இல்லாதகாலம்.  என்னைச்சுற்றியிருந்த மனிதர்களின் தாக்கமும் குறைவாகவே இருந்தது. எனது தந்தையின் முரட்டு சுபாவத்திற்கு எதிரான குணம் கொண்டிருந்தவர்களை அல்லது அவரது அதிகாரத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்புவர்களைத் தேடிச்சென்று பழகினேன். எங்கள் வீட்டிற்கு வந்தால் தயங்கி நிற்பவர்கள் இல்லங்களைத்தேடி  அவர்களுடைய வீட்டுத் திண்ணையில் சென்று அமருவேன். விடலைப்பருவத்தில் முரட்டு அப்பாவிற்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளால் கொடி பிடித்ததாக நினைப்பு. அப்பா பழுத்த காங்கிரஸ்காரர். எங்கள் ஊர் தமிழாசிரியர் உள்ளூர் எம்.ஜி.ஆர். ரசிகர்களுடன் சேர்ந்துகொண்டு கிராமத்தில் முதன் முறையாக தி.மு.க கொடியை ஏற்றிவிட்டார். அப்பா அவரைக் கன்னத்தில் அறைந்துவிட்டார். கொடிக்கம்பமும் சின்னாபின்னமானது. நான் தி.மு.க அனுதாபியானது அப்படித்தான். அப்பாவின் மேலிருந்த கோபம் தமிழாசிரியரைக் கொண்டாட உதவிற்று, அவர் வீட்டிற்கு அடிக்கடி போக ஆரம்பித்தேன். அவருக்கு விடலைப் பருவத்தில் ஒரு பெண் இருந்ததும் காரணமாக இருக்கலாம்.

முதன் முதலாக எனது குமர பருவம் உணர்த்தப்பட்ட அனுபவம் மறக்க முடியாதது. அப்போதெல்லாம் அமெரிக்க அரசாங்கம் இந்திய பள்ளி மாணவர்களுக்கு பால் மாவும், மக்காச்சோள மாவும் CARE என்ற அமைப்பின் கீழ் இலவசமாக வழங்கிவந்தார்கள். இரண்டுமாதத்திற்கு ஒரு முறை, யூனியனுக்குச் சென்று அப்பொருட்களை எடுத்துவரவேண்டும். ஒருவாரமாக பெய்து கொண்டிருந்த மழையில் ஏரிகுளங்களெல்லாம் நிரம்பிவழிந்தன, கலிங்கல் வழிந்து ஓடையில் இடுப்பளவு தண்ணீர். கிராமத்திற்கு வந்திருந்த நான், உள்ளூர் பையன்களுடன்  கேர் பொருட்களைக்கொண்டுவர அவர்களுடன் தயாரானேன். ஆசிரியை முன்னால் போய்க்கொண்டிருக்கிறார். பையன்கள் நாங்கள் அவர் பின்னால் போய்க்கொண்டிருந்தோம்.

– என் பின்னாலேயே வரவேண்டும், ஆங்காங்கே தண்ணீர் குளம்போல நிற்கிறது, நீங்கபாட்டுக்கு எங்கேயாவது போய் தண்ணிரில் மாட்டிக்கொள்ளப்போகிறீர்கள் என்று ஆசிரியை எச்சரித்திருந்தார்.

எங்களுக்கு முன்னால் நடந்துகொண்டிருந்த ஆசிரியை திடீரென்று ஒரு புதர் மறைவில் ஒதுங்க நாங்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு பின்னால் போய் நிற்க, அவர் பதற்றத்துடன் எழுந்து எங்களை முறைத்ததையும், “- ஏண்டா தடிப் பசங்களா ஒரு பொம்மனாட்டி அவசரத்துக்கு ஒதுங்கிறதைப் புரிஞ்சுங்க மாட்டீங்களா? எனக்கேட்டுச் சிரித்ததையும் ஜென்மத்திற்கு மறக்கமுடியாது.

அப்போதும் மண்ணாங்கட்டிதான் பதில் சொன்னான்:

– நீங்கதானே டீச்சர் உங்க பின்னாடியே வரச்சொன்னீங்க!

– நீ பிஞ்சிலேயே பழுத்தவனாயிற்றே என்பது ஆசிரியையிடமிருந்து வந்த பதில். அவள் சொன்னவாக்கு கூடிய சீக்கிரம் பலித்தது. நான் பத்தாம் வகுப்பில் சேர்ந்திருந்தபோது, அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது, நான் புமுகவகுப்பு படிக்கிறபோது இரண்டு குழந்தைக்கு அவன் தகப்பன். நான் கல்லூரியில் சேர்ந்தபோது இறந்துபோனான்.

எட்டாவது வகுப்பில் ஆரம்பித்து கல்லூரியில் புகுமுக வகுப்புவரை எனது குமரப்பருவம் நீடித்ததாகச் சொல்லலாம். துளசி என்ற ஆசிரியர் எங்கள் ஊரில் தங்கி பக்கத்து ஊர் பள்ளியில் பணியாற்றினார். வெகு சன பத்திரிகைகள் பலவும் அவர் வீட்டிற்கு வரும். அவர் படித்து முடித்த மறுகனம் அவற்றை வீட்டிற்குக்கொண்டுவந்து படிப்பேன். விடலைப்பருவ இச்சைகளை, தேடல்களை கூர்தீட்டியவை அவை. ஜெயராஜ் படங்களுக்காகவே சுஜாதாவை வாசிக்க நேர்ந்ததும் விடலைப்பருவத்தில் நிகழ்ந்ததுதான்.  ஒரு முறை வீட்டில் திதி கொடுக்கவேண்டுமென்று மாவிலையும் சுள்ளியும் ஒடித்துவரசொல்கிறார்கள்.  கையெட்டும் தூரத்தில் சுள்ளிகள், மாங்கொத்து. ஒடிக்கமுடியும் என்கிறபோதும், உறவுக்கார கன்னிப்பெண்ணொருத்தியைக் பார்த்த வேகத்தில் எவரெஸ்டில் ஏறுவதாக நினைத்துக்கொண்டு மடமடவென்று மரத்தில் ஏற, தாங்கிய கிளை முறிய, விழுந்ததைத் தொடர்ந்து  கட்டுபோட ஒரு மாதம் புதுச்சேரில்லருகில் ஓட்டேரிப்பாளையம் என்ற ஊருக்குப் போய்வந்ததற்கும் பருவக்கோளாறுக்கும் சம்பந்தமிருக்கிறது. விடலைப்பருவம் உடைகள் விஷயத்தில் அக்கறைகொள்ளவைத்திருக்கிறது. சொற்களை கவனமாக உச்சரிக்கவைத்திருக்கிறது. ஆசிரியர்களைக்காட்டிலும் ஆசிரியைகளிடத்தில் கூடுதலாக மரியாதை செலுத்தவைத்திருக்கிறது. இதற்கு நேர்மாறாக ஆசிரியர்கள் எங்கள் வகுப்புத் தோழிகளிடம் கடலைபோட்டிருக்கிறார்கள்.

அவர் எங்கள் அறிவியல் ஆசிரியர். அவள் எங்கள் வகுப்பு தோழி. எப்போது பாடினாலும் பி. சுசீலாவின் ‘நீ இல்லாத உலகத்திலே’ என்றபாடலை இனிமையாகப் பாடுவாள்.  அவள் பாடியதெல்லாம் அந்த அறிவியல் ஆசியருக்காகவென்று பின்னர்தான் தெரிந்தது. இருவருமாக சேர்ந்துகொண்டு பையன்களாகிய எங்களை நன்றாக ஏமாற்றியிருந்ததை காலம் தாழ்ந்தே புரிந்துகொண்டோம். அவள் வயதென்றாலும் எங்களை அவர் விடலைப்பையன்களாகக்கூட நடத்தவில்லை. அதற்குப் பிறகு ஒன்பதாம் வகுப்பிலிருந்து பதினோறாம் வகுப்புவரை எங்களுக்கு அறிவியல் பாடம் எடுத்தவர் ஓர் ஆசிரியை, திருமணம் ஆகாதவர். அவர் அறிவியல் பாடங்களுக்கு கையேட்டில் படம் வரைகிறபோதெல்லாம் ஆங்கிலத்தில் நன்றாக இருக்கிறது, அழகாக இருக்கிறதென்று எழுதுவார். அவரும் நல்ல சிவப்பு, அழகுவேறு.  எனக்கும் நித்தியானந்தம் என்றொரு சக நண்பனுக்கும் அவரிடம் பாராட்டைப்பெறுவதில் கடுமையான போட்டி இருந்தது. ஆசிரியருக்குப் பதிலாக ஆசிரியைகளாக இருந்து பாடமெடுத்திருந்தால் எல்லாவற்றிலுமே கூடுதலாக மதிப்பெண்பெற்றிருப்போமென நினைக்கிறேன்.

விடலைப்பருவத்தை எப்படிக் கடந்துவந்தேன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எபோது ஆரம்பித்தது எப்போது முடிவுக்குவந்ததென்பதைத் துல்லியமாக நூல் பிடித்து பிரித்துணர்ந்த அனுபவம் எனக்கில்லை. ஆனாலும் இதுவும் அதுவுமாக அலிஸ்ஸ¤க்குத் திறந்த விந்தையுலகம் எனக்கும் திறந்து வண்ணமயமான அனுபவங்களை வழங்கியிருக்கிறது. குமரப்பருவத்தில் புதுவீடுகட்டி குடித்தனம்போனதுபோல ஒவ்வொரு அறையாக எட்டிப்பார்த்து, கதவைத் திறந்து, காலெடுத்துவைத்து, பாய்போட்டோ போடாமலோ உட்கார்ந்து, எழுந்து, நடந்து, வாசங்களை நுகர்ந்து, கடந்த தருணங்களும் சிதைந்த கனவுகளும் எத்தனையெத்தனை?

அன்ன போழ்தினிலுற்ற கனவினை

அந்த மிழ்ச்சொலி லெவ்வணஞ் சொல்லுகேன்? (பாரதி)

————————-

 

மொழிவது சுகம் ஆகஸ்டு 15 -2013.

1. லெ.கிளேசியோ – விசாரணை

எனது மகன் குடும்பமும், இளையமகளும், லாஸ் ஏஞ்ஜெல்ஸில் வசிக்கும் எனது பெரிய மகளைப்பார்த்துவிட்டு அங்கிருந்து அனைவருமே ஹவாய்த் தீவுக்குச் சென்றிருக்கிறார்கள். எனது மனைவியுடன் செல்ல விருப்பமிருந்தது. கிளேஸியோ தடுத்துவிட்டார்? கடந்த இரண்டுமாதமாக வழக்கத்தைக் காட்டிலும் கடுமையாக பணி, நோபெல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் லெ.கிளேசியோவின் முதல் நாவலும் அவருக்கு பிரெஞ்சு படைப்புலகின் மிகப்பெரிய கொன்க்கூர் பரிசை பெற்றுத் தந்த “Le Proces -Verbal’ நாவல் காலச்சுவடு பதிப்பகத்திற்காக தமிழில் வருகிறது. அதன் நுட்பமான சொல் தேர்விற்கும், நெஞ்சை லுக்கும் சொல்லாடலுக்கும் புகழ்பெற்றது. முடிந்தவரை அதன் அடர்த்திக்குப் பங்கமின்றி மொழிபெயர்த்து களைத்திருக்கிறேன்.

2. அம்பை – சிறுகதைகள் – பிரெஞ்சில் வருகின்றன.

நண்பர் கண்ணன் முயற்சியால் அம்பை சிறுகதைகள் பிரெஞ்சில் வருகின்றன. புகழ்பெற்ற பிரெஞ்சு பதிப்பகம்   வெளியிடுகிறது. பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் பெண்மணி ஒருவருடன் இணைந்து மொழி பெயர்ப்பில் ஈடுபட்டுள்ளோம். எல்லாம் ஒழுங்காக நடந்தால் 2014 ஜனவரியில் அம்பை சிறுகதைத் தொகுப்புகளை எதிர்வரும். ஜனவரியில் பிரெஞ்சுப் புத்தககக் கடைகளில் எதிர்பார்க்கலாம்.

3. ஆக்கமும் பெண்ணாலே – முனைவர்  எ. இராஜலட்சுமி.

முனைவர் எ. இராஜலட்சுமியைப் பற்றி  என்னிடம் முதலில் குறிப்பிட்டவர், அவருடன் பணியாற்றும் புதுச்சேரி பாரதிதாசன் பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த தமிழ்த்துறை இணை பேராசிரியராக பணிபுரியும் நண்பர் மு.இளங்கோவன்.  உங்கள் ‘ மாத்தா ஹரி நாவலைப் பற்றி முனைவர் எ. இராஜலட்சுமி தனது நூலொன்றில் கட்டுரை எழுதியிருக்கிறார், தாங்கள் புதுச்சேரிவந்தால் தெரிவிக்கும்படி சொன்னார், தங்களை சந்திக்க விருப்பமாம் என்றார். எனக்கும் அவரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. அந்த ஆவலைப் பூர்த்தி செய்தவர், புதுவையில் இலக்கியம் புத்தகக் கடை நடத்தும் நண்பர் சீனு தமிழ் மணி. பொதுஉடமை, பெரியார், பசுமையைப் போற்றுதல் என்பதை ஆரவாரமற்று செய்பவர். அவரது ஏற்பாட்டின்படி பேராசிரியை எ. இராஜலட்சுமியை அவரது புத்தகக்கடையில் சந்தித்தேன். ஒன்றிரண்டு நூல்களை எனக்குப் பரிசாக அளித்தார். ஒன்று ‘ஆக்கமும் பெண்ணாலே’ மற்றொன்று ‘நீயும் நானும் நாமும்’ என்ற கவிதைத் தொகுப்பு. இரண்டைப் பற்றியும் எழுதலாம் எழுதவேண்டும். ஒருவேளை மாத்தாஹரி பற்றி அவர் எழுதவில்லையெனில், அவர் யாரோ நான் யாரோ? எனக்கு அவர் எழுத்துகள் பற்றிய எந்த அறிமுகமும் நிகழ்ந்திருக்காது. ஓரளவு அறிமுகமானவற்றைத் தேடிப்படிக்கிறோம். தமிழில் நெட்வொர்க் இருந்தால் அல்லது இருநூறு ரூபாயை என்வலோப்பில் வைத்துக்கொடுத்தால் அல்லது பூசாரிகளைக் கவனித்தால் அவ்வைக்குப்போகவிருக்கும் நெல்லிக்கனியையும் தட்டிப் பறிக்கலாம். மேடைக்கும் மாலைக்கும் ஏற்பாடு செய்து  சந்தோஷப்படலாம். முனைவர் எ. இராஜலட்சுமிபோல கேட்பாரற்ற படைப்பாளிகள் தமிழ் நாடெங்கும் இருக்கிறார்கள்.

ஆக்கமும் பெண்ணாலே

இக்கட்டுரைத்தொகுப்பில் இருபது கட்டுரைகள் இருக்கின்றன. மொத்தக் கட்டுரைகளும் பெண்படைப்பாளிகளின் படைப்புகளை முன் வைத்து எழுதப்பட்டவை, வெண்பொங்கலில் கல் சேர்ந்ததுபோல ‘இடையில் மாத்தா ஹரி’ என்ற எனது நாவலைப்பற்றிய கட்டுரை, ஆசிரியர் தவிர்த்திருக்கலாம். சங்ககாலம் தொட்டு பெண்படைப்பாளிகளின் படைப்புகள் மெல்ல மெல்ல ஆணாதிக்க சமூகத்திற்கு எதிராக தங்கள் குரலை எங்கனம் திடப்படுத்திக்கொண்டனர் என்பதை அப்படைப்புகளைக்கொண்டு ஆசிரியர் நிறுவுகிறார். கட்டுரையாளர் ஒரு தமிழ்ப் பேராசிரியை, முனைவர் வீ. அரசுவின் வழ்காட்டுதலில் உருப்பெற்றவர் என்பதால்  பத்தாம் பசலித்தனமான பழங்கதை பேராசிரியர்களின் ஊசல்வாடையும் ஊத்தை நெடியும் கொண்ட சிறைச் சவ்வை வெகு எளித்தாகக் கிழித்துக்கொண்டு சங்கத்தமிழ் நவீனத் தமிழில் இரண்டிலும் சம நிலையில் கால் ஊன்ற முடிகிறது.

பொதுவாகப் பெண்கள் சமூகம் சார்ந்தும், பொருள் சார்ந்தும் பாலின வரிசையில் இரண்டாம் இடத்திற்குத்  தள்ளப்பட்டுள்ள கொடுமை இன்று நேற்றல்ல வெகுகாலம் தொட்டு, இப்பூமியில் எல்லாப் பரப்பிலும், எல்லா ஜீவராசிகளிடமும் -( தேனிக்கள் வாழ்க!) இருக்கிறது. நான் என் மனைவியை அதிககமாக நேசிப்பதாலோ என்னவோ ஆண் சமூகம் சார்ந்து இக்குற்ற உணர்விற்கு அவ்வப்போது, (நெடுக அப்படியொரு உணவுக்கு இடம் அளிப்பதில்லை நானும் ஒரு ஆண்தானே?) ஆளாகிறேன். இதில் வாசிக்கிற உங்களிலும் சிலர் நானாக இருக்கலாம். பெண்களிடம் ‘அவ்வப்போது’ அனுசரணையாக நடந்துகொள்ளும் விழுக்காடும் அதிகமிருக்க வாய்ப்பில்லை. அதுபோலவே ஆணாதிக்க சமூகத்திற்கு எதிரான வாழ்நிலையைத் துணிச்சலாக எதிர்கொள்கிற பெண்களும் இச்சமூகத்தில் குறைவு. ஆணாதிக்க சமுதாயத்தை முதன்முதலாக எதிர்க்கத் தொடங்கியது மேற்கத்திய உலகம் என நினைத்துக்கொண்டிருக்க ஆசிரியர்  நமது சங்ககால பெண்கவிஞர்களை கை காட்டுகிறார். அவர்களை (பெண்களை) ஓர் அற்ப உயிரியாக பார்த்த சமூகம், அவர்கள் விருப்பத்தையும் வெளிகளையுங்கூட கண்ணியம், கட்டுப்பாடென்ற அலகுகளால் முடக்கிவைத்த நூற்றாண்டு அது, எனினும் துணிச்சலாக “சமூகக் கட்டுபாடுகள், மரபான கருத்தாக்கங்கள், சூழல் ஆகிய அனைத்தும் இறுகிக் கிடந்தபோதும்” தங்கள் கருத்தை முன் நிறுத்த முனைந்த பெண்புலவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அப்பாடல்களிலுள்ள கருத்துச் சுதந்திரத்தையும் உணர முடிகிறது: பரத்தை வீடுகளுக்குச் சென்று திரும்பும் தலைவனின் நடத்தையைக் கண்டிக்கும் பாடல்; உடன்கட்டை ஏறுதலுக்கு, கைம்மை நோன்பிலுள்ள சங்கடங்களைக் காரணமாக முன் வைக்கும் பெருங்கோப்பெண்டுவின் பாடல் ஆகியவற்றை சமூக இயக்கத்தில் இயங்கியல் ரீதியான வரையறைகளை மீறி வெளிப்படும் குரல்கள் என்கிறார் கட்டுரையாளர்..

மூன்றாவது கட்டுரை சங்க இலக்கியம் – புதுக்கவிதை பெண்படைப்பு வெளியை இணைக்கும் முயற்சிக்கான களத்தை சீர் படுத்துவதில் முனைகிறது. சில சங்க கால கவிதைகளோடு தற்கால கவிதைகள் எவ்வாறு பொருந்துகின்றன எனச் சொல்லப்படிருக்கிறது. அதன் பிறகு சமகால பெண் கவிஞர்களின் பல்வேறு விதமான படைப்புக் குரல்களைக் கேட்கிறோம். திரிசடை (‘பனியால் பட்ட பத்து மரங்கள்), “கவிதைகள் பூராவும் தேடிப்பார்த்துடேன் ம்ஹீம்..ம்  மருந்துக்குக்கூட ஒரு யோக்கியமான ஆண்பிள்ளையைக் காணோம்” என சுஜாதாவின், சந்தோஷக் குட்டுபட்ட ரோகினியின் கவிதைத் தொகுப்பு, தேவமகளின் ‘முரண்’, இவரா,  சுபத்ரா, இளபிறை மணிமாறன், குட்டி ரேவதி, சுகிர்தராணி, சல்மா என்று என்று ஆரம்பித்து தி.பரமேஸ்வரி, பாலபாரதி, அழகு நிலா, தாராகணேசன், லீனா மணிமேகலை, அ. வெண்ணிலா, கனிமொழி என நீளும் பட்டியலில் தமிழச்சி தங்கபாண்டியனையும், மாலதி மைத்ரியையும் ஆசிரியர் வேண்டுமென்றே தவிர்த்ததுபோல தெரிகிறது. கட்டுரையாளர் நவீனக் கவிதைப்போக்கில் குறிப்பாக 2000த்திற்குப் பின்னர் எழுதப்படும் கவிதைகளில் அதிகம் நிறைவுகாணாதவராக இருக்கிறார். அதற்கு ஒருவகையில் இதழ்களும் பொறுப்பென்பது அவர் வைக்கும் குற்றச்சாட்டு.

கட்டுரையாளர் தெரிவிக்கப்பட்டிருந்த சில கருத்துக்கள் மனதிற்கொள்ளவேண்டியவை:

1. ஆணின் சிறப்புகளை அங்கீகரிக்கும் தன்மையும், தனக்கு இன்னல் தரும்போது ஆணை விமர்சிக்கும் மனப்பாங்கும் சங்கப் பெண்கவிஞர்களின் கவிதைகளில் காணக் கிடைக்கின்றன (பக்கம் -43)

2. உணர்வை மட்டுமே மையப்படுத்தி, அதற்கேற்ப மொழியை கையாண்டமையினாலேயே இன்றும் சங்கப் பாடல்கள் உயிர்ப்போடு விளங்குகின்றன. வெற்று சொற்களின் கோர்வையாக எழுதி உடனடிக் கவனத்தை கவனத்தைக் கவர எத்தனிக்கும் படைப்புகள் மீளாய்க்குரியவை மட்டுமன்று, ஆபத்தானந்துங்கூட. (பக்கம் 43) -பெண்கவிஞர்களுக்காக மட்டும் சொல்லப்பட்டதல்ல, ஆண் கவிஞர்களுக்கும் உரியதுதான்.

3. ” பாலியல் தொடர்பான செய்திகளின் வெளிப்பாட்டில் எழுத்தாளன் உணர்வுகளாகவே அவற்றை அடையாளம் காணக்கூடிய ஆபத்து இருப்பதால் பலரும் இத்தலைய உணர்வுகளைத் தாமே தணிக்கை செய்துகொண்டு எழுதுகின்றனர்” (ஹரி விஜயலட்சுமி 2003:37) -தொகுப்பில் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது.

இக்கட்டுரைத் தொகுப்பு ஓர் ஆய்வு நூலாக வெளிவந்துள்ளது, ஆங்காங்கே தக்கச் சான்றுகளுடன், ஆழமான விவாதங்களுடன் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. நல்ல பல கவிதைகளை எடுத்துக்காட்டுகளாக கையாண்டிருப்பது ஆசிரியர் எடுத்துக்கொண்ட பொருளிலிருந்து விலகவில்லை என்பதையும், கவிதை அழகியலில் அவருக்குள்ள ஈடுபாட்டையும் தெரிவிக்கின்றன.

கடைசியாக இந்நூலில் இடம்பெற்றிருந்ததொரு கவிதை:

“புதுக்கடை திறக்கு முன்
மாமா விளம்பரமளித்தார்
சுறுசுறுப்பான அழகான
விற்பனை பெண்கள் தேவை
மாமி ஆட்சேபித்தாள்
மாமா சொன்னார்
பையன் திருடுவான்
தம்மடிக்கப்போவான்
சட்டம் பேசுவான்
தனிக் கடைபோடுவான்
பொட்டை புள்ளைக
சிவனேன்னு
கொடுத்த காசுக்கு உழைக்கும்
வாரவனுக்கும் கண்ணுக்குக் குளிர்ச்சியா
கூட்டம் குறையாது
மாமா சொல்லாதது
அப்பப்ப நானும்
தொட்டுப் பார்த்துக்கலாம்”

– ‘தேவமகள் (1981:64)

—————————————————
ஆக்கமும் பெண்ணாலே

ஆசிரியர் முனைவர் ஏ. இராஜலட்சுமி

முரண்களரி பதிப்பகம்
34/25 வேதாச்சலம் தெரு, காந்தி நகர்
சின்னசேக்காடு, மணலி, சென்னை-600 068
அலைபேசி:9841374809

————————————

பின் – பின்நவீனத்துவம்

நண்பர் தமிழவனுடன் ஒரு முறை உரையாடியபோது, பொதுவில் இன்றைய தமிழ் கதையாடல்கள் மேற்கு உலகோடு இணைந்து பயணிக்கவில்லை என்றேன். கிழக்குக்கென்று (நமக்கென்று?) ஒரு மரபு, பண்பாடு, இருந்தது. எண்ணமும் சிந்தனையும் தனித்துவம் பெற்றுத் திகழ்ந்த காலமொன்றும் இருந்தது. இன்று பழங்கதைகளாகிவிட்டன. எஞ்சி இருப்பவற்றை விதந்தோதக்கூட மேற்கத்திய மொழிகளும் மேற்கத்திய உத்திகளும் தேவை என்கிறபோது ஒப்பீடல் தவிர்க்க முடியாததாகிறது. தமிழில் ‘புதினம்’ என்று நாம் பொருள் கொண்டிருக்கிற சொல் நாவல் (Novel) ஆங்கிலச்சொல்லிலிருந்து பெறப்பட்டது. பிரெஞ்சு மொழியில் அதனையே ரொமான் (‘Roman) என்கிறார்கள். இடைக்காலத்தில் மேட்டுக்குடிகள்,  கல்வியாளர்கள், மதகுருமார்களுக்குரிய மொழி லத்தீன். அதேக்காலத்தில் சாமான்ய மக்களுக்கென எழுதப்பட்டவை ‘ரொமான்’ அல்லது ‘புதினம்’. பதினாறாம் நூற்றாண்டில் வெகுசனத்திற்கென எழுதப்பட்ட ‘புதினங்களுக்கு’ இலக்கிய அங்கீகாரம் கிடைக்கிறது. எதார்த்த உலகை முன்னெடுத்துச்சென்ற பாத்திரங்களைக்கொண்டு புனையப்பட்டவை அவை. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து மேட்டுக்குடியினரும் இணைந்துகொள்ள, பிற எழுத்துகளைப்போலவே  அறத்தைப்போதிக்கப் ‘புதினங்களுக்குப்’ பரிந்துரைக்கப்படுகிறது. வடிவமைப்பில் மாற்றங்கள் நுழைகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து அண்மைக்காலம் வரை புறத்திலும் அகத்திலும் பல மாற்றங்களுக்கு மேற்கு நாடுகளில் புதினங்கள் உள்ளாயின.

எனினும் புதின உலகில் இருபதாம் நூற்றாண்டு தனித்துவம் பெற்றது: கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் படைப்பிலக்கியவாதிகள்  உலகம், சமூகத்தின் அமைப்பு, அவற்றில் மனிதர்களின் பங்களிப்பு முதலானவற்றை – எதார்த்த பார்வையில் சொல்லவேண்டுமென்கிற கோட்பாட்டுடன் இயங்கினார்கள். சார்த்துரு (Sartre), செலின்(Céline), ப்ரூஸ்டு(Proust) போன்றவர்கள் அவர்களில் சிலர். உண்மையில் இவர்களுடைய பார்வைக்கு எல்லைகற்களற்ற நிலையில், இப்படைப்பிலக்கியவாதிகளின் புதிய முயற்சிகள் எதார்த்தம் பற்றிய பொதுஅறிவைக் கேள்விக்குட்படுத்தின.  இருபதாம் நூற்றாண்டில் அடுத்து வந்தவர்கள் வேறுவகையானவர்கள். வாய் வேதாந்தத்தில் நம்பிக்கைக் கொண்ட கூட்டமிது. கற்பனையில் வாழ்ந்த உளப்பிணியாளர்கள் என அழைப்பதிலும் தவறில்லை. முன்னோடிகள் என அழைக்கப்படும் அவான் – கார்டிஸ்டுகள் (avant-gardiste) என சொல்லப்பட்ட இவர்களே மீஎதார்த்தம்,  நவீன புதினம் என்கிற le nouveau- roman முதலான வகைமைகளுக்குச் சொந்தக்காரர்கள்.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், நிகழ்காலத்திலும் பிரெஞ்சு படைப்பிலக்கியத்தில் என்ன நடந்தது அல்லது என்ன நடக்கிறதென்பதை அறிவதற்கு முன்பாக புதினங்களின் வடிவமைப்புகளையும், அவற்றின் கட்டுமானத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும்.

வடிவங்களைப்பொறுத்தவரை பொதுவில் பிரெஞ்சு படைப்பிலக்கிய உலகில் அவை மூன்றுவகை:

1- மரபு வழி புதினங்கள் (The traditional novel): ‘அந்தக் காலத்திலே’, ‘பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு’ அல்லது நேற்று நடந்ததென ஆரம்பித்து கதை சொல்லலை தொடங்குவது. இறந்தகால சம்பவங்களை நிகழ்காலபடுத்துவது. இங்கே பாத்திரங்கள் நாய், பூனையாகக்கூட இருக்கலாம், அவை அறிவு ஜீவிகள். கதைசொல்லல் படர்க்கையில் அமைய எழுத்தாளன் தூண் துரும்பு எங்குமிருப்பான். மேற்கத்திய உலகைப்பொறுத்தவரை, இவ்வடிவம் அருகிவருகிறது.

2. சுய சரிதை புதினங்கள் (The autobiographical novel):  உண்மையும் புனைவும் கலந்தது – கதைசொல்லியின் வரலாறு, அனுபவங்கள், எதார்த்த உலகத்திடம் அவனுக்குள்ள முரண்கள், பிணக்குகள்.. முதலானவை தன்மையிற் வெளிப்படும். கதைசொல்லி ஆசிரியனாகவும் இருக்கலாம், துணைமாந்தர்கள் அவனுடைய உறவுகள் நண்பர்களாகவும் இருக்கக்கூடும். கடந்தகாலம், நிகழ்காலமென்று எதையும் கதைப்படுத்த முடியும். இவ்வகையான சுயசரிதை புதினங்களை ஒருவனுடைய சுயத்தைப் பேசும் எழுத்துக்கள் என்றவகையில் பிரெஞ்சு மொழியில் ‘Les écritures de soi’, என்கிறார்கள். பெரும்பாலான இன்றைய புனைவுகள் சுயசரிதைகளுக்குள் அடங்குபவை. இவற்றில் பல உட்பிரிவுகளுண்டு: சுயபுனைவு என்கிற Autofiction, புற உலகுடனான மோதலிலுறும் தனது அகவய வலிகளுக்காகப் புலம்பிக்கொண்டே, பிறர்சார்ந்த தனது வாழ்க்கையை  நியாயப்படுத்தும் சராசரி மந்தர்களைப்பற்றிய Auto mythobiographie, பிறகு நாம் பலரும் அறிந்த Curriculum vitae அவற்றுள் சில. இவற்றைப் பற்றி விரிவாக தமிழ் படைப்புலகிற்கு அறிமுகப்படுத்தவேண்டும்.

3. கதைக்குள் கதை இதனைப் பிரெஞ்சில் ‘le Roman à tiroirs’ அன அழைக்கிறார்கள். பிரதானக் கதையாடலுக்கிடையே உபகதைகளை சேர்ப்பது. இவ்வடிவம் இந்திய மரபிற்குப் புதிதல்ல.

புனைவுகள் வடிவங்கள் அடிப்படையில் வேறுபடுவதைப்போலவே அவற்றின் கட்டுமானத்தின் அடிப்படையில் வேறுபடுத்தலாம்

1. படைப்பிலக்கிய இயக்கங்களோடு தொடர்புடையவை (Le Classicisme, le Symbolisme, le Surréalisme etc..).

2. மனக்கிளர்ச்சிகள் அல்லது உணர்ச்சிகளை மையயமாகக்கொண்ட ரொமாண்டிக் புதினங்கள்

3. எதார்த்தவகை புனைவுகள். நடைமுறை உலகை, கருப்பொருளாகக்கொண்டு எழுதப்படுபவை

4. கதை சொல்லலில் புதிய நுட்பங்களையும், வழமைக்கு மாறான புதிய முயறசிகளையும் மேற்கொள்ளும் ‘நவீன புதினங்கள்’ – le Nouveau- Roman..

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்- இருபத்தோராம் நூற்றாண்டில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகவும் பிரெஞ்சு படைப்புலகம் வடிவத்திலும், கட்டுமானத்திலும் இறுதியாகசொல்லப்பட்ட இரண்டின் வழிமுறைகளையே தேர்வு செய்து இயங்குகின்றன. இலக்கியகோட்பாடுகளையெல்லாம் உதறிவிட்டு வடிவத்திலும் கதை சொல்லலிலும் கடந்த 30 ஆண்டுகளாக விட்டேத்தியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிற படைப்பாளிகள் நுழைந்திருக்கிறார்கள்.  இவர்களில் சிலருக்கு அகவயமும், நடப்பியல் வாதமும் கூடாப்பொருட்கள். கடந்தகாலத்தில்  மானுடவியல், மொழியியல், உளவியல் ஆகியவற்றின் அடிப்படையில் புனையப்பட்ட இலக்கிய மாந்தர்களெல்லாம் இலக்கிய உற்பத்திகளேயன்றி படைப்புகளல்ல என்பது இவர்கள் வாதம். இங்கே கவிஞரும், மெய்யியல் அறிஞருமான போல் வலெரி கூறுவதுபோல அவான்-கார்டிஸ்டுகளின் படைப்புகள், ” காகிதக் குடல்களாலான மனித உயிரிகள்(1). இந்நிலையில் எதார்த்தம், அகவயம் பற்றிய இலக்கியங்களைப் படைக்கிறோம் என்பதெல்லாம் ஒருவித ஏமாற்றுவேலை. இவர்களைப் பொறுத்தவரை இலக்கியம் அடைப்புக்குறிக்குள் இயங்கவேண்டிய மொழி அதாவது அல்ஜீப்ராகணிதத்தின் சூத்திரத்தைப்போல; அதுவன்றி தன்னைப்பார்த்துக்கொள்கிற கண்ணாடியாகவும், தனக்குரிய விருப்பமான களமாகவும், நேரங்காலமின்றி எதையாவது தோண்டிகொண்டிருக்கிற தனது கட்டுமானப்பணி கேந்திரமாகவும் இலக்கியத்தை அமைத்துக்கொள்வதென்பது இவர்களின் தேர்வு, அவற்றில் கடந்தகால வரலாறுகளும் இருக்கலாம், சொந்தக் கதைகளும் இருக்கலாம். விமர்சனங்களைக் குறித்தோ, இலக்கிய சூத்திரங்களைக்குறித்தோ துளியும் அக்கரையற்றவர்களாய், செயல்படுகிறார்கள்.  வேண்டாமென்கிறபோதும் இலக்கிய விமர்சகர்கள் விடுவதாக இல்லை, இப்புதிய படைப்பிலக்கியத்தை ‘செயப்படுப்பொருள் குன்றா வினை சார்ந்தது’ (Transitive), என அழைக்கிறார்கள், அதாவது செயப்படுபொருளை அனுமதிக்கும் வினைச்சொல்லின் செயல்பாட்டுடன் இப்புதியவகை படைப்புகளைப் பொருத்துகிறார்கள்.

இப்புதிய அணியின் வரவு 1979 ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அவர்களுக்கிடையே நிலவிய ஒற்றுமை தாங்கள் ஒவ்வொருவரும் தனித்தவர், மற்றவரிடமிருந்து வேறுபட்டவரென தங்கள் இருத்தலை உறுதிசெய்தது. அலென் ரோப் கிரியே (Alain Robbe Grillet ) நத்தாலி சர்ரோத் (Nathalie Sarraute), மார்கெரித் துராஸ் (Marguerite Duras), குளோது சிமொன் (Claude Simon) ஆகியோர் அவர்களில் முக்கியமான ஒரு சிலர். இன்றைக்கு அவர்கள் கிளேசியோ (Clèzio), மிஷெல் ஹ¥ல்பெக் (Michel Houellebecq)  பத்ரிக் மொதியானோ (Patrick Modiano, மரி தியாய் (Mari Ndiaye) என வேறுபெயர்களில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருப்பவர்கள். இவர்களின் நூல்களை வாசித்தவர்கள் நிகழ்ந்த மாற்றத்தை உணருகிறார்கள். இப்படைப்பிலக்கியவாதிகளின் எழுத்துக்களில் முந்தைய படைப்பாளிகளின் சாயலில்லை. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பிரெஞ்சு படைப்புலகத்தை ஆட்டிப்படைத்திருந்த ‘சடங்கிய விதி’களைத் தளர்த்திக்கொண்டு , பதிலாக ‘தனிமனித இருப்பு, ‘குடும்பம்’ சமூக அமைவு ஆகியனவற்றினை ஊடுபாவாகக்கொண்டும், பிரெஞ்சு இலக்கிய உலகம் பாராமுகமாக இருந்த துறைகளிலும் அக்கறை காட்டுகிறார்கள். வேடிக்கை என்னவெனில் இல்லாத ஒன்றையும் இவர்களுக்கு எழுத்தாக்க முடிவது, தமிழிற் சொல்வதுபோல மணலில் கயிறு திரிக்கவும் இவர்கள் அறிந்தவர்கள். எழுத்தாளரும் விமர்சகருமான பியர் ழூர்து (Pierre Jourde), “இன்று நேற்றல்ல வெகுகாலமாகவே, எல்லாவகையான வரைமுறைகளையும்”, கடந்து எழுதிக்கொண்டிருக்கிறோம்”, என்கிறார். இந்திய இலக்கிய மரபை அறிந்த நமக்கு அதில் வியக்க ஒன்றுமில்லை. படைப்புலகில் இருவகையான எழுத்துகள் இன்றுள்ளதாய் நம்பிக்கொண்டிருக்கிறோம். அதிலொருவகை நுட்பமும், அழகியலும் இணைந்த புனைவு; மற்றது வெகுசன இரசனைக்குரியவை. மேற்குலகைப் பொறுத்தவரை இவை இரண்டுமே கலந்ததுதான் இன்றைய இலக்கியம் என்கிறார் பியர் ழூர்து.

– நன்றி -மீண்டும் அகரம்

———————————————————————————–

1. “être aux entrailles de papier” Cd. page 14, la littérature française aujourd’hui- Dominique Viart et Bruno vercier