Category Archives: nouvelles

குடைராட்டினம்

குடைராட்டினம்

பிரதானச் சாலையின் வலப்புறத்தில் வணிகர்பேரவை வளாகம். பிறக்கவிருக்கும் புதுவருடத்தை எதிர்பார்க்கிற மகிழ்ச்சியும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமும் அக் கட்டிடத்தையும் உருமாற்றம் செய்திருந்தது.. தடித்தக் கண்ணாடியின் கீழ் பதுக்கப்பட்டிருந்த நடைபாதை மின்விளக்குகள் அட்டவணை நேரகதியில் சிவப்பு பச்சை பொன்மஞ்சளென வளாகத்திற்கு உடுத்தி மகிழ்ந்தன. சாலைக்கும் கட்டிடத்திற்கும் இடைப்பட்ட வெளியில் வெளிநாட்டினர் பகுதியில் இவ்வருடம் ரஷ்யர்களின் ஸ்டால்கள். குளிரை முன்னிட்டு ஒரு ஸ்டாலில் வோட்கா வியாபாரம். ஆண்களும் பெண்களுமாக கையில் வாங்கிய வேகத்தில் மதுவை  தொண்டைக்குழிக்கனுப்பி குளிரைச் சரீரத்திலிருந்து உரித்து எரிந்தனர்.  

அந்தப்பக்கம் ஹோவென்ற கூச்சல், அந்தக்கால ரயில்கள் போல வீறிட்டுக்கொண்டு சீழ்க்கையொலி.  பண்டிகைக்கால குடைராட்டினம் தூவிய கூச்சலும் சீழ்க்கையொலியும் கேட்டுமுடித்த சிலநொடிகளில்  கொட்டும் பனியில் நமத்துப்போனது. குதிரை, ஆனை, ஆகாயவிமானம்மென்று வகைவகையான இருக்கைகளில் அமர்ந்த சந்தோஷத்தில் பிள்ளைகள் எழுப்பிய குரல்கள், ஓசைக்கு வண்ணம் பூசிகொண்டு சிரித்தன. ‘பப்பா..!பப்பா என்ன செய்யறேன் பாருங்க! பிடித்திருந்த கையை சட்டென்றி விலக்கி சிறுமி கலகலவென்று சிரித்தாள். சிறுமியின் தகப்பன், ‘வேண்டாம் வேண்டா’மென பதறுகிறான். இங்கே பாரு! அம்மா விமானம் புறப்பட்டுவிட்டது!- ஒரு சிறுவன்.  ‘எனக்கு இந்த குட்டி ஆனைவேண்டாம்! அதோ அந்த பெரிய ஆனையில்தான் உட்காருவேன்’.. ம்..ம்.. .மற்றொரு சிறுவன். ‘இந்த முறை போயுட்டுவா, அடுத்த முறை அதிலே உட்காரலாம்! தாயின் சமாதானம். கப்ரியேல்! பிடியைக் கெட்டியாப் பிடிச்சுக்கோ’, பேரப்பிள்ளைக்கு வாஞ்சையுடன் கட்டளையிட்டுவிட்டு, மனதில் அரும்பிய சந்தோஷத்தை காலம் சிதைத்திருந்த முகத்தில் வெளிப்படுத்தும் பாட்டி. பஞ்சுபோன்ற தலை கூன்போட்ட முதுகு வயது எண்பதுக்குக்குக் குறையாமலிருக்கலாம். குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள போதுமான ஆடைகளில் தாத்தாக்கள், பாட்டிகள், பெற்றோர்கள், சிறுவர்கள். தலையில் அன்னாசிபழத்தைக் குடைந்து கவிழ்த்ததுபோன்று சிறுவர் சிறுமியர் தலையில் வண்ணமயமான கம்பளிக்குல்லாய்கள். கழுத்தை அரவம்போல சுற்றிக்கொண்டு கம்பளி இலேஞ்சி.

மனதில் ஈரபூமியில் பரவும் நீர்போல சிந்தனைகள். கடந்ததைத் திரும்பிப்பார்க்கிறபொழுது ஒரு நாள் மற்றநாளோடு ஒட்டமாட்டேன் என்கிறது, இத்தனைக்கும் எல்லா நேரமும் நாட்களும் புறத்தில் சமமதிப்புகொண்டவை போலத்தான் தோற்றம் தருகின்றன. யுக தர்மத்தின் கரைகளுக்கடங்கியே காலப்பிரவாகம் சுழித்து ஓடுகிறது. அகத்தில் பேதங்களற்றதென்று எதுவுமில்லை. நேற்றைய உறவுகள் மேடை இறங்கியதும் வேடத்தைக் கலைத்துகொண்டன. வேறு தயாரிப்புகளோடு புதிய ஒப்பந்தம். புதியகதை, புதிய இயக்குனர், புதிய ஒப்பனையென பிரிந்துபோயாயிற்று. பிடித்த காட்சிகள் ஓரிப்பிடிக்கும் விளையாட்டில், உடலை ஸ்பரிசிக்கும் சினேகிதர்கள்போல சீண்டுவதும் பின்னர் நழுவி கெக்கலி கொட்டுகின்றன. உண்டது, விளையாடியது, உறங்கியதென ஒரேகூரையில் ஒரே புள்ளியில் நடந்தவைகள் அவரவர் குடும்பம், அவரவர்பாதை என்றான பிறகு ஆளுக்கொருதிசைநோக்கிய பயணம். அக்காளிடமிருந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுப்புப்பிறகு கடிதம் வந்திருந்தது: “அண்ணன்களிடம் பேசிபார்த்தேன். நமக்கு ஒரு செண்ட்கூட தரமாட்டார்களாம். எங்க வீட்டுக்காரர் கோர்ட்டுக்குப் போவதென்று பிடிவாதமாக இருக்கிறார். நாம் இரண்டுபேரும் சேர்ந்து செய்யவேண்டிய விஷயம்.  இத்துடன் அனுப்பியுள்ள பாரத்தை நிரப்பி..”

பாண்டி அக்கா எங்கே இந்தப் பக்கம்? பழக்கப்பட்ட குரல்.  இத்தனை கம்பீரமாக தமிழ்க்குரலெடுத்து அழைக்கிறவர்கள் கல்யாணியைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும். கவனத்தையும் தலையையும் சேர்த்தே திருப்பினாள். வணக்கம்! கறுத்தமுகத்தில் வெண்ணிறபற்கள் பிரகாசிக்க சிரிக்கும் கல்யாணி. நீண்ட குளிர்காலத்துக்கான கறுப்பு ஜாக்கெட். தோளில் தொங்கவிடப்பட்டிருந்த தோலினாலான பையின் நிறமும் கறுப்பு. அது முழங்கையின் அ¨ணைப்பில் கிடந்தது. இடதுகையால் நாப்கின் கொண்டு மூக்கை அடிக்கடித் துடைத்துக்கொண்டிருந்தாள். ஈழத்துப்பெண்மணி, தைரியசாலி. இவளைக்காட்டிலும் வயதில் நான்கைந்து ஆண்டுகள் மூத்தவளென்றாலும் அவளுக்கு இவள் அக்காள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பேருந்தொன்றில் சந்தித்தது. இவளுடன் வெகுநேரம் உரையாடியபின், புதுச்சேரி பெண்மணியொருத்தி இறங்கிக் கொண்டதும் எதிரில் அமர்ந்திருந்தவள், “என்ன இப்படி ஆகமெல்லென கதைக்கிறீர்கள்? மிகவும் ரகசியமோ” என்று கேட்டு முறுவலித்தாள். ‘அதெல்லாமில்லை. நம்மைச்சுற்றிலும் பிரெஞ்சுமனிதர்கள். அவர்களை வைத்துக்கொண்டு தமிழில் சத்தமாகப்பேசினால் என்ன நினைப்பார்களோ? – என்ற பதிலைக்கேட்டுக் கலகலவென சிரித்தாள். ‘ஏங்க சிரிக்கிறீங்க? இவ்வளவுபேரை வைத்துக்கொண்டு உரத்து பேசினால், நம்ம தப்பா நெனைக்கமாட்டாங்களா? அவளை மடக்கிவிட்டதாக நினைத்தேன். ‘உரத்து பேசுவது தப்புதான், ஆனால் தமிழில் உரத்து பேசினால் தப்பு என்கிறமாதிரி’ உங்க பதில் இருந்தது அதனாற் கேட்டேன்’. என்ற பதிலை எப்படி எடுத்துக்கொள்வதென தெரியாமல் இவள் சிரித்து சமாளித்தாள். அதற்குப் பிறகு வெவ்வேறு கூடுகள் என்றபோதிலும், பறக்கிறபோது இவள் அமர்கிற மரக்கிளைகளைத் தேடிவரும் தற்செயல்கள் நிறையவே அமைந்தன. “அக்கா நான் வாரென், வெள்ளென போகணும். இப்போதே காமணிதியாலம் தாமதம். எங்க முதலாளிக்குப் பதில் சொல்லி மாளாது.” கையை ஆட்டிவிட்டு நடந்தாள். அவள் விந்தி விந்தி நடந்துபோனபோது, கூட்டத்தில் ஸ்கார்ப் சுற்றிய அவள் தலை உயர்ந்து அடங்குவதைக் கவனித்தாள். ஊரில் இருந்தபோது, ‘இந்திய ஆமிக்காரன்கள் ஏற்படுத்திய வடு மனதிலும் உடம்பிலும் நிறைய இருகிறதக்கா’ என்று ஒருமுறை கண்களில் நீர்பரவ கூறியிருந்தாள். அவளைப் பார்க்கிறபோதெல்லாம், தண்ணீரில் முங்கிக்கிடந்த கண்கள்போல ஒருவித குற்ற உணர்வு சிவந்த நெஞ்சை உறுத்துகிறது.

பர்தோன்’, இடித்துவிட்டு மன்னிப்பு கேட்ட வயதான பெண்மணியிடம், ‘கவனத்துடன் வர நான்தான் தவறிவிட்டேன், நீங்கதான் மன்னிக்கணும்”, என்ற இவள் பதிலை முடிக்குமுன்பே அப்பெண்மணி கூட்டத்தில் கலந் திருந்தாள். ஒவ்வொருவருடமும் கிருஸ்துமஸ்காலத்தில் தேவாலயத்தைச் சுற்றிப் போடப்படும் கடைகளைச் சுற்றி பார்க்கவேண்டும் என்று நினைப்பதுண்டு. இந்த வருடம்தான் முடிந்தது. போனமாதமே ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையை அதற்கென்று ஒதுக்கியாயிற்று. ‘பிரதான சாலையின் இடப்புறமாக அமைந்திருந்தது தேவாலயத்துக்குச் செல்லும் அப்பாதை. பிரத்தியேகமாக கற்கள் பதித்து செப்பனிட்டிருந்தார்கள். அகலமான பாதை. பனியில் நனைந்திருக்கிறது. உள்ளூர் மனிதர்களைக்காட்டிலும் சுற்றுலா பயணிகளின் கால்களில் மிதிபட்டு மெருகேறிய புதுத்தேன்போல பளிச்சிட்டது. முல்லைப்பூக்கள் நிறைந்திருந்த கூடையை எடுத்துக் கவிழ்த்ததுபோல ஆகாயத்திலிருந்து பனி பொலபொலபென்று உதிர்ந்தது. காற்று வேகமாக வீசுகிறபோதெல்லாம் சிதையும் பனித் துகள்கள் திசைக்குப் பலவாக பறந்து, கடைசியில் வாழ்க்கைச் சுற்றை அறிந்தவைபோல மீண்டும் பூமிக்குத் திரும்பின. சில பூமியைத் தொட்டமாத்திரத்தில் கரைந்தும் மற்றவை தங்கள் முறைக்காகவும் காத்திருந்தன. திடீர் திடீரென்று ஆவேசமாகப் புறப்பட்டுவரும் மக்கள்வெள்ளம் அங்கே வந்ததும் நிதானம் பெற்றுவிடும். பிறகு மெல்லமெல்ல தேவாலயத்தை நோக்கி முன்னேறும்.  காலையில் எட்டுமணிக்கு முன்பாக வாகனங்கள் வரலாம் போகலாம். தேவாலயத்தைச் சுற்றியிருக்கிற கடைகளுக்கு தேவையான சரக்குகளை ஏற்றிவரும் வாகனங்கள் அவை. அதன்பிறகு விடிய விடிய மனிதர்கள் நடப்பார்கள். அண்ணாந்து பார்த்து கோபுரத்தின் உயரத்தைக் கண்டு பிரம்மிப்பார்கள். புகைப்படங்களில் முடிந்தமட்டும் அதன் வடிவத்தை குறுக்கிச் சேமிப்பார்கள். கோரைத்தலையும் குண்டு முகமும், கீற்றுக் கண்களும், சிறு உதடுகளுமாக சீனர்கள், ஜப்பானியர், தென் கொரியர்கள் எப்போதாகிலும் ஒன்றிரண்டு இந்தியர்களென ஆசியநாட்டவர்களைப் பார்க்கமுடிகிறது. அவர்கள் சுற்றுலா வாசிகள். இவ்வெண் பனிபோல திடீரென்று சரஞ்சரமாக இறங்குவார்கள், புற்றீசல்போல கலைந்து நடப்பார்கள். அவர்களுக்கு முன்னே கூட்டத்தினர் மொழியில் தலையை அடிக்கடித் திருப்பி குட்டிகுட்டி உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டு பெண்ணோ ஆணோ குடை உயர்த்தியோ அல்லது உடன்பாடு செய்துகொண்ட அதுபோன்றதொரு குறிப்பொன்றின் வழிகாட்டுதலின் கீழோ குளிரைப் பொருட்படுத்தாது நடப்பார்கள்.

போன ஞாயிற்றுகிழமை நடந்தது. காலை பதினோறு மணி. படுக்கை அவளைக் கெட்டியாக பிடித்திருந்தது. இரவு வெகுநேரம் டி.வி. பார்த்ததன் பலனாக அதிகாலையில்தான் கண்ணயர்ந்திருந்தாள். திறக்காத சன்னற் கதவும், வாயடைத்திருந்த சப்தமும் உறக்கத்தை சுகமாக்கியிருந்தது. புரண்டுபடுத்து போர்வையைத் தலைவரை இழுத்துப் போர்த்திய நேரம், தீவிபத்து நேர்ந்ததுபோல அழைப்புமணி விடாது ஒலித்து நிலவிய அமைதியைக் குலைத்து அநாவசியப் பதட்டத்தை அவளிடத்தில் உண்டாக்கியது. ஞாயிற்றுக்கிழமைகளில் இவளைத் தேடிவருகின்றவர்களென்று எவருமில்லை. மனதில் முறுகேசனாக இருக்குமோவென்று சந்தேகம். இவளைவிட்டு விலகிப்போய் ஆறுமாதங்களுக்கு மேலாகிறது. எழுந்தவள் இரவு ஆடையை சரி செய்துகொண்டாள். கைகளைப் பின்கழுத்துக்காய் அனுப்பிவைத்து த¨லைமுடியை கைகொள்ள சுழற்றிக்கொண்டையாக்கினாள். எழுந்து மின்விளக்கை போட்டபோது அழைப்புமணி இரண்டாவதுமுறையாகத் தொடர்ந்து ஒலித்தது. எரிச்சல் வந்தது. வந்திருப்பவன் முறுகேசன் என்பது உறுதியாயிற்று. “இப்படித் தட்டினால்  கதவைத் திறக்கமாட்டேன்” என்று சத்தமிட்டபடியே கதவைத்திறந்தாள். குப்பென்று மதுவாடை. காலையிலேயே குடித்திருந்தான். இவளுக்குக் கோபம் வந்தது:

– எங்கே வந்த?- என்றாள்.

– இனிமே அவகூட நான் இருக்கவிரும்பலை. நாம இரண்டுபேரும் பழையபடி சேர்ந்திருக்கலாமென்று வந்துட்டேன். என்னுடைய பொருட்களெல்லாம் காரில் இருக்கிறது கொண்டுவரட்டுமா?

– வேண்டாம். அதற்கு சாத்தியமில்லை.

– சரி உள்ளே வரட்டுமா? வெளியே நிக்கவச்சு பேசற?

– முடியாது. என் பிரண்டு ஒருத்தன் உள்ளே தூங்கறான். அவனைச்சீண்டுவதற்கும், தவிர்ப்பதற்கும் சட்டென்று முளைத்த பொய் உதவியது.

– பிரண்டுன்னா

– நீங்க நினைக்கிறமாதிரிதான்.

வால் மிதிப்பட்ட நாய்போல சத்தமிட்டான்.

– தெவடியா. தெவடியா..

குடித்திருந்த அவனைக் கையாளுவது எளிதாக இருந்தது. வெளியிற் தள்ளி கதவை அறைந்து சாத்தினாள்.

இரண்டுக்கு நான்கென்ற அளவில் தேவாலயத்துக்குக்கென வழிவிட்டு இருபுறமும் மரப்பலகைகள்கொண்டு உருவாக்கபட்ட  குடில்கள். கடைகள் தோறும் கிருஸ்துமஸ் பண்டிகை, மக்களின் வாங்கும் சக்தி ஆகியவற்றைக் கணக்கிற்கொண்டு உருவாக்கிய லைவேலைப்பாடு பொருட்கள். ‘மெழுகுவர்த்தித் தொட்டி, உள்ளே உள்ள செடியும் பூக்களுங்கூட மெழுகுதான்”, மெல்லிய உலோகத்தகடு பாதுகாப்பிற்காக வேயப்பட்டிருக்கிறது. சாப்பட்டுமேசையில் கொளுத்திவைக்க அழகாயிருக்கும்’, விற்பனைசெய்த இளம்பெண் கையில் வண்ணத்தொட்டியை ஏந்தியபடி விவரித்துக்கொண்டிருந்தாள். அவள் விவரித்து முடித்ததும். எங்களுக்குப் பிரெஞ்சு தெரியாதென்ற பிரிட்டிஷ் தம்பதியினரின் குரலை காதில் வாங்கியபடி நடந்தாள். கைப்பையை அணைத்திருந்த வலதுகையில் குளிர்காரணாமாகக் குத்தலெடுத்தது. பையை இடது தோளிற்கு மாற்றிக்கொள்ள வலதுகை தீக்கோழிபோல கம்பளி ஆடைக்குட் பதுங்கிக்கொண்டது. “பொனே..பொனே” தொப்பி விற்கும் ஆப்ரிக்கரின் குரல். அவரது முழங்கையில் வேட்டையாடப்பட்ட கொக்குகள்போல தொப்பிகள். அவரைப் பார்க்க விநோதமாக இருந்தது. நீண்ட கழுத்தும் மஞ்சள் மூக்கும், பக்கத்திற்கொன்றாக தளரக் காலைதொங்கவிட்டபடி இறக்கையை பரத்தி அடைகாப்பதுபோல கொக்கொன்று அவர் தலையில் அமர்ந்திருந்தது. அவர் விற்கிற தொப்பியொன்றைதான் தலையில் அணிந்திருக்கிறார் என்பதை விளங்கிகொண்டதும் சிரித்துக்கொண்டாள். இரண்டாவது கடையில் முண்டியடித்துக்கொண்டு மக்கள் கைகளை நீட்டிக்கொண்டு நின்றனர். “இங்கே இரண்டு சிவப்பு ஒயின், ஒரு ஆரஞ்சு ஜூஸ் மூன்று தார்த் •பிளாம்பே”என்று ஓர் இளைஞன் தங்கள் குடும்பத்தின் தேவைகளை பட்டியலிட்டான்.  ‘மிஸியே உங்கள் ஆரஞ்சு பானம்!-என்று புன்னகைத்த விற்பனைபெண்ணிடம், ‘ நான் கேட்டது ஒயின்! என்று மறுத்தார் முதியவர் ஒருவர். அப்படியா? என்றவள் முனுமுனுத்துக்கொண்டே இன்னுமொரு ஒயின் கொடு என்று தனதருகிலிருந்த சக ஊழியனிடம், கட்டளையிட்டாள். அவன், ‘கொஞ்சம் பொறு எனக்கு நான்குகைகளா இருக்கின்றன?’ என்கிறான். இவள் சிரித்துக்கொண்டே வலப் பக்கமாக ஒவ்வொரு கடையாகப் பார்த்துக்கொண்டு நடந்தாள். லொரான்! லொரான்! நில்லு நில்லு! ஓடாதே!. முன்னால் ஓடுகின்ற குழந்தையைப் பார்த்துத் தாய் பதறினாள். காலை எட்டிவைத்து நடந்து குழந்தையைத் தடுத்து அதன் தாயிடம் ஒப்படைத்தாள்.

ஜிங்கிள் பெல்..ஜிங்கிள் பெல்லென்று பாட்டு வடக்கிருந்து மிதந்துவந்தது. அப்பாட்டிற்கேற்ப கைகோர்த்து நடனமிட்டபடி ஆணுபெண்ணுமாக ஒரு ஜோடி. கூட்டம் சிரித்தபடி அவர்களுக்கு இடம்விட்டு ஒதுங்கி முன்னேறியது. ஸ்கேட்டிங் திடலை அடைந்திருந்தாள். வயது வித்தியாசமின்றி மகிழ்ச்சிப்பொங்க ஸ்கேட்டிங் விளையாடுகிறார்கள். அவர்கள் காலில் பிரத்தியேகமான ஷ¥. ஷ¥க்களில் பொருத்தியிருந்த கத்திபோன்ற கனத்ததகடுகள் நழுவிச்செல்கிறவேளையில் உறைபனியில் கம்பிமத்தாப்புபோல எதிரொளித்தன.  அக்காட்சியில் மனம் லயித்தவளாய் சிறிதுநேரம் அங்கே நின்றாள். பனிபொழிந்து கொண்டிருந்தாலும் ஸ்கேட்டிங் செய்ய போதுமான வெப்ப நிலைக்குத் விளையாட்டுத் திடலை செயற்கையாக கொண்டுவந்திருந்தார்கள். திடலைச் சுற்றி இலை உதிர்ந்த மீமோசா மரங்கள். ராஜஸ்தான் பெண்கள் கைகளில் அணிகிற பஞ்சாபோல அவற்றின் கொம்புக¨ளில் இணைத்து சரஞ்சரமாக பொன்மஞ்சள் நிறத்தில் ஒளிரும் மின்சார பல்புகள். ஓர் இளஞ்ஜோடியொன்று கைகளை பிணைத்தபடி ஸ்கேட்டிங் செய்கிறார்கள். பள்ளிபிள்ளைகள் வரிசையொன்று ஒருவர் தோளை ஒருவர்பற்றியபடி சறுக்குவதுகூட நன்றாக இருந்தது. பதின்வயது பையன் ஒருவன் அம்புபோல விரைந்து வழுக்கிச்சென்றவன் கும்பலாய் நின்று பேசிக்கொண்டிருந்த இளம்வயது பெண்களை மோதுவதுபோல நெருங்கி, சட்டென்று நிற்கிறான். பனித்தூள்களைத் வாரி அவன் மீது எறிந்து பொய்யாய் அப்பெண்கள் கோபிக்கிறார்கள். சிறுமியொருத்தி பருந்துபோல கைகளை பரத்தி சறுக்குகிறாள். ஒரு கறுப்பின பெண்மணிகூட அநாயசமாக சறுக்கி விளையாடுகிறாள். ஓர் இளைஞனும் யுவதியும் தம்மைச்சுற்றியிருக்கிற மனிதர் கூட்டத்தை கருத்தில் கொள்ளாதவர்கள்போலத் திடற் தடுப்பில் சாய்ந்தபடி முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஸ்கேட்டிங் விளையாடும் ஆசை இவளுக்கு வந்தது. வரிசையில் நின்று ஐந்து யூரோகொடுத்து தமது கால்கள் அளவு 38 என்று கூறி ஒரு ஜோடி ஸ்கேட்டிங் ஷ¥க்களை வாங்கி அணிந்தாள். நடக்கக் தடுமாறினாள். மெல்ல தடுமாற்றத்துடன் முன்னேறி உறைந்து கண்ணாடிபோலிருந்த பனித் திடலுக்குள் காலை வைத்தாள். இரண்டொருவர் இவளைத் திரும்பிப்பார்ப்பதுபோல இருந்தது. மேற்கொண்டு செயல் படத் தயக்கம் காட்டினாள். அங்கிருந்தவர்கள் கண்கள் இவளைச் சீண்டுவதுபோல உணர்ந்ததும் உடலில் லேசாக நடுக்கம். தலையைத் திருப்பி பிறமனிதர்களின் கவனத்தைத் தேடியபொழுது எல்லாம் கற்பனையென தோன்றியது.  அவரவர்கள் தங்கள் பாட்டுக்குத் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவண்ணம் சறுக்கிக் கொண்டிருந்தார்கள். திடலுக்கு வேலிபோல அமைத்திருந்த கண்ணாடித் தடுப்பை பிடித்தபடி மாற்றி மாற்றி கால்களை வைத்து நடந்தவள், ஓரிடத்தில் கால்கள் இவள் விருப்பத்திற்கு இணங்க மறுத்தவைபோல நீண்டதில் முழுஉடலும் பின்பாரமாய் சரிந்தது. மடாரென்று விழுந்தாள். ‘மத்மசல் கவனம்’, என்றபடி அருகிலிருந்த இளைஞனொருவன் கைகொடுத்தான். இவளுக்குக் வெட்கம் நாக்கைப் பிடுங்கிக்கொள்ளலாம் போலிருந்தது. ஆபத்திற்கு பாவமில்லை என்பதுபோல அவன்கையை இறுகப் பிடித்துக்கொண்டு மெல்ல எழுந்தாள். அவன் முகத்தை நேரிட்டுப்பார்க்கத் தயங்கி நன்றி என்றாள். நிற்க முடியவில்லை இடுப்பில் தாங்கொணாதவலி. நடு முதுகில் சூட்டுக்கோல் வைத்ததுபோல சுரீரென்றது. மீண்டும் விழப்போனவள் எப்படியோ சமாளித்து தடுப்புக் கண்ணாடியைப் பிடித்தபடி நிற்க எத்தனித்தாள். நிலைமையை இளைஞன் புரிந்துகொண்டான். சற்று தூரத்தில் அமர்ந்திருந்த மருத்துவ குழுவினரைக் கூவி அழைத்தான். ஓர் ஆணும் பெண்ணும் ஓடிவந்தார்கள். ஆளுக்கொருபக்கம் தாங்கியவர்களாய் பனித்திடலை ஒட்டியிருந்த முதலுதவிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று உடகாரமுடியுமாவென கேட்டார்கள். முயன்று பார்க்கிறேனென்றாள். உட்காரமுடிந்தது.

பரிசோதித்தார்கள். பாதத்தைப் பிடித்து மெல்ல இப்படியும் அப்படியுமாக ஆட்டிபார்த்தார்கள். கைகளால் தொட்டுப்பார்த்து இவளுடைய முகக்குறிப்பிலிருந்து வலிதெரிந்த இடத்தை உணர்ந்தவர்களாய் மருந்தொன்றை தற்காலிகமாக  ஸ்ப்ரே செய்தார்கள். ஆம்புலன்ஸ் வந்திருந்தது. ஸ்ட்ரெட்சரை இறக்கி அவளைக்கிடத்தினார்கள் இரண்டு ஊழியர்கள் முன்னுபின்னுமாக அதைத் தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸை நோக்கிச் சென்றபோது சற்றுமுன் திடலில் இவளுக்குதவிய வாலிபன் கை அசைப்பது தெரிந்தது. ஆம்புலன்ஸ் தேவாலயத்தை ச் சுற்றிக்கொண்டு பிரதானசாலையைப் பிடித்து இறங்கி ஓடத்தொடங்கியபோது, குடைராட்டினத்திலிருந்து ஹோவென்று மீண்டும் சப்தம்.

‘நந்தகுமாரா நந்தகுமாரா:’ கைதேர்ந்த கதைசொல்லியின் சிறுகதைகள் – தேவமைந்தன்

இக்கட்டுரை செப்டம்பர் 27 2007ல் தமிழின் முதல் இணைய இதழான திண்ணை யில் வெளிவந்த கட்டுரை. கட்டுரை ஆசிரியர் தமிழ் மரபிலக்கியம, நவீன இலக்கியம் இரண்டையும் நன்றாக அறிந்த தமிழ்பேராசிரியர்களில் ஒருவர். 1948ல் கோவையில்பிறந்த இவர்,  இந்தியாவில் புதுச்சேரிமாநிலத்தில்,  புதுச்சேரி அரசின் தாகூர் கலைக் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகப் பணிபுரிந்துதன் 52-ஆம்அகவையில்விருப்பஓய்வுபெற்றவர். 1968ஆம்ஆண்டுமுதல்தேவமைந்தன்படைத்தகவிதைகள், ‘உங்கள்தெருவில்ஒருபாடகன்‘(1976) ‘புல்வெளி‘(1980) ‘போன்சாய்மனிதர்கள்‘(1993) என்றமூன்றுநூல்களாகவெளிவந்துள்ளன. 1969 முதல்வானொலி உரைகள்நிகழ்த்திவருபவர். செந்தமிழும் நாப் பழக்கம் என்ற இவர் தம் வானொலி உரைத் தொடர் குறிப்பிடத் தகுந்தது.

நந்தகுமாரா நந்தகுமாரா:’ கைதேர்ந்த கதைசொல்லியின் சிறுகதைகள் – தேவமைந்தன்

செந்தில்நாதன்(1), சிவத்தம்பி(2) ஆகியோர் தமிழில் சிறுகதையின் தேவை அறிந்துணரப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் தமது அறிவுழைப்பால் உலகச் சிறுகதை இலக்கணங்களை அலசி ஆராய்ந்து அவற்றின் பின்னணியில் வ.வே. சு. அய்யர், பாரதி முதலானோர் அந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்ட சிறுகதையையும் அதன் இலக்கண அடிப்படைகளையும் பன்முகங்களையும் சுவடிப் படுத்தினர்.

அவர்களைத் தொடர்ந்து பேராசிரியர்கள் பலர் சிறுகதை மற்றும் நெடுங்கதை வடிவங்களைக் குறித்துப் புத்தகங்கள் எழுதலாயினர். சற்றேறக்குறைய நாற்பதாண்டுகளுக்குமுன் புதுமைப்பித்தனின் ‘துன்பக் கேணி'(3) போன்ற கதைகளின் அளவைக் குறித்துப் பயன்படுத்திய ‘நெடுங்கதை’ என்ற சொல்லுக்கு ஈடான ஆங்கிலச் சொல்லாக ‘novella’ இருந்தது. நாகரத்தினம் கிருஷ்ணா ‘வணக்கம் நண்பர்களே!’ என்ற தன்னுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல் பிரெஞ்சில் ‘nouvelle’ ‘ஒருவகை சுருக்கமான இலக்கிய’க் கட்டுரைதான். இருப்பினும், ‘éditions de la connaissance’ இன் பதிப்பான பிரஞ்சு ஆங்கில அகராதியில் – நா.கி. தெரிவிப்பதுபோல் இலங்கைத் தமிழர் சொல்லும் ‘தகவல்’ அல்லது ‘செய்தி’ ‘nouvelle’க்குப் பொருளாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ‘nouvelle’க்கு – அடுத்த பொருள் ‘சிறுகதை’ என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.(4) சான்றுகளாக, இத்தொகுப்பில் உள்ள ‘மொரீஷியஸ் கண்ணகி’யைச் சிறுகதை என்றும்; ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்’ கதையை நெடுங்கதை என்றும் சொல்லலாம். கதை சொல்லல்(narration)தான் அளவு அடிப்படையாக நெடுங்கதையையும் சிறுகதையையும் வேறுபடுத்துகிறது. ஆறரைப்பக்கங்கள் அச்சில் வருகின்ற அளவு சிறுகதையான ‘மொரீஷியஸ் கண்ணகி’ கதைசொல்லப்படுகையில், இருபத்திரண்டு பக்கங்கள் வருமளவு நெடுங்கதையான ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்’ கதைசொல்லப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.

“ஒரு தேர்ந்த கதைசொல்லியாக என்னை உருவாக்கிய பெருமை அனைத்தும் பிரெஞ்சு படைப்புலகம் சார்ந்தது என்று எனது படைப்புகளை படிப்பவர் எவரும் முடிவுக்கு வரக்கூடும்” என்கிறார் நா.கி. மேம்போக்காகப் படிக்கும் பொழுதுதான் அப்படியான முடிவுக்கு வரமுடியும். வாசிப்புக்கும் மறுவாசிப்புக்கும் நா.கி. அவர்களின் இத்தொகுப்புக் கதைகளை உட்படுத்தும்பொழுது, நா.கி.’யின் கதைபுனையும் திறன்(skill) மட்டுமே பிரெஞ்சுப் படைப்புலகம் சார்ந்தது என்றும், அவர்தம் தேர்ந்த கதைசொல்லலைக் ‘குஞ்சுபொறிக்கும் மயிலிறகுகள்’ என்று நம்பிய காலத்திலிருந்தே வாழ்க்கை ஏட்டுக்குள் பொந்தி வைத்தது – இந்தியத் தமிழ்நாட்டின் திண்டிவனம் வட்டம் ஒழிந்தியாப்பட்டின் அருகில் உள்ள கிராமத்து மண்ணும் மக்களுமே என்றும் இக்கட்டுரையாளர் சிந்தையுள் தோன்றுகிறது. இம் முடிபுக்கு(finding) ‘நந்தகுமாரா நந்தகுமாரா’ தொகுப்பிலுள்ள கடைசிக்கதையான ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்”-ஆகவும் பொருத்தமான சாட்சியம் ஆகும்.

பிரெஞ்சுப் படைப்புலகத்துக்கு மிகவும் உரியவையான குறியீட்டியமும்(symbolisme) ஆழ்மனவெளிப்பாட்டியமும்(surréalisme) கீழைத்தேயங்களுக்கேயுரிய தொன்மத்துடன்(myth) ஒன்றியும் உறழ்ந்தும் கலந்து நா.கி.யின் படைப்புகளில் வெளிப்படுகின்றன. ‘எமன் – அக்காள் – கழுதை’ சிறுகதை இதற்குச் சரியான சான்று. மேற்படிக் கலவையின் எதிர்மறையான சான்று என்றும் இக்கதையைக் கூறலாம். ஏனென்றால், இதில் வரும் ‘அக்காள்'(5) எமன் ஏறிவரும் எருமைக்கிடாவையும் கழுதைக் கிடா என்றே சாகுமுன்/எமனுடன் போகுமுன் சாதிக்கிறாள். அதற்குக் காரணமான அவள் ஆழ்மனப் பாதிப்பை நா.கி.(பக்.41-43) மிக நுட்பமாகச் சித்தரித்திருக்கிறார். சலவைத் தொழிலாளி முருகேசனின் முறைப்பாட்டுக்கு ‘அக்கா’ளின் தந்தையார் பஞ்சாட்சர நாயக்கர், “பத்து ரூபாயை விட்டெறிஞ்சி, போடா போய் வேலையைப்பாருண்ணு அவனைத் துரத்தியதும் தப்பில்லை, ஆனால் துரத்திய வேகத்தில் அக்காளைப் பார்த்து “பொட்டைக் கழுதைக்கு கொஞ்சம் அடக்கம் வேணும்” என்று சொல்லாமலிருந்திருக்கலாம்..” என்பதிலும் ஒரு மென்மையான கோரம் கரைந்திருக்கிறது.

மேற்படிக் கலவையின் உடன்பாடான சான்றாக, ‘அம்மா எனக்கொரு சிநேகிதி ‘ கதையைச் சுட்டலாம். இந்தக் கதைப்பாத்திரங்களோடு ‘ஓர் அசாதரணமான மௌன’மும் கதைப்பாத்திரமாகக் கலந்துள்ளது. கர்ணன்பால் குந்திதேவி கொண்டிருந்த வேறுபாடான தாயன்பை இக்கதையில் வரும் அம்மா கொண்டிருக்கிறார். இதில் அம்மாவுக்கும் மகனுக்கும் ஏற்படும் இருபதாண்டு இடைவெளி, குந்திக்கும் கர்ணனுக்கும் ஏற்பட்ட இடைவெளியைப் போலவே உள்ளது. குறியீட்டு நிலையில் வைத்து நோக்கினால்தான் இது புலப்படும். கதையடிப்படையில், கர்ணன் – மகன், குந்திதேவி – அம்மா கதைமுடிவு, முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. படைப்பாளர் ஒருவர் இதையெல்லாம் சிந்தித்து இவ்வாறு படைக்க வேண்டும் என்பதில்லை. அவருடைய ஆழ்மனத்தில் தைத்து, மறைவாக இயக்கம் கொள்ளும் தொன்மப் பதிவு இதைச் சாதித்துக் காட்டிவிடும். அம்மா தனக்கொரு சிநேகிதி என்று இக்கதையில் வரும் மகன் நம்பினாலும், அம்மா – தான் அவனுக்கு அம்மா என்றே உணர்வு நிலையிலும் சாதித்துவிட்டு மறைகிறார். “குந்திக்கு நேர்ந்ததுபோல என் மார்பு நிறைய அன்பு”(ப.31) என்றுதன் கடைசிக் கட்டத்தில் அவர் கூறுவது இதை மெய்ப்பிக்கும். அந்தியூரில்(கோவை மாவட்டம்), கதைசொல்லியொருவர் பாரதக் கதை சொல்லுவதில் தேர்ந்தவராயிருந்தார். அவர் இந்தக் கட்டம் குறித்துச் சொல்லுகையில், “கர்ணன் தன் மகனென அறிவிக்கக் குந்தி எத்தனிக்கும் முன்பே அவள் தாய்ப்பால் அறிவித்துவிட்டது. நாகாத்திரம், அவன் அதை அறியக் காரணம் ஆயிற்று. அருச்சுனன்மேல் ஒருமுறைக்குமேல் அந்த அத்திரத்தைப் பிரயோகிக்கலாகாது என்று கண்ணன் தன் உள்ளத்துள் கொண்ட தீர்மானமே, குந்தியிடமிருந்து தாய்ப்பால் வெளிப்பட்டுக் கர்ணன் முகம் தீண்ட ஏது ஆயிற்று” என்று சொன்னது நாற்பதாண்டுகளுக்குப் பின்னும் என் செவிகளில் ஒலிக்கிறது. ‘அம்மா எனக்கொரு சிநேகிதி,’ ‘அக்கினிகாரியம்,’ ‘அப்பா படிச்சுப் படிச்சு சொன்னார்,’ ‘எமன் – அக்காள் – கழுதை,’ ‘குஞ்சுபொரிக்கும் மயிலிறகுகள்,'(6) ‘நந்தகுமாரா நந்தகுமாரா'(7), ‘சாமி – பெரிய சாமி,’ ‘தாண்டவராயன்'(8), ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்’ ஆகிய கதைகள் – நா.கி. “வாழ்க்கையின் ஒரு பகுதியைத் தமிழ் மண்ணிலும் மறுபகுதியை பிரெஞ்சு மண்ணிலும் செலவிட்டுள்ள”(9) போதும், இவர்தம் ஆழ்நெஞ்சின் வேர்கள் தனக்கே சொந்தமானதும் பூர்விகமானதுமான அடையாளத்தைத் தேடுவதில்தான் ஊன்றியுள்ளன(10) என்பதைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.

“சொந்த மண்ணிலும், வந்த மண்ணிலும் தன்னை நிறுத்தி வதைபடும் என்னுள் உள்ள ‘வேறொருவன்’ பார்த்த அல்லது பங்கீடு செய்துகொண்ட சாட்சிகளை சார்பற்று சொல்லியிருக்கிறேன். எத்தனை நாளைக்குச் சுமப்பது? இறக்கி வைக்கவேண்டுமில்லையா? இறக்கிவைத்திருக்கிறேன்”(11) என்று நா.கி. சொல்கிறார். புலம்பெயர்வோர் காணும் கனவுகள், தங்களின் சொந்த மண் குறித்ததாகவே பெரும்பாலுமிருக்கும் என்றும், காட்சிகள் வேறுபட்டாலும் களங்கள் தம் புலத்தைச் சார்ந்தவையாகவே இருக்கும் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

அடுத்தடுத்த வீடுகளில் நிகழும் நிகழ்வுகளைச் சித்தரிப்பதான கதை, ‘38,39,40 – புல்வார் விக்தோர் யுகோ.’ சொந்த மண்ணின் வாழ்க்கை பகட்டாக இல்லை(ப.8) என்று வேர்களைத் துறந்து, தங்களைத் தாங்களே தங்கள் சொந்த மண்ணிலிருந்து பிடுங்கிக் கொண்டு, அன்னிய மண்ணில் தங்களை நட்டுக் கொள்ள முயன்றவர்களின் பிள்ளைகள் அடையும் பின்னடைவு(12), புலம்பெயர்ந்த கறுப்பின மக்கள்(13), அரபு மக்கள்[அரபினர்மேல் கடும் வெறுப்பு ப.6], புதுச்சேரித் தமிழர்கள்(14) வியத்னாம் மக்கள்(15) ஈழத்துத் தமிழ் மக்கள்(16) ஆகியோர் இந்தக் கதையில் நம் மனக்கண் முன்னே பலவகைகளில் சுயமிழந்து நொந்து நூலழிந்து போகிறார்கள்.

அறிவியல் கதைகள்(scifi) இரண்டு, இத்தொகுப்பில் உள்ளன. ‘அமலா..விமலா..கமலா,’ ‘ஆப்பரேஷன் மகா சங்காரம்’ என்பவையே அவை. முதல் கதையில், அசுரத்தனமான அறிவுபடைத்த கிழவரை அபத்தமானவர் என்று நினைக்கிறான் ‘பயோ கெமிஸ்ட்ரியில் டாக்டரேட் செய்யும்’ சுந்தரம். 1997இல் – முதல் குளோனிங் ஆட்டுக்குட்டியைக் கொண்டுவந்த டாக்டர் வில்மட், தன்னை முழுதாக ஏமாற்றியவர்; அவர் சாதித்தவை எல்லாமே தன்னுடைய உழைப்பு என்று அவர் சொல்லும்பொழுதும் “அதோ அந்த அறை முழுக்க எனது இருபது ஆண்டு கால உழைப்பிருக்கிறது. எல்லாமே டீ.என்.ஏ., ஆர்.என்.ஏ. பற்றிய சுவாரஸ்யமான சங்கதிகள்” என்று காட்டும்பொழுதும் அவன் நம்பவில்லை. திருமணமானவுடன், அவன் அவரைச் சகித்துக்கொண்டதற்கு ஒரே காரணமாகிய அவர் மகள் – அமலா மட்டுமல்ல, விமலா – கமலாவும்தான் என்று அறிய வரும்பொழுதுதான் அவனுக்கு உறைக்கிறது;
அதிர்ச்சியே மேலிடுகிறது. குளோனிங்கில் தொடங்கும் கதை, ‘ரீஜெனெரேஷன்’ என்று தொடர்கிறது. இரண்டாம் கதையான ‘ஆப்பரேஷன் மகா சங்காரம்,’
இலெமூரியாக் கண்டம் துண்டாடப்பட்டதுமுதல் சுனாமி என்னும் ஆழிப்பேரலை வரை எல்லாமே சிறு சிறு ‘புரொக்ராம்’கள்தாம்… உலகமனைத்தும் ஒரே காலத்தில் அழிவதற்கான ஏற்பாடுகளை ‘மகா சங்கார’த்துக்கான ‘புராஜக்ட்’டைச் சிலர் செய்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் கிளுகிளுப்பு கலந்து சொல்லியிருக்கிறார் நா.கி.

பெண்மேல் ஆழமான வெறுப்பு, மனநோய்போல் மாறும்போது அதை ‘misogyny’ என்பார்கள்.(17) இந்தத் தொகுப்பின் தலைப்புக்குரிய கதையான ‘நந்தகுமாரா நந்தகுமாரா’வும் ‘அப்பா படிச்சுப் படிச்சு சொன்னா’ரும் அத்தகைய கதைமாந்தரான ஆண்களைக் கொண்டவை. பெண்ணின் ஐரோப்பிய ஆணவத்தால் மனமுடையும் ஆணான நந்தகுமாரன் தவறான முடிவுக்கு வரும்பொழுது, தன்னின உறவை நெடுநாளாகத் தொடர்ந்திருந்தும் இவனுடன் நான்காண்டுகள் உறவுகொண்டு கருத்தரித்திருக்கும் ஐரோப்பியப்பெண் தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையை, தோழியுடன் தான் ஏலவே செய்திருக்கும் முடிவுக்கு மாறாக, இவனுடன் தான் சேர்ந்தே வளர்க்கத் தீர்மானித்திருப்பதாக – தன் ஓரினஉறவுத் தோழியிடம் சொல்கிறாள். புதுச்சேரியிலிருந்து பிரான்சுக்குப் போய் வாழும் நந்தகுமாருக்கு மனதிடம் இல்லாமல், பொறுமையாக அவளிடம் அமர்ந்துபேசத் திராணியில்லாமல் போனதற்கு சித்தியுடனான அவனது இளம் வயது அதிரடி அனுபவம் காரணமாக இருக்கலாம்.(18) ‘அப்பா படிச்சுப் படிச்சு சொன்னார்’ கதை கொஞ்சம் வித்தியாசமானது. அரசுப் பணி நிரந்தரம் என்று நம்புகிறவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. முதுகில் எலும்பில்லாததுகளே கடைசிவரை நீடிக்கும் அவலம் இதில் ‘அறைய’ப்பட்டிருக்கிறது. அரசுப் பணியைப் போராட்டத்தால் இழந்து தன்மானத்துடன் வாழும் ‘அவர்,’ தன் மனைவியும் தொடர்ந்து தன்னைச் சொற்களால் தாக்கிக் கேவலப்படுத்துவதைச் சகித்துக் கொண்டே வருபவர். ஒரு நாள், “திண்டிவனத்தைக் குறுக்கும் நெடுக்குமாக அளந்துவிட்டு(19) வீட்டை அடைந்தபின், வழக்கத்துக்கும் அதிகமாகப் பேசுவதுடன் அவரது ஆண் தகைமையையும் (பௌருஷம்)(20) அவர் மனையாள் தாக்கத் தொடங்குகிற போது கொதித்துப் போகிறார். அப்பா அவரை அவர் இளம்பருவத்தில் எச்சரித்த சொற்கள் நினைவுக்குள் கனலுகின்றன.(21) இதன் பிறகு கதையில் வரும் எட்டுப் பத்திகள், நீங்களே படித்துக்கொள்ள வேண்டியவை.(ப.37)

‘மொரீஷியஸ் கண்ணகி’ கதையில் காப்பியில் கலக்கும் சர்க்கரைக்கட்டிகூட ஒரு குறியீடாகி, திடமானதும் தீர்க்கமானதுமான முடிவைக் கண்ணகி என்கிற கதாபாத்திரம் மேற்கொள்ளுவதற்கான காரணியாகவும் மாறுகிறது. “கண்ணகி..உட்கார். அமைதியாகப் பேசித் தீர்க்கலாம்” என்பவனுக்கு, “இல்லை. நான் சர்க்கரைக்கட்டி இல்லை கரைந்திட மாட்டேன். கண்ணகி. மொரீஷியஸ் கண்ணகி. எழுந்து நிற்பேன். மதுரையை எரிக்கும் ரகமில்லை. கோவலனை எரிக்கும் ரகம்” என்று உறுதிப்படுத்த “கைப்பையிலிருந்த ஒரு சின்னத் துப்பாக்கியை எடுத்தாள்” என்று கதை முடிகிறது. நா.கி.’யின் ‘நீலக்கடல்’ தேவானி/தெய்வானை, நினைவுக்குள் நுழைந்து பேருரு எடுப்பதை இவ்விரண்டிலும் ஆழ்ந்தவர்கள் தவிர்க்கஇயலாது.

‘பிறகு’ என்ற கதை, ஓர் ஈழத் தமிழ்ப் பெண் தனது தமக்கையின் இரண்டு பிள்ளைகளுக்காக எடுக்கும் அழுத்தமானதும் தீர்க்கமானதுமான தீர்மானத்தையும்; அவள் ஒவ்வொரு முறையும் அதைச் சொல்ல வரும்பொழுது முழுமையாய்க்கூட அதைக்கேட்காத புதுச்சேரித் தமிழனின் அவசர புத்தியையும் மென்மையாக அலசிக் காட்டியிருக்கிறது.

பிரஞ்சிலக்கியப் படைப்பாளிகளின் உத்தியொன்றை நா.கி. பின்பற்றுவது, இரண்டு கதைகளில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. முதலாவது, ‘மொரீஷியஸ் கண்ணகி.’ அடுத்தது, இத்தொகுப்பைப் பெருமைப்படுத்துகிற ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்’ என்கிற கடைசிக்கதை. ‘டிஜிட்டல் காமரா’ போல – நாள், நேரத்தைப் பதிவு செய்யும் உத்தியே அது. 10-1-1994 10 மு.ப.; 11-1-1994 08 மு.ப.; 30-1-1994 10 மு.ப.; 20-2-1994 11 மு.ப.; 15-10-1994; 06-11-1994 ஆகிய நாள் நேரங்களில் ஒழிந்தியாப்பட்டுக்கு நாலு கல் தள்ளியுள்ள கிராமத்தில், அரை ஏக்கர் நஞ்சையொன்று தொடர்பாக, வந்துவிட்ட இந்தியச் சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும், அதன் வெள்ளிவிழாக் காலத்தும், வரப்போகும் இந்தியச் சுதந்திரத்தின் வைரவிழாவின் பொழுதும், விபத்தில் இறந்துபோன ராமசாமியின் பாட்டன் கோவிந்தசாமி/ தந்தை சின்னசாமி/ பார்வதியின் புருசன் ராமசாமி/ ராமசாமியின் வம்சாவளியினரில்(22) எவரேனும் ஒருவர் அடையக்கூடிய நியாயமான ஆசையின் பரிணாமம் மிகவும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பார்வதியின் புருசன் ராமசாமியைச் செயற்கை கொண்டுபோனது; பார்வதியை எவ்வெவ்வாறோ சேர்ந்துவிட்ட அரை ஏக்கர் நஞ்சையை(23) இயற்கை கொண்டு போகிறது. ராமசாமியின் அநியாயமான இறப்பிலிருந்தும் ஆதாயம் பார்த்த மருத்துவமனை – காவல்துறை ஆள்களுக்குப் படியளக்கவும், அவர்கள் வாழும்போதே வாய்க்கரிசிபோடகவும் உடனடியாக உதவி, போக்கியமாகக் கொண்டு கடன்கொடுத்த காசாம்பு முதலி அதில் பயிரிட்டிருந்த ஒரு போகம் பயிருடன் ஏரியுடைந்து வெள்ளக்காடாகிக் கொண்டுபோனது – இயற்கை. இப்பொழுதெல்லாம் புதுச்சேரி – திண்டிவனம் பாதையில் காரோட்டுபவர்கள், மக்கள் மேல் தாங்கள் ஓட்டும் வண்டி பட்டுவிடும் நிலைகூட ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சும் நிலை வந்து விட்டதன் உண்மையான காரணத்தை இந்தக்கதை உணர்த்துகிறது.

‘நந்தகுமாரா நந்தகுமாரா’ தொகுப்பு, நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் சிறுகதைகளைக் கொண்டுள்ளது என்பதை சிறுகதை ஆர்வலர்கள் வாசித்துப் பார்த்தால் உணர்ந்து கொள்வார்கள்.
********
அடிக்குறிப்புகள்:
1. செந்தில்நாதன்,ச., தமிழ்ச் சிறுகதைகள் ஒரு மதிப்பீடு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை. 1967.
2. சிவத்தம்பி, கா., தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரிநிலையம், சென்னை, 1967.
3. முதற்பதிப்பில் 38 பக்கங்கள்.
4. nouvelle f piece of news; short story. dictionnaire: français/anglais: anglais/ français. éditions de la connaissance. 1995. pg.126.
5. பெயர், கதை முழுதும் தெரிவிக்கப்படவில்லை; ஆனால் அவள் பெற்றோர் – உற்றார் உறவினர் – எதிரிகள் ஒவ்வொருவரும் பெயர் குறிப்பிடப்படுகின்றனர்.
6. இது, வகைமாதிரிச் சான்று.[typical example]
7. சித்தியின் பாதிப்பு, அவனைப் பிரான்சிலும் விடவில்லை. – பக்.67, 69.
8. “எதற்காக ‘என்னுடைய’ அடையாளத்தின் மீது குறிவைக்கிறாள்? முடியுமா? என்னை, என் பிரதியை வயிற்றில் சுமந்து கொண்டு? நான் இல்லை என்றால் எப்படி? – நினைக்க நினைக்க ஆத்திரம்.” ப.107.
பிரான்சுக்குப் புறப்படும்போது, அவனது தாத்தா தாண்டவராயப் பிள்ளை கசந்துபோய்க் கேட்டவை. பக்.107-108. “தாத்தா சொன்னது உண்மையா? இழப்புகளுக்குப் பழகிக் கொண்டோமா?” ப.108. “…இறுதியாகப் பதிவேட்டில் குழந்தை பிறந்த நேரத்தை எழுதி முடித்து பெயரினைக் கேட்டபோது, இவன் சொன்னான்: / தாண்டவராயன்.” ப.109.
9. கடைசி அட்டைப் பக்கம்.
10.”இதைத்தான் திரும்பத் திரும்ப சொல்றீங்க. நீங்க வரலைண்ணு யாரங்கே அழுவறாங்க”
“சொந்தமண் நினைவுகள் என்பது ஜீவாத்மா பரமாத்மா உறவு மாதிரி. ஜீவாத்மாவை யாரும் அழைக்க வேண்டியதில்லை. அதுவாகத்தான் தேடிப்போகும்.”-குஞ்சுபொறிக்கும் மயிலிறகுகள், ப.53.
11. வணக்கம் நண்பர்களே!, ப.4
12. “இவனைப் போலவே உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரை படித்திருந்த எதிர்வீட்டுப் பையனுக்கு சுலபமாய் வேலை கிடைக்கிறது. அவன் பெயர் கியோம். இவன் பெயர் ரஷீத்.” – ‘38,39,40 ‘புல்வார் விக்தோர் யுகோ,’ ப.10.
13. ஆப்பிரிக்கப் பொடியனும் வெள்ளைப் பெண்ணும் பண்ணும் செயல். – ‘38,39,40 ‘புல்வார் விக்தோர் யுகோ,’ ப.9.
14. புதுச்சேரித் தமிழர்களையும் கறுப்பினமாகப் பார்க்கும் வெள்ளை மனப்பான்மை ப.12; பிரான்சில் வாழும் புதுச்சேரித் தமிழர்களுக்குத் தமிழில் பேசப் பிடிக்காது. – கதை: ‘பிறகு..’ ப.117.
15. எதற்கும் தளராத மரியம் என்கிற வியத்னாம் அம்மையார் தனது அப்பார்ட்மெண்ட்டின் படிக்கட்டுகளின் இடைவெளியிலிருந்த கூடத்தில் ஆப்பிரிக்கப் பொடியனும் வெள்ளைப் பெண்ணும் பண்ணும் செயலை எதிர்த்ததால் உயிரோடு எரித்துக் கொல்லப்படும் நிகழ்ச்சி ப.14.
16. அறுபது வயதான சந்திரானந்தம் மாஸ்டருக்கேற்பட்ட கொடுமை பக்.6-8: அவருக்கும் ஏற்படும் ஆறுதல்! – “காது மடலுக்குக் கீழே, பிடறியில் நமைச்சல் தணிந்திருந்தது. தலையணையைக் கொஞ்சம் உயர்த்திப் போடச்சொல்லிக் கேட்டு ஒருக்களித்துப் படுத்தார்.” ப.14.
17. misogyny=பெண்மேல் வெறுப்பு. பிரெஞ்சில் misogyne mf = misogynist. தொடர்புடைய சொற்கள்: misogamy =திருமணத்தின் மேல் வெறுப்பு misandry=ஆண்மேல் வெறுப்பு.
18. நந்தகுமாரனுக்கான சித்தி, பத்துத் தலைகளும், கருகருவென்ற புருவமும் பெரிய கண்களும், மூன்று வாய்களும் தொங்கும் நாக்கும், இரண்டு கால்களுமாய் கறுப்புச் சரீரத்துடன் தமிழ்ப் பஞ்சாங்கங்களில் வருகின்ற மகர சங்கராந்தி புருஷ ஸ்த்ரீ ரகம். துர்த்தேவதை. அவள் ராச்சியத்தில் அவனப்பா செய்ததெல்லாம் சேவகம்தான். அந்தச் சேவகத்தின் சூட்சுமம் அவளது பெரிய மார்புகளில் இருப்பதை ஒரு மழைநாளில் அவன் அறிந்திருக்கிறான்…… ப.67.
19. “திண்டிவனத்தில் அவரை அறிந்தவர்கள் அரசாங்க ஜீப்பில் பயணித்தே அவரைப் பார்த்திருக்கின்றார்கள். ப.35.
20. இந்தச் சொல்லை நா.கி. பயன்படுத்தவில்லை. ‘பௌருஷம்’ என்ற தலைப்பில் த. ஜெயகாந்தன் சிறுகதை உள்ளது. அதனால்தான் அடைப்புக்குள் இட்டேன்.
21. “எங்க.. அவங்கிட்டயா…வேண்டாம்டி. நான் மூர்க்கன். அப்பா படிச்சு படிச்சுச் சொன்னார். உங்களை நம்ப வேண்டாம்னு சொன்னார். அவரை மாதிரியே என்னையும் கொண்டுபோயிடாதே.” ப.37.
22. ‘ஆவளி’ என்றால் வரிசை; ‘வம்சாவளி’ என்பது பிழையல்ல; தீபாவளி போல வம்சாவளி. தீபங்களின் வரிசைபோல வம்சங்களின் வரிசை. அதேபோல, ‘கனவு'(dream state)க்கு மாற்று ‘நனவு'(reality)தான்; நினைவு(thought) அல்ல. ‘நினைவுகூர்தல்’ என்ற சரியான சொல்லையும் வாய்வந்தவழியே மேடைகளில் பேசி ‘நினைவுகூறுதல்’ என்று ஆக்கிவிட்டார்கள்.

********

புத்தகம்:

நந்தகுமாரா நந்தகுமாரா (சிறுகதைகள்)

ஆசிரியர்:

நாகரத்தினம் கிருஷ்ணா

பதிப்பகம்:

சந்தியா பதிப்பகம்
ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ்,
57 – 53ஆவது தெரு, அசோக் நகர்,
சென்னை – 600 083.
புத்தக அளவு: தெமி 1×8
பக்கங்கள்: 144. விலை: ரூ. 70/-
தொ.பே: 044 -24896979, 55855704
****
annan.pasupathy@hotmail.com
http://kalapathy.blogspot.com
http://360.yahoo.com/pasu2tamil

  அலெக்சாந்தர்

                      

       ( மூல மொழியில் பிரசுரமான ஆண்டு 02 செப்டம்பர் 1889)

                                         கி தெ மொப்பசான்

மாலை மணி நான்கு, அன்றும் வழக்கம்போல அலெக்சாந்தர், மராம்பால் குடும்பத்தாரின் சிறிய வீட்டின் வாயிற்கதவுக்கு முன்பாக மூன்று சக்கர நாற்காலியை நிறுத்தினார். இனி மாலை ஆறுமணிவரை மருத்துவரின் அலோசனைக்கிணங்க நடக்கவியலாமல் சிரமப்படும் வயதான வீட்டு எஜமானியை அந்த வண்டியில்வைத்து உலாத்த வேண்டும்.

இலகுவான அச் சக்கர நாற்காலியை வாசற்படியில் முட்டும்படி நிறுத்தியிருந்தார், உடல் பருமனான எஜமானி அப்போதுதான் சங்கடமின்றி நாற்காலியில் அமரமுடியும். பின்னர் தான் பணியாற்றும் வீட்டுக்குள் நுழைந்திருந்தார், மறுகணம் காச்சுமூச்சென்று கோபத்துடன் ஒரு குரல். ராணுவ வீர்ருக்கே உரிய கர்ண கடூரமான ஆபாசத்துடன் ஒலிக்கிறது. அக்குரல் வீட்டு எஜமானருடையது. இராணுவத்தில் தரைப்படை தளபதியாக இருந்து ஓய்வு பெற்றிருக்கும் ஜோசெப் மராம்பால் என்பரின் குரல். அதன் பின்பு கதவை அறைந்து சாத்தும் ஓசை, தொடர்ந்து நாற்காலிகள் இழுபடுகின்றன, தரை அதிர கேட்கும் காலடிகள், பிறகு அனைத்தும் அடங்கிப்போனது. சில நொடிகளுக்குப் பிறகு, அலெக்சாந்தரை வாயிற்படியருகில் திரும்ப பார்க்கமுடிந்தது, படிகளின் இறக்கத்தில்  மிகவும் சோர்வுற்று நிலையிலிருந்த ‘திருமதி மராம்பால்’ஐ தன்னுடைய பலத்தையெல்லாம் ஒன்று திரட்டித் தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தார். மிகுந்தச் சிரமத்துடன் சக்கரநாற்காலியில், எஜமானி அம்மாள் உட்கார்ந்தபின்னர், நாற்காலியின் பின்புறமாகச் சென்றார். தள்ள உதவும்  கைப்பிடிகள் இரண்டும் தற்போது அவருடைய பிடிக்குள், சக்கர நாற்காலியைத்  தள்ளிக்கொண்டு ஆற்றங்கரையை நோக்கி நடந்தார்.  

அதொரு சிறிய ஊர். ஒவ்வொருநாளும் எஜமானியும் அலெக்சாந்தருமாக ஆற்றை நோக்கிச் செல்கிறபோது எதிர்படும் மனிதர்கள், இருவருக்கும் மரியாதை நிமித்தம் வணக்கம் கூறுவதுண்டு. அம்மரியாதையை வீட்டு எஜமானிக்குக் கொடுப்பதில் சிறிதும் குறையாமல், சக்கர நாற்காலியைத் தள்ளும் பெண்மணியின் பணியாளுக்கும் கொடுப்பதாக நீங்கள் நம்பலாம், காரணம் அவரும் வயதானவர், முன்னாள் ராணுவவீரர் வேறு, போதாதற்கு திருச்சபை மனிதர்களுக்குரிய வெண்ணிற தாடியுடன் இருக்கிறார், ஒரு நல்ல பணியாள் எனவும் ஊரில் அறியப்பட்டிருந்தார்.  

ஜூலை மாதத்து சூரியனின் தாக்குதலில் வீதி, எனவே, சிறிய குடியிருப்புகள் அனைத்தும் கடுமையான வெயிலில் சோபை இழந்து காணப்பட்டன. சாலையோர நடைபாதையில் வீட்டுச் சுவர்களின் நிழல்களில் நாய்கள் உறங்கிக் கொண்டிருந்தன. அலெக்ஸாண்டர் சிறிது நின்று மூச்சுவாங்கிக்கொண்டு, ஆற்றை அடைவதற்குப் பெருஞ்சாலையைப் பிடிக்கும் நோக்கில் சக்கர நாற்காலியை வேகமாகத் தள்ளிகொண்டு நடந்தார்.

திருமதி மராம்பால் தனது வெள்ளை நிற குடையின் கீழ் ஏற்கனவே உறக்கத்தில் இருந்தார், அவர் கையிலிருந்து நழுவிய குடையின் கைப்பிடி அவ்வப்போது  அலெக்சாந்தரின் உணர்ச்சியற்ற முகத்தில் அழுந்தச் செய்தது. இலைகள் அடர்ந்த் திலியா மரங்கள் இருபக்கமும் வளர்ந்திருந்த பாதையைப் பிடித்து நடக்கத் தொடங்கி, மரங்களின் நிழலின் கீழ் வந்ததும் பெண்மணி உறக்கம் கலைந்திருந்தார். மிகவும் அன்பான குரலில்:

–  பாவப்பட்ட மனிதரே, கொஞ்சம் மெதுவாக நடக்கலாமே ! வேகமாய்ச் சென்று, இந்த வெக்கையிலே வெந்து சாவதற்கு உங்களுக்கு விருப்பமா என்ன ! எனக்கேட்டு அலெக்சாந்தரை எச்சரிக்கிறார்..

திருமதி மராம்பால் பொதுவில் துணிச்சலான பெண்மணி, சிறிது நேரத்திற்கு முன்புதான் தழைத்திருந்த மரங்கள் தரும் நிழலின்கீழ் இருவரும் வந்திருந்தனர், இந்நிலையில் மனிதர்க்குள்ள இயல்பான  சுயநலத்தில், அலெக்ஸாந்தரை  மெதுவாகச் போகும்படி வேண்டினாரே அன்றி வேறு எண்ணங்கள் மனதில் இல்லை.

அவர்கள் பாதை அருகே, வளைந்த வில்போல அழகுடன் வெட்டப்பட்ட  திலியா மரங்கள். விlல்லோ மரங்களின் வரிசைகளின் நடுவே வளைவும் நெளிவும் மிக்க படுகையில் நவெத் ஆறு பாய்ந்துகொண்டிருக்கிறது. நீர்ச்சுழலின் களுக்புளுக்கென்ற சப்தமும், பாறைகளின் மீது நீர் தாவிக்குதிக்கும் ஓலியும், நீரோட்டம் பாதை மாற்றிக்கொள்ளுமிடத்தில் எழுந்த ஓசையும் கலந்து இவர்கள் செல்லும் பாதை நெடுகிலும் இனிமையாதொரு நீரோசையை, ஈரக் காற்றின் குளுமையைத் தெளித்துக் கொண்டிருக்கின்றன.

ஆழமாக காற்றை உள்வாங்கி, ஈரநைப்புடன் கூடிய அவ்வ்விடத்தின் அழகை ருசித்த பிறகு, திருமதி மராம்பால்:

– ஹா..பாரம் குறைஞ்சதுபோல இருக்கிறது. சரி என்ன ஆச்சு என் கணவருக்கு, இன்றைக்கும் நல்ல மனநிலையில் அவர் இல்லையே, ஏன் எனத் தெரியுமா?  என மெல்லிய குரலில் பணியாள் அலெக்சாந்தரைக் கேட்டார்.

 .- ஓ மேடம் எப்படி நான்… என்ற அலெக்சாந்தர், வாக்கியத்தை முடித்தவரில்லை.

கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக  திரு, திருமதி மராம்பால் இல்லத்தின் சேவையில் அலெக்சாந்தர் இருக்கிறார், முதலில் இராணுவ நிர்வாகத்தின் ஒழுங்குமுறைப்படி ஓர் உயரதிகாரியின் வீட்டு ஏவலர் என்ற வகையில் பணி. பின்னர் தமது எஜமானர்களை விட்டுப் பிரியமனமில்லாத ஒர் எளிய வேலைக்காரனாக பணியைத் தொடர்ந்தார்; தற்போது கடந்த ஆறு வருடங்களாக நாள்தோறும் பிற்பகலில் ஊரைச் சுற்றியுள்ள குறுகிய பாதைகளில்  தம்முடைய எஜமானியை உலாத்த அழைத்துச் செல்பவராகவும் இருந்துவருகிறார். 

அலெக்சாந்தருடைய நெடுங்கால அர்ப்பணிப்பு சேவையும், அதன்காரணமாக, அருகருகே இருந்து பேச நேர்ந்த தினசரி வாழ்க்கையும், அவருக்கும் பெண்மணிக்கும் இடையே, ஒரு வகையான நெருக்கத்தையும் அன்பையும் ஏற்படுத்தியிருந்தது, அந்தவகை நெருக்கமோ அன்போ குடும்பத் தலைவரிடம் அவருக்கு இல்லை. எஜமானியும், பணியாளும் மராம்பால் குடும்ப  விவகாரங்களை, தங்களுக்குள் பேதமின்றி உரையாடுவார்கள். அவர்கள் பேச்சு மற்றும் கவலையின் பிரதான விஷயம் வீட்டு எஜமானரின் மோசமான குணத்தைப் பற்றியதாக இருக்கும். எதிர்காலம் பிரகாசமாக இருக்குமென்ற நம்பிக்கையில் தொடங்கிய அவருடைய ராணுவப்பணி, கசப்பானதாக முடிந்திருந்தது. தவிர பதவி உயர்வோ, புகழோ இன்றி வெறும் கேப்டன் என்கிற ஒரே தகுதியோடு ஓய்வுபெற்றிருந்தார்.  

– என் கணவர் இப்படி நடந்துகொள்வதற்கு, அவருடைய இராணுவப் பணிக் காலம் சொல்லிக்கொள்ளும்படி இல்லாததுதான் காரணம். என்றைக்கு  இராணுவத்திலிருந்து வெளியில் வந்தாரோ அன்றிலிருந்து அவர் அடிக்கடி இப்படித்தான்இருக்கிறார் ! – என குறைபட்டுக்கொண்டார், திருமதி மராம்பால்.

அலெக்சாண்டர் பெருமூச்சுடன் தனது எஜமானி சொல்ல நினைத்ததை முடிக்கின்றவகையில் :

– மேடம் ! அதை அடிக்கன்னு சொல்வதைக் காட்டிலும், நாள்தோறும் என்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். தவிர இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பிருந்தே அவர் குணம் இப்படித்தான் இருந்திருக்கிறது, அதுதான்  உண்மை, என்றார்.

–  நன்றாகச் சொன்னீர்கள் ! இந்த மனுஷனுக்கு அதிர்ஷ்டமும் போதாது.  இருபது வயசுல, அவர் தீரத்தை மெச்சி பதக்கமெல்லாம் கொடுத்தது, உண்மையில் நல்ல ஆரம்பம். பிறகு இருபது வயசிலிருந்து ஐம்பது வயசுவரை வெறும் கேப்டன்  பதவியிலே காலத்தை ஓட்டவேண்டியிருந்தது, அதைத் தாண்டிப் போகவில்லை. இராணுவத்துல இருந்து ஓய்வு பெறும்போது குறைந்த பட்சம் கொலோனல் ஆகமுடியும் என்று கனவு கண்டவராம்.

– மேடம் இதற்கெல்லாம் காரணம் அவர்தான்னு நாம சொல்ல முடியும்.  ஒரு சவுக்குக்கு உள்ள நல்ல குணம் என்னன்னு உங்களுக்குத் தெரியும். ஐயா எப்பொழுதுமே அப்படித்தான் இருந்திருக்கிறார், விரும்பக் கூடியவராக இருந்திருந்தால், உயர் அதிகாரிகளும் அவருக்காக பரிந்து வந்திருப்பார்கள்.அவரை விரும்பி இருப்பார்கள். கடுகடுவென்று எல்லோரிடமும் எரிந்து விழுந்து என்ன சாதிக்க முடியும், பிறரிடம் நல்லபெயர் வாங்கவேண்டுமெனில், அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் நடந்துகொள்வதுதானே முறை.

அவர் நம்மை இப்படி நடத்துவதற்கு, யாரைக் குற்றம் சொல்லமுடியும். இது நம்ம தப்பு. அவர் என்ன செய்தாலும், சகித்துக்கொண்டு, அவரோட இருக்க நாம விரும்பறோம். மற்றவர்களுக்கு அப்படியொரு நிலைமை இருக்க முடியாதே!

திருமதி மராம்பால் யோசனையில் ஆழ்ந்தார். நீண்ட காலத்திற்கு முன்பு, ‘ஒரு கம்பீரமான இராணுவ அதிகாரி, இளம் வயதிலேயே துறையின் பாராட்டுதலைப் பெற்றவர், நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது’ என்றெல்லாம்  நம்பிக்கைவைத்து மணம் செய்துகொண்ட மனிதர் கடைசியில் இப்படி இருக்கிறாரே என கடந்த பல ஆண்டுகளாக தான் கணவரால் வதைபடும்  ஒவ்வொரு நாளும் நினைப்பதுண்டு. வாழ்க்கையில் எத்தனைச் சுலபமாக ஏமாந்து போகிறோம்!  என மனதிற்குள் கூறிகொண்ட பெண்மணி, வாய்விட்டு:

  – அலெக்சாந்தர், கொஞ்சம் நிற்போம்,  நீங்கள் வழக்கமாக உட்காருகிற பெஞ்ச் வந்துவிட்டதே, சிறிது இளைப்பபாறுங்களேன், என்றார்.

ஞாயிற்றுக்கிழமைகளில்  நடைபயிற்சி செய்பவர்களுக்காகப் பாதையின் வளைவில் போடப்பட்டிருந்த ஒரு சிறிய, மரத்தாலான சற்று நீளமான இருக்கை அது. அதில் பாதி ஏற்கனவே உலுத்திருந்தது. ஒவ்வொரு முறையும் இப் பக்கம் அவர்கள் வருகிறபோதெல்லாம் ​​பணியாள் அலெக்சாந்தர்  இருக்கையில் சில நிமிடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதுண்டு.

இருக்கையில் உட்கார்ந்ததும் பரிச்சயமான பாவத்துடனும், மனம் நிறைந்த பெருமிதத்துடனும், விசிறிபோல விரிந்திருக்கும் தம்முடைய  வெண்தாடியை கைவிரல்கள் மடிப்பில் அடக்கி  தாடியின் முனைவரை உருவிவிடுவார், வயிற்றின் குழிவானப் பகுதியை நெருங்குகையில் அவ்விடத்தில் தாடியை பொருத்த நினைத்ததுபோலவும், அதன் வளர்த்தியை அளவிட விழைந்ததுபோலவும் சில நொடிகள் காத்திருப்பார், அதை அன்றும் செய்தார்.

பெண்மணி தொடர்ந்தார்:

– நான் , அவரை முறைப்படி மணம் செய்துகொண்டவள், அவர் மனைவி. எனவே அவருடைய அநியாயங்களைச் சகித்துக்கொள்கிறேன். ஆனால் அலெக்சாந்தர் நீங்கள் எதற்காகச் சகித்துக்கொள்ளவேண்டும் ? 

தோள்களை ஒருமுறை விளங்கிக்கொள்ளாதவகையில் குலுக்கிவிட்டு :

– ஓ! நான் …நான் மேடம்,  எனக் கூறியவருக்கு, அதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை. .

பெண்மணித் தொடர்ந்து :

உண்மையில், உங்கள் விஷயம் பற்றி நான் அடிக்கடி யோசித்திருக்கிறேன். நான் திருமணம் முடித்த கையோடு என் கணவர் வீட்டிற்கு வந்தபோது, இராணுவ நிர்வாகம் உயரதிகாரியான என் கணவருக்கு நியமித்திருந்த சேவகர் நீங்கள். அந்நிலையில் என்னுடைய கணவர் உங்களை மோசமாக நடத்த அதைச் சகித்துக் கொள்வதன்றி உங்களுக்கு வேறுவழியில்லை, புரிந்துகொள்ள முடிகிறது.  ஆனால் அதற்குப் பின்பும் எங்கள் இல்லத்தில் தங்கியது ஏன் ? என் கணவர் வழக்கம்போல மோசமாக நடத்துவது ஒருபக்கம் இருக்கட்டும், ஊதியத்தையும் குறைத்தல்லவா கொடுக்கிறோம். எல்லோரையும் போல வெளியில் சென்று, நிலைமை சீரானதும், திருமணம், மனைவி பிள்ளைகள் குடும்பமென்று நீங்கள் வாழ்ந்திருக்க முடியுமில்லையா ?

 «  ஓ ! மேடம், நான் கொஞ்சம் வேற மாதிரியான ஆசாமி » என்று  கூறி அலெக்சாந்தர், அமைதியானார். ஏதோ மணியை இழுந்து அதன் ஓசையை கேட்க முனைந்த பாவனையில் தனது தாடியை உருவினார். பின்னர் அதை முகத்திலிருந்து அகற்ற நினைத்தவர்போல வலிந்து இழுக்கிறார் ; மனிதர் சங்கடத்தில் ஆழ்ந்திருக்கிறார் என்பதை பதற்றத்தில் உருண்ட விழிகள் காட்டின.

திருமதி மராம்பால், தன் மனதிலோடும் எண்ணத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் :

— நீங்கள் பட்டிகாட்டு ஆசாமி இல்லை. படித்தவரென்றும் நினைக்கிறேன்.

அலெக்சாந்தர், பெருமிதத்துடன் குறுக்கிட்டார் :

—  ஆமாம் மேடம். நீங்கள் நினைப்பது சரி, நில அளைவையாளருக்குப் படித்திருக்கிறேன்.

— அப்படி இருக்கிறபோது, எதற்காக இந்த வேலைக்காரன் வேஷம், உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டு ?

அவருக்கு நா குழறியது :

— அது அப்படித்தான், என்னுடைய பிறவிக்குணம் அது.  

— எப்படி, உங்களுடைய பிறவிக்குணம்தான் என்ன, சொல்லுங்களேன், தெரிந்துகொள்கிறேன்.

—  ஆமாம், ஒன்றின்மீது எனக்கு பற்றுதல் உண்டானால், அத்துடன் முடிந்தது, அப்பொருளை, அல்லது  மனிதரை விட்டு விலகிச் செல்ல எனக்கு இயலாது.  

பெண்மணி கலகலவென சிரிக்கிறாள்

—  ஏது, « எஜமான் மராம்பலுடைய அன்பும்,  அவர் நடந்துகொள்ளும் விதமும் பிடித்துப் போனது, அதனால்தான் உங்கள் வீடே கதியாக இருக்கிறேன் » என்று சொல்லிவிடுவீர்கள் போலிருக்கிறதே, அப்படியெல்லாம் சொல்லமாட்டீர்கள் இல்லையா ?

பெண்மணியின் கேள்வியைக் காதில் வாங்கிய அலெக்சாந்தருக்கு ஒருவிதப் பதற்றம், இருக்கையில் நெளிந்தார், குழப்பத்தில் இருப்பதை முகம் காட்டிக்கொடுத்தது. பெரிய மீசைக்கிடையில் முணுமுணுப்புடன் வார்த்தைகள் வெளிப்பட்டன :

– ஒருவகையில் அது சரி ஆனால் அதில் ஒரு சின்னத் திருத்தம். உங்கள் இல்லத்தில் நான் வேலைகாரனாக இருப்பது உங்கள் கணவருக்காக அல்ல உங்களுக்காக !

பெண்மணிக்கு இனிமையான முகம், அதை அலங்கரிக்க நெற்றிக்கும் மென்பட்டுத் தொப்பிக்கும் இடையில் ஒளிரும் அன்னப்பறவையின் சிறகுகள்போலவும், வெண்பனி நிறத்திலும், சிறிய பூச்சரம்போலவும் ஒவ்வொரு நாளும் அக்கறையுடன் பராமரிக்கிற சுருள் சுருளான தலைமயிர்கள்.

மிகுந்த ஆச்சரியத்தோடு, தன்னுடைய பணியாளைப் பார்த்தார்.

– உங்களை நினைக்க பாவமாகத்தான் இருக்கிறது, என்ன சொன்னீங்க  எனக்காகவா, ஏன் ?

அலெக்சாந்தர், பெண்மணியின் கண்களை சந்திக்கத் தயங்கி வானத்தைப் பார்த்தார், பின்னர்  பக்கவாட்டில் பார்வை சென்றது, அடுத்து தொலைவில் எதையோ தேடினார். பிறகு வெட்கத்திற்குரிய அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ள கூச்சப்படும் மனிதர்களை வற்புறுத்தி இணங்கவைப்பது போல அவருடைய தலை திரும்பியது. ஒரு படைவீரனிடம், சுடு எனக் கட்டளையிட்டதும் என்ன மாற்றம் நிகழுமோ அக்கணத்தை அவரிடமும் காணமுடிந்தது. வார்த்தைகள் தயக்கமின்றி வெளிப்பட்டன :

— ஆமாம் உங்களுக்காகத்தான். ஞாபகமிருக்கிறதா, முதன்முறையாக நம்முடைய இராணுவ அதிகாரியின் கடிதமொன்றை உங்களிடம் கொடுத்தேன். அதைபெற்றுகொண்ட நீங்கள் சிறு அன்பளிப்பாக இரண்டொரு நாணயங்களைத் தந்தீர்கள். அதைப் புன்னகையுடன் கொடுத்தீர்கள். உங்கள் வீட்டில் இறுதிவரை வேலைக்காரனாக இருப்பதென்று முடிவெடுத்தது அன்றுதான்.  

பெண்மணிக்கு அலெக்சாந்தரின் பதில் போதவில்லை, குழப்பம் நீடித்தது :

— கொஞ்சம் விளக்கமாகச் சொல்லக்கூடாதா ?

மறுகணம், ஏதோ பாவப்பட்ட ஒருவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டே ஆகவேண்டுமென்கிற கதியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டதுபோல,அலெக்சாந்தரின் குரல் ஒலித்தது :

—  மேடத்திடம், எனக்கு ஒருவகை பிரியம், போதுமா ? இதற்குமேல் விளக்கமாகச் சொல்ல என்னால் ஆகாது.

பெண்மணியிடம் மறுமொழியில்லை, அலெக்சாந்தரிடமிருந்த பார்வையை விலக்கிக்கொண்டு குனிந்த தலையை உயர்த்தாது யோசனையில் ஆழ்ந்தார். அவரிடம் உயர்ந்த பண்புகள் உண்டு : நல்லவள், அன்பானவள்,  நேர்மை, நீதியோடுமட்டுமல்ல உணர்வுபூர்வமாகவும் வாழ்பவள். தன் அருகில் இருக்கவேண்டும் என்பதற்காக, அனைத்தையும் துறந்து தங்கள் வீடே கதியென்றிருக்கிற பாவப்பட்ட அம்மனிதரின் மிகப்பெரிய அர்ப்பணிப்பை ஒரு நொடி எண்ணிப் பார்த்தார், சிறிது அழவேண்டும்போலிருந்தது.

தன் பணியாளரிடம் சிறிதும் கோபமில்லை, மாறாக வருத்தம் தோய்ந்த குரலில் :

— சர், வீட்டிற்குத் திரும்பலாம், என்றார்.

அலெக்சாந்தர் இருக்கையிலிருந்து எழுந்துகொண்டார், சக்கர நாற்காலியின் பின்பக்கம் சென்றவர், தள்ளத் தொடங்கினார்.

ஊரை நெருங்கியபொழுது, பாதையில் அவர்கள் எதிர் திசையில் கேப்டன் மராம்பால் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

அவர்களை நெருங்கிய மறுநொடி, தன் மனைவியிடம் கோபத்துடன் :

— இரவு என்ன சாப்பிடப்போறோம்? எனக்கேட்டார்.

— கோழியும் மொச்சைபயறும், என்பது பெண்மணியின் பதில்.

கேப்டன் மராம்பால் நிதானத்தை இழந்து வழக்கம்போல கத்தினார் :

— கோழி…கோழி, ஒருநாளைப்போல கோழியா, கடவுளே ! நான் படறது போதும். எவ்வளவுதான் கோழிக்கறியைத் தின்ன முடியும். நாள்தோறும் அதைச் சாப்பிடவைக்கிறோமே என்பதைப்பற்றியெல்லாம் நீ யோசிக்கவே மாட்டாயா ?

பெண்மணி கணவரை சமாளிக்கும் விதமாக :

— கோபப் படாதீங்க ! மருத்துவர் உங்கள் விஷயத்தில் கூறியுள்ள அறிவுரை என்னவென்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்கள் வயிற்றுக்கும் அதுதான் நல்லது. உங்கள் வயிறு மட்டும் பிரச்சனைகளின்றி இருந்தால், எனக்கென்ன தயக்கம், கூடாததைக்கூட தாராளமாக சமைத்துத் தர ஏற்பாடு செய்வேன்.  

பெண்மணியின் கணவரான கேப்டன், மிகுந்த எரிச்சலுடன் அலெக்சாந்தர் பக்கம் திரும்பினார்.

— என்னுடைய உடல் கெட்டதற்கு, முழுக்க முழுக்க இந்த தடியன்தான் காரணம். ஒரு வருடமா, இரண்டு வருடமா ? கடந்த முப்பத்தைந்து வருடங்களாக சமையல் என்றபெயரில் கண்டதையும்  சமைத்து, எனக்கு விஷத்தையல்லவா கொடுத்து வருகிறான்.

மேடம் மராம்பால் தலை தற்போது நம்பிக்கைக்குரிய தங்களுடைய வேலையாளை நோக்கித் திரும்பியது. இருவர் கண்களும் சந்தித்துகொண்டன, ஒருவருக்கொருவர் இருவரும் தங்கள் பார்வையாலேயே « நன்றி » தெரிவித்துக்கொண்டனர்.

                       ———————————————————.

பிரியாவிடை

                  பிரியாவிடை (Adieu)

( கதை பிரெஞ்சில் பிரசுரமான ஆண்டு 18 மார்ச் 1884)

  • கி மாப்பசான்
  • தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

நண்பர்கள் இருவரும் இரவு உணவை முடித்துக் கொண்டிருந்தனர். உணவகச் சன்னலில் இருந்து  பார்க்க வெளியே பெருஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக மனிதர்கள். கோடை இரவுகளில் பாரீசில் வீசும் இதமான காற்று உடலைத் தொட்டது. பாதசாரிகள் தலைகளை உயர்த்தி நடப்பதற்குரிய காரணம் விளங்க, உணவகத்திலிருந்து வெளியேறவேண்டும் என்கிற உந்துதல். அங்கே செல்லவேண்டும், காற்றுதரும் கனவுகளில் ஏதேதோ வருகின்றன : தழையத் தழைய இலைகளுடன் நிற்கும் மரங்கள்,  நிலவொளியில் ஜொலிக்கிற நதிகள், மின்மினிப் பூச்சிகள், வானம்பாடிகள், இவற்றிறில் எதைத் தேர்ந்தெடுப்பது, எங்கே செல்வது என்பதில் நண்பர்கள் இருவருக்கும் குழப்பம்.  

அவர்களில் ஒருவரான ஹாரி சிமோன் ஆழ்ந்த பெருமூச்சுடன் கூறினார்:

–  ம்,  எனக்கு வயதாகிவிட்டது, தற்போது அதுபற்றிய கவலைதான். முன்பெல்லாம், இதுபோன்ற மாலைவேளைகளில்,  துர்த்தேவதை இறங்கினதுபோல எனதுடல் இருக்கும். தற்போது மனதில் விசனத்தைத் தவிர வேறொன்றுமில்லை. வாழ்க்கை வேகமாக ஓடுகிறது.

மனிதருக்குக் கனத்த உடல், நாற்பத்தைந்து வயது இருக்கலாம், தவிர வழுக்கையும் அதிகம்.

மற்றவர், பியர் கர்னியெ, கொஞ்சம் கூடுதலான வயது, நன்கு மெலிந்திருந்தார், அதேவேளை உற்சாகமான ஆசாமி.  நண்பர் சொல்லி முடிக்கட்டுமெனக் காத்திருந்தவர்போல இவர் தொடர்ந்தார்:

” அன்பிற்குரிய சினேகிதரே, எனக்கும் வயதாகிவிட்டது,  அதைச் சிறிதும் உணராமலேயே நானும் இருந்திருக்கிறேன்.  மகிழ்ச்சி, திடகாத்திரமான உடல், சுறுசுறுப்பென்று பலவும் என்னிடம் இருந்தன. இருந்தும் கண்ணாடிமுன் நிற்கிற ஒவ்வொரு நாளும்    ​​வயது தனது கடமையை நிறைவேற்றுவது கண்களுக்குப் புலப்படுவதில்லை, காரணம்  அப்பணியை மெதுவாகவும், அதற்கான நியதிகளின் அடிப்படையிலும் நிறைவேற்றுகிறது. மாற்றங்களை உணரமுடியாத வகையில் மெல்ல மெல்ல நம் முகத்தை அது திருத்தி எழுதுகிறது.

இந்த ஒரு காரணத்திற்காகவே வயதின் இரண்டு அல்லது மூன்றாண்டுகால கபளீகரத்திற்குப் பிறகு  நாம் அதிகம் மனம் உடைந்துபோவதில்லை. அதேவேளை  இம்மாற்றங்களை நாம் கொண்டாடவும் இயலாது. குறைந்தது ஆறு மாதங்கள் கண்ணாடி முன் நின்று முகத்தைப் பார்க்காமலிருக்க நமக்குப் பொறுமை வேண்டும், அப்போதுதான்  இப்பிரச்சினையின் உண்மை தெரியவரும்.  அன்று,  தலையில் இடி விழுந்திருக்கும்!

சரி பெண்கள் நிலமை என்ன, அருமை நண்பா!, அதை  எப்படிச்சொல்ல?, மிகவும் பரிதாபத்திற்குரிய ஜீவன்கள் அவர்கள்! அவர்களுடைய  ஒட்டுமொத்த மகிழ்ச்சியும்,  பலமும், உயிர்வாழ்க்கையும் எதில் அடங்கியுள்ளது  தெரியுமா? சுமார் பத்துவருடகாலம் மட்டுமே நிலைத்திருக்கிற அவர்களுடைய அழகில்.

என் விஷயத்திற்கு வருகிறேன்,  நானும், எப்படியென்று சந்தேகிக்காமலேயே முதுமையை அடைந்துவிட்டேன், இன்னமும் நானொரு பதின் வயது இளைஞன் என்று எண்ணிக்கொண்டிருக்க, ஐம்பதுவயதை நெருங்கியிருந்தேன். குறைபாடுகள் ஏதுமின்றி வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் சென்றது. முதுமையின் வருகை கவனத்தைபெற்றதில்லை, இருந்தபோதிலும் அது கொடுமையானது, உண்மையைப் புரிந்துகொண்டபோது கிட்டத்தட்ட ஆறுமாதங்கள்  அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் கிடந்து, பிறகு அதன் வழியில் செல்வதென முடிவெடுத்தேன்.

எல்லா ஆண்களையும் போலவே நானும் அடிக்கடி காதல் வயப்பட்டிருக்கிறேன், அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்று உண்டு.

சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யுத்தம் முடிந்து சிறிதுகாலமிருக்கும், ஏத்ருத்தா(Etretat) கடலோரம்   அவளைச் சந்தித்தேன்.  காலைவேளையிலும், கடல் நீராடுகிறபோதும் அக்கடற்கரையின் அழகே தனி. குதிரை இலாடம்போல வளைந்து, செங்குத்தான வெண்ணிற பாறைகளால் சூழ்ந்திருக்கும். ஆங்காங்கே புதுமையான வகையில் வெடிப்பில் உருவான சிறு சிறு பிளவுகள். அவற்றுக்குக் ‘கதவுகள்’  என்று பெயடரிட்டிருக்கிறார்கள்.  செங்குத்தான பாறைகளில் ஒன்று மிகப்பெரியது, கடல் நீருக்குள், ஒரு பக்கம் தன்னுடைய பிரம்மாண்டமான காலை நீட்டிக் கிடத்தியதுபோலவும்,எதிர்பக்கம் மற்றொரு காலை, குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பது போலவும் தோற்றம் தரும் ; கடற்கரையெங்கும் பெண்கள் திரண்டிருப்பார்கள், சிறு நாக்குகள்போல பரவிக்கிடக்கும் கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையில், பாறைகளுக்கிடையில் பெண்கள் குவிந்திருக்கும் காட்சி ஜொலிக்கும் வெள்ளாடைகளால் ஆன தோட்டமோ எனும் வியப்பைத் தரும். போதாதற்கு கடற்கரையும், பச்சை நீல வண்ணங்கள் கலவையிலான   கடல் நீரும், நிழலுக்கென விரித்திருந்த விதவிதமான குடைகளில் முழுவீரியத்துடன் காய்கிற சூரியனும் கண்களுக்கு விருந்தென்பதோடு, அக்காட்சி பரவசத்தையும் புன்னகையையும் நமக்கு அளிப்பவை.  கடல் நீருக்கு எதிரே  அமரலாமென்று செல்கிறோம். நீராடும் பெண்களைப் பார்க்கிறோம்.  சிலர் நீரை நோக்கிச் செல்கிறார்கள், பெரிய அலைகளைத் தவிர்த்துவிட்டு சிற்றலைகளின் நுரை விளிம்பை நெருங்குகையில், தங்கள் உடலைச் சுற்றியிருந்த மெல்லிய பருத்தித் துவாலையை  ஒயிலாக அவிழ்த்து எறிகிறார்கள். நீருக்குள் அடியெடுத்துவைப்பதில் பதற்றம் தெரிகிறது, தவிர நீரின் குளிர்ச்சி தரும்  சுகமான சிலிர்ப்பும், கணநேர சுவாச நெருக்கடியும் சிற்சில சமயங்களில் அவர்கள் தயக்கத்திற்கு காரணமாகின்றன.

கடல் நீராடலின் இச்சோதனையில், வீழ்பவர்களே அதிகம்.  கெண்டைக்கால் தசைப்பகுதியிலிருந்து மார்புவரை அதனை அவதானித்து தீர்மானிக்க முடியும். என்னதான்  மென்மையான  சரீரங்களுக்கு கடல் நீர் ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்ப்பென்கிற போதும் நீராட விரும்பாமல் கரைக்குத் திரும்புவதென்பது ஒரு சிலரின் பலவீனத்தையே காட்டுகிறது.  அந்த இளம் பெண்ணைக் முதன்முறையாகப் பார்த்தகணத்திலேயே  மனதில் பரவசம், ஒருவித மயக்கம். கடல் நீரின் சோதனைக்கு அவள் தாக்குப் பிடித்தாள், உறுதியாக நின்றாள். தவிர சிலரின் தோற்றங்களுக்கென்று ஒருவித வசீகரம் உள்ளது, அது கணத்தில் நமக்குள் நுழைந்து, எங்கும் பரவி நிரம்பும். நாம் எந்தப்பெண்ணைக் காதலிக்கப் பிறந்தோமோ அவளே நமக்கு அறிமுகமாகிறாள் என்பதென் கருத்து. இவ் உணர்வு தோன்றிய மறுகணம் உடலில் ஒரு சிலிர்ப்பு.

என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். முதன் முறையாக பெண்ணொருத்தியின் பிடிமானத்தில்சிக்குண்டது அப்போதுதான். எனது இதயத்தை  சூறையாடியிருந்தாள் கபளீகரம் செய்திருந்தாள்.  இப்படி ஒரு பெண்ணின் ஆதிக்கத்திற்கு அடிபணியும் அனுபவம் என்னை பயமுறுத்தியது என்கிறபோதும் அது இனிமையானது. கிட்டத்தட்ட ஒரு வகையில் சித்திரவதை,  அதே நேரத்தில், நம்பமுடியாத வகையில் மகிழ்ச்சி. அவள் பார்வை, புன்னகை, காற்றில் எழுந்தடங்கும் அவள் புறங்கழுத்து தலைமயிர், முகத்தில் காண்கிற மெல்லிய கோடுகள், முகக்கூறின் எந்த ஒரு சிறிய மெலிதான  அசைவும் என்னை மகிழ்வித்தன, புரட்டிப்போட்டன, பைத்தியமாக்கின. அவளுடைய தனித்தன்மையும், முகபாவமும், சமிக்கையும், செயல்பாடுகளும் என்னை ஆட்கொண்டிருந்தன, ஏன் உடைகளும், அணிகலன்களுங்கூட  என்னை வசியம் செய்திருந்தன. மரத்தளவாடத்தின் மீது கிடந்த அவளுடைய முகத்திரையையும், ஒரு நாற்காலியில் வீசப்பட்டிருந்த அவள் கையுறைகளையும்கண்டு  என் மனம் சலனப்பட்டிருக்கிறது. அவளுடையை ஆடைகளைப்போல  உடுத்தவேண்டுமென  எந்தப் பெண்ணாவது முயற்சித்தால்  அவளுக்குத் தோல்வி நிச்சயம் என நான் நினைப்பேன்.  விதவிதமான தொப்பிகள் அவளிடமிருந்தன, அவற்றைப் பிறபெண்களிடம் கண்டதில்லை.

அவள் திருமணமானவள், கணவன் வார இறுதியில் மட்டும் வீட்டிற்கு வருவான், என்னைக்கண்டும் காணாமலிருந்தான். எனக்கு அம்மனிதனிடத்தில் பொறாமையில்லை, அதற்கான பதிலும் என்னிடத்தில் இல்லை. மிக் கேவலமான ஓரு பிறவி,  சிறிதளவும் பொருட்படுத்தவேண்டிய மனிதனே அல்ல. அப்படியொரு மனிதனை என் வாழ்நாளில் அதற்கு முன் சந்தித்த தில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அவளைத்தான் நான் எப்படி நேசித்தேன்! அவள்தான் எவ்வளவு அழகு, எத்தனை நேர்த்தி, இளமை! அதாவது அவளே இளமையும், வனப்பும், புத்துணர்ச்சியுமாக இருந்தாள். பெண்ணென்றாலே அழகானவள், மென்மையானவள், தனித்தவள், வசீகரமும் கருணையும் ஒரு சேர உருப்பெற்றவள் என்றுணர்த்தியதும் அவள்தான், முன்னெப்போதும் அப்படியொரு எண்ணம் உதித்ததில்லை. தவிர கன்னங்களின் வளைவிலும், உதட்டின் அசைவிலும்,  சிறிய காதுகளின் வட்டமான மடிப்புகளிலும், மூக்கெஎன்று நாம் அழைக்கும்  இந்த கவர்ச்சியற்ற உறுப்பின் வடிவத்திலும்  என்னை மயக்கும் அழகு இருக்கிறதென்று ஒருபோதும் நான்புரிந்து கொண்டதில்லை.

இது மூன்று மாதங்கள் நீடித்தது, பின்னர் நான் அமெரிக்காவிற்கு புறப்பட்டேன், என் இதயமோ விரக்தி காரணமாக  நொறுங்கிப்போனது. இருந்தபோதும், அவளைப்பற்றிய நினைவுகள் உறுதியாகவும், வெற்றிக்களிப்புடனும் என்னுள் இருந்தன, அருகில் இருக்கையில் என்னை தன் வசம் எப்படி வைத்திருந்தாளோ அதுபோலவே நான் வெகு தூரத்திலிருந்தபோதும் என்னை  தன்வசம் வைத்திருந்தாள். வருடங்கள் கடந்தன.  அவளை மறந்தவனில்லை. அவளுடைய வசீகரமான உருவம் என் கண்ணெதிரிலும், இதயத்திலும் குடிகொண்டிருந்தது. என்னுடைய காதல் உண்மையாக இருந்தது, ஒருவகையில்  ஆரவாரமற்ற அன்பு. இன்றைக்கு அது   நான் சந்தித்த மிக நேர்த்தியானதும் கவர்ச்சியும் மிக்க  ஒன்றின் நினைவுப்பொருள்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் பன்னிரெண்டு வருடங்கள் என்பது  மிகவும் சொற்பம்! எப்படி போனதென்றே நமக்குத் தெரியாது! ஒன்றன் பின் ஒன்றாகச் வருடங்கள் உருண்டோடுகின்றன, அமைதியாகவும் வேகமாகவும், மெதுவாகவும், அவசரமாகவும், ஒவ்வொன்றும் நீண்டதென்கிறபோதும், கணத்தில் முடிந்துவிடும்!   வருடங்களின் எண்ணிக்கை வெகுசீக்கிரத்தில்  அதிகரித்துவிடும், அவை விட்டுச் செல்லும் தடயங்களும் மிகவும் சொற்பம். காலம் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்க, அங்கே ஒன்றுமிருக்காது, அவை முற்றாகத் தொலைந்திருக்கும், நமக்கு முதுமையை வருடங்கள் எப்படித் தந்தன என்பதையே  புரிந்துகொள்ள முடியாது.

கூழாங்கற்கள் நிறைந்த ஏத்ருதா(Étretatetat)கடற்கரையில் கழித்த அந்த அழகான காலத்தை விட்டு விலகி சில மாதங்களே ஆகியிருந்தனபோல எனக்குத் தோன்றியது.

கடந்த வசந்த காலத்தில் நண்பர்களுடன் விருந்துண்ண  மெய்சோன்-லாஃபித்(Maisons-Laffitte)வரை செல்லவேண்டியிருந்தது.

இரயில் புறப்படவிருந்த நேரத்தில், கனத்த சரீரம்கொண்ட  பெண்மணி,  நான்கு சிறுமிகளுடன் எனது பெட்டியில்  ஏறினார். ஓரிரு நொடிகள் கவனம் அவரிடம் சென்றது: நல்ல அகலம், கையெது காலெது என்று சொல்லமுடியாத அளவிற்கு பருமன், முழு நிலவை யொத்த பெரிய  முகத்திற்குப் பொருத்தமாக ரிப்பன் கட்டியத் தொப்பி, தலையில். வேகமாக நடந்துவந்திருக்கவேண்டும் மூச்சிரைத்தது, குழந்தைகள் சளசளவென்று பேச ஆரம்பித்தனர். நான் தினசரியைப் பிரித்து வாசிக்கத் தொடங்கினேன்.

எங்கள் இரயில் அனியேர்(Asnières) நிலையத்தைக் கடந்திருக்கும், என் பக்கத்து இருக்கைப் பெண்மணி   திடீரென்று என்னிடம் :

–மன்னிக்கவும், நீங்கள் மிஸியெ கர்னியெ தானே? எனக்கேட்டாள்.

–  ஆமாங்க…நீங்க?

என்று நான் இழுக்க கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள். அது துணிச்சலான பெண்களுக்கே உரிய சிரிப்பு என்கிறபோதும், சிறிது வருத்தம் தோய்ந்திருந்தது. 

– உங்களுக்கு என்னைத் தெரியவில்லை?

அந்த முகத்தை நான் எங்கோ பார்த்திருக்கிறேன் என்பது உண்மை, ஆனால் எங்கே ? எப்போது ? என்கிற கேள்விகள் இருந்ததால் பதிலளிக்கத் தயங்கினேன்.

— ம்… என்ன சொல்ல … உங்களை அறிந்திருக்கிறேன் என்பது  நிச்சயம், ஆனால் பெயரை நினைவு கூர இயலவில்லை.

பெண்மணியின் முகம் வெட்கத்தால் சிறிது சிவந்தது.

–  நான் மதாம் ழூலி  லெஃபேவ்ரு.

முகத்தில் அறைந்ததுபோல இருந்தது, இதற்கு முன்பு அப்படியொரு அனுபவமில்லை. ஒரு நொடியில் எனக்கு எல்லாம் முடிந்துவிட்டதென தோன்றியது. என் கண்களுக்கு முன்பாக முகத்திரையொன்று கிழிந்தது போலவும் கொடுமையான, மனதுக்கு ஒவ்வாத செய்திகளை   அறியப்போவதாகவும் உணர்ந்தேன்.

அவளா இவள்! பருமனான இந்தச் சராசரி பெண்மணி, அவளா? நான் கடைசியாக பார்த்தபிறகு இந்த நான்கு  பெண்களைப் பெற்றிருக்கிறாள். இந்த நான்கு சிறு ஜீவன்கள்  தங்கள் தாயைப் போலவே என்னை அன்று ஆச்சரியப்படுத்தின. அவர்கள் அவள் வயிற்றில் பிறந்தவர்கள்; நன்கு வளர்ந்தும் இருந்தார்கள், வாழ்க்கையில் அவர்களுக்கென்று விதிக்கபட்ட இடத்தையும் பிடித்தாயிற்று. மாறாக எழிலும், நேர்த்தியும், பகட்டுமாக இருந்த அற்புதப் பெண்மணியின் கதை முடிந்திருந்தது, நேற்றுதான் முதன்முறையாக அவளைச் சந்தித்தது போல் இருக்கிறது, இதற்குள் இப்படியொருமாற்றம்.  இது சாத்தியமா? கடுமையான வலியொன்றை இதயத்தில் உணர்ந்தேன், அவ்வலியை   கொடூரமானதொரு படைப்பை, இழிவானதொரு அழிவைக் கண்முன்னே நிறுத்திய இயற்கைக்கு எதிரானதொரு கிளர்ச்சி அல்லது பகுத்தறியப்போதாத ஒரு கோபம் எனவும் எடுத்துக்கொள்ளலாம்.

அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தேன். அவளுடைய கைகளைப் பற்றினேன்.  என் கண்களில்  நீர்கோர்த்தது. அவளுடைய இளமைக்காகவும், அதன் மரணத்திற்காவும்  அழுதேன், காரணம் என்னைப் பொறுத்தவரை கனத்த சரீரத்திற்குரிய பெண்ணை நான் அறிந்தவனில்லை.

அவளிடமும் சலனம் தெரிந்தது,  தடுமாற்றத்துடன் வார்த்தைகள் வெளிப்பட்டன:

“நான் நிறைய மாறிஇருக்கிறேன், இல்லையா? என்ன செய்வது, நமக்காக எதுவும் காத்திருப்பதில்லை. நீங்கள்தான் பார்க்கிறீர்களே, இன்று நானொரு தாய், அதாவது தாய்மட்டுமே ;  ஆம் நல்ல தாயாக இருக்கிறேன், பிறவற்றுக்கெல்லாம் பிரியாவிடை கொடுத்தாயிற்று,  எல்லாம்  முடிந்தது.  உண்மையில் நாம் மறுபடியும் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் என்னை அடையாளம் காண்பது கடினம் என்றுதான்  நினைத்திருந்தேன். நீங்கள் மட்டும் என்ன, அன்றிருந்தது போலவா இருக்கிறீர்கள், நிறைய மாற்றம் ;  தவறுதலாக எதையும் சொல்லிவிடக்கூடாது என உறுதிபடுத்திக்கொண்டு உங்களிடம் பேச எனக்கும் சிறிது நேரம் பிடித்தது. தலை, முகம் அனைத்திலும் நரை தெரிகிறது . யோசித்துப்பாருங்கள், பன்னிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன! பன்னிரண்டு ஆண்டுகள்! என் மூத்த மகளுக்கு தற்போது பத்து வயது.

அவள் மகளைப் பார்த்தேன். தாயின் முந்தைய  அழகை சிறுமியிடம் கண்டேன், இருந்தும் அவ்வுருவில்   முழுமையில்லை, சில முடிவு செய்யப்படாமலும், அடுத்து நிகழலாம் என்பதுபோலவும் எனக்குத் தோன்றியது. வாழ்க்கையை அன்று வேகமாகக் கடந்து செல்லும் இரயிலாகத்தான் கண்டேன்.

மெய்சோன் லாஃபித் நிலையத்தில் இரயில் நின்றது. என்னுடைய அந்த நாள் தோழியின் கையில் மெல்ல முத்தமிட்டேன். மனம் உடைந்திருந்ததால்,  அசட்டுத்தனமான சில உளறல்கள் அன்றி பெண்மணியிடம் சொல்லிக் கொள்ள  அன்று என்னிடம் வார்த்தைகளில்லை.  

மாலை, தனித்து என் வீட்டில், கண்ணாடி முன் நின்றவன் அகலவேயில்லை, நீண்டநேரமாக என்னை நானே பார்த்துக்கொண்டிருந்தேன். இறுதியில் இளமை பூரித்த எனது உடலும் முகமும்,  பழுப்பு மீசையும், கருத்த தலை முடியும்  மனதில் நிழலாடின.  தற்போது நான் முதியவன், அனைத்திடமிருந்தும் விடைபெற்றாயிற்று.

—————————————————-

ஆப்பரேஷன் மகா சங்காரம்

( 2010 ல் வெளிவந்த சிரிக்கிற ரோபோவையும் நம்பக்கூடாது என்ற அறிவியல் புனைகதை தொகுப்பிலிருந்து)

நீங்க எப்படிப் பட்டவர்? ரோம் பத்தி எரிஞ்சதுக்கோ, காவிரிப்பூம் பட்டினம் கடலில் மூழ்கிப்போனதற்கோ, நாசகாகி வெந்து துடித்ததற்கோ அல்லது அதற்கும் முன்னாலே இலெமூரியாக் கண்டம் துண்டாடப்பட்டதற்கோ வருந்தும் ரகமா அப்படியானால் உங்களால் உதவ முடியும். இந்தப் பூமியைக் காப்பாற்றமுடியும்.

வரவிருக்கும் ஆபத்து இங்கே மேலே குறிப்பிட்ட அல்லது சொல்ல மறந்த எல்லாத்துக்கும் பெருசு, ரொம்ப பெருசு. எதிரிகள்- அந்நிய மனிதர்கள்-உறவுகள் உயிர்களுக்கு மட்டுமல்ல, விலை மதிக்க முடியாத உங்கள் உயிருக்குங்கூட ஆபத்து காத்திருக்கிறது. அபிஷேக ஆராதனை, மெழுகுவர்த்தி பிரார்த்தனை, ஐந்து வேளை தொழுகைங்கிற வழக்கமான உத்திகள், உங்களை இந்தப் பேரழிவிலிருந்து காப்பாற்றிவிடாது. ஓடியாகணும். ஓடி, சம்பந்தப்பட்டவங்களுக்கு நிலைமையை நீங்க புரியவைக்கணும். போர்க்கால அவசரத்துடன் செயல்பட்டாகணும்.

இச்செய்தியின்மீது  உங்களுக்குள்ள நம்பகத்தன்மையின் சதவீதம் எவ்வளவு என்பதனை என்னாலே ஊகிக்க முடியலை. முடிந்தமட்டும் உங்கள் அவநம்பிக்கையை குறைக்கின்ற வகையில் பிரச்சினையைத் தெளிவாகவும் ஆனால் எனக்கிருக்கும் ஆபத்து காரணமாகச் சுருக்கமாகவும் சொல்லப் பார்க்க்¢றேன். எதற்கும் நீங்களும் ஒருமுறை இதனை வாசிப்பதற்கு முன்னால் பாதுகாப்பான இடத்தினை தேர்வு செய்துகொண்டு வாசித்தல் நலம். அமெரிக்காவென்றால் உயர்ந்த கட்டிடங்களையும், இஸ்ரேலென்றால் பேருந்துகளையும், அரபு நாடுகளென்றால் திறந்த வெளிகளையும், இந்தியாவென்றால் காவல் நிலையங்களையும் தவிர்க்கவும்.

எம்பேரு ஆ.லெ. வள்ளியப்பன். அதாவது ஆத்தங்குடி லெட்சுமண செட்டியார் (அப்பா பிறந்தது நாகர்கோவிலென்பதால் ‘ல’, ‘லெ’ யாகி விட்டது) சீமந்த புத்திரன் வள்ளியப்பன். வான சாஸ்திரத்தையும், உதவிக்கு கணினி அறிவையும் 3:1 என்ற விகிதாச்சாரத்தில் மூளையில திணிச்சுக்கிட்டவன். அப்பா கொடுக்கும் பாக்கெட் மணியில் பகலானால் ஆஸ்திரேலியா, ஐரோப்பா என அலைஞ்சுட்டு ராத்திரியானா வாலிபவயது உடல் உபாதைகளுக்காக யூதரினத்து வெள்ளைக்கிளி நீல் எத்ரியாவை கணினியிலிருந்து நிழலாக வரவழைச்சு, அவளோட இல்லை அதோட கெட்ட காரியங்களை செஞ்சிகிட்டிருந்தேன்(ஒரு காதற் குறிப்பு: கொஞ்சலுக்கு ஹீப்ரு மொழி உகந்ததல்ல).

கேனையன், பின்னால் இந்தப் பெண்ணால் எனக்கும் உங்களுக்கும் ஏற்படவிருந்த ஆபத்தைப் பற்றி அறிந்துணரும் விவஸ்தையில்லாமலேயே, கேப்பையில் நெய்வடிகிறதென்று நம்பிக் கொண்டிருந்திருக்கிறேன். அப்பா சொன்னபடி என் மாமாவின் ஏகபுத்திரி ஆவுடை நாயகியைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு அவளது தகப்பனார் பதிப்பகத்தில் “காற்றில் தண்ணீர் பிடிப்பதெப்படி”, “கழுதையை குதிரையாக்குவதெப்படி” மாதிரியான புத்தகங்களைப் பதிப்பித்து நாலு காசு பார்த்திருக்கலாம். எல்லாம் விதி. கடந்த பத்து வருடமா நீல் எத்ரியாவின் மாய வலையில் விழுந்து, இன்றைக்கு ஏதோவொரு கிரகத்தின், பேர்வைக்காத கோளொன்றில் சிக்கித் தவிக்கிறேன்.

நீல் எத்ரியாவுடன் எனக்கேற்பட்ட சிநேகிதம் எப்போதுண்ணு நாள் கிழமையோட ஞாபகத்திலில்லை. ஆனால் சூரக்குடிச் சந்தைக்குப் போயிருந்த அப்பா மென்பொருள் செயலியொன்றை வாங்கி வந்திருந்த அன்று ஆரம்பித்தது என்பது மட்டும் உறுதி. அப்பா வாங்கி வந்திருந்த செயலியைக் கணினியில் இணைத்தவன், விசைபட்டனை அழுத்திவிட்டுக் கைகள் துறுதுறுக்கக் காத்திருந்தேன். திரை விழித்துக்கொண்டது, அங்கேயிங்கேயென்று அலறியடித்துக் கொண்டோடி ராம், ரோம் என இருக்கின்ற கணினியின் நினைவு எல்லைகளை ‘பிட்’ பிட்டாக மிதித்துத் திரும்பி அப்பாடா என்று பெருமூச்சுவிட்டுக் கொண்டு நிற்கின்றது. திரைக்குள் முப்பரிமாண முகமொன்று தோன்றுகிறது. ஒட்டிக்கொண்டிருக்கும் உதடுகள் மேலும் கீழும் முன்னும் பின்னுமாய் அசைய, எச்சிலில்லாத வார்த்தைகள் வந்து விழுகின்றன.

“வணக்கம் டியர்! உனக்கு அலாவுதீனும் அற்புதவிளக்கும் கதை தெரியுமா? இன்றைய தினத்திலிருந்து, நீயுமோர் அளவான அதிகாரங்களுள்ள அலாவுதீன். உன்னுடைய ஏவல்களை நிறைவேற்றவென்று ஏற்படுத்தப்பட்டுள்ள பைனரி(Binary) பூதம் நான். வேண்டுமென்றால் உன்னுடைய விருப்பத்திற்கேற்ப என்னை உருமாற்றம் செய்து கொள்ளலாம். விரும்பிய பேரால் அழைக்கலாம், வேண்டியதைக் கேட்டுப்பெறலாம்” என்று சொற்களால் தூண்டில் போட, சனி பிடித்தது.

ஆவுடை நாயகி மீதிருந்த கசப்பில், உலக அழகிகளைப் பக்க வரிசையில் கணினியில் நிறுத்தி, பிடித்த உடற்பாகங்களை இரவல் பெற்று முப்பரிமான நிழலுக்குக் கொடுத்து, நடக்கவிட்டுக் கீழே பார்த்ததில்… (வேண்டாம் அதையெல்லாம் இங்கே சொல்லுவது நாகரீகமாகாது) அமெரிக்க இணைய தளங்களைத் தேட கிடைத்த பெயர் ‘எத்ரியா’. இந்த யூதபெயருக்குப் ‘பலமானவள்’ என்பதாய் அர்த்தமாம். ‘நீல்’ எனது விருப்பத்தின் பேரில் ஒட்டிக்கொண்ட அவளது ‘கற்பனைத் தகப்பன்’ பெயர். வாய் கொள்ள ‘நீல் எத்ரியா’ என்று அழைத்தேன். புகை மண்டலத்தை எழுப்பிக்கொண்டு என்னருகில் வந்து நின்றாள்.

“டியர்!.. இனிமே நான் உங்கள் நிரந்தர அடிமை”, காதருகே கிசுகிசுக்கிராள். அவள் கையைப்பிடித்துக்கொண்டு, கிரகங்கள்தோறும் நானுனக்கு அடிமை என்கிறேன். அவள் சிரிக்கிறாள். எத்ரியாவின் பணிகளை இன்னதென்று திட்டவட்டமாக சொல்ல முடியாது. மின்னஞ்சல்களுக்குப் பதில்கள் எழுதுவது, கோப்புகளை வரிசை படுத்துவது -நிராகரிப்பது-அழிப்பது, பைரவி ராகத்துலே பாம்பே ஜெயஸ்ரீ குரலில்’மனதில் உறுதிவேண்டும்’ என்பது, சாப்பிடவைப்பது, தூங்க வைப்பது, டாய்லெட் பேப்பரை உபயோகித்து என்…பதென்று நிறைய வினைச் சொற்களை எனது மனதைப் படித்து, அவள் விரையம் செய்ததில் அவளில்லாமல் ஆ.லெ. வள்ளியப்பனில்லை என்றாகிவிட்டேன்.

ஒருநாள் கொஞ்சம் அதிகப்படியான மையலில் பிதற்றிக்கொண்டிருக்கிறேன். அவள் எனது காதினை மெல்லக் கடித்துவிட்டு, “வள்ளியப்பன் நமக்கு அதிஷ்டம் வந்திருக்கிறது” என்றாள்.

“எப்படி?”ன்னு கேட்கிறேன்.

“எங்க ஆட்களுக்கொரு சா·ப்ட்வேர் நாம எழுதணும். அப்படி எழுதினா எங்களுக்கும் இலாபம். உங்களுக்கும் இலாபம். என்ன சொல்றீங்க?

“எத்ரியா.. என்னிடம் நிக்கோலஸ் கோபர்னிகஸ் குறித்து கேளு. கிரகங்களின் எண்ணிக்கையைக் கேளு. அவற்றின் வழித்தடங்களைக் கேளு. அந்தக் கிரகங்களுக்குள்ள வெப்பத் தன்மையையும் அவற்றுக்கான வண்ணங்களையும் கேளு. கிரகங்களுக்கிடையே உள்ள தூரத்தை வானியல் அளவில் கேளு. அதைவிடுத்து சா·ப்ட்வேர் எழுதணும்னு சொல்ற. ஏதோ மீயுரை(HTML) குறியீட்டில் சில வரிகள் எழுதுவேன். அதை வச்சு பெருசா எதையாவது கனவு காணாதே. சத்தியமா சொல்றேன். சா·ப்ட்வேர் பற்றி எனக்கு ஒரு மசுரும் தெரியாது.”

“பயப்படாதே. உன்னோட வான சாஸ்திர அறிவுதான் எங்களுக்கு வேணும். மற்றபடி சா·ப்ட்வேர் எப்படி எழுதணுகிறதை நான் வழி நடத்துவேன். இதை மட்டும் நீ எழுதிமுடிக்க உதவுவாயென்றால் உனக்குப் பெரிய புதையல் காத்திருக்கிறது.

“என்ன அது? இந்தியாவைத் தூக்கி என்கையில் கொடுக்கப் போகிறீர்களா?”

“இல்லை எத்ரியாவை, உனக்கே உனக்கென்று கொடுக்கப் போகிறார்கள்”

“எனக்குப் புரியலை”

“உன்னுதவியால் எழுதப்படவிருக்கும் மென்பொருள் செயலி எங்கள் எதிர்பார்ப்பின்படி அமையுமானால், இனி ந, இந்த முப்பரிமாண எத்ரியாவுடன் கொஞ்ச வேண்டிய அவசியமில்லை. அசலான எத்ரியாவுடனேயே காதல் செய்யலாம். நான் சொல்வதெல்லாம் சத்தியம். ஏதாவதொரு கோளில், கோட்டையை எழுப்புவோம். அங்கே நமக்கென்ற தொரு அரண்மணை, உப்பரிகை, நந்தவனம், அந்தபுரம், சப்பிரமஞ்சம், ஓய்வு நேரங்களில்புஷ்பக விமானம் என்று ஏற்பாடு செய்துகொண்டு தேவையான எண்ணிக்கையில் பிள்ளைகள் பெற்று நம்முடைய இனத்தை விருத்தி செய்வோம் சம்மதமா?”

“மூட்டை மூட்டையாய் சம்மதம். எப்போ புறப்படலாம்?”

“இப்போதில்லை. நாளைக்குக் காலையில் பயணம். பூலோகத்திலிருந்து புவர்லோகம் போகணும். வழியில் மூணு அல்லது நான்கு கிரகங்களில் தங்க வேண்டியிருக்கும்.”

“எதிரியா சொன்னதுபோலவே, வழியில் இரண்டொரு கிரகத்தில் தங்கி எங்கள் வாகனத்திற்கு எரிசக்தியை நிரப்பிக்கொண்டு, அவள் குறிப்பிட்டிருந்த புவர்லோகத்துக் கோளொன்றில் எழுப்பியிருந்த அந்தக் கம்ப்யூட்டர் சா·ப்ட்வேர் கம்பெனியை அடைய ஒரு மாதம் பிடித்திருந்தது.

முதலிரண்டு கிழமைகளும் வேலைகளேது மில்லாமல் கேப்ஸ்யூல்களை விழுங்கிக்கொண்டு அத்தியாவசியமான கடன்களின் நிர்ப்பந்தமின்றி இருந்தேன். ஆனால் நாட்கள் ஆக ஆக எத்ரியாவைக் காணாமல் நான் தவிக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் ராஜாக்களுக்கான உடை அலங்காரத்துடன் அசப்பில் என் மாமா மாதிரியான ஒருவன்  தானழைத்துவந்த பெண்மணியை லாபியில் உட்காரவைத்துவிட்டு எனது பக்கத்து ஆசாமியிடம், வெகுநேரம் பேசிவிட்டுப் போனான்.  எனக்கு என் மாமாதான் மோப்பம் பிடித்து ஆவுடை நாயகியை இவ்வளவுதூரம் அழைத்து வந்திருப்பாரோ என்ற சந்தேகம். அந்தப் பெண்மணியைப் பார்க்க லட்சணமாகயிருக்க சந்தேகம் தீர்ந்தது. ஆனாலும் வந்த நபரை யாரென்று அறிந்து கொள்ளும் ஆவலில் பக்கத்து ஆசாமியிடம் கேட்டுவிட்டேன்.

“யார் இந்த ஆள்? ஏதோ நாடகத்திலிருந்து மேக்கப் கலைக்காமல் வந்தவன் மாதிரி இருக்கிறானே? அவனுக்கு இங்கென்ன வேலை?”

“மெல்லப்பேசு. நாடகத்து ராஜாயில்லே. நிஜராஜா. இலங்கை ராச்சியத்தின் அதிபதி. பேரு இராவணன். அவன் இந்தியாவைச்சேர்ந்த அயோத்தி மன்னன் ராமனின் மனைவியான சீதையைக் கடத்தியிருப்பவன். இலங்கைக்குத் திரும்பற வழியிலே இங்கு வந்திருக்கிறான்.”

“என்னவாம்?”

“அனுமன் சீதையைத் தேடிகொண்டு இலங்கைக்கு வருகிற பாதையை மாத்தணுமாம்”

“முடியுமா?”

“அடடே! உனக்கு நம்ம கம்பெனியின் பிராஜெக்ட் பற்றி எதுவும் தெரியாதா? இன்றைக்கு மதியம் இரண்டு மணிக்கு நம்ம பிராஜக்ட் லீடர் மிஸ்டர் சாரங்கன் இங்கே வரார். அவர் விளக்கமாச் சொல்வார். பிரம்ம லோகத்துலே வேலை பார்த்தவரை நம்ம கம்பெனிதான் எத்ரியா டெக்னிக்கைப் பயன்படுத்தி இங்கே அழைச்சுவந்தது.”

“எத்ரியா டெக்னிக்கா?”

“ஆமாம் உன்னையும் என்னையும் அழைத்துவர உபயோகப்படுத்திய தந்திரம். மிஸ்டர் சாரங்கன் இங்கே வந்து சேர்ந்ததும் அப்படித்தான்.”

” ஆனா எத்ரியா என்ற பேரு நான் வச்சதுதானே?”

“இல்லை! அப்படி உன்னை நம்ப வச்சிருக்காங்க. நடந்ததெல்லாம் ஆப்பரேஷன் மகா சங்காரத்தின் முதற்படி. இரண்டு மணிக்கு எத்ரியா பிராஜக்ட் லீடரோட வருவா. எல்லாம் தெரியவரும் அதுவரை அமைதியாயிரு. “

பகல் இரண்டுமணிக்கு பக்கத்து ஆசாமி சொன்னதுபோல எத்ரியா வந்தாள். அவளோடு உச்சித் தலை குடுமியும், நெற்றியில் திருநீறும், மார்பில் முப்புரியும், இடுப்பில் தார்பாய்ச்சிக் கட்டிய வேட்டியுமாக ஒரு மனிதர்.

“மிஸ்டர் வள்ளியப்பன்! மீட் மிஸ்டர் சாரங்கன். நம்ம பிராஜெக்ட் லீடர்.” மூவரும் மாற்றி மாற்றிக் கை குலுக்கிக்கொண்டு அறிமுகம் முடிந்தபின் நாற்காலியில் அம்ர்ந்தோம்;

“வள்ளியப்பன் நேரடியாக விஷயத்துக்கு வறேன்; இந்த பிராஜக்டுக்குப்பேரு ‘ஆப்பரேஷன் மகா சங்காரம்’. இந்த யூ.ஸ்.பி. கியில் உள்ள தகவல்களைப் பிரம்மலோகத்திலிருந்து தந்திரமாக கொண்டுவந்திருக்கோம். இந்தக் கோப்பிலே உள்ளபடிதான் ‘உலகத்தில் நடந்ததும் நடக்கவிருப்பதும்’ என்று நம்பப்படுகிறது. இதைத்தான் நாம மாற்றி எழுதணும். அப்படி மாற்றி எழுதமுடியும்னா, நம்ம கம்பெனி எம்.டி.தான் அடுத்த பிரம்மா. எப்படிங்கிற சந்தேகமெல்லாம் வேண்டாம். முடியும் நம்மால் முடியும். கிரகங்களின் பாதையை மாற்ற முடியும்னா உலகத்தின் தலையெழுத்தையும் மாற்ற முடியும்னு நம்பறோம். இதற்கொரு சா·ப்ட்வேர் நாம் எழுதப்போறோம். அதன் மூலமா கிரகங்களின் பாதையை மாற்றுவதென்று தீர்மானிச்சுருக்கோம்.

“புரியலை?”

“இந்த உலகம் பூகம்பம், புயல், கடல் கொந்தளிப்பால் சிறு அழிவுகளைச் சந்தித்து அழிந்தும் தோன்றியும் வருகிறதென்று சொல்லப்படுகிறது. ஆனால் உலகமனைத்தும் ஒரே காலத்தில் அழியுமென்றால் அதற்கு மகா சங்காரம் என்று பெயர். அதற்கான ஏற்பாடுகளைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். அதற்குப் பிறகு நம்ம பிரம்மா உருவாக்குகிற உலகில் குறையற்ற மனிதர்கள் தர்ம ஆத்மாக்கள் மாத்திரமே ஜனிப்பார்கள்.”

” அய்யய்யோ … அப்படியானால் மகா சங்காரத்தின்போது அழிவு எல்லா உயிர்களுக்குந்தானே?”

“அப்படியில்லை. மகா சங்காரத்தின் முடிவில் மாயையில் இறைவன் ஒடுங்குகிறான். பிரம்மனுக்கு அழிவில்லை. அதாவது மகா சங்காரத்தின் கர்த்தராகிய நம்ம எம்.டி.க்கு அழிவில்லை. அழிவின் முடிவில் முதல் ஜனனம் நாமதான். அவரது வார்த்தைகளை பரிபூரணமா நம்பலாம். அதற்கான உத்தரவாதங்களை எனக்குக் கொடுத்திருக்கார். மகாசங்காரத்தை நாம் வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு உலகத்தைத் தயார் செய்யணும். “இதுவரை நடந்ததையும் இனி நடக்கவிருப்பதையும்” புரட்டிப்போடணும்”. வரிசையாக நாம செய்யப்போற காரியங்களையும் வரிசைபடுத்தி உங்களிடம் கொடுத்த யு.எஸ்.பி கீயில் குறிச்சி வச்சிருக்கேன்.  அப்போதுதான் அழிவினை வேகமாக நெருங்கமுடியும். மிஸ்டர் வள்ளியப்பன் மிகவும் ஜாக்கிரதையாக எழுதவேண்டிய செயலி. எங்காவது எசகுபிசகாக நடக்குமானா நம்ம எல்லோரையும் கோளுக்கு வெளியே உதறிவிடுவார்கள். முதலில் நீங்க பிராஜக்டோட மாடலிங் சா·ப்ட்வேரை எழுதுங்க. அதன் பிறகு பிராஜக்ட் உறுப்பினர்கள் கூடி விவாதித்து ஒரு முடிவுக்கு வருவோம். இனி மிஸ் எத்ரியா இந்த நிமிடத்திலிருந்து ஆப்ரேஷன் மகாசங்காரம் சா·ப்ட்வேரை எழுதிமுடிக்கும்வரை உங்களோடுதானிருப்பாள். நான் வரட்டுமா?”

குடுமிக்கார கிழவன் வெளியேறிய அடுத்த சில நிமிடங்களில் எத்ரியா என்பக்கத்திலிருந்தாள்.

“சாரி டியர்! இரண்டு வாரமாக உங்களை ரொம்பவே காயப்போட்டுட்டேன். அதற்குப் பரிகாரமாக ஏதேனும் செஞ்சாகணும். எங்கே வச்சுக்கலாம்?”

“போடி…..எக்குதப்பா ஏதாவது சொல்லிடப்போறன், எனக்கு முதலில்  மூத்திரம்போகணும் என்று கத்திவிட்டு டாய்லெட்டுக்குள் புகுந்துகொண்டேன். பாக்கெட்டிலிருந்த கைகணினியில் யு.எஸ்.பி.கீயை செருகி அவசரகதியில் தரவுகளில், பூமியில் நீங்கள் வாழும் காலத்திற்குப் பொருந்துகின்றத் தகவல்களை மாத்திரம் அனுப்பிக்கொண்டிருக்கீறேன்.

இதுவரை ஆப்பரேஷன் மகா சங்காரத்திற்கு ஆதரவாக இந்தக் கூட்டம் தீர்மானித்திருப்பவை.

75690 நவம்பர் 2002 சீனாவில் சார்ஸ் நோயினைப் பர்வச் செய்தல்…

75689 செப்டம்பர் 6 2002 ஈராக் மீது அமெக்க பிரிட்டிஷ் விமானங்களின் தாக்குதல்…

75688 செப்டம்மர் 11 2001 அன்று  அமெரிக்க இரட்டைகோபுரங்…….

கொரோனா பூனை – நாகரத்தினம் கிருஷ்ணா

வெண் துகில் வெயில் வேய்ந்த  முற் கோடைகாலம். வீட்டுக்கதவை இழுத்துச் சாத்திவிட்டு வெளியில் நின்கிறேன். வளையிலிருந்து வெளிவந்த வயல் எலியின் மனநிலை.  முடங்கிக் கிடந்த உடல் கைகளை அகல விரித்தும், துள்ளுவதுபோல பாவனை செய்தும், சிறு முறுவலுடன் விடுதலைக் கணத்தை ருசித்தது.  தொலைக்காட்சி, கணினி, கைத்தொலைபேசி திரைகளின் பொய்ப்பிம்பங்களில்  அலுப்புற்றிருந்த  விழிகள் ஆர்வத்துடன் அலைபாயத் தொடங்கின.  இயல்பான இருத்தலில் பூமி. ஓசைக்குக் கூட ஊரடங்கோ என சந்தேகிக்க க்கூடிய அமைதி. மனிதர் ஆக்ரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியில் இயற்கை.

கடந்த இரண்டு நாட்களாக மழை..மழை. இன்றுதான் சூரியனைக் கான முடிந்தது. உடுத்திய சாம்பல் நிற மேகத்தை களைந்திருக்கும்  நீலவண்ண ஆகாயம் ;  வேலிக்காக வளர்த்திருந்த செடிகளும், மரங்களும் மாசற்று பளிசென்று இருக்க, கைகள் நீளுமானல் கிள்ளித் தின்னலாம் அப்படியொரு பச்சை. குடியிருப்புகளின் சுவர்கள் கூரைகள் கூட மழை நீரில் அலசப்பட்டு பளிச்சென்று இருந்தன. புற்பூண்டுகளும், செடிகொடிகளும்  பூச்சிகள், புழுக்களுக்கு இசைந்து நெளிகின்றன. இலைகள் குலுங்குவதுபோல அசைய,  காற்றுக் கேசத்தை கலைத்துவிட்டு ஊமையாக கடந்துபோனது.  மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிடப்படாத தொழுவமாடுகள்போல சோர்வுடன் வீதியோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள்.  மரங்கள் உயிர்ப்புடன் நின்றவண்ணம் புரள்போவதுபோல பிரமை. மொசு மொசுவென்று என்கால்களில் ஏதோ உரசியது, பதற்றதுடன் குனிந்தேன் : மியாவ் என்று குரலெழுப்பி விண்ணப்பிக்கும் கண்களுடன்  ஒரு  பூனை. கறுப்பு நிறப் பூனை, ஏர்கனவே அதன் உரிமையாளருடன் பல முறைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்திருக்கிறது. ஆனால் முதன்முறையாக மிக நெருக்கத்தில் பார்க்கிறேன்.

பிராணியின் ஆரோக்கியத்தை, உடல்ரோமங்களின் மினுமினுப்பு உறுதி செய்தது. கரும்பழுப்புக் கண்களில் பளபளப்பு. அருகம்புல் போல பக்கத்திற்கு நான்காக விறைத்திருந்த மீசைமயிரில் கூட வளப்பம் மின்னியது.  அதன் மெல்லிய இலைபோன்ற சிவந்த நா, எந்திரத்தனமாக விநாடிக்கொருமுறை, வெளிப்படுவதும் உதடற்றவாயை ஈரப்படுத்தியபின் தன் இருப்பிடம் திரும்புவதுமாக இருக்க சில கணம் இரசித்தேன். பூனையின் கண்களை இரண்டாவது முறையாகப் பார்க்கிறேன், வெறுமையும் கெஞ்சலும் அப்பி இருக்கின்றன.  இருந்தும், எனது கால்களைத் தனது  முகத்தால் உரசியபின், தம் முன்னிரண்டு கால்களைக் கொண்டு  தெரிவித்த செய்தியை விளங்கிக்கொள்ள பொறுமை இல்லை.  நான் வெளியிற் செல்வதற்கு, என்கைவசமிருந்த படிவம்  அனுமதித்த நேரத்தில், பத்து நிமிடங்கள் ஏற்கனவேசெலவாகிவிட்டன என்பது முதற்காரணம். இரண்டாவது காரணம், பூனை  அண்டைவீட்டுக்காரிக்குச் சொந்தமானது.  பூனையை அலட்சியம் செய்துவிட்டு விடுவிடுவென்று சாலையில் நடக்கத் தொடங்கினேன்.

கடந்த பத்து தினங்களாகவே வீட்டில் அடைத்து வைக்கப் பட்டிருக்கிறோம். கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் இரு  எண்ணிக்கையுமே மளமளவென்று அதிகரிக்க  எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற குழப்பத்தில் நடைமுறை வாழ்க்கையை, முற்றாக அரசாங்கம் முடக்கிவிட்ட து. உரிய காரணங்களின்றி வெளியிற் செல்ல அனுமதி இல்லை. அவசியம் இருப்பின் முகவரியுடன் கூடிய படிவத்தை நிரப்பி அதில்  நாள், வெளியிற் செல்லத் தொடங்கும் நேரம், அதற்கான காரணம் மூன்றையும் குறிப்பிடவேண்டும். இன்றைக்குப் பேரங்காடிக்குச் சென்று அத்த்யாவசியப் பொருட்கள் சிலவற்றை வாங்கவேண்டிய நெருக்கடி. அதற்காக வெளியில் வந்தபோதுதான் கதவருகில் அண்டைவீட்டுப் பெண்மணியின் பூனை தரிசனம்.

இந்தியப் பிறப்பும் வளர்ப்பும் சோற்றைத் தின்று பசியாறும் வழக்கத்திலிருந்து என்னை விடுவிக்காததைப்போலவே சில பண்பாடுகளிடமிருந்தும் என்னை விடுவிக்காமல் சிறைவைத்திருக்கிறது. தந்தையை ; வயதில் மூத்தவரை, நண்பர்களைக்கூட ஒருமையில் அழைப்பது நம்முடைய  வழக்கமில்லை, ஐரோப்பியருக்கு அது சரி. அது போலத்தான் எனது அண்டைவீட்டுக்காரியுடனான எனது இன்னொரு பிரச்சனையும். பெண்மணியின் குடியிருப்புக்கு அருகில்  எனது மனைவி பிள்ளைகளுடன்  வசிக்க நேர்ந்தபோது எனக்கு வயது 30. இன்று ஐம்பத்திரண்டு. எப்போது முதன் முதலாக இருவரும் ஒருவரை மற்றவர் கடந்து செல்ல நேர்ந்திருக்கும்  என்பது நினைவில் இல்லை. ஆனால் இந்த இருபத்திரண்டு வருடங்களில் பல முறை எங்கள் இருவருக்கும் அவ்வாறானச் சந்தர்ப்பங்கள் நிறைய வாய்த்திருக்கும் என்பதை நீங்கள் ஊகித்திருப்பீர்கள். ஐரோப்பியர் வழக்கப்படி அப்பெண்மணி ஒவ்வொருமுறையும் எனக்குப் பிரெஞ்சு மொழியில் வணக்கம் என்ற பொருளில் ‘போன் ழூர்’ என்பாள். முதலில் கூறுவது அவளாகவே இருக்கும். இருந்துபோகட்டும், அதிலென்ன பிரச்சனை என்கிறீர்களா ? பிரச்சனைகள் எதுவும் அவள் தரப்பில் இல்லை, மாறாக எனது தரப்பில் நிறைய இருந்தன.

 

இந்தியப் பண்பாட்டில் அண்டைவீட்டுகாரன் எதிர்ப்படும்போதெல்லாம் வணக்கம் தெரிவிக்கப் பழகியதில்லை. அதிலும் பெண்கள் என்றால், மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பது விதி. இத் தொட்டிற் பழக்கம் ஐரோப்பாவரை என்னைத் தொடர்கிறது.  நான் அவளுக்கு முதலில்  « போன் ழூர் » தெரிவிப்பதில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்,  ஆனால் ஐரோப்பியர் நாகரீகத்தை மதித்து அவளுக்கு பதிலுக்குக் குறைந்த பட்சம்  ஒரு புன்னகையையேனும் தெரிவிக்கவேண்டும்.  ஆனால்  அதுகூட  எனது மனநிலையை பொறுத்திருந்தது. உதாரணத்திற்கு அப்பெண்மணி 100முறை எனக்கு முகமன் கூறியிருப்பதாக வைத்துக்கொண்டால், நான்கைந்துமுறை மரியாதை நிமித்தம், பதில் வணக்கம் தெரிவித்திருப்பேன். 95 முறை தெரிவிக்கா த தற்கு, அப்போது வேறுமன நிலையில் இருந்திருப்பேன் அல்லது வேண்டுமென்றே அலட்சியம் செய்திருப்பேன்.

ஓருண்மையைச் சொல்லவேண்டும். இவ்வுலகில் ஒரு சிலர் நிலத்தில் வாழ்வதில்லை, நீரில் வாழ்கிறார்கள்.  நீரெனில் ஆழ்கடலில். மூச்சுத் திணறும்போது நீரின்மேற்பரப்பிற்கு வருவதுண்டு. நுரையீரலை ஆக்ஸிஜனால் நிரப்பிய திருப்தியில் மீண்டும் ஆழ்கடல் மனிதர்களாகிவிடுவர். அவர்களில் ஒருவர் நீங்களா என்றெனக்குத் தெரியாது. ஆனால் நான், அவர்களில் ஒருவன். கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பிருந்தே சமூக இடைவெளியைத் தீவிரமாகப் பின்பற்றிக்கொண்டிருப்பவன். எனக்கும் அடுத்த மனிதருக்கும் இடையே சமூக இடைவெளி என்பது « கைபட்டுவிடும், தும்மல் தொட்டுவிடும் தூரம் என்றில்லை », மரியாதை நிமித்தமாக எதிர்ப்படும் மனிதரின் புன்னகைகூட  எனக்குத் தீங்காக முடியலாம் எனத் தாள்ளிநிற்பேன், முகத்தைத் திருப்பிக்கொள்வேன்.  இந்தலட்சணத்தில் அண்டைவீட்டுப் பெண்மணியின் « போன் ழூர்  » கடனைத் தீர்க்க வேண்டுமென்பது தலை எழுத்தா என்ன ?

பெண்மணியின் குடியிருப்பு இரண்டு நாட்களுக்கு முன்பும் பூட்டி இருந்த து.  அப்போது அதை நான் பொருட்படுத்தவில்லை.  இன்றைக்கும் பூட்டி இருக்கிறது. அவளுடைய பெழோ 305  நிறுத்தபட்ட இடத்தில் தொடர்ந்து அசையாமல் இருந்தது.  அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். கோடை நாட்களில் பூட்டப்பட்டிருந்தால், நீண்ட நாள் விடுமுறையைக் கழிக்க பயணம் செய்திருப்பாள் என்பது நிச்சயம். தவிர, அவ்வாறு பயணிக்கிற போதெல்லாம் தம்முடைய செல்லப் பிராணியை பிராணிகள் பாதுகாப்பு சங்கத்தினரிடம் ஒப்படைப்பது பெண்மணியின் வழக்கம். அவர்கள் பூனையைக் கொண்டு  செல்வதை நானே பலமுறை கண்டிருக்கிறேன். ஆனால் இம்முறை அதற்கு சாத்தியமல்ல. கடந்த பதினைந்து நாட்களாக கொரோனா வைரஸ் பிரச்சனையால் போக்குவரத்துகள் முற்றாக முடக்கப்பட்டுவிட்டன. உள்ளூரிலேகூட வீட்டைவிட்டு மனிதர்கள் வெளியில் போவதென்றால் அனுமதிவேண்டும். ஆகப் பெண்மணியின் குடியிருப்புத் தொடர்ந்து அடைக்கப்பட்டிருப்பதற்கு ஒரு வேளை கொரோனா வரஸ் ?  காலைச் சுற்றிய பூனையின் கண்கள் முதன் முறையாக மனதைச் சங்கடப்படுத்தியது.

வீட்டுக்கென சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களைத் தேடி தேடி வாங்கியபொழுது , பூனைக்கென்று டின்னில் அடைத்த உணவுப்பெட்டிகள் இரண்டையும் மறக்காமல் வாங்கிக்கொண்டேன்.  வீட்டிற்குத் திரும்பியபொழுது கதவருகே பூனை இருக்கிறதா என்று பார்த்தேன் இல்லை. அழைப்பு மணியைஅழுத்தினேன். மனைவி கதவைத் திறந்தாள். உதட்டில் விரலை வைத்து, அமைதி என்றாள். அவள் விலகிக்கொண்ட தும்  இரண்டடி  தூரத்தில் பூனை ஆர்வத்துடன் பாலை நக்கிக் குடித்துக்கொண்டிருந்தது. என் புருவங்கள் உயர்ந்ததை விளங்கிக்கொண்டவள்போல, «  பக்கத்து வீட்டுப் பெண்மணியை ஆம்புலன்ஸில் அழைத்துப் போனதை ஒரு வாரத்திற்கு முன்பு பார்த்தேன். அவர்கள் பூனை எப்படியோ தப்பி வெளியில்வந்திருக்கிறது. நல்ல பசிபோல. பாலை ஊற்றி வைத்தேன். முதலில் தயங்கியது வாயை வைக்கலை. இப்போதுதான் குடிக்க ஆரம்பித்த து » மகிழ்ச்சி பொங்க தெரிவித்தாள்.

அவள் கண்களில் தெரிந்த இரக்கம் எனக்கு அச்சத்தைக் கொடுத்த து. பூனையிடம் வைரஸ் இருந்தால் ?  பிராணி நலக் காப்பகத்திற்குத் தகவல் தெரிவிப்பது

நல்லதென்றேன். அவள் சங்கடத்துடன் தலையாட்டினாள். பாலைக் குடித்துக்கொண்டிருந்த பிராணியை நெருங்கி, உடலை இரண்டாக மடித்து  அதன் காதில் மெதுவாக « போன் ழூர் » என்றேன். அதிர்ச்சியில் தலையை உயர்த்திய பூனை சில  நொடிகள் என்னை ஏறிட்டுப்பார் த்த த து, பிறகு எனது மனைவி முகத்தில் சில நொடிகள், அச்சம் நீக்கியதைப்போல தொடர்ந்து பாலைக் குடித்த து.

– நன்றி  காலசுவடு

————————–

அரசு நின்று சொல்லும் – அறிவியல் புனைகதை

நீங்க படுக்கிறபோது, எழுந்திருக்கிறபோது, பல் துலக்குகிறபோது, ஷூவுக்கு பாலிஷிடமறக்கிறபோது, அலுவலகம் கிளம்புகிறபோது, எக்குத் தப்பாய் தொட்டு விளையாடும் சக ஊழியையிடமிடமிருந்து எப்படி தப்புவதென யோசிக்கிறபோது ஓர் அரசமரம் உங்களிடத்தில், அரூபமாக நின்றபடி மகனே மகனேண்ணு புலம்பினா, உங்க மன நிலை எப்படி இருக்கும். கடந்த ஒருமாசமா இந்த பிரச்சினை எங்கிட்டே இருக்கு. அரசமரம் பேசுமாண்ணு கேக்காதீங்க? நிலவில் கால் வைத்ததையும், அமெரிக்காவிலே ஜெய்ஹோ ஒலித்ததையுங்கூட ஆரம்பத்திலே ஒருத்தரும் நம்பலை, கற்பனையிலேதான் சாத்தியம்னு சொன்னாங்க. அதுமாதிரிதான் இதுவும். நாளைக்கு உங்களையும் எதாவது ஒரு மரம் தொட்டுப் பேசலாம், ‘சார், பத்து நிமிஷம் என் நிழலிலே நின்றிருக்கீங்க, 100 ரூபாய் ஆகுது, பில்லைப் பிடியுங்க”ண்ணு சொல்லலாம், முத்தொள்ளாயிரத்துலே வரமாதிரி, “எனக்கு வெட்கமா இருக்கும்மா, வேறு எங்கனாச்சும் உங்க காதலை வச்சுக்குங்கண்ணு’ கேட்டுக்கலாம். ஆக நம்புங்க, நம்பிக்கையிலேதான் எதிர்காலமிருக்கு, குடும்பமிருக்கு, கூட்டணியிருக்கு, அமைச்சர்பதவியிருக்கு.

பெயர் வேல் என்கிற வேலாயுதம். டில்லியைச் சேர்ந்த இரண்டு கணினியாளர்களுக்குச் சொந்தமான வாம்ப் நெட்வொர்க்ஸ் என்கிற நிறுவனத்தில் பன்னூடகப் பிரிவில் வேலை. எண்11158, மாக்மில்லன் அவென்யூ, அப்பார்ட்மெண்ட் 10, லாஸ் ஏஞ்ஜெல்ஸ், கலிஃபோர்னியா, யு.எஸ்.எ. ங்கிற முகவரிக்குச் சொந்தக்காரன். காலையிலும் மாலையிலும் கீழ்த்தளத்தில் பாவாடைக் கட்டிய யானைபோல நிற்கிற ஆப்ரிக்க பெண்மணியையும், எனக்காகவே மட்டும் வாய் திறக்கிற அல்லது தேவகி சொல்வதுபோல என்னைப் பார்த்தால் மாத்திரம் குரைக்கிற அவளுடைய நாயையும் தவிர்த்து அமெரிக்க வாழ்க்கையில் பெரிதாக எனக்கு உபத்திரவம் எதுவுமில்லைண்ணுதான் சொல்லணும். எனக்கு சனிதிசை நடக்கிறதென்று மாதவன் சொல்கிறான். அதையே நண்பனும் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டருமான ரமேஷ் பண்டாரியிடத்தில் சொன்னபோது குதிரை கனைப்பதுபோல சிரித்தான். ஒருமாதமா தூக்கமில்லைண்ணு சொன்னால் நம்பமாட்டேன்கிறான். படுக்கை நோகிறது, பால் பழங்கள் கசந்துவிட்டன. தேவகிங்கிற எனது பிரியத்துகந்த காதல் மனைவியை தொடணுங்கிற கெமிஸ்ட்ரி இரத்தத்தில் இல்லை. நான் படிகளில் கால் வைக்கிற நேரமாக பார்த்து, ஹாய் சொல்லியபடி கதவைப் பூட்டுகிற பஞ்சாபி ஆண்ட்டியின் விசாலமான மார்புகள் குறித்த கவனமோ, அவளுடைய பிரெஞ்சு பர்ஃப்யூம் குறித்த பிரக்ஞையோ இப்படி எதுவுமில்லை.

இரண்டுமாதங்களுக்கு முன்பு இந்தியாவிற்குச் செல்வதென்று தேவகியும் மைனஸ் நானுமாக தீர்மானித்தோம். அதற்கு தேவகி இரண்டு காரணங்களை வைத்திருந்தாள். ஒன்று, அமெரிக்காவிற்கு நாங்கள் வந்து நான்கு ஆண்டுகளாக ஆகியிருந்தது, இரண்டு,” அப்பாவும் அம்மாவும் பேரனைப் பார்க்கணுமென்று சதா நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்”. எனக்கும் அதுபோல இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, “மருமகனுக்காக நம்ம பெரியாண்டவர்கிட்டே நேந்துகிட்டிருக்கேன், எப்போ அமெரிக்காவிலிருந்து வர, அவனுக்கு முடியிறக்கி காதுகுத்தணும்’ என்று கடிதங்கள் தோறும் வற்புறுத்துகிற அக்காள். இரண்டு, “தனது அமெரிக்க வாழ்க்கையை சிநேகிதிகளுக்கும், உறவினர்களுக்கும்” காட்டியாகணுமென்ற தேவகியின் ஆசை. ஆக இந்த கடைசி விருப்பமே ஊருக்குபோவதென்கிற எங்கள் முடிவுக்குச் சாதகமாக இருந்திருக்கவேண்டும். அப்பா அம்மா இறந்த பிறகு, எங்கள் தாய்மாமாக்களில் ஒருவரை மணந்து எங்கள் கிராமத்திலேயே குடியிருந்தவள் எனது தமக்கை. என்னை படிக்கவைத்தது, சீராட்டியது எல்லாமுமாக இருந்து கவனித்துக்கொண்டதுன்னுஅக்காவைக் கொண்டாட வண்டி வண்டியா காரணங்களிருக்கு. ஆக இந்தியப் பயணம் முடிவானதும் தேவகிக்கு ரொம்ப சந்தோஷம், புறப்படுவதற்கு முன்னால அவசரம் அவசரமா விக்டோரியா பெக்காம் ஸ்டைலில் பாப் வெட்டிக்கொண்டாள். பிரெஞ்சு ஃபேஷன் புத்தகங்களை வரவழைத்து வாசித்தாள், ஆங்கில உச்சரிப்பில் அமெரிக்கர் டிக்ஷன் வருமாறு பார்த்துக்கொண்டாள். “உங்க வீட்டு வழக்கப்படி அருணுக்கு பெரியாண்டவர் கோவிலில் மொட்டைபோட்டு காது குத்தி கிடாவும் வெட்டுவோம், நான் வேண்டாங்கிலை ஆனா என்னுடைய உறவினர்களுக்கும் சிநேகிதிகளுக்கும் எங்கனாச்சும் ஸ்டார் ஓட்டலில்தான் டின்னர் ஏற்பாடு பண்ணனுமென்றாள். அவளுடைய அப்பா தலையைவிட என் தலை நன்றாக ஆடுகிறதென்று அவள் வழங்கியிருந்த பாராட்டுக்கு எதுவும் நேர்ந்திடக்கூடாதென்பதால் வழக்கம்போல தலையாட்டி வைத்தேன்..

முதல் ஒரு வாரம் சென்னையில் கழிந்தது. மறு வாரம் திட்டமிட்டப்படி கிராமத்துக்குப் புறப்பட்டோம். ஏற்பாடு செய்தபடி பெரியாண்டவருக்குப் படைத்து முடி இறக்கி, உள்ளூர் காசி பத்தரைக் கூப்பிட்டு குழந்தைக்கு காதும் குத்தினோம். அந்த மகா மகா இரவு வந்தது. அரசமரத்தடியிலேயே வெகு காலத்திற்குப் பிறகு கயிற்றுக்கட்டிலைப் போட்டு படுத்துவிட்டேன். மாதவன் துணைக்குப் படுக்க வருகிறேன் என்று சொன்னவன், வரவில்லை. திண்டிவனம்வரை போயிருப்பதாகச் சொன்னார்கள். “தனியாக, பனியிலே இப்படி திறந்த வெளியிலே ஏன் படுக்கணும்? உள்ளே வாங்க”, என்றாள் தேவகி. முகத்தைப் பார்த்தேன், இந்த நான்காண்டுகால தாம்பத்யத்தில் தேவகியிடமிருந்து இதுபோன்ற சொல்லாடல்களை அறிந்ததில்லை. “கயிற்று கட்டில், அரசமரம், துணைக்கு நீயும்னா அந்த காம்பினேஷன் இன்னும் ஜோராகவிருக்கும்,” என்றேன், அவளுக்குப் புரிந்திருக்கவேண்டும், தலையில் கொட்டிவிட்டு திரும்பி நடந்தாள்.

எத்தனை மணிநேரம் தூங்கி இருப்பேனோ தெரியாது. வேலு, வேலு என்று அழைப்பதுபோல இருந்தது, சட்டென்று விழித்துகொண்டேன்? சுற்று முற்றும் பார்த்தேன். பகல்போல நிலவு, தூரத்தில் பூவரசுமரமொன்றில் கட்டிருயிருந்த ஒரு ஜோடி உழவுமாடுகளின் கண்கள் நிலவொளியில் நாவற்பழத்திற்குள் மின்மின்பூச்சிபோல ஒளிர்ந்தன. தாத்தாவின் இருமல் சத்தம் எங்கள் வீட்டு திண்ணைக்காய்ப் புறப்பட்டு வந்தது, வேறு மனித நடமாட்டமில்லை. கிராமத்தில் மோகினிப்பிசாசுபற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன், அப்படி ஏதாச்சும்? நினைக்கும்போதே உடல் சிலும்பி அடங்கியது. குளிர் அடிப்பதுபோலிருந்தது. எதிரே அரச மரம் பகலினும் பார்க்க வளர்ந்திருப்பது போலவும் அதன் கிளைகள் வழக்கத்திற்கு மாறாக தரைதொட்டு படர்ந்திருப்பதுபோலவும் பிரமை. பால்போன்ற நிலவொளியில் இலைகள் வெள்ளித்தகடுகளாய் பிரகாசிக்கின்றன. காற்று வேகமாய் வீசும்தோறும் சலசலத்தன. ‘வேலு’ உன்னைத்தான், எழுந்திரு என்று எனது காதருகே முனுமுனுப்பதுபோல இருந்தது. சந்தேகமில்லை இது ஏதோ மோகினி பிசாசுதான். எழுந்து நின்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு யாரது என்றேன். எதிரே பெரியாண்டவரும் அவரைச் சுமந்திருந்த குதிரையும் அசையாமல் நிற்கிறார்கள். நடு நிசியில் பெரியாண்டவர் வேட்டைக்குப் போவதுண்டென்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி எதுவும் நடப்பதுபோல தெரியவில்லை. நிலவொளியில் குளிரைப்பற்றிய கவலைகளின்றி அவர் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். “வேலு என்னைத் தெரியுதா?” என்ற குரல் இப்போது தெளிவாகக்கேட்டது. தேவகிப் பேச்சைக்கேட்டு, அபோதே ‘உள்ளே போய் படுத்திருக்கலாமோ? என்று நினைத்தேன். “தெரியலை!, தைரியமிருந்தால் முன்னாலே வா”, என்றேனேத் தவிர, உண்மையில் பயந்துபோயிருந்தேன். ஒருவேளை பேசுவது பெரியாண்டவராக இருக்குமோ? என்ற சந்தேகமும் வராமலில்லை. என மனத்திலிருப்பதை குரலுக்குடைய ஆசாமி புரிந்துகொண்டிருக்கவேண்டும். “என்ன யோசனையிலே மூழ்கிட்டே, அரசமரந்தான் பேசறேன்”, என்றது மீண்டும் குரல். இப்போது நிலவை முழுதுமாக மேகம் மறைக்கத்தொடங்கி, எங்கும் இருள் சூழ்ந்துகொண்டது.

“வேலு! நீ என்னோட பிள்ளை. இம்முறை குரல் எனது தலைக்குள்ளிருந்து புறப்பட்டு வந்தது.” அதற்கென்ன இருந்துட்டு போறேன்.” “இல்லை நான் சொல்றதை நம்பணும்”, “சரி சரி நம்பறேன், அதுக்காக மாசம் ஆயிரம் டாலர் எனக்கு அனுப்பிவைக்கணுமென்று கேட்டுவிடாதே”, என்றேன். அரசமரம் சிரிப்பதுபோல காற்றில் கிளைகளை அசைத்து சலசலத்தது. ஊருலே பலரும் கேலி பேசியிருக்காங்க. அக்கா பிறந்ததுக்கப்புறம் வெகுகாலம் ஆண்பிள்ளை இல்லைங்கிற கவலையில் அம்மாவும் அப்பாவும் வாட்டத்துடன் இருந்ததாகவும், அம்மா பிள்ளை வரங்கேட்டு அரசமரத்தை சுற்றியதாகவும் பேச்சுகளுண்டு. அதற்காக அரசமரத்தை அப்பாண்ணு சொன்னா எப்படி. எனது அம்மான்னு இல்லை, இந்தியாவுல தெருவுக்கு இப்படி பத்துபேராச்சும் தேறுவாங்க. “உன்னை பெற்றது அரசமரந்தான், உங்க அப்பனில்லை”, என்று என் காதுபட சிலர் பகடிபேசியிருக்கிறார்கள். அதற்காக அரசமரம் என்னிடம் சொந்தம் கொண்டாடுவது என்ன நியாயம்? உறக்கமின்றி கட்டிலில் சிறிதுநேரம் எழுந்து உட்கார்ந்தேன். அரசமரத்துக் கிளைகள் காற்றில் அசைகிறபோதெல்லாம், மகனே! மகனே! என்று குரல்கள்.

காலையில் வெகுநேரம் உறங்கியிருந்தேன். கண்விழித்தபோது தேவகியும், அக்காளும் கவலையுடன் அமர்ந்திருந்தார்கள். “அருண் எங்கேயென்று கேட்டேன். ‘ தாத்தா தூக்கி போயிருக்கார். வடக்கு வெளி பக்கம் போயிருக்கணும், என்ற அக்காள், தொடர்ந்து ” உன் உடம்பு அனலா கொதிச்சுது, நாங்க என்னமோ ஏதோன்னு பயந்துட்டோம். அரசடியிலே எதுக்காக படுக்கபோன, அங்கே காத்து கருப்பு நடமாடுதுண்ணு சொல்லிக்கிறாங்க”, என்று புலம்பினாள். “பயப்படாதக்கா, நானென்ன சின்ன சின்னகுழந்தையா?”, என்று எழுந்தவன் பல்துலக்கிக்கொண்டு தேவகிக் கொடுத்த காப்பியை அவசர அவசரமாக விழுங்கிவிட்டு, எதிர்பட்ட மாதவனை இழுத்துக்கொண்டு மறுபடியும் அங்குதான் போனேன். இரவு சம்பவம் என்னை முழுதாக மாற்றியிருந்தது. நேற்றைய இரவின் சுவடின்றி அரசமரம் பிரமாண்டமாக நின்றுகொண்டிருந்தது. அடிமரத்தில் ஆங்காங்கே முதுமையின் தளர்ச்சி. கிளைகளும், கணுக்களுங்கூட உயிரியல் பூங்காக்களில் பார்க்கிற கிழட்டு சிங்கத்தினைபோல பரிதாபமாக இருக்க, நான் முதன் முறையாக அதை அக்கறையோடு பார்த்தேன். .

– மாதவா என்னடா இது, அரசமரம் ஏன் இப்படி இருக்கு, யாரும் கவனிக்கிறதில்லையா?

– கவனிக்கதான் செய்யறாங்க, வயசாச்சில்லையா. அநேகமாக அடுத்தமுறை நீ வருகிறபோது இருக்காது, வெட்டி அப்புறபடுத்திட்டு, புதுசா நடபோறாங்க.

– அதைத் தடுக்கணுமே.

– எதுக்கு?

– இந்த மரத்துக்கும் எனக்கும் உறவு இருக்குது.

மாதவன் என்னை மேலும் கீழுமாகப் பார்த்தான். உனக்கு ஒண்ணும் ஆகலையே.

– ராத்திரி இங்கே கட்டிலைப்போட்டு படுத்திருந்தேன், கனவா உண்மையில் நடந்ததாண்ணு தெரியலை. அரசமரம் என்னை தன்னோட பிள்ளைண்ணு சொல்றமாதிரி குரலைக் கேட்டேன்.

மாதவன் முதலில் நான் சொன்னதெதையும் விளங்கிக்கொள்ளாதவன்போல அமைதியாக என்னைப்பார்த்தான். சட்டென்று கைகள் இரண்டையும் உதறி உதறி நிறுத்தாமல் குனிந்து, குனிந்து முன்னும் பின்னுமாக நகர்ந்து வெகுநேரம் அடக்க முடியாமல் சிரித்தான். ஊர்க்கிணற்றில் தண்ணீர் எடுக்கவந்த இரண்டொரு பெண்கள் திரும்பிப் பார்க்கிறார்கள். .

– டேய் நீ இப்படி சிரித்தால், எனக்குக் கோபம் வரும், நீ நம்பணுங்கிறதுக்காக நான் சொல்லலை.

– அரசமரம் உன்னிடம் பேசியதாகவே இருக்கட்டும் அதற்கென்ன? போயுட்டு ஆகவேண்டிய வேலையைப்பார்ப்பியா. இந்த லசணத்துலே அமெரிக்காவுலே வேற இருக்க. பொண்டாட்டியோட நாலு எடம் சுத்திபார்த்துட்டு நல்லபடியா ஊரு போய்ச்சேரு.

– இல்லைடா, இந்த மரத்த வெட்டாம தடுக்கணும். அதற்காக நான் என்ன செய்யணும்னு சொல்லு.

– போடா பைத்தியக்காரா. நாமல்லாம் சொன்னா ஒருத்தரும் இங்கே கேக்கமாட்டாங்க. நாட்டாமை வீட்டு சூளைக்கு மரம் தேவைபடுது, மரத்துக்கு வயசாச்சுங்கிறது ஒரு சாக்கு.

அதற்குப் பிறகு ஊரிலிருந்த இரண்டு நாட்களும் அரச மரத்தடியில்தான் எனக்குப் படுக்கை என்றானது. எனக்கும் அரசமரத்துக்கும் விடிய விடிய பேச நிறைய இருந்தன. மாதவன்போல உங்களுக்கு என்மீதான அபிப்ராயம் எதுவானாலும் இருக்கட்டும், அரசமரத்துக்கும் எனக்கும் ஏதோ சம்பந்தமிருக்கிறது என்பதில் திடமாக இருந்தேன். எனது அம்மாவின் ஒழுக்கத்தையும், திருமணம் என்கிற பந்தத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிற தந்தை மகன் உறவுபற்றிய சமூகக் குறியீட்டையும் கேள்விக்குட்படுத்தலாம் என்ற சிக்கலையும் தாண்டி அரசமரத்தை முழுக்க முழுக்க நம்பினேன்.

* * * *
சோதனைச் சாலையில், மூன்று நாட்கள் கழித்து வரச்சொல்லியிருந்தார்கள். எனக்கு முதல்நாள் இரவிலிருந்தே தூக்கமில்லை, அதிகாலையில் பச் என்று கன்னத்தில் பாதி காதில்பாதியென்று தேவகி முத்தமிட்டும், தள்ளி படுக்கத்தான் தோன்றியது. காலையிலிருந்தே அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. எப்போது மாலை மணி நான்கு ஆகுமென காத்திருந்தேன். பண்டாரி இருக்கையில் இல்லாதது சௌகரியமாக இருந்தது. அவனுடைய காரிதரிசி அல்போன்ஸா இருக்கிறாளாவென்று எட்டிப் பார்த்தேன், நாற்காலி பக்கவாட்டில் திரும்பிக்கிடந்தது. டாய்லெட்டில் சலசலவென்று சத்தம், உள்ளேதான் இருந்தாள், அவள் வெளியிலிருந்தால்தான் ஆச்சரியம். புறப்பட்டுவிட்டேன். பெவெர்லி ஹில்ஸின் பிரதான சாலையைப் பிடித்து, ஹோஷ் அவென்யூவூக்குள் நுழைந்து, காரை நிறுத்த இடம்தேடியபொழுது, புல்வெளிக்கு இரப்பர் குழாய் மூலம் நீர் பீய்ச்சியபடியிருந்த லத்தீன் அமெரிக்க பெண்ணொருத்தி, ஹாய் என்றாள். தொங்கலில் தெரிந்த ஃப்ரோபேஸ் ஜெனெடிக்ஸ் விளம்பரப் பலகையை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு, படபடக்கும் இதயத்துடன் உள்ளே நுழைந்தேன். வழக்கத்திற்கு மாறாக முகத்தில் வியர்த்துக் கொட்டியது. கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைக்கவும், வரவேற்பிலிருந்த பெண் நிமிர்ந்து பார்த்தாள். அவளிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நான் வந்த காரணத்தைத் தெரிவித்தேன். என் கையிலிருந்த தாளை வாங்கிப்பார்த்தாள், பின்னர் கணினித் திரையைப்பார்த்தபடி, கடகடவென்று விசைப்பலகையில் எனது கோப்புக்குரிய எண்ணை விசைப்பலகையில் தட்டினாள். பரிசோதனை முடிவின் அறிக்கை வந்திருக்க வேண்டும். உதட்டைச் சுழித்துக்கொண்டு ‘எஸ்’ என்றாள். பின்னர் குனிந்து வரவேற்பு மேசையில் வலப்பக்க இழுப்பறையில் தேடியெடுத்த உறையை என்னிடத்தில் நீட்டினாள். கையில் வாங்கிக்கொண்டேன். அவசரமாக உறையைக் கிழித்து அறிக்கையை வாசிக்க, ‘எக்யூஸ்மி’ என்று எனக்குப் பின்புறம் ஒரு குரல். ஒதுங்கிச் சென்று அங்கு வரிசையாய்ப்போட்டிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்து நிதானமாக அறிக்கையை வாசித்தேன். உறவுமுறைக்கான சாத்தியம் 0% என்று சோதனை அறிக்கையின் முடிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் வரவேற்பு மேசை பெண்ணிடம் சென்று நின்றேன். அறிக்கை தயாரித்தவரை பார்க்க வேண்டுமே என்றேன். கூப்பிடுகிறேன், கொஞ்சம் உட்காருங்கள் என்றாள். மிகவும் பதட்டமாக இருந்தது. தேவகியிடம் அனைத்தையும் சொல்லி இருக்கலாமோவென தோன்றியது. வீடு பக்கத்தில்தான் இருக்கிறது, அருண் தூங்கிக்கொண்டிருப்பான். அநேகமாக இந்நேரத்தில் இணையத்தில் ஏதேனும் தமிழ் சினிமா பார்த்துக்கொண்டிருக்கலாம் அல்லது சமையல் குறிப்புகள் எழுதிவைத்துள்ள நோட்டை புரட்டியபடி இன்றிரவுக்கு என்ன சமையல் செய்யலாமென அவள், யோசித்துக் கொண்டிருக்கலாம்.

– மிஸ்டர் வேல்! என்ற குரலைகேட்டு எழுந்தேன். ஜான் மாத்யூவென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட இளைஞன் என்னிடம் கை நீட்டினான், புரிந்துகொண்டு எனது கையை நீட்டினேன். கைகுலுக்கியபடி, பார்வையால் தனது அறையைக் காட்டிவிட்டு முன் நடந்தான். நான் அவனைப் பின்தொடர்ந்து நடந்தேன். இருக்கையில் அமர்ந்ததும் என்னை அமரச்செய்தான். அவனுடைய கையில் எனக்கான சோதனை அறிக்கையின் மற்றொரு படி இருந்தது. உங்க தாத்தா மரபணுமீது நடத்தப்பட்ட Y குரோமோசோம் சோதனையின் அடிப்படையில் உங்களுக்கும் உங்க தாத்தாவுக்கும் உறவு இல்லைண்ணு முடிவுக்கு வந்திருக்கோம். ஆனா ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும், இம்முடிவுகள் நீங்களாகக் கொடுத்திருந்த மாதிரி உயிரணுக்களிலிருந்து உருவானது. இம்முடிவுலே வேறு சந்தேகங்களிருந்தால் சொல்லுங்கள் முடிந்த அளவு விளக்குகிறேன்,” என்றான். “இல்லை, எதுவுமில்லை, புறப்படறேன். நன்றி. என்று அவனிடம் கைகுலுக்கிக்கொண்டு விடைபெற்றேன்.வெளியில் வந்ததுபோது தலை பாரமாக இருந்தது.

அன்றிரவு தேவகியின் கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை. முதன் முறையாக அவளது மறுப்புக்கு செவிசாய்க்கவில்லை. ஒருவார விடுமுறையில் இந்தியாவுக்கு இரண்டாவது முறையாகச் சென்றுவருவதென்பதில் உறுதியாக இருந்தேன்.

* * * * *

சென்னையில் விமான நிலையத்தில், மதியம் ஒருமணிக்கு இறங்கி சுங்க இலாக்காவினரின் சோதனைளையெல்லாம் முடித்துக்கொண்டு வெளியில்வந்தபோது மாதவன் காத்திருந்தான்.

– அக்கா, மாமா வரலையா?

– இல்லைடா. முதலில் அவங்க வருவதாகத்தான் இருந்தது. நெல்லறுப்பு வச்சிருக்காங்க களத்து மேட்டுலே காவல் இருக்கணும். நீ போயிட்டு வந்திடுண்ணு சொன்னாங்க. நானும் சரிண்ணு சொல்லிட்டேன். ஏது உங்க மாமியார் வீட்டுக்குப் போகாம இந்த முறை நேரா நம்ம கிராமத்துக்குப் போகத் துடிக்கிற, அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கணுமே, என்றவனிடம், காரணத்தை ஊருலே போய் சொல்றேன், உன்னிடத்திலா மறைக்கப் போறேன், என்றேன். மாலை ஐந்து மணிக்கெல்லாம் கிராமத்தை அடைந்திருந்தோம்.

‘தம்பி இருந்து காப்பித் தண்ணி குடிச்சுட்டுப்போயேன். எங்கே அத்தனை அவசரமா போற”, என்ற அக்காவின் குரலை காதில் போட்டுகொள்ளாமல் புறப்பட இருந்த மாதவனிடம், “ஆறுமணிக்கெல்லாம் அரசடியிலே வந்திடு பேச நிறைய இருக்கிறது என்றேன். “எந்த அரசடி?” என்றான். “அதாண்டா நம்ம ஊருலே எத்தனை அரசடி இருக்கிறது? பெரியாண்டவர் கோவில் அரசடியைத்தான் சொன்னேன்”, என்றேன். “சரி சரி அதற்கென்ன வந்துட்டாப் போச்சு”, என்றவன் குரல் சுரத்தில்லாமல் ஒலித்தது. அவன்போன பிறகு அக்காள் வெநீர் வைத்துக்கொடுக்க குளித்து முடித்தேன். பிறகு காப்பி வந்தது, குடித்தேன். பயண அலுப்பு இருக்குமில்லையா, கொஞ்சம் படுக்கிறது. நாளைக்கு வேணா செய்யவேண்டியதை பார்க்கிறது, என்ற அக்காவிடத்தில், இல்லைக்கா, மாதவனைத்தான் பார்க்கணும் வேறு ஜோலிகளில்லை, வந்திடுவேன் என்று கிளம்பிப்போனேன்.

அரசமரமின்றி பெரியாண்டவர்கோவில் வெறிச்சோடி கிடந்தது. பழைய மரத்தை வெட்டி, குழியைப்பறித்து, வேர்களை சுத்தமாக அகற்றி மண்ணிட்டு நிரப்பி இப்போது அந்த இடத்தில் வேறொன்றை நட்டிருந்தார்கள். எனக்குப் பெருத்த ஏமாற்றம்.

– என்னடா, அரசமரம் இல்லையென்றா அப்படி பார்க்கற. இன்னும் பத்துவருடத்திலே தளதளண்ணு இது வளர்ந்து அந்த இடத்தை பிடிச்சிடப்போவுது..

– இல்லைடா பழைய மரம் எங்கப்பா மாதிரி..

– ஆரம்பிச்சிட்டியா, மாதிரியாவது பாதிரியாவது, உங்கப்பனை எரிச்ச இடத்துலே புதர் மண்டிகிடக்கு, அதை பார்க்கறதுக்கு இல்லை. அரசமரத்தை அப்பண்ணு சொல்லிகிட்டுத் திரியறான்.

– இந்த ஒரு மாதத்துலே நான் இரண்டாவது முறையா இந்தியாவுக்கு வரக்காரணமே அரசமரந்தான். அரசமரந்தான் பேசுச்சோ, இல்லை அது என்னுடை சொந்தக் கற்பனையோ. இந்த இடத்துலே அந்த இரவுலே எனக்கென்று சில உண்மைகள் சொல்லப்பட்டிருக்கு, அந்த வார்த்தைகளை நம்பறேன். அதை உறுதிபடுத்திக்கத்தான் மீண்டும் வந்திருக்கேன். அது என்னண்ணு தெரிஞ்சுக்கலைன்னா தலை வெடிச்சுடும்போலிருந்தது புறப்பட்டு வந்துட்டேன். அரசமரம் எனக்கு அப்பாவோ இல்லையோ, ஆனா எங்க தாத்தாவுக்கு நான் பேரனில்லை.

– எப்படி சொல்ற?

– Y-STR மரபணு சோதனைண்ணு ஒண்ணிருக்கு, அதை இங்கிருந்து கொண்டுசென்ற சாம்பிளை லேபில் கொடுத்து சோதிக்க சொன்னேன். அவர்களுடைய அறிக்கையின்படி எனக்கும் எங்க தாத்தாவுக்கும் உறவு இல்லை.

– நியாயமாப் பார்த்தா உங்க உங்க அப்பா, அம்மா, நீயென்று உங்கள் மூவருடைய உயிரணுக்களையும் சோதிச்சுதானே ஒப்பிட்டு பார்க்கணும்.

– அப்பாவும் அம்மாவும் இல்லாததால், தாத்தாவோட உதவியை நாடினேன். ஆனா அவர்கிட்டே உண்மையை சொல்லலை.

– உங்க அப்பா எரிச்ச இடத்துலே போயுட்டு ஒரு எலும்பை எடுத்தும்போறது.

– யார் எலும்பை எடுத்தும்போகச் சொல்ற? எங்கப்பாவை எரிச்சதுக்கபுறம் குறைந்தது நான்கு பேரையாவது அந்த இடத்திலே எரிச்சிருப்பாங்கண்ணு சொல்றாங்க

– சரி அதைவிடு, நீ இத்தனை பைத்தியகாரனா இருக்கிறாதால, நான் கேட்கிறேன்? உங்க அம்மா விஷயத்துலே உண்மை இல்லைண்ணு நம்பும் போது, உங்க பாட்டியை மட்டும் எப்படி நம்பறே, அவங்க உங்க தாத்தாவோட இல்லாம வேற ஒருவரோட உறவுவச்சிருந்து உங்கப்பா பிறந்திருந்தாகூடத்தான் உனக்கும் உங்க தாத்தாவுக்குமான மரபணு பொருத்தத்துக்குச் சாத்தியமில்லாம போகும். உயிரியல்வழி தந்தை உறவுமுறையை உறுதிபடுத்துவதேகூட 99.99 விழுக்காடுதான் சாத்தியமென சொல்கிறபோது எல்லாவற்றையுமே சந்தேகிக்கலாமே. பேப்பர்ல படிச்சேன், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இந்த சோதனைகளை உணர்வின் அடிப்படையிலே பார்க்க்லை, சமூக பொருளாதார அடிப்படையிலே என்ன லாபம்னு அவங்க பார்க்கிறாங்க. ஏற்கனவே குடும்ப உறவுகள் கலகலத்துபோச்சு, இதுலே இது வேற.

* * * * *

இரவு உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தேன். திண்ணையில் படுத்திருந்த தாத்தாவிடமிருந்து சுருட்டு நாற்றம், உறக்கத்தை மேலும் சிக்கலாக்கியது. எழுந்து வெளியில் வந்தேன். திண்ணை முழுக்க அடர்த்தியாக இருட்டு, தாத்தாவின் இருப்பை அடையாளப் படுத்தும் பவானி ஜமுக்காளம், இருட்டுக்குப் பொட்டிட்டதுபோல தீக்கங்கு. .

– வா உட்கார்- ஜமுக்காளம் பேசியது.

– தாத்தாவுக்கு உறக்கம் வரலியா?

– இல்லை, ஆனா தேவைன்னா தானாவரும். அரசப்பன்கிட்டேயும் இதைத்தான் சொன்னேன். அவனும் ஒரு இராத்திரி இப்படித்தான் உன்னைப்போல தூக்கமில்லாம தவிச்சான். அர்த்தராத்திரியிலே எழுந்துவந்து உன்னைப்போலத்தான் கேட்டான்.

– அரசப்பன் யாரு?

– வேற யாரு, உன் தகப்பன்தான். உன்னைப் பெற்றவளைபோலவே உன் அப்பனைப் பெற்றவளும் பிள்ளைவரம் கேட்டு அரசமரத்தை சுத்தினவதான், பிறந்த பிள்ளைக்கு அரசப்பனென்று பேரும் வச்சாள். அந்தபேரையும் பிடிக்கலை ஊரையும் பிடிக்கலை புறப்பட்டு வந்துட்டோம்.

அன்றிரவு ஏதோ புரிந்ததுபோல இருந்தது. ஆனாலும் ஒரு கேள்வி மனதில் இன்றுவரை இருக்கிறது. தாத்தா சமாதானப்படுத்தியது அவரையா என்னையா?

——-

சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது என்ற அறிவியல் கதைகள் தொகிப்பிலிருந்து. பிற கதைகளை வாசிக்க இங்கே சொடுக்குக:http://www.pratilipi.com/nagarathinam-krishna/sirikkira-robovaiyum-nampakkuudathu

 

——

அழுகுரல்

அடுத்த அறையிலிருந்து குழந்தையின் அழுகுரல், விசுக்கென்று கையைபிடித்து இழுத்ததுபோலவிருந்தது. செங்குத்தான பாதையில் பயணித்து, சட்டென்று வழுக்கி பள்ளத்தாக்கில் விழுந்ததுபோல குரல் விசும்பலும் தேம்பலுமாக நொண்டியபொழுது, புரிதல் ஒரு செம்மறி கிடாவென நெஞ்சை முட்ட பதட்டத்துடன் விழித்தேன். சுற்றிலும் ஆழ்கிணற்றின் நீர்போல இரவு உறைந்துக் கிடந்தது. கண்கள் தங்கள் இயல்புக்கு வந்ததன் அடையாளமாக இருள் பூசிய சுவர்; நாற்காலி, மேசையும் அதில் இறைந்துகிடந்த புத்தகங்களும் பிறவும் மெல்ல மெல்ல பார்வையை நிரப்புகின்றன. இழுத்து மூடப்படாத சன்னல் திரையின் நெளிவுகளில் விழுந்து கட்டிலில் தெறித்த நிலவொளி கொஞ்சம் தரை, கொஞ்சம் சுவரென சிந்திக்கிடந்தது. நிசப்தத்தின் அவ்வளவு குரல்களையும் முந்திக்கொண்டு குழந்தையின் அழுகுரலில் இரவின் சுதியாகவும் தாளம்போலவும்  வழமையாக ஒலிக்கிற மனவியின் குறட்டையும்  சுவர்க்கடிகாரத்தின் இயக்கமும் தமது முக்கியத்துவத்தை இழந்திருந்தன.

ஒருவாரமாக தொடரும் அனுபவம். குழந்தையின் அழுகைக் கேட்டுப் பழகியதென்றாலும் அடர்த்தியான இரவுதோப்பில் ஒற்றையாக அழுகுரலை கேட்கிறபோது இதய துடிப்பு அதிகரிக்கிறது, மூச்சை அடைக்கிறது, அறையின் குளுமை வெப்பமாக உடலைக் கவ்வுகிறது. உறக்கத்தை தொடரமுடியாத எரிச்சலில் கண்கள். மிச்சமிருந்த உறக்கத்தின் சுமையை இறக்கிவைக்க கண் இரப்பைகள் தோளை உயர்த்தின. மூடிய அறைக்கதவிற்கும் தரைக்குமான இடைவெளியை எதிர் அறையிலிருந்த வந்த மின்சார ஒளி நிரப்புகிறது.  இரு கைகளையும் தலைக்குப் பின்புறம் கொண்டுசென்று கைவிரல்களை பிணைத்து நெட்டைமுறித்து, போர்வையை விலக்கி வலது காலை தரையில்வைத்து கட்டிலைவிட்டு இறங்கினேன். மின்சாரவிளக்கைப் போடவேண்டுமென்ற அவசியங்களில்லை. கண்களிரண்டும் மென்மையான இருளுக்குப் பழகிக்கொண்டிருந்தன. தலைகீழாக உள்வாங்கப்படும் நிழல்பிம்பங்களை நேராக நிறுத்தி அடையாளப்படுத்த பார்வைக்கு முடிந்தது. இறங்கி கதவை நோக்கி நடந்தேன்.

தனக்காக அழும் எந்தக்குரலையும் வெறுக்கும் மனநிலைக்கு வந்திருந்தேன். அதில் யாசிக்கும் மனோபாவம் இருக்கிறதென்பது காரணம். அதற்காக மற்றவர்களுக்காக அழுகிறவன் என்பதெல்லாமில்லை. அழுது மட்டுமே தனது தேவையை பூர்த்திசெய்துகொள்ளவேண்டிய கட்டாயத்திலிருந்த குழந்தையின் பின்னிரவு அழுகை ஓர் அதிர்வாக என்னுள் இறங்ககாரணமென்ன என்பதை கடந்த ஒரு கிழமையாக பால்கணியின் நின்று மௌனத்தில் ஆழ்ந்திருக்கிற மரங்களைப் பார்க்கிறபோதும், உரக்கமற்ற முன்னிரவுகளிலும், குளித்து முடித்து துவட்டிக்கொள்ளும்போதும் யோசிக்கிறேன். பதில்களின் இருப்பு அடிவானம்போல காட்சிக்குக் கிடைத்தது. அருகாமையில் இருப்பதுபோல தோற்றம் தரினும் நெருங்க நெருங்க விலகிச் செல்கிறது. அழுகையை ஊரில் பெய்யும் மழையோடு ஒப்பிட்டிருந்த கவிஞன் போல் வெர்லன் நினைவுக்கு வந்தான். குழந்தையின் அழுகுரல் மழையா சாரலா?

எங்கள் அறைக்கு எதிர்பக்கத்தில்தான் மாப்பிள்ளையும் மகளும் அவள் குழந்தையும் இருக்கிறார்கள். ஏற்கனவே நான்கு முறை குழந்தை அழுதிருக்கிறான். அப்போதெல்லாம் திடுக்கிட்டு எழுந்திருப்பதும், குரல் ஓயும் வரை அமைதியின்றி உட்கார்ந்திருப்பதும், சிற்சில நேரங்களில் எழுந்து இரு சுவர்களுக்கான இடைவெளிகளை தன்னிசையாக அளப்பதுமென்று கழிந்திருக்கிறது. அழுகையைத் தொடர்ந்து அவ்வழுகைக்கான காரணத்திற்கேற்ற காரியங்களை அவனைப்பெற்றவள் செய்கிறாள். கைகால்களை உதைத்து, கண்களை சுருக்கி, நெற்றி தசைகள் நெளிய அழுகிறபோது திறந்திருக்கும் குழந்தையின் வாயைப்பார்க்க சூல்தண்டுதெரிய இதழ்விரித்த பூப்போல இருப்பான். அண்மை தொடும் மனிதர் நடமாட்டத்தையும், சமாதான வார்த்தைகளின் தராதரமறிந்தும் குழந்தையின் குரல் குறையவோ கூடவோ செய்யும். அர்ச்சகர் தரும் புஷ்பங்களை கைகளில் வாங்கிக்கொள்வதுபோல குழந்தையை எனது மனைவியும் மகளும் கையாளுவார்கள். குழந்தையின் இமைமயிர் முனைகளில் கோர்த்திருக்கும் ஒன்றிரண்டு கண்ணீர் துளிகள் அப்புஷ்பங்களில் சொட்டும் தீர்த்தம்போல.

ஊரிலிருந்த வந்த முதல் நாள் இப்படித்தான் பின்னிரவில் திடீரென்று குழந்தை வீறிட்டு அழுதது. பதறிக்கொண்டு கண்விழித்தேன். எழுந்தவன் மின்சாரவிளக்கைப்போட்டுவிட்டு அடுத்த அறைக்கதவைத் தட்டி மகளை எழுப்பலாமா? என்று யோசித்தேன். நள்ளிரவில் எதற்காக அழுகிறான்பசியாக இருக்கலாமா? குழந்தை அடிக்கடி பாலெடுக்கிறான், ஒழுங்காய் பாலைக்குடிப்பதில்லையென்று மகள் கூறியிருந்தாள். ஒரு முறை இந்திய ரயிலில் பயணித்த பொழுது இரவு முழுக்க குழந்தையொன்று வீறிட்டு அழுததும், பயணத்தொடக்கத்தில் குழந்தையை எடுத்துக்கொஞ்சிய நானே பின்னர் எரிச்சலுற்றதும் நினைவுக்கு வந்தது. மனித இயல்புப்படி அவ்வாறான மனப்பிடுங்கல்கள் இப்போதில்லை. ஒரு குழந்தை அழ ஆயிரத்தெட்டு காரணங்கள், நாம்தான் ஊகித்தறியவேண்டும்: பசியாக இருக்கலாம், அறையில் நிலவும் வெப்பம் அல்லது குளிர் காரணமாக இருக்கலாம், டையப்ப்பர் மாற்ற வேண்டியதாக இருக்கலாம் அல்லது இத்தனைபேர் என்னைச் சுற்றி நிற்கிறீர்களே? என்னைத் தூக்கக்கூடாதா? என்பதுகூட காரணமாக  இருக்கலாம். உடல்நலத்தில் பிரச்சினையா? கிரைப் வாட்டர் கைவசமிருக்குமா? பிரான்சுநாட்டில் நேரங்காலம் பார்க்காது தவிர்க்கமுடியாத அவசரமெனில் வீட்டிற்கு மருத்துவர் வருவார் அமெரிக்காவில் எப்படி? நாம்தான் மருத்துவமனைக்கு போகவேண்டுமாநிறைய எனக்குள் கேள்விகள். வழக்கம்போல பதில்களின்றி  மேலும் மேலும் கேள்விகளின் எண்ணிக்கையை மனதிற் பெருக்கிக்கொண்டிருந்தேன். எல்லா கேள்விகளுக்கும் எப்போதும் ஏதேனும் ஒரு பதிலை தயாராக வைத்திருக்கும் என் மனைவி அமைதியாக உறங்கிகொண்டிருக்கிறாள். அவளுடைய நிம்மதியான உறக்கம் என்னை எரிச்சலடைய செய்தது.

ஏம்மா.. குழந்தை அழறானே?

– —

உன்னைத்தான். ச்சே இப்படியா தூங்கறது. குழந்தை அழறான். என்னண்ணு போய்ப் பாரு?

கொஞ்சம் மெதுவாப் பேசுங்க. எல்லோரையும் எழுப்பிடுவீங்க போலவிருக்கு.

எழுந்திருக்கட்டும். குழந்தை இப்படி அழவிட்டு உங்களுக்கு என்ன அப்படித்தூக்கம் வேண்டிகிடக்குது.

சும்மா படுங்க, பெற்றவங்களுக்குத் தெரியும் குழந்தையோட அருமை. நாள்பூரா ஏதோ நீங்கதான் குழந்தையை சுமக்கிறமாதிரி..

ச்சே.. என்று சலுத்துக்கொண்டேன்.. எத்தனை நேரம் கட்டிலில் உட்கார்ந்திருந்தேனோ நினைவில்லை. எதிர் அறையில் மின்சாரவிளக்கின் ஒளியும், தொடர்ந்து மகளின் நடமாட்டமும் குழந்தையை சமாதானப்படுத்தும் அவள் குரலையும் கேட்ட பின்பு படுத்திருப்பேனென நினைக்கிறேன்.

இன்றும் மனைவியை எழுப்பினால் என்ன பதில் வருமெனதெரியும். எழுந்துசென்று எதிர் அறை கதவைத் தட்டலாமா என நினைத்து நெருங்கியபொழுது, வெளிச்சம் தெரிந்தது. மாப்பிள்ளையும் பெண்ணும் பேசிக்கொள்வதும் கேட்டன. கதவிடுக்கு ஒளியில் நிழல்கள் வந்துபோகின்றன.

ஒன்றிரண்டு நொடிகள் தயங்கிய பிறகு கதவைத் தட்டினேன்.

கதவு திறந்தது. எதிரே மகள். பால் மாவைக் கலப்பதற்காக மேசைமீது பாட்டில்-வார்மரில் தண்ணீர் சுட்டுக்கொண்டிருந்தது.

என்னப்பா?

குழந்தை வெகுநேரம் அழுதிருப்பான் போலிருக்கிறதே?

இருக்காதே! உடனே எழுந்துட்டேனே.

அம்மாவை வேண்டுமானா எழுப்பட்டுமா.

வேண்டாம்பா நான் பார்த்துப்பேன். அம்மா தூங்கட்டும். பகலெல்லாம் அவங்கதானே பார்த்துக்கிறாங்க. இராத்திரியிலே நான்கைந்து தடவை எழுந்திருக்கவேண்டியிருந்தது. அதனாலே கொஞ்சம் அசந்து தூங்கிட்டிருக்கேன்.

முகத்தைப் பார்த்தேன். கண்களைச் சுற்றி மையில்போட்டதுபோல வளையம், வெண்படலம் சிவந்திருந்தது. கண்களில் அரிப்பு இருக்கவேண்டும் புறங்கை ஆட்காட்டிவிரலை பூமொக்குபோல மடித்து ஒருமுறைக்கு இருமுறையாக வலது கண்ணைத் தேய்த்தாள். எனக்கும் நெஞ்சில் எவரோ பாரத்தை இறக்கியதுபோல இருந்தது. கண்களில் நீர்கோர்த்தது, அதைக்காட்டிக்கொள்ள மனமின்றி திரும்பினேன். எனக்குப் பின்புறம் கதவு மூடப்படும் சத்தம்.

விளக்கைப்போடாமல் தட்டுதடுமாறி நடந்தேன். அறைகளுக்கான நடைபாதை தரை விரிப்பில் பைய கால்  புதைய நடந்து வரவேற்பறை சோபாவை நெருங்கி கால் நீட்டி உட்கார்ந்தேன். நெஞ்சத்தில் இதுவரை காணாத இறுக்கம். மூச்சுமுட்டியது. நீராவிபோல சுவாசத்தை உணர்ந்தேன். உடல்கொள்ள குளிர்காற்றை இட்டு நிரப்பவேண்டும்போலிருந்தது. வரபேற்பறையை பால்கணியுடன் பிரித்திருந்த தள்ளு கதவை உபயோகித்து பால்கணிக்கு வந்ததும் அங்கே நிரந்தரமாக விரித்திருந்த நிழற்குடையின் கீழ் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். எதிரே இருள்பிரியாத வெளியில் மனித வாழ்க்கையின் அத்தனை கூறுகளையும் படித்த இறுமாப்புடன் ஆனைக்கூட்டம்போல மரங்கள். தலைக்கெதிரே கட்டிடங்கள் தொடுவானத்தில் பசைபோட்டு ஒட்டப்பட்டதுபோல தெரிந்தன. எனது மனநிலைக்கு முரண்பட்டவைபோல மேகக்கூந்தலில் பிறை நிலா. மல்லிகைச்சரம்போல நட்சத்திரங்கள். இரவு பறவைகள் ஓய்வெடுத்திருக்கவேண்டும், இல்லையெனில் அப்படியொரு நிசப்த அனுபவத்தை காண நேர்ந்திருக்காது. நாள் அதிகாலையிலேயே விழித்துக்கொண்டதன் சாட்சியாக வாகனங்களின் ஓட்டம். ஆம்புலன்ஸ் ஒன்றின் சைரன் ஒலி, கொடிய வனவிலங்கிடமிருந்து தப்பியோடும் அப்பிராணிபோல அபயக்குரலெழுப்பிக்கொண்டு பாய்ச்சலிடுகிறது. ஆம்புலன்ஸைத் தொடர்ந்தும் அழுகை ஒரு கேவலாகவோ, விசும்பலாகவோ பின் தொடரக்கூடும்.  குழந்தையின் அழுகையில் சுயநலம்? குழந்தையை பெற்றவள் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாலும் எனக்குள் அடைபோல ஊமுட்கள். ட்விக் ட்விக்கென்று சத்தமிட்டுக்கொண்டு சடசடவென்று  பறந்து அடர்ந்த மரக்கிளைகளுக்கிடையே இடம் தேடும் இரவு பட்சி. சட்டென்று எனது முதுகு மனிதர் சுவாசத்தின் வெப்பத்தை உணர்ந்தது.    திரும்பினேன் -மனைவி.

என்னது? எதற்காக பனியில் நிற்கறீங்க, தூக்கம் வரலையா?

இல்லை. என்ன ஜென்மம் நீ? கண்ட கண்ட நேரத்திலெல்லாம் குழந்தை விழித்துக்கொண்டு அழறான். நீ என்னடான்னா தூக்கத்தையே காணாதவ மாதிரி தூங்கற.

ஒன்றிரண்டு நொடிகள் தலையை நேரிட்டு என்கண்களப் பார்த்தாள்:

ம். உங்க கவலை எதைப் பத்தினது? உங்கப் பெண்ணும் குழந்தையாய் இருந்தப்போ இப்படி அர்த்தராத்திரியில் அழுதவள்தான், அப்போதெல்லாம் நீங்கள் இதுபோல விழித்துக்கொண்டதில்லை.

———————————————————————–

நாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள் -4

அன்புள்ள அப்பாவுக்கு

கதை பிறந்த கதை: விமானப்பயணம், வெளிநாட்டு கணவன், ஐரோப்பிய வாழ்க்கை, எனக்கனவுகளுடன் வந்து, தங்கள் கனவுகள் மெல்ல மெல்ல நிறமிழந்ததும், பின்னிரவுகளில் கடந்தகால நினைவுகளின் தணுப்பில் நிகழ்காலத்தை அணுகி விதியுடன் சமரசம் செய்துகொள்ளும் பெண்களைப்பற்றிய மற்றொரு கதை.

கதைக்களம் பிரான்சு. வெளி நாடுகள் என்றாலும் கிராமத்திலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தாலும் பொதுவில் பெண்களுக்கு ஒரே அனுபவம்தான்.

குங்குமம் இதழில் 10-02-01 அன்று பிரசுரமானது.

அன்புள்ள அப்பாவுக்கு

                                                                                   பாரீஸ் 10-12-2000

அன்புள்ள அப்பாவுக்கு,

இங்கு நான், உங்கள் மருமகப்பிள்ளை இருவரும் நலம். அதுபோல உங்கள் நலனையும் அம்மா, அண்ணன், அண்ணி, குழந்தை சௌம்யா அனைவரின் நலனையும் அறிய ஆவல். உங்களிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்தேன். கடந்த இரண்டுமாதங்களாக பதிலில்லை. இப்போதெல்லாம் முன்புபோல நீங்கள் அடிக்கடி கடிதம் போடுவதில்லை.  என்ன கோபம்?

உங்களுக்கு சர்க்கரை குறைந்திருக்கிறதா?  இங்கிருந்து அனுப்பிய கருவியில் உங்கள் சர்க்கரை அளவைப் பார்ப்பதுண்டா? அடிக்கடிப் பார்த்து கண்ட்ரோலில் வைத்திருக்கவும். மாத்திரைகளை வேளாவேளைக்குத் தவறாமல் எடுத்துக்கொள்ளவும்.

அவ்வப்போது தலைசுற்றல் வருகிறதென அம்மா சொன்னார்கள், இப்போது பரவாயில்லையா? அவர்களுக்கும் ஒருவேளை சர்க்கரை இருக்குமோ? நான் போன முறை சொன்னது ஞாபகமிருக்கட்டும் அவரையும் குழந்தைவேல் டாக்டரிடம் காண்பித்து கம்ப்ளீட்டாக செக்-அப் செய்யவேண்டும். அண்ணி மறுபடி உண்டாகி இருப்பதாக எழுதியிருந்தீர்கள். சந்தோஷமாக இருந்தது. அதுபற்றியும் விசாரித்ததாகச்சொல்லவும். முன்புபோல ஏமாற்றக்கூடாதென்றும் ஒரு குட்டிப்பையனை பெற்றுத்தரனுமென்றும் அழுத்தம் திருத்தமா அவங்கக்கிட்டே சொல்லுங்கள்.

அண்னன் ஆபீஸ் பிரச்சினைகள் முடிந்ததா? ரூபாய் ஐம்பதினாயிரம் பணம் கட்டினால் கேஷியர் பிரமோஷன் கிடைக்குமென்று எழுதியிருந்தீர்கள். நானும் எனது பக்கத்து அப்பார்ட்மெண்ட்டில் இருக்கிற ஆப்ரிக்க பெண்ணொருத்தியிடம் நாலாயிரம் பிராங்க் கடன் வாங்கி அனுப்பினேன். பிரச்சினை தீர்ந்ததா?

எனக்கு என்ன எழுதறதுன்னு தெரியலை. திரும்பத் திரும்ப இப்படி எழுதறேனேன்னு நினைக்கவேண்டாம். எழுதாமலிருக்கவும் முடியலை. இவரது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய கடிதங்களில் எழுதியிருந்ததுபோலவே இப்போதும் பிரெஞ்சு பெண்ணோடுதான் இருக்கிறார். வீட்டிற்கு ஒழுங்காக வருவதில்லை. திடீரென்று வீட்டு நினைப்பு வந்தவர்போல வருவார், தனியாக அல்ல அவருடைய வெள்ளைக் வெள்ளைக் குதிரையோடு. வீட்டில் நுழைந்தவுடன் ஹாய்யாக சோபாவில் உட்கார்ந்துகொண்டு,”கொமான் சவா? (எப்படி இருக்கிறாய்)”, என அக்குதிரை கனைக்கும். “ஷெரி, எஸ்கெத்தா உய்ன் சிகாரெத் (டியர், சிகரெட் உன்னிடமிருக்குமா?) எனக்கேட்கவும், அவரும் அவள் வாயில் வைத்து பற்ற வைப்பார். மூக்கிலும் வாயிலும் அவள் விடும் புகை! சகிக்காது. அடுத்து கையோடு கொண்டுவரும் பீர் பாட்டிலை ஆளுக்கொன்று திறந்து கொண்டு,  விடிய விடிய கும்மாளம் அடிப்பார்கள். எதுவும் கேட்டுவிடக்கூடாது. கேட்டால் தீர்ந்தது. குடித்து முடிக்காத பாட்டில் எனது தலையிலோ தப்பிக்க முடிந்தால் சுவரிலோ மோதிச் சிதறும்.

எப்போதாவது ஒருமுறை வீட்டிற்கு வந்தாலும் சந்தோஷம் இருக்கிறதா? ச சு·பி ! ·பே பா லெ சினேமா! (போதும் ·பில்ம் காட்டாதே) என மாடியில் குடியிருக்கிறவர்கள் எழுந்துவரட்டும் என்பதுபோல கத்துவார். பிறகு விஸ்கி பாட்டிலைத் திறந்துகொண்டு சோபாவில் தொபீரென உட்காருவார். அவள் சிரிப்பாள். என்னை வைத்துக்கொண்டே அவர்கள் நடந்துகொள்ளும் விதம்…. எழுதவே கூசுகிறது.

எனக்கு பயமாக இருக்கிறது. பயம் அவர்கிட்ட இல்லை என்கிட்டதான். நான் படித்த படிப்பு, கற்றுகொண்ட தைரியமெல்லாம்  என்னை அநாதை ஆக்கிட்டதென்கிற பயம். ‘எல்லாம் விதிப்படின்னு’ அம்மா சொல்வாங்களே, அந்தக்குரல் கூட அழுது தொண்டை கட்டிட்டதுன்னா சரியா வரமாட்டேங்குது.

எதிர்வீட்டுக்கொரட்டில ரிக்ஷாக்கார குடும்பமொன்று இருந்தது ஞாபகமிருக்கா? அவன் பேருகூட ‘வரதன்’ன்னு ஞாபகம். குடித்துவிட்டு மனைவியை அடிக்கிற மறுநாள் ‘எம்.ஜி.ஆர். படத்துக்கு ஜோடியா போவாங்க. அம்மா அவளை கேலிசெய்வாங்க. அந்த மாதிரி ‘மறு நாள்’ அமைஞ்சாகூட போதும்னு மனசு சொல்லுது. நானும் அம்மாவின் கேலியை ஏற்று வரதன் மனைவியைப்போலவே சிரித்து மழுப்ப தயார்.

பக்கத்திலிருக்கும் ஆப்ரிக்க பெண்தான் எல்லா உதவிகளையும் செய்கிறாள். சோஷியல் மேடத்திடம் அவ்வப்போது அழைத்துச்சென்று எனக்குச் சாப்பாட்டிற்கு வழி செய்கிறாள். பிரான்சுக்கு வருவதற்கு முதல் நாள் அம்மா,” உனக்குப் பிடிச்சதுண்ணு வத்த குழம்பும், சுட்ட அப்பளமும் செய்தேன், வயிற்றுக்கு ஒழுங்கா சாப்பிடு!” என்றார்கள்.  ரொம்ப பசிச்சா? அம்மாவின் இரவல் குரலால் என்னை நானே கேட்டுக்கிட்டு, சாப்பிட உட்காருகிறேன்.

பிரெஞ்சு பாஷை எனக்கு இன்னும் பிடிபடவில்லை. நான் படித்த படிப்பிற்கு அங்கீகாரமில்லை. இரண்டுவாரங்களாக ஒரு வயதான தம்பதிகளிடம் வீட்டு வேலை பார்க்கிறேன். மற்ற நேரங்களில் எதையாவது நினைத்துக்கொண்டு அழுகிறேன். அழும்போதுகூட யாராவது பக்கத்தில் இருந்தால்தானே ஆறுதல். சேர்ந்தாற்போல தொடர்ந்து சில நாட்கள் ஓய்வின்றி அழணும், அதுவும் உங்களையெல்லாம பக்கத்தில் வைத்துக்கொண்டு. அது முடியுமா அப்பா? இந்தியாவுக்கு வந்து விடட்டுமா? எனக்கு உடனே கடிதம் போடவும்.

இப்படிக்கு
கலா
—————————————
புதுவை, 05-02-2001

சௌபாக்கியவதி கலாவுக்கு,

அப்பா அம்மா இருவரும் ஆசீர்வதித்து எழுதிக்கொண்டது. இங்கு நாங்கள் இருவரும் நலம். அதுபோல உன் அண்ணன், அண்ணி, குழந்தை சௌம்யா ஆகியோரும் நலம்.

சௌம்யாவுக்கு எப்போதும் உன் ஞாபகம் தான். அண்ணனுக்கு கேஷியர் உத்தியோகம் கிடைத்து ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறான். எனக்கு சர்க்கரை அளவு கட்டுபாட்டில் இருக்கிறது, நீ பயப்பட வேண்டியதில்லை. அம்மாவின் தலைச்சுற்றல் குறைந்திருக்கிறது. போனவாரங்கூட டாக்டரிடம் காட்டினோம். புதிதாக சோனி கலர் டி.வி. ஒன்று சமீபத்தில் வாங்கினோம். அவளுக்கு மிகவும் சந்தோஷம். மெகாசீரியல்களைப் பார்க்க காலை பதினோருமணிக்கே உட்கார்ந்துவிடுகிறாள்.

நீ எங்களைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிராதே. நீ சந்தோஷமாக இருந்தால்தான் எங்களுக்கு நிம்மதி. உன் கடிதத்தைப் பார்த்ததிலிருந்து அம்மா ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை.  அவளும் புலம்ப ஆரம்பித்துவிட்டாள். எல்லோரும் உனது நினைவாகவே இருக்கிறோம். தைரியமாக இரு. அவசரப்படவேண்டாம். எல்லாவற்றிர்க்கும் மேலே வேதபுரீஸ்வரர் இருக்கிறார்; நம்முடைய வேண்டுதல் வீண்போகாது; அந்த ஊரிலும் கோவில்கள் இருப்பதாக அறிந்தேன்; நேரம் கிடைக்கும்போது போய்வா; பிரார்த்தனைக்குப் பலன் கிடைக்கும். திரிபுரசுந்தரி கடாட்சத்தால் ஒரு குழந்தை பிறந்தால், குறைகளெல்லாம் தீர்ந்துவிடும். பேரனோ பேர்த்தியோ எதுவென்றாலும் பரவாயில்லையென அம்மா சொல்லச்சொன்னாள்.

ஆண்களென்றால் அப்படி இப்படித்தான் இருப்பார்கள். நீதான் அட்ஜெஸ்ட் பண்ணிப்போகவேண்டும். உன் ஜாதகத்தை நமது ஜோஸியரிடம் காட்டினேன். சனிதிசை நடப்பதாகச் சொன்னார். இன்னும் இரண்டு ஆண்டுகள் நீ சிரமப்படவேண்டியிருக்குமென்று கூறினார். பிறகு யோகதிசையாம். நான் திருநள்ளார் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வருகிறேன். சற்று பொறுமையுடன் இருந்து நீதான் அவரைத் திருத்தவேண்டும். கடவுள் கிருபையால் எல்லாம் நல்லபடிமுடியும்.

உன் தோழி கல்பனா ஸ்டேட்ஸ்லிருந்து வந்திருந்தாள். போன வருடம் வாங்கிய மனையில் வீடு கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். முப்பது லட்சத்துக்கு எஸ்டிமேட் போட்டிருக்கிறார்கள். இருபது இலட்சத்திலேயே நாம் பிரமாதமாகக் கட்டிவிடலாம். நம் வீட்டு எதிரிலேயே 1400 சதுர அடிகள் கொண்ட மனை விற்பனைக்கு வருகிறது. ஏதாவது ஏற்பாடு செய்து பணம் அனுப்பு. அங்கெல்லாம் சவரன் என்னவிலை போகிறது? வரும்போது கொண்டுவந்தால் உங்கள் ஊர் பணத்தைக் காட்டிலும் கூடுதலாக இலாபம் தரும். அண்ணனுக்கு ‘ரேமெண்ட்வெல்’ வாட்ச்  ஒன்று வேண்டுமாம். யாரிடமாவது மறக்காமல் கொடுத்தனுப்பவும். சௌம்யாவுக்கு கிண்டர் சாக்லேட் ஒரு பாக்கெட்டும் எனக்கு ஒரு கெல்லெட் ஷேவிங் செட்டும் ஏற்பாடு செய்யவும்.

இப்படிக்கு
அப்பா
நன்றி குங்குமம் 10-02-2001
————————————————————-

நாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள்-4

அவனோட கணக்கு

கதை பிறந்தகதை: இக்கதைக்கு காரணம் சொல்ல என்ன இருக்கிறது. உலக நடப்புகளை பார்த்துவருகிறோம். எத்தனை கூச்சமில்லாமல் பேசுகிறார்கள். இனத்திற்கு கொள்ளிவைத்துவிட்டு இனத்தலைவர்கள் எனச் சொல்லிக்கொள்கிறார்கள். கை இரத்தம் உலரும் முன்பாக காந்தி சிலைக்கு மாலை போடுகிறார்கள். நாத்திகனென்று சொல்லிக்கொள்பவன்கூட அவனவன் வழியில் பிராயசித்தம் தேடுகிறான். சலவைக்குத் துணிபோடும்போதுகூட சட்டைப்பயை ஆயிரம்முறை பரிசோதிக்கும் அரசியல் வாதி, இலவசத்தை வாரிவழங்குவதற்கு ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறான் என்பதை யோசித்ததால் பிறந்த கதை. காந்தி, காமராஜ், அண்ணா மன்னிப்பார்களாக! இக்கதை திண்ணை இணைய இதழில் மார்ச் 9 -2003ல் பிரசுரமானது.

அவனோட கணக்கு

அவர் நினைவிலிருந்து எல்லாம் துடைக்கப்பட்டிருந்தது. சுத்தமாக. அட்சரசுத்தமாக. ‘நான்’ என்ற  மானுடப் பிறவியின் கடந்த கால கர்மாக்களைத் திரும்ப அழைக்க முயன்று களைத்துப் போயிருந்தார். இறுதிச் செயற்பாடுகள்மட்டும் அப்போதைக்கப்போது நினைவைத் தொட்டுக் கண்ணாமூச்சி ஆடின.

காலையில் காபியைக் குடித்துவிட்டு, காலில் விழுந்த கட்சித் தொண்டர்களை எழுப்பியது நிஜம். பின்னர் தலைமைச்செயலர், போலீஸ் கமிஷனர், மூணாறு வேணுகோபால் ஜோஸ்யர் என கலந்தாலோசித்துவிட்டுத் தலமைச் செயலகத்துக்குப் புறப்பட இருந்ததும் நிஜம். முதலும் கடைசியுமாக மார்புவலி அந்தச் சமயத்தில் அவருக்கு வந்ததும் நிஜம். ட்ராபி·கை ஸ்தம்பிக்கச் செய்து ஓடவைத்த ஆம்புலன்ஸ், தமிழ்நாட்டின் முதற்தர மருத்துவ மனை, நாட்டின் தலைசிறந்த டாக்டர்கள், மருத்துவ செலவுக்கு அரசு கஜானாவைத் திறந்துகொள்ள முடிந்த சாமர்த்தியம், மத வேற்றுமையின்றிப் பிரார்த்தனையென எல்லாமிருந்தும் அவரது ஆயுளைக் கூட்டமுடியவில்லை. அதற்குப்பிறகு நடக்க வேண்டியவை நடந்து முடிந்து, இங்கே வந்திருந்தார்.

பெரிய மாளிகையில் வண்ண ஓவியங்களால் நிரப்பப்பட்ட விதானம், சிற்பங்கள் நிறுத்திவைக்கப்பட்ட கூடம். தீபங்கள் குறைந்து பின்னர் வளர்ந்து, வரிசையில் முடிவின்றித் தொடர்கோடாய் எரிய, சாளரங்கள் வழியே ஊதற்காற்று ஆக்ரமித்துக் கொண்டிருக்க வரிசையாக இருக்கைகள். ஆயிரக்கணக்கில் காத்திருக்கின்ற மக்கள். கறுப்பு, வெள்ளை, மஞ்சள், பழுப்பு எனக் கதம்பச் சாயலில், முகம் சோர்ந்து தங்கள் முறைக்காகக் காத்திருக்கிறார்கள். சிறிது நேரத்திற்கு முன்னர்தான் 235767 எண்ணுள்ளவரை கூப்பிட்டிருந்தார்கள். இவரது அட்டையைப் பார்த்துக் கொண்டார். வரிசை எண்:4563980 என்றிருந்தது. இங்கே காத்திருப்பதில் நேரம்கழிவதை உணர்வது கடினமாக இருந்தது. எனினும் அறிமுகமற்ற அந்த இடத்தின் மீதும், மனிதர்கள் மீதும் எரிச்சல். பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்தார். திடீரென அவரது எண் அழைக்கப்பட எழுந்து சென்றார்.

விஸ்த்தாரமான பெரிய அறையில் ஏஸி முணுமுணுக்க, இன்டர் காம், கம்ப்யூட்டர் என ஒரு நவீன அலுவலகத்தின் சகல சம்பத்துகளும் சூழ நடுநாயகமாக அந் நபர். அவர் உட்கார்ந்திருந்த தோரணை இவரது ரத்தத்தில் உஷ்ணமேற்ற, எச்சிலைக்கூட்டி வெறுப்பினை விழுங்கிக் கொண்டார்.

– வா! உட்காரு, சிவசாமிதானே உன்பேரு? – எடுத்த எடுப்பில் ஏக வசனத்தில் பெயர் சொல்லி அழைக்கப்பட  ஆடிப்போய்விட்டார்.

–  இருக்கலாம், சரியா ஞாபகம் இல்லை. போகட்டும் நீ சித்திரகுப்தன் தானே ? தன் சந்தேகத்தைத் தெளிவு படுத்திக்கொள்ள விரும்பி, எதிர்க்கேள்வியை வைத்தார்.

–  மிஸ்டர் சிவசாமி! இங்கே நான் உன்பேரைச் சொல்லலாம், நீ என் பேரைச் சொல்லி அழைக்கக் கூடாது. எங்களைப் பொறுத்தவரையில் மாரைடைப்புண்ணு சொல்லி வந்திருக்கிற உயிர்கள்ல நீ 705 வது ஆள். கொஞ்சம் இரு. உன்னைப் பற்றி என்ன பதிவாயிருக்குண்ணு பார்க்கிறேன்’, அவன் விரல்கள் கம்ப்யூட்டர் கீ போர்ட்ல ‘கட கட ‘ வென்றது. பிரிண்டரை ஆன் செய்து அச்சிட்ட காகித்தைக் கிழித்து எடுத்து கண்களின் நேர்கோட்டின்கீழ் சற்றுத்தள்ளி வைத்துப் படித்தவன், மெல்லிய சீழ்க்கையில் அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டான்.

– பெயரைத் தெரிஞ்சுகிட்ட. மற்றத் தகவல்கள் வேண்டாமா ? கேளு! என்று சொல்லிவிட்டு, இவரது பதிலை எதிர்பார்க்காமலேயே கடகடவென ஒப்புவிக்க ஆரம்பித்தான்:’தொழில்: அரசியல்வாதி. குடும்பநிலை:பிரம்மச்சாரி. இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தை. ஊழல் செய்து சம்பாதித்த சொத்து உலகமெங்கும் பரவியிருக்கு, தொடர்ந்தான்.

– ஆனால் அதற்காக கடவுள்களுக்கு நிறைய செஞ்சிருக்கன். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை எந்தக் கோவிலையும் விட்டதில்லை. காணிக்கை, நாள் கிழமைகள்ல உபவாசம், முடிஞ்சப்பல்லாம் யாகம்’. இதெல்லாம் அதுல குறிப்பிட்டிருக்கணுமே ? ‘ இடையில் குறுக்கிட்டு சந்தேகத்தை எழுப்பினார்.

– ம்…அப்படி எதுவும் உன்னோட ‘பயோடட்டாவில’ இல்லையே! பற்களுக்கிடையில் பென்சிலை கொண்டுபோய்க் கடித்துத் துப்பிவிட்டுச் சொன்னான்.

– சிவசாமிக்குத் தைரியம் வந்தது. முதன் முறையாக நிமிர்ந்து உட்கார்ந்தார்.

– என்னோடக் கணக்குப்படி  சொர்க்கந்தான் கொடுத்திருக்கணும். என்னோட காணிக்கைக்கும் செய்திருக்கின்ற யாகத்திற்கும், இக் கும்பலில் உட்கார வைத்திருக்கவே கூடாது. ஆரம்பத்திலேயே சொர்க்கத்துக்கு ஏற்பாடு செய்திருக்கணும்.

– இப்படி குறுக்கே பேசக்கூடாது. இங்கே நாந்தான் பேசணும். உனக்கு என்ன செய்யணும்னு எங்களுக்கு நல்லாத் தெரியும். இப்போதைக்கு நீ மறுபடியும் கீழே போகவேண்டியிருக்குது, – சித்திர குப்தன் தொடர்ந்தான்..

– கீழேன்னா?

– பூமிக்கு.

– அப்ப எனக்கு மறு பிறவின்னு சொல்லு.. ‘நேற்று ‘நான் எப்படி இருந்தங்கறத கவனத்துல வச்சுகிட்டு செஞ்சா சரி. – சிவசாமி முதன் முறையாக அடக்கி வாசித்தார்.

– ம்.. உன்னோட ‘நேற்று’ மட்டுமல்ல ‘இன்று’ ‘நாளை’ கூட நாங்க அறிஞ்சதுதான். பிறப்பு அதனையொட்டிய கர்மா, ஊழ் எல்லாமே நாங்க தீர்மானிக்கறதுதான். இதுல உன்னோட பங்கு நீ எப்படி அதனைச் சந்திக்கிறங்கிறது அல்லது செயல்படுத்தறங்கிறதுதான்.’

-என்னவோ சொல்லி குழப்புற. முடிவா என்ன சொல்ல வர?

– இன்றைய தேதியில உனக்கு சொர்க்கமும் இல்லை நரகமும் இல்லைன்னு சொல்லவந்தேன்.. கைலாயம் வைகுண்டம் இரண்டுமே உன்னை ஏத்துக்க முடியாதுண்ணு கையை விரிச்சுட்டாங்க. நீ கடவுளுக்குக் காணிக்கை கொடுத்தங்கற. நான் முன்னமே சொன்ன மாதிரி, உன்னோட புண்ணிய லிஸ்ட்ல அதனைப் பற்றிய எந்த அடையாளமும் இல்லை. அதற்கான காரணத்தைக் கடவுள்கள் கிட்டத்தான் கேட்கணும் ‘

இடையே இண்டர்காம் ஒலிக்க அவரை அமைதிப்படுத்திவிட்டு, சித்திரபுத்திரன் ரிசீவரைக் கையிலெடுத்தான்.

– சார் இங்கே, ஆப்ரிக்காவில் மனித மாமிசம் சாப்பிடும் ஒருவனைச் சிங்கம் அடித்துக் கொன்றதால், அவசர பிரிவுக்குக் அழைத்து வந்திருக்கிறார்கள், என்ன செய்யலாம் ?

– நல்ல மனிதன், அவனுக்கு வேண்டிய உதவிகள் செய்து சொர்க்கத்துக்கு அனுப்பி வை!

– என்ன இது அநியாயமாயிருக்குது. மனிதனை உயிரோடு சாப்பிடுபவனுக்கு சொர்க்கமா?

– ஆமாய்யா!.. அப்படித்தான் எங்க கம்ப்யூட்டர் சொல்லுது. உங்களை விட அவன் தேவலாமாம். உனக்கு மறு பிறவியான்னு கேட்ட, சொல்லப்போனா பூமிக்கு உன்னை மறுபடியும் அனுப்புவது, தண்டனைக்காகன்னு சொல்லலாம்.

– எப்படி ?

– அப்பாவி வாக்காளனா.

————————————————————————————————————————-