Monthly Archives: நவம்பர் 2020

இலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4: ‘பெண்- மொழி-புனைவு’

தமிழ் இலக்கிய சூழலில் பெண்ணியக்கோட்பாடுகள் என்பதை அடுத்து க.பஞ்சாங்கத்திண் பெண்ணியல் சார்ந்த கட்டுரை வரிசைகளில் முக்கியத்துவம் பெறுவது பெண்-மொழி- புனைவு. இதே பெயரில் கட்டுரை ஆசிரியரின் நூலொன்றும் வந்துள்ளதாக, நவீன இலக்கிய கோட்பாடு நூல் நமக்குத் தெரிவிக்கிறது.

பெண்பற்றிய கற்பிதம் பிற கற்பிதங்களைப்போலவே ‘மொழி-புனைவு’ என்கிற இரு காரணிகளின் சேர்க்கையால் உருவானது என்பது ஆசிரியரின் கருத்து. இதனை முன்வைத்ததில் ஆணுக்குப் பெரும்பங்குண்டு என்பதை உறுதிபடுத்துகிற ஆசிரியர் தமிழ்ப் பண்பாட்டை வடிவமைத்ததும் அதுவேதான் என்கிறார். “ஒரு தந்தை வழி சமூகத்தில், ‘பெண்ணின் அடையாளம்’ என்பது ஆணால் புனையப்பட்ட ஒன்றுதான். ஆண் பெண் உறவு முறையில் ஆணின் அதிகாரம் பெண் உலகத்திற்குள் நுழைவதில் பெரும் பங்கு அளித்திருப்பது மொழிதான் என்பது தெரிகிறது”. “இந்த மொழியின் திருவிளையாடல் தமிழ்ப் பண்பாட்டை வடிவமைப்பதில் ஆழமான செல்வாக்கு செலுத்தியுள்ள தொல்காப்பியத்தில் எவ்வாறு ஆணின் மொழியாக வெளிப்படுகிறது? இவ்வாறு ஆண் கற்பித்துள்ள ‘அர்த்தத்தை மாற்றி பெண் தன் நோக்கில் அர்த்தங்களைக் கற்பிக்க இன்று எவ்வாறு தன் இயக்கத்தை அமைத்துக்கொள்ளவேண்டும்? எனும் இரண்டின் அடிப்படையில் இந்தக் கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது ” என எடுத்த எடுப்பிலேயே தமது கட்டுரையின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார்,
” இது இந்த உலகத்தின் இயற்கை ; இது இந்த பெண்ணின் இயற்கை குணம்” என்று ஒரு பொருளின் இயற்கைப் பண்பை அறிந்துகொண்டதாக உரிமைகொண்டாடுவதெல்லாம் நம்முடைய ‘மொழி’ என்கிற வாய்ப்பாடு மூலம் நமக்கு வந்து சேர்ந்த புனைவுகள்தாம்” எனக் கட்டுரையைத் தொடங்குகிற ஆசிரியர்,  லக்கான் (Jacques lacan) மற்றும் •பூக்கோ(Michel foucault) என்கிற இரு பிரெஞ்சு அறிஞர்களின் கருத்துருவாக்கங்களின் அடிப்படையில் தமது வாதங்களை வைக்கிறார்.

“அம்மாவிடம் இருந்து பிரித்துத் தன்னைத் தனியாக அடையாளம் காணும் உணர்வைக் குழந்தையானது குறியீட்டு ஒழுங்குடைய மொழி எனும் அமைப்பிற்குள் நுழைந்த பிறகுதான் அடைகிறது” என்கிற லக்கான் கூற்றையும்; ஒரு பொருளுக்கு அர்த்தம் என்பது அதிகாரம் யாருடைய கட்டுபாட்டுக்குள் இருக்கிறதோ அவர் புனைந்து தருகிற மொழிதான் அப்பொருளுக்கான அர்த்தம் என்றாகிறது”, என்கிற •பூக்கோ கூற்றையும் தெரிவித்து, ஒரு பொருளுக்கான அர்த்தத்தைக் கட்டமைப்பதில் ஆசிரியர் மொழிக்கும் புனைவுக்கும் உள்ள ஆற்றலைத் தெரிவிக்கிறார்.
ழாக் லக்கான் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஓர் உளப் பகுப்பாய்வாளர். பிராய்டின் உளவியல் ஆய்வுமுடிவுகள் உயிரியல் உண்மைகளைக் காட்டிலும் பெரிதும் மொழிக் கூறுடன் இணக்கமானவை என்ற கருத்தியத்தை முன் வைத்தவர். குழந்தைப்பருவத்தில் முதன் முதலாக தன்னைப் பிறராக அறியநேரும் ஆடிப் படிநிலை( Stade du miroir)பற்றி விரிவாக ஆய்வு செய்தவர்.

மிஷெல் •பூக்கோ ஒரு தத்துவவாதி, முன்னவரைபோலவே பிரான்சு நாட்டைச்சேர்ந்தவர். அறிவுக்கும் அதிகாரத்திற்குமான உறவை வரையறுத்தவர். வெவ்வேறு துறையச் சார்ந்தவர்களாயினும் ‘தன்’ னை கட்டமைத்தலில் (subjectivation) மொழியின் பங்கு என்ன என்பதை தெளிவுபடுத்தியதில் ஒன்றிணைகிறவர்கள்.

“அதிகாரம் எப்பொழுதும் தான் அதிகாரம் செலுத்துகிற பொருளின் மொழியை பிடுங்கிகொள்கிறது அல்லது அடக்கிவைத்துவிடுகிறது” (ந.இ.கோ.பக்.58)” என்ற பூக்கோவின் கருத்துருவாக்கத்தை முன்வைக்கும் கட்டுரை ஆசிரியரின் சொற்றொடரில் உள்ள ‘அதிகாரத்தை’ எப்படி வேண்டுமானாலும் பொருள்கொள்ளலாம். ‘அதிகாரம்’ என்ற ஒற்றைசொல்லின் பின்புலத்தில் பல காரணிகள் தனித்தோ, இணைந்தோ இருக்கின்றன. ஆண்-பெண்; தடித்தவன்-மெலிந்தவன்; கற்றவன்-கல்லாதவன்; பெரும்பான்மை-சிறுபான்மை; கோபம்-அமைதி; என்கிற இருமை வரிசைகளில் முதலாவது அதிகாரத்தைப் பொதுவில் கைப்பற்றுகிறது. நியதிக்கு மாறாக இந்த ஜோடியில் இரண்டாவது முதலாவதை அதிகாரம் செலுத்துகிற தருணமும் உருவாகலாம். அப்போதும் இந்த ஜோடிகளில் ஒன்று, அவர்களுக்கிடையில் ஏதோவொரு செயல்பாட்டில் மற்றதிடம் போட்டியிட முடியாத கட்டத்தில் தான் அடிமையாக, பிறமை எஜமானனாக அதிகாரத்தைக் கையிலெடுகிறது. எதிரியின் ஆயுத உரிமத்தை இரத்து செய்து நிராயுதபாணியாக்கினால் வெகு எளிதாக அவனைப் பலிகொடுக்கலாம். மொழி ஆயுதத்தை அதிகாரம் தனதாக்கிக்கொள்ளும் சூட்சமும் அதுவேதான்.

“தேவ பாடையைப் பேசக்கூடாது மீறிப் பேசினால் நாக்கு வெட்டப்படும்” எனும் மனுதர்ம சட்டம்; “யாகாவாராயினும் நாகக்க” எனும் வள்ளுவன்; “என் காதலன் என்னைவிட்டு அகலும் படியாக ப் பேசிய ஊரார் ‘நா’வானது ஏழு நண்டு மிதித்த ஒரு நாவல் பழம்போல அழுகுகிப்போக,” சாபமிடும் குறுந்தொகைத் தலைவி; வாயாடி மனைவியிடமிருந்து மணவிலக்கு பெற அனுமதித்த பண்டைய சீன நாட்டின் சட்டம்; பெண்ணின் ‘நா’விற்கு எதிரான வழக்கிலிருக்கும் பழமொழிகள் என அனைத்துமே ஆசிரியருக்கு அதிகாரத்திற்கும் மொழிக்குமுள்ள நெருங்கிய பிணைப்பை வெளிப்படுத்தும் சான்றுகள்.

தொல்காப்பியம்: ஓர் ஆணின் அதிகார அணுகுமுறை

இதன் தொடக்கத்தில் கூறியதுபோல கட்டுரை ஆசிரியருக்கு தொல்காப்பியர் ஆணாதிக்கத்தின் பிரதிநிதி. ஆசிரியர் சொற்களில் எடுத்துரைப்பதெனில் “மொழிக்குள்ள ஆற்றலை புரிந்துகொண்டு……பெண்ணின் வாய் மொழியில் கை வைக்கிறார்”. களவின் மரபை நெறிப்படுத்துகிற தொல்காப்பியர் ‘சிறத்தல்’ தலைவிக்கும், ஐயம் தலைவர்க்கும் உரியதென்பதையும், கைக்கிளையில் “சொல் எதிர் பெறாமல், சொல்லிச் சொல்லி இன்புறுவதற்கு ஆணுக்கே அவர் இடம் தருகிறார் எனக்கூறியும் தொல்காப்பியர் “ஆணோடு கொள்ள நேர்கிற ஆரம்ப உறவிலேயே பெண்ணுக்கான சொல்லாடல் தடை செய்யப்படுகிறது” என்கிறார்.
தொல்காப்பியரை பெண்ணின் எதிரி என நிறுவ ஆசியர் கூறும் மற்றொரு எடுத்துக்காட்டு “காதல் வாழ்வின் தொடக்கத்தில் ஏற்படுகின்ற வேட்கை, இடைவிடாது நினைத்தல், மெலிதல், நாணம், நீங்குதல்… முதலான மனநிகழ்வுகளை தலைவன் தலைவி இருவருக்கும் பொதுவெனக்கூறும் தொல்காப்பியர் இம்மன நிகழ்வுகளின் தொடர்விளைவான மொழிப்படுத்தி பேசுவது மட்டும் ஆணுக்கே உரியதென கூறுவது கட்டுரை ஆசிரியர் எடுத்துக்காட்டியிருப்பதுபோல எவ்விதத்திலும் நியாயமில்லைதான். அதுபோலவே பஞ்சாங்கத்திடம் தொல்காப்பியர் வாங்கிக் கட்டிக்கொள்ளும் மற்றொரு இடம் கற்பியலில் ‘பிரிவின்’ கீழ் “மொழி எதிர்மொழிதல் பாங்கற்குரித்தே” எனக்கூறி தலைவின் வாயை அவர் (தொல்காப்பியர்) அடக்கும் இடம். கட்டுரை ஆசியருக்கு தொல்காப்பியர் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் அடையாளம். பெண்களின் மொழி ஒடுக்கப்பட்டு ஆண்களின் மொழி உருவாக்கத்திற்குக் காரணமானவர். தமிழ்மரபில் காணும் பெண்ணின் தாழ் நிலைக்கு தொல்காப்பியரும் பொறுப்பு.

டார்வின் மற்றும் பிராய்டு
தொல்காப்பியரை அடுத்து டார்வினும் பிராய்டும் நண்பர். க.பஞ்சாங்கத்தின் கோபத்திற்கு ஆளாகிறார்கள். டார்வின் சிந்தனையும், பிராய்டுவின் சிந்தனையும் ‘ஆண் வலிமையானவன் பெண் மென்மையானவள்’ என்ற தொல்காப்பியத்தின் சிந்தனையை முன்வைக்கின்றன என்கிற கருத்தியம் ஓர் உணர்ச்சிவேகத்தில் நண்பரிடம் உருவாகியிருக்கலாம் என்பதென் எண்ணம். “வலிமையுள்ளவை வாழும் மற்றவை மாயும்” என்கிற டார்வின் கூற்றையும் அதுபோலவே பிராய்டின் பகுப்பாய்வு முடிவுகளையும் ஆணாதிக்க குரலாகப் பார்ப்பது சரியாகாது. அறிவியல் முடிவுகள் தொல்காப்பியம்போல பண்பாட்டு அரசியல் பேசவந்ததல்ல, மரபுகளால் கட்டமைக்கப்பட்டதுமல்ல. அவை ஆய்வின் முடிவுகள், பகுத்தறிவின்பாற்பட்டவை. டார்வினினுடைய இயற்கை தேர்வு என்ற முடிவின்படி ஓர் உயிரினத்தின் முடிவானது அதன் உயிர் அணுக்கள், பிற உயிரினங்கள், சுற்று சூழல்கள் சார்ந்த விடயம். இத்தகைய சூழலில் பிறவற்றைவிட சிறந்த முறையின் தன்னைத் தக்கவைத்துக்கொள்ளும் ஓர் உயிரினமே பிழைத்து உயிர்வாழக்கூடியதாக இருக்கும். இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். எனவே வலிமை என்ற சொற் பிரயோகத்தை பெண்களுக்கு எதிரான அரசியலுக்குரியது என்ற முடிவுக்கு வர இயலாது. அவ்வாறே யூதர் பிரார்த்தனையின்படி “கடவுளே என்னை ஒரு பெண்ணாக படைக்காததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்” என்று ஆண்களும்; “கடவுளே என்னை ஆண்களின் விருப்பப்படி படைத்தமைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன்” எனப் பெண்களும் சொல்வதாலேயே அம்மரபிலிருந்து வந்த பிராய்டு ஒரு ஆணாதிக்க ஆசாமியாகத்தான் இருக்க முடியும் என நினைப்பதும், அவர் கண்டறிந்த ‘உளப்பகுப்பாய்வு உண்மை’, ஆணாதிக்க சிந்தனையெனத் தீர்மானிப்பதும் முறையாகாது. ஆணாதிக்க தொல்காப்பியர் மரபிலிருந்து, தமிழ்ப்பெண்ணுரிமைக்குக் குரல்கொடுக்க ஒரு கட்டுரை ஆசிரியர் கிடைக்கிறபொழுது, பிராய்டு விடயத்திலும் அது ஏன் சாத்தியமாகாது?

பெண்ணியல் கோட்பாடுகள்

இறுதியாக க.பஞ்சாங்கம் மேலை நாட்டுப் பெண்ணியற் கருத்துகள் அடிப்படையில் பெண்ணுக்கான மொழியை உருவாக்கவேண்டுமென்கிறார். “ஆணாதிக்கம் நிறுவியுள்ள இந்தக் குறியீட்டு அமைப்பு முறையில் இருந்து பெண் வெளியேவர மொழி உலகம் உருவாவதற்கு முன்பு இருந்த இயற்கையான- உண்மையான மூலப்பெண்னாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள இவள் என்ன செய்யவேண்டுமென்ற கேள்வியையும் எழுப்பி அதற்குப் பதில் கூறுவதுபோல “பெண்ணின பாலியலுக்கான சில கோட்பாடுகள் இருக்குமானால் அவைகள் ஆண்களின் மொழிக்கு வெளியேதான் இருக்க முடியும்” என ‘பெண்னெனும் படைப்பு’ நூலிலிருந்து மேற்கோள் காட்டுவதோடு, பெண்களுக்கான மொழியை உருவாக்க ஹெலென் சீக்ஸ் என்கிற மேலை தேயத்து பெண்மணியின் யோசனைகளைப் (பெண்கள் கவிதைப் படைக்கவேண்டுமென்பது அதிலொன்று) பின்பற்றசொல்கிறார். அதேவேளை தமிழ்ச்சூழலுக்குப் பொருந்துபடியான அப்பெண்மொழி அமையவேண்டும் என முடிக்கிறபோது வழக்கம்போல தமிழினத்தின் மீது கட்டுரை ஆசிரியருக்குள்ள உண்மையானப் பற்றுதலை விளங்கிக்கொள்ள முடிகிறது.

(தொடரும்)

கோட்பாடுகள் மற்றும் நோபல் பரிசு ஒரு சிறு விளக்கம்

கடந்த 19 நவம்பர் அன்று சித்தூர் அரசு கல்லூரி, பிறழ் சர்வதேச ஆய்விதழ் இருவரும் இணைந்து நடத்திய ஒப்பீட்டுக் கோட்பாடுகள் அடிப்படையிலான எனது உரை தலைப்பு புனைகதை உலகம் : கிழக்கும் மேற்கும்.

அ. கோட்பாடுகள்

உரையில் ஓரிடத்தில்  கோட்பாடுகள் தேவைவையில்லை என – ( ஒப்பீடு கோட்பாடு  அடிப்படையில் உரையை அமைத்துக்கொண்டிருந்தும்) – ஓரிட த்தில் குறிப்பிட்டேன்.  இது தவறாக புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதால் இந்த விளக்கம்.

1. நிகழ்ச்சியில் பங்கெடுத்த பிற பேராசிரிய பெருமக்கள் அடிப்படையில் ஆய்வறிஞர்கள், கோட்பாடுகளை முன்வைத்து தங்கள் உரையை அமைத்துக்கொண்டார்கள்.

          நான் ஆய்வாளன் அல்லன், ஒரு கலைஞன் எழுத்தாளன், நிகழ்ச்சியின் உரைப்பொருளுக்கு ஏற்ப எனது தலைப்பை தேர்வுசெய்தாலும் அதை ஒட்டியே பேசினாலும், கோட்பாடுகள்பற்றிய எனது கருத்தை  சொல்லும் சுதந்திரத்தை எடுத்துக்கொண்டேன். உரையைக் கேட்ட நண்பர்களும் அது சார்ந்த கேள்வியை எழுப்பவில்லை, இருந்தபோதும் தவறாக புரிந்துகொள்ள வாய்ப்பிருப்பதால் இச்சிறு விளக்கம்.

          கோட்பாடுகள் பற்றிய ஞானம் தேவையா ?

தேவை தேவை.  திறனாய்வாளர்களுக்கு மட்டுமல்ல இலக்கியவாதிகள், படைப்பாளிகள் அனைவருக்கும் தேவை.

          அடிப்படையில் நான் படைப்பாளி. அது பற்றிய ஞானம் எனக்கும் வேண்டும். யாப்பிலக்கணம் இல்லாமலும் இன்று கவிதை எழுதலாம் என்கிறபோதும், யாப்பிலக்கணம் பற்றிய புரிதலை  இன்றைய கவிஞன் கொண்டிருப்பதில் தவறு இல்லை. யாப்பிலக்கனத்துடன் எழுதும் மரபுக் கவிதயோ, யாப்பிலக்கணத்தை வேண்டாமென்று ஒதுக்கிய புதுக் கவிதையோ, எதுவாக இருப்பினும் அதில் கவிதைப் பண்பு இருக்கிறதா, . கலைப்படைப்புக்குரிய நுட்பங்களும் நேர்த்திகளும் இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.

          கோட்பாடுகளை பொத்தாம் பொதுவாக நிராகரிக்க இல்லை. ஒரு படைப்பாளியின் நிலைப்பாடாக வேண்டாமென்றேன். ஒட்டுமொத்த படைப்பாளிகளையும் கலந்து ஆலோசித்து  அவர்களின் பிரதிநிதியாக இதை தெரிவிக்க இல்லை. இது எனது சொந்தக் கருத்து, இதில்  ஒரு சிலர் உடன்படலாம் , சிலர் மறுக்கலாம்.

          கோட்பாடுகள் அரூப தொழில் நுட்ப கருவிகள். இவ்வியங்கியல் அலகுகள் மனிதர் வாழ்வின் ஒட்டுமொத்த நகர்வை சீராக முன்னெடுத்துச்செல்ல ஓர் ஒழுங்கைப்பேண நிச்சயம் தேவை. ஆனால் கலையும் இலக்கியமும் அறிவியல் அல்ல அதற்கு ஒழுங்கு அவசியமற்றது. அதை கோட்பாடுகள் என்ற பட்டியில் எதற்காக அடைக்கவேண்டும் என்பதென் கேள்வி.கோட்பாட்டிடம் ஒப்படைக்கும் மனம் சர்க்கஸ் விலங்காக மாறும் அபாயம் உள்ளது. கோட்பாட்டின் சாட்டைக்கு அஞ்சி சேட்டைகள் செய்யக்கூடிய நெருக்கடி உள்ளது. கலையும் இலக்கியமும் தளைகளின்றி சுதந்திரமாக சொல்லப்படவேண்டும் என்ற ஆதங்கத்தில் தெரித்த வார்த்தைகள் அவை.

 கோட்ப்பாடுகள் பற்றி தெளிவாக புரிந்துகொண்டது பஞ்சுவின் நூல்களால். அதன் பின்னர்தான் மேற்கத்திய நூல்களை வாசித்தேன்.

குறிப்பாக மேலை நாட்டு படைப்பாளிகள்  பலரும் தங்களுக்கு முந்தைய  காலத்து கோட்பாடுகளை நிராகரித்தவர்கள் என்ற உண்மையும் என் வாத த்திற்குத் துணைசெய்கிறது  

அல்பெர் கமுய் அபத்தவாத கோட்பாட்டிற்கு வக்காலத்து வாங்கியவர். அவர்தான் இப்படி எழுதுகிறார்.

« நம்முடையத் தனித்தன்மையை விலக்கிக்கொண்டு எப்போது கொள்கை அல்லது சித்தாந்தத்திடம் முழுமையாக நம்மை ஒப்படைத்து விடுகிறோமோ அக்கணத்தில் குற்றம் தன்னை நியாயப்படுத்த முனைகிறது அதுவே ஒரு நியாயமாக உருப்பெறுகிறது » ‘

நோபல் பரிசு கூறித்து பிறகு எழுதுகிறேன்..

இலங்கு நூல் செயவலர் : க. பஞ்சாங்கம் – 3 : – பெண்ணியல் கோட்பாடுகள்

சிமொன் தெ பொவ்வார் எழுதிய ‘இரண்டாம் பாலினம்’ 1949ம் ஆண்டே வெளிவந்திருந்தது, எனினும் 1970 ஆண்டிலேதான் பெண்கள் விடுதலைக்கான இயக்கம் பிரான்சு நாட்டில் தொடங்கியது.  பிற மேற்கத்திய நாடுகளைப் போன்றே அறிவியலிலும்; பெரும் புரட்சியை நடத்திக்காட்டி ஆண்டவர்களைச் சிரச்சேதம் செய்வித்து இனி நாங்கள் அடிமை இல்லையென வெகுண்டெழுந்த மக்களை அரசியலிலும், மனித வாழ்க்கையை நேர்த்தியாகச் சொல்வதுமட்டுமல்ல அதனை மரபுகளிலிருந்து விடுவிக்கவும் தெரிந்திருக்கவேண்டும் என கலை இலக்கியத்திலும் மெய்ப்பித்து காட்டிய பிரான்சு நாட்டில் கூட பெண்கள் எழுபதுகள்வரை அடிமைகளாக நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்றே இதற்குப் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது. பிரான்சுபோன்ற ஒரு வளர்ந்த நாட்டில், தனி மனிதச்சுதந்திரத்தை உயிர் மூச்சாக கொண்டிருக்கிற நாட்டில் எழுபதுகளில் ஆரம்பித்துவைத்த பெண் விடுதலைக்கான இயக்கம் அவர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டிருக்கிறதா என்றால் இல்லை. இருபத்தோராம் நூற்றாண்டிலும்பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது, இன்றும்கூட தங்கள் உரிமைகளை வற்புறுத்த, பாசாங்கு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் சமுதாயத்தை தட்டி எழுப்ப சற்று தீவிரமான வழிமுறைகளை சில பெண்ணியக்கங்கள் பின்பற்றுகின்றன. கடந்த அரைநூற்றாண்டாக அவர்கள் கையாண்ட வழிமுறைகள் எவ்வித பலனையும் தர இல்லை, இந்நிலையில் சில பெண்கள் சற்று முகம்சுளிக்கும் வகையில் போராடினால்கூட அதனை நியாயம் என கொள்ளவேண்டியிருக்கிறது. 

 மேற்கத்திய நாடுகளில் அண்மைக்காலத்து புள்ளிவிவரகணக்குகள் கூட சமூக அமைப்பில் இருபாலினங்களில் வழக்கம்போல பெண்பாலினம் முடங்கிகிடப்பதாகவே தெரிவிக்கின்றன. இச்சூழலில் கல்வியில் பின்தங்கிய, மரபுகளில் ஊறிய, மதம் சாதி கட்டமைப்புகளில் முடங்கிக் கிடக்கிற இந்தியாபோன்ற நாடுகளில் ‘பெண்ணியக்கம்’, ‘பெண்விடுதலை’ போன்ற சொல்லாடல்கள் தரும் புரிதல் குறித்து அதிகம் யோசிக்கவேண்டியிருக்கிறது. ‘இங்கே பத்தினிபெண் என்றால் கணவன் சோரம் போக: அவனைக் கூடையிற் சுமந்தேனும் பரத்தை வீட்டிற்குக் கொண்டுசெல்ல தெரிந்தவள், அவன் கொழுத்து ஊர் மேய்ந்தால் ஊரை எரிக்கக் கடமைப் பட்டவள்,  அவன் தவறு இழைத்து உயிர்விட்டால், இவளும் உயிர்விட்டு மறுகணம்  சொர்க்கம் செல்லும் சூட்சமம் அறிந்தவள். இவர்களின் எச்சங்களாக வாழ்கிற இந்தத் தலைமுறை பெண்களின் நிலமை என்ன? வெகுசன பத்திரிகைகளில் ஆண்கள் குற்றங்களை அடக்கி வாசித்து அல்லது வாசிக்காமலேயே, பெண்கள் குற்றத்தை பெரிது படுத்தி செய்தியாக்குவதையும்; தொலைக்காட்சி தொடர்களில் எருமைமாடுகளைக் குடும்பப்பெண்ணாகச் சித்தரிப்பதையும்; திரைப்படங்களில் பெரிய நடிர்களில் ஆரம்பித்து கதாநாயகியின் விரல் கனம் இல்லாதபையன்கள்வரை  அவளிடம் ‘நான் ஆண்பிள்ளை டீ’ என்பதையும் பார்க்கிறோம். ஆகவேதான் பத்தாம்பசலித் தனமான நெறிகளில் குளிர்காய்கிற இந்தியச் சமுதாயத்தில் பெண்ணியக்கோட்பாடுகள் குறித்து பேசுவதும் எழுதுவதும் அவசியமாகிறது.  

 க.பஞ்சாங்கம் அடிப்படையில் ஒரு மார்க்ஸியவாதி. இயல்பாகவே மார்க்ஸியவாதிகள் பிறரைக்காட்டிலும் விளிம்பு நிலை மக்களிடத்தில் அதிகம் அக்கறைகொண்டவர்கள். விடுதலை, புரட்சி போன்ற சொற்களில் அதிகம் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள். எனவே ‘பெண் விடுதலை’ சார்ந்து பஞ்சாங்கம் எழுதுகிறபோதும், உரையாற்றுகையிலும் நமக்கு வியப்பைத் தரவில்லை. பஞ்சாங்கத்தின் எழுத்தும் சரி, அவர் பேச்சும் சரி ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஓர் ஒற்றை இயக்கமாக, சோர்வின்றி, உரத்து, எவற்றுடனும் எவருடனும் சமரசம் செய்துகொள்ளாமல் செயல்பட்டு வந்திருக்கிறதென்பதையும் நாம் அறிவோம். க. பஞ்சாங்கத்தின் ‘நவீன இலக்கிய கோட்பாடுகளுக்கு முன்னுரை எழுதிய ‘பாரதிபுத்திரன்’ என்ற நண்பர் “பஞ்சு துணிவானவர். தன் அறிவுக்கும், உணர்விற்கும் என்றும் நேர்மையானவர்”, என்று கூறி “இனம், மொழி, வர்க்கம், பால் ஆகிய நிலைகளில் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட தமிழினம், தமிழ்மொழி, தலித்துகள், உழைப்பாளர்கள், பெண்கள்’ என்று அவர் உழைப்புத் தளங்களைப் பட்டியலிடுகிறார்.

 பெண்கள் சார்ந்து, பெண்ணியம் என்ற பொருள் சார்ந்து அவர் எழுதிய கட்டுரைகள் அதிகம்.பெண்களில் பெண்களுக்காக கவிதையன்றி கதையாடலில் பெண்ணுரிமைக்கான எழுத்தென்று ‘அம்பை’ எழுத்தைசொல்லவேண்டும். வேறு பெண்களிடத்தில் இன்றுவரை அத்தகைய மூர்க்கத்தை கண்டதில்லை. பத்தாம் பசலி மனிதர்களிடையே ‘ரௌத்திரம் பழகத்’  தெரிந்த பெண்கள் ஒரு தேவை. ஆண் படைப்பாளிகளில் பெண்ணுரிமைக்கு தம்து எழுத்தை உபயோகித்தவர் பிரபஞ்சன். அதன்பிறகு க.பஞ்சாக்கத்திடம் அத்தகையதொரு செயல்பாட்டைக் காண்கிறேன். பிரபஞ்சன் பேச்சுக்கும் க.பஞ்சாங்கம் பேச்சுக்கும் அடிப்படையில் வேற்றுமை இருக்கிறது. எழுத்தாளர் பிரபஞ்சனின் வாதங்கள் சமூக அறத்தை அடிப்படையாகக் கொண்டவை. க.பஞ்சாகத்தின் வாதங்கள் அறத்தோடு சாட்சிகளையும் தடயங்களையும் அடிப்படையாகக் கொண்டவை.

 ‘தமிழ் இலக்கியச் சூழலில் பெண்ணிய கோட்பாடுகள்’; பெண்-மொழி-புனைவு’; பெண் நிலை நோக்கு திறனாய்வு; ‘திறனாய்வு – ஆணின் மொழி’; ‘ஹெலென்சீல்கு’ என்பவரைபற்றிய ஏழு கட்டுரைகள்; பெண்ணெனும் படைப்பு – சில மானுடவியல் குறிப்புகள் என்பதன் கீழ் ‘பெண்ணியமும் விஞ்ஞானமும்’, ‘தாய்மையும் பாலியலும்’, ‘வேட்டை ஆடுதலா? சேகரித்தலா?’, ‘காமமும் சுய பிரக்ஞையும்’, ‘கருவுயிர்த்தலும் ஆணாதிக்கமும்’; ‘பெண்களின் தேடல்’; ‘புதிய பெண்ணியக் கோட்பாடு அடிப்படையில் சங்க இலக்கிய பெண்பாற் புலவர்களின் கவிதைகள்’, ‘வேதநாயகம் பிள்ளையின் பெண் நலச் சிந்தனைகள்’, பாரதிதாசனின் தமிழ்ப் பெண்ணியம்’, ‘கு.சின்னப்ப பாரதி படைப்புகளும் பெண்பற்றிய புனைவுகளும்’, ‘பிரபஞ்சனும் பெண்விடுதலையும்’; ஐம்பது ஆண்டுகால விடுதலை இந்தியாவில் பெண்களின் நிலை’, ‘பொருளாதாரப் பின்னணியில் பெண்களின் நிலை; ‘பொருளாதார பின்னணியில் பெண்’, ‘இளம்பெண்களின் சிக்கல்களும் சமூக நடைமுறைகளும்’, ‘பாலியல் வன்முறை’, உழைக்கும் பெண்கள்’, எய்ட்ஸ் தடுப்பு விளம்பரமும் பெண்ணின் அடையாளமும்’, ‘கி.ராவின் பெண்கள்’, என்று அவருடைய கட்டுரைகளில் பெண்களை மையப்பொருளாகக் கொண்டவை எண்ணிக்கையில் கணிசமாக இருக்கின்றன. தெ.பொ.மீயைப் பற்றி பேசும்போதுகூட பெண்ணுலகம் சார்ந்த அவரது வாழ்நெறியைக் கொண்டாடுகிற க.பஞ்சாங்கத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 

 ‘தமிழ் இலக்கிய சூழலில் பெண்ணியக் கோட்பாடுகள்:

 ‘தமிழ் இலக்கிய சூழலில் பெண்ணியக் கோட்பாடுகள்’  அவருடைய நவீன இலக்கிய கோட்பாடுகள் நூலில் க.பஞ்சாங்கத்தின் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளுள் முதலாவதாக வருகிறது. இக்கட்டுரையிலும் அவரது பிறகட்டுரைகள் போலவே தலைப்புக்கான நோக்கத்தைக் கட்டுரையின் நோக்கமாகத் தெரிவிக்கிறார். “எந்தவொரு கருத்தாக்கத்திற்கும் ‘உலகப்பரப்பு’ என்ற தளமும் உண்டு; தாய்மொழி, தாய்மண் என்ற தேசிய இனத்தளமும் உண்டு (இந்த ‘உலகப்பரப்பு’ என்பது நம்மைப்பொறுத்தவரை மேலைநாடு சார்ந்தது; ஆங்கிலமொழிசார்ந்தது என்பதையும் பதிவு செய்துகொள்ளவேண்டும்) எனவே தமிழ் இலக்கிய சூழலில் சிறப்பாக வெளிப்படும் பெண்ணியப்பார்வைகளை அடையாளம் கண்டு விளக்க முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது”(பக்.47, நவீன இலக்கிய கோட்பாடுகள்). கட்டுரையை பெண்ணியம் தொடர்பான மேலை நாடுகளின் நூல்கள் அவற்றின் தாக்கத்தில் வெளிவந்த தமிழ் நூல்கள் துணைகொண்டு எழுதியுள்ளார். அதனைக் காலம் மற்றும் பெண்ணியம் பற்றி தெரிவிக்கும் கருத்தியத்தின் அடிப்படையில் அல்லது அவரே கூறியுள்ளது போன்று மேலை நாட்டுக்கோட்பாடுகளைச் சார்ந்தும், தேசியம், சாதியம் சார்ந்த கோட்பாடுகளைச் சார்ந்தும் பிரித்தறியலாம்.

 கட்டுரையின் ஆரம்பத்தில்: “ஓவையார் எழுத்துக்களை ஒரு பெண்ணின் எழுத்தாகத் தனியாகப் பிரித்து அடையாளம் கண்டவன்’ பாரதி என்று மறக்காமல் நினைவூட்டுகிறார். “ஒவையாரைப்போல் கவிதையும் சாஸ்திரமும் செய்யக்கூடிய ஓர் ஆண்மகன் இங்கு பிறந்திருக்கிறானா?” எனப் பாரதி கேட்டதாக வருகிறது. நமக்குப் பதில் சொல்ல ஒன்றுமில்லை, கேட்பவன் ஓர் ஆண்மகன் மட்டுமல்ல,  இந்திய தேசத்தின் மிகப்பெரிய கவிஞன், ‘புதுமைப் பெண்’ என்ற திட்பமான சொல்லாடலை கற்பித்தவன், நாட்டின் சுதந்திரத்திற்கு மட்டுமல்ல மனிதர் சுதந்திரத்திற்கும் கவிதை பாடியவன். “ஒவையாரைப்போல ஓர் ஆண்மகன் கவிதை செய்திருக்கிறானா? என்கிற பாரதியின் வினாவை க.பஞ்சாங்கம் சுட்டுகிறபோது அதற்கான நியாயத்தை விளங்கிக்கொள்ள முடிகிறது. கட்டுரையின் தொடக்கத்தில் பெண்ணியம்  உட்பட ‘எந்தவொரு கருத்தாக்கத்திற்கும் ‘உலகப்பரப்பு’, ‘தேசியபரப்பு’ ஒன்றுண்டு, நம்மைப்பொறுத்தவரை உலகப்பரப்பு என்பது ‘மேலை நாடு சார்ந்தது’ ஆங்கிலமொழி சார்ந்தது’ என்பதை நினைவூட்டும் க.பஞ்சாங்கம், இங்கே பாரதியின் குரலைப் பதிவு செய்யும் நோக்கம் “இங்கு மட்டுமல்ல எங்குமே ஒவையைபோல ஒருத்தி அவள் காலத்தில் மட்டுமல்ல இன்றுவரை பிறக்கவில்லை” எனவே எல்லாவற்றிர்க்கும் மேலைநாடுகளை உதாரணம் காட்டவேண்டாம் என்பதாகத்தான் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.

 மேலை நாட்டு பெண்ணியம் சார்ந்த சிந்தனைகள்:

 இக்கட்டுரையில் கிடைக்கிற முதலாவது செய்தி “முனைவர் தேவத்தா முயற்சியில்1986 ஆம் ஆண்டு தெரசா மகளிர் பல்கலைகழகம் மதுரையில் நடத்திய ‘ பெண்கள் படைப்பில் பெண்கள்’  என்ற கருத்தரங்கே” பெண்ண்ணிய திறனாய்விற்குத் தூண்டுகோலாக அமைந்தது என்பதாகும். அக்கருத்தரங்கில் கல்வியாளர்களும், சிவசங்கரி போன்ற எழுத்தாளரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். சிவசங்கரி “எழுத்தை ஆண் எழுத்து பெண் எழுத்து என்று பால் அடிப்படையில் பிரிப்பது தகாது” என்றதை அன்றைய சூழலில் எதார்த்தம் என ஆசிரியர் சொல்கிறார். முனைவர் தேவதத்தா முயற்சியில் தெரஸா பல்கலைகழம் 1992ல் வெளியிட்ட ‘பெண்ணியக் கலைச்சொல் விளக்கக் கையேடு’ தொடங்கி 1997ல் வெளிவந்த ‘பறத்தல் அதன் சுதந்திரம்’ என்ற தொகுப்பு நூலுக்கு மாலதி மைத்ரி எழுதிய முன்னுரைவரை அவ்வளவும் பெண்ணியச் சொல்லாடல்களை தமிழில் வளர்த்தெடுக்க காரணமாயிற்று என்கிறார். இரா. பிரேமாவின் பெண்ணியம் ஓர் அறிமுகம் என்ற நூலும் மேலைநாட்டு பெண்ணியச் சிந்தனையை விரிவாக எடுத்துரைத்தது என்ற தகவலும் உண்டு. இருபதாம் நூற்றாண்டு ‘சிந்தனை மரபு’, பிறதுறைகளைபோலவே பெண்ணியல் சிந்தனையிலும்  மேலை நாட்டு சிந்தனைமரபின் தாக்கத்தைப் பெற்றுள்ளது  என்கிற தமது கூற்றை சிமொன் தெ பொவ்வாரின் ‘இரண்டாம் பாலினம்’ முதலான நூல்களின் துணைகொண்டு உறுதிபடுத்துகிறார். அதுவன்றி “பெண்ணுக்கான மொழியை மட்டுமல்ல பெண்களுக்கான இலக்கிய கொள்கை ( இலக்கிய கொள்கைகளே கூடாது என்ற கருத்தும் உண்டு), பெண்களுக்கான கதையாடல், வடிவம், உத்தி முதலியன அனைத்தும் புதிதாக உருவாக்கப்படவேண்டும் என்ற புதிய சிந்தனை தமிழ்சூழலில் பரவியதற்கு, ரெமன் செல்டனின் “பெண்ணியல் திறனாய்வு” கட்டுரை -(பெண்ணியம் சார்ந்த இலக்கிய கோட்பாடுகள் உயிரியல், அனுபவம், மொழி, உளநெறி, சமூகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்தவை) –   ஒரு முக்கிய காரணம் என்கிறார். கோவை ஞானி நடத்திய ‘நிகழ்’ இதழில் இதன் மொழி பெயர்ப்பு வந்திருக்கிறது என்பது கூடுதல் தகவல்.  தமது ‘பெண்ணெனும் படைப்பு’ நூலிலும்  இக்கட்டுரை இடம் பெற்றிருக்கிறதென்கிற தகவலையும் ஆசிரியர் தருகிறார்.

 இந்திய தேசியம் சார்ந்த பெண்ணியல் சிந்தனைகள்:
 
 மேலை நாட்டு பெண்ணிய இலக்கிய கோட்பாடுகள் பரவிய அதே காலத்தில் தேசிய உணர்வின் அடிப்படையில் இந்துமத சீர்திருத்தப்பணியில் ஈடுபட்டவர்கள் பெண்களுக்கு ஆதரவாகச் சட்டடங்கள் இயற்ற காரணமாகிறார்கள்.  “இந்திய தேசியப் போராட்டத்தை ஒட்டி எழுந்த பல்வேறு விழிப்புணர்வோடு கூடிய புரிதலின் ஒரு பகுதியாக” அதனைக் கண்ணுறும் க. பஞ்சாங்கம், இந்திய சுதந்திரத்திற்கு முன்னும் (இங்கேயும் மேற்கத்தியர்கள்?) அதன்  பின்னும்  இந்து மத கட்டமைப்பில் உருவான ‘பெண்ணை’ விடுவிக்க  ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் போன்ற அமைப்புகளும் பிறரும்  முயன்றதன் விளைவாக “”பாறையாய் இறுக்கமுற்றுக்கிடந்த இந்திய ஆண்-பெண் உறவு முறை நெகிழத் தொடங்கியது”(பக்.50-ந.இ.கோ) என்கிறார். மாறாக  அவர்கள் முயற்சியும், உருவான சட்டங்களும் பெண்ணுரிமைக்கு ஆதரவான இந்தியக்குரலாகப்  பின்னர் வந்த திறனாய்வாளர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டனவென்பதை பரிமளம் என்பவரின் ‘இந்துப் பெண்ணியம் (1995) என்ற நூலூடாகவும், கி. இராசா என்பவரின் இந்தியப் பெண்ணியம் (1997 என்ற நூலூடாவும் நிறுவுகிறார்.

 கி.இராசா “குடும்பம் என்ற அமைப்பை உருவாக்குவதிலும் வளர்ப்பதிலும் அதைக் காத்து அடுத்த தலைமுறைக்குத் தருவதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமபங்குண்டு . இருவருமே தங்கள் கடமைகளை உணர்ந்து குடும்பம் என்ற நிறுவனத்தில் பணியாற்றுதல் வேண்டும்” என்கிற போது அதற்கு பதிலளிக்கும் விதமாக “குடும்பத்தில், மதத்தில், கல்வியில், அரசியலில், கலை இலக்கியத்தில், பொருளாதார உறவில் பெண்ணின் நிலை என்ன? அங்கெல்லாம் அவள் எவ்வாறு இரண்டாதரக் குடிமகளாக நடத்தப்படுகிறாள்? அதற்கான மூலகாரணம் என்ன? முதலிய கேள்விகளைக் கேட்காமல் அவற்றிர்க்கப்பால் பொறுமை காத்து, குடும்பத்தை நிலை நிறுத்தவேண்டும் ; தேசத்தை காக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் பார்வையாக இருக்கிறது. இத்தகைய இந்தியப் பெண்ணியம் பேசுகிறவர்கள்தங்களுக்குள்  வினைபுரியும் ஆண் நலம் சார்ந்த கருத்துக்களீல் இருந்து விடுபடமுடியாத தன்னிலையை புரிந்துகொள்ளும் சக்தியின்றி மேலை நாட்டு பெண்ணியப்பார்வைகளைத் தங்களுக்கு முற்றும் அந்நியமானவை என்பதுபோலவும் அவைகள் அற்பத்தனமானவை என்பதுபோலவும் புனைந்துகொண்டு, நமக்கான இந்தியப் பெண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தவும் முயலுகின்றனர்.” (பக்.51 ந.இ.கோ) எனக் கண்டிக்கிறார். க.பஞ்சாங்கத்தை பொறுத்தவரை  இந்திய தேசியம் சார்ந்த பெண்ணியம் மிதவாத பெண்ணியம், மேலை நாட்டுபெண்ணியக்கூறுகள் சிலவற்றை எதிர்க்கக்கூடிய சிந்தனை. அது மாத்திரமல்ல பரிமளம் ‘இந்துப்பெண்ணியம்’ என்ற பார்வையில் தி.ஜா நாவலை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதில் க.பஞ்சாங்கத்திற்கு உடன்பாடில்லை. தி.ஜாவின் பெண்ணிய விடுதலை  குறித்தபார்வையை ‘இந்தியப் பெண்ணியப் பார்வை’ என்பதற்குள்ளேயே சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்.

 தமிழ் மருமலர்ச்சி கால பெண்ணியல் சிந்தனைகள்:

 பாரதியும், பாரதிதாசனும் தமிழ்  மறுமலர்ச்சிகால பெண்ணியல் சிந்தனைக்கு காரணமாகிறார்கள். இவர்களின் கவிதைகளிலிருந்து சில எடுத்துக்காட்டுகளை (“நாணமும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம்”, (பாரதியார்), ” அச்சமும் நாணமும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ் நாட்டின் கண்கள்”, (பாரதிதாசன்)) முன் வைக்கும் கட்டுரை ஆசிரியர்,  இந்திய தேசிய பெண்ணியல் சிந்தனைகளைப்போலவே இவர்கள் இருவரின் பெண்ணியல் சிந்தனைகள் தமிழ், தமிழ் தேசிய நலன் சார்ந்தவை, என்கிறார்.

 தலித் பெண்ணியல் சிந்தனைகள்:

 அம்பேத்கார் நூற்றாண்டின்போது எழுந்த தலித்திய சிந்தனை, அதனை ஒட்டிய தலித் பெண்ணுரிமை பற்றி பேசுகிறார். பொதுவாகவே ஒடுக்கப்பட்ட இனத்தின்மீது தனி கரிசனத்துடன் வினையாற்றுகிற க.பஞ்சாங்கம், இங்கே பெண்கள் தலித்தாகவும் அடையாளம் பெறுகிறபோது பிரச்சினையில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அவரின் கருத்தின்படி “இந்திய சமூகத்தில் தலித்துகள் என்ற கட்டுமானத்தில் முழுவதும் வினையாற்றியிருப்பது சமூகம். ஆனால் பெண்கள் என்ற கட்டுமானத்தில் சமூகத்தோடு இயற்கையின் பங்களிப்பும் இடம் பெற்றுள்ளது. இருவரையும் ஒடுக்கிய ஆதிக்க சமூகத்தின் செயல்பாட்டுத் தந்திரம் இரண்டிலுமே ஒன்றுபோலவேதான் அமைந்துள்ளது; பொருள் ஆதாரத்தைப் பறிப்பது; வேலை பிரிவினை அமைப்பது; நடமாடும் வெளியை வரையறுப்பது; மொழியைப்பிடுங்குவது… (பக்கம் 53 ந.இ.கோ). ஆசிரியருக்கு, தலித் ஆணைக்காட்டிலும் தலித் பெண் கூடுதலாக ஒடுக்கபடுகிறாள். ஒரு தலித் பெண் இஅரண்டு முறை ஒடுக்கப்படுகிறாள் என்ற கருத்து கவனத்திற்கொள்ளப்படவேண்டியது.  ‘தலித்’ என்ற அடையாளத்தினால் பெறும் அடக்குமுறை .ஒன்று, மற்றது பெண் என்பதால் கிடைப்பது. ஆக ஒரு தலித் பெண்ணுக்கான பெண்ணுரிமை, பொத்தாம் பொதுவானதல்ல, சாதிரீதியாகவும் அணுகவேண்டும் என்ற அவரது கருத்தை மறுப்பதற்கில்லை.

தொடரும்….

இலங்குநூல் செய வலர்: க. பஞ்சாங்கம் -2

திறனாய்வும் திறனாய்வாளரும்!

க.பஞ்சாங்கத்தின் திறனாய்வு கட்டுரைகளின் முதற் தொகுப்பு நவீன இலக்கிய கோட்பாடுகள். இதற்கு அணிந்துரை பாரதி புத்திரன் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. எப்போதுமே  பலநேரங்களில் ‘ஏதோ கேட்டார்கள் எழுதினேன்’ என்பதுபோல சில அணிந்துரைகள் அமைந்துவிடும். இந்நூலுக்கான அணிந்துரை அவ்வாறு எழுதப்பட்டதல்ல. எழுதியிருப்பவர், உள்ளத்தால் க. பஞ்சாங்கத்தோடு அண்மித்தவராக இருக்கவேண்டும், எனினும் மருந்துக்கும் துதிபாடல்களில்லை. நூலாசிரியருக்கும் நூலுக்கும் எது பொருந்திவருமோ அதனைக் கூடுதல் குறைவின்றி சொல்லி யிருக்கிறார்.

” மனித நேயம் மிக்கதோர் இலக்கிய திறனாய்வாளனின் சமூகத் தொண்டாக, வாழ்வின் உண்மை நோக்கிய தேடுதலாக அவர் தம் பணிகளை –  படைப்புகளை உணர முடியும்”  என ஓரிடத்தில் பாரதிபுத்திரன் குறிப்பிடுகிறார்.  இலக்கிய நண்பர்களால் ‘பஞ்சு’ என அழைக்கப்படும் க. பஞ்சாங்கத்தின் உழைப்பை இதனினும் பார்க்க வேறு சொற்களால் செரிவுடனும், பெருவெடிப்பு பிரகாசத்துடனும் சொல்ல இயலாது. இவாக்கியத்தை வாசித்தபோது பஞ்சாங்கம் குறித்த எனது முடிவில் தவறில்லை என்பதை உணர்ந்தேன். இத்தொடரை எழுத உந்து கோலாக இருந்த சக்திமிக்க சொற்கள் அவை.

கலை இலக்கியம் இரண்டுமே எங்கிருந்து வருகின்றன என்பதைப் போலவே எவரிடம் போய்ச்சேருகின்றன என்பதன் அடிப்படையிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. தேர்ந்ததொரு சிற்பியின் கைவண்னத்தில் உருவாகும் சிலையில் அழகும், கலை நேர்த்தியும், உணர்வின் வெளிப்பாடும், உரையாடும் மொழியும், அதன் பின்னல்களும்,வளைவுகளூம்,நெளிவு சுளிவுகளும், நேர்க்கோடுகளும்  ஏற்ற இறக்கங்களும், தவழலும், நடையும், ஓட்டமும், மழலைப்பேச்சும், ஊடலும் சிணுங்கலும் இன்னமும் இதுபோன்ற படைப்பிலுள்ள எண்ணற்ற கூறுகளும், அணுக்களும், இதயத்தில் இறங்கவும் உடல் சிலிர்க்கவும் ஒருவன் தேவை. நீரில் மிதக்கும் நிலவை உள்ளங்கையில் ஏந்தி உதிரத்தில் வெதுவெதுப்பை உணர்வதென்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல. அவன் வாசகன் மட்டுமல்ல வாசகனுக்கும் மேலானவன், படைத்தவனைக் காட்டிலும் ஒரு படி உயர்ந்தவன் – ஒரு தேர்ந்த திறனாய்வாளன். ஒரு நல்ல தலைவிக்கு உரிய  தலைவன் அமைவதுபோல அது நிகழவேண்டும். அது நிகழாதவரை அந்த நூல் தனது பிறவிப்பயனை எட்டியதாகச் சொல்வதற்கில்லை. தமிழிலக்கியக் கொப்பில் முகிழ்த்து இதழ்பரப்பிய அனேக மலர்களை முகர்ந்து முகர்ந்து அதன் நறுமணத்தையும் துர்க்கந்தத்தையும் இனம் பிரிக்க அளப்பரிய ஞானமும், பழுத்த அனுபவும் வேண்டும்.

க. பஞ்சாங்கத்தின் இரு திறனாய்வு நூல்களை முன்வைத்து இத்தொடரை எழுதுவதால் திறனாய்வு என்பதென்ன? ஒரு திறனாய்வாளன் என்பவன் யார்? என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலை தருவது முகவரிபோல அவசியமாகிறது. படைப்பிலக்கியத் துறையில் படைப்பு சார்ந்து வினையாற்றுபவர்களை மூன்று வகையினராக பிரிக்கலாம்

1. வாசகர்கள் 2. படைப்பாளிகள் 3. விமர்சகர்கள்

1. இரசிகர்கள் – வாசகர்கள்: படைப்பு துறையின் முதற்படியில் இருப்பவர்கள். அறிதலில் ஆர்வம் காட்டுபவர்கள். இரண்டாவது படிநிலையான படைப்பாளியாக உருமாறும் ஆற்றல் இருந்தும் அதனைத் தொழிற்படுத்த விருப்பமின்றி இருப்பவர்கள். வெகு சன ரசனையிலிருந்து மாறுபட்டவர்கள். உயிர் வாழ்க்கையே தேடல்கள் என்ற உந்து சக்தியால் முன் நகர்த்தப்படுகிறது என்பதைக் கிஞ்சித்தும்  உணராமல் வாழ்ந்து சாகும் பெரும்பான்மை சமூகத்திடமிருந்து மாறுபட்ட சிறுபான்மையினர்.  படைப்புலகின் பூகோளத்தை புரிந்துகொள்ள கூடியவர்கள், அதன் தட்ப வெப்பத்தில் பயணிக்க அறிந்தவர்கள். இவர்கள் ஞானத்தைக் குறைத்து மதிப்பிடமுடியாது,

2. கலைஞர்கள்– படைப்பாளிகள்:  உணர்வுகளால்  வழிநடத்தப்படுபவர்கள். வாசிப்பு தந்த உந்துதலால் படைப்பாளியாக உருமாருகிறவர்கள். புத்தக வாசிப்பும், மனித வாசிப்பும், கற்றதும் கேட்டதும், உற்ற அனுபவமும் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் அக விழிப்புக்கு ஆளாகிறார்கள். கழுகின் பார்வைலிருந்து தப்பித்து ஓர் அரவம் போல இண்டு இடுக்குகளிலும் புதர்களிலும் ஊர்ந்தும், சுருண்டும் முடங்கியும் கிடப்பவர்கள், பெருமூச்சுக்குச் சொந்தக் காரர்கள். ஏதோஒருவகையில் எல்லாவற்றுடனுமான இவர்களின்  முரண்களும், மொழியும், மொழி சார்ந்த அழகியலும் எடுத்துரைப்பிற்கு இவர்களை இழுத்துவருகிறது,

கலை விமர்சகர்கள் மற்றும் திறனாய்வாளர்கள்: இவர்கள் கல்வியாளர்கள். உணர்வில் தோய்ந்தபோதும், வேண்டும்போது விலகியிருக்கக்கூடிய தெளிவு கொண்டவர்கள். அறிவில் தெளிவும் அனுபவத்தில் முதிர்ச்சியும், தடுமாறாத மனமும் இவர்களை கலை விமர்சகர்களாகவும் திறனாய்வாளர்களாகவும் செயல்பட ஊக்குவிக்கிறது.  திறனாய்வு என்பது வல்லுனர்களின் பணி. கல்வி, அனுபவம், எப்பொருள் குறித்து திறனாய்வு செய்கிறார்களோ அப்பொருள் பற்றிய முழுமையான அறிவுஎன மூன்றும் அமையவேண்டும். திறனாய்வாளர்களுக்கு அவர்களின் எல்லைகள் பிடிபடுவதுபோல தோற்றந்தரினும் பல நேரங்களில் அவர்களைத் திக்குத் தெரியாத காட்டில் அல்லாடவும் செய்யும். 

மேற்கண்ட மூன்று வகைபாட்டில் க. பஞ்சாங்கம் ஐயமின்றி மூன்றாவது பிரிவுக்குள் வருகிறார். கலைஞர்களும் படைப்பாளிகளும் எங்ஙனம் ரசிகர்களாகவும் வாசகர்களாகவும் தொடர்ந்து செயல்படுகிறார்களோ அங்ஙனம் கலைவிமர்சகர்களும், திறனாய்வாளர்களும் மேற்கண்ட இரு பிரிவின் கீழ் தொடர்ந்து செல்படுகிறவர்கள் அதாவது தொடர்ந்து வாசிப்பவர்களாவும், உந்துதல் தலைப்படுகிறபோது படைப்பாளிகளாகவும் செயல்படுகிறவர்கள். கடும் வாசிப்பின்றி திறனாய்வுகளுக்கு சாத்தியமில்லை என்பதால் . வாசிப்பில் தொடர்ந்து கூடுதலாக கவனம் செலுத்துகிறார்கள். க. பஞ்சாங்கம் சோர்வின்றி வாசிப்பவர், வாசிப்புதான் அவரது சுவாசத்தை சீராக வைத்திருப்பதாக நினைக்கிறேன். அவர் கவிஞர், நாவலாசிரியர் என்பதையும் நாம் அறிவோம்.

திறனாய்வு?

இலக்கிய திறனாய்வு என்பது  தேடல், வாசிப்பு, ஒப்பீடு, மதிப்பீடு, முடிவெடுத்தல் என்கிற வினைத்திறன்களை உள்ளடக்கியது. எழுத்தூடாக பிறிதொரு பனுவல் பற்றிய தமது வாசிப்பு, உணர்தல் மற்றும் தெளிதலை மூன்றாவது மனிதருடன் பகிர்ந்துகொள்ளல், அடிப்படையில் ஓர் ஒப்பீடு நோக்கு. ஓரு விவாத களம்: ஒரு புறம் திறனாய்வாளன் -திறனாய்வு; எதிர் திசையில் பிரதி – படைப்பாளி. உண்மையில் இவ்விவாதகளத்தில் ஒரு தரப்பில் திறனாய்வாளர் உருவத்தில் அவரைக் கட்டமைத்த அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகக் காரணிகள்.  தன்னை உருவாக்கிய சமூகம், மனிதர்கள், அவற்றின் இயக்கம் ஆகியவற்றைக் குறித்த அவரது நியாயங்கள் முடிவுகள், தெளிதல் அடிப்படையில் கையளிக்கபட்ட பனுவலின் குறை நிறைகளை அவர் விவாதிக்கிறார்.  பனுவலின் கலைநேர்த்தி, மொழி, சொல்லாடல்கள், எடுத்துரைப்பு என்றெல்ளாம் தொடர்ந்து அவதானிப்பதும், வியப்பதும் திறனாய்வாளரின் பின் புலத்தைப் பொருத்தது. அவர்கள் ஏற்றுக்கொண்ட சமூக மதிப்பீடுகளைக்கொண்டே பனுவலை அணுகுகிறார்கள் என்பதை ஒரு போதும் தமிழ்ச்சூழலில் நாம் மறக்கக்கூடாது. 

க. பஞ்சாங்கம் என்ற திறனாய்வாளர்

மேற்கத்திய உலகில் திறனாய்வில் இருவகையுண்டு:

1. பாராட்டுவதுபோல இகழ்வது  (La Critique Péjorative): நேர்மறையான விமர்சனங்களில் ஆரம்பித்து பின்னர் பனுவலை சிறுமை படுத்துவது

2. இகழ்வது போல பாராட்டுவது (La critique méliorative): எதிர்மறையான விமர்சங்களில் ஆரம்பித்து; சிறப்புகளை பேசுவது

தமிழ் திறனாய்வுகளை கீழ்க்கண்டவகையில் வகைபடுத்தலாம்

1. துதிபாடும் விமர்சனங்கள்
2. வசைபாடும் விமர்சனங்கள்
3. தனனை அண்டி இருப்பவர்களை உற்சாகப்படுத்தவும், தன் இருப்பைச் சொல்லவும் எழுதப்படும் விமர்சனங்கள் 
4. நடு நிலையான திறனாய்வாளர்கள்.

க. பஞ்சாங்கம் இந்த நான்காம் வகைமைக்குள் வருகிறார் என்பதை அவரது திறனாய்வு கட்டுரைகள் தெரிவிக்கின்றன. பாரதி புத்திரணின் அணிந்துரையில் உபயோகித்துள்ள வார்த்தைகளின் படி “உயர்கல்வி,பேராசிரியர், ஒற்றைப் பரிமானபார்வையில் பன்முகத்தன்மை, சிறு பத்திரிகைகள் அறிமுகமும் உறவும், பார்வை முதிர்ச்சி, தொன்ம இலக்கியங்கள், பின்நவீனத்துவ பார்வை, வாசிப்பில் தெளிவு”  எனும் பல்வேறு கூறுகள் அவரது சிறந்ததொரு திறனாய்வாளராக உருவாக்கியிருக்கின்றன. அனைத்துக்கும் மேலாக “இந்தியன் இப்படிபட்டவன், தெலுங்கன் இப்படிபட்டவன், அந்த சாதிக்காரன் இப்படிப்பட்டவனென்று அன்றாடம்  உரைக்கப்படும் பொதுவிதிகளைப் புறக்கணித்து மனித மனம் அவற்றையும் கடந்து ஆழமானது என்று மனிதனைப் பற்றிய புதிரிலும் மூழ்கிவிட்டவர் பஞ்சு”

எனவேதான் தமிழ் புதுக்கவிதையின் வரலாறுகள் எழுதமுற்பட்டவர்களில் பலர் எங்ஙனம் குறுக்கு சால் ஓட்டினார்கள். பேரறிஞர்கள் எனசொல்லிக்கொண்டவர்கள் எல்லாம் தமிழின் புதிய வழித்தடத்தை அங்கீகரிப்பதில் காட்டிய தயக்கமென்ன என்பதைச் சொல்ல முடிந்தது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழ்கம் சார்பாக பாரதி பாடல்களின் ஆய்வு ப் பதிப்பினத் தயாரித்த மா. ரா. போ. குருசாமி பாரதியின் காட்சிகவிதைகளை அத்தொகுப்பில் மனமின்றி சேர்த்திருக்கிறார். அது பற்றி எழுதுகிறபோது: ” காட்சி என்ற தலைப்பில் இங்கே வெளியாகும் பகுதி கவிதை அன்று. பின் வந்தோர் தாம் எழுதிய ஒது புது வகை எழுத்தோவியத்துக்கு ‘வசன கவிதை ‘ என்று பெயரிட்டுக் கொண்டு, அந்த வகையான இலக்கிய வடிவத்துக்கு முன்னோடி பாரதியாரே என்று சாதிக்க லாயினர்; கவிதை கவிதை தான் வசனம் வசனம் தான்’ ‘ஒட்டு’ வேலை செய்வது சரி எனக்கூற இயலவில்லை”  என்று எழுதியதைக் குறிப்பிடும் க.பஞ்சாங்கம், ” 30களில்  தோன்றிய புதுக்கவிதைக்கு 1987ல் இந்த நிலமை. 1977லேயே “தமிழ்ப்  புதுகவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூல் வெளிவந்தும் , அந்நூலுக்கு 1978-இல் இந்திய அரசின் சாகித்ய அகாடெமிப் பரிசுவாங்கியதன் மூலம் அங்கீகாரம் இந்திய அள்வில் கிடைத்தும் இந்த நிலைமை ” என்று வருந்த க.பஞ்சாங்கத்தால் மட்டுமே இயலும். மா. ரா. போ. குருசாமி மட்டுமல்ல தமிழண்ணல், மு.வ. சி.பாலசுப்பிரமணியமென பலர் வரிசையாகப் பஞ்சாக்கத்திடம் குட்டுப்படுகிறார்கள். “1959ல் முதல் பதிப்பாக சி.பாலசுப்பிரமணியன் “பெயரில்” வந்துள்ள இலக்கிய வரலாற்று நூலிலும் புதுக்கவிதைக் குறித்து குறிப்பில்லை என்கிற திறனாய்வாளர் அதே சி.பாலசுப்பிரமணியன் 1982ல் மறுபதிப்பு கொண்டுவரும்போது “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்று சேர்த்துள்ளதைக்கூறி “இதுதான் வரலாற்றுக் கட்டாயம் என்பது” என நகைக்கிறார். இவர்களயெல்லாம் கண்டிக்கும் திறானாய்வாளர், புதுக்கவிதையை ஓர் இலக்கிய வகையாக ஏற்றுக்கொண்டு அதன் வரலாற்றை விரிவான முறையில் எழுத முயன்ற மரபான தமிழ் அறிஞர்கள் மது.ச. விமலானதம் (1987) சிலம்பொலி செல்லப்பன் ஆகியோரை பார்ராட்டவும் தவறுவதில்லை.  – (தொடரும்) –