மொழிவதுசுகம்  நவம்பர் 27, 2021

கதைமாந்தர்கள்: பெண்

« பெண் இயற்கையின் சீதனப் பரிசல்லவோ » என்றொரு வரி, பழையத் தமிழ்ப்பாடலில் வரும். எனது முதற் புனைவான  நீலக்கடல் நாவலை மறுபதிப்பு செய்யவிரும்பி, அதன் பிடிஎஃப் கோப்பை திரு பரிசில் சிவசெந்தில்நாதன் அனுப்பி இருந்தார். அந்நாவலின் முன்னுரை இப்படித் தொடங்குகிறது.

« வாழ்க்கையும் ஓரு கடல். நம்பிக்கைக்கும் எச்சரிக்கைக்கும் இடையிலேயே, நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். கடல் அழகானது, ஆழமானது, அமைதியானது, கொந்தளித்தால் அடங்காதது பெண்மையைப்போல. இருவருமே பார்வைக்குள் அடங்காதவர்கள். கண்ணைக்கொண்டு கணக்கிடமுடியாதவர்கள். அவர்களிடம் நமக்குள்ள ஈர்ப்பினை, குறிப்பாக அவர்களின் ‘மறுகரைகளு’க்குள்ள ஈர்ப்பினை, இவ்வுலகம் தோன்றிய நாட்தொட்டு புராணங்கள் காவியங்களோடு, சரித்திரச் சான்றுகளும் தெளிவாய் முன்வைக்கின்றன. »

காவியங்கள் பெண்களை மையப்படுத்தியே எழுதப்பட்டன. இன்று வெவ்வேறு பிரச்சனைகளைப் மையப்படுத்தி நாவல்கள் வெளிவந்தாலும் ஏதோவொருவகையில் பெண்கதைமாந்தர்கள் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறார்கள். மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், நாவல்கள் எனது ஆக்கங்களில் பெண்கள் கூடுதலாக இடம்பெற்றிருக்கிறார்கள். நீலக்கடல் தெய்வானை ; மாத்தாஹரி பவானி ; கிருஷ்ணப்ப நாயக்கர்கௌமுதி செண்பகம், சித்ராங்கி ; காஃப்காவின் நாய்க்குட்டி நித்திலா, ரணகளம் அக்காள் ; இறந்த காலம் மீரா ; வெளிவரவுள்ள சைகோன்- புதுச்சேரி வேதவல்லி ; இவர்கள் தவிர மாத்தாஹரி தொடங்கி ‘சைகோன் -புதுச்சேரி’ நாவல்கள் வரை அனைத்திலும் ஹரிணி என்ற பெண் இடம்பெறுகிறார்.  இவர்கள் எங்கிருந்து வந்தார்கள். இவற்றுக்கான காரணம் என்ன ? இவர்களெல்லாம் உண்மையா பொய்யா ? சில நேரங்களில் கற்பனையை காட்டிலும் உண்மைகள்  சுவாரஸ்யமாக இருப்பதுண்டு.

பிரான்சு வந்த புதிதில்  எண்பதுகளின் பிற்பகுதியில் சந்திக்க நேர்ந்த ஒரு ஐரோப்பியபெண், எங்கள் குடும்பநண்பர்.  எங்கள் மூன்றாவது பெண் பிரசவத்திற்காக மனைவியை  மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவும், தனது தாயை மருத்துவமனையில் எனது மனைவிக்குத் துணையாக விட்டுச் சென்றதும், அங்கிருந்து அழைத்துவந்தபோது உடன் வந்த தும் மறக்க முடியாதவை. தொடர்ந்த நட்பு காலஓட்டத்தில் தடைபட்டு, புதுவருட வாழ்த்து அட்டை பரிமாற்றம் என முடிந்த அந்த நட்பு ஒரு கட்டத்தில் அதுவும் இல்லையென்றானது. அவரைச் சுத்தமாக நாங்கள் மறந்து விடுகிறோம்.  காலங்கள் உருண்டோடுகின்றன. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தொலகாட்சி நிகழ்ச்சியொன்றில் அந்த அதிசயம் நிகழ்கிறது.  இந்தியாவைக் காட்டுகிறார்கள். அதில் முப்பது முப்பத்தைந்து வயது பெண்ணொருத்தி தலித் இளைஞர் ஒருவரை  மணந்துகொண்டு, பத்துக்கும் மேற்பட்ட ஏழை சிறார்களைத் தன் பிள்ளைகளாக ஏற்று ராஜஸ்தானில் வசிக்கிறார். அவர்களுக்கு நல்ல கல்வித் தருகிறார். தம்பதியரின் மண்சுவருடன் கூடிய விழல் வேய்ந்த வெறும் தரையில் பாய் விரித்து படுக்கிறார். காலையில் பிள்ளைகளுக்கு யூனிஃபார்ம் அணிவித்து  ஷூக்களைபோட்டு, தனது இந்தியக்  கணவருக்கு அவர் வாங்கிகொடுத்துள்ள வாகனத்தில் பிள்ளைகளை முத்தமிட்டு அனுப்பிவைக்கும் காட்சி நெஞ்சை நெகிழவைத்தது.  இருபது ஆண்டுகளுக்கு முன்பு  எங்கள் குடும்பத்திற்கு வந்து அவர்தானா இவர் என்பதில் ஐயமும் இருக்கிறது. பெண்ணின் பெற்றோர்கள் இறந்துவிட்டதால் என்னிடம் தற்போதைக்கு உறுதிபடுத்த தகவல்கள் இல்லை.  அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், மீண்டும் ஒரு பெண்ணை மையப்படுத்தி,   அந்த உயர்ந்த உள்ளத்தை  புரிந்துகொள்ளும் தேடலாக நாவலை எழுதுகிறேன், இம்முறை  பிரெஞ்சிலும் எழுதி அதனை தமிழ்ப் படுத்த நினைத்து ஆரம்பித்திதுள்ளேன்.

            பொதுவில் கதை மாந்தர்கள் எங்கோ நாம் கண்டவர்கள், நம்முடைய வாழ்க்கை என்கிற பெருங்கதையில் ஒரு சிலர் ஒன்றிரண்டு பக்கங்களிலும், வேறு சிலர் கூடுதலான பக்கங்களிலும், மற்றும் சிலர் தொடக்கம் முதல் முடிவுவரை வியாதிருப்பவர்கள். குறுக்கிடும் சக ஜீவன்களுடன்  சில மணி நேரங்கள் பழக நேர்ந்தாலும், அவர்களை நன்கு புரிந்துகொண்டதுபோல நமது படைப்பில் பாசாங்கு செய்து பாத்திரங்களப் படைத்து நமது கற்பனைகளை அவர்களுக்கு அணிவித்து மகிழ்கிறோம் என்பது கசப்பான உண்மை. எத்தனை ஆண்டுகள் பழகினாலும் மனிதர்களை நன்கு விளங்கிகொள்ள சாத்தியமில்லை. இந்த விளங்காத பக்கங்களை விளங்கிகொள்ளும் தேடலாக  கதை மாந்தர்களை படைத்து அவர்களின் குணத்தையும் பிற்வற்றையும் நமது ஊகங்களால் நிரப்புகிறோம்.

எனது தாயுடன் அருபது ஆண்டுகளுக்குச் சற்று கூடுதலாகவும், எனது மனைவியுடன் நாற்பத்தைந்து ஆண்டுகளாகவும் வாழ்ந்து வருகிறேன்.அம்மாவும் சரி, மனைவியும் சரி சராசரி இந்தியப் பெண்கள், என்னென்ன இலக்கணத்தை இவர்களுக்கென கீழைதேய பொதுபுத்தி விதிதிருக்கிறதோ அதை  மீறாதவர்கள். எனது வாழ்க்கையில் பெருபகுதி அவர்களுக்குரியது. இன்றைய கிருஷ்ணாவின் பலம் அவர்கள் ஊட்டியது, எனது வாழ்க்கைப் பாதையை,  இளம் வயதில் தாயும், திருமணத்திற்குப்பிறகு துணைவியும் செப்பனிட்டிருக்கிறார்கள். எனினும் அவர்களுடை பல நேர மௌனத்திற்கும், சிரிப்பிற்கும், முக சமிக்கைகளுக்கும் விடைகாண முடியாமற் திணறியிருக்கிறேன், திணறுகிறேன். பல நேரங்களில் அவற்றுக்கான தேடலாக கூட எனது நாவல்களின் பெண் கதை மாந்தர்கள் இடம்பெற்றுவிடுகிறார்கள்.  

——————————————————

மொழிவது சுகம்  நவம்பர் 21, 2021

அ. முள்ளிவாய்க்கால்   சிறுகதை  அம்ருதா இதழ் நவம்பர் 2021

இளங்கோ என்கிற இளம் எழுத்தாளரின் சிறுகதை, பெயர்  ‘முள்ளி வாய்கால்’. இளம் எழுத்தாளரில்லையா ஆதலால் இதொரு காதல் கதை.

கனடாவில் இருந்துகொண்டு, இலங்கை திரும்பும் எழுத்தாளர் தன் வாசகியைச் கொழும்பில் வைத்து சந்திக்கிறார். சந்திக்கிற வாசகித் தோழி தனது பதின்வயது காதலையும் அது பரிணாமம் பெற்றதையும், அதன் முடிவையும் நம்முடைய எழுத்தாளரிடம் பகிர்ந்துகொள்கிறார்.  சில தமிழ்ச் சினிமா காதல் அம்சங்கள் சிறுகதையில் இருந்தாலும்  நண்பர் எளிமையாக அழகாக அலங்கார வார்த்தைகளின்றி சிறுகதையைச் சொல்லி இருக்கிறார். அண்மையில் நான் வாசிக்க நேர்ந்த ஒரு நல்ல சிறுகதை.

ஈழப்போர் முடிவுக்குவந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்துவிட்டன.  பலிகொண்ட ஒரு இலட்சம் உயிர்களில் பெரும்பாலோர்  தமிழர்கள், முள்ளிவாய்க்காலை அத்தனைச் சுலபமாக நாம் மறந்துவிடமுடியாது. துப்பாகி ஏந்திய ஒரு தலமுறை தமிழரின் குருதி நனைத்த வரலாற்றின் பக்கங்களை மறப்பது அத்தனைச் சுலபமா என்ன ?

சாதியென்றும்மதமென்றும் பிர்ந்து எப்போதும் ஏதேனும் ஒன்றை முன்னிருத்தி சக்களத்திச் சண்டையைத் தெருச் சண்டையாக அரங்கேற்றி விளம்பர வாய்ச்சவடாலுக்கு வார்த்தைகளைத் தேடவே நமக்கு நேரம் சரியாக இருக்கிறது. நேரம் கிடைத்து,  அறச்சீற்றத்திற்குத் தெம்புவேண்டி  பாருக்குள் நுழைந்தால் இளங்கோ போன்று ஒரு சிலர் ‘முள்ளிவாய்க்கால்’ என முனுமுனுக்கின்றனர்.

            கனடாவில் புலபெயர்ந்து  வாழும் எழுத்தாளரிடம், தற்போது கொழும்பில் இடம்பெயர்ந்து வாழும் இளம்பெண்  மேலே குறிப்பிட்டதுபோல தம்முடைய காதல், அரசுக்கு எதிரான  இயக்கத்தின் எழுச்சி, அதில் அவள் காதலனின் பங்கேற்பு, எதிர் பாராதாவிதமாக தனது பள்ளிக்காதலியை மூன்று நான்குமுறை சந்திக்க நேர்ந்த காதலன் (இயக்கத்தில் சேர்வதற்கு முன்பாக  தன் இரத்தத்தில் நனைத்து எழுதிய காதற்குறிப்புகளை கவனமுடன் காதலியிடம் கொடுத்து, தற்போதைக்குப் பிரித்துப் படிக்கவேண்டாம் என்ற வேண்டுதல் வைத்தவன்) தனது காதலை வெளிப்படுத்துவதே இல்லை.  ஆக இச்சிறுகதை, ஒர் இளம்பெண்ணின் கைகூடாத காதல், யுத்தகாலத்தில் அவளைச் சந்திக்கிற தருணங்களில் காதலன் காட்டும் அசாதரண மௌனம், அது விஷயமாக புலம் பெயர்ந்துவாழும் எழுத்தாளரும், நிறைவேறாத காதலுக்குச் சொந்தகாரியான இளம்பெண்ணும் எழுப்பும் அனுமானங்கள் சிறுகதைக்கு அழகூட்டுகின்றன.  ஒருவகையில் இச்சிறுகதையில் ஆடையற்ற வார்த்தைகளைக்கொண்டு  முள்ளிவாய்க்கால்ப்பேரிழப்பின் இருண்ட சரித்திரத்தில் ஏதோஒன்றை நினைவூட்ட தீக்குச்சியை உரசுகிறார் ஆசிரியர், வாழ்த்துகள்.

மொழிவது சுகம்- நவம்பர் 15, 2021

அ. கொன்க்கூர் இலக்கிய பரிசு 2021

பிரான்சு அன்றி,தமது காலனி அரசியல், பிரெஞ்சு மக்களின் குடியேற்றம்,  பதினெட்டாம் நூற்றாண்டில் பல நாடுகளில் சட்டத்துறை மொழி, ஐக்கிய நாடுகள் அவையில் உத்தியோகபூர்வ ஆறு மொழிகளில் ஒன்று (பிறமொழிகள் அராபிக், ஆங்கிலம், சீனம், ரஷ்ய, ஸ்பானிஷ்), உலகில்  28 நாடுகளின்  அரசாங்க மொழி போன்ற பல காரணங்களால்  பிரெஞ்சு மொழி இன்று முக்கிய மொழி. இன்றைய தேதியில் 74 மில்லியன் மக்கள் முதல் மொழியாகவும், 274 மில்லியன் மக்கள் துணை மொழியாகவும் இம்மொழியை உபயோகிக்கிறார்களென சொல்லப்படுகிறது. இருந்தும் இங்கு வழங்கப்படும் இலக்கிய பரிசுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவற்றில் ஒன்று என்பதைக்காட்டிலும் முதன்மையான இலக்கிய பரிசு கொன்க்கூர் பரிசு(le prix Goncourt). பணமாக வழங்கப்படும் தொகை 10 யூரோ,  அதாவது ஆயிரம் ரூபாய்.  பணத்தைக்காட்டிலும் மேலே குறிபிட்ட எல்லைப் பரப்பில் கொன்க்கூர் பரிசு, அதை வெல்லும் எழுத்தாளருக்கு தரும் விலாசம்  மிகப்பெரியது. பரிசு அறிவித்த இரண்டு மூன்று தினங்களில் இவ்வருட கொன்க்கூர் பரிசு எழுத்தாளரின் நாவல் புத்தக கடைகளில் மெடிசி, நோபெல் பரிசு புத்தக  வரிசையில் முதலிடம் பெற்றிருந்தது, இலக்கியத்திற்கான நோபெல் பரிசை நாடுகள் வரிசையில் அதிகம் பெற்றிருப்பது பிரான்சு தேசம், இருந்தும் தங்கள் நாட்டினர் அன்றி பிறநாட்டினர் நோபெல் பரிசு பெறுகிறபோது, உள்ளூர் பரிசுகளை வென்ற நூல்களுக்கே பிரெஞ்சு இலக்கிய அபிமானிகள் முதலிடம் கொடுக்கின்றனர். ஆசியனான நான் இவ்வருட கொன்க்கூர் பரிசுபெற்ற ஆப்ரிக்க இளைஞரின் la plus secrète mémoire des hommes (மனிதர்களின் மிகவும் மர்மமான நினைவுகள்) என்ற நூலை நேற்று பாரீஸ் புத்தக கடையொன்றில் எடுத்துக்கொண்டு பணம்செலுத்த வைசையில் நின்றபோது எனக்கு முன்பாக இரண்டு ஐரோப்பியர்கள்.

நூலசிரியர் முகம்மது புகார் சார் (Mohamed Mbougar Sarr)செனெகல் நாட்டைச் சேர்ந்தவர். நோபெல், புக்கர், தற்போது கொன்க்கூர் பரிசு என ஐரோப்பிய இலக்கிய பார்வை ஆபிரிக்க கண்டத்தின்மீது தற்போது விழுந்திருப்பது ஏன் எதற்கு என்கிற கேள்விகள் ஒரு புறமிருக்க,  90 விழுக்காடு நேர்மைக்கு உத்தரவாதம். நூலாசிரியர் இளைஞர், 31 வயது. இதற்கு முன்பு மூன்று நாவல்கள் வந்திருக்கின்றன. பரிசு அறிவித்து அனேகமாக பத்து பன்னிரண்டு நாட்கள் இருக்கலாம். இதற்குள் சில லட்சம் பிரதிகள் விற்பனை என்கிறபோது, பிரெஞ்சு இலக்கிய பரிசுக்குழுவினர் மீது அபிமானிகள் வைத்துள்ள நம்பிக்கை புரியும்.  

நாவலை நேற்றுதான வாசிக்கத் தொடங்கினேன். தனது அபிமான எழுத்தாளரை, அவர் எழுத்தை, அப்படைப்புக்கான இரகசியத்தைத்  தேடி அலையும் இளம் எழுத்தாளரின் அனுபவமாக நாவல் விரிகிறது.  எனக்கு இணைய தள அகராதிகளில் அடிக்கடி பொருள் தேடவேண்டியிருக்கிறது, நேற்று பிற்பகல் வாங்கிய நூலில் பத்துபக்கங்கள் பக்கங்கள் தான் வாசித்தேன். நான்கு மணிக்கு பாரீசில் காரில் புறப்பட்டு போக்குவரத்து நெர்க்கடி காரணமாக எட்டு மணிக்குப் பதிலாகஇரவு ஒன்பதரை மணிக்குதான் வீடு திரும்ப முடிந்தது.

          நாவல் இப்படி தொடங்குகிறது :

« D’un écrivain de son œuvre, on peut au moins savoir ceci : l’un et l’autre marchent ensemble dans le lambyrinthe le plus parfait qu’on puisse imaginer, une longue route circulaire, où leur destination se confond avec leur originje : la sollitiude. »

“ஒரு படைப்பு, அதன் படைப்பாளி இருவரிடமிருந்தும் குறைந்தபட்சம் ஒன்றை நாம் புரிந்துகொள்ளமுடியும்: கற்பனைக்குச் சாத்தியமுள்ள தேர்ந்த திருகலான பாதையொன்றை தேர்வு செய்து இருவரும் ஒன்றாக பயணிக்கிறார்கள், வட்டவடிவ நெடிய  அப்பாதையின் முடிவு  புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வந்ததைப் போன்ற  குழ்ப்பத்தைத் தரும்: காரணம் இரண்டுமே ஒன்றுதான், ‘ஏகாந்தம் அல்லது தனிமை’ என்று அதற்குப் பெயர்.

இனிதான் மேலே தொடரவேண்டும் முழுவதும் படித்தபின் நாவல் குறித்து எழுதுகிறேன்.

ஆ மொழிபெயர்ப்பு

புதிய தலைமுறையின் படைப்புகளை பிரெஞ்சுக்கு கொண்டுபோகும் முயற்சி நீங்கள் அறிந்ததுதான்.  படைப்புகளை (ஐந்து பக்கத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும்) நேரடியாக அனுப்பிவைத்தால், எனக்கும் பிடித்திருந்தால் மொழிபெயர்ப்பேன். எனக்கென்று ஓர் இரசனை இருக்கிறது, அதனை அப் படைப்பு நிவர்த்திசெய்யவேண்டும். இதுநாள்வரை பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதாக இருந்தாலும், தமிழிலிருந்து பிரெஞ்சு மொழிக்கு கொண்டுபோவதாக இருந்தாலும் எனக்குப் பிடித்ததையே செய்துவருகிறேன். என்னுடைய படைப்புகளெல்லாம் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்பதை எப்படி உறுதி செய்ய முடியாதோ அதுபோலவே நான் முரண்படவும் வாய்ப்புண்டு. நான் எடுக்கும் முடிவுக்குச் சம்மதமெனில் படைப்பை அனுப்பலாம்.

வரவேண்டியவங்க வரலை!

வரவேண்டியவங்க  வந்துட்டா ங்களா ?

பக்க வாந்தியங்கள் வந்தாச்சு !

அமைச்சர், சின்னாளம்பட்டி சில்க்ஸ்,

பாரீஸ் ஒயின்ஸ், பாம்பே ஸ்வீட்ஸ்

முன்வரிசையில் !

செண்ட்ரல், ஸ்டேட்

வட்டம் மாவட்டம், பேட்டை,

கிழிந்த து கிழியாதது, காறாமணி சிறுமணி 

வென்றார், கொண்டாரென

விருதுகளால ண்டபம் நெறைஞ்சிருச்சி !

காது குடைந்த நேரம்போக

கைத்தட்டவும் தலையாட்டவும்

தாளவாத்தியத்துடன்

தமிழர் பண்பாடு !

வள்ளுவனையும்  பாரதியையும்

மொறப்படி அழைக்கலையாம்

மொறச்சுகிட்டு நிக்காக  !-ஆனா,

வரவேண்டியவங்க வரலையே?

யாரு?

வீடியோகாரரும், கேமராமேனும்!

———————–

பார்க்க நல்ல மனிதர்போல இருக்கிறீர்கள்

சொல்வனம் இணைய இதழில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த சிறுகதை. இதை ஒலிவடிவம் செய்து குரலும் அளித்துள்ளவர் தோழியர் சரஸ்வதி தியாகராஜன். சொலவனம் இணைய இதழுக்கும், தோழியருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

வரவிருக்கும் ‘சைகோன் – புதுச்சேரி ‘ நாவலில் இருந்து

அத்தியாயம் – 23

புதுச்சேரி (1)

1934 பிப்ரவரி  17…..

« …..ஏன் ஹரிஜன் என்று பெயர்வைக்கவேண்டும், எனப் பலர் என்னிடம் வினவுகிறார்கள். வினவும் அன்பர்கள், நம்முடைய ஹரிஜன சேவா சங்கத்தினராக இருக்கமுடியாது.  « ஹரிஜன் என்கிற பெயர் எதற்காக,  இதைவிட வேறு நல்ல பெயர்  உலகில் இல்லையா ? »எனறு சிலர் முணுமுணுத்ததையும் காதில் வாங்கியுள்ளேன்.   ஹரிஜன் என்ற சொல் அசாதாரணமானது என்பதை  நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இச்சொல்லுக்கென்று ஒரு முக்கியத்துவம் இருந்தது. ஒட்டுமொத்த மனிதர்களையும் கடவுளின் குழந்தைகளாகவே அன்றைக்குப் பார்த்தனர். தற்போது அச்சொல் வழக்கில் இல்லை என்பதால் மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக நீங்கள் கருதக்கூடாது. ஒருமுறை நம்முடைய அபிமானி ஒருவர்  « ஒடுக்கப்பட்ட மனிதரென்று சித்தரிக்கிற எந்தப் பெயரும் எங்களுக்கு வேண்டாம் » எனத் தெரிவித்தார். அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டதால், நீங்களே ஒரு பெயரைத் தெரிவு செய்யுங்கள் என்றேன். குஜராத் கவிஞர் நரசிம்ம மேத்தா, தமது கவிதைகளில் பல இடங்களில் கையாண்ட ‘ ஹரிஜன் ‘ என்ற சொல் பரவாயில்லையா என வினவினார். மறுகணம், என் சந்தோஷத்திற்கு அளவில்லை. மிகப் பொருத்தமான பதமாக எனக்குத் தோன்றியது. தமிழில் « திக்கற்றவருக்குத் தெய்வம் துணை என்கிற பழமொழி » இருப்பது எனக்குத் தெரியும். அக்கூற்றிற்கு மிகப்பொருத்தமாக அமைந்த ஒரு சொல், ‘ஹரிஜன்’.  அவர்கள் கடவுள்களின் குழந்தைகள்; அக்குழந்தைகளை வாரி அணைக்க, முத்தமிட நாம் பாக்கியவான்களாக இருக்க வேண்டும். நம்முடைய ஹரிஜனக் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருந்தேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஹரிஜன மக்கள் அல்லாதோர் பலரது மனசாட்சியை என்னுடைய  போராட்டம் உலுக்கியது என்ற உண்மையைப் பகிர்ந்துகொள்வதில் எனக்குச் சந்தோஷம். இப்போராட்டத்தின் காரணமாகப் பிறந்ததே நம்முடைய ஹரிஜன  சேவா சங்கம். அதன் கிளைகளில் ஒன்றை  இன்று உங்கள் புதுச்சேரியும் கண்டிருக்கிறது. சேவாதள அன்பர்கள் தீண்டாமை ஒழிப்பிற்கு அயராது பாடுபடுவார்கள்  என மனப்பூர்வமாக நம்புகிறேன். சமத்துவம், சகோதரத்துவம் ஆகியசொற்களின் பொருளை இந்தியாவின் பிறபகுதி  மக்களைக் காட்டிலும் புதுச்சேரிவாசிகள் நன்கறிந்தவர்கள். எனவே  ஜாதி மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராகப் புதுச்சேரி அன்பர்கள் போராடக்கூடியவர்கள் என்கிற நம்பிக்கை  எனக்கு இருக்கிறது. சமூக விழிப்புக் கொண்ட புதுச்சேரி சனங்கள் எனது அபிலாஷையைப் பூர்த்தி செய்வீர்கள் என்கிற நம்பிக்கையுடனும் சந்தோஷத்துடனும் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் »

காந்தி உரையை முடித்துக்கொண்டார்.புதுச்சேரி ஹரிஜன சேவா சங்கத்தின்  ஏற்பாடு. காலை நேரம். ஒதியஞ்சாலைத் திடலெங்கும் சமுத்திரம்போல மக்கள் கூட்டம். எங்கும் மாவிலைத் தோரணங்கள். புழுதி மண்டலம்.புதுச்சேரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தெல்லாம் சனங்கள் திரண்டிருந்தார்கள். முன்னதாக மகாத்மாவை வரவேற்ற, சேவா சங்கத்தின் தலைவர் சவரிநாதன், காந்தியின் தென் ஆப்ரிக்க அரசியல் சம்பவங்களை நினைவு கூர்ந்து காந்தி, இந்த நூற்றாண்டின் மிகப் பெரியமனிதர் என்றார். 

இந்தியாவின் விடுதலை பற்றிப் பேசவோ, பிரெஞ்சுக் காலனி அரசுக்கு எதிராக எதையாவது கொளுத்திப்போடும் யோசனையோ கூடாதெனக் காலனி நிர்வாகம் தெளிவாக விழா ஏற்பாட்டாளர்களை எச்சரித்திருந்தது. ஆட்சிக்கு எதிராகக் காந்தி வாய் திறக்க வரவில்லை. பதிலாக இந்தியர்களிடையே ஏற்றத்தாழ்வு கூடாது எனப்பேச வருகிறார் எனக் காலனி அரசுக்குச் சொல்லப்பட்ட சமாதானம் ஒருவகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு  ஏற்புடைய விஷயம்.

காந்தி மேடையிலிருந்து இறங்கும்போது கூட்டத்தில் ‘மகாத்மா காந்திக்கு ! ’ என்றார் ஒருவர். தொடர்ந்து வழிமொழிவதுபோலப் பல குரல்கள் ஜே ! ஜே ! என்றன. மேடையில் பிரிட்டிஷ் இந்தியக் காங்கிரசாரின் சீருடையில் இருந்த ஒருவர், ‘வந்தே மாதரம்’ என முழங்க, « அதெல்லாம் கூடாதுப்பா » என்று விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவர் உரத்த குரலில் கையை உயர்த்திக், குரல்களை அடக்கினார். இதையெல்லாம் கூர்மையாக அவதானித்தபடிக் கூட்டத்தில் ஓரமாக அமர்ந்திருந்த காவல் அதிகாரி முகத்தில் திருப்தி. அசம்பாவிதமாக எதுவும் நடந்துவிடக்கூடாதென்கிற கவலை அவருக்கு. அலுவலகத்திலிருந்து பந்தோபஸ்துக்கெனச் சிப்பாய்களுடன் கிளம்பியபோது சகுனம் பார்த்தார்.முதல் நாள் பெருமாள் கோவிலுக்குச் சென்று அர்ச்சனையும் செய்திருந்தார். ஐரோப்பியருடன் சகவாசமென்றாலும் இவற்றையெல்லாம் விட முடிகிறதா என்ன ?  தமது தலைக்குக் கேடு வரக்கூடாதென்கிற கவலை அவருக்கு.

அவர் கவலைக்குக் காரணங்கள் இருந்தன. இரண்டுவருஷத்துக்கு ஒருமுறை கவர்னர்களை மாற்றியும் புதுச்சேரிக் காலனிவாசிகளைக் கட்டி மேய்ப்பது பெரும் சிக்கலாகவே இருந்தது. சிக்கல், வயலில் இறங்கி உழைத்த ஏழைவிவசாயிகளால் வருவதில்லை; வரப்பில் குடைபிடித்து உட்கார்ந்திருந்த சண்முக வேலாயுத முதலி போன்ற மிராசுகளால் வருகிறது. கூலிக்கு வலைவீசிய மீனவர்களால் பிரச்சனையில்லை; அவர்களைக் கொத்தடிமைகளாக வைத்திருந்த செல்வராஜு செட்டியார் போன்றவர்களால் பிரச்சனை. ஆலைத்தொழிலாளிகளால் அல்ல, ஆலை முதலாளியான  கெப்ளே போன்ற ஐரோப்பியர்களின் அரசியல் விளையாட்டினால்  தீராத தலைவலி. மொத்தத்தில் பிரெஞ்சுக் காலனி அரசுக்குப் பெரும் சங்கடத்தை அளித்தவர்கள் புதுச்சேரிக் காலனியின் ஐரோப்பிய, இந்திய மேட்டுக்குடிகள்

.

பிரெஞ்சு மேட்டுக்குடிகள் எனில் அவர்கள் கிறித்துவக் குருமார்கள், காலனி அதிகாரிகள், ஐரோப்பிய வணிகர்கள். இவர்களைப் பொறுத்தவரை, « புதுச்சேரி இந்தியருக்கு ஐரோப்பியரின் அரசியலையோ, பண்பாட்டையோ புரிந்துகொள்ளப் போதாது ».  இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதோ, பிரான்சு மக்களவையில் பிரதிநிதித்துவம் தருவதோ அவர்களைப் பொறுத்தவரை ஆபத்தாக முடியும். புதுச்சேரி ஊரையும் இரண்டாகப் பிரித்து ஐரோப்பியர் ஒதுங்கி வாழ்ந்தனர். இந்திய மேட்டுக்குடியினர் இருவகையினர். முதலாமவர் பழமைவாதிகள்;இரண்டாம்வகையினர், ஐரோப்பிய வாழ்க்கைமுறையில் மோகம்கொண்டவர்கள். இந்தியப் பழமைவாதிகளுக்குத் தங்கள் பண்பாட்டில் ஐரோப்பியர் குறுக்கிடாதவரை காலனி ஆட்சி, ஐரோப்பியப்பண்பாடு- இரண்டின்மீதும் தங்களுக்குப்  பகையோ, வெறுப்போ இல்லை என்கிற மனநிலை.பிரெஞ்சுக் கல்வி கிடைத்த புதுச்சேரி வாசிகளுக்கு மேற்கத்திய பண்பாடு மேலானது; அவர்கள் வாழ்க்கைமுறை உயர்ந்தது.

 பிரெஞ்சுக் காலனி அரசின் மன நிலை என்ன? சைகோன் உங்களிடம் அது பற்றி விரிவாகப்பேசியிருக்குமென நினைக்கிறேன். புதுச்சேரி சார்பாக எனக்கும் சொல்ல இருக்கிறது. ஆட்சியென்பது அதிகாரம், நலன் என்கிற இருசொற்களுக்குச் சொந்தமானது. இரண்டுமே ஆட்சியாளர்களுக்கானது. இதற்காக எதையும் அவர்கள் செய்வார்கள். நல்லவேளை  எல்லைதாண்டிக் கொள்ளை அடிக்க இன்றைய ஆட்சியாளர்களுக்குச்  அதிகம் சாத்தியமில்லை.  ஆனால் நேற்று இருந்தது. நேற்றெனில் இக்கதை நடக்கின்ற இருபதாம் நூற்றாண்டுவரை. ஒரு மனிதனை அடிமைப்படுத்த வேண்டுமா, அவனைச் சிறுமைப்படுத்து, உன்னை உயர்ந்தவன் என்று நம்பும்படிச் செய்.இதுதான் சகமனிதர்களை ஒடுக்குவதற்குப் புத்திசாலிகள் கடைப்பிடிக்கும் தந்திரம். காலனியத்தின் கொள்கையும் இதுதான். இலாபம் , முதலீட்டாளர்க்கு என்கிற வணிக அரசியலுடன் உள்ளே நுழைந்தவர்கள், காலனி நாடுகளின் சமூக அமைப்பையும், அவலங்களையும் ஆதிக்க அரசியலுக்கு பயன்படுத்திக்கொண்டார்கள். சந்தேகித்த காலனி மக்களிடம் ‘Civilizing Mission’க்காக வந்திருக்கிறோம் என்றார்கள், ஏதோ காலனிவாசிகள் காட்டுமிராண்டிகளாக வாழ்வதைப்போல.

ஐரோப்பியர்களுக்கிடையிலான காலனிப் போட்டியில் அதிகம் ஜெயித்தது ஆங்கிலேயர்கள்.  அரசியல் யுத்தத்திலும், ஐரோப்பியரல்லாத  பிறர் மீதான மொழி மற்றும் பண்பாட்டுத் திணிப்பிலும் ஆங்கிலேயர் அடைந்த வெற்றி உலகமறிந்தது.  ஒரு சிலரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வதற்கெனவே அண்டைவீட்டுக்காரன் அமைந்து விடுவதுண்டு. பிரிட்டிஷ் முடியாட்சி, பிரெஞ்சு முடியாட்சிக்கு அப்படி அமைந்த அண்டைவீட்டுக்காரன். பங்காளிகளுக்குள் நடந்த சண்டைகள், சமாதானங்கள் என்கிற நீண்டகால அரசியலிலும் ஆங்கிலேயர் கைகளே ஓங்கி இருந்தன.

ஐரோப்பியர்களுக்கிடையிலான ஏழாண்டுப்போர் முடிவில் ஜெயித்த இங்கிலாந்து, தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு வேண்டாதவற்றை « பாவம் நீ என்ன செய்வ ,மொத்தத்தையும் நான் எடுத்துக்கக் கூடாதில்லையா » என பிரான்சுக்குத் தானமாக அளித்தவைகளில் பிரெஞ்சிந்தியக் காலனிகளும் அடக்கம். இது நடந்தது 1763இல். அதன் பின்னர் இருவரும் உனக்கா எனக்காவென நடத்திய  குடுமிப்பிடிச் சண்டையில்   பாரீசுக்கும் இலண்டனுக்குமெனப் பந்தாடப்பட்டு  பிரெஞ்சிந்தியக் காலனிகள், மீண்டும் ஒருபோரின் முடிவில் தோற்ற பிரான்சு வசம், பிரிட்டன் சில நிபந்தனைகளுடன் 1815ல் பிரெஞ்சிந்தியக் காலனிகளைத் திரும்ப ஒப்படைத்தது.  காலனிய அரசியலில் பிரான்சுக்கு, இங்கிலாந்துடன் ஒப்பிடுகிறபோது « கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்டக் காலில்லை » என்கிற கதைதான்.

பிரிட்டிஷ் முடியாட்சி இந்தியச் சமூகத்தின் பிரச்சனைகளில் அதிகம் தலையிடுவதில்லை. இந்தியப் பண்பாடுகளின் கட்டமைப்பை இடித்து மாற்றி எழுப்புவது எளிதல்ல என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். சுரண்டவந்தோம், அதைச் சரியாகச் செய்வோம் என்ற மனநிலையில் அவர்கள் இருந்தனர். பிரெஞ்சுப் புரட்சியூடாக மனிதர் உரிமைக்கு வாதிட்ட பிரான்சு அரசாங்கத்திற்கு மனசாட்சி உறுத்தி இருக்கவேண்டும். சைவப்பூனையாக அவதாரம் எடுத்தது. சைகோனில் பேசாத மனிதர் உரிமையைப் புதுச்சேரியில் பேசியது. இந்தியர்களுக்கு, ‘ பிரிட்டிஷ் ராஜ்’ ஐக் காட்டிலும் ‘பிரெஞ்சு ராஜ்’ மேலானது என்பதைச் சொல்லவேண்டும். பிரெஞ்சு அரசு, காலனி மக்கள்  பிரெஞ்சுக் குடிமக்களாக மாறுவதற்கு உதவும் அரசாணையைப் பிறப்பித்தது. மாறிய காலனி மக்கள் இந்தியப் பிறப்பு வழங்கியுள்ள சமூக அடையாளத்தைத் துறக்கவும்,  பிரான்சுதேசத்துக் குடிமக்களுக்கு ஈடாகச்  சலுகைகள், உரிமைகள் பெறவும்  உறுதி அளித்தது. அரசாணைகளும் சட்டங்களும், விரைவான மாற்றத்திற்கு ஓரளவேனும் உதவக்கூடியவை என்பதை மறுக்கமுடியாது. ஆயினும் அவை ஏட்டுச்சுரக்காய் என்பதுதான் புதுச்சேரியிலும், சைகோனிலும் பிரெஞ்சுக் குடியுரிமைபெற்ற புதுச்சேரிக் காலனிமக்களின் சொந்த அனுபவம்.

சைகோனுக்கும் புதுச்சேரிக்கும் அநேக விஷயங்களில் ஒற்றுமை இருந்தது.  ஆயினும் புதுச்சேரிமக்கள் இருநூறு ஆண்டுகாலம் கூடுதலாக அடிமைப்பட்டுக் கிடந்தோம் என்கிற பெருமைக்குரியவர்கள். இதைப் புதுச்சேரியாகிய நான்   சொல்லிக் கொண்டிருக்கிறபோது, வியட்நாம் மக்கள் அங்கே தங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்திருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. புதுச்சேரி சனங்கள் நாள், நட்சத்திரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லாம் கூடிவந்தால் ஏதாவது நடக்கலாம். புதுச்சேரியில் ஆயிரத்தெட்டுச் சாதிகள். அவர்களை வழிநடத்தும் மக்கள் தலைவர்களுக்குத் தங்கள் அரசியல் செல்வாக்கு பற்றிய கவலைகள். 

———————————————————————————–

பண்பியல் ஓவியம் அல்லது அருவக் கலை (L’art Abstrait)

                                                                                  

ஒருவர்  தன் புலன்கள் உள்வாங்கியதை,  மனம் உணர்ந்ததை சகமனிதருக்குக் கொண்டு செல்ல்லும்  முயற்சி, கலைகளும் இலக்கியமும். இம்முயற்சிக்கானப் பட்டறை அவருடைய மூளை.  அவர் உள்வாங்கிய உணர்வை, அதன் புரிதலை பிறர் உணர, சுவைக்க  அறிவையும் அழகியலையும் பிணைத்து  எழுத, தீட்ட, செதுக்க, இசைக்க, சமைக்க தேர்வு செய்யும் களம்.

ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அடிப்படையில் ஒரு கலைஞன்  தனது இதயத்திற்கு வெப்பமூட்டிய , உடல் சூட்டைத் தணித்த  உணர்வை «  யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் » என ‘புற வெளிக்கு’ அழைத்து வருகிறான்.  இயற்கைக்கு மாறாக மனிதர் தோப்பில் ஒரு சில மரங்களே இனப்பெருக்க கடமைக்காக மட்டும் இன்றி  அதிசயமாக பிறரை மகிழ்விக்க, கிளர்ச்சியூட்ட, காரணம் தேட   கலை இலக்கியம் என்ற பெயரில் பூக்கவும் , காய்க்கவும் செய்கின்றன. பழுத்த கனியைக் கடிக்கவோ அல்லது  கொத்தவோ எல்லா அணில்களும் அல்லது கிளிகளும் வரவேண்டுமென்பதில்லை. திசைமாறிய, ருசியை  வேறாகக் கொண்ட அணிலோ, கிளியோ ஒரு குறிப்பிட்ட கனியை விலக்கிச் செல்ல சாத்தியமுண்டு. அவை தேர்வு செய்த மரமும், பறந்து செல்லும் பாதையும் மாறுபட்டதாக இருக்கலாம். கலையும் இலக்கியமும்  ஒருவகையில் கனிகளே, சில மானுடமரங்களின் இயற்கை நிகழ்வு. இப்பிரத்தியேக, மானுடமரங்களை   ஔவைகள் எனக்கொண்டால், அம்மரத்தின் கனிகளைச் சுவைக்கும் பேறுபெற்ற அதியமான்கள் அனைவரும் நாவில் ஒருபடித்தான சுவை அரும்புகள் கொண்டவர்களாக  இருக்கவேண்டும் என்பதில்லை.  அதற்காக ஒவைகள் அழவேண்டியதும் இல்லை.

மார்கெரித் யூர்செனாஎர் (Marguerite Yourcenar)என்ற பிரெஞ்சு பெண்படைப்பாளி, புகழ்பெற்ற ‘ அதிரியன் நினைவுகள் (Mémoires d’Hadrien)என்கிற நாவலின் ஆசிரியர்.  நேர்காணலொன்றில்  « பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டும் விஷயங்களை நான்  கையாளுவதில்லை  என்கிற எளிய காரணத்திற்காகவே, எனது  புத்தகங்களை எத்த்னைபேர்  படிக்கிறார்கள்  என்கிற எதிர்பார்ப்புகளில்லை ” என்கிறார்.

கலை, மற்றும்  இலக்கியபடைப்பாளிகளில் , பண்பியல் அல்லது அருவக் கலை படைப்பாளிகள் தனி இனம். இவர்கள் வெளித்தோற்றங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல, « கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் » என்கிற மெய்யியல் வாதிகள். உண்மையில்  ஆழ் மனதில் உளர்ந்த உணர்ச்சிகளில் கலவையைப் பிரித்துணர்ந்து தங்கள் அறிவின் துணைகொண்டு பூரணங்கள் மற்றும் குறைபாடுகளுடன்  கலையாக வடிக்கிறார்கள். பொருளின் பூரணம் அல்லது அதன் முடிவற்ற அழகு படைத்தவனோடு நிற்பதில்லை, உள்வாங்குகிற பிறமனிதர்களிடத்திலும் பிரிதொரு நிறத்தில், பிரிதொரு பொருளில் அடையாளம் பெறுகிறது. ஆயிரமாயிரம்பேர் உரை எழுதலாம, பிரித்து பொருள் காணலாம். இவையே அவற்றின் சிறப்பு. பெனுவா தெக் (Benoît DECQUE) இத்தகைய ஓவியர்  அவரை  அண்மையில் சந்தித்தேன். அவருடனான நேர்காணல் இது.

                                   ———————————————–

  1. வணக்கம். பிரான்சு இந்தியா என்ற இரு நாடுகளின் பண்பாட்டையும், கலை இலக்கியத்தையும் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் சில வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டத் வலைத்தளம் Chassé-Croisé: France -Inde. இதன் சார்பாக உங்களைத் தொடர்பு கொள்கிறேன். உங்களைச்  சுருக்கமாக அறிமுகப்படுத்திக்கோண்டு, ஓவியத்த்துறையைத் தேர்ந்தெடுத்தக் காரணத்தைத் தெரிவியுங்கள்?

1951ல் பிறந்த நான், வளர்ந்தது, வாழ்வது அனைத்தும் இங்குதான் அதாவது ஸ்ட்ராஸ்பூரில். அறிவியல் துறை எனத் தேர்வு செய்த கல்வி என்னை கட்டடக் கலைக்குக் கொண்டு சென்றது. 1976 இல் கட்டடக்கலை க்கான பட்டத்தைப்பெற்றேன். 1982 முதல்,  கட்டடக் கலைத் துறையோடு என்னிடமிருந்த கலை ஆர்வத்தால் நகரிலிருந்த மிகப்பெரிய ஓவியக் கலைப்பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றினேன். 2008 ஆம் ஆண்டு சமகால ஓவியத்துறையில் ஆற்றிய பணியைப் பாராட்டி ஸ்ட்ராஸ்பூரிலுள்ள “Le Centre Européens d’Actions Artistiques Contemporaines”பரிசளித்து கௌவுரவித்தது.   , தற்போது என்னை முழுமையாக ஓவியத்திற்கு அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறேன்.

        2.  உண்மையைச் சொல்வதானால், சமகால கலை பற்றிய எனது அறிவு சுமாரானது, ஆனாலும் நீங்கள் உருவாக்கிய படைப்புகளை வைத்து பார்க்கிறபோது அவை பண்பியல் (l’art Abstrait) ஓவியமென  நினைக்கிறேன். எனது முடிவு சரியெனில் நீங்கள் ஏன் பிறவற்றில் ஆர்வம் காட்டாது இவ்வடிவத்தை தேர்ந்தெடுத்தீர்கள்?

ஓவியங்கள்(Paintings) அன்றி பெரிய வடிவிலான சித்திரங்கள்(Drawings), சுவரோவியங்கள்  நகர்ப்புற அல்லது ..கிராமபுற காட்சிகள் என பன்முகத் தன்மைகொண்ட ஆர்வத்துடன், சுதந்திரமாக செயல்படுகிறேன். எண்ணற்ற கற்பனை மற்றும் சிந்தனை முரண்கள் ஒருவகைப் பன்மைத் தன்மைகொண்ட களத்தை உருவாக்கிக்கொள்ள உதவ, அக்களத்தில் எனது கலைமுயற்சி கட்டமைப்பது எளிதாகிறது

3. உங்கள் படைப்புகளில் பலவித சேர்மங்கள், வடிவங்களை ஒன்றிணைத்த ஒட்டுச் சித்திர(Collage) தோற்றங்களையும் காண முடிகிறது.  இவ்வகையான படைப்புகளுக்கு ஆரம்பம் ஒன்று இருக்கலாம், ஆனால் முடிவைத் தீர்மானிப்பது எளிதல்ல, இதுதான் இப்படைப்பிற்குரிய முடிவு என “ஒன்றையும்” அதற்கான தருணத்தையும் எப்படி தீர்மானிக்கிறீர்கள்? மேலும் இதன் மூலம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

எனது படைப்புகள் பண்பியலுக்கும்(Abstraction), உருவியலுக்கும்(Figuration) இடைபட்டவை. இதைநான் விரும்பியே செய்கிறேன், பண்பியல் படைப்பு என்கிறபோதும், ஒரு  “பார்வையாளர்” தனது சொந்த கற்பனைகளின் எண்ணிக்கையைப் பெருக்கிகொள்ள போதுமானக் குறிப்புகளைக் கொண்டதொரு படைப்பு. முடிந்ததொரு படைப்பு என்கிறபோதும், பார்வையாளர்கள்  தங்கள் கற்பனையில் வெகு தோரம் செல்ல உதவும். உண்மையில் எனது படைப்புகள் முடிவற்றவை, படைக்கிற போது முடிவின்றி அவற்றை விருத்திசெய்யவே மனம் விரும்புகிறது மேலும், உண்மையில்  ஒவ்வொரு படைப்பாக்கத்தின்போதும், பணியை முடிக்காத உணர்வே மேலோங்குகிறது, நிறைவின்றி திரும்பத் திரும்பத் கையிலெடுக்கிறேன், யாரேனும் கேட்டால், “இன்னும் முடியவில்லை, வேலை நடந்து கொண்டிருக்கிறது …”என்றே சொல்லத் தோன்றும்.

4. கூடுதலாக, பெரும்பாலான வடிவமைப்புகள் பிரகாசமான நிறங்களைக் கொண்டிருப்பதுடன் அவை உயிர்த்துடிப்புடன் இருக்கின்றன. அத்தகைய உயிர்த்துடிப்புள்ள  வடிவமைப்புகளை உருவாக்க தூண்டுவது எது?

துவாலை மீதான வண்ணங்கள், உயிர்ப்புள்ள நிறங்களாக இருக்கிறபோது ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. வண்ணகளுக்கிடையேயான  இவ்வேறுபாடு அவைக்கிடையே மோதலை மட்டுமல்ல இணக்கத்தையும் பராமரிக்கின்றன.  கிளர்ச்சியாளர்களாக மாறும் நிறங்கள் விதிமுறையை ஏற்பதில்லை, அவவை தங்களுக்கு எது ஒழுங்கின்மையாகப் படுகிறதோ அவற்றில் தலையிடுகின்றன. நிறம்  எனப்படுவது கட்டமைத்தல், கட்டுடைத்தல்,மறுதலித்தல் என அனைத்திற்கும் பொருந்த்தும். படைப்புக்கான கருப்பொருள்?  அது எதுவென்றாலும் இதொரு படைப்பு, ஓவியம், அதன் களம் சந்தடி மிக்கது. அதொரு யுத்தகளம்!

5. உங்கள் உந்துதலுக்கு எது காரணம்?

பல வேறு கூறுகளில் பெறும் அனுபவங்கள், படைப்புக் குறித்த அக்கறை, எண்ணற்ற தேடல்கள் : குறிப்பாக எங்கும் எதிலும் உள்ள ஆர்வம். இன்று உங்கள் முன் நிற்கும் பெனுவா தெக் தமக்கென ஏற்படுத்திக்கொண்ட புலனாய்வுகள் களத்தில் உருவானவர். இப்புலனாய்வுகள் களம் என்னைப் பொறுத்தவரை பன்முகத் தன்மை கொண்டது.  இப்பன்முகத் தன்மைகொண்ட புலனாய்வுகள் களமே  என்னுடைய கலை உத்வேகத்திற்கு அடிப்படை.

6. உங்கள் படைப்புகள் மூலம் என்ன செய்தி சொல்ல  விரும்புகிறீர்கள்?

படைப்புகள் மூலம் செய்தியா? என்னுடைய படைப்புகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக  செய்திகள் உள்ளனவென்று உறுதியாக என்னால் தெரிவிக்க இயலாது. ஒருவேளை விழிகளுக்கு இன்பமூட்டுவதாக இருக்கலாம், அதாவது  எளியதொரு விழித்திரை இன்பம் … அதனூடாக உலகாயத விடயப் புரிதல்களில் எளிய அணுகுமுறைகளை வேண்டலாம், ஆனால் எப்போதும் சுதந்திரத்திற்கான அவாவை தூண்டச்செய்யும் எண்ணமுண்டு, காரணம் நான் ஓவியம் தீட்டுவதே  என்னுடைய சுதந்திர இருத்தலுக்காக!

  —————————————————————-

மொழிவது சுகம்,, செப்டம்பர் 1 – 2021 : « சைகோன் – புதுச்சேரி நாவல் மற்றும் ஆஃகானிஸ்தான் »

        

              ‘புலி வருகிறது, புலிவருகிறது’  என சைகோன் –   புதுச்சேரி நாவல் வெளிவரும் தேதி திட்டவட்டமாக  தெரியாதவரை நானும் சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால்  புலிக்கும் நாவலுக்கும் தொடர்பு இருக்கிறது. வியட்நாம் ஹோசிமினும் தன்னை புலி எனச் சொல்லிக்கொண்டவர். ஐந்து மாதங்களுக்கு முன்பு  நண்பர் பேராசிரியர் க. பஞ்சாங்கம் இநாவலைக் குறித்து ‘காக்கைச் சிறகினினிலே இதழுக்கு எழுதிய கட்டுரையை வேறு எழுத்தாள நண்பர்களெனில் உடனே முகநூலில் பதிவிட்டிருப்பார்கள். மிகச் சிறந்த கட்டுரை. வெறும் சடங்கான கட்டுரை அல்ல. மனம் உவந்து,, நாவலைப் பாராட்டியிருந்தார். பஞ்சுவின் பாராட்டுகளுக்கு பல படைபாளிகள் காத்திருபதையும் ஏங்குவதையும் அறிவேன். எனக்கது நெஞ்சு தளும்ப வாய்த்திருக்கிறது.  சைகோன் – புதுச்சேரி நாவலுக்கும் அப்படியொன்றை எழுதினார். நாவலின் அணிந்துரையாக அதைச் சேர்க்கச் சொல்லியிருக்கிறேன். நாவல் புத்தகவடிவம் கிடைத்த தும், காக்கைச் சிறகினிலே இதழில் வெளிவந்த நண்பர் பஞ்சுவின் கட்டுரையை முகநூலில் பகிர்ந்துகொள்வேன்.

            சைகோன்- புதுச்சேரி நாவலில் வரும் சைகோனுக்கும் இன்றைய ஆப்கானிஸ்தான் விடுதலைக்கும் தொடர்பிருக்கிறது. ஆனால் வித்தியாசம் அன்றைய வியட்நாம் பொதுவுடமை வாதிகள் கைக்குச் சென்றது, இன்றைய ஆப்கானிஸ்தான் மதவாதிகள் கைக்குச் சென்றிருக்கிறது. 

            புதுச்சேரி ஒதியஞ்சாலை(தற்போது அண்ணா) திடலில் சிவாஜி கணேசனின் (தமிழகத்திற்கு கிடைத்த ஓர் அற்புத நடிகர்) வியட்நாம் வீடு நாடகத்தைப் பார்த்தேன்( 1968 என்று ஞாபகம்).  வியட்நாம் என்ற பெயரை காதில் வாங்கியது அன்றைக்குத்தான். நாடகத்தில் பத்மினி இடத்தில்  ஜீ. சகுந்த்தலா. பத்திரிகை தெரிவித்ததைக் காட்டிலும் இந்நாடகமும் குறிப்பாக இதன் தொடர்ச்சியாக வந்த வியட்நாம் வீடு திரைப்படமும் தமிழ் மக்களிடம் வியட்நாம் பெயரையும் அங்கு நடந்த நீண்டகால  யுத்தம்பற்றிய மக்களையும் பாமர மக்களும் அறியுமாறு செய்தது எனலாம்.  

ஆஃப்கானிஸ்தான் யுத்தத்தில்  « தலிபான்கள் – சோவியத் யூனியன் -அமெரிக்கா» என்பதுபோல வியட்நாம் யுத்த த்தில் « வியட்மின்கள் – பிரான்சு- அமெரிக்கா » என்று நடந்த யுத்தம். இரண்டுமே அதிக காலம் நடந்த யுத்தங்கள். ஆனால் வியட்நாமைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் தலையீடு தென்வியட்நாமிற்கு ஆதரவாக வட வியட்நாம் கம்யூனிஸ்டுகுகளுடன்   மோதிய வரலாறு,  ஸ்டாலினுக்கு எதிராக கென்னடி நடத்திய யுத்தம்.

                       இந்தோ சீனா யுத்தமும் – சைகோன் புதுச்சேரி நாவலும்      

இந்தியாவின் கிழக்கிலும், சீனாவுக்குத் தெற்கிலும் அமைந்த நாடுகள் இந்தோசீன நாடுகள். இந்தோ-சீனாவின் ஆரம்ப பெயர் கொச்சின் சீனா, சூட்டியவர்கள், இந்தியாவைக் கொச்சின் மூலமாக அறியவந்த போர்த்துகீசியர்கள். ஆனால் இந்நாவல் 1858லிருந்து 1954வரை பிரெஞ்சுக் காலனி அரசாங்கத்தின் கீழிருந்த இந்தோசீனாவை(1858லிருந்து 1907வரை சிறிது சிறிதாக தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த) கதைக்களனாக கொண்டது,அதாவது மலேசியா, சிங்கப்பூர், மியான்மர் நீங்கலாக இருந்த இதரப்பகுதிகள். இவறில் பழைய கொச்சின் சீனா பெயரிலிருந்த  வியட்நாமின் தென்பகுதியைதியைத் தவிர்த்து பிறபகுதி முடியாட்சிகள், பிரெஞ்சுக் காலனி அதிகாத்தின் நிழலில் இருந்தன. கொச்சின்சீனா பிரான்சு தேசத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழும், பிறபகுதிகள்  குறிப்பாக வியட்நாமின் மத்திய (Annam) மற்றும் வட பகுதி (Tonkan), சயாம், கம்போடியா, லாவோஸ் ஆகியவை பாதுகாப்பு விஷயத்தில் பிரான்சு தேசத்தைச் சார்ந்தும் இருந்தன. தொடக்கத்தில் தேசியவாதிகளாலும், அதன் பின்னர் சீனாவில் ஏற்பட்ட பொதுவுடமைத் தாக்கம் வியட்நாமில் செல்வாக்குப் பெற்றதாலும்  ஹோசிமினை தலைவராக் கொண்ட வியட்மின்கள் கொரில்லா தாக்குதல்களில் ஈடுபடலானார்கள். பிரெஞ்சுக் காலனிய அரசு வழக்கமான ஒடுக்குமுறைகளைக் கையாண்டது. 1946 தொடங்கி 1953வரை நடந்த முதல் இந்தோ சீன யுத்தம், வியட்நாம் மட்டுமின்றி இந்தோசீனாவின் பிறநாடுகளும் விடுதலைபெற காரணம் ஆயின. வடவியட்நாமை இரண்டாண்டுகளுக்கு (1954) முன்பே போரில் பறிகொடுத்திருந்த பிரான்சு தென்வியட்நாமை விட்டு 1956 ஏப்ரல் 28 அன்று நிரந்தரமாக  வெளியேறியது. தென்வியட்நாம்  வியட்நாம் தேசியவாதிகள் கைக்குப் போவதை விரும்பாத  வடவியட் நாம் ஜெனீவா ஒப்பந்தத்தை மறுத்து போரைத் தொடங்க, பிரான்சு கைவிட்ட நிலையில் அமெரிக்கா தென்வியட்நாமிற்கு ஆதரவாக போரில் இறங்கியது. பின்னர் 1975 போர் முடிவுக்கு வர , தென் வியட்நாம் வடவியட்நாம்  இரண்டும் இணைந்தன.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வியட்நாம் பிரான்சு தேசத்தின் காலனியாக இருந்திருக்கிறது. பிரான்சுக்கும் ஹோசிமின் தலமையிலான வியட்மின்களுக்கும் நடந்த ஏறக்குறைய பத்தாண்டுகள் போரில், ஹோசிமின் படையில் இணைந்து சொந்த நாட்டிற்கு எதிராக போரிட்ட பிரெஞ்சு பொதுவுடமைவாதிகள் அதிகம். பிரெஞ்சு கம்யூனிஸ்டுகள் தங்கள் தாய்நாட்டின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்த தோடு, ஹோசிமினுடனும் கைகோர்த்து நாட்டிற்கு எதிராக போரிட்டவர்கள். ழார்ழ் பூதாரெல், ஹாரி மர்த்தென் போன்ற பிரெஞ்சு கம்யூனிஸ்டுகளை உதாரணமாக சொல்லமுடியும்.  பிரான்சு தேசத்தின் காலனி ஆதிக்க அரசியலை எதிர்த்துத் தேசத்துரோகிகள் எனப் பழிச்சுமக்கவும் தயாராக இருந்தார்கள். இன்றைய உலகில் அரிதாக க் காணக்கூடிய மனிதப் பண்பு. அதே வேளை புதுச்சேரியில் என்ன நடந்த து. ஹோசிமினுக்கு ஆதரவாக இங்கும் ஊர்வலம் போனார்கள் ஆனால் புதுச்சேரி காலனி ஆட்சிக்கு எதிராக ஒரு சொல் உரத்துடனில்லை. பிரிட்டிஷ் இந்தியா விடுதலை பெற்றபிறகே தங்களுக்கும் மீசை இருப்பது நினைவுக்குவந்திருக்கவேண்டும். .

            சைகோன் – புதுச்சேரி நாவலின்  முதல் அத்தியாயம் இந்தோ சீனா யுத்தம் பற்றிய சைகோன் நகரின் குரலாக ஒலிக்கிறது. பிறகு அதனை பதிவிடுகிறேன்.

—————————————————-

புலியும் பூனையும்..(சன்னலொட்டி அமரும் குருவிகள் சிறுகதைதொகுப்பு)

                                                  நாகரத்தினம் கிருஷ்ணா

கணவனும் மனைவியுமாக, பனகல் பார்க்கிலிருந்த அந்தத் துணிக்கடையிலிருந்து வெளிவந்தபோது மாலை மணிநான்கு. மனிதர்களை பதட்டத்துடன், அலையவைத்துக்கொண்டிருக்கிற வெயில். ஆண் பெண்பேதமின்றி வியர்வையில் ஊறியிருந்தனர். பெண்களின் கை இடுக்குகளில் வெண் சாம்பல் பூத்திருந்தது. சிலரது கன்னக் கதுப்புகளில் இடம்பெயர்ந்து, கண்மை. பின்னல்களில் பழுத்துக்கிடந்த மல்லிகைச் சரம். ஒழுங்குபடுத்தப் படாத போக்குவரத்து, ஆதில் நீரில் விழுந்து கரையேற முயற்சிக்கிற நாய்களைப்போல வாகனங்கள். இஞ்சி, புதினா, பச்சைக்கற்பூரம், ஸ்டிக்கர்பொட்டு, வளையல், உள்பாடி, பனியன், ஜட்டி, சாமி சரணம், பணம் அள்ள பத்துவழிகள், மல்லிகைச் சரம் விற்கிற நடைபாதைக்கடைகள், எதிர்கொண்டு அல்லது பின்புறம் தொடர்ந்து உடைந்த தமிழில் மயிலிறகு விசிறி, மணிகோர்த்த அலங்காரப் பைகள் விற்பவர்கள். அய்நூறில் ஆரம்பித்து ஐம்பது ரூபாய்க்குப் போலி கைத்தொலைபேசிகளை விற்கவென்று ஏமாந்த சோணகிரிகளைத் தேடியலையும் ஊதா நிறத் தலையர்கள்.

அவளுக்கு ஏமாற்றம், கண்கள் நீர்கோர்த்திருந்தன. கடைக்குள் நுழைகிறபோது அவளுக்குள் தளிர் விட்டிருந்த சந்தோஷம், அடுத்த இருபது நிமிட இடைவெளியில் காய்ந்து சருகுகளாகி உதிர்ந்துவிட்டன. நடந்தது இதுதான். புடவையின், கலரும் முந்தானையின் டிசைனும் ரொம்பவும் பிடித்திருந்தது, விற்பனையாளர் எடுத்துப் போட்டவுடனேயே, ‘பிடிச்சிறுக்கு பில் போடச் சொல்லுங்க’, என்றாள். வேற டிசைன்லயும் இருக்கிறது, பார்க்கறீங்களா, என்று அவர் கேட்டபோது, பக்கத்திலிருந்த கணவனைத் தேடினாள், பில் செக்ஷனில் இருந்தான். ஒரு சில நொடிகள் காத்திருந்த விற்பனையாளர், புரிந்து கொண்டு, அடுத்து நின்ற பெண்களுக்குப் புடவைகளை எடுத்துப் போடத் தொடங்கினார். பணம் செலுத்துமிடத்தில் வரிசையில் நிற்கவேண்டியிருந்தது. இவன் கையிலிருந்த ரசீதைக் காட்டினான், கூடவே ரசீதுக்குண்டான ஆயிரத்து நானூறு ரூபாய்க்காக மூன்று ஐநூறு ரூபாய் நோட்டுகளை என்ணிவைத்தான். காசாளர் ரசீதை ஒரு முறைப் பார்த்துவிட்டு, மேசையிலிருந்த பணத்தை இடது கைவிரல்களில் தொட்டு, வலது கை விரல்கள் துணையுடன் சுருக்கென்று எண்ணி, உட்புறமாக திறந்திருந்த மேசையில் மேசையில் போட்ட அதே வேகத்தில் நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்துவைத்தார். பக்கத்திலிருந்த ஊழியரொருவர் பணம் செலுத்தப்பட்டதென்பதாய் முத்திரைப் பதித்தார். உடமையைப் பெறுவதற்காக வந்தபோது அங்கேயும் கூட்டம். காத்திருந்தார்கள். இவர்கள் முறைவந்தது. ரசீதை வாங்கிப் பார்த்து ஒருவன் ‘கொடுக்கப்பட்டது’ என்கிற முத்திரையை இவர்களது ரசீதில் பதிக்க, சீருடையிலிருந்த மற்றொரு சிறுவன், இவர்களது புடவையை, கடையின் பெயருடனிருந்த துணிப்பையை எடுத்து அதன் உள்ளேவைத்தான். பைகொஞ்சம் அளவிற் சிறிது. புடைவையோடிருந்த காகிதப்பை கிழிந்தது. நழுவிய புடவை தரையில் விழுந்தது. விழுந்த புடவையைக் கையிலெடுத்த பையன் இன்னொரு பையைத் தேர்ந்தெடுத்தான். ‘வெங்கிட்டு’ என்றென்கிற கணவன் வேங்கிடபதிக்குக் கோபம் வந்தது, ‘வேண்டாம்’ என்றான். பையன் திருதிருவென விழித்தான். பக்கத்திலிருந்த இன்னொருவன் உதவிக்கு வந்தான். ‘சார், என்ன சொல்றீங்க?’. ‘புரியலை, தமிழ்லதானே சொல்றேன்’, எங்களுக்கு வேண்டாம். சந்தண பொட்டு ஊழியர் ஒருவர், குறுக்கிட்டார். சார், நானும் பார்த்துக்கொண்டுதானிருந்தேன். கொஞ்சம் கவனக்குறைவு, கீழே விழுந்துவிட்டது. வேறப் பெருசா ஒண்ணுமில்லை. வேண்டுமென்றால் செக்ஷனுக்குப் போயிட்டு வேறப் புடவை எடுத்துக்குங்களேன். இல்லை, எங்களுக்கு விருப்பமில்லை. எங்கப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கப் பாருங்க. ‘ ஏம்மா.. அவர்கிட்ட கொஞ்சம் சொல்லுங்களேன்’, ஊழியர் இவளிடம் முறையிட்டார். தேவகிக்கு, வெங்கிட்டை புரியும். பொடவை போனால் போகுது, பெரிதாக இவன் பிரச்சினை பண்ணாமல் கடையிலிருந்து இறங்கவேண்டுமே’, என பிரார்த்தனை செய்தாள். புரிந்துகொண்ட ஊழியன், ஓடிச் சென்று ‘டை’ கட்டிய இன்னொரு சந்தணப்பொட்டு ஆசாமியை அழைந்துவந்தான். உங்களுக்குப் பணந்தானே வேண்டும், உள்ளே வாங்க பேசுவோம், என்றான். முறைத்து விட்டு ரசீதை வாங்கிக்கொண்டு போன ஆசாமி, அரைமணி நேரம் இவர்களை காத்திருக்கவைத்து, பணத்தைத் திரும்பக் கொண்டுவந்தவன், வெங்கிட்டை அலட்சியம் செய்துவிட்டுத் தேவகியிடம் கொடுத்தான். சுருக்கென்று கடையைவிட்டு வெங்கிட்டு வெளியேற, இவள் குமுறலுடன் அவன் பின்னே ஓடிவந்தாள். தெரிந்தவர்கள் எதிர்பட்டிருந்தால், உடைந்து அழுதுவிடுவாள்போல.

வழக்கப்படி மனதை அமைதிபடுத்திக்கொண்டவள், ‘ஏங்க, நீங்க பசிதாங்கமாட்டீங்களே ஏதாது சாப்பிட்டுவிட்டுப் போகலாமே’ என்கிறாள். எனக்கெதுவும் வேண்டாம். வேளையாய் ஊர் போய்ச் சேரவேண்டும் – அவன். இப்போதைக்கு அவனிடத்தில் பேச்சைத் தவிர்ப்பது உத்தமம். வாயை மூடிக்கொண்டாள். அவன் கோபத்தில் இருக்கிறான். இனி அடுத்த சில மணி நேரத்திற்கு, அவனுடைய சாம்ராச்சியம்: வானளவு அதிகாரம், கொதித்துக்கொண்டிருக்கும் மூளைக்கு உகந்த நீதி,  துரிதகதியில் எதிராளிக்குத் தண்டனை.

சாலையைக்கடந்து ஒருவழியாக உஸ்மான் ரோட்டின் மறுகரைக்கு வந்திருந்தார்கள். துணிக்கடையிலிருந்து கைநீட்டிக்கொண்டு ஈ மொய்க்கும் சவலைப்பிள்ளையுடன் தொடர்ந்த இளம்பெண்ணுக்கு கணவனுக்குத் தெரியாமல் ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்துவிட்டு நிமிர்ந்தபோது, இவன் முறைத்தான். ‘உங்களைப்போல ஜென்மங்களாலதான், அவர்கள் இது மாதிரியான தொழில்களுக்கு வருகின்றார்கள்’ என்றான்.

 – சார் ஆட்டோவேணுமா?

 – ஆமாம் தி.நகர் பஸ் ஸ்டேண்டு போகணும்?

 – உட்காருங்க

முந்திக்கொண்டு ஆட்டேவில் அவள் அமர்ந்தது இவனுக்கு எரிச்சல் ஊட்டியது. போதாக்குறைக்கு, வறுகடலை விற்பவன் தள்ளுவண்டியை இடித்துக் கொண்டு நிறுத்தினான்.

– ஏம்பா, இங்கே மனுஷங்க நிக்கிறது தெரியதில்லை, என்று எரிச்சல்பட்டவன், தமது மனைவி திசைக்குத் திரும்பினான், ‘என்ன நீபாட்டுக்கு ஏறி உட்கார்ந்திட்ட, என்ன கேக்கிறான்? எவ்வளவு எவ்வளவு கேட்கிறான், தெரிஞ்சுக்க வேண்டாமா?’

இவர் தன்னை ‘அவன் இவன்’ என்று சுட்டுவதை ஆட்டோ டிரைவரால், தாங்கிக் கொள்ளமுடியவில்லை. எனினும் கிடைத்த சவாரியை நழுவ விடக்கூடாதென்று கவனமெடுத்துக்கொண்டு பேசினான்.

– சார் என்னத்தை பெருசா கேட்டுடப்போறேன், இருபது ரூபாய்க் கொடுங்க.

ஆட்டோ, தி.நகர் பேருந்து நிறுத்தத்தை நெருங்க மாலை ஐந்து மணியாகியிருந்தது. முதலில் அவள் இறங்கிக்கொண்டாள். அவள் கணவன் இரண்டு பத்து ரூபாய் தாள்களை நான்குமுறை எண்ணி கொடுத்தான்.

  – சார் அஞ்சு ரூபா மேலப் போட்டுக் கொடுங்கசார், ஏதோ வயசானவன் கேக்கிறன்..

  – தாம்பரம் போகிற பஸ் அங்க நிக்கறது பாரு..புறப்பட போறாப்பல. அடுத்த பஸ் எத்தனை மணிக்கோ?

எலுமிச்சை சோற்று பருக்கைகளை இறைத்துக்கொண்டு, நின்றபடி சாப்பிட்ட இரண்டு இளைஞர்களையும்,வாழைப்பழ தாறுடன் எதிர்பட்ட இஸ்லாமியப் பெரியவரையும் ஒதுக்கிக்கொண்டு நடந்தார்கள்

 – கண்டக்டர் உட்கார சீட் இருக்குமா?

 – இருக்கிற சீட்டெல்லாமே உட்காரருதுக்குத்தான் சார், நிற்கிறதுக்கில்ல. இவளுக்கு கண்டக்டர் பதில் பிடித்திருந்தது. முன்னாலிருந்த ‘வெங்கிட்டு’ இப்பதிலை எப்படி எடுத்துக்கொண்டான், என்பதை தெரிந்துகொள்ள ஆசை.

கணவனும் மனைவியுமாக நான்காவது வரிசையிலிருந்த குறுக்குச் சீட்டில் அமர்ந்தார்கள். எதிர்த்த சீட்டில், கைக்குழந்தையுடன், ஒரு ஜோடி. அருகில் நடுத்தர வயது பெண்களிருவர். ஒருத்தி பத்து ரூபாய்க்கு இருபத்திரண்டு முறுக்கு கொடுப்பியா? என பஸ்சுக்கு வெளியே தலையை நீட்டி பேரம் பேசிக்கொண்டிருந்தாள்.  பஸ்ஸ¤க்குள்ளே வியர்த்து கொட்டியது. பயணிகளில் பெரும்பாலோர் கிடைத்ததை வைத்துக் விசிறிக்கொண்டிருந்தார்கள். ஓட்டுனர் ஆரனை எழுப்பினார். பெண்ணொருத்தியிடம் சத்தம்போட்டுக்கொண்டிருந்த நடத்துனரிடம் என்னப்பா? ஆச்சா? புறப்படலாமா என்றார். அப்போதுதான் அந்த நபரைக் கவனித்தாள். காக்கிச்சட்டையிலிருந்தான், நடத்துனரிடம்  என்னவோ கேட்டான். நடத்துனர் பதிலுக்குப் ‘ஏறுங்க’! என்றார். ஆள் வாட்ட சாட்டமாய் இருந்தான். வெளியில் தள்ளியிருந்த கண்கள், இரப்பைகள் சுருக்கமிட்டு சரிந்திருந்தன, தடித்த உதடுகள், மூக்கிற்கும் மேல் உதடிற்குமான இடைவெளியை அடைத்துக்கொண்டு பெரியமீசை. கன்னக் கதுப்புகளில் சுருக்கங்கள் எட்டிப்பார்த்தன, பெரிய வயிற்றுடன் அசைந்தபடி முன்னேறியவன், எதிரே இருந்த இருக்கை முழுவதையும் ஆக்ரமித்து, இவளுக்கு நேரெதிரே உட்காரவும் பஸ் புறப்பட்டது. குப்பென்று மதுவாடை. கணவனைப்பார்த்தாள், கையிலிருந்த ஆங்கில தினசரியை மடித்து பிடித்தபடி விசிறிக்கொண்டிருந்தவன், புதிய நபரைப் பார்க்கவிரும்பாதவன்போல தினசரியை விரித்து வைத்துக்கொண்டு லெபனான் சண்டையில் மூழ்கினான். பஸ் உறுமிக்கொண்டு புறப்பட்டது. காத்திருந்ததுபோல வெப்பக் காற்று பஸ்ஸை நிறைத்தது. வியர்த்திருந்த இவள் முகத்தினை தொட்டு விளையாடியது. நெற்றியில் விழுந்த மயிற்கற்றையை, முன் விரல்களால் ஒதுக்கியவள் நாசித் துவாரங்களில், மீண்டும் மதுவாடை. கைவசமிருந்த வார இதழில், விட்ட இடத்திலிருந்து தொடர்கதையை வாசிக்க ஆரம்பித்தாள். மனம் கதையில் ஒட்டவில்லை. எதிரே இருந்த நபர் இவளையேப் பார்த்துகொண்டிருந்தான். ‘என்ன இன்ஸ்பெக்டர் சார்’ எங்கே இந்தப்பக்கம், இவளுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல். அக்குரலுக்கு மறுமொழிபோல, ¨?கோர்ட்ல ஒரு கேஸ¤ வந்துட்டுத் திரும்பறேன், என்ற நபரின் பார்வை இவள் மார்பில் பட்டுத் திரும்பியது. கணவனைப் பார்த்தாள். ‘தினசரியில் தீவிரமாக மூழ்கியிருந்தான். தொடரில் மூழ்கினாள்:

‘நீங்கள் மின் அஞ்சல்களைத் திறந்து பார்ப்பதில்லையா? நமக்குள் கடிதப்போக்குவரத்து இருந்தபோது மாதத்திற்கொருமுறை தவறாமல் எழுதுவீர்கள். செய்தி பரிமாற்றங்களில் நேர்ந்துள்ள முன்னேற்றம், உண்மையில் மனிதர்களுக்கு இடையிலான வெளியைக் கூட்டித்தான் விட்டது.

மறதிக்குப் பழகிக்கொண்டேன், நான் படித்தது, சிந்தித்தது, விவாதித்தது அனைத்துமே மறதிகள் பட்டியல்களில்தானிருக்கின்றன. நடுவாசலிலிலிருந்த மல்லிகைப் பந்தல் மறந்துவிட்டது, காலையில் மொட்டும், மலருமாய் அது பூத்தது மறந்துவிட்டது. டில்லிக்கு போய்விட்டு சென்னைக்குத் திரும்பிவந்த இரவு, விடிய விடியப் பேசினது நினைவிலிருக்கிறது ஆனால் என்ன பேசினோம் என்று மறந்துவிட்டது..நான் உங்களைபோலவே இருக்கிறேனென அடிக்கடி வீட்டுக்கு வருகின்ற உறவினர்களிடம் அம்மா சொல்லிச் சந்தோஷபட்டதும், கல்லூரியிலிருந்து நான் தாமதமாக வருகிறபோதெல்லாம், முன்வாசலில் காத்திருக்கும் உங்களிருவரின் நிம்மதிப் பெருமூச்சுங்கூட மறந்துவிட்டது…”.

இவள் கால்களில், அந்நியகாலொன்றின் ஸ்பரிசம். வார இதழை மடியில் இருத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தாள். எதிரே உட்கார்ந்திருந்தவனுடைய கால்கள். சன்னலொட்டித் தலையைசாய்த்து குறட்டைவிட்டுக்கொண்டிருந்தான். இரு கால்களையும் இவள் வரை நீட்டியிருந்தான். கணவனின் தோளைத் தட்டினாள். ‘என்ன?’.. என்பது போலத் திரும்பிப் பார்த்தான். அந்த ஆளைக் கொஞ்சம் காலை மடக்கச் சொல்லுங்களேன். ‘சார்..சாரென்று,’ இரண்டுமுறை அழைத்தான்.. அவன் கூப்பிட்டது இவளுக்கேக் கேட்கவில்லை. இவள் தனது கால்களை முடிந்த அளவு, தனது இருக்கைக்குக் கீழே பின்னிருத்திக் கொண்டாள். சங்கடமாக இருந்தது.

இவளுக்குப் பக்கத்திலிருந்த மூதாட்டிக்கு நிலமைப் புரிந்திருக்க வேண்டும். உறங்கிக் கொண்டிருந்த நபரை தொட்டு எழுப்பினாள். குறட்டை நின்றது. தலையைச் சிலுப்பிக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தான். கண்களிரண்டும் செவசெவவென்று இருந்தன. குடித்திருந்ததாலா? தனது உறக்கத்தைக் கெடுத்துவிட்டார்களென்கிற கோபமா, தெரியவில்லை.

–  ‘காலை மடக்கிட்டு உட்காருதம்பி, அந்தப் பிள்ளை மேலே படுதில்லே..’ கிழவியினுடைய வாயிலிருந்து எச்சில் தெறித்து காக்கிச் சட்டையில் சிவப்பு புள்ளிகளாய் விழுந்தன. சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தவன்.

– ‘என்ன, நீ யாரு? அவங்களுக்கு வாயில்லையா? அவங்க கேட்க மாட்டாங்களா?’

வெங்கிட்டுத் தனக்குச் சம்பந்தமில்லாததுபோல தினசரியில் மூழ்கியிருந்தான்.

 – ‘அவங்களை ஒன்றும் சொல்லாதீங்க. செத்தமுன்னே உங்க கால், எங்க சீட்வரைக்கும் நீட்டியிருந்ததால எனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது…’

அந்த நபர் இவள் சொல்லி முடிக்கட்டுமெனக் காத்திருக்கவில்லை. சட்டென்று இவள் வாக்கியத்தை வெட்டினான்.

– இங்கே பாரு பஸ்ஸ¤ல இப்படித்தான் வரணும்னு எனக்கு யாரும் புத்தி சொல்லவேணாம். பஸ்னா அப்படி இப்படித்தானிருக்கும். சௌகரியமா குந்திவரணும்னா, இப்படி பஸ்ல வரகூடாது.

இவள் உடலில் தேவையற்று ஒருவித நடுக்கம். தன்னைத் திடப்படுத்திக்கொள்ள முனைந்ததுபோல, கீழுதட்டைச் சுழித்து உள்வாங்கி முன்பற்களைப் அழுந்தப் பதித்தாள். சம்மந்தப்பட்ட மனிதனின் பார்வையத் தவிர்க்கவா அல்லது கணவன் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டுமென்கிற சராசரிப் பெண்ணின் எதிர்பார்ப்பா என்று அவளால் தீர்மானமாக சொல்ல முடியாத நிலையில், சில நொடிகள் வெங்கிட்டுவினைப் பார்த்தாள். அவனுக்கு என்ன நடந்ததென்பது தெளிவாகவேத் தெரிந்தது. தினசரியை நான்காக மடித்து, தனது இருக்கை அடியிலிருந்த கைப்பையில் வைத்தான். சில விநாடிகள் தயங்கியபடியிருந்தான். இப்படியான நேரத்தில் தான் எப்படி செயல்படவேண்டுலென்பதில் அவனுக்குக் குழப்பம் இருந்திருக்கவேண்டும். எதிராளியின் சரீரமும், தோற்றமும், நெஞ்சில் தேவையற்ற திரவங்களை உற்பத்திசெய்தது, வாய் உலர்ந்துபோனது. எச்சில் கூட்டி விழுங்கி நெஞ்சை நனைத்துகொள்கிறான், அவன் உதடுகள் துடித்தது. சுற்றிலுமிருந்த சக பயணிகள், தங்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடராமல் இவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்: பாதி உறித்த கமலாப்பழம், வாயில் நொறுங்கிய முறுக்கு, வருமான கணக்குக் காட்டாத வழக்குபற்றிய உரையாடல். அவர்களுக்கெல்லாம் சுவாரஸ்யமாக ஏதோ நடக்கப்போகிறதென்கிற எதிர்பார்ப்பு.

சக பயணிகளுக்கு முன்பாக, கையிலிருந்த ஆங்கில தினசரியும், உடுத்தியிருந்த ஆடையும் ஏற்படுத்தியிருந்த  கற்பனை பிம்பத்தை, குறைந்தபட்ஷம் பஸ் பயணம்வரைக் கட்டிக்காக்கவேண்டியக் கட்டாயத்தில் அவனிருந்ததை புரிந்துகொண்டவன்போல, மெல்ல நகைத்தபடி அவனிடம் பேசினான்.

 – நீங்க பணம் கொடுத்திருக்கீங்க, உங்களுக்கான இருக்கையில் உட்கார, பயண தூரம்வரை அதற்கான உரிமையில்லையென்று யார் சொல்ல முடியும்? ஆனால் அடுத்தவர்களும், அவர்கள் பயண தூரத்திற்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு இங்கே உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளவேண்டும். சொன்னவனுக்கு வேர்த்திருந்தது, கைகுட்டைகொண்டு முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான்… 

எதிரே இருந்த நபர் நிமிர்ந்து உட்கார்ந்தான். தலை முதல் கால்வரை வெங்கிட்டுவை அளவெடுப்பவன்போல அற்பமாகப் பார்த்தான்

  -‘ கண்டக்டர் இங்கே வாய்யா.. இந்த ஆளு உரிமைங்கிறான்.. கட்டணங்கிறான்.. என்னண்ணுகேளூ. இங்கே பாருய்யா.. நான் அப்படித்தான் உட்காருவேன். உங்களுக்குச் சங்கடமாயிருந்தா நீங்க வேணா பஸ்லயிருந்து இறங்கிக்குங்க.

‘நடத்துனர்’ நமக்கேன் வம்பு என்பதுபோல உட்கார்ந்திருந்தார். அவள் கணவனைப் பார்த்தாள். பயணிகள், வெங்கிட்டுவின் எதிர்த் தாக்குதல் எப்படியிருக்கும் என யோசித்தவர்களாய், காத்திருந்தார்கள்.

– சார் சத்தம்போடாதீங்க.. நியாயத்தைப் புரிஞ்சிக்கணும், இரத்தின சுருக்கமாக இடையில் இரண்டாக முறிந்து வெளிப்பட வாக்கியத்தில் அசாதரண நிதானம்.

 – எதிராளி சட்டென்று எழுந்து நின்றான். தனது காக்கிச்சட்டையின் பொத்தான்களை அவிழ்த்துக்கொண்டு பனியன் தெரிய நின்றான். முண்டாவைத் தட்டினான். மீசையோடு உதடு மேலெழுந்து இறங்கியது, முகவாய் கோணலானது. வெங்கிட்டை அச்சுறுத்த முனைந்தவன்போல,

– இப்ப உனக்கு என்ன வேணும், என்று கர்ஜித்தவன், வெங்கிட்டின் சட்டையைப் பிடித்துக்கொண்டான். இவளது இதயம் வேகமாகத் துடித்தது. கணவனிடம் நெருங்கி உட்கார்ந்தாள். அவனுடலில் ஒருவித அதிர்வினை உணர்ந்தாள். கோபம் வந்தால் அவனுக்கு தலைகால் புரியாது. எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நிலைமையை மேலும் மோசமாக்காமல் தடுத்தாகவேண்டும். கண்டக்டரை உதவிக்கு அழைக்கலாம் அல்லது சக பயணிகளில் ஆண்களை உதவிக்கு அழைக்கலாம் என முதலில் யோசித்தாள். இறுதியில்  கணவனில் சட்டையைப் பிடித்திழுத்து உட்காருங்கள் எனச் சொல்லவந்தவள், சட்டென்று தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டாள். மனதை இறுக்கிக்கொண்டு, பயணிகளில் ஒருத்தியாக தன்னைப் இருத்திக்கொண்டு அவனைப் பார்த்தாள். இதழோரம் அரும்பிய சிரிப்பை, சட்டென்று தலையைக்குனிந்து மறைத்தபோதும், வெங்கிட்டு அதனை உணர்ந்திருப்பானாவென பார்வையை மீண்டும் அவன் மீது செலுத்தினாள்.

போட்டிருந்த கண்ணாடியைக் கழற்றி கையிலெடுத்துக்கொண்டான். தேவையில்லாமல், கைகுட்டையினால் ஒரு முறைக்கு இருமுறைக்குத் அதனைத் துடைத்துக்கொண்டிருந்தான். முகம் வெளுத்திருந்தது. 

– இல்லை, நான் என்ன சொல்லவந்தேன்னா..,.

– எதையும் சொல்லவேண்டாம். வாயை மூடிக்கொண்டு வரணும். மோதித்தான் பார்க்கணும்னா நான் ரெடி.

வெங்கிட்டு சட்டென்று சுருங்கிக் கொண்டான். பிற பயணிகளின் ஏளனப் பார்வையைத் தவிர்க்க நினைத்தவன்போல ஆங்கில தினசரியை விரித்துவைத்துகொண்டு அமைதியானான். எதிராளி, தனது இருக்கையில் மீண்டும் அமர்ந்தவன், இம்முறை தனது கால்களிரண்டையும் நீட்டவில்லை, மடக்கியிருந்தான். 

பேருந்து சீராக ஓடிக்கொண்டிருந்தது. பயணிகளுக்கிடையே ஒருவித அமைதி. குளிர்ந்த காற்று வீசியதில்  சூழ்நிலையின் இறுக்கம் தணிந்திருந்தது. தேவகி கணவனைப்பார்த்தாள். முகம் வியர்த்திருந்தது, சோர்வு தெரிந்தது. ஆங்கில தினசரியை பிடித்திருந்த கைகளில் நடுக்கம். இவளுக்குக் கடந்த பத்துவருட தாம்பத்யத்தில் கண்டிராதத் திருப்தி, வார இதழ் தொடரில் மீண்டும் கவனம் செலுத்தினாள்.

 _________________________________________

மொழிவது சுகம், ஆகஸ்ட் 13 -2021

ஒலிம்பிக் பதக்கம்

என்னதான் பிறநாடுகளில் குடியேறி வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலும்  மனதிலும் உடலிலும் ஒட்டிக்கொண்டுள்ள பிறந்த மண்ணை அத்தனை எளிதாக உதறிவிடமுடியாது, அது வெறும் மண் அல்ல  சதையும் இரத்தமும், சாகும் வரை உடலோடு கலந்தே இருக்கும். பிரான்சு நாடு வென்ற 10 தங்கப்பதக்கங்களைக் காட்டிலும்  ‘இந்தியா ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு’ வென்ற ஒரு தங்கபதக்கம் அதிக  மகிழ்ச்சி அளிக்கிறது. கணவன் வீட்டுக்கு வந்த பின்னரும் பிறந்த வீட்டை மறக்க முடியாமல் பெருமூச்சுவிடும் பெண்களின் நிலைதான் எங்கள் வாழ்க்கையும். நீரஜ் சோப்ரா இந்தியக்கொடியை முதுகில் சுமந்தபோது, காந்திசிலையை அந்நிய மண்ணில் கண்டு மகிழும் அதே சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் உணர முடிந்தது.

இந்திய மத்திய அரசும் மாநில அரசுகளும் பதக்கம் வெற்றவர்களை ஊக்குவிக்க பரிசு மழையில் நனைப்பதுபோல  பிற வீரர்களையும் வீராங்கனைகளையும் ஊக்குவிக்க வேண்டும். உண்மையான போட்டியாளர்களாகச் சென்று எதிர்பாராமல் தோல்வியைத் தழுவியவர்கள் உற்சாகத்தையும் குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வென்ற பிறகு வீரர்களைப் பரிசு மழையில் நனைக்கின்ற அதே ஆர்வத்தை, ஒலிம்பிக் விளையாட்டிற்குத் தயார் செய்வதிலும் காட்டவேண்டும். சீனாவை வெகு சீக்கிரம் மக்கள் தொகையில் மிஞ்ச இருக்கும் தேசத்தில் ஓரளவு திருப்தி அளிக்கும் வகையில் பதக்கங்கள் பெறுவது கௌவுரவம். குறைந்தபட்ச திட்டமிடல் வேண்டும். பாரீசில் நடைபெற உள்ள 2024 ஒலிம்பிக்கில் கூடுதல் பதக்கம்பெறுவோம் என பிரான்சு ஒலிம்பிக் கமிட்டி அறிவித்து அதற்கான திட்டமிடல்களை தொடங்கிவிட்டார்கள். பதக்கம் பெற்ற்வருக்கும் அளிக்கிற பரிசுத் தொகை வரவேற்க கூடியது, அதேவேளை அதில் பாதியையாவது ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக  தகுதியானவர்களை தேர்வுசெய்து பயிற்சி தர செலவிட அரசுகள் முன்வரவேண்டும்.

1973 ஆண்டு சென்னை பி எ மூன்றாம் ஆண்டு தேர்வு முடித்துவிட்டு ஊர் திரும்பியிருந்தேன். எனது பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி என்பவரை புதுச்சேரியில், அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். அங்கு புதுச்சேரி நேரு யுவக் கேந்திரா இயக்குனர் துரைக்கண்ணு என்பவர் இருந்தார். பேச்சின்போது, “புதுதில்லியில் விஷ்வ யுவக் கேந்திரா சார்பில் கூட்டப்படும் தேசிய மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டும் பத்து நாட்களுக்குள் தயாராக இரு” என்றார்கள். அதற்கு முந்தைய நிமிடம்வரை எனக்கும் நேரு யூத் கேந்திராவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. நான்கு வாரங்கள் தில்லியில் தங்கினோம், சுற்றியுள்ள ஊர்களை அரசாங்க செலவில் பார்த்தோம், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியுடன் படம் எடுத்துக்கொண்டோம். இது போன்ற அவசரகதி தேர்வுகள் நமது ஒல்ம்பிக் தேர்விலும் நடந்திருக்க வாய்ப்புண்டு. “இங்கே சும்மாதான சுத்திவர டோக்கியோவை போய் பார்த்துட்டு வாயேன்” என அமைச்சர் வீட்டு திருமதி மகனை டோக்கியோவிற்கு அனுப்பி இருக்கவும் இந்தியாவில் வாய்ப்புண்டு. இதுபோன்ற குறைகளைதவிர்க்க முடிந்தால் பாரீசில் ஒலிம்பிக்க்கில் இரண்டொரு பதக்கம் கூடுதலாக வாங்கலாம், என்னைப் போன்ற புலம் பெயர்ந்த இந்தியர்களுக்கு வாய்க்கரிசி இடாமல் வயிற்றில் பால் வார்க்கலாம்.