Monthly Archives: மே 2016

உண்மை என்று ஒன்றில்லை: முஸல் பனி நாவலை முன்வைத்து

Musal pani புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் லெ.கிளேசியோ தனது ‘குற்ற விசாரணை நாவலுக்கு  எழுதிய முன்னுரையில் “எதார்த்தவாதத்தில் பெரிதாய் எனக்கு அக்கறையில்லை ‘(உண்மை’ என்று ஒன்றில்லை என்ற கருத்து மேலும் மேலும் என்னிடத்தில் வலுப்பெற்று வருகிறது) இந்நாவல் முழுவதும் ஒரு புனைவென்ற எண்ணத்தைக் கட்டமைக்க விரும்பும் எனக்குள்ள எதிர்பார்ப்பு வாசிப்பவரிடத்தில் சிந்தனைத் தாக்கத்தைக் குறைந்த பட்சம் தற்காலிகமாவது ஏற்படுத்தித் தருதல்”- எனக் குறிப்பிடுவார். உயிர்வாழ்க்கை என்பது ஒரு வகை புனைவு. பொய்வடிவத்தில் உண்மைகளும், உண்மையென்று பொய்களும் அல்லது இரண்டும் கலந்த கலவையாக, அருதியிட்டு கூறவியலாத தன்மையினதாக இருக்கிற நமது வாழ்க்கை சார்ந்த கலையின் எந்தவொரு வடிவமும் உண்மையை மையமாகக்கொண்டதென்பது அல்லது எதார்த்தமென வாதிடுவது கேலிகூத்தாகாவே முடியும்.

“அழிவை எதிர்க்க இலக்கியத்தால் மட்டுமே முடியும்” என்ற நம்பிக்கையுடன் அயர்வுறாமல் கல்விப்பணியோடு படைப்பிலக்கியத்திலும் தீவிரமாகப் பங்காற்றிவந்திருக்கிற தமிழவனின் ‘முஸல் பனி’ நாவலை வாசித்த தருணத்திலும் வாசித்து முடித்தபோதும் லெ கிளேசியோவிற்கும் இவருக்கும் மன நிலையிலும், வினைத்திட்பத்திலும், ஓர் இணக்கமிருப்பதைக் கண்டேன். நவீன தமிழும், தமிழவனும் வெவ்வேறானவர்களல்ல என்பது வெகுகாலமாகவே திடமாய் மனதிற் பதிந்திருப்பதால் இதில் வியக்க ஒன்றுமில்லை. ஏனைய துறைகளைப்போலவே இலக்கியமும் மாற்றத்திற்கு உட்பட்டது. அம்மாற்றமும் நாளை மறுநாளோ, நாளையோ, இன்று பிற்பகலோ நிகழ்ந்தால் போதும் என்பதல்ல, இக்கணமே நிகழ்ந்தாகவேண்டும் தவறினால் எப்போதும்போல காலத்தால் பின் தள்ளப்படும். இலக்கியம் என்பது ஒருமொழியின், அம்மொழியூடாக ஓர் இனத்தின் தராதரத்தை தீர்மானிக்கும் உரைகல். அந்த இலக்கியம் காலத்தோடு பயணிக்கும் திறன்கொண்டதாக இருத்தல் அவசியம்.புனைவுகள் கவிதைகள் வாசிப்பும்; ஓவியங்கள் சிற்பங்கள் புரிதலும் ஒன்றிரண்டு மனிதர்களிடம் கூடுதலாக வினைபுரிகின்றன. அவர்களின்சிந்தைகளில் கிளர்ச்சியை ஊட்டி வாசித்தவனை எழுத்தாளனாகவும்; இரசித்தவனை கலைஞனாகவும் உருமாற்றம் செய்து எழுதவும், தீட்டவும், வடிக்கவும் தூண்டுகின்றன:

நூலினான உரையினனான

நொடியோடு புணர்ந்த பிசியினான

ஏது நுதலிய  முதுமொழியான

மன்றமொழிகிளர்ந்த மந்திரத்தான

கூற்றிட வைத்த குறிப்பினான (தொல்-செய்யுள்165)

என்றெழுதிய தொல்காப்பியருங்கூட இன்றைக்கிருந்தால் கூடுதலாகச் சில வடிவங்களைக் குறித்து பேசியிருப்பார். நியாண்டர்தால் மனிதன் தொடங்கி நவீன மனிதர் வரையிலான கால நீட்சியில் இயங்குவெளியும் அவற்றின் உட்கூறுகளும், குணங்களும் தம்மைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு வருகின்றன. இலக்கிய கோட்பாடுகளுக்கும் இவ்விதி மொழி பேதமின்றி உலகின் எப்பகுதி ஆயினும் பொருந்தும். முஸல்பனியின் நூலாசிரியர் முன்னுரையில் கூறுவதுபோல இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கான தமிழிலக்கியத்தைக் கண்டுபிடிப்பதில் விஞ்ஞான முறை, கறார் தன்மை, தமிழ்யாப்பின் உள்ளொழுங்கு, தொல்காப்பியத்தின் அகண்ட தன்மையும் முக்கியம். நவீன தமிழிலக்கிய கோட்பாடாக அவற்றைக் கையாளுவது காலத்தின் கட்டாயம். இதே நூலின் முன்னுரை இறுதியில் தெரிவிக்கும் கருத்தில்   ஓரளவு முரண்பட்டாலும் இன்றைய தமிழ்ச் சூழலில் பலரும் நினைப்பதுபோல அல்லது எழுதிக்கொண்டிருப்பதுபோல நவீன இலக்கியம் என்பது எதார்த்த மென்ற பெயரில் எட்டுகால் பூச்சிக்கு எத்தனை கால்களென்று கேட்டு பதிலைப் பெறுவது அல்ல.

கீழைதேயத்து படைப்பாளிகளுக்கு இம்முஸல்பனி நாவலை முன்வைத்து (நேர்வினையாகவும், எதிர்வினையாகவும்) சில பொறுப்புணர்வுகளை தமிழவன் விதைத்திருக்கிறார். கெ. அய்யப்ப பணிக்கர் தமது, ” இந்திய இலக்கிய கோட்பாடுகள்” என்ற நூலில் எழுப்பியுள்ள வினாக்கள் முஸல் பனி நாவலுக்கும்  பொருந்தும். இருபத்தொன்றாம் நூற்றாண்டு தமிழ் நாவல்கள் அடிப்படையில் மூன்று உண்மைகளை மனதிற்கொண்டு வினையாற்ற கடமைப்பட்டிருக்கிறோம்:

1.  ஐரோப்பிய மரபு: காலனி ஆதிக்கத்தினால் கிடைத்த ஐரோப்பிய சிந்தனை மரபு

2.பன்முகத்தன்மைகொண்ட இந்திய மரபு

3.தமிழ் மரபு

 

ஆக இன்றைய தமிழ் நவீனமென்பது மேற்கொண்ட மூன்று மரபுகளையும் உள்வாங்கிகொண்டு செயல்படுவது. உலக இலக்கியங்களோடு இணைந்து பயணிக்க ஐரோப்பிய மரபையும், பாரம்பரிய மரபயும் இணைத்து ஒரு புதியமரபில் இயங்குவது காலத்தின் கட்டாயம்.

1thamilavan_jpg_1631865gமுஸல் பனி நாவல் என்ன சொல்கிறது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? ஆசிரியர் சொல்வதுபோல அதன் பூடக மொழியா? குறியீடுகளா? படிமங்களா? எடுத்துரைப்பா? இருப்பியல்வாதியான தமிழவனை பின் நவீனத்துவத்திலிருந்து பிரித்துப் பார்ப்பது இயலாத காரியம்.. தமிழர் வரலாற்றை, பெருமைகளை, கீர்த்திகளை, வடக்கில் இமயம்வரைசென்று கொடிநாட்டிய புகழை சங்க இலக்கியங்களும் காப்பியங்களும் பெருமிதம் பொங்க படைப்பிலக்கியத்திற்குக் கொண்டுவந்த காலம்போக, அப்பழம்பெருமைக்கு நேர்ந்த வீழ்ச்சியை, அபகீர்த்தியை, குறிப்பாக அண்மைக்காலங்களில்  தமிழினத்திற்கு இழக்கப்பட்ட அநீதி கண்டு கொதி நிலையில் சுமார் நூறுபக்கங்களில் தமிழ் தேசிய உணர்வின்பாற்பட்டு இப்படைப்பிலக்கியத்தை கொண்டுவந்திருக்கிறார். இம்முயற்சிக்கு வழமைபோல இருபத்தொன்றாம் நூற்றாண்டு மேற்கத்திய கதை சொல்லல்  உத்தி கைகொடுத்திருக்கிறது. மொழியிலும் இலக்கியத்திலும் தமிழர்கள் முன்னோடிகள். மேலை நாடுகள் தங்களுக்கான மொழியெது என்ற தேடலில் இருந்த காலத்தில் திணைகள், அகம் புறமென்று தமிழர் வாழ்க்கைச் சித்திரம் மிக நுட்பமாக எழுதப்பட்டுவிட்டது. ஆனால் அதன் பிறகு  மேற்கத்திய ஆமைகள் தொடர்ந்து முந்திக்கொண்டுவருகின்றன.

இருபத்தொன்றாம் நூற்றாண்டு கதைசொல்லல் என்றால் என்ன? விரல்விட்டு எண்ணிக்கொண்டிருந்த காலமோ சுவரில் பற்றுவைத்த காலமோஇன்றில்லை. இலக்கியம் என்பது மூத்தோர் சொல்லோ அற நூலோ அல்ல. தொடக்க காலத்தில் கல்வியென்பதே இம்மை மறுமை,நெறிமுறைகள் என்று இயங்கின. இன்று அக்கல்வி மொழி, அறிவியல்,வரலாறு, புவியியல், தத்துவம்போன்ற பெரும் பிரிவுகளும், நுணுக்கமான பல உட்பிரிவுகளும் கொண்டது. நேற்றைய இலக்கிய அப்பியாசம் யாப்பில்தேர்ச்சிபெற்று அறநூல்களை எழுதவும், வயிற்றுபாட்டிற்கு செல்வர்களை அண்டிப் பிழைக்கவும் செய்தது. இன்று மனித இனத்தின் அறிவு வளர்ந்திருக்கிறது, விரிவடைத்திருக்கிறது. இன்றைய இலக்கியமும் சுதந்திரமானது, எண்ணற்ற நுட்பங்களுடன் இயங்குவது. நவீன இலக்கியம் இவற்றையெல்லாம் கணக்கிற்கொள்ளாமல் முழுமை அடைய இயலாது.

காலனி ஆதிக்கம் நமது பண்பாட்டை புரட்டிப்போட்டதுபோலவே நமது சிந்தனையிலும் பெரும் மாற்றத்தைக்கொண்டுவந்தது. விரும்பியோ  விரும்பாமலோ மேற்கு நாடுகளின் தத்துவமும், தர்க்கமும், ஓர்மையும், கலை நுணுக்கமும், இலக்கிய பார்வையும் உலகெங்கும் வியாபித்துவிட்டன. அதன் காரணமாக இன்று உலக இலக்கியம் என்பது மேற்கத்திய இலக்கிய கோட்பாட்டின் வழிவந்தவை என்ற புரிதல் உள்ளது. தென் அமெரிக்க படைப்புகள், வட அமெரிக்க படைப்புகள்; ஆப்ரிக்க நாடுகளின் படைப்புகள்; இந்தியா உட்பட ஆசிய நாடுகளின் படைப்புகள் ஆகியவற்றுள் மேற்கத்திய நாடுகளின் சிந்தனைத் தாக்கங்களிருக்கவே செய்கின்றன. அதேவேளை தொல்காப்பிய்னைபோன்ற ஒரு முப்பாட்டனை பெற்றிருந்த நமக்கு மேற்கத்திய அறிவுக்கு முன்னால் முழு சரணாகதி என்பது கற்பனையிலும் சாத்தியமில்லை. அதிலும் உலகின் பெரும்பாலான படைப்பிலக்கியங்கள் அறத்தைபோதிப்பதே இலக்கியம் என்று எண்ணிக்கொண்டிருந்தவேளை நமது சங்க இலக்கியங்கள் அகம் புறமென்று மனிதர் வாழ்க்கையைப் பிரித்து படைப்பிலக்கியத்தை ஆரம்பித்து வைத்தன.

நண்பர் தமிழவன் ‘முஸல் பனி’, முன்னுரைக்கு எட்டு பக்கங்களை ஒதுக்கியிருக்கிறார், தனது நாவல் குறித்து விரிவாகப் பேசுகிறார். முஸல்பனி வாசகனுக்கு அதற்கான அவசியமிருப்பதாகப் படவில்லை. அளவிற் சிறியதாக இருந்து புகழின் உச்சத்தை எட்டிய நாவல்கள் உலகில் அனேகம். படைப்பிலக்கியத்தினை அளவிட மொழியும், எடுத்துரைப்பும் சொல்லப்படும் விஷயமுமே முக்கியம், பக்கங்களின் எண்ணிக்கை அல்ல.

தெகிமோலா என்பதை கண்டமாகவோ, நாடாகவோ வைத்துக்கொள்லலாம். முஸல்பனியில் ஆரம்பித்து, அத்திகரிப்பா,எட்டு திசைகள், முன்னூற்றுஅறுபத்தைந்து படிகள், மண்ரா பட்டணம், காண முடியாத உண்மை, ஆதி இலக்கணகாரன் ஆகியவை  பெயர்கள்களாகவும் குறியீடுகளாகவும் வருகின்றன. அகவய நோக்கில் முதலில் கண்பார்வைக்கும் பின்னர் சிந்தனைக்குள்ளும் ஒடுங்குகிற ஒவ்வொன்றிர்க்கும் பெயர்கள் தவிர்க்க முடியாதவை. இப்பெயர்கள் பேராசியர் பஞ்சாங்கம் சொல்வதுபோல மனிதரின் நிலம் சார்ந்து இடப்படுகின்றன. இதனுடன் ஓரினத்தின் மரபையும் இணைத்துக்கொள்ளவேண்டும். இப்பெயர்கள் ஊடாகத்தான், அப்பெயரை ஒட்டிய மனிதரின் இயல்புகள் பொருளின் பண்புகள் ஆகியவற்றைக் குறித்த மேம்போக்கான கருத்துக்களை கணப்பொழுதில் ஏற்படுத்திக்கொள்கிறோம். அக்கருத்தியங்களை நோக்கி நம்மை முன் நகர்த்தவும் செய்கிறோம். ஆனால் அப்பெயர்கள் நிலையாய் ஓரிடத்தில் இருப்பதில்லை, தொடுவானம்போல விலகிச் செல்கின்றன. அடர்த்தியான பனிமூட்டம் நாம் அண்மித்ததும் கலைவதுபோல தோற்றம் தருவதும் நாம் கடந்ததும் மீண்டும் அடர்ந்து படர்வதுமாக ஒரு சித்துவிளையாட்டினை நிகழ்த்துகிறது. குறிப்பாகத் தமது முழுமையை பிறர்  அறிந்துவிடக்கூடாதென்கிற முனைப்புடன் அவை செயல்படுகின்றன. இக்கண்பொத்தி விளையாட்டு அபரிதமான புனைவுகளுக்கும் கற்பனைகளுக்கும் வழிவகுக்கின்றன. தமிழவன் இதைச் சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

அத்திகரிப்பாவும் அவனது நாடு தெகிமொலாவும், 3300 ஆண்டுகளுக்குப்பின்பு அவன் வழித்தோன்றலாக வருகிற முஸல்பனியும் அவர்கள் வாழ்க்கை சரிதத்தோடு பயணிக்கும் தொன்மமும், குறியீடுகளும் உருவகமும் சொற்காட்சிகளாக விரிந்து அழகுசேர்க்கும் படிமங்களுக்கும் நாவலில் பஞ்சமில்லை. அவற்றை அளவுடன் கையாண்டிருக்கலாமோ? என்ற மனக்குறையும் அவ்வப்போது தலைகாட்டுகிறது. ஆசிரியர் கூறுவதுபோல நூல் முழுக்க தமிழர் வரலாறு, அவ்வரலாற்றோடு பிணைந்த  நினைவுகள், நிகழ்வுகள், கலை இலக்கியம், சிறுமைகள், பெருமைகள் என பலவும்  நூல் முழுதும் விரவிக்கிடக்கின்றன. அத்திகரிப்பாவுக்கு எட்டு திசைகள் இருந்தாலும் அவற்றுக்கு பெயர்கிடையாதென்பதும்; மண்ரா பட்டணம் அதன்  இருமைப்பண்புகள்; ‘பாத்திக்கட்டி பிரிந்திருக்கும் மக்கள்’ (அங்கே  காதல் என்ற சொல் கலவரத்தை நிகழ்த்தும், அவர்களின் தினசரி வாழ்க்கையை படுகளமாக்கும்), ‘காண்பதற்குப் பயணம் செய்பவர்கள்’ (ஒரு முறை கண்கள் நிறைய கண்டுவிட்டால் தங்கள் இனமும் குடும்பங்களும் விடுதலை பெற்றுவிடும் என்ற பொது உளவியலை நம்பிய இனத்தைச்சேர்ந்த்தவர்கள்), ‘சூத்திரங்களில் இருந்தபடிஅழுத எழுத்துக்கள்’,முப்பத்தொரு தீர்க்கதரிசிகள் என்பதுபோன்ற சொற்றொடர்களைக்கொண்டு தமிழர் சரித்திரத்தை மீண்டும் நினைவூட்டுகிறார்.

தமிழவனின் இச்சோதனை முயற்சி இலக்கியத்தில் சூராவளியை ஏற்படுத்துகிறதோ இல்லையோ, உறங்கப்பழகிய தமிழர்களில் ஒன்றிரண்டுபேராவது விழித்தெழுவார்கள் என்று நம்புகிறேன். உலகில் இன்று நவீன இலக்கியம் என்பது பிறதுறைகளைப்போலவே மேற்கத்திய தாக்கத்தோடு வளர்ந்தது. தமிழிலக்கியம் அதிலொன்று. எனினும் வளர்ச்சியில் மேற்கத்திய உலகுடன் நமது இலக்கியம் இணையாக இருக்கின்றதா என்றால் இல்லை. எடுத்துரைப்பிலும் உத்தியிலும் ஓர் இருபது முப்பது ஆண்டுகள் எப்போதும் பிந்தியவர்களாகவே இருக்கிறோம். ‘முஸல்பனி’ நாவல் அக்குறையை தவிர்க்க முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறது என்று சொல்லவேண்டும்.அம்முயற்சி திருவினையா என்பது அடுத்த கட்ட விவாதம். ஆனாலும் தமிழின் Avant-gardiste ஆன தமிழவனின் இச்சோதனைமுயற்சியை கவனத்திற்கொள்ளாதவர்கள் கிணற்றுதவளைகளாகத்தான் இருக்கவேண்டும்.

____________________________________________________________________

மொழிவது சுகம் மே 27 2016

 

அ. தமிழருவி மணியன்

« காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் தேர்தல் களத்தில் நின்ற வேட்பாளர்கள் இரண்டாயிரம் வாக்குகளைக் கூடப் பெற முடியாமற் போனால் நான் பொது வாழ்வில் இருந்து முற்றாக விலகி விடுவேன் என்று அறிவித்திருந்த படி இந்த முடிவை நான் மேற்கொண்டிருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து கவிஞர் கண்ணதாசன் பிரிந்த போது “போய் வருகிறேன்” என்று எழுதினார். ஆனால் நானோ இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பதில்லை என்ற முடிவுடன் போகிறேன். காந்திய மக்கள் இயக்கத்தின் எதிர்காலத்தை அதனுடைய நிர்வாகிகள் கூடி நிர்ணயம் செய்வார்கள்  » –      அரசியலிலிருந்து விலகிய தமிழருவி மணியன் விடுத்துள்ள செய்தி.

காந்தியே தேர்தலில் நின்றதில்லை  என்கிறபோது காந்திய மக்கள் இயக்கம் தேர்தலில் ஆர்வம் காட்டியது தவறு. தமிழருவி மணியன் நேர்மைகுறித்து கேள்விகள் இல்லை. பிரச்சினை நேர்மையை பெரும் எண்ணிக்கையில் மக்களிடம் எதிர்பார்த்தது. உலகமெங்கும் இதுதான் உண்மை. தமிழ்நாட்டில் அந்த விழுக்காடு 95 சதவீதம் இருக்கலாம், மற்றபடி எங்கும் இப்பிரச்சினை இருக்கிறது. மக்கள், மீடியாக்கள், அறிவு ஜீவிகள் என அனைவருக்கும் இங்கு வேறு நிறம். தவிர காந்திகூட தேர்தலை நம்பி அர்சியல் செய்யவில்லை, அவர் அடிமைப்பட்டுகிடந்த இந்தியாவில், வெறும் மேடை பேச்சுடன் ஒதுங்கிவிடாமல் களத்தில் இறங்கி, வெகு சனத்துடன் கலந்து அரசியல் செய்தவர். குறைகாண்கிற பாமரமக்களிடம், காந்திபோல காமராஜர்போல நம்பிக்கை பெறுவதற்கு தமிழ்அருவி மணியன் செய்ததென்ன ? ஜெயித்தவர்களைப் பாமரமக்கள் மட்டுமே வாக்களித்துத் தேர்ந்தெடுத்தார்களா என்ன ? கவிஞர் சுயம்புலிங்கம் சொல்வதுபோல : ஐம்பது பைசாவிற்கு கால் மடக்கி கையேந்துகிற ஆனைகள் நம்மிடம் அதிகம்.

மூத்த இலக்கியவாதிகள் திறனாய்வாளர்களின் விமர்சன ங்கள் – 11 காப்காவின் நாய்க்குட்டி நாவல் குறித்து க. முத்துகிருஷ்ணன்

காஃப்காவின் நாய்க்குட்டி ஒரு வாசிப்புப் பார்வை

.முத்துக்கிருஷ்ணன்

1

நாவல் என்ற இலக்கிய வகை ஒரு கட்டுக்குள் அடங்காத, அடக்க இயலாத முரட்டுக் குணம் கொண்டதாக விளங்குவது போல் தோன்றினாலும் எழுதி முடித்த பின்னர் அந்தப் படைப்பாளியால் ஒரு வரையறைக்குள் கொண்டு நிலை நிறுத்தி வைக்கப்படுகின்ற ஒரு மென்மை இலக்கிய வகை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது போல் தோன்றினாலும் ஏற்றுக் கொண்டாக வேண்டிய ஒன்று தான் என்பது உண்மை.

திரு.நாகரத்தினம் கிருஷ்ணாவின் மொழிபெயர்ப்புப் படைப்புகள் பலவற்றைப் படித்திருப்பினும் அவர் மூலநாவலும் எழுதக்கூடிய வல்லமை படைத்தவர் என்பது அவரின் “காஃப்காவின் நாய்க்குட்டி” என்ற சமீபத்தில் வெளிவந்துள்ள நாவலைப் படித்ததும் நிரூபணமாயிற்று.

இன்றைய உலக இலக்கியங்கள் அனைத்துமே ஒரு புதிய வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்பது கபிரியேல் கார்கியா மார்க்யோஸ், ஒரான் பாமுக், சல்மான் ருஷ்டி ஆகியோரின் உலகளாவிய பரிசுகள் பெற்ற நாவல்களைக் கருத்தில் கொள்ளல் அவசியம், ஃபிரன்ஸ் காஃப்காவிற்கும் ஒரு தலையிடம் உண்டு.

ஃப்ரன்ஸ் காஃப்காவின் The Trial என்ற நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பில் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு குறிப்பு என்ற முன்னுரை போன்ற பகுதியில் கீழ்க்கண்ட கருத்தை வாசிப்பு என்பது பற்றி விவரித்து விளக்குகிறார்.

 வாசிப்பு என்பது இயந்திரகதியில் நிகழும் செயல் அல்ல; மாறாக மன ஒழுங்கை வலியுறுத்தும், படைப்புச் செயலில் பங்கு கொள்ளும் ஒரு செயல் வாசகனின் கவனத்தையும் அக்கறையைக் கோரும் போது தான் ஒரு படைப்பு தன் முழு வீச்சையும் புலப்படுத்துகிறது பெரும்பாலோருக்கு வாசிப்பு எளிதில் நிகழும், முயற்சி தேவைப்படாத ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. வாசகனின் முயற்சியை வேண்டும், அதன் மூலம் வாசகனின் அகவிஸ்தரிப்பைச் சாத்தியமாக்கும்

இந்த க்ரியா எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்து நாவல் வாசிப்போரின் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றாகிறது.

ஓர் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நாவல் வாசிப்பு நிலை தமிழில் இன்று இல்லை என்பது உறுதி. புதுமைப்பித்தன், நகுலன், மௌனி, சுந்தரராமசாமி, தமிழவன் போன்றோர் கடல்புறா, கயல்விழி, குறிஞ்சிமலர், பாவைவிளக்கு, சிவகாமியின் சபதம் போன்ற நாவல் முறைகளை முற்றிலும் ஒதுக்கிவிட்டு நாவல் தளம் தமிழில் புது மேடையில் இன்று உற்சாகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பழைமைப் பாங்கான நாவல்கள் வெளிவருவது இன்று அடியோடு நின்று விட்டது எனலாம்.

  காஃப்காவின் நாய்க்குட்டி”  பிறந்த கதை என்ற தன் முன்னுரையில் காஃப்காவின் நாய்க்குட்டிஎன்ற நாவலின் தலைப்பினைப் போலவே பிராஹா நகரப் பயணம்”, பயணத்தின் மூன்றாம் நாள்’  காஃப்காவின் பிறந்த இல்லத்தைக் கண்டது, நாவல் கருத்தரித்ததுஅனைத்துமே தற்செயல் நிகழ்வுகள். திட்டமிடல்களைக் காட்டிலும் எதிர்பாராதவையே நமது வாழ்க்கையை அதிகம் தீர்மானிப்பவை என்பதை உறுதி செய்த மற்றோர் சம்பவம்

என்று நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் தெரிவித்திருப்பதிலிருந்து நவீன நாவல்கள் பழைய ஆரம்பகால நாவல்களைப் போல திட்டமிடல்களில் அமைக்கப்படுவதல்ல என்பது புலனாகிறது. நாவல் ஒரு கரையற்ற கடல், எல்லைகளற்ற வான்வெளி, ஓட்டம், நனவோடை,  நினைவிலி ஆகிய தடங்களில் கதை போன்ற ஒன்று நடனமிடுகிறது. தாளகதியும் நிறைந்திருக்கிறது. அந்த வகையிலும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் காஃப்காவின் நாய்க்குட்டிஎன்ற நாவல் அமைந்திருப்பது புது முயற்சி இலக்கியங்களில் முழு முனைப்பு கொண்டு செயல்பட்டிருக்கிறது என்பது வெற்றிக்கான அறிகுறி தான்.

காஃப்காவின் நாய்க்குட்டிஎன்ற நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலின் கதை என்ன? நித்திலாவின் கதையா?  பாலாவின் கதையா? சாமியின் கதையா? ஹரிணியின் கதையா?  நித்திலாவின் தமக்கையின் கதையா? வாகீசனின் கதையா? அத்ரியானாவின் கதையா? இவர்கள் எல்லோருடைய கதை என்றும் சொல்லாம், இல்லை என்றும் சொல்லலாம். இங்கே தான் நாவலின் தேடலில் வாசகன் பயணிக்க வேண்டியதிருக்கிறது. பல்வகை உத்திகள் நாவலில் புரண்டும்,

சுழன்றும், பின்னப் பட்டிருக்கின்றன. அனைத்து பாத்திரங்களும் தேடலில் சுழன்று நிகழ்வுகளான கதையம்சத்தைத் தெளிவுறுத்துகிறது.

கதைக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் நாவல் முழுவதும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத நவீன உத்திகள் நாவலின் ஊடாகப் புகுந்து ஒரு அபூர்வமான இலக்கிய அனுபவிப்பை வாசிப்பவனிடம் விதைத்துச் செல்கிறது நாவல். இச்செயல் சாதாரணம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு புதிய வழித்தடத்தைக்  கண்டறிய நாகரத்தினம் கிருஷ்ணா மிகுந்த அவா கொண்டுள்ளார். அந்த முயற்சி அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறதா? என்பதை இந் நாவலைப் படிக்கும் வாசகர்களால் மட்டுமே புலப்படுத்த இயலும்.

பல பாத்திரங்களின் கதைகள் பலவகை உத்திகளால் மிகவும் வித்தியாசமான முறைகளில் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாத்திரத்தின் கதையும் முரண்பாடான, அதே சமயம் உலகளாவிய சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கைப் பிரதிபலிப்பாக இருக்கிறது. நித்திலா என்ற பாத்திரம் மிகவும் முக்கியத்துவம் பெற்ற பாத்திரமாகத் திகழ்கிறது. நாவல் வாசிப்பவர்கள் நித்திலா மீது இரக்கம் கொள்ளவும் அதே சமயம் அவளுடைய தைரியத்தை நினைத்துப் பெருமைப்படவும், அவளுடைய அல்லல்களை நினைத்து வருத்தப்படவும் நேர்கிறது. நித்திலாவின் (திருமண ஆகாமல் பெற்ற குழந்தை) மகன் மனோகரன் போன்ற விவரிப்புகள் தமிழுக்குப் புதுமையாகத் தென்படுவது போல் தோன்றினாலும் பழைமையின் சாயல் ஓட்டிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. பிற பாத்திரங்களில் முக்கியமானது அத்ரியேனா என்ற பாத்திரம் நாவலின் தலைப்போடு பொருந்திப் போகிற பாத்திரமாகப் பரிமளிக்கிறது. நாய்க்குட்டியாகப்

பார்க்கப்படுதல் அத்ரியானாவும் அவள் கணவரும் படிமங்களாக்கப்பட்டிருப்பது நாவலாசிரியர் புதிய உத்திகளுக்குள் நுண்மையாக நுழைந்திருப்பது புலப்படுகிறது. ஹரிணியின் உதவும் மனப்பான்மை மனிதாபிமானத்தை எதிரொலிக்கிறது. நித்திலாவின் தமக்கை தமிழ் டி.வி. சீரியல்களில் வரும் பெண்களை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. வாகீசன் சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளும் விதம் மனித இயல்பைத் திறம்பட சுட்டுகிறது.  காதல் புறம் தள்ளப்பட்டு வாழ்வின் ஆதாரம் மையப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. இன்னும் பாலா, சாமி, முல்லர் ஆகிய எல்லா பாத்திரங்களும் அவரவர்கள் பண்புநலனைப் பக்குவமாக வெளிப்படுத்துகிறார்கள் என்பது கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது. எல்லா பாத்திரங்களுமே ஒரு தேடலை நோக்கிப் பயணிப்பது தான் நாவலின் அடிநாதம். அந்தத் தேடல் என்ன என்பதை நாவல் படிப்பதிலிருந்து தேடினால் கிடைப்பது வாழ்க்கை என்ற ஒன்று தான்.

இந்த நாவலில் ரசித்துச் சிலாகிக்கக் கூடிய பகுதிகள் நிரம்ப உள்ளன. அனைத்து சுவாரஸ்யங்களையும் கூறல் தேவையற்றது என்பதால் சிலவற்றை மட்டும் கூறல் மிகவும் அவசியம். பிறவற்றை நாவல் படிப்போர் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம். சில ரசிக்கக்கூடிய பல பகுதிகளில் சில கீழே:-

மெல்லிய சன்னல் திரைகளின் மறுபக்கம் வெள்ளை வெளேரென்று மேகங்கள். ஒரு பகுதி பால்கனியின் கைப்பிடிக் கம்பிகளில் தலை வைத்திருந்தனபக்கம் 24

 எதுவானா என்ன?” ஊர் பேர் தெரியா தமிழ் எழுத்தாளன் மனைவின்னு சொல்லிக் கொள்வதைக் காட்டிலும், காஃப்கா வீட்டு நாயெனச் சொல்லிக் கொள்வதில் பெருமை பக்கம் 44

 

தற்கொலை செய்து கொள்ளத் துணிச்சல் இல்லாம சந்நியாசத்தைத் தேர்வு செய்தேனோ என்கிற சந்தேகம் எனக்குண்டு. அநேகமாக துறவு பூண பெரும்பாலோருக்கு அதுவே காரணம்”   பக்கம் 119

 

 “ராஜபக்ஷேக்கள் தமிழரிலும் உண்டென்று தெரியும். ஆனால் அவன் தமக்கையின் கணவனாக தன்னுடைய குடும்பத்திலும் இருக்கக் கூடுமென்று யோசித்துப் பார்த்ததில்லைபக்கம் 164

 

நவாஸ் ஷெரீப்பை சந்திக்கத் தயாராக இருந்த மோடி போல

அவளை வரவேற்கத் தயாரான போது மாலை மணி ஆறு

பக்கம் 187

 

நாய்க்கு என்ன பேரு பின்லாடனாபக்கம் 191

 

நூலற்ற பட்டம் போல பயண இலக்குகள் பற்றிய

கவலைகளின்றி காற்றிடம் தன்னை ஒப்படைக்கும்

எண்ணம் கடந்த சில நாட்களாக விடாமல் அவரைத் துரத்துகிறது.பக்கம் 250

அவள் சிரிக்கிற போது, வெண்ணிற பற்கள் உதடுகளில் உட்காரவும் எழவும் செய்வதைப் பெண்களும் சாடையாகக் கவனித்தனர்.பக்கம் 262

 

தமிழ்நாட்டில் தமிழ் பலருடைய வாயில் அகப்பட்டுப் படாதபாடு படுவதைப் பார்க்கும் போது தமிழை எண்ணி பரிதாபம் கொள்ளத்தான் நேர்கிறது. டி.வி செய்தி, சீரியல், தினசரி செய்தித்தாள்த் தமிழ், அரசியல் கட்சிகளின் ஆவேசக் கூட்டத் தமிழ் ஆகிய இன்ன பிற இதில் அடங்கும். ஆனால் இந்நாவலில் தமிழ்நாட்டுத் தமிழ், பிரெஞ்சுத் தமிழ், இலங்கைத் தமிழ், புதுச்சேரித் தமிழ் ஆகிய மொழிநடை மிகவும் லாவகமாகவும் அற்புதமாகவும் கையாளப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது.

 

இன்றைக்கு வெளிவரும் நவீன உத்திகளுடன் கூடிய நாவல்களைப் படிக்கும் போது அத்தியாயங்கள் நீண்டு கொண்டே செல்லுவது மிகவும் சலிப்பை ஏற்படுத்துவதாய் உள்ளது. ஆனால் இந்நாவலில் மிகமிகச் சிறிய, குறுகிய, கட்டுக்கோப்பான அத்தியாயங்கள் நாவல் வாசிப்பின் விறுவிறுப்பை கூட்டுவதற்கு உந்துதலாய் இருக்கிறது.

 

இந்நாவலைப் படிக்கும் போது நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்கு ஃப்ரன்ஸ் காஃப்கா மீது உள்ள அளவு கடந்த ஈடுபாடும் தாக்கமும் நன்கு புலனாகிறது.

 

58,87,151,168,181,195,250,254,262 ஆகிய பக்கங்களிலுள்ள எழுத்துப் பிழைகளை அடுத்த பதிப்பில் நீக்குதலை நினைவிற்கொள்ளல் வேண்டும் என்பது அதற்குப் பொறுப்பாளர்களின் கடமை, பணி. உலகளாவிய களன்களைக் கட்டுக் கோப்பான நவீன உத்திகளை மிக கவனமாக உள்ளடக்கிய ஒரு சிறப்பு மிக்க நாவல் என்றே “காஃகாவின் நாய்க்குட்டி” என்ற நாவலைச் சொல்ல வேண்டும். நவீன உத்திகளை உள்ளடக்கிய இந்நாளில் வெளி வந்து கொண்டிருக்கும் புரியாமை என்ற கஷ்டம் இந்த நாவலில் இல்லை என்பது மகிழ்வுக்குரியது. நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களிடமிருந்து இன்னும் பல சிறந்த நாவல்கள் வெளிப்படும் என்ற நம்பிக்கையைப் படிப்பவர்களிடம் இந்த நாவல் ஏற்படுத்துகிறது. நாகரத்தினம் கிருஷ்ணாவைப் பொறுத்தவரையில் அவர் சிறந்த முறையில் முழுப் பொறுப்புடன் எழுதியிருக்கிறார். தமிழ் வாசகர்களும் சிறந்த முறையில் முழுப் பொறுப்புடன், கவனச் சிதறலின்றி இந்நாவலை அணுகுவார்கள் என்றால் அது தமிழுக்கு இன்னும் மெருகூட்டும், வலுவூட்டும்.

இம்மாதிரி புதுவகை நாவல்களைப் பதிப்பிக்கும் காலச்சுவடு பதிப்பகத்திற்கு தமிழ் இலக்கியச் சரித்திரத்தில் ஒரு நல்லிடம் நிச்சயம் உண்டு.

 

  1. Muthu Krishnan,

291, Secretariat Colony,

Thuraipakkam,

Chennai- 600 097.

94444 21507

muthu77000@gmail.com <mailto:muthu77000@gmail.com>

 நன்றி :  பேசும் புதிய சக்தி

 

இரண்டாவது அரோகரா !

 

புரையோடிய நிலமும்
வற்றிய குளமும்
துப்பிய வெயிலில்
துவளும் ஆட்டைத்
தூக்கி நிறுத்தினான பூசாரி
மஞ்சள் நீர்த் தெளித்து
பூச்சரத்தைக் கழுத்திலும் இட்டான் !
சிலிர்த்தன ஆடுகள்
தலையை உயர்த்தின !
விழிகளில் தெரிவது
நன்றியா ? புரட்சியா ?
ரௌத்திரத்துடன்
பூசாரியைப்பார்த்தாள்
தொடைக்கட்டியுடன்
உட்கார்ந்திருந்த அம்மன் !
புரிந்தவன்போல
அரோகரா !வென கூக்குரல் செய்தான் !
தரை விழுந்த பின்னும்
மூடாத விழிகள் !
ஆத்திரத்துடன்
பூசாரியைப் பார்த்தாள்
அவை ஆடுகளம்மா !
புரட்சிகள் அறியாதவை என
விளக்கப் போதாத பூசாரி
இரண்டாவது முறையாக
அரோகரா ! என்றான்.
– நாகரத்தினம் கிருஷ்ணா

மொழிவது சுகம் மே 8 -2016: இருத்தலும் மறுத்தலும்

சாதிக்கான் : பாகிஸ்தானியர், சமயத்தால் இஸ்லாமியர் முதன் முறையாக மேற்கு நாடுகளில் மிகப்பெரிய, மிகமுக்கியமான  நகரமொன்றிர்க்கு, இலண்டன் மா நகருக்கு மேயராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். அவர் ஒரு வழக்கறிஞர், மனித உரிமைப் போராளி, பிரிட்டிஷ் உழைப்பாளர் கட்சியில்  நீண்டகால உறுப்பினர், அக்கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர். அவர் வழக்கறிஞர், மனித உரிமை போராளி என்பதால், சில நேரங்களில் சட்டப்பிரச்சினையுள்ள மனிதர்களை அலுவலகத்தில் வைத்து சந்திக்க நேர்ந்திருக்கிறது.  அதனைக் கொண்டு மேம்போக்காக அவர் தீவிரவாதிகளுக்குத் துணைபோகிறவர் என்ற குற்றசாட்டுகள் எதிரிகளால் வைக்கப்பட்டன.  இருந்தாலும் அவருடைய மதத்தையோ, அயல் நாட்டிலிருந்து வந்தவர் என்ற அடையாளத்தையோ வைத்துப் பார்க்காமல் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். கன்சர்வேட்டிவ் கட்சியின் கோடீஸ்வர, ஐரோப்பியரை, கடந்தகால காலனி நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த மனிதர் வெற்றிகண்டிருப்பது ஒரு சாதனை.  பாரீஸ் மா நகரில் ஒரு மேயருக்கு பிரத்தியேக அதிகாரங்கள் உண்டு : போலீஸ் மற்றும் நகரப் போக்குவரத்து அரசியலில் அவருடைய கைகள் கட்டப்பட்டவை அல்ல. இலண்டன் மா நகர் மேயர் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டவை என் கிறார்கள். நமக்கு அது முக்கியமல்ல, அவரது வெற்றி இரு விஷயங்களை உறுதிபடுத்துகிறது. முதலாவதாக அவர் என்னதான் மேற்குலக வாழ்க்கையெனும் பொது நீரோட்டத்தில் கலந்திருந்தாலும் பிரச்சினைகள் என்று வருகிறபோது அவரது குலமும், கோத்திரமும் பூர்வாசிரம உண்மைகளும் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்யப்படும்  உண்மை, அவரது மேற்குலக வாழ்க்கையை, இங்க்கிலாந்து நாட்டில் அவரது இருத்தல் எறும்பு ஊர்ந்து போட்டிருந்த மணற்கோட்டினை,  இலண்டன் மேயர் தேர்தல் கலைத்திருக்கிறது.  நாற்பது ஆண்டுகால இலண்டன் இருப்பு மறுக்கபட்டு அவரது கடந்த காலம் தோண்டி எடுக்கப்பட்டது. இரண்டாவதாகக் கடந்த பல நூற்றாண்டுகளாக நவீன வாழ்க்கைமுறையில் பலஅம்சங்களில் முன்னோடிகளாக உள்ள மேற்குலக மக்கள் இவ்விடயத்திலும் தாங்கள் முன்னோடிகள்  என்பதை எண்பித்து ஒரு புலம்பெயர்ந்த பாகிஸ்தானியரின் அரசியல் இருத்தலை மறுக்காமல் உறுதிப்படுத்தியிருக்கும் உண்மை.

மனித வாழ்க்கையில் இருத்தலும் மறுத்தலும் பரஸ்பர எதிர்வினைகள். « எனது இருத்தலை ஏற்றால் உனது இருத்தலை ஏற்பேன், இல்லையென்றால் இல்லை. » எனக்கு லைக் போட்டால் உனக்கு உடனடியாக ஒரு லைக். துறைசார்ந்த இருமனிதர்களிடத்தில் ஒருவர் இருத்தலை மற்றவர் அங்கீகரிப்பது அத்தனை எளிதானதல்ல. ஜெயிப்பவன் பக்கத்து தெருவைச் சேர்ந்தவனாக இருந்தால் பிரச்சினையில்லை, மாறாக அவன் பக்கத்துவீட்டுக்காரனாக இருந்தால், வயிறு எரிகிறது.   அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதர்களை மட்டுமல்ல அவர்களமர்ந்த நாற்காலிகளைக் கூட வெறுக்கும் மன நிலைக்குத் தள்ளப்பட்டு, வெறுப்பு நிலை அரசியலில் வாழ்ந்த, வாழ்கிற தமிழ் அரசியல் வாதிகளை அறிவோம்.  உலகில் வேறேங்கும் கண்டிராத அளவில் நூற்றுக்கணக்கில் தமிழ் நாட்டில் கட்சிகள் உள்ளன. தமது இருத்தல் உணரப்படவில்லை என்ற ஏக்கங்களின் புறவடிவங்கள் அவை.

எழுத்து அரசியலிலும் இந்த இருத்தல் மறுத்தல் பிரச்சினைகள் இருக்கின்றன. ஓர் எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரையோ, ஒரு கவிஞர் மற்றொரு கவிஞரையோ, ஒரு மொழிபெயர்ப்பாளர் மற்றொரு மொழிபெயர்ப்பாளரையோ அவர் இருத்தலையோ « as it is » எற்பது இங்கு நடக்கக் கூடியதல்ல, தனது அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூப்பிக்க முயல்வதுபோல சில நேரங்களில் பிற எழுத்தாளர்களுடன் (அவர் தமக்குப் போட்டியில்லை எனக் கருதினால், அவர்கள் இருத்தலை இனி தன்னால் மறுக்க முடியாதென்றால்) குரூப் போட்டோ எடுத்துக் கொள்வதுண்டு,  விதிவிலக்குகளாக சில எழுத்தாளர்கள் இருக்கலாம், ஆனால் அது பொது விதி அல்ல.

என்னிடம் தங்கள் படைப்பை மொழிபெயர்க்கச் சொல்லி கேட்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு நியாயம் கருதி அதைச் செய்ய நினைத்தாலும், எனது உள்மனம் எழுப்பும் கேள்விக்குப் பதில் சொல்லவேண்டியவனாக இருக்கிறேன்.  எனது இருத்தலை உறுதிசெய்ய அவர்கள் கிள்ளிப்போட்டத் துரும்புகள் எத்தனை என்று எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.  பிறர் தங்கள் இருத்தலுக்கு எத்தனை விசுவாசமாக இருக்கிறார்களோ அத்தனை விசுவாசமாக எனது இருத்தலை போற்றவும், உறுதிசெய்யவும் எனக்கும் விருப்பம் இருக்கிறது.

இக்கட்டுரையை எப்படி எடுத்துக்கொள்வீர்களோ எனக்குத் தெரியாது, எல்லா மனிதர்களையும்போலவே எனது இருத்தலைத் தெரிவிக்கும் முயற்சியெனக் நீங்கள் கருதினால், எனது வாக்கு மறுத்தலுக்கு அல்ல.

—————————————-

மொழிவது சுகம் மே 1 -2015

உறக்கம் வருமா ?

தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் தெரியும் வரை  தமிழ் மக்களுக்கு உறக்கம் வருமா என்று தெரியவில்லை. உறங்கினாலும் பாதி ராத்திரில் எழுப்பி பணம் கொடுப்பதாக க்  கேள்வி.. ஓட்டுபோடுபவர்களுக்கு  இத்தகைய  அமளிக்கிடையில் உறக்கம் வந்தாலும்  தலைவர்களுக்கு :  நம்பி கண்ட்டெய்னர்களில் ஏற்றி அனுப்பினோமே ஒழுங்காய்  பட்டுவாடா ஆகுமா என்ற கவலை,  தமிழர்கள் கடலில்  மீண்டும் தூக்கி எறிந்து விடுவார்களோ என்ற கவலை, அடுத்த கூட்டணிக்கு என்னபெயர் வைக்கலாம் என்ற கவலை, இப்படி  வகைப் பிரிக்கபட்ட கவலைகளில்  தமிழினம் தவித்துக்கொண்டிருக்க பிரெஞ்சு மக்களுக்கு  வேறுகவலைகள் .

 

La Nuit Debout  எனக்கூறி  உறங்காமல்  கடந்த மார்ச் மாதம் தேதியிலிருந்து பாரீஸிலுள்ள புகழ்பெற்ற  La Place de la République  என்ற இடத்தில் நள்ளிரவு வரை ஒன்று திரண்டு ஆளும் சோஷலிஸ்டு அரசாங்க்கத்திற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். ஒரு ஜன நாயக நாட்டில் தங்கள் கலக க் குரலை வெளிப்படுத்த La Place de la République   என்ற பெயர்கொண்ட திடலைத் symbolic ஆகப் போராட்டக் கார்கள்  தேர்வு செய்ததது காரணத்தோடுதான் .  எனவேதான் வலது சாரிகள் வற்புறுத்தினாலுங்கூட  இயக்கத்தைத் தடை செய்ய  ஆளும் சோஷலிஸ்டுகள் அரசாங்கம்அஞ்சுகிறது. Debout என்ற பிரெஞ்சு சொல்லுக்கு நின்றுகொண்டிருத்தல், தாக்குப் பிடித்தல், விழித்துக் கொண்டிருத்தல் என்றெல்லாம் பொருளுண்டு. ‘Nuit’  என்றால் இரவு. எங்க்களுக்கு உறக்கம் எப்படி வரும் ? எனக் கேட்கின்ற வகையில்தான் தங்கள் போராட்டத்திற்கு  la nuit Debout எனப் பெயர் சூட்டியுள்ளார்கள்.  அவர்களை உறக்கத்திற்குத் தடையாய் இருப்பது. இன்றைக்கு பிரான்சு நாட்டின் தொழிலாளர்கள், தொழிற் சங்க்கங்கள், இளம் தகைமுறையினர், பணி ஓய்வு பெற்றவர்கள்,  இட து சாரிகள் அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதி த்துள்ள புதிய தொழிற் சட்டம்,  மிரியம் என் கொம்ரி என்ற பிரான்சு நாட்டுத் தொழில் அமைச்சரால்  அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. முதலாளிமார்களால்   சில முணுமுணுப்புகளுடன்  வரவேற்கும் இச்சட்டம், பிரெஞ்சுத் தொழிலாளர்கள் போராடிபெற்ற பல சலுகை களைக் கேள்விக்குள்ளாக்குகிறது.  இதன் படி நாளை பெரும் நிறுவன ங்கள், தங்கள்  உற்பத்தியை, இலாப நட்டத்தைக் காரணமாக முன் வைத்து  தங்கள்  நலனுக்கேற்ப  விதிமுறைகளைக் கடைபிடிக்கலாம்., வேலை நேரம், பணி நீக்கம் என்பது  இனி சம்பந்தப் பட்ட நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது. அண்டையிலிருக்கிற ஐரோப்பிய நாடுகள் இதனால் கூடுதல்  வேலை வாய்ப்பை எற்படுத்தித் தந்திருக்கிறார்கள்,  என்பது அரசுசொல்லும் காரணம்.

அதை எதிர்ப்பவர்கள், போராட்டக் கார ர் கள்  உருவாக்குகிற சட்டம் ஒழுங்கு பிரச்சினை. அரசாங்க்கத்திற்குப் பெரும் தலைவலி. போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும்போதெல்லாம்  எதிர்ப்படுகிற கடைகளையும்,  அரசாங்கச் சொத்துகளையும் அழிக்கிறார்கள். சூறையாடுகிறார்கள் என்பதுக் குற்றச்சாட்டு. குறிக்கோளை அடைய  கடந்த காலத்தில் இடையூறாக இருப்பவற்றை அழித்தல் ஒரு கோட்பாடாக இருந்திருக்கிறது. ஆனால் இந்த நூற்றாண்டு வேறுவிதமான காட்சிகளை நமக்குச் சித்தரிக்கிறது. தற்போது இடது சாரிகள் எனக் கூறிகொள்கிறவர்கள் தொழிலாளருக்கு விரோதப் போக்கைக் கடைபிடிக்கிறார்கள். இன்றைக்குக் காம்பேட்டுகளையும் முதலாளித்துவம் தந்திரமாக வளைத்துப் போட்டுவிட்டதை இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். முதலாளித்துவம் பொதுவுடமை என்ற பேதம் இன்றில்லை, தனக்கு மிஞ்சினால் தானமும் தருமமும் என்பதை உலக அரசியல் விளங்கிக் கொண்டுள்ளது. உள்ளத்தில் மாக்கியவெல்லியாகவும் உடற்தோற்றத்தில் எளிமையான இயேசு சபையினரை நினைவூட்டும் வகையிலும் தேர்ந்தவர்களாக பிரெஞ்சு சோஷலிஸ்டுகள் இருந்தும், la Nuit Debout போராட்டக் கார ர்களைபோலவே குறைந்த பட்சம் அடுத்த அதிபர் தேர்தல்வரை உறக்கம் கெடுவதற்கான வாய்ப்பு பிரெஞ்சு ஷோஷலிஸ்டுகளுக்கும் நிறையவே இருக்கிறது.