ஏற்றுக்கொண்ட பணியில் ஆர்வம்
« செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் திறமைதான் நமது செல்வம் » என்பது பழைய திரைப்படமொன்றில் இடம்பெறும் பாடல். பாடலாசிரியர் பட்டுக்கோட்டையார். அப்பாடல் உங்களில் பலரைப்போலவே எனக்கும் விருப்பமான பாடல். எனினும் இப்பாடலில் தொடர்ந்து இடம்பெறும் வரிகள் உடலுழைப்பை மட்டுமே கருத்தில்கொண்டு பாடப்பெற்றிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தொழில் என்பது உழைப்பை அடிபடையாகக் கொண்டது என்பது பொதுவில் ஏற்கக் கூடியது. அதேவேளை அவ்வுழைப்பு உடல் திடத்தையும் அதன் திறனையும் மட்டுமே சார்ந்தது எனச் சித்தரிப்பதில் எவ்வித நியாயமும் இல்லை. உழைப்பு என்பது, உடலுக்கு எப்படியோ அப்படி மன வலிமையையும், மூளையின் ஆற்றலையும் உள்ளடக்கியது என்கிற புரிதல் நமக்கு வேண்டும். மூளையைப் புறக்கணித்து உடலை மட்டுமே அண்டியிருக்கிற உழைப்பு நம்மை அவையில் கூட்ட த்தில் ஒருவராக, பார்வையாளராக இருக்க மட்டுமே உதவும். மாறாக மூளையையும் உடலுடன் இணைத்துக்கொள்ளும் உழைப்பு அவையில் முந்தியிருக்கச் செய்யும். உடலுழைப்பு அடிமைகளுக்கானது, மூளையின் பயன்பாட்டையும் உள்ளடக்கிய உழைப்பு ஆளுமைக்குச் சொந்தமானது.
வையம் காப்பவரேனும் – சிறு
வாழைபழக் கடை வைப்பவ்ரேனும்
பொய்ய கலத் தொழில் செய்தே பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கனும் மேலோர் !
என கவி பாரதி சுட்டுகிற மேலோர் வரிசைக்குக் கச்சிதமாகப் பொருந்துகிற ஆளுமை, ஆனந்த ரங்கர்.
நமக்கு கிடைத்துள்ள அவருடைய நாட்குறிப்பு 1736ம் ஆண்டு தொடங்குகிறது. ஞானு தியாகு என்பவர் பிள்ளையின் அச்சிட்ட நாட்குறிப்பின் முதல் தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் :
« முதல் அதிகாரி முதற்கொண்டு சிப்பந்திவரையில் எல்லோரிடத்தும் சம அன்பைக் காட்டிவந்தவர். ஆகையால் யாவரும் அவரிடம் பதிலுக்கு முழுநம்பிக்கை வைத்துத் தங்களுக்கு தெரிந்த தை ஒளியாமல் சொல்லிவந்தார்கள். இதனால் அன்றோ, அரசியல் ரகசியங்கள் முதற்கொண்டு தனிப்பட்டவர்கள் குடும்ப வாழ்க்கைகள் வரையில் யாவற்ரையும் அறிந்து ஒரு தீர்மானத்துக்கு வர அவரால் முடிந்தது. » எனக்குற்ப்பிட்டிருப்பது கவனத்திற் கொள்ளதக்கது.
வணிக நடவடிக்கைகளில் பிள்ளை :
இளம்வயதிலேயே பிள்ளைக்கு இடைத் தரகர் பொறுப்பு . இடைத்தரகர் பணி என்பது இங்கே இரு தேச மனிதர்களுக்கிடையில் , இருவேறு இனத்திவரிடையில், இருவேறு பண்பாடுகளின் பின்புலத்திலிருந்து வந்த மனிதர்களுக்கிடையில், இரு வேறு மொழிகளுக்கிடையில் கடமையை நிறைவேற்றவது. துபாஷியாக நியமிக்கப்பட்டு அதனல் தான் அடையும் பலன்களுக்கு யார் காரணமோ அவர்களுக்கு விசுவாசமாக இருப்பது ஒரு பக்கம் ; சுதேசி வியாபாரிகளுக்கு, தனது மண் சார்ந்த மனிதர்களின் நம்பிக்கைக்கு உரிய மனிதராக நடந்துகொள்வது இன்னொரு பக்கம். இருகுதிரையில் சவாரி செய்யவேண்டிய நெருக்கடி. இரு தரப்பினரும், மகிழ்ச்சியும் நிறைவும் அடைகின்றவகையில் பணியாற்றவேண்டும். தரமான நெசவுத் துணிகளை வாங்க வேண்டும், தான் ஊழியம் பார்க்கிற நிறுவனத்திற்கு இலாபம் தரும் வகையில் பேரமும் அமையவேண்டும். உள்ளூர் வியாபாரிகளும் மன நிறைவுடன் தங்கட் பொருளை விற்று காசாக்க வேண்டும்.
இப்பணியில் வேரு சில நெருக்கடிகளும் பிள்ளைக்கு இருந்தன. பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகிகளில் ஒரு சிலர், நிறுவனத்தின் இலாபத்தில் தாங்கள் எவ்வளவு சம்பாதிக்கமுடியுமென கணக்கிட்டு கொள்ளையடித்த பின், பிடிபடும்போது பழியைத் தரகர்கள்மீது சுமத்திவிட்டு தப்பிக்கின்றவர்கள். நைனியப்ப பிள்ளையின் வழக்குத் தெள்ளத் தெளிவான சான்று. எனவே இவற்றை நன்கு விளங்கிக் கொண்டிருந்த ஆனந்தரங்கர் கணக்கு வழக்குகளில், போடும் ஒப்பந்தங்களில், எச்சரிக்கையாக இருந்தார். வணிக நடவடிக்கைகளை பிறர் குறைகாணாத வகையில் அமைத்துக்கொண்டார் அவற்றை எண்பிக்க எழுத்துப் பூர்வமாக குறித்தும்வைத்தார். பிள்ளையின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள பல உதாரணங்கள் :
நள வருடம், புரட்டாசி மாதம் 21 ந்தேதி,1736ம் ஆண்டு ஒக்தோபர் மாதம் 3 ந்தேதி புதன் கிழமை
« காலை பத்துமணிக்கு சுங்குவார் சேஷாசல் செட்டிக்கு ஒப்பந்தம் கொடுத்து பாவைகட்டு ( the bales of piece-goods) 1471க்கு மூணாந்தர விலைப்படிக்கு சுமார் லட்சத்திருப்பதினாயிரத்து நானூத்தி தொண்ணூற்று ஒன்றரை வராகனுக்கு கொந்திராத்துலே (contract) கையெழுத்துப்போட்டு பிற்பாடு பதினோரு பீரங்கியும் போட்டு (once the contract was executed, guns were fired.)அவன் தம்பியும்கூட கையெழுத்துப் போட்டபடியினாலே சேஷாசலசெட்டிக்கு ஆறு கெஜம் சிவப்பு சகலாத்தும் மேற்படி லட்சுமிபதி செட்டிக்கு ஆறு கெஜம் சகலாத்தும் கொடுத்தார்கள். » –
– ( பக்கம் 3,ஆ.நா.குறிப்பு vol.I)
கணக்கு வயணம்
வர்த்தகர் வெள்ளி வாங்கிப்போய் ரூபாய்யோடு விச்சு முசே லெகுவுக்கு (Monsieur Legou)செலுத்தினது.
நள வருடம் மார்கழி மாதம் 25ந்தேதி 1737 ஆம் வருடம் ஜனவரி மாதம் 4ந்தேதி
பத்தருக்கு சேர் விராகனிடை 65க்கு சேர் 100க்கு ரூபா…..2335
ஆக க் கூடின ரூபாய் 5259. 11/16
ரெண்டு குலானு போட்டிருக்கிற (coins stamped with double head)
காசு பத்தருக்கு சேர் 100க்கு ரூபாய் …2318
ஆக 324-க்கு கூடின ரூபாய் …..7567 1/16
இதுக்கு கூலிக்கு பிடிச்சுக்கொண்டது 1000-க்கு ரூபாய் 16 ஆக
ரூபாய் 121 1/16 போக நீக்கி முசே லெகுவுக்கு செலுத்தினது ரூபாய் ……7446
– (பக்கம் 8 ஆ. நா.குறிப்பு vol 1)
துய்மா (M.Dumas) என்கிற அதிகாரிக்கு மயிலாப்பூர் துறைமுகம் சார்ந்த பிரச்சனை ஒன்றை துய்புவா(M.Dubois) என்பவர் கடிதம் மூலம் தெரிவிக்கிறார். அதன்படி கடலூரில் பிள்ளை அவர்கள் ஏற்றியதாகக் கூறி இரசீது வைத்திருக்கும் நான்கு கட்டுத் துணிகள், கப்பலில் ஏற்றப்படவில்லையென்றும், அது மயிலாப்பூரை வந்தடையவில்லை என்பது கடிதத்தில் சொல்லபட்டுள்ள குற்றச்சாட்டு. பிள்ளை நான்கு கட்டுகள் அனுப்பியதற்கான ஆதாரங்களை உரிய சான்றுகளுடன் தெரிவிக்க, அவர்மீது சுமத்தப்பட்டக் குற்றச் சாட்டு பொய்யானதென நீரூபணம் ஆகிறது. இத்தகவலை 1737 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் நாளிட்ட நாட்குறிப்பில் நமக்கு வாசிக்க கிடைக்கிறது.
உண்மையும், நியாயமும் தன் தரப்பில் இருக்கிறதெனில் பிள்ளை அதிகாரத்தைக் கண்டு அஞ்சுவதில்லை என்பதற்கு மற்றொரு உதாரணம் 1738 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ந்தேதி நடந்த மற்றொரு சம்பவம்.
“காலமே நான் முசே எலியாசு (M. Elias) வீட்டுக்குப்போய் அவருடனே பேசியிருக்கச்சே கும்பெனி சேவகன் கோன்சேல் கூடியிருக்கிறார்கள் (meeting of the Council). துரை உங்களை அழைத்துக்கொண்டு வரச்சொன்னார் என்று சொன்னான். அதன் பேரிலே கோன்சேல் வீட்டுக்கு வந்த இட த்தில் …….துரை அவர்களுக்கு ஆசாரம் (வணங்கி) பண்ணி மற்ற கோன்சேலியோரவர்களுக்கும் (the other Council members)
ஆசாரம் பண்ணி நின்றேன். அப்போது துரை அவர்கள் என்னைக் கிட்ட வர்ச்சொல்லி ரங்கப்பா உன்பேரிலே முசே பிலவுவான் (M.Pilavoine) மூவாயிரத்து எழுநூத்து வராகன் வரவேணுமென்று கணக்கெழுதிக்கொண்டு வந்து கொடுத்திருக்கிறான், என்று சொன்னார். நான் அதற்கு கொடுக்கவேண்டியதில்லை. எந்தச் சம்மதி (under what) என்று கேட்டேன் . அதற்கு அவரிருந்து கொண்டு 1734 வருஷத்தில் நாற்பத்தெட்டு பவழப்பெட்டி வாங்கின சம்மதிக்கு கெடுவு போக நின்ற நாளுக்கு வட்டி என்று சொன்னார். அதற்கு நான் அய்யா பவழ வட்டியை நான் கொடுக்கமாட்டேன். இது கும்பெனிக்குப் பெரிய காரியமல்ல. இப்பவழச் சரக்குக்கு நான் பிணை இருந்ததற்கு நாலாயிரம் அய்யாயிரம் வராகன் மட்டுக்கும் மூழ்கிப்போனதுமல்லாமல்(நட்டமடைந்ததும் அல்லாமல்) சிறிதுபேர் மானுஷமாய் (insolvent condition) செலுத்த தவறினார்கள் பேரிலே மூவாயிரம் வராகன் மட்டுக்கும் எனக்கு வரவேணும். அதற்குக் கணக்கும் தாஸ்த்தாவேசுகள் சீட்டுகள் எல்லாம் இருக்குதென்று …..” கவர்னரிடத்தில் துணிச்சலுடன் பேசுகிறபோது, அவர் பணியில் சில நெறிகளை வகுத்துக்கொண்டு கடமை ஆற்றியிருக்கிறார். அதற்கு சோதனை வருகிறபோது, அஞ்சுவதில்லை என புரிந்துகொள்கிறோம்.
தொடரும்…