Monthly Archives: திசெம்பர் 2017

மொழிவது சுகம் டிசம்பர் 25 2017

நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் !

 

அ. ‘பழியெனின்  உலகுடன் பெறினும் கொள்ளலர்’ :ஆர்கே  நகர் தேர்தல் முடிவும்   கவிஞர்  இன்குலாப் குடும்பமும்

இன்குலாப்

இரண்டு நாட்களுக்கு முன்பு  சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு  மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு வழங்கிய சாகித்ய அகாதெமி விருதை அன்னாரது குடும்பம் வேண்டாமென மறுத்திருக்கிறது. இப்புதிய விருதினால் அவருடைய பெருமைக்கு  ஐந்துகிலோ  உபரியாக க் கிடைக்கப் போவதில்லை.  ஒரு பக்கம் பகலில்  முன்வாசல் வழியாகக் கதவைத் தட்டிய விருதையும், அதனோடு வந்த பணத்தையும் சுயமரியாதைக் காத்திட மறுக்கும் ஒரு தமிழ்க் குடும்பம் ; மற்றொரு பக்கம், அர்த்த ராத்திரியில் பின்வாசல் கதவைத் தட்டும் மனிதருக்குத் தங்கள் வாக்குரிமை ஆடையைக் களையைச் சம்மதிக்கும்  தமிழ்க் குடும்பங்கள்.

ஆர்கே நகரிலும் இன்குலாப் குடும்பங்கள் இல்லாமலில்லை.  அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பாலூட்ட சோரம்போனாளென்று இன்றைக்குத் திரைப்படத்தில் காட்டுவதுகூட  அபத்தமாகவே இருக்கும். விக்டர்யுகோவின்  ழான் வால்ழான்  நிலமையில் ஆர்கே நகர் தொகுதி மக்களுமில்லை, இந்தியா, பிரான்சு நாட்டைப்போல  19ம் நூற்றாண்டின்  இறுதியிலுமில்லை. வறுமை காரணமாக விலைபோனார்கள், என்பதை நம்பத் தயாரில்லை.  ஊழலுக்கும், வாங்கும் இலஞ்சத்திற்கும் வறுமையா காரணம் ?. அப்படியொரு மன நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். மனித உரிமை, பொதுவுடமை, அறம் என மேடையிலும், எழுத்திலும் வாதிடுபவர்கள் கூட  வாய்ப்புக் கிடைத்தால் ஆர்கே நகர் பெருவாரியான மக்கள்தான். நம்முடைய அசல் முகம் வேறு, முகநூல் முகம் வேறு.

மீண்டும் இன்குலாப் குடும்பத்திற்கு நன்றி. இன்குலாப் பெயருக்குள்ள சுயமரியாதையைக் காப்பாற்றி உள்ளீர்கள்.  ‘பழியெனின்  உலகுடன் பெறினும் கொள்ளலர்’ என்ற வரிக்குப் பெருமைச் சேர்த்து, ஆர்கே நகர் பாவத்திற்க்குப் புண்ணியம் சேர்த்துள்ளீர்கள்.

இந்த ஒரு சதவீதம் குறைந்தப்பட்சம் 51 சதவீதமாக மாறினால் தமிழர்க்கு விடிவு உண்டு.

 

ஆ.  குவிகம் இணைய இதழ்

இன்றைக்கு மின்ஞ்சலில் முதன் முறையாக  குவிகம் இணைய இதழ் பற்றிய தகவலை அறிந்தேன்.சில மரணச் செய்திகள் உண்மையில் அதிர்ச்சிக்குரிய  ஒன்று. பாக்கியம் ராமசாமி என்கிற ஜாரா. சுந்தரேசன் டிசம்பர் 7 அன்று இறந்த செய்தி. நான் எழுபதுகளில் விரும்பிப் படித்த தொடர்கள்  அப்புசாமியும் சீதாபாட்டியும்.

நகைச்சுவையுடன்  எழுதத் தனித் திறமைவேண்டும், அதிலும் ஆபாசமின்றி எதார்த்தமென்று குப்பையைக் கிளறாமல் எழுதம் ஆற்றல் இன்று அறவே இல்லை. ஜாரா சுந்தரேசன் பெயரில் எழுதியவையும் அன்று பெருவாரியான வாசகர்களை மிழ்வித்தவைகளே. எழுத்தில் எள்ளலை, நகைச்சுவையை வலியச் சேர்க்காமல் இயல்பாகக் கொண்டுவரத் தனித்திறமை வேண்டும். சுரா, கிரா, கடுகு, கல்கி அகஸ்தியன், தேவன் சாவி என்ற பட்டியல் இன்று சுத்தமாகத் துடைக்கபட்டுவிட்டது.

குவிகம் இதழில் வைத்தீஸ்வரன் எழுதியுள்ள ‘இப்படி ஒரு தகவல்’ என்ற சிறுகதை அவசியம் வாசிக்க வேண்டிய சிறுகதை. எழுதியவர் கவிஞர் வைத்தீஸ்வரனா அல்லது வேறு யாரேனுமா என்று தெரியவில்லை.  இருந்தாலும் சென்னை வாசி ஒருவரின் அன்றாடப் பிரச்சினைகளிலொன்றை மிக அழகாக, வார்த்தைகளைச் சிதற அடிக்காமல் கி மாப்பசான் மொழியில்  நச்சென்று சொல்லியிருக்கிறார்.

வாசிக்க :  (https://kuvikam.com/)

 

 

மொழிவது சுகம் டிசம்பர் 16 2017

. டாக்டர்  ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை

 

நீதிமன்றத்தில் காவல் துறையினர் முன் நிறுத்தமுயன்ற தஷ்வந்த் என்ற இளைஞன் மீது மாதர் சங்கம் நடத்தியதாகச் செய்தி. தாக்குதல் நடத்திய  மனிதர்களின் கோபத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதுபோன்ற தாக்குதல்கள் நியாயமா என்ற கேள்வியும் எழுகிறது.

தஷ்வந்த் பிரச்சினைக்கு வருவோம். ஆறுவயது  சிறுமியைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்றதற்குத் தண்டிக்கபட வேண்டியவன் என்ற அடிப்படையில் குண்டர் சட்டத்தில்  கைது செய்யப்படுகிறான். அவன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தின்  பிரயோகம் தவறானது எனக்கருதி குற்றவாளியை நீதிமன்றம் விடுவிக்கிறது.  விடுவிக்கபட்டக் குறுகிய காலத்தில் தாயைக் கொலை செய்கிறான்.

ஆறுவயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துகிறான் எனில் அவன் நிச்சயம் மனநிலைப் பாதிக்கப்பட்டவன். கைது செய்தபின்னரோ அல்லது அவனை விடுவிக்கிறபோதோ, மனநோய் மருத்துவர்களின் ஆளோசனையைக் கேட்டுப்பெற்றிருக்க வேண்டும்.  சாதாரணக் குற்றவாளிபோலக் கருதி அவனை ஜாமீனில் விடுவித்தது அடுத்து நேர்ந்த விபரீதத்திற்குக் காரணமாகிறது. பல கொலைகள் செய்தவர்கள், காவல் துறையினரிடம் குற்றத்தை நிரூபிக்க உரிய ஆதாரங்கள் இருப்பினும்  ஜாமீனில் வெளிவருவதும், செய்த கொலைக்குப் பழிவாங்கலாக நீதிமன்ற வாசலில் அவர்களே கொலையுறுவதும்  நாம் அடிக்கடி வாசிக்கும் செய்தி. இது நீதித்துறைகளில் உள்ள ஓட்டை.

Laëtitiaஅண்மையில் இவான் ழபோன்கா (Ivan Jablonka)  என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதி வெளிவந்துள்ள  நாவல் ‘லெத்திசீயா அல்லது மனிதர்கள் முடிவு’ (Laettitia ou la fin des hommes) . உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் புலன் விசாரணைச் செய்து எழுதபட்ட இந்நாவலில் இளம்பெண் லெத்திசீயா பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொலைசெய்யப்படுகிறாள்.  ட்ரூமன் கப்போட் என்ற அமெரிக்க  எழுத்தாளர் In Cold Blood  என்ற பெயரில் எழுதிய  நாவலின் பாதையைப் பின்பற்றிய எழுத்து. (திண்ணை இணைய இதழில் பல வருடங்களுக்கு முன்பு  எழுதியக் கட்டுரையை வாசிக்க: http://old.thinnai.com/?p=60812041)

லெத்திசீயா அவளுடைய சகோதரி ஜெசிக்கா இருவரும் இளம்வயதில் குடிகாரத் தந்தை, மன நிலைப் பாதிக்கப்பட்ட தாய் என்ற நெருக்கடியான சூழலில்  வளர்கிறார்கள். பின்னர் பிரச்சினை பிரெஞ்சு அரசின் சமூக நலத்துறை கவனத்திற்கு வருகிறது. பெற்றோர் சரியில்லை என்று கருதி இரு சிறுமிகளையும் வளர்க்கும் பொறுப்பு வேறொரு குடும்பத்திடம் ஒப்படைக்கப் படுகிறது. பிரான்சு அரசாங்கத்தின் ஆதரவற்ற பிள்ளைகளுக்கான உதவித் தொகை மற்றும் வளர்ப்புக் கட்டணம் ஆகியவற்றால் இது சாத்தியம். பத்ரோன் என்ற குடும்பத்தில் பெண்கள் இருவரும்(இரட்டையர்கள்) வளர்கிறார்கள்.  இப்படிப் பல குழந்தைகளைப் பருவ வயதுவரை வளர்த்து பின்னர் அரசாங்கத்தின் சம்மதத்துடன் அவர்களுடைய  வாழ்க்கையைத் தொடர அனுமதிக்கும் குடும்பம். இச் சூழலில்தான் லெத்தீசியா நிரந்தரப் பாலியல் குற்றவாளி ஒருவனால்  கொலைசெய்யப்படுகிறாள்.  பிரச்சினை அரசியல் ஆகிறது. அப்போதைய பிரான்சு அதிபர் நிக்கோலா சர்க்கோசி,  லெத்திசீயாவை கொலைசெய்தவன் நிரந்தர குற்றவாளி என்கிறபோது, எப்படி நீதிபதி அவனை வெளியில் அனுமதித்தார் என்ற கேள்வியை வைக்கிறார்.  இனி இதுபோன்ற குற்றவாளிகள் எளிதில் வெளியில் நடமாடாதவாறு  சட்டத்தில்  மாற்றம் கொண்டுவரப்போவதாக  வாக்குறுதி தருகிறார். தாமதமாகத் தெரியவரும் செய்தி லெத்திசீயா அவள் சகோதரி ஜெசிக்கா  ஆகியோரின் வளர்ப்புத்தந்தையும் பல பெண்களைப் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினார் என்று குற்றச்சாட்டு.  குற்றம் சாட்டியவர்களில் கொலையுண்ட லெத்தீசியா சகோதரி ஜெசிகாவும் ஒருத்தி, விளைவாக அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

நாவல் ஆசிரியர் கொலையுண்ட லெத்தீசியா அவளுடைய பெற்றோர்கள், வளர்ப்புத் தந்தை தாய், கொலையாளியின் பூர்வீகம்,  கொலையாளியாக ஏன் மாறினான் ஆகியப் புலன் விசாரணைத் தகவல்கள்,  ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள், குற்றம் நிரூபணம் ஆவதற்கு முன்பே ஊடகங்கள் சம்பந்தப்பட்டவனைக் குற்றவாளியாகச் சித்தரித்து வழங்குகின்ற நீதி என்று சமூக உளவியல் பிரச்சினைகளைத் தொட்டிருக்கிறார். இந்நாவலை பற்றி எழுகிறபோது இன்று பிரான்சு நீதிமன்றத்தில் வேறொரு வழக்கு வெகு சனத்தின் கவனத்தை பெற்றுள்ளதையும் சொல்லவேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் ஒரு நகரத்தின் மேயரும்,  அதே நகரசபையில் கலைப் பண்பாட்டுதுறை பொறுப்பைக் கவனித்த பெண்மணியும். வைக்கப்படும் குற்றச்சாட்டு, இவர்கள் கீழ் பணிபுரிந்த பெண்களைப் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தினார்கள் என்பதாகும். சில  நாட்களுக்கு முன்பு இவ்வழக்கினை விசாரிக்கும் நீதிபதி, ஒரு பெண் நீதிபதியாக அமர்ந்து விசாரிக்க வேண்டிய வழக்கு என சமூக ஊடகத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். அவ்வாறே சில ஊடகங்கள் இவ்வழக்கு பற்றிய புலன் விசாரனையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சிலத் தகவல்களை வைத்திருந்தன. இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் வழக்கு நடு நிலையுடன் இருக்குமா என்ற கேள்வியை எழுப்பினார்.  குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்றைய தேதியில் குற்றவாளிகள் இல்லை. இரு தரப்பு வாதங்கள், சாட்சிகள்  அடிப்படையில்தான் குற்றவாளியா இல்லையா எனத் தீர்மானிக்க முடியும். ஆனால் இன்று பல நேரங்களில் பல ஊடகங்கள் மக்களின் உணர்ச்சிக்குத் தீனிபோட எதையாவது வெளியிட்டு பரபரப்பூட்டவேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதும். நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன்பாகவே ஊடகங்கள் தீர்ப்பளிப்பதும் கண்கூடு.

330px-Robert_Louis_Stevenson_Knox_Seriesஇந்த நேரத்தில் ஆர் எல் ஸ்டீவன்சனின் டாக்டர் ஜேகில் மற்றும் திருவாளர் ஹைட்  ஆகியோருக்குள்ள வினோதப் பிரச்சினை (Strange case of Dr. Jekyll and Mr Hyde)  என்ற நாவலைக்குறித்து சொல்லாமல் இருக்க முடியாது. ஸ்டீவன்சனின் முக்கியமான  நாவல்களில் இதுவுமொன்று. ஒவ்வொரு மனிதரிட மும் உள்ள இருவகை எதிரிப் பண்புகளைப் பற்றியது. மனிதரிடமுள்ள தீயகுணத்தை வேரறுக்க ஆசைப்படும் டாக்டர் ஜேகில்  மருந்தொன்றைக் கண்டுபிடிக்கிறார். அந்த மருந்தை தம்மிடத்திலேயே  சோதனை செய்து, இறுதியில் தம்மில் உள்ள தீயமிருகமான  ஹைடுவிடம் தோற்றுப் பலியாகும் கதை.

லெத்திசீயாவைப் பாலியல்வன்முறைக்கு உட்படுத்தி கொலைசெய்த டோனி மெய்யோன் ; லெத்தீசியா சிறுமியாக இருந்தபோது பாலியல் தொல்லைகள் கொடுத்த வளர்ப்புத் தந்தை பத்ரோன், ஹசினியைக் கொலைசெய்த தஷ்வந்த், இன்னும் நீங்கள் அறிந்த பிறர் ஒருவகையில் டாக்டர் ஜேகிலைத் தோற்கடித்த ஹைட்  வகை மிருகங்களாக இருக்கலாம். ஆனால் பல ஹைடுகள் வெளியே டாக்டர் ஜேகில் போல கௌவுரமனிதர்களாக (பிடிபடாதவரை)  நடமாடிக்கொண்டிருப்பதும் உண்மை. அவர்கள் நீதிபதிகளாக அமர்ந்து ஹைடுகளைத் தண்டிக்கலாம், உயர் போலீஸ் அதிகாரியாக இருந்து குற்றவாளியை கைது செய்யலாம். உளவியல் மருத்துவராக தஷ்வந்த்தைக் குணப்படுத்த முன்வரலாம். இதுதான் நமது சமூகம்.

———————————————————

இரணகளம் நாவலிலிருந்து….

 

(விரைவில் சந்தியா பதிப்பகம் வெளியிடவுள்ள எனது நாவலிலிருந்து…)

மறுநாள் காலை, அறைக்கதவு இடிப்பதுபோல தட்டப்பட,  விழித்துக்கொண்டேன். விடுதிப் பையனாக இருக்குமோ ? காலையில் என்ன செய்தியோட  வந்திருக்கிறான் !  என்று அச்சத்துடன் எழுந்தேன். அறைக்கு வெளியே குழல்விளக்கின் வெளிச்சம், இருந்தும்,  நன்றாக விடிந்திருப்பதின் அடையாளமாக மூடியிருந்தச் சன்னற்கதவுகளின்  தப்பிய பகலொளி, அறைக்குள் குருத்தோலைபோல கட்டிலுக்கு இணையாகச் சரிந்து தரையைத் தொட்டிருந்தது. ஒளிக்குருத்திற்குள் உயிர்ப்புள்ள நுண்ணுயிர்களாக தூசுகள் பறந்தன. மீண்டும் கதவுத் தட்டப்பட்டது.   « எழுந்திருடா, இன்னுமா தூங்கற ! » -கணேசன். காலையில் எழுந்து,  புதுச்சேரிக்கு சீக்கிரம் திரும்பவேண்டும் என்று அவனிடம்  உத்தரவிட்ட நானே பொறுப்பின்றி வெகுநேரம் உறங்கியதை நினைத்து  வெட்கப்பட்டேன். வேகமாகச் சென்று தாழ்ப்பாளையும் பின்னர் கதவையும் திறக்க கணேசன் நுழைந்த வேகத்தில் கையிலிருந்த இரண்டு நாளிதழ்களையும் அலங்கோலமாகக் கிடந்த  கட்டிலின் மீது எறிந்தான்.  நாற்காலில் அமர்ந்தவன் பார்வை நான் பார்க்கவேண்டும்  என்பதற்காகவே தலைப்புச் செய்தியில் ஊன்றியிருந்தது. ராஜிவ் காந்தியின் மார்பளவு  படத்தைப் போட்டிருந்தார்கள். உதடுகளைப் பிரிக்காமல் மகிழ்ச்சியைக் கசியவிடும் சிரிப்பு. வலதுப்பக்கம் தலைக்குமேலே அப்படத்துடன் பொருந்தாமற் ஒரு செய்தி.

« ராஜிவ் காந்தி படுகொலை ».

பதற்றத்துடன் எழுந்து « எங்கே, எப்போ »  எனக்கேட்கிறேன்.

« இரவு பதினோருமணிக்கு ஸ்ரீபெரும்பூதூரில் நடந்திருக்கிறது,  குண்டுவெடிப்பில் இறந்துட்டதாகவும், விடுதலைப்புலிகள்தான் கொண்ணுட்டாங்கன்னும் சொல்றாங்க »

– எப்படி ?

– உண்மை என்னன்னு யாருக்குத் தெரியும் மாலைச் செய்தித் தாளில் கூடுதலாகத் தகவல் இருக்கலாம். இல்லை ரேடியொவில என்ன சொல்றாங்கன்னு ஃபாலோ பண்ணனும். அண்ணன்களுக்குத் தெரிஞ்ச பத்திரிகையாளர்களை விசாரித்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம். ஆனா அவங்கள இந்த நேரத்திலே பிடிக்கவும் முடியாது, பெருசா எந்தத் தகவலையும் உடனடியா அவங்களால சொல்லவும் முடியாது. கொலைசெய்யப்பட்டது உண்மை. விடுதலைப் புலிகள் பின்புலத்தில இருக்கலாங்கிற தகவலை லாட்ஜ் ரிசப்ஷன்ல இருக்கிற ரேடியோ செய்தியும் சொல்லுது. இப்ப நமக்குள்ள பிரச்சினை, புதுச்சேரிக்குத் திரும்பனும், எப்படி எப்போதுங்கிறதுதான்.

– ஏன் ?

– சன்னற் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பாரு !

எழுத்து சென்று சன்னற்கதவுகளை விரியத் திறந்து கம்பிகளில் முகத்தை அழுத்தி வெளியிற் பார்த்தேன். கடைகளின் கதவுகள்  இறக்கப்பட்டிருக்கின்றன. சைக்கிள் விற்பனை செய்யும் நிறுவனம்போலிருந்த ஒன்றில், இறக்கி நவ்-தால் பூட்டு போட்டிருந்த பெரிய சுருள்கதவை யொட்டி, நடுத்தரவயதைக்கடந்த பெண்மணியொருத்தி படுத்திருந்தார்.  வறுமை அவர் வயதை அதிகரித்திருப்பதுபோல பட்டது. இடக்கையைத் தலைக்குக் கொடுத்து, முட்டுக்கொடுக்காவிட்டால், மார்புகளிரண்டும் பாரம் தாங்காமல்  கீழே விழுந்துவிடுமோ என்றஞ்சியவைபோல  முழங்கால் மூட்டுகள்  வயிற்று மடிப்பில் புதைந்திருக்கின்றன.  அவர் உதட்டில் அமர்ந்திருந்த ஈக்களை, விரட்ட தெரு நாய் ஒன்று நெருங்கி, பின்னர்  விலகிச் செல்கிறது, கடையையொட்டி  மாநில கட்சியொன்றின் வெட்டிச் சாய்க்கப்பட்டக் கொடிக்கம்பம்.  மனிதர்கள், வாகனங்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்த சாலையின் நடுவில் அசைபோட்டபடி படுத்திருக்கும் ஒரு பசுமாடு. காங்கிரஸ் கொடியுடன் கும்பலொன்று ஒவ்வொரு கடையாய் நோட்டம் விட்டபடி செல்கிறது. ராஜிவ் காந்திக்கு மாலைபோட்டு நாற்காலியில் உட்காரவைத்து, வாழைப்பழத்தில் ஊதுபத்திக் கொளுத்தியிருந்த கடையில், ரேடியோவைச் சத்தமாக வைத்திருந்தார்கள். காப்பியும் டீயும் மும்முரமாக வியாபாரமாகிக் கொண்டிருந்தன. தன்னிச்சையாக எனது கண்கள் எங்கள் காரைத் தேடின. விடுதியின் நுழைவாயிலையொட்டி, நாங்கள் இறங்கினால் கண்ணிற் படுமாறு  எங்கள் சாரதி, வாகனத்தை  நிறுத்தியிருந்தார். ஆனால் தற்போது அவருமில்லை வாகனமுமில்லை.

– நம்ம காரையும் காணோம், டிரைவரையும் காணோம், என்றேன்.

– காலையில் கடைகளை மூடச்சொல்லி ஒரே கலாட்டா. நம்ம அம்பாஸடர் மட்டுமல்ல அங்கே நிறுத்தியிருந்த டாக்ஸிகள், ஆட்டோக்களையெல்லாங்கூட காணலை.மெயின் ரோட்டிலிருந்தா வாகனங்களுக்கு ஆபத்தென்று,மறைவா எங்கனாச்சும் கொண்டுபோயிருப்பாங்க. நம்ம டிரைவரும்  அப்படி போனவனாதான் இருக்கனும், வந்திடுவான். பயப்படவேண்டியதில்லை.

– அப்ப நம்ம புதுச்சேரி பயணம் ?

–  இப்பத்திய நிலமையிலே புறப்படறது நல்லதில்லைன்னு தோணுது.  வழியெல்லாம் நிலமை இப்படித்தான் இருக்கும். நாம இரண்டுபேர் மட்டுமில்லை. அம்மா வேற இருக்காங்க. அவங்களையும் பார்க்கணும்.  பதட்டம் கொஞ்சம் தணிஞ்சதும் கிளம்பிடுவோம்.  என்ன சொல்ற.

–  நான் என்ன சொல்லப் போறன். அப்படித்தான் செய்யனும். அம்மாவுக்கு சாப்பிட ஏதாவது ஏற்பாடு பண்ணியா.

– அவங்க மட்டுமில்லை நாம்பளும்தான் சாப்பிடனும். லாட்ஜ் பையனை அனுப்பி ஏதாவது கிடைக்குதான்னு பாக்கச்சொல்றன். இல்லைன்னா பிஸ்கட் கிடைச்சாக்கூட போதும்.  டிரைவரையும் கண்டுபிடிக்கனும்.

– நான் பேப்பர் படிக்கிறேன். நீ போய் முதலில் அம்மாவைக் கவனி. வேண்டுமானால் பதினோருமணிக்கு அறையைப் பூட்டிக்கொண்டுவறேன்.  தயாரா இரு, இரண்டுபேருமா கீழே இறங்கி போய் பார்த்துட்டு, அப்படியே ஏதாவது சாப்பிடக் கிடைச்சால் வாங்கிட்டு  வரலாம். தவிர என் வொய்ஃபுக்கும் நிலமையை விளக்கி, சாயந்திரம் புறப்பட்டுவருவதாகச் சொல்லனும்.

கணேசன் தலையாட்டிவிட்டு  வெளியேறியதும், கதவைச் சாத்திவிட்டு, கட்டிலில் உட்கார்ந்து முதல் பக்கத்தைப் பிரித்து வாசிக்க முயன்றேன். ராஜிவ் காந்தி படுகொலை என்ற தலைப்புச் செய்தியைக் கண்கள் வாசித்த மறுகணம் ‘அக்காள்’ என்று உதடுகள் முனுமுனுத்தன.  ‘தற்கொலையைத் தவிர எல்லா மரணங்களுமே ஒருவகையில் கொலைதான்’ என்று அக்காள் வாதிட்டது நினைவுக்கு வந்தது.  « மனிதர்கள் பிரம்மாக்கள் மட்டுமில்லை எமன்களும்தான் » என்பாள் அவள். « இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் யுத்தங்களும், உயிர்ப்பலிகளும் இல்லையென்றால் கொண்டாடுவோமா ? », எனக் கேட்டிருக்கிறாள்.  அகால மரணங்களில் நமக்குள்ள ஆர்வமே சிலப்பதிகாரம். அதன் படைப்பாளிக்குக் கோவலன் கொலைக்கும்,  மதுரை எரிப்பிற்கும் வேறு காரணங்கள் இருந்திருக்காதென்பது அவள் வாதம்.  தலைவர்கள் கொலைகளைப் பற்றிய அவள் கருத்தும் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல. 1989ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆறாந்தேதியோ அல்லது எழாம் தேதியோ  என்று நினைக்கிறேன். இந்திராகாந்தியின் கொலையாளிகளில் எஞ்சியிருந்த ஒருவரையும், கொலைக்கு உடைந்தையாக இருந்த மற்றொருவரையும்  தூக்கிலிடப்பட்ட செய்தி, நாளேட்டில் வந்திருந்தது.  அதுபற்றிய பேச்சில் : « ஆட்சியாளர்கள் வரலாற்றில் திடீரென்று இடம் பிடிப்பதில்லை, குறுக்கு வழியோ நேரான வழியோ எதுவென்றாலும் இடையில் பலகாலம் காத்திருக்கிறார்கள். பதிலாக  அவர்களின் கொலையாளிகள் ஒரு நாளில்  ஓர் இரவில், சட்டென்று அந்த இடத்திற்குத் தாவி விடுகிறார்கள்.  இந்திராகாந்தியின் வரலாற்றுடன் அவரைக் கொலைசெய்தவரும் சாகாவரம்பெற்றுவிடுவார். இதற்காகவே செய்யாத கொலையை தாம் செய்ததாகப் பொறுப்பேற்கும், மனிதர்களும் இருக்கக்கூடும். » என்ற அவள் கருத்தும் சரியானதுதான். அவள் படித்தது எட்டாம்  வகுப்புக்குவரைதான். அந் நாட்களில் எங்கள் ஊர் பெண்களுக்கு அதுவே அதிகம் என்ற நிலமை. ஆனால் எதைப்பற்றியும் தனக்கென்று ஓரு கருத்தை உருவாக்கிக்கொள்ள அவளால் முடிந்தது.  இருத்தல், இன்மை போன்ற  மேற்கத்திய நுட்பமானத் தத்துவச் சொற்களையோ ; பிறப்பு இறப்பு,ஊழ்வினை, கர்மம்போன்ற கீழைத்தேய  சொல்லாடல்களையோ கையாளாமலேயே, தம்மைச் சுற்றியுள்ள சமூகதத்தின் செயல்பாடுகளிலிருந்து கற்றவைகளை அவளால் சமையலுக்குக் காய்கறிகளை நறுக்கிக் கொண்டோ, அரிசி களைந்துகொண்டோ , வாணலியில் முறுக்கைப் பிழிந்துகொண்டோ, நெற்றியில் விழும் முன் கேசத்தை முழங்கையால் ஒதுக்கியபடி பகிர்ந்துகொள்ள இயலும்.

அகால மரணங்கள் எதுவென்றாலும் ஒருவகையில் கொலைதான்.  குதிரை தள்ளிவிட்ட து, இறந்தான். பேருந்து பள்ளத்தில் உருண்டது பயணிகளிகளில்  ஐந்துபேர் செத்தார்கள், அறுவை சிகிச்சைப் பலனளிக்கவில்லை நோயாளி இறந்தார் என்றாலுங்கூட குதிரை, பேருந்து, சாரதி, மருத்துவர் ஆகியோருக்கு நடந்த  உயிர்ப்பலிகளில் பங்கிருக்கிறது. திட்டமிட்டு ஏற்படுத்திய மரணம், திட்டமிடாது ஏற்படுத்திய மரணமென்று வேண்டுமானால் வகைப்படுத்தி,நீதிக்கு உதவலாம். கொலயுண்ட தலைவர் ஒரு நாட்டின் பிரதமர். அந்த நாடு உலகமெங்கும் வெவ்வேறு காரணங்களால் அறியப்பட்ட நாடு. அம்மரணத்தை முன்னிட்டு ஊடகங்கள் கட்டமைக்கும் மாயைகள், நிச்சயமற்ற அரசியல் சூழல், தலைவனின் இறப்பைக் கலவரமாக அடையாளப்படுத்த முனையும் தொண்டர்கள், முன்னெச்சரிக்கை என்றபேரில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள், ஆயிரக்கணக்கில் குவிக்கப்படும் போலீஸ்காரரர்கள்  எல்லாம் சேர்ந்து இவர்களின் மரணத்திற்கு ஹீரோ தகுதியைக் கொடுத்துவிடுகிறது. இத்தகைய தலைவர்களின் அகால மரணத்தினால் சராசரி குடிமகனின் ஒருவேளைச் சாப்பாடு, மறுநாள் இல்லை என்று  ஆகிவிடுமா ? என்னிடத்தில் இக்கேள்விக்குத் தெளிவான பதிலில்லை.  ஆனால் நாட்டின் வேறொரு வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கு சில கோடிகள் கூடுதலாக கிடைக்கும் அல்லது கிடைக்காமற்போகலாம், என்பது மட்டும் நிச்சயம். அந்த ஒரு சிலருக்குத் தலைவர்களின் மரணங்கள்  ஏற்படுத்தும் தாக்கம் அரசியல்  பொருளாதார வல்லுனர்களின் விவாதத்திற்குரியது. செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும்  இறந்த தலைவர்கள் மட்டுமல்ல அவர்கள் இறப்புக்குக் காரணமானவர்களும் முக்கியத்துவம் பெற்று விடுவார்கள். ஒரு தலைவர் அகாலமரணமடையும் தினத்தில் எத்தனை எத்தனை மரணங்கள் : சாலை விபத்தென்ற பேரில் கொலையுறுபவர்கள். மருத்துவமனைகளிலும், காவல்துறையிலும் கொடுக்கப்படும் பலிகள், யுத்தங்களில் கொல்லப்படும் உயிர்கள் ; அரசியல் காழ்ப்புகள், தொழிற்போட்டிகள், குடும்பப்பிரச்சினைகள் என்று நிகழும் அகால மரணங்களுக்குத்தான் எத்தனையெத்தனை காரணங்கள்.  இதுபோன்ற மரணங்களில் இறப்பவர், அந்த இறப்புக்குக் காரணமானவர்கள் என  நம்பப் படுவர்கள் அனைவரும் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றின் கருணையால், பொதுவெளியில் திடீரென பிறப்பெடுத்து, பிறப்பெடுத்த வேகத்திலேயே மறைந்தும்போகிறார்கள். அக்காளுக்கு அந்த அதிஷ்டம்கூட இல்லை, எனவேதான் கணேசன் உதவியோடு இதை எழுத உட்கார்ந்தேன்.

அக்காள் மரணம் கீட்ஸ் கொண்டாடும் மரண வகைஅல்ல, சிறுகச் சிறுக அரங்கேற்றப்பட்ட மரணம்.  அவள் இந்திரா காந்தியைப் போலவோ, கென்னடியைப் போலவோ வெள்ளிக்கரண்டியுடன் பிறந்தவள் கிடையாது.  காந்தியைப்போல  இலண்டனில் பாரீஸ்டர் பட்டம் பெற்று இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்தவளுமில்லை. ஊர்பேர் தெரியாத கிராமத்தில் காலையில் சாணம் தெளித்துக் கோலம்போடப் பிறந்தவள். பதினெட்டு வயதில் திருமணம், முப்பது வயதில் நான்கு பிள்ளைகள்.  நாற்பது வயதில் பாட்டி,  அறுபது வயதில் காசநோயில் செத்தாள் என்று வாழ்க்கையை  முடித்திருந்தால் அவளைப்பற்றி எழுத ஒன்றுமில்லை. வாகனத்தில் அடிபட்டு சாலையில்   இரத்தமும் சதையுமாகக் காய்ந்துகிடக்கும் நாயைப்பற்றியோ, பூனையைப்பற்றியோ என்ன அபிப்ராயம் உங்களுக்கு வந்திருக்கும், எத்தனை நொடிகள் அந்த அனுபவம் உங்களோடு வாழ்ந்திருக்கும் அதுபோலத்தான் அக்காளின் மரணமும் முடிந்திருக்க வேண்டியது. அவள் இந்தியாவின் பிரதமர், இஸ்ரேலின் கோல்டாமேயர், பாகிஸ்தானின் பெனாஸிர் பூட்டோ என்றெல்லாம் நாட்டை ஆண்டவள் இல்லை. தமிழ்  நாட்டில் ஒரு கிராமத்தில் பிறந்து, பெரிய பட்டங்கள் ஏதுமின்றி, கணவர் விட்டுச் சென்ற வியாபார நிறுவனங்களைத் துணிச்சலாகக் கையிலெடுத்தவள், சரித்திர புருஷி கிடையாதென்றாலும் இச்சமூகத்தின் மனுஷி. அவளுடைய பிறப்பைக்குறித்து பேச எதுவுமில்லை, ஆனால் அவளுடைய மரணம் குறித்து பேச இருக்கிறது.

—————————————–

 

எம். எஸ் மறைவு

சற்று முன்புதான் இறந்த தகவலை அறிந்தேன். அவரை அறிந்த பலருக்கும்  பெரும் இழப்பு.  ‘வணக்கம் துயரமே’ என்ற என்னுடைய மொழிபெயர்ப்பு நூலுடன்  அவருட னான அறிமுகம் தொடங்கியது. நல்ல படைப்பிலக்கிய ரசனையுள்ள மனிதர்களில் எம்.ஏஸ் ஒருவர். கி.அ. சச்சிதானந்தத்தைப் போலவே ஆங்கிலம் தமிழ் இரண்டிலும், பரந்த ஆழமான வாசிப்பு, ரசனை அவரிடமுண்டு. சுரா வை எனக்கு நேரிடையாகப் பரிச்சயமில்லை. அக்குறையைப் போக்கியவர் எம். எஸ். இரண்டொரு முறை அவரிடம்  நாகர்கோவில் சென்ற போது உரையாடி இருக்கிறேன்.  நாம் சொல்வதெல்லாம இதுவரை தாம் அறிந்த தல்ல கேட்டதல்ல என்பதுபோல குறுக்கீடின்றி அனைத்தையும் பொறுமையாக செவிமடுப்பார். ஆனால் « என்முன்னால் அமர்ந்திருப்பது இமயம்,  நான் வெறும் கூழாங்கல் » என்ற எண்ணம் எனக்கு அடிக்கடித் தோன்றும்.  தமது அபிப்ராயங்களைக் கருத்துக்களை மிகவும் தயக்கத்துடனேயே தெரிவிப்பார்.  அவர் தெரிவிக்கிற யோசனைகளை மறுப்பதற்கு எனக்குத் தைரியம் காணாது, காரணம் காலச்சுவடுப் பதிப்பகம் வெளியிட்ட எனது முதல்  நூலிலேயே அவரது அருமை எனக்குப் புரிந்திருந்து. ‘காஃப்காவின் நாய்க்குட்டி’    நாவலுக்கு முதல் பாராட்டு அவரிடமிருந்து தான் கிடைத்தது.  போனவருடம் அவரைச் சென்று சந்தி த்திருக்கவேண்டும். ஒவ்வொருமுறையும்   நண்பர் கண்ணனிடம் பேசும்போதெல்லாம் எம். எஸ்ஸை சந்திப்பதற்கேனும் நாகர்கோவில் வரவேண்டுமென சொல்வேன். எனக்கு அப்படியொரு கொடுப்பினையில்லை என்று இப்போது நினைக்கிறேன்.

ஒரு மரணத்தை மையமாகக் கொண்டு  அண்மையில் சிறியதொரு நாவலை எழுதியிருக்கிறேன். விரைவில் அது நூலாக வெளிவரவுள்ளது. அந்த  நூலை சுராவிற்கும் எம். எஸ்சிற்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். அதை எம்.எஸ்  படிக்கவேண்டுமென்று ஆசைபட்டேன்.  சந்தியா பதிப்பகத்தில் கொடுத்திருப்பதால், நூல் வெளிவந்ததும் ஜனவரியில் ஒரு பிரதியை  நாகர்கோவிலுக்குச் சென்று அவர் கைகளில் கொடுக்க ஆசைப்பட்டேன். அது நிறைவேறவில்லை.

அன்னாரின் மறைவு காலச்சுவடுக்கு மட்டுமல்ல, தமிழ் படைப்பிலக்கியத் துறைக்கும் மிகப்பெரிய இழப்பு.