அவள்
நாகரத்தினம் கிருஷ்ணா
பாலைநிலம், கடந்த பல மணிநேரமாக இருவருமாக நடக்கிறார்கள் தலைக்குமேல் சூரியன் இருக்கவேண்டும் என்பது ஓர் யூகமதான், உறுதியாக சொல்வதற்கில்லை. வெளிறிய வானமே ஒரு பிரம்மாண்டமான சூரியனைபோல இருக்கிறபோது, சூரியனை எங்கிருந்து தேடுவது ! மனிதர் நடமாட்டமற்ற பெருவெளி. ஓரிடத்தில் மட்டும் சில கழுகுகள் இறந்த ஒட்டகமொன்றை குத்திக்கிளறி ருசிபார்த்துக் கொண்டிருந்தன. ஒன்றிரண்டு கற்றாழைகளும், சப்பாத்திக்கள்ளிகளும் எதிர்பட்டனவேயன்றி, சற்றுகுந்தி இளைப்பாற பசுஞ்சோலையென ஒன்றோ, பேரீச்சைமரங்களோ கண்ணிற்படவில்லை.. பின்புறம் திரும்பிப் பார்க்க. புறப்பட்ட ஊர், நிலத்தையும் வான்வெளியையும் பிரிக்கின்ற கோடாய் நீண்டுக் கிடக்கிறது. « எனக்கு முடியலை சிறிது நிதானமாக நட » என்று கெஞ்சினார். அவளைப்போல் உருக்கொண்ட அருவம் நின்றது. தலையைத் திருப்ப, அதன் பார்வையில், இவருக்கும் அவளுக்குமான தாம்பத்திய வாழ்க்கையில் கிடைத்த அன்போ, ஈரமோ இல்லை, மாறாக இரையைக் கவ்வும் நேரத்தில் இடையூறை எதிர்கொண்ட சிறுத்தைபோல விழிகள். அப்பார்வைக்குப் பொருள்சொல்வதுபோல, தொடர்ந்து « இல்லை இதுநாள்வரை நீங்கள் முன்னே செல்ல வளர்ப்புநாய் போல சோர்வின்றி, முணுமுணுப்பின்றி உங்களைத் தொடர்ந்து ஒரன்றிரண்டு வருடமல்ல தாலியைச் சுமக்க ஆரம்பித்த தினத்திலிருந்து நான் நடந்து வந்திருக்கிறேன். இப்போது உங்கள்முறை. இனி ஆயுள் பரியந்தம் நீங்கள் என்பின்னால நடக்கவேண்டும் »… என்கிறது
« சார் சார் ! பால் பாக்கெட் கொண்டுவந்திருக்கன். »
சுயநினைவுபெற்றவர்போல, சாய்வு நாற்காலியில் முதுகை நிமிர்த்தி உட்கார, எதிரே பக்கத்துவீட்டுப் பையன். ஆச்சரியமாக இருந்தது, அடிக்கடி அவர் கண்ணிற்படும் பையன்தான், ஆனாலும் தவறுதலாக தன் எதிரில் நிற்பதுபோல பட்டது. அவள் இருந்தால், உள்ளறையிலிருந்து தள்ளாடியப்டி வெளிப்பட்டு, « வாத் தம்பி ! » எனக் கம்மியகுரலில் விளித்து, பால் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு எள்ளுருண்டை ஒன்றை அவன் கையில் திணிப்பாள்.
« நல்லது தம்பி, வச்சிட்டுபோ ! » என்றார், பையன் இரண்டு பால் பாகெட்டுகளையும் அங்கிருந்த ஸ்டூல் மீது வைத்துவிட்டு சிறிது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றான்.
காலை நேரம். மணி தோராயமாக எட்டுக்கு மேலிருக்கலாம். மெலிந்தகைகளிரண்டும் ஒன்றிற்கொன்று அன்பைப் பரிமாறிக்கொள்ளும்வகையில் தடவிக்கொண்டன. வயிற்றிர்க்கும் முதுகிடத்தில் அப்படியொரு பற்றுதல் இருக்கவேண்டும் ஒட்டிக்கிடந்தது. இலவம் பஞ்சுபோல நரைத்த தலைமயிரும், நிறத்தில் அதற்குச் சற்றும் குறையாத மீசையும், முருங்கை மர கம்பளிப் பூச்சிபோன்ற இரு புருவங்களும் ஒழுங்கின்றி இருந்தன. அவள் இல்லையென்று ஆனபிறகு தன் உடல் சார்ந்த பராமரிப்பில் அக்கறை இல்லாமலிருந்தார். எனினும் அவள் உயிரோடிருக்கும்வரை ஊட்டி வளர்ந்த உடல் என்பதால் முதுமைக்குரியசாயலை சிறிதும் காட்டிக் கொள்ளாத தேகம், சிலகிழமைகளாக, நீரைக் காணாத செடிபோல வாடிக் கொண்டிருக்கிறது. உண்மையில் கொழுகொம்பில்லை அந்த அம்மாள் மரம், இவருடைய பிடிமானமே அவள்தான். என்ற உண்மை அவள் மறைந்த குறுகிய நாட்களிலேயே வெட்டவெளிச்சமாகிவிட்டது.
பார்வை வீதியிலும் விட்டத்திலுமாக தவணை முறையில் தடம் மாறிக் கொண்டிருக்கிறது. நடைகூடத்தில் போட்டிருந்த சாய்வு நாற்காலியில் இரு கைகைளையும் தலைக்குக் கொடுத்திருந்தார்; கால்களை மாத்திரம் அவ்வப்போது, ஒன்றின்மேல் ஒன்றாக போடுவதும், பின்னர் கீழிறக்கி வைப்பதுமாக இருக்கிறார். அருகே தமிழ் தினசரிகள் இரண்டு, ஒன்று நேற்றைய தேதியிட்டது. « உங்களைப்பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது », எனத் தெரிவித்து அவருடைய அபிமானி ஒருவர் கொடுத்துவிட்டுச் சென்றது, மற்றொன்று இன்றைய தினசரி.
சாய்வு நாற்காலியில் எத்தனை மணிக்கு வந்தமர்ந்தார், அதிகாலை விழிப்பிற்குப் பிறகென்று வைத்துக்கொள்ளலாம். அவருடைய அவள் இல்லையென்றான பிறகு நாளின் பெரும்பகுதி இப்போதெல்லாம் சாய்வு நாற்காலியில் கழிகிறது. காலைக் கடன், இயற்கை உபாதைகளிலிருந்து விடுதலைபெற, பசி எடுத்தால் உணவுண்ண, மற்றும் எழுத்து சார்ந்து இவருடைய வருகை முக்கியம் என்கிற நெருக்கடி இருப்பின் இலக்கிய விழாக்களுக்காக அவருடைய சாய்வு நாற்காலியைப் பிரிவதுண்டு. மற்றப்படி வீடு தேடிவரும் இலக்கிய அன்பர்கள், உண்மையானஅபிமானிகள், பிறகு வீதியில் போய்க் கொண்டிருக்கும்போது, வழிபிள்ளையாருக்குத் தோப்புக்கரணம்போடும் இயல்புடன் நலன் விசாரிக்கவும், படம் எடுத்துக்கொள்ளவும் கதவைத் தட்டும் திடீர் அபிமானிகள் அனைவருக்கும் அருள்பாலிக்க எழுத்தாளருக்கு உதவுவது இந்த சாய்வுநாற்காலிதான்.
வழக்கமாகவே அதிகாலையில் எழுந்திருக்கும் பேர்வழி. அவள் இறந்த நாளிலிருந்து உறக்கம் என்பது இல்லை, புரண்டு புரண்டு அவளைப்பற்றிய நினைவுகளில் மூழ்கி, அசைபோட்டது போதாதென்று, முன்கூடத்தில் போட்டிருக்கும் இந்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்துவிடுவார். அதிலமர்ந்தபடியோ, படுத்தபடியோ, நாளின்மீது சூரியன் நிகழ்த்தும் அத்தனை மந்திர ஜாலங்களிலும் – சூரியன், சூரியன் அழைத்துவரும் காலை, முற்பகல், சூரியனற்ற பிற்பகல், மெல்ல மெல்ல பகல் நீர்த்து இரவு மாயப் போர்வையாக தடித்து அனைத்தையும் மூடும் வரை – தினம் தினம் பார்க்கிற காட்சிதானே என்கிற அலுப்பின்றி அவற்றில் லயித்திருப்பார். இடைபட்ட நேரங்களில் இறந்த அவருடைய மனைவியின் ஞாபகங்களோடு சாப்பிட இலை தைப்பதுபோல அவசரகதியில் சம்பவங்களைக் கோர்ப்பார் .
மூத்த எழுத்தாளர், எழுபது வயது, சரியாகச் சொல்லவேண்டுமெனில் எழுபதுவயது நான்குமாதங்கள். போனமாதத்தில் அவருடைய பிறந்த நாள், திரைப்பட இயக்குனர் ஒருவர் தலைமையில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.விழாவின்போது எழுத்தாளர் ஒருவருக்கு விருதும் கொடுத்தார்கள். விருதின்மதிப்பு பணத்தில் இருக்கிறது என்கிற தமிழிலக்கிய அறத்தின்படி பத்து இலட்ச ரூபாயை விருதோடு சேர்த்துக்கொடுத்தார்கள். பொதுவில் இன்றைய எழுத்தாளர்கள் குறித்து பெரிய அபிப்ராயங்கள் எதுவும் அவருக்கில்லை, வாசிப்பதுமில்லை. அதுவும் தவிர தனக்காக ஒரு பெருந்தொகையை பரிசாக கொடுக்கும் அந்நபர் உண்மையில் இலக்கிய அபிமானியா அல்லது பத்து இலட்சரூபாயை பரிசாகப் பெற அந்நூலுக்குத் தகுதியுண்டா என்பதுபோன்ற தேவையற்ற ஐயங்களுக்கு இடம்கொடுப்பதுமில்லை. இவரைக்கொண்டாடும் அன்பர்களின் பங்களிப்பில் நடப்பதால் எல்லாம் சரியாகத்தான் இருக்குமென்று நம்பிக்கை. ஒருமுறை இவருடைய மகள் தன்பிள்ளையைக் கல்லூரியில் சேர்க்க பணம் தேவைப்படுக்கிறதெனக் கூறி, அத்தொகையில் பாதியையாவது நம்மிடம் அவர்கள் கொடுக்கக் கூடாதா எனக்கேட்டு உபத்திரவம் கொடுக்க, அன்பர்கள் உண்மையைப் போட்டு உடைத்தார்கள். அந்த உண்மையை மேலும் உடைத்தால் சில்லுகளாகிவிடும் என்பதால் இவரும் இவருடைய ‘அவளும்’ மகளுக்கு சமாதானம் கூறி அனுப்பி வைத்தார்கள். கட்சி அரசியல் மட்டுமல்ல இலக்கிய அரசியலும் நமக்கு வேண்டாமென்று ஒதுங்கி இருப்பவர். நம்மீது மரியாதைவைத்து ஏதோ நடக்கிறது, அதுதான முக்கியம், என்கிற திருப்தியொன்று போதும்.
புதுச்சேரிக்கே உரிய சித்திரைமாதத்து வெயில். வீதியின் மறுபக்கம் சற்று சோர்வுடன் நிற்கும் மரங்கள், தொலைதூரத்தில் சமுத்திரம்போல வெளிறிய அடிவானம், புதிரான இராட்சத விலங்குகள்போல உறக்கத்தில் மேகங்கள், மொட்டைமாடிகள், ஆகாயத்தில் சோர்வின்றி வட்டமிடும் ஒரு கழுகு என மேய்ந்த அவருடைய பார்வை வீதியில் வீட்டெதிரில் நிற்கும் வேப்ப மரத்தின் மீது பதிந்து அசையாமல் நின்றது. திடீரென்று மஸ்லின் ஆடையில் மென்காற்று, நடனக்காரிபோல சுழன்று சுழன்று அலை அலையாக அதன் கிளைகளில் இளைப்பாறுவதுபோல அமர்ந்து பின்னர் எழுந்தோடியது. வேம்பின் மெல்லிய கொம்புகள் மெய்சிலிர்த்து, நடனமாடும் காற்றுப்பெண்மீது பூ மாரிப் பொழிவதுபோல பூக்களை உதிர்க்கின்றன. அவருடைய ‘அவள்’ இருந்தால் படியிறங்கி வீதியின் மறுபக்கம் சென்று காத்திருந்து, உதிரும் பூக்களை மடியில்வாங்கி வீட்டிற்குள் நுழைந்த மறுகணம் அடுப்பில் வாணலை வைத்து உளுந்தம் பருப்பை வறுத்து, அதனுடன் தேங்காய்த் துருவலையும், வேப்பம் பூவையும் சேர்த்து, வதக்கி ஆற வைத்து. சூடு ஆறியதும் மிக்ஸியில் புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, வேப்பம் பூ துவையல் தயாரித்தாளென்றால் அன்று இவருக்கு ஒரு பிடி தயிர் சாதம் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக இறங்கும்.
அவளைப் பற்றிய பிரம்மிப்பு இன்றுநேற்றல்ல மணமுடித்திருந்த ஒரு சில நாட்களிலேயே ஆரம்பித்து, இதோ இன்று இறந்தபின்னரும் நீடிக்கிறது. சம்பிராதாயப்படி மறுவீடு விருந்துக்கென அவள் வீ.ட்டிற்குச் செல்லவேண்டியிருந்தது. புதுமணத் தம்பதிகளுக்கென்று மாடியில் ஓர் அறையை ஒதுக்கி இருந்தார்கள். சாப்பிட மட்டும் கீழே இறங்கவேண்டும். புதுமாப்பிளைக்குரிய விருந்தென்ற வகையில் தடபுடலாக படைக்கப்பட்டபோதும் இவருக்குப் பிடித்த அயிட்டங்கள் இல்லை, « புதுப் பொண்டாட்டியிடம் » விரும்பியதைச் சொல்லவும் கேட்கவும் இவருக்குத் தயக்கம், இந்த லட்சணத்தில் அப்போதெல்லாம் கொஞ்சம் கூச்சப் பேர்வழியுங்கூட. திருப்தியின்றியே கையைக் கழுவார். மூன்றாம் நாள் அந்த அதிசயம் நடந்தது. இலைபோட்டிருந்தது, வக்கம்போல இலையில் உப்பு, பருப்பு, அப்பளம், உளுந்து வடை. ஆனால், கடந்த இரண்டுநாட்களாக காணாத பருப்புப் பொடி, சேப்பங்கிழங்கு வறுவல், வாழைப்பூ கூட்டு, பிரண்டைத் துவையல், முளைக்கீரை சாம்பார், எலுமிச்சை ரசம், அவல் பாயாசமென எல்லாமே இவர் விரும்பிச் சாப்பிடக்கூடியவை. போதாதற்கு அன்று என்னவோ, இவருடைய மாமியாருக்குப் பதிலாக ‘அவள்’ பரிமாறினாள். கூடுதலாக அவள் குனிந்து பரிமாறும் போதெல்லாம் பொன் வளைகளும், கால் கொலுசும் இணைந்து எழுப்பிய ஓசைக்கு, ஒற்றைச் சடை தரையில் கால்பதித்து ஆடியது. உபசார மயக்கத்தில் கூடுதலாகச் சாப்பிட்டார். கை கழுவச் சென்றபோது, கொலுசாக நடந்துவந்து செம்பு நீரை கண்கள் காதலுடன் கொடுக்க, கைகளைத் துடைப்பதற்கு துவாலையை நீட்டின, வளைகள். அப்போதும் அந்த ஒற்றைச் சடை ஒய்யாரமாய் குறுக்கிட்டது. அக்காட்சிகளெல்லாம், அவர் மனச் சுவரில் தீட்டப்பட்ட நிரந்தர ஓவியங்கள், அவற்றை அத்தனை எளிதாக மறக்க முடியுமா என்ன ?
அன்றையதினம் அவர் மனதிற்குள் எழுந்தகேள்வி இத்தனை சீக்கிரம் எப்படி « அவள் » தன் ‘சுவையை’ அறிய முடிந்தது. அதற்கான சூத்திரம், தந்திரம், உள்ளுணர்வு என்று பிரத்தியேகமாக அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இயற்கை கொடுத்திருக்குமா ? என்பதாகும். அக்கேள்வியைக் தனக்குள் பலமுறை கேட்டிருக்கிறார்..பிறகு இவரைபோலவே தாம்பத்ய வாழ்க்கையின் பரிமாணங்களை : குழந்தைக்குத தாய், பேரப் பிள்ளைகளுக்குப் பாட்டியென ஒவ்வொன்றாக எட்டிப்பிடித்து உருமாற்றம்பெற்று பின்னர் திடீரென ஒரு நாள் « இங்கேயே இருங்கள் இதோ வந்துடறேன் » எனப் போனவள்போல போய்ச் சேர்ந்துவிட்டாள். இறுதி மூச்சுவரை கைப்பிடிக் கொண்டை, நரைத்த தலை மயிர், புருவங்களுக் கீழ் எப்போதாவது சிமிட்டலுடன் இருப்பைவெளிப்படுத்துக் கண்கள், ஒட்டிய கன்னங்கள், வாயை உதடுகளில் மறைத்து, முகத்தை முகவாய்ப் பிரிமனையில் நிறுத்தி ஓய்வின்றி வீட்டில் வளையவந்தவள் திடீரென திருவிழாவில் தொலைந்தது போல தொலைந்துவிட்டாள். வீட்டில் திரும்புகிற இடத்திலெல்லாம் அவளை மட்டுமே கண்டதாலோ என்னவோ, இன்று அவள் நடமாட்டமற்ற வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது.
அவள் உயிருடன் நடமாடியபோது, மணக்க மணக்க, கைவிரல் பதத்துடன், சரியாக ஆறு மணிக்கு ஒரு காப்பி கிடைக்கும். இந்த மூன்றில் எந்த ஒன்றில் தவறு நேர்ந்தாலும், இவரால் சகித்துக் கொள்ள முடியாது.விசிறி முகத்தில் அடிப்பார். ‘அவள்’ இடமிருந்து எவ்வித பதிலும் வராது, அண்மைக் காலம்வரை சிறு சிறு முணுமுணுப்பைக்கூட கேட்டதில்லை. இடுப்பில் சொருகிய முந்தானையை எடுத்து முகத்தை அபிஷேகம் செய்தபின், மூக்கின் நுனியில் சொட்டிக்கொண்டிருக்கும் திரவத்தை அழுந்த துடைத்துக்கொண்டே, முதன் முதல் பெண்பார்க்க அவள் வீட்டிற்குச் சென்றபோது எப்படி நடந்தாளோ அப்படி கால்களைப் பாந்தமாக எடுத்துவைத்து சுவரில் மோதி கீழே தரையில் புரண்டபடி அசையும் தம்ளரைக் குனிந்து கையில் எடுந்துக்கொண்டு அடுப்படிக்குச் சென்றால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் இன்னொரு கப் காப்பி ஈசிச்சேர் அருகே வந்து உட்காரும்.
இன்றைய தமிழின் மூத்த படைப்பாளி என்கிற பெயர் வாங்கியிருக்கிறார். ஒருவித மரியாதை நிமித்தம் அவரைப் பலரும் பார்க்க வருகிறார்கள் என்பதை நன்றாக அறிந்தும் இருக்கிறார், இருந்தும் ஒருநாள் மனைவியிடம் விளையாட்டாக, :
« எனக்கென்னவோ என்னைப் பார்க்கும் சாக்கில் உன்னுடைய காப்பியை குடிக்கத்தான் நம் வீட்டுக்கு வராங்களோண்ணு நினைக்கிறேன், எனக்குக் கொடுப்பதுபோல அவர்களுக்குக் காப்பி போட்டுத் தராதே ! என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். »
எனச் சிரித்துக்கொண்டே தெரிவித்ததுண்டு. உதடுகளைப் பிரிக்காமல், பக்கவாட்டில் அவை சற்று இழுபட முகம் மொத்தமும் தசை நார்கள் உதவியுடன் வெளிப்படுத்துகிற மகிழ்ச்சியொன்றே அவள் அதற்குத் தரும் பதில்.
அவள் இல்லையென்றான பிறகு, கடந்த சில கிழமைகளாக உள்ளூர் இலக்கிய அன்பர் ஒருவர் ஏற்பாடு செய்த வேலைக்கார அம்மாள் வரும் நேரத்தை பொறுத்து (ஒன்பது மணிக்கு வரவேண்டும்) காப்பி என்ற பெயரில் ஒரு பானம் கிடைக்கும். வாயருகே கொண்டு செல்ல மூக்கை கடிப்பதுபோல வரும் துர்நாற்றத்துடனான அந்த பானத்தை ஒரு மிடறு குடித்துவிட்டு, தரையில் வைத்துவிடுவார். அப்பெண்மணியும் « நீ குடித்தாலென்ன குடிக்காவிட்டால் எனக்கென்ன, காலையில் காப்பிப் போடணும், பாத்திர பண்டத்தை துலக்கணும், வீட்டைப் பெருக்கணும், அழுக்குத் துணியிருந்தா துவைக்கணும், வாங்கிவைத்த காய்கறிகளில் என்ன மிச்சமிருக்கிறதோ அதைக்கொண்டு சமைக்கணும். பன்னிரண்டு மணிக்கெல்லாம் நான் வீடு திரும்பணும் » என்றிருப்பவள்.
நினைவுகளில் மூழ்கினார். அவள்’ இறந்த நாளிலிருந்து இப்படித்தான் பழைய ஞாபகங்களில் புதைந்துபோகிறார். அதை ஒரு தவம்போல ஐம்புலன்களையும் ஒடுக்கிச் செய்வார். சராசரியாக இரண்டுநிமிடங்களில் ஆரம்பித்து, “அய்யா இருக்கீங்களா?” எனக் கேட்டு, இலக்கிய அன்பர்கள் மேனகைகளாக குறுக்கிடாதிருப்பின் தவம் கலைய இரண்டுமணி நேரம் கூட ஆகலாம். காற்று மெல்ல முன் கதவைக் கடந்து ஆடையின்றிருந்த மார்பையும் முகத்தையும் தொட்டு விலகிக்கொண்டது. காற்றின்மேல் கோபப் பட்டவர்போல உச்சுக்கொட்டினார். வீதியில் உருமிக்கொண்டுபோன இரு சக்கர வாகனம் மீண்டும் நனவுலகத்திற்கு அழைத்து வர, கண்கள் வெயிலில் பதிந்தன : வீதியின் மறுபக்கம் தழைத்திருந்த வேப்பமரமும் அதில் உட்கார்ந்திருந்த இரண்டு காகங்களும், நாக்கைத் தொங்கப்போட்டு ஓடிக்கொண்டிருந்த நாயும், குழதையைத் தோளில் போட்டுக்கொண்டு மஞ்சள்புடவை, ஆரஞ்சு நிற சீட்டி இரவிக்கையென இடதுகாலை அழுந்த ஊன்றி விந்தி விந்தி நடந்துபோன பெண்மணியும் வெள்ளிச் சரிகைபோல வேய்ந்திருந்த வெயிலில் பளபளத்தனர், முன்வாசலில் குவிந்த வெயில் பெரிய டிராகன்போல நாவை நீட்டி இவரை நக்க ஆரம்பித்தது. வெகு தூரத்தில், ஒலிபெருக்கியில் « பழம் நீ அப்பா ! » என்ற பாடல். அவள் விரும்பிக் கேட்கிற பாடல். திருமணமான புதிதில் எனக்குப் பிடித்த பாடல் எது தெரியுமா எனக்கேட்டு, « மன்மத லீலையை வென்றாருண்டோ ? » என அவள் காதில் மெல்ல முணுமுணுத்ததும், அவள் நாணத்துடன் சமையற்கட்டுக்குள் ஓடி மறைந்ததும் நினைவுக்கு வந்தன.
அறுபதுகளில் தாய் மாமன் மகள் என்ற உரிமையில், சுற்றத்தார் ஊர் பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் இவருடைய மூன்று முடிச்சை தலை குனிந்து ஏற்று, இவர் தொடக்கப்பள்ளி ஆசிரியராக அங்கே இங்கேயென கிராமம் கிராமமாகப் பந்தாடப் பட்டபோதும், இராமனிருக்குமிடம் அயோத்தியென ஊர் ஊராக இவரை பின் தொடர்ந்து வந்தவள். பிறகொரு நாள், « என்னுடைய கதை பத்திரிகையில் வந்திருக்குதுபார் ! » என அவளுடைய கை முழம் அளவு நீளமாக இருந்த பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டிக் காட்டியபோது, அவளுடைய புருவங்கள் உயர்ந்து, முன்வகிடில் வைத்திருந்த குங்குமம் உதிர நெற்றியில் சுருக்கங்கங்கள் மண்புழுக்களாக நெளிய, ஆட்காட்டிவிரலையும் நடுவிரலையும் சேர்த்தார்போல பிடித்து முகத்தில் ஆடிய கேசத்தை காது மடல்களில் ஒதுக்கியது கண்கொள்ளா காட்சி. அக்காட்சியை ஏதோவொரு சிறுகதையொன்றில் சேர்த்த ஞாபகம்.
இத்தனை நேரமாக உள்ளூர் அன்பர்கள் இரண்டொருவர் வந்து பார்த்திருக்கவேண்டும். மணி ஒன்பது இருக்கலாம் ஒருவரும் எட்டிப்பார்க்கவில்லை. வேலைக்காரியும் வந்தபாடில்லை.உடம்பு கன கனவென்றிருந்தது, யாராவது வந்தால் ஒரு மாத்திரை வாங்கிவரச் சொல்லலாம். காலையிலிருந்து காப்பிக் குடிக்காதது என்னவோ போலிருந்தது. அவள் இல்லாத தனிமை முட்கம்பிபோல அவரைச் சுற்றிக்கொண்டு வதைக்கிறது. « இரக்கமற்ற பாவி ! » என வாய்விட்டுக் கத்தினார். வீதியில் போன இரு சிறுவர்கள் அச்சத்துடன் இவரைத் திரும்பிப் பார்த்துவிட்டு கால்களை எட்டிவைத்து நடக்கிறார்கள்.
அவள், இவர் எங்கெல்லாம் இருக்கிறாரோ, அங்கெல்லாம் இருந்திருக்கிறாள்.காப்பி கொடுக்கிறவளாக ; உணவு வேளைளில்.மதிய உணவை முடித்துவிட்டு சிறிது நித்திரைகொள்ளலாம் எனப்போகிறபோது இவருக்கு முன்பு படுக்கையை சரி செய்துகொண்டிருப்பவளாக ; உள்ளூர் மனிதர்கள், வெளியூர் மனிதர்களென இவரைச் சந்திக்க இலக்கிய அபிமானிகள் வருகிறபோது, ஆட்களைப்பொறுத்து அடுக்களையிலிருந்தோ, கூடத்திற்குவந்தோ « வாங்க ! » என வரவேற்றுவிட்டு காப்பிபோட, மோர் எடுத்துவர அல்லது தண்ணீர் கொண்டுவர என்று முகங்களின் தேவை அறிந்து செயல்படுவாள். இவர் பேசும்போது முதிர்வயது சிலவற்றை நினைவுகூரத் தயங்கும், அவற்றையும் அந்த அம்மாள் நினைவூட்டுவாள். இலக்கிய விழாக்களில் முன்வரிசையில் அமர்ந்து சந்தோஷப்பட்டிருக்கிறாள். அவளுடைய பக்குவத்தில் வெந்தயக் குழம்பு, உருளைக்கிழங்கு வறுவல், இறால் குழம்பு, நெத்திலி வறுவல், மிளகு இரசம்,என ருசிகண்ட நாக்கு, இன்று வேலைக்காரி செய்தாலும், இலக்கிய அன்பர்கள் பரிதாபப் பட்டு வீடு தேடி எதையாவது கொண்டுவந்தாலும், சாப்பிடவேண்டும் என்று தோன்றினால், சாப்பிடுவார். .
வாசிப்பும் எழுத்தும் தமது வாழ்க்கைத் துணை மீதான பார்வையை மாற்றியதென்கிற நம்பிக்கை அவருக்கு ஏராளமாக இருந்தது. பொதுவில் சொல்வதுபோல, காதிலும் வாங்கியதுபோல தன்னுடைய அவளை எல்லாமுமாக பார்த்தது போதாதென்று விடலைப் பருவத்தில், வாலிப வயதில், இவர் பார்வையை, இவர் வார்த்தைகளைத் தங்கள் கண்களால், சொற்களால், உடல்மொழிகளால் நேர்செய்த பெண்களையும்கூட அவளிடம்தான் கண்டார். பின்னர் அவள் தன் வாழ்க்கைப்படகை சுமந்து செல்லும் ஜீவநதியாக மாறியபோது, « எதற்காக அவள் தன் நிழலாக வாழ்ந்தாள், அந்த சூட்சமத்தை அறியத் எப்படித் தவறினேன் ? » என்ற கவலை அவள் இருத்தலற்ற வெறுமைகளினால் முதலையாக உருமாற்றம்பெற்று இன்று அவரை விழுங்கிக்கொண்டிருக்கிறது.
முப்பது வருடத்திற்கு முன்பு, ஒருமுறை ஊரில் திருவிழாவென கிராமத்திற்கு அவளை அழைத்துபோக மாமனார் வந்திருந்தார். « நீமட்டும் போ ! தேர்த் திருவிழா அன்று நான் வந்து சேர்ந்துகொள்கிறேன் » என்றார். அவரால் வாசிக்காமல், எழுதாமல் இருக்கமுடியாது என்பது மட்டுமல்ல, மாமனார் குடும்பத்தைத் தவிர வேற்று மனிதர்களை அந்த ஊரில் அவருக்குத் தெரியவும் தெரியாது, ஒரு நாள் இருநாளல்ல திருவிழா முடிய எட்டு நாட்கள் ஆகும், எனவே தன்னால் ஊருக்கு வரமுடியாது எனத் தெரிவித்து மனைவியைச் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். இவருக்கு ஓரளவு சமையல் தெரியும். பருப்பு சாம்பார், உருளைக் கிழங்கு வறுவலென்று வாலிப வயதில் சுமாராக சமைத்து பசியைத் தீர்த்துக்கொண்ட அனுபவமுண்டு, எனவே சமாளித்துவிடலாமென நினைத்தார். பழகிய வெங்காய சாம்பார், எனக்கும் உனக்கும் ஒத்துவராதென அடம்பிடிக்க, மோர் சாதம் நாரத்தை ஊறுகாய்க்கு முயன்று, கையை உதறிவிட்டு பட்டினிக் கிடந்தார். நான்காம் நாள் பருப்புப் பொடி, கருவேப்பிலைப்பொடி என முயன்றும் அரைகுறையாகத்தான் சாப்பிட்டு எழுந்திருக்கவேண்டியிருந்தது. எட்டாம் நாள் மனைவியின் ஊருக்குள் நுழைந்த மறுகணம், இவர் உடம்பை எடைபோட்டுவிட்டாள். அன்றிலிருந்து இறக்கும்வரை இவரைவிட்டு இரண்டு மூன்று நாட்களுக்குமேல் அவள் வெளியில் தங்கியதில்லை. இவர் சாப்பிடுவதற்கு எப்போது உட்கார்ந்தாலும், அது விருந்தினர் வீடாக இருந்தாலுங்கூட எதிரில் உட்கார்ந்தாளெனில் இவர் உண்டுமுடிக்கும் வரை அந்த இடத்தைவிட்டு அசைவதில்லை.
ஒரே மகளுக்குத் தலை பிரசவம். சம்பந்தி வீட்டாருக்கு கடலூரும் விழுப்புரமும் பக்கம் என்கிறபோதும், அவ்வளவு தூரம் தனால் வரமுடியாது என்பதோடு, அங்கு தங்கவும் இயலாது எனக்கூறி, மகளை புதுச்சேரி மருத்துவமனை ஒன்றில் சேர்க்கச் சொல்லி சம்பந்தி வீட்டாரைவற்புறுத்தி அதில் வெற்றியும் பெற்றாள், « ஏன் இப்படியெல்லாம் பண்ற,இதற்கு என்ன அர்த்தம் ? » என்ற்று இவர் கேட்க, « நீங்கதான் நிறைய எழதவறாச்சே, நான் ஏன் இப்படி நடந்துக்கிறேன்னு யோசிச்சுபாருங்க ! » என்பது அவளுடைய பதில். இது ஆறுமாதத்திற்கு முன்பு நடந்தது. திடீரென முதுகுவலியால் அந்த மனைவி அவதிப்பட, உள்ளூர் இலக்கிய அபிமானிகள் துணையுடன் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தார். வலி குறைந்த மறுநாளே வீடு திரும்பவேண்டுமென அடம்பிடித்தாள். தாயைப் பார்க்கவந்த மகளும், « அப்பாவை நான் பார்த்துகொள்கிறேன், நீ டாக்டர்கள் சொல்வதுபோல, இரண்டு நாட்கள் பெட்டில் இருந்துட்டு வா, அவசரமில்லை ! », எனச் சொல்லிப்பார்த்தாள். பிடிவாதமாக, « உங்கப்பாவை பத்தி உனக்கென்ன தெரியும் ? » எனகேட்தோடு, அன்றே வீடு திரும்பி, இவருக்குப் பிடித்த வெந்தயக்குழம்பையும், தேஙாய்த் துவையலையும், இரவு உணவில் சேர்த்திருந்தாள்.
இதுபோல பலசம்பவங்களால் இவர் புரிந்துகொண்டது, தன்னைவிட்டு ஒரு நொடி கூட தன் மனைவிக்குப் பிரிந்திருக்க இயலாது என்கிற உண்மை. ஆனால் அவள்தான் இன்று தன்னை தனிமையில் வாடவிட்டு, ஒரேஅடியாகப் பிரிந்துபோய்விட்டாள். நினைக்க ஆத்திரமும் குமுறலும் முட்டிக்கொண்டு நெஞ்சில் புரள முதுகில் கிடந்த துண்டை வாயிற்பொத்திக்கொண்டு, யாரும் அருகிலில்லை என்கிற துணிச்சலில் :
« என்னைத் தனியா விட்டுட்டு எங்கும் போகமாட்டேன்னு இருந்த உனக்கு, என்ன வந்தது, இப்படியொரு வனாந்திரத்தில நிறுத்திட்டு போய்யிட்டிய நியாயமா ? » எனக் கதறி அழுதார்.
« ஐயா ! ஐயா ! » என்றொரு குரல். நினைவிலிருந்து மீண்டு வாசலைப் பார்த்தார். இந்தமுறை இரண்டு இளைஞர்கள்.
« நீங்க … ? »
« நாங்க மயிலம் பக்கத்திலிருந்துவறோம் ஐயா` ! உங்களைப் பார்க்கலாம்னு வந்தோம், சொல்லாம கொள்ளாம திடீர்னு வந்துட்டோம்.. என்னுடைய சிறுகதை தொகுப்பு ஒண்ணு வந்திருக்குது, அதைக் கொடுத்துட்டு, உங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கணும். அப்புறம் எனக்கும் பூர்வீகம் பண்ருட்டிதான். வீட்டுல கன்னடம்தான் பேசுவோம். »
அவருக்கு வந்தபிள்ளையாண்டானின் உறவு மொழி புரியாமலில்லை. நாற்பது வருடங்களுக்குமேல் எழுதுகிறார். அவரைக்கொண்டாட ஏதேதோ காரணங்கள். அவற்றில் இதுவுமொன்று.
« கோபிச்சுக்க கூடாது, வீட்டுல நான் மட்டும் தனியா இருக்கேன். தண்ணிகொடுக்க கூட வேறு ஒருத்தரும் எங்கூட தற்போது இல்லை »
« பிரச்சனை இல்லைங்க ஐயா, இந்தப் புத்தகத்தைக் கொடுத்துட்டு கிளம்பிடறோம் »
இவர் எழுந்திருக்க முயற்சிக்க.. « வேண்டாங்க ஐயா நீங்க உட்கார்ந்திருங்க, எழுந்திருக்கவேண்டாம், என்ற இளைஞர், தன்னுடைய நூலைக்கொடுத்த கையோடு கொண்டுவந்திருந்த சால்வையையும், இவருடைய முதுகில் போட்டு மறுபக்கம் வாங்கி, இரு முனைகளையும் சேர்த்துப் பிடிக்க, உடன் வந்திருந்த இளைஞர் தன்னுடைய கைத் தொலைபேசியில் படம் எடுத்துக்கொண்டார்.
« நான் படித்துப்பார்க்கிறேன் » என்று கூறி சாய்வு நாற்காலி அருகே இருந்த ஸ்டூலில் இளைஞர் கொடுத்த நூலை வைத்தார். இளைஞர்கள் இருவரும் விடைபெற்றுச் சென்றார்கள்.
அவர்கள் போர்த்திய சால்வை முதுகில் உறுத்தியது. அதை மெல்ல அகற்றி, நான்காக மடித்து ஸ்டூலில் நூலருகே வைத்தார். ஒரு முறை இப்படித்தான் யாரோ சால்வையை போர்த்தி படம் எடுக்க மறு நாள், சால்வையைப் போர்த்தும்போது மெல்ல போர்த்துவதில்லை, போட்டு இறுக்குகிறார்கள், இனிசால்வையை கையில் வாங்கிக்கொள்ளுங்கள், என அன்பாய் கடிந்திருக்கிறாள்.
இன்று நேற்றல்ல, ஐம்பது ஆண்டுகால மணவாழ்க்கை. அவருடைய ‘அவள்’ தன்னுடையவர் சராசரி எழுத்தாளரல்ல என்பதை நன்கு புரிந்து வைத்திருந்தாள். சாமர்த்தியமாக காய் நகர்த்த தெரிந்தவர். எங்கோ ஊர் பேர் தெரியாத கிராமத்தில் பிறந்து இன்று நாடறிந்த படைப்பாளி எனப் பெயரெடுத்திருப்பது எழுத்தால் மட்டுமே சாதிக்கின்ற விஷயமல்ல. அவரைத் தேடிக்கொண்டு தெற்கே கன்னியாகுமரிலிருந்து வடக்கே சென்னை வரை ; தமிழ் வாழ்கன்னு கோஷம் போடற ஆசாமியிலிருந்து, தமிழ்நாட்டில் நாளைய முதலமைச்சர் ஆகனுங்கிற கனவுல வாழற நடிகர்கள் வரை தேடி வரத்தான் செய்தார்கள். இருந்தாலும் சிறிது நம்மைக் குறித்தும் யோசிக்க வேண்டுமில்லையா ? என்ற ஆதங்கத்தில் ஒரு முறை அவள் கேட்டது நினைவுக்கு வந்தது.
« ஈஸிசேரை கொஞ்சம் தள்ளிப்போட்டு உட்காரக் கூடாதா, செத்த நேரத்துல வெயில் வீட்டுக்குள்ள நொழைஞ்சு உங்களை வழக்கம்போல தீச்சுடணும்னு, கங்கணம், கட்டிக்கொண்டிருக்கிறது, முன்னெல்லாம் பத்ரிக்கையிலேயே கருப்பு வெள்ளையிலே படம் போடுவாங்க, தவிர எப்பனாச்சும் ஒருமுறைதான உங்க படம் பேப்பர்ல வரும். இப்ப தினம் தினம் ஒங்க படத்தைப் போடறாங்க, அதுவும் கலர்ல போடறாங்க. அதுல கொஞ்சம் பளிச்சுனு நீங்க இருக்கவேண்டாமா ? »
« போடி பைத்தியக்காரி அவங்க என் கூட படம் எடுத்துக்கிறது என்னைக் காட்ட அல்ல அவர்களுக்கு முகவரி எழுதிக்க. நாற்பது வருஷமா எழுதறேன், எனக்கு இது தெரியாதா ? நான் மருத்துவமனை பெட்டுல படுத்திருந்தாகூடா பக்கத்துல நிண்ணு படம் எடுத்துக்க ஆசைபடறான், நான் பிணமா விழுந்தா கூட என் பக்கத்துல நின்னு படம் எடுத்துப்பாங்க. நடிகர்களைவிடு, இந்த நாட்டின் ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோக் கூட இப்படியொரு அதிர்ஷ்டமில்லை. எடுத்துட்டுப் போகட்டும், யார் யாரோ எங்கூட படம் எடுத்துகிட்டாலும் நான் ஒருத்தன்தான் எல்லோருடனும் இருக்கேன். ஆக உண்மையில் பளிச்சுனு இருக்கிறது இதுல யாரு ? அவங்க இல்லை, நாந்தான். »
அவரை ஜெயிக்கிறது சுலபமில்லைன்னு அவருடைய ‘அவளு’க்குத் தெரியாதா என்ன. இருந்தும் கேட்பாள். கேளிவியைகூட அவரைத் தவிர பிறருக்கு கேட்டுவிடக்கூடாது என்பதுபோல, பல்லி சத்தம்போடுது போல மெதுவாக கேட்டிருக்கிறாள். அவரிடம் கேட்டு அவர் சொல்லும் பதில்களில் வார்த்தைகள் குலுங்குவதையும் அவை எழுப்பும் நவரசத்தையும் அவற்றின் அர்த்தத்தையும் கேட்டு சந்தோஷப்படவே அடிக்கடி இப்படி ஏதாவது கேள்விகளை எழுப்புகிறேன் என ஒரு முறை கூறியிருக்கிறாள்.
« மனிதர் வாழ்வில் ஆணு பெண்ணுமாக இரு உடல்கள் இரு உள்ளங்கள் உயிர் வாழ்க்கையின் பெரும் பகுதியை இன்பம் துன்பம் இரண்டிலும் கைகோர்த்து, வலிகளைப் பகிர்ந்து, சுகங்களைத் தியாகம் செய்து, உனக்காக நான் என்பதை ஒவ்வொன்றிலும் உறுதி செய்து, ஒருநாள் « இருந்ததும், நடந்ததும், சுவைத்ததும் சுகித்ததும் பொய்யாய் பழங்கதையாய் முடிகிறபோது, ஏன் இந்த மனித வாழ்க்கை என கேள்வி எழுகிறது. » என்று ஏதோவொரு கட்டுரையில் ஒருமுறை எழுதியிருந்தார். உடல் சோர்ந்து, வாழ்க்கையில் அலுத்து, இதே ஈசிச்சேரில் சாய்ந்தபடி அன்றும் இப்படித்தான், மதிய உணவை உண்டு முடித்த கையோடு எதிரிலிருக்கும் வேம்பு காற்றில் தலையைச் சிலுப்பும் அழகை இரசித்துகொண்டு, பற்குச்சியால் பல்லிடுக்குகளை கிளறிக்கொண்டிருந்தார். அருகில் வெற்றிலைச் செல்லத்துடன் இவருடைய அறுபது வருட தாம்பத்ய துணை. வெற்றிலையை எடுத்து காம்பைக் கிள்ளி எறிந்துவிட்டு அதன் முதுகில் சுண்ணாம்பை தடவிக்கொண்டிருந்தாள். மனதிலிருந்த சங்கடத்தை அவளிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் போலிருந்தது, வெகு நாட்களாக அவர் சுமந்துவரும் பாரம், இறக்கிவைப்பதென்று தீர்மானித்தவராக :
« இங்கே பார் இல்லறவாழ்க்கையில் நீயும் நானும் கணவன் மனைவி, அப்பா அம்மா என்ற பதவிகளைக் கடந்து இன்றைக்கு தாத்தா, பாட்டி. சமூக வாழ்க்கை வேறு. என்னை அது தனித்து அடையாளப்படுகிறது, ஒற்றையாக இருப்பதைபோன்ற உணர்வு, எழுத்துலகில் இன்று நான் முதலமைச்சன், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன். இங்கு வெவ்வேறுவிதமான அமிமானிகள் எனக்கென்று இருக்கிறார்கள். »
என அவர் கூற, அவள் குறுக்கிட்டு :
«இரண்டு நாளைக்கு முன்ன செங்கல்பட்டிலிருந்து வந்த தம்பி நோபெல் பரிசெல்லாம் உங்களுக்குக் கிடைச்சிருக்கணும்னு சூம் மீட்டிங்கிலே பேசுச்சுன்னு சொன்னீங்க. சாகித்ய அகாடமி விருதெல்லாம் வாங்கிட்டீங்க அடுத்து ஏதோ ஞான பீட விருதாமே, கிடைச்சுடுமில்லையா ? உங்களுக்கு கிடைக்காம வேற யாருக்கு கிடைக்கும்! »
நரை போட்டிருந்த வயதிலும், இளமைக் காலத்தில் இவரிடம் வைத்திருந்த நம்பிக்கையில் எள்முனை அளவும் குறைவின்றி, பதில் உற்சாகத்தோடு அழுத்தமாக ஒலித்தது.
« அவங்க என்மீது வைத்திருக்கிற அன்பு பேருல ஏதோ சொல்றாங்க. அரசியல்வாதிகள், நடிகர்கள்னு என் வீடு தேடி வருவதே, பிறருக்குக் கிடைக்காத விருதுதான். பார்ப்போம் » என்றவர் தொடர்ந்து :
« ஆனால் நான் சொல்ல வந்தது அதில்லை. வாசிப்பு, எழுத்துன்னு இருந்துட்டேன், உன்னைச் சரியா நடத்தினேனா என்கிற குற்ற உணர்வு எங்கிட்ட இருக்கு. விசுவாசமிக்க அபிமானியா, என்னோட பயணப்படற, என்னுடையவளா எல்லா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ற, கைத் தட்டற. எனக்காக சமைப்பது, எனக்காக உடுத்துவது, எனக்கு வேண்டியவர்களை உபசரிப்பது, வேண்டாதவர்களை நிராகரிப்பதென்கிற உனக்கு, எப்போதாவது உன் ஞாபகம் வந்திருக்கிறதா, உனக்காக வாழ்ந்திருக்கிறாயா ? அதைப்பற்றியெல்லாம் யோசித்ததுண்டா ? » எனக் கேட்டு அவளைப் பார்த்தார்.
தன் அளவிற்கு புத்திசாலியில்லை. கிராமத்தில் பிறந்தவீட்டில் தொழுவத்தில் மாடுகன்றுகளைப் பராமரித்துக் கொண்டிருந்தவள், தன் எழுத்துக்களையே சரியாகப் புரிந்துகொண்டதில்லை என்கிறபோது, இதற்கு என்ன சொல்லிவிடப்போகிறாள். எப்போதும்போல பதிலின்றி அமைதியாக அடுப்படிக்குத் திரும்பிவிடுவாள் என்றுதான் நினைத்தார்.
« எனக்கு இதற்கெல்லாம் என்னபதில் சொல்றதுன்னு தெரியலை. உங்க அளவுக்கு நான் படிச்சவ இல்லை. எனக்குச் சொல்ல நிறைய இருக்கு, ஆனா கோர்வையா உங்களைப்போல சொல்ல வராது. பொறந்த வீட்டுல இருந்தப்ப அப்பா, அம்மா அண்ணன் என்று இருந்துட்டேன். அங்கேயும் வீட்டைவிட்டு வெளியில் போனதில்லை. தோழிகளிடத்தில் கொஞ்சம் அன்யோன்யமா சில வார்த்தைகள், பேசியிருப்பேன். இங்கே வந்த பின்பு அதையே கொஞ்சம் மாத்தி கூடுதலாக உங்களிடம், « சமைச்சுட்டேன், சாப்பிட வறீங்களா », « தட்டை எடுத்துவைக்கட்டுமா », « காப்பிக் கொண்டுவரட்டுமா ? » என்பேன், உங்களைத் தேடி வந்தவங்கள « வாங்க ! »ன்னு சொல்லியிருப்பேன், உபசரிச்சிருப்பேன், வேறென்ன !. நம்ம வீட்டு கதவுகளாவது கூடுதலா சந்தமிட்டிருக்கும், என் குரலின் பலம் என்னனுதான் உங்களுக்குத்தான் தெரியுமே ! இரண்டுபேரும் அந்திம காலத்துல இருக்கோம், எல்லாத்துக்கும் நான் உங்களுக்குப் பக்கத்துல இருந்தாகணும், திடீர்னு நான் போயிட்டா நீங்க தனியா என்ன பண்ணுவீங்கங்கிற கவலைதான் எனக்கு. மற்றபடி « உனக்காக வாழ்ந்திருக்கிறாயா ? » என்கிற கேள்விக்கு என்ன பதிலைச் சொல்ல. ஏதாவது சொல்லணும்னுதான் தோணுது. எப்படீன்னுதான் தெரியலை. பெரிய பெரிய விருதெல்லாம் உங்களைத் தேடிவருது. உலகத்தையெல்லாம் புரிஞ்சுகிட்டிருக்கிறமாதிரி எழுதறீங்க, என்மனசுல என்ன இருக்கும், உங்க கேள்விக்கு எங்கிட்ட என்ன பதில் வரும் என்பதை ஒரு நாள் யோசிச்சுப் பாருங்க, தெளிவான பதில்கிடைக்கும் » என்றாள். இவரும் என்னென்னவோ மாயமந்திரம் செய்து, அவளிடம் பதிலைக் கறக்க முயன்றார். கடைசிவரை « சொல்லமாட்டேன் ! நீங்கள்தான் என் மனசைப் புரிஞ்சிக்கிட்டு அதற்கேற்ற பதிலைக் கண்டுபிடிக்கணும். ஐம்பது வருஷம் என்னோட வாழ்ந்து இருக்கீங்க, உங்களால முடியும், அதை நீங்கதான் சொல்லணும் » என்றவள், சொன்னதுபோல இவரது கேள்விகளுக்கு பதில் தெரிவிக்காமலேயே இறந்துவிட்டாள்.
… மீண்டும் பாலை நிலம். மணற்காற்று ஹோவென்று சுழன்று சுழன்று அடிக்க, முதுமை ஒரு பொருட்டே அல்ல என்பதுபோல அவள் சாயலில் உள்ள அருவம் முன்னால் நடக்கிறது. « வெகுநாளா நெஞ்சில் ஊமுள்ளா தைத்துக்கொண்டிருக்கிற கேள்விக்கு பதிலைச் சொல்lலிட்டு நட சனியனே ! » எரிச்சலுடன் வார்த்தைகள் வந்தன.
« என்ன சொன்னீங்க ! »
« சொன்னன் சொரக்காய்க்கு உப்பில்லைண்ணு ! நீ ஒம்பதிலைச்சொல்லு, »
« என்ன சொல்லணும். உங்க கேள்விக்குப் பதில்தானே. என்னென்னவோ எழுதறீங்க. உலகத்துல உள்ள ஜீவராசிகளையெல்லாம் புரிஞ்சுகிட்ட மாதிரி தோணுது. உங்கபக்கத்துல இருபத்துநாலுமணிநேரமும் வாழ்ந்த என்ன நீங்க புரிஞ்சுக்கலை. ! ஆரம்பம் முதலே உங்களுக்காக வாழ்வதில்தான் எனக்கு எல்லா சொகமும்.. ஒரு வகையில எனக்காக வாழ்ந்த வாழ்க்கைதான் அது. இன்று நேற்றல்ல நீங்க மறுவீட்டிற்கு சாப்பிட வந்தபோது உங்களுக்கு எதெல்லாம், என்னவெல்லாம் பிடிக்குமென என் அத்தையிடம் அதாவது உங்க அம்மாவிடம் கேட்டுக் கேட்டு செஞ்சேனே, பரிமாறினேனே அன்றிலிருந்தே எனக்காகத்தான் நான் வாழ்ந்தேன். அப்படி ஒரு அனுபவத்திற்கு நீங்க உடபடலை, அப்படி உட்பட்டிருந்தால் அதிலுள்ள சந்தோஷம் உங்களுக்கு விளங்கியிருக்கும்… ».
« இத்தனை வியாக்கியானமா பதில் சொல்ற, என்னைத் தனியா விட்டுட்டு நீ மட்டும் எதற்காக எனக்கு முன்னே சாகணும் »
« அதற்கும் யோசிச்சா உங்கக் கிட்டப் பதில் கிடைக்கும், பரவாயில்லை நானே சொல்லிடறேன். நான் இறந்ததற்குப் பிறகுதான் என்னைக் கூடுதலாக நினைக்கிறீங்க, இருபத்துநாலு மணி நேரமும் என் நினைப்பில நீங்கள் இருக்கீங்க, உங்க இந்த நெலமையைக் காண உண்மையில் எனக்குச் சந்தோஷம். இந்த மகிழ்ச்சியை நான் வாழ்ந்தப்ப நீங்க எனக்குத் தரலை. பல பெண்கள் கட்டுகழுத்தியா அதாவது சுமங்கலியா ஏன் சாகனும் என்பதற்குக் காரணத்தை இப்பத்தான் நல்லா புரிஞ்சுகிட்டேன்.. »
தலையில் ஏதோ எறும்புகள் ஊர்வதுபோல பரபரப்பு. கண்களைத் திறந்து பார்த்தார். வெயில் பாதங்களைத் தின்று கொண்டிருந்தது. மணி காலை ஒன்பது. வேலைக்காரி வருவதாக இல்லை. பால் இருக்கிறது, காப்பிப் பொடியும் இருக்கிறது. அப்படியே அவள் நேரத்திகு வந்து காப்பிப் போட்டாலும் வாயில் வைக்க சகிப்பதில்லை. மெள்ள இருகைகளையும் சாய்வு நாற்காலி கைப்பிடியில் ஊன்றி எழுந்தார். மெள்ள அடுப்படியை நோக்கி நடந்தார்.
அடுப்படிக்கு முன்பாக அந்த அறை இருந்தது. பூட்டி இருந்தது. அவரை தனிமையில் நிறுத்திவிட்டு கொரோனாவில் இறந்துபோன ‘அவளை’ அந்த அறையில்தான் வைத்திருக்கிறார். வேலைக்காரி பெருக்கிச் சுத்தம் செய்ய பிற பகுதிகளுக்கு அனுமதியுண்டு, அந்த அறைக்கு மட்டும் அனுமதியில்லை. « சாவியைக் கொடுங்க, பெருக்குகிறேன் » என ஒரு முறை இறுமுறை அல்ல பலமுறைக் கேட்டு வேலைக்காரிக்கும் அலுத்துவிட்டது. ‘அவள்’ அந்த வீட்டிலிருந்தால்தான் அவருக்கு எதுவும் ஓடும். அவருடைய உயிர்ச்சிமிழ் அவளிடம் தான் இருக்கிறது, மற்றவர்களுக்கு அது புரியாது. நண்பர்களிடத்தில் மனைவி கோலியனூருக்கு மகள் வீட்டிற்குச் சென்றிருப்பதாகச் சொல்லிகொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் பழைய நினைவுகளில் துண்டு விழுகிறபோது அதை இட்டு நிரப்ப யாருமற்ற நேரங்களில் அவள் வேண்டும். பூட்டில் சாவியை நுழைத்துத் திருப்ப, ….ம் திறப்பதாக இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சிக்க, எரிச்சலுடன் காலால் உதைக்கிறார்.
– ஏங்க காப்பி கலந்து வச்சிருக்கேன், என்ன யோசனை ?
தலையைத் திருப்ப, எதிரே «அவள் ». அவர் மனைவி.
– மணி என்ன ?
– ஆறாகபோகுது. காற்றடிக்குது, அது ஆறி அவலாகறதுக்குள்ள குடிச்சுடுங்க. மறுபடியும் போட வீட்டில் காப்பித் தூள், சர்க்கரை எதுவுமில்லை. காலங்காத்தால அப்படியென்ன யோசனை.
– ஒரு கதை மனசுல ஓடுச்சி, வேறொண்ணுமில்லை.
__________________________________________________________
எழுத்து பிரசுரம்
சென்னை