ஊரிலேனும் நாட்டிலேனும்
உலகிலேனும் எண்ணினால்
நீர்நிறைந்த கடலையொக்கும்
நேர்உழைப்ப வர்தொகை!
தொழிலறிந்த ஏழை மக்கள்
தொழில்புரிந்து செல்வர்பால்
அழிவிலாமுதல்கொடுக்க
அம்முதல் பணத்தினால்
பழிமிகுந்த அரசமைத்துப்
படைகள்தம்மை ஏவியே
தொழில்புரிந்த ஏழைமக்கள்
சோற்றிலே மண்போடுவார்!
- பாரதிதாசன்
இன்றைய உலக அரசியலில் இதுதான் நடக்கிறது. அது ரஷ்யா உக்ரைன் யுத்தமோ, இஸ்ரேல் காஸா அல்லது லிபான ; இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் யுத்தமோ எதுவாயினும் இம்ம்கானுபாவர்களின் முயற்சி பாரதிதாசன் தெரிவிப்பதுபோல ஏழைமக்கள் சோற்றில் மண்போடும் முயற்சி அன்றி வேறில்லை. அதுவே சிறுத்து குடும்பம், உறவுகள், நட்பு, பள்ளி, கல்லூரி, அலுவலகம், அரசியலென சுருங்கினும் ; எங்கும் எதற்கும் சண்டை அல்லது சமாதான வழிமுறைகளில் உலக வாழ்க்கை இப்படித்தான் இயங்குகிறது. ஆயினும் பின்புலத்தில் பாரதிதாசனின் கவிதைச் சூத்திரத்தை நலிந்த்வர் வலியவர் என்று பொருள்கொண்டு அணுகினால் சண்டைக்கும் சமாதானத்திற்குமான நியாயங்கள் புரிந்துவிடும்.
“யுத்தம் ஏன், எதற்காக ? இந்தக் கேள்வி பாதிக்கப்படுகிற மக்களுக்கோ விடைகாணவியலாத கேள்வி. யுத்தத்திற்கு மார்தட்டிக்கொண்டு முன்நிற்கும் மனிதர்களிடமாவது, தங்கள் செயலுக்கு திட்டவட்டமாக அவர்கள் வசம் ஒரு பதில் இருக்குமாவெனில் வாய்பில்லை, அப்படியே இருந்து, ஒன்றை அவர்கள் தெரிவித்தாலும், இரவைத் துலக்க முனையும் மின்மினி பூச்சியின் செயல் தந்திரத்தை ஒத்ததாகத்தான் அது இருக்கக்கூடும்.
போரும் கொலைகுற்றங்ளைச் சேர்ந்ததே. பொதுவில் கொலைக் குற்றம் பகையொன்றின் உச்சக் கட்டம். இரு மனிதர்களின் நெடுநாளைய பகையை முடித்துவைக்கும் வினை. தனிமனிதக் கொலைகளில், சம்பவத்தை அடுத்து கொலையாளி கொலையுண்டவர் இருவரின் பகைக்கான காரணங்கள் முச்சந்திக்கு வருகின்றன. விசாரணையுண்டு, நீதிமன்றமுண்டு, குற்றம் உறுதியானால் குற்றவாளிக்குத் தண்டனையுமுண்டு. பெருவாரியான மக்களின் பிரதிநிதிகளாகத் தங்களை முன் நிறுத்தி « சுயநலம், அதிகாரபலம் » ஆகியவற்றின் பொருட்டு இரண்டு அரசாங்கம் வெளிப்படையாக அரங்கேற்றும் பெரும் எண்ணிகையிலான கொலைகளுக்கு, இன்றுவரை தண்டனைகள் இல்லை. அவ்வாறே வழங்கப்பட்டாலும், ஜெயித்தவன் தோற்றவன் அரசியலை அடிப்படையாகக் கொண்டவை அவை.
உலகில் எந்தப்பகுதி என்றாலும் புலிகளெல்லாம் ஒன்று போலவே இருக்கின்றன. குரங்குகள் எல்லாம் ஒன்றுபோலவே இருக்கின்றன புறாக்களில் இந்தியப் புறா என்றோ பிரான்சு புறா என்றோ, ஆமைகளில் நியூசிலாந்து ஆமையென்றோ, கௌத்தமாலா ஆமையென்றோ எதுவுமில்லை. மண்ணுக்கு மண் தாவரங்களில் வேற்றுமை இருந்தாலும் எல்லா தாவரங்களும் துளிர்க்கிறபோதும் சருகாகிறபோதும் ஒரு நிறத்தையே கொண்டிருக்கின்றன. மனிதர்களிடத்தில் ஏன் இப்படி. ஆசியர், ஆப்ரிக்கர், ஐரோப்பியர், இலத்தீன் அமெரிக்கமக்களென ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம். இது போதாமல் இந்தியத் துணைகண்டத்தில் நூற்றுக்கணக்கான வகையினர். பிரிவினையை முன் நிறுத்தி அழிவை எட்ட இயற்கை கண்ட தந்திரமா?
ஒரு நிறம்,ஒரே இனமென்று இருக்கிற மக்கள் மட்டும் கூடிக்குலவுகிறார்களா? என்ற கேள்வியும் எனக்குள் பிறந்தது. உடலால் தன்னையொத்த ஹூட்டுகள் டூட்சிக்களை கொன்றதும், சிங்களவர் தமிழர்களைக் கொன்றதும்; ரஷ்யர்கள் உக்ரைன் அப்பாவிமக்களைக் கொல்வதும் ; நாஜிகள் யூதர்களைக் கொன்றதும், இன்று யூதர்கள் பாலஸ்தீனியர்கொல்வதும், விளைவாக பயங்கரவாத தாக்குதலில் உலகெங்கும் இவற்றோடு தொடர்பற்ற மக்களின் தினசரிகளின் பாதிப்பும் நிறத்தால் தடைபட்டதா என்ன ? அறிவியலோ, அறிவுத் தேடலோ இவற்றுக்கு முடிவானதொரு பதிலைக் கண்டிருக்கிறதா?
சீதையை இராவணன் கொண்டுபோனான், நியாயமாகப் பார்த்தால் அது இராமன் இராவணன் சண்டை. இராவணனிடத்தில் ஆரம்பத்திலேயே இராமன் ஒற்றைக்கு ஒற்றையா நின்றிருக்கவேண்டும். சண்டை போட்டிருக்கவேண்டும் அத்தனை சக்தியும் இருக்கிற அவதார புருஷன் எதற்காக வானர சேனையையெல்லாம் மடிய விட்டான், மறுதரப்பில் இராவணன் செய்த தவறுக்கு எதற்காக இந்திரஜித், கும்பகர்ணன் என்றில்லாமல் ஆயிரமாயிரம் படையினர் பலியாகவேண்டும். மகாபாரதத்திலேயும் அதுதானே நடந்தது பங்காளிச் சண்டைக்கு சம்பந்தமில்லாத சனங்கள் இரு தரப்பிலும் வெட்டி மடிந்தார்கள். இவர்களை இப்படித்தான் பார்க்கவேண்டும்: இராமன் இராவணன் துரியோதனன் தருமன் இவர்களெல்லாம் அரியணை சாதி, இவர்களுக்காக ஏதேதோ காரணங்களால் தன் பெண்டாட்டிப் பிள்ளைகளை மறந்து வீரமரணமென்ற பெயரில் செத்து மடிந்த பைத்தியக்கார மந்தையெல்லாம் சேவக சாதி.
கோவலனைச் சிரச்சேதம் செய்த கொலையாளிக்கும் கொலையுண்ட கோவலனுக்கும் வரப்பு சண்டையா வாய்க்கால் சண்டையா. பிரான்சு தேசத்துதில் குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகப்பட்ச தண்டனையாக மரணதண்டனை நடைமுறையில் இருந்தகாலத்தில் அனத்தோல் தெய்பிளெர் என்றொரு கொலையாளி இருந்தான. அவன் வேலை, மரண தண்டனை பெற்றவர்களின் தலையை அன்றைய வழக்கின்படி கில்லெட்டினால் சீவுதல். ஒருவர் இருவரில்லை, பல நூறு மனிதர்களின் தலைகளை அரசின் கொலையாளியாக ஊதியம் பார்த்த அனத்தோல் துண்டித்திருந்தான். அவனால் கொல்லபட்டவர்களெல்லாம் அவனுடைய எதிரிகள் இல்லை. அவனைக்கொல்லச் சொல்லி ஆணையிட்ட அதிகாரத்தின் எதிரிகள். கோவலனை சிரச்சேதம் செய்தவனின் ஐரோப்பிய அவதாரம் இக்கொலையாளி. நீதியின் நியாய அநியாயம் குறித்து யோசித்து பணியாற்ற அவர்கள் படைக்கப்படவில்லை. நீதியும் ஆட்சி அதிகாரத்தின் ஓர் அத்தியாயம். அதிகாரத் தீர்ப்பை நிறைவேற்றினால்தான் கொலையாளியின் ஜீவனம் நடக்கும். அய்ய்யோ என பரிதாபப்பட்டால், கொலையாளி தலை மறுநாள் உருளும். அதிகாரம் உத்தரவு இடுகிறபோது அதனை நிறைவேற்ற அன்றைக்கு கத்தி, இன்றைக்குத் துப்பாக்கி. நீ வெட்டு, நானிருக்கிறேன் என்றது முடியாட்சி. நீ சுடு நானிருக்கிறேன் என்கிறது இன்றைய அரசு. நான் பார்த்துகொள்கிறேன், உனக்கு எந்தச்சிக்கலும் வராமல் நான் பாதுகாக்கிறேன் என்கிற உத்தரவாதத்தை அதிகாரம் தருகிறபோது கூலிப்படைகள் யாரைவேண்டுமானாலும், கொல்லும்.
அண்ணனாவது தம்பியாவது, குருவாவது, குருகுலவாச சினேகிதனாவது, பாணத்தைவிடு நான் இருக்கிறேன், என்று அதிகாரத்தின் அவதாரமாக கண்ணன் சொல்லலையா? இராமன், இராவணன் கர்ணன், துரியோதனன் அலெக்ஸாண்டர், பாபரென எதிரிகளைக் குறிவைத்த அதே காரணம், இன்றைய நாடாளும் அதிபர்களுக்கும் பொருந்தும். போரிலே சுட்டுக்கொல்ல இருக்கும் மனிதர்களுக்கும் அல்லது அவர்களைச் சுடுவதற்குப் போர்முனைகளில் காத்திருக்கும் படைவீர்ர்களுக்கும் பகையா என்ன? இரண்டாம் நூற்றாண்டோ, இருபத்தொன்றாம் நூற்றாண்டோ ஆட்சியாளர்களுக்கு தன் வல்லமை ஆயுத்தை வரலாறு பேசவேண்டுமென்கிற என்கிற வெறி, காமம் போல அவர்களிடம் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறது. முடியாட்சியோ, மக்களாட்சியோ அதிகார வாளைக் கையிலெடுத்தபின், தனது பரிவாரங்களின் கைத்தட்டலுக்காகவேணும் அதனைச் சுழற்ற்வேண்டும். ஆட்சஅதிகாரம் தனது எல்லைகுறித்த பிரச்சினைக்ளுக்கு ஏவலர்களைப் பயன்படுத்திக்கொள்கிது. அடிமைகளை மோதவிட்டு அதிகாரம் பாதுகாப்பாக வாழக் கற்றிருக்கிறது. கொல்லப்பட்டசேவகத்தின் பெண்டாட்டிப்பிள்ளைகள் திக்கின்றித் தவிக்க, அதிகாரம் தன் மனைவி மக்களுடன் சொகுசாக வாழ கற்றிருக்கிறது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் ; ரஷ்யா- உக்ரைன் யுத்தம், தற்போது அமெரிக்கா- இஸ்ரேல் – ஈரான் யுத்தங்கள் இன்று பண்பில் தொலைக்காட்சி நாடகங்கள்போல முடியாத தொடர்களாகிவிட்டன. பொதுவாக யுத்தம் : தாக்குதல்xதற்காப்பு என்கிற காரணிகளின் அடிப்படையில் நிகழ்கிறது. அதாவது எபோதுமே தனிமனிதன் எதிரியைவிட தான் பலம் வாய்ந்தவன் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் தன்னிலும் பலவீனமானவன் மீது தாக்குதல் நடத்துகிறான். அதுபோல எதிரியின் நாட்டைக்காட்டிலும் என் நாட்டின் படைபலம் வலிமையானது என்ற நம்பிக்கை தாக்குதலுக்கு காரணமாகிறது. ஆயினும் தற்போதைய அமெரிக்க – ஈரானிய ஆட்சியாளர்களைப்போல :
« வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். »
என்கிற குறள் அருமை தெரியாது யுத்தத்தில் இறங்கி, பின்னர் எங்கே எப்படி முடிப்பது என்கிற குழப்பத்தால் திருதிருவென்று விழிக்கும் நாடுகளும் உண்டு. ஆனால் இன்று பாதிக்கப்படுவது போரிடும் நாடுகள மட்டுமல்ல, வேடிக்கைப்பார்க்கும் நாடுகள் கூட. காரணம் அரசியல், புவியியலுக்கு எல்லை வகுத்த ஆட்சியாளர்கள், பொருளியல் பரிவர்த்தனைக்கு எல்லை வகுக்கத் தவறி அல்லது இயலாது, ஒருவர் மற்றவரை சார்ந்திருக்கும் நிலமைக்குச் சபிக்கப்பட்ட உலகப் பொருளாதாரம்.
ஒற்றை மனிதராக அல்லது தனியொரு நாடாக மோதிய காலம்போய், இம்மனிதர்களுக்கு அல்லது இந்நாடுகளுக்கு அடிமைப்பட்டோ அல்லது பரஸ்பர நலன் கருதியோ இரு அணிகளாகப் பிரிந்து மனிதர்கள் அல்லது ஆட்சியாளர்கள் சண்டையிடுவதும் மனிதரினம் தோன்றிய நாள்தொட்டு தொடரும் அவலம். அக் காலத்திலாவது அதிகாரமும் ஒரு கட்ட த்தில் ஆயுதம் எடுத்து தனது எதிரியோடு நேருக்கு மோதியதைக் காப்பியங்களிலும் வரலாற்றிலும் படித்திருக்கிறோம். இராமயணத்திலும், மகா பாரதத்திலும் அதுதானே நடந்தது. அப்படியொரு நெருக்கடி, மாற்றம் இன்றைய அதிகாரத்திற்குள்ளும் நிகழவேண்டும். இறந்தால் நாட்டைக் கவனித்துக்கோள்ள துணை அதிபரோ துணை பிரதமரோ இருக்கிறார் என்பதால் (நடப்பதுதானே?) போர்முனையில் ஆயுதம் ஏந்தி எதிரிநாட்டு பிரதமர் அல்லது அதிபரோடு, ஒரு நாட்டின் பிரதமர் அல்லது அதிபர் மோதவேண்டுமென அரசியல் சட்டத்தை திருத்தட்டும், எதிர்கால உலகில் யுத்தங்கள் இல்லாதொழிய வாய்ப்புண்டு. .
யுத்தம் குறித்து இக்கட்டுரையாளன் என்றோ எழுதிய ஒரு கவிதை :
அமைதியை அறிந்ததில்லை
கேட்டதுண்டு
நம்பிக்கையும் உறவும், நட்பும் நெருக்கமும்
சந்தேகம், பகை, எதிரி, இடைவெளியென
வேற்றுமைப் பெயர்களானதில்
அமைதியை அறிந்ததில்லை
கேட்டதுண்டு !
இந்தியா – பாகிஸ்தான்
இஸ்ரேல் – பாலஸ்தீன்
ஈரான் – ஈராக்
குர்திஸ்தான் – கோசோவா
ஆப்கானிஸ்தான் இலங்கையென
தொடரும் பட்டியலில்
நாடுகள் எதுவாயினும்
படுகள உயிர்கள்
அமைதியை அறிந்ததில்லை
கேட்டதுண்டு !
புயலுக்குப் பின்னே ‘அமைதி’
போருக்குப் பின்னே ‘அமைதி’
படித்ததுண்டு அறிந்ததில்லை.
கொலைவாட்கள் தீட்டப்படும்
கோப விநாடிகளில்
இரு பீரங்கி முழக்கங்களின்
இடையிலான பிரசவ நிமிடங்களில்
இரு போர்களுக்கு
இடையிலான சூன்ய நாட்களில்
அமைதியைப் பார்த்ததுண்டு
அறிந்ததில்லை.
இடிபாடுகளுக்கிடையே சிக்குண்ட
எமதில்லங்களில்
குழிபெயர்ந்த கொல்லைப்புறங்களில்
டாங்கிகள் தடம் பதித்த வீதிகளில்
சமாதியுண்ட சந்தைகளில்
அமைதியைப் பார்த்ததுண்டு
அறிந்ததில்லை.
எங்கள் விடியலுக்காக
காகங்கள் கரைவதில்லை
சேவல்கள் கூவிடாது
எங்கள் தோப்புகளோடு
எரியுண்டது அழகியல் மட்டுமல்ல
வண்டுகள் மொய்த்த
சோலைகளெங்கும்
ஈக்கள் மொய்க்கும் மனிதம்
அலகு சிவந்து காத்திருக்கும்
கழுகுகள் அவற்றின் வம்சாவளிகள்!
மயானத்தில் உயிர்கள்
காத்திருப்பது
‘அமைதி’ வேண்டியல்ல
கல்லறைகளுக்காக !
-நா.கிருஷ்ணா
–
——————————————————————–

