Monthly Archives: மே 2017

மொழிவது சுகம் மே 8, 2017 எம்மானுவெல் மக்ரோன் – பிரான்சு ஒபாமா

photo-de-famille-macron-louvre-7-mai-2017

2009 ஜனவரி 20 ல் ஒபாமா ஏற்படுத்திய  நம்பிக்கையையும் மன நெகிழ்ச்சியையும் பிரெஞ்சுமக்களுக்கு 2017 மே 7 அன்று எம்மானுவெல் மக்ரோன் தந்திருக்கிறார். டிரம்ப்பின் வரவு கண்டு கலங்கிய உள்ளங்களுக்குப் பால் வார் த்ததுபோல பிரெஞ்ச் அதிபர் தேர்தலின் முடிவு அமைந்துள்ளது.

இளைஞர் , 39 வயது. இந்திய ஆட்சிப்பணிக்கு நிகரான பிரான்சு  நாட்டின்  Ecole Nationale d’Administration  வார்ப்பு.  தொடக்கத்தில், வருமான வரித்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றிய பின்னர், தனியார் நிறுவனத்தில் நிதித்துறை அதிகாரி. இதற்கிடையில்  சோஷலிஸ்ட் கட்சியின் மூன்றாண்டுகால உறுப்பினர். தற்போதைய அதிபர் பிரான்சுவா ஹொலாந்துடைய அதிபர் தேர்தலின் போது அவரது குழுவில் அதிபரின் விருப்பத்தில் பேரில் தேர்தல் பணியாற்றுகிறார். ஹொலாந்து 2012 அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதும் அதிபர் அலுவலகத்தில் முக்கிய செயலாளர்களில் ஒருவராக நியமனம், அடுத்து மனுவல் வால்ஸ் என்ற ஹொலாந்து ஆதரவு பிரதமரின் கீழ் நிதி அமைச்சர்.  ஆரம்பம்முதலே அதிபர் ஹொலாந்தை விரும்பாத சோஷலிஸ்ட் அணியினர் சிலர் அவருடைய அமைச்சரவை அடித்தட்டு மக்களுக்கு எதிரான  நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறி அவர் வழிக்காட்டுதலுடன் இயங்க்கிய அமைசரவையிலிருந்து வெளியேறுகின்றனர்.  நாட்டின் வளர்ச்சிவீதம், கடந்த வலதுசாரி அரசைக் காட்டிலும் அதிகரித்திருந்தது உண்மை, எனினும்  ஹொலாந்து அதிபர் பொறுப்பேற்றதிலிருந்து அடுத்தடுத்து  நடந்த தீவிரதவாத தாக்குதல்கள் அந்த உண்மையைப் பின்னுக்குத் தள்ளியதோடு, பிரெஞ்சு மக்களின் அபிமானத்தை இழக்கவும் காரணம் ஆயிற்று.  இலட்சியக் கனவுகளுடன்  அமைச்சரவையில் இடம்பெற்ற எம்மனுவெல் மக்ரோனுக்கு தாம் நினைத்தபடி திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்ற குறை தவிர, அதிபர் ஹொலாந்தும் சரி, சோஷலிஸ்ட்டுக் கட்சியும் இரண்டுமே மூழ்கும் கப்பல், பிரான்சு  நாட்டு வருங்கால அரசியல்  பாரம்பர்ய கட்சிகளுக்குரியதல்ல, தவிர மக்கள் மாற்றத்தை விருப்புகிறார்கள்  என்பதையெல்லாம்  சரியாகக் கணித்திருந்த மக்ரோன்  நிதி அமைச்சர் பதவியை உதறிவிட்டு வெளியேறுகிறார்.  « France en Marche » என்ற கட்சி சார்பற்ற புதிய இயக்கத்தைத் தொடங்குகிறார் (2016). சோசலிஸ்டு கட்சியில் இருந்திருந்தால், உட்கட்சித் தேர்தலில் தோற்று அதிபர் வேட்பாளர் ஆகும் கனவு ஆரம்பத்திலேயே கரைந்திருக்கும். மக்ரோனின் புதிய இயக்கத்திற்கு எல்லா தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்தது. அதிட்டமும் இவருக்குச் சாதகமாக அமைந்தது, எப்படியும் ஜெயித்துவிடுவார் என  நம்பப்பட்ட  முக்கிய வலதுசாரி கட்சியின் வேட்பாளர் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, முதற் சுற்றில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட, இரண்டாம் சுற்றில் இவருக்குப் போட்டி வேட்பாளராக களத்தில்  நின்றவர் Front National  கட்சியின் மரின் லெப்பென் என்ற பெண்மணி.  பெரும்பாலான பிரெஞ்சுக்காரர்களுக்கு இனவாதப்பெண்மணியிடமிருந்து  நாட்டைக் காப்பாற்ற மக்ரோன் தேவைபட்டார். இங்கும் மக்ரோனைத்  தோற்கடிக்க, மரின் லெப்பெனுக்குச் சாதகமாக ரஷ்ய வத ந்திகள் மூட்டை மூட்டையாக வந்திறங்கின. ஆனால் பிரெஞ்சுமக்கள் ஏமாறவில்லை.  மக்ரோன் 66,1% வாக்கும், மரின் லெப்பென் 34,9 %  வாக்கும் பெற்றிருக்கிறார்கள். இனி மக்ரோன் செயல்பட  அல்லது அவரது வாக்குறுதிகளை  நிறைவேற்ற அடுத்த மாதம்  நடைபெறவிருக்கும் பாராளுமன்றத்(Assemblée Nationale) தேர்தலில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் (மொத்த உறுப்பினர்கள்  577). தவறினால் கொள்கைகளோடு ஒத்துப் போகிற பிறகட்சி உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். மூன்றாண்டுகளுக்கு முன்புவரை மனிதர் சமுத்திரத்தில்  ஒரு துளியாய்க் கிடந்த இளைஞரால்   இன்று உலகம் அறிந்த மனிராக எழுந்திருக்க முடிந்ததென்றால், இதுவும் முடியும் என்பதுதான்  என்னைப்போன்றோரின்   நம்பிக்கை.

——————————————————-

மொழிவது சுகம் மே 1 2017

Macronஎனது வாக்கு எம்மானுவெல் மக்ரோனுக்கு!

அடுத்த  ஞாயிற்றுக்கிழமை பிரான்சு  நாட்டின் அதிபர் தேர்தல் இரண்டாம் சுற்று. அன்றிரவே இரவு எட்டுமணி அளவில் அதிபர் பெயர் தெரிந்துவிடும்.அப்பெயர் மக்ரோன் என்ற இளைஞருக்கு உரியதாக இருப்பின் பிரான்சுக்கு மட்டுமல்ல ஐரோப்பிய அரசியலைக் கடந்து உலக அரசியலுக்கும் நல்லதென்பது  மானுடத்தின் மீது அக்கறைகொண்ட அறிவுஜீவிகளின் கருத்து.

மானுடத்திற்கு எதிரிகள் இன்றையதேதியில் அசலான முதலாளித்துவத்தைப்போலவே  போலியான சோஷலிஸ்டுகளூம் காரணமாவர். மார்க்ஸியத்தை ஓர் ஏட்டுச்சுரக்காய் ஆக்கியதில், சோசலிஸ எல்டராடோ கனவில் மட்டுமே காணக்கூடியது என்பதைத் தெளிவுபடுத்தியதில் சோஷலிஸ்டுத் தலைவர்களுக்குப் பெரும்பங்குண்டு, சமீபத்திய உதாரணம் வெனிசுலா அதிபர் மதுரோ. பிரான்சிலும்  மார்க்ஸியத்திற்கு வக்காலத்து வாங்கியவர் மெலான்ஷ்ொன் என்ற ஆசாமி . உண்மையில் இன்று “மக்களுக்காக  நான்” எனக்கூறிக்கொள்ளும் மரின் லெப்பென் எனும் பாசிஸவாதியும் சரி, இந்த மெலான்ஷோனும்  சரி முதலாளித்துவ முகங்கள். இவர்கள்  நிதி உலகின் பிரதி நிதி யென வர்ணிக்கிற   நடுத்தர வர்க்க மிதவாத சோஷலிஸ்டான  மக்ரோனைக்காட்டிலும் பெரும் கோடீஸ்வரர்கள். எனினும் பூசாரிகளை நம்பும் ஆடுகளைப்போலவே  பூர்ஷ்வாக்களை நம்பிய போல்ஷ்விக்குகளைத்தான் 1917 ரஷ்யப் புரட்சியில் கண்டோம்.

முதல் சுற்றின் முடிவில் இரு வேட்பாளர்கள்  இரண்டாம் சுற்றுக்குத் தகுதிபெற்றிருந்தார்கள். ஒருவர் எம்மானுவெல் மக்ரோன், மற்றவர் மரின் லெப்பென் என்ற பெண்மணி. இருவருமே  வழக்கமான கட்சி வேட்பாளர்கள் அல்ல. அதிலும் மக்ரோன் என்பவர் இளைஞர். பாராளுமன்ற தேர்தலைச் சந்திக்காது தற்போதைய அதிபர் ஹொலாந்துவின் தயவினால்  நிதியமைச்சராகி உரியகாலத்தில் முடிவெடுத்து, அமைச்சரவையில் வெளியில்வந்து, இன்றைக்கு இரண்டாம் சுற்றுக்குத் தேர்வாகி அதிபர் ஆவதற்கு ஓரளவிற்கு வாய்ப்புள்ள மனிதர்.

இரண்டாவது வேட்பாளர் தீவிர வலதுசாரி பெண்பணி, பெயர் மரின் லெப்பென். இப்பெண்மணியின் கட்சி Front National . தேசியவாத கட்சி மட்டுமல்ல இன வாத கட்சியுங்கூட. இனி எதிர்காலத்தில் வேலைவாய்ப்பிலும் பிறச்சலுகைகளிலும் பிரெஞ்சு மக்களுக்கே முன்னுரிமை என்கிறார். பயங்கர வாத த்தை ஒடுக்க குற்ற பின்புலமுள்ள அன்னியமக்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவேன் என் கிறார். பிரான்சு  நாடு ஐரோப்பாவிலிருந்து வெளியேறவேண்டும், அகதிகளை குடியேற்றத்தை முற்றாகத் தடுக்கவேண்டும் என்பதெல்லாம் கொள்கைகள். பிரச்சினை  அவர் ஜெயிப்பது எப்படி ? இவருடைய கட்சியை தீண்டத் தகாதக் கட்சியாக அறிவித்து   இக்கட்சிக்கு வாக்களிப்பது  நாட்டின் குடியரசு அமைப்புமுறைக்கு உதவாதென  இத் தேர்தலிலும் பெரிய கட்சிகள் மட்டுமின்றி  நாட்டின் நலனில் அக்கறையுள்ள தலைவர்களும் கூறிவருகின்றனர். தவிர பெண்மணிமீது ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு. தேர்தலில் தோற்றால் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு. ஜெயித்தால் பதவிக்காலம் வரை தண்டனையைத் தவிர்க்கலாம். ஒன்றிரண்டல்ல ஆறு குற்றங்கள்.

  1. ஐரோப்பிய ஒன்றிய நிதியிலிருந்து கட்சிபணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கியது.
  2. தேர்தல் செலவில் முறைகேடு
  3. வருமான வரித்துறைக்கு தமது சொத்தை குறைத்து மதிப்பிட்டுத் தெரிவித்தது.
  4. இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பைவளர்க்க இஸ்லாமிய தீவிரவாதிகள் குறித்த பிரச்சாரம்.
  5. 2012 தேர்தலில் மாவட்ட நிர்வாகசபை உறுப்பினர் என்ற வகையில் ஊழியர்களையும் அரசு சாதனங்ககளையும் தவறாக முந்தையப் பிரச்சாரத்திற்குப்  பயன்படுத்தியது.
  6. 2017 பிப்ரவரி 20ல், கட்சி அலுவலகத்தைச் சோதனையிட்டபோது, இவருக்கு எதிரான விசாரணை ஆவணங்கள் அரசின் ரகசியமென நம்பப்பட்டவை இவரிடம் எப்படி வந்த து என்ற விவகாரம்.

 

குற்றச்சாட்டுகளைப்பொருட்படுத்தாது எப்படியேனும் ஜெயிக்கவேண்டுமென  நினைக்கிறார். தமது தந்தைக்கு 2002ல் கிடைத்த தோல்வி தம்மை  நெருங்காதென  நம்புகிறார். அவர்  நம்பிக்கைக்குக் காரணம் தீவிர கிறித்துவமதவாதிகள், தீவிர வலது சாரிகளில் ஒருபிரிவினர், மற்றும் எதிரி ஜெயித்தாலும் பரவாயில்லை,  அண்டைவீட்டுக்காரனும், அரசியலுக்கு  நேற்று வந்த இளைஞனுமான ஒரு நபரை  எப்படி அதிபராக அனுமதிப்பது என் கிற நல்லெண்ணங்கொண்ட  மெலான்ஷோன் என்கிற பொதுவுடமை ஆசாமி மௌனம் இவருக்குச் சாதகமாக  உள்ளன.

ஏன் மக்ரோன்?

இன்றைய தேதியில் நூறுவிழுக்காடு முதலாளித்துவமும் சரி,     அக்மார்க் மார்க்ஸியமும் சரி நடைமுறைக்கு உதவாது. வெகுசன நலன் என்ற போர்வையில் அமெரிக்க மக்களிடையே பிளவினை ஏற்படுத்தி அமெரிக்காவை முத்ன்மைபடுத்தி, அந்நியர்கள் வெளியேற்றம், உலகவர்த்தகத்தில் பாதுகாப்பான செலவாணிக்கொள்கைகள், மெக்ஸிகோவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே தடுப்புச் சுவர், வளிமண்டலம், சுற்றுப்புறசூழல் பாழடைந்தாலும் பிரச்சினையில்லை அமெரிக்க முதலாளிகளின் நலன் முக்கியம்  என வாக்குறுதிகளைக்கூறி அமெரிக்க ஏழை மற்றும்  நடுத்தரமக்களின் பிரதிநிதி எனக்கூறி ஆட்சிக்கு வந்துள்ள பெருங்கோடீஸ்வரர் டிரம்ப் ஒருபக்கம், புட்டின், எர்டோகன், கிம்-ஜோங்-உன் போன்ற சர்வாதிகாரிகள்,  டேஷ் எனும் இஸ்லாமிய தீவிர வாதம், இனவெறி கட்சிகள் என வளர்ந்துவரும் சூழலில் மிதவாத அரசியல் கட்சிகள் மட்டுமே ஆரோக்கியமான அரசியல், அமைதியான சூழல், எதார்த்தத்திற்குப் பொருந்திவரும் நிர்வாகம் என்பதை த் தரமுடியும். எனவேதான் மரின் லெப்பனா, மக்ரோனா என்ற கேள்விக்கு எனது பதில், மக்ரோன்.

——————————————–

 

 

 

—————————————————–