« அண்மையில்தான் மரணத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். மரணத்திடம், இன்றைய மனிதர் சூழல் அறியத்தவறிய பலரகசியங்கள் உள்ளன. இருப்பினும், ஓரளவு மறக்கப்பட்டதும், அதிகம் புரிந்துகொள்ள முடியாததுமான மரணத்தின் இரகசியங்கள் மிகவும் சிக்கலானதும் ஆழமானதுமாகும். விளைவாக ஏதோ ஓர் இடத்தில் உறக்கமென்ற ஊற்றும், மரணமென்ற ஊற்றும் ஒன்றுடனொன்று நன்கு கலந்திருப்பதைப் போன்ற உணர்வு…….. »
மேற்கண்டவை மார்கெரித் யூர்செனார் என்ற பிரெஞ்சு எழுத்தாளரில் « அதிரியன் நினைவுகள் நாவலில் வரும் சிலவரிகள் (சொல்வனம் இணைய இதழில் வாசிக்கலாம்)
Xavier Debell என்கிற 35 ஆண்டுகால பிரெஞ்சு நண்பர், சர்க்கரை நோயினை அலட்சியம் செய்ததின் விளைவாக கடந்த ஒரு மாதகாலமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்து, நலமுடன் வீடு திரும்பிவிடுவார் என்ற நிலையில், நவம்பர் 11 அன்று இறந்தார். நான்கு நாட்களுக்கு முன்னர் இறுதிச் சடங்கு நடந்துமுடிந்தது. அவர் இழப்பு எனக்குப் பேரிழப்பு, இன்றுவரை அதிலிருந்து மீளவில்லை. வாரத்தில் ஒரு முறையேனும் சந்திப்போம். முரண்பாடுகள் நிறைய, இருந்தும் ஆழமான நட்பு. இந்திய நண்பர்கள் ஒரு சிலரும் அவரை அறிவார்கள்.
இந்நிலையில் நேற்று அவ்வை நடராசன் மரண செய்தி, நண்பர் பஞ்சுமூலம் கிடைத்தது. என்னுடைய ஆரம்பகால கவிதைநூல்கள் ஒரு சிறுகதை தொகுப்பிற்கு முதன்முதலில் தலைமையேற்று வெளியிட்டவர் அவர். புதுச்சேரியிலும் சென்னையிலும் நிகழ்ச்சிகள் நடந்தன. தலைமை தாங்கி வெளியிட்டிருக்கிறார். அவ்வை அறிமுகம் புதுவை வருமானவரித்துறை மேனாள் இயக்குனர் இராமதாசு அவர்களால் வாய்த்தது. ஈரோடு தமிழன்பன், சு. சமுத்திரம், கலந்துகொள்ள அவர் தலைமையேற்ற ஒரு நிகழ்வு சென்னை ஒய்.எம்.சி.எ. அரங்கில் நடந்தபோது, “அம்மா உன் சிறுகதை குறித்து இரண்டொடு வார்த்தைகள் பேசவேண்டுமாம் ” என்றவர் « இதுபோன்ற மேடைகளில் அவர் பேசியதில்லை, இருந்தும் உன்னுடைய சிறுகதைகள் பற்றி வரும்போதுகூட பேசிக்கொண்டுவந்தார் » என்று குறிப்பிட்டு மருத்துவரான அவர் துணைவியார் தாரா அவர்களையும் மேடையேற்றினார். அண்மையில்கூட நண்பர் பஞ்சாங்கத்துடனும் பிற நண்பர்களுடனும் அவ்வை அவர்களை ‘தாரா இல்லத்தில்’ சந்தித்தோம். அவ்வை நல்ல சுவைஞர், கடல்போல தமிழறிவு இருந்தும் தந்தையைப்போல தமது அறிவு நலத்தைப் அச்சிலேற்ற தவறிவிட்டார், பண்பும் அன்பும் ஒருசேரப்பெற்ற தமிழறிஞர்.