பிப்ரவரி -13
புதுச்சேரி அரசினருக்குச்சொந்தமான விருந்தினர் மாளிகை சாணக்யபுரியில் இருக்கிறது. இந்தியாவில் இருக்கிற அத்தனை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் விருந்தினர் மாளிகைகளை வைத்திருக்கின்றன. தில்லி வந்திறக்கிய முதல் நாள் இரவு புதுச்சேரி அராசங்கத்தின் பயணியர் விடுதியில் ஏற்பட்ட அனுபவத்தை எழுதியிருந்தேன். எது எப்படியோ புது தில்லியில் மலிவாக தங்கவும், உண்ணவும் வேறெங்கும் சாத்தியமில்லையென துணிந்து கூறலாம். 30 வருடத்திற்கு முன்பு நேரு யூத் கேந்திராவில் இருந்தேன். அப்போது தில்லிக்கு வந்தேன். தென்னிந்திய உணவிற்காக எங்கள் கிராமத்தைச்சேர்ந்த முதலியார் ஒருவர் ஆர்.கே.புரத்தில் உணவு விடுதியொன்று நடத்தினார். தில்லியிலிருந்த இரண்டுவாரமும் இரண்டு நாளைக்கு ஒரு முறை அங்கே சென்றுவிடுவதுண்டு. என்னுடன் புதுச்சேரி நண்பர்களும், தமிழ்நாட்டு நண்பர்களும் இணைந்துகொள்வார்கள். விடுதி மலிவாக இருப்பதாலோ என்னவோ வருகின்ற விருந்தினர் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும்போலிருக்கிறது. விடுதி ஊழியர்களில் ஒரே ஒரு தமிழரை பார்க்க முடிந்தது. இரவு விடுதியில் உறங்குவதற்குமுன் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் நாயகர், புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் பேராசிரியர் மு. இளங்கோவன் பணி நிமித்தமாக சென்னை வந்திருப்பதாகக் கூறியிருந்தார். காலையில் வரவேற்பு கூடத்தில் அவரை சந்திக்க முடிந்தது. சிலர் என்றும் மார்க்கண்டேயனாக இருப்பார்கள், மு. இளங்கோவன் அந்த ரகம். ஏன் நாயகரும் அப்படித்தான். இருவர் வயதையும் அத்தனை சுலபமாக எடைபோடமுடியாது. நாயகரின் முழுபெயர் க.அ. வெங்கட சுப்பு¡ய நாயகர். அவர் முழுப்பெயரையும் பாரத்துவிட்டு, நண்பர் தேவமைந்தன் அறிமுகப்படுத்தியபோது எனக்கு எங்கள் கிராமத்தில் கூண்டுவண்டியிலிருந்து தள்ளாடிக்கொண்டே இறங்கும் நாயக்கர்கள் ஞாபகத்திற்கு வந்தனர். வந்தவரோ அநியாயத்திற்கு இளைஞராக இருந்தார்.
நண்பர் மு. இளங்கோவன் தில்லியில் அவரறிந்த தமிழர் ஒருவர் வாகனங்களை வாடகைக்கு விடுகிறார் என்றார். எனது பிரெஞ்சு நண்பர் இந்தியாவிற்கு வந்த நாளிலிருந்து, வாடகைக்கு வாகனத்தை எடுத்தால் நான் ஓட்டுவேனே என்று சொல்லிக்கொண்டுவந்தார், தில்லியிலும் மறக்காமமல் நினைவுபடுத்தினார். எனக்கு அச்சம் அவர் வாகனத்தை ஓட்டுவதிலில்லை. ஆனால் இந்தியச்சாலையில் விதிகள் வேறு. ஏதோவொரு சர்க்கஸில் சேர்ந்து கயிற்றில் நடக்க பயிற்சிபெற்றிருக்கவேண்டும். எனவே விஷப்பரிட்சைகள் வேண்டாமென்று அவர் கோரிக்கையை தவிர்த்துவிட்டேன். இத்தாலி அரசாங்கத்தைத்போல, பாதிக்கப்பட்டவருக்கு ஒரு கோடி கொடுக்க நம்மால் ஆகாதென்பது முதற்காரணம்: அவர் வாகனத்தை ஓட்டியது இந்திய எல்லைக்குள் அல்ல என இந்திய உச்ச நீதிமன்றத்த்தில் வாதாட திறமைபெற்ற மத்திய அரசாங்கத்தின் அட்டர்னியும் எங்களுக்கில்லையென்பது இரண்டாவது காரணம். மு. இளங்கோவின் தயவில் கரோல் பாக் தமிழரை தொலைபேசியில் பிடித்து வாகனத்தை வரவழைத்தோம். வாகன ஓட்டி நேபாளி. இந்திய தலைநலரில் அண்டைநாடுகளிலிருந்து பிழைப்பு நடத்துபவர்கள் பத்து சதவீதத்தினர் இருப்பார்களென வாகன ஓட்டி கூறிய ஞாபகம். எனக்கு அவ்வளவு இருக்காது என்பதுபோல தோன்றியது. வட இந்தியாவில் எல்லோரும் ஒரே சாயலில் இருப்பது போன்று தோற்றம். எனவே பாகிஸ்தானியரையும், பாங்களாதேஷ் மக்களையும் பிரித்து அடையாளப்படுத்துவதிலுள்ள சிரமங்கள், நேபாளியரையும், திபெத் மக்களையும் வடகிழக்கு இந்தியரிடமிருந்து வேறுபடுத்தி பார்ப்பதிலும் உள்ளன. எங்கே போகவேண்டுமென வாகன ஒட்டி கேட்டபோது உங்கள் விருப்பம்போல செய்யுங்களெனகூறிவிட்டு அமைதியானோம்.
அதற்குமுன்னால் ஓர் அதிசயம் நடந்தது, அதைப் பகிர்ந்துகொள்ளவில்லையெனில் தலைவெடித்துவிடும் அபாயமுண்டு. விடுதியின் துப்புரவு ஊழியர் ஒருவர் தெபெல் அறையின்முன்னால் நானூறு ரூபாய்கிடந்ததாகக் கூறி எங்களிடம் கொடுத்தார். எனக்கு அந்த ஊழியரின் செயல் மிகுந்த வியப்பைத் தந்தது. பொதுவாக கீழே கிடந்தால் திருப்பி கொடுப்பதென்பது வழக்கமே அல்ல என நம்மில் பலர் எண்ணிக்கொண்டிருக்க அவர் செயல் அசாதரணமானதுதான். பல நட்சத்திர ஓட்டல்களில் எனக்குக் கிடைத்த அனுபவம் வேறு. நாம் மறந்துபோகும் குளிர் கண்ணாடி, கோட்டு, முகச்சவரம் செய்யும் உபகரணங்கள் திரும்ப வந்து கேட்டால் கிடைக்காது. எனவே புதுச்சேரி அரசாங்க பயணியர் விடுதியில் பணியாற்றும் நேர்மையான அக்கடைநிலை ஊழியருக்கு ஏதேனும் ஊக்குவிக்கும் வகையில் அளித்திருக்கலாம். பிரெஞ்சு நண்பர் துப்புரவு ஊழியருக்கு பத்தோ இருபதோ கொடுப்பாரென எதிர்பார்த்தேன். 50 ரூபாய்கூட கொடுத்திருக்கலாம் அது பெரிய தொகையே அல்ல. அவராக முன் வந்து செய்யாததை நாம் சொல்லி செய்யச்சொல்வது அதையும் அந்நியர்கள் முன்னிலையில் இங்கிதமாக தெரியவில்லை. தவிர மூன்றாம் நாள் அறையைக் காலிசெய்யும்போது கொடுக்கலாமே என்ற எண்ணம் மனதிலுதிக்க அமைதியானேன். ஆனால் அந்த வ்ஊன்றாம் நாளில் அதை சுத்தமாக மறந்துபோனது.
சாணக்கியபுரியில் இருக்கிறபோதெல்லாம் ஏதோ ஐரோப்பாவில் இருப்பதுபோல இருக்கிறது. எனினும் 30 ஆண்டுகளுக்கு முந்தய சாணக்கியபுரி இல்லை. அப்போது இன்னும் புதியதாக இருந்தது.. சாந்தினி சவுக், பழைய டில்லி என்றுக் கடந்தபோகிறபோதுதான் இந்தியா என்ற ஞாபகம் வந்தது. முதலில் நாங்கள் பார்த்தது குதுப்மினார்.
குதுப்மினார் பழைய மிடுக்கு குறையாமல் இருக்கிறது. மூன்று நூற்றாண்டுகள் மூன்று மன்னர்கள் கட்டி எழுப்பிய உலகத்தின் மிகப்பெரிய மினார்களில் ஒன்று என்கிறார்கள்.. இந்தியாவில் மசூதிகளில் மினார்கள் குறைவு. துருக்கியில் கலை நுணுக்கத்துடன் எழுப்பட்ட மினார்களை பார்க்கமுடிந்தது. குதுப்மினாரை பார்த்த பின்பு இந்தியா கேட் சென்றோம். இந்தியா கேட்டை பார்த்தபோது கம்பீரமான இந்தியாவை பார்க்க முடிந்தது. வெளிநாட்டினர், பிற மாநில மக்களென்று கூட்டம் நிறைய. நிழற்படகலைஞர்கள், இந்தியா கேட்டை தபால் அட்டையில் விற்கிற சிறுவர்கள். வழக்கப்போல கூட்டத்தை நம்பி நடக்கிற தள்ளுவண்டி வியாபாரிகள் போன்ற காட்சிகளை மனதிற் நிறுத்த முடிந்தது. இந்திய ஜவான் ஒருவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்
அங்கிருந்து ராஷ்டிரபதி பவன். வாகனத்தை தூரத்திலேயே நிறுத்தி இறங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. காவல் துறையின் கெடுபிடி நிழற்படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பினோம். வாகன ஓட்டி எதிரெதிராகவிருந்த இரு சிவப்பு கட்டிடங்களைக்காட்டி ஒன்று நிதி அமைச்சகத்திற்கும் மற்றது பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் சொந்தமானதென்றார். இந்திய அதிபரைப் பற்றி பேச்சுவந்தபோது இந்தியாவில் அதிபர்களும், ஆளுனர்களும் அரசாங்கப் பணத்தை ஆற்றில் கொட்ட ஏற்பட்ட பதவிகளன்றி அவற்றால் வேறு உபயோகங்களில்லையென பிரெஞ்சு நண்பரிடம் எரிச்சலுடன் கூறினேன். அண்மையில் ‘இந்து’ நாளிதழில் படிக்க நேர்ந்த செய்தியின் படி அதிபர் பொறுப்பிலிருக்கும் அம்மணி இந்திய வரலாற்றிலேயே இதுவரை அறிந்திராத அளவிற்கு வெளிநாட்டுப்பயணங்களால் நாட்டின் கருவூலத்தை ஏப்பம் விட்டிருக்கிறார். காரணம் ஒவ்வொரு பயணத்தின் போதும் அவரது குடும்பமென்ற ஒரு பெரிய படை உலகத்தை வலம் வந்திருக்கிறது பொதுமக்களின் பணத்தில். இந்தியாவில் ஆளுனர்களும் இதைத்தான் செய்கிறார்கள்.
பிற்பகல் ஒரு மணி அளவில் கன்னாட் பிளேஸ். மதிய உணவிற்கு, நல்ல உணவு விடுதியைத் தேடி மிகவும் சிரமப்பட்டோம். கிளப்போலவிருந்த உணவு விடுதியொன்றிற்குள் நுழைந்தோம். உள்ளே நல்ல ஆடை தரித்திருந்தால்தான் அனுமதிப்போம் என்றார்கள். காவலர்கள் ஒருமுறைக்கு இருமுறை எங்களைப் பார்த்த பின்பே அனுமதித்தார்கள். பிற்பகல் ராஜ்காட் சென்றோம். சாலைக்கு மறுபக்கம் காந்தி நினவரங்கம் இருக்கிறது. அடுத்தடுத்து நேருவுக்கு இந்திராகந்திக்கு ராஜிவ் காந்திக்கு சரண்சிங்கிற்கு என சமாதிகள் இருக்கின்றன. ராஜ்காட் தவிர வேறெங்கும் நாங்கள் போகவில்லை. இந்தவியாதி தமிழகத்திற்கும் தொற்றியிருக்கவேண்டும். மெரீனா பீச் சமாதிகள் பீச்சாக மாறாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. தமிழ்நாட்டில் எதுவும் நடக்கலாம். மற்ற சமாதிகள் எப்படியோ காந்தி சமாதியில் காதலர்களையும், அவர்கள் மீது கூழாங்கல்லை எறிந்துவிட்டு ஓடும் பையன்களையும் கண்டோம். டிட்டோ, மாண்டெலா போன்ற தலைவர்கள் நட்டிருந்த மரக்கன்றுகளிடத்தில் வெறும் அறிவிப்பு மட்டுமே இருந்தன. ஓரளவிற்கு களைத்திருந்தோம், அடுத்து பிர்லா மந்திர் லட்சிமி நாராயனன் கோவில். பிர்லா லட்சுமிக்கு கோவில் எடுக்காமல் வேறு யாருக்கு எடுப்பார். இங்கே கடுமையாகக் காவல். ஒருமுறைக்கு பலமுறை சோதனையிட்டபின் உள்ளே அனுமதிக்கிறார்கள்.
பிப்ரவரி 14
முதல் நாள் பிற்பகலே பணிக்கர் போக்குவரத்தில் ஆக்ரா
, பதேபூர்சிக்ரி, மதுரா வுக்கான ஒரு நாள் சுற்றுலா பயணத்திற்கு, விருந்தினர் மாளிகையில் பணிபுரியும் தமிழரிடம் நாயக்கர் ஏற்பாடு செய்திருந்தார். அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் கீழே இறங்கியாயிற்று. பேருந்து விடுதியின் வாசலுக்கே வந்து அழைத்துபோகுமென்றார்கள். நல்ல குளிர். ஆறேகால் மணிக்கு பணிக்கர் நிறுவனத்தின் வாகனம் எங்களை ஏற்றிக்கொண்டது வாகனத்தில் வேறு இரண்டுபேர் இருந்தனர். எங்கள் அனைவரையும் கரோல் பார்க் பேருந்து நிறுத்தத்தில் கொண்டுபோய்விட்டனர். வொல்வோ ரக பேருந்து வசதிக்கு குறைவில்லை ஆளுக்கு ஒரு பாட்டில் மினரல் தண்ணீரை நிர்வாகம் கொடுத்திருந்தது. காலை எட்டு எட்டரைமணி அளவில் நல்ல உணவு விடுதியொன்றில் காலை உணவு. அங்கிருந்து முதலில் ஆக்ராகோட்டை. அங்கே பேருந்தில் ஏறிய வழிகாட்டி பதேபூர் சிக்ரி, ஆக்ரா இரண்டு பொறுப்பையும் ஏற்றிருந்தார். ஆக்ரா தலைநகரான விதம்; லோடிகள், பாபர், ஹ¤மாயூன், அக்பர்,ஷாஜகானெனெ ஒருவர்பின் ஒருவராக ஆக்ராவை ஏற்றுக்கொண்டது, கோட்டையை பற்றிய உண்மை வரலாறு, கட்டுகதைகள், சொந்த சரக்குகளென வழிகாட்டி இடைவிடாது எல்லாவற்றையும் பாடமெடுப்பதுபோல கூறிக்கொண்டு வந்தார். அரசரின் அந்தப்புரம், மாளிகையில் கலைவேலைபாட்டிற்காக உபயோகிப்பட்ட விலைமதிப்பற்ற கற்கள், அரசிகள் நீராடுமிடம், ஷாஜகானின் அந்திமக் காலம், கோஹினூர் வைரமென அவர் புனையவும் நாங்கள் கேட்கவும் நிறைய இருந்தது. பதேபூர் சிக்ரிக்கும் தாஜ்மகாலுக்கு இந்தியர்கள் அல்லாதவர்களுக்கு நுழைவு கட்டணமாக 500 ரூபாய் வசூலித்தது அநியாயம்.
பிறகு மதிய உணவுக்குப்பிறகு கைத்தொழில் நிறுவனம் என்றபெயரை சொல்லி உத்திரபிரதேசம் அரசாங்கத்திற்கும் சொந்தமில்லாத ஒரு தனியார் நிறுவனத்திற்கு அழைத்து சென்று வெளியில் விற்கிற தாஜ்மகாலை வாங்விடாதீர்கள் நாங்கள்தான் அசலான சலவைக்கல்லில் செய்த தாஜ்மகாலை விற்கிறோம் (இந்த செய்தி மட்டுமே உண்மை) என சுற்றுலாவாசிகளை கவர சர்க்கரை பாகில் நனைத்த வியாபார சொற்களைபோட்டு பொருட்களை விற்க முயற்சிக்கிறார்கள். இதுதவிர தமிழ்நாடா கேரளாவா என விசாரித்து சென்னை குமரன் சில்க்ஸ் மொத்தவிலைக்கு அளிக்கும் சரக்கை உங்களுக்கு சில்லரையிலும் தருகிறோமெனக்கூறி பட்டுபுடவைகளை விற்றார்கள். பேரம் பேச தெரிந்தால் தோல் பொருட்கள் விலை பரவாயில்லை. நண்பர் நாயகர் ஒரு ஜோடி செருப்பு வாங்கினார்.
தாஜ்மகாலை இப்போதெல்லாம் பேருந்துகள் நெருங்கிவிடக்கூடாதாம். பேருந்துகள் கக்கும் புகை உலக அதிசயத்தை பாழ்படுத்திவிடலாமென்ற அச்சம் ஏற்க கூடியதே. எங்கள் வழிகாட்டி தெற்கு வாயிலைத் தவிர்த்துவிட்டு ( நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தார்கள் என்பது ஒரு காரணம்; எங்களை அதிக நேரம் கடையில் நிறுத்தியிருந்தால் நேரமின்மை என்பது மற்றொரு காரணம்) ஒவ்வொரு வாயிலாக எங்களை இழுத்துக்கொண்டு வழிகாட்டி ஓடினாரென்று சொல்லவேண்டும். ஏதோ ஒருவாசலில் இறுதியாக நுழைந்தோம். தாஜ்மகாலுக்காக அவ்வளவு சிரமத்தையும் ஏற்கலாம் போலிருந்தது நல்ல வெயில். யமுனையின் தோற்றம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஷ¥க்களை தவிர்க்க அவைகளின் மீது பிளாஸ்ட்டிக் உரைகளை அணிந்துகொண்டு நடக்கலாம் என்பதென்கிற யோசனை துருக்கியிலும் கடைபிடிக்கபடுகிறது. மாலை நாலரை மணிக்கு வெளியில் வந்து பேருந்து பிடித்து மதுராவரும்போது மணி ஆறாகிவிட்டது. கிருஷ்ணர் பிறந்த இடமாம். முதன்முறையாக வந்திருந்தேன். வித்தியாசமான கோவில். இங்கேயும் பலத்த காவல். வெளியில் தெளிவாக எழுதியிருந்தது: புகைப்படகருவிகள் அனுமதியில்லை. நண்பர் தெபெல் புகைப்பட கருவியுடன் நுழைய காவலர்கள் அவரை உள்ளே விட மறுத்தார்கள். நண்பர் நாயக்கருடன் அதை கொண்டுபோய் பாதுகாப்பகத்தில் கொடுத்துவிட்டு மீண்டும் எங்களுடன் இணைந்துகொண்டார்கள். மதுரா கோவிலின் பின்பக்கம் மசூதியொன்றிருக்கிறதென்றார்கள் பார்க்கவில்லை.
மதுராவில் கொஞ்சம் பழம் வாங்கி சாப்பிட்டோம். அங்கு தேனீர் நன்றாக இருந்தது. இரவு விடுதிக்குவரும்போது மணி பத்தாகிவிட்டது. நல்லவேளை புறப்படும்போதே சொல்லிவைத்திருந்ததால் இரவு உணவு காத்திருந்தது.
—–
Like this:
Like ஏற்றப்படுகின்றது...