Monthly Archives: மே 2014

காஃப்காவின் பிராஹா -2

மே 8 -2014 -தொடர்ச்சி:
‘Staromestiske Namasti’ ஸ்லாவ் மொழிவருமெனில் உச்சரித்து பாருங்கள். கடந்த வாரத்தில் வென்ஸ்லஸ் சதுக்கம் என்று சொல்லியிருந்தேன் இல்லையா (Wenceslas Square) அதுவும் இப்படி “namesti” என்று தான் முடிந்தது. எனவே ஸ்லாவ் மொழியில் ‘namesti’ என்றால் சதுக்கம் என வைத்துக்கொள்ளுங்கள். ஸ்லாவ் மொழி பேசுபவர்களை முதன்முதலாக பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்களில்தான் கண்டிருக்கிறேன். பனிப்போர் காலங்களில் ஸ்லாவ் மொழி பேசுபவர்கள் ஒன்றிரண்டு பேராவது ஜேம்ஸ்பாண்ட் படங்களில் தலைகாட்டுவார்கள். ரோஜர் மூர் படத்திலும் சரி அதற்கு முன்பாக சீன் கானரி படத்திலும் சரி அது கட்டாயம். டில்லி பாபு என்றொரு நண்பனும் நானும் சென்னை ராயபுரத்தில் பிரைட்டன் தியேட்டரில் ஒருமுறை ஜேம்ஸ் பாண்ட் படமொன்று பார்க்கச் சென்றோம் (‘Never say Never again’ அல்லது ‘you only live twice இரண்டிலொன்று ). பார்த்த ப்டத்தில் எந்தக் காட்சியும் பெரிதாய் ஞாபகத்தில் இல்லை. ஆனால் வில்லன் ரஷ்ய மொழியில் பேசியபொழுது எங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வடசென்னை துறைமுகத் தொழிலாளி ‘இன்னாபா இவன் அப்பப்ப வாயால … விடறான்” என சாராய வாடையுடன் உரத்து கூறியது நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. இருந்தாலும் ஸ்லாவ் மொழியைக் குறை சொல்லக்கூடாது. ஸ்லாவ் மொழிகளும் (ரஷ்ய, செக் முதலான..) இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பங்களுள் அடங்குகின்றன. இந்தி, உருது,வங்காளம் போன்ற மொழிகளுக்கு அவை பங்காளி, திராவிட மொழிகளுக்கு சம்பந்தி முறை. எனவே கொசோவா, ஸ்லோவாக், செக் நாட்டின் அதிபர்களையெல்லாம் கூட மோடி அழைத்திருக்கலாம், தவறே இல்லை.

Prague 038 Prague 039 Prague 041 Prague 057

‘Staromestiske Namasti’ என்கிற பிராஹா நகரத்தின் பழைய நகரம் வென்ஸ்லஸ் சதுக்கத்திலிருந்து கிழக்கே இருக்கிறது. அதிக தூரமில்லை நிதானமாக கடைகளைப் பார்த்துக்கொண்டு நடந்தால் (அதாவது கடை உள்ளே நுழையாமல்) அதிககப் பட்சம் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள். முடிச்சு முடிச்சாக திரளுகிற சுற்றுலாபயணிகள் மீது கவனத்தை செலுத்தாது; பெண்களை குறிவைத்து திறந்துள்ள படிகம் அல்லது பளிங்கு கல் பொருள் விற்பனையகங்கள், தோல் பொருட்கள், நினைவுப் பொருட்கள் விற்கும் கடைகள்; அடுத்தடுத்து மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழியும் காப்பி பார்கள், உணவகங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தாது தாண்டுகால் வைத்து ஒன்றிரண்டு குறுகலான தெருக்களில் திருப்பி எழுதிய ‘ட’ வடிவ வரைபாதையில், கண்ணுக்குப் புலனாகாத ஒரு குழலூதி (The Pied Piper of Prague?) நம்மை கடத்திக்கொண்டு போகிறார்’ – ஒரு திறந்த வெளியில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிடாலும் வந்தடைகிறோம். அங்கே மனிதர் சமுத்திரத்தில் கலக்கிறோம். பொதுவில் சுற்றுலா தளங்களில் காண்கிற காட்சிகள்: சுற்றுலா பயணிகள் உயர்த்திப் பிடித்த சுருக்கிய குடைகளின் கீழ் அணி திரண்டும்; சீருடைபோல ஒற்றை வண்ணத்தில் மழைக் காப்பு (K-.way) ஆடைகளிலும்; பிள்ளைகளுடன் வந்திருக்கிற தவிப்பும் பொறுப்புமிக்க கணவன் மனைவியும்; இளம் காதலர்களும்; தோழிகள், நண்பர்கள் அலது இவை இரண்டுமல்லாத விசேட கலவையாகவும் சுற்றுலாபயணிகள்; இடைக்கிடை ஆபூர்வமான உடையணிந்து இசை அல்லது நாடகத்திற்கு விளம்பரத்திற்காக துண்டு பிரசுரங்களை விநியோகிக்கிறவர்கள் ஆகியோரையும் கணக்கிற்கொண்டால் சொதி, சம்பல், மரக்கறிகள், பாயாசம் அரிசிச்சோறு அத்தனையும் ஒன்றாக பரிமாறப்படும் ஈழத்தமிழர் இல்ல உணவுத் தட்டுகளை ஒத்ததொரு படிமம், அல்லது ஒர் இம்ப்பரனிஸ ஓவியம், மனிதர் போக மிச்சமிருந்த வெளிகளில் அவர்களின் மூச்சும் மொழியும். கேமராக்களை, வீடியோ கேமாராக்களை கண்களில் அணிந்து, வந்ததற்கு சாட்சியங்கள் தயாரிப்பதில் மும்முரமாக பலர் ஈடுபட்டனர். இதில் நானும் அடக்கம். இல்லையென்றால் உங்களை நம்ப வைப்பதெப்படி? வழக்கம்போல ஆசிய நாடுகளில் தற்போதைக்கு அதிகமாக உலகப்பயணம் மேற்கொள்கிற சீனர்களை கணிசமான எண்ணிக்கையில் அங்கும் பார்க்க முடிந்தது. கூட்டம் அத்தனையும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. கும்பலை நெருங்காமல் தள்ளி நிற்கிறோம். அண்ணாந்து பார்த்தவர்களின் உயரத்தோடு ஒப்பிடுகிறபொழுது நானும் எனது துணைவியும் குள்ளம் என்பதால் இந்த எச்சரிக்கை. நட்சத்திர தகுதியை எட்டிய வி.ஐ.பி.க்குக் காத்திருக்கும் சராசரி மனிதர்களின் அதே எதிர்பார்ப்பு நின்றிருந்தவர்களின் முகத்தில் அல்லது அவர்கள் முகத்தை மறைத்திருந்த கேமராக்களில் தெரிந்தது. ஒட்டுமொத்த காத்திருப்பும், எதிர்பார்ப்பும் ஒரு கடிகார வி.ஐ.பி.க்காக.

பிராகு வானியல் கடிகாரமும் பிறவும்

Prague 034ஐரோப்பாவின் பெரும்பாலான நகரங்களில் வானியல் கடிகாரங்கள் இருந்தபோதிலும் ஸ்ட்ராஸ்பூர்(Strasbourg) வானியல் கடிகாரமும், பிராகு வானியல் கடிகாரமும் புகழ் பெற்ற்வை. பொதுவாக இக் கடிகாரங்கள் பிறகடிகாரங்களைப்போலவே நேரத்தை தருவதோடு சில வானியல் தகவல்களையும் தருகின்றன. தற்போதெல்லாம மிக நுணுக்கமான தகவல்களைத் தருகிற கைக்கடிகாரங்கள் விலைக்க்குக் கிடக்கின்றன. இருந்த போதிலும் திண்டுக்கல் லியோனி தமது குச்சி மிட்டாய் ரசிகர்களுக்கு வினியோகிக்கும் சொற்களில் அவற்றின் பெருமையைக் குறைத்து மதிப்பிடமுடியாது, ஒவ்வொன்றையும் அவற்றிற்கான கால சூழலில் எடைபோடுவது கட்டாயம் ஆகிறது. கடிகாரம் நிறுவப்பட்ட ஆண்டு பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கம். சரியாகச் சொல்வதெனில் பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் (1410 ) பின்னர் இன்றிருக்கிற வானியல் கடிகாரத்தை 1490ல் செம்மை படுத்தியவர் Hanus என்கிற கடிகார நிபுணர். இதுபோன்ற அதிசயங்களுக்குப் பின்னால் உலாவும் கதை இதற்கும் உண்டு. கடிகார நிபுணரின் கண்களை கடிகாரத்தை செம்மை படுத்திய மறுநாள் பறித்துவிட்டார்களாம் – (Page 98 Prague et la Républiques Tchèque). கடிகாரத்துடன் இருக்கிற நான்கு பொம்மைகளும் பதினைந்தாம் நூற்றாண்டு பிராகு மக்களின் மன நிலையை எதிரொலிக்கின்றனவாம். கூடியிருந்த பயணிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுபோல நான்கு பொம்மைகளில் ஒன்றான எலும்புக்கூடு மணல் நிரம்பிய நாழிகைக் கண்ணாடிக் குடுவையை இலேசாகத் தட்டித் திருப்பி வைக்கிறது. பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் கடிகாரத்திற்கு மேலாக இருக்கிற இரண்டு சன்னல்களைக் கடந்து வரிசையாகக் கூட்டத்தைப் பார்த்து கை அசைத்தபடி கடந்து செல்கிறார்கள். இறுதியாக சேவற்கோழியின் கொக்கரிபோடு காட்சி முடிவுக்கு வருகிறது. நாங்கள் சென்றிருந்தபோது இரவு எட்டுமணி. பழைய நகர சதுக்கத்தை அடைந்திருந்த ஓரிரு நிமிடங்களில் மேற்கண்டவை நடந்து முடிந்தன. ஏற்கனவே Strasbourgல் இருக்கிற தேவாலயத்தில் கண்ட காட்சிதான். தலையைத் திருப்பினால் இதுகுறித்த அக்கறை அல்லது பிரக்ஞையின்றி தங்கள் அன்றையை பொழுதைக்குறித்த கவலையோடு ஜாஸ் இசைக்கும் ரோமா கலைஞர்கள். மெல்ல கூட்டம் கலையத் தொடங்கியது. சட்டென்று அவ்விடத்தைவிட்டுச் செல்வது கடினமாக இருந்தது. பயணத்தின் தொடக்கத்தில் பிற ஐரோப்பிய நகரங்களோடு ஒப்பிட்டது உண்மைதான், ஆனால் பிராகுவின் பழமையை போற்றுகிற இப் பகுதி வெனீஸ், பார்சலோனா போன்ற நகரங்களைக்காட்டிலும் கூடுதலாகக் கவர்ந்தது, அக்கவர்ச்சியில் தொன்மத்தின் சாயலை இழக்காத கட்டிட முகப்புகளுக்கும் தேவாலயங்களுக்கும் பெரும்பங்குண்டு.

சார்லஸ் பாலம்:

Prague 066பிராகு நகரிர்க்குச் சென்று சார்லஸ் பாலத்தில் காலாற நடந்து போகமற் திரும்புவது, என்பது ஆக்ரா சென்கிறவர் தாஜ்மகாலைப் பார்க்காமற் திரும்புவதுபோல என வைத்துக்கொள்ளலாம். பாலத்தில் நுழைவாயிலில் ஒரு பெரிய கோபுரம். கோபுரத்தைக் கடந்ததுமே இடதுபுரம் உணவு விடுதிகள். நீரில் கால் நனைப்பதுபோல அமர்ந்துகொண்டு ஜோடி ஜோடியாக உணவருந்தும் மனிதர்கள். கரையோரங்கள் பொன்னாரங்களில் வைரம் பதித்ததுபோல மஞ்சள் ஒளியில் ஜொலிக்கின்றன. Prague 069வில்ட்டாவா நதியின் இருகரைகளையும் இழுத்துப் பிடித்திருப்பவைபோல நகரமெங்கும் பாலங்கள் இருப்பினும் சார்லஸ் பாலத்தின் அழகைப் எழுத வார்த்தைகள் போதாது, பாரதி பார்த்திருந்தால் “சிந்து நதியின்மிசை”யைத் திருத்தி பாடியிருக்கலாம். கண்கள் விரியத் திறந்து அந்த அழகைக் குடித்தேன். முதன் முதலாக மனைவி மீது எனக்குப் பொறாமை வந்த தருணம். அவளுக்குக் கொஞ்சம் பெரிய கண்கள். அவள் கண்களை சிலாகித்து நல்லதாக நான்கு வார்த்தைச் சொல்லி இருக்கலாம். வரவிருக்கும் இரவு ‘கையறு இரவாக’ கழிந்துவிடகூடாதென்று சுஜாதாவுக்குப் பழகிய பட்சி என்னிடமும் ஜாக்கிரதை என்றது.
சார்லஸ் பாலத்தில் இருள் மெல்ல மெல்ல கவித்துகொண்டிருந்தது. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு ஏற்கனவே நீரில் கரைந்திருந்தது. பாரதியின் ‘பட்டு கரு நீல புடவையும் பதித்த நல் வைரமும்’ வரிகளை நினை படுத்துகிற ஒளிரும் உல்லாசப் படகுகள், நீரின் சலசலப்பையும்; கால்களால் பாலத்தில் நீளத்தையும், சொற்களால் காற்றினையும் கலகலபாக்கிக்கொண்டிருக்கிற மனிதர்ச் சந்தடியை குலைத்துவிடக்கூடாதென்பதுபோல படகுகளின் எஞ்சின்கள் மெல்ல உறுமுகின்றன, இலைபோல சொகுசாய் நீர்ளிழுத்த இழுப்புக்கு உடன்படுவதுபோல மிதந்து போகின்றன. பாலத்தின் நெடுகிலும் தெருப்பாடகர்கள், ஜாஸ் கலைஞர்கள், கிட்டார்களின் சினுங்கல்கள், அவற்றில் மயங்கி நிரந்தரமாக பாலத்தின் கைப்பிடி நெடுகிலும் கல்லாய் சமைந்தவிட்டதுபோல பரோக் காலத்து சிற்பங்கள். இதற்கு முன்பு லண்டன் டவர் பிரிட்ஜ், சான்பிரான்ஸிஸ்கோ கோல்டன் கேட், வெனிஸ் நகரப் பாலங்கள், எனப் பார்த்திருக்கிறேன், ஏன் பிரான்சில் கூட அழகான பாலங்களைக் கண்டதுண்டு, ஆனாலும் இது அழகில் ‘ஏறக்குறைய சொர்க்கம்’ (உபயம் மீண்டும் சுஜாதா).

(தொடரும்)

 

மொழிவது சுகம் – மே 28 -2014

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தேர்தல் – பிரான்ஸ்

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்ததுபோலவே பாசிஸ்டு சிந்தனைகொண்ட கட்சிகளின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக பிரான்சு நாட்டில் Front National (தேசிய முன்னணி) தீவிர வலது சாரி கட்சி, நாட்டில் நன்கு அறியப்பட்ட வலது மற்றும் இடது சாரி கட்சிகளை பின் தள்ளிவிட்டு முந்திக்கொண்டிருக்கிறது. வரவிருக்கும் நாட்டின் பொதுத் தேர்தல்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதற்கான அறிகுறி இது.

இந்த நூற்றாண்டில் பல சொற்களுக்கு விநோதமாகப் பொருள்கொள்ளவேண்டியிருக்கிறது. குடும்பம், வீதி, சமூகம் நாடு, சாதி, மதம், இனம், நிறம் என்கிற பல்வேறு கூறுகள் தங்கள் பண்பில் முரண்படும் ஒன்றிர்க்கு வழங்கும் சொல், அந்நியன். இந்த ‘அந்நியனை’ ஒருவர் நேசிப்பதும் வெறுப்பதும், அந்நியரின் இருப்பிடத்தைப் பொருத்தது. ‘யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே’ என்பது ‘அந்நியன்’ சொல்லைப் பொருத்தவரை மிகவும் உபயோகமான வாக்கியம். இந்த அந்நியன் மூன்றாவது வீட்டில் இருந்தால் பிரச்சினையில்லை. நமக்கு அண்டைவீட்டுக்காரன் என்கிறபோது பிரச்சினை வருகிறது. இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் அந்நியனின் வளர்ச்சி நம்மைப் பிரம்மிக்க வைக்கிறது. போகும்போது வரும்போதும் அவன் புன்னகைக்காக ஏங்குகிறோம். வாய்ப்பு அமையுமானால் வீடு தேடி சென்று பாராட்டவும் செய்வோம், கேட்கிற மனைவியிடம் அதிலென்ன தப்பு, அவர் உழைப்பு அப்ப, பாராட்டித்தானே ஆகவேண்டும் என்போம். ஆறுமாதம் கழிந்தது. அந்த மூன்றாவது வீட்டு அந்நியர் அடுத்த வீட்டுக்கு குடித்தனம் வருகிறார். மூன்றாவது வீட்டில் இருந்தவரை அவரின் உயர்வை சங்கடங்களின்றி ஏற்றமனம், அவர் துயரங்களைப் பரிவுடன் அணுகிய மனம், அவர் அண்டைவீட்டுக்காரரானதும் விரோதியாகப் பார்க்கிறது. தனது முன்னேற்றத்திற்கு இந்த அண்டைவீட்டு அன்னியர் தடையாக இருப்பார் என்கிற கற்பனையில், தமது தினசரி சந்தோஷங்களை தொலைத்து தூக்கமின்றி தவிக்கத் தொடங்குகிறது. அவருக்கு எதிராக வாய்ப்பு அமையுமானால் காய்களை நகர்த்தி தமது மனப்ப்புண்ணுக்கு மருந்திடுகிறது. இந்த அண்டைவீட்டு அந்நியர் அரசியல் நமது சமூகத்தின் எல்லா படிநிலைகளிலும் இன்று இடம்பிடித்திருக்கிறது. இவ் வாழ்க்கை அரசியல் நமது வர்க்க அரசியலையெல்லாம் ஓரங்கட்டிவிட்டன.ஒரு ஐரோப்பிய தொழிலாளி, ஆப்ரிக்கன் ஒருவரை அல்லது ஆசிய நாட்டவர் ஒருவரை அவர் நாட்டிலிருந்தபோது சக தொழிலாளியாகப் பார்த்தார், ஓடினார், உதவிக்கரம் நீட்டினார். அதே தொழிலாளி தனது அண்டைவீடுக்காரர் என்கிறபோது முகம் சுளிக்கிறார். பங்காளியாகப் பார்க்கிறார். பிரான்சு நாட்டில் பிரெஞ்சு தேசியவாதத்தை முன் நிறுத்திய ‘ தேசிய முன்னணி’ கட்சியில் இன்றைக்கு யார் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களெனப் பார்த்தால் சாதாரண தொழிலாளிகள், வேலையில்லாதவர்கள், பாமர மக்கள். நேற்றுவரை இடதுசாரி கட்சிகளில் தீவிர அனுதாபிகளாவும் உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள். மேற்கத்திய நாடுகளில் இதுவரை காணாத அளவில் பொருளாதார நெருக்கடிகளும், வேலையின்மையும் உள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தமது பொதுவுடமைக் குடையைச் சுருக்கிக்கொண்ட பிறகு அந்நாடுகளின் மக்கள் ஜெர்மன், பிரான்சு, இங்கிலாந்து முதலான வளர்ந்த ஐரோப்பிய நாடுகளுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்ற கொள்கை முடிவுகளால் உள்ளே நுழைவது எளிதாகியிருக்கிறது. ஏற்கனவே ஐ.நாவின் மனித உரிமை அமைப்பு விதி முறைகளின் கீழ் வெளிநாட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்துவிட்டனர் என்ற கோபத்தீயில் இருக்கிற மேற்கு ஐரோப்பிய வெள்ளையர்களுக்கு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒரு சில மக்கள் வருகை எண்ணெய் ஊற்றியதுபோலாகிவிட்டது. அடித்தட்டுமக்களின் பலவீனத்தில் அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள் இந்தியாவில் மட்டுமில்லை உலகின் எல்லாபகுதிகளிலும் இருக்கிறார்கள் என்பதை உறுதிபடுத்தும் வகையிலே ஐரோப்பிய பாராளுமன்ற முடிவுகளும் இருக்கின்றன. அவ நம்பிக்கை கூடாதுதான், நல்லதே நடக்குமென நம்புவோம்.

இலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4:

‘பெண்-  மொழி-புனைவு          

தமிழ் இலக்கிய சூழலில் பெண்ணியக்கோட்பாடுகள் என்பதை அடுத்து க.பஞ்சாங்கத்திண் பெண்ணியல் சார்ந்த கட்டுரை வரிசைகளில் முக்கியத்துவம் பெறுவது பெண்-மொழி- புனைவு. இதே பெயரில் கட்டுரை ஆசிரியரின் நூலொன்றும் வந்துள்ளதாக, நவீன இலக்கிய கோட்பாடு நூல் நமக்குத் தெரிவிக்கிறது.

பெண்பற்றிய கற்பிதம் பிற கற்பிதங்களைப்போலவே ‘மொழி-புனைவு’ என்கிற இரு காரணிகளின் சேர்க்கையால் உருவானது என்பது ஆசிரியரின் கருத்து. இதனை முன்வைத்ததில் ஆணுக்குப் பெரும்பங்குண்டு என்பதை உறுதிபடுத்துகிற ஆசிரியர் தமிழ்ப் பண்பாட்டை வடிவமைத்ததும் அதுவேதான் என்கிறார். “ஒரு தந்தை வழி சமூகத்தில், ‘பெண்ணின் அடையாளம்’ என்பது ஆணால் புனையப்பட்ட ஒன்றுதான். ஆண் பெண் உறவு முறையில் ஆணின் அதிகாரம் பெண் உலகத்திற்குள் நுழைவதில் பெரும் பங்கு அளித்திருப்பது மொழிதான் என்பது தெரிகிறது”. “இந்த மொழியின் திருவிளையாடல் தமிழ்ப் பண்பாட்டை வடிவமைப்பதில் ஆழமான செல்வாக்கு செலுத்தியுள்ள தொல்காப்பியத்தில் எவ்வாறு ஆணின் மொழியாக வெளிப்படுகிறது? இவ்வாறு ஆண் கற்பித்துள்ள ‘அர்த்தத்தை மாற்றி பெண் தன் நோக்கில் அர்த்தங்களைக் கற்பிக்க இன்று எவ்வாறு தன் இயக்கத்தை அமைத்துக்கொள்ளவேண்டும்? எனும் இரண்டின் அடிப்படையில் இந்தக் கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது ” என எடுத்த எடுப்பிலேயே தமது கட்டுரையின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார்,
” இது இந்த உலகத்தின் இயற்கை ; இது இந்த பெண்ணின் இயற்கை குணம்” என்று ஒரு பொருளின் இயற்கைப் பண்பை அறிந்துகொண்டதாக உரிமைகொண்டாடுவதெல்லாம் நம்முடைய ‘மொழி’ என்கிற வாய்ப்பாடு மூலம் நமக்கு வந்து சேர்ந்த புனைவுகள்தாம்” எனக் கட்டுரையைத் தொடங்குகிற ஆசிரியர்,  லக்கான் (Jacques lacan) மற்றும் •பூக்கோ(Michel foucault) என்கிற இரு பிரெஞ்சு அறிஞர்களின் கருத்துருவாக்கங்களின் அடிப்படையில் தமது வாதங்களை வைக்கிறார்.

“அம்மாவிடம் இருந்து பிரித்துத் தன்னைத் தனியாக அடையாளம் காணும் உணர்வைக் குழந்தையானது குறியீட்டு ஒழுங்குடைய மொழி எனும் அமைப்பிற்குள் நுழைந்த பிறகுதான் அடைகிறது” என்கிற லக்கான் கூற்றையும்; ஒரு பொருளுக்கு அர்த்தம் என்பது அதிகாரம் யாருடைய கட்டுபாட்டுக்குள் இருக்கிறதோ அவர் புனைந்து தருகிற மொழிதான் அப்பொருளுக்கான அர்த்தம் என்றாகிறது”, என்கிற •பூக்கோ கூற்றையும் தெரிவித்து, ஒரு பொருளுக்கான அர்த்தத்தைக் கட்டமைப்பதில் ஆசிரியர் மொழிக்கும் புனைவுக்கும் உள்ள ஆற்றலைத் தெரிவிக்கிறார்.
ழாக் லக்கான் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஓர் உளப் பகுப்பாய்வாளர். பிராய்டின் உளவியல் ஆய்வுமுடிவுகள் உயிரியல் உண்மைகளைக் காட்டிலும் பெரிதும் மொழிக் கூறுடன் இணக்கமானவை என்ற கருத்தியத்தை முன் வைத்தவர். குழந்தைப்பருவத்தில் முதன் முதலாக தன்னைப் பிறராக அறியநேரும் ஆடிப் படிநிலை( Stade du miroir)பற்றி விரிவாக ஆய்வு செய்தவர்.

மிஷெல் •பூக்கோ ஒரு தத்துவவாதி, முன்னவரைபோலவே பிரான்சு நாட்டைச்சேர்ந்தவர். அறிவுக்கும் அதிகாரத்திற்குமான உறவை வரையறுத்தவர். வெவ்வேறு துறையச் சார்ந்தவர்களாயினும் ‘தன்’ னை கட்டமைத்தலில் (subjectivation) மொழியின் பங்கு என்ன என்பதை தெளிவுபடுத்தியதில் ஒன்றிணைகிறவர்கள்.

“அதிகாரம் எப்பொழுதும் தான் அதிகாரம் செலுத்துகிற பொருளின் மொழியை பிடுங்கிகொள்கிறது அல்லது அடக்கிவைத்துவிடுகிறது” (ந.இ.கோ.பக்.58)” என்ற பூக்கோவின் கருத்துருவாக்கத்தை முன்வைக்கும் கட்டுரை ஆசிரியரின் சொற்றொடரில் உள்ள ‘அதிகாரத்தை’ எப்படி வேண்டுமானாலும் பொருள்கொள்ளலாம். ‘அதிகாரம்’ என்ற ஒற்றைசொல்லின் பின்புலத்தில் பல காரணிகள் தனித்தோ, இணைந்தோ இருக்கின்றன. ஆண்-பெண்; தடித்தவன்-மெலிந்தவன்; கற்றவன்-கல்லாதவன்; பெரும்பான்மை-சிறுபான்மை; கோபம்-அமைதி; என்கிற இருமை வரிசைகளில் முதலாவது அதிகாரத்தைப் பொதுவில் கைப்பற்றுகிறது. நியதிக்கு மாறாக இந்த ஜோடியில் இரண்டாவது முதலாவதை அதிகாரம் செலுத்துகிற தருணமும் உருவாகலாம். அப்போதும் இந்த ஜோடிகளில் ஒன்று, அவர்களுக்கிடையில் ஏதோவொரு செயல்பாட்டில் மற்றதிடம் போட்டியிட முடியாத கட்டத்தில் தான் அடிமையாக, பிறமை எஜமானனாக அதிகாரத்தைக் கையிலெடுகிறது. எதிரியின் ஆயுத உரிமத்தை இரத்து செய்து நிராயுதபாணியாக்கினால் வெகு எளிதாக அவனைப் பலிகொடுக்கலாம். மொழி ஆயுதத்தை அதிகாரம் தனதாக்கிக்கொள்ளும் சூட்சமும் அதுவேதான்.

“தேவ பாடையைப் பேசக்கூடாது மீறிப் பேசினால் நாக்கு வெட்டப்படும்” எனும் மனுதர்ம சட்டம்; “யாகாவாராயினும் நாகக்க” எனும் வள்ளுவன்; “என் காதலன் என்னைவிட்டு அகலும் படியாக ப் பேசிய ஊரார் ‘நா’வானது ஏழு நண்டு மிதித்த ஒரு நாவல் பழம்போல அழுகுகிப்போக,” சாபமிடும் குறுந்தொகைத் தலைவி; வாயாடி மனைவியிடமிருந்து மணவிலக்கு பெற அனுமதித்த பண்டைய சீன நாட்டின் சட்டம்; பெண்ணின் ‘நா’விற்கு எதிரான வழக்கிலிருக்கும் பழமொழிகள் என அனைத்துமே ஆசிரியருக்கு அதிகாரத்திற்கும் மொழிக்குமுள்ள நெருங்கிய பிணைப்பை வெளிப்படுத்தும் சான்றுகள்.

தொல்காப்பியம்: ஓர் ஆணின் அதிகார அணுகுமுறை

இதன் தொடக்கத்தில் கூறியதுபோல கட்டுரை ஆசிரியருக்கு தொல்காப்பியர் ஆணாதிக்கத்தின் பிரதிநிதி. ஆசிரியர் சொற்களில் எடுத்துரைப்பதெனில் “மொழிக்குள்ள ஆற்றலை புரிந்துகொண்டு……பெண்ணின் வாய் மொழியில் கை வைக்கிறார்”. களவின் மரபை நெறிப்படுத்துகிற தொல்காப்பியர் ‘சிறத்தல்’ தலைவிக்கும், ஐயம் தலைவர்க்கும் உரியதென்பதையும், கைக்கிளையில் “சொல் எதிர் பெறாமல், சொல்லிச் சொல்லி இன்புறுவதற்கு ஆணுக்கே அவர் இடம் தருகிறார் எனக்கூறியும் தொல்காப்பியர் “ஆணோடு கொள்ள நேர்கிற ஆரம்ப உறவிலேயே பெண்ணுக்கான சொல்லாடல் தடை செய்யப்படுகிறது” என்கிறார்.
தொல்காப்பியரை பெண்ணின் எதிரி என நிறுவ ஆசியர் கூறும் மற்றொரு எடுத்துக்காட்டு “காதல் வாழ்வின் தொடக்கத்தில் ஏற்படுகின்ற வேட்கை, இடைவிடாது நினைத்தல், மெலிதல், நாணம், நீங்குதல்… முதலான மனநிகழ்வுகளை தலைவன் தலைவி இருவருக்கும் பொதுவெனக்கூறும் தொல்காப்பியர் இம்மன நிகழ்வுகளின் தொடர்விளைவான மொழிப்படுத்தி பேசுவது மட்டும் ஆணுக்கே உரியதென கூறுவது கட்டுரை ஆசிரியர் எடுத்துக்காட்டியிருப்பதுபோல எவ்விதத்திலும் நியாயமில்லைதான். அதுபோலவே பஞ்சாங்கத்திடம் தொல்காப்பியர் வாங்கிக் கட்டிக்கொள்ளும் மற்றொரு இடம் கற்பியலில் ‘பிரிவின்’ கீழ் “மொழி எதிர்மொழிதல் பாங்கற்குரித்தே” எனக்கூறி தலைவின் வாயை அவர் (தொல்காப்பியர்) அடக்கும் இடம். கட்டுரை ஆசியருக்கு தொல்காப்பியர் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் அடையாளம். பெண்களின் மொழி ஒடுக்கப்பட்டு ஆண்களின் மொழி உருவாக்கத்திற்குக் காரணமானவர். தமிழ்மரபில் காணும் பெண்ணின் தாழ் நிலைக்கு தொல்காப்பியரும் பொறுப்பு.

டார்வின் மற்றும் பிராய்டு
தொல்காப்பியரை அடுத்து டார்வினும் பிராய்டும் நண்பர். க.பஞ்சாங்கத்தின் கோபத்திற்கு ஆளாகிறார்கள். டார்வின் சிந்தனையும், பிராய்டுவின் சிந்தனையும் ‘ஆண் வலிமையானவன் பெண் மென்மையானவள்’ என்ற தொல்காப்பியத்தின் சிந்தனையை முன்வைக்கின்றன என்கிற கருத்தியம் ஓர் உணர்ச்சிவேகத்தில் நண்பரிடம் உருவாகியிருக்கலாம் என்பதென் எண்ணம். “வலிமையுள்ளவை வாழும் மற்றவை மாயும்” என்கிற டார்வின் கூற்றையும் அதுபோலவே பிராய்டின் பகுப்பாய்வு முடிவுகளையும் ஆணாதிக்க குரலாகப் பார்ப்பது சரியாகாது. அறிவியல் முடிவுகள் தொல்காப்பியம்போல பண்பாட்டு அரசியல் பேசவந்ததல்ல, மரபுகளால் கட்டமைக்கப்பட்டதுமல்ல. அவை ஆய்வின் முடிவுகள், பகுத்தறிவின்பாற்பட்டவை. டார்வினினுடைய இயற்கை தேர்வு என்ற முடிவின்படி ஓர் உயிரினத்தின் முடிவானது அதன் உயிர் அணுக்கள், பிற உயிரினங்கள், சுற்று சூழல்கள் சார்ந்த விடயம். இத்தகைய சூழலில் பிறவற்றைவிட சிறந்த முறையின் தன்னைத் தக்கவைத்துக்கொள்ளும் ஓர் உயிரினமே பிழைத்து உயிர்வாழக்கூடியதாக இருக்கும். இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். எனவே வலிமை என்ற சொற் பிரயோகத்தை பெண்களுக்கு எதிரான அரசியலுக்குரியது என்ற முடிவுக்கு வர இயலாது. அவ்வாறே யூதர் பிரார்த்தனையின்படி “கடவுளே என்னை ஒரு பெண்ணாக படைக்காததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்” என்று ஆண்களும்; “கடவுளே என்னை ஆண்களின் விருப்பப்படி படைத்தமைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன்” எனப் பெண்களும் சொல்வதாலேயே அம்மரபிலிருந்து வந்த பிராய்டு ஒரு ஆணாதிக்க ஆசாமியாகத்தான் இருக்க முடியும் என நினைப்பதும், அவர் கண்டறிந்த ‘உளப்பகுப்பாய்வு உண்மை’, ஆணாதிக்க சிந்தனையெனத் தீர்மானிப்பதும் முறையாகாது. ஆணாதிக்க தொல்காப்பியர் மரபிலிருந்து, தமிழ்ப்பெண்ணுரிமைக்குக் குரல்கொடுக்க ஒரு கட்டுரை ஆசிரியர் கிடைக்கிறபொழுது, பிராய்டு விடயத்திலும் அது ஏன் சாத்தியமாகாது?

பெண்ணியல் கோட்பாடுகள்

இறுதியாக க.பஞ்சாங்கம் மேலை நாட்டுப் பெண்ணியற் கருத்துகள் அடிப்படையில் பெண்ணுக்கான மொழியை உருவாக்கவேண்டுமென்கிறார். “ஆணாதிக்கம் நிறுவியுள்ள இந்தக் குறியீட்டு அமைப்பு முறையில் இருந்து பெண் வெளியேவர மொழி உலகம் உருவாவதற்கு முன்பு இருந்த இயற்கையான- உண்மையான மூலப்பெண்னாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள இவள் என்ன செய்யவேண்டுமென்ற கேள்வியையும் எழுப்பி அதற்குப் பதில் கூறுவதுபோல “பெண்ணின பாலியலுக்கான சில கோட்பாடுகள் இருக்குமானால் அவைகள் ஆண்களின் மொழிக்கு வெளியேதான் இருக்க முடியும்” என ‘பெண்னெனும் படைப்பு’ நூலிலிருந்து மேற்கோள் காட்டுவதோடு, பெண்களுக்கான மொழியை உருவாக்க ஹெலென் சீக்ஸ் என்கிற மேலை தேயத்து பெண்மணியின் யோசனைகளைப் (பெண்கள் கவிதைப் படைக்கவேண்டுமென்பது அதிலொன்று) பின்பற்றசொல்கிறார். அதேவேளை தமிழ்ச்சூழலுக்குப் பொருந்துபடியான அப்பெண்மொழி அமையவேண்டும் என முடிக்கிறபோது வழக்கம்போல தமிழினத்தின் மீது கட்டுரை ஆசிரியருக்குள்ள உண்மையானப் பற்றுதலை விளங்கிக்கொள்ள முடிகிறது.

(தொடரும்)

 

‘கா•ப்கா’வின் பிராஹா -1

Prague 008பாரீஸ் புறநகர் பகுதியிலுள்ள ‘வொரெயால்’ தமிழ்க் கலாசார சங்கம் என்றதொரு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த செக் (Czech) நாட்டு தலை நகரம் ‘பிராகு'(Prague)விற்கு மூன்று நாட்கள் பயணமாக சென்றுவந்தேன். பிரான்சுநாட்டில், எல்லா நாடுகளையும் போல தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் சங்கங்கள் வைத்துள்ளனர். உழைப்பு, ஊதியம், பிள்ளைகள் கல்வி என தாயகத் தமிழர்களைப்போலவே வாழ்க்கையை செலுத்துகிற அயலகத் தமிழர்களுக்கு இடைக்கிடை உற்சாகமூட்ட பண்டிகை தினங்களைக் கொண்டாடுதல், உள்ளூர் நகர நிர்வாகங்களின் உதவியுடன் வார இறுதியில் தமிழ்க் கற்பித்தல், இசை, நாட்டிய வகுப்ப்புகளுக்கு ஆவன செய்தல், வருடத்திற்கு ஒரு முறை, பெரும்பாலான அங்கத்தினர்களின் விருப்பத் தேர்வுக்கு உட்பட்ட ஊர்களுக்கு அழைத்துச்செல்லுதல் போன்றவற்றில் சில சங்கங்கள் ஆர்வமுடன் செயல்படுகிறார்கள்.
வொரெயால் பகுதி தமிழ்ச் சங்க அங்கத்தினர்களுடன் பேருந்தில் ஏற்கனவே, ரோம், ஜெனீவா, பைசா, வெனீஸ் என்றெல்லாம் பயணித்த அனுபவம் உண்டு. பின்னர் பேருந்தைத் தவிர்த்து இடையில் சில ஆண்டுகள் வேறுவகைப் போக்குவரத்து சாதனங்களில் சுகம் கண்டாயிற்று. வொரெயால் தமிழ்ச்சங்க தலைவர் இலங்கைவேந்தன் சில நெருக்கடிகளால் நிறம்மாற வேண்டியிருக்கிறதென்கிற குறையத் தவிர்த்து, தமது கடின உழைப்பு காரணமாக பாரீஸ் இந்தியத் தமிழர்களிடை அறிமுகம் பெற்றவர். மார்ச் மாத இறுதியில் அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிராகு போகும் திட்டம் இருக்கிறது, நீங்களும் கலந்துகொண்டால் மகிழ்ச்சியாக இருக்குமென்றார். மனதில் அழுக்கின்றி, அவர் உண்மையைத் தொட்டு; உரையாடலைத் தொடர்ந்தபோது, சுவாசத்தின் இடைவெளிகளில் இரண்டு பயணிகள் குறைந்தார்கள் அதனால் அழைத்தார் என்ற நினைப்பினை ஒதுக்கிவிட்டு, சம்மதித்தேன்.

வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் பேருந்தில் பயணிப்பதில் உள்ள சங்கடங்கள் அச்சுறுத்தின. பிரான்சு நாட்டின் வடகிழக்கில் இருக்கும் எனது நகரமான ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg)நகருக்கும் செக் நாட்டின் தலைநகரான பிராகு நகருக்கும் அதிக தொலைவில்லை; கிட்டத்தத்த 600 கி.மீ. பாரீஸ் செல்ல 500 கி.மீட்டர் ஆகிறது. அதுவும் தவிர பாரீஸிருந்து அவர்கள் செல்லும் பேருந்து பிரான்சு நாட்டின் வடகிழக்குப் பகுதியைக் கடந்தே போகவேண்டும், அதாவது எனதுப் பிரதேசத்தைத் தொட்டுச் செல்லவேண்டும். ஆக ஸ்ட்ராஸ்பூர்கிலிருந்து பாரீஸ் சென்று பிராகு செல்லும் பயணம் மலையைக்கெல்லி எலியைப் பிடிப்பதற்குச் சமம். ஆறுமனி நேரத்தில் சென்றடையக்கூடிய பயணத்திற்கு பதினெட்டு மணி நேரம் செலவிட்டதை நீங்கள் எப்படி எடுத்துகொள்கிறீர்களோ ஆனால் எனக்கெப்போதும் எலிக்கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் மலையைக் கெல்லிப்பார்ப்பதில் விருப்பம் அதிகம். அதிலும் கடந்த சில வருடங்களாக எனது தினசரிகள் வாசிப்பு, எழுத்து, இணையம் என்ற சொற்களோடு பிணைந்த வெளியாக இருந்து வருகிறது. மனிதர்களோடு கலப்பதும், கைகோர்ப்பதும், உரையாடுவதும் குறிஞ்சிப்பூவிற்குக் காத்திருக்கும் நிலமைதான். எழுத்தென்கிற காரியம் தனிமையை வலியுறுத்தினாலும்; சலவை செய்த, ஞானம் பூசிய, மேட்டிமைத்தன சொற்கள் அலுப்புறுகிறபோது சராசரி மனிதர்கள், அவர்கள் முகங்கள், கண்கள்; குரல்கள், அவற்றின் ஏற்ற இறக்கங்கள்; குறும்புகள், கலகலப்புகள்; கேட்டறியாத பேச்சுகள், எளிமையான வார்த்தையாடல்கள் தேவைப்படுகின்றன. அவற்றை வழங்கியதில் நாராயணன் அவர் சகோதரர் திருநாவுக்கரசு இருவருக்கும் பெரும் பங்குண்டு. சக பயணிகளில் கிருஷ்ணராஜ் என்னை அதிகம் நேசிக்கும் ஒருவர். அவரது தொடர்பு முகநூல் வழியாக சிற்சில வார்த்தை பரிவர்த்தனைகளுடன் இருந்துவந்தது. கூடுதலாக சிறிது நேரம் ஒதுக்கி பேச இப்பயணம் வாய்ப்பை அளித்தது. இராமலிங்கர்மீது தீராக் காதலும் பக்தியும் கொண்டுள்ள இளைஞர் அறிவழகன் ( குறிப்பாக தமிழ் மொழிமீது அவர்வைத்திருக்கும் அளப்பரிய அன்பை மறக்காமல் இங்கே குறிப்பிடவேண்டும். அவர் உரையாடலின் பெரும் பகுதி நமது மொழிக்கு ஏதேனும் செய்யவேண்டுமே என்கிற தொனியில் இருந்தது.), குமார், சங்கர், குரோ என பயணத்திற்கு மகிழ்ச்சியூட்ட பலர் இருந்தனர்.

மே 8 2014

பாரீஸிலிருந்து பேருந்து மே 7ந்தேதி இரவு சுமார் 11.30 மணி அளவில் புறப்பட்டது. இரவு 9.30 அல்லது அதிகபட்சமாக 10 மணிக்கெல்லாம் உறங்கிவிடும் பழக்கம் கொண்டிருந்த எனக்கு இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. ‘நேரத்தில் தூங்கத் தவறினால் உனக்கு உறக்கம் வராது’ எனத் தூக்கவாச முனிவரின் சாபத்தை வாங்கிவந்திருக்கிறேன். போததற்கு சில பயணிகள் வேட்டுச்சத்தம் கேட்ட வௌவால்களாக ஆர்ப்பரிக்க, கண்களைத் தொட்ட உறக்கம் இமைகளை எட்டாமலேயே கூடுதலாக அலைக்கழித்தது. பாரீஸிலிருந்து குறைந்தது 1000 கி.மீதூரமாவது பிராகு இருக்கும். ஜெர்மன் வழியாகச் செக் நாட்டிற்குள் புக வேண்டும். மறுநாள் அதாவது மே 8 அன்று பிராகு நகரிலுள்ள ஓட்டலை அடைந்தபோது பிற்பகல் இரண்டு மணி. காலைக்கடன்கள், உணவு எடுத்துக்கொள்ள, இருநூறு கி.மீட்டருக்கு ஒருமுறை பேருந்து ஓட்டுனர்கள் மாறிக்கொள்ள என வாகனம் இடைக்கிடை நிறுத்தப்பட்டது.

கா•ப்கா வின் பிராகு நகரத்தை பிராஹா(Praha) என செக் மொழியில் அழைக்கிறார்கள். செக் நாடு வெளித்தோற்றத்தில் வளர்ந்ததொரு ஐரோப்பிய நாடுபோலவே இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதால் பிரெஞ்சு குடியுரிமை பெற்றுள்ள எங்களுக்கு நுழைவு அனுமதி தேவையில்லை. நாங்கள் தங்கிய ஓட்டல் நான்கு நட்சத்திர ஓட்டல் எனச்சொல்லப்பட்டது. IATA அந்த ஓட்டலுக்கு நான்கு நட்சத்திரத் தகுதியை அளிக்க வாய்ப்பில்லை. ஓட்டல் கட்டிடத்தின் வெளி பராமரிப்பு கம்யூனிஸ பிடியிலிருந்த கிழக்கு ஐரோப்பியத்தின் கடந்தகாலத்தை நினைவூட்டியது. இரவானால் இருளில் பதுங்கிக்கொள்கிறது. 19வது மாடியில் எங்களுக்கு அறை ஒதுக்கியிருந்தார்கள். ஓரளவு விசாலமான அறை, சலவைமணம் குறையாத வெண்பனியை தூவியதுபோல விரிப்புகள், ஒருக்களித்து படுத்து கை நீட்டினால் வானத்தைத் தொட்டு நட்சத்திரங்களில் இரண்டொன்றை பறித்துவிடலாம், விழிமூடினால் சட்டென்று துயில்கொள்ள முடியும், சில சில்லறை அசௌகரியங்களை சகித்துக்கொண்டால், இரவை சுகமாக கழிக்க முடியும்.

மதியம் 3 மணிக்கு ஓட்டலைவிட்டு வெளியில் வந்தோம். அறையின் வெப்பத்திற்கு எதிர்பாட்டுபோல சிலுசிலுவென்று எதிர்கொண்ட காற்றைத் தழுவியபடி வீதிகளைக் கடக்கவேண்டியிருந்தது. மனிதர் நடமாட்டத்தை அதிகம் தவிர்த்த தெருக்கள். அடர்ந்த புல்வெளிகள், மரங்கள் இடையே வெளிர் பச்சை அல்லது காவிநிற மூப்படைந்த வீடுகள்; வீட்டு எண்கள் புதிதாகத் தரப்பட்டிருக்கின்றன. பழைய எண்கள் இரத்தசிவப்பு தகட்டில் இன்னமும் பளிச்சென்று மின்னுகின்றன. எதிர்ப்பட்ட இரண்டொரு முகத்திலும் மனிதர்கள் இல்லை. பெண்கள் உட்பட சிறுவர்களிடத்திலுங்கூட சின்னதாய் ஒரு மத்தாப்பு சிரிப்பு ம்..இல்லை. பெண்கள் ஏதோ யுத்த நிழலில் இருப்பவர்கள்போல முகத்தை இறுக்கிக்கொண்டு நடக்கிறார்கள். பிரான்சு நாட்டில் செக் பெண்கள் அழகாய் இருப்பதாக நினைப்பதுண்டு. பிராகு நகரத்தில் அது பொய்யென்று தோன்றியது. தங்கியிருந்த ஓட்டலில் அதற்கான விடையும் கிடைத்தது. உள்ளூர் மனிதர்களிடம் செக் அல்லது ஸ்லாவ் மொழி பேசுகையில் அழகின்றி இருக்கிற பெண் வரவேற்பாளருக்கு பிரெஞ்சில் பேசுகிறபோது ஒரு களை வந்துவிடுகிறது. புறப்படும் நாளன்று, “அதிகம் பிரெஞ்சு பேசிப் பழகிக்கொள், அழகாய் இருப்பாய் என்றேன்.

பிற்பகல் மூன்றரையிலிருந்து நான்கு மணி அளவில் Strasnicka என்கிற இடத்திலிருந்து ஒரு மூன்று அல்லது நான்கு வழித்தடங்களைக் கடந்து ம்யூசியம் என்ற இடத்திற்கு வந்தோம். பிராகு நகரத்தின் புது நகரம் என்ற பகுதியில் அது இருக்கிறது. அங்கிருந்து பார்க்க வேண்டிய இடங்களில் அனேகம் கூப்பிடு தூரத்தில் என்றார்கள். இப்பகுதி பிராஹா நகரத்தின் இதயப்பகுதி. பொதுவாக ஐரோப்பிய நகரங்களுக்கென்று ஓர் சிறப்பு இருக்கிறது. கலை, இலக்கியம், அறிவியல் என எத்துறையை எடுத்துக்கொண்டாலும் புதிய தேடலில் அக்கறைகொண்ட ஆர்வலர்களைக் கொண்டவை அவை. புதிய தேடலில் ஆர்வத்துடன் இயங்கும் இம்மக்கள்தான் தங்கள் பழமையைக் போற்றுவதிலும் பராமரிப்பதிலும் முன் நிற்கிறார்கள். இப்பண்பிற்கு செக் நாடும் அதன் தலைநகரான பிராஹாவும் ஓர் உதாரணம். கோத்திக், மறுமலர்ச்சிக் காலம், பரோக், நவீனம் அவ்வளவும், வெகுகாலம் கம்யூனிஸத்தின் பிடியில் கட்டுண்டு அண்மையில் தான் அவை சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றன என்பதை உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. முரட்டுக் கணவனிடம் வாழ்க்கைப்பட்ட பெண் விடுதலை பெற்றதுபோல அவை இருந்தன.

நேஷனல் மியூசியமும் வென்ஸ்லஸ் சதுக்கமும் (Wenceslas Square)

Prague 022நேஷனல் ம்யூசியத்திலிருந்து கீழ் நோக்கிப் பார்த்தால் மிகப்பெரிய சதுக்கமொன்று வருகிறது. பிராஹா நகரின் முக்கியமான சதுக்கங்களில் ஒன்று என்றார்கள். அதன் தலைமாட்டில் பொஹீமிய வம்சத்தில் வந்த புனித வென்ஸ்லஸ் (St.Wencesles) குதிரையில் ஆரோகனித்திருப்பதுபோன்றதொரு சிலை. தீவிர பக்திமான் ஆனால் குதிரையில் கம்பீரமாக அமர்ந்திருப்பதற்கும் அவர் சுயவரலாற்றிர்க்கும் சம்பந்தமில்லை. தந்தை இறந்தவுடன் அம்மாவின் பரமரிப்புக்கு அஞசி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவராம். இந்தப்பாட்டிக்கு மருமகளே எமனாக வந்திருக்கிறாள். கிறித்துவ மத போதனைகளைக் கேட்டுக் கேட்டு, கிறித்துவ மதத்தில் ஆழ்ந்த பற்றுடன் வளர்ந்த வென்ஸ்லஸ், ஓர் அமைதி விரும்பி. யுத்தத்தைத் தவிர்க்க எதிரிகளுக்குக் கப்பம் செலுத்தியவர். அதனைச் சகித்துகொள்ளாத அவ்ர் சகோதரனே சதி செய்து, அவர் எழுப்பிய தேவாலயத்திலேயே வைத்து கொலைசெய்கிறான். பின்னர் அவருக்கு புனிதர் பட்டம் கிடைக்கவும் அவனே காரணம் என்கிறார்கள். எல்லாக் காலத்திலும் அதிகாரத்திற்கென்று பிரத்தியேக மூளையுண்டு என்பதை வரலாறு இங்கே மீண்டும் தெரிவிக்கிறது. வென்ஸ்லஸ் சிலையிலிருந்து இருபது அல்லது இருபத்தைந்து மீட்டர் தூரத்தில் இரண்டு கறுப்பு நிற சலவைகல்லினால் ஆன பாளங்கள் (slabs) இருக்கின்றன. மெழுகு திரியைகொளுத்திவைத்துவிட்டு ஓர் இளம்ஜோடி படம்பிடித்துக்கொண்டது. சுற்றிலும் அணைக்கப்படாமல் நிறைய மெழுகுத் திரிகள் சுடர்விட்டுக்கொண்டிருந்தன. அருகிற் சென்று பார்த்தேன். செக் மொழியில் எழுதியிருந்தார்கள். இரவு இணைய தளத்தில் தட்டிபார்த்தபோதுதான், சோவியத் யூனியன் ஆக்ரமிப்பின்போது அவ்விளைஞர்கள் இருவரும் உயிர்ர்த் தியாகம் செய்தவர்கள் என விளங்கிக்கொண்டேன். அதில் ஒருவர் தீக்குளித்தவராம். இன்றைக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் மக்கள் குதிப்பதெனில் இச்சதுக்கத்தில்தான் கூடுகிறார்களாம். வெகுகாலம் இச்சதுக்கத்தில் குதிரை வியாபாரமும் நடைபெற்றுள்ளது. Prague 024  Prague 028 Prague 027 Prague 025 Prague 031  Prague 027  Prague 032 Prague 010இச்சதுக்கத்தின் இரு பக்கமும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆக்ரமித்திருக்கின்றன. மிச்சமுள்ள இடங்களில் துரித உணவகங்கள், தாய் மஸாஜ் நிறுவனங்கள் (9.99 யூரோவுக்கு உடம்பைப் பிடித்துவிட தாய்லாந்துபெண்கள்(?) காத்திருக்கிறார்கள்), நாணயம் மாற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றைப் பார்க்க முடிந்தது. ஐரோப்பிய யூனியனில் இருந்தாலும் இங்கிலாந்தைப்போல யூரோ உபயோகத்தில் இல்லை. க்ரோனா என்கிற கிரௌன் தான் தேசிய நாணயம் ஒரு யூரோவுக்கு 27 கிரௌன். விலை அதிகமாக தெரிகிறது. கிரிஸ்டல் பொருட்கள், வில உயர்ந்த கற்கள் அவற்றில் தயாரான மணி மாலைகள், காதணிகள், கழுத்தணிகள், கைவளைகள். பிராஹாவில் இப்பகுதியிலும் இதனை ஒட்டிய பழைய நகர வீதிகளிலுமே உல்லாசப்பயணிகளையும் உள்ளூர் மக்களையும் சுறுசுறுப்பான வியாபாரத்தையும் பார்க்க முடிகிறது. தேசிய வாக்கியம் ‘Pravda vítězí’ அதாவது வாய்மையே வெல்லும்.
(தொடரும்)

 

 

 

சமகாலத்து நாவல்கள்- செஞ்சியின் கதை

-ந. முருகேசபாண்டியன்

(கிருஷ்ண்ப்ப நாயக்கர் குறித்த இக்கட்டுரை சம கால நாவல்கள் என்ற தலைப்பில் ந. முருகேசபாண்டியன் எழுதி தி இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்தது. க.பஞ்சாங்கம் எழுதி காலசுவடில் வெளிவந்த கட்டுரையை ஏற்கனவே நீங்கள் இதே பகுதியில் வாசித்திருக்கலாம், வாசிக்காத நண்பர்கள், விமர்சனங்கள் என்ற தலைப்பில் வாசிக்கலாம். -நா.கிருஷ்ணா)

Na.krishna -New books3 001

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (நாவல்)
நாகரத்தினம் கிருஷ்ணா
சந்தியா பதிப்பகம்,
நியுடெக் வைபவ், 53ஆம் தெரு,
அசோக் நகர்,
சென்னை. 83
பக்கங்கள்: 256, விலை: ரூ. 160

பூமியில் மனித இருப்பு என்பது நினைவுகளின் வழியே கட்டமைக்கப்படுகின்றது. கடந்த காலத்தில் எப்பொழுதோ நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பாக விரியும் பதிவுகள் வரலாறாக உருமாறுகின்றன. வரலாற்றை மீண்டும் எழுதுதல் என்பது தொடர்ந்து நடைபெறுகின்றது. புனைவுகளின் வழியே கட்டமைக்கப்படும் வரலாற்றை முன்வைத்த எழுத்து, ஒரு நிலையில் வரலாறாகவும் புனைவாகவும் உருமாறுகின்றது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலான கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி ,செஞ்சிக் கோட்டையை முன்வைத்த வரலாற்றுச் சம்பவங்களின் பின்புலத்தில் விரிந்துள்ளது.செஞ்சிக் கோட்டை என்பது வேறுமனே கற்களால் கட்டப்பட்ட கட்டிடத் தொகுதி மட்டுமல்ல.அந்தக் கோட்டை யார் வசம் இருகின்றதோ அவரது கையில் அதிகாரம். கோனார்களால் கட்டப்பட்ட கோட்டை முஸ்லிம், நாயக்கர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் எனத் கொடர்ந்து கைமாறிக்கொண்டே இருக்கிறது.
வரலாற்றைப் புனைவாக்கும்போது பல்வேறு வரலாறுகள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வேறுபட்ட சாத்தியங்களை முன்வைத்துச் சொல்லப்படும் நிகழ்வுகள் வாசிப்பில் சுவராசியத்தைத் தருகின்றன. ஹரிணி என்ற இளம்பெண் பிரான்சிலிருந்து புதுச்சேரி வந்து, செஞ்சிக் கோட்டை பற்றிய தகவல்களைத் தேடிப் போகின்றாள். பெரியவர் சடகோபன்பிள்ளையிடமிருந்து செஞ்சி பற்றிய வெளியிடப்படாதகிருஷ்ணப்பர் கௌமுதி பிரதி கிடைக்கின்றது.அவளது தேடல் துரிதமாகின்றது.மரணக் கிணறு, தங்கப் புதையல், பழி வாங்கக் காத்திருக்கும் முண்டக்கண்ணி அம்மன் என மர்மங்களால் நிறைந்த செஞ்சிக் கோட்டை கவர்ச்சிமிக்கதாகின்றது.
தமிழில் வரலாற்றுப் புனைவு எனில் அழகிய ராஜகுமாரிகள், வீரமான ராஜகுமாரர்கள். அரண்மனைகள், சதியாலோசனைகள் என நீள்வது வழக்கம். நாகரத்தினம் பல்வேறு வரலாற்று ஆவணங்களின் வழியே சித்திரிக்கும் செஞ்சியின் கதை மாறுபட்டுள்ளது. படைபலத்தின் மூலம் கட்டமைக்கப்பட்ட அரச அதிகாரம் எப்படியெல்லாம் மனித உடல்களை வேட்டையாடியது என்பது நம்பகத்தன்மையுடன் புனை வாக் கப்பட்டுள்ளது. அதிலும் மதத்தின் பின்புலத்தில் இயங்கும் அரசின் கொடுங்கரம் எல்லாத் திசைகளிலும் நீள்கின்றது. எல்லா மதங்களும் மரணத்தை முன்வைத்துப் பாவ புண்ணியம், நரகம், சொர்க்கம் பற்றிய பயமுறுத்தல்களுடன் அரசதிகாரத்துடன் கைகோர்த்துக் கொண்டு உடல்களை வதைத்தலும், ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தலும் செய்துள்ளன.
கி.பி.16ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஞ்சிக் கோட்டையை ஆண்ட கிருஷ்ணப்பநாயக்கரின் அதிகாரம் சிதம்பரம் வரை நீள்கிறது.சிதம்பரம் நகரிலுள்ள சிவனின் ஆலயம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைமைத் தீட்சிதரான சபேச தீட்சிதர் சகலவிதமான செல்வாக்குடன் வாழ்ந்து வருகின்றார். பேரழகியான சித்ராங்கி தாசியுடன் உறவு எனச் சௌகரியமாக இருகின்றவரின் வாழ்க்கையில் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் சிதம்பரம் கோவிலில் பெருமாள் கோவிலை மறு நிர்மாணம் செய்வதற்காக வர இருக்கிறார் என்ற தகவல் துயரத்தைத் தருகிறது. தீட்சிதர்கள் ஒன்று சேர்ந்து மன்னரிடம் விண்ணப்பித்துப் பெருமாள் கோவில் கட்டுவதைத் தடுக்க முயல்கின்றனர். அம்முயற்சி தோல்வியடைந்தபோது, இருபது தீட்சிதர்கள் ஒவ்வொருவராகக் கோபுரத்தின் உச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கின்றனர். சைவம், வைணவம் ஆகிய இரு பிரிவினர்களிடையே, அன்றைய காலகட்டத்தில் நிலவிய முரண்கள் அழுத்தமாகப் பதிவாக்கியுள்ளன. இயேசு சபை பாதிரியார்களின் குறிப்புகளை வைத்து நாகரத்தினம் புனைந்துள்ளவை, வாசிப்பில் பதற்றத்தைத் தருகின்றன. நேரில் பார்த்தது போன்ற விவரிப்பு முக்கியமானது.
கடந்த காலம், நிகழ்காலம் எனப் பயணித்த நாவல், இறுதி யில் கி.பி. 2050ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சம்பவங்களையும் சித்தரிக்கிறது. ஹரிணியின் மகளான பவானி பிரான்சிலிருந்து செஞ்சிக்கு வருகிறார். அங்கு ஹரிணிக்கு ஏற்பட்ட விநோதமான அனுபவங்களுக்குப் பின்னர் மறைந்துள்ள சதிகள் அம்பலமாகின்றன. கிருஷ்ணப்பர் கௌமுதி பிரதி அடுப்பில் எரிந்து சாம் பலாகிறது. கோட்டை ஏற்படுத்தும் மர்மம் போலவே செஞ்சிக்கு வந்த ஹரிணிக்கும் ஏற்பட்டது விநோதம்தான்
பல்வேறு கதைகளின் தொகுப்பாக விரியும் நாவல் வரலாறும் நடப்பும் எதிர்காலமும் கலந்து சொல்லப் பட்டிருப்பது பிரதிக்குப் புதிய அர்த்தம் தருகின்றது. மொழிநடையின் வழியே பழமைக்கு நெருக்கமாக வரலாற்றுக்குள் இட்டுச் செல்வது நாவலின் தனித்துவம்.

——————————————————-
ந. முருகேசபாண்டியன்- murugesapandian2011@gmail.com
நன்றி தி இந்து தமிழ் நாளிதழ் – February 15, 2014 00:00 IST Updated: February 15, 2014 12:05 IST

 

நண்பர் க.பஞ்சாங்கத்துடன் சில நாட்கள்

கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி நண்பர் பஞ்சாங்கம் பாரீஸ் வந்திருந்தார். ஏப்ரல் பன்னிரண்டு அன்று பாரீஸ் நகரில் உள்ள திருவள்ளுவர் கலைக்கூடம் நடத்திய பத்தாவது ஆண்டுசிழாவில் கலந்துகொண்டு ‘திருக்குறளும் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியும் என்ற தலைப்பில் உரையாற்றினார். விழாவில் அவரது பொறுப்பில் தயாரான சங்க மலரையும் வெளியிட்டார். மலருக்கு அரும்பணி ஆற்றிய நண்பர்கள் சீனு தமிழ் மணிக்கும், வெ.சுப.நாயக்கருக்கும் இங்கே நன்றியை நினைவு கூர கடமைப்பட்டிருக்கிறேன். இதுநாள்வரை இங்குள்ள எந்த அமைப்பும் அப்படியொரு செறிவான இலக்கிய தரமிக்க மலரை நான் அறிந்தவரை இதற்கு முன்பு பாரீஸில் வெளியிட்டதில்லை. வருங்காலத்தில் அது சாத்தியமாகலாம்.

நண்பர் பஞ்சாங்கம்  Strasboourgல் விருந்தினராக வந்திருந்தார். இருந்தது சில நாட்களே என்றாலும் இதயத்திற்கு நிறைவைத் தந்த நாட்கள். இங்கிருந்து சுவிஸ் மற்றும் ஜெர்மன் அழைத்து சென்றிருந்தேன். பின்னர் ஏப்ரல் பதினெட்டு அன்று இரயிலில் பாரீஸ் அனுப்பிவைத்தேன். திருவள்ளுவர் கலைக்கூட நண்பர்கள் அவரை 20 அன்று வழி அனுப்பிவைத்தனர். சில ஒளிப்படங்கள் நண்பர்களுக்காக:
P1000915

IMGP7805IMGP7811P1000908P1000909P1000910 IMGP7729

IMGP7795