Monthly Archives: திசெம்பர் 2011

இலக்கியமென்பது….

இலக்கியமென்பது….

இலக்கியமென்பது சான்றோர் சொல் பின்னர் காலப்போக்கில் ஆன்றோர் நூல் அதாவது அறிவுடையோர் கூற்று என்றாயிற்று? இலக்கியமென்றாலே ஏதோ ஓர் அறத்தை வற்புறுத்துவது என்றகாலத்தில் அது சான்றோர்களால் சொல்லப்பட்டது. அதன்பின்னர் வால்மீகியில் ஆரம்பித்து ழான் ழெனேவரை இலக்கியம் பேச ஆன்றோர் –  நூலாயிற்று. கோட்பாடு மரபு அமரத்துவமான விழுமியங்களையும், உலகளாவிய பார்வையையும் வைத்து படைப்பொன்றின் இலக்கிய தராதரத்தை தீர்மானிக்கிறது. வரலாறு மரபு  இலக்கியமென்பது காலம், எல்லைகளென்ற தளைகளிலிருந்து விடுபட்டு நிலைத்திருப்பவை என்கின்றது மேற்கத்திய உலகில் synchrony, diachrony என்ற இரு பார்வைகள் உள்ளன.  இலக்கியம் எழுதப்பட்ட நேற்றைய காலத்திற்கு நம்மையும் அழைத்துச்சென்று ஓர் இணக்கத்தை தன்னுடன் ஏற்படுத்திக்கொள்வது அல்லது கடந்தகால படைப்புகளை நமது சமகாலத்தைவையாக நடத்துவதென்பது முதலாவது வகை. எவ்வகை வாசிப்புக்காக அல்லது எவ்வகை வாசகர்களை மனதிற்கொண்டு எழுதப்படுகின்றதென்பதைவைத்து தீர்மானிக்கபடுவது இரண்டாம் வகை.

ஆனால் எல்லாகாலத்திலுமே இலக்கியமென்பது வெகுசனப்புரிதலுக்கு அப்பாற்பட்டதாகவும், புதிர்களும் சூட்சமங்கள் கொண்டதாகவும் இருந்து வந்திருக்கிறது. சைகைகளை மட்டும் நம்பி வாழ்ந்த காலத்தில் முக்கல் முனகல்கூட இலக்கியம் தான், ஓசைகளை மொழியாக வடிவமைத்தபோது ஓசைகளை மட்டுமே கேட்கப் பழகிய உலகில் ஒன்றிரண்டு சொற்கள் இலக்கியங்களாக இருந்திருக்கலாம். பின்னர் சொற்களுக்கும், அச்சொற்கள் இடம்பெற்ற வாக்கியங்களுக்கும் நகாசுவேலைகள் நடைபெற்றன. ஒன்றிரண்டு வார்த்தைகளில் எதிரே இருப்பவர்களுடன்மட்டும் உரையாடியபோதும், பிறர் அனுபவித்திராத அல்லது பிறர் அறிந்திருந்தும் உரிய சொற்களால் அடையாளப்படுத்த முடியாத தகவல்கள் என்னிடம் உள்ளன என ஆரம்பித்தபோது நீண்ட உரைகளும் (Discours), அந்த உரைகள் நிரந்தரமாக அறியப்படவேண்டியவையென்ற நிலைவந்தபோது எழுத்துகளின் தயவால் உரைநடை இலக்கியங்களும் பிறந்தன. ஆக இலக்கியம் என்பதற்கு ஒரு நிரந்தரமான வெளித்தோற்றமும் அதன் உட்கட்டமைப்பில் தொடர்ந்து மாறுதல்களும் உள்ளாகிவருகிறது. இலக்கியம் தொடக்கமுதலே நிரந்தரமாற்றங்களை பெற்றுவருகிறது. நேற்றிருந்த இலக்கியவாதிகளின் இடத்தில் இன்று வேறு சிலரைப்பார்க்கிறோம். அந்த மாற்றம் படைப்புகளிலும் வெளிப்படையாக தெரிகிறது. எழுத்துகளில் கடந்தபத்தாண்டுகளாக நடந்துள்ள மாற்றங்களுக்கு கீழ்க்கண்ட நூல்கள் உதாரணம்

புதிய புத்தகங்கள் இங்கே செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் வெளிவருகின்றன. பிரசுர வாய்ப்பிற்கும் உழைத்து; இலக்கிய விமர்சகர்களின் நன்மதிப்பை பெற்றாகவேண்டிய நெருக்கடிக்கும் புதியவர்கள் உள்ளாவதால் இவ்விளைஞர்கள் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது. தனித்தன்மையை நிறுவவேண்டியிருக்கிறது. இன்றைய பிரசினைகளை மையப்படுத்திய எழுத்துகளாகவே அவை இருக்குமென்ற எதிர்பார்ப்பும் வாசகர்களிடமிருக்கிறது. இணையதளம், சமூக உறவுகளில் வலைத்தலங்களின் பங்கு, பொருளாதார நெருக்கடி, அரபு நாடுகளில் எதேச்சதிகாரங்களுக்கெதிராக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு போன்றவை உலகம் இதுவரை காணாத அளவில் அண்மையில் நடந்துள்ளன. எனவே புதிய இலக்கியங்கள் இக்கருப்பொருளை மையமாகக்கொண்டே எழுதப்பட்டிருக்குமென பரவலாக நம்பப்பட்டது. இதுபோன்றதொரு பொதுவான எதிர்பார்ப்பை நிராகரித்து, தீவிர படைப்பென்பது பொதுநீரோட்டத்தோடு கலப்பதல்ல என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்துவதுபோல இந்நாவல்கள் உள்ளன. குடும்பம், இயற்கை, ஒப்பீட்டளவில் தமது மூதாதைகளிடமிருந்து நினைவுகள், அடையாளங்கள் ஆகியவற்றில் அவர்களுக்குள்ள விலகல் இடைவெளி ஆகியவற்றைபற்றி இப்புதியதலைமுறை படைப்புகள் பேசுகின்றன. சுயகதைகள், தன்முனைப்புடன் கூடிய பயணம் ஆகியவற்றை எழுதுபொருளாகக்கொண்டு கடந்த பத்தாண்டுகளில் நாவல்களின் பெயரைமட்டுமே நவீனப்படுத்திவந்த மூத்த பிரெஞ்சு எழுத்தாளர்களின் படைப்புகள் அவர்களுக்கு அலுப்பைத் தந்திருக்கலாம்.

இவ்வருடத்தில் நான் வாசித்த அளவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு நாவல்களை எனது இரசனைக்கு உன்படுத்தி வரிசைபடுத்தியுள்ளேன். அவ்வரிசைகளில் தொடர்ந்து ஏன் எதற்கென்று தொடர்ந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதலாமென்று திட்டம்:

பிரெஞ்சு:
1. La carte et le territoire – Michel Houellebecq -Flammarion
2. Hygiène de l’assassin -Amélie Nothomb – Albin Michel
3. Du Domaine des Murmures – Carole Martinez -Gallimard
4. Le Premier mot – Vassilis Alexakis -Stock
5. Le cimetière de Prague -Umberto Eco – Grasset
6. Pas son genre – Philippe Vilain – Grasset
7. La faute de goût -Caroline lunoir–  Actes Sud
8. Pondichéry – Thierry Ardisson -Albin Michel

ஆங்கிலம்:

1. The Ghost writer -Philip Roth -Vintage Books
2. Tinkers -Paul Harding -Bellevue Literary press
3. The Land of Green Plums -Herta Muller -Henry Holt and Company
4. The Laguna – Barbara Kingsolver-HArper Perennial
5. Death With Interruptions -José Saramago -Mariner Books
————————————————

பெனுவாத் க்ரூல்ட்

‘பெண்ணியம் ஒருவரையும் கொன்றதில்லை, கொல்லவும் கொல்லாது, ஆணாதிக்கத்திற்கோ அதுதான் அன்றாடத் தொழில்.’-பெனுவாத் க்ரூல்ட்

இருபதாம் நூற்றாண்டிற்கென்று அடையாளப்படுத்தவேண்டியய பெண்ணியப் போராளிகளுள் ஒருவர். முகத்தில் எப்போதும் தயார்நிலையில் இருக்கும் புன்சிரிப்பு, அருவிபோல சலசலத்தபோதும் பேச்சில் தெளிவு, அளந்து தீர்மானமாக வெளிப்படும் சொற்கள், எதிராளியை சிநேக வட்டத்திற்குள் எளிதில் ஈர்க்கும் வசீகரம், பெண்ணியத்தின் அத்தனை கூறுகளையும், அதன் உள்ளீடுகளையும் அறைகூவலுடன் வெளிப்படுத்தும் மனோபாவம் கொண்ட பெண்மணி. ஏனைய பிரெஞ்சு பெண்ணியல்வாதிகளைப் போலவே இடதுசாரி எண்ணங்கொண்டவர். நாவல்கள், மற்றும் கட்டுரைகள் வடிவத்தில் உள்ள இவரது படைப்புகள் அனைத்துமே பெண்ணியம் சார்ந்தவை.

1920ம் ஆண்டு பாரீஸில் பிறந்தார். தந்தை ஒரு புகழ்பெற்ற அலங்காரக் கலைஞர், தாயார் நிக்கோல் புகழ்பெற்ற ஆடை அலங்கார கலைஞர் போல் புவாரெவினுடைய சகோதரி, ஒரு கம்பீரமானப் பெண்மணி. புகழ்பெற்ற ஓவியர்கள், படைப்பாளிகள் வந்துபோகிற இல்லம்.- உ.ம். Picasso, Picabia, Jouhandeau, Paul Morand மற்றும் பலர். தாயாரின் வழிகாட்டுதலில், இளமை முதற்கொண்டே இலக்கியங்களில் ஆர்வம், பிரெஞ்சு இலக்கியத்தில் முதுகலை படிப்பு, கூடுதலாக இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் ஞானம், ஆங்கிலத்திலும் தேர்ச்சி. ஆரம்பக்காலங்களில் பிரெஞ்சு இலக்கிய பேராசிரியராகப் பணியாற்றியவர், பின்னர் இதழியலில் ஆர்வம் காட்டினார். பெண்கள் தொடர்பான Elle, Marie-Claire, Parent போன்ற சஞ்சிகைகளிலும் பணிபுரிந்திருக்கிறார். 1978ம் ஆண்டில் குளோது செர்வன் என்பவரோடு சேர்ந்து பெண்களுக்கான F. Magazine என்கிற இதழொன்றைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1982ம் ஆண்டுமுதல் Femina இதழின் ஜூரிகளுள் ஒருவராக இருந்துவருகிறார். 1984 – 1986ம் ஆண்டுகளில், முக்கிய பணிகளிலும், அதிகாரமட்டத்திலும் பெண்பால் பெயர்களை உண்டாக்கவென்று, இலக்கண வல்லுனர்கள், மொழியாளர்கள், எழுத்தாளர்கள் கொண்டு இயங்கிய அரசு ஆலோசனை சபையினைத் தலமையேற்று நடத்தியவர். மூன்று முறை திருமணமானவர்.  முதல் கணவர் காச நோயில் 1945ம் ஆண்டு இறந்தபின்னர், இரண்டாவதாக பத்திரிகை செய்தியாளரை மணந்து இரு பெண்களுக்குத் தாயாரானார். அம் மணவாழ்க்கையும் கசப்பில் முடிய மூன்றவதாக ஓர் பிரபல எழுத்தாளரை (Paul Guimard) மணக்க நேர்ந்தது. திருமண அனுபவங்கள் ‘பெண்ணியம்’ குறித்து பெரிதும் பேசவும் எழுதவும் இவருக்கு உதவின. தனது சகோதரி ‘•புளோரா’வுடன் (Flora) இணைந்து முதல் நாவலான ‘இருவர் வாசித்த செய்தித்தாள்’ (JOURNAL A QUATRE MAINS) 1958ம் ஆண்டில் வெளிவந்தது, தொடர்ந்து சகோதரிகள் இருவரும் கூட்டாக இரண்டு நாவல்களை எழுதினார்கள். பிரெஞ்சு பெண்களின் அவலநிலையைப் பேசுகின்ற ‘வாழ்க்கையின் சில உண்மைகள்’ (LA PART DES CHOSES-1972,) ‘அவளது விதிப்படி ஆகட்டும்'(AINSI SOIT ELLE -1972) என்ற இருகட்டுரைத் தொகுப்பும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதைத் தொடர்ந்து பல நாவல்கள் குறிப்பாக ‘முக்கால்வாசி நேரம்'(LES TROIS QUARTS DU TEMPS), ‘தமனியும், சிரையும்'(LES VAISSEAUX DU COEUR) அவற்றுள் முக்கியமானவை. பிறகு பெண்ணியல் வாதிகளான ‘பொலின் ரொலான்(Pauline Rolland), ஒலிம்ப் தெ கூழ் (Olympe de Gouge) ஆகியோரது வாழ்க்கைவரலாறுகள், ‘ஒருவிடுதலையின் வரலாறு'( Histoire d’une evasion) என்கிற பேரிலே 1997 வெளிவந்த அவரது சொந்த வாழ்க்கை மீதான பார்வையும் அவசியம் வாசிக்கப்படவேண்டியவை.

பெனுவாத் வாழ்க்கையும், எழுத்தும், இன்றைய நாள்வரை பெண்ணினத்தினை முதன்மைப்படுத்த முனைவதல்ல, ஆணுக்கு நிகரென்று, அழுந்த உரைப்பது, எந்த ஜீவனையும்போலவே ‘அவள்’ முதலில் ‘தனக்கானவள்’ எனபதை வலியுறுத்துவது. அவளுடைய வாழ்வியல் நித்தியங்களை நிதரிசனப்படுத்துவது: கட்டுண்ட பெண்கள், சீரழிந்த பெண்கள், முதிர்ச்சியின் பலம், பெண்ணினம் மற்றும் அவள் சார்ந்த கருத்தியல்கள் அதில் பதிவுசெய்ய்யப்பட்டன. தற்போது அதற்கான வயதில் – முதுமையை விவாதத்திற்கு உட்படுத்துகிறார், அதன் மேன்மைக்கு வாதிடுகிறார். பெண்கள், பெண்ணியம் என உழைத்துவருகிற இவரது சமீபத்திய படைப்பு,(2006) ‘நட்சத்திர ஸ்பரிசம்’- விற்பனையில் சாதனை செய்துவருகிறது, ஒவ்வொருநாளும் குறைந்தபட்ஷம் 3000 பிரதிகள். மரணம் கண்ணியத்துடன் நிகழவேண்டுமென்பது இந்நாவலில் வெளிப்படுத்தப்படும் அவரது ஆதங்கம். அறுபத்தைந்து வயதில் முதியவர்களாகப் பிறந்து எண்பத்தைந்து வயதுவரை முதுமையுடன் வளறுகிறோம், அதுமுதல் நட்சத்திர ஸ்பரிஸத்திற்காக நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறோம், அத்தீண்டலுக்கான நாளை தேர்வு செய்வது நாமாகத்தான் இருக்கவேண்டுமென்பது இவரது பிடிவாதம்..

(Simone de Beauvoir) எழுத்தில் இருக்கக்கூடிய மெல்லிய நகையுணர்வு இவரது எழுத்திலும் ஊடாடுகிறது. சிமோன் தெ பொவார்க்கு ‘பெண்ணென்ற  இரண்டாமினம்’ ( Deuxieme sex) எப்படியோ, பிரான்சுவாஸ் பத்துய்ரியேவுக்கு (PARTURIER, FRANCOISE)’ஆண்களுக்கு ஓரு வெளிப்படையான கடிதம்(‘Lettre ouverte aux hommes) எப்படியோ, அப்படி ‘பெனுவாத் க்ரூல்ட்க்கு ‘அவளது விதிப்படி ஆகட்டும்'(AINSI SOIT ELLE). இன்றுவரை பத்து இலட்சம் பிரதிகள் விற்பனைச் செய்யபட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவரது எழுத்துக்களில் பெண்ணியத்தின் தாக்கங்கள்: காதலர்கள், கணவன்மார்கள், அரசியல் ஆகியவற்றை மையமாக வைத்துச் சொல்லபட்டிருக்கின்றன. சமீபத்தில் இவரைக் குறித்த ஓர் ஆவணப்படத்தினை மற்றோர் பெண்ணியல்வாதியும் இயக்குனருமான ஆன் லா•பான்(Anne Lenfant) ‘அவளுக்கென்று ஓர் அறை (Une chambre a elle) என்ற பெயரில் தயாரித்திருக்கிறார்.

———————————————————————————

* ‘Le feminisme n’a jamais tue personne – le machisme tue tous les jours’

(Ainsi soit-elle) கட்டுரைத் தொகுப்பிலிருந்து                                                                         பெனுவாத் க்ரூல்ட்

பெண்ணியம் அதன் உச்சத்திலிருந்த காலக்கட்டத்தில், 1975ம் ஆண்டு முதற்பதிப்பாக ‘அவளது விதிப்படி ஆகட்டும்’ வெளிவந்தது. அதன் பின்னர் மறுபடியும் எனக்கு, அப்புத்தகத்தினை வாசிப்பதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. மே 1968(1) போராட்டத்தின் விளைவாக, ஒவ்வொரு பெண்ணும் ‘இனி, அன்றாடவாழ்க்கையில் தான் ஆணுக்கு நிகரென’ நினைத்தாள்; ஆண்களும் தங்கள் முதலிட ஸ்தானத்திற்கு முடிவு நெருங்கிவிட்டதென்று நினைத்த நேரம். இதில் மிகப்பெரியக் கொடுமை என்னவெனில், 89ல்(2) நமது புரட்சியாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் கவனமாக ‘மனித உரிமை கோட்பாடுகளை வகுத்து பிரகடனப்படுத்தியிருந்தபோதும், அது ஆண்வர்க்கத்திற்கு மாத்திரமல்ல, பெண்களுக்கும் உரியதென்று சொல்லக்கூடிய ஆபத்துங்கூட 68க்கு பிறகே நேர்ந்தது. எனினும் 1968ம் ஆண்டுவரை சுமார் முப்பதாண்டுகளுக்கு மேலாக ஆழ்ந்த உறக்கத்திற்கிடந்த பெண்ணியம், ஒருநாள் இப்படி விழித்துக்கொள்ளுமென்று எவரும் நினத்திருக்கமாட்டார்கள். பெண்ணியத்தின் பொற்காலத்திற்குப் பிறகு, மாதர் தம் சுதந்திரம் ஏறக்குறைய ஐரோப்பாமுழுக்க பதிவு செய்யப்பட்டதும், ஏற்றமிகுந்த இந்தக் காலகட்டத்தில்தான். எல்லா யுத்தங்களையும் போலவே, நடந்து முடிந்த யுத்தமும்(இரண்டாம் உலக யுத்தம்) ஆண்பெண் பேதங்களை ஒழுங்குபடுத்திற்று. மகளிர் எப்பணிகளையும் ஆற்றவல்லவர்கள் என்பதனை நான்காண்டுகால யுத்தம் நிரூபித்தது. யுத்தத்தின் செயல்பாடும், வெற்றியும் பெண்களைச் சார்ந்திருந்தது. விவசாயத்தில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் ஆண்களுக்கு மாற்றாக பெண்கள் பணியாற்றினார்கள். ஆனால் யுத்தம் முடிந்து அமைதி திரும்பியவுடன், செய்துவந்த பணிகளை மாத்திரமல்ல அவர்களது சுதந்திரத்தையும் சுய உரிமைகளையுங்கூட இழந்து வீட்டிற்குத் திரும்பினர். ஓட்டுரிமையைக்காக இருபத்தைந்து ஆண்டுகாலம் அவர்களைக் காத்திருக்க வேண்டியதாயிற்று, பிறகு அதற்கெதிராகவும் ஓர் யுத்தமென்றாகிவிட்டது.

அடுத்துவந்த ஆண்டுகள் பெண்களுக்குச் சோதனை மிகுந்த காலங்கள். ஆணினம், பெண்ணினம் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு மீண்டும் தலைகாட்டியது. பிரான்செங்கும் உத்தியோகங்களில் பெண்மையை ஆண்மைப்படுத்துவதென்கிற பித்தம் தலைக்கேறி இருந்ததன் விளைவாக, தொழிலார்கள் மற்றும் தொழிற் சங்கங்களிடையே அவநம்பிக்கை, பெண்விடுதலைக் குறித்து பிறர் கொண்டிருந்த எதிர்மறையான அப்பிராயங்கள்(உ.ம். பெண்விடுதலை’ பேசும் பெண்கள் தங்களை ஆண்மைப்படுத்திக் கொள்கிற்வர்களென்கிற விமர்ச்னத்திற்கு ஆதரவாக எழுதப்பட்ட ‘La Garconne’ மாதிரியான நூல்கள்) என பலதரப்பட்ட அச்சத்திற்கும் உள்ளான சமூகம், தமது அடையாளங்களைத் மீளப்பெறவேண்டுமென்றுசொல்லி உரிமைக் குரல்வளையை நெறித்தது. பண்டைப் பெண்நெறி போற்றப்பட்டது பெண்கள், தாயாகவும், விசுவாசமுள்ள மனைவியாகவும் இருந்து ஆற்றவேண்டிய பணிகளைக் குறிப்பிட்டு, இயற்கைக்கு மாறாக அவர்கள் நடக்கக்கூடாதென்று அறிவுறுத்தப்பட்டார்கள். அதனை நடைமுறைபடுத்துவதற்கு ‘மகப்பேறு கொள்கை’ அடிப்படையில் ஒரு சட்டம். அச்சட்டம் சொல்லவந்ததென்ன: ஒரு பெண்ணானவள் தனது உயிரியல் அடிப்படையினாலான கடமைகளை கட்டாயம் நிறைவேற்றியாகவேண்டும், அதிலிருந்து தப்பலாமென்கிற கனவுகள் கூடாது, தனது வாழ்வைத் தானே தீர்மானிக்கலாம் என்கிற முனைப்பெல்லாம் கூடாது. 1920ம் ஆண்டு இயற்றப்பட்ட இச்சட்டத்தின்படி, பெண்களுக்கு கருகலைப்பு செய்துகொள்கின்ற உரிமை மறுக்கபட்டதோடு, அவர்களுக்குக் கருத்தடைக்கான தகவலறிவும் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளபட்டது. இச்சட்டத்தின் ஐம்பதாண்டுகால அமலாக்கத்தில் பல்லாயிரக்கணக்கில் பெண்கள் இரகசியமாகக் கருகலைப்பு செய்துகொண்டதும் உண்மை, அவர்களில் பலர் அதே எண்ணிக்கையில் மாண்டதும் உண்மை. இச்சட்டத்தின்பேரால் ‘பெத்தேன்'(Petain)(3) நிருவாகத்தில் துணி வெளுப்பவளொருத்தி, பெண்கள் பலருக்குக் கருக்கலைக்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 1943ம் ஆண்டு கில்லெட்டினால் சிரச்சேதம் செய்யப்பட்டதை இங்கே நாம் நினைவு கூற வேண்டும். இந்த வகையில் தண்டிக்கப்பட்டவர்களில் அவள்தான் கடைசியென்றாலும், ஓருண்மை புரிகின்றது அந்த நாட்களில், குழந்தை வேண்டாமென்று கருக்கலைப்பு செய்துகாள்வதைக்காட்டிலும், சம்பந்தப்பட்ட ஆணைக் கொன்றிருந்தால் ஒருவேளை சட்டம் குறைவாக தண்டித்திருக்குமோ என்னவோ.

1939ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர், தோல்வி, விஷி(Vichy)யில் அமைந்த நிருவாகம்(3) பிரெஞ்சுகுடியரசுக்கு மாத்திரமல்ல பெண்களுக்கும் பாதகத்தை இழைத்தது, இது பெண்ணியத்திற்கு நேர்ந்த இரண்டாவது மரணம். ஜெர்மானியர்களின் ஆக்ரமிப்பின்போது, பிரெஞ்சு விடுதலை இயக்கத்தில் கணிசமான அளவிற்குப் பங்கெடுத்த பெண்கள் அரிய சாதனைகளுக்குக் காரணமாக இருந்தும், ஜெனரல் தெ கோல்(De Gaulle)(4)1944ம் ஆண்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையையை வழங்கவென சட்டம் கொண்டுவந்திருந்தும், பிரெஞ்சுப்பெண்களிடையே பெரிதாக ஏதும் நடந்துவிடவில்லை. கிரீஸ் நாட்டைத்தவிர இதர ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. டச்சு மக்கள் 1915ம் ஆண்டிலிருந்தும், ஸ்வீடன் மக்கள், ஆங்கிலேயர், ஜெர்மானியர் 1918ம் ஆண்டிலிருந்தும் அமெரிக்கர்கள் 1920ம் ஆண்டிலிருந்தும், இவ்வுரிமையை பயன்படுத்தி வந்தனர். இது தவிர பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் (மீண்டும் கிரீஸைத் தவிர்த்து) 15லிருந்து 49 சதவீதத்தியப் பெண்கள் தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினர்களானார்கள். பிரான்சு நாட்டில் மட்டுமே அது எட்டமுடியாத குறியீடாக இருந்தது. இருபது ஆண்டுகளாக முயற்சித்து கடைசியில் பிரான்சு, இதர ஐரோப்பிய நாடுகளோடு இசைவுறாத ஒரு குறியீட்டைத் தொட்டது. 1945ம் ஆண்டின்படி பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 5.4 சதவீதப் பெண்களும், 1968ம் ஆண்டில் 1.6 சதவீதப்பெண்களும் இடம்பெற்றனர். பிறகு இந்தக் குறியீடு சட்டென்று பலம்பெற்று 11 சதவீதமாக ஜூன் 1997ம் ஆண்டு உயர்ந்தது. ஆக இந்தவேகத்திலே போனாலுங்கூட, ஆண்களுக்குச் சமமான எண்ணிக்கையில் பாராளுமன்றத்தில் நுழைவதற்கு நமக்குக் குறைந்தது இன்னும் 390ஆண்டுகள் தேவைப்படும். பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லையென்கிறபோதும், நம்மால் ஏதோ கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. ஜெர்மானியர்களின் ஆக்ரமிப்பின்போது இதர ஐரோப்பிய நாடுகள் கலகலத்துப் போயிருக்க, நாம் அவர்களுடன் கைகோர்த்ததாற் கண்ட பலன். பெண்களுக்கான இடஒதுக்கீட்டு குறியீட்டினை உயர்த்துவதற்கான பாரிய நடவடிக்கையினை எடுக்கின்ற எண்ணமேதும் அரசுக்கு இல்லை. இவர்களுக்கு பாராளுமன்றத்தில் பெண்கள் உரிய பிரதிநித்துவம் பெறாதது அதிர்ச்சிதரும் விடயமல்ல, மாறாக பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கைபற்றி நாம்பேசினால் அதிர்ச்சிதருகிறது.

தங்களை அடையாளபடுதிக்கொள்ள விழையும் அநேகப்பெண்களுக்குப் 1949ம் ஆண்டு வெளிவந்த  ‘ இரண்டாம் பாலினம் (Deuxieme Sex) ஒரு முன்னுதாரணமட்டுமல்ல என்பது, அநேகருக்கு விளங்குவதில்லை.. இந்நூல் பதிப்பித்து வெளிவந்த கொஞ்ச நாட்களிலேயே, உலக மகளிருக்கான மறைநூலென்கிற தகுதியை பெற்றுது. அறிவு ஜீவிகளுடையே பெரும் விவாதத்திற்குரியதாக இருந்தபோதிலும், வெகுசனப் பண்பாட்டில் குறிப்பிடும்படியான தாக்கமெதனையும் உண்டாக்கிவிடவில்லை. பெண்களின் நிலையை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் ஆய்வுக்கு உட்படுத்தி கண்ட பாரிய உண்மையை, ஏற்கிற மனமுதிர்ச்சியும் இங்கில்லை. நான் முதன்முதலில் வாசித்தபோது, கருத்தியலில் எழுத்தாளர் ‘சிமோன் தெ பொவாரு’க்கிருந்த (Simone de Beauvoir), ஆழமும் கூர்மையும், விரிவான தளத்தினில், மிகுந்த அக்கறையுடன் மானுடவியலை அவர் கையாண்டவிதமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன என்கிறபோதும், உலகில் இனந்தெரியாத ஒரு கூட்டத்தினைப்பற்றிய பதிவென்றே அதாவது எங்கோவிருக்கும் ஆப்ரிக்க குள்ளமனிதர்களின் இருப்பினை அவர் ஆய்வு செய்து எழுதியதைப்போல எடுத்துக்கொண்டேன். இங்கே நமது மக்கள்கூட்டத்தில் ஒருபகுதியினர் இன்னுங்கூட தாழ்ந்தநிலையிலேயே இருக்கிறார்கள் என்பதையும், அச் சிறுகூட்டத்தில் நானும் ஒருவளென்பதையும் ஒரேயொரு விநாடியாவது நினைத்துப் பார்த்திருப்பேனாவென்றால், இல்லை. ஆம், அப்பரிதாபத்திற்குரிய குள்ளர்கள் கூட்டத்தில் நானுமொருத்தி. இங்கே இன்னொன்றையும் நினைவில் கொள்வது அவசியம். ஐம்பதுகளில் ‘சிமோன்’ வரலாற்றாசிரியராகவும், தத்துவவாதியாகவும் அறியப்பட்டிருந்தாரேயன்றி ஒரு பெண்ணியல்வாதியாக அப்போதைக்கு அறியப்படவில்லை. மகளிரியக்கம், போதிய ஆதரவினைப் பெறமுடியாமற் போனதற்கு அதுகூட காரணமாக இருக்கலாம். பிறகு ஐம்பதெட்டாம் ஆண்டில்  ‘லிட்ரேலுடைய'(Maximilien Paul Emile Littre) அகரமுதலியில்  ‘பெண்ணியம்’ என்ற வார்த்தை விடுபட்டபோனதுங்கூடக் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்ற அப்புத்தகத்திற்கு எதிராக இங்கே பிரான்சில் கட்சிபேதமின்றி, பல்வேறுதரப்பினரும் ‘வரையறையைத் தாண்டிவிட்டதெனக்’ குற்றம் சொல்ல ஒன்று திரண்டார்கள். அதில் கண்ட ‘பெண் விடுதலை’ சிந்தனையும், எழுப்பிய ஆணுக்கு நிகர் பெண்ணென்ற குரலும், நமது ஆண்களை அதற்கெதிராக ஒன்று திரட்டிவிட்டது. கடந்தகாலங்களால் கட்டியெழுப்பப் பட்டவர்கள் நாமென்பதை உணர்ந்திருந்தும், ‘பெண்ணென்ற  ஓர் இரண்டாமினத்தில்’ சொல்லபட்டிருந்த எனது சொந்தக் கதையை மாத்திரமல்ல, நமது கல்விப் பாடதிட்டங்களிலோ அல்லது நமது வரலாறு புத்தகங்களிலோ இடம்பெற்றிராத பெண்ணியல்வாதத்திற்கு காரணமான ஒலிம்ப் தெ கூர்ழ் (Olympe de Rouge) பொலின் ரொலான் (Pauline Roland), உபெர்த்தின் ஒக்லெர்(Hubertine Auclert), மார்கெரித் த்யுரான்(Margurite Durand), மற்றும் பல புரட்சியாளர்களை, அலட்சியம் செய்திருக்கிறேன். நவீன பெண்ணியல் சிந்தனைக்கு பெரிதும் காரணமாகவிருந்த மற்றுமொரு கட்டுரைத் தொகுப்பான ‘A Room of One’s Own'(1923), பிரெஞ்சு மொழியில் அப்போது வெளிவரவில்லை. நமது சமூகம் ஆணினத்தை எவ்வாறெல்லாம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறதென்பதை கட்டுரை ஆசிரியர் வெர்ஜீனியா உல்•ப் (Virginia Woolf) நயத்தோடும், எள்ளளோடும் சொல்லியிருக்க, அப்புத்தகத்தை ஒரு சாராரி நாவலாகத்தான் அப்போது நான் எடுத்துக்கொண்டேன். அடிப்படையான ஆதாரங்களோ அதனை வெளிப்படுத்துவதற்கான போதிய வார்த்தைகளோ இன்றி; நம்மைச் சரியாக அடையாளப்படுத்திய பெண்களை முன்னுதாரணமாகக் கொள்ளாமலோ; நமது துயரங்களையும், நமக்கான வழித்தடங்களை மறுத்து இச்சமுதாயம் ஏற்படுத்திய வாழ்வியல் நெருக்கடிகளையும் எங்கனம் நாம் வெளிப்படுத்த முடியும்?

யுத்தத்திற்கு பிறகுவந்த நெருக்கடியான காலங்களில், குடும்ப அமைப்பு, ஆண் – பெண் உறவுகள் இவைகளைப் பற்றியெல்லாம் கேள்விக்குட்படுத்துவதென்பது இயலாததாக இருந்தது. பெண்களென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும், அது இயற்கையின் விதியென ஆண்டாண்டுகாலமாக நம்பிக்கொண்டிருக்க்கிற உலகத்திற்கு எதிராக கொடிபிடிப்பதென்பதும் அப்போதைக்கு அவ்வளவு சுலபமல்ல.

உலகப்போரின்போது எனக்கு இருபது வயது. இலத்தீன் மொழி பேராசிரியராக பணியாற்றி வந்தேன், எனினும் எனக்கு வாக்குரிமை இல்லை. பிறர் இதனைச் சாதாரமானமாக எடுத்துக்கொண்டனர். யுத்தத்திற்குப்பிறகு முன்னெடுத்துச் செல்வதற்கு வேறு பிரச்சினைகள் அவர்களுக்கு இருந்தன. தவிர நான் அப்போதைய பெரும்பாலான இளம்பெண்களை போலவே அடக்கமாக இருக்கவேண்டுமென விதிக்கப்பட்டவள். அதாவது அக்காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யபட்ட பல்லாயிரக் கணக்கான பெண்களில் ஒருத்தியாக, மூச்சுமுட்ட ஒழுக்கம் திணிக்கப்பட்டு, சுயசிந்தனைகளுக்கு வாய்ப்பற்ற கிறித்துவ பள்ளிகளின் வார்ப்பாக இருந்தவள். ‘பண்டை வழக்குகள்’ நுகத்தடியாக எனது கழுத்தில் பூட்டப்பட்டிருந்தது. சிறையில் அடைபட்ட உணர்வு. கழுத்துவரை விலங்குகள். எவரோடு, எப்படி எனது எதிர்ப்புகுரலை வெளிப்படுத்துவதென்கிற மனக்குமுறலுக்கோ பலனேதுமில்லை.

இந்த நிலைமையில்தான் 1968ம் ஆண்டு ஒரு பெரிய அலை வீசியது, அந்த அலைக்கு நமது மக்களின் தீவிரமான விடுதலை உணர்வும்; காலங்காலமாய் நமது சமூக வழக்கிலிருந்த தந்தைவழி சமுதாயத்தின் ஏதேச்சதிகாரத்தை நிராகரித்த துணிச்சலும் காரணமாயின. எனினும் எழுபதுகளில் இடதுசாரி அரசியல் அலை மீண்டும் வீசும்வரை காத்திருக்கவேண்டியிருந்தது. எல்லாமே கனவுகளென்று வெகுசீக்கிரத்தில் புரிந்ததால் மிகப்பெரிய ஏமாற்றம், குறிப்பாக நமது பெண்களுக்கு. நடந்தவை அனைத்தும் நாடகங்களாகவே இருந்தன. இறுதியாக தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள பெண்களே வீதியில் இறங்கவேண்டியக் கட்டாயம்.

புரட்சியென்று சொல்கிறபோது ஒரு தொடக்கம் தேவைப்படுகிறது. நமது இயக்கத்திற்கும் அப்படியான நாளாக 1970ம் ஆண்டு ஆகஸ்ட்டுமாதம் 20ம் தேதி அமைந்தது. அன்றையதினம் துணிச்சல் மிக்க பெண்களில் சிலர் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கென்று எழுப்பப்பட்டிருந்த நினைவிடத்திற்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் அஞ்சலி செலுத்தியது, இறந்துபோன வீரர்களுக்காகவல்ல, அவ்வீரர்களின் பெருமைக்குக் காரணமாகவிருந்த மனைவிமார்களுக்காக. அப்பெண்கள் அனைவரும் உடனேயே கைது செய்யபட்டனர். மறுநாள் ‘M.L.F.(5) பிறந்தது’ என நாளேடுகளில் தலைப்புச் செய்தி. மற்றொரு இதழோ, ‘பெண்கள் சுதந்திரம், ஆண்டு பூஜ்யம்’ எனத் தலைப்பிட்டு எழுதியது. 1968ம் ஆண்டு வெடித்த போராட்டத்தின் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இவ்வியக்கத்தின் நோக்கம், 1792ம் ஆண்டில் ‘ஒலிம்ப் தெ கூர்ழ்'(Olympe De Gourge) உரத்து குரல்கொடுத்ததைபோல: ‘ஒன்றிரண்டு பெண்களுக்காக குறைந்தபட்ச சலுகைகளை யாசித்துபெறவேண்டுமென்பதல்ல, ஒட்டுமொத்த பெண்களுடைய நியாயமான சலுகைகளை உரிமையுடன் கேட்பது’,  அப்படிக் பேசியதற்காவே கில்லெட்டினால் அவர் சிரம் வெட்டபட்டது.

அனைத்து தரப்புப் பெண்களுக்கும் முதன்முறையாக பேச்சுரிமை வழங்கியும், கடந்தகால பெண்ணியல்வாதிகளின் அபிப்ராயத்தை முற்றிலும் ஒதுக்காமலும், ஒருபக்கம் ஆனந்தகளிப்பிற்கும் இன்னொருபக்கம் அர்த்தமுள்ள விழிப்புணர்வுக்கும் பெரிதும் காரணமாகவிருந்த ‘பொவாருடைய'(Beauvoir) பங்களிப்பை இறுதியில் அங்கீகரித்தும், பலமுனைகளிலும் பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாவது குறித்து, பல்வேறு தரப்பினரும் ஆய்வுகள் மேற்கொண்டனர். ‘உயிர்பிழைத்திருக்கிற மிகப்பெரிய அடிமைகள் கூட்டமென்று'(La plus massive survivance de l’esclavage)ஜெர்மானிய மானுடவியலாளர் தியோன் (Tillon) அவர்களால் விமர்சிக்கபட்ட பெண்கள் கூட்டத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் முயற்சியாக தடைகள் மீறப்படுகின்றன. மொழி மாற்றத்திற்கு உள்ளாகிறது, காலங்காலமாய் இருந்துவந்த குடும்பம் என்கிற கட்டமைப்பு கலகலத்துப்போகிறது, விளைவு கடந்து நாற்பது ஆண்டுகாலமாக நான் பொய்யாய் நடத்திவந்த வாழ்க்கையும் அதன் மீதான எனது கருத்துருவாக்கமும் நொறுங்கிப்போயின.

பெண்ணுரிமை இயக்கங்கள், ஆண்களை உதாசீனபடுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன என்று பொதுவாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு. வழக்கம்போல நீயா? நானா? என்பதால் விளைந்த சிந்தனை. ஆணும் பெண்ணுமாய் இருக்கிற பாராளுமன்ற அவையிலும் சரி அல்லது அரசியல்வாதிகளின் கூட்டத்திலும் சரி, ஒரு பெண் உறுப்பினர் (அவர் இடதுசாரியோ அல்லது வலதுசாரியோ) என்ன பேசினாலும், நான் அவதானித்தவகையில் ஆண்கள் கூட்டத்திற்கு அது வெறும் குப்பை, அர்த்தமற்றபேச்சு. ஏதோ இவர்களுக்குப் புரியாத மொழியில் பேசுவதாய் நினைக்கிறார்கள். உரையின் முக்கியத்தும் குறைகிறது, கேட்கின்ற ஆண்களும் அக்கறையின்றி உட்கார்ந்திருக்க, சம்பந்தப்பட்டப் பெண்களில் பேச்சு காற்றோடு போகிறது.  அதுமாதிரியான சூழ்நிலைகளில் பெண்கள் தங்களிடையே சுதந்திரமாக உரையாடிக்கொள்வதையும், பிறர் கேட்க தங்கள் கருத்தைச் சொல்ல முடிகிற அதிர்ஷ்டத்தையும் காணும் வாய்ப்பு எனக்கு அமைந்ததுண்டு. கூச்சம், உறுதியற்றதன்மை, எனது திறன்குறித்த அவநம்பிக்கை, எப்படியிருக்க வேண்டுமோ அப்படி இல்லையேயென இரவுபகலாய் வருத்தம் என்றிருந்தபோதுதான், இதற்கெல்லாம் தீர்வாக ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அது,’இருபெண்களுகிடையேயான ஓர் புதிய வெளிப்பாடு, என்னவென்று அறிந்திராத நாட்டிற்கோ அதுவோர் விநோதமான அதிர்ச்சி.’ சட்டென்று அவளுக்கு ஓரு தேஜஸ் கிடைத்தது. அவள் நல்லவளானாள்.

மாற்றம் அரசியலிலும் நேர்ந்தது 74ம் ஆண்டு பெண்களுக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது, பிரான்சுவாஸ் ழிரூ அதன் பொறுப்பினை ஏற்றார். பிரச்சினைகளை முறையாக அணுகத் தவறிவிட்டதால் இரண்டாண்டுகள் கழித்து அது கலைக்கபட்டது. அதே ஆண்டில் சிமோன் வெய்  முயற்சியால் விரும்பினால் கருக்கலைப்பு செய்துகொள்ளலாமென சட்டம் இயற்றப்படுகிறது. கருத்தடைக்கான உரிமையையும், (68லேயே அதற்கான சட்டத்தினை இயற்றபட்டிருந்தபோதிலும்) முதன் முறையாக அமுலாக்கபடுகிறது.

‘அவள்’(Elle) இதழ் பெண்ணினத்தின் வெற்றி என்பதாக ஒரு சிறப்பிதழினை வெளியிட்டு, அதற்குக் காரணமான பெண்ணியல் வாதிகளாக கிறிஸ்தியன் ரோஷ்போர், மார்கெரித் துராஸ், பிரான்சுவாஸ் தோபோன், எவ்லின் சுல்லெரோ, பெனுவாத் மற்றும் •ப்ளோரா க்ரூல்ட், மொனிக் விட்டிக், சிமொன் தெ பொவார், லூயீஸ் வைஸ், அர்லெத் லகிய்யே, ழிஸேல் அலிமி, டெல்பின் செரிக், லிலியானா கவான்னி, மற்றும்பலரையும் குறிப்பிட்டுக் கட்டுரை எழுதியது. படைப்பாளினிகள், வழக்காளினிகள், தத்துவாசிரியைகள் எனச் செய்யும் தொழில் குறித்த பெண்பாற் சொற்கள் குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது பெண்னியல்வாதத்தை அங்கீகரிக்க வகைசெய்தென்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

பிறகு 1975ம் ஆண்டினை ஐக்கிய நாட்டு ஸ்தாபனம் ‘மகளிர் ஆண்டாக’ அறிவித்தது. ‘அன்னையர் தினம்’ என்று அறிவித்து அன்றைக்கு மாத்திரம் அன்னையருக்கு நல்லது செய்ய முற்படுவதில்லையா? அதுபோல அவ்வருடம் பெண்களுக்குச் சாதகமாக சிலவிடயங்கள் நடந்தேறின. பதிப்பாளர்கள் பெண்ணெழுத்துகளில் ஆர்வம் காட்டினர். அதற்கு முந்தைய நாள்வரை கேட்பாரற்றிருந்த அவர்களது சிந்தனைகள் அச்சிலேறின. ஷந்தால் ஷவா•ப் ‘பெண்ணைப்’ பற்றியும், ‘வீழ்ந்த பெண்கள்’ என்று எரென் பிஸ்ஸேவுல், ‘சூதக இரத்தம்’ என்று மரி கர்டினல் என்பவரும், மாதவிடாய், பெண்குறியென இதுவரை தீண்டப் படாதவை எனக் கருதப்பட்ட, இலக்கியங்கள் நிராகரித்த சொற்களை தலைப்பாகக் கொண்டு படைப்புகள் வெளிவந்தன. இம்மாதிரியான சூழ்நிலையில்தான ‘அவள் விதிப்படி ஆகட்டும் (AINSI SOIT-ELLE) 1975ம் ஆண்டு வெளிவந்தது. பெண்ணியல்வாதிகளின் புத்தகங்கள், ஏதோ ஒரு பைத்தியக்காரக் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்டதென்கிற காலம்போய், ஆண்வர்க்கம் அவற்றை வாசிக்க தயங்கியபோதும், ஊடகங்களின் நியாயமான ஆதரவை அவைப்பெற்றன. சிலவேளைகளில் அவற்றின் சாட்சியங்கள் இரைச்சல் மிகுந்ததாகவும், முன்னிறுத்துவதில் தெளிவில்லாமலும், அபத்தமாகவும், அக்கறைகொண்டதாகவும், அசாத்தியமானதாகவும், அர்த்தமற்றதாகவும் இருந்தபோதிலும் காலங்காலமாக வாய்மூடிக்கிடந்த அவை இன்று வாய் திறக்கிறபோது, நம்மை நெகிழவைக்கின்றன.

இப் புத்தம்புது இருப்பளித்த சந்தோஷமும், இருபாலரும் சமமென்ற முழக்கமும், ‘அடைய வேண்டியதை அடைந்துவிட்டோம்’ என்ற எண்ணத்தினை நமக்களித்தது. உண்மையில் வெற்றிபெறும் நிலையில் விசிலூதி நம் ஆட்டத்தை நிறுத்திய கதைதான். நாமெறிந்த ஈட்டியினை நமக்கெதிராக திருப்புகின்றனர். ‘பெண் விடுதலை இயக்கம்’ இன்றைக்கு சோளக்கொல்லை பொம்மையாக்கபட்டிருக்கிறது, பெண்ணியல்வாதிகளை ஓரினச்சேர்க்கை கூட்டமென்றும், விரைவாங்கிய ஆண்களென்றும், ‘பெண்ணியம்’ என்பது ஏதோ தகாத சொல்போலவும் இன்றைக்கு முன்னிறுத்தப்படுகிறது. ஊடகங்கள் போராட்டம் இனி அவசியமில்லையென்றும், இனி அவரவருடைய இடத்திற்கு நல்லபிள்ளையாக, (ஆண்கள் எப்போதும்போல தங்கள் முதன்மை ஸ்தானத்திற்கு) திரும்பலாம் என்பதுபோல எழுதுகின்றன. ஆனால் புரட்சியிலே பங்கு பெறாத பெண்களும் நாட்டில் இருக்கின்றார்களென்பதும்,. ஏதோ ஒருவகையில் பெண் விடுதலைக்கான பயன்களை ஓரளவு ருசித்திருக்கிறார்களென்பதும், அவர்களுக்கு மீண்டும் தங்கள் பூர்வீகத்திற்கு திரும்புகிற எண்ணமேதுமில்லையென்பதும் ஊடகவியலாளர்களுக்கு விளங்குவதில்லை. பெண்ணியம் வெற்றிபெற்றுவிட்டதென்றும், சமத்தன்மையை அவள் அடைந்துவிட்டதாகவும் ஒரு வித பொய்யான வதந்தி இன்று பரப்படுகிறது. இதுவொரு வகையில் நமது இளம் பெண்களை ஏமாற்றும் தந்திரம், திசைதிருப்பும் செயல். ‘O’வின் கதை (Histoire d’O)என்றொரு திரைப்படம், அதில் அடங்கி நடக்கவும், அடிபடவும், பாலியல் வன்முறைகளுக்கு உட்படவும் பெண்களுக்கு பிரியம் அதிகமெனச் சொல்லி சென்ற நூற்றாண்டின் அதர்மத்தை நியாயபப்படுத்துகின்றனர். எதிர்க்கும் பெண்ணியல்வாதிகளை கேலிபேசுகின்றனர். வன்முறை, பாலியல்ரீதியில் பெண்களை உபயோகபடுத்துவது, ஆணாதிக்கம் இவை மூன்றிற்கும் இடையில் உண்மையில் எந்தவிதத் தொடர்புமில்லை என்பது அவர்களின் வாதம்.

இறுதியாக சிமோன் தெ பொவார் தவறிழைத்துவிட்டாரென்றும், பெண்ணாகப் பிறந்தவள் அடங்கிக் கிடந்தே வாழ்க்கையை அனுபவிக்கவேண்டுமென்றும், ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லிக்கொண்டிராமல், அவன் தேவையை நிரப்பி வாழ்வின் தாத்பரியத்தையும், காதலின் மேன்மையையும் பெண் பிறப்பின் பலனாக அடையவேண்டுமென சொல்லிவருகிறார்கள். அப்படி சொல்கிறவர்கள் ‘பெண்ணென்ற ஓர் இரண்டாமினத்தில்'(DEUXIEME SEX) மிகப்பெரிய புரிதலுக்கு வழிவகுக்கிற ‘உடலியல் மாத்திரமே நமது மேன்மைகளை தீர்மானிப்பதல்ல’ என்ற வாக்கியத்தின் உண்மையான பொருளை மறந்துவிடுகிறார்கள்.

——————————————————————————————————————————–

**.  1972ம் ஆண்டில் எழுதப்பட்டதென்பதை வாச்கர்கள் நினைவு கூர்வது அவசியம்.

1. மே -ஜூன் -1968. மாணவர்கள் தொடங்கப்பட்ட இப்போராட்டமானது, மெல்லமெல்ல அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் விரிவடைய அரசாங்கமே ஸ்தம்பித்துபோனது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் பிரெஞ்சுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தயிருந்தது, ஸ்திரதன்மையற்ற எதிர்காலங்குறைத்த கவலையும், பாரம்பரிய சமூகக் கட்டமைப்பு ஏற்படுத்தியிருந்த இரணங்களும் அனைத்துத் தரப்பினரும் வீதியில் இறங்கக் காரணமாயிற்று.

2. மனிதர் உரிமைச் சாசனப் பிரகடனம்(1789 ஆகஸ்டு 26)

3.. REGIME DE VICHY(1940 – 1944). முதல் உலகப்போரில் விஷியை நிர்வாகக்கேந்திரமாகக்கொண்டு ‘பெத்தேன்'(Petain)என்ற ராணுவ தளபதியின் தலைமையில் ஜெர்மானியர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பாஸிஸ பிரெஞ்சு நிருவாகம்

4. Charle DE GAULLE (1890-1970) -இரண்டாம் உலகபோரின்போது இலண்டனிலிருந்துகொண்டு நாஸிகளுக்கு எதிராக ழான் மூலன்(Jean Moulin) உதவியுடன் விடுதலை இயக்கமொன்றை நடத்தியவர், 1958-1969 வரை ஆறாவது பிரெஞ்சு குடியரசின் முதற் தலைவராகத் திகழ்ந்தவர்.

5. Mouvement de liberation des femmes -பிரான்சு நாட்டில் பெண்கள் விடுதலைக்கான இயக்கமென்பது 1970ல்தான் காலுன்றியது.

———————————————————————————————

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -14

‘La Bûche de Noël’

அநேகமாக ஆங்கிலத்தில் ‘Yule Log’ என்ற சொல்லைக் கேட்டிருப்பீர்கள். பிரெஞ்சில் La Bûche de Noël-லா பூஷ் தெ நோயெல்- என்பார்கள். கிருஸ்துமஸ் பண்டிகையை அறிந்தவர்களுக்கும் அல்லது மேற்கண்ட சொற்களை பண்டிகை நாட்களில் சொல்லக் கேட்டவர்களுக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மரத்துண்டு வடிவிலான கேக். இக்கேக்கை பண்டிகை விருந்தின் முடிவில் ‘Dessert’ ஆக தின்பார்கள்(உணவிற்கு முன்பாக ‘Starter’ எப்படியோ அப்படி உணவிற்குப் பின்பு ‘Dessert'(இதைப்பற்றித் தனியாக பின்பு ஒரு ஒருமுறை எழுதுகிறேன். உண்மையில் ‘La Bûche de Noël’ சடங்கொன்றின் குறியீடு.

இம்மரத்துண்டு அல்லது மரக்கட்டை உபயோகம் கிருஸ்துமஸ் பண்டிகைச் சடங்கின் ஒரு பகுதி. பொதுவாக இம்மரத்துண்டு செரீஸ் அல்லது ஆலீவ் மரங்களிலிருந்து பெறப்படவேண்டுமென்பது ஐதீகம். பிரான்சு நாட்டின் தென் கிழக்குப் பிரதேசமான புரொவென்சால் பகுதிகளில் இன்றளவும் ஒரு மரபாகவே கடைபிடித்து வருகிறார்கள். கிருஸ்துமஸ் இரவன்று பெரிய விருந்திற்கு (Gros Souper) முன்பாக வீட்டின் மூத்த உறுப்பினரும், இளைய வயதினரும் மரத்துண்டைக் கொண்டுவருவார்கள். பின்னர் இருவருமாக  விருந்து மேசையை மூன்றுமுறை மரத்துண்டுடன் வலம் வருவார்கள். அம்மரத்துண்டின் மீது பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட -Vin cuit- சிவப்பு ஒயினை மூன்று முறை பன்னீர்போல தெளித்து, அதனை வரவேற்பறையின் கணப்பு அடுப்பிலிட்டு தீயிடுவார்கள். அதன் பின்னர் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் Gros Souperக்காக சென்றமர்வார்கள்.

இச்சடங்கு இடத்திற்கிடம் வேறுபடும். சிலருக்கு மரத்துண்டு 3 நாட்கள் எரிந்தால்போதும். வேறு சிலருக்கோ ஆங்கிலப் புத்தாண்டு முதல்நாள்வரை எரியப்படவேண்டும். இரண்டாவது வகையினர் நள்ளிரவில் தீயை அணைத்து மறுநாள் மாலை மீண்டும் தீ மூட்டுவதால் ஒருவாரத்திற்கு அவர்கள் சொல்வதுபோல மரத்துண்டை எரியவைக்க முடிகிறது. பண்டிகை முடிந்தபின்பு சாம்பலைசேகரித்து வீட்டில் மேசை நாற்காலி, கட்டில், அலமாரிகளின் அடியிற் போடுவதும், வீடெங்கும் சாம்பலைத் தெளிப்பதும் தீவிபத்திலிருந்து வீட்டைக் காப்பாற்றுமென்றொரு நம்பிக்கை நிலவுகிறது.  தமிழ்நாட்டிலுள்ள எங்கள் கிராமத்தில் சொக்கப்பனை சாம்பலை இது போன்ற நம்பிக்கையில் உபயோகிப்பது வழக்கம். இப்போதும் தொடர்கிறதாவென்று தெரியாது.
———————–

கதையல்ல வரலாறு -2-4

நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

குருவப்ப பிள்ளை பிரான்சுக்குச்சேர்ந்தபோது குளிராகாலம் ஆரம்பித்திருந்தது.  தமது தந்தை நைநியப்பிள்ளைக்கு இழைத்த அநீதிக்கு நீதிகேட்க சென்ற குருவப்பிள்ளைக்கு பிரெஞ்சுக் காரர்களின் மனநிலை ஓரளவு புரிந்திருந்தது. அவர் மூன்று நான்கைந்து மாதம் கடலில் பயணம் செய்யவும், மிகுதியான பொருட்செலவை எதிர்கொள்ளவும் துணிந்தாரெனில் யூகங்கள் அடிப்படையில் ஐந்து காரணங்களை முன்வைக்கலாம்.

முதலாவது: பிரெஞ்சு வரலாற்றில் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை ஓர் அரசின் கீழ் நடக்கும் செயல்பாடுகளுக்கு ஆட்சித் தலமை முழுப்பொறுபேற்பதென்பதை ஓர் அறமாகவே கடைபிடிப்பவர்கள் என்ற பொதுவான நம்பிக்கை

இரண்டாவது: தந்தை நைநியப்பிள்ளையின் நேர்மையில் மகன் குருவப்பாபிள்ளை வைத்திருந்த அளவுகடந்த நம்பிக்கை.

மூன்றாவது: ஒரு பேராசைபிடித்த கவர்னர், குற்றமிழைக்காத தமது தந்தையை தண்டித்து தமது தந்தைக்கும் தமது குடும்பத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார், இந்த அவப்பெயரை துடைக்காமல் நாடுதிரும்பமாட்டேனென்ற மகனுக்குள்ள இயற்கையான வீம்பும் காரணமாக இருக்கலாம்

நான்காவது: இது ஒரு கௌரவ பிரச்சினையுங்கூட. உள்ளூர் பிரமுகர்கள் மத்தியிலும் புதுச்சேரியிலும் நைநியப்பிள்ளைக்கு நிறைவேற்றப்பட்ட தண்டனையும் பறிபோன தரகர் பதவியும் அக்குடும்பத்தின் செல்வாக்கை வெகுவாக குறைத்திருந்தன. என்பதும் ஓர் காரணமே.

ஐந்தாவது: பாரீஸ் சென்று நீதிகேட்கும் அளவிற்கு குருவப்ப பிள்ளையிடம் போதிய பணபலம் இருந்ததும். நைநியப்பிள்ளையைத் தண்டித்திருந்த கவர்னர் கியோம் எபேருக்கு புதுச்சேரி காலனியிலும் சரி, பிரான்சு தேசத்திலும் சரி, அரசியல் எதிரிகள் நிறைய இருந்தார்கள் என்ற உண்மை கூட ஒரு காரணமாகிறது.

மேற்கண்ட ஐந்து காரணங்களைத் தவிர்த்து ஆறாவதாக ஒன்று பிரெஞ்சு முடியாட்சியில் குருவப்பபிள்ளைக்குச் சாதகமாக நிகழ்ந்தது.

பதினைந்தாவது லூயி முடிசூடியிருந்தார். நன்மை பதினைந்தாம் லூயி வடிவில் ஏற்படவில்லை. அவரது சிறிய தகப்பபன் வடிவில் குருவப்பாவைத் தேடிவந்தது. பதினைந்தாம் லூயி பதவிக்கு வந்தபோது அவர் ஆறு வயது சிறுவனென்ற நிலையில் உருவான காபந்து அரசுக்கு பதினைந்தாவது லூயியின் சகோதரர் ஓர்லயான் பிரதேசத்தின் நிர்வாகத்தைக் கவனித்துவந்த பிரபு ஒருவர் பொறுப்பேற்கிறார். சிறுவனாக இருந்த பதினைந்தாம் லூயி பெயரளவில்தான் மன்னர். ஆட்சி உண்மையில் ஓர்லயான் பிரபுவின் கைக்குள் இருந்தது. ஆட்சித் தலமைக்கு வருகிற எவரும் தமது முந்தைய ஆட்சியில் செயல்பாடுகளை முந்த வேண்டுமென நினைப்பதும், தமது ஆட்சி முந்தய ஆட்சிக்கு மேம்பட்டதென்கிற கருத்தினை மக்களிடம் ஏற்படுத்தித் தரவேண்டுமென நினைப்பதும் இயல்பு. அவ்வாறே ஓரலயான் பிரபுவுக்கும் தமது பெரிய தந்தையார் செய்தவை விவேகமற்ற செயல்கள், அநீதிகள். எனவே அரசியல் அமைப்பை திருத்த வேண்டும், மக்களுக்கு சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் தந்து சமூகத்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டுமென நினைத்து மும்முறமாக செயல்பட்டார்.

குருவப்பா விண்ணப்பத்தை பரிசீலித்த மன்னரின் ஆலோசனை சபை 1718ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம்தேதி  முழுமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுகிறது. அத்தீர்மானம் நைநியப்பிள்ளை வழக்கில் வாக்குமூலங்கொடுத்த சாட்சிகளை மறு விசாரணை செய்வதற்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டது.

இராண்டாண்டுகாலம் நீடித்த மறுவிசாரணையில் சாட்சிகளின் வாக்குமூலங்களையும் அது தொடர்பான ஆவணங்களையும் பரிசீலித்தார்கள். 1720ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்குழுவின் அறிக்கை வெளிவந்தது. நைநியப்பிள்ளை குற்றமேதும் இழைக்கவில்லை அவர் தண்டிக்கப்பட்டது தவறு என்றதில் கூறப்பட்டிருந்தது.  அரசு தரப்பில் அதற்குரிய இழப்பீட்டைத் தரவேண்டும் எனவும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.

நைநியப்பிள்ளையின் சொத்துக்களை ஏலம் போட்டுக் கிடைத்த 10060 வராகன்களை தமது கருவூலத்தில் பிரெஞ்சு கூட்டுறவு சங்கம் சேர்த்துக்கொண்ட நாள் முதல் பத்து சதவீதம் வட்டியுடன் சேர்த்து அசலையும் வட்டியையும் நைநியப்பிள்ளையின் குடும்பத்தினருக்கு செலுத்தவேண்டும் அது தவிர நைநியப்பிள்ளை குடும்பத்திற்கு ஏற்படுத்திய அவமரியாதையை  சீரமைக்கும் வகையில் அக்குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகையாக 20000 வராகன் கூடுதலாக தரவேண்டுமென்ற உத்தரவு ம் முடியாட்சியிடமிருந்து புதுச்சேரி கூட்டுறவு சங்க நிர்வாகத்திற்கு வந்தது.

குருவப்பா பிள்ளை தம் முயற்சியின் பலனை முழுவதுமாக அனுபவித்தார் என்றே சொல்லவேண்டும். செவாலியே பட்டத்தையும் அவருக்கு பிரெஞ்சு அரசாங்க சூட்டி மகிழ்ந்தது. பிரெஞ்சு கூட்டுறவு சங்கம் முடியாட்சியின் உத்தரவுப்படி அவரது தந்தையின் தரகர் பதவிக்கு மாற்றாக நியமிக்கப்பட்ட கனகராய முதலியாரை தரகர் பதவிலிருந்து நீக்கி அப்பதவிக்கு குருவப்பா பிள்ளையை நியமனம் செய்தது.  தரகர் பணியோடு தபலியோம் (Registrar) வேலைக்கும் அவரும் அவர் சகோதரர்களும், வாரிசுகளும் தலைமுறைதலைமுறையாய் சாசுவதமாகின்றார்கள் என்றும் அந்த நியமன அறிக்கை தெரிவித்தது.

ஆக நைநியப்பிள்ளை மீது பழிசுமத்தப்பட்ட குற்றத்திற்கு அவர் மகன் குருவப்பா பிள்ளை பிராயச்சித்தம் தேடினார் என்பது உண்மைதான். பிரெஞ்சுக் காரர்களின் நீதிக்குறித்தும் இவ்வழக்கின் அடிப்படையில் இக்கட்டுரையினைப் படிக்கின்ற நண்பர்கள் வியந்தோதக்கூடும். ஆனாலுங்கூட உங்களில் ஒரு சிலருக்கு காலனி அரசுகளின் மனப்பாங்கினை அறிந்தவர்களென்ற வகையிலும், பிரெஞ்சின் முடியாட்சியில் சேசு சபயினருக்குள்ள செல்வாக்கை இக்கட்டுரையிலேகூட  ஏற்கனவே வாசித்திருக்கின்ற வகையிலும் சில கேள்விகள் இருக்கலாம்.

நைநியப்பிள்ளைக்கு பதிலாக வேறு தரகர் நியமனம் செய்யப்படவிருந்தபோது ஒரு கிறுஸ்துவரே தரகராக நியமனம் செய்யவேண்டுமென்று கறாராக இருந்த சேசுசபயினர் -(நைநியப்பிள்ளை இடத்திற்கு நியமிக்கப்பட்ட கனகசபை ஒரு கிருஸ்துவர் என்றும் ஏற்கனவே கூறியிருந்தோம்.)- எப்படி குருவப்பபிள்ளை என்ற இந்துவை தரகராக நியமனம் செய்ய சம்மதித்தார்கள் என்பது முதலாவது கேள்வி

பிரெஞ்சு காலணி அரசாங்கத்திற்கு நியாயத்தை வழங்குவதில் அப்படியொரு அக்கறையா? என்பது இரண்டாவது கேள்வி.

நன்கு யோசித்திருப்பீர்களெனில் இரண்டுக்கும் விடையொன்றுதான். அந்த விடையை ஊகிக்க முடிந்தவர்களில் ஒருவராக   நீங்கள் இருப்பீர்களென நம்புகிறேன். உங்கள் ஊகம் சரி. அறமும் நெறியும் சம்பத்தையோ குபேர பலனையோ அழைந்துவந்ததாக கதைகளில் படிக்கலாம் ஆனால் வரலாற்று உண்மை என்பது வேறு. குருவப்பாபிள்ளை தந்தைக்காக நீதியை நிலைநாட்ட பிரான்சுக்குப் பயணித்தபோது ஆறுகாரணங்கள் இப்பகுதியின் தொடக்கத்தில் ஊகங்களாகச் சொல்லப்பட்டிருந்தன. அந்த ஆறுகாரணங்களையும் கடந்து நீதி தமக்குக் கட்டாயம் வழங்கப்படும் என்பதற்கு ஏழாவதாக ஒரு காரணத்தை தனயன் குருவப்பாபிள்ளை வைத்திருந்தார். அக்காரணம் கிருஸ்த்துவத்தை தழுவுவதென்று அவரெடுத்த முடிவு. பிரான்சுக்குச்சென்றதும் அவர் செய்த முதல்வேலை கிருஸ்துவராக மாறியது. அவரது ஞானத் தந்தை ஒர்லயான் பிரபு, ஞானத் தாயார் இளம் வயது அரசரின் (பதினைந்தாம் லூயியின்) தாயார். ஆக இந்தப் புதிய தகுதி பிரெஞ்சு நீதியின் கதவுகளை திறக்க வழிகோலின. தந்தை நைநியப்பிள்ளைக்கு தனயன் குருவப்பாபிள்ளை கிருஸ்துவத்தைத் தழுவி நீதியை நிலைநாட்டிவிட்டார்.

பி.கு. குருவப்பா பிள்ளையின் இறப்புக்குப்பிறகு கனகராயமுதலியார் தரகராக நியமிக்கபடுகிறார். அவருக்குப்பின் குருவப்பாபிள்ளையின் மைத்துனர் திருவேங்கிடம்பிள்ளையின் மகன் ஆனந்தரங்கப்பிள்ளை தரகராக நியமிக்கப்பட்டார். இவர் நைநியப்பிள்ளை வழிவந்தவரல்ல. குருவப்பா பிள்ளைபோல மதம் மாறி தமது செல்வாக்கை வளர்த்துக்கொண்டவருமல்ல. நவீன தமிழில் பிழைக்கத் தெரிந்தவர் என்பதற்கு ஆனந்தரங்கப்பிள்ளையென பொருள்கொள்ளலாம். சாதுர்யமான எஜமான விசுவாசமும், தரகுத் தொழிலில் அவருக்கிருந்த திறனும் சேசுசபையினரையே வாயடைக்கச்செய்திருந்தது.

—-

மொழிவது சுகம் டிசம்பர் 15

காந்திஎன்றகுறியீடு

கடந்த மாதம்(அக்டோபர்2) நான் வசிக்கின்ற Strasbourg நகரில் காந்தி சிலையை முதன்முதலாகத் திறந்தார்கள். 11-11-2011 அன்று பாரீஸ் நகர புறநகரொன்றில் மற்றொன்றை திறந்தார்கள். வொரெயால்(Voreyal) தமிழ்ச்சங்க தலைவர் இலங்கைவேந்தன் எனக்கு அறிமுகமானவர். வருடந்தோறும் தமிழ் நிகழ்ச்சிகளை நடத்தி அப்பகுதிவாழ் தமிழ்மக்களை ஒருங்கிணைத்து வருகிறவர். இவ்வமைப்பு தமிழ்பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறது. ஆர்வமுள்ள சிறுவர் சிறுமியர் தமிழ் கற்று வருகின்றனர். வொரெயால் தமிழ் அமைப்பு நடத்தும் பொங்கல் நிகழ்ச்சியில் தமிழ் படிக்கும் சிறுவர் சிறுமியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தவறாமல் இடம்பெறும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை பொறுத்தவரை தமிழ் கற்கும் வாய்ப்புகள் மங்கிய சூழலில் இதுபோன்ற வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருபவர்களை வணங்க வேண்டியிருக்கிறது. நண்பர் இலங்கைவேந்தன்,  பாரீஸில் காந்திக்கு சிலைவைக்க முயற்சிகளெடுத்து அதில் இன்று வெற்றியும் பெற்றிருக்கிறார். இருமாதங்களுக்கு முன்பு சிலை திறக்க யாரை அழைக்கலாமென என்னிடம் யோசனைக் கேட்டார். எனக்கு இன்றைய தேதியில் முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாமைக் காட்டிலும் பொருத்தமான வேறு நபர்கள்  இல்லை என்பதை வற்புறுத்தினேன் .  தமிழ்நாட்டில் நேர்மையானவர்கள் என நம்பப்படுகிறவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டேன். இந்தியா சென்றதும் அவர்களைச் சந்தித்து பேசுவதாக என்னிடத்தில் கூறினார். அவ்வாறு அவர் செய்யவில்லை, இந்தியாவிலிருந்து திரும்பியபிறகு என்னைச் சமாதானபடுத்தும் வகையில் சில காரணங்களைக் கூறினார். அதை நான் வேறுவிதமாக ஊகித்தேன்: காந்தி சிலையை நிறுவ உழைப்பு பொருள் இரண்டும் தேவைபட்டன. உழைப்பை தர முன் வரலாம்,  ஆனால் பொருட்தேவையை ஓரளவுதான் சுமக்க முடியுமென்ற நிலை. இது எல்லோருக்கும் நேர்வதுதான். மீன் விற்றாலென்ன காசு நாறாதில்லையா?  சுமையை பகிர்ந்துகொள்ளும் செல்வந்தர்களும் அரசியல்வாதிகளும் தேவையாக இருந்தனர். எனவே அவர்களை அழைக்க வேண்டிய நிர்ப்பந்தம். எது எப்படியிருப்பினும் காந்தி முதன் முறையாக சிலை வடிவில் பாரீஸ் மண்ணில் கால் பதிக்க நண்பர் எடுத்த பெருமுயற்சி நனவாகியுள்ளது. வேறு இந்தியர்கள் சாதிக்காதது, பாராட்டுக்கள்.

இன்று காந்தி என்ற சொல் வணிகமொழியில் சொல்வதெனில் ஒரு விற்பனை குறியீடு. காங்கிரஸில் ஆரம்பித்து கசாப்புகடைவரை அவரவர் சரக்கினை விற்க முதலீடற்ற விளம்பரமாக காந்தி உதவுகிறார். இந்தியாவுக்கு மட்டுமல்ல இந்தியா துணைக்கண்டத்தைச்சேர்ந்த பலருக்கும் காந்தி உபயோகமாகிறார். இந்தியர்களோடு, பாகிஸ்தானியரும், வங்காள தேசத்தினரும், இலங்கையரும் மேற்கத்திய நாடுகளில் காந்தியின் பெயரால் நடத்தும் ரெஸ்டாரெண்ட்டுகளில்  பிரியாணியும், முர்க்மசாலாவும், நான் கீமாவும், சிவப்பு ஒயினும், விஸ்கியும், பீரும் விலைபோகிக்கொண்டிருக்கின்றன.  அக்டோபர் 2ல் காந்தியை ஞாபகம் வைத்து சிலைக்கும் காந்தி சமாதிக்கும் தலைவர்கள் அஞ்சலி செய்ய மறப்பதில்லை.

நாம் இப்படியிருக்க அமெரிக்காவின் மார்ட்டின் லூதர்கிங்கில் ஆரம்பித்து தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மாண்டெலா, பர்மாவின் அவுன் சன் ஸ¥ கீ (Aung San Suu Kyi) போன்ற உலகறிந்த பெருமக்கள்- காந்தியைபோலவே பிறருக்காக தங்களை வருத்திக்கொள்கிறவர்கள் – காந்தியின் சீடர்களென சொல்லிக்கொள்வதில் நிறைவு காண்கிறார்கள். அன்னா ஹசாரே தம்மை காந்தியுடன் ஒப்பிடவேண்டாமென்கிறார்.  காந்தி இந்தியாவின் தேசிய அடையாளம், பாரம்பரிய சின்னம். காந்தியம் குறித்த விவாதங்கள் தேவைதான், ஆனால் காந்தி என்ற மனிதரின்  அப்பழுக்கற்ற நெறியும் அறத்தின் மீதான அவரது பிடிமானமும் விவாதங்களுக்கு அப்பாற்பட்டது. எதையும் சந்தேகித்தே பழக்கப்பட்டவர்களிடம் நாம் விவாதிக்க ஒன்றுமில்லை. இன்றைய உலகிற்கு காந்தியின் தேவை தவிர்க்கமுடியாததது. அவரது சாத்வீகமான அரசியல் மட்டுமல்ல, அடிதட்டு மக்களின் வளர்ச்சியில் அக்கறைகொண்ட வாழ்வாதார பொருளியலும் முன்னெப்போதும் கண்டிராத அளவிற்கு தேவையாகிறது.

புனைவும்நிஜமும்.

டேனி போயலின் Slumdog Millionaire தி ரை ப்படத்தில்வரும் சம்பவம் உண்மையாகியிருக்கிறது. சில நேரங்களில் எது புனைவு எது உண்மையென்று பிரித்துணரமுடியாமல் குழம்பிப்போகிறோம். இச்சம்பவம் அதற்கு ஓர் நல்ல உதாரணம். உண்மைசம்பவங்களின் அடிப்படையில் நாவல்களும், திரைப்படங்களும் வருவதுண்டு. ஆனால் புனைவு உண்மையாகுமா? நடந்திருக்கிறது நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற நிகழ்ச்சில் பங்குகொண்டு ஜெயித்திருக்கும் 26 வயது இளைஞனரான சுசில்குமார் என்ற இளைஞர் பீகார் மாநிலத்தைச்சேர்ந்த மோத்திஹரி என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர். அரசாங்கத்தில் எழுத்தராக பணிபுரிகிறாராம். ஒரு ஏழை விவசாயின் மகன் என்கிறார்கள். அவரது முன்னும்பின்னுமான வாழ்க்கையும் திரைப்படத்தை ஒத்திருந்ததா ஒத்திருக்குமா என்பது தெரியவில்லை.

காலபைரவன்

அந்நிய மொழிகளில்வரும் படைப்புகளை முடிந்தவரை உடனுக்குடன் வாசிக்கும் பழக்கமுண்டு. வாங்கிய வேகத்தில் பத்து பக்கங்களுக்கு மேல் தொடர்ந்து படிக்க முடியாமற்போன நூல்களையும் நிறைய வைத்திருக்கிறேன். பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் வாசிக்கிறபோதெல்லாம் தமிழில் இதைக்காட்டிலும் நல்லவாசிப்புகளை சந்தித்திருக்கிறேன் என்ற பெருமிதமும் இடைக்கிடை வருவதுண்டு. தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் உலகறிந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களைக்காட்டிலும் மீசுரமானவை. அக்டோபர் மாத உயிரெழுத்தில் ‘விஷம் தோய்ந்த நெடுங்கனவின் நகம்’ என்ற சிறுகதையை படித்தேன். காலபைரவன் என்ற இளைஞர் எழுதியிருக்கிறார். சொல்ல வார்த்தைகளில்லை. தமிழில் அண்மைக்காலத்தில் வெளிவந்த சிறுகதைகளுள் முக்கியமானதொரு படைப்பு. இக்கதையை மீண்டும் நினைவுகூரும்வகையில் நவம்பர் மாதம் 14ந்தேதி பிரெஞ்சு தினசரியில் மர்செய் என்ற பிரதேசத்துக்கருகே நடந்ததாக ஒரு சம்பவம். இந்தியக்குடும்பத்தைசேர்ந்த நாற்பது வயது பெண்மணி புத்தி சுவாதீனமற்ற 6 வயது மகனை கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டாள் என்பது செய்தி. காரணமும் காரியமும் நெருக்கமானவைதான் அந்த நெருக்கம நூலிழையாகவும் இருக்கலாம், பாரிய இடைவெளியாகவும் இருக்கலாம். முடிவின்றி காரணகாரியத்தை அறிவுகொண்டு புறத்தில் தேடுவது வானத்தைக் கைகொண்டு தொடும் முயற்சி. காலபைரவன் காரணகாரியத்தை மனித மனங்களுக்குள் தேடுகிறார்.

ஓடப்பரும்உதையப்பரும்..

1961ம் ஆண்டு அக்டோபர் 17 பிரான்சுநாட்டின் காலனிய வரலாற்றில் ஒரு கறைபடிந்த தேதி. பாரீஸ் மாநகரில் அமைதியாக ஊர்வலம்சென்ற அல்ஜீரிய மக்களில் பலர் பிரெஞ்சு காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை நினைபடுத்தும் தேதி அது. கடந்தமாதம் அதனுடையைய ஐம்பதாவது ஆண்டு தினம். பொதுவாக காலனிய வரலாறென்பது ஆதிக்க சக்திகளின் அதிகார அடக்குமுறைகளாலும்  அடிமைபட்டநாடுகளின் அபயக்குரல்களைக்கொண்டும் எழுதப்பட்டது. எஜமானர்கள் எஜமானர்களாகவே இருக்கவேண்டுமா என்ன? அடிமைப்பட்டுக்கிடந்தவர்கள் தலைநிமிர நினைக்கிறார்கள். அந்நியர் ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல்கள் ஒலிக்கின்றன. காற்று திசைமாறுகிறது. ஓடப்பராயிருந்தவர்கள் உதையப்பர்களாக மாறுகிறார்கள், அதற்கான விலையையும் அவர்கள் செலுத்தவேண்டியிருந்தது. பிரான்சுநாட்டின் காலனிகளில் ஒன்றாக இருந்து விடுதலைபெற முயன்ற அல்ஜீரிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் ஏராளம். அதுபோன்ற அநீதிகளின் சாட்சியாகவிருந்த நாட்களில் ஒன்றுதான் 1961ம் ஆண்டு அக்டோபர்மாதம் 17ந்தேதி. தேதியின் அடிப்படையில் பார்க்கிறபோது சம்பவம் ஒரு நாள் அடையாளத்தை பெற்றதைப்போல தோற்றம் தரினும் பின்புலத்தில் பல மாதங்களின் – அதாவது உண்மையில் ஆகஸ்டுமாதத்தின்  இறுதியில் தொடங்கிய பிரச்சினை அக்டோபர் இறுதிவரை நீடித்தது.

ஆப்ரிக்கக் கண்டத்தில் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக்கொண்ட அல்ஜீரியாநாடு பிரெஞ்சு காலனியாக இருந்துவந்தது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் காலனிநாடுகள் பலவும் விடுதலைபெறவிரும்பியதைபோலவே அல்ஜீரியமக்களும் விடுதலை பெற விரும்பினர். அவர்களை வழி நடத்த இரண்டு விடுதலை இயக்கங்கள் தோன்றின. ஒன்று தேசிய விடுதலை முன்னணி (Front de Libération Nationale), மற்றொன்று அல்ஜீரிய தேசிய இயக்கம். இவை இரண்டினுள் முதல் இயக்கம் வன்முறையில் நம்பிக்கை வைத்திருந்ததால் பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆதரவு இரண்டாவது இயக்கத்திற்கு. இவ்விரண்டு அமைப்புகளுக்கும் பிரான்சுநாட்டில் குடியேறியிருந்த அல்ஜீரிய மக்களிடை அனுதாபிகளிருந்தனர். தாய்நாட்டில் இவர்களுக்குள் ஏற்பட்ட சகோதர யுத்தத்தை புலம்பெயர்ந்த நாட்டிலும் தொடர்ந்தனர். இச் சகோதரயுத்தத்தில் ஏறக்குறைய 4000பேர் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

ராஜபக்ஷேபோலவே பிரெஞ்சு அரசாங்கமும் இந்த சகோதரயுத்தத்தை மறைமுகமாக கூர்தீட்டி விளைவை சந்தோஷத்தோடு ரசித்தது தேசிய விடுதலை முன்னணியின் ஆதரவுபெற்ற ஆல்ஜீரியாவின் தற்காலிக அரசாங்கத்திற்கு வேண்டிய நிதியை அவ்வியக்கத்தின் பிரான்சு நாட்டின் கிளையும்  பிரான்சு நாட்டில் வசித்துவந்த அதன் அல்ஜீரிய உறுப்பினர்களும் உதவப்போக இதை தடுத்து நிறுத்த நினைத்த பிரெஞ்சு அரசாங்கம் தனது ஆதரவுபெற்ற தேசிய இயக்கத்தைக்கொண்டு இவர்களை கண்காணிக்க ஆரம்பித்தது. அல்ஜீரிய தேசிய முன்னணிக்கு எதிராக ஒர் பிரத்தியேக காவற் படையை ஏற்படுத்தியது. தேசிய விடுதலை முன்னணியின் அனுதாபிகளான ஆண்களும் பெண்களும் அவ்வப்போது இழுத்துசெல்லப்பப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். பிரெஞ்சு அரசாங்கத்தின் பிரத்தியேக காவற்படையுடன் நேரடித் தாக்குதலில் தேசிய முன்னணி இறங்க இருதரப்பிலும் பல உயிரிழப்புகள். பிரத்தியேக காவற்படையின் ஒரு பிரிவினரும் பிரெஞ்சு இனவாதிகளும் ஒன்றுகூடி அல்ஜீரிய மக்களை தண்டித்தாக வேண்டும் என்கிறார்கள். மாவட்ட தலைமை நிர்வாகி இதை மறைமுகமாக ஆதரித்தாரென்ற குற்றசாட்டு. ஒரு பக்கம் பிரெஞ்சு அரசாங்கத்தின் மூர்க்கமான காவல் படை, எதிரணியில் பிரான்சில் வாழ்ந்துவந்த எழுத்தறிவற்ற அல்ஜீரிய மக்கள். ‘வன்முறைக்கெதிராக’ என்று தமது நடவடிக்கைகளுக்கு சமாதானம் சொன்ன பிரெஞ்சு அரசாங்கம் வன்முறையாளர்களைக் கொல்லவில்லை அப்பாவி அல்ஜீரியர்களைகொன்றது. விசாரணை என்ற பெயரிலே சித்திரவதை செய்தது. அடித்துக் கொன்றது. காரணமின்றி திடீர் திடீரென்று ஆண்களும் பெண்களும் கைது செய்யப்பட்டனர். பலரை பிரான்சிலிருந்து வெளியேற்றியது. இக்காலங்களில்  அப்படிக்கொல்லபட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் 307பேரென்று சொல்கிறார்கள். அக்டோபர் 17 1961 அன்று பிரெஞ்சு அரசாங்கத்தின் மேற்கண்ட நடவடிக்கைகளை எதிர்ப்பு தெரிவித்து அல்ஜீரிய மக்களில் சுமார் இருபதாயிரம் மக்கள் ஊர்வலம் போகின்றனர் அவர்களுக்கு எதிராக பத்தாயிரம் போலிஸார் தாக்குதலில் இறங்கினர் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியரென எவரையும் பொலீஸார் விட்டுவைக்கவில்லை. அடிபட்டு வீழ்ந்தவர்கள் பல மணிநேரம் வீதிகளிலேயே கிடந்ததாக சொல்கின்றனர். சேன் நதியில் குதித்து தப்பியோடமுயன்ற்வர்கள் பலர் நதியில் மூழ்லிப்போனதாகவும் பிரெஞ்சு அரசாங்கம் இத்தாக்குதலில் 30லிருந்து 50 பேர் இறந்ததாச் சொல்கிறது பத்திரிகையாளர்கள் குறைந்தது 200பேராவது இறந்திருக்கலாமென எழுதியுள்ளார்கள். அப்பாவிகளுக்கு நீதிகிடைத்ததாக வரலாறில்லை.

 புக்கர் பரிசு

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கில படைப்பிலக்கிய உலகில் புக்கர் பரிசு (மேன் குழுமம் சுவீகரித்தபிறகு மேன் புக்கர் பரிசு) முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அதை மறைமுகமாக விமர்சித்தவர்கள் பலரும் அதன் அங்கீகாரத்திற்கு ஏங்கினதென்னவோ உண்மை. ஆனாலின்று அப்புக்கர் பரிசுக்கு எதிராக வெளிப்படையாக விமர்சனம் வந்திருக்கிறது. புக்கர் பரிசு தேர்வு குழு ஒரு படைப்பின் வாசிப்புத் தன்மையை(readability) பார்க்கிறதேயன்றி படைப்புத் திறனை பார்ப்பதில்லை என்பது இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு.   போட்டி புக்கர் பரிசு ஒன்றை அடுத்த ஆண்டிலிருந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். புக்கர் பரிசுபோல காமன்வெல்த் நாடுகளிலிருந்து வெளிவரும் ஆங்கில படைப்புகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல்,  உலக நாடுகளில் ஆங்கிலத்தில் எழுதப்படும் எல்லா படைப்புகளையும் தங்கள் தேர்வு குழு போட்டிக்கு அனுமதிக்கும் என்கிறார்கள் புக்கர் பரிசு தேர்வுக்குழுவில் இலக்கியதுறை சார்ந்தவர்களும் அத்துறை சாராதவர்களும் இடம்பெற்றிருக்கிறார்களாம், ஆனால் இவர்கள் அமைக்கவிருக்கும் தேர்வுக் குழுவில் தொழில் முறை விமர்சர்கர்கள், எழுத்தாளர்கள், மொழிஅறிஞர்கள் மற்றும் இலக்கியதுறைசார்ந்தவர்கள் பங்குபெறுவார்களென்றும் இவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு நோக்கம்தான் இருக்க முடியும் அந்நோக்கம் ‘தெளிவுடனும் எவருடனும் சமரசம் செய்துகொள்ளாமலும், மிகச்சிறந்த படைப்புகளை தேர்வு செய்தல்’ என்று சத்தியம் செய்கிறார்கள். இவர்களுக்கு போட்டியாக இன்னொரு புக்கர் பரிசு பிறக்காமலிருந்தால் சரி.

நன்றி: அம்ருதா டிசம்பர் இதழ்

—————————–

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-13:

நவம்பர் டிசம்பர் இரண்டுமாதங்களும் பிற நாடுகளைப்போலவே பிரான்சு நாட்டில் கிருஸ்துமஸ் கொண்டாட்டம். நகரங்கள் கிராமங்களென்ற பாகுபாடின்றி எங்கு பார்த்தாலும் விழாக்கால கோலாகலங்களில் பிரான்சு திளைக்கும். அக்காலங்களில் நவம்பர் கடைசிவாரத்தில் ஆரம்பித்து டிசம்பர் முடிய நடைபெறுகிற  கிருஸ்துமஸ் கடைகளும் பிரசித்தம். இப்போதெல்லாம் உலகில் எல்லா நாடுகளிலும் கிருஸ்துமஸ் பண்டிகைக்கால கடைகளைப் பரவலாக பார்க்கின்ற சந்தர்ப்பம் வாய்த்தாலும் ஸ்ட்ராஸ்பூர் நகர் கடைகளைபோல எங்கும் பார்த்திருக்கமாட்டீர்களென உறுதியாகச்சொல்வேன். இந்நகரமிருக்கும் அல்சாஸ் பிரதேசம் பல ஆண்டுகள் ஜெர்மன் நாட்டின் வசமிருந்தது ஒரு காரணம்.

ஸ்ட்ராஸ்பூர் கிருஸ்துமஸ் கடைகளுக்கு 500 வயது. அதாவது முதன் முதலாக உலகில் கிருஸ்துமஸ் பண்டிகைக்கால கடைகளென்று திறக்கபட்டது இங்கேதான். கி.பி 1570லிருந்து வருடம் தோறும் கிருஸ்துமஸ் காலத்தில் இக்கடைகள் இயங்குகின்றன. பண்டிகைக்குத் தேவையான அலங்காரப் பொருட்கள், பிரார்த்தனை பொருட்கள், வாசனை திரவியங்கள், உள்ளூர் கலை பொருட்கள் விசேடமான பிஸ்கட்டுகள், சாக்லேட்டுகள் ஆகியவை இக்கடைகளில் கிடைக்கும். கடந்த இருபது ஆண்டுகளாக வருடம்தோறும் நானும் ஒரு கடையை இங்கே திறந்து நடத்திவருகிறேன்.

பிரான்சின் பிற மாநிலங்களிலிருந்தும் ஐரோப்பாவின் பிற நாடுகளிலிருந்தும்  சுற்றுலா பயணிகள் ஏராளமாக இக்காலங்களில் ஸ்ட்ராஸ்பூர் வருகின்றனர். ஒளிவெள்ளத்தில் மூழ்கிய வீதிகளில் கூட்டத்தில் புகுந்து வெளிவருவது ஒரு சுகமான அனுபவம், நடுக்கும் குளிருக்கு இருக்கவே இருக்கிறது ‘Vin Chaud’ ம்   jus d’orange chaudம் (சூடான ஒயினும், சூடான ஆரஞ்சுபானமும்.)

——————————-

கதையல்ல வரலாறு -2-3

நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

பதவி இறக்கப்பட்ட முன்னாள் கவர்னர் கியோம் எபேர் தாய் நாடு திரும்புகிறார்.  போனவர் எத்தனை நாளைக்குதான் மதுபாட்டில்களை திறந்து வைத்துகொண்டு உட்கார்ந்திருப்பது, உணவுண்ண உட்கார்ந்தால் சமையல்காரன் ம்ஸியே முதலில் மதாமை கவனித்து விட்டு வருகிறேன் என்கிறான்; ஒப்பேராவுக்கு போகும் மதாம் எபேரா சாரட்டில் நாய்க்கும் தனக்கும் மட்டுமே இடமிருக்கிறது நீங்கள் இருந்து வீட்டைபார்த்துக்கொள்ளுங்கள் என்கிறாள்; மாளிகைப் பணிப்பெண்கள்கூட தொட்டு பேசாதே என்கிறார்கள். ஆக ஏதாவது செய்தாக வேண்டும்; கொடுக்க வேண்டியதை கொடுத்து பிடிக்கவேண்டியவர்களை பிடித்து திரும்பவும் புதுசேரிக்குப் கவர்னராய் பொறுபேற்பதென்று கங்கணம் கட்டிக்கொண்டார். அன்று முதல் தினந்தோறும் புதுச்சேரி திரும்புவதற்கான முயற்சிகளில் இறங்கினார். மன்னரின் அமைச்சர்களை சென்று சந்தித்தார். மன்னரின் மனைவி துணைவிக¨ளை போய் பார்த்தார், அவரின் மகளைப் பார்த்தார், மகனைபார்த்தார். மன்னரின் வளர்ப்பு பூனையையும் நாயையும் தவிர வாய் திறந்து இவருக்கு யார் யாரெல்லாம் சிபாரிசு செய்ய முடியுமோ அவர்களிடமெல்லாம் முறையிட்டார். தம்மை கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்கியதற்கு எந்த முகாந்திரமுமில்லை என்றார். தான் மாசற்றவரென்றும் தன் பேரில் கொண்டுவரப்பட குற்றசாட்டுகள் ஆதாரமற்றவையென்றும் ஓலமிட்டார்.

மன்னருக்கு எபேர் பிரச்சினை பெரும் பிரச்சினையாகிவிட்டது. எங்கே போனாலும் எதை தொட்டாலும் எபேர் பேசுவதுபோல இருக்கிறது. மனைவி கூட எபேர் பிரச்சினையை தீர்த்துவிட்டு என்னைத் தொடுங்கள் என்கிறாள் -மன்னர் மனைவி எபேருக்கு உறவு முறையாக வேண்டும். எபேருக்கு மக்கள் காவலர் என்ற புதுபட்டத்தைக்கொடுத்து புதுச்சேரிக்கு அனுப்பி வைத்த பிரெஞ்சு முடியாட்சி அவர் மகனையும் புதுச்சேரி காலனி அரசாங்கத்தின் மேல்ஆலோசனை கூட்டத்தின் அங்கத்தினராக நியமித்தது. செத்த பிணம் பிழைத்தெழுந்தால் காலை எட்டிவைத்து நடக்குமாம் அப்படித்தான் அமைந்தது தந்தைக்கும் மகனுக்கும் வந்த வாழ்வு.

தந்தையும் மகனும் புதுச்சேரிக்கு வந்து இரண்டொரு மாதங்கள் ஆகியிருந்தன. தந்தை எபேரைக் காட்டிலும் மகன் எபேருக்கு கூடுதலாகவே புதுச்சேரியின் நிலமை புரிந்தது. முத்தியப்ப முதலியார், தம்மைத் தரகர் பதவியிலிருந்து எபேர் துரத்தினார் என்பதைக்காட்டிலும் நைநியப்பிள்ளை தமது உத்தியோகத்தைப் பறித்துக்கொண்டு நன்கு சம்பாதிக்கிறார் என்பது உறுத்தலாக இருந்தது. பிரான்சிலிருந்து வந்திறங்கிய எபேர் மகனை முத்தியப்ப முதலியார் சதித்தித்தார்.

– துரை உங்கள் தந்தையார் முதலில் நைநியப்பிள்ளை நன்கு கொழுத்துவிட்டான். உங்கள் தயவால் முன்னுக்கு வந்தவன், கேட்பதை கேளுங்கள் அவன் கொடுத்தாக வேண்டும்- என்றார்.

இரவுமுழுக்க உறக்கமில்லாமல் தவித்த எபேர் மகன் மறுநாள் காலை நைநியப்பிள்ளையைக் கூப்பிட்டனுப்பினார். அவரும் வந்தார்.

– என்ன நைநியப்பிள்ளை சௌக்கியமா?

– ஏதோ எஜமான்கள் தயவுலே குடிகள் நாங்கள் பிழைக்கிறோம்.

– நான் கேள்விபட்டது அப்படி இல்லையே. உம்மைப் பற்றி நிறைய பிராது வந்திருக்கிறது. என் தகப்பனார் உமக்குக்கொடுத்த சகல சுதந்திரங்களையும் நீர் தவறாக பயன்படுத்தி சம்பாதித்ததாகப் புதுச்சேரி முழுக்க பேச்சாமே.

– துரையின் காதுக்கு யாரோ தவறான செய்தியைக் கூறியிருக்கிறார்கள்..

– நான் சொல்வதைக்கேளும். என் தகப்பனார் உமக்குக்கொடுத்த தரகு வேலையில் 40000 வராகன் சம்பாதித்திருக்கிறீர் என்று கேள்வி, அதில் 10000 வராகன்களை என் தகப்பனாருக்குக் கொடுக்கவேண்டும்

– 10000 வராகனுக்கு நான் எங்குபோவேன்.

– சரி 5000 மாவது கொடுங்கள்.

– துரை மன்னிக்கவேண்டும். நீங்கள் கேட்கும் தொகையை நான் கொடுக்க சம்மதித்தால் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன் என்று பொருள். உங்கள் பணத்தில் நீங்கள் நினைப்பதுபோல இலாபமொன்றும் பார்க்கவில்லை என்பது தான் உண்மை.

– பரவாயில்லை 3000 மாவது கொடுங்கள், உங்களை மன்னிக்கிறேன்.

– ஏற்கனவே கூறிய பதில்தான். உங்கள் தகப்பனாரை நான் ஏமாற்றவில்லை. எனவே என்னால் எதுவும் கொடுப்பதற்கில்லை.

மகன் எபேர் ¨நியப்பிள்ளைக்கு எதிரிகள் இருக்கிறார்களா என்று தேடினார். நைநியப்பிள்ளைமேல் புகார்தர அவர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். அவர்களுடைய புகார்களின் அடிப்படையில் நைநியப்பிள்ளை கைது செய்யபட்டு சிறையிலடைக்கப்பட்டார். குற்றவாளி நைநியப்பிள்ள வழக்கு நடந்தது. அவர் குற்றங்களை முழுவதுமாக மறுத்தார்.

1715ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும், மேல் ஆலோசனை சபையினரும் கூடியிருந்தனர்: குற்றவாளியாக அவர்கள் முன்னால் நிறுத்தப்பட்டிருந்தவர் நைனியப்பிள்ளை. கண் துடைப்புபோல நடந்தேறிய ஆலோசனைக் குழுவினரின் விசாரணைக்குப் பிறகு ஏற்கனவே எழுதிவைத்திருந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

“குற்றவாளியான நைநியப்பிள்ளை 50 சவுக்கடிகள் தோளில் பெறவேண்டுமென்றும், மூன்று வருஷம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும், 8888 வராகன்களைப் பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்திற்கு (அப்போதெல்லாம் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில்லை) மான நஷ்டமாகக் கொடுக்க வேண்டுமென்றும், 4000 வராகன் அபராதம் கட்டவேண்டுமென்றும், மூன்று வருடம் சிறைதண்டனையை அனுபவித்த பிறகு பிள்ளை பிராஞ்சு எல்லையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்றும், மேற்படி தொகைகளைச் செலுத்தத் தவறினால் மூன்று வருஷ சிறைவாசத்துக்குப்பிறகு, மோரீஸ் தீவுக்கு அடிமையாய் அனுப்பபடவேண்டுமென்பதும்” தீர்ப்பின் சுருக்கம்.

அது தவிர நைநியப்பிள்ளைக்குப் பதிலாக, தரகர் முத்தியப்ப முதலியார் மகன் கனகராயமுதலியார் தரகராய் நியமிக்கப்பட்டார்.

1717ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் நைநியப்பிள்ளை சிறையிலேயே இறந்தார். நைநியபிள்ளைக்கு மூன்று மகன்கள்குருவப்பா, முத்தப்பா, வேங்கடாசலம். இவர்களில் மூத்தவர் குருவப்பாபிள்ளை. தமது தந்தைக்கு இழைக்கபட்ட அநீதிக்கு அரசாங்கம் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறதென நினைத்தார்.

“தம் தகப்பனார் மாசற்றவரென்றும், அநியாயமாய் தண்டிக்கப்பட்டாரென்றும், அவருக்கு விரோதமாய் வாக்கு மூலம் கொடுத்த சாட்சிகாரர்களெல்லாம் பலவந்தத்தாலும், பயத்தினாலும் அப்படி செய்தார்களென்றும், ஆகையால் நைநியப்பிள்ளை வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டுமென்றும்” பிரான்சு மன்னருக்கு எழுதினார். எழுதியதோடு அல்லாமல் அரசர் ஆலோசனை சபையிடம் நேரில் சென்று முறையிடுவது, தமது வழக்கை எடுத்துக்கூற பிரான்சில் ஒரு பிரதிநிதியை ஏற்பாடு செய்வதென்று முடிவு செய்து அதன்படி பாரீஸ¤க்கு நேரில் செல்கிறார்.

(தொடரும்)

கதையல்ல வரலாறு -2-2

 நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

புதிய பொறுப்பினை ஏற்ற நைநியப்பிள்ளைக்குத் தரகர் வேலையின் சாமர்த்தியமென்பது வாங்குபவர் விற்பவர் ஆகிய இருதரப்பினரினரின் நம்பிக்கையைபெறுவதென்ற பால பாடத்தை நன்கறிந்தவர். தரகர் நமக்காக பேசுகிறார் என்ற எண்ணத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்திதருதல் கட்டாயமென்பதில் தெளிவாக இருந்தார். மறுநாள் உள்ளூர் தரகர்களின் கோபத்தை குறைக்க நினைத்து அழைத்திருந்தார். அவர்களும் வந்திருந்தார்கள்.

– முத்தியப்ப முதலியார் கேட்டுக்கொண்டதன்பேரில் நீங்கள் 110 வராகனுக்கு சம்மதித்திருந்தீர்கள். பிறகு என்ன நடந்தது. ஒரு விலைக்கு இணங்கிய பிறகு அதை ஏற்றுக்கொள்வதுதானே முறை. எதற்காக கவர்னர் மாளிகையில் தேவையின்றி கூச்சலிடவேண்டும். உங்களுக்கு மனக்குறை இருப்பின் தரகரிடமே அதைத் தெரிவித்திருக்கலாமே, என்றார்.

அப்போது தரகர் கூட்டத்தில் ஓரளவு துணிச்சலுடன் பேசக்கூடிய ஆசாமி கொஞ்சம் முன்னால் வந்து தரகரை வணங்கிவிட்டு நிலமையை எடுத்துக்கூறினார்:

– உன்மையைச் சொல்லுகிறோம். முத்தியப்ப முதலியார் மணங்குக்கு 110 வராகன் என்று எடுத்த முடிவு தன்னிச்சையானது.  மணங்குக்கு 110 வராகனைக் கொட்டிக்கொடுத்துவிட்டு நாங்களென்ன வயிற்றில் ஈரத்துணியைப் போட்டுக்கொண்டு போவதா? நாங்கள் கேட்டதொகைக்கு குவர்னரை சம்மதி பண்ணால் எங்களுக்கு லகுவாயிருக்கும், அதுவன்றி இத்தொழிலில் தொடர்ந்து எங்களால் ஜீவிதம் செய்யமுடியாது. தாங்கள் கிருபை பண்ண வேணும்.

அடுத்து ஆளாளுக்கு கூச்சலிட்டார்கள். முத்தியாலு முதலியாருக்கேற்பட்ட அனுபவம் நைநியப்பிள்ளைக்கும் ஏற்பட்டது. அவருக்கு நிலமை தெள்ளத் தெளிவாக விளங்கிற்று. நடந்து முடிந்த வியாபாரத்தில் உள்ளூர் தரகர்களுக்கு உண்டான இழப்பை புரிந்துகொண்டார். ஆனால் பணி நீக்கம் செய்யபட்ட முத்தியப்ப முதலியார் மணங்குக்கு 110 வராகனுக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் இப்போது நான்கு வராகனை மணங்குக்குக் குறைத்தால் கவர்னர் எப்படி எடுத்துக்கொள்வானோவென்ற சந்தேகம். எனினும் உள்ளூர் வியாபாரிகளின் மனதை வருத்தி வியாபாரத்தை நடத்தமுடியாதென்று புரிந்துகொண்ட நைநியப்பிள்ளை குவர்னரை மீண்டும் சந்தித்து, தமது கருத்தைப் பக்குவமாக எடுத்துக்கூறி மணங்குக்கு இருதரப்பிற்கும் பொதுவாக 108 வராகனென்று முடித்தார்.

முத்தியப்ப முதலியார் தரகு வேலையிலிருந்து நீக்கப்பட்ட தகவல் பாரீஸ¤க்குத் தாமதமாகப் போய்சேர்ந்தது. அக்காலங்களில் தகவல் தொடர்புதுறை எவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்பதை ஓரளவு நம்மால் ஊகிக்க முடியும். கிழக்கிந்தியா பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகிகளுக்குக் கோபம் வந்தது. கியோம் எபெர் கும்பெனியின் நலனைக்காட்டிலும் தமது சொந்த நலனில் அக்கறை காட்டுகிறாரோ என சந்தேகித்தவர்கள் அரசரின் முக்கிய ஆலோசகர்களிடம் இப்பிரச்சினையை கொண்டு செல்கிறார்கள். மன்னரும், மூத்த ஆலோசகர்களும், கிழக்கிந்தியா பிரெஞ்சு கூட்டுறவு சங்க நிர்வாகிகளும் கூடி விவாதித்தார்கள். விவாதத்தின் முடிவில் புதுச்சேரி கவர்னர் குற்றவாளியென ஏகமனதாகத் தீர்மானிக்கிறார்கள். எபேர் செய்தக்குற்றம் மணங்குக்கு நான்கு வராகன் ஆசைப்பட்டதோ, மேலிடத்தின் அனுமதியின்றி தன்னிச்சையாக முத்தியப்ப முதலியார் பதவியைப் பறித்து வேறொருவரை தரகராக நியமித்ததோ அல்ல மாறாக அவர் தரகராக நியமித்திருந்தது ஒர் இந்து. முத்தியப்ப முதலியார் என்ற கிறிஸ்துவர் இடத்தில் ஓர் இந்துவை நியமனம் செய்தது மன்னரின் ஆலோசர்கள் அவையில் இடம் பெற்றிருந்த சேசுசபையினருக்குக் குற்றமாகப் படுகிறது. அதன் விளைவாக 1711ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந்தேதி புதுச்சேரியின் கவர்னருக்குக்குப் புதிய உத்தரவு ஒன்றை  பிறப்பித்தார்கள், அதன்படி:

கியோம் ஆந்தரே எபேர் உடனடியாக தாய்நாட்டிற்குத் திரும்பவேண்டியதாயிற்று. அவருக்குப்பதில் பியேர் துலிவியே(Pierre Dulivier) கவர்னர் பொறுப்பேற்கிறார். புதிய கவர்னர் உடனடியாக நைநியப்பிள்ளை பதவிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் முத்தியப்ப முதலியாரையோ அல்லது ஒரு கிறிஸ்துவரையோ இடைத்தரகராக நியமனம் செய்யவும் அந்த அரசாணையில் கண்டிருந்தது.

புதுச்சேரியில் வந்திறங்கிய பியேர் துலிவியே அரச கட்டளையை எப்படி நிறைவேற்றுவதென்று யோசித்திருக்கவேண்டும்.   மேல் ஆலோசனைச் சபையை உடனடியாகக் கூடும்படி கேட்டுக்கொள்ளபட்டது அரசாணையை நிறைவேற்றுவதிலுள்ள சாத பாதகங்கள் குறித்து சமை அங்கத்தினர்கள் தீவிரமாக ஆலோசித்தார்கள். கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு இருந்தது:

“நைநியப்பிள்ளை தரகராய் நியமிக்கப்பட்ட காலமுதல், பிராஞ்சுகாரருடைய தரணி என்கிற மேரையில், மொகாலியரிடத்திலும் (மொகலாயரிடத்திலும்) இந்தியா மற்றப் பிரஜைகளிடத்திலும் செல்வாக்கு பெற்றுவிட்டார். இந்த உண்மையை அநேக சந்தர்ப்பங்களிலும், சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தாலும் அறிந்துகொண்டோம். நபாப் புதுச்சேரி மேல் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் பிராஞ்சுகாரருக்குச் சுதேசமன்னர்களால், இந்தியாவில் கொடுக்கப்பட்ட சகல இடங்களையும், கிராமங்களையும் திருப்பிக்கொடுத்துவிடவேண்டுமென்றும், அவற்றின் வரும்படிக்காக 8000 ஷக்கார் கொடுக்கவேண்டுமென்று தாகீது அனுப்பினார். கிராமங்களை வசப்படுத்திக்கொள்ளவும், பணத்தை வசூலிக்கவும் குதிரைவீரர்களை அனுப்பிவைத்தார். சமாதானம் செய்யும்படி அனுப்பப்பட்ட நைநியப்பிள்ளை, ஒரு காசுகூட செலவில்லாமல் குதிரை வீரர்களைத் திருப்பிப்போகும்படி செய்தார். அவர் தரகராய் அமர்ந்தது முதல், மொகாலியர் களால் ஏற்பட்ட சகல சங்கடங்களிலிருந்து புதுச்சேரியை நிவர்த்தி செய்திருக்கிறார்.”

“பிராஞ்சு சங்கத்தின், உள் விஷயங்களையும் வெளிவிஷயங்களையும் நன்கறிந்தவரானபடியால், அவர் வேலையைப் பிடுங்கிவிட்டால், உடனே மொகாலியர் ஆளும் பிராந்தியத்தில் குடியேறி, தலைமறைவாய் உள்ளுக்குள் பழிவாங்கும் சிந்தனையுடன், மொகாலியர்களைத் தூண்டிவிட்டு புதுச்சேரியின் நாசத்தைத் தேடிவிடுவார்.

“இதுவுமன்னியில், கிராமங்களின் குத்தகைகாரர்களுக்கும், புகையிலை வெற்றிலை காசுக்கடை குத்தகைகாரர்களுக்கும், அவரே புனையானபடியால் மொகாலியர் செய்யப்போகும் முதல் அசைவுக்கே குத்தகைகாரர்களும் பெரிய சுதேசி வியாபாரிகளும் ஓடிவிடுவார்கள். கூட்டுறவு சங்கத்திற்குப் பெருத்த நஷ்டம் உண்டாகும். சோழமண்டலகரையில் அவரை ஒத்த சாமர்த்தியசாலி வேறு ஒருவருமில்லையென்கிற கியாதியையும் பெற்றிருக்கிறார்.”

“ஐரோப்பிய ஜனங்களுக்குச் சுதேசமன்னர்களால் கொடுக்கப்பட்டிருக்கும், சகல இடங்களையும், கிராமங்களையும் பிடுங்கிவிடவேண்டும் என்கிற கெட்ட எண்ணத்தைக் கொண்டிருக்கும் மொகாலியர்களிடத்தில் சமாதானஞ்செய்ய கிரிஸ்துவர்களில் தற்சமயம் ஒருவருமில்லை. சவரிமுதலியார் ஒருவரே, கிரிஸ்துவர்களுக்குள் ஐரோப்பியரிடத்தில் உண்மையான விசுவாசி, அன்புள்ளவர். அவருடைய நேர்மையில் தடையின்றி நாம் நம்பிக்கை வைக்கலாம். நைநியப்பிள்ளையோடு அவர் வேலைசெய்தால்  கொஞ்சத்துக்குள் சகல விஷயங்களையும் அறிந்துகொண்டு, பிரஜைகளின் நம்பிக்கைக்குப் பாத்திரவானாகலாம். அப்போது தனியாய் தரகுவேலையைத் திறமையாய்ச் செய்வார். கிருஸ்துவர்களுக்கு ஆதரவு அளித்து, அவர்களை வியாபாரத் துரையில் ஈடுபடுத்துவார்.”

“ஆனதை முன்னிட்டு, நைநியப்பிள்ளையும் சவரிமுதலியாரையும் சங்கத் தரகர்களாக நியமிக்கிறோம். தங்களுக்குள் முதலவர், இரண்டாமவர் என்கிற வித்தியாசமில்லாமல் அந்நியோன்னியமாய் சகல சுதந்திரத்துடனும் அதிகாரத்துடனும் அவர்கள் தரகு வேலையைக் கவனிக்க வேண்டியது.”(1)

பியேர் துலிவியே தலமையின்கீழ் வந்த கிழக்கிந்திய பிரெஞ்சு கம்பெனி அரசாங்கம் நைநியப்பிள்ளையை தரகர் பொறுப்பில் மேலும் சிறிதுகாலம் வைத்திருக்கவேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்ததை மேற்கண்ட மேல் ஆலோசனை சபை முடிவு விளக்குகிறது. அதே நேரத்தில் பிரெஞ்சு முடியாட்சியின் கட்டளையையும் குறிப்பாக சேசுசபையினரின் அவாவையும் பூர்த்திசெய்யவேண்டும், எனவே கிருஸ்துவரான சவரி முதலியாரை நைநியப்பிள்ளைக்குத் துணையாக நியமித்தார்கள். மேல் சபையின் தீர்மானத்தினை திரும்பவும் ஒருமுறை வாசித்தால் நைநியப்பிள்ளையின் பதவிக்காலம் சவரிமுதலியார் தரகர் பணியின் நெளிவுசுளிவுகளை அறிகின்ற வரையில் என்பதை புரிந்துகொள்ளலாம். இங்கே எபேர் கவர்னராக இருந்தபோது பணிபுரிந்த முத்தியப்ப முதலியாரின் மருகர் சவுரி முதலியார் என்ற கொசுறுச் செய்தியையும் சொல்லிவிடவேண்டும்.

நைநியப்பிள்ளையின் விதி வேறாக எழுதப்பட்டிருந்தது. அவ்விதி சவரி முதலியார் என்ற பெயரில் அவருடைய இடைத் தரகர் பிழைப்பைக் கெடுத்ததுடன், அவர் உயிர் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தது.

(தொடரும்)

—————————————————————————————-

1.1714ம் ஆண்டு மார்ச் 9ந்தேதி மேல் ஆலோசனைசபை விவாதத்திற்குப்பின் எடுத்துக்கொண்ட முடிவுகளின் தொகுதி 1வது புத்தகம் பக்கம் 139 cd.ஆனந்தரங்கபிள்ளை நாட்குறிப்பு தொகுதி ஒன்று  பக்கம் 8

 

அண்மையில் வாசித்த பதிவுகள் Déc.6:

பேரிசையின் பின்னணி: சொல்வனம்

சொல்வனம் இணைய இதழில் பேரிசையின் பின்னணி-தவில் கண்ட மாற்ரங்கள் என்ற தலைப்பில் ப. கோலப்பன் என்பவர் எழுதியுள்ள கட்டுரை கவனத்தைப்பெற்றது. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட கட்டுரையாளர் லயசுத்தமான ஒரு தவில் புராணமே படித்திருக்கிறார். நவீன தவில் ஓசையில் ஏற்பட்ட மாறுதலுக்கு வேணுகோபாலென்ற கலைஞர் காரணமென்பது என்னைப்போன்றவர்களுக்குப் புதிய செய்தி. ‘தவிலுக்கு வார் பிடிப்பது’ குறித்த தகவலும் சுவாரஸ்யமனாது. கட்டுரையாளர் குறிப்பிடும் தில்லானா மோகனாம்பாள் வாத்ய கோஷ்டியும் அவர்கள் எதிரே வைத்தியும் கண்முன்னே நிற்கிறார்கள்.  காதலியை அல்லது மனைவியை ஆரத் தழுவுபவர்கள் தயவு செய்து கட்டுரையாளர் சிபாரிசு செய்திருக்கிறாரென தவிலை நினைத்துக்கொள்ள வேண்டாம். தவிலுக்கு நல்லதோ இல்லையோ சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நல்லது.

கணையாழி -மீண்டும் பாரதி

கணையாழியில்  இந்திரா பார்த்தசாரதியின் ‘மீண்டும் பாரதி’ தொடரை வாசித்தேன். பாரதியின் கவிதையில் தங்களுக்குள்ள ஈடுபாட்டைப் பலரும் சொல்லக்கேட்டிருக்கிறோம். ஆனால் அதை இ.பா. சொல்கிறபோது கூடுதலாக காதுகொடுக்க நேரிடுகிறது. மொழிபெயர்ப்பு பற்றிய அவரது கருத்தை மனமார வழிமொழிகிறேன். ஆயிரம் சொல்லுங்கள் மூலமொழியில் ஒரு படைப்புக்குள்ள முழுபாய்ச்சலையும் அம்மூல மொழியைத் தாய்மொழியாகக்கொண்டவர்கள் வாசித்துப் பெறும் இன்பத்தையும் அதன் மொழிபெயர்ப்பு வாசகர்களால் ஒருபோதும் பெறமுடியாதென்பது சத்தியம் சத்தியம். தமக்கு தமிழால் அறியவந்த பாரதி, ஆங்கிலத்தால் அறியப்பட்ட தாகூரைக்காட்டிலும் மேலானவர் என்பதற்கு பாரதியாரைத் தாம் தாய்மொழியில் வாசிக்க நேர்ந்தது காரணமெனச் சொல்லும் இ.பா., பாரதியின் கவிதை ஆற்றலைக் கொண்டாடவும் தயங்கவில்லை. ‘புல்லை நகையுறுக்கி பூவை வியப்பாக்கி’ என்பதற்கு ஈடான வரிகளை கம்ப சித்திரத்தில் மட்டுமே காணமுடியும் என்கிறார்.  குயில் பாட்டைப்பற்றிய ஒரு விரிவான ரசனை நூல் எழுதத் திட்டமிட்டிருப்பதாக இ.பா தெரிவிக்கிறார். காத்திருக்கிறோம் ஐயா!.

இதம் தரும் வங்கக் கதைகள்:

வணக்கத்திற்குரிய வே. சபாநாயகம் தமது வலைப்பூவில் அம்ருதா பதிப்பகத்தின் அண்மைக்கால வங்கச் சிறுகதைகள் என்ற நூலுக்கு மதிப்புரை எழுதியுள்ளார். ஆரவாரமின்றி மென்மையாய் சிலுசிலுத்து ஓடும் சிற்றோடையின் நளினமும் அழகும் வங்கத்கதைகளில் பொதுத்தன்மை  என்கிறார் வே.சபாநாயகம். தொகுப்பிலுள்ள 15 சிறுகதைகளை அவருக்கே உரித்தான் மொழியில் கதைப்பொருளை பகிர்ந்துகொள்கிறார். அலுப்புத் தட்டாமல் வாசிக்கவும் ரசிக்கவும் முடிகிற கதைகளென்ற உத்தரவாதம் தரப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர் வங்காளம் தமிழ் இருமொழிகளிலும் தேர்ச்சிபெற்றவரென்பதால், வங்கமொழிக்கேற்ப தமிழ்படுத்தியிருக்கும் நேர்த்தி தடையற்ற வாசிப்புக்கு உதவுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஆர். அபிலாஷ்

நண்பரது வலைத்தலத்தில் வந்துள்ள தமிழ் இலக்கியம் ஏன் பன்னாட்டுத் தளத்தை அடையவில்லை? என்ற கட்டுரை பற்றியும் குறிப்பிடவேண்டும். பிறமொழி படைப்புகள் சிலவற்றை ஒப்பிட்டு தமிழ் ஏன் அந்நிலையை எட்டவில்லையென கட்டுரையாளர் ஆதங்கப்படுகிறார். தமிழ் இலக்கியவாதிகள் வெகு சனங்கள் எனப்படுகிற பெருவாரியான மக்களிடமிருந்து விலகி நிற்பதும், வெகு சனப்பிரச்சினைகளில் கவனங்கொள்ளாததும் அவர் சொல்லும் காரணங்கள். அதை மறுக்கமுடியாது. அதற்காக புலம்பெயர்ந்த இந்திய இலக்கியவாதிகள் -அபிலாஷைபொறுத்தவரையில் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள்- எடுத்துள்ள நிலைபாட்டை இந்தியாவில் மாநில மொழிகளில் எழுதுகிறவர்களும் எடுக்கவேண்டுமென்பது அபத்தம். புலம்பெயர்ந்தவர்கள் எந்த மொழியில் எழுதினாலும் அவர்கள் சூழலைவத்துத்தான் எழுதமுடியும். அபிலாஷே சொல்வதுபோல அது வேரறுந்தநிலையாகக்கூட இருக்கலாம். ஆனால் அவை ஆங்கிலத்தில் எழுதப்படுவதால்தான் பலரும் அறிய நேர்ந்ததே தவிர அபிலாஷ் சொல்கிற அவர்களுடைய பண்பாட்டைத் துண்டித்துக்கொண்டது காரணமல்ல. சொல்லபோனால் அவர்களுடைய நூலிலும் இந்தியாவில் இன்றளவுமுள்ள சில சூட்சமங்களை சொல்லியே விலைபோகவேண்டியிருக்கிறது. மேலை நாடுகளில் பிரபலமான இந்திய எழுத்தாளர்களைத் தவிர்த்து காமா சோமாவென்று ஆங்கிலத்தில் வரும் நாவல்கள் விற்பனையாவது உள்ளே இருக்கும் சரக்கும் தரமானது என்பதாலல்ல நாவலின் அட்டைகளில் இன்றளவும் ஒரு ரிக்ஷாவோ, பத்து தலை நாகமோ, கையில் இரத்தம் சொட்டும் தலையுடன்கூடிய காளியோ இடம்பெற்றிருப்பதால் இருக்கலாம். அபிலாஷ் சொல்லும் ஸ்பானிய, துருக்கி நாவல்களைப்படித்தால் அங்கேயும் எழுத்தாளனின் மண் சார்ந்த கலாச்சாரமும் பண்பாடும் இருக்கத்தான் செய்கின்றன. பிறமொழிகளுக்குக் கொண்டு செல்கிறபோது பண்பாட்டளவில் வேற்று மொழிகாரர்களுக்கு புரியவைப்பது கடினமே. The Name of the Rose நூலில் பக்கத்திற்கு பக்கம் கிரேக்க மொழியோ லத்தீன் மொழியோ ஏராளமாக இருக்கும், ஆங்கில நாவல்களில் பிரெஞ்சு வாசகங்களோ, பிரெஞ்சு நாவலில் ஹீப்ரு மொழியோ நாவல் தன்மைகருதி சேர்க்கத்தான் செய்கிறார்கள். மேற்கத்தியர்கள் பண்பாடில் – காலனி ஆதிக்கம் -கலாச்சார ஆதிக்கம்- உலகாலவிய மயக்கமிருப்பதால் இக்குறைகளை சகித்துக்கொள்கிறோம். நாவலின் ஓட்டத்தில் வாசகன் அக்குறைகளை பொருட்படுத்துவதில்லை. நமக்கு நல்ல மொழி பெயர்ப்பாளர்கள் அமைவதில்லை என்பது உண்மையில் ஒரு குறை. தமிழ் படைப்புகளை இந்தியாவில் அவர் ஆங்கில இலக்கியத்தில் கரைத்துக் குடித்தவராகக்கூட இருக்கட்டும் அவர் ஆங்கிலம் பண்டித ஆங்கிலமாக இருக்குமே ஒழிய ஒரு படைப்புக்குரிய ஆங்கிலமாக இருக்கமுடியாதென்பது உண்மை. இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ இருக்கும் ஆங்கிலம் வேறு இந்திய ஆங்கிலம் வேறு. தமிழ் நாவலை தமிழறிந்த ஆங்கிலேயரோ அமெரிக்கரோ மொழிபெயர்த்தாலன்றி நமது படைப்புகளுக்கு விமோசனங்களில்லை. அப்படி அமைந்தால் பண்பாட்டளவில் மற்றவர்களுக்கு கடினமாக இருக்குமென்று நம்பக்கூடியவைகளைகூட கொண்டுபோகமுடியும். ஒரு நல்ல மொழிபெயர்ப்பாக இருந்தால் நாவலின் கடைசிபக்கங்களில் கள்ளருக்கும் பிள்ளைமாருக்கும் சில விளக்கங்கள் கிடைக்குமானால் கண்டிப்பாக வாசகர்கள் கிடைப்பார்கள்.
———————————-

மொழிவது சுகம்- டிசம்பர் -2

இந்தியாவிற்குப் போகிறோம்

இப்போதெல்லாம் பிரெஞ்சு நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கிறபோது இந்தியா என்ற வார்த்தையை மரியாதையோடு உச்சரிக்கிறார்கள். என்னைப்போன்ற வெளிநாடுவாழ் இந்தியர்களை ஏதோ காமா சோமாவென்று பார்ப்பதில்லை. மரியாதை உயர்ந்திருக்கிறதென்றே சொல்லவேண்டும். நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியர்கள் கூலிகளாக வெளிநாடுகளுக்குப் போனார்கள் காலம் மாறியது, பொருள்தேடி, பெற்ற கல்விக்கு உரிய ஊதியத்தைத் தேடி வெளிநாடுசெல்வதென்பது அண்மைக் காலம்வரை நடபெற்றது இப்போதும் தொடருகின்றது. முற்றாக நின்றுவிட்டதென்று சொல்வதற்கில்லை. ஆனால் வேறொரு திருப்பத்தைக் கடந்த மூன்றாண்டுகளாக சந்திக்கிறோம்.

வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வேலை தேடுகிற அதிசயத்தை ஒரு தினசரியில் வாசிக்க நேர்ந்தது.  பல்வேறு இந்திய நிறுவனங்களில் வேலை தேடி விண்ணப்பிக்கிறார்கள், வேலையிலும் அமர்த்தப்படுகிறார்கள். அண்மையில் கிடைத்த ஆய்வுத் தகவலின் படி தற்போது  சுமார் 40000 வெளிநாட்டினர் இந்தியாவில் பணிபுரிவதாக அறிகிறோம். இது கடந்த ஆண்டைவிட 20 விழுக்காடுகள் அதிகமென்றும் அதே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து ஏறுமுகத்திலிருப்பதால் உத்தரவாதமான பணிகளை முன்வைத்து இந்தியா வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் இனி மேலும் அதிகரிக்கலாம். அந்நியர்களின் 20 விழுக்காடு அதிகரிப்புக்கான நேர் காரணம் அந்நாடுகளுடன் ஒப்பீட்டளவில்  எப்போதும் கண்டிராத அளவில் இந்தியப் பொருளாதாரம் சந்திக்கும் வளர்ச்சி.

இந்தியாவை நோக்கி அறிவுபுலம் சார்ந்தவகையில் நிகழும் இப்படையெடுப்பிற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கு ஐரோப்பியநாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவும் அதன் தொடர்ச்சியாக விளைந்துள்ள வேலையின்மை நெருக்கடியும் தலையாய காரணங்கள். பல காரனங்களை முன்னிட்டு மேற்குலகம் இந்தியாவில் முதலீடு செய்கிறது. ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி பொருட்களுக்கான செலவினங்கள் பலமடங்கு அதிகம் இந்தியாவில் மூளைஉழைப்பும் உடலுழைப்பும் மலிவாகக்கிடைக்கிறது- உபரிமதிப்பு கூடுதலாக முதலாளிகளுக்குக் கிடைக்கிறது. ஆக பெரும் நிறுவனங்கள் இந்தியாபோன்ற நாடுகளைத் தேடிவர அவர்களோடு மூளைஉழைப்புக்கான வேலைகளைத்தேடி மேற்கத்தியரும் இந்தியா வருகின்றனர். இந்தியருக்குப் போட்டியாக தங்கள் உழைப்பை இந்தியச்சந்தையில் விற்கவும் செய்கிறார்கள்.

2008லிருந்து இந்தியாவில் வங்கிகள் நிதி நிறுவனங்கள், மோட்டார் தொழிற்சாலைகள், சுகாதாரம், சுற்றுலா, கல்வியென பலதுறைகளில் வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நிறுவ
ங்கள் இந்தியாவில் மேற்குலக நாடுகளுக்கு ஈடான ஊதியத்தையும் இப்போது வழங்கத் தயாராக உள்ளநவாம். வெளிநாடுவாழ் இந்தியர்கள்மீதான மரியாதையும் இப்புதிய சூழ்நிலையால் கூடியுள்ளதென சொல்லவேண்டும்.

மின்னஞ்சல்களும் மின் புத்தகங்களும்

சுற்றுபுறசூழல் என்ற பெயரில் காகிதங்களின் உபயோகத்தை குறைப்பதென்று முடிவெடுத்து வங்கிகள், அரசுத்துறைகள், போக்குவரத்து துறைகளென பலவும் கணினிமயமாக்கப்பட்டுவிட்டது. அனைத்து பிரச்சினைகளுக்கும் காகிதமின்றி மையின்றி தீர்வுகள் கிடைக்கின்றன. ஏமாறும் மனிதர்களை அதிகம் ஏய்ப்பதற்கும் கணினி மயமாக்கப்பட்ட உலகம் உதவுகின்றதென்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இளம்வயதில் காதல் கடிதத்தைமுடித்து சம்பந்தப்பெண்ணிடம் கொண்டு சேர்ப்பதென்பது பெரிய கலை. நிறைய சாமர்த்தியம் வேண்டும், கூச்ச சுபாவமுள்ளவனாக இருந்தால் போயே போச்சு. இந்த அனுபவங்களை சொல்லும் திறமையிருந்தால் சிறுகதையாகவோ, நாவல் வடிவமாகவோ சுலபமாகக் கொண்டுவரமுடியும். கடிதத்தைச் சேர்ப்பிப்பது ஒருபக்கமெனில் சம்பந்தப்பட்ட பெண்ணை ஓடைபக்கமோ, விளைந்தகம்புகளுக்கிடையிலோ, அந்தி சாய்ந்ததும் வைக்கோல் போருக்குப்பின்புறம் கிராமங்களில் சந்திப்பதென்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் மெரினாவிலும், எழும்பூர் மியூசியத்திலும், மகாபலிபுரத்திலும் காத்திருப்பதும் சந்திப்பதும். இப்போதெல்லாம் காதலன் இந்தியாவிலிருக்கிறான், காதலி இஸ்ரேலில் இருக்கிறாள். அவள் கருப்பா சிவப்பா, பாட்டியா குமரியா என்பது இவனுக்கும் தெரியாது. இவன் எப்படி யென்று அவளுக்கும் தெரியாது. இனி வருங்காலத்தில் எதுவும் நடக்கலாம்.

மைகொண்டு தாளில் அன்புள்ள மான்விழியே ஆசையில் ஒரு கடிதம், என்றெல்லாம் எழுதிக்கொண்டிருந்தகாலத்தில் கைக்குக் கடிதம் கிடைத்தால், சில பெண்கள் கிழித்துப்போடுவார்கள், வேறுசிலர் உறவுகளிடம் சொல்ல, அவர்களும் அதிகபட்சமாக வீடுதேடிவந்து மிரட்டிவிட்டுப்போவார்கள். அமெரிக்க இளைஞன் ஒருவன் என்ன தைரியத்தில் SMS அனுப்பினானோ அதையும் ஆபாசமின்றி அனுப்பித் தொலைத்திருந்தால் ஒருவேளை சம்பந்தப்பட்ட பெண் மன்னித்திருக்கலாம், இந்தியாவிற்கு வந்த பையனை ஏர்போர்ட்டில் வைத்து அமுக்கிக்கொண்டுபோயிருக்கிறார்கள்.

அண்மையில் சோனி வெளியிட்டிருக்கும் மின்புத்தகம் கையளவு உள்ளது எடைகூட 200 கிராம் என்றார்கள். சட்டைப்பயில் போட்டுக்கொள்ளலாமாம். 1200 புத்தகங்களை அதில் வாசிக்கமுடியுமென்றார் விற்பனையாளர். கண்களை உறுத்தாத ஒளியில் படிக்க இதமாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு மின்புத்தகத்தை வாங்க ஆசைபட்டு தள்ளிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு வருடமும் இதைவிட நல்லதாக அறிமுகப்படுத்துவார்களா? விலை குறையுமா என்றெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கிறது. இவ்வருடம்?
————————————————-