Monthly Archives: நவம்பர் 2012

நூல் வெளியீட்டு விழா:கலகம் செய்யும் இடது கை’

நண்பர் நாயகரின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு சிறுகதைகளை இலக்கிய நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும். அவரது ‘கலகம் செய்யும் இடது கை’ நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது- தொகுப்பிலுள்ள கதைகள் நேரடி பிரெஞ்சு மொழிபெயர்ப்பு. இந்நூல் வெளியீட்டுவிழாவைப் புதுச்சேரியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

திருவாளர்கள் தாவீது அன்னுசாமி, பிரபஞ்சன், க.பஞ்சாங்கம், ராஜா போன்ற பெருந்தகைகள் கலந்துகொள்ளவிருப்பது நிகழ்ச்சியின் சிறப்பு. நண்பர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு நாயக்கரின் தமிழ்ப்பணிக்கு உறசாகமூட்டவேண்டும்.

இடம்: புதுவைச் தமிழ்ச்சங்கம்,   எண் 2, தமிழ்ச்சங்க வீதி,    வெங்கட்டா நகர், புதுச்சேரி 2011

நாள்: 2012 -ஞாயிறு மாலை

மேலும் தகவல்களை அறிய:http://muelangovan.blogspot.in/

 

கவனத்தைப் பெற்ற பதிவுகள் நவம்பர்-26 2012

1. உலக சினிமா குறித்த சொற்பொழிவு – எஸ். ராமகிருஷ்ணன்

நண்பர் எஸ். ராமகிருஷ்ணன் உலக சினிமா குறித்து பேருரை ஆற்றுகிறார்.

எதிர்வரும் டிசம்பர் 4 முதல் 10ந்தேதிவரை நடைபெறுகிறது.  தினந்தோறும் மாலை 6 மணி நிகழ்ச்சித் தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 10. 30க்குத் தொடங்குமென்று கூறுகிறார்கள்.

இடம். சர். பி.டி. தியாகராயர் ஹால், ஜி.என். செட்டி சாலை, தி.நகர் சென்னை -17.

கட்டணமில்லை. நண்பர்கள் கலந்துகொண்டு பயனுறவேண்டிய நிகழ்வு.

Home-2

———————————-
2.  மீட்சிக்கான விருப்பம் -பாவண்ணன்

நாம் பள்ளியில், கல்லூரியில் மாணாக்கர்களாக இருந்தபோது பல ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், உதவிப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள், துறைத்தலைவர்களென்று பலரைச் சந்தித்திருப்போம். எல்லோரையும் நாம் நினைவுகூர்வதில்லை. நண்பர் பாவண்ணன் தமது கல்வி வாழ்க்கையிற் குறுக்கிட்ட ஒரு தமிழாசிரியரை அவருக்கே உரிய எளிய மொழியில் நன்றியில் தோய்த்த சொற்களில் நினைவுகூர்கிறார்.

“ஒவ்வொரு நாளும் தன் சொற்களால் மெல்ல மெல்ல ஒரு சிலைபோல காந்தியைச் செதுக்கி எங்கள் மனபீடத்தில் நிற்கவைத்தவர்” என்கிற பாவண்ணன்,   அதைக் காந்தியைப்பற்றிய கட்டுரையில் விரிவாகவும் எடுத்துரைத்த்திருக்கிறார்.

ஊர் வம்புகளுக்கு அலையும் இலக்கிய கட்டுரைகளுக்கிடையே, மனித மன உயர்வுக்காக எழுதப்பட்டக் கட்டுரை.

நண்பர்கள் வாசிக்க:
http://puthu.thinnai.com/?p=15672
____________________

3.  நல்ல படங்களைத் தெரிவு செய்யும் பாதைகள்: பகுப்பாய்வை நோக்கிய ஒரு ரசிகனின் பயணம்
            அ.ராமசாமி

” ஒவ்வொரு மனிதர்களும் தாங்கள் பார்த்த படங்களிலிருந்து அவர்களுக்குப் பிடித்த விருப்பப் பட்டியலை உருவாக்கிக்கொள்கிறார்கள்”

ஒரு பாமரத் தமிழ்த் திரைப்பட இரசிகன் தேர்ந்த திரப்பட விமர்சகனாக மாறியதெப்படி என்ற இரகசியத்தை கட்டுரை ஆசிரியர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய திறனாய்வில் தமது இடத்தை உறுதிபடுத்திக்கொள்ள முனையும் கட்டுரை. அ.ராமசாமியின் கட்டுரைகள் பொதுவாக சிந்தனைக்குரியவை.  இக்கட்டுரையும் அதற்கு விதிவிலக்கல்ல.

http://ramasamywritings.blogspot.fr/
—————————–

மனதிற் பதிந்த கவிதை

சிறந்த பத்து
        – முனைவர் இலக்கணச்சுடர் இரா- திருமுருகனார்

அழிவதும் ஆவதும் அவ்வூழ்ப் பயன்என்று
ஒழிதலின் சிறந்தது ஊக்கம் உடைமை.
இறைவனின் உண்மையை இன்மையை வாய்கிழிந்து
அறைதலின் சிறந்தது அறத்தின் வழிப்படல்.
நீற்றினை மண்ணினை நெற்றியிற் காட்டியே
மாற்றலின் சிறந்தது மனத்தின் தூய்மை
நாடிய நலம்பெற நாள்தொறும் கோயிலுக்கு
ஓடலின் சிறந்தது உழைப்பினைப் போற்றல்
பலபல துறைகளில் பலபல கற்றிட
அலைதலின் சிறந்தது ஆழ்ந்தொன்று கற்றல்
பொய்த்துறைச் சோதிடம் போற்றிச் செயல்ஒழிந்து
எய்த்தலின் சிறந்தது எண்ணித் துணிதல்
கொடை, மிகு செல்வம், கூர்மதி, கலைஇவை
உடைமையின் சிறந்தது ஒழுக்கம் உடைமை
நாத்தழும்பு ஏறிட நயங்கெழு சொல்தொடுத்து
ஆர்த்தலின் சிறந்தது அருங்கருத்து உரைத்தல்
அரும்பொருள் கருத்து ஓர் ஆயிரம் பேச
விரும்பலின் சிறந்ததுஓர் வினைதனைச் செய்தல்
பயங்கெழு மதநெறி பாரினில் எமது என…

நன்றி: தேவமைந்தன்

http://httpdevamaindhan.blogspot.fr/
———————————————————-

தாதாயிஸம் – மீயதார்த்தவாதம் சந்திப்பு

சுவிஸ் -ஜெர்மன் எல்லைக்கருகே பிரான்சின் தென்கிழக்கிலுள்ள சிறு நகரம் சேன் லூயி (Saint Louis). பல நேரங்களில் மேற்கத்திய நாடுகளில் கிராமம், சிற்றூர், பேரூர், நகரம் மாநகரம் எனக்கூறப்படுவற்றோடு நம் கிராமங்களையோ அல்லது நகரங்களையோ இணைத்துப் பார்க்கவியலுமா என யோசிப்பதுண்டு. விவசாயம், குறைவான மக்கட்தொகை இவைதான் கிராமத்திற்கான அடிப்படை  இலக்கணமெனில், உலகில் எங்கிருந்தாலும் கிராமமே. மக்களின் வருவாய், போக்குவரத்து, சுகாதாரம், வாழ்க்கை வசதிகள் எனப்பார்க்கிறபொழுது மேற்கத்திய கிராமங்கள் வேறுபடுகின்றன. நான் வசிக்கும் ஸ்ட்ராஸ்பூர் நகரிலிருந்து சேன் லூயிக்குச்செல்ல அதிகபட்சமாக ஒன்றரைமணி நேர வாகனப்பயணம், இரயிலென்றாலும் பயண நேரமென்பது அவ்வளவுதான். கடந்த சில மாதங்களாக திடீரென்று இந்நகரத்தோடு நெருக்கமாக இருக்கிறேன். மனித உறவுகள்போல சில நேரங்களில் ஊர்களுடனான சந்திப்பும் நேருகிறது. ஆர்வத்தோடு பழகுகிறோம். சந்திப்பின் தொடக்கத்தில் மனிதர்களைப் போலவே ஊர்களும் அலுப்பதில்லை. சேன்-லூயி நகரத்துடன் முகமன் கூறவும் பின்னர் தொடர்ந்து உரையாடி மகிழவும் காரணமாக இருந்தவள் இளைய மகள். உயிர்வேதியியலை முடித்திருந்த எனது இளையமகளுக்கு கடந்த நவம்பர் (2011) மாதத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அங்கே வேலைகிடைத்திருக்க சேன்-லூயி நகருக்கு மாதத்திற்கொரு முறையேனும் செல்லவேண்டியிருக்கிறது. இரு கிழமைகளுக்கு முன்பாக அங்கு சென்றபோது செய்தித்தாளில் ஒரு விளம்பரம்: ‘·பெர்னெ -பிராங்க்கா’ சமகால ஓவியகூடத்தில் (Fernet -Branca Espace D’art Contemporain) “Chassé-Croisé : Dada- surréaliste 1916-1969 ஜனவரி-15 – ஜூலை 1 -2012 என விளம்பரப்படுத்தியிருந்தார்கள். “தாதா – மீயாதார்த்தச் சந்திப்பு அல்லது சங்கமம் – என்ற பெயரில் நடை பெற்றுக்கொண்டிருந்த ஓவியக் காட்சியைப்பற்றி அதில் பேசப்பட்டிருந்தது.

“Chassé-Croisé” என்ற சொல்லுக்கு பரிவர்த்தனை, சந்திப்பு என்று பொருள்கொள்ளலாம். தாதாக்களும் மீயதார்த்தவாதிகளும் படைப்பிலக்கியத்தில் குறிப்பாக கவிதைகளிலும் புது முயற்சிகளில் இறங்கியதை அனைவரும் அறிவோமென்றாலும் ஓவியமும் சிற்பமுமே கூடுதலாக கவனம் பெற்றன. கண்காட்சியில் இடம்பெற்றிருந்தவை மொத்தம் 98 கலைஞர்களின் 300 படைப்புகள் தகவல் உபயம் நுழைவாயிலில் பார்வையாளருக்கென வழங்கப்பட்ட பிரசுரம். இப்படைப்புகள் அனைத்தும் பாரீஸைச்சேர்ந்த ஒரு தம்பதியினருக்குச் சொந்தமென அங்கிருந்த பெண்மணி கூறினார். விலைமதிப்பற்ற ஓவியங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்தவர்கள் (கட்டணம் 7 யூரோ) தங்களை இன்னாரென்று காட்டிக்கொள்ள விருப்பமில்லையாம். வெளியே வந்தபோதுதான் எண்ணிப்பார்க்காதது ஒரு குறையாக உறுத்தியது. ஒரு வசதிக்காக மொத்தம் 300 படைப்புகள் என்று கணக்குவைத்துக்கொண்டே தொடருகிறேன். இம்முன்னூறு படைப்புகளையும் ஒன்பது கூடங்களில் பிரித்து காட்சிபடுத்தியிருந்தார்கள். தாதாக்களில் ஆரம்பித்து மீயதார்த்தவாதிகளின் ஓவியங்கள் சிற்பங்கள் என்று ஒரு பிரிவு. மாயை -புதிர் என்கிற Esotericism வகைசார்ந்த ஓவியங்கள் எனும் பிரிவும் அங்கே இருந்தது. பின்னர் நிழற்படங்களில் புதுமைகளை சாதித்தவர்களின் படைப்புகளும் இருந்தன.

 கபாரே வொல்த்தேர் :

தாதா இயக்கம் உருவான இடம் கபாரே வொல்த்தேர் (Cabaret Voltaire). கபாரே என்னும் சொல்லுக்கு இரவு கேளிக்கைக்கான இடமென்று பொருள். சுவிஸ்நாட்டில் ஜூரிச் நகரில் கிழடுதட்டியிருந்த மரபுகளில் ஆயாசப்பட்டுக்கிடந்த இளம்கலைஞர்களில் சிலர் இரவு நேர பார்களில் அவவப்போது நுழைந்து விடியவிடிய குடித்து கூத்தடித்துவிட்டுத் திரும்புவது வழக்கம். தங்கள் குழுவுக்கு ‘கபாரே பந்த்தாகுருவெல்’ என ஆரம்பத்தில் பெயரிட்டிருந்தனர். பந்தாக்குருவெல் பிரெஞ்சுக் கவிஞர் ரபலெ கவிதையில் வருகிற ஒரு குண்டோதரன். இப்பெயர் கூட பின்னாளில் அலுத்திருந்தது. சோதனைபோல முதல் உலகப்போர் மும்முரமாக நடந்துகொண்டிருக்க போர்க்கால அவலங்களுக்கு  சாட்சிகளாக இருப்பது இளம் கலைஞர்களின் மனதைப் பிசைந்தது.  1916ம் ஆண்டு பனி கொட்டிக்கொண்டிருந்த ஓர் இரவு பிப்ரவரி மாதம் தேதி 5, இளம் கலைஞர்கள் ஒரு குழுவாக ஜூரிச் நகரின் வீதியில் இரவு விடுதி ஏதேனும் திறந்திருக்கிறதா எனத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிறிய ‘பப்’ திறந்திருக்க நண்பர்கள் கூட்டம் நுழைந்தது.  யுகொ பால்  என்ற இளைஞர் ‘பப்’ பின் முதலாளியிடம், “நண்பர்களுடன் வந்திருக்கிறேன், எங்களுக்கு மட்டும் தனியாக ஓர் கூடமிருந்தால் அரட்டை அடிக்க வசதியாயிருக்கும், பிறவாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு இருக்காது”, என்றிருக்கிறார். முதலாளி யோசித்தார், “பின்பக்கம் சிறியதொரு இடமிருக்கிறது, வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளுங்கள், என்னை குறைசொல்லகூடாது”, என திறந்து விட்டிருக்கிறார். அவ்விடத்திற்கு, “கபாரெ வொல்த்தேர்” என்று பெயர் சூட்டினார்கள் நண்பர்கள். பிரெஞ்சு தத்துவாதியான வொல்த்தேர் பெயர் அவர்களுக்குப் பொருத்தமானதாக இருந்தது. ஆனால் தாதா என்ற பெயரை அதே இடத்தில் மூன்றாம் நாள் அறிவித்து கொண்டாடுவோமென அவர்கள் அப்போது நினைக்கவில்லை.

தாதாக்களும் மீயதார்த்தவாதிகளும் [1916 -1960]

முதல் உலகப்போரின்போது தாதா(Dada)க்கள் என அழைத்துக்கொண்டவர்களுக்கும் அறுபதுகளில் தங்களை மீயதார்த்தவாதிகளென அழைத்துக்கொண்டவர்களுக்கு முள்ள வேறுபாடு மயிரிழைதான். முதல் உலகப்போரும் அதன்  விளைவுகளும் ஐரோப்பிய மண்ணிலும் அம்மக்களின் வாழ்வாதாரங்களிலும் ஏற்படுத்தியிருந்த சிதைவுகள் அலட்சியப்படுத்தக்கூடிதல்ல. பாதித்திருந்த கலைஞர்களில் ஒரு பிரிவினருக்கு ஆதிக்க அரசியல் காயப்படுத்திய மானுட இனத்திற்கு அவசர சிகிச்சை, காலத்தின் நிர்ப்பந்தமாக இருந்திருக்கிறது. தங்கள் அபயக்குரலுக்கு மேடை தேடிகொண்டிருந்தகாலம் அது. தங்களின் இம்முயற்சியை சிறுபிள்ளைத்தனமான, வரம்பு மீறிய, எள்ளலுக்குறிய, குறுப்புத்தனமானதென்று கூறிக்கொள்ளும் துணிச்சலும் அவர்களுக்கிருந்தது. இக்கலைஞர்கள் வரம்பற்ற சுதந்திரத்தைக் கனவு கண்டவர்கள். அவர்களுடைய கனவை நனவாக்க கைக்குக்கிடைத்தன வற்றையெல்லாம் படைப்பாக மீட்டெடுத்தனர். தாதா இயக்கம் பிறந்தது. பிறந்த ஆண்டு 1916. கவிஞர்கள் யுகோ பால் ( Hugo Pal), திரிஸ்டன் ஸாரா (Tristan Zara); ஓவியர்கள் ழான் அர்ப் (Jean Arp), மர்செல் ழான்கோ (Marcel Janco), சோபி டபர் அர்ப் (Sophie Tauber Arp – இவர் ழான் அர்ப்பின் மனைவி)  ஆகியோர் இணைந்து செய்த புரட்சியென கூறவேண்டும். ஜூரிச்சில் ‘Spiegelgasse’ என்ற மதுச்சாலையில் மரபுகளுக்கு எதிரான தங்கள் கலகக்குரலை பதிவு செய்தார்கள். கலை, கல்வி, இலக்கியத்தில் பயணம் செய்தவர்களை வழமையான பாதையிலிருந்து விலக்கி கண்களை மூடிக்கொண்டு திசையின்றி பயணிக்க இந்த இளைஞர்கள் ஊக்குவித்தார்கள்.

மழலை மொழியில் ‘தாதா’ (Dada) என்றால் குதிரை   இவர்கள் தூரிகையை கையில் பிடித்தவர்கள்.   தங்கள் படைப்புக்கே பொருள் தேடவேண்டாம் என்றவர்கள், ‘தாதா’வென தங்கள் கலைபுரட்சிக்கு பெயரிட மழலைகளின் ‘தாதாவை’ தேர்வு செய்தது எதிர்பாராமல் நிகழ்ந்தது. முதன் முதலாக இயக்கத்திற்கு பெயர்வைக்கதீர்மானித்தவர்கள், அகராதியை புரட்டினால் என்ன பெயர் கண்ணிற் படுகிறதோ அதனை வைப்பதென முடிவெடுத்தார்கள். ‘தாதா’ என்ற சொல் கண்ணிற்பட ‘தாதா’ இயக்கம் பிறக்கிறது.

“தாதா இயக்கத்தின் படைப்புகளுக்கு பொருள்தேடும் முயற்சிவேண்டாம், அதற்காக பொருளற்றதெனவும் எண்ணவேண்டாம். இயற்கையைப்போல இதுதானென தாதாவுக்கும் பொருள்கொள்ளமுடியாது. ஆக தாதா  சுயமான, மரபுக்கு எதிரான கலை”, என்றார் ழான் அர்ப். ஓவியர், சிற்பி, கவிஞரென மூன்று அவதாரங்களை எடுத்தவர் இவர். பிறந்தது வாழ்ந்தது, ஓவியம் பயின்றதென மூன்றும் ஸ்ட்ராஸ்பூர் நகரை மையப்படுத்தியது.

” தாதா’ என்பதற்கு ஒரு பொருளுமில்லை(Dada ne signifie rien)- அவன் வழிவழியாய் நிலவிவரும் நெறிகளுக்கும், பொதுவில் பலரும் ஏற்றுக்கொண்ட வழிமுறைகளுக்கும் பகைவன். இதுதான் நெறியென்ற வழி காட்டுதலுக்கு எதிரானவன். தாதா எனில் கேலிகூத்து என்பதோடு, பதின்பருவத்தினரின் சகிக்கவொண்ணா வலியுமாகும்.. .என்கிறார் திரிஸ்த்தன் ஸாரா

தாதாக்களுக்குப் பிறகு வேறுவகையாகக் கலகக்குரல்கள் கேட்டன. அவர்கள் மீயதார்த்தவாதிகள் எனத் தங்களை அழைத்துக்கொண்டபோதும், இரு தரப்பினருமே மரபுகளுக்கு எதிராவனவர்கள்.  இவர்களுக்கு கலையென்பது எதார்த்தத்தை பிரதிபலிப்பதுமட்டுமல்ல, கனவுகளைத் தீட்டுவது. பரவசம், வியப்பு, தற்செயல்களால் கட்டமைக்கப்படுவது. மீயதார்த்தவாதத்தின் நதிமூலம் தாதா இயக்கம். தாதா இயக்கத்திற்கு ஜூரிச் பிறப்பென்றால் மீயதார்த்தத்திற்கு பாரீஸ் பிறந்த மண். தாதா இயக்கம் முதல் உலகப்போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது உருவானதெனில், மீயதார்த்தவாதம் யுத்தம்முடிந்தபின்னர் உருவாயிற்று. இரண்டுக்குமே யுத்தம் அடிப்படையான காரணம்.

மீயதார்த்தவாதம் அகராதியில் அதுவரை இடம்பெற்றிராத சொல். பிரெஞ்சு கவிஞர் அர்த்துய்ர் ரெம்போ சிந்தனையிலுதித்த புதிய படைப்புக் கருத்தியத்தின்( ஒவ்வொரு பொருளுக்கும் வேறு முகமுண்டு) அடிப்படையில் 1917ம் ஆண்டு பிக்காஸோவின் கற்பனையிலுதித்த ஓவியங்களைக் கண்ட மற்றொரு பிரெஞ்சு கவிஞரான அப்பொலினேர் அவைகளை மீயதார்த்தவகை படைப்புகளென வர்ணிக்கிறார். ஆனால் மீயதார்த்தத்தை ஓர் இயக்கமாக வளர்த்தெடுத்தவர் மற்றொரு பிரெஞ்சு கவிஞர் பெயர் ஆந்தரே பிரெத்தோன்(‘André Breton).

இலக்கியம் என்னும் இதழில் 1922ம் ஆண்டு ஆந்தரே பிரெத்தோன் எழுதுகிறார்: “தாதா இயக்கமென்றில்லை- இனியெதுவுமே நமக்கு வேண்டாம், எல்லாவற்றையும் கைகழுவுவோம்”.  ஆனால் பிரெத்தோன் இம்முடிவினை எடுக்க பலகாலம் காத்திருந்திருக்கிறார். ஆண்டுகள் பலவாக அவரிடைய இலக்கிய பிதாக்களில் சிலர் மெல்ல மெல்ல இம்மாற்றத்தை அவர் மனதில் விதைத்துவந்திருக்கிறார்கள். மீயதார்த்தவாதம் என்றதும் இரண்டு பெயர்கள் உடனடியாக நினைவுக்குவருகின்றன. முதல் உலகப்போரின் சூத்திரதாரியான கிய்யோம் (ஆங்கிலத்தில் வில்லியம்) கெய்சர் என்கிற ஜெர்மன் முடியாட்சியின் இறுதி வாரிசு ஒருவரெனில் மற்றவர் கிய்யோம் அப்பொலினேர் என்னும் பிரெஞ்சு கவிஞர். முதல் உலகப்போர் ஜெர்மன் நாட்டின் தோல்வியில் முடிய, கிய்யோம்  கெய்சர் 1918ம் ஆண்டு நவம்பர் 9ந்தேதி மகுடத்தைத் துறக்கிறார். அதேதேதியில் பாரீஸ் நகரில்,  புல்வார் சேன்-ழேர்மன் வீதியில் 202 எண் இல்லத்தில் போரின்போது தலையில் குண்டுடடிப்பட்டிருந்த கியோம் அப்பொலினேர்  உயிர் துறக்கிறார். இறந்த போது கவிஞருக்கு வயது 38. ஜெர்மன் கிய்யோம் கெய்சர் வீழ்ச்சியைக் கொண்டாடிய பிரெஞ்சு மக்கள் தங்கள் கவிஞர் கியோம் இறந்திருப்பதை அறியாமலேயே  “கியோம் ஒழிந்தான்” என மகிழ்ச்சிபொங்க பாரிஸ் நகரவீதிகளில் கொண்டாடுகிறார்கள். இச்சம்பவத்தையே ஒரு மீயதார்த்த காட்சியாக சித்தரிக்கலாம். யுத்தத்தின் முடிவில் வெற்றியை கொண்டாடவோ, பழிவாங்கும் உணர்வோ கவிஞர் அப்பொலினேருக்கு இல்லை. கவிதையொன்றில்:

“வெற்றியென்பது/ தொலைநோக்கும்/ அண்மித்த  பார்வைக்கும் உரியது/ அதுவன்றி / இவற்றிர்க்குப் புதிதாய் / ஒரு பெயருமுண்டு”. எனக் குறிப்பிடுகிறார்.

‘Les Mamelles de Tiresias’ என்ற நாடகத்தின் முன்னுரையில் அப்பொலினேர், “மனிதன் தான் ‘கால்களால்’ நடப்பதை வேறுவகையில் வெளிப்படுத்த விரும்பியபோது, தோற்றத்தில் கால்களைப்போன்றிராத சக்கரங்களை உருவாக்கினான். மீ எதார்த்தத்தை அறியாமலேயே, மனிதன் அதனை நடைமுறைபடுத்தினான்” என்கிறார். வெற்றிகுறித்து கவிஞர் அப்பொலினேரின் கருத்தியத்திற்கு வலுவூட்ட இளைஞர்களில் சிலர் முன்வந்தனர். அவர்களில் இருவர் – ஆந்தரே பிரெத்தோன், பிலிப் சுப்போ. கவிஞரை ‘·ப்ளோர் கபே’ என்கிற சிறுவிடுதியில் அடிக்கடி சந்திப்பது இவர்களின் வழக்கம். அப்பொலினேர் இறந்தைக் கேள்விப்பட்டதும் பிரெத்தோன் தனது நண்பரும் கவிஞருமான லூயி அரகோனுக்கு எழுதுகிறார்:

ஆனால் கியோம்/அப்பொலினேர்/  சற்றுமுன் இறந்தாரென்று அந்த ஹைக்கூ வடிவம்பெற்றிருந்தது. இக்கவிதையில் மீயதார்த்தத்தின் தோற்றுவாயும் எழுதப்பட்டிருப்பதாக படைப்பிலக்கியவாதிகள் கூறுகிறார்கள். அப்பொலினேர் மீயதார்த்தவாதமென்ற சொல்லுருவாக்கத்தின் தந்தையெனக் கருதப்படினும் அவருடைய கவிதைகள் மரபுகளிலிருந்து விடுபடாதது முரணாகக்கொள்ளப்பட்டது. அவரது இறப்பு சீடர்களுக்கு முழுச்சுதந்திரத்தையும் கொடுக்கிறது. மீயதார்த்தவாதம் பிறக்கிறது. குருவின் இறப்பு சீடர்களுக்கு மீயதார்த்தத்தை முன்னெடுத்துசெல்ல கிடைத்த சமிக்கை. அரகோன் (Louis Aragon), பிரெத்தோன், சுப்போ (Philipe Soupault) ஆகிய மூவர் கூட்டணியோடு எலுவார் (Eluard) என்பவரையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். நால்வரும் இருபத்தைந்து வயதிற்கு குறைவான இளைஞர்கள், முதல் உலகபோரில் பங்கெடுத்தவர்கள். அந்நேரத்தில் நாட்டிலிருந்த படைப்பாளிகள் பலரும் தேசியம், காலனி ஆதிக்கம், இனவெறி என்றபொருளில் கவனம் செலுத்த  “மனித மனத்தின் எண்ணங்களை உள்ளது உள்ளவாறு இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட களங்கம் ஏதுமற்ற தானியங்குமுறையில் தெரிவிப்பது” (Manifeste du surréalisme -1924) என மீயதார்த்தத்திற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டது.

மீயதார்த்தத்தைப் புரிந்துகொள்ள ‘ அழகான சடலம்’ (cadavre exquis) என்ற ஒன்று போதும்.  இவ்விளையாட்டின்படி ‘அடுத்தவர் வாக்கியம் பற்றிய அக்கறையின்றி எதையாவது எழுதி பின்னர் ஒன்று சேர்த்தல்.’ இலக்கியம், ஒவியம் அனைத்து பரிமாணங்களிலும் அழகான சடலம் அடையாளம்பெற்றது. பிற இயக்கங்களைப்போலவே மீயதார்த்தவாதமும் முடிவுக்குவந்தது. அம்முடிவு எப்போது எப்படி நிகழந்ததென்பது குறித்து விவாதங்கள் இருக்கின்றன. ஒருமித்த கருத்துகளில்லை. உலகெங்கும் மீயதார்த்த அடிச்சுவட்டில் வேறு இயக்கங்கள் தோன்றவும் செய்தன. ஆனால் ஆந்தரே பிரெத்தோன் இறந்தபிறகு மீயதார்த்தவாதம் அநாதையாயிற்று.

இவ்வியக்கங்களில் தீவிரமாக பெண்களும் பங்கேற்றிருக்கின்றனர். அவ்வகையில் அன்று 16 பெண்களின் ஓவியங்களை காணமுடிந்தது. ஆண் படைப்பாளிகளுக்கு ஈடான புகழை அவர்கள் எட்டவில்லையென்றாலும் அவர்களின் படைப்புகள் ஆண்களின் படைப்புக்கு சற்றும் குறைந்தவையல்ல. குறிப்பாக ஜேன் கிரேவ்ரோலின் (Jane Gaverolle) Le Démon Mesquin’ (குட்டிச்சாத்தான்), போனா (Bona Tibertelli de Pisis) என்பவரின் Le Chef d’Etat (அதிபர்) முக்கியமானவை.

சேன்- லூயி கண்காட்சி ஏழு கூடங்களில்: 1. குறிப்பிடத்தக்கவை 2. தொடரும் தாதாக்கள், 3 ஆரம்பகால மீஎதார்த்தவாதிகள் வட்டம் 4. வட்டத்தின் வளர்ச்சி 5. சித்தர் மனநிலை, 6. நிழற்படங்களில் மீயதார்த்தம் என பல்வேறுதலைப்புகளில் ஓவியங்களையும் சிற்பங்களையும் பார்வையாளர்களுக்கு காட்சிபடுத்தியிருந்தார்கள்.

இறுதியாக போட்டோகிராம் (Photogram) என்ற பெயரில்  மீயதார்த்தவாத நிழற்படங்களும் வைக்கப்பட்டிருந்தன. 1922ம் ஆண்டு மன் ரே (Man Ray) என்ற கலைஞர் ஒரு புனல், அடுக்களையில் உபயோகமாகும் ஒரு அளவைக் கோப்பை, ஒரு வெப்பமானி ஆகிய மூன்றையும் நீரில் நனைத்த ஒளியுணர் காகிதத்தின்( Papier sensible) மீதுவைத்து மின்விளக்கை ஏற்ற அவருக்கு ஓர் அற்புதக் காட்சி கிடைத்திருக்கிறது அந்நிகழ்விற்கு ‘Rayo Gramme’ என்று பெயரும் வைத்திருக்கிறார். அவருக்குப்பின் பலர் அம்மாதிரியான அரிய காட்சிகளை தங்கள் புகைப்படக்கருவியின் உதவி கொண்டு எடுக்க பல நல்ல படைப்புகள் கிடைத்துள்ளன.

அல்பெர்ட்டொ சவினோவின் (Alberto savino) ‘ஈடன்'(Paradis Terrestre-1828), ஜார்ஜோ டெ சிரிக்கோ(Georgio de Chirico)வின்  ஒரு புறப்பாட்டின் புதிர் (Enigme d’un départ- 1920), ஹன்ஸ் ரிஷ்ட்டருடைய (Hans Richter) மினுமினுப்பு (Eclat-1960); ஆந்தரே மஸ்ஸோன் (André Masson) வரைந்த மீன்கள் (Les Poissons -1923), ஸ்டான்லி வில்லியம் ஹேட்டர்(stanley william hayter) படைப்பில் ‘ஓட்டம்'(Runner -1930), வில்பிரெடு லாம் (Wilfredo Lam) என்பவருடைய ‘உருவம்’ (Figure- 1939), ஜாக் ஹெரால்டுவின்(Jacques Hérold) ‘பெண்மணி'(La Femmoiselle-1945) ஆகியவை முக்கியமான படைப்புகளில் சில.

கட்டுரையின் தொடக்கத்தில் ஓவியக்கண்காட்சி நடைபெற்ற சேன் லூயி ஒரு சிறிய நகரமெனக் குறிப்பிட்டிருந்தேன். எனவே வந்திருந்த பார்வையாளர்கள் மிகக்குறைவு. தவிர ஜனவரியில் ஆரம்பித்து ஜூலைமாதம்வரை ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததும், குறைவான பார்வையாளர்களுக்கு காரணமாக இருந்திருக்கலாம். எண்ணிக்கைக் குறைவான பார்வையாளர்களுக்கிடையே நான் ஒருவன் மட்டுமே அந்நியன். ஓவியங்களுக்கு காவலிருந்தவர்கள், எங்கு சென்றாலும் என்னையே தொடர்ந்து வந்ததைபோல இருந்தது. வெளியேறும்போது என்சட்டைப் பையை திறந்துகாட்டி ஒன்றும் எடுத்துச்செல்லவில்லை, திருப்தியில்லையெனில் எதற்கும் ஒருமுறை நன்றாகச் சோதனையிட்டுக்கொள்ளுங்ககளென்று கூறியபோது காவலாளியின் உதட்டில் வழிந்த முறுவல் கூட மீயதார்த்தவகை சார்ந்ததுதான்.

நன்றி: காலச்சுவடு

——————————–

மொழிவது சுகம் நவம்பர் 15-2012

எழுத்தாளரும் நட்பும்: ·பிரான்ஸ் கா·ப்காவும்   மாக்ஸ் ப்ரோடும்

நட்பு காலத்திற்கேற்ப, வயதொத்து, தேடலுக்கொப்ப, எடுக்கும் நிலைப்பாடு சார்ந்து தோன்றுகிறது மறைகிறது. கோப்பெஞ்சோழன் பிசிராந்தையார், அவ்வை அதியமான் போன்ற நட்புகள் இன்றிருக்க வாய்ப்பில்லை, அப்படியே இருந்ததென்றாலும் அரிதாகவே இருக்கக்கூடும். இளமை காலத்தில் நட்புக்குள்ள வீரியம், வயது கூடுகிறபோது நமத்துப்போகிறது. இளமைக்கு முன்னால் மேடுபள்ளங்கள் இருப்பதில்லை. கல்வியில், பொருளாதாரத்தில்  சமுதாயத்தில் தங்களுக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யவும் நட்பிற்கு கெதிரான குறுங்கற்களை, சிடுக்குகளை வெகு எளிதாகக் களையவும் துடிப்பான இளம் வயது உதவுகிறது. ஆனால் வயது அதிகரிக்கிறபோது நண்பனைப் ‘பிறன்’ ஆகப் பார்க்கும் மனப்பான்மை காலூன்றுகிறது. நண்பனின் தோல்வியை ஏற்கும் நமக்கு அவன் வெற்றியை சகித்துக்கொள்ள ஆவதில்லை. இது உறவுக்குப்பொருந்தும், ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். பொதுவில் உலகம் இவ்வடிப்படையிலேயே இயங்குகிறது. பாலஸ்தீனியரும், இஸ்ரேலியருக்கும் நடப்பது உண்மையில் ஒருவிதமானப் பங்காளிச் சண்டை. இந்திய இலங்கைத் தமிழர்களிடையே மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையேயும் தொப்புட்கொடி உறவு உண்டு. ஆனாலும் காலம் இன்றைக்கு மற்றுமொரு பாரத யுத்தத்தை எழுதிக்கொண்டிருக்கிறது.  உலகில் முதல் மனிதன் ஆப்ரிக்கக்கண்டத்துகாரனாக இருப்பான் என்கிறபோது, மனிதர் சமுதாயத்தில் வேரூன்றிப்போன இனம், நிறம் கசப்புகளுக்கு நியாயமே இல்லை. ‘நான்’ ‘எனது’ இவற்றின் நலன்களில் சிரத்தைகொண்டு நீரூற்றி, எருவிட்டு வளர்க்கும் கடமைக்கான மானுட ஜென்மம் எனத் தன்னை வீட்டிற்குள் நுழைந்த மறுகணம் மனிதன் நினைத்துக்கொள்கிறான்.

‘ஓ அவரா, தினமும் வேலைக்குச்செல்கிறபோது பேருந்து நிறுத்தத்தில் சந்திக்கிறேனே எனது நண்பர்தான்! என்கிறோம். அந்த அவருக்கும் இவருக்கும் பேருந்து நிறுத்தத்தில் புன்னகை பரிமாற்றம் மட்டுமே நிகழ்ந்திருக்கும். ‘பேஸ்புக்கில்’ என்னோடு இணைந்துகொண்ட 68வது சினேகிதர். என இன்னொரு நண்பருக்கு எழுதுகிறோம். ஆயிரத்தியோரு இரவுகள் கதைகள்போல ஆளுக்கொரு திசையிருந்தாலும் நண்பர்களாக இருக்க முயற்சிக்கிறோம். ‘என்னங்க அவரை உங்களுக்குத் தெரியுமா? தெரியாமல் எப்படி, எனது நண்பர்தான்! என்கிறோம். இரண்டுபேருமே ஒரே ஊர்க்காரர்கள் என்பதைத் தவிர அந்த ‘நண்பர்’ என்ற சொல்லுக்கு வேறுகாரணங்கள்  சொல்ல முடியாது. “நான் 1980ல் அண்ணாமலையில் படித்தேன்!” என்பார் ஒருவர். “அப்படியா நான் 1981ல் அண்ணாமலையில் சேர்ந்தேன்”, என்பார் மற்றவர். மூன்றாவது பேர்வழியிடம் இவர்களில் ஒருவர் “நாங்கள் இருவரும் அண்ணாமலை பல்கலைகழக நண்பர்கள்” என்பார்: இப்படியும் நண்பர்கள்.

எழுத்தாளர் பிரபஞ்சன் பிரான்சுக்கு வந்தபோது நடந்தது: ஒரு நண்பர் அவரிடம் புதுச்சேரியில் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம் நினைவிருக்கிறதா? எனக்கேட்டிருக்கிறார். அந்த நண்பருடன் ஒரே வகுப்பில் படித்தது பிரபஞ்சனுக்கு நினைவில்லையென்கிறபோதும் நண்பர் குறிப்பிட்ட தகவல்கள் பொருந்திவந்ததால் ஆமோதித்திருக்கிறார். அதன்பிறகு அங்கு நடந்த ஒன்றிரண்டு நிகழ்வுகளில் பாரீஸ் நண்பர் ‘பிரபஞ்சனும் நானும் நெருங்கிய நண்பர்கள் எனக் கூறியிருக்கிறார். பிரபஞ்சன் ஒரு கட்டத்தில் அவரிடம், வானம் வசப்படும் நூலைப்பற்றி ஏதேனும் தெரியுமா? எனது நூல்கள் என்னென்ன உங்களிடமிருக்கின்றன? எனக்கேட்க அந்த நண்பர் அசடு வழிந்தாராம். தங்கர்பச்சான் திரைப்படத்தில் வரும் ஏற்றதாழ்வுகளுக்கிடையேயான நட்புகள் அரவான் திருமணம் போல. அப்துல் கலாம் தம் பள்ளிதொடங்கி கல்லூரி, பல்கலைகழகம் வரை பல ஆசிரியர்களைக் கண்டிருப்பார், அல்லது கடந்து வந்திருப்பார். அவர் வாழ்க்கையில் குறைந்தது நூறு ஆசிரியர்களைப் பார்த்திருக்கக்கூடும். அந்த நூறு ஆசிரியர்களும் ஆளுக்கு ஆயிரம் மாணவர்களையாவது தங்கட் பணியின்போது சந்தித்திருப்பார்கள்.  தங்கள் வாழ்நாளில் பத்தாயிரம் மானவர்களுக்குக் கல்விபோதித்து சமுதாயத்திடம் ஒப்படைத்திருப்பார்கள். ஆனால் ஒருவர் மட்டுமே நாட்டின் அதிபராக முடிந்தது. அதற்கு அப்துல்கலாம் காரணமேயன்றி அவர்களுக்குப் பாடமெடுத்த ஆசிரியர்கள் காரணமாக இருக்கமுடியாது. அப்படி ஒன்றிருவர் காரணமாக இருந்தால் அதை அப்துல்கலாமே சொல்லவேண்டும் அல்லது எழுதவேண்டும். அப்போதுதான் அந்த ஆசிரியர்களுக்குப்பெருமை. நட்பும் அப்படிப்பட்டதுதான்.

எழுத்தாளர் காப்காவுக்கும் நண்பர் இருந்தார். பிரபஞ்சனிடம், பதினோராம் வகுப்பில் நீங்கள் முதல் பெஞ்சில் உட்கார்ந்திருந்தீர்கள் நான் மூன்றாவது பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன் எனச் சொல்லிக்கொள்ளும் கொச்சையான நட்பல்ல அது, மனத்தளவில் சீர்மைபெற்ற நட்புவட்டம். காப்காவும் மாக்ஸ் ப்ரோடும் சட்டம் பயிலுகிறபோது நண்பர்களாக இணைந்தவர்கள். அன்றைய செக்கோஸ்லோவோக்யா (இன்றைய செக்) நாட்டில் ஜெர்மன் யூத புத்திஜீவிகள் நட்புவட்டமொன்றிருந்தது. பிராக் நகரில் ஒவ்வொரு நாளும் இந்நண்பர்கள் கூடி அறிவு சார்ந்து தர்கிப்பதுண்டு. காப்காவுக்கும், ப்ரோடுவிற்கு மிடையில் ஒளிவுமறைவில்லை அத்தனை நெருக்கம். ஒன்றாகவேப் பயணம் செய்தனர். குடிக்கச்சென்றாலும் கூத்திவீட்டிற்குப்போனாலும் ஒற்றுமை. ‘உருமாற்றம்’ 1915ல் வெளிவந்திருந்தபோதும் காப்காவை அப்போது பெரிதாக யாரும் கொண்டாட இல்லை, எழுத்தாளருக்குத் தன்னைப்பற்றிய தாழ்வு மனப்பான்மையும் இருந்திருக்கிறது. பழகிய சில நாட்களிலேயே மாக்ஸ் ப்ரோடுவிற்கு தம் நண்பர் காப்காவின் எழுத்தில், ஞானத்தில் அபார நம்பிக்கை.  காப்காவிற்கு யூத சமயத்தின்மீது நண்பரால் மிகுந்த பற்றுதலும் உருவாகிறது. ஒருநேரத்தில் டெல்-அவிவ் சென்று ஒரு சிறிய உணவு விடுதியொன்றை திறக்கும் மனப்பான்மையில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். 1917ம் ஆண்டு தமக்கு காசநோய் இருக்கும் உண்மை எழுத்தாளருக்குத் தெரியவருகிறது. ‘அன்புள்ள மாக்ஸ்’ எனத் தொடங்கி காப்கா தமக்குப் பீடித்துள்ள நோய்பற்றிய உண்மையைக் கடிதத்தின்மூலம் நண்பருக்குத் தெரிவிக்கிறார். சிகிச்சைக்காக காசநோய் மருந்துவ இல்லமொன்றில் அனுமதிக்கப்பட்டபோதும் காப்கா தனது நண்பருக்கு எழுதிய கடிதங்களை நிறுத்தியதில்லை. அவ்வாறு எழுதிய கடிதங்கள் பலவும் மாக்ஸ¤டமிருந்தன. அவற்றைத் தவிர காப்காவின் பிரசுரம் ஆகாத படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகளும் ஏராளமாக இருந்தன. காப்கா தமது இறப்பிற்குப்பிறகு அவற்றை எரித்துவிட சொல்லியிருக்கிறார். மாக்ஸ் அவற்றை பிரசுரிக்கத் தீர்மானித்தார். காப்காவின் விருப்பத்தை நிறைவேற்றியிருந்தால் நமக்கு The Castle (novel), Amerika (novel), The Trial (novel) கிடைத்திருக்க வாய்ப்பில்லை. மாக்ஸ் தன் நண்பருடைய விருப்பத்திற்கு மாறாக அவற்றைப் பிரசுரம் செய்தது துரோகமில்லையா என்றகேள்விக்கு, இலக்கிய கர்த்தாக்களில் பலர் துரோகமில்லை என்கிறார்கள். காப்காவிற்கு மாக்ஸ் ப்ரோடு என்ன செய்வாரென்று தெரியும் அதனாற்தான் கொடுத்தார் என்கிறார்கள்.

1939 ஆண்டு நாஜிகள் பிராக் நகரைக் கைப்பற்றுகிறார்கள். தமது மனைவி எல்ஸாவுடன் ஒரு ரயிலைப்பிடித்து  எங்கெங்கோ அலைந்து இறுதியில் டெல் அவிவ் நகரை அடைந்து மாக்ஸ் ப்ரோடு வாழ்க்கையைத் தொடங்குகிறார். கொண்டுவந்த  பெட்டியில் மாக்ஸ் ப்ரோடுவின் எழுத்துக்களன்றி அவர் நண்பருடைய எழுத்துக்களும் கையெழுத்துப் பிரதிகளாக ஆயிரக்கணக்கிலிருந்தன.  மூன்றாண்டுகளில் ·ப்ரோடுவின் மனைவி இறக்கிறார்.  டெல் அவிவ் நகரில் பிராக் நகர இலக்கிய வட்ட நண்பர்களைச் சந்திக்கிறார். மீண்டும் இலக்கிய வட்டம் உருவாகிறது. அப்போதுதான் செக் நாட்டிலிருந்து வந்திருந்த ஹோப் தம்பதியினரின் அறிமுகமும் ப்ரோடுவிற்குக் கிடைக்கிறது. திருவாளர் ஹோப்பின் மனைவி எஸ்த்தெர் மாக்ஸ் ப்ரோடுவின் நட்பு வேறுவகையில் திரும்புகிறது. எஸ்த்தெர் தற்போது ப்ரோடுவின் அந்தரங்கக் காரியதரிசி. முழுக்க முழுக்க ப்ரோடுவின் கடிவாளம் இந்த அம்மாளின் கைக்குப்போகிறது. நெருங்கிய நண்பர்கள் சந்திப்பதென்றாலுங்கூட அம்மணியின் தயவு வேண்டும். இறுதிக்காலத்தில் மாக்ஸ் ப்ரோடு தம்கைவசமிருந்த அவ்வளவு கையெழுத்துப் பிரதிகளையும் அரசாங்க நூலகத்திடம் ஒப்படைக்க இருந்ததாக டெல் அவிவ் நகர இலக்கிய வட்ட நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் அது நடைபெற இல்லை. மாக்ஸ் ப்ரோடு இறந்த உடன் எஸ்த்தெர் ஆவணங்களைத் தாமே வைத்துக்கொள்வதெனத் தீர்மானிக்கிறார். கேட்கிறவர்களிடம் “எங்க முதலாளி கடைசிகாலத்தில் சில ஆவணங்களை என்னிடம் கொடுத்திருக்கிறார்”,  என ஒப்புக்கொள்கிறார். 1961 தேதியிட்ட உயிலொன்று ஆவணங்கள் குறித்து பேசுகிறது. இறப்பிற்குப் பிறகு மாக்ஸ் ப்ரோடு வசமிருந்த கையெழுத்து பிரதிகள் அனைத்தும் தேசிய நூலகத்திற்கோ அல்லது அதுபோன்ற வேறு அமைப்பிற்கோ கொடுக்கப்படவேண்டுமென்று எழுதப்பட்டுள்ள உயிலில் தெளிவில்லை என்கிறார்கள். தவிர அதுபற்றிய இறுதி முடிவு அப்பெண்மணியின் விருப்பம் சார்ந்ததாம். காப்காவும் அவர் நண்பர் மாக்ஸ் ப்ரொடுவும் யூதர்கள் என்பதால் இருவருடைய எழுத்தும் இஸ்ரேலுக்குச் சொந்தமென வாதிடுகிறவர்கள் இருக்கிறார்கள். அல்பெர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஸ்வெய்க் போன்ற யூத அறிவு ஜீவிகளின் ஆவணங்கள் தங்கள்வசமிருப்பதைக் கூறி தங்கள் வாதத்தை நியாயப்படுத்துகிறார்கள்.  இஸ்ரேல் தேசிய நூலகம்  மேற்கண்ட  தர்க்கத்தின் அடிப்படையில் அரசாங்கத்தின் பின்புலத்துடன் உரிமைகோரி வழக்குத் தொடர்ந்தது. ஆனால் 1974ல் இஸ்ரேலிய நீதிமன்றத்தின் முதற்தீர்ப்பு எஸ்த்தெருக்குச் சாதகமாக அமைந்தது.  பெண்மணிக்குக் காலப்போக்கில் காப்காவின் எழுத்துக்கள் பொன்முட்டையிடும் வாத்து என்று தெரியவர வேண்டுமென்கிறபோதெல்லாம் விற்க ஆரம்பித்தார். 1970ல் காப்காவின் பல கடிதங்கள் நல்ல விலைக்கு விற்கப்பட்டன. 1988ம் ஆண்டு The Trial நூலின் மூலப் பிரதி ஜெர்மன் இலக்கிய ஆவணக்காப்பகம் 2 மில்லியன் டாலரைக்கொடுத்து உரிமம் பெற்றது.

எஸ்த்தெர் ஜூரிச்சில் வங்கிப் பெட்டமொன்றிலும், டெல்-அவிவ் நகரில் ஆறு வங்கிப்பெட்டங்களிலும் போக சிலவற்றை வீட்டில் ஒரு பெட்டியில் பூட்டி வைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள். எஸ்த்தெருக்கு இரண்டு பெண்கள் ஒருத்தி பெயர் ரூத் மற்றொருத்தி பெயர் ஏவா.  இளைய மகள் ஏவா விமானப்பணிப்பெண், மணம் புரியாமல் தாய்க்குத் துணையாக இருந்துவந்தாள். 2007ல் 101 வயதில் எஸ்த்தெர் இறந்த பிறகு அவருடைய மகள்களுக்கிடையில் சிக்கல் ஏற்பட்டு நீதிமன்றத்திற்குப்போக, இஸ்ரேலிய தேசிய நூலகமும் தன்பங்கிற்கு முன்புபோலவே உரிமைகோரியது. ரூத் இஸ்ரேல் அரசாங்கத்துடன் சமாதனாமாகப்போக நேர்ந்தாலும் ஏவா விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. 2012 மேமாதத்தில் ரூத் என்பவளும் இறந்துவிட்டாள். இப்போது ஏவா மட்டுமே தனி ஒருவளாக கையெழுத்துப்பிரதிகளைப் பூதம் காப்பது போல காத்துவருகிறாள். கடந்த அக்டோபர் மாதம் (2012) 12ந்தேதி வந்துள்ள தீர்ப்பு இஸ்ரேலிய தேசிய நூலகத்திற்கு ஆதரவாக இருக்கிறது.  ஏவா மேல் முறையீடு செய்யவிருப்பதாகக் கூறுகிறார்கள். இம்முறை நீதிமன்றம் ஓர் அதிகாரியை நியமித்து ஜூரிச், டெல் அவிவ் வங்கிப்பெட்டகங்களை சோதனையிட்டு முறையாக அவற்றின் விவரத்தை பதிவுசெய்ய வேண்டுமென கட்டளைபிறப்பித்திருக்கிறது. ஜூரிச் பெட்டகத்தைப்பரிசோதிக்க நான்கு நாட்களும், டெல் அவிவ் பெட்டகத்தைத் சோதனையிட 6 நாட்களும் தேவைபட்டனவாம். ஏவா வீட்டிற்குள் நுழைய மிகவும் தயங்குகிறார் நீதிமன்ற அதிகாரி. அங்கே ஆவணங்களோடு ஏவா வளர்க்கும் ஐப்பதுக்கும் மேற்பட்ட பூனைகள் இருக்கின்றனவாம். உருமாற்றம் எழுதிய காப்காவும் அவர் நண்பரும் ஐம்பதில் இரண்டு பூனைகளாக்கூட இருக்கலாமென்பது எனக்குள்ள ஐயம். ஒரு புறம் இஸ்ரேல் அரசாங்கமும் இன்னொரு புறம் எஸ்த்தெர் குடும்பமும் காப்கா, மாக்ஸ் புரோடுவின் கையெழுத்துப்பிரதிகளுக்கு உரிமைகோரி வழக்காடிக்கொண்டிருக்க, உண்மையில் அவற்றுக்கு உரிமைகோரவேண்டிய செக் நாடு அசாதரண மௌனம் காப்பது இன்னொரு புதிர்.

காப்காவுக்கு நண்பர் மாக்ஸ் புரோடு இழைத்தது நன்மையா? தீமையா? ஒரு பட்டிமன்றத்திற்கான தலைப்பு.

——————-

 

எழுத்தாளன் முகவரி -8

புனைவும் -உண்மையும்

பிரெஞ்சு மொழியியல் அறிஞர்  ரொலான் பர்த் (Roland Gerard Barthes)  ‘ Ecrivain, Ecrivant. என படைப்பாளிகளை இருவகையாக பிரிக்கிறார்.

Écrivantஎன்பவர்களை கட்டுரையாளர்கள் எனபொருள் கொள்ளலாம். ரொலான் பர்த் தரும் விளக்கத்தின்படி கட்டுரையாளர்களுக்கு  மொழி ஒரு கருவி. அம்மொழியின் பணி நடந்தவற்றிற்கு தாங்கள் சாட்சி என்பதை பிறருக்கு உணர்த்துவது, அறிந்தவற்றைப்  பிறருக்கு விவரிப்பது, உற்ற ஞானத்தை பிறருக்கு போதிப்பது. இப்பணியிற் பெரிதாய் நாம் கொண்டாட ஒன்றுமில்லை. பார்த்தை பொறுத்தவரை இங்கே மொழி செயல்பாடற்றது

Ecrivain என்றால் தமிழில் படைப்பாளிகள் என பொருள் கொள்ளலாம். ரொலான் பர்த் பார்வையின் படி படைப்பாளிகள் மொழி தகவலைச் சுமப்பதோடு பிற பணிகளையும் செய்கிறது.  சொல்லப்படும் தகவலும் ஐயப்பாடுடையதாக அதாவது இருமுடிவிற்கு வழிகோலுகின்றவகையில் அமையவேண்டுமென்கிறார். தீர்க்கமான ஒரு முடிவைச்சொல்கிறபோதுகூட தொடர்ந்து கேள்விக்கு ஆளாகிற ஒரு முடிவாக அது அமையவேண்டுமென்பது பர்த் முன் வைக்கும் யோசனை.

ரொலான் பர்த் கருத்தின் அடிப்படையில் எழுத்துக்களை இருவகையாகப் பிரிக்கின்றனர்: முதலாவது தகவலைத் தெரிவிக்க எழுதுவது; இரண்டாவது படைப்புக்கென எழுதுவது.

தகவலைத் தெரிவிக்க எழுதுதல் என்று சொல்கிறபோதே, ஓரளவிற்கு அவ்வெழுத்தின் செயல்படும் விதத்தை ஊகிக்கலாம். இங்கே மொழியின் பணி சம்பந்தப்பட்டத் தகவலைக் கொண்டு சேர்க்கும் வாகனம் -பொதி சுமக்கும் கழுதை- தகவலைக்கொண்டு சேர்க்கும் பணியில் மொழியின் சேவையை ஒரு கழுதையின் இடத்தில் வைத்தே பார்க்கிறோம். கொஞ்சம் கடுமையான சொல்லை இங்கே மொழிக்கு உவமைப்படுத்தியிருந்தபோதிலும் அதில் உண்மையில்லாமலில்லை. சமையற் குறிப்பு, அறிக்கைகள். நித்யா டிஸ்மிஸ் என்று தூயதமிழில் எழுதும் திமுக குடும்ப ஏடு, டெங்கு சுரம் வராமல் தடுக்க  கொசுவை விரட்டி பிடியுங்கள் என அமைச்சர் தரும் யோசனை, கற்பில் சிறந்தவள் சீதையா? மண்டோதரியா? என்பதுபோன்ற சிகாமணிகளின் கட்டுரைகள் அனைத்தும் தகவலைத் தெரிவிக்கும் எழுத்துக்கள் அதாவது ரொலான் பர்த் மொழியில் சொல்வதெனில் ‘Ecrivant’.

படைப்பு எழுத்துக்கள்: இங்கேயும் சொல்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதை சொல்கிறவர் கொஞ்சம் சுவாரசியமாகச் சொல்லவேண்டுமென்று நினைக்கிறார். எழுதுபவர் உண்மையை சொன்னால்போதுமென்று நினைப்பதில்லை கொஞ்சம் பொடிவைத்து பேசுகிறார். அப்படி பேசுவதற்குச் சில கற்பனை பாத்திரங்களை படைக்கிறார்.கற்பனை காட்சிகளையும் தீட்டுகிறார். நல்ல வாசகன் அமைந்தால் பொருள், தொனி, அழகு, சந்தம் அவ்வளவையும் பெறலாம். இவ்வெழுத்திலும் பிறவிடங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் இருந்தபோதிலும், எழுதுபவர் சுயசிந்தனையிற் புதிதாக உதித்ததைச் சேர்த்து அவ்வெழுத்துக்கு மெருகூட்டுகிறார். தாம் கற்பனையில் எழுப்பிய உலகத்தில் தமது விருப்பத்துக்குகந்த மனிதர்களை நடமாடவிட்டு அவர்களை நாமென்கிறார். கவிஞனாக இருப்பபன் கவிதையில் நாம் இதுவரை அறிந்திராத காட்சியைத் தீட்டுகிறான்; சொல் புதிது பொருள் புதிது என்கிறான். ஓர் தத்துவவாதி, புதிதாய் ஒரு தத்துவத்தைக்கூறி நம்மைச் சிந்திக்க வைக்கிறான். படைப்பு என்றவகையில் உருவாகும் எழுத்துகள் சென்ற தலைமுறை ஞானத்தை பேணுவதோடு வரும் தலைமுறை உயர்விற்கும் உதவுகிறது.

மேற்கண்ட இரண்டையும் வேறு சொற்களில் சொல்வதெனில் ஒன்று ஆவணம் மற்றது இலக்கியம்: புனைவு, அபுனைவு. பிரெஞ்சில் முன்னதை
‘நடை’ யென்றும் பின்னதை ‘நாட்டிய’ மென்றுங்கூட ஒப்பிடுவதுண்டு.

நடையை எடுத்துக்கொள்ளூங்கள். தகவலைப்போன்றே அது தெளிவானது. புறவுலகோடு தொடர்புடையது. ஒரிடத்தில் தொடங்கி இன்னொரு இடத்தில் முடிந்துவிடும். ஏதாவதொன்றை சுமக்கும் பணி அதற்குண்டு. நடையில் நிதானமிருக்கலாம் அவசரமிருக்கலாம், நேர்த்தியாய் அழகாய் நடக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. தகவலைத் தெரிவிக்கும் மொழியின் பணியும் நடையை ஒத்ததே.  சொல்லவேண்டிய கருத்தை ஒரு முனையிலிருந்து சுமந்து சென்று அடுத்த முனையில் இறக்கிவைத்துவிட்டதெனில் மொழியின் பணிமுடிந்தது. ஆனால் நடனம் அப்படிப்பட்டதல்ல, கைகளும் கால்களும் பிறவும் நளினமாக இயங்கவேண்டும். நடனமாடுகிறவர் தமது நாட்டியம் நேர்த்தியாக அமைய வேண்டுமென்பதில் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார். நன்றாக ஆடினால் கூடுதலாகக் கூட்டம் வருமென்பதும் சம்பாதிக்கமுடியுமென்பதும் உண்மைதான் ஆனால் ஆடும் கலைஞனுக்கு அது முதன்மையான நோக்கு அல்ல. தவிர முடமல்லாத மனிதர் யாராயினும் நடக்கலாம் ஆனால் நடனமாட ஞானம், உழைப்பு,பொருத்தமான உடல் என்று பலவிழுமியங்கள் தேவைப்படுகின்றன.

எனினும் ஓர் எழுத்தை அல்லது படைப்பை தெள்ளத் தெளிவாக மேற்கண்டவகையில் இரு பிரிவுக்குள் அடக்கவியலாது. கட்டுரையைக்கதைபோல சொல்லவும், கதையைக் கட்டுரைபோல எழுதவும் செய்கிற ஆசாமிகளைப்பார்க்கிறோம். வராலாற்றாசிரியர்களே சார்பற்று, சமநிலையில் சொல்ல வாய்ப்பில்லை என்கிறபோது பிறவற்றை புனைவுகளாக சொல்லலாம் தவறில்லை. தகவலைத் தெரிவிக்கிற  விளம்பரங்களைக்கூட நேர்த்தியாகவும் கலைநயத்துடனும் சொல்லத்தவறினால், செய்யப்படும் விளம்பரத்திற்குரிய பலன் கிட்டுவதில்லை.

இன்றைய எழுத்துக்களை Fiction என்பதைக்காட்டிலும் Faction என்று சொல்வதுதான் பொருந்தும். கட்டுரை எழுதும்போதுகூட கதை சொல்லும் திறனை கலவுங்கள். அவ்வாறே புனைவில் கட்டுரைக்குரிய நம்பகத் தன்மை ஏற்படுத்தித்தரும் உண்மையைக் கலவுங்கள்.

எனது இரண்டாவது நாவல் மாத்தாஹரி. முதல் உலகப்போரின்போது அவள் பெயர் பிரசித்தம். பரத்தையென்று விமரிசிக்கப்பட்டவள். பிரெஞ்சு அரசுக்குப் பெண் உளவாளியாகப் பணியாற்றியவளை பின் நாளில் பிரெஞ்சு அரசு தண்டித்துக் கொலைசெய்தது. புதுச்சேரியிலிருந்து கனவுகளுடன்  பாரீஸ¤க்கு திருமணமாகிவரும் பெண்கள் அநேகரின் வாழ்க்கை இன்னல்களை ஓரளவு அறிந்திருந்தேன். நான் வசிக்கிற ஸ்ட்ராஸ்பூரில் ஒரு புதுச்சேரி பெண் தீக்குளிக்கவும் செய்தாள்.  நான் இளைஞனாக இருந்த காலத்தில், புதுச்சேரியில்எனக்கு நெருங்கிய உறவினர் வீட்டில் பவானிபோன்றே பெண்ணொருத்தியிருந்தாள். அவள் அறிவுக்கும் அழகுக்கும் வாய்த்தவனோ எல்லாவற்றிலும் நேரெதிர். இந்த உண்மைகளையெல்லாம் ஒன்றுதிரட்டி புனைவாகச் சொல்லவேண்டுமென்று விரும்பினேன்: பவானி உருவானாள். பலரும் இன்றைக்குப் மாத்தாஹரி கதையில் வரும் பவானியை உண்மையென்றே நம்புகிறார்கள். அப்படியொரு நம்பகத்தன்மையை வாசக நண்பர்களுக்கு உருவாக்கியிருந்தேன்.

உண்மையையும் புனைவையும் சரியான விகிதத்தில் கலந்து வெற்றிபெற்ற படைப்பாளிகள் நிறைய பேருண்டு. தமிழில் ரா.சு நல்லபெருமாளின் ‘போராட்டங்கள் சிறந்த உதாரணம். சார்லஸ் டிக்கன்ஸ¤டைய நாவல்கள் அனைத்துமே அப்படிப்பட்டவையெனலாம். லியோ டால்ஸ்டாயும், ஸ்டெந்த்தாலுங்கூட அதை நன்றாகவேச் செய்தார்கள். அனுபவங்களென்று  நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திப்பவைகள் புனைவுகளுக்கு உதவக்கூடும். உண்மைக்கூறுகளை கற்பனை மெருகேற்றிச்சொல்லும் திறன் உங்களுக்கிருந்தால் கதைசொல்லலில் நீங்கள் தேர்ந்தவர். கணவன் அல்லது மனைவியைச் சந்தேகிக்கும் தம்பதி; “எதிர் வீட்டுபெண்ணைப் பார்த்தியா!” எனக் கேள்வியையும் கேட்டு அதற்குப் பதிலையும் சொல்வதுபோல, அப்பெண் வெளியில் போனதில் ஆரம்பித்து வீடு திரும்பும் வரை நேரில் கண்டதைப்போல சொல்லத்தெரிந்த பெண்மணி; தொலைபேசியை எடுத்ததுமே புலம்புகிற மனிதர்கள் இவர்களெல்லாங்கூட கதை சொல்வதில் தேர்ந்தவர்கள்தான். ஆனால் இவர்களிடமுள்ள பிரச்சினை நாக்கு புரளும் அளவிற்கு விரல்கள் (உட்கார்ந்து எழுத )  ஒத்துழைப்பதில்லை.

உண்மையைப் புனைவில் கலப்பதென்பதென்பது ஒரு வித தொழில் நுட்பம். உண்மை புனைவென்ற இரு இழைகளையும் சேர்த்து திரிப்பதன் இலக்கு, கதைக்கு நேர்த்தியையும், கதைமீதான ஆர்வத்தையும் ஏற்படுத்தித்தருகின்ற வகையில் புனைவுக்கொரு நம்பகத் தன்மையை ஏற்படுத்தித் தருதல்.

———————————————————

இரண்டு நிகழ்வுகள்

1. பாரீஸில் கம்பன் விழா

பிரான்சு கம்பன் கழகமென்கிறபோது சட்டென நினைவுக்கு வரக்கூடிய கம்பன் கழகத்தலைவர் கி.பாரதிதாசன் மொழிக்காக உண்மையில் உழைக்கும் நண்பர். பலமுறை பாரீஸில் தங்கட் சொந்தப்பணத்தை தமிழுக்காக செலவிடும் நண்பர்கள் பெயர்களை ஏற்கனவே பதிவுசெய்திருக்கிறேன். அவர்களில்  பாரதிதாசன் முதன்மையானவர். பதினோறாவது ஆண்டாக கம்பன் விழாவை நடத்துகிறார். சென்னையிலிருந்து வழக்குரைஞர் த. இராமலிங்கம் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

நாள்:-11- 11-2012 நேரம் பிற்பகல் 2மணிமுதல் – இரவு 8.30வரை
இடம்  L’Espace Associatif des Doucettes, Rue du Tiers, 95140- Garges Les Gonesse
————————————–

2. Salon du Livre sur L’Inde

பாரீஸிலும் புதுச்சேரியிலும் விளம்பரமின்றி, பிரெஞ்சு மொழியூடாக இந்தியாவையும், தமிழ்மொழியையும் ஐரோப்பியரிடையே கொண்டு செல்லும் பணியை அயராமற் செய்கிறவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.  திருவாளர்கள் தாவீது அன்னுசாமி, குரோ, முருகையன், முடியப்பநாதன், மதனகல்யாணி, வெ.சுப. நாயகர், கோபாலகிருஷ்ணன் என நீண்டதொரு பட்டியலை வாசிக்கமுடியும். இவர்கள் அசலான கல்விமான்கள். நிலைய வித்துவான்கள் கச்சேரியில் கலப்பதில்லை. அவர்களில் ஒருவர் திருவாளர் துக்ளாஸ் கிரெஸ்ஸியெ (Douglas Gressieux).

திரு துக்ளாஸ் கிரெஸ்ஸியெ ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். அவருடைய Les Troupes Indiennes en France கட்டாயம் வாசிக்கப்படவேண்டியது. புதுச்சேரியில் பிறந்தவர்.  பிரெஞ்சுக்காரராக இருந்தாலும் தமிழை நன்கு பேசுகிறார். இவருடைய தந்தை புரட்சிக்கவி பாரதிதாசனின் நண்பர் என்பதை பெருமையோடுக் குறிப்பிட்டார். அவரது சங்கத்தில் இந்தியாவைப்பற்றிய ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சில் வெளிவந்த அரிய நூல்களின் தொகுப்பாக நூலகத்தை நடத்திவருகிறார். பத்தாயிரத்துக்குமேற்பட்ட நூல்கள் உள்ளன. புதுச்சேரியைப்பற்றி ஆய்வுநோக்கில் அறியவிரும்புவர்களுக்கு இந்நூல்கள் பெரிதும் உதவக்கூடும்.

துக்ளாஸ் உடைய இந்திய அமைப்பான L’Association les Comptpires de l’Inde என்கிறச் சங்கம் எதிர்வரும் 18, 19தேதிகளில் பாரீஸில்

2eme Salon Du Livre Sur L’Inde என்ற நிகழ்வை இரண்டு நாட்கள் நடத்துகிறது. நிகழ்வின்போது விவாதங்களும் உரையாடல்களும் இந்தியக் கலை,இலக்கியம், பண்பாடு என்றபொருளில் நடக்கவிருக்கின்றன. பிரெஞ்சு ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக அறிஞர்பெருமக்கள் கலந்துகொள்கிறார்கள்.

Salon du Livre sur l’Inde
Nov.17-18- 2012
Mairie du 20e – 6, Place Gambetta-Paris
———————————————————————————————————

மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012

சந்திப்பும் இருநோக்கும்....

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

காதலன் காதலியைத் தவிர சந்திப்பு தருணத்திற்காக ஏங்கும் மனிதர்கள் வேறெவரேனும் உலகில் இருப்பார்களா? கடந்த வெள்ளியன்று பாரீஸில் நண்பர் ஒருவர் மகளின் திருமண வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். புதன்கிழமையன்றே பாரீஸ் புறப்பட்டாயிற்று. பிரான்சு நாட்டில் ஓரளவு எனது நட்புவட்டம் என்பது பெரிதும் பாரீஸில் வசிக்கும் நண்பர்களைச் சார்ந்தது. அவர்களில் பலரும் தமிழ்ச் சங்கங்களை ஏற்படுத்தி நடத்திவருபவர்கள். அவர்களில் ஒரு சிலருடன் நெருக்கமாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் இன்று அப்படியில்லை. ஏற்பட்ட இடைவெளிக்கு அல்லது சந்திப்பு தாமதத்திற்கு ஒருவகையில் இரு தரப்புமே பொறுப்பேற்கவேண்டும்.

மனிதர் வாழ்க்கையில் சந்திப்பு உயிருக்குச் சுவாசம்போல. தினசரியும், தொலைக்காட்சி பெட்டிகளும், வலைத்தளங்களும் இல்லாத காலங்களில் சந்திக்கிற மனிதர்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருந்தன. எங்கள் கிராமத்தில் தேனீர்க்கடையில் அறுவடை முடிந்தகாலங்களிலும், வயல்வெளி வேலைகள் அதிகரிக்கிறபொழுது பிற நேரங்களிலும் கூடுவார்கள். தேனீர்க்கடைகள் தவிர்த்து சிலர் வீட்டுத் திண்ணைகளும் உபயோகத்திற்கிருந்தன. இச்சந்திப்பின் போது ஒருவரையொருவர் உறவுமுறைவைத்து விளித்துக்கொள்வார்கள். இவர் அவரை மாமா என்பார், அவர் இவரை ‘இல்லை மச்சான்’ என மறுதலித்துப் பேசுவார். பேசப்படும் பொருள் அவர்கள்வாழ்க்கையின் அன்றையதின குறுக்கீடுகளை நினைவூட்டுவதாக அமையும். தெற்குவெளிக்கு தண்ணீர் எட்டமாட்டேங்குது, நட்ட நடவு நாலு நாளா தண்ணீர்வரத்தின்றிகாயுது, உரக்கடைக்குப் போயுட்டுவந்தேன், யூரியா வர ஒரு வாரமாகுமாம்’, இப்படி அப்பேச்சு அமையும். இத்திண்ணைபேச்சும், உறவின் முறையும் அவர்கள் அடிப்படையில் உள்ளூர் விவசாயிகள் என்ற சரடால் உருவானது. அதிலொரு விவசாயிக்குப் பார்த்தவிவசாயம் போதும், நெல்லை வாங்கி அவித்து, அரைத்து அரிசியாக குப்பங்களுக்குக் கொண்டு சென்று விற்று சிறிது பணம் பார்க்கலாமென எண்ணம் வந்ததெனில் அன்று முதல் அவ்விவசாயியின் சந்திப்பும் நட்பும் அவரைப்போன்று தொழிலில் ஈடுபடும் மற்றொரு மனிதரிடம் என்றாகிவிடுகிறது. ஆக வாழ்க்கை உறைந்து போய்விடுவதில்லை. கடலைச்சென்றடையும்வரை, கடக்க வேண்டியவைகளை கடந்தே ஆகவேண்டும்.

பிரமிப்பாக இருக்கிறது, பிறந்ததுமுதல் சந்தித்த மனிதர்கள்தான் எவ்வளவுபேர்? குடும்பம், உறவுகள், வீட்டுத் திண்ணைகள், கூடங்கள், பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், பருவகால நண்பர்கள், அலுவலகங்கள், திருமண மண்டபங்கள் கடைகள், பயணங்களில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள்… இவர்களில் எத்தனைபேரை நட்பின்பேரால் இன்றும் சுமக்கிறோம் சந்திக்கிறோம், உரையோடுகிறோம், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறோம், துன்பத்தை இறக்கிவைக்கிறோம். எங்கள் கிராமத்து நெல் வியாபாரிபோல நேற்றுவரை என்னோடிருந்த மனிதர் பலரை இழந்திருக்கிறேன். வினை சார்ந்து, உரிப்பொருள் அல்லது கருப்பொருள் சார்ந்து சந்திப்பில் இடம்பெறும் பங்குதாரர்கள் வேறாக இருப்பார்களென்பது வாழ்க்கைப் பயணம் போதிக்கும் அறம்.

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்கள் குறிப்பிட்ட இடத்தில் எதேச்சையாக அல்லது ஏற்கனவே தீர்மானித்தபடி கூடுவது சந்திப்பு. இச்சந்திப்பிற்கு பங்கேற்கிறவர்களின் பொதுநலன் மையமாகவிருக்கலாம். அவரால் இவருக்கும் இவரால் அவருக்கும் ஏதேனும் பலன்களிருக்கலாம். இரகசியமாக அல்லது பிறர் அறியவந்தால் பாதகமில்லை எனச்சந்திக்கிறவர்கள் ஒருபுறமெனில் மூன்றாவது நபரை சீண்டவேண்டுமென்பதாக அல்லது அவரது நித்திரையைக்குலைக்க வேண்டுமென்பதற்காகச் சந்திக்கிறவர்களுமிருக்கிறார்கள். அண்மையில் சில தே.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டு முதலைமைச்சரைச் சந்தித்ததைப்போல. விளம்பரத்திற்காகவும் சில சந்திப்புகள் நிகழ்வதுண்டு. டெசோ தீர்மானத்தை கோட்டு சூட்டுடன் தி.மு.க புள்ளிகள் ஐநா துணைக்காரியதரிசியை ஓர் ஐந்து நிமிடம் தயவுபண்ணச்செய்து சந்தித்தது (ராஜபக்ஷே வயிற்றில் புளியைகரைக்க அல்ல அவர் கல்லுளிமங்கனென்று தி.மு.க தலைவர் நன்றாகவே அறிவார்.  வேண்டுமானால் மத்திய ஆளும் காங்கிராஸாருக்கு எரிச்சலூட்டவென்று கருத இடமுண்டு) எதிர்காலத்தில் காங்கிரஸ¤க்கு எதிராக ஓர் அணியை ஏற்பாடு செய்யவந்தால் தமிழ்த் தேசியவாதிகளை வளைத்துப்போட கையாளும் தந்திரம். கூடுதலாக ஊசிப்போன பண்டத்தை சொந்த ஊடங்களில் கூவியும் விற்கலாம். இனி எதிர்வரும் தேர்தலுக்கு முன்பாக மரியாதை நிமித்தமாக கருணாநிதி, வைகோ, ராமதாஸ் சந்திப்பு நிகழலாம்.

தமதிருப்பின் மீது நம்பிக்கைவைத்து உறைந்த இரு உயிர்களை இளக்கி ஒன்றிணைத்து இயங்கச் செய்வது சந்திப்பு என்பது உளவியலாளர்கள் கருத்து. சமுதாய ஒழுங்கமைவு, சமூகக் கட்டுமானம், சமூக இயக்கம் என பல வழிநடத்தல்களுக்கு சந்திப்புகள் உதவியாயிருக்கின்றன. எவ்வகையான சந்திப்புகளிலும் முதல்சந்திப்புக் கிளர்ச்சியூட்டக்கூடியவைகளாகவும், ஆவலும் எதிர்பார்ப்புமாக அலைக்கழிக்கவும் செய்யும். காதலன் காதலி சந்திப்பு, தம்பதிகளின் முதலிரவு, உத்தியோகத்திற்கான நேர்முகத் தேர்வு… ஆகியவை உதாரணத்திற்கு இருக்கின்றன. இச்சந்திப்புகளில் கள்ளம் கலக்கிறபோது கூடுதலாக போதைதருமோ என்னவோ பங்குதாரர்களில் எளிதில்சுயமிழந்துபோகிறார்கள். சில நேரங்களில் சந்திப்பு மௌனியின் மனக்கோட்டை மனிதர்களைப்போல நம்மைக் கடந்து முன் சென்று என்றோ நம்மைக் கண்டதை நினைவுகூர்ந்து “என்னப்பா சௌக்கியமா?” என விசாரிக்கலாம். ஒருவர் “உன்  சிரிப்பு கூட மாறிவிட்டது”, எனலாம். மற்றொருவர், நேற்றுகூட நாங்கள் சங்கரைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உன் நினைவுகூடவந்து, உன்னைப்பற்றியும் பேசினோம்” எனச் சமாளிக்கலாம். சந்திப்புகளில் சில சலவைக்குறிகளாகும் அதிசயமிது.

சந்திப்பு என்பது இருமனிதர்களுக்கிடையேயானதாக இருக்கவேண்டுமென்ற நிர்ப்பந்தம் இருக்கிறதாவென்ன?

பாரீஸ¤க்கு வருகிறபோதெல்லாம் அவளைச்சந்திக்கிறேன். சந்திப்பின் இலக்கணங்களில் 90விழுக்காடுகள் பொருந்துகின்றன. என் மகன் வீட்டிலிருந்து பாரீசின் பிறபகுதிகளுக்கு பயணிக்கிறபோது நிகழ்கிறது. Cite Universitaire என்ற இரயில் நிலையத்திற்கு முன்பாக கடந்த ஐந்தாண்டுகளாக வெயில், மழை, பனியென காலங்களை வென்று அவள்  எனக்காகக்காத்திருக்கிறாள். சந்திப்பின் முடிவில் பங்குதாரர்கள் எதிர்பார்ப்புகள் சமதளத்தில் வைத்து திருப்தியுறக்கூடியவை என்ற விதி எங்கள்வரையில் சரியாதென்பதென் அனுமானம். ஒரே ஒரு குறை அவள் ஊர்பேர் தெரியாத ஓவியன் கிறுக்கிய கிரா·பிட்டி எனும் சுவரோவியம். தற்போதைக்கு அவள் ஆயுட்காலம்வரை எங்கள் சந்திப்புகள் தொடரலாம். குறள் சொல்வதுபோல, “இருநோக்கு இவளுண்கண் உள்ளது”.

—————————————————————————

கவனத்தை ஈர்த்த கவிதை நவம்பர்-2012

சந்திப்பு…
– தேனம்மை இலட்சுமணன்

ஒரு உறவு ஏற்படும்போதே
அதிலிருந்து விலகிப்
பார்ப்பதான சிந்தனையும்
தோன்ற ஆரம்பிக்கிறது.

எந்நேரமும் பிரியலாம்
என்ற அணுக்கத்தோடே
பகிரப்படுகிறது எல்லா
சொந்த விஷயங்களும்

இந்நேரத்தில் இன்னதுதான்
செய்து கொண்டிருக்கக்கூடும்
என்பது தெரியும் வரை
தொடர்கிறது பேச்சு.

ஏன் பேசுகிறோம்
எதற்கு சந்திக்கிறோம்
என்ன உண்கிறோம் என்பது
சிந்தனைக்கு உரியதாயில்லை.

முதல் முதல் ஏற்பட்ட
ஒரு சந்திப்பு மட்டுமே
வித்யாசமாய் இருந்ததால்
நினைவில் இருக்கிறது.

அடுத்தடுத்து நட்பும் பிரிவும்
சகஜமாகிப்போவதால்
எல்லாமே ஒரு
சாதாரண விஷயமாகிறது.

ஆனாலும் முதல் சந்திப்பின்
ஆவலும் சந்தித்த பின் நீர்ப்பும்
புரையேற்றிக் கொண்டேயிருக்கிறது
திரும்பச் சந்திக்கும் ஆவலை.

எல்லா சந்திப்புகளையும்
தூக்கிப்போட்டுவிட்டுப்
போகச் சொல்கிறது
யதார்த்த வாழ்க்கை.

ஏதோ ஒன்று இனிமையைத்
தூண்டிக்கொண்டே இருப்பதால்
இன்னும் விட்டுப் போகாமல்
தொடர்கிறது சில சந்திப்பு.

-திண்ணை இணைய இதழில் 25-9-2011 அன்று பிரசுரமான கவிதை.

http://honeylaksh.blogspot.fr

—————————————–