Monthly Archives: ஓகஸ்ட் 2021

புலியும் பூனையும்..(சன்னலொட்டி அமரும் குருவிகள் சிறுகதைதொகுப்பு)

                                                  நாகரத்தினம் கிருஷ்ணா

கணவனும் மனைவியுமாக, பனகல் பார்க்கிலிருந்த அந்தத் துணிக்கடையிலிருந்து வெளிவந்தபோது மாலை மணிநான்கு. மனிதர்களை பதட்டத்துடன், அலையவைத்துக்கொண்டிருக்கிற வெயில். ஆண் பெண்பேதமின்றி வியர்வையில் ஊறியிருந்தனர். பெண்களின் கை இடுக்குகளில் வெண் சாம்பல் பூத்திருந்தது. சிலரது கன்னக் கதுப்புகளில் இடம்பெயர்ந்து, கண்மை. பின்னல்களில் பழுத்துக்கிடந்த மல்லிகைச் சரம். ஒழுங்குபடுத்தப் படாத போக்குவரத்து, ஆதில் நீரில் விழுந்து கரையேற முயற்சிக்கிற நாய்களைப்போல வாகனங்கள். இஞ்சி, புதினா, பச்சைக்கற்பூரம், ஸ்டிக்கர்பொட்டு, வளையல், உள்பாடி, பனியன், ஜட்டி, சாமி சரணம், பணம் அள்ள பத்துவழிகள், மல்லிகைச் சரம் விற்கிற நடைபாதைக்கடைகள், எதிர்கொண்டு அல்லது பின்புறம் தொடர்ந்து உடைந்த தமிழில் மயிலிறகு விசிறி, மணிகோர்த்த அலங்காரப் பைகள் விற்பவர்கள். அய்நூறில் ஆரம்பித்து ஐம்பது ரூபாய்க்குப் போலி கைத்தொலைபேசிகளை விற்கவென்று ஏமாந்த சோணகிரிகளைத் தேடியலையும் ஊதா நிறத் தலையர்கள்.

அவளுக்கு ஏமாற்றம், கண்கள் நீர்கோர்த்திருந்தன. கடைக்குள் நுழைகிறபோது அவளுக்குள் தளிர் விட்டிருந்த சந்தோஷம், அடுத்த இருபது நிமிட இடைவெளியில் காய்ந்து சருகுகளாகி உதிர்ந்துவிட்டன. நடந்தது இதுதான். புடவையின், கலரும் முந்தானையின் டிசைனும் ரொம்பவும் பிடித்திருந்தது, விற்பனையாளர் எடுத்துப் போட்டவுடனேயே, ‘பிடிச்சிறுக்கு பில் போடச் சொல்லுங்க’, என்றாள். வேற டிசைன்லயும் இருக்கிறது, பார்க்கறீங்களா, என்று அவர் கேட்டபோது, பக்கத்திலிருந்த கணவனைத் தேடினாள், பில் செக்ஷனில் இருந்தான். ஒரு சில நொடிகள் காத்திருந்த விற்பனையாளர், புரிந்து கொண்டு, அடுத்து நின்ற பெண்களுக்குப் புடவைகளை எடுத்துப் போடத் தொடங்கினார். பணம் செலுத்துமிடத்தில் வரிசையில் நிற்கவேண்டியிருந்தது. இவன் கையிலிருந்த ரசீதைக் காட்டினான், கூடவே ரசீதுக்குண்டான ஆயிரத்து நானூறு ரூபாய்க்காக மூன்று ஐநூறு ரூபாய் நோட்டுகளை என்ணிவைத்தான். காசாளர் ரசீதை ஒரு முறைப் பார்த்துவிட்டு, மேசையிலிருந்த பணத்தை இடது கைவிரல்களில் தொட்டு, வலது கை விரல்கள் துணையுடன் சுருக்கென்று எண்ணி, உட்புறமாக திறந்திருந்த மேசையில் மேசையில் போட்ட அதே வேகத்தில் நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்துவைத்தார். பக்கத்திலிருந்த ஊழியரொருவர் பணம் செலுத்தப்பட்டதென்பதாய் முத்திரைப் பதித்தார். உடமையைப் பெறுவதற்காக வந்தபோது அங்கேயும் கூட்டம். காத்திருந்தார்கள். இவர்கள் முறைவந்தது. ரசீதை வாங்கிப் பார்த்து ஒருவன் ‘கொடுக்கப்பட்டது’ என்கிற முத்திரையை இவர்களது ரசீதில் பதிக்க, சீருடையிலிருந்த மற்றொரு சிறுவன், இவர்களது புடவையை, கடையின் பெயருடனிருந்த துணிப்பையை எடுத்து அதன் உள்ளேவைத்தான். பைகொஞ்சம் அளவிற் சிறிது. புடைவையோடிருந்த காகிதப்பை கிழிந்தது. நழுவிய புடவை தரையில் விழுந்தது. விழுந்த புடவையைக் கையிலெடுத்த பையன் இன்னொரு பையைத் தேர்ந்தெடுத்தான். ‘வெங்கிட்டு’ என்றென்கிற கணவன் வேங்கிடபதிக்குக் கோபம் வந்தது, ‘வேண்டாம்’ என்றான். பையன் திருதிருவென விழித்தான். பக்கத்திலிருந்த இன்னொருவன் உதவிக்கு வந்தான். ‘சார், என்ன சொல்றீங்க?’. ‘புரியலை, தமிழ்லதானே சொல்றேன்’, எங்களுக்கு வேண்டாம். சந்தண பொட்டு ஊழியர் ஒருவர், குறுக்கிட்டார். சார், நானும் பார்த்துக்கொண்டுதானிருந்தேன். கொஞ்சம் கவனக்குறைவு, கீழே விழுந்துவிட்டது. வேறப் பெருசா ஒண்ணுமில்லை. வேண்டுமென்றால் செக்ஷனுக்குப் போயிட்டு வேறப் புடவை எடுத்துக்குங்களேன். இல்லை, எங்களுக்கு விருப்பமில்லை. எங்கப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கப் பாருங்க. ‘ ஏம்மா.. அவர்கிட்ட கொஞ்சம் சொல்லுங்களேன்’, ஊழியர் இவளிடம் முறையிட்டார். தேவகிக்கு, வெங்கிட்டை புரியும். பொடவை போனால் போகுது, பெரிதாக இவன் பிரச்சினை பண்ணாமல் கடையிலிருந்து இறங்கவேண்டுமே’, என பிரார்த்தனை செய்தாள். புரிந்துகொண்ட ஊழியன், ஓடிச் சென்று ‘டை’ கட்டிய இன்னொரு சந்தணப்பொட்டு ஆசாமியை அழைந்துவந்தான். உங்களுக்குப் பணந்தானே வேண்டும், உள்ளே வாங்க பேசுவோம், என்றான். முறைத்து விட்டு ரசீதை வாங்கிக்கொண்டு போன ஆசாமி, அரைமணி நேரம் இவர்களை காத்திருக்கவைத்து, பணத்தைத் திரும்பக் கொண்டுவந்தவன், வெங்கிட்டை அலட்சியம் செய்துவிட்டுத் தேவகியிடம் கொடுத்தான். சுருக்கென்று கடையைவிட்டு வெங்கிட்டு வெளியேற, இவள் குமுறலுடன் அவன் பின்னே ஓடிவந்தாள். தெரிந்தவர்கள் எதிர்பட்டிருந்தால், உடைந்து அழுதுவிடுவாள்போல.

வழக்கப்படி மனதை அமைதிபடுத்திக்கொண்டவள், ‘ஏங்க, நீங்க பசிதாங்கமாட்டீங்களே ஏதாது சாப்பிட்டுவிட்டுப் போகலாமே’ என்கிறாள். எனக்கெதுவும் வேண்டாம். வேளையாய் ஊர் போய்ச் சேரவேண்டும் – அவன். இப்போதைக்கு அவனிடத்தில் பேச்சைத் தவிர்ப்பது உத்தமம். வாயை மூடிக்கொண்டாள். அவன் கோபத்தில் இருக்கிறான். இனி அடுத்த சில மணி நேரத்திற்கு, அவனுடைய சாம்ராச்சியம்: வானளவு அதிகாரம், கொதித்துக்கொண்டிருக்கும் மூளைக்கு உகந்த நீதி,  துரிதகதியில் எதிராளிக்குத் தண்டனை.

சாலையைக்கடந்து ஒருவழியாக உஸ்மான் ரோட்டின் மறுகரைக்கு வந்திருந்தார்கள். துணிக்கடையிலிருந்து கைநீட்டிக்கொண்டு ஈ மொய்க்கும் சவலைப்பிள்ளையுடன் தொடர்ந்த இளம்பெண்ணுக்கு கணவனுக்குத் தெரியாமல் ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்துவிட்டு நிமிர்ந்தபோது, இவன் முறைத்தான். ‘உங்களைப்போல ஜென்மங்களாலதான், அவர்கள் இது மாதிரியான தொழில்களுக்கு வருகின்றார்கள்’ என்றான்.

 – சார் ஆட்டோவேணுமா?

 – ஆமாம் தி.நகர் பஸ் ஸ்டேண்டு போகணும்?

 – உட்காருங்க

முந்திக்கொண்டு ஆட்டேவில் அவள் அமர்ந்தது இவனுக்கு எரிச்சல் ஊட்டியது. போதாக்குறைக்கு, வறுகடலை விற்பவன் தள்ளுவண்டியை இடித்துக் கொண்டு நிறுத்தினான்.

– ஏம்பா, இங்கே மனுஷங்க நிக்கிறது தெரியதில்லை, என்று எரிச்சல்பட்டவன், தமது மனைவி திசைக்குத் திரும்பினான், ‘என்ன நீபாட்டுக்கு ஏறி உட்கார்ந்திட்ட, என்ன கேக்கிறான்? எவ்வளவு எவ்வளவு கேட்கிறான், தெரிஞ்சுக்க வேண்டாமா?’

இவர் தன்னை ‘அவன் இவன்’ என்று சுட்டுவதை ஆட்டோ டிரைவரால், தாங்கிக் கொள்ளமுடியவில்லை. எனினும் கிடைத்த சவாரியை நழுவ விடக்கூடாதென்று கவனமெடுத்துக்கொண்டு பேசினான்.

– சார் என்னத்தை பெருசா கேட்டுடப்போறேன், இருபது ரூபாய்க் கொடுங்க.

ஆட்டோ, தி.நகர் பேருந்து நிறுத்தத்தை நெருங்க மாலை ஐந்து மணியாகியிருந்தது. முதலில் அவள் இறங்கிக்கொண்டாள். அவள் கணவன் இரண்டு பத்து ரூபாய் தாள்களை நான்குமுறை எண்ணி கொடுத்தான்.

  – சார் அஞ்சு ரூபா மேலப் போட்டுக் கொடுங்கசார், ஏதோ வயசானவன் கேக்கிறன்..

  – தாம்பரம் போகிற பஸ் அங்க நிக்கறது பாரு..புறப்பட போறாப்பல. அடுத்த பஸ் எத்தனை மணிக்கோ?

எலுமிச்சை சோற்று பருக்கைகளை இறைத்துக்கொண்டு, நின்றபடி சாப்பிட்ட இரண்டு இளைஞர்களையும்,வாழைப்பழ தாறுடன் எதிர்பட்ட இஸ்லாமியப் பெரியவரையும் ஒதுக்கிக்கொண்டு நடந்தார்கள்

 – கண்டக்டர் உட்கார சீட் இருக்குமா?

 – இருக்கிற சீட்டெல்லாமே உட்காரருதுக்குத்தான் சார், நிற்கிறதுக்கில்ல. இவளுக்கு கண்டக்டர் பதில் பிடித்திருந்தது. முன்னாலிருந்த ‘வெங்கிட்டு’ இப்பதிலை எப்படி எடுத்துக்கொண்டான், என்பதை தெரிந்துகொள்ள ஆசை.

கணவனும் மனைவியுமாக நான்காவது வரிசையிலிருந்த குறுக்குச் சீட்டில் அமர்ந்தார்கள். எதிர்த்த சீட்டில், கைக்குழந்தையுடன், ஒரு ஜோடி. அருகில் நடுத்தர வயது பெண்களிருவர். ஒருத்தி பத்து ரூபாய்க்கு இருபத்திரண்டு முறுக்கு கொடுப்பியா? என பஸ்சுக்கு வெளியே தலையை நீட்டி பேரம் பேசிக்கொண்டிருந்தாள்.  பஸ்ஸ¤க்குள்ளே வியர்த்து கொட்டியது. பயணிகளில் பெரும்பாலோர் கிடைத்ததை வைத்துக் விசிறிக்கொண்டிருந்தார்கள். ஓட்டுனர் ஆரனை எழுப்பினார். பெண்ணொருத்தியிடம் சத்தம்போட்டுக்கொண்டிருந்த நடத்துனரிடம் என்னப்பா? ஆச்சா? புறப்படலாமா என்றார். அப்போதுதான் அந்த நபரைக் கவனித்தாள். காக்கிச்சட்டையிலிருந்தான், நடத்துனரிடம்  என்னவோ கேட்டான். நடத்துனர் பதிலுக்குப் ‘ஏறுங்க’! என்றார். ஆள் வாட்ட சாட்டமாய் இருந்தான். வெளியில் தள்ளியிருந்த கண்கள், இரப்பைகள் சுருக்கமிட்டு சரிந்திருந்தன, தடித்த உதடுகள், மூக்கிற்கும் மேல் உதடிற்குமான இடைவெளியை அடைத்துக்கொண்டு பெரியமீசை. கன்னக் கதுப்புகளில் சுருக்கங்கள் எட்டிப்பார்த்தன, பெரிய வயிற்றுடன் அசைந்தபடி முன்னேறியவன், எதிரே இருந்த இருக்கை முழுவதையும் ஆக்ரமித்து, இவளுக்கு நேரெதிரே உட்காரவும் பஸ் புறப்பட்டது. குப்பென்று மதுவாடை. கணவனைப்பார்த்தாள், கையிலிருந்த ஆங்கில தினசரியை மடித்து பிடித்தபடி விசிறிக்கொண்டிருந்தவன், புதிய நபரைப் பார்க்கவிரும்பாதவன்போல தினசரியை விரித்து வைத்துக்கொண்டு லெபனான் சண்டையில் மூழ்கினான். பஸ் உறுமிக்கொண்டு புறப்பட்டது. காத்திருந்ததுபோல வெப்பக் காற்று பஸ்ஸை நிறைத்தது. வியர்த்திருந்த இவள் முகத்தினை தொட்டு விளையாடியது. நெற்றியில் விழுந்த மயிற்கற்றையை, முன் விரல்களால் ஒதுக்கியவள் நாசித் துவாரங்களில், மீண்டும் மதுவாடை. கைவசமிருந்த வார இதழில், விட்ட இடத்திலிருந்து தொடர்கதையை வாசிக்க ஆரம்பித்தாள். மனம் கதையில் ஒட்டவில்லை. எதிரே இருந்த நபர் இவளையேப் பார்த்துகொண்டிருந்தான். ‘என்ன இன்ஸ்பெக்டர் சார்’ எங்கே இந்தப்பக்கம், இவளுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல். அக்குரலுக்கு மறுமொழிபோல, ¨?கோர்ட்ல ஒரு கேஸ¤ வந்துட்டுத் திரும்பறேன், என்ற நபரின் பார்வை இவள் மார்பில் பட்டுத் திரும்பியது. கணவனைப் பார்த்தாள். ‘தினசரியில் தீவிரமாக மூழ்கியிருந்தான். தொடரில் மூழ்கினாள்:

‘நீங்கள் மின் அஞ்சல்களைத் திறந்து பார்ப்பதில்லையா? நமக்குள் கடிதப்போக்குவரத்து இருந்தபோது மாதத்திற்கொருமுறை தவறாமல் எழுதுவீர்கள். செய்தி பரிமாற்றங்களில் நேர்ந்துள்ள முன்னேற்றம், உண்மையில் மனிதர்களுக்கு இடையிலான வெளியைக் கூட்டித்தான் விட்டது.

மறதிக்குப் பழகிக்கொண்டேன், நான் படித்தது, சிந்தித்தது, விவாதித்தது அனைத்துமே மறதிகள் பட்டியல்களில்தானிருக்கின்றன. நடுவாசலிலிலிருந்த மல்லிகைப் பந்தல் மறந்துவிட்டது, காலையில் மொட்டும், மலருமாய் அது பூத்தது மறந்துவிட்டது. டில்லிக்கு போய்விட்டு சென்னைக்குத் திரும்பிவந்த இரவு, விடிய விடியப் பேசினது நினைவிலிருக்கிறது ஆனால் என்ன பேசினோம் என்று மறந்துவிட்டது..நான் உங்களைபோலவே இருக்கிறேனென அடிக்கடி வீட்டுக்கு வருகின்ற உறவினர்களிடம் அம்மா சொல்லிச் சந்தோஷபட்டதும், கல்லூரியிலிருந்து நான் தாமதமாக வருகிறபோதெல்லாம், முன்வாசலில் காத்திருக்கும் உங்களிருவரின் நிம்மதிப் பெருமூச்சுங்கூட மறந்துவிட்டது…”.

இவள் கால்களில், அந்நியகாலொன்றின் ஸ்பரிசம். வார இதழை மடியில் இருத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தாள். எதிரே உட்கார்ந்திருந்தவனுடைய கால்கள். சன்னலொட்டித் தலையைசாய்த்து குறட்டைவிட்டுக்கொண்டிருந்தான். இரு கால்களையும் இவள் வரை நீட்டியிருந்தான். கணவனின் தோளைத் தட்டினாள். ‘என்ன?’.. என்பது போலத் திரும்பிப் பார்த்தான். அந்த ஆளைக் கொஞ்சம் காலை மடக்கச் சொல்லுங்களேன். ‘சார்..சாரென்று,’ இரண்டுமுறை அழைத்தான்.. அவன் கூப்பிட்டது இவளுக்கேக் கேட்கவில்லை. இவள் தனது கால்களை முடிந்த அளவு, தனது இருக்கைக்குக் கீழே பின்னிருத்திக் கொண்டாள். சங்கடமாக இருந்தது.

இவளுக்குப் பக்கத்திலிருந்த மூதாட்டிக்கு நிலமைப் புரிந்திருக்க வேண்டும். உறங்கிக் கொண்டிருந்த நபரை தொட்டு எழுப்பினாள். குறட்டை நின்றது. தலையைச் சிலுப்பிக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தான். கண்களிரண்டும் செவசெவவென்று இருந்தன. குடித்திருந்ததாலா? தனது உறக்கத்தைக் கெடுத்துவிட்டார்களென்கிற கோபமா, தெரியவில்லை.

–  ‘காலை மடக்கிட்டு உட்காருதம்பி, அந்தப் பிள்ளை மேலே படுதில்லே..’ கிழவியினுடைய வாயிலிருந்து எச்சில் தெறித்து காக்கிச் சட்டையில் சிவப்பு புள்ளிகளாய் விழுந்தன. சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தவன்.

– ‘என்ன, நீ யாரு? அவங்களுக்கு வாயில்லையா? அவங்க கேட்க மாட்டாங்களா?’

வெங்கிட்டுத் தனக்குச் சம்பந்தமில்லாததுபோல தினசரியில் மூழ்கியிருந்தான்.

 – ‘அவங்களை ஒன்றும் சொல்லாதீங்க. செத்தமுன்னே உங்க கால், எங்க சீட்வரைக்கும் நீட்டியிருந்ததால எனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது…’

அந்த நபர் இவள் சொல்லி முடிக்கட்டுமெனக் காத்திருக்கவில்லை. சட்டென்று இவள் வாக்கியத்தை வெட்டினான்.

– இங்கே பாரு பஸ்ஸ¤ல இப்படித்தான் வரணும்னு எனக்கு யாரும் புத்தி சொல்லவேணாம். பஸ்னா அப்படி இப்படித்தானிருக்கும். சௌகரியமா குந்திவரணும்னா, இப்படி பஸ்ல வரகூடாது.

இவள் உடலில் தேவையற்று ஒருவித நடுக்கம். தன்னைத் திடப்படுத்திக்கொள்ள முனைந்ததுபோல, கீழுதட்டைச் சுழித்து உள்வாங்கி முன்பற்களைப் அழுந்தப் பதித்தாள். சம்மந்தப்பட்ட மனிதனின் பார்வையத் தவிர்க்கவா அல்லது கணவன் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டுமென்கிற சராசரிப் பெண்ணின் எதிர்பார்ப்பா என்று அவளால் தீர்மானமாக சொல்ல முடியாத நிலையில், சில நொடிகள் வெங்கிட்டுவினைப் பார்த்தாள். அவனுக்கு என்ன நடந்ததென்பது தெளிவாகவேத் தெரிந்தது. தினசரியை நான்காக மடித்து, தனது இருக்கை அடியிலிருந்த கைப்பையில் வைத்தான். சில விநாடிகள் தயங்கியபடியிருந்தான். இப்படியான நேரத்தில் தான் எப்படி செயல்படவேண்டுலென்பதில் அவனுக்குக் குழப்பம் இருந்திருக்கவேண்டும். எதிராளியின் சரீரமும், தோற்றமும், நெஞ்சில் தேவையற்ற திரவங்களை உற்பத்திசெய்தது, வாய் உலர்ந்துபோனது. எச்சில் கூட்டி விழுங்கி நெஞ்சை நனைத்துகொள்கிறான், அவன் உதடுகள் துடித்தது. சுற்றிலுமிருந்த சக பயணிகள், தங்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடராமல் இவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்: பாதி உறித்த கமலாப்பழம், வாயில் நொறுங்கிய முறுக்கு, வருமான கணக்குக் காட்டாத வழக்குபற்றிய உரையாடல். அவர்களுக்கெல்லாம் சுவாரஸ்யமாக ஏதோ நடக்கப்போகிறதென்கிற எதிர்பார்ப்பு.

சக பயணிகளுக்கு முன்பாக, கையிலிருந்த ஆங்கில தினசரியும், உடுத்தியிருந்த ஆடையும் ஏற்படுத்தியிருந்த  கற்பனை பிம்பத்தை, குறைந்தபட்ஷம் பஸ் பயணம்வரைக் கட்டிக்காக்கவேண்டியக் கட்டாயத்தில் அவனிருந்ததை புரிந்துகொண்டவன்போல, மெல்ல நகைத்தபடி அவனிடம் பேசினான்.

 – நீங்க பணம் கொடுத்திருக்கீங்க, உங்களுக்கான இருக்கையில் உட்கார, பயண தூரம்வரை அதற்கான உரிமையில்லையென்று யார் சொல்ல முடியும்? ஆனால் அடுத்தவர்களும், அவர்கள் பயண தூரத்திற்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு இங்கே உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளவேண்டும். சொன்னவனுக்கு வேர்த்திருந்தது, கைகுட்டைகொண்டு முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான்… 

எதிரே இருந்த நபர் நிமிர்ந்து உட்கார்ந்தான். தலை முதல் கால்வரை வெங்கிட்டுவை அளவெடுப்பவன்போல அற்பமாகப் பார்த்தான்

  -‘ கண்டக்டர் இங்கே வாய்யா.. இந்த ஆளு உரிமைங்கிறான்.. கட்டணங்கிறான்.. என்னண்ணுகேளூ. இங்கே பாருய்யா.. நான் அப்படித்தான் உட்காருவேன். உங்களுக்குச் சங்கடமாயிருந்தா நீங்க வேணா பஸ்லயிருந்து இறங்கிக்குங்க.

‘நடத்துனர்’ நமக்கேன் வம்பு என்பதுபோல உட்கார்ந்திருந்தார். அவள் கணவனைப் பார்த்தாள். பயணிகள், வெங்கிட்டுவின் எதிர்த் தாக்குதல் எப்படியிருக்கும் என யோசித்தவர்களாய், காத்திருந்தார்கள்.

– சார் சத்தம்போடாதீங்க.. நியாயத்தைப் புரிஞ்சிக்கணும், இரத்தின சுருக்கமாக இடையில் இரண்டாக முறிந்து வெளிப்பட வாக்கியத்தில் அசாதரண நிதானம்.

 – எதிராளி சட்டென்று எழுந்து நின்றான். தனது காக்கிச்சட்டையின் பொத்தான்களை அவிழ்த்துக்கொண்டு பனியன் தெரிய நின்றான். முண்டாவைத் தட்டினான். மீசையோடு உதடு மேலெழுந்து இறங்கியது, முகவாய் கோணலானது. வெங்கிட்டை அச்சுறுத்த முனைந்தவன்போல,

– இப்ப உனக்கு என்ன வேணும், என்று கர்ஜித்தவன், வெங்கிட்டின் சட்டையைப் பிடித்துக்கொண்டான். இவளது இதயம் வேகமாகத் துடித்தது. கணவனிடம் நெருங்கி உட்கார்ந்தாள். அவனுடலில் ஒருவித அதிர்வினை உணர்ந்தாள். கோபம் வந்தால் அவனுக்கு தலைகால் புரியாது. எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நிலைமையை மேலும் மோசமாக்காமல் தடுத்தாகவேண்டும். கண்டக்டரை உதவிக்கு அழைக்கலாம் அல்லது சக பயணிகளில் ஆண்களை உதவிக்கு அழைக்கலாம் என முதலில் யோசித்தாள். இறுதியில்  கணவனில் சட்டையைப் பிடித்திழுத்து உட்காருங்கள் எனச் சொல்லவந்தவள், சட்டென்று தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டாள். மனதை இறுக்கிக்கொண்டு, பயணிகளில் ஒருத்தியாக தன்னைப் இருத்திக்கொண்டு அவனைப் பார்த்தாள். இதழோரம் அரும்பிய சிரிப்பை, சட்டென்று தலையைக்குனிந்து மறைத்தபோதும், வெங்கிட்டு அதனை உணர்ந்திருப்பானாவென பார்வையை மீண்டும் அவன் மீது செலுத்தினாள்.

போட்டிருந்த கண்ணாடியைக் கழற்றி கையிலெடுத்துக்கொண்டான். தேவையில்லாமல், கைகுட்டையினால் ஒரு முறைக்கு இருமுறைக்குத் அதனைத் துடைத்துக்கொண்டிருந்தான். முகம் வெளுத்திருந்தது. 

– இல்லை, நான் என்ன சொல்லவந்தேன்னா..,.

– எதையும் சொல்லவேண்டாம். வாயை மூடிக்கொண்டு வரணும். மோதித்தான் பார்க்கணும்னா நான் ரெடி.

வெங்கிட்டு சட்டென்று சுருங்கிக் கொண்டான். பிற பயணிகளின் ஏளனப் பார்வையைத் தவிர்க்க நினைத்தவன்போல ஆங்கில தினசரியை விரித்துவைத்துகொண்டு அமைதியானான். எதிராளி, தனது இருக்கையில் மீண்டும் அமர்ந்தவன், இம்முறை தனது கால்களிரண்டையும் நீட்டவில்லை, மடக்கியிருந்தான். 

பேருந்து சீராக ஓடிக்கொண்டிருந்தது. பயணிகளுக்கிடையே ஒருவித அமைதி. குளிர்ந்த காற்று வீசியதில்  சூழ்நிலையின் இறுக்கம் தணிந்திருந்தது. தேவகி கணவனைப்பார்த்தாள். முகம் வியர்த்திருந்தது, சோர்வு தெரிந்தது. ஆங்கில தினசரியை பிடித்திருந்த கைகளில் நடுக்கம். இவளுக்குக் கடந்த பத்துவருட தாம்பத்யத்தில் கண்டிராதத் திருப்தி, வார இதழ் தொடரில் மீண்டும் கவனம் செலுத்தினாள்.

 _________________________________________

மொழிவது சுகம், ஆகஸ்ட் 13 -2021

ஒலிம்பிக் பதக்கம்

என்னதான் பிறநாடுகளில் குடியேறி வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலும்  மனதிலும் உடலிலும் ஒட்டிக்கொண்டுள்ள பிறந்த மண்ணை அத்தனை எளிதாக உதறிவிடமுடியாது, அது வெறும் மண் அல்ல  சதையும் இரத்தமும், சாகும் வரை உடலோடு கலந்தே இருக்கும். பிரான்சு நாடு வென்ற 10 தங்கப்பதக்கங்களைக் காட்டிலும்  ‘இந்தியா ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு’ வென்ற ஒரு தங்கபதக்கம் அதிக  மகிழ்ச்சி அளிக்கிறது. கணவன் வீட்டுக்கு வந்த பின்னரும் பிறந்த வீட்டை மறக்க முடியாமல் பெருமூச்சுவிடும் பெண்களின் நிலைதான் எங்கள் வாழ்க்கையும். நீரஜ் சோப்ரா இந்தியக்கொடியை முதுகில் சுமந்தபோது, காந்திசிலையை அந்நிய மண்ணில் கண்டு மகிழும் அதே சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் உணர முடிந்தது.

இந்திய மத்திய அரசும் மாநில அரசுகளும் பதக்கம் வெற்றவர்களை ஊக்குவிக்க பரிசு மழையில் நனைப்பதுபோல  பிற வீரர்களையும் வீராங்கனைகளையும் ஊக்குவிக்க வேண்டும். உண்மையான போட்டியாளர்களாகச் சென்று எதிர்பாராமல் தோல்வியைத் தழுவியவர்கள் உற்சாகத்தையும் குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வென்ற பிறகு வீரர்களைப் பரிசு மழையில் நனைக்கின்ற அதே ஆர்வத்தை, ஒலிம்பிக் விளையாட்டிற்குத் தயார் செய்வதிலும் காட்டவேண்டும். சீனாவை வெகு சீக்கிரம் மக்கள் தொகையில் மிஞ்ச இருக்கும் தேசத்தில் ஓரளவு திருப்தி அளிக்கும் வகையில் பதக்கங்கள் பெறுவது கௌவுரவம். குறைந்தபட்ச திட்டமிடல் வேண்டும். பாரீசில் நடைபெற உள்ள 2024 ஒலிம்பிக்கில் கூடுதல் பதக்கம்பெறுவோம் என பிரான்சு ஒலிம்பிக் கமிட்டி அறிவித்து அதற்கான திட்டமிடல்களை தொடங்கிவிட்டார்கள். பதக்கம் பெற்ற்வருக்கும் அளிக்கிற பரிசுத் தொகை வரவேற்க கூடியது, அதேவேளை அதில் பாதியையாவது ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக  தகுதியானவர்களை தேர்வுசெய்து பயிற்சி தர செலவிட அரசுகள் முன்வரவேண்டும்.

1973 ஆண்டு சென்னை பி எ மூன்றாம் ஆண்டு தேர்வு முடித்துவிட்டு ஊர் திரும்பியிருந்தேன். எனது பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி என்பவரை புதுச்சேரியில், அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். அங்கு புதுச்சேரி நேரு யுவக் கேந்திரா இயக்குனர் துரைக்கண்ணு என்பவர் இருந்தார். பேச்சின்போது, “புதுதில்லியில் விஷ்வ யுவக் கேந்திரா சார்பில் கூட்டப்படும் தேசிய மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டும் பத்து நாட்களுக்குள் தயாராக இரு” என்றார்கள். அதற்கு முந்தைய நிமிடம்வரை எனக்கும் நேரு யூத் கேந்திராவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. நான்கு வாரங்கள் தில்லியில் தங்கினோம், சுற்றியுள்ள ஊர்களை அரசாங்க செலவில் பார்த்தோம், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியுடன் படம் எடுத்துக்கொண்டோம். இது போன்ற அவசரகதி தேர்வுகள் நமது ஒல்ம்பிக் தேர்விலும் நடந்திருக்க வாய்ப்புண்டு. “இங்கே சும்மாதான சுத்திவர டோக்கியோவை போய் பார்த்துட்டு வாயேன்” என அமைச்சர் வீட்டு திருமதி மகனை டோக்கியோவிற்கு அனுப்பி இருக்கவும் இந்தியாவில் வாய்ப்புண்டு. இதுபோன்ற குறைகளைதவிர்க்க முடிந்தால் பாரீசில் ஒலிம்பிக்க்கில் இரண்டொரு பதக்கம் கூடுதலாக வாங்கலாம், என்னைப் போன்ற புலம் பெயர்ந்த இந்தியர்களுக்கு வாய்க்கரிசி இடாமல் வயிற்றில் பால் வார்க்கலாம்.  

நீலக்கடல் நாவலில் இருந்து…

          பதினெட்டாம் நூற்றாண்டு

                                       அலை –17

Save yourselves from depot wallahs

it is not a service but pure deception

They take you overseas

They are not colonies but jails

  – A phamphlet distributed in India (at the end of 19th century)

அடர்ந்திருந்த மரங்களுக்குட் புகுந்து ஓடினான். ஓட ஓட விருத்தியாய், முன்பொருமுறை மார்கழிமாசத்திலே மேற்காலே கண்ட வால்முளைத்த நட்சத்திரம் மாதிரி அடர்த்தியானமரங்கள், முட்புதர்கள், மூங்கிறபுதர்களென இவனுக்குமுன்னே ஓடிக்கொண்டிருக்கின்றன.. இப்படி ஓடுவதென்பது அவனுக்குப் புதிதல்ல. வெறும்வயிற்றோடு ஓடுவதால், பார்வைபடுமிடங்களில் பூச்சிகள் பறக்கின்றன. வியர்வையில் நனைந்த உடல். சோர்வு தட்டுகிறது. முடிந்தவரை ஓடவேணும். பண்ணை ஆட்களிடம் பிடிபடாமல் ஓடவேணும். மூத்திரம் பெய்து முடித்த பத்தாவது நாழிகையில், கங்காணி கறுப்பன் இவனில்லாததைக் கவனித்திருப்பான். நாய்களும், பண்ணை ஆட்களும், குதிரை வீரர்களும் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்துவிட்டுக் காடுகளை நோக்கியே ஓடிவருவார்கள். இப்போதைக்கு ஓடவேணும். இலக்கிலாமல் ஓடுகிறான். எங்கே? எவ்விடத்திற்கு? யோசிக்கும் நேரமா இது? சாவு நெருங்கும்வரை ஓடவேணும். சித்திரவதைகளைச் சந்திக்காமல் செத்துப்போகவேணும். இப்போதைக்கு அவனது புத்தி ஓடச்சொல்லி வற்புறுத்துகிறது. கால்கள் பின்புறம் இடிபட, தலைதெறிக்க ஓடுகிறான். பெரிய வேரொன்று, பூமியிலிருந்து நன்கு பெயர்ந்து குறுக்காக நீண்டிருக்கிறது. காத்தமுத்துமேல், அதற்கு என்ன வன்மமோ, வேகமாய்ப் பதிந்த கால்களை இடறுகிறது,  அடுத்தகணம் இடப்புறம் அடர்ந்திருந்த முட்புதரில் தலைகுப்புற, விழுந்திருந்தான்.

          சாவு நிர்ப்பாக்கியமாய் சம்பவிக்கவேண்டுமென்று அவன் மனது கேட்க்கிறது. ஆனால் அதற்கான தைரியம் காணாமலிருந்தான். சாவு எந்தப்படிக்கு வேண்டுமானாலும் இருக்கலாம்: விழிகள் பிதுங்க, நாக்கைத் தொங்கவிட்டு, கழுத்துப் புடைக்க, தாம்புக் கயிற்றில் புளியமரத்தில் ஈமொய்க்கத் தொங்கிய வீராச்சாமியும், ஒர் உச்சிவேளையில் மூன்றுமுலை மலையின் அடிவாரத்திலிருந்த நீர்ப்படுகையில் குதித்து நான்கு நாட்களுக்குப் பிறகு வெளுத்து உப்புசம்கண்டு மிதந்த கதிரேசனும், ஞாபகத்தில் வந்துபோனார்கள். ஏன்?துரைத்தனம் பண்ணிய கறுப்பனை, கரும்பு வெட்டும் சூரிக்கத்தியால் சாய்த்துப்போட்டு, தப்பித்து ஓடி, பிடிப்பட்ட மரூன் மஸெரியின் முடிவுகூட ஒரு வகையிலே, தற்கொலை என்றுதான் கொள்ளவேணும்..

          காத்தமுத்துக்கு எப்போது தீவுக்கு வந்தோமென்று ஞாபகமில்லை. ஆனால் வந்த வயணமும் அனுபவமும் மனசுல கல்லுல செதுக்கினமாதிரிக் கிடக்கிறது. காற்றுமழையின் காரணமாக, துறைபிடிக்க முடியாமல் இவன் வந்த கப்பல், நாலஞ்சு நாள் தாமதிச்சு நங்கூரம் போட்டிருந்தார்கள். கப்பல்கள் பாயெடுக்கும்போதும், துறைபிடிக்கும்போதும் குண்டுகள் போடுவார்களெனக் கிராமத்தில்வைத்துக் கேட்டிருக்கிறான். புதுச்சேரியில் இவனது கப்பல் பாயெடுத்தபோது குண்டுபோட்டிருக்கலாம். இவனையும் மற்றவர்களையும் சரக்குக்கட்டுகளோடு ஏற்றியிருந்ததால் குண்டுபோட்டது கேட்காமற் போச்சுது. கடல் சீர்பட்டபிறகு, புதுச்சேரியில் கண்ட சலங்குமாதிரியான படகொன்றில், இவனையும் சேர்த்து, பத்துநபர்களை முன்னே தள்ளி… “வீத்.. வீத்” (சீக்கிரம்.. சீக்கிரம்..)என்று கூச்சலிட்டுக் கொண்டுபோய் கடற்கரையில் நின்றிருந்த ஐய்யாமாரிடம் சேர்த்துப்போட்டார்கள்.

          காத்தமுத்துவும் மற்றவர்களும் ஒன்றைரைமாதக் கடல்யாத்திரையில் ஆரோக்கியத்தைத் தொலைத்திருந்தார்கள். எலிப்புழுக்கை மிதந்த சோற்றுக்கஞ்சியைக் குடிக்காமல் பாதி நாட்கள் குலைப் பட்டினிக் கிடந்திருக்கிறான். மற்றவர்களின் நிலமையையும் அந்தப்படிக்கென்றுதான் சொல்லவேணும். படகிலிருந்து தீவில் இறக்கப்பட்ட இரவில், கடலலைகளின் இரைச்சலும், பூதகாரமாய் நின்றிருந்த மலைகளும், நிழலாய் அடர்ந்திருந்த மரங்களும், அவனை மிகவும் பயமுறுத்திப் போட்டதென்றே சொல்லவேணும்.

          அங்கிருந்து, இராத்திரியோடு ராத்திரியாக ஒரு மாட்டுவண்டியில் இவர்களை வாரிப்போட்டுக்கொண்டு வரும்வழியில், இவனோடு வண்டியிலேற்றப்பட்ட ஒரு பெண்மணி மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு, “எம்மவளைக் காணோம், எம்மவளைக் காணோம், வண்டியை நிறுத்தவேணும் சாமி.. தயவுபண்ணவேணும் சாமியென்று ஒப்பாரிவைக்கிறாள். வண்டியோட்டியும், வண்டியிலிருந்த இரண்டு கறுப்புமனிதர்களும் நிர்ச்சிந்தையாய் இருக்கின்றார்கள். காத்தமுத்துக்கு மட்டும் மனத்திற்குள் அவளது வியாகூலம் தொற்றிக்கொள்கிறது. ஓரிடத்தில் அப்பெண்மணி வண்டியினின்று குதிக்க எத்தனித்தபோது, இவந்தான் அவளைத் தடுத்தான். வண்டியோட்டி, “உனதுபெண் கப்பலிலேயே  இருக்கவேணும், கரைவரை வந்திருந்தால் நமது வண்டியில் வந்திருக்கவேணுமென” சொன்னபோதும் அவள் புலம்பல் ஓயவில்லை. வழிமுழுக்க அழுதழுது, அவளுக்கு இழுப்பு கண்டிருந்தது. வண்டியில், நான்குகல் கிழக்காக காட்டுப் பாதையைக் கடந்து, ஒரு கொட்டடியை அடைந்தார்கள். பாகூர்ல உடையார் வீட்டுத் தொழுவத்தைவிட பெருசாய் தெரிந்தக் கொட்டடி. அர்த்தராத்திரியைக் கலைக்கின்ற வகையில் இரட்டைக்கதவுகள் ஊளையிட்டுக்கொண்டு திறந்துகொள்ள அதனுள்ளே தள்ளிப்போட்டு, மீண்டும் “வீத்..வீத்” என கூச்சலிடும் முரட்டு மனிதர்கள். கருப்பந் தட்டைகளும் கோரைப்புற்களும் இறைந்துகிடந்தன. திடீரென்று லாந்தர் விளக்கொன்றினைப் பிடித்தவனின் சிவந்த கண்கள். கொட்டடி முழுக்கப் பொதிகள், சிப்பங்கள். இவர்களைக் கண்ட மாத்திரத்தில் பொதிகளும் சிப்பங்களும் சனங்கள் சகலருமாக, குஞ்சு குளவான்களுடன் எழுந்து உட்காருகிறார்கள். கிழிந்த ஆடைகள், அழுக்கு முகங்கள், பீளைவழியும் கண்கள், எச்சிலொழுகிய வாய்கள்; ஊத்தை மனிதர்களாய் இவனது தமிழினம்.

          லாந்தர் பிடித்தவன் மீண்டும் இவனுக்குப் புரியாத தொரைத்தனத்தார் பாஷையில் என்னவோ சொல்கிறான். இரு கைகளைத் தட்டி என்னவோ புரியவைக்கிறான். பழைய உயிர்கள் வந்த உயிர்களைப் பார்க்கின்றன. காத்தமுத்துவும்,,பெண்மணியும், மற்றவர்களும் அவர்களை நெருங்குகிறார்கள். இனி, இரு தரப்பினரும், ஒருவர் மற்றொருவருக்குத் தாய் தகப்பன், பந்து சனங்கள், தம்பி, தமையன், உடன்பிறந்தார் என்று விளங்கிக் கொண்டான். இவனது விதி, கூடவே வந்திருக்கவேணும் என்று புரிந்தது. எப்படி எப்போது தூங்கிப்போனான் என்று தெரியாது. பயணக்காலமும், பயணம் செய்த வகையும், அடிச்சுப் போட்ட களைப்பில் குறட்டைவிட்டுத் தூங்கிப் போனான். அதிகாலையிலே காத்தமுத்துவும், மகளைத் தொலைத்திருந்த பெண்மணியும், மற்றவர்களும் எழுப்பப்பட்டார்கள்.

அதற்கப்புறம் பக்கத்திலேயே, கரும்புப் பண்ணையிலே வேலையென்று அழைத்துச் சென்றார்கள். நாலுமுழவேட்டியை அவிழ்த்துவிட்டு அவர்கள் கொடுத்த நீலநிற நீண்ட காற்சராயைப் போட்டுக்கொண்டு பாதங்களில் துணியைச் சுற்றிக்கொண்டு, கரும்புகளை வெட்ட ஆரம்பித்தபோது, சுலபமாகத்தானிருந்தது. ஆனால் சுணங்காமல் தொடர்ந்து வெட்டவேணுமென்று ஒருவன் காட்டுக் கூச்சலிட்டபோது இடுப்பிலும், தோளிலும் விண் விண்ணென்ற வலி. நிமிர்ந்தான். முதுகில் சுளீரெனச் சாட்டையடி. விழுந்தது. வலி பொறுக்கமுடியாமல் கீழேவிழுந்தவனை, எழுந்திருக்க வைத்து, கறுப்புக் கங்காணி மீண்டும் சாட்டையைச் சொடுக்கினான். பக்கத்திலிருந்தவர்கள் எதுவுமே நடாவாததுபோல் கரும்பு வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். தூரத்திலிருந்த பறங்கியன் சிரிக்கிறான். கருப்பங்கழிகளை பிடித்து ஓய்ந்திருந்த இடதுகை எரிந்தது. உள்ளங்கையைப் பார்க்கிறான். கரும்பின் அடிக்கட்டைச் சோலைகளும், கணுக்களும் கிழித்ததில் தசைப் பிசிறுகளுடன் இரத்த வரிகளை இட்டிருக்கின்றன. மீண்டும் முதுகில் சுளீரென்று விழுகிறது.. இம்முறை சில்லென்று ஆரம்பித்து, பிறகு உஷ்ணத்துடன் திரவம் பரவுகிறது. முதுகிலும் இரத்தமாக இருக்கலாம்.

          சொந்த மண்ணுல, கிராமத்துல, உடையார் ஆண்டை எப்போதும் இப்படி அடிச்சதில்லை. அப்படியே அடிச்சிருந்தால்கூட. மஞ்சளை இழைச்சு வீரம்மா பத்துப் போட்டா, மறுநாள் வீக்கங்கள் காணாமப் போயிடும். ஒருமுறை சித்திரை மாசத்திலே, பதினெட்டாம்போர் தெருக்கூத்தை விடிய விடிய பார்த்துட்டு, குடிசையிலே கொஞ்சம் கூடுதலாகத் தூங்கப்போக, வீட்டெதிரே இருந்த தென்னைமரத்துல கட்டி வச்சு  உடையார் அடிச்சதா ஞாபகம். இரண்டாவது முறை, மூத்த மவன் ஏகாம்பரம் சரீர சொஸ்தமிலாமல் பிராண அவஸ்தை கண்டு, மல ஜலம் படுக்கையிற் போக, உள்ளூர் வைத்தியர் ஐயா, “கோழி கொண்டுவந்து சுத்தியும், சோறு சுத்திப்போட்டும் கழிப்பு கழிக்கிறதென்று சொல்லி, ஒரு கவுளி வெத்திலையும் அரை பலம் பாக்கும், ஒத்தைப் பணமும்” கொண்டுவாடான்னு சொன்னபோது, ஆபத்துக்குப் பாவமில்லைண்ணு உடையார் ஆண்டையிடம் சொல்லாம பக்கத்துப் பண்ணைக்கு, ‘அண்டை’ வெட்டப் போயிருந்தான்.,குடிசைக்குத் திரும்பினால், ‘பெரிய ஆண்டை, உன்னை உடனே வரச்சொன்னாருன்னு” வீரம்மா, புகையிலைச் சாற்றைத் துப்பியபடி சொல்கிறாள் அன்றைக்கும் இப்படித்தான் அடிபட்டிருக்கான்.

          கண்காணாத தேசத்துல இருந்த, அவனது பெண்ஜாதி வீரம்மா ஞாபகத்திற்குவந்தாள். புதுச்சேரி வெள்ளைக்காரன்கிட்ட பஞ்சத்திற்கு விற்றிருந்த, பிள்ளைகள் ஞாபகத்திற்கு வந்தார்கள். தான் ‘படியாளாக’விருந்த, கம்பத்துக்காரர் உடையார் ஞாபகத்திற்கு வந்தார். அவர் சகதர்மிணி மனோரஞ்சிதம் அம்மாள் ஞாபகத்திற்குவந்தாள். கடைசியாக சேரியின் பச்சைவாழியம்மன் ஞாபகத்திற்கு வந்தாள். திரும்பவும் அவர்களையெல்லாம் பார்ப்போமா? என்று நினைத்து அழுதான்.

          “தீவில் சாதியில்லை, எஜமான், பண்ணையாள்னு பாகுபாடு கிடையாது. இந்த ஊர்லதான் வேதத்துல விழுந்தவங்ககூட வித்தியாசங் காட்டறாங்க. அங்கபோனா எல்லோரும் சமமாம், வயிற்றுக்குச் சாப்பாடு, கட்டிக்கத் துணி எல்லாத்தையும் குடுத்து கவுர்தையாய் நடத்தறாங்களாம்”, தொரைமாருங்கக் கிட்ட சேவகம் பண்ணும் தேவராசன் சொன்னா சத்தியவாக்காதான் இருக்கும்னு மனசு சொன்னது. எரவாணத்தில் ஒட்டியிருந்த கெவுளி ‘நச் நச்’ன்னு நாக்கை அண்ணத்திற் தட்டி ஆமாம் போட்டுச்சுது..ஆனால் வீரம்மாவுக்கு விருப்பமில்லை. அவள் யோசனையைக் கேட்டு, கூழோ கஞ்சியோ ஊத்தறதைக் குடிச்சிட்டு தொழுவ சாணியும், ஏரும் கலப்பையுமா அவனுடைய முப்பாட்டன் வழியில் உடையார் ஆண்டை காலில் விழுந்து கிடந்திருக்கலாம். உள்ளூர் மாரியம்மனுக்கு ஆடிமாசத்துலக் கூழு, புதுச்சேரி மாசிமகம், மயிலத்துல பங்குனி உத்திரம்னு வருஷம் ஓடியிருக்கும். வந்திருக்க வேண்டாம். வரும்படியான சந்தர்ப்பம் ஏற்பட்டுப்போச்சுது.

          காத்தமுத்துக்கு பூர்வீகம், புதுச்சேரிக்கிட்ட பத்து பதினைஞ்சு கல் தள்ளியுள்ள பாகூர். தலைமுறை தலைமுறையா ஆஸ்திபாஸ்தியுள்ள உடையார் வீட்டிலே படியாள் சேவகம்.  வெள்ளி முளைக்கும் வேளையில், மற்ற சேரிவாசிகளைப் போலவே புருஷனும் பொண்டாட்டியும் கம்பத்து வேலைக்கு வந்தாகவேணும். காத்தமுத்து தும்பை அவிழ்த்து மாடுகளை இடம்மாற்றிக் கட்டிவிட்டு, உடையார் வீட்டு நஞ்செய்க்கோ புஞ்செய்க்கோ காத்திருக்கின்ற வேலைக்குப் பேகவேணும். பெண்ஜாதி வீரம்மா, சாணி நிலைகளைக் கூடையில் வாரிக்கொண்டுபோய், குப்பையில் சேர்த்துவிட்டு, மாட்டுமூத்திரமும், சாணமும் கலந்த புழுதியைப் பெருக்க ஆரம்பிப்பாள். நெய் மணக்கச் சோறும் கறியுமா, போஜனம் முடித்த வாழை இலைகளைப் பின்வாசல் வழியாக வெளியே எறிந்து ஓய்வெடுக்கும் நேரங்களில், உடையார் சம்சாரம் மனோரஞ்சிதம் அம்மாளுக்கு, வீரம்மா ஞாபகம் வந்தால் குடத்தில் எஞ்சியிருக்கும் கம்பங் கூழையோ, கேழ்வரகுக் கூழையோ காந்தலுடன் கொண்டுவந்து மட்டையில் ஊற்றுவாள். மிச்சமிருப்பதை காத்தமுத்துக்கான கலையத்தில் ஊற்ற, வீரம்மாள் ஓட்டமும் நடையுமாக கொண்டுவருவாள். இவன் வரப்பில் உட்கார்ந்து கொண்டு பசியாறும் அழகை, கட்டெறும்புக் கடிகளுடன் பக்கத்திலிருந்து ரசிப்பாள்.

          பால் பிடிக்காத நெற்கதிர்மாதிரி காத்தமுத்து வெளுக்க ஆரம்பிச்சான். வழக்கம்போல சாமியாடி, வேப்பிலையால மந்திரிச்சுப்போட்டு, விளக்கு வச்சுப் பார்த்ததிலே, “உருமத்துல கன்னிமார் அறைஞ்சிருக்கிறா, பொங்கவச்சி கழிப்பு எடுக்கணும், வெடைக்கோழி காவு கொடுக்கவேணும்.”.என்று சொல்லிப்போட்டு தட்சணை கேட்கிறான். காத்தமுத்துவ அறைஞ்சிருப்பது, கன்னிமார் சாமி இல்லை மனோரஞ்சிதம் சாமின்னு வீரம்மாவுக்குந் தெரியும், சேரிக்குந் தெரியும், உள்ளூர் சாமியாடிக்குந் தெரியும். மனோரஞ்சிதம்அம்மாளுடன் காத்தமுத்து சந்தைக்கும், புதுச்சேரி, கூடலூர், வில்லியனூரென அவள் போகவேண்டுமென்று நினைக்கின்ற ஊர்களுக்கும் வில் வண்டியைப் பூட்டிக்கொண்டு போய்வருபவன் என்பது ஊரறிந்த சேதி. வண்டியை வழியில் நிறுத்தி பசியாற உட்கார்ந்த வேளைகளில் அந்த அம்மாள், காத்தமுத்துவை அழைத்துச் சோற்றுருண்டைகளை உருட்டிப் போட்டு உரச ஆரம்பித்தாள். அவளுக்கு நெய்ச்சோறு கண்ட உடம்பு.. இருட்டு நேரங்களில் ஓடைவெளி, வைக்கோல் போர், மாட்டுத் தொழுவம் எனஇருவரும் ஒதுங்கியது போக, உடையார் இல்லாத நேரங்களில் சகல சம்பிரமத்துடன் எதிர்கொண்டு, கூடத்தில் அழைத்து பாயையும் விரிப்பாள்.

          இந்த விவகாரம் சேரியில் புகைய ஆரம்பிக்க, வீரம்மாளுக்குப் பேதி கண்டது.

“வேணாம் சாமி.. நமக்கு ஏன் பெரிய இடத்துப் பொல்லாப்பு. அவ ஏதோ குண்டி கொழுத்து அலையறான்னா, நீயும் கார்த்திகை மாசத்து நாய்மாதிரி நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு போற.. நாளைக்கு அந்தாளுக்குச் தெரிஞ்சா வகுந்துடுவான். பெரிய குடும்பத்துக்காரனெல்லாம் ஒண்ணா சேந்துடுவாங்க. புதுச்சேரி தொரமாருங்க கோன்சேல் ஆக்கினை வயணம், சனங்கள் பார்க்க தூக்கில் போடுவார்கள். நான் ரெண்டு புள்ளைக¨ளை வச்சிட்டு என்ன செய்வேன். வேணும்னா நாம்ப புதுச்சேரிக்குப்போய், தொரைமாருங்கக் கிட்டச் சேர்ந்து பொழைச்சிகலாம்யா”.

வீரம்மாள் புலம்பலில் நியாயம் இருந்தது. ஆனாலும், தினைச் சோறும், புளிக்குழம்பும், மனோரஞ்சிதம் அம்மாளின் மீசைமுளைத்த கருஞ்சிவப்பு உதடுகளும், வீரம்மாளுக்கில்லாத மார்பு வளப்பமும், பெரிய இடுப்பும் அவன் மனதில் பாரதக் கூத்தில் பார்த்த சந்தனு மகாராஜா செம்படவப் பெண்ணிடம் கொண்டிருந்த பிரேமையை ஏற்படுத்தலாச்சுது..

          இந்தக் கூத்தெல்லாம் ஒரு பங்குனி மாசத்திலே முடிவுக்கு வந்தததென்று சொல்லவேணும். பக்கத்து ஊருலே அங்காளம்மன் திருவிழா. உடையாருடைய கிழக்குவெளிக் கார்த்திகைசம்பா அறுவடைமுடிந்து கட்டுகளாகக் களத்துமேட்டில் கிடக்கிறது. ‘கோட்டை அழிப்பைப் பார்த்துட்டுச் சடுதியிற் திரும்பலாம்’ என்ற எண்ணத்திற் கிளம்பியவனை, தோட்டக்கால் பக்கம் தடுத்து நிறுத்தியவள், மனோரஞ்சிதம் அம்மாளின் எடுபிடி, அம்புஜம். “அம்மா வரச்சொன்னாங்க ” என்று ஒரு வார்த்தையில் ஆக்கினை பண்ணிப்போட்டு, மறைந்து போனாள். மனோரஞ்சிதம் அம்மாளைத் தேடிப்போனவனுக்கு, உடையார் வாங்கிவந்திருந்த காரைக்கால் அல்வாவும், அவள் கைப்படச் செய்த எண்ணை பணியாரமும் கிடைத்தது. ஆசைநாயகன் தின்று முடிக்கவேண்டுமென காத்திருந்ததுபோல, மனோரஞ்சிதம் அம்மாள் அவசரப்பட்டாள். இவனது எண்ணமெல்லாம் முறமெடுத்து ஆடும் காளிமீதும், களத்துமேட்டில் உள்ள கட்டுப்போரிலும் கிடந்தது. ஆர்வமில்லாமலே தழுவினான். சில நாழிகைகள் கடந்திருக்கும். இவர்கள் சேர்ந்திருந்த அறையின் கதவு எட்டி உதைக்கப்பட, படீரென்று திறந்துகொள்கிறது. நிலைப்படியை அடைத்தவாறு மல்வேட்டியை மடித்துக் கட்டியவண்ணம் உடையார்.

“எச்சில் நாயே..” என்பதைத் தொடந்து ஏராளமாய் வசவுகள். அவரைப் பிடித்துக் கீழே தள்ளிப்போட்டு ஓடியவன். விடிவதற்கு ஒரு சாமமிருக்கையில், புதுச்சேரியில், சாவடித் தெருவில் வசித்த தேவராசனை அவன் வளவில் கண்டு, காலில் விழுந்தான்.

நடந்த வர்த்தமானங்களை முழுவதுமாகத் தேவராசனிடம் தெரிவித்து, “அண்ணே.. நான் எங்கனா கண்காணாத தேசத்துக்குப் போகவேணும். நீர் தயவுபண்ணித் தீரவேணும்” என்று மிகுதியும் வருந்திக்கொண்டு சொன்ன விதத்திலே, தேவராசன் அனுகூலம் செய்வானென்று காத்தமுத்து மெத்தவும் நம்பிக்கைவைத்தான்.

‘நாளைக் காலமே.. பாகூர் உடையார் புதுச்சேரியிலதான் நிற்பார். அவருக்கிங்கு பெத்ரோ கனகராய முதலியார், ஆனந்தரங்கப்பிள்ளை, சுங்கு சேஷாசல செட்டியென இன்னும்பல வேண்டப்பட்ட பெரிய மனுஷர்கள் உண்டு.. உன்னை கோட்டைவாயில்ல தூக்கிலிட்டாலும் ஆச்சரியமில்லை. இந்த இக்கட்டுலேயிருந்து தப்பிக்கவேணுமென்றால், அடுத்தகிழமை கப்பல் ஏறவேணும். ஆனால் அக் கப்பலுக்கு தேவையானபேர் இருப்பதாலே, உன்னை அனுப்பிவக்க முடியுமென்று உறுதியில்லை.”- என்று வயிற்றில் புளியைக் கரைத்தான் தேவராசன்.

          -அப்படிச் சொல்லவேணாம் சாமி. காலத்துக்கும் உனக்கு அடிமையாக் கிடப்பேன். எப்பாடுபட்டாவது ஏத்திடவேணும்.

          – நீ ஒரு மாசத்திற்கு முன்னே சொன்னால் ஒரு பிரயாசையுமில்லை. இப்போது ரொம்ப சிரமம். உனக்குக் கிடைக்கும் இருபது வராகனில் என் பங்காகப் பத்து வராகன் கணக்குத் தீர்த்தால், உன்னை மஸ்கரேஞ்க்கு (Mascareignes) போகின்றக் கப்பலில் ஏற்பாடு பண்ணலாம்.

          “நீங்க பிரயாசைப்பட நன்றி நான் மறக்கிறதில்லை. அதறிந்து நடந்து கொள்வேன்” என்று உபசாரமாய்க் காத்தமுத்து சொல்லிப்போட அன்றிரவே ஒரு துரைமார் வீட்டுல கொண்டுபோய் தேவராசன் சேர்த்தான். அங்கு ஒருவாரம் இவனை வேறு சிலரோடு அடைத்துவைத்து, ஒரு நாள் ராத்திரி, இரண்டு சாமத்திற்குப் பிறகு, சலங்கில் இவர்களை ஏற்றிக்கொண்டுபோய் புடவைக் கட்டுகள் ஏற்றின கப்பலில் அடைத்து, அங்கிருந்து மாஹே சென்று மிளகு ஏத்திக்கொண்டு சீமைக்குச் செல்லும் வழியில், இவர்களைப் பிரெஞ்சுத் தீவில் இறக்கிப்போட்டார்கள்.

          இவ்விடத்தில் வந்ததினத்திலிருந்து முப்பொழுதும் நின்றால், உட்கார்ந்தால், வேலையில் சுணக்கமென்றால் முதுகில் சுளீர் சுளீரென சாட்டையினால் விளாசுகிறார்கள். அவற்றைத் தாங்குவதற்கு இனியும் அவன் சரீரத்திற்குத் தெம்பில்லை. இவனருகில் கரும்பு வெட்டிக்கொண்டிருந்த மற்ற கூலிகளுக்கு அடிகள் பழகியிருந்தன. அவர்கள் வேக வேகமாகக் கரும்பினை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவனுக்கு இடுப்பில் முள் குத்துவதுபோல வலியெடுக்கத் தொடங்கி, முதுகுத்தண்டில் சிவ்வென்று மேல் நோக்கி நகர்ந்து இருபுரமும் சமனாய் இறங்குகிறது. முதுகு முழுக்க கன்றிப்போய், திகுதிகுவென்று எரிகிறது, இரண்டொரு ஈக்கள் எப்படியோ மோப்பம்பிடித்து, முதுகை வட்டமிடுகின்றன. உட்கார்ந்து விட்டான். பார்த்துவிட்ட கறுப்பன் – கங்காணி ஓடிவந்தான். சாட்டையை மறுபடியும் சொடுக்கினான். அவன் கைகளைப் பாம்பு பிடுங்க. கயிற்றில் நுணியில் இறுக்கியிருந்த தோற் பின்னல் இவனது முதுகுப்பரப்பின் புண்ணை ருசிபார்த்தவண்ணம் முடிந்தவரை ஓடி மீண்டது. சுருண்டுவிழுந்தான்.

          –  ம்.. எழுந்து வேலையைப்பாரு. நான் மறுமுறை வருகின்றபோது, இந்தத்திட்டை நீ முடித்திருக்கவேணும்”- வளர்ந்து சாய்ந்துக் கிடந்தக் கரும்புகளைக் காட்டிவிட்டு ஓடிப்போனான்.

          அவன் ஓடுவது, எதற்காகவென்று காத்தமுத்து அறிவான். மற்ற அடிமைகளும் அறிவார்கள். மூத்திரம் வரும்போதெல்லாம் இப்படித்தான் பதறிக்கொண்டு ஓடுவான். தீட்டுப்பட்டபெண்ணிடம் படுத்து அவதிப்படுவதாகப் பண்ணை முழுக்கப்பேச்சு. மூத்திரம்பேய கனக்க நேரம் எடுத்துக்கெள்வான். அவனுக்குச் சுலபத்தில் மூத்திரம் வராதென்று சொல்ல கேட்டிருக்கிறான். காத்தமுத்து இதற்காத்தான் காத்திருந்தான். அவன் மறையும்வரைக் காத்திருந்தான். பாவாடைராயன், அங்காளம்மா, மாரியாத்தா, காத்தவராயனென கிராமத்தில் அவன் நெருங்கி பொங்கவைக்க முடிஞ்ச சாமிகளை நேர்ந்துகொண்டான்.

          மேலே கழுகொன்று பறந்து கொண்டிருக்கிறது……. வெட்டப்படாத கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்தான், மேற்கு திசையைக் குறிவைத்து ஓடினான். முதுகைக், காய்ந்திருந்த கருப்பங்கழிகள் கிழிக்கத் தொடங்கின. சாட்டை அடிகளுக்கு இது தேவலாம் என்றிருந்தது. ஓடிமுடிக்க இடப்புறம் மரங்கள் அடர்ந்திருந்தன. நிம்மதியாய் நின்று மூச்சுவாங்கிக்கொண்டான். அடர்ந்திருந்த மரங்களுக்குட் புகுந்து ஓடினான். ஓட ஓட விருத்தியாய், முன்பொருமுறை மார்கழிமாசத்திலே மேற்காலே கண்ட வால்முளைத்த நட்சத்திரம் மாதிரி அடர்த்தியானமரங்கள், முட் புதர்கள் மூங்கிற்புதர்கள் என இவனுக்குமுன்னே ஓடிக்கொண்டிருக்கின்றன..

_________________________________________________________________________

பதினெட்டாம் நூற்றாண்டு

                               அலை-18

…..

Wherever you go, cold, important and deceitful,

You will bring trouble                                                   

Les Oracles -Alfred de VIGNY

நாள் விழித்துக்கொண்டது. காலைச் சூரியன் மரங்களுக்குக் கொடுத்ததுபோக எஞ்சிய ஒளியை மண்ணுக்கும் தயவுபண்ணியிருந்தான்.காத்தமுத்துவை எறும்புகள் மொய்த்திருந்தன. மண்ணிற் கிடந்தற்கு அடையாளமாக உடல் முழுவதும் அடையடையாய் நெருஞ்சி முட்கள். கசையடிப் புண்கள் கருஞ்சிவப்பிற் கனிந்து, அவற்றின் கொப்புளங்களில் நீர்வடிகின்றது. அவற்றைச் சீண்டி வேதனைப் படுத்தும் ஈக்களை விரட்டி அலுத்துபோனான். எழுந்து நிற்க முயற்சித்தான், நின்றான்,  விழுந்தான். இயற்கை உபாதை, சுதந்திரமாய் மலசலம் போகவேணும் போலிருக்கின்றது. போகிறான்.

          இனி, அவன் எவருக்கும் அடிமை இல்லை. கையிற் பிரம்பும், சிவந்த கண்களுமாய் குதிரையிற் வலம்வருகின்ற பறங்கியர்கள் இங்கில்லை. கசையும், கெட்ட வசவுகளுமாய், அடிமைகளைப் பிழியப் பழகிய கறுப்பு கங்காணிகள் இங்கில்லை. தங்கள் கள்ள புருஷனைப் பல்லக்கில் சுமந்துவரப் பணிக்கின்ற துரைசாணி அம்மாக்கள் இங்கில்லை. மிசியேக்கள் இல்லை, மதாம்கள் இல்லை, எஜமான்கள் இல்லை, எஜமானிகள் இல்லை. ஐயாமார்களோ, ஆண்டைமார்களோ இல்லை.. இல்லை.

          அதோ சலசலவென்று ஓடிக்கொண்டிருக்கிறதே, அந்த ஆற்றினைப்போல நிற்காமல் காட்டின் அடுத்தமுனைவரை இவன் இப்போது ஓடலாம். கேட்பாரில்லை. இவனைச் சந்தோஷபடுத்தவென்று ஒரு குரங்கும் அணிலும் அவ்விடம் கட்டுப்பாடின்றி ஓடிவிளையாடுகின்றனவே, அவற்றைப் போலவும் ஓடலாம், தடுப்பாரில்லை. சொந்தத் தேசத்தில் பார்த்திராத விசித்திரமான மரமொன்றில், தவிட்டுப் புறாவொன்று கிளைகிளையாய்ப் பறந்துசென்று உட்காருவதும் எழுந்திருப்பதுமாய் வேடிக்கைக் காட்டுகிறது. அதனைத் தலைசாய்த்துப் பார்த்துவிட்டு இளம் பச்சைக்கிளியொன்று இறக்கைகளை உதறுகின்றது. கறுவண்ண இறகுகள் கொண்ட வெண்குருவியொன்று, பப்பாளிமரத்தின் கனிகளைக்கொத்தி அலகிலெடுத்து மிகத்தாழ்வாகப் பறந்து பின்னர் மேலேபோகிறது. கைகளையும், கால்களையும், கங்காணியின் அனுமதியின்றிச் சுதந்திரமாய் இனி அசைக்கமுடியும் என்பதை நினைக்கச் சந்தோஷம். மெல்ல அடியெடுத்து, தன் வலி மறந்து ஓடிப் பார்க்கிறான். தலையில் இடித்த கிளையை உடைத்து அலட்சியமாகத் தூக்கி எறிகிறான். காய்ந்து கிடந்த தேங்காயொன்றை எட்டி உதைக்கிறான். காற்றுச் சுழன்று சுதந்திரமாய் வீசுகிறது. காம்புகளோடு சிவப்பும், ஊதாவுமாய் மலர்கள் சுதந்திரமாகத் தலைகுனிந்து நிமிர்கின்றன. ஆவலாய்ப் பறந்துவரும் வண்டுகள் அம்மலர்களில் அமர்ந்து, வயிறுமுட்டத் தேன்குடிக்க, இவனுக்கும் பசி. வரப்பு நண்டுகளைப் பிடித்து வீரம்மா வைக்கும் சாறும், நத்தை கறியும் ஞாபகத்தில்வர, எச்சில் ஊறுகிறது. அருகிலிருந்த ஈச்சங்கன்றைப் பலங்கொண்டமட்டும் ஆட்டிப் பிடுங்குகிறான். அவற்றைப் பிய்த்துபோட்டு குருத்தினைத் தின்று, தண்ணீர் குடிக்கிறான்.

          திடீரென்று பயம் வந்துவிட்டது. வேட்டை நாய்களும், கறுப்பர்களும், வெள்ளை சிப்பாய்களுமாக துரத்தி வரும் மனுஷர்களிடம் இவன் எப்படி தப்பப் போகிறான் என்கின்ற பயம். கறுப்பர்களால் பண்னைகளிலிருந்து தப்பவும், காட்டில் மறைந்துவாழவும் முடியும். அவர்கள் பிடிபடாமலிருந்தால் அடுத்துள்ள தீவுகளுக்குத் தப்பித்துப் போவதும் நடக்கலாம். தன்னாலப்படிக் காட்டில் மறைந்து வாழ முடியுமோ? விஷஜந்துக்களிடமிருந்து தப்பிக்க வேணும். விலங்குகளிடமிருந்து தப்பிக்க வேணும். நரமாமிசம் சாப்பிடுகின்ற கறுப்பர்களிடமிருந்துத் தப்பிக்கவேணும். அப்படிய தப்பிக்க முடிந்தால், காட்டில் கிடைப்பதை உண்டு உயிர்வாழத் தெரியவேணும். எத்தனை நாட்களுக்கு, எத்தனை மாதங்களுக்கு, எத்தனை மாமாங்கத்திற்கு,  முடியுமா?  ஏதோவொரு வேகத்தில் கசையடிகளுக்குப் பயந்து காட்டுக்குள் புகுந்தாகிவிட்டது. இனி எங்கே போவது? எப்படிப் போவது? இவன் பண்ணையிலிருந்து தப்பியவொரு அடிமை. இனி தீவுடைய சட்டதிட்டத்தின்படி, இவனுக்கு மரூனென்கிற பேரு. பிடிபட்டானென்றால், இரண்டு காதினையும் அறுத்து கொட்டடியில் அடைத்துக் கஞ்சி தண்ணி காட்டாமே, உசுரிருந்தால் மீண்டும் நாள் முழுக்கக் கரும்புவெட்டவும், கசையடிகளுக்கும் பழகிக்கச் சொல்வார்கள்.     சாமி கண்ணைத் தொறக்கணும். ‘அஞ்சு வருஷம், தீவுல காலந்தள்ள முடிஞ்சா பணம் பவுஷோட நாடு திரும்பலாம்னு’ புதுச்சேரியிலவச்சு, தேவராசன் சொன்னவன். கிட்டங்கிச் சுவற்றில் இவன் கிழித்திருந்தக் கோடுகள் பிரகாரம், இரண்டு அஞ்சு வருசம் வந்துபோச்சுது. இவனுக்கு முன்னாலே தீவுக்குவந்ததாகக் கேள்விபட்டிருந்த கொத்தனார் சின்னப்பனையோ, தச்சுவேலைசெய்யும் ஆசாரி முருகேசனையோ இதுவரைக்கும் பார்த்ததில்லை. தன்பெண்பிள்ளையைத் தொலைத்துப்போட்டு சதா சிந்தியமூக்கும் அழுத கண்ணுமா இருந்த ஸ்த்ரீயையும் மற்ற புதுச்சேரி சனங்களையும்கூட முதல் நாள் பண்ணையில்வைத்துக் கண்டதுதான், அதற்கப்புறம் பார்க்கமுடியாமற் போச்சுது. தீவுக்குக் களவாய் அழைத்துவந்தவர்களைக் கடேசிவரைக்கும் திருப்பி அனுப்ப மாட்டார்களாம். இன்னும் கொஞ்ச காலம் தலையெழுத்தேன்னு ஊரு பண்ணையிலேயே கிடந்திருக்கலாம். எப்பேர்பட்ட காரியம் பண்ணிப்போட்டேன். கோவிந்தா….! இனிப் பெண்டாட்டி பிள்ளைகளைப் பார்க்கவே முடியாதோ?

          கீச்சு.. கீச்சென்ற சத்தம். பெரியமரமொன்றில் ஒரு குருவிக்குடும்பம். தாய்க்குருவி கொடுக்கின்ற இரைக்காகப் போட்டிபோடும் குஞ்சுக் குருவிகள். அலகினைப் பிளந்து அவைகளிடும் குரல் இவனுக்காய் இருக்குமோ? தாய்க் குருவி வீரம்மாவென்றும்? குஞ்சுகள் பிள்ளைகளென்றும் நினைப்புவந்து நெஞ்சை அடைக்குது. தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான். வீரம்மாவையும் பிள்ளைகளையும் பார்க்கவேணும். புதுச்சேரி பட்டணத்திற்குத் திரும்பவேணும். பாகூருக்குத் திரும்பியாகணும். சேரிக்குளத்துத் தண்ணி கலங்கியிருந்தாலும் குடிச்சா பனஞ்சாறு. பாகூர்  தணிகாசல கிராமணி இறக்கற கள், எப்பேர்பட்ட உடல் வலின்னாலும் ஷணத்தில் வாங்கிப்போடும். தன் சாதிசனமெல்லாம் அங்கேயே கிடக்கிலையா? இவனுக்கேன் புத்தி இப்படிக் கெட்டுப்போச்சுது. எல்லாத்தையும் ஒதுக்கிட்டு, பொண்டாட்டி புள்ளைங்களோடு புதுச்சேரியிலே பொழைச்சிக் கிடந்திருக்கலாம். எதுக்காக வரவேணும்?

          அப்போதுதான் அவனைக் கவனித்தான். பார்த்தவிதத்தில் பண்ணையில் இவனைமேய்த்த கங்காணி கறுப்பனாகவிருக்குமோவென சந்தேகம். இல்லை இவன் இதுவரை பார்த்திராத ஒருவன், அந்நியன். கண்டமாத்திரத்தில் சாவு நெருங்கிவிட்டதாய் நினைத்து ஓட முயற்சித்தான். ஓடினான். இவனைத் தொடர்ந்து அவன் ஓடிவருவதன் அறிகுறியாக, நெருக்கத்திற் காலடிச் சத்தம். பண்ணையிலிருந்து தப்பி ஓடிவந்தவன், நேற்றுமுழுவதும் ஓடியிருக்கிறான், அந்த அலுப்பு காத்தமுத்துவை அதிகதூரம் ஓட முடியாமற் தடுக்கிறது. ஓடிவந்த கறுப்பன் இவன் கையை இறுகப் பிடித்துக்கொண்டான். இனி அவனிடமிருந்து தப்புவது கஷ்டமென்று புரிந்துபோகின்றது. திரும்பிப்பார்க்கிறான். கங்காணி அல்ல. இவன் வேறு. இப்போதைக்கு இவனால் ஆபத்தேதும் நேர்ந்துவிடாது என்பதை நிச்சயபடுத்திக்கொண்ட திருப்தியில் அவன் இழுத்தபோக்கிலே, இவனும் ஓடினான். குறுகிய ஒற்றையடிப்பாதை நெளிந்து நெளிந்து ஓடியது. பாதை சிலவிடங்களில் மளுக்கென்று முறிந்து போனது. அவ்வாறான இடங்களில் கறுப்பன், அங்குள்ள செடிகளின் வாசத்தை முகர்ந்து அதன் பின்புறம் மறைந்துகிடக்கும் பாதையைக் கண்டுபிடித்து மீண்டும் ஓடுகிறான். விதிப்படி ஆகட்டுமென காத்தமுத்துவும் அவன்பின்னே ஓடுகிறான்.

நெடிதுயர்ந்து து வளர்ந்து நிற்கும் மரங்கள்,  அடர்த்தியாய்ச் செடிகொடிகள், புதர்கள். அருகில்  செவிகளை அதிகம் உறுத்தாமல் விழுகின்ற அருவி. அங்குமிங்குமாக வானத்தைக் கிள்ளியெடுத்து இறைத்தத் துண்டுகளாகச் சிதறிக்கிடக்கும் நீர் நிலைகள். இவற்றுக்கிடையில் ரகசியமாய் பதுங்கிக்கிடந்தது அவ்விடம். தினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கடற்கொள்ளைக்காரர்களின் புழக்கத்திலிருந்த மறைவிடம், இலைதழைகளின் பராமரிப்பில் ஆழமானதொரு பள்ளம். ஏணியின் உதவியோடு, பள்ளத்திற் கிடக்கும் பாம்புகளையும் விஷ ஜந்துக்களையும் கண்டு அஞ்சாதவர்களே வந்து போகலாம்.

          அருணாசலத் தம்பிரான் காலமே புறப்பட்டு வந்திருந்தார். ஏற்கனவே பலமுறை தொரை போல் அஞ்ஞெலை இங்கேவைத்து சந்தித்திருக்கிறார். இவர் வந்து அரைமணித் தியாலமிருக்கலாம். தொரை எப்போதும் சொன்னபிரகாரம் வந்திடுவான்.

அவ்விடத்துக் காட்சிகள், அவர்மனதிற்குச் சங்கடத்தை உண்டுபண்ணுகின்றன. பண்ணைகளிலிருந்து தப்பியோடிவந்த மரூன்கள் எனப்படும் அடிமைகளும், மதகாஸ்கர், மொசாம்பிக் பகுதிகளிருந்து வியாபாரத்திற்கெனக் கள்ளத்தனமாய்க் கொண்டுவரப்பட்டிருந்த கறுப்பரின அடிமைகளும் கைகால்கள் விலங்கிடப்பட்டு அடைபட்டுக் கிடக்கின்றனர். இரவோடு இரவாக நடுக்கடல்வரை படகிலும், பிற்பாடு வாணிபக் கப்பல்களிற் கள்ளத்தனமாகவும் கொண்டு செல்லப்பட்டு, அநேகமாய்த் தென்அமெரிக்கப் பண்ணைகளுக்கு விற்கப்பட இருப்பவர்கள். உணவின்றி தேவாங்குகளைப்போல தம்பிரான் திரும்பும் திசைதோறும் மொய்க்கும் கண்கள். அவையளித்த பீதியில், “சிவசிவா” என்று முனகியவாறு முகத்தைத் திருப்ப, இவர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த துரை போல்அஞ்ஞேல் முன்னும் பின்னும் துப்பாக்கி ஏந்திய காவலர் சகிதம் வந்து சேர்ந்தான். தம்பிரான், நெடுஞ்சாண்கிடையாக அவன் கால்களில் விழுந்தார்.

          – தம்பிரான் மன்னிக்கவேணும். நேற்று தெலாக்குருவா பண்ணையிலிருந்து புதுச்சேரி அடிமை ஒருவன் தப்பியோடியிருக்கிறான். அவனைச் தேடிப்பிடிப்பத்தற்கு எமதுபண்ணை குதிரைவீரர்களை உதவிக்குக் கேட்டிருந்தார்கள். அவர்களை அவ்விடம் அனுப்பிவிட்டு வருவதற்கு நேரமாகிவிட்டது. நீர் இவ்விடம் வந்து வெகுநேரமாகிறதோ?

துரைக்கு ஒருவன் நாற்காலி இட்டான். தம்பிரான் கீழேக்கிடந்த கோரைத் தடுக்கினை இழுத்துப்போட்டுச் சம்மணமிட்டு வசதியாக உட்கார்ந்துகொண்டார்.

          – அப்படிச் சொல்ல வேண்டாமே. எங்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள துரைமார்கள் நீங்கள். உங்களைப் போன்ற எசாமனர்கள் தயவில் ஜீவிக்கவேணுமாய் எங்கள் தலையில் எழுதியிருக்கிறது. அடிமைகள் வியாபாரம் நல்லபடியாய் நடக்க வேணும். நீர் எம்பெருமான் கிருபையினால் குபேரனைப் போல வாழப்போகிறீர் பாரும். இது சத்தியம். நீர் ஷேமமாய் வாழ்ந்தால்தானே, எங்களைப் போன்றவர்கள் கடவுள் அனுக்கிரகத்தால் நாலு பணம் பார்க்கமுடியும்.

          – மெர்சி(நன்றி) தம்பிரான். வழக்கம்போல பணத்தில் குறியாயிருக்கிறீர். மொக்காவில் தரிசாகக் கிடக்கும் காணிகளை மலபாரிகளுக்குக் கொடுக்கவேண்டும் என்பதாய்க் கும்பெனியில் பேச்சு. இயேசுவை விசுவாசிக்கும் மலபாரிகளுக்கு மாத்திரமே அவ்விதமான சலுகைகள் போய்ச்சேரவேணுமென்று எங்கள் கிறிஸ்த்துவ குருமார்கள் யோசனை சொல்கிறார்கள். எப்படியும் கும்பெனிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்குக் காணிகள் வழங்கப்படுமென தெரிகிறது. நான் குவர்னரிடம் முறையிட்டு உம்மை அந்தப் பட்டியலில் சேர்ப்பிக்கிறேன். இனி இந்தியாவிலிருந்து கள்ளத்தனமாக அழைத்துவரும் ஒவ்வொரு அடிமைக்கும் உமக்குப் பிரத்தியேகமாக இருபது பவுண் கொடுக்க ஏற்பாடு செய்வேன்.

          – இங்குள்ள அடிமைகளை தொரை எவ்விடம் அனுப்புகிறீர்?

          – இவர்கள் தொர்த்துய்கா (Tortuga) தீவுக்கு அனுப்பப்படவேண்டியவர்கள். அங்கிருந்து தென் அமெரிக்காவிலுள்ள ஸ்பானிய பண்ணை முதலாளிகளுக்கு அனுப்பப்படவேணும். இங்கேயுள்ள தேவைகளுக்கும் அடிமைகள் காணாது. எங்கள் சனங்களும், கும்பெனியை நம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லையென தீர்மானித்துள்ளார்கள். ஆக அடிமைவியாபாரம் தற்சமயம் நல்ல எதிர்காலம் உள்ளது. உமக்குப் புதுச்சேரியிலிருந்து ஏதேனும் தகவல் வந்ததா?

          – துரை ஷமிக்கவேணும். தைமாசம் வரவேண்டிய புதுச்சேரிச் சரக்குக்கப்பல்கள் நெசவுத் துணிகள் காணாமல் தவக்கப்படுது. ஆனாலும் என் சினேகிதர் புதுச்சேரி வேலாயுத முதலியார், கும்பெனி எசமானரான பிரான்சுவா ரெமியின் வளவில் ஒரு சில கட்டுமஸ்தான ஆட்களையும், பெண்டுகளையும் கொண்டுபோய் அடைத்து வைத்திருப்பதாக அண்மையில் வந்த கப்பல்மூலம் கடுதாசி கொடுத்துவிட்டிருந்தார். அதனைத் தங்கள் சமூகம் அடிமை ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அதுவன்றி வேறு தகவல்கள் எம்மிடமில்லை.

          – தம்பிரான் தீவில் நடப்பதெல்லாம் நீர் அறிந்ததுதானே. இங்கே பண்ணை வேலைகளுக்குப் போதிய அடிமைகள் இல்லை. இருக்கின்ற அடிமைகளை கும்பெனிக்குத் தேவையான காலங்களில் கொடுத்துதவுமாறு தீவு நிர்வாகம் வற்புறுத்துகின்றது. ஆகவே களவாய் நமக்கு அடிமைகள் அவசரமாக வேண்டும். முக்கியமானதொன்றையும் சொல்ல வேணும்.

          – கேழ்க்கச் சித்தமாயிருக்கிறேன்.

          –  தற்சமயம் உங்கள் சனங்களில், கைத்திறனுள்ளவர்களுக்கு இங்கே நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. உள்ளூர்க் கறுப்பர்கள் அநேகவிசை மற்ற அடிமைகள் வெட்டிச் சாய்ப்பதும், சில்லறைச் சாமான்களைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓடுவதுமாய் இருக்கின்றபடியால் கடந்த சில வருடங்களாகத் தீவில் மரூன்கள் பிரச்சினை விபரீதமாகிப் போச்சுது. உங்கள் சனங்களால் அப்படியானப் பிரச்சினையில்லை. அதுவுமன்றி உங்கள் மக்களுக்கு எஜமான விசுவாசம் இரத்தத்திலே ஊறி இருக்கவேணும், சுலபமாய் அடங்கிக்கிடக்கிறார்கள். இந்த விசுவாசத்திற்கு கைலாசம்மாதிரியான மனுஷர்களால் விக்கினம் நேராம பார்த்துக்கொள்ளவேணும். அவனது விடயம் என்னவாயிற்று? அவனைக் கொன்றுபோடுவது அவசியமெனச் சொல்லியிருந்தேனே?

          – கைலாசத்தைக் கொல்லவேண்டி எமது ஆட்கள் இருவரை ஏற்பாடு செய்துள்ளேன். நீங்கள் சமுசயப்பட வேணாம். நல்ல சேதி வந்தவுடன் நானே நேரில் உமது பண்ணைக்கு வந்து தெரிவிப்பேன் .

          – எம்முடைய பண்ணைக்கருகே நீர் வராதேயும். எனது ஆள் ஒருவனை மொக்காவுக்கு அனுப்பித் தகவல் தெரிந்துகொள்வேன்.

          – துரை..! நீங்கள் கைலாசம்குறித்தான கிலேசத்தை விடவேணும். அந்தக் குடும்பமே நிர்மூலமாக்கப்படவேணுமென நாள் குறித்துப்போட்டோம்.

          – காமாட்சி அம்மாள் குடும்பத்தின் மீது உங்களுக்கென்ன அப்பேர்ப்பட்ட வஞ்சம்.”

          – அந்த ஸ்திரீ காமாட்சி அம்மாள் தமிழ்த்தேசத்திலே, ராசகுடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதாகப் பேச்சு. அவளது ஏக புத்ரி தெய்வானை ராசகுடும்பத்தின் வாரிசென்றும் சொல்லப்படுகிறது. அதற்கான ஆதாரமும் அவர்களிடத்திலே இருந்திருக்கிறது. எங்கள் சினேகிதர்கள் காமாட்சியம்மாள் புத்ரி அரசபதவியை ஏற்பதைத் தடுக்கவேணுமென்பதில் உறுதியாய் இருக்கிறார்கள்.

          – நீர் ஏற்கனவே ஒருமுறை இதுபற்றி கூறியிருக்கிறீர். ஆனால் ஏதோ ரகசியமிருக்குமென்று சந்தேகப்பட்டப் பெட்டியைத்தான் உமது ஆட்கள் கோட்டைவிட்டுவிட்டார்களே?

          – உண்மைதானுங்கோ. எனது யூகம் சரியாகவிருக்கும் பட்சத்தில், நான் தேடிக்கொண்டிருந்தப் பெட்டி தற்சமயம் நமது மற்றொரு எதிரியான பெர்னார் குளோதன் வசமிருக்கவேணும். ஆகவே எனது புதுச்சேரி சினேகிதர்களுக்கு இது விபரமாக எச்சரித்துக் கடுதாசி எழுதிப்போட்டேன்.

-அப்படியே புதுச்சேரி மண்ணிலேயே அவனுக்குக் கல்லறையும் ஏற்பாடு செய்யுமாறு உங்கள் ஆட்களிடம் கூறிவையும். இங்கே போர்லூயியில் உள்ள லாஸாரிஸ்துகளுக்கு* அவனது நடவடிக்கைகள் மீது கிஞ்சித்தும் விருப்பமில்லை. என்னுடைய மகளை அவன் கல்யாணம் கட்டியிருக்கலாம். விருப்பமில்லையேல், எங்கள் நாட்டிலிருந்து ஒரு ஸ்த்ரீயை வரவழைத்துக் கல்யாணம் செய்துகொள்ளவேணும். அவ்வாறில்லாமல் உங்களின ஸ்த்ரீயை கல்யாணம் செய்துக்கொள்வேன் என்பது நியாயம் அல்லவே. தெய்வானையின் சகோதரன் கைலாசமும், நான் முடித்து வைக்கிறேனென சொல்லித் திரிகிறானாமே? உம்மோட சனங்களுக்குப் புத்தி எவ்விடம் போச்சுது. காமாட்சி அம்மாளிடம் இந்த விடயங்கள் குறித்து நீங்கள் பேசவேண்டாமோ?”.

          – அந்தத் ஸ்த்ரீயானவள், சீனுவாச நாயக்கர் வார்த்தையன்றி, மற்றவர்களின் வார்த்தையை ஒருபொருட்டாக மதியாதவள். குவர்னரையும் நைச்சியம் பண்ணிவச்சிருக்கிறாள். இந்து தேசத்து சனங்கள், நாய்க்கருக்கும் காமாட்சி அம்மாளுக்கும் அடங்கிக் கிடப்பது கும்பெனிக்கு நல்லதல்லவென்று, தொரை நாசூக்காய் குவர்னரண்டை போட்டுவைக்கவேணும். பிழைக்கவந்த இடத்தில் எசமானர்களுக்கு விசுவாசமாய் இருக்கவேணுமென்று இந்தச் சண்டாளர்களுக்குத் தெரியாமல் இருப்பது கும்பெனியின் மரியாதைக்கு அபகீர்த்தி அல்லவோ.

          காவலரிருவர் காத்தமுத்துவையும், கறுப்பனையும் உரையாடிக்கொண்டிருந்த தம்பிரான் போல் அஞ்ஞெல் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றனர்..

          – மிஸியே!..இவர்கள், சந்தேகப்படும் வகையில் நம் வளவுக்கருகே நின்று கொண்டிருந்தார்கள். இவ்விருவரையும் கொன்றுபோட்டிருப்போம். இந்தக் கறுப்பன் நமது தம்பிரானைத் தெரியுமென்று சொல்லுகிறான்”

          – தம்பிரான் யார் இவன்? எப்படி இவ்விடம் வந்தான். இந்தவிடம் உம்மைத் தவிர வேறு எவருக்கும் தெரியவரக்கூடாதென்று எச்சரித்திருந்தது மறந்து போச்சுதா?

          – துரை மன்னிக்கவேணும். இதோ நிற்கும் கறுப்பன் நமக்கு வேண்டியவன், பெயர் அனாக்கோ. கைலாசத்தைக் கொல்வதற்கு எம்மால் ஏற்பாடு செய்யபட்டவன். மற்றவனை இப்போதுதான் பார்க்கிறேன். தோற்றத்தை வைத்துப் பார்த்தால், மலபாரியாக இருக்கவேணும்.

          – தம்பிரான் எவராக இருப்பினும், இவ்விடத்தின் ரகசியம் தெரிந்தவர்களை நான் வெளியே செல்ல அனுமதிக்கமுடியாது. இவர்களை தூக்கிலிடுவதைத் தவிர வேறுமார்க்கமில்லை.

– வேணுமானால் மலபாரியைக் கொன்று போடலாம். கறுப்பன் அனாக்கோ நமக்கு உதவுபவன், அவனுக்கு நான் ஜவாப்தாரி.

          – உமது விருப்பபடிச் செய்யும்.

          – அனாக்கோ! கைலாசம் என்னவானான், இவன் யார்?

          – மன்னிக்கவேணும் ஐயா,  முட்டாள் லூதர் செய்த குளறுபடியால் இம்முறையும் அவன் தப்பித்துவிட்டான். எனக்கு வேறொரு சந்தர்ப்பம் கொடுங்கள். அவன் சிரஸோடு வருகிறேன். இல்லாதுபோனால் உங்கள் கையாலேயே அடிமையை வெட்டிப்போடுங்கள்.

          – லூதர் இப்போது எங்கே?

          – அவன் கடற்கரையில் எங்கள் கிறேயோல் மக்களிடம் பிடிபட்டிருக்கிறான்”

          – நமது ரகசியங்கள் எல்லாம் சில்விக்கும், பின்னர் கைலாசத்திற்கும் தெரிந்திருக்குமோ?

          – அப்படியானப் பாதகங்கள் ஏதும் நடக்காது. முட்டாள் லூதர் பலமுறைத் தங்களைச் சந்திக்கவேணுமாய் பிரயாசைப் படுத்தினான். நான் அதற்கு இணங்காமற் போனது நல்லதாய்ப் போச்சுது.

          -எனக்கு வியப்பாயுள்ளது. இக்கறுப்பனின் பூர்வோத்திரம் பிரெஞ்சுதீவுதானே. உங்கள் மொழியில் சம்பாஷிப்பதெப்படி? – போல் பிரபு வினவினான்.

          – துரை, இவன் தகப்பனொரு மலபாரி என்கிறான். தமிழனாம்.

          “அப்படியா?” என்று வியந்த போல் அஞ்ஞேல், கறுப்பன் அனாக்கோவையே பார்த்துக் கொண்டிருந்தான். இவனது முகம் பல வருடங்களுக்கு முன், எங்கோ வைத்துக் கண்டிருந்த முகம்போல் தெரிந்தது. எப்போது? எவ்விடமென்று ஞாபகமில்லை?” இப்போதைக்கு இவனைக் கொல்லக் கூடாது என்று தீர்மானித்தான்.

          -தம்பிரான் உங்கள் வார்த்தைப்படியே ஆகட்டும். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் நீர்தான் பொறுப்பு” நான் புறப்படவேணும். இந்த மலபாரியைத் தற்போதைக்கு இங்கேயே அடைத்துப்போடுவோம். இவன் நேற்று தெலகுருவா பண்ணையில் தப்பிய மரூனாக இருக்கவேண்டும். மற்ற அடிமைகளோடு இவனையும் விலங்கிட்டு வைக்க, எமது ஆட்களுக்கு உத்தரவிட்டுச் செல்கிறேன். கறுப்பனை வேணுமானால் நீர் உடன் அழைத்துச் செல்லும்.

-துரை மன்னிக்கவேணும். இந்த மலபாரிக்கும் நான் பொறுப்பு. தற்சமயம் எனக்கு லூதரின் இடத்திற்கு வேறொரு ஆள் தேவைப்படுகிறது. பொறுத்திருந்து சரிபட்டுவரவில்லையென்றால், தங்கள் விருப்பப்படி இவனுக்கு முடிவு கட்டுவோம்.

          – ஏதோ கவனமாய்ச் செய்யும்,  தவறு நடப்பின் உம்முடைய உயிருக்கு பிறகென்னால் உத்தரவாதம் கொடுக்கமுடியாது.- போல் அஞ்ஞெல் புறப்பட்டுச் சென்றான்.

          “வெள்ளைப் பன்றியே, உன் ஈரலை ருசிபார்க்கவே என் சீவன் காத்துக்கிடக்குது” புறப்பட்டுச் சென்ற போல் துரையைப் பார்த்தவண்ணம் கறுப்பன் அனாக்கோ முணுமுணுக்க, பயந்துபோன காத்தமுத்து அவன் வாயை அடைத்தான்.

——————————————–

*Lazaristes – தீவின் மதகுருமார்கள்

குளோது லெவி-ஸ்ட்ற்றோஸ் – பிரெஞ்சு மானிடவியல் அமைப்பிய சிந்தனாவாதி.

(எழுத்தின் தேடுதல் வேட்டை என்கிற நூலிலிருந்து )


எதிர்வருகிற 28 நவம்பரில் குளோது லெவி-ஸ்ற்றோஸ¤க்கு (Claude Levii-Strauss) நூறுவயது( கட்டுரை 10 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது) மனிதம்-மானிடம் என்ற அறிவியல் பிரவாகத்தில் மூழ்கி எழுந்த மாபெரும் சிந்தனாவாதி. மானிடவியலை எவரெஸ்டின் உச்சத்தில் நிறுத்தியதற்கான காய்ப்புகள் அவரது வயதுக்கு நிறையவே உண்டு, இன்றைக்கு ஆசுவாசமாக கால் நீட்டி முதுமை தூணில் சாய்ந்தபடி அதன் பெருமை பிரவாகத்தில் மூழ்கி சந்தோஷிக்கிற மனிதர்.

மானிடவியலை ‘அமைப்பியம்'(Structuralism) ஊடாக கட்டுடைத்தவர் குளோது லெவி-ஸ்ற்றொஸ். அமைப்பியம் அல்லது அமைப்பியல் வாதம் உண்மையில் மொழியோடு தொடர்புடையது. அமைப்பியம்’ என்ற சொல்லை அறிமுகத்தியவர் ·பெர்டினான் தெ சொஸ்ஸ¤ய்ர்(Ferdinand de Saussure) என்ற சுவிஸ் நாட்டைச் சேர்ந்த  மொழியியல் வல்லுனர். அவர் மொழிகளை ஒரு முறைமையாகக்(System) கருதி அறிந்திடவேண்டுமென்றதோடு, முறைமையில் அடங்கியுள்ள தனிமங்களுக்கு இடையேயான பரஸ்பர பொருத்தம் மற்றும் பொருத்தமின்மையை ஒட்டியே, ஒவ்வொரு தனிமத்தினைப் பற்றிய வறையறையைத் தீர்மானிக்க முடியுமென்றும் சொன்னார். வாசிப்பு, கிரகித்தல், புரிதல் போன்ற சொற்களுக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்தது. விமர்சனம், ‘எழுத்தை-சொல்லை’ கட்டுடைத்து அதன் ஜீவதாதுக்களை ஆய்வுக்குட்படுத்தியது. பிறதுறை சார்ந்த அறிவு ஜீவிகளும் – மானிடவியலறிஞர்கள், சமூக அறிவியல் வல்லுனர்கள், இலக்கிய படைப்பாளிகளென பலரும் அதன் ஈர்ப்புச் சக்திக்கு வயப்பட்டவர்கள் – அமைப்பியல் வாதத்தில் தங்களை இணைத்துக் கொள்வதைப் பெருமையாகக் கருத ஆரம்பித்தனர். மானிடவியலைப் பொறுத்தவரை குளோது லெவி-ஸ்ற்றொஸ் அமைப்பியம் பேசியவர். அவரது நூல்கள் மானிடவியல் அறிஞர்களுக்குப் பெரிதும் உதவின, உதவிக்கொண்டிருக்கின்றன. அவை அத்துறை சார்ந்த அறிஞர்களுக்கான செஞ்சோற்றுக்கடன்கள். ஒரு சிந்தனை அல்லது ஒரு படைப்பின் வீச்சினை அளவீடு செய்யவேண்டுமெனில் அச்சிந்தனை அல்லது படைப்பு சார்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், நடத்தப்படும் விவாதங்கள், வைக்கப்படும் எதிர்வினைகள், எழுப்பப்படும் கலகக்குரல்கள், உருவாகும் புதிய சிந்தனைகள் எவை எவையென்று பார்க்கவேண்டும். ஒரு சிந்தனைக்கான வரவேற்பு, அல்லது வெற்றி தோல்வியை மதிப்பீடு செய்யும் உறைகல்கள் அவை. மானிடவியலை பல்வேறு தளங்களிலும் நிறுத்தி அதன் முழுமைக்கு வழி வகுத்த அல்லது அதன் இயல்பான உருவாக்கத்திற்கான காரணிகளைக் குறித்த பரந்த ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டவர் லெவி. 1930 களில் அமேஸான் காடுகளில் கடுவியோ, பொரோரோ, நம்பிக்வாரா, துப்பி கவாயி மக்களுக்கிடையேயான உறவுகள், உணவு முறைகள், உடைகள், அணிகலன்கள் ஆயுதங்கள், சம்பாஷனைகள், இசைகள் குறித்து அவர் மேற்கொண்ட பண்பாட்டு அவதானிப்புகள் மானிடவியலுக்குக் கிடைத்த கொடையென சொல்லப்படுகின்றன. 

இளைஞர் குளோது லெவி-ஸ்ற்றோஸ், இளமைக்காலத்தில் எதிர்காலம் குறித்து உறுதியான திட்டங்களேதும் இல்லாதவராகவே இருந்திருக்கிறார். அவரது தந்தை ஒரு தேர்ந்த சித்திர கலைஞர், மனிதர்களை தத்ரூபமாக வரைபவர், லெவி-ஸ்ற்றோஸ் தந்தையைபோல ஒரு ஓவியராக வந்திருக்கலாம்; தென் அமெரிக்க காடுகளில் அவர் எடுத்த புகைப்படங்களைப் பார்க்கிறவர்கள், சிறந்த புகைப்படக் கலைஞருக்கான திறனும் அவருக்குள் ஒளிந்திருந்ததாகச் சத்தியம் செய்கிறார்கள், எனவே புகைப்படக்கலைஞராகவே வந்திருந்தாலும் ஜெயித்திருப்பார் போலிருக்கிறது; மேடை அலங்காரம், காட்சிக்குத்தேவையான பின்புலங்கள் வடிவமைப்பு கலைஞராகக் கூட வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கலாம் என்பதற்கு அவரது நண்பரொருவர் உருவாக்கிய இசை நாடகத்திற்கான அவரது பங்களிப்பு சாட்சி; நல்ல நாடக ஆசிரியராக கூட பரிணமித்திருக்கலாம் என்பதற்கான உதாரணங்களும் உண்டு, ஆனால் எதுவுமில்லையென்றானது. மொத்தத்தில் அவருக்குள் கலைஞர் ஒருவர் இருந்திருக்கிறார் என்பது தெளிவு. கலைஞர்களுக்கு இயல்பாய் இருக்கக்கூடிய பார்வை கூர்மையும், அவதானிப்பும் லெவி-ஸ்ற்றோஸிடமும் இருந்திருக்கவேண்டும். ஆசிரியர் ஆந்த்ரே கிரெஸ்ஸோன் (Andrளூ Cresson) யோசனையின்படி கல்லூரியில் தத்துவமும், சட்டமும் படித்தபோதிலும், அவை இரண்டும் அவர் உயர்கல்விக்கு வழிகோலினவே அன்றி, சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபாட்டினை அவருக்குத் தரவில்லை. உயர்கல்வி படித்து முடிந்திருந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக ராபர்ட் எச். லவி (Robert H. Lowie) என்பவர் எழுதியிருந்த முதன்மைச் சமூகம் (Primitive Society) என்ற நூலை, அது பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவருவதற்கு முன்பாகவே ஆங்கிலத்தில் படிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதைப் படித்து முடித்ததும் திடீரென்று அவருக்கு இனவரைவியலர் (ethnographer) ஆக வரவேண்டுமென்று ஆசை. பிரேஸில் உள்ள சாவோ போலோ(Sao Paulo) நகரில் சமூக அறிவியல் போதிப்பதற்கான வாய்ப்பு எதிர்பாராமல் அமைகிறது. நகரத்தின் வெளியே புற நகர்களில் வசிக்கும் அடிதட்டு சிவப்பு இந்தியரைப்பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்கான வாய்ப்பாக அதனை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் செல்கிறார். குளோது லெவி-ஸ்ற்றோஸ் வார்த்தைகளில் சொல்வதென்றால், “ஆத்மாவின் துணிச்சல் மிக்க பயணத்தின்” ஆரம்பம். சமூக அறிவியல் போதிக்கவந்தவர் நிலவியல், அகழ்வாராய்ச்சி என ஆர்வம்காட்டி தென்அமெரிக்க மண்ணில் தொலைந்திருந்த சிவப்பிந்திய மக்களின் இனவரலாற்றை, பண்பாட்டு தடயங்களைத் தேடிப் பதிவு செய்தார். பதினேழுவயதில் படித்திருந்த மார்க்ஸியத்தை நடைமுறை வாழ்க்கையில் அடையாளபடுத்துவதும் அங்கே அவருக்கான சவாலாக அப்போதிருந்தது. நிலவியல், உளப்பகுப்பாய்வு, மார்க்ஸியம் என்ற மூன்றின் ஊடாக அவர் விளங்கிக்கொண்டது: 1. ஒர் உண்மையை வேறொன்றாக எவ்வாறு கற்பிதம் செய்து ஏமாறுகிறோம். 2. நிஜத்தில் அசலான உண்மை தன் இருப்பை ஒருபோதும் வெளிப்படுத்திக்கொள்வதில்லை. 3. இயல்பில் உண்மை தன்னை ஒளித்துக்கொள்வதில் ஆர்வமுடையது(1)

பாறையொன்றில் தங்கள் கூட்டுக்குள் ஒடுங்குவதென்கிற போட்டியில் இறங்கும் இரண்டு நத்தைகளின் செயல்பாடுகளின் சமநிலையின்மை, அவைகளுக்கான கால அவகாசத்தில் நிகழ்ந்த முரண்பாடுகளுக்கான சாட்சியம் அதாவது போட்டியொன்றில் கலந்துகொள்ளும் இரண்டுபேருக்குமான தருணமும் வெளியும் ஏற்ற தாழ்வற்று அமைவது அவசியம் – மனித வாழ்க்கையில் அநேக முரண்களுக்கு அவையே காரணம் என்கிறார் லெவி-ஸ்ற்றோஸ். இக்கால-வெளி மயக்கம் காலங்காலமாய்  நிரந்தரமாக தங்கிவிட்டதுகுறித்த கவலைகள் அவருக்கு நிறையவே இருக்கின்றன, விளைவு தனது வாழ்க்கை முழுக்க முரணற்ற இணக்கமான சூழலைத் தேடுவபராக லெவி-ஸ்ற்றோஸ் பார்க்கிறோம்.

லெவி-ஸ்ற்றோஸ் படைப்புகள் உணர்ச்சிக்கும் அறிவுக்குமுள்ள(2)வேறுபாட்டினைக் குறித்தும் நிறைய பேசுகின்றன. தென்அமெரிக்க இந்தியர்களுடைய ஒரு கூடை; கருநீல வண்ணம் தீட்டிய கவர்ச்சியான முகங்கொண்ட கடூவியொ பெண்மணி; பலதார மணமுடிக்கும் வழக்கம் கொண்ட துப்பி இன குடும்பத்தலைவனின் சிறுமியொருத்தியை மணமுடிக்கும் பேரவா; அட்லாண்டிக் கடலின் சூரிய அஸ்தமனம் என்பது புலன்களால் வியந்துணர்ந்த அனுபவங்கள். மாறாக, சுழற்றி எறிந்தால் துள்ளி குதிக்கக்கூடும் என்ற கூடையின் திறனுக்குள்ளே அடங்கியுள்ள புதிர்; பெண்ணினுடைய வடிவ இயல் சித்திர தோற்றப் பின்னணிக்குக் காரணமான அவளுடைய சமூக படிநிலை அதன் பிரதிபலன்கள்;  நான்கு பெண்களை மணக்க அதிகாரம்பெற்ற குடும்பத்தலைவன் எட்டுவயது பெண்ணுக்குத் தரும் வாக்குறுதிகள்; சூரியன் மறையும் காட்சிமாத்திரம் பிடிபடமறுக்கிறது. படகுக்கு மேலாக கண்ணிற்பட்ட அக்காட்சி, பிறக்கும்  இரவுக்கான நெகிழவைக்கும் அடையாளச் சின்னம். அக்காட்சியில் தொடக்கமும் உண்டு முடிவும் உண்டென்பது அறிவு தரும் புரிதல்.

1949ம் ஆண்டு உறவின் ஆரம்ப கட்டமைப்புகள் (Les Structures ளூlளூmentaires de la parentளூ) என்ற நூலில் குடும்பங்களுக்கிடையேயான உறவுகள் பரிமாற்றத்தை விளக்குவதற்கு கணித வல்லுனர் ஆந்த்ரே வேய் (Andrளூ Weil) உதவியுடன் கணக்கியல் தருக்கங்களூடாக(Logico-mathளூmatique) சமூகக் கட்டமைப்பை லெவி-ஸ்ட்ரோஸ் விளக்கினார். உறவுகள் என்பது பெண்கள் மற்றும் பொருட்கள் பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்க மனித இயல்பும்-பண்பாடும் பிணைப்பற்று இருந்தகாலமென்று அதனைத் தீர்மானித்தார். உண்மைநிலையை அறிவதென்பது மிகவும் சிக்கலானது என்ற காலக்கட்டத்தில் பெண்களையும் பொருட்களையும் ஒரே தளத்தில் நிறுத்திய லெவி-ஸ்ற்றோஸ¤டைய  ஆய்வு பிற்காலத்தில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. விமர்சித்தவர்கள், இம்முடிவு லெவி-ஸ்ற்றோஸ¤டைய அறிவைப்(l’Intelligible) பிரதிப்பலிக்கிறதேயன்றி அவருடைய உணர்வைப்(le Sensible) பிரதிபலிக்கவில்லை என்றார்கள்.

1949ம் ஆண்டில் அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மற்றொரு பொருள் மந்திரச் சொற்கள். அமெரிக்காவின் நியூ மெக்ஸிக் பகுதியைச் சேர்ந்த ஸ¥னி இனத்தவர், கனடா நாட்டின் வான்கூவர் பகுதி க்வாக்யூட்ல் இனத்தவர், பனாமா நாட்டு குனா இனத்தவர் ஆகியோரை தனது ஆய்வுக்கு உட்படுத்திக்கொண்டார். உடலுக்கோ உயிருக்கோ ஏற்படும் நன்மை தீமைகளை ஒரு சில சொற்கள் எப்படி தீர்மானிக்கின்றன, அச்சொற்களுக்கென்று ஏதேனும் பிரத்தியேக ஆற்றலுண்டா என்பது கேள்வி. பிராய்டுவின் உளபகுத்தாய்வின்படி சொற்களுக்கு எப்படி உயிர் காக்கும் வல்லமையுண்டோ அதுபோலவே உயிரை வாங்கும் சக்தியுண்டென்பது லெவி-ஸ்ற்றோஸ் கண்ட முடிவு. மந்திர சொற்களால் உண்டாகக்கூடிய அச்சம் குண்டுமழை பொழிகிற யுத்தகளத்தில் உண்டாகும் அச்சத்திற்கு ஈடானது என்கிறார். வூடு(Voodoo),பில்லி சூனியகாலத்தில் உபயோகிக்கப்படும் சொற்கள் சம்பந்தப்பட்ட மனிதர்களின் அமைதியைக்கெடுக்கிறது அவர்கள் பதட்டமடைவதால் உடலில் இரத்தத்தின் அளவு குறைகிறது பின்னர் நாடித் துடிப்பும் அடங்க, இறுதியில் அவர்களால் மரணத்தைத் தவிர்க்க முடிவதில்லை. பிராய்டு (Freud) எவ்வாறு உள-உடலியக்கவியல்( Psycho-physiologiques) குறித்து அக்கறைகாட்டினாரோ, அதுபோலவே லெவி-ஸ்ற்றோஸ், உயிர்- உடலென்று தொடர்ந்து அக்கறை காட்டி வந்திருக்கிறார். 1949ம் ஆண்டு சுவீடன் நாட்டில் நடத்தப்பட்ட  ஆய்வொன்றில், நரம்பு செல்களில் பாலிநியூக்கிளியோடைடினுக்குள்ள (polynuclளூotides) முக்கியத்துவத்தை அறிவிக்க அதனை ஆதாரமாகக்கொண்டு லெவி-ஸ்ற்றோஸ் மனச் சிக்கல்களுக்கு வார்த்தைகளைக்கொண்டு சிகிச்சை அளிக்க முடியுமென நம்பினார். சிகிச்சைகாலத்தில் ஆற்றல்மிக்க சொற்களை உபயோகிப்பதால் உயிர்ப்பொருள்களில் ஏற்படும் மாற்றங்கள், திசைமாறிய மனிதமனத்தினை மீண்டும் மறுகட்டமைப்புக்கு உட்படுத்துவதோடு, எதிர்காலத்தில் நெருக்கடிகாலங்களில் மீள்வதற்கும் மனத்தினை தயார் படுத்துகிறது, என்பது அவரது கருத்து. “உலகில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமெனில் ரெம்போவின்(3) உணர்வுபூர்வமான சொற்கள் போதும்” என்பது லெவி-ஸ்ட்ரோஸ் தரும் யோசனை.

” எதிர்காலத்தில் அறிவியல் சிந்தனைகளும் மரபுவழி சிந்தனைகளும் ஒத்துபோகலாம் ” என்பது 1955ல் ‘லெவி’ கணித்த ஆரூடம்(4). அக்கணிப்பை மெய்யாக்க நினைத்தவர்போல, 1962ம் ஆண்டு ஆதிவாசிகளின் மந்திரம்- மரபு, படித்த பண்பட்ட உலகின் அறிவியற் செயல்பாடுகள் என இரண்டையும் சமதளத்தில் நிறுத்தி எழுதப்பட்டதே விலங்கு மனம்(5)  அவருடைய மிகப்பெரிய படைப்பு எனச் சொல்லப்படுவது புராணக்கதைகள்-(Mythologiques). 1964 தொடங்கி 1971 வரை நான்கு பாகங்கள் வந்துள்ளன:வெந்ததும் வேகாததும், தேனிலிருந்து சாம்பல்வரை, உணவு உட்கொள்ளும்முறைகளின் பூர்வீகம், நிர்வாண மனிதன்(6). தென்அமெரிக்க பொரோரோ மக்களின் மரபுவழிக் கதையொன்றை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது. முறைதவறி பிறந்த மகனொருவன் தகப்பனால் தண்டிக்கப்பட அவன் தனது குறைகளை நிவர்த்திசெய்துகொண்டு தகப்பனை பழிவாங்குவதாகக் கதை.  எண்ணூற்று பதின்மூன்று நாடோடிகதைகள் அதிலுள்ளன. ஒரு சில ஜப்பானிய கதைகளும் அதிலுண்டு/ கதைகளினூடாக செவ்விந்திய மனிதனொருவனுடைய அனுபவங்கள் சொல்லப்படுகின்றன. அவ்வனுபவத்தில் பங்குதாரர்கள்: விலங்குகள், பெண்கள், தாவரங்கள், கடவுள்கள்.. தீயின்றி மானிடத்தின் இன்றைய பிரம்மாண்டமான வளர்ச்சி ஏது? தீ மூட்டுவோம் என்ற சங்கேதத்துடனேயே கதை ஆரம்பமாகிறது. விறுவிறுப்புடன் சொல்லப்பட்டிருக்கிற கதையில்  ‘ஹாம்லெட்டும்’ அவனது புகழ்பெற்ற இறப்பதா இருப்பதா?என்ற கேள்வியுடன் வருகிறான். தனது உயிர் வாழ்க்கையை ‘இருப்பு’ உறுதிபடுத்துவதால் மனிதன் வாழ நினைக்கிறான்,  ஆனால் அவன் உள்மனம், உலகம் தோன்றிய நாள்தொட்டு நீ இருந்ததில்லையே, என எச்சரிக்கிறது. இடையில் தோன்றிய மனிதரினம் இடையிலேயே அழிந்தும்போகலாம் என்பதுதான் உண்மை என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

மானிடவியலாளர்கள் பொதுவாக இயற்கைவாதிகளாகவும் திகழக்கூடியவர்கள், ஆனால் லெவி இயற்கையை நேசிக்க புத்தர் காரணமென்று சொல்லப்படுகிறது. இயற்கைக்கு முன்னே எல்லா உயிர்களும் சமம் என்ற புத்தரின் வாக்கு அவரைப் பெரிதும் பாதித்ததாம். ‘விடுதலை குறித்த சிந்தனை'(Rளூflection sur la libertளூ) என்ற நூலில்  நமது இனவரைவியலர் லெவி அடிப்படை மனித உரிமைககளை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்கிறார். “மனிதரின் அடிப்படைகுணமென்று ஒழுங்குணர்வினைச் சொல்கிறோம். ஆனால் நடைமுறையில் அவ்வாறில்லை. இயல்பாகவே நமக்கு நம் ‘இருப்பை’ அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும், அதற்காக எதையும் செய்ய தயாராய் இருக்கிறோம், எனவே நாம் ஒழுங்குணர்வுகொண்ட இனமல்ல பிற உயிரினங்களைப்போல நாமும் ஓர் உயிரினம் அவ்வளவுதான். மனிதரினமும் சராசரி உயிரினம் என்கிறபோது பிற உயிரினங்களைக் காட்டிலும் கூடுதலாக அல்லது பிரத்தியேகமாக சலுகைகளையோ உரிமைகளையோ எதிர்பார்ப்பது நியாயமாகாது, என்பது அவருடைய கருத்து. “சுற்றுச் சூழல் குறித்து இன்றைக்கு கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறோம், உண்மையில் மனிதர்களுக்குச் சுற்று சூழலிடமிருந்து பாதுகாத்துகொள்ளும் உரிமை வேண்டியதில்லை, சுற்றுச்சூழலுக்கே மனிதர்களிடமிருந்து தமமைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை வேண்டியிருக்கிறது”, என்கிறார் லெவி-ஸ்ற்றோஸ்.(7). இயற்கைக்கு மாத்திரமல்ல மனிதகுலத்திற்கும் மேற்கத்தியர் இழைத்த அநீதிகள் அதிகமென்று குற்றஞ்சாட்டினார், விளைவு அப்போதைய நாஜிகள் ஆதிக்கத்திலிருந்த பிரெஞ்சு அரசு, அமலிலிருந்த யூதர்களுக்கு எதிரான சட்டத்தின் மூலம் அவரை பதவி நீக்கம் செய்கிறது. எனவே நியூயார்க்கில் அடைக்கலமானார். அங்கிருந்துகொண்டு சுதந்திர பிரெஞ்சு ராணுவமென்ற எதிரணியில் அங்கம் வகித்து ஜெர்மானியர் ஆக்ரப்பிலிருந்த பிரான்சின் விடுதலைக்கு உழைத்தார்.

விவாதம் குறித்த விமர்சனம் (Critique de la raison dialectique) என்ற நூல் சார்த்துருவால் எழுதப்பட்டு 1961ல் வெளிவந்து புயலைக் கிளப்பியது. ஒருவகையில் அதற்கு பதிலளிக்கும் விதத்தில் லெவி-ஸ்ற்றோஸ் எழுதி வெளிவந்ததே ‘விலங்கு மனம்’.(1962). நமது இனவியலாளர் புத்தகத்தில் முக்கியத்துவம்பெற்ற பழங்குடிகளை(primatif) மனிதரினத்தின் கேவலமான மனிதர்கள் என்று சார்த்துரு சித்தரித்திருந்தார். ஆனால் லெவி-ஸ்ற்றோஸோடு மோதுவதற்கு சார்த்துருவுக்கு வேறு விஷயங்கள் இருந்தன. முதலாவது மனித குல வரலாறு பற்றியது. வரலாறு என்ற சொல்லுக்கு ஏதேனும் பொருளுண்டா? உண்டென்பது சார்த்துருவின் வாதம். சார்த்துருவின் கருத்துப்படி, லெவி-ஸ்ற்றோஸ¤க்கு வரலாறென்பது மர்மம்- புரியாத புதிர், வரலாற்றாசிரியர்கள், மர்மக் கதையின் ஆசிரியர்கள். சார்த்துருவின் விமர்ச்னம் எப்படிவேண்டுமானாலும் இருக்கட்டும்; லெவி-ஸ்ற்றோஸ¤டைய கருத்தில் உண்மை இல்லையென்று நம்மால் சொல்ல முடியுமா? ஆப்ரிக்காவில் ஒரு பழமொழியுண்டு, சிங்ககத்துக்கென வரலாற்றாசிரியர்கள் இல்லாதவரை, வேட்டைபற்றிய வரலாறு என்பது வேட்டை ஆடியவர்களுக்குச் சாதமாகத்தான் இருக்குமென்பது உண்மை. வரலாற்றை அவரவர் விருப்பபடி திசை திருப்பலாம். ஆதாரங்கள், ஆவணங்கள் யாருக்குவேண்டும்? அவரவர் விருப்படி தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு, வேண்டாததை விடுத்து எழுதபட்ட உலகவரலாறுகள் ஏராளம். காலனிநாடுகளின் வரலாறுகள் அனைத்துமே வேட்டைஆடியவர்களால் தீர்மானிக்கபட்டதுதான். நமது லெவி-ஸ்ற்றோஸ் பற்றி பேசுவோம். அவரது ‘விலங்கு மனத்தில்’ சொல்லப்பட்டவை அனைத்துமே தெளிவானவை, கால நேரங்களுக்கு கட்டுண்டவையல்ல என்பது அவரது அழுத்தமான வாதம். லெவி-ஸ்ற்றோஸை பொறுத்தவரை வரலாறுக்குப் பொருளேதுமில்லை: வரலாறு மனிதச்சமுதாயத்தை காலங்களால் பிரிக்கிறதென்றும், இனவரைவியல் வெளிகளால் பிரிக்கிறதென்றும் கூறியவரல்லவா?

—————————————————————————

1. Triste tropiques Edition Plon p62

2. le Sensible et l’Intelligible – Sensitive and intelligible

3. Arthur Rimbaud (Jean Nicolas Arthur Rimbaud) (1854-1891) À¢¦ÃïÍ ¸Å¢»÷

4. Ibid Magie et Religion, La structure des mythes p255

5. La Pensee Sauvage- The Savage Mind

6. Mythologique- Mythological(1964-1971): Le Cru et le Cuit, Du miel aux cendres, L’Origine des manières de table, l’Homme nu

7. Le Regard élignée. éd.Plon 1983 P 374

1. Triste tropiques Edition Plon p62

2. le Sensible et l’Intelligible – Sensitive and intelligible

3. Arthur Rimbaud (Jean Nicolas Arthur Rimbaud) (1854-1891) À¢¦ÃïÍ ¸Å¢»÷

4. Ibid Magie et Religion, La structure des mythes p255

5. La Pensee Sauvage- The Savage Mind

6. Mythologique- Mythological(1964-1971): Le Cru et le Cuit, Du miel aux cendres, L’Origine des manières de table, l’Homme nu

7. Le Regard élignée. éd.Plon 1983 P 374