Monthly Archives: ஜூலை 2023

ழான் லுயிக் ஷெவிய்யார்

Jean – Luc Chevillard அல்லது ழான் லுயிக் ஷெவிய்யார் என்கிற இம்மனிதரை புதுச்சேரியில் இந்து ஆங்கில இதழ் நிருபரும் நண்பருமான நடராஜன் இல்லத்தில் 90களில் சந்தித்திருக்கிறேன். அதன் பிறகு புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் புத்தக வெளியீடு விழா ஒன்றில் பேராசிரியர் கி. நாச்சிமுத்தோடு பார்வையாளர் இருக்கையில் பார்த்த நினைவு.  தொடர்பு இல்லை. அண்மையில் கடந்த மார்ச் மாதம் பேராசிரியர் நாச்சிமுத்து இம்மனிதரை நினைவு கூர்ந்து பேசினார். எனக்கும் இம்மனிதர் ஆற்றியுள்ள பணிக்கு நன்றி தெரிவிக்கும் வைகையில் சில வரிகள் எழுதத் தோன்றியது கூடிய விரைவில் எழுதுகிறேன். இதொரு சிறிய அறிமுகம்.

புதுச்சேரியில் பிரான்சு அரசாங்கத்தால்  Ecole française d’Extrême -Orient என்கிற ஆய்வு நிறுவனம் இயங்குகிறது. தமிழில் “தூரக்கிழக்கு நாடுகளைக்குறித்த பிரெஞ்சு ஆய்வகம்” எனப்பொருள் கொள்ளலாம். இந்த ஆய்வகம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்சு அரசாங்கத்தால் தொடங்கப்பட்டு சீனா, ஜப்பான், இந்தியாவென 19 கிழக்கு ஆசிய நாடுகளின் மொழி, பண்பாடு குறித்த புரிதலை ஆய்வுகள் ஊடாக மேற்கொண்டுவருகிறது. இந்தியாவில் பிரெஞ்சுக் காலனியாகவிருந்த புதுச்சேரிக்கு அப்படியொரு வாய்ப்பு.

பிரான்சு நாட்டில் உயர்கல்வி முடித்து, அங்குள்ள தேசிய அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் அறிஞராக ஷெவிய்யார் புதுச்சேரிக்கு 90 களில் வந்தார். அன்றிலிருந்து தமிழோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார், தமிழ் என் சுவாசம் என்கிறார். தமிழ் இலக்கண மரபு, தமிழ் அகராதி மரபு, ஐரோபியர் பார்வையில் தமிழ், தமிழ் எழுத்தின் வரி வடிவம் முதலானவை இவர் ஆய்வு செய்த துறைகள். இது தவிர மொழியியல் ஆய்வறிவு வரலாறு (Histoire Epistémoloie Langage) என்கிற  இதழின் ஆசிரியராக இருந்துள்ளார். இவருடையை உழைப்பின் பலனாக பல நூல்கள், கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. சங்கால கவிதைகளில் கூடுதல் ஈடுபாடு. சேனாவரையரின் தொல்காப்பிய உரை நூலை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளார். 2022ஆம் ஆண்டு செம்மொழி விருது இவரைத் தேடிவந்து தமக்கு பெருமைசேர்த்துக்கொண்டிருக்கிறது.

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
  அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

என்ற பாரதியின் கூற்றின் சாட்சியமாக நின்று தமிழை, தமிழின் பெருமையை இப்பிரெஞ்சு மொழி அறிஞர் தமது நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கு உரைக்கிறார். நன்றி ஐயா!

சமூக நீதி: பிரான்சு பதிப்பு

கடந்த சில நாட்களாக பிரான்சு  சிலப்பதிகாரகால மதுரையாக எரிந்துகொண்டிருக்கிறது. இந்த பிரெஞ்சுக் கோவலன் பெயர் நாயெல் (Nahel), பதினேழு வயது சிறுவன், கொலைக் களத்திற்கெல்லாம் அழைத்துச் செல்லப்படாமல், நீதிப் பாண்டியன்மேல் நம்பிக்கையின்றி, குற்றவாளி எனச் சந்தேகித்த சிறுவனை ஒரு காவலர் கொல்கிறார், கோவலன் உள்ளூர் ஆசாமியாகவோ, பாண்டியனுக்குப் பங்காளியாகவோ இருந்தால் காவலர் கொன்றிருப்பாரா  என்ற கேள்வி நடுநிலையாளர்களுக்கு எழுவது நியாயம்தான். இப் பிரெஞ்சுக் கோவலன் செய்த குற்றம் ஓட்டுனர் உரிமம் மற்றும் காப்பீடு உரிமம் இன்றி நான்கு சக்கர வாகனத்தை ஓட்டியது, காவலர்கள் சந்தேகித்து விசாரணக்குத் தடுத்து நிறுத்தியபோது வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றதால் அதனால் ஏற்படவிருந்த அசம்பாவிதத்திற்கு அஞ்சி  சிறுவனை சுட நேர்ந்ததாக காவலர் தரப்பில் சொல்லப்படும் பதில்.

சிறுவன் செய்தது குற்றமே ஆயினும் அவனைச் சுட்டது நியாயமா, என்பது கேள்வி. குற்றம் செய்த சிறுவன் ஐரோப்பினாக இருந்திருந்தால் காவலர் சுட்டிருக்கமாட்டார் என்கிற விமர்சனம் வைக்கப்படுகிறது. இவ்விமர்சனத்தில் உண்மை இல்லாமைல்லை. பலியுண்ட சிறுவன் ஐரோப்பியனல்ல, முனாள் பிரெஞ்சுக் காலனியான அல்ஜீரிய நாட்டை அவனது பெற்றோர் பூர்வீகமாக கொண்டவர்கள். பிரான்சு நாடு அந்நியர்களை கூடுதலாக ஈர்க்கின்ற மேற்கத்திய நாடுகளில் ஒன்று. குறிப்பாக உடலுழைப்பு தொழிலாளிகள் அதிகம் தேவைப்பட  இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரான்சைக்காட்டிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி நாட்டிலிருந்து இங்கு குடியேற ஆரம்பித்து, பின்னர் பிரெஞ்சுக் காலனிய மக்களும், அதன் பின்னர் அரசியல் மற்றும் உள்நாட்டுப்போர் காரணமாக ஐநா வகுத்த அகதிகளுக்கான நியதிப்படியும், வழக்கமான பொருளாதார காரணங்களைமுன்னிட்டும் ஒவ்வொரு நாளும் அந்நியர்கள் இங்கு குடியேறுகின்றனர். இதுவரை பிரச்சினை இல்லை. பிரச்சனை அரசாங்கம் இம்மக்களை எப்படி நடத்துகிறது என்பதை பொறுத்தது.

பொதுவாக பிரான்சுக்குப் புலம்பெயரும் மக்களுக்கு பொதுவில் பிற ஐரோப்பியருக்கு நிகராக எல்லா சலுகையுமுண்டு. தவிர செய்யும் பணி எதுவென்றாலும் உத்தியோகபூர்வமாக குறைந்த பட்சம் ஒரு மணி நேரத்திற்கு 10யூரோ 40 சதம் ஊதியம் உத்தரவாதம், வேலையில்லையெனில் குறைந்த பட்ச வாழ்வாதார ஊதியமும், குடியிருப்பு உதவித் தொகையும், பிள்ளகளின் கல்வியில் அரசு பங்களிப்பும்(உயர்கல்வி தனியார் வசமில்லை, உங்கள் பிள்ளைகள் திறனைப் பொறுத்து எந்த ஒரு துறையிலும் செலவின்றி உயர்கல்வி பெற முடியும்), உண்டு, இருந்தும் எல்லா நாடுகளையும் போல இனபேதம், நிற பேதமென இருக்கவே செய்கிறது.

இதில் ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்துவரும் மக்களுக்கு மாறாக குறிப்பாக ஆப்ரிக்க கண்டத்திலிருந்துவரும் புலம்பெயர்ந்து மக்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் சமயம் மற்றும் பண்பாட்டில் கூடுதல் இடைவெளி. இன்று நேற்றல்ல  இம்மக்கள் பிரச்சனைகளுக்கு பிரான்சு அரசாங்கம்  அவர்கள் வலதுசாரியோ இடதுசாரியோ இரு தரப்பினருமே செவிசாய்ப்பதில்லை, இன்றைய பிரெஞ்சுக் கலவரத்திற்கு இதுவே அடிப்படை காரணம்.

சாராயத்தில் சம்பாதிப்பவனுக்கும், சாராயத்தால் சாகின்றவனுக்கும் வழங்கக்கூடிய சமூக நீதி விஷயத்தில் திராவிட மாடல் அரசுகளுக்கு குழப்பம்  இருக்கலாம் பிரான்சு ஆட்சியாளர்களுக்கு இல்லை.  குற்றம்சாட்டபட்ட காவல் அதிகாரியை இலாக்க இல்லாத அமைச்சராக்கி அழகு பார்க்கும் முனைப்பேதுமின்றி,  பிரான்சு அரசாங்கம் குற்ற முகாந்திரம் இருப்பதாகக் கருதி, சிறுவனைச் சுட்ட காவலரைச் சிறையில் அடைத்திருக்கிறது,விசாரணைக்குப்பின்னர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட இருக்கிறார். இருந்தும் நூற்றுக்கணக்கான வாகனங்கள், பேருந்துகள், அரசு சொத்துகள் கடந்த சில தினங்களாக எரிந்து சாம்பலாகியிருக்கின்றன, நிறுனங்கள் சூறையாடப்படுகின்றன.

கோவலன் கொலையுண்டதில் டதண்டிக்கப்பட்டதில் தவறு நேர்ந்திருப்பதைப்போலவே சிறுவன் விஷயத்தில் நேர்ந்திருக்கிறது மறுப்பதற்கில்லை. காவலர் குற்றம் இழைத்திருப்பின் தண்டிக்கபடவேண்டும். இதுவரை அரசின் நடவடிக்கைகள் நியாயமாகவே இருக்கின்றன.இந்நிலையில் ஒட்டுமொத்த நாட்டையும் நாட்டு மக்களையும் போராட்டக்காரர்கள் தண்டிப்பது எவ்விதத்தில் சரி, பிரான்சை எரிப்பது எந்த விதத்தில் நியாயம்?  சிலப்பதிகாரத்தை மறுவாசிப்பு செய்பவர்கள் எழுப்பும்  அதே கேள்வி எனக்கும் எழுகிறது,