Monthly Archives: ஜூன் 2019

படித்ததும் சுவைத்ததும்- 8: பாவண்ணன் ஓர் எழுத்துப்போராளி

பாவண்ணன் ஒர் எழுத்துப்போராளி

ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள்: சிறுகதைகள் கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகளென படைப்புலகின் அவ்வளவு வடிவங்களிலும் ஆழமான ஞானம்கொண்ட மனிதர். தமிழ்ப்படைப்புலகில் பாவண்ணனுக்கென்று தனித்த இடமுண்டு. அந்த இடத்தை இன்று நேற்றல்ல என்றைக்கு எழுத்துலகில் அவர் காலடியெடுத்துவைத்தாரோ அன்று தொடக்கம் கட்டிக்காத்து வந்திருக்கவேண்டுமென்பது என்பதென் அனுமானம். ஆனால் அதனைக் தக்கவைத்ததில் எழுத்தாளர் பாவண்ணனைக் காட்டிலும்;  நல்ல குடும்பத் தலைவராக, அரசு ஊழியராக, சமூகத்தை உளமார நேசிப்பவராக இருக்கிற பாவண்ணன் என்கிற மனிதருக்குப் பெரும் பங்கிருக்கிறது. தமிழ்ப் படைப்பிலக்கிய துறையில் சொந்த வாழ்க்கையில் ஒரு நேர்க்கோட்டைக் கிழித்து அதனின்று ஓர் மி.மீட்டர் கூட பிறழாமல் நடப்பதைக் கொள்கையாகவே ஏற்றுக்கொண்ட மனிதர். அவரைப்போலவே அவரது இலக்கிய ஆளுமையும் எளிமையானது, பகட்டிலிருந்து விலகி நிற்பது; எதார்த்த சமூகத்தை, அதன் பங்காளிகளைக் குறிப்பாக இந்தியச் சமூகத்தின் முதுகெலும்பாக இருக்கிற நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வனுபங்களை, அவற்றின் ஈரத்துடன், கவிச்சி போகாமல் பொத்தி வைத்து படைப்புதோறும் மணக்க மணக்கச் சொல்லத் தெரிந்தவர். எழுத்துவேறு வாழ்க்கைவேறு என்றில்லாமல் இரண்டையும் ஒன்றாகப் பார்க்கிற படைப்பிலக்கியவாதிகள் இங்கு அபூர்வம். பாவண்ணன் அத்தகைய குறிஞ்சிப்பூக்களிலொருவர். தமிழ்ச்சூழலைச் புரிந்துகொண்டு எந்தக் குழுவினரையும் சார்ந்திராமல் படைப்புண்டு தானுண்டு என ஒதுங்கி இருக்கத் தெரிந்த சாமர்த்திய சாலியுங்கூட.

பாவண்ணனைக் கொண்டாட இரண்டு காரணங்கள் எனக்கிருக்கின்றன. முதலாவதாக தமிழில் சிறுகதையென்றதும் மேற்குலகப் படைப்புகளுக்கு இணையாக எனக்கு நினைவுக்குவருகிற ஒரு சில எழுத்தாளர்களில் பாவண்ணனும் ஒருவர். இவர்கள் கதைகள் மானுடம்சார்ந்த பிரச்சினைகளை, பொறுப்புள்ள மனித மனத்தின் கவலைகளைக்கொண்டு  அளவிடுபவையாக இருக்கின்றன. பாவண்ணனைப்பற்றி எழுத விரும்பியதற்கு இரண்டாவது காரணம், அவர் என்னைப்போலவே தமிழ்நாட்டைச்சேர்ந்த விழுப்புரம் மாவட்டத்துக்காரர்,  வாழ்க்கையின் பெரும்பரப்பை புதுச்சேரியோடு பிணைத்துக் கொண்டவர்.

நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் சிறுகதைகள் என சாதனைகளைக் குவித்திருந்தபோதிலும் ஒளிவட்டத்தைத் தவிர்த்து அமைதிதவழும் முகமும் வசீகரமான குறுநகையுமாக அவரை முதன்முறை நான் அவரைக் கண்டது மறக்கவியலாது. எவ்வித பந்தாவுமின்றி, சினேகிதப் பாங்குடன் கைகுலுக்க முன்வந்தபோது உயர்ந்த அவரது மனிதம் இன்றுவரை குறையின்றி மனதில் நிலைத்திருக்கிறது.

பாவண்ணன் கதைகள் குறிப்பாக சிறுகதைகள்:

நவீன இலக்கியத்தில் இன்றைய தேதியில் சிறுகதைகளை அதிகம் காண நேர்வதில்லை. இன்று வெளிவரும் புனைகதை வடிவங்களில் சிறுகதை தொகுப்புகள் எத்தனை, நாவல்கள் எத்தனை என்பதை ஒப்பிட்டுபார்த்து சிறுகதை எழுத்தாளர்கள் அருகிவருவதைத் தெரிந்துகொள்ளலாம். சிறுகதைக்குரிய பண்புகள் அனைத்தையும் நாவல்கள் எடுத்துக்கொண்டுவிட்டன என்பதும் ஒருகாரணம். ஒரு நல்ல சிறுகதை என்பது வாசித்துமுடித்ததும் நிறைவைத் தரவேண்டும், வாசகரிடத்தில் ஆசிரியர் சொல்லவந்தது முள்போல தைத்திருக்க வேண்டும், ஏன் அப்படி எழுதினார் என்ற கேள்வியை எழுப்பவேண்டும். பாவண்ணன் சிறுகதைளில் பெரும்பாலானவற்றிடம் இப்பண்பினைக் காண்கிறோம். விவரிப்புகளைக் குறைத்து, சிக்கனமாக வார்த்தைகளைக் கையாண்டு எதார்ந்த உலகிலிருந்து அதிகம் விலாமல் கதை சொல்லும் பாணி அவருடையது. அவரது சிறுகதைகளில் சிலவற்றை இக்கட்டுரைக்காகத் திரும்பவும் வாசித்த இத்தருணத்திலும் மனதில் நிற்பவையாக இருப்பவை.  வண்ண நிலவன், வண்ணதாசன் போன்ற தமிழ்ச்சிறுகதை ஓவியர்கள் தீட்டும் சித்திரங்களுக்கு இணையானவை அவை.

சூறை

வருவாயற்றுப்போன இரயில்வே ஸ்டேஷனை, நிர்வாகம் மூட நினைக்கிறது. ஸ்டேஷன் மாஸ்டராக பொறுப்பேறிருக்கும் கதை சொல்லி பல ஆண்டுகளுக்கு முன்பாக அதே ஸ்டேஷனில் பணியாற்றியவர். “அப்பொழுதெல்லாம் இப்படி இல்லை. பார்க்கும் போதே ஆர்வத்தைத் தூண்டும் செந்நிறத்தில் ஸ்டேஷன் கட்டிடம் நின்றிருக்கும் முகப்பில் மஞ்சள் நிறப் பெயர்ப்பலகை. கரிய வர்ணத்தால் முன்று மொழிகளில் எழுதிய ஊரின் பெயர். ஏழெட்டு சிமெண்ட் பெஞ்சுகள். இரும்புக் கிராதிகள். மறுபுறம் பெரிய கூட்ஸ் ஷெட். பக்கத்தில் இந்தியன் ஆயில் டேங்க். கசகசவென்று சதா நேரமும் ஒரு கூட்டம். இன்றோ சூறையாடப்பட்டுப் பாழான ஒரு புராதன இடம் போல முள்ளும் புதரும் மண்டிக் கிடக்கிறது. குதிரை வண்டிகளும் மாட்டு வண்டிகளும் இருந்த இடத்தில் நாய்கள் படுத்துக் கிடக்கின்றன”  என்கிற ஒப்பீட்டுடன் கதை தொடங்குகிறது. செல்லரித்த பழைய நிழற்படத்தையொத்து நிற்கிற கட்டிடமும் பிறவும் ஊர்மக்களால் எப்படி கபளீகரம் செய்யப்படுகிறது என்பதுதான் கதை.  விட்டகுறை தொட்டகுறையென்று ஸ்டேஷனிடத்தில் தீராத காதல்கொண்டிருக்கும் கதைசொல்லிக்கு அந்த ஸ்டேஷனுக்கு அப்படியொரு தண்டனையை (நிரந்தரமாக மூடும்) தர மனம் ஒப்புவதில்லை. மூடப்படாலிருக்க நியாயங்களைத் தேடுகிறார். அந்நியாயங்களைப் பட்டியலிட்டு உயரதிகாரிகளுக்கு அறிக்கையாக அனுப்பவும் செய்கிறார்.  ஆனால் இரயில்வே நிர்வாகத்திற்கு இவர் முன்வைக்கும் நியாயங்களைக் காட்டிலும், அந்த ஸ்டேஷனின் வரவு செலவு கணக்கு தரும் உண்மை பெரியது. அதனைக்கூட கதைசொல்லியால் சகித்துக்கொள்ள முடிகிறது  ஆனால் கண்னெதிரே ஸ்டேஷன் கொள்ளை போவதை வேடிக்கைப் பார்ப்பதன்றி வேறெதுவும் செய்ய இயலாத தனது கையாலாகதத்தனத்தை  சகிக்க முடிவதில்லை.  ஸ்டேஷன் மாஸ்ட்டரின் குமுறல் தீயில் எண்ணை வார்ப்பதுபோல, ஸ்டேஷனில் வேலைசெய்யும் ஊழியர்களின் அவலக்குரல்:

“அம்முவரிடமும் விஷயத்தைச் சொன்னேன். அதிர்ந்து போனார்கள் அவர்கள்.

என்ன சார் இப்பிடி செய்றாங்க. புள்ளகுட்டிக் காரங்கள இப்பிடித் தூக்கியடிச்சா என்ன செய்றது சார் ? என்று முறையிட்டார்கள். எனக்கும் கோபமாய்த் தான் இருந்தது. எதுவும் செய்ய இயலாத வெற்றுக்கோபம்.

போவ முடியாதுன்னு சொன்னா என்ன சார் செய்ய முடியும் அவுங்களால ? என்றான் ஒருவன்.

சேங்க்ஷன் போஸ்ட்டயே ரத்து செஞ்சிட்டப்புறம் சம்பளம் வாங்க முடியாதுப்பா என்றேன் நான்.

அப்ப எங்க கதி ?

போய்த்தான் ஆவணும்”

இதற்கும் கூடுதலாக பிரச்சினையின் ஆழத்தை, ஏமாற்றத்தை வாசகர்களிடம் கொண்டு செல்லமுடியுமா என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்டமனித மனங்களில் இவரும் பயணித்து  வெகு உருக்கமாகத் தீட்டியிருக்கிறார். அதுபோலவே தமது நினைவுகளில் தேங்கிக்கிடக்கும் தடயங்கள் சிறுகச் சிறுக தம் கண்னெதிரிலேயே அழிக்கப்படுவதை கண்டு குமுறும் ஸ்டேஷன் மாஸ்டரின் விரக்தியும், ஏமாற்றமும் மிக அழகாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது:.

“சரக்குக்கூடம் பிரிக்கப்பட்ட இடத்தில் ஊர்ப் பெரிய மனிதர் ஆடுகளையும் மாடுகளையும் கொண்டு வந்து கட்டினார். தொடர்ந்து மற்றவர்களின் மாடுகளும் இளைப்பாறத் தொடங்கின. மாடுகளுக்கு அங்கேயே தீவனம் தரப்பட்டது. எங்கும் சாணம் குவியத் தொடங்கியது. அறையில் அரைமணி நேரம் கூட உட்கார முடியாது.

சாணத்தின் வீச்சமும் முத்திரத்தின் வீச்சமும் திணற வைத்து விடும். கழிவுகளில் உட்கார்ந்து வரும் ஈக்களும் வண்டுகளும் அறைக்குள் சுதந்தரமாக வந்து ரீங்கரிக்கும். கரிய பருத்த அவ்வண்டுகளைக் கண்டதுமே நான் அச்சம் கொள்வேன். மேலே உட்கார்ந்துவிடக் கூடாது என்று அவற்றைச் சூசூ என்று விரட்டியபடியே இருப்பேன். இரவு நேரங்களில் மனிதர்களும் உபாதைகளுக்கு ஒதுங்கும் இடமாகி விட்டது அது. திரும்பிப் பார்க்கக்கூடக் கூசும் அளவுக்கு அந்த இடத்தின் தன்மையே மாறிப்போனது”.

என்கிற விவரக் குறிப்பு ஸ்டேஷனின் மரண சாசனம், கைவிடப்பட்ட நோயாளியின் இறுதி நிமிடங்களை நினைவூட்டும் காட்சி. அவரது சிறுகதைகளில் “சூறை” எனக்கு மிகவும் பிடித்ததொரு சிறுகதை.

பிரந்தாவனம்

இக்கதையும் அவரது ஏனையக் கதைகளைப்போலவே நடுத்தரக் குடும்பத்தை மையமாகக்கொண்டது. பொம்மைக்கு உருகும் ஒரு பெண்மணி, எதற்கும் கணக்குப் பார்க்கும் ஒரு கணவன், கணக்கைப் புரிந்துகொள்ள காட்டும் அக்கறையில் நூற்றில் ஒருபங்கு அக்கறையைக்கூட மனைவியின் உணர்ச்சிகளிடம் காட்டாதவன். கிராமத்திலிருந்து அழைத்துவரப்பட்டு அவர்கள் ஆதரவில் கல்வியைத் தொடருகிற கதைசொல்லியான ஒரு சிறுவன். இவர்கள் மூவரும்தான் கதை மாந்தர்கள். சிறுவனும் அவன் அண்ணியென அன்போடு அழைக்கிற பெண்மணியும் ஒரு நாள் கடைக்குப் போகிறார்கள். போகிற நாளில் வண்டியில் பொம்மைவைத்து விற்கப்படுகிற கடையொன்றை பார்க்க நேரிடுகிறது.  அவ்வண்டியிலிருந்த கிருஷ்ணன் பொம்மை அவ்பெண்மணியை ஈர்க்கிறது: “தலையில் மயில் இறகோடு சிரித்துக்கொண்டு இருந்தது குழந்தை கண்ணன் பொம்மை. அச்சு அசலான கண்களைப் போல பொம்மைக் கண்களில் ஈரம் ததும்பி இருந்தன. இதோ இதோ என்று விரலைப் பற்றிக்கொண்டு கூடவே ஓடிவந்துவிடும் குழந்தையைப் போல இருந்தது. பொம்மையின் அழகைக் கண்ட மகிழ்ச்சியில் அண்ணியின் முகம் பிரகாசத்துடன் ஒளிர்ந்தது” எனக் கதையாசிரியர் எழுதுகிறபோது  கதையில் வரும் அண்ணிக்கு மட்டுமல்ல வாசிக்கும் நமக்குங்கூட பொம்மையிடத்தில் காதல் வருவது இயல்பு. பொம்மையை வாங்கத்துடிக்கும் அப்பெண்மணியின் ஆசைகளுக்குப்பின்னே பல தருக்க நியாயங்கள் இருக்கின்றன. பொம்மையை வாங்கி வீட்டிற்குக்கொண்டுவந்து அவ்வப்போது கொஞ்சி மகிழ நினைக்கிறாள். பேரம்பேசி பொம்மையை வாங்குவதில் பிரச்சினையில்லை. ஆனால் செலவுக்கணக்கில் கறாராக இருக்கும் கணவனை எப்படி சமாளிப்பது? பொம்மையை வாங்க பணத்திற்கு எங்கே போவது? வீட்டுசெலவில் அதை மூடிமறைக்கலாம் என்றாலும், அதையும் கண்ணில் விளக்கெண்ணைகொள்டு கண்டுபிடித்து ஏன் எதற்கென கேள்விகேட்கும் கணவனுக்கு என்ன பதில் சொல்வது? என்கிற அறிவின் கேள்விகளையெல்லாம் உணர்ச்சி அலட்சியம்செய்து, கதைசொல்லியின் யோசனையின் தெம்பில் பொம்மையை வாங்கிவிடுகிறாள். பொம்மைக்கான செலவை அழுக்கு சோப்பு வாங்கியதாகக் கணக்கும் காட்டுகிறாள். கணவனின் கழுகுக் கண்கள் வீட்டிற்கு ‘எட்டு’ரூபாய் செலவில் வந்திருக்கும் பொம்மையை அறியாமலேயே அழுக்கு சோப்பிற்கு அந்த மாதம் கூடுதலாகச் செலவிட்ட தொகை அநாவசியம் என கண்டிக்கிறது. குருட்டு தைரியத்தில் வாங்கப்பட்ட பொம்மையை அலமாரியில் ஒளித்து வைத்து வேண்டுமென்கிறபோது, கணவனுக்குத் தெரியாமல் எடுத்துப்பார்த்து மகிழலாம் என்பதுதான் பெண்மணியின் திட்டம். பொம்மைமீது அவள் செலுத்தும் அன்பும், எந்த நேரத்திலும் குட்டுவெளிப்படலாம் என்ற நிலையில் அவள் மனம் படும் பாடும், சிறுவனின் இக்கட்டான நிலமையும் பாவண்ணன் ஒரு தேர்ந்த கலைஞன் என்பதைப் பறைசாற்றும் படிமமாக கதைச் சொல்லப்படுள்ளது.

‘முள்’

‘முள்’ சிறுகதையும் பாவண்ணன் கதைகளில் மிக முக்கியமானது. பொதுவாக பாவண்ணன் தன்மை கதை சொல்லலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருக்கிறார். இக்கதையும் அதற்குத் தப்பவில்லை. கதை சொல்லியான இளைஞன் தன்னிலும் மூத்தவயதுகொண்ட சகஊழியரை அண்ணன் என அ¨ழைத்து அவருடையக் குடும்பத்தோடு நெருங்கிப்பழகுகிறான். அந்த வீட்டுப் பெண்மணியை அண்ணி யெனவும், அவ்வீட்டுப் பிள்ளைகள் இவனை சித்தப்பா என்று அழைத்தும் அன்யோன்யமாகவே பழகுகிறார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்தவீட்டிற்குச் சென்று அவர்கள் வீட்டுப் பிள்ளைகளோடு சந்தோஷமாக வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறான். அந்தச் சந்தோஷத்தை குலைப்பதுபோல, ஊழியரின் சொந்தத் தம்பி தனது மனைவி, குழந்தையுடன் வெளிநா¡ட்டிலிருந்து வருகிறான்.  சொந்தத் தம்பி வந்திருக்கிற நிலையில், இவன் யார்? அவ்வீட்டில் அவனுக்குரிய இடம் எது? என்ற கேள்விகள் எழுகின்றன. இப்ப்டியொரு பிரச்சினையைக் கருவாகக்கொண்டு தமிழில் கதை எழுதுகிறவர்கள் அபூர்வம். இப்படியொரு கதைக் கருவை கையாண்டிருக்கிறாரே என்பதற்காக மட்டும் பாவண்ணைப் பாராட்டவில்லை. அப்பிரச்சினையை மையமாக வைத்து கதைசொல்லியின் அண்ணனாக இருக்கிற சக ஊழியர், அவர் மனைவி, வீட்டுப் பிள்ளைகள், வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் தம்பி மனைவி இப்படி வெவ்வேறு மனிதர்களின் வினைகளையும் எதிர்வினைகளையும் கொண்டு எதார்த்த உலகை காட்சிப்படுத்தியிருப்பதற்காகவும் பாராட்ட வேண்டியிருக்கிறது.

பாவண்ணைன் படைப்பு மாந்தர்கள்

இவர் படைப்பில் இடம்பெறும் மனிதர்கள் மேல்தட்டுமக்களா, மெத்த படித்த வர்க்கமா என்றால் இல்லை. பரம ஏழைகளா என்றால் இல்லை. ஆனால் அவர்கள் விவசாயிகளாக இருப்பார்கள், ஆலைத் தொழிலாளிகளாக இருப்பார்கள். வாழ்வை அதன் போக்கிலே அனுசரித்துபோகிற வெகுசன கூட்டத்தின் பிரதிநிதிகள், அலங்காரமற்ற மனிதர்கள். கள்ளங்கபடமின்றி உரையாடத் தெரிந்தவர்கள். விழுப்புரம், கடலூர், புதுச்சேரி நகரங்களில் அல்லது அதையொட்டிய பகுதிகளில்  காண்கிற வெள்ளந்தியான மனிதர்கள்.

” ‘காலையில மொடக்கத்தான் கீரை பறிச்சிட்டு வந்து குடு’னு ராத்திரி கேட்டாரு. வாக்கிங் போனப்ப ஏரிப் பக்கத்துலேர்ந்து பறிச்சியாந்தேன். குடுக்கறதுக்காக வந்து எழுப்புனா, கொஞ்சம்கூட அசைவே இல்லடா. தொட்டா ஐஸ் கட்டியாட்டம் சில்லுனு இருந்திச்சி. ஓடிப் போயி டாக்டரக் கூட்டியாந்து காட்டுனேன். பாத்துட்டு ‘ராத்திரியே உயிர் பிரிஞ்சிடிச்சி’னு சொன்னாரு” “கடேசியா ஒரு தடவ மூஞ்சியப் பார்த்துக்குறவங்க பாத்துக்குங்க” –  (சுவரொட்டி )

நெனப்புதான் பொழப்பைக் கெடுக்குது’ என்று குத்தலாகப் பதில் சொன்னார் சித்தப்பா. “நாய குளிப்பாட்டி நடு ஊட்டுல வெச்சாலும், அது வாலக் கொழச்சிக்கினு போற எடத்துக்குத்தான் போவுமாம். பணத்த கண்ணால பார்த்ததும் மாணிக்கம் பயலுக்குப் பழைய ஞாபகம் வந்திருக்கும். தண்ணியடிச்சிட்டு எங்கனாச்சும் ரோட்டுல உழுந்து கெடப்பான்.’ -( தாத்தா வைத்தியம்)

“இன்னாடா சங்கமாங்கி ஆடுன்னா ஆடறதுக்கு நீ வச்ச ஆளாடா அவுங்க” என்று அவள் குரல் உயர்கிறது. லுங்கிக்காரன் இந்தத் தாக்குதலைச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. “மார்ல கைவச்சிப் பேசற அளவுக்கு ஆயிடுச்சாஸ என் சாண்டா குடிச்சவனே, போடா போய் ஒங்காத்தா மார்ல கைவச்சி ஆடச் சொல்லுடா இல்லன்னா ஒங்கக்கா மார்ல கைவச்சி ஆடச் சொல்லு” என்று கைநீட்டிச் சொல்கிறாள். “என்னமோ ரெண்டுங்கெட்டானுங்க நாலு ஆட்டம் அடி ரெண்டு காசு சம்பாரிக்க வந்தா திமிராடா காட்டற திமிரு” என்கிறாள். ( வக்கிரம்)

இப்படி உரையாடலில் அக்காலத்தில் தென் ஆற்காடு, வட ஆற்காடு என அழைக்கப்பட்ட பிரதேசங்களில் ( எனக்கு இன்னும் கடலூர், விழுப்புரம், திருவண்னாமலையென  நீளும் பட்டியலில் அத்தனைப் பிடித்தமில்லை) காணும் வட்டார வழக்குகள், கதையில் வரும் பெயர்கள் உட்பட (உ.ம். ‘மண்ணாகட்டி’)  எனக்குப் பிடித்தமானவை.

மேற்குலகில் திறனாய்வாளகள் ஒரு படைப்பாளியை அவன் படைத்த படைப்பு, படைப்பில் இடம்பெறும் மாந்தர்கள், கதை நடைபெறும் தளம், கதைமாந்தர்களின் உரையாடல், கதைசொல்லல்  ஆகியவற்றை ‘Being there’  என்ற சொல்லுடன் இணைத்துப் பார்ப்பார்கள். அச்சொல்கொண்டே அப்படைப்பாளியை மதிப்பிடவும் செய்வார்கள். பாவண்ணனும் தனது படைப்பிலக்கியத்தில் வடிவம் எதுவாயினும் ‘Being there’ ஆக உருமாற்றம் பெறுகிறார். கதையென்றால் கதைசொல்லியாக கதைமாந்தராக, கதைக்களனாக அதற்குள் அவரே எங்கும் நீக்கமற நிறைந்துவிடுகிறார், கட்டுரைகளிலும் இதுதான் நடக்கிறது. அதிகம் தன்னிலையில் சொல்லப்படுவது காரணமாக இருக்கலாம், கதைமாந்தர்களைக் கதை மாந்தர்களாகப் பார்க்க முடிவதில்லை. பாத்திரங்களைக் கடந்து ஆசிரியர் முன்வந்து நிற்பது ஒரு குறை. இருந்தபோதிலும் கிராமப்பின்புலத்திலிருந்து வந்திருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் தெரிந்த மனிதர்களாக, இதற்கு முன்பு எங்கோ பார்த்ததுபோன்ற (déjà vu) தோற்றத்தை அவருடைய படைப்பு மாந்தர்கள் தருவது சிறப்பு. அடுத்ததாக அவரது படைப்புகளில் காணும் உயர்பண்பு: ‘கலை மக்களுக்காக’ என்ற நம்பிக்கையில் எழுதுகோலை கையில் எடுத்திருப்பது. வடிவங்கள் எதுவாயினும் பாவண்ணன் எழுத்துக்கள் அல்லது அவரது படைப்புகள் கருவாக எடுத்துக்கொள்கின்ற பிரச்சினைகள் தனிமனிதனைக்கடந்து பொது நியாயத்தின்பாற்பட்டவையாக இருப்பது அவற்றின் தனித்துவம்.

பாவண்ணன் ஒர் எழுத்துப் போராளி

போராளி என்பவன் யார்? வாய் மூடி கிடப்பவனல்ல; ஆமாம் போடுபவனல்ல; அநீதிக்கு வழிவிட்டு ஒதுங்கி செல்பவனல்ல; தனக்காகப் போராடுபவனல்ல. வேறு யார், அவர்கள் எப்படி இருப்பார்கள்?  அவர்கள் எழுத்தாளர்களெனில்  பா.ஜெயப்பிரகாசம், பாவண்ணன் போல இருப்பார்கள் சத்தமின்றி இயங்குவார்கள். சமூகத்திற்குத் தீங்கு என்றால் ஆயுதமின்றி, ஆர்பாட்டமின்றி அமைதியாகப் புரட்சியில் இறங்குவார்கள். இருவருமே பார்க்க சாதுவானவர்கள், ஆனால் எழுத்தென்றுவந்துவிட்டால் அவர்கள் எடுக்கிற விசுவரூபத்திற்குமுன்னால் அநீதிகள் சிறுத்துபோகும். வாடா போடா என எதிரியுடன் அடிதடியில் இறங்கும் இரகமல்ல, அன்பாய்த் தோளைத்தொட்டு திருத்த விரும்புபவர்கள், நவீன படைப்பிலக்கிய இலக்கணத்திற்கு மாறாக நீதியை இலைமறைகாயாக வலியுறுத்த முனைவர்கள்.

பாவண்ணன் எழுத்துக்களில் சமூக அக்கறையைத் தவிர வேறு நோக்கங்களில்லை.  படைப்பிலக்கியத்தின் வடிவம் எதுவாயினும் தமது மேதமையை உறுதிபடுத்தும் எண்ணங்களும் கிடையா. கண்களை அகல விரித்து வாசகர்கள் பிரம்மிக்கவேண்டும், ரசிக மனங்களைக் கிறங்கச் செய்யவேண்டும் என்பதுபோன்ற ஆசைகளும் இல்லை. மாறாக பாலீதீன் பைகள் கூடாது, மணற்கொள்ளைத் தடுக்கப்படவேண்டும், குடியிலிருந்து அடித்தட்டு மக்கள் விடுபடவேண்டும், திருநங்கைகளை சிறுமை படுத்தும் மனிதர்களை கண்டிக்க வேண்டும், முதியவர்களை அரவணைக்க வேண்டும், பூமியெங்கும் மரங்களை நடவேண்டும்,  காடுகளைப் பராமரிக்கவேண்டும் என்பது உயரிய குறிக்கோள்கள் இருக்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் கலை மக்களுக்கானதென்கிற சிந்தனை அவசியம். அந்த ஒரு காரணத்திற்காகவே பாவண்ணனைக் கூடுதலாக நேசிக்கலாம், அவரை எழுத்துப்போராளியென அழைக்கவும் அதுவே காரணம்.

 

———————————————————————————-

 

பெருவெளி எழுத்து:குற்றம் நீதிபற்றிய விசாரணைகள்:காஃப்காவின் நாய்க்குட்டி – அ.ராமசாமி

நாவல்கலையினூடாக  வகைபிரித்தல்

காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் தனது விருப்பம் போல் உருவாக்கி விரியும் நாவல் இலக்கியப்பரப்பிற்கு எல்லைகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் அது யாருடைய வாழ்க்கை வரலாற்றையும் விரிவாகச் சொல்லும் நோக்கம் கொண்ட இலக்கியவகையும் இல்லை. இது ஒன்றைத்தவிர நாவலென்னும் இலக்கியக்கலைக்கு வரையறை எதையும் சொல்லிவிடமுடியும் எனத் தோன்றவில்லை.

எழுதப்பட்ட ஒரு நாவலின் நிலவியல் பின்னணிகளையும் மொழிக்கூறுகளையும் அறியும்போது வட்டார நாவல் என வகை பிரிக்கிறோம். அதேபோல் காலப் பின்னணியைக் கணிக்கும்போது வரலாற்று நாவலாக மாறும் வாய்ப்பு உண்டு. தமிழில் எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட வரலாற்று நாவல்கள் பெரும்பாலும் வரலாற்றாசிரியர்களால் அறியப்பட்டு, உறுதிசெய்யப்பட்ட காலத்தைப் பின்னணியாகக் கொண்டவை, அறியப்பட்டு உறுதிசெய்யப்பட்ட நகரங்களில் நடந்ததாகவே அவற்றின் கதைகளும் சொல்லப்படுகின்றன. அப்படிச் சொல்லப்பட்ட கதைகளில் அரசர்களின் பெயர்களும் கூட வரலாற்றுத் தரவுகளால் உறுதிசெய்யப்பட்டனவாக இருக்கின்றன. வரலாற்று நாவலாசிரியர்கள் முன்வைத்த வரலாற்றுப் பாத்திரங்களையே தலைப்பாக்கிச் சொல்வதை எளிய வழிமுறையாகப் பலரும் பின்பற்றினார்கள். வரலாற்றுப் புனைவுகளில் புதிய திசைகளில் பயணம் செய்த பிரபஞ்சன் (மானுடம் வெல்லும்)அந்த எளியமுறைக்கு மாற்றை முன்வைத்தவர்.

அறியப்பட்ட வரலாற்றைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு புனைவான வரலாற்றை உருவாக்குவதன் மூலம் சமூகநாவல்கள் உருவம் கொள்கின்றன. புனைவான கிராமங்கள் அல்லது நகரங்களை உருவாக்கும் நாவலாசிரியர்களின் நாவல்களிலும் ஆண்டுக் கணக்குகளைச் சுலபமாகக் கண்டு சொல்ல முடியும். வாசிப்பவர்களுக்குக் கூடுதலான வரலாற்றறிவும் நிலவியல் பார்வையும் இருந்தால் அறியப்பட்ட வரலாற்றின் பின்னணியைக்கூடக் கண்டுபிடித்துவிடலாம். அதன் மூலம் ஒரு புனைவான நாவலை வரலாறாகவும் சமூக இருப்பாகவும் இயங்கியலாகவும் வாசிக்கமுடியும். ஆனால் உருவாக்கப்படும் பாத்திரங்கள் எப்போதும் புனைவாகவே இருக்கும்; இருக்கவேண்டும். அதுவும் அறியப்பட்ட மனிதர்களாக இருக்கும் நிலையில் அவை தன் வரலாறாகவோ/ வரலாற்றுப்புனைவாகவோ ஆகிவிடும். இவ்வளவு சிக்கல்களையும் தாண்டித்தான் அல்லது உள்வாங்கிய பின்பே ஒரு எழுத்தாளர் நாவலை உருவாக்குகிறார். இதன் மறுதலையாக இவ்வளவு புனைவுகளையும் உடைத்துப் புரிந்துகொள்பவனே நாவலின் வாசகனாகவும் விமரிசகனாகவும் மாறுகிறான் என்றும் சொல்லலாம்.

 புதுவகை நாவல்கள்

பாத்திரங்களை உருவாக்குவதில் பெருமளவு வேறுபாடுகள் இல்லையென்றபோதும் காலம், வெளி ஆகியனவற்றை உருவாக்குவதில் நேர்கோட்டுத்தன்மையைக் குலைப்பதைப் புதுவகை நாவல்கள் முக்கியமான உத்தியாக நினைக்கின்றன. நேர்கோடற்ற தன்மையினூடாகப் பாத்திரங்களின் புறச்சூழலையும் அகநிலைப்பாடுகளையும் சந்திக்கச் செய்வதும் நடக்கின்றன. விலகிப்போவதையும் உருவாக்குகின்றன. இணைதலும் விலகலுமான எழுத்துமுறையின் மூலம் நமது காலத்து மனோநிலையான- நவீனத்துவ முறையைக் கடந்த பின் நவீனத்துவ மனநிலையைக் கட்டமைக்க முடியும்.  முதன்மையாக நான் எழுதும் நாவலில் விரியும் எதுவும் பெருங்கதையாடலின் கூறுகள் கொண்டதல்ல என்பதை எழுதுபவன் உணர்த்த முடியும். அண்மையில் வாசிக்கக் கிடைத்த ஒரு தமிழ் அத்தகைய உணர்த்துதலைக் கச்சிதமாகச் செய்தது.அந்த நாவலின் வெளி ஆச்சரியப்படத்தக்க விதமாகப்  பெருவெளிப் பரப்பைக் கொண்டிருக்கிறது. சிறுபரப்பான ஊர்களில் நிலைகொள்ளாது, மாநிலம் மற்றும் தேசம் என்னும் நிலவியல் சட்டகங்களைத் தாண்டி, கண்டத்தையும் கடக்கும் வெளியைக் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது அந்த நாவல். அந்த வகையில் இந்நாவலைத் தமிழின் முக்கியமான வரவு எனச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.நாவலின் பெயர் காப்காவின் நாய்க்குட்டி(மே,2015). எழுதியவரின் பெயர் நாகரத்தினம் கிருஷ்ணா. நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ் நிலப்பரப்பில் வாழும் தமிழ் எழுத்தாளர் அல்ல; அவர் வாழும் நகரம் பிரெஞ்சு நாட்டின் ஸ்ட்ராபோர்டு  என்பதால் இப்பெருவெளி எழுத்து சாத்தியமாகியிருக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. உலக இலக்கிய வரலாற்றில் நன்கு அறியப்பட்ட பெயர் ப்ரான்ஸ் காப்கா. காப்காவின் முக்கியமான நாவலொன்று (Der Process/Trial-விசாரணை) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. பிரெஞ்சு நாட்டில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா, காப்கா என்னும் ஜெர்மானிய நாவலாசிரியரின் பெயரோடு ஒரு நாய்க்குட்டியை இணைத்துத் தனது நாவலுக்கு ஏன் தலைப்பு வைக்கவேண்டும் என்ற ஆவலே அந்த நாவலை வாசிக்கத்தூண்டும் காரணங்களில் முதன்மையாகிவிட்டது எனக்கு.

கட்டமைப்புப் புதுமை

அறியப்பட்ட இலக்கிய ஆளுமையான காப்கா என்ற குறிப்பான பெயரைத் தலைப்பாகக் கொண்ட அந்த நாவலின் பக்கங்களுக்குள் நுழைந்தால் ஒவ்வொரு இயலுமே குறிப்பான தகவல்களோடு தொடங்கி இருக்கிறதைக் கவனிக்கலாம். ஒரு நாட்குறிப்பின் பக்கங்களைப் போல ஒவ்வொரு இயலும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டு, தேதி, கிழமை ஆகிய தகவல்கள் முன்நோக்கிய வரிசையில் தரப்பட்டிருந்தால் ஒரு நாட்குறிப்பை வாசிக்கும் அனுபவம் கிடைக்கக்கூடும். அதன்மூலம் எழுதியவரின் மனப்பதிவுகளை வாசிக்கிறோம் என்ற எண்ணம் உண்டாகியிருக்கும்.  ஆனால் காலக் குறிப்புகளோடு வெளியின் விவரங்களான நகரம் மற்றும் தேசக் குறிப்புகளையும் தந்திருப்பதால் வாசிப்பவர்க்குத் தரப்படுவது நாட்குறிப்பனுபவம் இல்லை என்றாக்கப்பட்டிருக்கிறது. இடம், மற்றும் காலமென இரண்டும் ஒன்றிணைக்கப்பட்ட பின்பு பாத்திரங்களின் வினைகளும் உரையாடல்களும் தொடர்ந்துள்ளன. இதனால் வாசிப்பவர்களுக்குக் கிடைப்பது வேறுவகையான உணர்வு. கிடைக்கும் உணர்வு,  வரலாற்றைப் புனைவாக வாசிக்கும் அனுபவம். வெளிப்பாட்டு நிலையில் சமகாலத்தை மையமாக்கும் நாவல் என்னும் இலக்கியவடிவம் வரலாற்றுக்குள் நுழைவதின் நேர்மறைக் கூறுகளில் முதன்மையானது நம்பகத்தன்மையை உருவாக்குவது. அதல்லாமல் இன்னும் சில நேர்மறைக்கூறுகளும் உள்ளன. அதேபோல் எதிர்மறைக் கூறுகளும் உள்ளன. அவை பற்றித் தனியாக விவாதிக்கலாம்.

 

குறிப்பான குறிப்புகளும் நம்பகத்தன்மையும்  

 

நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவல், பிராஹா, செக் குடியரசு/ 2013, சனிக்கிழமை  ஏப்ரல்,6 எனக் குறிப்பான வெளி மற்றும் காலக்குறிப்போடு முதல் இயலைத்  தொடங்குகிறது. நாவலின் கடைசி இயலான   47 வது இயலும் அதே  பிராஹா, செக் குடியரசு 2013, ஏப்ரல் 6 சனிக்கிழமை என அதே நாளிலேயே முடிகிறது.  இதனால்  ஒரேநாளில், ஒரு நகரத்தில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு என நினைத்துவிடும் வாய்ப்பிருக்கிறது.  தொடங்கிய புள்ளியில் நடந்த ஒரு மாயத்தை விடுவிக்கும் ரகசிய விடுவிப்பாக எழுதப்பட்டுள்ள இந்நாவலின் காலக்கணக்குகளைக் கவனமாகக் கணக்கிட்டால் கால அளவு நான்கு ஆண்டுகள் என்பது தெரியவரலாம். நான்காண்டுகளில் நடந்த சில நிகழ்வுகள் ஒரு மையத்தைச் சென்று அடைவதற்காக  உருவி எடுத்துத் தரப்பட்டுள்ளன. அதேபோல் நிகழ்வுகளின் தொடக்க வெளியாக ஐரோப்பாவின் செக் நாட்டுத் தலைநகர் பிராஹாவாக இருந்தாலும் அதிகமான நிகழ்வுகள் பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராபோர்டு நகரத்திலேயே நடக்கின்றன. ஸ்ட்ராபோர்டு நகரத்திற்கு  இலங்கையின் முல்லைத்தீவிலிருந்தும்    இந்தியாவின் புதுச்சேரி நகரத்திலிருந்தும் வந்து சேர்ந்த மனிதர்கள் சந்தித்த நடைமுறைச் சிக்கல்களும் மனவியல் உறுத்தல்களுமே நாவலின் களம். இவ்வெளிகள் தவிரப் பயணவெளிகளாக ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட்டும், எந்தெந்தத்தேசமெனத் தெரியாத பயண வழித்தடங்களும்கூட நாவலின் பரப்பில் வந்து போகின்றன .காப்காவின் நாவல் நிகழ்வெளியால் மட்டுமல்லாமல் தரப்பட்டுள்ள குறிப்பான காலக் குறிப்புகளாலும்கூடப் பெருவெளி எழுத்தாக இருக்கிறது. காலத்தை அதன் நிகழ்தகவில் வரிசைப்படுத்தும்போது முதல் நிகழ்வாக 2009 மே 20, புதன்கிழமையை தொடக்க நாளாகச் சொல்லலாம். இந்த நாள் இலங்கைத் தீவில் நடந்த மனிதப் பேரழிவுக்குப் பிந்திய ஒரு நாள் என்னும் குறிப்பு என்பதை மறந்துவிடக்கூடாது. மொழியையும் சமயத்தையும் அடையாளமாகக் கொண்ட பெரும்பான்மைச் சிங்கள பௌத்த ஒடுக்குமுறைக்கெதிராகத் தமிழ்/இந்துச் சிறுபான்மையினம் நடத்திய விடுதலைப்போரில் மனிதப்பேரழிவு நடந்த இடம் முல்லைத்தீவு. அந்த வரலாற்றுக் குறிப்போடு தொடங்கும் அந்த இயலில் முல்லைத்தீவிலிருந்து கிளம்பிக் கொழும்பு வழியாக இந்தியா வந்து, எந்தெந்த நாடுகள் வழியாகவும் நகரங்கள் வழியாகவும் செல்கிறோம் என்பதை அறியாமல் பயணம் செய்த ஒரு பெண்ணை (நித்திலா) அவளது அகதி அடையாளத்தோடு பிரான்ஸில் தங்கவைத்துவிட ஒரு பெண் (ஹரிணி) உதவுகிறாள். அப்படி உதவும் அவள் நித்திலாவோடு எந்த உறவும் கொண்டவள் அல்ல. ஆனால் தமிழ்பேசும் ஆடவனுக்கும் பிரெஞ்சு பேசும் பெண்னொருத்திக்கும் பிறந்தவள். அவளது முயற்சியில் அவளது நண்பர்களும் பங்கெடுக்கிறார்கள். அவர்களின் முயற்சிக்குப் பின்னிருக்கும் மனநிலை என்ன? என்பதே நாவல் எழுப்பும் அடிப்படை வினா. இந்த வினாவிற்கான விடையைப் பெற இன்னும் சிலரின் பயணமும் காரணங்களாக இருக்கின்றன. அந்தப் பயணமும் செக் நாட்டின் பிராஹாவை நோக்கிய பயணமே. இந்தப் பயணம் நித்திலாவின் பயணம்போல நெருக்கடியால் விரும்பி மேற்கொண்ட பயணமல்ல. தற்செயல் நிகழ்வுகளால் நகர்த்தப்படும் பயணம்.

இந்தியாவின் தென்கோடி நகரமான கன்யாகுமரியிலிருந்து 2010, நவம்பர்,12, வெள்ளிக்கிழமை காலை கிளம்பி, ரயிலில் டிக்கெட்டில்லாப் பயணியாக ஏறி, அந்த ரயிலில் வரும் ஒரு வெள்ளைக்காரனோடு ஒட்டிக்கொண்டு வட இந்தியாவின் புதுடெல்லி வந்து, ரிஷிகேஷில் தங்கியிருந்து இந்திய ஆன்மீகத்தின் அடையாளமாக ஆன ஒருவன், செக் குடியரசின் தலைநகரான பிராஹா வந்து சேரும் சாமியாரின் பயணம். இவ்விரு பயணிகளும் மூன்றாவதாக ஒரு கதைக்கண்ணியில் இணைக்கப்படுகிறார்கள். அந்தக் கண்ணி, புதுச்சேரியின் பிரெஞ்சிந்தியர்களுக்குள்ள இரட்டைக் குடியுரிமையைப் பயன்படுத்தி பிரான்சில் வாழும் குடும்பம். அவர்களது உதவியால் பிரான்ஸ் வந்த சேர்ந்தவன் வாகீசன் என்னும் இளைஞன்.

நாவலின் வெளியைப் பெருவெளியாகவும், குறிப்பான நான்காண்டு காலத்தை நிகழ்வுகளின் காலமாகவும் கொண்ட காப்காவின் நாய்க்குட்டியை அதன் ஆசிரியர் உருவாக்கியிருக்கும் சொல்முறையும் தொனியும் முக்கியமானவை. ரகசியங்களைத் தேடும் துப்பறியும் பாணியும், அதனால் கிடைக்கக்கூடிய விசாரணையின் விடுவிப்புமான சொல்முறையும் நாவல் முழுக்கப் பின்பற்றப்பட்டிருக்கிறது. மனிதத் தன்னிலைக்குள் அலையும் குற்றவுணர்வுக்கான காரணங்கள் மனிதர்களிடம் மட்டுமே இருப்பதில்லை; அவர்கள் வாழும் அமைப்புகளின் விதிகளிலும் இருக்கின்றன என்பதைத் தனது படைப்புகளில் அடியோட்டமாக வைத்து எழுதியவர் காப்கா. அதனை நினைவூட்டம்விதமாகத் தலைப்பைத் தேர்வுசெய்த நாகரத்தினம் கிருஷ்ணா தனது எழுத்துமுறையை விசாரணையின் தன்மையில் உருவாக்கியதன் மூலமும் தலைப்புப்பொருத்தத்தைச் செய்ய நினைத்திருக்கிறார்.

நித்திலா அகதியாகத் தொடர்ந்து இருக்கத்தக்கவளா? வெளியேற்றப்பட வேண்டியவளா? என்ற விசாரணைக்குப் பின்னால் பல துப்பறியும் பணிகள் நடக்கின்றன. துப்பறியும் பணியில் ஈடுபடுபவள் முழுநேரத்துப்பறியும் பணியில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவள் அல்ல. ஐரோப்பிய நீதிமன்றங்கள் பின்பற்றும் நடைமுறைப்படி குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் நித்திலாவின் பேச்சை மொழிபெயர்க்கப்போனவள் ஹரிணி. அவளது மொழிபெயர்ப்புப்பணி கூடத் தற்செயலாக நேர்ந்தது. வழக்கமாக மொழிபெயர்ப்புச் செய்யவேண்டியவர் வரமுடியாததால், தனது வேலையைத் தற்காலிகமாகக் கைவிட்டுவிட்டு மனச்சோர்வோடிருந்த ஹரிணி தற்செயலாகத் தான் ஏற்றுக் கொண்டாள். ஏற்றுக் கொண்ட அவளுக்கு நித்திலாவின் மௌனமும், பேச விரும்பாத இறுக்கமும் பல ரகசியங்களைக் கொண்டது என நினைக்கவைக்கிறது. அதுவே அவளுக்கு ஏதாவது உதவிசெய்தாகவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

இறங்கித் துப்பறிகிறபோது நித்திலா திருமணம் ஆகாமலேயே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டவள் என்ற உண்மை தெரியவருகிறது. ஆனால் அந்த குழந்தை அவளிடம் இல்லை. அவளைப் பிரான்சிற்கு வரவழைத்த அக்காவிடம் இருக்கிறது. அக்காளும் அத்தானும் தங்கள் குழந்தை என்றே வளர்க்கிறார்கள். நித்திலாவின் குழந்தைக்குக் காரணமான ஆண் யார்? எதையும் வாயைத்திறந்து சொல்ல மறுக்கிறாள் நித்திலா. எந்தத் தீர்ப்பையும் ஏற்கும் மனவலிமையோடு கூண்டேறி இறங்கிக் கொண்டிருக்கிறாள் அவள். இந்த மனவலிமைதான் ஹரிணியை உற்சாகமடையச் செய்கிறது.

ஹரிணியைப் பொறுத்தவரையில் அந்தக் குழந்தை நித்திலாவின் குழந்தை என்று நிரூபித்துவிட்டால் அங்கேயே அவளை அகதியாகத் தங்கவைத்துவிடலாம் அதற்கான துப்பறிதலும் விசாரணைகளுமாக நாவல் பல முடிச்சுகளோடு நகர்கிறது. செயலாகக் கைவ் முறையானதங்கள் நாட்டிற்குள் நுழைந்தவர் முறையான அனுமதியின்றி நுழைந்தவராக இருந்தபோதிலும் சொந்தநாட்டுக் குடியுரிமைச் சட்டங்களும், உலக மன்றங்களில் ஒத்துக் கொண்ட அகதியுரிமைச் சட்டங்களும் அனுமதித்தால் ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது என்ற உயரிய நடைமுறைகளைக் கொண்ட நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குடியேற்றமுறையான விசாரணையின் அடிப்படையிலும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டில் அகதியாக ஒருவரைத் முல்லைத் தீவிலிருந்து நித்திலாவை ஸ்ட்ராபோர்ட் நகரத்திற்கு வரவைத்தவர்கள் அவளது அக்காவும், அவரது கணவரும். வரச்சொன்னபோது இருந்த காரணம், அவளுக்கு அங்கு அகதி உரிமையோடு புதுச்சேரியிலிருந்து வந்து பிரான்சில் தங்கியிருக்கும் வாகீசனைத் திருமணம் செய்து வைத்து போராளியாக வாழ்ந்தவளைக் குடும்பப் பெண்ணாக மாற்றிவிடலாம் என்ற ஆசைதான். அவனது புகைப்படத்தையெல்லாம் காட்டி அழைத்த அத்தானும் அக்காவும் அவள் வந்த பின்னர் அவனைக் கண்ணிலேயே காட்டவில்லை. நீண்ட காலமாகத் தங்களுக்குக் குழந்தை இல்லையென்பதால் அவளைத் தானே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசை அவளது அத்தானுக்கும் இருந்தது.

அக்காவின் கணவனால் உண்டான பிள்ளையா? நித்திலாவை விட்டு விலகிய பின் இந்திய மரபுகளின் மீது பிடிமானம் கொண்ட அத்ரியானா என்னும் பிரெஞ்சுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட வாகீசனால் கிடைத்த பிள்ளையா என்ற கேள்விக்கான விடை தெரிந்த ஒரேயொருத்தி நித்திலா மட்டுமே. அவளோ வாய் திறக்க மறுக்கிறாள். தொடர்ந்த முயற்சியில் ஹரிணிக்குத் தோல்வியே கிடைக்கிறது என்றாலும், அந்தக் குழந்தையின் தாய் நித்திலா தான் என்பதை நிரூபிக்கமுடிகிறது. அந்த நிரூபணம் போதும். நீதிமன்றம் அவளை பிரான்ஸிலேயே அகதியாகத் தங்க அனுமதித்துவிடும். அதை நிறைவேற்றும் விசாரணையோடு நாவலின் நிகழ்வுகள் நிறைவடைகின்றன.

தரவுகள், சாட்சிகள், விசாரணைகள், சட்ட நுணுக்கங்கள் எல்லாம் அங்கே நிறைவடைந்தாலும் விசாகனைத் துரத்தும் குற்றம் என்னும் நாய்க்குட்டி – நாய்க்குட்டியாக மாறிய அத்ரியானா என்னும் மனச்சாட்சி- காப்கா மியூசித்திற்குப் பக்கத்தில் இருக்கும் ஆற்றில் குதித்து அவனைக் குதறியெடுப்பதாக எழுதுவதோடு நாவலை நிறைவு செய்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.

பிரான்ஸ் தேசத்தின் குடிமக்களின் வழியாக நகரும் துப்பறிதல் , விசாரணை அதன் முடிவில் கிடைக்கும் நீதி என்பதன் வழியாக ஒரு வாசிப்புத் தளம் உருவாக்கப்படுகிறது. அத்தேசத்திற்குப் புலம்பெயர்ந்தும் இடம்பெயர்ந்தும் சென்று சேர்ந்த இந்திய மற்றும் இலங்கைக் குடிமக்கள் வழியாக இன்னொரு வாசிப்புத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டையும் உருவாக்கி நம் காலத்தின் முக்கியமான சொல்லாடலான குற்றநீதியோடு தொடர்புடைய புள்ளியில் கொண்டுவந்து இணைப்பது இந்நாவலின் முக்கியமான விசாரணை. அவ்வகையில் இந்நாவல் உலக இலக்கியப்பரப்புக்குள் நுழையும் தன்மைகொண்டது .

நன்றி: தீரா நதி பிப்ரவரி 2016

படித்ததும் சுவைத்ததும் – 7: கதைமனிதர்கள் (‘அக்கா’) – கா.பஞ்சாங்கம்

கதை மனிதர்கள்’ – பேராசிரியர் கா. பஞ்சாங்கத்தின் ‘அக்கா’  –

பேராசிரியர்  க.பஞ்சாங்கத்தின் இந்நாவலை படித்து முடித்த கணத்தில் என்னுள் கண்டது: நாம் அனைவருமே  கதைகளால் விதைக்கப்பட்டு, கதையாக முளைவிட்டு, கதைகளால் நீருற்றப்பட்டு, கதைகளை உயிர்ச்சத்துக்களாகபெற்று, கதைகளாக காலத்தைக் கழித்து, கதைகளாக முடிகிற – கதை மனிதர்கள், என்ற உண்மை. உலகில் எத்தனை கோடி மனிதர்கள் உண்டோ அத்தனை கோடி கதைகள் இருக்கின்றன. ஓவொரு மனிதனும் தனித்தவன் என்பதுபோல அவனுள் உறைகிற கதைகளும் நிலம் சார்ந்து, சமூகம் சார்ந்து, பொழுதுசார்ந்து தனித்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. புனைவுகளுக்குக் கவர்ச்சியைத் தருவது இத்தனித்த்துவம் தான். எனினும் எல்லோரும் கதை சொல்லிகளாக அவதாரம் எடுப்பதில்லை, கதை சொல்ல முன்வருவதில்லை.  சிலர் மட்டுமே முனைகிறார்கள். இந்தச் சிலரை தூண்டுவது எது? அந்த உந்துதலின் பிறப்பிடம் எது?

உரிய காலத்தை எதிர்பார்த்து, காற்றுடன் இசைந்து முதுமைக் தட்டிய இலைகளை உதிர்க்கும் மரங்களைப் போல,  மறக்க முடியாத நினைவுகளை உதிர்க்க,  இந்தக் கோடானுகோடி மக்கட் திரளில் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை; தங்கள் வழித்தடத்தை; குறுக்கிட்ட மேடு பள்ளங்களை; அடித்தக் கூத்தை, கும்மாளத்தை; வாங்கிய அடியை; வாழ்க்கை அனுபவத்தின் வடுவாக நிலைத்துவிட்ட புண்ணை, அதன் தீரா வலியை  பிறரோடு பகிர்ந்து கொள்ள,  ஒரு சிலரை மாத்திரம்  பிடறியில் கை வைத்துத்  தள்ளுவது எது?

கதை சொல்லல்  கதை சொல்லிக்கு மனப்புண்ணை ஆற்ற உதவும் சுய மருந்தா?  இன்றைய மானுட வாழ்க்கை வேலைத்திட்டங்களால் ஆனது. எழுதுவோம், படிப்போம், உண்போம், உறவுகளுடன் பேசுவோம், நண்பர்களுடன் தொலைபேசியில் கதைப்போம், இவைகளில் பெரும்பாலானவை படுக்கையை விட்டு எழுந்திருக்கிறபோதே வரையறுக்கப்பட்டவை. ஆனாலும் இவற்றை நிறைவேற்றுகிறபோது சில நேரங்களில் எவ்வித முகாந்திரமுமின்றி செரிக்காத உணவுபோல நெஞ்சில் கடந்த காலச் சம்பவங்கள் குறுக்கிடுகின்றன.

மனிதர்களின் ஆழ்மனது விசித்திரமானது, உறங்கும் பாம்பை ஒத்தது. நமது வெளி நடவடிக்கைகளில் ஏதோ ஒன்றினால் சீண்டப்பட விழித்துக்கொள்கிறது. இது நாள்வரை ஊமைக்காயமாக உணரப்பட்ட ஒன்றை, – (« குறைந்தது இருந்த கடனை மூன்று கூறாகப் போடும்போதாவது “மூத்தவனுக்கு வேணாம்பா” என்று அம்மா சொல்லியிருக்கலாம். மூத்த அக்காவாவது சொல்லி இருக்கலாம். அண்ணன்மார் உழைப்பில் படித்த தம்பியாகிய நான் சொல்லி இருக்கலாம். பாகப்பிரிவினையை முன்னின்று நடத்திய அந்தச் சின்னய்யா சொல்லி இருக்கலாம். யாரும் சொல்லவில்லை ») – உண்மை வலியாக பிரகடனம் செய்வித்து. சிகிச்சைக்கு ஆவன செய் என உத்தரவிடுகிறது. அவ்வாறானறானதொரு கட்டளையை நிறைவேற்ற பிறந்ததே இந்நாவல் என்பதென் ஊகம்.

கதை சொல்லி நாவலை இப்படித் தொடங்குகிறார்:

“காலையில் ஐந்து மணிக்கு எழுந்து விடுகிறேன் ஆறுமணிக்குள் மைதானத்திற்குச் சென்று விடுகிறேன். குறிப்பிட்ட ஒரே இடத்தில் வண்டியை நிறுத்துகிறேன். என்றும் அதே திசையில் அதே பாதையில். ஒவ்வொரு நாளும் வேறு வேறாக மாற்றினால் என்ன ? என்பதோடு சரி. மாற்ற இந்த மனம் இருக்கிறதே அது ஒத்துக்கொள்வதே இல்லை. மாற்றினால் அன்றைக்கு ஏதாவது எதிர்பாராதத் தீங்கு நேரலாம் என்ற அச்சத்தை மனம் விடாபிடியாக வைத்திருக்கிறது ”  பின்னர் அவர் பயந்ததுபோலவே கதை சொல்லியின் சகோதரனிடமிருந்து:’சித்தப்பா, அத்தைக்குப் பல் இடுவுள ஒரு கட்டி வலிக்கினுச்சி, டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போனோம். கேன்சரா இருக்குமோன்னு சந்தேகப்படுறார். எதுக்கும் மதுரைக்குப் போயி டெஸ்டு பண்ணி கன்ஃபாம் பண்ணிக்கங்க என்கிறார்”.

இந்த நாவலின் தொடக்கப் பகுதியை இத்தனை அக்கறை எடுத்து இங்கே சொல்லக் காரணம், ஜேம்ஸ் ஜாய்ஸ் சிறுகதையொன்றிலும் இப்படியொரு அனுபவம். கதையின் பெயர் ‘சகோதரிகள்’ (The Sisters).  கதைசொல்லியான சிறுவனுக்கு இங்கும் பெயரென்று எதுவுமில்லை. அவன் தனது வழிகாட்டியான கத்தோலிக்க பாதிரியார் இறக்கும் தருவாயில் இருப்பதை : “இம்முறை தேறமாட்டார், அவருக்கே நம்பிக்கை இல்லை” என அவன் கூறுவதாக ஜேம்ஸ் ஜாய்ஸ் சிறுகதையைத் தொடங்குகிறார். சாதாரண மனிதர்கள் நம்பிக்கை இழப்பது வேறு விடயம் ஆனால் நம்பிக்கையையே ஆதாரமாகக்கொண்ட சமய நெறியில் நிற்பவர் நம்பிக்கையை இழக்கிறார், என்பது வேறு.

‘அக்காள்’ நாவல் கதைசொல்லி சாதாரண மனிதரல்ல. வாழ்வைப் பகுத்தறிவோடு அணுகக்கூடியவர். நாவலில் இடம்பெறும் அவரது பேச்சும் செயலும் பின்னர் அதனை உறுதி செய்கின்றன, இருந்தும் ஏன் இந்தத் தடுமாற்றம். இது பொதுவில் மேதைமைகளிடம் காணும் பலவீனம்.  மேதமை என்பது சிறிது கறைபடிந்த சித்திரம். அவர்கள் பொதுமக்களில் ஒருவரும் அல்ல, மனோபலம் கொண்ட பராக்கிரமசாலிகளும் அல்ல. அவர்களை அவர்களே சரியாகப் புரிந்துகொண்டதில்லை என்பதாலேயே இதுபோன்றதொரு குழப்பங்களை எதிர்கொள்கிறார்கள். அப்படி அவர்கள் குழம்பாமற்போனால் இதுபோன்ற படைப்புகளுக்கும் வாய்ப்பின்றி போய்விடும். இலக்கியம் இட்டு கட்டியதாக இருக்கக்கூடாது, இயல்பான மனித மனங்களின் வடிகாலாக இருக்கவேண்டும். ‘அக்காள்’ நாவல் தொடக்கம்முதல் இறுதிவரை அதனைக் கட்டிக் காக்கிறது. பாதிரியார் படுக்கையில் இருப்பதைக்கூறி கதைக்குள் ஜேம்ஸ் ஜாய்ஸ் இழுத்துப்போகும் தந்திரம் க.பஞ்சாங்கத்திற்கும் கூடிவந்திருக்கிறது. புனைவின் ஆரம்பத்திலேயே, அக்காளின் வாய்ப்புற்று செய்தி கதை சொல்லியைப்போலவே அவரது அண்ணன் மகன் மூலம் நமக்குத் தெரியவருகிறது. ‘அக்கா’, நமது இரக்கத்தை தொடக்கத்திலேயேபெற்றுவிடுகிறார், விளைவாக கதைசொல்லி மாத்திரமல்ல கனத்த மனத்துடன் வாசிப்பவரும் அவருடன்  பயணிக்க வேண்டியிருக்கிறது.

‘சிறுவன்’, ‘இளைஞன்’, ‘குடும்பத்தலைவன்’ என்று கதைசொல்லியின் மூன்று வாழ்க்கைப் படி நிலைகளோடு கைகோர்க்கும் அக்காவின் வாழ்க்கை எப்படித் தொடங்கியது, எப்படி வலம் வந்தது, எப்படி முடிந்தது என்பதுதான் நாவல். பனையேறி குடும்பங்களை அதிக எண்ணிக்கையில்கொண்ட கிராமமொன்றில் அம்மா, சகோதரர்கள், சகோதரிகள் என்று வாழும் கூட்டுக்குடும்பம், “அம்மா போன (இறந்த)பிறகு குடும்பங்களை இணைக்கிற ஒரு “சரடு” அறுந்து போனதுபோல் ஆயிற்று. அவரவர் குடும்பம், அவரவர் வாழ்க்கை என்று ஓடியது”. என கதையாசிரியர் கூறுவதைப்போல, குடும்ப உறுப்பினர்கள் திசைக்கொருவராக சிதறுண்டு சடங்கிற்கும் சம்பிரதாயத்திற்கும் கைகோர்ப்பது என்பது புதியதல்ல என்றாலும்,  கதைக்களனுக்குகந்த எடுத்துரைப்பைக் கையாண்டு எளிமையான, பாசாங்கற்ற மொழியில் கதையை நகர்த்துவதால் கதைமாந்தர்களோடு ஒன்றிவிடுகிறோம். கதை சொல்லி நினைவுகளை மீட்பதன் மூலம் தன் குடும்பத்துச் சிதைவில் தன்பங்கும் இருக்கிறதெனத் தன்னைத்தானே தண்டித்துக்கொண்டாலும். அச்சவுக்கடி ஒட்டுமொத்த சமூகத்தின்மீது விழுகிறது.

நாவலின் பெயராக இடம்பெற்றிருக்கும் மூத்த அக்காள் தான் மையப் பாத்திரம்: வீட்டு வேலைகளை மட்டுமே அறிந்த அந்த அக்காள், தாயும் உறவும் கைகாட்டிய பனையேறி குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு காட்டு வேலைக்குபோவதும், பத நீர் காய்ச்சுவதும்;   பின்னர் ஆற்றில் மூழ்கிய மகனை தேடி ‘காட்டு  ராஜாவைப் பார்த்தியா?’ என்று ஒவ்வொரு வீடாய்த் தேடுவதும், துக்குமாட்டிக்கொண்ட மகளுக்காக  தம்பியிடம் “தூக்கித் தூக்கிச் சுமந்தியே. சுமை வெச்சிட்டுப் போயிட்டாளேடா. நான் என்ன பண்ணுவேன், பாதவத்தி. நான் பாவி. நானிருக்கக் கூடாது.” என்று அழுது புலம்புவதும் ;  “‘என்ன சொல்ற? இருக்காது. மாமாவாக இருக்காது. நீ யாரையோ பாத்துட்டு என்னமோ சொல்ற. கண்ணென்ன குருடாப் போச்சா?”  என புருஷனை கண்மூடித்தனமாக நம்புவதும்  என்று ‘அக்கா’வைக் கதைசொல்லி காட்சிபடுத்துகிறபோதெல்லாம் வெள்ளந்தியான அப்பெண்ணுக்காக நாமும் துடிக்கிறோம்.  அவளே பின் நாளில்  “வெஞ்சனம் கொடுப்பதற்குக் கணக்குப் பார்க்கிறாளே” எனத் தாய் புலம்பும் அளவிற்கு  மாறியதாக கதை சொல்லி தெரிவிக்கிறபோது, கிடைத்த வாழ்க்கையை அணுசரித்துப் போகும் அவள் சூழல் புரிந்து பரிதாபப் படுகின்றோமே தவிர கோபங்கொள்வதில்லை. மாறாக  சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் அவள் கதைசொல்லியிடம் அன்பைப் பொழியத் தவறுவதில்லை. நாவலுக்கான பிறப்பிடம் அவர் பொழியும் அன்பாகத்தான் இருக்கவேண்டும். « அவள் பாடிய தாலாட்டுப் பாடல்தான் எனது முதல் இலக்கிய சுவை, பின்னாளில் தமிழிலக்கியத்தை எடுத்துப் படிப்பதற்கானத் தூண்டல் கூட அக்காவிடமிருந்து அரும்பி இருக்குமோ ? » என்று கதை சொல்லி தனக்குத் தானே கேட்டுக்கொள்வது நமது ஊகத்தை உறுதி செய்கிறது.

இப்பெண்மணியைத் தவிர  « சின்ன வயசிலேயே தகப்பனை இவந்த பசங்க புருஷனை இழந்த மனைவி என்றுள்ள குடும்பத்தின் வெள்ளைச் சீலை உடுத்திய பேச்சிஅம்மா,மூத்த அண்ணன், சின்ன அண்ணன்,  சின்ன அக்காள், அவர் கணவர்,  கோபம் வந்தால் மூஞ்சை காட்டி விட்டு வெளியேறும் மச்சான், ஆட்டு வியாபாரம் செய்யும் சின்னய்யா, மாங்குடி அண்ணன், ஒன்றுவிட்ட பெரியப்பா மகன் அண்ணாச்சி, அண்ணாமலைப் பல்கலையில் படித்த பிச்சை, பண்ணையார் வீட்டு மைனர் ஜெயராமன் என நாவல் முழுக்க  கதைகளைச் சுமக்கிற மனிதர்கள்.

பனையேறிகளின் வாழ்க்கை முறையை அவர்களுக்குள்ள நெருக்கடியை, எதிர்கொள்ளும் ஆபத்தை வேறு எந்த நாவலிலும் இப்படி வாசித்த அனுபவமில்லை.

இறுதியாக  நூலாசிரியரை அடையாளம் காண ஓர் உதாரணம்.

« மதம் மாறக் காரணமென்ன ?

கோயிலுக்குள்ள நம்மள நுழைய விடாதபோது நாமயேன் அதுல இருக்கனும் ? மரியாதை  எங்க இருக்கோ அங்க போக விரும்புவதுதானே மனித மனசு »

நூலாசிரியரின் படைப்பிலக்கியங்கள் – ஒட்டுப்புல், ஒரு தலித் அதிகாரியின் மரணம், அண்மையில் வாசித்த ஒரு நூல்,  அனைத்துமே ‘தன்னை அறிதல் என்ற தேடல் நோக்கில் இருக்கின்றன.  இப்படைப்பும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்துள்ளது. தவிர இ ந்நாவலில்  இரண்டு விடயங்களை மறக்காமல் குறிப்பிட வேண்டும்.  முதலாவதாக உண்மை அடுத்தது எளிமை.  நாவலை வெவ்வேறு கோணத்தில் அணுகலாம் என்றுகூட தோன்றிற்று அதற்கு இது இடமல்ல. ஆர்வத்துடனான நண்பர்களின் வாசிப்பிற்கு வேகத்தடையாக இருக்க விருப்பமில்லை. ஒன்றுமட்டும் உறுதி, எவ்வித ஆரவாரமுமின்றி நாவல் தனக்கான இருத்தலைச் சாதித்துக்கொள்ளும், தரமான வாசகர்கள் விரும்பி வாசிப்பார்கள்.

அக்கா (நாவல்)

ஆசிரியர் : கா. பஞ்சாங்கம்

வெளியீடு:

அகரம்

மனை என்1 நிர்மலா நகர்

தஞ்சாவூர் 613007

தமிழ்நாடு

 

 

 

 

 

 

காஃப்காவின் நாய்க்குட்டி – ஒர் கலந்துரையாடல்

ஜே. அசோக்குமாரின் சிறுகதைகளை வாசித்திருக்கிறே,ன். நான் விரும்பும் நம்பிக்கைக்குறிய இளைய தலைமுறை எழுத்தாளர். இதுவைரை சந்தித்ததில்லை. இருவாரங்களுக்குமுன்பு நிகழ்ச்சிகுறித்து தெர்வித்தார். இன்ப அதிர்ச்சி. வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். ஜே. அசோக்குமாருக்கும், அவருடைய தஞ்சைக்கூடல் இலக்கியவட்ட நண்பர்களுக்கும் நன்றி நன்றி. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாமற்போனது வருத்தமே. ஒருமுறை நேரில் சந்தித்து எனது நன்றியைத் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். மீண்டும் நன்றி.

படித்ததும் சுவைத்ததும் -6 : சுந்தரராமசாமியின் சிருஷ்டி ரகசியம்

சுந்தர ராமசாமியின் சிருஷ்டி ரகசியம்

நவீன தமிழ் இலக்கியம் என்கிறபோது கவிதைக்கு பாரதியும், சிறுகதைக்கு புதுமை பித்தனும் எப்படியோ, அப்படி நாவலுக்கு சுந்தர ரமாசாமி. தமிழ் படைப்பிலக்கிய மும்மூர்த்திகள் என்று இவர்களைத்தான் அடையாளப்படுத்த முடியும். மூவரும் அவரவர்துறையில் ‘avant-gardiste’கள். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் வடிவத்தையும் மிக நேர்த்தியாகவே சுரா கையாண்டவர். பகுத்துணரக்கூடிய, சீர்தூக்கிபார்க்கவல்ல வாசகர்களையும் அதற்கிணையான பாராட்டுதல்களையும்   குவித்துக்கொண்டதைப் போலவே, நேர்மையற்ற விமர்சகர்களின் தாக்குதலுக்கு ஆளானதிலும் அவருக்கு நிகர் அவர்தான். இக்கட்டுரை ஒரு திறனாய்வு அல்ல. ஓர் சராசரி வாசகனுக்கு சற்று கூடுதலான வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையில் சுரா என்ற இலக்கிய தச்சனை உள்வாங்கிக் கொண்டதன் சுருக்கம்.

 

தீவிர  இலக்கியமும் வெற்றியும் அரிதாகவே இணையும், அதிசயமாக ஒன்றிணைகிறபோதும் விற்பனையில் வெகுசன இலக்கியத்துடன் போட்டியிடக்கூடிய நிலமையில் அவை இருப்பதில்லை. இந்நிலையில் பல நல்ல படைப்புகளை விருதுகளே நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. அவ்விருதுகளில் ஓட்டைகள் இருப்பின் காலம் தூக்கி எறிந்துவிடும், நூலக ரேக்குகளில் அநாதைப்பிணமாகிவிடும். சுரா வின் எழுத்து விருதுகளால் அலங்கரிக்கப் பட்டவையுமல்ல. அவரை விமர்சித்தவர்கள் கூட வாஸ்து சரியில்லையென குறை கூற முடிந்ததே தவிர அவர் கட்டி எழுப்பிய மாளிகையின் கலை நுட்பங்களையோ, கதவுகளின் சித்திரவேலைபாடுகளையோ, சன்னல்களும் சாத்திரங்களும் கண்ணுள்ளவர்களுக்கு அளித்த காட்சிபிரவாகங்களையோ குறைசொல்ல முடிந்ததில்லை.

 

சுராவின் படைப்பிலக்கிய வடிவங்களில் நாவல்கள் எனக்குப் பிடித்தமானவை. சிறுகதைகளைக்காட்டிலும், நாவலில் அவரது முழுமையான பரிணாமத்தை : அவ்வளர்ச்சி எட்டிய உயரத்தை, கண்ட ஆழத்தை அளவிட என்பதைக்காட்டிலும், விளங்கிக்கொள்ள முடிந்தது. அவரது சம காலத்திய அல்லது அவருக்குப் பின்பு எழுதபட்ட நாவல்களோடு ஒப்ப்பீடு செய்து அவர்கள் அப்படி இவர் இப்படி என்று எழுதுவதும் சரியல்ல என்பதென் கருத்து. இவை சுரா வின் நாவல்கள். சுரா என்ற எழுத்துக் கலைஞனின் தூரிகைக்குச் சொந்தமானவை. கண்காட்சிக்காக அல்ல தம்மை அலைக்கழித்த சிந்தனைகளை அவற்றின் முடிவில் உருவானக் கருத்துக்களை பிறருக்குத் தெரிவிக்க தீட்டியவை. « கருத்துக்களின் மோதல் பதற்றத்தையும் தரக்கூடியது » என்பது எஸ்.ஆர்.எஸ்ஸுக்கு மட்டுமல்ல அவருக்கும் தெரியும். தவிர « எதிரே இருப்பவர்களின் உறவுகளுக்குஅதிக முக்கியத்துவம் அளிக்க அளிக்க கருத்து மங்கிக்கொண்டே போகிறது. மனித குலத்திற்கு முக்கியம் அளிக்கும்போது கருத்து கூர்மைபடுகிறது. இந்தக்கூர்மை எதிர் நின்று பேசும் தனிமனிதர்களை எப்போதும் காயப்படுத்துகிறது. ஒரு சில மனிதர்களுக்காக விட்டுகொடுக்க முடியுமா ? » என ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ‘ நாவலில் ஒலிக்கும் கருநாகப்பள்ளியின் குரல் அவருடையதுதான். எடுத்த முடிவில் உறுதியாய் இருந்தாரென்றும் தெரிகிறது. எனது சகமனிதனைப் பற்றிய எனது அபிப்ராயம் இது, எனது சமூகத்தைப்பற்றிய எனது விமர்சனம் இது, இவர்களின் அரசியலில் எனக்கு உடன்பாடில்லை. இது கசப்பு இது இனிப்பு, என்பதைத் தாம் சுயவரம்செய்துகொண்ட வார்த்தைகளில் பேசுகிறார், வாதிடுகிறார். அவற்றுடன் உடன்படவேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் நமக்கில்லை, கதவுகள் திறந்தே இருக்கின்றன, வாசல் வரை வந்து வழி அனுப்பவும் அவர் தயார். உண்மையில் சுரா தன் ரசனை, தனது ருசி, தனது நிறம், தனது வாசனை, தன் விருப்பமென ( சுரா வார்த்தைகளில் சொல்வதெனில்) ‘தன் உள்ளொளியைக்காண’ எதனையெல்லாம் படைத்தாரோ அவைதான் நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக அவரை கொண்டு நிறுத்திற்று.

 

சுராவின் கதை மூலம்

 

சமையற்கலையில் தேர்ந்த ஒருவன் சமைக்கிறபோது. தான் விரும்பியவகையில் சமைத்து, ருசித்துப்பார்த்து திருப்தியுற்ற பின்னரே வந்திருக்கும் விருந்தினருக்கு படைக்க நினைக்கிறான். நல்ல எழுத்தாளனிடத்திலும் இது நிகழ்கிறது. தன்னை சந்தோஷப்படுத்தும் எழுத்து பிறரையும் சந்தோஷப்படுத்தும் என்ற நம்பிக்கை, எனவே தனக்காக முதலில் எழுதுகிறான். தெரியவந்த செய்தி, நேர்ந்த அனுபவம் அல்லது ஏதோ ஒன்று அவன் மன அலைகளில் கரையொதுங்கத் தவறி திரும்பத்திரும்ப மேலே வருகிறது. உணர்சிகளை ஒதுக்கிவைத்து அறிவைப்பிசைகிறது. தூக்கத்தைக்கெடுக்கிறது. பிடறியில் அடித்து ஊமையா நீ ! பேசித்தொலையேன்  என்கிறது. எனவே சொல்லவேண்டியதைத் தீர்மானிக்கிறான். அதை உரைக்கவும், கேட்கவும், மறுக்கவும் ஆட்கள் வேண்டும், பொருத்தமானவர்களையும், தன் கலையாற்றலுக்கு பங்கம் நேராத மொழியையும் தேர்வு செய்கிறான். சிறந்த படைப்புகள், நல்ல எழுத்தாளன் எனக் கொண்டாடப்படும் மனிதர் அனைவரிடத்திலும் இது நிகழும்.

« காற்றாடி மரங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சரிந்து மண்ணில் விழுந்த காட்சியை ஒதுங்கி நின்று வேடிக்கைபார்த்தது இப்பொழுது கூட பசுமையாக என் நினைவில் தங்கி நிற்கிறது…… அடி மரம் அலற மரங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சாயும். கிளைகள் தரையில் மோதி நொறுங்கும். அதிர்ச்சியில் மரம் மேலே சற்று எம்பி உயர்ந்து மீண்டும் தொப்பென்று விழுந்து சரியும். பாரதப்போர் முடிந்த குருஷேத்திரம் மாதிரி பிணக்காடாய் காட்சி அளித்தது தோப்பு. » (ஒரு புளியமரத்தின் கதை பக்.57)

 

இச்சம்பவத்தினைக் கண்ட சுரா மனதளவில் பாதிக்கப்பட்டதன் விளைவு ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஜே.ஜே சில குறிப்புகளை எழுதத் தூண்டியது எது ?

 

« தமிழ் நாவல்களில், அதாவது தமிழ்க் காதல் கதைகளில் அல்லது தமிழ்த் தொடர்கதைகளில் என் மனதைப் பறிகொடுத்திருந்த காலம். அன்று வானவிற்கள் ஆகாயத்தை மறைத்திருக்க, தடாகங்கள் செந்தாமரைகளால் நிரம்பியிருந்தன. உலகத்துப் புழுதியை மறைத்துக்கொண்டிருந்தார்கள் பெண்கள். ஆஹா, தொடர்கதைகள் ! ஒரு குட்டியை ஏக காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டன்கள் காதலிக்கிறார்கள். பரிசு சீட்டு யாருக்கு விழும் ? கண்டுபிடிக்க முடிந்ததில்லை என்னால். நானும் மாறி மாறி அவனுக்கு இவள், இவளுக்கு அவன் என்றெல்லாம் கணக்குப் போட்டுப் பார்ப்பேன். யூகங்களை நொறுக்கி எறிந்துவிடுவார்கள் மன்னன்கள். » (ஜே.ஜே.சி . பக்-14)

 

மேற்குலகும், இந்தியாவின் பிற மாநிலங்களும் துணிச்சலுடன் புதிய முயற்சிகளில் இறங்க, அவ்வாறான முயற்சியில், பரிசோதனையில் தமிழ்நாடு இல்லை என்ற கவலை அவர்  மனதைத் தொடர்ந்து அரித்து வந்திருக்கிறது சுரா மட்டுமல்ல அன்றைக்கு நம்மில் 99 விழுக்காட்டினர் இவற்றை வாசித்தவர்கள் தாம். ஆனால் சுரா இதற்குத் தம்வழியில் தீர்வு காணவிரும்பினார். அத்தீர்வை அல்பெர் கமுய் மரணத்துடன் இணைத்து வசீகரித்த அண்டைமாநில எழுத்தாளனில் தன்னைக் காணமுனைந்ததின் விளைவு : ‘ஜே.ஜே சில குறிப்புகள்’.

 

உண்மையைச் சொல்லப்போனால் நவீனத்துவம், பின் நவீனத்துவம் பற்றிய வாசனை நான் அறியாது இருந்த காலத்தில் சுரா நக்கல் செய்யும் தொடரொன்றில்தான் சுஜாதா கைகாட்ட, ஜே.ஜே. சில குறிப்புகளை வாசிக்கத் தொடங்கினேன்.  இன்று எல்லையற்ற கற்பனைகள், வாசகர்களை உணர்ச்சிக்கடலில் தள்ளும் மெலோ டிராமாக்கள் போன்றவற்றை படைபிலக்கிய உலகம் ஓரளவு நிராகரித்துவிட்தென்றுதான் கூறவேண்டும் மேலை நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பரவலாக்கப்பட்ட கல்வி அறிவு இந்த மாற்றத்திற்கு மூலகாரணம். எனினும் அம்மாற்றம் இங்கு மெதுவாகவே நிகழ்ந்தது.

 

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலில் பிறப்பு எப்படி நிகழ்ந்தது. ஆசிரியர் கூற்றின்படி « ஜே.ஜே சில குறிப்புகளில் பாலு தன் குடும்பத்தோடு கோட்டயத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வந்த து 1939 ஆம் வருடம் செப்டம்பர் மாதம், இரண்டாவது உலகம்காயுத்தம் அறிவிக்கப்பட்ட அன்றோ அதற்கு அடுத்த நாளோ என்று குறிப்பிட்டிருந்தேன். காலம் பற்றிய மயக்கம் ! இன்று அது இல்லை. » என்று நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஆக இக்காலத்தை தெளிவாக வாசகர்களுக்குச் சொல்லிவிடவேண்டும் என்பதோடு, பாலுவைப்பற்றியும் விரிவாகப் பேச விஷயங்கள் இருக்கின்றன என்று சுரா நினைத்திறார்.

 

இவை அவருடைய நாவல்களின் தோற்றத்திற்கான காரணங்கள். இப்பிரச்சினைகளை நாவலாக்குவதெப்படி, அதற்கான கதைமாந்தர்களை தேர்வுசெய்வதெப்படி எதைச் சொல்வது, எப்படிக்கூறினால் தன் எண்ணம் சிறக்கும் என்றெல்லாம் பின்னர் சிந்தித்திருக்கவேண்டும்.

 

உள்ளொளியும் உண்மையும் :

 

‘ஐம்பது பைசாவிற்கு கால் மடக்கி கையேந்துகிறது எங்கள் ஊர் யானை’ (கவிஞர் சுயம்புலிங்கம்) ரக படைபிலக்கிய விழாக்கால கோவில் யானைகளுக்கிடையில், நாமார்க்கும் குடியல்லோம் எனத் திரிந்த காட்டுயானை சுரா.  எவருடனும் எவற்றுடனும் சமரசம் செய்துகொள்ளாத படைப்பாளி. « எங்கும் இந்த கதைதான், பாரதி ஜமீனுக்குத் தூக்கு எழுதினான். புதுமைபித்தனும் எம்.கே.டி. பாகவதருக்கு வசனம் எழுதப்போனான். »  (ஜே.ஜே சி.கு. பக்கம் – 36) என்று தாம் கொண்டாடிய பாரதியையும் புதுமைப்பித்தனையுங்கூட கண்டிக்க காரணங்கள் இருந்தன, அத்தகைய ஒழுக்க மீறலைத் தாம் செய்யக்கூடாது எனத் தீர்மானமாக இருந்திருக்கிறார்.

 

« அவன் எழுத்தாளன், தன் உள்ளொளிகாண எழுத்தை ஆண்டவன். மிக முக்கியமான  விஷயமல்லவா இது ? அபூர்வம் அல்லவா ? » (ஜே.ஜே சி.கு. பக்கம் -9)

 

« சிந்திக்கும் மனிதனுக்கு ஒருபாஷைதான் உண்டு. உண்மையின் பாஷை அது » (ஜே.ஜே சி.கு. பக்கம் – 11)

 

உள்ளொளியைக் காண்பதும் தம்மை சுயவிசாரணை (introspection) செய்து அதன்மூலம் தம்மையும், தம்மைச் சுறியுள்ள மனிதர்களையும் நிகழும் சம்பவங்களையும் மூளையில் பரப்பி, கொழுப்பு நீக்கி, கசடுகளிலிருந்து பிரித்தெடுத்துக் ககண்டறிந்த உண்மைகளை அந்தந்த பாத்திரங்கள் ஊடாக அவற்றின் தன்மைக்கேற்ப மொழிநடையில் பகிர்ந்துகொள்வதும்  மூன்று நாவல்களிலும் இயல்பாய் நடக்கிறது.

 

« அது தானாகப் பிறந்தது, தன்னையே நம்பி வளர்ந்தது. இலைவிட்ட து பூ பூத்தது. பூத்துக் காய் காயாக காய்த்ததில் இலைகள் மறைந்தன. ……வானத்தை நோக்கித் துழாவின கைகள். வேர்கள் மண்ணுக்குள் புகுந்து அலைந்தன. ஆமாம் சுய மரியாதையுடன் நிறைவாழ்வு வாழ்ந்த மரம் அது. » (ஒ.பு.கதை பக்.-14)

« கனவானுக்குத் தனது தோரணைகள்மீதும் தனது பண்பாடுகள்மீதும் தாங்க முடியாத வெறுப்பு ஏற்படுகிறது ….தான் சன்மார்க்கியல்ல, வெறும் மனிதன் என முச்சந்தியில் நின்று உரக்கக் கூவி , தனது மேலங்கியைக் கிழித்தெறிந்துவிட்டு இன்ப வெள்ளத்தில் குளிக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. » (ஒ.பு.கதை பக்.68)

« மனிதன் தன்னை சகஜமாக வெளிப்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விட்டது. பரிபூரணத்தின் குரூரமான உருண்டைகள் பொறுப்பற்று அவன் முன் உருட்டப்படுகின்றன…..இந்த இரண்டாயிரம் வருடங்களாக மனிதன் அடைந்திருக்கும் சங்கடங்கள்… அவமானங்கள், தன் கரங்களால் தன் தலைமீது அவன் போட்டுக்கொண்ட அடிகள். இவற்றிலிருந்து அவனுக்கு முற்றாக விடுதலை கிடைக்கவேண்டும். அவன் இயற்கையாய் பயணத்தைத் தொடரட்டும். அவன் கால் சுவடுகளில் துளிர்ப்பவை எவையோ அவைதாம் நாகரிகம். » (ஜே.ஜே.சி.குபக்42)

« எனக்குப் புத்திசாலி என்று பெயர். ஒவ்வொன்றையும் தீர ஆராய்ந்து கனகச்சிதமாக அறிமுகப்படுத்துகிறவன் என்றுபெயர் பிறர் நினைக்கும் அளவுக்கு சாமர்த்தியம் என்னிடம் இல்லை என்பது உள்ளூர தெரிந்துகொண்டே இருக்கிறது. மற்றவர்களுக்கும் அது தெரிந்துவிடாமல் மறைத்து கொண்டிருப்பதுதான் உண்மையில் என் சாமர்த்தியம். என் வேஷம் தான் நான் என்று பிறர் நினைக்கும்படி செய்துவிடுகிறேன். » (குழ.பெண்.ஆண்கள் -பக்.182)

 

தம்மைப் புடம்போட்டுபார்த்து தம்மைப்பற்றிய உண்மைகளை ஏற்பதோடு அவற்றை பிறமனிதருடன் பகிர்ந்துகொள்ள சுயபுனைவு(autofiction) உத்தி. ஒரு சாதுர்யமான தேர்வென்றுதான் சொல்லவேண்டும். மூன்று நாவல்களுமே சுய புனைவு வகை. இவற்றுள் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ சமுத்திரம். கதை மாந்தர்களின் எண்ணிக்கையும் அதற்கேற்ப அதிகம் எனவே படர்க்கையில் சொல்லப்படுகிறது. ‘ஒரு புளியமரத்தின் கதையி’லும், ‘ஜே.ஜே சில குறிப்புகளி’லும் கதை மாந்தர்களின் எண்ணிக்கை குறைவு எனவே தன்மையில் உரைக்க சௌகரியம். படைப்பாளிகள் அனைவருமே புனைவென்று முன்வைக்கும் எழுத்தில் தங்கள் உண்மைஅனுபவங்களை பகிர்ந்து கொள்ளவே செய்கிறார்கள். எனினும் சுயபுனைவுகளில் உண்மைக்குக் கூடுதலாக இடமுண்டு, அவை போலி உண்மைகளாகவும் இருப்பதில்லை.

 

இளமைக்காலத்தில் எழுதப்பட்ட நாவல்கள் என்பதால் முதலிரண்டு நாவல்களிலும் எரிமலையின் அருகில்  நிற்பதைப்போன்ற உணர்வு வாசகனுக்கு. தன்மையில் சொல்லப்படுவதால் எனக்கென்ன பயம் என்ற தொனி.  சமூகம், அதன்  நெறிமுறைகள், இயக்கமுறை மொத்தமும் அவருடைய கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. சுயநலஅரசியல்வாதிகளின் சதுரங்க விளையாட்டு காலங்காலமாகவே பொது நலனுக்கு எதிரானவை என்பதைச்சொல்ல ஒரு புளியமரத்துக்கதை யெனில். ஜே.ஜே சில குறிப்புகளில் அவர் சாடுவது வெகுசன இலக்கியவாதிகளை.  ‘ஒரு புளியமரத்துகதையில்’ வரும் திருவிதாங்கூர் நேசன் இதழும்,  இசக்கியும், காதரும், தாமு போன்ற அரசியல்வாதிகளும் சரி  ‘ஜே.ஜே சிலகுறிப்புகளில்’ இடம் பெற்றிருக்கிற திருச்சூர் கோபாலன், முல்லைக்கல்மாதவன் நாயர், பொங்குமாக்கடல் தாமரைக்கனி போன்றவர்களும் மலையாளக்கரையில் இருக்கிறார்களோ இல்லையோ தமிழ்மண்ணில் சிரஞ்சீவிகளாக சுராவின் கனவுகளைப் பொய்யாக்குவதென்று பிடிவாதமாக இருக்கவேசெய்கிறார்கள்.

 

சுராவும் கதை மாந்தர்களும்

 

சுராவின் பாத்திரபடைப்புகளில் எனக்குப் பிரியமானவர்களில்  அநேகர் ‘குழந்தைகள், பெண்கள் ஆண்களில்’ தான் இருக்கின்றனர். பாலு என்கிற பெரிய குடும்பத்து குழந்தை உள்ளத்தைப்போலவே, வறுமையினால் பிஞ்சிலே பழுத்திருந்த லச்சம் சாதுர்யம் என்னைக் கவர்ந்தது. லச்சத்திற்கும் பாலுவிற்கும் இடையில் நடக்கும் உரையாடலை ரசித்து வாசிக்க வேண்டியவை. லஎஸ்.ஆர்.எஸ்ஸுக்குவாய்த்த லட்சுமியைப் பற்றி ஆயிரம் பக்கங்கள் எழுதலாம். « முல்லை பூத்துக்கிடக்கு. போய் பாருங்கோன்ன்னு தினசரி சொல்றா ஆனந்தம். நடக்க முடிஞ்சால் தானே ? அவ வச்சுக்க க் கூடாது. எனக்கு வச்சுக்க முடியாது ! » என எத்தனை எளிதாகச் சொல்லமுடிகிறது. எஸ்.ஆர்.எஸ் என்ற சாமர்த்தியசாலி இருட்படிமத்தை வெகு எளிதாகத் தோற்கடிக்க நறுமணத்துடன் ஜொலிக்கும் பெரிய தீச்சுடர் அவள். பிறகு « ரதிவீட்டில் ரம்பை சமையற்காரி »என்பதுபோல வந்து சேர்ந்த ஆனந்தம். பல கை மாறிய நாராயணி, தளியல் சேது அய்யர், வள்ளி…

 

மூன்று நாவல்களிலுமே கதைகள், கிளைக்தைகள் அதற்கேற்ப பாத்திரங்கள்.

 

« அடேயப்பா எத்தனைக் கதைகள் ! எவ்வளவு விசித்திரமான பாத்திரங்கள் ! எவ்வளவு கோணலும் நெரிசலுங்கொண்ட மன இயல்புகள் ! » (ஒ.பு.கதை பக்.15) என சுராவின் வார்த்தைகளைக்கொண்டே நாமும் வியக்க வேண்டியுள்ளது.

 

ஜே. ஜே. பாத்திரம் உருவாக ஆல்பெர் கமுய்மேலிருந்த பிரியமும், சுரா நேசித்த மலையாள எழுத்தாளரும் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் ஜே. ஜே சில குறிப்புகளை எழுதுகிறபோது அவனாகவே சுரா வாழ்ந்த்திருப்பார் என்பதுதான் நிஜம். «  ஜே.ஜே – நான். நான் ஆகவேண்டியதை ஜே. ஜே ஆகியிருப்பது. » (ஜே.ஜே. சிலகுறிப்புகள் பக். 23)

 

சுய புனைவு என்பதால் கற்பனை மனிதர்கள் குறைவு மூன்று நாவல்களுமே பாலுவை சுற்றிவருபவை. பாலுசார்ந்த மனிதர்களையும் அவன் அனுபவங்களையும் பேசுபவை. பெரும்பாலான கதை மாந்தர்கள் கற்பனைகளல்ல என்பதை ஊகிப்பதில் சிக்கல்களில்லை.

 

« 1958 இல் எங்கள் ஊரில் நான் விரும்பும் நாவலாசிரியர் ஒருவர் தங்கியிருந்தார். நானும் இலக்கிய நண்பரும் வெகுநேரம் ஆசையோடு அவருடன் பேசிக்கொண்டிருப்போம். பேச்சு அலுப்புற்ற வேளைகளில் அந்த ஓட்டலின் இரண்டாவது மாடியில் நின்று பஜார் இயக்கங்களை வேடிக்கைப்பார்த்தபடி இருப்போம். அங்கிருந்து நேராகக் கீழே பார்த்தால் சினிமா தியேட்டரை ஒட்டிப் பொரிகடலைகாரி ஒருத்தி உட்கார்ந்துகொண்டிருப்பது தெரியும். அவளுடைய சிரம் வெட்டி வைக்கப்பட்டிருப்பதுபோல தெரியும். இந்தக் கோணத்தில் பார்க்க நேர்ந்த தால் அவள் என் மனசில் இடம்பெற்றாள். » என்பது தமது பாத்திர தேர்வு குறித்து சுரா தரும் வாக்குமூலம். சுராவின் அபிமானம்பெற்ற ஜோசஃப் ஜேம்ஸ்ஸு, எம்.கே அய்யப்பன், பேராசிரியர், சாரம்மா. தாமோதர ஆசான், செல்லத்தாய், வள்ளிநாயகம் பிள்ளை ;எஸ்.ஆர்.எஸ், ரமணி , லட்சுமி, லச்சம், டாக்டர் பிஷாரடிபோன்ற நிஜ மனிதர்களும் சரி,  அவர் சண்டைபிடிகிற கற்பனை மனிதர்களும் சரி வேறு கண்டத்திலிருந்து குதித்த மனிதர்களாக இருக்க முடியாது. பாலுவின் தேசத்தைச் சேர்ந்தவர்களே.

 

சுராவின் இலக்கியம்

 

« கதைகளின் முடிவுகள் மட்டுமல்ல வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு முக்கியம் » (ஜே.ஜே சி.கு. பக்கம் -90)

« தோற்றங்கள் அல்ல தோற்றங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையே இலக்கியத்திற்கு ஆதாரமாகும்.. இதில் ஒரு நாளும் மாற்றம் இல்லை.  » (ஜே.ஜே சி.கு. பக்கம்-91)

 

உள்ளொளியைக் காண்பது, சிந்தனையை உண்மை மொழியில் தெரிவிப்பது, அத்தெரிவித்தலுக்கு உபயோகிக்கும் சொற்களை கவனமாகத் தேர்வுசெய்வது  ஆகியன, சுரா வகுத்துக்கொண்ட படைப்பு நெறிகளைத் தெரிவிக்கின்றன. மூன்று நாவல்களிலும் மறந்துங்கூட தான் வகுத்துக்கொண்ட இலக்கியகோட்பாட்டிலிருந்து விலகியவர் அல்ல. உதாராணங்காட்ட மூன்று நாவல்களையும் இங்கே பிரதிபடுத்த வேண்டியிருக்கும். ஒவ்வொரு வார்த்தையையும் இலக்கியப்படுத்தியிருக்கிறார். ஒரு புளியமரத்தின் கதையில் வரும் நவீன பூங்காவின் காட்சி சித்தரிப்பு. குழந்தை பெண்கள் ஆண்களில் வரும் மழைக்காட்சி, ஏன்  செஞ்சாறு கொழகொழவென்று பசுவின் வயிற்றோடு இரு பக்கங்களிலும் வழிந்தது என நாம் அற்பமென்று அலட்சியப்படுத்தும் ஒரு துக்கடா காட்சியைக்கூட still-frameஆக மாற்றும் அழகும் கலைதான், இலக்கியம்தான்.

 

அவரது எள்ளல் நடையையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

 

« உத்தியோகம் பார்த்த காலங்களில் ஒழுங்காக இருந்து பரிதவித்து விட்டாராம் அவள் அப்பா. அதற்குப் பரிகாரமாக பென்ஷன் வாங்கியதும் பிருஷ்டத்தை எல்லோரும் பார்க்குப்படி சொரிந்துகொள்ளவேண்டுமாம். சுதந்திர த்தைப் பற்றித்தான் என்னென்ன கற்பனைகள். »(குழ.பெண்.ஆண்கள் பக்-236)

« புளியமரத்தடியைப் பெருக்கிய தோட்டி அன்று விசேஷ சிரத்தை எடுத்துக்கொண்டு பெருக்கினான்….கீழே விழுந்துகிடந்த சுதந்திரக்கொடியை மட்டும் சிறுகுழந்தைக்கு சட்டை தைக்க உதவும் என்ற எண்னத்தில் சுருட்டி மடியில் வைத்துக்கொண்டான் »(ஒ.புளி.கதை பக்.76)

« அவனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தமாகியிருந்த சம்பளத்தொகை எங்களுடைய ஏழை முனிசிபாலிடியை பொறுத்தவரை கௌபீனத்தை அவிழ்த்து தலைப்பாகைக் கட்டிக்கொள்ளும் காரியம். » »(ஒ.புளி.கதை பக்.60)

 

இறுதியாக ஒன்றைச் சொல்லவேண்டும். ஜே.ஜே சிலகுறிப்புகள் நூலுக்கும் அர்த்தமற்ற குற்றசாட்டுக்கள் உண்டு. சமூக வாழ்க்கை என்பது கூட்டு வாழ்க்கை. புரிதல் நம்முடையதாக இருக்கலாம் நாமாக கற்றதுபோக சிலவற்றை இச்சமூகமும் போதிக்கிறது. பால் பூத்திற்கு செல்லும்போதும், பேருந்தில் இன்னொருவர் இறங்கிய நிறுத்தத்தில் நாமும் இறங்க வேண்டியிருந்தது என்பதாலும், உணவு விடுதியில் எதிர்மேசையில் இருப்பவர் ஆர்டர் செய்ததை நாமும் ஆர்டர் செய்து சாப்பிட்டோம் என்பதாலும், சவரக்கத்தியைக் கழுத்தில் இறக்குகிறபோது தேவையின்றி வந்துபோகிற அச்சமும் எல்லோருக்கும் பொதுவான அனுபவங்கள்தான், ஆனால் அவற்றை வெளிப்படுத்தும் மொழியில்தான் இலக்கிய ஆளுமைகள் வேறுபடுகிறார்கள்.

———————————————————–

 

படித்ததும் சுவைத்ததும் -5: குறிப்பில் குறிப்புணர்வார்: சா.பாலுசாமி

அர்ச்சுனன் தபசு, நாயக்கர் கால கலை இலக்கிய கோட்பாடுகள்- சா.பாலுசாமி   

 

ஒரு கால கட்டத்தின் கலை இலக்கியத்தை வாசிப்பதென்பது, அக்காலகட்டத்தின் சமூகத்தையும், மக்களின் வாழ்நெறியையும் அறிதலாகும் கலைக்கூறுகள் எவ்வடிவமாயினும் அது பண்பாட்டின் அடையாளம். மனித இனம் தனது பண்பாட்டினை, உணவு, உடை, உரையாடும் மொழி, கொண்டாடும், பண்டிகை, ஆண்பெண் உறவு, குடும்பம், சமூகம் என வெளிப்படுத்துவதோடு திருப்திகொள்வதில்லை, அது சார்ந்த மகிழ்ச்சியை,  துயரை, அச்சத்தை, கவலையை, கோபத்தை, வியப்பை, அன்பை, பரிவை, காமத்தை உணர்வுகளைக்கொண்டு  தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களுடன் உரையாடவும்  செய்கிறது,    பார்த்தலும், நுகர்தலும், சுவைத்தலும், கேட்டலும், தொட்டுணர்தலும், நம்மைசுற்றியுள்ள நிகழ் உலகை புரிந்துகொள்ளவும் ; அப்புரிதலால் இசைந்தோ முரண்பட்டோ  வாழ்க்கையை நகர்த்தவும் செய்கிறோம். இந்த அடிப்படை உணர்வுகள் இல்லையேல் பிரபஞ்சமே பொய் என்றாகிவிடும். சா. பாலுசாமி போன்றவர்கள் கடந்த காலத்தையும் புரிந்துகொள்ள  முயற்சிக்கிறார்கள். சிக்மண்ட் பிராய்டு கூறுவதைப்போல « சிதைந்த நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சி ».  பிராய்டு உளவியல் அறிஞர் என்பதால், தொல்லியல் முயற்சிகளுக்கு, உளவியல் அகராதியில் விளக்கம் தேடுகிறார். தொல்லியல் அறிஞர்கள் மானுடம் கடந்துவந்த பாதையைச் தேடிச்செல்பவர்கள்.காலத்தால் புலம்பெயர்ந்திருக்கும் மனித கூட்டத்திற்கு, புறப்பட்ட புள்ளியின் மகத்துவத்தை நினைவூட்டும் பணி.

 

மூதறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி  « தமிழ் அழகியல் பற்றிய மதிப்பீடு, தமிழ்க்கலைகளின் ஒட்டுமொத்தமான மொத்தமான மதிப்பீட்டிலிருந்து வெளிவரவேண்டும் » என்ற ஒரு விருப்பத்தை நாயக்கர்கால கலைக்கோட்பாடு நூலின்அணிந்துரையில் தெரிவித்திருக்கிறார்.  தமிழ் நிலத்தின்  இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக களப்பிரர், பல்லவர், நாயக்கர், மொகலாயர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக் காரர் ;  இன்றைக்கு இந்திய யூனியன் என்று தமிழ் மண் அடிமைப்பட்டுக்கிடக்கிறபோது இதில் தமிழ் அழகியல், தமிழ்க்கலைகள் எங்கே தேடுவது ? எப்படி அடையாளப்படுத்துவது ? நண்பர் சா.பாலுசாமி,  நாயக்கர் கால கலைகளில் இந்தியநாட்டின் பிறபாணிகளும், ஐரோப்பிய தாக்கமும் இருக்கின்றனவென்று தெரிவித்துள்ள உண்மையை நாம் அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிடமுடியாது.  தொடர்ந்து தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி :

« சிற்றிலக்கியங்களை எழுதிய புலவர்களின் பெயர்களைக்கூடத் தெரியும் ஆனால் சிதம்பரத்து நடராஜரையோ, தஞ்சை பிரகதீஸ்வரத்து நந்தியையோ …..வடித்தவர்களின் பெயர் தெரியாது. இதற்குக் காரணம் கலையாக்கம் பற்றிய தமிழ்நாட்டுச்(இந்திய) ஒழுங்கமைவு » என முன்வைக்கும்  குற்றச்சாட்டில் உள்ள உண்மையையும் நாம் மறுப்பதற்கில்லை. இதை பாலுசாமியில் ஆய்வுமுடிவுகளும் உறுதி செய்துள்ளன.

இந்தியத் துணைக்கண்டத்தில் இலக்கியப் படைப்பாளிகளைப்போல பிறதுறைசார்ந்த கலைஞர்கள் அங்கீகரிக்கப் படுவதில்லை. நாமறிந்த தமிழகத்தில் ஓவியர் என்றால் பேனர் வரைபவர்கள்,  வீர சந்தாணத்தின் மரணத்தை சினிமா நடிகர் மரணமென சொன்னால்தான் தமிழர்கள் விளங்கிக் கொள்வார்கள் எனும் கொடுமை. ஐரோப்பிய நாடுகளிலோ  குழாய் பழுதுபார்ப்பவர், ரொட்டி சுடுபவர் கூட கலைஞர்(l’artisan).  இந்நாடுகளில் ஓவியம் சிற்பம் முதலான துறைகள் மட்டுமல்ல சமையல், நிழற்படம், ஆடை அலங்காரம், ஆபரணம், பேச்சு  இப்படி அனைத்தையும் கலையாக பார்க்கும் மரபு. நமது மரபில் இன்றுங்கூட தச்சர், கல்தச்சர், பொற்கொல்லர் ஆகியோரை கலைஞர்களாகப் பார்ப்பதில்லை சாதிக்குள் அடக்கி, கலைக்கு புறத்தில் வைத்து தொழிலாளிகளாகப் பார்க்கும் விநோதம் உள்ளது. இத்தகைய சமூக ஒழுங்கமைவில்  சா. பாலுசாமி போன்றவர்களின்  உழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. குடவாயில் பாலசுப்பிரமணியன் ‘ அர்ச்சுனன் தபசு’நூலுக்கு வழங்கியிருக்கிற அணிந்துரையில் :

« ஆய்வு, நுட்பம், விருப்பு வெறுப்பற்ற நடுநிலை பிறழாத அணுகுமுறை, அறிஞர் தம் கருத்துக்களை காய்தல் உவத்தலின்றி காணும்பண்பு, தொன்மங்கள் குறித்த ஆழமான பார்வை, எல்லா மொழிகளையும் நேசித்து உண்மைகாணும் திறம், கலையியல் கோட்பாடுகளின் வெளிப்பாடு, ஜடமென உலகப் பார்வையில் திகழும் பாறையினை நம்மோடு பேசவைத்துள்ள பாங்கு » என ஆய்வாளர் தொழிற்பட்ட முறையைப் பாராட்டியுள்ளார். காரணம் நம்மிடத்தில்  சார்பற்ற ஆய்வாளர்கள் குறைவென்பதை, அவர் நன்கறிவார்.

சா. பாலுசாமி நேற்றைய தமிழகம்  அங்கீகரிக்க மறந்த முன்னிலை படுத்தத் தவறிய படைப்பாளிகளைக் குறிப்பாக ஓவியர்களையும் சிற்பிகளையும் அவர்கள் படைப்பூடாக  பெருமைபடுத்துகிறார். இலக்கியத்திற்கு உ.வே. சா என்ன செய்தாரோ அதனையே சா.பாலுசாமி போன்றவர்கள் சிற்பத்திற்கும், ஓவியத்திற்கும் செய்திருக்கிறார்கள். ஏதோ ஆசிரியர் தொழில் செய்தோம், கருத்தரங்குகளில் கலந்துகொண்டோம், நான்கு ஐந்து ஆட்டோ ரிக்‌ஷாக்களை வாங்கிவிட்டு காசுபார்த்தோம் என்றில்லாமல் கள ஆய்வுக்கு நேரத்தை ஒதுக்கி, முடிவின்றி பயணம் செய்து இறுதியில் கண்டறிந்த உண்மைகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்கள்.

இது போன்ற ஆய்வுகளில் அக்கறைகொள்ள  முதலாவது தேவை தேர்வு செய்த பொருள் குறித்து ஞானமும், பேரார்வமும். அடுத்ததாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் பொருளைத் துல்லியமாக அவதானித்தல். இறுதியில் கிடைத்த தகவல்களை ஒரு முறைக்குப் பலமுறை பிற அறிஞர்கள் கண்ட உண்மைகளோடு  ஒப்பீடு செய்து, நடுநிலமையோடு தம்முடைய கருத்தைப் பதிவு செய்தல். வருங்காலத்தில் இந்நூல்களெல்லாம் ஆய்வுக்கு உதவலாம் என்பதால் பொறுப்புடனும், கவனத்துடனும்  அக்கருத்துக்களை பதிவுசெய்வதும் அவசியம். நண்பர் பாலுசாமி கூடுதலாகவே உழைத்திருக்கிறார் என்பதுதான் நூல்கள் தெரிவிக்கும் உண்மை.

 

. ஆய்வுப் பொருள் பற்றிய ஞானமும், பேரார்வமும்

செய்யும் தொழில் எதுவாயினும் அதில் முழுமையாக ஒருவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அதிலும் ஆய்வாளர்களுக்கு இக்குணம் பெரிதும் இன்றிமையாதது. ஆசிரியரின் நூல்களைப் புரட்டிப்பார்க்கிறபோது, ஏதோ கடமைக்குச் செய்தவரல்ல என்பதை ஒவ்வொரு பக்கத்திலும், தேர்வு செய்த தலைப்புகளிலும், அவற்றை அணுகும் முறையிலும், காட்டும் ஆதாரங்களிலும், அறிஞர்பெருமக்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தயக்கமின்றி தேடிப்பெற்றதிலிருந்தும் அறிகிறோம்  கீழ்க்கண்டவரிகளும் இத்துறைமீது அவர் கொண்டிருந்த பேரார்வத்தை புரிந்துகொள்ள உதவுகின்றன :

 

« 1933 ஆம் ஆண்டு டாக்டர் தயா எங்களை மாமல்லைக்கு அழைத்துச்சென்றார். அங்கிருந்த ஒவ்வொரு சின்னத்தையும் ஆய்வு நோக்கில் அவர் விவரித்தபோது ஏற்பட்ட கலையறிவும் கலையனுபவமும் எல்லையற்ற பரவசத்தை ஏற்படுத்தின. கலைச்சின்னங்களை அணுக வேண்டிய முறையும் புரிந்தது. பின்னர் அவருடனும் மாணவர்களுட னும் பலமுறை மல்லைக்குச் சென்றுவரும் வாய்ப்பால் பல்லவக் கலைகுறித்துப் பயிலும் ஆர்வம் தொடர்ந்தது » (  நூண்முகம், அர்ச்சுன ன் தபசு பக்கம் 19)

 

இந்நிலையில்  குமர குருபரர் பாடுவதைப்போல :

 

« மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார் »

 

என்ற நிலைக்கு நமது ஆய்வாளரும் ஆளானார் என்பதைக்  கீழ்க்கண்ட வரிகள் உறுதிசெய்கின்றன.

 

« ……..அவ்விளக்கங்களால் நிறைவுபெறாத மனநிலை தொடர்ந்து தேடச்செய்தது. ஆயினும் , நம்பத்தகுந்த உறுதியான முடிவுக்குப் பல்லாண்டுகளாக வர இயலவில்லை. இருப்பினும் கடந்த இரண்டாண்டுகளாக ஒரு தீவிர மனநிலையோடு தொடர்ந்து தேடியதில், பல்வேறு கருதுகோள்கள் எழுந்து, மாறி, இறுதியாக ஒன்றை உறுதி செய்து, விளக்க முடிந்தது. » (நூண்முகம், அ.த. பக்கம் 19).

 

ஆய்வில் கண்டறிந்த முடிவுகள் அறிஞர்பெருமக்களுக்கு மட்டுமின்றி பிறமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் சொல்வதற்கு ஆய்வுகுறித்த தெளிதலின்றி சாத்தியமில்லை. ‘நாயக்கர் கால கலைக்கோட்பாடுகள் நூலில், ஆசிரியர், விஜயநகர அரசு, தமிழ் நாட்டில் அவர்கள் காலூன்றியது, அவ்வரசின் பிரதிநிதித்துவ ஆட்சிகள், அவர்கள்வீட்சிக்குப்பின் சுயாதீனமாக ஆண்ட நாயக்கர்கள், என நாயக்கர் கால கலைத் தடத்தை அரசியல் வரலாற்றுடன் தொடங்கி, கலையின்பல்வேறு பரிமாணங்கள், அவற்றின் உள்ளடக்கங்களென்று பரந்து விரிந்த கலைஆகாயத்தை, வாசகனின் கண் சிமிழுக்குள் அடைப்பதற்கு அசாத்திய துணிச்சலும் ஞானமும் வேண்டும்.  அவ்வாறே ‘அர்ச்சுனன் தபசு நூலில் ஒவ்வொரு சிற்பத்தையும் விவரிக்கும் முன்பாக அச்சிற்பத்தோடு  இணைந்த இலக்கியம், புவியி யல் தகவல்களை ஆதார த்துடன் தெரிவித்துள்மை ஆய்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. நூலின் நன்றியுரையில் அவர் சுட்டும் அறிஞர் பெருமக்களின் பெயர்கள், இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள ஆய்வறிஞர்களின் கருத்துக்கள் அனைத்தும் நூலுக்கும், ஆசிரியரின் ஞானத்திற்கும் பெருமை சேர்ப்பவை.

 

. அவதானிப்பும்  ஆய்வாளரும்

 

ஓர் ஆய்வாளருக்கு இருக்கவேண்டிய சிறப்பு குணங்களில் மிகமுக்கியமானது அவதானிப்பு, பொறுமையுடன் ஒரு பொருளை கண்களால் துழாவ அறிந்திருத்தல், உற்று நோக்குதல். இந்நூல்களில் அவர் குறிப்பிட்ட இடங்களுக்கு நாமும் சென்றிருக்கிறோம். நம்பில் பெரும்பாலோர் கோபுரங்களையும், மண்டபங்களையும், தூண்களையும், சிற்பங்களையும், சுதைகளையும்   பார்க்கவும் செய்கிறோம். வீட்டிற்கு வந்ததும் மதுரைக்குச்சென்றேன், மாமல்லபுரம் சென்றேன் என்று நமது பயணம் புள்ளிவிவரத்தை த் தாண்டி பெரிதாக உதவுவதில்லை. ஆனால் பாலுசாமி போன்றவர்கள் சிற்பங்களையோ, ஓவியங்களையோ பார்ப்பவர்களில்லை அவதானிக்கிறவர்கள்.

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல்.(குறள்  703, குறிப்பறிதல்)   குறளுக்கிணங்க ஒருவரின் முக க் குறிப்புக்கொண்டே  அவரது உள்ளக்குறிப்பை உணரக்கூடிய  ஆற்றல் சா.பாலுசாமிபோன்ற ஆய்வாளர்க்கு உண்டு..

« தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலில்  வாலி, சுக்ரீவன் போர்க்காட்சி ஒரு தூணிலும், வாலிமீது ம்பு தொடுக்க வில் வளைத்துள்ள இராமர் உருவம் மற்றொரு தூணிலும் காட்டப்பட்டுள்ளன. இராமன் உள்ள தூணிலிருந்து பார்த்தால் வாலியின் உருவம் தெரியும்படியும், வாலி உள்ள தூணிலிருந்து பார்த்தால் இராமன் உள்ள தூண் தெரியாதபடியும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். »(பக்கம் 135 நா.க.கோ)

 

18 ஆம் நூற்றாண்டைச்சார்ந்த சிதம்பர சிவகாமியம்மன் ஆலய ஓவியம் : பெண்கள் இருவர் சமைக்கும் காட்சி

« அடர் சிவப்பு, மஞ்சள் கலந்த சிவப்பு, பச்சை ஆகிய மூல வண்ணங்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. ஆடைக்கும் உடலுக்கும் ஏறக்குறைய ஒரேவண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுப்புக்கற்கள், எரியும் தீ, உறிக்கயிறு, உறியிலுள்ள பானைகள் அனைத்திற்கும் ஒரே வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. சமைக்க வைத்துள்ள காய்க்கும் , புடவைகளின் முந்தானைக்கும் ஒரே வண்ணம் கொடுக்கப்படெடுள்ளது. உருவங்கள் ஒரே திசை நோக்கி  அமைந்துள்ளன. அமர்ந்துள்ள பெண்ணின் தோள்களும் சமைக்கும் பெண்ணின் கைகளும் அளவொப்புமை யற்றுள்ளன. காட்சியில் பயன்படுத்தப்பட்ட வண்ணங்களே மேற்பகுதியை அலங்கரிக்கவும் தரைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. (பக்கம் 206, நா.க.கோ)

« அவர் முன்னர் நிற்கும் தபசி, ஒற்றைக்காலில் நின்றவண்ணம் கைகளைத் தலைக்குமேல் உயர்த்தி, விரல்களைக் கோர்த்துள்ளார். மார்பில் எலும்புகள் துருத்தி க் காணப்படுகின்றன. இடையில் ஒரு சிறு ஆடை உள்ளது. முகம் மிக மேல் நோக்கியுள்ளதால் நேர்பார்வைக்கு மீசையும் தாடியுமாக வாய்ப்பகுதிமட்டுமே பெரிதாக த் தெரிகிறது.(பக்கம் 36 , அ.த)

சா. பாலுசாமியின் நூல்களில் இது போன்ற பல உதாரணங்களை அவதானிப்பிற்குச் சான்றாக எடுத்துக்காட்ட முடியும். நாயக்கர்கால கலை கோட்பாடுகளினும் பார்க்க அர்ச்சுன ன் தபசுவில் கூடுதலாக உதாரணங்கள் இருக்கின்றன.

 

 இ. ஒப்பீடும் முடிவும்.

 

ஓர் ஆய்வாளர்  எடுத்துக்கொண்ட பொருளை கவனமாக அவதானித்தபின் கிடைத்த தகவல்களை பிறசான்றுகளுடன் ஒப்பிட்டு பின்னர் தீர்க்கமான தொரு முடிவுக்கு வருகிறார். அம்முடிவு குடவாயில் பாலசுப்பிரமணியம் பாராட்டுவதைப்போன்று நடுவு நிலைமையோடும் எடுக்கப்பட்டுள்ளது.

 

« தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின். » என்கிறது குறள்.

 

« காடுகள் மிகுந்த இமயத்தின் இயற்கை இட து புறபாறையில் காட்டப்பட்டுள்ளது. மூன்றாம் வரிசையில் பாயும் சிங்கத்திற்கு அடுத்தும், இரண்டு வேடர்களுக்கு இடையேயும் உடும்பு ஏறுவதாகவும் பெரு மரங்கள் காட்ட ப்பட்டுள்ளன. வானரத்திற்கும் முயலுக்குமிடையே தொகுப்பாக மரங்கள் செதுக்கபட்டு அடர்வனம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்ந்த சிகரங்களைக்கொண்ட இமயத்தின் மலைகளும் ஆழ்ந்த பள்ளதாக்குகளும் பொங்கிப்பாயும் ஆறுகளும் விலங்குகள், வனங்கள் முதலிய இயற்கைப்பொருட்களும் இச்சிற்பத்தொகுதியில் மிக நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. (பக்கம் 69 அ.த)

 

« பனைமரம்போல் உயர்ந்த மலைகளில்  உச்சியிலிருந்து இறங்கிவந்துள்ள இந்த யானைகள் வைடூர்யம்போல் மின்னுகிற இப்பெரிய தடாகத்தைக் கலக்குகின்றன.

என அமையும் மகா பாரத த்தின் வருணனைக்கு ஏற்ப இந்த யானைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. »(பக்கம் 172 அ.த)  போன்றவற்றைக்கொண்டு முடிவுகளை தகுந்த ஒப்பீடுகளுக்குப் பின்னரே எடுத்துள்ளார் என்பது தெளிவு.

 

அவதானித்து கிடைத்த தகவல்கள், பிறசான்றுகள் அடிப்படையில் பகீரதனா ? அர்ச்சுனனா ? தவசி உண்மையில் யார் என்பதை இமயமலையின் இயற்கைப் பண்பு சான்றுகளை, மகாபாரத சான்றுகள் ஆகியவற்றோடு மாமல்லபுர சிற்பத்தொகுதியில்  இடம்பெற்றுள்ள மரங்கள், விலங்குகள், கந்தர்வர்கள், மலைவேடர்கள் ஆகிய உருவங்களை ஒப்பிட்டு தவசி அர்ச்சுனன்  எனத் தீர்மானத்திற்கு வரும் ஆய்வாளர் முடிவு இங்கே மிகவும் வலுவானது.

 

ஆய்வாளர் சா.பாலுசாமியைப்போல , பேராசிரியர் க. பஞ்சாங்கத்தைப்போல மொழித்துறையிலும் பிறதுறைகளிலும் உண்மையாக உழைப்பவர்கள் குறைந்த எண்ணிக்கையினர். இவர்களையெல்லாம் அடையாளம் கண்டு போற்றுகிற பொறுப்பு மத்திய மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

* அர்ச்சுன ன் தபசு, நாயக்கர் கால கலை இலக்கிய கோட்பாடுகள் இரண்டும் காலச்சுவடு பதிப்பக வெளியீடு.

படித்ததும் சுவைத்ததும் -4 நீர்மேல் எழுத்து -ரெ. கார்த்திகேசு

 

மனிதத்தைப்போலவே சிறுகதை அருகிவருகிறது.

சிறுகதை கவிதையின் உரைநடை வடிவமென்பதை ஒப்புக்கொண்டால், இன்றைய படைப்புலகில் சிறுகதைகளின் இடமென்ன அதன் தலைவிதி எப்படி என்பதுபோன்ற கேள்விகளுக்கு அவசியமில்லை. பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் புதிய சிறுகதை தொகுப்புகள் வருவதில்லை அல்லது கவனம் பெறும் அளவிற்கு இல்லை.

 

வாலிப வயதும், மனதிற்கொஞ்சம் காதலும், தனக்குக் மொழி கொஞ்சம் வளைந்து கொடுக்கிறதென்று கண்மூடித்தனமாக நம்பவும் செய்தால் கவிதை எழுத ஆரம்பித்துவிடலாமென நினைத்து எழுதுபவர்கள் பலரும் தாங்கள் அங்கே இங்கேயென்று நகலெடுத்த எழுத்து உதவத் தயங்குகிறபோது ஓடிவிடுவார்கள். உலகளந்த நாயகிக்கு, கைப்பிடிக்கும் நம்பிக்கு, உயிர் நீத்த உத்தமனுக்கு என்றெல்லாம் கவிதைபடித்தவர்களை அறிவேன். இவர்கள் மற்ற நேரங்களில் எழுதுவதில்லை. எழுத்தை விட்டு இவர்கள் ஓடவில்லை, இவர்களிடமிருந்து தம்மைக்காப்பாற்றிக்கொள்ள எழுத்து ஓடி இருக்கிறது. காதற்கவிதையிலிருந்து கொஞ்சம் விடுபட்டு சிறுகதை வடிவத்தைக் கையிலெடுக்கிறவர்களுமுண்டு.

 

வெகுசன புரிதலில் கவிதை எழுதுவதும் சிறுகதை எழுதுவதும் எளிதென்று நம்பப்படுவதே இவற்றுக்கெல்லாம் முதன்மையானக் காரணம். உண்மையில் படைப்புத்துறையில் மிகமிகக் கடினமாதொரு வடிவங்களென்று சொன்னால் அது கவிதைகளும் சிறுகதைகளும். இவற்றில் ஜெயிப்பதற்கு கூடுதலாக திறன்கள் வேண்டப்படுகின்றன. அத்திறன் நிச்சயமாக பெயருக்கு முன்னால் தம்மைத்தாமே வியந்தோதிகொண்டு எழுதுகிறவர்களிடமில்லை என்பதால்தான் பட்டுக்குஞ்சலங்களின் உபயோகத்தை புரிந்து விலக்கவும் அசலான கவிஞனை, எழுத்தாளனை அடையாளப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

 

மனித வாழ்க்கையென்பது கூடிவாழ்தலென்ற புரிந்துணர்வு என்றைக்குப் பிறந்ததோ அன்றே வாய்மொழிகதைகள் தோன்றின. இயல்பிலேயே மனிதன் இட்டுக்கட்டிச் சொல்வதிலும், ஒன்றைப் பலவாக திரித்துக்கூறுவதிலும் தேர்ந்தவன். ஆனால் வரி வடிவில் கதைசொல்வதென்று இடைக்காலத்தில் முயன்றபோது அவற்றில் கட்டாயம் உண்மையும் இருக்கவேண்டுமென நினைத்திருக்கிறார்கள்.

 

சிறுகதைகள் குறித்து மூத்த படைப்பாளிகள் தெரிவித்திருந்த அபிப்ராயங்கள் பலவும் திரு. வே. சபாநாயகம் தயவால் ‘திண்ணை’யில் நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும்.

 

எனக்கு, « ஒற்றைக்கருவை மையமாகக்கொண்டு சுருக்கமாகவும், செறிவாகவும்; வாசிக்கத்தொடங்கியவேகத்தில் முடித்து, எல்லைக்கோட்டைத் தொட்டவன் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முனையும் மனநிலைக்கு நம்மை ஆளாக்கும் எந்தப்படைப்பும் நல்ல சிறுகதைதான் ». தர்க்கங்கள், விவாதங்கள், நீளமான வர்ணனைகள் நாவல்களுக்கு உகந்தவையாக இருக்கலாம், ஆனால் சிறுகதைகளுக்கு உதவாது. இதுதவிர ஒரு நல்ல சிறுகதைக்கு அடையாளம், நீங்களும் நானும் உண்மையென மனப்பூர்வமாக நம்புவதை நியாயப்படுத்த வேண்டும். பிறகு சொல்லும் உத்தியும் தேர்வு செய்யும் சொற்களும் அவரவர் சாமர்த்தியம்.

 

‘நீர்மேல் எழுத்து’ ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை தொகுப்பு. தமிழில் படைப்புலகில் எவரையும் குருவாக வரித்துக்கொள்ளாது, பெயருக்காக அல்ல எழுத்துக்காக எனத் தீர்மானித்து வாசிப்பவர்களுக்கு அவர் நன்கு பரிச்சயமானவர். திண்ணை இணைய இதழை தொடர்ந்து வாசித்துவருபவர்களுக்கு தோழமையான பெயர். ஆறேழு வருடங்களுக்கு முன்பு இணையத்தில் இராயர் காப்பி கிளப், மரத்தடி போன்ற மடலாடுகுழுக்கள் இருந்தன. இரா.முருகன், பா.ராகவன், மாலன், இராம.கி. ஆர்.வெங்கிடேஷ், நா.கண்ணண், ஹரிஹரன் என்று பலரை அப்போதுதான் அறியவந்தேன். எவர் மனதையும் புண்படுத்தாது எழுதும் மென்மையான ரெ.காவின் எழுத்தோடும், படைப்புகளோடும் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டது அப்போதுதான்.

 

ரெ.கார்த்திகேசு பினாங்கு (மலேசியா) நகரைச் சேர்ந்தவர். மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் தகவல் சாதனைத்துறையில் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். மலேசிய வானொலி, தொலைக்காட்சியின் முன்னாள் அலுவலர்.  சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர். அனைத்துலக நாடுகள் பலவற்றில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்த பெருமைக்கும் உரியவர். கற்றகல்வியையும் பெற்ற அனுபவத்தையும் தங்கள் படைப்புகளில் முறையாக – பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் தமிழ்படைப்புலகில் குறைவாகத்தான் இருக்கவேண்டும். சுஜாதா, இரா.முருகனைத் தவிர வேறு பெயர்களை எனக்குத் தெரியாது. எனவே ரெ. கார்த்திகேசு பற்றிய இச்சிறு குறிப்பு அவசியமாகிறது. அறிமுகம் சற்று மிகையாகத்தோன்றினாலும் இச்சிறுகதைதொகுப்பிலுள்ள படைப்புகளை வாசிக்கிறவர்களுக்கு அறிவியல், சமூகமென்ற இரு குதிரைகளிலும் சவாரி செய்யும் ரெ.கார்த்திகேசுவின் ஆற்றலை புரிந்துகொள்ள உதவக்கூடும்.

 

நீர் மேல் எழுத்து என்ற இச்சிறுகதைதொகுப்பில்  நூலின் பெயரிலேயே அமைந்த ஒரு சிறுகதையோடு மேலும் இரண்டு அறிவியல் புனைகதைகள் இருக்கின்றன. பிறவற்றுள் மல்லி என்கிற சிறுமியை மையமாகக்கொண்ட நான்கு கதைகள் உளவியல் சார்ந்தவை, எஞ்சியுள்ள பிறகதைகள் நமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை ஆய்பவை. எல்லாவற்றிலும் தொடக்கத்தில் நான் கூறியிருப்பதுபோன்று உண்மை இருக்கிறது. கதைகளில் இடம்பெறுகிறவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல: நானும் நீங்களும், அல்லது நமது அண்டை மனிதர்கள். இதுவே ரெ.கார்த்திகேசுவின் கதைகளுக்கு ஒரு கனத்த வாசிப்பை ஏற்படுத்தித் தருகின்றன.

 

ஆக்கலும் அழித்தலும், மல்லியும் மழையும், என் வயிற்றில் ஓர் எலி , அமீருக்கு இரண்டு கேக் என்ற நான்கு கதைகளும் மல்லி என்ற சிறுமியின் உலகத்தைக் கண்டு பிரம்மித்து உடல் சிலிர்க்கும் அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொள்பவை.

 

பொதுவாக கதைகளில் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவு, அன்பு போன்ற சொற்களை விரித்து எழுத கணவன் மனைவி, காதலன் காதலி என்றிருக்கவேண்டுமென்ற விதியை கதை சொல்லி எளிதாக தகர்க்கிறார். இக்கதைகள் நான்கிலும் கதைசொல்லியும், கதை சொல்லியின் பேர்த்தியும் பிரதான பாத்திரங்கள். மல்லி மீதூறும் அன்பும் பரிவும், அவர் நெஞ்சக்குழியிலுள்ள வெறுமையை நிரப்ப உதவுகிறது. மழலைசெல்வத்தின் பெருமைகளை குறள்கள் மூலமாக அறிந்திருக்கிறோம். வள்ளுவன் தெரிவிக்கும் அன்புகூட ஒருவழிபோக்கானதே தவிர இருதரப்பு பரிவர்த்தனைகள்குறித்து பேசுவதில்லை. எனக்கென்னவோ வாசித்தபோது வள்ளுவனைக்காட்டிலும் குமரகுருபரும், மீனாட்சியும் நினைவுக்கு வந்தார்கள்.

 

 

‘என்னம்மா இப்படி பண்ணிட்டே’

 

‘ஆ’ னா எழுதினேன் தாத்தா’

 

‘ஐயோ மல்லி, என்னம்மா செய்ற?’

 

‘இது ‘ஆ’வன்னா தாத்தா’

(-ஆக்கலும் அழித்தலும்)

 

 

‘மல்லி, நேத்து கோழிதானே சாப்பிட்டீங்க? நல்லா இருக்குன்னு சொன்னீங்களே!”

நேத்து நல்லா இருந்துச்சி தாத்தா, இன்னைக்கு  நல்லா இல்லை!’

 

(மல்லியும் மழையும்)

 

குழந்தை மல்லிக்கும் கதைசொல்லிக்குமான உரையாடலில் இருதரப்பிலும் அவரவர் வயதுகேற்ப அன்பின் விசையும், நுட்பமும் மெல்லிய இழைகளாக வெளிப்படுகின்றன. இக்கதைள் புனைவு அற்ற உரையாடலுக்கு நம்மை அழைத்து செல்கின்றன எனலாம்.

 

மல்லி கட்டமைக்கும் உலகை தம்முடைய வயதும் அனுபவமும் கொண்டு மதிப்பீடுசெய்வதும் அம்மதிப்பீட்டில் தாம் தோற்பதும், அப்படி தோற்பதற்காகவே மல்லியின் அக உலகை அடிக்கடித் தட்டி திறப்பதும், ஏற்கனவே நான் குறிப்பிட்டதுபோன்று கதை சொல்லி தமக்கு தேவையான அன்பு, உடமை, உணர்வுதேவைகளை மீட்டெடுக்கும் முயற்சி. புனைவிற்கும் அபுனைவுக்குமிடையேயான இந்த உரையாடல் யுத்தத்தில் வழக்கம்போல உண்மையே ஜெயிக்கிறது.

 

அறிவியல் கதைகள் பட்டியலில்: எதிர்காலம் என்று ஒன்று, நீர்மேல், எழுத்து மண்சமைத்தல் என மூன்றுகதைகள் இருக்கின்றன. ‘எதிர்காலம் என்று ஒன்று’, கதையைக் குறித்து சொல்ல எதுவுமில்லை. ‘சுஜாதா’வை நடுவராகக்கொண்டு ‘திண்ணை’யும் மரத்தடியும் நடத்திய அறிவியல் புனைகதைபோட்டியில், இரண்டாம் பரிசுபெற்ற கதை. தேர்வு செய்தவர் சுஜாதா. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் எல்லோருக்கும் வாய்க்காது. ரெ.கார்த்திகேசுவிற்கு வாய்த்தது. இத்தொகுப்பிலுள்ள பிறகதைகளும் திண்னையில் வந்தவை என்பதால் அவற்றை நண்பர்களின் மதிப்பீட்டிற்கு ஒதுக்கிவிட்டு பிறகதைகள் குறித்து பகிர்ந்துகொள்கிறேன்.

 

அன்றாடம் சந்திக்கும் சமூகப்பிரச்சினைகளை மையமாகக்கொண்ட கதைகளில் உண்மை அறிந்தவர், கொஞ்சம் மனிதன், மௌனமாய் என்ற மூன்று கதைகளும் வாசகனுக்கு அப்பால் என்னிடத்தில் ஓர் எழுத்தாளனும் இருக்கிறா¡ன் என்பதால் மனதிற் சிறிது பொறாமையுடன் வாசிக்க வைத்தவை.

 

மௌனமாய் என்கிறை கதையைப்பற்றிய என்கருத்தை பதிவு செய்ய மறந்தாலும், உண்மை அறிந்தவர்.. கொஞ்சம் மனிதன் என்ற இருகதைகளைப்பற்றி எழுதியே ஆகவேண்டும்.  இக்கதைகளுக்கான தலைப்பை எள்ளலோடு ஆசிரியர் தேர்வு செய்திருக்கவேண்டும்.

 

முதல் கதையின் நாயகன் படித்த நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி. இரண்டாவது கதை நாயகன் விளிம்பு மனிதன். முன்னவர் தம்மைச்சுற்றி என்ன நடக்கிறதென்கிற பிரக்ஞையற்ற புத்தி ஜீவி யெனில், இரண்டாவது ஆசாமி தன்னைச்சுற்றி என்ன நடக்கிறதென்பதை அறிவதாலேயே  பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறான்.

 

புத்திஜீவியை அறிமுகப்படுத்தும் முன் ஆசிரியர் அவர் வீட்டைப்பற்றிய முகவரியைக்கொடுக்கிறார்.

 

“வீட்டின் முன்பக்க இரும்பு கேட்  துருபிடித்துக்கிடந்தது. மெல்ல தள்ளினாள் சிவகாமி. மெதுவாக கிறீச்சிட்டுத் திறந்துகொண்டது. நாதாங்கி பொருத்தப்பட்டிருக்கவில்லை. பூட்டு ஒன்று தொங்கிக்கொண்டிருந்தாலும் பூட்டப்படாமல் ‘ஓ’ என்று திருகிக்கொண்டு கிடந்தது.”

 

கணினிமுன் வேர் பிடித்துபோன புத்திஜீவிகள் நம்மிடையே நிறையபேருண்டு. வெளிஉலகில் என்ன நடக்கிறதென்று அறியாமல் கணிணி ஏற்படுத்திய மூளைவிபத்துகளால் முடங்கிப்போனவர்கள்.

 

இவரை விட்டுப்பிரிந்து இலண்டனில் இன்னொரு கணவருடன் வாழும் சிவகாமி தமது மகளின் திருமனத்திற்கு, அம்மகளின் தகப்பனான கணிணி பைத்தியத்தை அழைக்கவந்திருக்கிறாள். மேற்கத்திய உலகில் சர்வசாதாரணமாக காதில் விழும் உரையாடல்தான். ஆனால் ரெ. கார்த்திகேசுவின் சொற்களைக்கொண்டு வரிவடிவம் பெறுகிறபோது சுடுகிறது.

 

– இப்ப எல்லாம் ஷேவ் பண்றதே இல்லியா?

 

– வேஸ்ட் ஓ·ப் டைம்

 

– அப்படியென்ன கடுமையான நெருக்கடி உங்களுக்கு

 

– இதோ பாரு சிவா, இவரு ஹைடல்பர்க் யூனிவஸ்ட்டி பேராசிரியர். ஜெர்மனியிலிருந்து எங்கிட்ட ஒரு சந்தேகம் எழுப்பியிருக்காரு;

 

– உங்களுக்குத் தெரிஞ்சவரா?

 

– நோ நோ நெட்லவந்த தொடர்புதான்

 

அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. என் நண்பர் ஒருவர் தமக்கு Face book எண்ணூறு நண்பர்களுக்குமேல் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தில் உள்ளூர் நண்பர்களை மறந்துபோனார். அவர் வீடு காலி செய்தபோது உதவி செய்ததென்னவோ அவர் மறந்துபோன அந்த உள்ளூர் நண்பர்கள்தான். விரல் நுனியில் உலக நடப்புகளை அறிந்திருக்கும் நமக்கு சொந்தவீட்டில் என்ன நடக்கிறதென்ற பிரக்ஞையின்றி கணினி முன் உட்கார்ந்திருக்கிறோம்.

 

‘கொஞ்சம் மனிதன்’ கந்தசாமி வேறு இனம். விளிம்புநிலை மனிதன். படித்தவர்களையே உணர்ச்சி எளிதில் வெல்கிறபோது, படிக்காத கந்தசாமி என்னசெய்வான். ஜெயிலுக்குப்போன நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு கொண்டிருக்கிறான். ஜெயில் ஆசாமி ஒரு நாள் வெளியில் வரத்தானே வேண்டும் வருகிறான். தகவல் கந்தசாமிக்கு கிடைக்கிறது. நேற்றுவரை உணர்ச்சியை மேயவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அறிவு, விடுதலையான ஆசைநாயகியின் கணவனால் ஆபத்தென்றதும் புலம்புகிறது. மனித மனம் விசித்திரமானது. கழுத்தில் கத்தி இறங்கும்போதுகூட ஏதாவது நடந்து கத்தி இரண்டாக உடையுமென்று மனதார நம்பும்.

 

” ஒருவேளை அவன் மாறியிருக்கக்கூடும்….. ரெண்டுவருஷம் ஜெயிலிருந்து வந்திருக்கிறான். நிறைய உதை வாங்கியிருப்பான். பலவீனமாயிருப்பான். திருந்தியிருப்பான் ஆகவே நான் சொல்லுவதைப் புரிந்துகொள்வான்”

 

ஜெயிலிருந்து வெளிவந்த ஆசாமி தண்டிப்பதற்கு முன்பாக ஆசிரியர் ‘நெஞ்சோடு கிளத்தல்’ என்கிற உத்தியைக்கொண்டு கந்தசாமியைக் கூடுதலாகவே தண்டிக்கிறார். இவனை தண்டிக்க வரும் நண்பனுக்கு வேறு நோக்கங்கள் இருக்கின்றன. இங்கே அதைச் சொன்னால் கதையின் சுவாரஸ்யம் கெட்டுவிடும். ஒரு நல்ல சிறுகதைக்கான அத்தனை இலட்சனங்களும் கொண்டகதை.

 

இத்தொகுப்பில் மௌனமாய்  என்ற சிறுகதையும் முக்கியமானதொன்று. பிறகதைகள் ரெ.கார்த்திகேசு மனம் தோய்ந்து எழுதியகதைகளல்ல என்பதுபோலிருந்தன. குறிப்பாக சுந்தரராமசாமியின் கதையொன்றிர்க்கு  எதிர்பாட்டுபோல எழுதியிருந்த கதையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எனினும் கதையில் உணரமுடிந்த இயல்பான கோபமே ரெ. கார்த்திகேசு ஓர் தேர்ந்த படைப்பாளி என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள போதுமானதாக இருந்தது.

——-

நீர்மேல் எழுத்து

விலை RM25.00

ஆசிரியர்: ரெ. கார்த்திகேசு

உமா பதிப்பகம்

85 CP, Jalan Perhention, Sentful,

51100 Kualo Lumpur, Malaysia

Fax 03 4044 0441 e.mail: umapublications@gmail.com

———————————-