Monthly Archives: ஏப்ரல் 2018

மொழிவது சுகம் : எப்ரல் 21 – 2018

 

 

 

 

அ. மேற்குலக சினிமா : ‘Still Alice’Still Alice

திரைப்படங்கள்,  குறும்படங்கள்  தொடர்கள் முதலானவற்றிர்க்குத் தொலைகாட்சி உரிமம் பெற்று வினியோகிக்கும் Nerflix தயவினால் இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்த திரைப்படம் ‘Still Alice’. படத்தின் பெயரை பிரெஞ்சிலும் Still Alice என்றே வைத்திருக்கிறார்கள். பிரெஞ்சுத் திரைப்பட ரசிகர்கள் ‘Still’ என்ற சொல் உணர்த்தும்  பொருளை புரிந்துகொள்வார்கள் என்பதைக் காட்டிலும் உணர்ந்துகொள்வார்கள் என்று நினைத்திருக்கலாம். இந்த still ஐ ‘உறைந்து போன’அலிஸ் அல்லது ‘என்றைக்கும் எங்களுக்கு நீ அலிஸ்’  அல்லது 4நீ எப்படி இருந்தாலும் எங்களுக்கு அலிஸ்4  என உங்கள் விருப்பப்படி  வைத்துக்கொள்ளுங்கள். இராவணன் சிறை எடுத்ததாகக் கூட இருக்கட்டுமே அவள் எப்பவும் எனக்கு சீதைதான், எனக்கூறி  இராமன் சீதையைத் தீக்குண்டத்தில் இறங்க அனுமதிக்கமாமல் இருந்திருந்தால் அவன்  சீதாராமன்.  ஆனால் அலிஸ் படத்தில் வரும் கதைநாயகியின் கணவனும்,  பிள்ளைகளும் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டப் பெண்மணியிடம் உனக்கு எதுவேண்டுமானாலும் இருக்கட்டும் எங்களுக்கு என்றும் நீ அலிஸ்தான் ‘Alice Howland’ தான் என்று அரவணைத்து பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திரைப்படம் : ‘Still Alice’.  படத்தின் நாயகி ஜூலியன் மூர் நடிப்பைப் பார்த்து மனம் உருகி நமக்கும் ‘Still நீ எங்களுக்கு அலிஸ் !’ என்றே சொல்லத் தோன்றும். ஜூலியன் மூர் இப்படத்திற்கு சிறந்த நடிகைக்குரிய ஆஸ்கார் விருதைப் பெற்றிருக்கிறார்.

அல்சைமர் நோய் குறித்து அவ்வப்போது பத்திரிகைகள், தொலைகாட்சிகள் தரும் செய்திகளால் அறிவதுண்டு. அதன்  பயங்கரத்தை, அந்நோய் மனிதருக்கு எற்படுத்தும் விபரீதத்தை ஒரு முழு நேரத் திரைபடமாக பார்த்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவில்லை. அறுபதைக் கடந்த எவருக்கும் அதொரு அதிர்ச்சிதரும் அனுபவம்.

அலிஸ் ஹவ்லேண்ட் 50 வயது பெண்மணி. அமெரிக்க பல்கலைகழகமொன்றில் மொழியியல் பேராசிரியை. வழக்கம்போல ஒருநாள் பாடம் நடத்துகிறபோது, சில சொற்களை நினைவுகூற முடியாமல் தவிக்கிறார் என்பதில் ஆரம்பிக்கிறது பிரச்சினை. பிறப்பிலேயே அவர் அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதும், குணப்படுத்த முடியாத நிலைக்கு அந்நோய் வளர்ந்திருப்பதும் மூளை, நரம்பியல் மருத்துவரால் தெரியவருகிறது. இந்த உண்மை குடும்பம் : பாதிக்கப்பட்ட நோயாளி, அன்பான கணவன், வளர்ந்த பிள்ளைகள் ; அவள் பணி சர்ந்த வெளி :மொழியியல்துறை, மாணவர்கள்  இங்கே என்னதாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை அல்லது திரைக்கதை.

இத்திரைப்படத்தின் சில சிறப்பான காட்சிகளைச் சுட்டிக்காடுவதற்கு முன்பாக, படத்தின் வெற்றிக்கு காரணமான மூவர்அணி பற்றிச் சொல்லவேண்டும்.

  1. லிசா ஜெனோவா (Lisa Genova). இவர்தான் படக் கதைக்குச் சொந்தக்காரர். அமெரிக்க பல்கலைகழகமொன்றில்நரம்பியல் துறை பேராசிரியராக பணிபுரியும் பெண்மணி. இவருடைய பேராசிரிய நண்பர் ஒருவர் திடீரென்று சுகவீனப்பட்டு அல்சைமர் நோயில் அவதிப்படும் கொடுமையை நேரிலுற்ற அனுபவத்தை, வேதனையைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள நினைத்து எழுத்தாளராக மாறியவர். ‘Still Alice’ முதல் நாவல். வேறு நாவல்களை அவர் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. வெளியிட பதிப்பாளர்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார். எவரும் முன்வராததால் சொந்த முதலீட்டில் வெளியிட்டிருக்கிறார். திடீரென்று கவனம் பெற்றிருக்கிறது. தற்போது மூன்று மில்லியன் பிரதிகளுக்குமேல் விற்று தீர்ந்துள்ளதாம். தொடர்ந்து ஹாலிவுட் இயக்குனர்கள் இவரைத் தொடர்புகொண்டு தங்கள் திரைப்பட ஆசையைத் தெரிவிக்க கதை திரைக்கதையானது, திரைப்படமானது, ஆஸ்கார் விருதையும் பெற்றுதந்துள்ளது.

 

  1. வாஷ் வெஸ்ட்மோர்லண்ட்(Was Westmoreland), ரிச்சர்ட் கிளட்ஸர்(Richard Glatzer)

திரைக்தை, வசனம், இயக்கமென படத்தில் மூன்றிலும் இணைந்து         பணியாற்றியவர்கள். இருவருமே ஒருபாலின விரும்பிகள், சேர்ந்து வாழ்ந்து, 2013ல் மணமும் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. இருவரும் சேர்ந்து இயக்கிய கடைசிப்படம். ரிச்சர்ட் கிளட்ஸர் அண்மையில் Still Alice படத்தின்  நாயகிக்கு ஆஸ்கார் விருதுவாங்கிக் கொடுத்த மகிழ்ச்சி வற்றுவதற்கு முன்பாக அண்மையில் இறந்துவிட்டார்.

 

  1. ஜூலியன் மூர் (Julienne Moore) திரைப்படத்தின் நாயகி. ஹாலிவுட்டிற்குப் புதியவரல்ல, பல விருதுகளையும் பின்வாசல் வழியாக அன்றி நேர்வழியாகவே ஏற்கனவே பெற்றிருக்கிறார். அதற்கு மகுடம்போல ஸ்டில் அலிஸ் படத்திற்கு அவருக்கு 2015 சிறந்த நடிகைக்குரிய ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.

 

இனித் திரைப்படத்திற்கு வருவோம் :

 

நாவலின் நோக்கத்தை, நாவலின் பல நூறுபக்கங்கள் ஏற்படுத்தாதத் தாக்கத்தை இரண்டுமணி நேரகாட்சியில் ஏற்படுத்தும் பொறுப்பை  இயக்குனர் இருவரும் திறம்பட செய்திருக்கிறார்கள். திரைக்கதையும், காட்சி படிமங்களும் இணைந்து பயணிக்கின்றன.

நோயாளி யாரோ எவரோ அல்ல  ஓரு பேராசிரியை. பேராசிரியை என்ற சொல்வேண்டாம் அந்தச் சொல்லுக்குத் தற்போது சனி பிடித்திருக்கிறது. தலைசிறந்த கல்விமான் என்றுவைத்துக்கொள்வோம். சொற்களின் செறிவையும், நுட்பத்தையும், அதற்குரிய தொனியையும் வழங்கி இதயம் பூரிக்கிற மொழி அறிஞர். கற்ற கல்வியையும் பெற்ற அனுபவத்தையும், இம்மண்ணிற் பிறந்ததற்கு நன்றிக் கடனாக பிறருக்கும் அளித்திருக்கிறோம் என்று திருப்தியுறும் 50 வது வயதில் தமக்கு அல்சைமர் முற்றிய  நிலையில் இருக்கிறதென்கிற உண்மையை மருத்துவர் மூலமாக தெரியவருகிறபோது ஜூலியன் மூர் முகபாவம் பல படங்களில் நமது நடிகையர் திலகம் காட்டியுள்ள முகபாவங்கள்.

அல்சைமர் நோய், பாதிக்கபட்ட நோயாளி, நோயாளியின் தினசரிகள், குடும்பம், அலுவலகம் என்று பொருள்களை வகுத்துக்கொண்டு  காட்சிகளை நகர்த்தியுள்ளனர். கொடிய நோய் பொதுவாகப் பாதிக்கப்பட்டவரின்  நம்பிக்கைகளை மட்டுமல்ல, அவர் சார்ந்த உறவுகளைக்கூட அவரிடமிருந்து விலக்கிவிடும், விரட்டிவிடும். இத்தகைய சூழலில் எப்படி குடும்ப வாழ்க்கையை, அலுவலகப்பணியைச் சந்திப்பது ? குடும்பத்தில் கணவன், பிள்ளைகள் ; அலுவலகத்தில் துறைத் தலைவர், பணி நிமித்த நண்பர்கள், மாணாக்கர் இவர்களிடம் தொடர்ந்து இணக்கமாக எப்படி இருப்பது ? போன்றவற்றை ஜூலியன் மூர் திறம்பட செய்திருக்கிறார்.

« கடந்த 50 ஆண்டுகளாக எனது ஒட்டுமொத்த வாழ்க்கையின் அவ்வளவு உழைப்பையும் கணப்பொழுதில் தொலைத்துவிட்டு நிற்கிறேனே ! » என்று அலிஸான ஜூலியன் மூர் புலம்பும்போது முரண்நகையாக எனக்குள் தேவையின்றி சிறுவர் சிறுமியர்களுக்கென்று தயாரிக்கப்பட்ட  வால் டிஸ்னி திரைப்படமான ‘அலிஸின் அற்புத உலகம்’ என்ற பெயர் குறுக்கிட்டது.

ஒரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை அறிவித்து, மரணம் மட்டுமே உனக்கு விடுதலை தரும் என்பதுபோலத்தான் மருத்துவர்கள் சில நேரங்களில் நோயாளிக்கு அவனுடைய முற்றிய நோய் பற்றிய தகவலைத் தெரிவிப்பதும் ஆகும். குற்றவாளிக்கேனும் வாதிடவும், மேல் முறையீடு செய்யவும் வாய்ப்புண்டு. ஆனால் நோய்முற்றிய  நிலையில், திரும்பும் திசைதோறும் கதவுகள் அடைபட்ட பின் கையறுநிலையில்  அவர் என்ன செய்துவிடமுடியும் ? « உனக்கு என்ன பிரச்சினையென்றாலும், நானிருக்கிறேன் ! » என கணவர் சொன்னாலும்( ?), «  நாங்களிருக்கிறோம் ! » எனப் பிள்ளைகள் ஆறுதல் கூறினாலும், அலுவலகத்தில் « என்றைக்கும் நீ எங்களுக்கு அலிஸ்தான் ! » என நண்பர்கள் தெரிவித்தாலும் அவள் திசையில், அவள் கணங்களில், திடீரென்று மனித உயிராக அன்றி வீட்டுவிலங்காக சபிக்கபட்டதொரு வாழ்க்கையை ஏற்பது எளிதானதல்ல.

ஜாகிங்போகிறபோது நின்று குழம்புவது, வீட்டில் டாய்லெட்டைத்தேடி ஒவ்வொரு கதவாகத் திறந்து சலிப்புறுவது, கிறிஸ்துமஸ்  பண்டிகைக்காக தயாரிக்கும் உணவிற்கு ரிய செய்முறையை மறந்துவிட்டுத் தடுமாறுவது, தொலைபேசியை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் தேடுவதும், பதற்றத்தின் தாளகதி கூடுவதை உடல்மொழியில் காட்டுவதும், தனது மாட்டாமையை உணர்ந்த மறுகணம் மனம் உடைந்து கதறி அழுவதும்மறக்க முடியாதவை. Alice சலனமற்ற நடமாடும் சவமாக, Still Alice ஆகிறார் என்பதை காட்சி அடுக்குளாகத் தீட்டியிருக்கிறார்கள்.

இயக்குனர்கள், நோயாளி பெண்மணி, நோய் சார்ந்த அவள் பிரச்சினைகள் என்று திரைக்கதையை அமைத்துக்கொள்ளாமல் அவள் ஒரு மனைவி, நான்கு பிள்ளைகளுக்குத் தாய், படித்த நடுத்தர வர்க்கப் பெண்மணி என்பதையும் மறந்துவிடாமல் அதற்கேற்ப காட்சிகளை அமைத்திருக்கின்றனர்.  குறிப்பாக தமக்கு வந்திருக்கும் அல்சைமர் ஒரு பரம்பரை நோயென மருத்துவர் தெரிவித்த மறு கணம், பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து அவர்களையும் சோதனைக்கு உட்படுத்த வற்புறுத்தும் காட்சி, இளைய மகள் பிறபெண்களைபோல சட்டமோ, மருத்துவமோ படிக்காமல் நாடகத்துறையைத் தேர்வு செய்தமையைச் சகித்துகொள்ளாமல் நடக்கும் உரையாடல் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.

ஆ.அகோதா கிரிஸ்டோஃப் (Agota Kristof)

Agota-Kristof

அகதா கிரிஸ்டியை தெரியாதவர்கள் உலகில் இருக்க முடியாது. இங்கிலாந்தில் பிறந்து ஐம்பதுக்கு மேற்பட்ட துப்பறியும் புதினங்களை எழுதி இன்றளவும் விற்பனையில் சாதித்துக்கொண்டிருக்கிற எழுத்தாளர்.  பிரெஞ்சு இலக்கிய உலகில் கிட்டத்தட்ட இதேபெயரைக்கொண்ட, மாறாக உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர்களாலும்,  தீவிர இலக்கிய அபிமானிகளாலும் போற்றப்படும் எழுத்தாளர் ஒருவர் உண்டு. அண்மையில்தான் மறைந்தார். பெயர் Agota Kristof. பிரெஞ்சு மொழியில் எழுதியிருந்தாலும் பிரான்சு நாட்டவர் அல்ல அல்லது பிரெஞ்சு மொழியையும் தனது ஆட்சிமொழியாகக் கொண்டிருக்கிற, இவர் வாழ்ந்த(மறைந்த) சுவிஸ் நாட்டவருமல்ல. சொந்த நாடு ஹங்கேரி. 1956ல் பொதுவுடமை ஆட்சியாளர்களுக்கு எதிராக  மக்கள் கிளர்ச்சியிலிறங்க அதனை ஒடுக்க சோவியத் ராணுவம் வரவழைக்கப்பட்டபோது தப்பித்து அந்நிய நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களில் இவரும் ஒருவர். இவருக்கு அடைக்கலம்கொடுத்த நாடு சுவிஸ். இந்நாட்டில் தமது அகதி வாழ்வைத் தொடங்கியபோது வயது 21. கவிதைகள் நாடகங்கள் என்று எழுதினாலும் முதல் நாவல் அவருடைய 51 வயதில் வெளிவந்தது.  இவரது முத்தொடர்  நாவல் வரிசையில் முதல் நாவல்  ‘Le Grand cahie ‘ (The notebook),   தமிழில் வரவேண்டும் என்று நான்  நினைக்கிற பிரெஞ்சுமொழி நவீன படைப்புக்களில் ஒன்று. இந்நாவல் முக்கியத்துவம் பெறவும் தீவிர இலக்கிய அபிமானிகளால் கொண்டாடப்படவும் காரணமென்ன ? அவருடைய பிரெஞ்சு மொழி அறிவு படைப்பிலக்கிய களம் எதிர்பார்க்கும் திறன் கொண்டதல்ல, வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அறியவந்த மொழி. தாய்மொழி ஹங்கேரியனில் எழுதாமல் அந்நியமொழியான பிரெஞ்சு மொழியியைப் தமது படைப்புமொழியாகத் தேர்வுசெய்தார். ஏன் ?

உலகின் புகழ்பெற்ற எழுத்தாளரின் வார்த்தைகள் நமக்கு பதில்சொல்கின்றன :

 

« வெகு நாட்களுக்குப் பிறகு அகோதா கிறிஸ்த்தோஃப் என்றொரு பெண்மணி ஒரு வகையான ஒப்பீட்டு முயற்சியென சொல்கின்ற வகையில் அற்புதமான சில படைப்புகளை எழுதியிருக்கிறார் என்பது தெரிய வந்தது. 1956 பிரச்சினையின்போது, ஹங்கேரி நாட்டைத் துறந்து சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்தவர். பிரெஞ்சு மொழி தாய்மொழியல்ல, அதில் எழுதவேண்டிய சூழ் நிலை.  இருந்தும் அந்நியமொழியான பிரெஞ்சுமொழியில் எழுத்தில் முற்றிலும் ஒரு புதிய பாணியைப் பயன்படுத்தி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இசைவான நடை, குட்டிகுட்டி வாக்கியங்கள், குழப்பமற்ற சொற்கள், சுற்றிவளைக்காத வாக்கியங்கள், துல்லியமான விவரிப்புகள், வெகு இயல்பான அணுகுமுறை. அந்நியமொழியில் எழுதத் துணிந்ததால் மிகச் சிக்கனமான முறையில், ரகசியங்கள் நிறைந்த, மர்மங்களைக்கொண்ட சூழலைப் புதினங்களில் அவரால் கட்டமைக்க முடிகிறது. அவருடைய முதல் நாவலைப் படித்தபோது எனக்கு நன்கு பரிச்சயமான அனுபவங்களில் திளைப்பதுபோல உணர்ந்தேன். » (‘Hear the wind sing’, 2016 முன்னுரை)

 

அகோதா கிறிஸ்த்தோஃப் ஐக் கொண்டாடுபவர் யாரோ எவரோ அல்ல  ஹரூகி முராகாமி. காரணம் அவரும்  சொந்தமாக மதுக்கடை நடத்திக்கொண்டு, விழிபிதுங்கிக் கொண்டிருந்தவேளை,  கவலையை மறக்க எழுத உட்கார்ந்திருக்கிறார். தாய்மொழியான ஜபானிய மொழியில் எழுதாமல் அகோதா கிறிஸ்தோஃபை கொண்டாடும் காரணங்களுக்காகவே தமது முதல்நாவலை ஆங்கிலத்தில் எழுதி பின்னர் அவரே ஜபானிய மொழிபெயர்ப்பையும் செய்தாராம். ஆனால் 2015ல்தான்  அமெரிக்கர் ஒருவரின் மொழிபெயர்ப்பில் பிற ஆங்கிலமொழி பேசும் நாடுகளில்  ‘Hear the wind sing’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. பிரெஞ்சுமொழியில் வெளிவந்த ஆண்டு 2016. தாய்ய்மொழியான ஜப்பான் மொழியில் இந்நாவலை எழுதாதற்கு அவர்சொல்லும் காரணம், தாய்மொழியிலுள்ள ஆளுமை, சொல்ல நினைத்ததை நேரடியாகச் சொல்லவிடாமல் அவரைத் தடுத்து அலைகழித்ததாம். அன்னிய மொழியிலுள்ள அரகுறை அறிவு தேவையின்றி சொற்களை, வாக்கியங்களை உபயோகிக்காமல் எழுத உதவியதாம்.  ஆக அவர் ஆங்கிலத்தில் எழுதி பின்னர் தாய்மொழிக்குக் கொண்டுவந்ததுதான் முதல் நாவல். ஜபானிய புகழ்பெற்ற இலக்கிய இதழ் இவர் எதிர்பார்த்திராத பரிசையும் அளித்து  நாவலை வெளியிட்டு மிகுந்த வரவேற்பை முதல் நாவலுக்கு அளித்திருக்கிறது. இருந்தும், ஹரூகி முரகாமிக்கு, இம்முதல் நாவல் உட்பட ஆரம்பகால  நாவல்களிடத்தில் அதிருப்தியும் இருந்திருந்திருக்கிறது. கிட்த்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆங்கிலம் உட்பட பிற மொழிகளில் வெளிவர அனுமதித்திருக்கிறார்.

————————————————————-

 

நான் எங்கிருக்கிறேன் ? நான் யார்?

(இச்சிறுகதை  ‘சிரிக்கிற ரொபோவையும்  நம்பக்கூடாது’ என்ற என்னுடைய அறிவியல் சிறுகதை தொகுப்பில் அடங்கியது, காலம் கருதி மறு பதிவு செய்திருக்கிறேன். )

 

கி.பி. 2050. இராமநாதன் புதுச்சேரிக்கு முதன் முறையாக வந்திருந்தார். அவரது முன்னோர்கள் காலத்து வீடு. தாத்தாவின் ஆசைப்படி, கடந்த ஐந்து வருடங்களாக பிரான்சில் இருந்தபடி முயற்சித்து, வீட்டின் ஒரு பகுதியை வாங்கியிருந்தார். இரண்டு நாட்கள் அலைந்து வாங்கி போட்டிருந்த வரவேற்பறைக்கான தளவாடங்கள் இன்றுகாலையில்தான் வந்திறங்கின. அதற்கான இடங்களில் அவற்றை ஒழுங்குபடுத்திவிட்டு கடை ஊழியர்கள் புறப்பட்டுப் போயிருந்தனர். ஒரு மாதகாலம் புதுச்சேரியில் தங்குவதற்கு இதெல்லாம் தேவையா என நினைத்தார். தாத்தாவுக்காக அவற்றைச் செய்யலாம் போலிருந்தது. தாத்தாவும் பிரான்சிலிருந்து பயணித்து வரவேற்பறையில் எங்கேனும் அமர்ந்து நடப்பதனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கலாம். “சந்தோஷமா தாத்தா?” அரூபத் தாத்தாவிடம் கேட்கவும் செய்தார். தாத்தாவின் ஆசைகளை பேரன் பூர்த்திசெய்யப் புறப்பட்டது குறித்த கசப்புகள் ரேவா’வுக்கு நிறையவே இருந்தன. ரேவா இராமநாதனுடைய மனைவி. பூர்வீகம் சுவிட்சர்லாந்து என்றாலும், பாரீஸ் பல்கலைகழகத்தின் மானுடவியல் துறை ஏற்பாடு செய்திருந்த கரத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ளவந்தவள், இராமநாதனிடம் காதல் கொண்டு, பாரீஸிலிலேயே தங்கிவிட்டாள். அவளுக்கு இந்தியர்களின் அறிவு பிடிக்கும், இந்திய உணவுப் பிடிக்கும், ஆனால் அவைகளெல்லாம் இந்திய எல்லைக்கு வெளியில் கிடைக்கவேண்டும். ஐம்பது வயது இராமநாதன் பார்த்த இந்தியாவுக்கும், பத்துவயது இராமநாதன் கேட்டிருந்த இந்தியாவும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. தாத்தா நினைவுகள் தமிழ்நாடு, புதுச்சேரியென்று அறிமுகப்படுத்திய முகங்கள், தெரிவித்த அடையாளங்கள், காட்சிபடுத்திய வாழ்நெறிகள் வேறு. அவர்காலத்தில் இங்கே ‘நெல் விளைந்திருக்கிறது’, ‘கரும்பு பயிரிட்டிருக்கிறார்கள்’, ‘கர்நாடக அரசு தயவில் காவிரியில் எப்போதாவது தண்ணீர் வரும்’, ‘தெருச் சந்திகளிலும் ஊர் முக்குகளிலும் கட்சிக்கொடிகள் பறக்கும்’, ‘டீக்டைகளில் விலாப்புடைக்க அரசியல் அல்லது சினிமா பேசுவார்கள்’. இராமநாதன் பார்க்கும் தமிழ்நாடு ‘நல்கயல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை’. நவீன தமிழர் முகங்களில் பாலைநிலத்து வழிபாட்டு தெய்வங்களுக்குரிய உக்கிரமும் பழுதில்லாமல் இருக்கிறது.

 

“நான் நினைக்கிற இந்தியா இன்றில்லை, எனக்குத் தெரியும்”, என பலமுறை தாத்தா சொன்ன ஞாபகம்.  “உன் தகப்பன் அந்த மண்ணை மிதிக்கமாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறான். நீ அப்படிச்சொல்லக்கூடாது எனது அந்திமச் சடங்கை அங்கேதான் நடத்தணும்”, என்று தாத்தா இட்ட கட்டளையையும்  மறக்கவில்லை. மேற்கத்திய தினசரிகளிலும், வானொலிகளிலும், தொலைக்காட்சி பெட்டியிலும், இந்தியாவை மையமாகக் கொண்ட துணுக்குச் செய்திகளுக்குக்கூட அவர் மகிழ்ந்ததும், இந்திய வளர்ச்சியோடு, அவர் பெருமிதமும் இணையாக வளர்ந்ததும் இராமநாதன் கவனத்திலிருக்கிறது. இராமநாதன் மானுடவியல் மாத்திரமல்ல பொருளாதார புள்ளி விவரங்களையும் விரல் நுணியில் வைத்திருப்பவர். மொனாகோவில் ஆரம்பித்து, அமெரிக்காவரை உலகத்து நாடுகளில் பொருளாதார சாதகத்தை,  துல்லியமாக சொல்வார். பெய்ஜிங் நகரவாசியின் சராசாரி தினசரி வருமானம். பிரான்சு அரசாங்கம், தங்கள் பிரஜைகளிடம் கேட்கவிருக்கிற தேசிய வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், போர்பஸ் பட்டியலில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் லட்சுமி மிட்டலென்கிற இந்தியருக்கு எத்தனையாவது இடம், சனி கிரகத்தின் அதிபருக்கும் பாரதப் பிரஜைகளுக்கும் வேதகாலதொடக்கமுள்ள கோபதாபங்கள் அவ்வளவையும், 1.360777110கி.கி எடைகொண்ட மூளையில் அதற்கான நரம்பணுவில்(Neuron) அதனதனிடத்தில் பத்திரமாக வைத்திருக்கிறார். அந்த நரம்பணுக்களிலிருந்து இது போன்ற தகவல்களை எப்போது மீட்டெடுப்பது, அவற்றை சீரமைத்து சேமிக்கவென்று திரும்பவும் அங்கே எப்போது அனுப்பிவைப்பதென்கிற கால அட்டவணைகளெல்லாங்கூட அவரிடம் தெளிவாக இருக்கின்றன.  இன்றைய இந்தியாவின் பின்னே, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஏற்பட்ட அபரிதமான பொருளாதார வளர்ச்சியும், தட்பவெப்ப நிலையில் ஏற்பட்ட மாற்றமும் காரணமென்றாலும், 2007ம் ஆண்டு தொடக்கம் மக்கள் தொகையை சீராக வைத்திருப்பதும், வறுமைகோட்டின் கீழிருந்த சுமார் 220 மில்லியன் இந்தியர்கள் இருபத்திரண்டாம் நூற்றாண்டில் என்னவானார்கள் என்பதும் ஆச்சரியம். தங்கள் மக்கத்தொகையில் ஒருபிரிவினரை ஏழைகள் என்பதை எல்லா நாடுகளுமே ஏற்றுக்கொண்டிருக்க இந்தியாவில் அப்படி ஒருவரும் இல்லையென்பது இராமநாதனுக்குப் புரியாதபுதிர்.

 

தெருக்கதவை தட்டும் சத்தம் கேட்டது. அழைப்பு மணியை அடித்திருக்கலாம். எதற்காக கதவைத் தட்டவேண்டும் யோசித்தபோது, மீண்டும் கதவைப் பலமாகத் தட்டினார்கள். எழுந்து சென்று கதவைத் திறந்தார். சூட்டும் டையுமாக வாலிபன் ஒருவனும் அவன் பின்னே இரண்டு தொழிலாளர்களும் நின்றிருந்தார்கள்; இளைஞனைப் பார்க்க அரசு அதிகாரிபோல இருந்தான். அவன் வலது கையில் கோப்புகள் அடங்கிய பெட்டி. இவரது பதிலுக்காக அவன் காத்திருக்கவில்லை. தொழிலாளர்களைப் பார்த்து, “நீங்கள் ஆரம்பிக்கலாம்”, என்றான். அவனது உத்தரவுக்காக காத்திருந்தவர்கள்போல  வெளியிற் சென்றவர்கள் சில நொடிகளுக்குப்பிறகு, சிமெண்ட், மணல், செங்கற்கற்கள் என்று, இராமநாதன் பார்த்திருக்க வரவேற்பு அறையுள் கொண்டுவந்து வைத்தார்கள். தாத்தா காலத்து இந்தியாவில் அரசியல் தாதாக்களும் பிரசித்தமென்று சொல்லி இருக்கிறார், ஒருவேளை இளைஞன் அவர்களிலொருவனோ என்ற சந்தேகம். அவர்கள் பொல்லாதவர்களென  தாத்தாசொல்லியிருந்தார். மிகுந்த எச்சரிக்கையுடன், “நீங்கள் சரியான முகவரிக்கு வந்திருக்கிறீர்களா?, என்று கேட்டார். இளைஞன் பதிலுக்கு, “நீங்கள் பிரான்சிலிருந்துதானே வந்திருக்கிறீர்கள், இரண்டு நாட்களுக்கு முன்னர்தானே இந்த வீட்டை வாங்கினீர்கள், வீட்டு எண்.450தானே?” என்று மூன்று கேள்விகளையும் தொடர்ந்து கேட்டு நிறுத்தினான். மொத்தகேள்விகளுக்கும் இராமநாதன் “ஆமாம்”, என்று ஒரு சொல்லில் பதில் சொல்ல வேண்டியிருந்தது. “அப்படியெனில் எங்களைத் தடுக்க உங்களுக்கு எந்த அதிகாரமுமில்லை”, என்றான்.

 

– நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்”  -இராமநாதன் .

 

– நீங்கள் இந்தியாவந்து எவ்வளவு நாட்கள் ஆகின்றன. உங்கள் அக்கம் பக்கத்தில் அல்லது வேறு யாரேனும் சன்னலைத் திறந்து வைத்து பார்த்திருக்கிறீர்களா?  நீங்கள் திறந்து வைத்திருந்தீர்கள். சன்னல்கள் மானுடத்திற்கு எதிரானவை, வலிமையான பாரதத்திற்கு கூடாதவை”

 

– நான் பிரெஞ்சு பிரஜை, என்னை உங்கள் சட்டம் கட்டுபடுத்தாது”.

 

– நீங்கள் இந்தியா வருவதற்கு அனுமதிகேட்ட விண்ணப்பத்தைக் கவனித்திருக்கமாட்டீர்களென நினைக்கிறேன். அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அடங்கி நடக்கவேண்டுமென்பது விதி”

 

– சரி என்ன செய்யப்போகிறீர்கள்?

 

– உங்கள் வீட்டு சன்னலை கற்கள்வைத்து அடைக்கப்போகிறோம். இது மேலிடத்து உத்தரவு.

 

– மேலிடமென்றால் எப்படி? வீட்டுக்கு மேலே இருக்கிறவர்களா? அவர்களாக இருக்க முடியாது. என்னிடம் நன்றாகப் பழகினார்கள்.

 

– சன்னல்களை திறந்து வைப்பது கி.பி. 2025ம் ஆண்டிலிருந்து இங்கே கடுமையானக் குற்றமென்று உங்களுக்குத் தெரியாதா? நான் மேலிடமென்று சொல்வது, உங்களுக்குமேலே குடியிருப்பவரென்றோ, நகரசபை ஆனையரென்றோ, மாவட்ட ஆட்சியரென்றோ, உள்ளாட்சிதுறை அமைச்சரென்றோ, முதல் அமைச்சரென்றோ, ஏன் நாட்டின் பிரதமர் கூட அல்ல அவர் எல்லாவற்றுக்கும் மேலே.

 

– பெரிய அண்ணன் என்று சொல்வார்களே அப்படிச் சொல்லலாமா?

 

– அது ஒருவகையில் சரிவரும், ஆனாலும் நாங்கள் மேலிடம் என்று சொல்லியே பழகியிருக்கிறோம். நீங்களும் இந்த மண்ணில் இருக்குவரை அப்படித்தான் சொல்லவேண்டுமென அரசு எதிர்பார்க்கும்.

 

இராமநாதன் பார்த்துக்கொண்டிருக்க வேலைகள் மடமடவென நடந்தன, சன்னல் முற்றிலுமாக அடைக்கப்பட அங்கே இருள் சூழ்ந்தது.  இளைஞன் கையிலிருந்த கோப்பைப் பிரித்து அதிலிருந்து இரண்டு தாள்களை எடுத்தான்.

 

– இது நடந்துமுடிந்த வேலைக்கான கட்டணத் தாள். இத்தொகையை நீங்கள் பிரான்சுக்குத் திரும்புவதற்கு முன்பு அரசாங்க கருவூலத்திற் செலுத்த வேண்டும், கட்டத் தவறினால் பிரன்சுக்குத் திரும்பமுடியாது.

 

கையொப்பமிட்டு முடிந்ததும், இவரிடம் ஒரு நகலைக் கொடுத்துவிட்டு இளைஞனும், தொழிலாளர்களும் புறப்பட்டுச் சென்றனர்.  அவர்கள் மறைந்ததும், இருந்தவிடத்திலிருந்து நகராமல் அவர்கள் அடைத்துவிட்டுச் சென்ற சன்னலையே பார்த்துக்கொண்டிருந்தார். புதிதாக தரையில் போட்டிருந்த விரிப்பில் ஆங்காங்கே சிமெண்ட்டும் மண்ணுமாய் சிந்திக்கிடந்தன. முகம் தெரியாத அந்த மேலிடத்து மனிதனிடம் முதன் முறையாக கோபப்பட்டார், பத்துத் தலையும் இருபதுகைகளும் கொண்ட முப்பரிமாண அரக்கனாக அவனை நிறுத்தி கைக்கு அகப்பட்டதையெல்லாம் அவன் முகத்தில் எறிந்தார்.

 

*                             *                             *

மாலை மூன்றுமணிக்கு நேருவீதியில் தாத்தா குறிப்பிட்டிருந்த காபி ஹவுஸை இராமநாதன் தேடிச் சென்றார். காலியாக இருந்த மேசையைத் தேடி அமர்ந்ததும், முதியவர் ஒருவர் எதிரில் உட்கார்ந்தார்.

 

– என்ன சோகமா இருக்கறீங்க? வீட்டு சன்னலை அடைச்சிட்டாங்களா?”

 

இராமநாதன் கிழவரைப்பார்த்தார். மனிதர் உண்மையிலேயே அக்கறையுடன் கேட்கிறாரா அல்லது நம்மை வேவுபார்ப்பதற்கென்று, அனுப்பப்பட்ட மேலிடத்து தந்திரமா? என யோசித்தார். பெரியவர் மேல் நம்பிக்கை வந்தது.

 

– ஏன் எதனாலே கேட்கறீங்க?

 

– சன்னல் அடைக்கப்பட்ட மனிதத்திற்கென ஒரு முகம் இருக்கிறது. உங்களைப் பார்த்ததும் புரிந்துகொண்டேன். எங்கள் முகம் அதற்குப் பழகிக்கொண்டது. உங்கள் முகத்தில் அதிர்ச்சியின் கருநிழல் படிந்திருப்பதைப் பார்க்கிறேன்.

 

– சாதாரணமாகவே வீட்டுக்குள் இருப்பது இங்கே கடினம். சன்னலையும் அடைத்துவைத்துக்கொண்டு இரு என்றால் எப்படி, உங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்துவதில்லையா?

 

– மெதுவாய்ப் பேசுங்கள். மனக்குமுறலாவது வெண்டைக்காயாவது. 1947ப் பிறகு சுதந்திரம் என்ற சொல் இங்கே கசந்துவிட்டது. சுபிட்ஷம் சாமி சுபிட்ஷம் அதுதான் வேண்டும். சுபிட்ஷம் சும்மா வருமா சொல்லுங்கள். எங்கள் சுதந்திரம்  ஏழைகளை தேர்தல் நாளில் மட்டுமே எஜமானர்களாக நடத்த உதவியது. சுதந்திரம் என்றபேரில் கவிதையும், கட்டுரையும், பாட்டும் கூத்தும் இதைத்தானே கண்டோம். பணம் காய்ச்சும் மரத்தைப் பார்க்கலையே. வயிற்றுக்கு சோறுபார்க்கலையே  சென்ற நூற்றாண்டுவரை வேறு சிலமக்களின் சன்னலை அடைத்துவைத்திருந்தோம். அம்மக்களின் வதைகள் எப்படி இருந்திருக்குமென புரிந்துகொள்ள நம்மைப் போன்ற மேல்தட்டு மக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வேண்டுமில்லையா?  இப்போது நம்வீட்டுச் சன்னல்களை அடைக்கிறார்கள்.

 

– உங்களுக்கு இதெல்லாம் சரி, நியாயம்.

 

– உயிர் வாழ்க்கையின் ரகசியம், நெருக்கடிகளை சமாளிப்பதில்தானே இருக்கிறது. நியாயமா இல்லையா என்பதை பிழைத்தெழுந்தால் யோசிக்கலாம்.

 

– பிரச்சினைக்கு வரேன். ஏற்கனவே மேற்கத்திய நாடுகள்போல இந்தியாவிலே கதவை அடைக்க பழகியாச்சு, இப்போது சன்னலையும் அடைப்பதென்பது மேலிடத்து உத்தரவு என்கிறீர்கள்.

 

– எந்தவொரு செயல்பாட்டுக்கும் பின்புலத்தில் காரணம் இருக்கவேண்டும். இல்லையென்று சொல்ல முடியுமா என்ன?

 

– நீங்க எதையோ மறைக்கறீங்க, மேலிடத்துத் தகவல்கள் உங்களுக்கும் தெரியுமென்று சொல்லுங்கள்.

 

– அப்படியும் சொல்லலாம். இல்லையென்றும் மறுக்கலாம். கேவல ஞானம்னு ஒன்றிருக்கிறது, ஒன்றைப் பற்றிய முழுமையான அறிவு, பக்குவம் பெற்ற ஆன்மாக்களுக்கு மட்டுமே கிட்டும். நாளைக்கு உங்களுக்குகூட அவ்வாறான கேவல ஞானம் வாய்க்கும்பொழுது உண்மைகள் புரியவரும்.

 

இருவரும் பிறகு பேசவில்லை. சில நொடிகள் மௌனம் காக்கவேண்டும் என்பதுபோல அமைதியாக இருந்தார்கள். இராமநாதன் பணியாளரை அழைத்து, இரண்டு பீர்கள் கொண்டுவருமாறு, கட்டளையிட்டார். இருவரும் பேசிக்கொள்ளவில்லை. நுரையுடன் வந்தபீரை குடித்து தாகசாந்தி செய்துகொண்டார்கள். காத்திருந்தவர்போல பெரியவர்தான் முதலில் வாய்திறந்து பேசினார்.

 

– சன்னல் அடைக்கபட்டால் என்ன செய்வீர்கள், பொழுது போக வேண்டுமில்லையா? நீங்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதால் வெளியிற் சென்று வரலாமென்று தோன்றும். எங்கள் மக்கள் என்ன செய்வார்கள் சொல்லுங்கள்.  இனித் தொலைகாட்சிபெட்டிகள் முன்னமர்ந்து தொடர்கள் பார்க்கமாட்டேன், என்று அலுத்துப்போயிருந்த மக்களை வழிக்குக் கொண்டுவர மேலிடத்துக்குத் தெரிந்த வழிமுறைகளிலொன்று சன்னற்கதவுகளை அடைத்தல். ஹோலோ-சிஸ்டத்தில் (Holo-System) அவர்கள் செய்துள்ள முதலீடுகளை எடுக்கவேண்டாமா? முதலாளிகளென்றால் அப்படித்தான். இலாபநோக்கில்லாத முதலீடென்று ஒன்று உண்டா என்ன?

 

பெரியவர் அத்தனை சீக்கிரம் உரையாடலை முடித்துக்கொள்வார் என்று தோன்றவில்லை. இராமநாதன் அங்கிருந்து புறப்பட நினைத்தார்.

 

– மிஸ்டர்….

 

– இராமநாதன்

 

– மிஸ்டர் இராமநாதன்! உங்களுக்கு நேரமிருக்குமானா எட்டுமணிக்குமேலே உங்க வீட்டுவாசலில் நில்லுங்கள். நான் வந்து ஓரிடம் உங்களை அழைத்துபோவேன். காட்சி அறிவு மூலம் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகளும் சில இருக்கின்றன, தெரிவிக்கிறேன்.

 

– அப்படி சுதந்திரமா போகலாமா, நீங்கள் சொல்லிக்கொள்கிற மேலிடம் அதை அனுமதிக்குதா?

 

– ‘நான் எங்கே இருக்கிறேன்’? என்பது நீங்கள் இருக்கிற ஐரோப்பிய சிந்தனை. அத்துடன், ‘நான் யார்’ என்ற கேள்வியையும் இணைத்துக் கேட்பது தமிழர்கள் தத்துவ அமைப்பென(1) சொல்கிறார்கள். எங்கள் மேலிடம் இரண்டாவதை மழுங்கச்செய்துவிட்டது. வயிற்றுக்கு சோறும், புலன்களோடு பொருள்களையும் தொடர்புபடுத்தினால் மனித உயிர்களைச் சுலபமாக அடிமைப்படுத்தலாமென நாங்கள் தெரிந்து வைத்திருக்கிறோம். யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை.

 

கிழவர் புறப்பட்டுப்போய்விட்டார். இராமநாதன் தெருவில் இறங்கி நடந்தார். வீதிகளில் வாகனங்கள், மனிதர்கள் என்றில்லை, நாய், பூனை என்ற நடமாட்டங்கள்கூட இல்லை. தாத்தா காரியம் முடிந்ததும் வீட்டை விற்றுவிடலாம். ரேவாவை தொலைபேசியில் பிடித்து இரண்டொரு நாட்களில் பிரான்சுக்கு வந்துவிடுவேன் என்றார். வீட்டுக்குள் நுழைந்ததும், கற்கள் வைத்து அடைக்கபட்ட சன்னலைப் பார்க்க எரிச்சல் கூடியது. முதல் வேலையாக வந்த விலைக்கு விற்றுத் தொலைத்துவிட்டு பிரான்சுக்குப் போய்ச்சேரவேண்டும், என்று நினைத்தார்.

 

எட்டுமணி என்ற பெரியவர் ஏழு ஐம்பதுக்கே ஒரு காப்ஸ்யூல் போலிருந்த வாகனத்தில் வந்து நின்றார்.

 

பரவாயில்லையே போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகரங்களுக்குத் தேவையான வாகனம் போல இருக்கிறதே?

 

– மெதில் ஆல்கஹாலை ஹைட்ரஜனா மாற்றக்கூடிய எரிமம் (Fuel cell) இதிலே இருக்கு, அதுலேதான் இது இயங்குது. மாதத்திற்கு இவ்வளவு என ஒரு கட்டணம் இருக்கிறது அதைசெலுத்தி சந்தாதாரர் ஆகலாம். உங்களுக்கு மைக்ரோ சிப்புள்ள அட்டையொன்றை கொடுப்பார்கள். அதை உபயோகப்படுத்தி எங்கு வேண்டுமானாலும், இவ்வாகனங்களை எடுக்கலாம், நிறுத்தி விட்டுப் போகலாம். இதிலுள்ள மற்றொரு வசதி நிலம், நீர், ஆகாயம் எங்கும் உபயோகிக்கலாம். இரண்டு போரிலிருந்து இருபதுபேர்கள் பயணிக்கக்கூடிய ·பேன்விங்குகள் (Fanwing) இருக்கின்றன. உட்காருங்கள்.

 

சிவ்வென்று மேலேழுந்த •பேன்விங் அடுத்த ஐந்து நொடிகளில் ஒரு கேலக்ஸியில் இறங்கியதாக இராமநாதன் நினைத்தார். எங்கும் இருள் சூழ்ந்திருந்தது, ‘நாமிருப்பதொன்றும் பாதாள உலகமில்லையே?’ இராமநாதன் பெரியவரைக்கேட்டார்.

 

– ஒரு காலத்தில் வைகையென்ற ஆறொன்று ஓடிய இடம். ஆற்றில் நீர்வரத்து குறைய ஆரம்பித்தவுடன் மணலுக்காக தோண்ட ஆறம்பித்தார்கள், கொள்ளையில் கிடைத்ததை அரசியல் தர்மப்படி ஆளுங்கட்சி எதிர்கட்சி என்றபேதமின்றி பங்கிட்டுக்கொண்டார்கள். நாடு சுதந்திரமாக இருந்தபோது தொடங்கியது, இன்றைக்கு மேலிடத்தின் நிர்வாகத்திலும் நடக்கிறது. அந்றைக்குப் பலன் ஒரு சிலருக்கும் மட்டும்போனது இப்போது எல்லோருக்கும் என்றானது வேறென்ன வேண்டும்.

 

குழிபறிப்பதும், கிளைகளை வெட்டுவதும், மரங்களை அறுப்பதுமான காரியங்களில் ராட்சத எந்திரங்கள் ஈடுபட்டிருந்தன. குவியல் குவியலாய் மணல்கள் பெரிய பெரிய கன்வேயர் பெல்ட்டுகளில் முடிவற்ற திசைக்காய்ப் போய்க்கொண்டிருந்தன. அவற்றை இயக்கவும், பிறசெயல்களுக்கு துணைசெய்யவும் மனிதர்கள்.

 

– மணற்கொள்ளையைவிடுங்கள், சுற்றியிருந்த செடி கொடிகள், மரங்கள், பறவைகள் விலங்குகள் அவ்வளவையும் அல்லவா அழித்துக்கொண்டிருக்கிறார்கள். இயற்கையை துவம்சம் செய்ய எப்படி இவர்களால் முடிகிறது.

 

– மிஸ்டர் ராமநாதன் நீங்கள் பார்க்கின்ற எவரும் மனிதர்களில்லை. அவர்கள் அன்றாய்டுகள் (Android) ‘தேவர் அனையர் கயவர்’ என வள்ளுவர் சொல்வார், அந்த இனத்தை எந்திரங்களென்றும் சொல்லலாம், அதாவது மனித எந்திரங்கள். இறந்தவர்களை இப்போதெல்லாம் எரிப்பதுமில்லை புதைப்பதுமில்லை. மேலிடம் மறுசுழற்சிமுறையில் (recycling)அவர்களை செயல்படவைக்கிறது. அடிமைகளாவது திடீரென்று ஒரு நாள் கொடிபிடிப்பார்கள், கோஷம் போடுவார்கள். இவர்களிடம் அந்தப் பிரச்சினைகளில்லை.

 

– நீங்கள் சொல்கிற மேலிடம் அதி புத்திசாலிகளால் கட்டமைக்கப்பட்டதென்று சொல்லுங்கள். ஆனாலும் எனக்கொரு சந்தேகம்.

 

– என்னது?

 

– இந்தியா எத்தனையோ இக்கட்டிலிருந்து மீண்டுவந்ததென தாத்தா அடிக்கடி சொல்வார், இப்போதுள்ள நிலைமையிலிருந்து மீள்வது எப்படி? கலகக் குரலுக்கென்று ஓரிருவர் வேண்டாமா?

 

– மீளுமென்றுதான் நினைக்கிறேன். உங்கள் தாத்தா பெருமைப்படுகிற இந்தியாவுக்கு வீழ்ச்சியில்லையென்றுதான் சொல்லவேண்டும். முக்கியமாக இங்கு உங்களை அழைத்துவந்த நோக்கமே ஒருவரை அறிமுகப்படுத்தவேண்டுமென்றுதான். அவரை பார்க்காதவரை நான் கூட எல்லாம் முடிந்ததென்றுதான் நினைத்தேன். அதோ அந்த கும்பலில் எந்திர மனிதர்களை தள்ளிநின்று வேலை வாங்குகின்ற ஒருவரை பார்க்கிறீர்கள் அல்லவா, அவர்தான் நான் குறிப்பிட்ட அந்த ‘அவர்’

 

யார் அவர்?

 

கடவுள்.

_____________________________________________________________________________

 

  1. தமிழர் அறிவு கோட்பாடு- முனைவர் க. நாராயணன்-மாரி பதிப்பகம்,புதுச்சேரி-605008

 

சீவராசுவின் இடைத்தேர்தல்

 

 

தொரம்மா ! தொரம்மா ! என்று கதவருகே வாசலில் கேட்கும் குரல் கன்னியம்மாவுடையது. இரவு அவன் இச்சைக்கு ஈடுகொடுத்ததில், விடிந்தது கூட தெரியாமல் உறங்கிக் கிடந்தவள் திடீரென்று கண்விழித்தாள், விழித்த வேகத்தில் கையைத் பக்கத்தில் துழாவினாள்.  அவனில்லை, நம்பிக்கையின்றி இரண்டாவது முறையாகத் துழாவினாள். அவன் விட்டுச்சென்ற வெப்பம்மட்டுமே விரித்திருந்த பாயில் மிச்சமிருந்தது.  சுவரோரமிருந்த தகரப்பெட்டி திறந்திருந்தது. தலையை நிமிர்த்தில் புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்த  சீவராசுவைப் பார்த்தாள். துக்கம் தொண்டையில் அடைத்து, நீர்க் கழிவாகக் கண்களை நிரப்பியது.

*                 *                 *                 *

தொகுதியில் இடைத்தேர்தலை அறிவித்திருந்தார்கள். தேர்தலென்று அறிவித்த மறுகணம் அவள் வாசலில் மட்டுமல்ல, அப்பகுதியைச் சேர்ந்த பிற வாசல்களிலும்  வழக்கம்போல சந்தோஷம்.  ஊருல திருவிழாவுக்குக் கொடிகட்டினா சவலைப் பிள்ளைக்குப் பாலுட்டினக் கதையா ஒரு துடிப்பு வந்திடும். ‘தாலிக் கட்டிக்கிட்டு புருஷன்வீட்டுக்குப் போன பெண்களெல்லாங்கூட தங்கள் தங்கள் பிள்ளைக்குட்டிகள் இழுத்துக்கொண்டு பிறந்தவீட்டுக்கு வருவார்கள், அதுபோலத்தான் தங்கள் பகுதியும் மாறியிருப்பதாக நினைத்தாள். சாட்சிக்கு வேறெங்கும் போகவேண்டிய அவசியமில்லை  அவள் வீட்டு வாசலேபோதும். ஒவ்வொரு ஒண்டு குடித்தனத்திலும் நான்கைந்துபேர் கூடுதலாக இருந்தனர். கக்கூஸுக்கும், குளிக்கவும் வாளியை வைத்துக்கொண்டு காத்திருக்க வேண்டியிருந்தது. இத்தனை ஆர்ப்பாட்டத்துக்கிடையிலும், அவனைப்பற்றிய நினைப்பும் குறுக்கிடுகிறது. போனமுறைபோல இம் முறையும் அவன் தன்னைத் தேடிவருவானா ? என்று மனதிற்குள் பலமுறைக் கேட்டுக்கொண்டாள்.  எதற்காக இந்தக்கேள்வி, எப்படி திடீரென்று அவனை மனம் நினைக்கப் போயிற்று ? என்பதுபோன்ற கேள்விகளுக்கு அவளுக்குப் பதில் சொல்லத்தெரியாது.

 

அவள் மனதை அலைக்கழித்த சிந்தனைகுப் பதில்போல  கடந்த இரண்டுமூன்று  நாட்களாக, அடிக்கடி  அவனை எதிர்கொள்கிறாள். எம்சி ரோட்டிலுள்ள ஒரு ஓட்டலுக்கு பாத்திரங்களை துலக்கிவைக்கிற வேலைக்குப்போகிற நேரத்திலும் சரி, பத்து மணிக்கு மார்க்கெட்டுக்குப் போகிறபோதும், திடீரென்று கடை கண்ணிக்கு கிளம்பிப்போகும் நேரத்திலும், திரும்பும்போதும் இவளுக்காகவே அவன் ஏதாவது ஓரிடத்தில் காத்திருக்கிறான்.  இரக்கப்பட்டு பேசலாமென்று கூட நினைத்தாள். ஒரு வருடமா இரண்டு வருடமா ‘தோ ன்னாலும் நாலஞ்சு வருஷமிருக்கும்’ என்று அவள் மனதில் அவனைப் பிரிந்திருக்கும் காலம் குறித்துத் தோராயாமாக ஒரு கணக்கு இருந்தது. ஜெயலலிதாஅம்மா போனமுறை ஜெயித்த மறுநாள் போனவன், பிறகு அவர்கள் இறந்து, முதன்முறையாக இடைத்தேர்தல் அறிவித்தபோது, தற்போதுபோலவே அவளை விடாமல் துரத்தினான். அப்போது அவளிடத்தில் கோபம் மட்டுமே இருந்தது.

 

முகம்கொடுக்கக் கூடாதென வைராக்கியமாக இருந்தாள். இம்முறை அவ் வைராக்கியம் விரிசல் கண்டிருந்தது.  சகக் குடித்தனக்காரர்களிடம் சென்றமுறை  நடந்தச் சம்பவங்களைக் கூறியபோது, வாசல்பெண்கள் எல்லோரும் திட்டித் தீர்த்தார்கள். « என்ன பொம்பிளை  நீ ! வலிய வந்த புருஷனை இப்படித் தொலைக்கலாமா ? ஆம்பளைன்னா அப்படித்தான் இருப்பாங்க, கூத்தியாவூடு புளிச்சுப்போச்சுன்னு வந்த மனுஷனை தண்ணித்தெளிச்சு வூட்டுக்குள்ள வான்னு சொல்லுவியா, அத வுட்டுட்டு வீம்புபிடிச்சு நிக்கிற ? » என ஆளாளுக்குச் சண்டைபோட்டார்கள். தற்போது முன்புபோலவே அவனிடம் கோபமிருந்தாலும், கொஞ்சம் இரக்கமும் பிறந்திருந்தது. இந்தக் குழப்பத்தில் ஒழுங்காக சமைப்பதோ சாப்பிடுவதோ இல்லை. சோற்றைத் தட்டில்போட்டுக்கொண்டு உட்கார்ந்தாலும் அவன் நினைப்பில் கையைக் கழுவிவிட்டு எழுந்துவிடுகிறாள்.

 

அன்று தெருமுனையில கூறுகட்டி விற்றப்  பெண்மணியிடம், வயிறென்று ஒன்றிருக்கிறதே என்பதற்காக வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு திரும்பிக்கோண்டிருந்தாள்.  இவள் குடியிருக்கும் வீட்டு வாசலில் நின்றுகொண்டு அவன்  உற்றுப்பார்ப்பது போலிருந்தது, சந்தேகமில்லை இவளைத்தான் பார்க்கிறான். சுருள் சுருளான தலைமயிரைப் பின்பக்கம் அணைத்துச் சீவியிருந்ததும், அதற்குரிய முகமும் அவன்தான் என்கிற சந்தேகம் வீட்டுவாசலை நெருங்கநெருங்க  திடப்பட்டதும், முதன்முறையாக மனதில் இலேசாக வெட்கமும் மகிழ்ச்சியும். வீட்டை நெருங்கியவள், அவன் இவளைப் பார்த்து, « இன்னா தனம் எப்படியிருக்க ? » என்று தொட்டக் கையை உதறிவிட்டு விடுவிடுவென்று  வீட்டிற்குள் நுழைந்து தனது ஒண்டுக்குடித்தன கதவின் பூட்டைத் திறந்தபோது, அவன் இவள் பின்னால் நின்று தொண்டையைச் செருமினான். அதற்குள் வாசலில் இருந்த மற்றக் குடித்தனக்கார பெண்களில் இரண்டொருவர் கூடியிருந்தனர். வெத்திலைப் பெட்டி சகிதமாக அங்கு வந்த வீட்டுக்கார அம்மா « வாய்யா ! இப்பத்தான் உனக்குப் பொண்டாட்டி நெனப்பு வந்ததா ?  » என்று கேட்டவள் தனத்திடம், « ஒன் கோவத்தையெல்லாம் பிறகு வச்சுக்கோ, முதலில் வந்தவருக்கு உள்ள அழைச்சுபோய் ஒரு வாய்த் தண்ணிகொடு, நீ ஒண்ணும் கொறைஞ்சிடமாட்ட » எனவும், சீவராசும் உரிமையோடு வீட்டுக்குள் நுழைந்தான்.

 

உள்ளே நுழைந்தவனுக்கு மனையை எடுத்துபோட்டாள். கொஞ்சம் இரு வரேன், என்றவள் கதவருகே நின்று எட்டிப்பார்த்தாள். வாசலில் கூடியிருந்த பெண்கள் இல்லை என்றானதும், கதவைத் தாழ்ப்பாள் போட்டாள். வெளியில் யாரோ சிரிப்பது கேட்டது.  தகரப்பெட்டியைத் திறந்து இருப்பதில் சுமாராக ஒரு புடவையையும் இரவிக்கையையும் எடுத்தாள், அவனிடம், கொஞ்சம் அப்படித் திரும்பு எனக்கூறி புடவையையும் ஜாக்கெட்டையும் அணிந்தாள். கண்ணாடியைப் பார்த்து தலையைச் சீராக்கிக்கொண்டாள். நெற்றியில் வைத்த சாந்துபொட்டும் திருப்தியாக இருந்தது. அவன் எதிரே சம்மணமிட்டு உட்கார்ந்தாள்.  சட்டையின் முதலிரண்டு பொத்தான்களை அவிழ்த்த்திருந்ததில் கழுத்தும் மார்பும் அவனுக்குக் கூடுதலாகத் தெரிந்தன. முண்டாபனியனுக்கு மேலாக மார்பில் செழிப்பாக இருந்த மயிர்கள் வியர்வையில் நனைந்து பிசைந்துக் கிடந்தன. மிச்சமிருந்த  உடம்பு எப்போதும்போல கட்டுக் குலையாமலிருந்தது.  சுருள் சுருளாக நெற்றியில் முன் இறக்கத்தில் விழுந்திருந்த கேசம் மட்டும் அடர்த்தியின்றி வெறிச்சோடி கிடந்தது. நெற்றியின் கீழ்ப்பரப்பில் மழைக்கால அட்டைகள்போல கருத்த இரு புருவங்கள். அவை இரண்டிற்கும் கீழிருந்த கண்கள் சிறியவை என்றாலும் அதை ஒரு குறையென்று சொல்லமுடியாது. குறிப்பாக மூக்கு, மூக்கிற்குக் கீழிருந்த உதடுகள், இரண்டையும்  பிரித்திருந்த கட்டை மீசை; கழுத்துக்கு இருபுறமும் புடைத்துக்கொண்டிருந்த தோள்கள் ஆகியவை எந்தப் பெண்பிள்ளையையும் கவரக்கூடியவை.

 

சிறிதுநேரம் அவனை வைத்தகண்களை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவள், திரும்பவும், « கொஞ்சம் இரு தோ வரேன் » என வெளியிற்சென்று அடுத்த ஐந்தாவது நிமிடம் உள்ளே வந்தாள். தம்ளரில் பால் இருந்தது. வீட்டுக் கார அம்மாவிடம் கேட்டு வாங்கி வந்திருக்க வேண்டும், அந்த வாசலில் பிறக் குடித்தனக்காரர்களில்  ஒருவருக்கும் வீட்டில் பால் வாங்கி வைத்திருக்கும் பழக்கமெல்லாம் கிடையாது. பாலில் கொஞ்சமாச் சர்க்கரை போட்டு அவனிடம், தம்ளரை நீட்டினாள். அவனும் அவள் கைத்தொட்டு வாங்கி சப்புக்கொட்டிக் குடித்தான். அவன் உதட்டோரம் குடித்த பாலின் அடையாளம் நுரை செதிள்களாக ஒட்டிக்கிடந்தன. முந்தானையால் துடைத்தாள்.

 

– தனம் உனக்கும் எனக்கும் ஐம்பது வயசுக்கு மேல, நாலுபிள்ளைகீது, மறந்துடாத !

 

– அந்த ஞாபகமிருந்தா இன்னொருத்தியைத் தேடிப் போயிருப்பியா ?

 

– தப்பு பண்ணிட்டேன் தனம். இனிமே பெரிய பாளையத்தம்மன் மேல சத்தியமா அவவீட்டை எட்டிப் பாக்கறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.

 

– சரி இந்த நேரத்துல அதெல்லாம் எதுக்கு, நான் ஒருத்திதான என்று நெனைச்சி கத்தரிக்காயும் தக்காளியும் போதும்னு வாங்கிவந்தேன். இராத்திரிக்கு வேணுமின்னா, ரெண்டுபேருமா மார்க்கெட்டுக்குப் போயி உனக்குப் பிடிச்சத வாங்கி வருவோம்யா. எனக்கும் வாய்க்கு ருசியா சாப்பிட்டு வருஷக் கணக்காச்சு. என்ன சொல்ற, எனக் கேட்டாள்.

 

சொன்னதுபோலவே, புருஷனும் பொண்டாட்டியுமா நான்கு மணிக்குக் காசிமேடு மார்க்கெட்டுக்குப் போனார்கள். வஞ்சிரமும், சுராவும் வாங்கினார்கள். வரும் வழியில் டாஸ்மார்க்கில் இரண்டு கால் பாட்டிலும் வாங்கினாள். கட்சிக்காரங்க கொடுத்த பணம் கையிலிருந்ததால் கொஞ்சம் தாராளமாகச் செலவு பண்னமுடிந்தது.

 

ஒருகால் பாட்டிலை மட்டும் இரவு குடித்து முடிக்க அனுமதித்தாள். தட்டு நிறைய சோற்றைப்போட்டு வஞ்சிரம் மீன் குழம்பை ஊற்றி சுராப் புட்டை வைத்து விசிறி மட்டையை எடுத்து விசிற ஆரம்பித்ததும். அழுதான்.

 

– அழாம சாப்பிடுய்யா, அதான் வந்துட்ட இல்ல.

 

– என் மனசு தாங்கலை. உன் தலையில அடிச்சு வேணா சத்தியம் பண்றன், தலையைக் காட்டு, இனி அந்தத் தெவடியா வீட்டுல காலெடுத்து வைக்கமாட்டன்.

 

சோறு பிசைந்த கையை அவள் தலையில்வைக்கப்போனவனைத் தடுத்தாள்.

 

– பேசாம சாப்பிடு, அப்புறம் பேசலாம், என்றாள்.

 

–  சரி, ஒங்கிட்ட ஒண்ணு கேப்பன் கோவிச்சுக்க மாட்டிய.

 

– நான் ஏன் கோவிச்சுக்கப்போறன், தாலிக்கட்டினவள் ஆச்சே.

 

– அந்தக் கழுதைக்கு ஒரு முப்பதினாயிரம் கொடுக்கவேண்டியிருக்கு, அவ மூஞ்சில கடாசிட்டன்னு வச்சிக்கோ, நான் நிம்மதியா ஒங்கூட இருந்திடுவேன்.

 

– ஏன் நீ சம்பாதிச்சதைல்லாம் என்ன பண்ண ?

 

– ஏதோ பண்ணன், என் கையில இருந்தா ஒங்கிட்ட ஏன் கேக்கறன்

 

– அவளோ பணத்துக்கு நான் எங்கேபோவன்.

– ஓட்டுக்குக் கொடுத்த பணத்தையெல்லாம் என்ன பண்ண ? இன்ன ராத்திரிக்கு குண்டான் கட்சிகாருங்க வர்ராங்கன்னு கேள்வி பட்டன். நீ தாம் தூம்னு செலவு பண்றவ இல்லியெ.  பெட்டியிலதான வச்சிருப்ப. அதை இதைச்சேர்த்து அவ கிட்ட கொடுத்தா பிரச்சினை தீர்ந்திடும். அவள் சங்காத்தியமே வாணாம்.  மாசம்பொறந்தா சம்பள பணம் வந்திடும், அதை இனி உங்கிட்டத் தவற யார்கிட்ட கொடுக்கப்போறன்.

 

சொல்லிவிட்டு இவள் கண்களைப் பார்த்தான், கையில் பிசைந்தசோறு அப்படியே இருந்தது. பொலபொலவென்று அவன் கண்ணீர், கன்னக் கதுப்புகளில் இறங்கியது. அவள் மனம் இளகிப்போனது.

 

-அழாதய்யா ! நீ நல்லபடியா என்னைத் தேடி வந்தியே அதுவே எனக்குப் போதும்யா. பணமென்ன பணம் !

 

தோளில் கிடந்த முந்தானையை எடுத்து அவன் கண்களைத் துடைத்தாள். அவன் கையை உதறினான். சோற்றுருண்டைகளைப் பிடித்து அவன் கையில் வைத்தாள்.

 

– இன்னும் கொஞ்சம் சோறுபோட்டுக்க, எனக்கூறி சோற்றுச் சட்டியை எடுத்தாள்.

 

– அப்புறம் உனக்கு.

 

– நீ வவுத்தை வஞ்சனை பண்ணாம சாப்பிடு, பொட்டச்சிக்கி  வவுரா பெருசு.

 

சாப்பிட்டு முடித்ததும் தட்டிலேயே கையைக் கழுவினான். « பாயைப் போடு தனம் » என்றவனின் பார்வைக் கொதிப்பைத் தாங்க முடியாமல் தலையைக் குனிந்துகொண்டாள். அரைமயக்கத்திலேயே பாயையும் போட்டாள்.

 

*                       *                       *

சுவரில் புகைப்படத்தில்  அப்பாவிபோலச் சிரித்துக்கொண்டிருந்த சீவராசுவைத் திரும்பத் திரும்ப்ப் பார்த்தாள். ஓண்டு குடித்தன வாழ்க்கையை ஆரம்பித்த முதல் வாரத்திலேயே  எம்.சி ரோட்டிலிருந்த ஒரு போட்டாகடையில் எடுத்துக்கொண்டது.  வாசலில் இருந்த சராசரி ஆண்களைப்போலத்தான் சீவராசும் நடந்துகொண்டான். சம்பளம் வாங்கிவந்த நாட்களில் மட்டும் கொஞ்சம் கூடுதலாகக் குடிப்பான்,  ரகளைப் பண்ணுவான். உப்பில்லை, காரமில்லையென்று கொத்தாகத் தலைமயிரைப் பிடித்து சுவரில் மோதுவான். வீட்டுக்கார அம்மா கதவைத் தட்டிச் சத்தம் போட்டதும்  அடங்கிவிடுவான். மற்ற நாட்களில் சும்மாச் சொல்லக்கூடாது, அவளுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் செய்யவேண்டியவற்றை செய்தே வந்தான். ஒரு நாள் அவன் வீட்டில் இல்லாத தமயத்தில் « சீவராசுவை பீச் ஸ்டேஷன்ல பொரிகடலை விக்கிற பொம்பளையோட பார்த்தன் கவனமா இருந்துக்க » என்று  ஹார்பர் மேஸ்த்திரி துரைசாமி எச்சரித்தார்.  அவன் சீவராசுவிடம்  அது பற்றி கேட்கவும் செய்தாள். « எவன் சொன்னான் உனக்கு, ஒருத்திக்குப் பொறந்தவனா இருந்தா, அவன என் முன்னால வரச்சொல்லு » என வாசலில் இறங்கிச் சத்தம்போட்டான்.   இவளையும், அன்றைக்கு அடித்து உதைத்தான். வீட்டுக்கார அம்மாள் « நீங்க வரமாசம் காலி பண்ணிடுங்க, இதுக்கு மேல இங்கிருக்க வேணாம் », என்றாள். மறு நாள் வழக்கம்போல அரைக்கால் காக்கி நிஜாரையும், காக்கிச் சட்டையையும், சிவப்பு ஈரிழைத்துண்டு முண்டாசும், கையில் மூட்டையைக் குத்தித் தூக்குகிற கொக்கியுமாக வேலைக்குப் போனவன் திரும்பவில்லை.

 

தொரம்மா ! தொரம்மா !- என்று மீண்டும் கன்னியம்மாள் குரல்.

 

தொரம்மா என்கிற தனபாக்கியத்திற்கு வைகாசி பிறந்தால் வயது ஐம்பத்தொன்றோ ஐபத்திரண்டோ,இரண்டிலொன்று. அது ஐபத்துமூன்றாகவும் இருக்கலாம். பிறந்தவருடம் எதுவென்று தெளிவாகத் சொல்லத் தெரியாது. அவளுடைய ஆத்தாள், எதிர்வீட்டுச் செங்கமலம் ஈயம் பூசவந்தவனோட ஓடிப்போன வருஷமென்று சொல்லியிருக்கிறாள். ‘செங்கமலம் எந்த வருஷம் ஓடிப்போனாள் ?’ என்று பெற்றவளிடம் கேட்டாள், அதற்கு ‘ஏரி ஒடைஞ்சி ஊருக்குள்ள வெள்ளம் வந்ததே, அந்த வருஷமென்று !’ பதில் வரவும், ‘செங்கமலம் ஓடிப்போன வருஷத்தையே’ பிறந்த வருடமாக வைத்துக்கொண்டாள்.

 

அவள் வாழ்க்கையே  ஒரு தோராய வாழ்க்கை, தோராயக் கணக்கில் நாட்களைக் கடந்துகொண்டிருப்பது. பிறந்தது ; வயசுக்கு வந்தது ;  இப்போதோ அப்போதோ என்றிருந்த சினைப் பசுவுக்குப் புல் அறுக்கப்போன இடத்தில்  பரம்படித்த  மாடுகளை ஓடைநீரில்  குளிப்பாட்டிக்கொண்டிருந்த  காசிநாதனுடன் சவுக்குத்  தோப்பில் ஒதுங்கியது ; பொங்கலின்போது கொத்தவால் சாவடியில் வாழைத்தார்களைச் சுமக்கும்  சீவராசுக்கு உறவு சனத்திற்கு முன்னால்  கழுத்தை நீட்டியது,  அவனுடன் பதினைந்து நாள் கழித்து  சென்னைக்குப் ‘பஸ்’ ஏறியது ;  பாரி முனையில் பேருந்தை விட்டு இறங்கி, ஹைகோர்ட்டையும், ஊர்ந்த  வாகனங்களையும், இடித்துக்கொண்டு சென்ற மனிதர்களையும் கண்டு  பெரிதாகக் கண்களைத் திறந்து மூச்சை உள்வாங்கி பிரமித்தது ; அங்கிருந்து  ஜோடியாக சீவராசுடன்  ரிக்‌ஷாவில் பயணித்தது ; விதவிதமான ஓசைகள், புழுதிகள், கட்டிடங்களைப் பார்த்தபடி பழைய வண்ணாரப்பேட்டையில் ஒண்டுக் குடித்தனங்களில் ஒருத்தியாக குடைக்கூலிக்கு வந்தது என எல்லாமே ஒரு தோராயக் கணக்கிற்குறியவைதான். ஏன் அதன் பிறகு  அடுத்தடுத்து நான்கு பிள்ளைகளை  சீவராசுக்குப் பெற்றது, எவளோ ஒருத்தியுடன் தொடுப்பு வைத்துக்கொண்டு, இவளை  அவன் மறந்து,  வீட்டிற்கு வருவதை  நிறுத்திக்கொண்டது; வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் ஆளாளுக்கு ஒருத்தியைப் பிடித்துக்கொண்டு பிள்ளைகள் இவளை மறந்தது ஆகியவற்றையெல்லாங்கூட ஒரு குத்துமதிப்பாகத்தான் இவளால் சொல்ல முடியும்.

 

தொரம்மா என்ற பெயர் வாசலில் இருக்கிற மற்ற குடித்தனக்காரர்கள் வைத்த பெயர். இவளுடைய மூத்த மகனுக்குப் பெயர் துரை, அதனால்  இவள் தொரம்மா.தமிழ்ப்பண்டிதர்களுக்கு மருவல், திரிபு என்று இலக்கண விளக்கம் தேவைப்படலாம். பழைய வண்ணாரப்பேட்டையில், அவசரத்திற்கு ஒதுங்கும் வசதிகொண்ட சந்தில் அன்றன்றைக்கு கையூன்றினால்தான் கரணம் என்ற நிலையில் குடியிருப்பவர்களுக்கு, இந்த விளக்கமெல்லாம் அதிகம்.  தனபாக்கியம் என்ற ஊர்ப்பெயரை அரசாங்கப் பிரச்சினைகளென்று வருகிறபோது, சிரமப்பட்டு ஞாபகத்தில் கொண்டுவந்திருக்கிறாள்.

 

தொரம்மா ! இன்னுமா  நீ எழுந்திருக்கல ! உள்ள வரலாமா, சீவராசு  அண்ணன்  உள்ளதான் இருக்காரா ?

 

கதவை உட்புறமாகத் தள்ளிய கன்னியம்மாவின் குரல் குனிந்த வாட்டில் தலையை இருட்டிற்குள் புதைத்து, தொரம்மாவைத் தேடியது.  திறந்திருந்த கதவின் அனுமதியுடன் முதிராத காலை வேளை, கன்னியம்மாவைத் தொடர்ந்து உள்ளே நுழைந்திருந்தது. சன்னமான பனிமூட்டம்போல சில இடங்களில் தளர்ந்தும், சில இடங்களில் இறுக்கமாகவும் தம்மைத் திடப்படுத்திக்கொண்டிருந்த காலை ஒளியின் துணையுடன் தொரம்மாவைக் கண்டுபிடிப்பதில் கன்னியம்மாவுக்கு அதிகச் சிரமங்கள் இல்லை. திறந்த கதவு சுவரில் அணையும் பக்கமாக அடுப்பும், தண்ணீர் தவலையும் பாத்திர பண்டங்ககளும் இருந்தன, அதற்கு அடுத்த சுவரில், அதன் முழு  நீளத்தையும் உபயோகித்துக்கொள்ளவேண்டும் என்பதுபோல பிளாஸ்ட்டிக் கயிறில் ஒரு கொடி. அதில் ஒழுங்கின்றி அவிழ்த்துப்போட்டப் புடவைகளும் ஜாக்கெட்டும் கிடந்தன, அதன் கீழே சீவராசுடன் பட்டணத்திற்குப் புறப்பட்டு வந்தபோது கொண்டுவந்த டிரங்க்பெட்டி. அதையொட்டி ஒர் அழுக்குச் சிப்பம்போல இருந்த தலையணையை வேண்டாமென்று ஒதுக்கியவள்போல கையை முக்கோணமாக மடக்கித் தலைக்குக் கொடுத்து தொரம்மா என்கிற தனபாக்கியம் பக்கவாட்டில்  உறங்குவதுபோல பாவனை செய்துகொண்டிருந்தாள். தலை அவிழ்ந்திருந்தது.  இடப்பக்கக்  கன்னத்தில் வாயிலியிருந்து கசிந்த எச்சிலின் நெளிந்த வெண்கோடு.

 

– தொரம்மா எழுந்திரு இன்னும் ஒரு மணி நேரத்துல நாமல்லாம் பூத்துல இருக்கனும்  இன்னைக்கு  ஓட்டுப் போடறது. மறந்துட்டியா ?

 

கன்னியம்மா உலுக்கிய உலுக்கலில் திறந்த கண்கள், தொட்டெழுப்பிய கையையும், அந்தக் கைக்குச் சொந்தக்காரியையும் பார்த்துக்கொண்டிருந்தன.

 

– எழுந்திரு, லைட்டைப் போடட்டுமா ? மீண்டும் கன்னியம்மா.

 

‘வ்வா’ என்று ஒரு பெரிய கோட்டுவாயுடன், எழுந்த தொரம்மா அவிழ்ந்திருந்த தலைமயிரை கொண்டையாக்கி முடித்த மறுவினாடி, விலகிக்கிடந்த முந்தானையைச் சரி செய்து மார்பை போதிய அளவுக்கு புடவைப் பரப்பிற்குள் கொண்டுவந்த திருப்தியில் :

 

– அந்த மணையைப் போட்டு உட்காரு ! -சுவரில் சாத்தியிருந்த மணைப்பக்கம் கை  நீண்டது.

 

மணையை எடுத்துப் போட்டும், வழக்கம்போல சம்மணமிடாமல்  குத்துக்காலிட்டு உட்கார்ந்த கன்னியம்மா முகத்தில் கம்பி மத்தாப்பைக் கொளுத்தியதுபோல அப்படியொரு பிரகாசம். அந்தப் பிரகாசம், மின்சார விளக்கின் ஒளியில் கூடுதலாக மினுங்கியது. தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டத்  தினத்தில் பற்றிக்கொண்ட சந்தோஷம். ஏதோ சொல்லவந்த கன்னியம்மா தனபாக்கியத்தின் முகத்தைப் பார்த்து புரிந்துகொண்டவள்போல :

 

– என்ன அழுதியா ?

 

– அதெல்லாம் ஒண்ணுமில்லை, சொல்லு.

 

– நேற்று ராத்திரி செல்ராசு அண்ணன் எலெக்‌ஷன் டோக்கன் கொடுத்துட்டுப் போனாங்க, கதவைத் தட்டினோம்,சீவராசு அண்ணன் தான் கதவைத் திறந்தாரு.

 

தனபாக்கியத்திற்கு ஞாபகம் வந்தது. நள்ளிரவு, பன்னிரண்டு ஒன்றிருக்கலாம். இவளிருந்த அலங்கோலத்தில், பக்கத்திலிருந்த சீவராசிடம் கதவைத் திறந்து என்னவென்று பார்க்கச் சொன்னாள்.

 

– இரண்டு நாளைக்கு முன்ன இன்னொரு தம்பிக் கொடுத்துட்டுப் போச்சே ! இரண்டும் ஒண்ணுதானே ?

 

– இல்ல. செல்ராசு அண்ணன் அவங்க கூட இல்ல. இவங்க தனியா நிக்கறாங்க. அவங்க  அண்டா இவங்க குண்டான்! முந்தாநேத்து  செல்ராசு அண்ணன் வந்திருந்து வாசலில் எல்லாரையும் கூட்டி வச்சு, சொன்னதை மறந்திட்டியா ? வீட்டுக்கார அம்மாவும் குண்டானுக்குத்தான் ஓட்டுப்போடனும்னு சொல்லி பெரிய பாளையத்தம்மன் படத்துமேல சத்தியம் வாங்கினாங்களே !

 

–  என்னமோபோ நீ சுலபமாச் சொல்லிட்ட  எனக்குப் பயமா கீது.

 

– தோடா ! இன்னாத்துக்குப் பயம், எல்லாத்துக்கும்  நான் கிறேன்ன்னு சொல்லிட்டனில்ல.

 

– பணத்தைக் கொடுத்திட்டு சாமி பட த்துமேல சத்தியம் பண்ண சொல்றாங்க, நமக்கு ஒரு சாமியா ரெண்டு சாமியா எத்தனை சாமிமேலத்தான் சத்தியம் வக்கிறது. ஏற்கனவே செஞ்ச பாவத்துக்குத்தான் எல்லாத்தையும் தொலைச்சுட்டு அம்போன்னு நிக்கிறன்.

 

– அடப்போக்கா ! நீ வேற. பாவம் புண்ணியம் இன்னிக்கிட்டு. கொன்னாப்பாவம் தின்னாப் போச்சுன்னு போவியா.அவங்க ஒரு ஓட்டுக்கு எவ்ளொ கொடுத்தாங்கோ, இவங்க அதைப்போல ரெண்டு மடங்கு கொடுபாங்கோ. உங்க ஊட்டுல மட்டும் ஆறு ஓட்டு. அவ்ளோ துட்டை நீ பார்த்திருக்க மாட்ட, கறிய மீனவாங்கி துன்னுட்டு, கொஞ்சநாளைக்கு வீட்டுல கிட. இன்னா நான் சொல்றது புரியுதா. இந்த முறை  வாசலில் இருக்கிற அத்தனை பேரு ஓட்டும் குண்டானுக்குத்தான்.  பெரிய பாளயத்தம்மன் மேல சத்தியம் பண்ணிகிறோம் மறந்திடாத. இதுக்குப் பவரு ஜாஸ்த்தி.  அது சரி சீவராசு அண்ணன்  எங்க ?

 

சீவராசு கூட நேற்று ராத்திரி பெரிய பாளையத்து அம்மன் பேருலதான் சத்தியம் செய்தான். இராத்திரி இருந்த மனுஷன், விடிஞ்சதும்  சொல்லாமக் கொள்ளாம எங்க போயிருப்பார் என்று யோசித்தாள். இருந்தாலும் தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்பது சரியாக இருக்காதென்று நினைத்தாள்.

 

– நீதான் பார்த்திய நான் அசந்து தூக்கிட்டேன். எதற்காக எழுப்பறதுன்னு நினைச்சிருக்கனும், எங்கே போயிருப்பாரு டீக்கடைக்குதான்.

 

– அது சரி, அண்ணன் வந்த இரண்டு நாளா நீ ராத்திரியில தூங்கறது இல்லன்னு வாசல்பூரா பேச்சு,  சரி சரி நீ எழுந்திரு, நாஷ்ட்டால்லாம் ரெடியா கீது. ஒரு மணி நேரத்துல பூத்துல இருக்கனும்னு ஊட்டுக்காரம்மாவும் சொல்லிட்டாங்கோ. வரேன்.

 

கன்னியம்மாள் கதவைத் திறந்துகொண்டு வெளியேறினாள். அவள் படி இறங்கியிருப்பாள் என்பதை உறுதிபடித்துக்கொண்டதும், இவள் தலையை மீண்டும் ஒருமுறை உயர்த்தி நிழற்படத்தில் சிரிக்கும் சீவராசுவை பார்த்தாள். கீழே திறந்திருக்கும் தகரப்பெட்டியையும் பார்த்தாள். முதன் முறையாக வெடித்து அழுதாள்.

—————————————————————————–