Monthly Archives: பிப்ரவரி 2023

இடைத்தேர்தல்

(காலச்சுவடு இதழில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த சிறுகதை. விரைவில் இதே பெயரில் சிறுகதை தொகுப்பாக எழுத்து பிரசுரம் வெளியிட ஊள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் வழக்கம்போல அனைத்து இலட்சணங்களுடனும் அரங்கேறிகொண்டிருக்கிறது. இடைத்தேர்தல் நினைவேந்தலாக இச்சிறுகதையை பகிர்ந்துகொள்ள உதவிய திராவிட செம்மல்களுக்கும், துணை நிற்கும் அரசியல் பெருந்த்கைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் )

தொரம்மா ! தொரம்மா ! என்று கதவருகே வாசலில் கேட்கும் குரல் கன்னியம்மாவுடையது. இரவு அவன் இச்சைக்கு ஈடுகொடுத்ததில், விடிந்தது கூட தெரியாமல் உறங்கிக் கிடந்தவள் திடீரென்று கண்விழித்தாள், விழித்த வேகத்தில் கையைத் பக்கத்தில் துழாவினாள்.  அவனில்லை, நம்பிக்கையின்றி இரண்டாவது முறையாகத் துழாவினாள். அவன் விட்டுச்சென்ற வெப்பம்மட்டுமே விரித்திருந்த பாயில் மிச்சமிருந்தது.  சுவரோரமிருந்த தகரப்பெட்டி திறந்திருந்தது. தலையை நிமிர்த்தி புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்த  சீவராசுவைப் பார்த்தாள். துக்கம் தொண்டையில் அடைத்து, நீர்க் கழிவாகக் கண்களை நிரப்பியது. 

*                 *                 *                 *

தொகுதியில் இடைத்தேர்தலை அறிவித்திருந்தார்கள். தேர்தலென்று அறிவித்த மறுகணம் அவள் வாசலில் மட்டுமல்ல, அப்பகுதியைச் சேர்ந்த பிற வாசல்களிலும்  வழக்கம்போல சந்தோஷம்.  ஊருல திருவிழாவுக்குக் கொடிகட்டினா சவலைப் பிள்ளைக்குப் பாலுட்டினக் கதையா ஒரு துடிப்பு வந்திடும். ‘தாலிக் கட்டிக்கிட்டு புருஷன்வீட்டுக்குப் போன பெண்களெல்லாங்கூட தங்கள் தங்கள் பிள்ளைக்குட்டிகளை இழுத்துக்கொண்டு பிறந்தவீட்டுக்கு வருவார்கள், அதுபோலத்தான் தங்கள் பகுதியும் மாறியிருப்பதாக நினைத்தாள். சாட்சிக்கு வேறெங்கும் போகவேண்டிய அவசியமில்லை  அவள் வீட்டு வாசலேபோதும். ஒவ்வொரு ஒண்டு குடித்தனத்திலும் நான்கைந்துபேர் கூடுதலாக இருந்தனர். கக்கூஸுக்கும், குளிக்கவும் வாளியை வைத்துக்கொண்டு காத்திருக்க வேண்டியிருந்தது. இத்தனை ஆர்ப்பாட்டத்துக்கிடையிலும், அவனைப்பற்றிய நினைப்பும் குறுக்கிடுகிறது. போனமுறைபோல இம் முறையும் அவன் தன்னைத் தேடிவருவானா ? என்று மனதிற்குள் பலமுறைக் கேட்டுக்கொண்டாள்.  எதற்காக இந்தக்கேள்வி, எப்படி திடீரென்று அவனை மனம் நினைக்கப் போயிற்று ? என்பதுபோன்ற கேள்விகளுக்கு அவளுக்குப் பதில் சொல்லத்தெரியாது.

அவள் மனதை அலைக்கழித்த சிந்தனைகுப் பதில்போல  கடந்த இரண்டுமூன்று  நாட்களாக, அடிக்கடி  அவனை எதிர்கொள்கிறாள். எம்சி ரோட்டிலுள்ள ஒரு ஓட்டலுக்கு பாத்திரங்களை துலக்கிவைக்கிற வேலைக்குப்போகிற நேரத்திலும் சரி, பத்து மணிக்கு மார்க்கெட்டுக்குப் போகிறபோதும், திடீரென்று கடை கண்ணிக்கு கிளம்பிப்போகும் நேரத்திலும், திரும்பும்போதும் இவளுக்காகவே அவன் ஏதாவது ஓரிடத்தில் காத்திருக்கிறான்.  இரக்கப்பட்டு பேசலாமென்று கூட நினைத்தாள். ஒரு வருடமா இரண்டு வருடமா ‘தோ ன்னாலும் நாலஞ்சு வருஷமிருக்கும்’ என்று அவள் மனதில் அவனைப் பிரிந்திருக்கும் காலம் குறித்துத் தோராயாமாக ஒரு கணக்கு இருந்தது. ஜெயலலிதாஅம்மா போனமுறை ஜெயித்த மறுநாள் போனவன், பிறகு அவர்கள் இறந்து, முதன்முறையாக இடைத்தேர்தல் அறிவித்தபோது, தற்போதுபோலவே அவளை விடாமல் துரத்தினான். அப்போது அவளிடத்தில் கோபம் மட்டுமே இருந்தது.

முகம்கொடுக்கக் கூடாதென வைராக்கியமாக இருந்தாள். இம்முறை அவ் வைராக்கியம் விரிசல் கண்டிருந்தது.  சகக் குடித்தனக்காரர்களிடம் சென்றமுறை  நடந்த சம்பவங்களைக் கூறியபோது, வாசல்பெண்கள் எல்லோரும் திட்டித் தீர்த்தார்கள். « என்ன பொம்பிளை  நீ ! வலிய வந்த புருஷனை இப்படித் தொலைக்கலாமா ? ஆம்பளைன்னா அப்படித்தான் இருப்பாங்க, கூத்தியாவூடு புளிச்சுப்போச்சுன்னு வந்த மனுஷனை தண்ணித்தெளிச்சு வூட்டுக்குள்ள வான்னு சொல்லுவியா, அத வுட்டுட்டு வீம்புபிடிச்சு நிக்கிற ? » என ஆளாளுக்குச் சண்டைபோட்டார்கள். தற்போது முன்புபோலவே அவனிடம் கோபமிருந்தாலும், கொஞ்சம் இரக்கமும் பிறந்திருந்தது. இந்தக் குழப்பத்தில் ஒழுங்காக சமைப்பதோ சாப்பிடுவதோ இல்லை. சோற்றைத் தட்டில்போட்டுக்கொண்டு உட்கார்ந்தாலும் அவன் நினைப்பில் கையைக் கழுவிவிட்டு எழுந்துவிடுகிறாள்.

அன்று தெருமுனையில கூறுகட்டி விற்ற  பெண்மணியிடம், வயிறென்று ஒன்றிருக்கிறதே என்பதற்காக வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு திரும்பிக்கோண்டிருந்தாள்.  இவள் குடியிருக்கும் வீட்டு வாசலில் நின்றுகொண்டு அவன்  உற்றுப்பார்ப்பது போலிருந்தது, சந்தேகமில்லை இவளைத்தான் பார்க்கிறான். சுருள் சுருளான தலைமயிரைப் பின்பக்கம் அணைத்துச் சீவியிருந்ததும், அதற்குரிய முகமும் அவன்தான் என்கிற சந்தேகம் வீட்டுவாசலை நெருங்கநெருங்க  திடப்பட்டதும், முதன்முறையாக மனதில் இலேசாக வெட்கமும் மகிழ்ச்சியும். வீட்டை நெருங்கியவள், அவன் இவளைப் பார்த்து, « இன்னா தனம் எப்படியிருக்க ? » என்று தொட்ட கையை உதறிவிட்டு விடுவிடுவென்று  வீட்டிற்குள் நுழைந்து தனது ஒண்டுக்குடித்தன கதவின் பூட்டைத் திறந்தபோது, அவன் இவள் பின்னால் நின்று தொண்டையைச் செருமினான். அதற்குள் வாசலில் இருந்த மற்றக் குடித்தனக்கார பெண்களில் இரண்டொருவர் கூடியிருந்தனர். வெத்திலைப் பெட்டி சகிதமாக அங்கு வந்த வீட்டுக்கார அம்மா « வாய்யா ! இப்பத்தான் உனக்குப் பொண்டாட்டி நெனப்பு வந்ததா ?  » என்று கேட்டவள் தனத்திடம், « ஒன் கோவத்தையெல்லாம் பிறகு வச்சுக்கோ, முதலில் வந்தவருக்கு உள்ள அழைச்சுபோய் ஒரு வாய்த் தண்ணிகொடு, நீ ஒண்ணும் கொறைஞ்சிடமாட்ட » எனவும், சீவராசும் உரிமையோடு வீட்டுக்குள் நுழைந்தான்.

உள்ளே நுழைந்தவனுக்கு மனையை எடுத்துபோட்டாள். கொஞ்சம் இரு வரேன், என்றவள் கதவருகே நின்று எட்டிப்பார்த்தாள். வாசலில் கூடியிருந்த பெண்கள் இல்லை என்றானதும், கதவைத் தாழ்ப்பாள் போட்டாள். வெளியில் யாரோ சிரிப்பது கேட்டது.  தகரப்பெட்டியைத் திறந்து இருப்பதில் சுமாராக ஒரு புடவையையும் இரவிக்கையையும் எடுத்தாள், அவனிடம், கொஞ்சம் அப்படித் திரும்பு எனக்கூறி புடவையையும் ஜாக்கெட்டையும் அணிந்தாள். கண்ணாடியைப் பார்த்து தலையைச் சீராக்கிக்கொண்டாள். நெற்றியில் வைத்த சாந்துபொட்டும் திருப்தியாக இருந்தது. அவன் எதிரே சம்மணமிட்டு உட்கார்ந்தாள்.  சட்டையின் முதலிரண்டு பொத்தான்களை அவிழ்த்த்திருந்ததில் கழுத்தும் மார்பும் அவனுக்குக் கூடுதலாகத் தெரிந்தன. முண்டாபனியனுக்கு மேலாக மார்பில் செழிப்பாக இருந்த மயிர்கள் வியர்வையில் நனைந்து பிசைந்து கிடந்தன. மிச்சமிருந்த  உடம்பு எப்போதும்போல கட்டுக் குலையாமலிருந்தது.  சுருள் சுருளாக நெற்றியில் முன் இறக்கத்தில் விழுந்திருந்த கேசம் மட்டும் அடர்த்தியின்றி வெறிச்சோடி கிடந்தது. நெற்றியின் கீழ்ப்பரப்பில் மழைக்கால அட்டைகள்போல கருத்த இரு புருவங்கள். அவை இரண்டிற்கும் கீழிருந்த கண்கள் சிறியவை என்றாலும் அதை ஒரு குறையென்று சொல்லமுடியாது. குறிப்பாக மூக்கு, மூக்கிற்குக் கீழிருந்த உதடுகள், இரண்டையும்  பிரித்திருந்த கட்டை மீசை; கழுத்துக்கு இருபுறமும் புடைத்துக்கொண்டிருந்த தோள்கள் ஆகியவை எந்தப் பெண்பிள்ளையையும் கவரக்கூடியவை.

சிறிதுநேரம் அவனை வைத்தகண்களை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவள், திரும்பவும், « கொஞ்சம் இரு தோ வரேன் » என வெளியிற்சென்று அடுத்த ஐந்தாவது நிமிடம் உள்ளே வந்தாள். தம்ளரில் பால் இருந்தது. வீட்டுக் கார அம்மாவிடம் கேட்டு வாங்கி வந்திருக்க வேண்டும், அந்த வாசலில் பிறக் குடித்தனக்காரர்களில் ஒருவருக்கும் வீட்டில் பால் வாங்கி வைத்திருக்கும் பழக்கமெல்லாம் கிடையாது. பாலில் கொஞ்சமாச் சர்க்கரை போட்டு அவனிடம், தம்ளரை நீட்டினாள். அவனும் அவள் கைத்தொட்டு வாங்கி சப்புக்கொட்டிக் குடித்தான். அவன் உதட்டோரம் குடித்த பாலின் அடையாளம் நுரை செதிள்களாக ஒட்டிக்கிடந்தன. முந்தானையால் துடைத்தாள்.

– தனம் உனக்கும் எனக்கும் ஐம்பது வயசுக்கு மேல, நாலுபிள்ளைகீது, மறந்துடாத ! 

– அந்த ஞாபகமிருந்தா இன்னொருத்தியைத் தேடிப் போயிருப்பியா ?

– தப்பு பண்ணிட்டேன் தனம். இனிமே பெரிய பாளையத்தம்மன் மேல சத்தியமா அவவீட்டை எட்டிப் பாக்கறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.

– சரி இந்த நேரத்துல அதெல்லாம் எதுக்கு, நான் ஒருத்திதான என்று நெனைச்சி கத்தரிக்காயும் தக்காளியும் போதும்னு வாங்கிவந்தேன். இராத்திரிக்கு வேணுமின்னா, ரெண்டுபேருமா மார்க்கெட்டுக்குப் போயி உனக்குப் பிடிச்சத வாங்கி வருவோம்யா. எனக்கும் வாய்க்கு ருசியா சாப்பிட்டு வருஷக் கணக்காச்சு. என்ன சொல்ற, எனக் கேட்டாள்.

சொன்னதுபோலவே, புருஷனும் பொண்டாட்டியுமா நான்கு மணிக்குக் காசிமேடு மார்க்கெட்டுக்குப் போனார்கள். வஞ்சிரமும், சுராவும் வாங்கினார்கள். வரும் வழியில் டாஸ்மார்க்கில் இரண்டு கால் பாட்டிலும் வாங்கினாள். கட்சிக்காரங்க கொடுத்த பணம் கையிலிருந்ததால் கொஞ்சம் தாராளமாகச் செலவு பண்னமுடிந்தது.

ஒருகால் பாட்டிலை மட்டும் இரவு குடித்து முடிக்க அனுமதித்தாள். தட்டு நிறைய சோற்றைப்போட்டு வஞ்சிரம் மீன் குழம்பை ஊற்றி சுராப் புட்டை வைத்து விசிறி மட்டையை எடுத்து விசிற ஆரம்பித்ததும். அழுதான்.

– அழாம சாப்பிடுய்யா, அதான் வந்துட்ட இல்ல.

– என் மனசு தாங்கலை. உன் தலையில அடிச்சு வேணா சத்தியம் பண்றன், தலையைக் காட்டு, இனி அந்தத் தெவடியா வீட்டுல காலெடுத்து வைக்கமாட்டன்.

சோறு பிசைந்த கையை அவள் தலையில்வைக்கப்போனவனைத் தடுத்தாள்.

– பேசாம சாப்பிடு, அப்புறம் பேசலாம், என்றாள்.

–  சரி, ஒங்கிட்ட ஒண்ணு கேப்பன் கோவிச்சுக்க மாட்டிய.

– நான் ஏன் கோவிச்சுக்கப்போறன், தாலிக்கட்டினவள் ஆச்சே.

– அந்தக் கழுதைக்கு ஒரு முப்பதினாயிரம் கொடுக்கவேண்டியிருக்கு, அவ மூஞ்சில கடாசிட்டன்னு வச்சிக்கோ, நான் நிம்மதியா ஒங்கூட இருந்திடுவேன்.

– ஏன் நீ சம்பாதிச்சதைல்லாம் என்ன பண்ண ?

– ஏதோ பண்ணன், என் கையில இருந்தா ஒங்கிட்ட ஏன் கேக்கறன்

– அவளோ பணத்துக்கு நான் எங்கேபோவன்.

– ஓட்டுக்குக் கொடுத்த பணத்தையெல்லாம் என்ன பண்ண ? இன்ன ராத்திரிக்கு குண்டான் கட்சிகாருங்க வர்ராங்கன்னு கேள்வி பட்டன். நீ தாம் தூம்னு செலவு பண்றவ இல்லியெ.  பெட்டியிலதான வச்சிருப்ப. அதை இதைச்சேர்த்து அவ கிட்ட கொடுத்தா பிரச்சினை தீர்ந்திடும். அவள் சங்காத்தியமே வாணாம்.  மாசம்பொறந்தா சம்பள பணம் வந்திடும், அதை இனி உங்கிட்டத் தவற யார்கிட்ட கொடுக்கப்போறன்.

சொல்லிவிட்டு இவள் கண்களைப் பார்த்தான், கையில் பிசைந்தசோறு அப்படியே இருந்தது. பொலபொலவென்று அவன் கண்ணீர், கன்னக் கதுப்புகளில் இறங்கியது. அவள் மனம் இளகிப்போனது.

-அழாதய்யா ! நீ நல்லபடியா என்னைத் தேடி வந்தியே அதுவே எனக்குப் போதும்யா. பணமென்ன பணம் !

தோளில் கிடந்த முந்தானையை எடுத்து அவன் கண்களைத் துடைத்தாள். அவன் கையை உதறினான். சோற்றுருண்டைகளைப் பிடித்து அவன் கையில் வைத்தாள்.

– இன்னும் கொஞ்சம் சோறுபோட்டுக்க, எனக்கூறி சோற்றுச் சட்டியை எடுத்தாள்.

– அப்புறம் உனக்கு.

– நீ வவுத்தை வஞ்சனை பண்ணாம சாப்பிடு, பொட்டச்சிக்கி  வவுரா பெருசு.

சாப்பிட்டு முடித்ததும் தட்டிலேயே கையைக் கழுவினான். « பாயைப் போடு தனம் » என்றவனின் பார்வைக் கொதிப்பைத் தாங்க முடியாமல் தலையைக் குனிந்துகொண்டாள். அரைமயக்கத்திலேயே பாயையும் போட்டாள்.

*                       *                       *

சுவரில் புகைப்படத்தில்  அப்பாவிபோலச் சிரித்துக்கொண்டிருந்த சீவராசுவைத் திரும்பத் திரும்ப்ப் பார்த்தாள். ஓண்டு குடித்தன வாழ்க்கையை ஆரம்பித்த முதல் வாரத்திலேயே  எம்.சி ரோட்டிலிருந்த ஒரு போட்டாகடையில் எடுத்துக்கொண்டது.  வாசலில் இருந்த சராசரி ஆண்களைப்போலத்தான் சீவராசும் நடந்துகொண்டான். சம்பளம் வாங்கிவந்த நாட்களில் மட்டும் கொஞ்சம் கூடுதலாகக் குடிப்பான்,  ரகளைப் பண்ணுவான். உப்பில்லை, காரமில்லையென்று கொத்தாகத் தலைமயிரைப் பிடித்து சுவரில் மோதுவான். வீட்டுக்கார அம்மா கதவைத் தட்டிச் சத்தம் போட்டதும்  அடங்கிவிடுவான். மற்ற நாட்களில் சும்மாச் சொல்லக்கூடாது, அவளுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் செய்யவேண்டியவற்றை செய்தே வந்தான். ஒரு நாள் அவன் வீட்டில் இல்லாத தமயத்தில் « சீவராசுவை பீச் ஸ்டேஷன்ல பொரிகடலை விக்கிற பொம்பளையோட பார்த்தன் கவனமா இருந்துக்க » என்று  ஹார்பர் மேஸ்த்திரி துரைசாமி எச்சரித்தார்.  அவன் சீவராசுவிடம்  அது பற்றி கேட்கவும் செய்தாள். « எவன் சொன்னான் உனக்கு, ஒருத்திக்குப் பொறந்தவனா இருந்தா, அவன என் முன்னால வரச்சொல்லு » என வாசலில் இறங்கிச் சத்தம்போட்டான்.   இவளையும், அன்றைக்கு அடித்து உதைத்தான். வீட்டுக்கார அம்மாள் « நீங்க வரமாசம் காலி பண்ணிடுங்க, இதுக்கு மேல இங்கிருக்க வேணாம் », என்றாள். மறு நாள் வழக்கம்போல அரைக்கால் காக்கி நிஜாரையும், காக்கிச் சட்டையையும், சிவப்பு ஈரிழைத்துண்டு முண்டாசும், கையில் மூட்டையைக் குத்தித் தூக்குகிற கொக்கியுமாக வேலைக்குப் போனவன் திரும்பவில்லை.

தொரம்மா ! தொரம்மா !- என்று மீண்டும் கன்னியம்மாள் குரல்.

தொரம்மா என்கிற தனபாக்கியத்திற்கு வைகாசி பிறந்தால் வயது ஐம்பத்தொன்றோ ஐபத்திரண்டோ,இரண்டிலொன்று. அது ஐபத்துமூன்றாகவும் இருக்கலாம். பிறந்தவருடம் எதுவென்று தெளிவாகத் சொல்லத் தெரியாது. அவளுடைய ஆத்தாள், எதிர்வீட்டுச் செங்கமலம் ஈயம் பூசவந்தவனோட ஓடிப்போன வருஷமென்று சொல்லியிருக்கிறாள். ‘செங்கமலம் எந்த வருஷம் ஓடிப்போனாள் ?’ என்று பெற்றவளிடம் கேட்டாள், அதற்கு ‘ஏரி ஒடைஞ்சி ஊருக்குள்ள வெள்ளம் வந்ததே, அந்த வருஷமென்று !’ பதில் வரவும், ‘செங்கமலம் ஓடிப்போன வருஷத்தையே’ பிறந்த வருடமாக வைத்துக்கொண்டாள்.

அவள் வாழ்க்கையே  ஒரு தோராய வாழ்க்கை, தோராயக் கணக்கில் நாட்களைக் கடந்துகொண்டிருப்பது. பிறந்தது ; வயசுக்கு வந்தது ;  இப்போதோ அப்போதோ என்றிருந்த சினைப் பசுவுக்குப் புல் அறுக்கப்போன இடத்தில்  பரம்படித்த  மாடுகளை ஓடைநீரில்  குளிப்பாட்டிக்கொண்டிருந்த  காசிநாதனுடன் சவுக்குத்  தோப்பில் ஒதுங்கியது ; பொங்கலின்போது கொத்தவால் சாவடியில் வாழைத்தார்களைச் சுமக்கும்  சீவராசுக்கு உறவு சனத்திற்கு முன்னால்  கழுத்தை நீட்டியது,  அவனுடன் பதினைந்து நாள் கழித்து  சென்னைக்குப் ‘பஸ்’ ஏறியது ;  பாரி முனையில் பேருந்தை விட்டு இறங்கி, ஹைகோர்ட்டையும், ஊர்ந்த  வாகனங்களையும், இடித்துக்கொண்டு சென்ற மனிதர்களையும் கண்டு  பெரிதாகக் கண்களைத் திறந்து மூச்சை உள்வாங்கி பிரமித்தது ; அங்கிருந்து  ஜோடியாக சீவராசுடன்  ரிக்‌ஷாவில் பயணித்தது ; விதவிதமான ஓசைகள், புழுதிகள், கட்டிடங்களைப் பார்த்தபடி பழைய வண்ணாரப்பேட்டையில் ஒண்டுக் குடித்தனங்களில் ஒருத்தியாக குடைக்கூலிக்கு வந்தது என எல்லாமே ஒரு தோராயக் கணக்கிற்குறியவைதான். ஏன் அதன் பிறகு  அடுத்தடுத்து நான்கு பிள்ளைகளை  சீவராசுக்குப் பெற்றது, எவளோ ஒருத்தியுடன் தொடுப்பு வைத்துக்கொண்டு, இவளை  அவன் மறந்து,  வீட்டிற்கு வருவதை  நிறுத்திக்கொண்டது; வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் ஆளாளுக்கு ஒருத்தியைப் பிடித்துக்கொண்டு பிள்ளைகள் இவளை மறந்தது ஆகியவற்றையெல்லாங்கூட ஒரு குத்துமதிப்பாகத்தான் இவளால் சொல்ல முடியும். 

தொரம்மா என்ற பெயர் வாசலில் இருக்கிற மற்ற குடித்தனக்காரர்கள் வைத்த பெயர். இவளுடைய மூத்த மகனுக்குப் பெயர் துரை, அதனால்  இவள் தொரம்மா.தமிழ்ப்பண்டிதர்களுக்கு மருவல், திரிபு என்று இலக்கண விளக்கம் தேவைப்படலாம். பழைய வண்ணாரப்பேட்டையில், அவசரத்திற்கு ஒதுங்கும் வசதிகொண்ட சந்தில் அன்றன்றைக்கு கையூன்றினால்தான் கரணம் என்ற நிலையில் குடியிருப்பவர்களுக்கு, இந்த விளக்கமெல்லாம் அதிகம்.  தனபாக்கியம் என்ற ஊர்ப்பெயரை அரசாங்கப் பிரச்சினைகளென்று வருகிறபோது, சிரமப்பட்டு ஞாபகத்தில் கொண்டுவந்திருக்கிறாள்.

தொரம்மா ! இன்னுமா  நீ எழுந்திருக்கல ! உள்ள வரலாமா, சீவராசு  அண்ணன்  உள்ளதான் இருக்காரா ?

கதவை உட்புறமாகத் தள்ளிய கன்னியம்மாவின் குரல் குனிந்த வாட்டில் தலையை இருட்டிற்குள் புதைத்து, தொரம்மாவைத் தேடியது.  திறந்திருந்த கதவின் அனுமதியுடன் முதிராத காலை வேளை, கன்னியம்மாவைத் தொடர்ந்து உள்ளே நுழைந்திருந்தது. சன்னமான பனிமூட்டம்போல சில இடங்களில் தளர்ந்தும், சில இடங்களில் இறுக்கமாகவும் தம்மைத் திடப்படுத்திக்கொண்டிருந்த காலை ஒளியின் துணையுடன் தொரம்மாவைக் கண்டுபிடிப்பதில் கன்னியம்மாவுக்கு அதிகச் சிரமங்கள் இல்லை. திறந்த கதவு சுவரில் அணையும் பக்கமாக அடுப்பும், தண்ணீர் தவலையும் பாத்திர பண்டங்ககளும் இருந்தன, அதற்கு அடுத்த சுவரில், அதன் முழு  நீளத்தையும் உபயோகித்துக் கொள்ளவேண்டும் என்பதுபோல பிளாஸ்ட்டிக் கயிறில் ஒரு கொடி. அதில் ஒழுங்கின்றி அவிழ்த்துப்போட்டப் புடவைகளும் ஜாக்கெட்டும் கிடந்தன, அதன் கீழே சீவராசுடன் பட்டணத்திற்குப் புறப்பட்டு வந்தபோது கொண்டுவந்த டிரங்க்பெட்டி. அதையொட்டி ஒர் அழுக்குச் சிப்பம்போல இருந்த தலையணையை வேண்டாமென்று ஒதுக்கியவள்போல கையை முக்கோணமாக மடக்கித் தலைக்குக் கொடுத்து தொரம்மா என்கிற தனபாக்கியம் பக்கவாட்டில்  உறங்குவதுபோல பாவனை செய்துகொண்டிருந்தாள். தலை அவிழ்ந்திருந்தது.  இடப்பக்கக்  கன்னத்தில் வாயிலியிருந்து கசிந்த எச்சிலின் நெளிந்த வெண்கோடு.

– தொரம்மா எழுந்திரு இன்னும் ஒரு மணி நேரத்துல நாமல்லாம் பூத்துல இருக்கனும்  இன்னைக்கு  ஓட்டுப் போடறது. மறந்துட்டியா ? 

கன்னியம்மா உலுக்கிய உலுக்கலில் திறந்த கண்கள், தொட்டெழுப்பிய கையையும், அந்தக் கைக்குச் சொந்தக்காரியையும் பார்த்துக்கொண்டிருந்தன.

– எழுந்திரு, லைட்டைப் போடட்டுமா ? மீண்டும் கன்னியம்மா.

‘வ்வா’ என்று ஒரு பெரிய கோட்டுவாயுடன், எழுந்த தொரம்மா அவிழ்ந்திருந்த தலைமயிரை கொண்டையாக்கி முடித்த மறுவினாடி, விலகிக்கிடந்த முந்தானையைச் சரி செய்து மார்பை போதிய அளவுக்கு புடவைப் பரப்பிற்குள் கொண்டுவந்த திருப்தியில் :

– அந்த மணையைப் போட்டு உட்காரு ! -சுவரில் சாத்தியிருந்த மணைப்பக்கம் கை  நீண்டது.

மணையை எடுத்துப் போட்டும், வழக்கம்போல சம்மணமிடாமல்  குத்துக்காலிட்டு உட்கார்ந்த கன்னியம்மா முகத்தில் கம்பி மத்தாப்பைக் கொளுத்தியதுபோல அப்படியொரு பிரகாசம். அந்தப் பிரகாசம், மின்சார விளக்கின் ஒளியில் கூடுதலாக மினுங்கியது. தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டத்  தினத்தில் பற்றிக்கொண்ட சந்தோஷம். ஏதோ சொல்லவந்த கன்னியம்மா தனபாக்கியத்தின் முகத்தைப் பார்த்து புரிந்துகொண்டவள்போல :

– என்ன அழுதியா ?

– அதெல்லாம் ஒண்ணுமில்லை, சொல்லு.

– நேற்று ராத்திரி செல்ராசு அண்ணன் எலெக்‌ஷன் டோக்கன் கொடுத்துட்டுப் போனாங்க, கதவைத் தட்டினோம்,சீவராசு அண்ணன் தான் கதவைத் திறந்தாரு.

தனபாக்கியத்திற்கு ஞாபகம் வந்தது. நள்ளிரவு, பன்னிரண்டு ஒன்றிருக்கலாம். இவளிருந்த அலங்கோலத்தில், பக்கத்திலிருந்த சீவராசிடம் கதவைத் திறந்து என்னவென்று பார்க்கச் சொன்னாள். 

– இரண்டு நாளைக்கு முன்ன இன்னொரு தம்பிக் கொடுத்துட்டுப் போச்சே ! இரண்டும் ஒண்ணுதானே ?

– இல்ல. செல்ராசு அண்ணன் அவங்க கூட இல்ல. இவங்க தனியா நிக்கறாங்க. அவங்க  அண்டா இவங்க குண்டான்! முந்தாநேத்து  செல்ராசு அண்ணன் வந்திருந்து வாசலில் எல்லாரையும் கூட்டி வச்சு, சொன்னதை மறந்திட்டியா ? வீட்டுக்கார அம்மாவும் குண்டானுக்குத்தான் ஓட்டுப்போடனும்னு சொல்லி பெரிய பாளையத்தம்மன் படத்துமேல சத்தியம் வாங்கினாங்களே !

–  என்னமோபோ நீ சுலபமாச் சொல்லிட்ட  எனக்குப் பயமா கீது.

– தோடா ! இன்னாத்துக்குப் பயம், எல்லாத்துக்கும்  நான் கிறேன்னு சொல்லிட்டனில்ல.

– பணத்தைக் கொடுத்திட்டு சாமி பட த்துமேல சத்தியம் பண்ண சொல்றாங்க, நமக்கு ஒரு சாமியா ரெண்டு சாமியா எத்தனை சாமிமேலத்தான் சத்தியம் வக்கிறது. ஏற்கனவே செஞ்ச பாவத்துக்குத்தான் எல்லாத்தையும் தொலைச்சுட்டு அம்போன்னு நிக்கிறன்.

– அடப்போக்கா ! நீ வேற. பாவம் புண்ணியம் இன்னிக்கிட்டு. கொன்னாப்பாவம் தின்னாப் போச்சுன்னு போவியா.அவங்க ஒரு ஓட்டுக்கு எவ்ளொ கொடுத்தாங்கோ, இவங்க அதைப்போல ரெண்டு மடங்கு கொடுபாங்கோ. உங்க ஊட்டுல மட்டும் ஆறு ஓட்டு. அவ்ளோ துட்டை நீ பார்த்திருக்க மாட்ட, கறிய மீனவாங்கி துன்னுட்டு, கொஞ்சநாளைக்கு வீட்டுல கிட. இன்னா நான் சொல்றது புரியுதா. இந்த முறை  வாசலில் இருக்கிற அத்தனை பேரு ஓட்டும் குண்டானுக்குத்தான்.  பெரிய பாளயத்தம்மன் மேல சத்தியம் பண்ணிகிறோம் மறந்திடாத. இதுக்குப் பவரு ஜாஸ்த்தி.  அது சரி சீவராசு அண்ணன்  எங்க ?

சீவராசு கூட நேற்று ராத்திரி பெரிய பாளையத்து அம்மன் பேருலதான் சத்தியம் செய்தான். இராத்திரி இருந்த மனுஷன், விடிஞ்சதும்  சொல்லாமக் கொள்ளாம எங்க போயிருப்பார் என்று யோசித்தாள். இருந்தாலும் தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்பது சரியாக இருக்காதென்று நினைத்தாள்.

– நீதான் பார்த்திய நான் அசந்து தூக்கிட்டேன். எதற்காக எழுப்பறதுன்னு நினைச்சிருக்கனும், எங்கே போயிருப்பாரு டீக்கடைக்குதான். 

– அது சரி, அண்ணன் வந்த இரண்டு நாளா நீ ராத்திரியில தூங்கறது இல்லன்னு வாசல்பூரா பேச்சு,  சரி சரி நீ எழுந்திரு, நாஷ்ட்டால்லாம் ரெடியா கீது. ஒரு மணி நேரத்துல பூத்துல இருக்கனும்னு ஊட்டுக்காரம்மாவும் சொல்லிட்டாங்கோ. வரேன்.  

கன்னியம்மாள் கதவைத் திறந்துகொண்டு வெளியேறினாள். அவள் படி இறங்கியிருப்பாள் என்பதை உறுதிபடித்துக்கொண்டதும், இவள் தலையை மீண்டும் ஒருமுறை உயர்த்தி நிழற்படத்தில் சிரிக்கும் சீவராசுவை பார்த்தாள். கீழே திறந்திருக்கும் தகரப்பெட்டியையும் பார்த்தாள். முதன் முறையாக வெடித்து அழுதாள்.

—————————————————————————–

பிரான்சு நிஜமும் நிழலும் -1

காலை பத்து மணி. விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள், வாசனை தைலங்கள் விற்பனைக்குப் பிரசித்தமான பாரீஸின் புகழ்பெற்ற ஷான்ஸெலிஸே (Champs-Elysées) அவென்யு. மேட்டுக்குடி உல்லாசப்பயணிகள் அதிகம் புழங்குகிற இடம். சீனக் குடியரசைச் சேர்ந்த உல்லாசப்பயணிகளைச் சுமந்துவந்தப் பேருந்தொன்று சட்டென்று பிரேக் அடித்து குலுங்கி நிற்கிறது, முன் கதவு பக்கவாட்டில் ஒதுங்கியதும், சொர்க்கவாசல் திறக்கப்பட்ட சந்தோஷத்தில் இறங்குகிறார்கள். ஷாப்பிங் நேரத்தை வீணாக்கிவிடக்கூடாது என்பதுபோல வேகமாக அவரவவருக்கு விருப்பமான கடைகளுக்குள் நுழைகிறார்கள். தங்கள் உருப்படியான நோக்கம் நிறைவேறிய திருப்தியுடன் நான்கைந்து மணிநேரம் கழித்து திரும்புகிறார்கள். ஒவ்வொருவர் கையிலும் பிரார்த்தனைபோல உலகின் பிரசித்திபெற்ற நிறுவனங்களின் வர்த்தகக்குறி கொண்ட பைகள் (சராசரியாக நபர் ஒன்றுக்கு 2011ம் ஆண்டின் கணக்குப்படி 1470 யூரோ வரை சீனர்கள் இங்கே செலவிடுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது). அவர்களை இடை மறிக்கும் பாரீஸ்வாழ் சீனர்கள் குழுவொன்று சீன மொழியில் அச்சிட்ட நாளிதழை இலவசமென்று கொடுக்க முன் வருகிறது. ஆனால் பேருந்துகளில் வந்தவர்களோ அந்த நாளிதழை வாங்க மறுப்பதோடு, ஒருவகையான அச்ச முகபாவத்துடன் பேருந்தில் ஏறுகிறார்கள். செய்தித்தாளின் பெயர் “The Epoch Times”. சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ள நாளிதழ். .மக்கள் குடியரசு என்று சொல்லிக்கொள்ளும் சீன நாட்டிலிருந்து உல்லாசப் பயணிகளாக வந்தவர்கள் பயணம் வந்த இடத்தில்கூட வாய்திறக்க அஞ்ச, பிரான்சு நாட்டிற்கு அகதிகளாக வந்தவர்களுக்கு தங்கள் குரலை வெளிப்படுத்தவும், அச்சில் பதித்து பகிர்ந்துகொள்ளவும் உரிமை இருக்கிறது.

மற்றொரு காட்சி : Ernst & Young என்ற அமைப்பும், L’express தினசரியும் ஆண்டுதோறும் வழங்கும் “உலகின் சிறந்த தொழிலதிபர்” என்ற விருதை கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘மொனாக்கோ'(Monaco) நாட்டில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ‘Mohed Altrad’ என்பவர் வென்றதாக செய்தி. பிரெஞ்சு தினசரிகளும் தொலைக்காட்சிகளும் முதன்முறையாக பிரெஞ்சுக்காரர் அல்லாத ஒருவர் இவ்விருதை வென்ற செய்தியை பெருமிதத்துடன் தெரிவித்தன. ஆனால் இவருடைய பூர்வீகத்தைத் தெரிவிக்க ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் விரும்பவில்லை என்பதால் உண்மை இல்லை என்றாகிவிடுமா? விருதை வென்றவர் ஓர் இஸ்லாமியர், சிரியாவிலிருந்து பிரான்சுக்கு வந்தவர், உழைத்து முன்னேறியவர். அவர் இஸ்லாமியர் என்றாலும் பிரான்சு நாட்டின் புகழுக்குக் காரணமாக இருக்கிறார் எனவே பிரெஞ்சுகாரர்களுக்கு வேண்டியவர். மற்றொரு சம்பவவத்தில் வேறொரு காட்சி: ஓர் அமெரிக்க விமான நிறுவனம் தனது நாட்டிற்குப் பயணம் செய்யவிருந்த ‘மெதி'(Mehdi) என்ற இளைஞரிடம் துர்வாசம் இருப்பதாகக் கூறி பாரீஸ் விமான தளத்தில் இறக்கிவிட்டது. செய்திவாசித்தவர்கள் அவர் ஒரு பிரெஞ்சுக் காரர் அல்லது பிரெஞ்சு குடுயுரிமைப்பெற்றவர் என்பதைச் சாதுர்யமாகத் தவிர்த்து, அவர் அல்ஜீரிய நாட்டைச்சேர்ந்தவர் என்ற சொல்லை உபயோகித்தார்கள். பிரெஞ்சுக் காரர்களின் விசித்திரமான இந்த மனப்போக்கையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மேற்கத்திய நாடுகள் என்றால் என்ன? பிரான்சும் பிரிட்டனும் பூமிப்பந்தின் எப்பகுதியில் இருக்கின்றன? என்பதை அறியாத வயதில் கிராமத்திளிருந்து மூன்று கல் நடந்து, பேருந்து பிடித்து அரைமணி ஓட்டத்திற்குப்பிறகு “அஜந்தா டாக்கீஸ் பாலமெல்லாம் இறங்கு” என்று நடத்துனர் கூவலில் அறிமுகமான புதுச்சேரிதான் அப்போது எனக்குப் பிரான்சாகத் தெரிந்தது. புதுச்சேரியைப்பற்றி ஓரளவு நினைவுபடுத்த முடிவது 1962ம் ஆண்டிலிருந்து. எங்கள் கிராமத்திற்கும் புதுச்சேரிக்கும் நெருக்கம் அதிகம். பெரும்பாலான உறவினர்கள் புதுச்சேரியில் இருந்தார்கள். உறவினர்களுக்கு கிராமத்தில் நிலங்கள் இருந்தன. அறுவடைகாலங்களில் எங்கள்வீட்டில் தங்கிவிட்டு கிளம்பிப்போவார்கள். அவர்கள் வீட்டிற்கு நாங்களும் போவதுண்டு. அப்படித்தான் புதுச்சேரி அறிமுகமானது. நேருவீதிக்கு வடகே இருந்த உறவினர்கள் வசதிபடைத்த குடும்பங்கள், Notaire ஆகவும், Huissier ஆகவும் இருந்தனர் மாறாக நேரு வீதிக்கு தெற்கே இருந்தவர்கள் பால் வியாபாரம் செய்பவர்கள் (புதுச்சேரி வரலாறு தவிர்க்க இயலாத ஆனந்தரெங்கப்பிள்ள குடும்பமும், பக்தி இலக்கிய மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட தேசிகப்பிள்ளை குடும்பமும் இதற்கு விதிவிலக்கு). புதுச்சேரிக்குச் செல்லும்போதெல்லாம் பிரெஞ்சு கலாச்சாரத்தை பிரித்துணர முடியாத வயதென்றாலும், திண்டிவனம், கடலூர், விழுப்புரம் ஆகியவற்றிலிருந்து புதுச்சேரி வேறுபட்டது என்பதை விளங்கிக்கொண்டிருந்தேன். இந்த வேறுபாட்டை வலியுறுத்திய தனிமங்களில் கள்ளுக்கடை, சாராயக் கடைகள்; அரைக்கால் சட்டையில் மஞ்சள் தொடைதெரிய சைக்கிளில் செல்லும் திரட்சியான ஆஸ்ரமத்துப் பெண்களும் அடக்கம். தொடக்கப்பளிக்கே கூட பக்கத்து கிராமத்திற்கு போகவேண்டியிருந்த நிலையில், நாங்கள் அம்மம்மா என்று அழைத்த அம்மா வழி பாட்டியுடன் 60களில் புதுச்சேரியில் தங்கிப் படிக்கலானோம். காந்திவீதியின் தொடக்கத்தில் ஐந்தாம் எண் வீடு. புதுச்சேரி சற்று கூடுதலாக அறிமுகமானது அப்போதுதான். ராஜா பண்டிகையும், மாசிமகமும், கல்லறை திருவிழாவும், கர்னவாலும் பிரம்பிப்பைத் தந்தன நாங்கள் குடியிருந்த வீட்டிற்குச் சொந்தக்காரர் பிரெஞ்சு காவல்துறையில் பணியாற்றிவர், அவர் ‘சிப்பாய்’ ஆக இருந்தபோது எடுத்துக்கொண்ட படத்தைப் பெருமையுடன் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு வருடமும் ’14 juillet’ ( பஸ்த்தி சிறையைக் பிரெஞ்சு பிரெஞ்சு புரட்சியின்போது கைப்பற்றிய தினம் – இன்று தேச விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது.) அன்று புதுச்சேரியில் விழா எடுப்பார்கள். தொடர்ந்து பிரெஞ்சு தூதரகத்தில், சிறிய அளவிளான விருந்திருக்கும், அவ்விருந்திற்கு குடியிருந்த வீட்டுக்காரர் அழைப்பினைப் பெற்றிருப்பார், என்னையும் அழைத்து செல்வார். அவர் ஷாம்பெய்ன் அருந்துவதில் ஆர்வத்துடன் இருக்க, எனது கவனம் கொரிக்கின்ற பொருட்கள் மீது இருக்கும். பிரெஞ்சுக்காரர்களையும் அவர்கள் பேசிய பிரெஞ்சு மொழியையும் பிரம்மிப்புடன் அவதானித்த காலம் அது. நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும், கல்வி, பணி, மணம் அனைத்தும் புதுச்சேரியோடு என்றானது. எனது மனைவி உறவுக்காரபெண். அவருக்குப் பிரெஞ்சு குடியுரிமை இருந்தது. அவரால் எனக்கும் கிடைத்தது. எனினும் வருவாய்த்துறை பணியைத் துறக்க சங்கடப்பட்டேன். ஏதோ ஒரு துணிச்சலில் புதுச்சேரி அரசு பணியைத் துறந்துவிட்டு இங்கு வந்தது சரியா என்ற கேள்வி இன்றைக்கும் இருக்கிறது. எனினும் தொடங்கத்தில் இருந்த உறுத்தல்கள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன. பிரான்ன்சு நாட்டில் சட்டத்தை மதித்தால் சங்கடங்கள் இல்லை.

அமெரிக்காவும் (வட அமெரிக்கா) மேற்குலகும், நாம் விரும்பினாலும் விரும்பாவிடினும் நவீன யுகத்தின் ‘Avant-gardistes’ கள். நமது அன்றாடம் அவர்களால் எழுதப்பட்டது, எழுதப்படுகிறது. காலையில் கண்விழிப்பது முதல் இரவு உறங்கப்போவதுவரை சிந்தனை, உணவு, நகர்வு, தகவல் தொடர்பு, காட்சி, கலை இலக்கியம் இப்படி மனித இயக்கத்தின் எந்தவொரு அசைவிலும் மேற்கத்தியரின் தாக்கம் இருக்கிறது. நூறு குறைகள் இருப்பினும் மானுடத்திற்கு ஆயிரமாயிரம் நன்மைகள். மூச்சுக்கு முன்னூறுமுறை அமெரிக்காவையும் மேற்கத்தியர்களையும் திட்டிவிட்டு, பிள்ளகளை பொறுப்பாக ஏகாதிபத்தியத்திடம் ஒப்படைத்தபின் தங்கள் விசாவுக்காக கால்கடுக்க அவர்களின் தூதரகத்தில் காத்திருக்கும் காம்ரேட்டுகள் இருக்கிறார்கள்.. எனக்குத் தெரிந்த இடதுசாரி புதுச்சேரி தோழர் ஒருவர் பிரான்சிலிருந்து துடைப்பம், டெலிவிஷன் என்று வாங்கிக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இறங்கினார். எதிரிகள் கூட மேற்கத்தியரிடம் கடனாகவோ விலைக்கோ பெற்ற வாளைத்தான் அவர்களுக்கு எதிராகச் சுழற்றவேண்டியிருக்கிறது.

வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுவது. ஐக்கிய நாட்டு சபையில் ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள். இந்த ஐவரில் சீனா நீங்கலாக மற்றவர்கள் இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்ற அணியைச் சேர்ந்தவர்கள். இனி மற்றொரு உலக யுத்தத்தை இப்பூமி தாங்காது எனத் தீர்மானித்தபோது,வெற்றி பெற்றவர்களே அதற்கான பொறுப்பையும் ஏற்றார்கள். அமெரிக்காபோல சீனா போல அல்லது ஒன்றிணைந்த சோவியத் யூனியன்போல பெரிய நாடுகள் என்று சொல்ல முடியாவிட்டாலும், காலனி ஆதிக்கத்தால் உலகின் பரந்த நிலப்பரப்பை தமது ஆளுகைக்கு உட்படுத்தியிருந்த பிரிட்டனும், பிரான்சும் ஐநா சபையில் நிரந்தர உறுப்பினர்கள் ஆனார்கள். அதனை இன்றுவரை கட்டிக்காக்கும் வல்லமை அவர்களிடம் இருக்கிறது. வல்லரசு என்றால் பொருளாதாரமும் ராணுவமும் என்றும் பலரும் நம்பிக்கொண்டிருக்க கலையும் இலக்கியமுங்கூட ஒரு நாட்டின் வல்லரசுக்கான இலக்கணங்கள் என இயங்குவதாலேயே இன்றளவும் தனித்துவத்துடன் நிற்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் நித்தம் நித்தம் புதுமைகளை விதைத்தவண்ணம் இருக்கிறார்கள். யுகத்தோடு பொருந்தக்கூடிய, யுகத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யவல்லது எதுவோ அதைமட்டுமே மனித இனம் பூஜிக்கிறது, அதை அளிப்பவர்களையே கொண்டாடுகிறது. ‘Survival of the fittest’ என்பது நிரந்தர உண்மை. அதன் சூட்சமத்தை மேற்கத்தியர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதென் அனுமானம்.

பெருமைகளைப் பற்றி பேசுகிறபோது அதன் சிறுமைகளைப் பற்றியும் பேசத்தான் வேண்டும். பிரான்சு அப்பழுக்கற்ற நாடு அல்ல. 30 ஆண்டுகால பிரான்சு வாழ்க்கை பல ஏமாற்றங்களையும் தந்துள்ளது. அரசுக்குமேல் அதிகாரம் படைத்திருந்த மதத்தை எதிர்த்து சுதந்திரத்தின் மேன்மையை ருசிக்கவைத்த வொல்தேர் பிறந்த மண்ணில்தான் அச்சுதந்திரம் அனைவருக்குமானதல்ல, ஐரோப்பியருக்கு மட்டுமே பொருந்தும் என்று வாதிடக்கூடிய அறிவு ஜீவிகளையும் பார்க்கிறேன். அலுவலங்களில், அன்றாட பயணங்களில், உரிமைகளைக் கேட்டு நிற்கிறபோது குடியுரிமையைக் கடந்து எனது நிறமும், பூர்வீகமும் எனக்கான உரிமையைப் பறிப்பதில் முன்நிற்கின்றன. எனினும் இது அன்றாடப் பிரச்சினைகள் அல்ல ஆடிக்கொருமுறை அம்மாவசைக்கொருமுறை நிகழ்வது. சொந்த நாட்டில் சொந்த மனிதர்களால், ஒரு தமிழன் இன்னொரு தமிழரை அல்லது தமிழச்சியை நிறம், பொருள், சாதி, சமயம், செல்வாக்கு அடிப்படையில் நிராகரிப்பதை ஒப்பிடுகிறபோது இது தேவலாம்போல இருக்கிறது. இங்கே உழைப்பும் திறனும் மதிக்கப்படுகின்றன. இன்றைக்கும் ஏதொவொரு காரணத்தை முன்வைத்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் மேற்கத்திய நாடுகளை தேடி வருகிறார்கள்

உலகத் தினசரிகளில் அமெரிக்கா பிரிட்டனுக்கு அடுத்தபடியாக ஏதோவொரு காரணத்தால் செய்தியில் பிரான்சு இடம் பெறுகிறது. உலக நாடுகளில் அதிகம் சுற்றுலா பயணிகளைக் ஈர்க்கிற நகரமாக பாரீஸ் இருப்பதைப்போலவே, உலக நாடுகளின் தலைவர்களுக்கு பிரான்சு அதிபர் அழைப்பும், பாரீஸ் நகரில் கால்பதிப்பதும் கனவாக இருக்கிறது. ஐக்கிய நாட்டு சபையின் நிரந்தர உறுப்புநாடாக இருப்பதைபோலவே, உலக நாடுகளின் நலன் கருதி (?) இயங்குகிற அத்தனை அமைப்புகளிலும் (எதிரெதிர் அணிகளிலுங்கூட ) பிரான்சு இடம்பெற்றிருப்பதென்பது ‘புவிசார் அரசியலில்’ இநாட்டுக்குள்ள முக்கியத்துவத்தைத் தெரிவிக்கிறது. உலகமெங்கும் பிரெஞ்சு மொழி பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்திற்கு நிகராக அல்லது ஆங்கிலத்திற்கு அடுத்தப்படியாக பரவலாக பேசப்படும், கற்கப்படும் முக்கிய மொழிகளில் பிரெஞ்சும் ஒன்று. உலகில் அதிகமக்களால் பேசப்படுகிற மொழியென சொல்லப்படும் மாண்டரின், இந்தி, ஸ்பானிஷ், அரபு மொழிகளைக்காட்டிலும் செல்வாக்குள்ள மொழி. அதுபோல நாம் முழக்கங்களாக மட்டுமே அறிந்த கடமையும், கண்ணியமும், கட்டுப்பாடும் மக்களின் மூச்சுக்காற்றாக இருப்பதும் பிரெஞ்சு சமூகத்தின் வெற்றிக்கு காரணம். பிரான்சுநாட்டின் நிலம், நீர் மலைகள், பூத்துகுலுங்கும் கிராமங்கள், பரந்த வயல்வெளிகள், நகரங்கள், கிராமங்கள், பனிப் பூ சொரியும் குளிர்காலம், பூத்து மணம் பரப்பும் வசந்தம், சிலுசிலுக்கும் காற்று, இதமான வெயில் ரெம்போவின் கவிதைகள், குளோது மொனேயின் ஓவியங்கள், புதுப் புது நுட்பங்களையும் ரசனைகளையும் படைப்பிலக்கியத்தில் கொண்டுவந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், சேனல் 5 பர்ப்யூம், பொர்தோ ஒயின், பிரெஞ்சு பாலாடைக்கட்டிகள், ஏர்பஸ், சேன் நதி, லூவ்ரு, லூர்து அனைத்துக்கும் மேலாக ‘பெண்கள்’ என்று ஒரு மாமாங்கத்திற்கு சொல்ல இருக்கின்றன.

தற்கொலைகள் (அம்ருதா பிப்ரவரி 2023)

                                                              கி தெ மொப்பசான்

                                                                          தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

                                                             —–

                                                                                                  ….. ஜார்ஜ் லெக்ராண்டிற்கு

ஒரு சில செய்தித்தாள்களில், இதரச்செய்திகள் என்கிற பிரிவின்கீழ்    ஒவ்வொருநாளும் இதுபோன்றதொரு செய்தி கட்டாயம் இடம்பெற்றிருக்கும்:

“கடந்த புதன் கிழமை இரவு, ……வீதியில், கதவெண் 40ல் குடியிருப்புவாசிகள் நள்ளிரவில்  அடுத்தடுத்து இரண்டுமுறை வெடித்த  துப்பாக்கிச் சத்தம் கேட்டு விழித்திருக்கிறார்கள்.  சத்தம் மிஸ்டர் எக்ஸ் என்பவர்  குடியிருப்பில் இருந்து வந்திருக்கிறது… பின்னர் கதவு திறக்கப்பட்டுப் பார்த்தபோது, அந்த  அடுக்குமாடி குடியிருப்புவாசி ரத்தவெள்ளத்தில் கிடக்க, அவர் கைப்பிடியில் தற்கொலைக்கு உபயோகித்த கைத்துப்பாக்கி ».  

« “திருவாளர் Xக்கு  வயது ஐம்பத்தேழு,  வசதியான வாழ்க்கைக்குப் போதுமான வருமானம் இருந்துள்ளது, எனவே குறையற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை. இந்நிலையில் அவர் இப்படியொரு முடிவை எடுத்தக் காரணமென்ன, எனபது விளங்காதப் புதிர்.  »

கடுமையான துயரங்கள், நெஞ்சில் ஏற்பட்டக் காயம், ஒளித்துவைத்த  ஏமாற்றங்கள்,  வாட்டிய கவலைகள் இவற்றில் எவை அல்லது எது,  சந்தோஷமான வாழ்க்கைக்குரிய வருவாயிருந்தும் இதுபோன்ற மனிதர்களை தற்கொலைக்குத் தூண்டி இருக்கக்கூடும்?  என்ற கேள்வி எழுகிறது. பதிலைத் தேடுகிறோம் : காதல் தோல்வியாக இருக்கலாமென கற்பனை செய்ய முடிகிறது, பின்னர் பணம் ஒரு பிரச்சனையாக இருந்திருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது, இறுதியில் திட்டவட்டமாக எதையும் அறியமுடியாதபோது,     இப்படியான மரணங்களுக்கென்று நம்மிடம் இருக்கவே இருக்கின்றன  “மர்மம்” என்ற வார்த்தை.

  இப்படி காரணமின்றி தற்கொலைசெய்துகொண்ட ஒருவரின் மேசையிலிருந்து கடிதமொன்று கிடைத்தது. தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி அருகே கைக்குக் கிடைத்த, கடைசியாக எழுதப்பட்ட அக்கடிதம், சுவாரஸ்யமாக இருக்குமென்றும் தோன்றியது. மனிதரின் விரக்தியான இகாரியத்திற்குப் பின்னே ஏதேனும்  பெரும் விபரீதமான காரணங்கள் ஒளிந்திருக்குமோ என நினைக்க, அப்படி எதுவும் தகவலில்லை; பதிலாக அக்கடிதம்  வாழ்க்கையில் ஓயாமல் படும்  சிறு சிறு கஷ்டங்களை,  கனவுகளத் தொலைத்து துணையின்றி காலம்தள்ளிய ஒரு மானுட உயிருக்கு நேர்ந்த சேதங்களைச் சொல்வதாக இருந்தது. மேலும்  இப்படியொரு சோகமான முடிவுக்கு அக்கடிதம் கூறும் காரணத்தை புரிந்துகொள்ள நெஞ்சில் பதற்றமும்  எளிதில் உணர்ச்சிவசப்படும் மனநிலையும்  அவசியம்.     

கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது இதுதான் :

  «  நள்ளிரவு. இக்கடிதத்தை  எழுதிமுடித்ததும், என்னுடலில் உயிர் தங்காது. ஏன் ? அதற்குரிய காரணங்களைச் சொல்ல முயற்சிக்கிறேன். இவரிகளை எனது மரணத்திற்குப்பிறகு பிறகு படிக்கின்றவர்களுக்காக அல்ல, எனக்காக. எனது பலவீனமான தைரியத்திற்குத் தெம்பூட்டிக்கொள்ளவும், தள்ளிப்போடலாம் ஆனால்  தவிர்க்கவியலாது என்கிற அபாயகரமான இதன் தேவைக்கு என் மனதைத் திடப்படுத்திக்கொள்வதற்கும் என வைத்துக்கொள்ளலாம்.

எந்தஒன்றையும் எளிதாக நம்புகிற பெற்றோர்களால் வளர்க்கப்பட்டவன் என்பதால் நானும் அப்படிபட்டவனாக இருந்தேன். வெகுகாலம் உயிர்வாழ்ந்த அந்நம்பிக்கைக் கனவு அண்மையில்தான் தனது கடைசி முகத்திரையைக்  கிழித்துக்கொண்டது.

டந்த சிலஆண்டுகளாக ஏதோவொரு வினோதம் எனக்குள் நிகழ்வதுபோன்றதொரு அனுபவம். வைகறை சூரியனைப்போல பிரகாசித்த  கடந்தகால சம்பவங்கள் இன்றெனக்கு மங்கியவைப்போலத் தோற்றமளிக்கின்றன.  அவற்றின் முக்கியத்துவத்தில்  இன்றுநான் காண்பதென்னவோ  கசப்பான சில உண்மைகள்.  அன்பிற்குப் பின்புலத்திலிருந்த உண்மையான காரணம் எனக்கு வெறுப்பினைத் தந்தது,  விளைவாக கவிநயமிக்க மென்மையான உணர்வுகள் விஷயத்திலும் கசப்பினை உணர்ந்தேன்.  

உண்மையில் நாம், தொடர்ந்து தம்மை புதுப்பித்துக்கொள்ளும்   முட்டாள்தனமும் கவர்ச்சியும் மிக்க மாயைகளின் நிரந்தர கைப்பொம்மைகள். ஆகையால் வயது கூடக்கூட கடும் பிரச்சனைகள், பயனற்றமுயற்சிகள், அர்த்தமற்ற எதிர்பார்ப்புகள் ஆகியவற்றோடு இணக்கமாகவிருக்க சம்மதித்தேன், இந்நிலையில்தான் இன்று மாலை, இரவு உணவிற்குப்பிறகு அனைத்து இன்மையின்மீதும் ஒருபுதிய வெளிச்சத்தினைக் காணமுடிந்தது.

முன்பெல்லாம் சந்தோஷமாக இருந்தேன். என்னைக் கடந்து செல்லும் பெண்கள், வீதிகளின் தோற்றம், எனது குடியிருப்பு இருக்கும் பகுதி என அனைத்தும் என்னைக் கவர்ந்தன. ஆனால் திரும்பத் திரும்பக் அக்காட்சிகளை காணநேரிட்டதால்,  எனது இதயத்தில் அயற்சியும், எரிச்சலும் நிரம்பி வழிந்தன, அதாவது  நாடகத்திற்குச் செல்லும் ஒரு பார்வையாளனக்கு ஒவ்வொரு மாலையும் ஒரேவிதமான நாடகத்தைக் காண நேர்ந்தால் என்ன நேருமோ அத்தகைய அனுபவம்.

கடந்த முப்பது ஆண்டுகளாக நான் படுக்கையிலிருந்து எழும் நேரம் மாறியதா என்றால், இல்லை. பிறகு கடந்த முப்பது வருடங்களாக நான் செல்லும் உணவு விடுதியையும் மாற்றிக் கொள்ளாமலிருக்கிறேன். அங்கு உணவு கொண்டுவரும் பரிசாரகர்களில் மாறியிருக்கிறார்கள், மற்றபடி  உண்ணும்  நேரத்திலும் உணவிலும்  மாற்றங்கள்  இல்லை.

பயணத்தை முயற்சித்ததுண்டா ? உண்டு. ஆனால் புதிய இடங்களில்  தனிமை எனக்குப் பயத்தை அளித்தது. இந்த உலகில், சின்ஞ்னசிறிய ஜீவனாக என்னை உணர்ந்த கணத்தில்,  தனிமை படுத்தப்பட்டதுபோன்ற உணர்விற்கு ஆளாகி, வீட்டிற்குத் திரும்பிவிடுவேன்.  

பிறகு வாங்கிய நாளில் எப்படிப்பார்த்தேனோ அதுபோலவே கடந்த முப்பது ஆண்டுகளாக போட்டது போட்டபடி ஒரே இடத்தில் இருக்கிற வீட்டுத் தளவாடங்களும்,  புதிதாக வாங்கிவந்த மெத்தை இருக்கைளின் தேய்மானங்களும், பொதுவாக ஒவ்வொரு குடியிருப்பும் காலப்போக்கில் ஒருவாசத்தைப் பெற்றுவிடும் என்பதற்கிணங்க குடியிருப்பிலிருந்து  வருகிற  ஒருவித வாசமும், ஒவ்வொரு இரவும், இப்படியொரு வாழ்க்கைமீது மாறாததொரு குமட்டலையும், விளங்கிக்கொள்ளவியலாத ஒருவித துன்பத்தையும் எனக்குத் தந்திருக்கின்றன.   

ஆக அனைத்துமே ஓயாமல் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன. பூட்டிய பூட்டை எப்படி திறக்கிறேன் என்பதில் ஆரம்பித்து, என்னுடையை தீப்பெட்டியை எந்த இடத்திலிருந்து ஒவ்வொரு முறையும் எடுக்கிறேன், தீக்குச்சியின் பாஸ்பரஸ் பற்றி எரிகிறபோது எனது அறையில் கண்ணிற்படும் முதற்காட்சிவரை அனைத்தும் தப்பிக்கவியலாத சலிப்பூட்டுகிற நிகழ்வுகள் என்பதால் சனலுக்கு வெளியே குதித்து இவற்றுக்கெல்லாம் முடிவுகட்டலாமா என்று கூஎட நினைப்பதுண்டு.  

ஒவ்வொருநாளும் முகச்சவரம் செய்துகொள்ளும்போது என்னுடைய கழுத்தை அறுத்துக்கொள்ளலாம் என்கிற வெறித்தனமான எண்ணம் வரும், பிறகு கண்ணாடியில்  எப்போதும்போல தெரிகிற எனது முகத்தையும் சோப்பு நுரையோடு அக்கன்னங்களையும் பார்க்கிற்போது அனேக தடவை துக்கம் தாங்காது அழுதிருக்கிறேன்.

முன்பெல்லாம் எந்தெந்த மனிதர்களை மகிழ்ச்சியுடன் சந்திப்பேனோ அவர்களைக்கூட தற்போது சந்திப்பதில்லை. அவர்களை நன்கறிந்தவன், அதாவது  அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் அதற்கு என்னுடைய பதில் என்னவாக இருக்கும், எப்போதும் ஒரே மாதிரியாக  இருக்கிற அவர்களுடையை சிந்தனையை வார்த்தெடுக்கும் கலன் எது, அவர்கள் முன்வைக்கும் நியாயங்களின் நெளிவு சுளிவுகள் எவை ? என்று அனைத்தையும்  அப்போது தெரிந்துவைத்திருந்தேன்.    

 மனிதர் மூளைகள் ஒவ்வொன்றும் ஒரு சர்க்கஸ் கூடாரம், அங்கே தப்பவழியின்றி சுற்றிவரும் விலங்காக இருப்பது ஒரேஒரு குதிரை. முயற்சிகள், மாற்றுப்பாதைகள், சுற்றுவழிகளென்று அணுகுமுறைகளை நாம் மாற்றிக் கொண்டாலும், வரைமுறைக்கு உட்பட்டே செயல்படமுடியும், பிறகு திரும்பவும் பழைய நிலமைக்குத் திரும்பவேண்டும். முயற்சிகள், மாற்றுப்பாதைகள், சுற்றுவழிகள் என அணுகுமுறைகளில் சில வழிமுறைகளை கையாண்டாலும் ஓரள்விற்கே சாத்தியமாகும், பிறகு எப்போதும்போல பழைய பாதையில்   ஓயாமல்  ஒரேவிதமான   கருத்துக்களை, மனமகிழ்ச்சியை, கேலி பேச்சுக்களை, மரபுகளை, நம்பிக்கைகளை, ஒவ்வாமைகளை சுமந்தபடி உழலவேண்டும்.

கடுமையான பனிமூட்டம். அகன்ற வீதிகளையும் அவை மூடியிருக்க, புகை மூடிய மெழுகுவர்த்திகள்போல தெருவிளக்குகள்  எரிந்துகொண்டிருந்தன.  தோள்களில் இதுவரை அறிந்திராத பாரம், உண்டது செரிமானம் ஆகாமல் இருந்திருக்கலாம்.  

உண்பது ஒழுங்காக செரிமானம் ஆக கொடுப்பினை வேண்டும், வாழ்க்கையில் அனைத்துமே அதைச் சார்ந்தே இருக்கின்றன. கலைஞனுக்கு உத்வேகமும், இளம் வயதினருக்கு காதல் ஆசைகளும், சிந்தனையாளருக்குத் தெளிவான எண்ணங்களும்,  அனைவருக்கும் வாழ்க்கைக்கான சந்தோஷமும் நல்ல செரிமானத்தினால் மனிதருக்கு கிடைக்கும் நன்மைகள்.  தவிர நன்றாகச் சாப்பிடவும் மனிதர்க்கு அது உதவுகிறது (இதற்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்). நோய்பட்ட வயிறு சந்தேகிக்கவும், நம்பிக்கையின்மைக்கும், கொடுங்கனவுகளுக்கும், மரணத்தின் மீதான விருப்பத்திற்கும் காரணமாகிறது  என்பதை நான் நன்குணர்ந்திருக்கிறேன். இன்று மட்டும் நான் உண்டது  ஜீரணமாகியிருக்குமெனில், ஒருவேளை எனது தற்கொலை எண்ணம் தவிர்க்கபட்டிருக்கக் கூடும்.  

கடந்த முப்பது வருடங்களாக நாள்தோறும் மெத்தை நாற்காலியில் உட்காருவது வழக்கம், அவ்வாறு உட்கார்ந்திருக்கும் நேரத்தில்  பார்வையை என்னைச் சுற்றிலும் ஓடவிடுவதுண்டு, அப்படிச் செய்கிறபோது மிக கடுமையானதொரு வேதனைக்கு ஆளாகி, கிட்டத்தட்ட பைத்திய நிலைக்குப் போவதுண்டு

என்னிடமிருந்தே நான் தப்பினால் போதுமென்றொரு நிலமையில்  அதற்கான யோசனைகளில் இறங்கியதுண்டு. நான் எதையும்செய்யாமல் சும்மா இருந்திருக்கலாம், எதையாவது செய்யலாம் எனப்போக  மிகப் பயங்கரமான அச்சுறுத்தலுக்கு ஆளானேன். மேசை இழுப்பறைகளில் குவிந்துகிடக்கும் காகிதங்களை ஒழுங்குபடுத்த நினைத்தேன்.

எப்போதிருந்து என்பது நினைவில்லை, ஆனால் நீண்ட நாட்களாகவே என்னுடைய மேசையின் இழுப்பறைகளை சுத்தம் செய்ய நினைப்பதுண்டு ; காரணம் கடந்த முப்பது ஆண்டுகளாக அந்த மேசையில் கடிதங்களையும் ரசீதுகளையும் கலந்து கட்டி போட்டுவர, அந்த  ஒழுங்கின்மை அவ்வப்போது எனக்கு கணிசமான மனக்கலக்கத்தை  அளித்து வந்தது. ஆனால் பொதுவாகவே எதையாவது ஒழுங்கு படுத்தவேண்டும் என எண்ணினால் போதும் மறுகணமே எனது உள்ளம், உடல் இரண்டுமே சோர்வுக்கு ஆளாகும், விளைவாக இக்கடினமான பணியைச் செய்ய ஒருபோதும் துணிவதில்லை.

ஆனால் இம்முறை துணிந்து மேசைக்கு முன்பாக  அமர்ந்து இழுப்பறையைத் திறந்தேன். அவற்றில் பெரும்பாலானவற்றை அழித்துவிடும் நோக்கில், அதற்குரியவற்றை தெரிவு செய்தேன். என்முன்பாக ஆண்டுகள் பலவாக சீண்டப்படாமல் பழுப்பு நிறத்தில் குவிந்திருந்த காகிதங்களைக் கண்டு சில கணங்கள் தடுமாறி, பின்னர் ஒன்றை கையில் எடுத்தேன்.


     நண்பர்களே ! உயிர்வாழ்க்கை மீது நல்ல அபிப்ராயம் உங்களுக்கு இருக்குமெனில் பழைய கடிதங்களின் புதைகுழிகயை ஒருபோதும்  தோண்டாதீர்கள் ! தப்பித் தவறி அப்படியொரு தவறைச் செய்ய நேர்ந்தால்   அவற்றைக் கைநிறைய எடுங்கள் ! எடுத்த மறுகணம் கண்களை இறுக  மூடுங்கள், ஏனென்றால் சட்டென்று பழைய நினைவுகளின் சமுத்திரத்தில் உங்களைத் தள்ள வாய்ப்புள்ள ஒரே ஒரு வார்த்தை, மறந்துபோன  அல்லது பரிச்சயமான சில வரிகள் உங்கள் கண்களில் பட்டுவிடக்கூடும், அதற்காக. அடுத்து நீங்கள் செய்யவேண்டியது, இந்த நச்சுக் காகிதங்களை தீயிலிடுதல், கவனமுடன் செய்யவேண்டும்,எரித்த சாம்பலில் துண்டு துணுக்குக்கூட மிஞ்சக்கூடாது, அவ்வளவும் கண்களுக்கு எளிதில்  புலனாகாத தூசாக மாற்றப்படவேண்டும், தவறினால்  நீங்கள் தொலைந்தீர்கள், என்னைப் போல ! கடந்த ஒரு மணிநேரத்திற்கு முன்பிருந்து என்னைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறேன்.

என்ன சொல்ல!  முதலில் படிக்க நேர்ந்த கடிதங்களில் எனக்குப் பெரிதாக ஆர்வமில்லை, தவிர அவை அண்மையில் எழுதப்பட்டவை. எழுதியவர்களும் உயிரோடிருக்கிறார்கள், அடிக்கடி அவர்களைச்  சந்திக்கவும் செய்கிறேன், என்பதால் அவற்றை அலட்சியம் செய்தேன். திடீரென கண்ணிற்பட்ட உறையொன்று மெலிதானதொரு நடுக்கத்தைத் தந்ததது. உறைமீது  மிகப்பெரிய எழுத்துகளில் இருந்த எனது பெயரைக் கண்டதும் என் விழிகளில் நீர் கோர்த்தது. என்னுடைய ஆருயிர் சினேகிதன், இளமைக்கால தோழன்,  நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். என்ன ஆச்சரியம், கண்முன்னே அவன் தெளிவான வடிவில் நிற்கிறான்.  எப்போதும்  காணும் இயல்பான புன்னகையை முகத்தில் தேக்கி, கைகள் இரண்டும் என்னை  நோக்கி நீட்டியபடி இருக்கும், அவனைக் கண்டதும்  எனது முதுகுத்தண்டு சிலிர்த்தது. நான் நேரில் அவனைத் திரும்பவும் பார்த்தேன்,  இறந்தவர்கள் திரும்ப வருவார்கள், பொய்யில்லை, உண்மை ! பிரபஞ்சத்தைக் காட்டிலும் நம்முடைய நினைவுகள் ஒரு பரிபூரண உலகம், மரித்த மனிதர்களையும் உயிர்ப்பிக்கக் கூடியது அதொன்றுதான்.

எனதுகை நடுங்கிக் கொண்டிருக்க, கண்ணீர் திரையிட்டக் கண்களுடன் அவன் அக்கடிதத்தில் தெரிவித்திருந்த அனைத்தையும் வாசித்தேன், விம்மி அழுதுக்கொண்டிருந்த எனது இதயம் காயமுற்றிருக்க,  கைகால்கள் முறிக்கபடும் மனிதரொருவர் வலிபொறுக்கமுடியாமல் தனது வேதைனையை வெளிபடுத்துவதுபோல நானும் புலம்பினேன்.   

நதிமூலத்தைத் தேடி ஒருவர் பயணிப்பதுபோல, எனது கடந்தகால வாழ்க்கையில் பிரவேசித்தேன். பல வருட காலமாக நான் மறந்திருந்த மனிதர்களை அடையாளம் காண முடிந்தது, ஆனால் பெயர்கள் நினைவில் இல்லை. அவர்கள் முகங்கள் மாத்திரம் என்னுள உயிர்பெற்றன. எனது தாயின் கடிதங்களில் அக்காலத்தில் எங்கள் வீட்டில் பணியாற்றிய ஊழியர்களைத் திரும்பக் கண்டேன்.  எங்கள் வீட்டின் வடிவமும் வந்துபோனது, சிறுவயது பிள்ளைகளுக்கென்று ஒருவகை குணமுண்டு, அர்த்தமற்ற சம்பவங்கள் என்கிறபோதும் அவர்களுக்கு அதில் ஒருவகையான ஒட்டுதலிருக்கும், அன்று அத்தகையவற்றையும் நினைவுகூர்ந்தேன்.

அதுமட்டுமல்ல என்னுடைய தாய் அன்றைய நாகரீகத்திற்கு ஏற்ப  உடுத்திய ஆடைகளும், அவைதரும் வகைவகையான தோற்றங்களும், அவற்றுக்குப் பொருத்தமாக அடிக்கடி அவள் கையாளுகிற  சிகை அலங்காரங்களும் திரும்பவும் நினைவுகூர முடிந்தது. இறகுபோன்ற மெல்லிய பின்னல் வேலைப்பாடுகொண்ட கவுன் ஒன்றை அவள் சில நேரங்களில் அணிவதுண்டு, அக்காட்சி என் நினைவில்  வந்துபோனது. அதிலும் அந்த ஆடையை அணிந்திருந்த  ஒரு நாள் « மகனே  ரொபெர் !  நீ நேராக நிற்க பழகிக்கொள்ளவேண்டும், தவறினால் கூன்முதுகோடு வாழ்க்கை முழுதும் இருப்பாய் ! »- என எச்சரித்தது, நினைவுக்கு வந்தது.

பிறகு மேசையின் மற்றொரு இழுப்பறையைத் திறந்தேன். எதிரே எனது இளமைக்கால காதல்அனுபவங்களை நினைவூட்டுவதுபோல பாலே நடனத்திற்குரிய ஒரு ஷூ, கிழிந்த ஒரு கைக்குட்டை, ஒரு கணுக்காலுறை, தலைமுடிகள், உலந்த பூக்களென்று வரிசையாக இருந்தன.  என்னுடைய வாழ்க்கையில் இரண்டு காதல்கதைகள், அவற்றின் கதாநாயகிகள் தலை முழுவதுமாக நரைத்து இன்றும் உயிர்வாழ்கிறார்கள், அவற்றை எண்ணிப் பார்த்தபோது, ஒருபோதும் முடிவுறாத கசப்பான துன்பத்தில் மூழ்கினேன். தங்கச்சரிகைபோன்ற கேசங்கள் ஒட்டி உறவாடும் இளம் நெற்றிகள், கைகளின் தீண்டல்கள், உரையாடும் பார்வை. துடிக்கும் இதயங்கள், உதடுகளுக்கு உத்தரவாதம், தரும் புன்சிரிப்பு, தழுவலுக்கு அழைத்துச்செலும் உதடுகள்… முதல் முதல்…., முடியாமல் நீளும் அம்முத்தம் கண்களை மூடச் செய்து, கூடியவிரைவில் உடமையாக்கிக்கொள்ள இருக்கிறோம் என்கிற அளவிடமுடியாத இன்பத்தில், அனைத்து சிந்தனைகளையும்  மூழ்கடித்துவிடும்.

முன்னாள் காதலின் இப்பழைய பிணையப்பொருட்களை கைகொள்ள எடுத்து, அவற்றை  வெறித்தனமான தழுவல்களைக் கொண்டு மூடினேன்.  நினைவுகளால் சிதைக்கபட்டிருந்த என் ஆன்மாவில் அவை ஒவ்வொன்ன்றையும்  அனாதையாகப்பட்ட நேரத்தில் எப்படி இருந்தனவோ அப்படித் திரும்பப் பார்த்தேன்; நரகத்தை விவரிக்க அனைத்து கட்டுகதைகளிலும் சந்திக்கிற, இட்டுக்கட்டிய வதைகளுக்கும் மேலானதொரு கொடுமையான சித்திரவதையை அன்று நான் அனுபவித்தேன்.

இன்னுமொன்று வாசிக்க இருக்கிறது. அது என்னுடையது, ஐமபது ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய  ஆசிரியர்  சொலவது எழுதுதல் என்ற பெயரில் எனக்கு கொடுத்தது :

« அன்பினிய எனது அம்மாவிற்கு,

இன்றெனக்கு ஏழு வயது. பகுத்தரியும் வயது, எனவே இவ்வுலகிற்கு என்னை நீ கொண்டுவந்தவள் என்கிற வகையில் உனக்கு நன்றி கூற இது உகந்த தருணம்.

உங்களை மிகவும் நேசிக்கும் மகன்  »

                                                                ரொபெர்

எல்லாம் முடிந்தது.  ஒருவழியாக நதி மூலத்தை அடைந்தது போல, எனது ஆரம்பத்திற்கு வந்தாயிற்று. என்னுடைய வாழ்க்கையில்  எஞ்சியிருப்பதை அறிய முற்பட்டதுபோல எனது பார்வையைச் சட்டென்று திருப்பினேன்.  குரூரமான தோற்றத்துடன் ஒற்றை மரமாக முதுமை, அடுத்து காத்திருப்பது தள்ளாமையும், பலவீனமும். ஆக அனைத்தும் முடிந்தது, இன்று நான் யாருமற்ற அநாதை.

என்னுடைய கைத்துபாக்கி மேசைமீது, கைக்கெட்டும் தூரத்தில். தோட்டாக்களை நிரப்புகிறேன்….. ஒரு போதும் உங்கள் பழைய கடிதங்களை  திரும்ப வாசிக வேண்டாம்.,,, »

      ஆக அனேக மனிதர்கள் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்வது, இதுபோன்ற காரணங்களுக்காக. நாமோ  இவ்வாறான முடிவுகளுக்கு   மிகப்பெரிய துன்பங்கள் காரணமாக இருக்கவேண்டுமென நினைத்து வீணில்  நேரத்தை செலவிடுகிறோம்.  

17 avril 1883