எதிர்வரும் 8ந்தேதி இந்தியா வர உள்ள நிலையில் எனது மனைவியின் ஒன்றுவிட்ட சகோதர ர், பெயர் பலராமன், பொதுப்பணித் துறையில் ஒப்பந்தங்கள் எடுத்து செய்வார், எனது புதுச்சேரி வீட்டைக் கட்டிக் கொடுத்தவர். முதிர்ந்த வயது, உதிரும் வயதுங்கூட. அவர் இறந்த செய்தி காலையில் கிடைத்தது. புதுச்சேரியில் நான் சென்று பார்க்க இருந்த உறவினர்களில் முக்கியமானவர். நீலக் கடல் நாவலில் பலராம பிள்ளை என்றொரு கதை பாத்திரம் அவர் நினைவில் உருவானதுதான். பெர்னார்ஃ போத்தெனுக்கு துபாஷாக இருப்பார். மிகவும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் அளித்த செய்தி.
« உறங்குவது போலுஞ் சாக்காடு » என வள்ளுவன் ஆழமாக மரணம் குறித்துப் பாடியிருப்பான்.
மாத்தாஹரி நாவலிலும் கதை நாயகி பவானியின் எதிர்பாராத இறப்பை வாய்ப்பாகக் கொண்டு மரணத்தைக் குறித்து எழுதியிருப்பேன். இங்கே பதிவு செய்திருப்பது நான் தற்போது மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும் ‘அதிரியன் நினைவுகள்’ நாவலில் இருந்து :
« மெல்ல மெல்ல என்னை கைவிடும் விலைமதிப்பற்ற நற்பேறுகளில் உறக்கமும் ஒன்று. குறைந்த நேரத்தை உறக்கத்திற்கென ஒதுக்கி அதையும் சரிவர உறங்காமல் துன்பப்படும் மனிதன், ஒன்றுக்கு பலவாக தலையணைகளைக் கொடுத்து இக்குறிப்பிட்ட சுகத்தினை வேண்டி வெகு நேரம் தவமிருக்கிறான். இரு உடல்களில் பிரதிபலிக்கிற இணக்கமான துயில் மட்டுமே உடலுறவிற்கு தவிர்க்கமுடியாத மிகச் சரியானதொரு பிற்சேர்க்கையாக இருக்கமுடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இங்கே எனக்கு ஆர்வமூட்டுகிற விஷயம் தன்னை நன்கு சுகிக்க வேண்டுமென்பதற்காக உறக்கத்தின் அணூகுமுறையிலுள்ள பிரத்தியேகப் புதிர்தன்மை : அதன் வண்ணம், அதன் அடர்த்தி, அதன் சுவாச ரிதம் அனைத்திலும் நிகழக்கூடிய மாற்றங்கள், இவைதவிர உறக்கத்தின்போது கிடைக்கிற இறப்பையும் சந்திக்கும் வாய்ப்பு எனப்பார்க்கிறபொழுது உறக்கத்தை ஒரு பெருங்கடலோடு ஒப்பிடமுடியும். இந்த உறக்கமெனும் சமுத்திரத்தில் ஆடையைக் களைந்து, தனியொருவனாக, நிராயுதபானியாக தவிர்க்க முடியாதது என்பதுபோல மனிதன் தலைகீழாகப் பாய்ந்து ஆபத்துடன் விளையாகிறான். உறக்கம் தரும் ஒரே நம்பிக்கை, அதிலிருந்து மீண்டு நாம் வெளியில் வரமுடியும் என்கிற உண்மை. குறிப்பாக எவ்வித மாற்றமுமின்றி உறங்குவதற்கு முன்பாக எப்படி இருந்தோமோ அப்படி வெளியில் வரமுடியும். காரணம், வினோதமானதொரு தடையுத்தரவுக்கு நாம் கட்டுப்பட்டவர்கள், எனவே கண்ட கனவுகளின் எஞ்சியவற்றை, முழுமையாக நம்முடன் கொண்டு வர சாத்தியமில்லை, அப்படி வரமுடிந்தால் ஒருவகையில் நாம் சிதைந்த மனிதர்கள். நமக்கு நம்பிக்கைதரும் பிறிதொரு விஷயம், நம்முடைய சோர்வுக்கு உறக்கம் தரும் சிகிச்சை. இச்சிகிச்சை தற்காலிகமானது என்கிறபோதும், இனியும் அவ்வாறான நிலைக்குப் போகக்கூடாதென்று நம்முடன் ஒப்பந்த்ம் செய்துகொண்டதைப்போல, மிகவும் தீர்க்கமான வழிமுறைகளுடன் அளிக்கப்படும் சிகிச்சை அது. இங்கும், பிற இடங்களில் நடைபெறுவதைப்போல ‘இன்பமும்’ ‘கலையும்’ பேரின்ப மயக்கத்தின்பொருட்டு உணர்வுபூர்வமாக சரணடைகின்றன, ‘தான்’ஐ காட்டிலும் மிகவும் பலவீனமாகவும், திடமாகவும், இலகுவாகவும், தடுமாற்றத்துடனும் இருப்பதற்கு ‘கலையும்’ ‘இன்பமும்’ சாதுர்யத்துடன் சம்மதிக்கின்றன. கனவுகளின் வியப்பிற்குரிய மக்களைக் குறித்து பின்னர் பேசுகிறேன், அதற்கு முன்பாக மரித்தலுக்கும், உயிர்த்தெழுலுக்கும் நெருக்கமான தூய உறக்கம் மற்றும் தூய விழிப்பு குறித்து பேச வேண்டும் குறிப்பாக பதின்பருவத்தின்போது உறக்கம் சட்டென்று நடத்திய தாக்குதலை இங்கே நினைவுகூர்கிறேன். நன்றாக உடுத்திய நிலையில் அவனிருக்க, கணிதம் அல்லது சட்டம் சம்பந்தமான பாடங்களிலிருந்து விடுவித்து திடீரென உறக்கம் அப்பையனை தன்வசமெடுத்துக் கொள்ளும். புத்தகம் கைநழுவ, அவன் உறக்கத்தில் வீழ்வான். அவ்வுறக்கம் ஆழமானது, செறிவானது, இதுவரை உபயோத்திராத சக்தியையெல்லாம் பிரயோகித்து செயல்படுகிறதோ என்றுகூட சொல்லக்கூடிய பரிபூரன அனுபவத்தினை, மூடிய விழிமடல்களின் ஊடாக பெற முயற்சித்த உறக்கம். பிறகு கானகத்தில் நாள்முழுக்க விலங்குகளை வேட்டையாடி அலுத்து, வெற்றுத்துரையில் கணத்தில் நித்திரைபோவதும், நாய்களின் குரைப்புச் சப்தம் கேட்டோ அல்லது எனது மார்பில் அவை பிறாண்டுவதாலோ விழித்துக்கொண்ட அனுபவங்களும் சொல்வதற்கு இருக்கின்றன. என்னை பலமுறை வியப்பில் ஆழ்த்தியதோடு, மனவுளைச்சலை ஏற்படுத்திய அனுபவமென்று சொன்னால் அது, ஒவ்வொருமுறையும் கூடுவிட்டு கூடுபாய்ந்து புதிய அனுபவத்தினை எதிர்பார்க்கிறநேரத்தில், ஏதோவொரு சக்தி என்னை மீண்டும் இழுத்துவந்து எனது சொந்த சரீரத்திற்குள் சாமர்த்தியமாக அடைத்துவிடுகிறது. அவ்வுடல் படுத்தவுடன் நித்திரைகொள்ளும் பாக்கியவான்களுக்கு, ஓர் அற்ப பிண்டம், எனக்கோ – அத்ரியன் என்ற அந்தச்கூடு – அதனைச் சிறிது நேரம் ரசிக்க நல்லதொரு சந்தர்ப்பம் அளிக்கும் ஜடம், அதாவது கடந்தகாலத்தை மறந்திருக்கும் சரீரம் சரியா ?
ஆனால் உயிர் வாழ்க்கையின் மூன்றில் ஒருபகுதியை தனதாக்கிக்கொள்ளும் ஒரு நிகழ்வை – உறக்கத்தை- நாம் அதிகம் பொருட்படுத்துவதில்லை. காரணம் அது தரும் நன்மைகளை புரிந்துகொள்ள எளிமையான அணுகுமுறை வேண்டும் அது நம்மிடமில்லை. உறங்கும்போது காயஸ் கலிகுலா (Caïs Caligula)வும் ஒன்றுதான் நீதிக்குப் பெயர்பெற்ற அரிஸ்டித் (le Juste Aristide)ம் ஒன்றுதான். உறங்கும் நிலையில் என்னுடைய முக்கியமான சிறப்புரிமைகள் பொருளற்றவைகளாகி விடுகின்றன.
நல்லது, உறக்கமின்மை என்றால் என்ன ? அடுக்கடுக்காக சிந்தனைகள், தொடர்ந்து விதர்க்கங்கள், அடையும் தெளிவு, அதற்கேற்ப கட்டமைக்கும் விளக்கம், இமை மூடிய கண்களின் தெய்வீகமான மடமைக்கு ஆதரவாக அல்லது கனவுகளின் பாண்டித்ய மூடத்தனத்திற்காக தனது மகுடத்தை துறக்க மறுத்து, நமது அறிவு பைத்தியக்காரத்தனமாக பிடிவாதம் காட்டுகிறது என்பதன்றி வேறென்ன ? ஆக, உறக்கமின்றி தவிக்கும் அம்மனிதன்(கடந்த சிலமாதங்களாக என்னிடம் அவனைக் காண்பதற்கு நிறைய சந்தர்ப்பங்கள்) ஏறக்குறைய அநேக விஷயங்களை வேண்டுமென்றே நம்ப மறுக்கிறான். ‘மரணத்தின் உடன்பிறப்பே…’ ஐசோகிரட்டீஸ்(Isocarate) உரையின் ஆரம்பமே தவறு, பேச்சாற்றல் மிக்க கலைஞர் ஒருவரின், அலங்கார வார்த்தைகளாகவே இத்னை எடுத்துக்கொள்ள வேண்டும். அண்மையில்தான் மரணத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். மரணத்திடம், இன்றைய மனிதர் சூழல் அறியத்தவறிய பலரகசியங்கள் உள்ளன. இருப்பினும், ஓரளவு மறக்கப்பட்டதும், அதிகம் புரிந்துகொள்ள முடியாததுமான மரணத்தின் இரகசியங்கள் மிகவும் சிக்கலானதும் ஆழமானதுமாகும். விளைவாக ஏதோ ஓர் இடத்தில் உறக்கமென்ற ஊற்றும், மரணமென்ற ஊற்றும் ஒன்றுடனொன்று நன்கு கலந்திருப்பதைப் போன்ற உணர்வு.