Monthly Archives: மே 2012

துருக்கி பயணம்-3

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

மார்ச்-28

காலை 7.30க்கு பேருந்தில் இருக்கவேண்டுமென சொல்லப்பட்டிருந்தது. எங்கே உறங்கினாலும் இரவு எத்தனை மணிக்கு உறங்கப்போனாலும் அதிகாலை நான்கு மணிக்கு முன்பாக விழித்துக்கொள்வதென்பது பள்ளிவயதிலிருந்தே பழகிப்போனது. விழித்துக்கொண்டபோதும் அறையில் இணையத் தொடர்பு ஒழுங்காக கிடைக்காதென்பதை மூளை தெரிவித்தால் சோர்வுடன் படுத்திருந்தேன். ஐந்து மணிக்கு குளித்து முடித்ததும், லி·ப்ட் பிடித்து கீழே இறங்கினேன் லாபியில் ஒருவருமில்லை. வரவேற்பு முகப்பு அரை உறக்கத்தில் கிடந்தது. தனியே லாபியில் உட்கார்ந்திருக்க தயக்கமாக இருந்தது. எனது தயக்கத்தை டெலிபதியில் அறிந்தவர்போல குழுவின் வழிகாட்டி உள்ளேவந்தார். அவர் நாற்பது வயது இளைஞர். சுறுசுறுப்பான ஆசாமி. வளைகுடா நாடுகளைத் தவிர பிற இஸ்லாமிய நாடுகளில் இந்தியர்களை கூடுதலாக நேசிப்பதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். ஹெய்டென் என பெயர்கொண்ட அத்துருக்கி வழிகாட்டியும் அப்படி பட்டவராக இருந்தார். பொதுவில் எல்லா வழிகாட்டிகளையும்போலவே தகவல்களை விரல் நுணியில் வைத்திருப்பார். அவருடைய பாலிவுட் பற்றிய கேள்விகளுக்கு எனது அஞ்ஞானம் ஏமாற்றத்தை அளித்திருக்கக்கூடும். இந்தித் திரைப்படங்களில் நான் அரிச்சுவடியைத் தாண்டியவனில்லை. A for Aradhana B for Bobby யென எழுபதுகளில் வந்த படங்களையும் அவற்றின் நாயக நாயகிகளயும் அறிவேனே தவிர மற்றபடி ஞானசூன்யம். தவிர ஹெய்டெனைப் போன்றவர்களுக்கு இந்தியர்களென்றாலே பம்பாயிலிருந்து வந்திறங்கியதாக எண்ணமிருக்கிறது. திலிப் குமார், மீனாகுமாரியில் ஆரம்பித்து அமீர்கான் ஷாருக்கான் வகையறாக்களைத் தொட்டுக்கொண்டு எழுபதுக்குள் நுழைந்தார். ஒருவரையும் விடவில்லை: ராஜேஷ் கன்னா, அமிதாப், தர்மேந்திரா, தேவ் ஆனந்த், கபூர் குடும்பம், ஹேமாமாலினி, ஜீனத்.. பாலிவுட்டின் அம்பாசடராக பணிய புரியலாமென்ற எனது யோசனையைக் காதில்வாங்கினதாக தெரியவில்லை. ‘மேரே சப்னொ கீ ராணி’யை மெல்லிய குரலில் பாடிக்காட்டினார். அசப்பில் கிஷோர் குரல். அவருக்கு நேரத்தை நினைவூட்டினேன். எழுமணிக்கு அறையப்பூட்டிக்கொண்டு இறங்கிவந்த மனைவியுடனும் டாக்டர் தம்பதியுடனும் டைனிங் ஹாலுக்குள் நுழைந்தோம். காலை உணவை முடித்துக்கொண்டு, பெட்டிகளுடன் ஏழரைமணிக்கு இறங்கிவிட்டோம். அன்றிரவு கப்படோஸில் தங்க இருந்ததால் ஓட்டலை காலிசெய்யவேண்டியிருந்தது.

ஓட்டலிலிருந்து புறப்பட்ட பேருந்து நேற்று பார்த்த மனவ்காட் நதியைத் தொட்டுக்கொண்டே சென்றது. சுமார் ஐம்பது கி.மீட்டர்தூரம் சமவெளி. கொன்யா நகருக்குச் செல்வதற்கு முன்னால் இடையில் குறுக்கிடும் தொரொஸ் மலைத் தொடரைப் பற்றி எழுதாதுபோனால் இன்றைய தினம் நிறைவுறாது. அண்ட்டால்யாவிலிருந்து கப்படோஸ் சுமார் அறுநூறு கி.மீட்டர். சமவெளிகளும் மலைத்தொடர்களும் மிடையில் குறுக்கிட்டன. சமவெளியெனில் கண்ணுக்கெட்டியதூரம்வரை தரிசு நிலங்கள் பயன்பாடற்று இருந்தன. கிராமங்களில்  குறைவான எண்ணிக்கையில் வீடுகள். அண்ட்டால்யாவுக்கும் கொன்யாவுக்குமிடையில் நானூறு கி.மீட்டர் இருக்கலாம்.இதில் குறைந்தது மூன்றுமணிநேரமாவது பனிமூடிய தொரொஸ் (Taurus) மலைத்தொடரைக் கடந்து செல்லவேண்டியிருந்தது.

 தொரொஸ்: மத்தியதரைகடல் நிலப்பரப்பையும் அனத்தோலியன் பீடபூமியையும் இம்மலைத் தொடர் பிரிக்கிறது. நீள்சதுர கற் படிமங்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கியதுபோன்றிருந்தது இம்மலைகள். தொடக்கத்தில் அந்நியரென்று உணராமல் முகத்தை மறைக்காமலும், பின்னர் சட்டென்று அன்னியர் இருப்பு நினைவுக்கு வந்ததைபோல துருக்கிப்பெண்களில் ஓரிருவர் முகத்தை மறைத்து உரையாடுவதைக்கண்டேன். அவர்களைப்போலவே தொரொஸ் மலைத்தொடரும் ஆரம்பத்தில் முகத்தை மறைக்கமறந்தும் பின்னர் பனிமூடியும் இருந்தது.  வெள்ளிச்சங்கிலிபோல தொடரும் மலைககளுக்கிடையே நீலக்கற்களை பதித்ததுபோல ஆங்காங்கே நீர்ப்பரப்பு. கரு நீலநிற ஏரிகளில் சர்க்கரைப்பொடியைத் தூவியதுபோல பனித்துகள்கள் மிதப்பதை நின்று நிதானமாக ரசிக்க ஆயிரம் ஆண்டுகளாவது குறைந்த பட்சம் வேண்டும். சாலை பல இடங்களில் 1500 மீட்டர் உயரத்திற்கு குறையாமலிருந்ததை அறிவிப்புப் பலகைகள் தெரிவித்தன. உலகெங்குமுள்ள நவீனசாலைகளை ஒத்திருந்தன. எனினும் ஐரோப்பிய நகரங்களில் இருக்கிற பராமரிப்பு இல்லை. ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் நிறைய. நாங்கள் சென்ற பேருந்துவில் அமர்ந்திருந்த பகுதிக்குக் கீழே ஏதோ விடுப்பட்டதுபோல சப்தம் வந்தது. அதை வழிகாட்டியிடம் தெரிவிக்கவும் செய்தோம். அவர் ஓட்டுனரிடம் தகவலைச்சேர்த்தார். முதல் அரைமணிநேரம் ஓட்டுனரிடம் எதிர்வினையேதுமில்லை என்பதால் நிம்மதியாகவே பேசிக்கொண்டு வந்தோம். மலைத்தொடருக்கிடையே ஒரு பள்ளத்தாக்கில் சாலையோரமாக வண்டியை நிறுத்த, நேர்ந்துள்ள சிக்கல் அலட்சியப்படுத்தக்கூடியதல்ல என்பது விளங்கிற்று. இறங்கினோம். ஒரு சிறிய கிராமம். பள்ளிவாசல் அருகில்  தேனீர்கடை, மளிகைக் கடையொன்று, கிராம நிர்வாக அலுவலகம், கழிவறை- அவசர தேவைக்கு பிரச்சினைகளில்லை.  வழிகாட்டியும் ஓட்டுனரும் பேருந்துக்கேற்பட்ட இடற்பாட்டை கைத்தொலைபேசியில் நிர்வாகத்திற்கு தெரிவித்தார்கள். அவ்வழியாகச்சென்ற எங்கள் சுற்றுலா நிறுவனத்தின் மற்ற பேருந்துகள் நின்றன. அனுதாபங்கள், நலன் விசாரிப்புகள். ஒரு சிலமுகங்களில், நமக்கு பிரச்சினையில்லை என்பதுபோன்ற நிம்மதி. விடைபெற்றுகொண்டார்கள். எங்களுக்கு அன்றையபொழுது அங்கேயே தங்க நேருமோ என்ற அச்சமிருந்தது. . ஒரு முறை இந்தியாவில் அப்படியொரு அனுபவம் ஏற்பட்டது. வழிகாட்டியின் தகவல் சமாதானம் செய்தது. ‘பெரிய பிரச்சினையென்றில்லை, அடுத்து இருபது கி.மீட்டர் தூரத்தில் பேருந்து பழுது சரிபார்க்கப்படுமென்றார். ஓட்டுனரின் மௌனம் அதை அங்கீகரிக்க பேருந்துக்குள் ஏறி அமர்ந்தோம். வழிகாட்டியின் கூற்றுக்கேற்ப பேருந்து அடுத்த பள்ளத்தாக்கில் நின்றது. கூடுதலாக இரண்டுமணிநேரம் செலவிடலாமென்பதுபோல அங்கே இயற்கை அழகு, ஆனால் அரைமணிநேரத்தில் பேருந்து சரி செய்யப்பட, பயனத்தைத் தொடர்ந்தோம்.

கொன்யா: மத்திய துருக்கியின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்று. இரண்டு மில்லியன் மக்கள் வசிப்பதாகச்சொல்லப்படுகிறது. சரித்திர புகழ்வாய்ந்த நகரம். இரண்டு இடங்களை அங்கே பார்த்தோம்.

அ. மெவ்லானா நினைவிடம்:

கொன்யா சூ·பிஸப் பிரிவினரின் முக்கிய புனிதத்தலமாக கருதப்படுகிறது. செலாலெதின் ரூமி அல்லது மெவ்லானா (Celaludin Rumi Mevlana) துருக்கிய சூபிஸ மெய்யியல்வாதி. அரபுமக்களால் ரொமானியர் பிரதேசமென நம்பப்பட்ட துருக்கியின் அனாத்தொலி பிரதேசத்தில் வாழ்ந்ததால், இவரை ரூமி எனவும் அழைத்தார்கள். ஆப்கானிஸ்தானத்திற்கும் ஈரானுக்குமிடையிலிருந்த பிரதேசமொன்றில் 1207ல் பிறந்த செலாலெதின், மங்கோலியரின் படையெடுப்பு காரணமாக குடும்பத்துடன் துருக்கிக்கு வருகிறார். தந்தையின் இறப்புக்குப் பிறகு மெவ்லானா சிரியா, டமாஸ்கஸ் போன்ற நகரங்களில் இறையியல் கற்கிறார். 1244ம் ஆண்டு   அவர்  நாடோடியாக சுற்றித் திரிந்த செமா என்கிற தெர்விஷ் துறவியை சந்திக்கிறார். அப்பெரியாரை ஆன்மீக குருவாக ஏற்கவும் செய்கிறார். தெர்விஷ் எதிர்பாராதவிதமாக கொல்லப்பட  அவருடைய நெறிமுறைகள் ரூமியைப் பெரிதும் ஈர்க்கின்றன. செமா (Sema) என்கிற சூபிநடனமும் சூபிஸமும் உருவாகிறது. சூபிஸ நடனம் – (Dervish)ஓர் ஆன்மீகப்பயணம். அன்பினூடாக, தன்முனைப்பை தொலைத்து உண்மையைத் தேடும் பயணம் என்கிறார்கள். அப்படியொரு நடனத்தை காணும் வாய்ப்பு பேறு கப்படோஸில் தங்கியிருந்த முதல் நாள் வாய்த்தது. அதை அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன்.

மெவ்லானாவின் சமாதியும், அவரும் அவர் சீடர்களும் தங்கிய மடமும் இங்கு உள்ளன. மடம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அவரது ஆடை, அவர் வாசித்த திருமறை, அவர் அணிந்த தலைப்பாகை, அவர் உடலோடு ஒட்டிய பொருட்கள் என பலவும் காட்சிக்கு உள்ளன. ஆக்ரா தாஜ்மகாலில் வழங்கப்படுவதுபோல காலணிகளைத் தவிர்க்க பிளாஸ்டிக் உரைகளை கால்களுக்குக் கொடுக்கிறார்கள். வெகுதூரத்தில் வருகிறபோதே தாஜ்மகால் கலசம்போன்ற  நீலமும் பச்சையும் கலந்த பளிங்குக்கல் முகட்டைக் காண்கிறோம். முற்றமும்வாசலுங்கொண்ட பெரிய தொரு ஜமீன் வீட்டை நினைவுபடுத்துகிறது. நீண்ட நடைபாதையின் இடப்புறம் திரும்பியதும் முகப்பில் அழகான நீரூற்று, கைகால்களை சுத்திசெய்துகொள்ள வலப்புறம் நீண்ட தாழ்வாரத்துடன் கூடிய புறாக்கூண்டுபோல மிகச்சிறிய கொள்ளளவுடன் கூடிய அறைகள் இருக்கிந்றன. அறைகளில் டெர்விஷ் நடனக்கலைஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.  இவர்கள் வெறும் நடனக் கலைஞர்களல்ல,   எளிமையான  வாழ்க்கையை நெறியாகக்கொண்டவர்கள். பிச்சுகள் வாழ்க்கை. பக்தியின் அடிப்படையில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வளையவரும் நடனமொன்றை நிகழ்த்தியவர்கள். அடிப்படைகடமையான இவர்களுக்கு தொழுகையுமுண்டு.  இடப்புறமுள்ள மண்டபத்தில் நுழைந்ததும் அங்கே மெவ்லானாவின் செனொதாப்கள்(Cenotaph). இருக்கின்றன. செலாலெதினுடையது, அவரது குடும்பத்தைச்சேர்ந்தவர்களுடையது, அவரது சீடர்களுடையது என பலவுமுண்டு. அலங்கரிப்புகள் அவ்வளவும் தங்க முலாம் பூசப்பட்டோ தங்கச் சரிகை வேய்ந்த பட்டுத்துணிகளாகவோ இருக்கின்றன. சுவரெங்கும் பிறவற்றிலும் குர் ஆன் வாசகங்களை மிக அழகாக சித்திர எழுத்துகளில் தீட்டியிருந்தார்கள். இந்த செனொதாப்களின் மீது மெவ்லானாக்களின் பிரத்தியேக தலைப்பாகையுமிருந்தன. அருகிலிருந்த மற்றொரு மண்டபத்திலும் மெவ்லானாவுக்கு வேண்டியவர்களின் செனோதா·ப்களிருந்தன. இவற்றைதவிர மெவ்லானா உபயோகித்த பொருட்களனைத்தும் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. உலகின் மிகப்பெரிய ஜாடி, உலகத்தின் மிகச்சிறிய குர்ஆன், மெவ்லானா இசைத்த கருவி, கம்பள விரிப்பு, உயர்வகை கற்கள்..இவை தவிர வேறு பொருட்களுக்கும் குறைவில்லை. இங்கே சிறிய பேழையில் வைத்திருந்த அவரது தாடி மயிரையும்குறிப்பிடலாம்.

 ஆ. காரவான்செராய் (Caravanserail de Sultanhan) பயன்பாட்டளவில் நம்ம ஊர் சத்திரங்களையும், பாதுகாப்பில் கோட்டைகளையும் நினைவூட்டக்கூடியது.  இங்கே இரவு நேரங்களில் பயணிகளும் வியாபாரிகளும் கொள்ளையரியமிருந்து தங்களை காத்துக்கொள்ள தங்குவது வழக்கமாம். இதனுள்ளே குதிரைகளும், ஒட்டகங்களும் நூற்றுக்கணக்கில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. பொழுது சாய்வதற்குள் உள்ளே போய்விடவேண்டும். இல்லையெனில் அதன் மிகப்பெரிய கதவுகள திறக்கப்படமாட்டா. நாங்கள் பார்த்த காரவான் செராய் துருக்கியிலேயே மிகப்பெரியது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் கைக்கோபாத் எனும் சுல்தானால் கட்டப்பட்டது.  பெரியகதவுகளைக் கடந்து சென்றால் உள்ளே பயணிகள், வியாபாரிகள் ஆகியோருக்கு தனித்தனி அறைகளும், தொழுகைக்கான மசூதியும், துருக்கி குளியலுக்கான ஹமாமும் விலங்குகளுக்கான கொட்டடிகளும் இருக்கின்றன. இந்நேரத்தில் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு படித்த ‘Birds Without Wings'(Louis de Berniere என்பவர் எழுதிய) நாவல் நினைவுக்கு வருகிறது. இதில் காரவான்சாராயைப்பற்றிய விவரணை வருகிறது. இந்நாவல் பற்றி திண்ணையில் எழுதிய ஞாபகம். இந்நாவலுக்கு முன்னால், My name is Red ல் ஒன்றுமே இல்லை என்பேன்.

மதிய உணவு கொன்யாவிலேயேஒரு ஓட்டலிமென்று ஆயிற்று. துருக்கி ஓட்டல்களில் சைவ உணவுவகைகள் நிறையக் கிடைக்கின்றன. பொதுவாக நட்சத்திர ஓட்டல்களில் துருக்கியில் சிவப்பு ஒயின் கிடைக்கிறது. ஆனால் அன்று நாங்கள் மதிய உணவு சாப்பிட்ட ரெஸ்டாரெண்ட்டில் தடைசெய்யப்பட்டதென்றார்கள்.  உணவின் இறுதியில் எடுத்துக்கொள்ளும்  டெசெர்ட்களில் ஐஸ்கிரீமை காணமுடிவதில்லை. இந்திய இனிப்புகளோடு நிறைய ஒற்றுமைகள். கொரிக்க நிறைய கிடைக்கிறது விலையும் மலிவு: பாதாம், பிஸ்தா, வால்நட், உலர்ந்த பழவகைகள், உப்பு கடலை. மக்காசோளமென்று பட்டியல் போடலாம்.

கொன்யாவிலிருந்து மீண்டும் இரண்டரமணிநேர பயணம். கப்படோஸ¤க்கு மாலை ஆறுமணிக்கெல்லாம் வந்துவிட்டோம். பேருந்தின் வெளித்தோற்றம் பயமுறுத்தியது. ஆனால் அறைகளும், கவனித்துக்கொண்டவிதத்திலும் எவ்விதகுறைகளுமில்லை. ஒரு நான்கு நட்சத்திர ஓட்டலுக்குரிய அத்தனை சௌகரியங்களுமிருந்தன. துருக்கியர்களின் ஹமாம் சேவை உட்பட.

(தொடரும்)

 

 

இந்தியாவின் எதிரி ஆங்கிலமும் ஆங்கிலேயரும்:

இந்திய அதிபரின் செய்தி தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய பவன் கே. வர்மா என்பவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த Becoming Indian என்ற நூலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. வர்மாவின் வேறு  இரண்டு நூல்களும் ஏற்கனவே பிரெஞ்சில் வெளிவந்து கவனத்தை பெற்றவையென்பதால் இப்புதிய நூலின் மீது பிரெஞ்சு ஊடகங்கங்களின் கவனம் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக விழுந்துள்ளது.

நூலாசிரியர் இந்தியனென்கிற தமது அடையாளத்தை வரையறுக்க இயலாமல் தவிக்கிறார், இத்தவிப்பு நூலின் கடைசிப்பக்கம்வரை நீடிக்கிறது.  அதற்கான காரணங்களும் அவராலேயே ஆதாரங்களுடன் முன்வைக்கப்படுகின்றன. பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா இன்றளவும் விடுதலைபெறவில்லை என்பதில் ஆசிரியர் தெளிவாக இருக்கிறார். வர்மாவை பொறுத்தவரை ஆங்கிலேயர் இந்தியாவிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியிருந்தாலும் அரசியல் பொருளாதாரமென்று இன்றளவும் இந்தியாவை வழிநடத்துவது ஆங்கிலேயரின் நிழல். அவர்கள் தந்திரமாக விட்டுச்சென்ற ஆங்கிலம் காலணியாதிக்ககாலத்தினும் பார்க்க கீழ்மையனானதொரு ஆதிக்க அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறது. வர்மாவுடைய கருத்தின்படி காலணியாதிக்கம் விட்டுச்சென்றுள்ள வர்க்கபிரிவு ஆங்கில மொழி அறிந்தவர்கள், அறியாதவர்கள். இவர்களில் முதற் பிரிவினர் ஆங்கிலேயரின் இடத்தைப்பிடித்துக்கொண்டு  பெரும்பான்மை இந்தியரை அடிமைகளாக நடத்துகின்றனர் என்கிறார் வர்மா. அந்நியமொழியான ஆங்கிலம் இந்தியாவின் சுயமான கல்வி, கட்டிடக்கலை, பிற கலைகள், திரைப்படங்கள், சங்கீதம், இலக்கியம், பண்பாடு என அனைத்தையும் பாழடித்துவிட்டது என்பது வர்மாவின் குற்றச்சாட்டு. இந்தியாவில் நடப்பதனைத்தும் எந்தத்துறையை எடுத்துக்கொண்டாலும் எல்லாமே வெட்டி -ஒட்டும் வேலை அதாவது சுயாதீன முயற்சிகளால் இயங்குபவை அல்ல.  இந்தியப்பட்டறையில் நாம் செய்வதனைத்தும் நகலெடுக்கும்பணிதான். உலகில் மிகப்பெரிய அறிவுலகிற்கு  சொந்தக்காரர்களாக இருந்த இந்தியர்கள். ஆங்கிலக்கல்விமுறையினால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செக்குமாடுகளாக உழைக்கக்கற்றுக்கொண்டதன்றி வேறுபலன்களை காணவில்லை என்பது அவரது வாதம்.

மெக்காலே பிரபு என்பவனால் ஏறக்குறைய இருநூற்று ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டுவிட்ட இந்தியாவின் தலைவிதிக்கு இந்தியர்களும் பொறுப்பு என்கிறார் வர்மா. வில்லியம் பெண்டிங் பிரபு கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் அன்றைய இந்தியத் தலைவர்கள் இருபிரிவினராக இருந்திருக்கின்றனர். ஒரு சாரார், “எங்களை ஆள்வதற்கு எங்கள் மொழியை நீங்கள் கற்பதுதான் முறையென வற்புறுத்த மற்றொரு பிரிவினர் (ஆங்கிலேயர்களும் அவர்களின் விசுவாசிகளும்) ஆளுகின்ற வர்கத்தின் மொழியை குடிகள் ஏற்பதுதான் முறை எனக் கூறியிருக்கின்றனர். விளைவாக ஆளும்வர்க்கத்திற்கும் மக்களுக்குமிடையே இடைத்தரகர்களாய் ஒரு கூட்டம் முளைத்து அக்கூட்டத்தின் பிழைப்பு மொழியாக ஆங்கிலம் உள்ளே நுழைந்தது என்கிறார், வர்மா.  கீழைசிந்தனைகளில் தமக்கென ஒரு பாரம்பர்யத்தைப்பெற்றிருந்த இந்தியா ஆங்கிலத்தை அனுமதித்ததன் மூலம் தமது தலைவிதியையே மாற்றி எழுதிக்கொண்டது. ஆங்கிலேயர் விட்டுச்சென்ற இடத்தில் ஆங்கிலத்தை அறிந்த ஒரு புதிய நடுத்தரவர்க்கம் தங்களை ஆங்கிலேயராக மட்டமைத்துக்கொண்டு அதிகாரத்திற்குள் நுழைந்தது. தவிர இந்தியப்பண்பாட்டிற்குள்ளும் பல அத்துமீறல்களை நிகழ்த்தியதோடு இந்தியாவின் கல்வியும் கலையும் ஆங்கிலத்தினூடாகத்தான் உலக அங்கீகாரம் பெறமுடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது வேதனைக்குரியது என்கிறார் பவன் கே.வர்மா.

காங்கிரஸ் இயக்கங்கண்ட இந்தியர்கள் ஆங்கிலேயர்களை வெளியேற்றியதுபோல அவர்கள் மொழியையும் துணிச்சலுடன் வெளியேற்றியிருக்கவேண்டும் என்கிறார். நம்மவர்களின் விவேகமற்ற அணுகுமுறைகளுக்கு நூலாசிரியர் சில வரலாற்று சம்பவங்களையும் சாட்சிக்கு அழைக்கிறார். உபநிஷத்திற்கும் வேதாந்ததிற்கும் உரை எழுதிய ராஜாராம் மோகன் ராய் என்பவர்தான் சமஸ்கிருத கல்விமுறைக்கு எதிராகவும், ஆங்கில கல்விமுறைக்கு ஆதரவாகவும் அப்போதைய கவர்னர் ஜெனரலிடம் மனுகொடுத்தவராம். ஆக மெக்காலேவின் அறிக்கைக்கு ராய் பிரிட்டிஷ் நிர்வாகிகளிடம் கையளித்த விண்ணப்பமும் ஒரு வகையில் காரணம். விதேசிகளை விதந்தோதும் இந்தியரின் போக்கிற்கு அன்றே உதாரணங்கள் இருந்திருக்கின்றன என்கிறார். இனவாதியும், இந்தியர்களை மிகக்கேவலமாக விமர்சித்து பழகியிருந்த (அப்புத்தகங்கள் இந்தியச்சந்தையில் இன்றும் கிடைக்கின்றனவாம்) எட்வின் லுட்டியென் (Edwin Lutyens) வசம் இந்திய தலைநகரான புதுடில்லியை நிர்மாணிக்கும் பொறுப்பை அளித்ததும், இந்திய பாரம்பர்யதைக் கேலிசெய்தும், இந்தியர்களைப் பழித்தும் பேசிய லெ கொர்புசியே (Le Corbusier) என்பவரிடம் நேரு சண்டிகார் நகரை நிர்மாணிக்கும் பொறுப்பை ஒப்படைத்ததையும் வர்மா வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். மேற்கத்திய அறிவை சிலாகிக்கும் போக்கு இன்றளவும் தொடர்வதை ஆசிரியர் மறக்கவில்லை. இன்றுங்கூட இந்தியாவில் எத்தனை விருதுகள் பட்டங்கள் பெற்றாலும் அக்கலைஞனோ, படைப்பாளியோ வெளிநாட்டில் விருதுபெற்றால்தான், ஆங்கிலேயரால் அங்கீகரிக்கப்பட்டால்தான், இந்தியாவில் பெரியவனென ஏற்றுக்கொள்கிறார்களென வருந்துகிறார்.

நூலில் இரண்டு விஷயங்கள் உறுத்துகின்றன: ஒன்று ஆங்கிலத்திற்கு மாற்றாக நூலாசிரியர் இந்தியை தேசிய மொழியாக அங்கீகரிக்கபடவேண்டும் என்பது. இன்றைய தேதியில் இது சாத்தியப்படுமா? அறுபதுகளில் நிகழ்ந்த மொழிக்கலவரங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. அடுத்து ஆங்கிலத்தையும் ஆங்கிலேயர்களையும் வரலாற்று ஆதாரங்களையெல்லாம் வம்புக்கிழுத்து விமர்சிக்கிறவர், நூலை ஆங்கிலத்தில் எழுதியிருப்பது.

———————————–

துருக்கி பயணம்-2

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் –     மார்ச்-27

முன்னாள் இரவு விமானநிலையத்திலிருந்து ஓட்டலுக்குச்செல்லும்போதே எங்கள் குழுவினருக்கென பணியாற்றிய வழிகாட்டி காலை 9.30க்குப் பேருந்தில் இருக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். ஐரோப்பியர்கள் நேரத்தை பெரும்பாலும் ஒழுங்காக கடைபிடிப்பவர்கள். பிரான்சில் நம்மவர்களோடும்  பயணம் செய்திருக்கிறேன், ஐரோப்பியர்களோடும் வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன. நாம் அலட்சியப்படுத்துகிறவற்றில் அவர்கள் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த அக்கறையே அவர்களின் முன்னேற்றத்திற்கும் காரணமாகவும் இருக்கின்றன. முதல்நாள் பாரீஸ் விமானதளத்தில் எங்கள் வரிசையில் பின்னால் நின்றிருந்த மூவரும் ஒரு டாக்டர் தம்பதியும் அவர் சகோதரியும் (இவருமொரு மருத்துவர்)  முதல்நாள் பேருந்தில் அமர்ந்த அன்றே கலகலப்பாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். தவிர அன்றிரவு டாக்டர் தம்பதிக்குக் கொடுக்கப்பட்டிருந்த அறையும் அவர் சகோதரியின் அறையும் எங்கள் அறைக்கு அருகருகே இருந்தன. ஐந்துபேரும் ஓட்டல் ரெஸ்டாரெண்ட்டில் காலை 8.30க்குச் சந்திப்பதாகச் சொல்லியிருந்தோம். ஓட்டல் அறைகளில் Wi-Fi தொடர்பு ஒழுங்காகக் கிடைக்கவில்லையென்பது ஒரு குறை. எனவே கொஞ்சம் முன்னதாக இறங்கிவிட்டேன். லாபியில் ஒழுங்காக கணிணிக்குத் தொடர்பு கிடைத்தது. எட்டரை மணிக்கு அனைவருமாக ரெஸ்டாரெண்ட்டிற்கு காலை உணவிற்குச்சென்றோம். எங்கள் கைகளுக்கு அறைஎண்ணுடன்கூடிய ஒரு கங்கணத்தை கட்டிக்கொள்ளுமாறு முதல் நாள் இரவே வரவேற்பில் கொடுத்திருந்தார்கள். ஐரோப்பிய துருக்கிய உணவுகள் கிடைத்தன. துருக்கியரின் பிரத்தியேக சாயலுடன் கூடிய ஐரோப்பிய காலை உணவென்றும் சொல்லல்லாம். எக்மெக் என்கிற ரொட்டி, தெரெயா என்கிற வெண்ணெய் (கொஞ்சம் அதிகமாக வாடை இருக்கிறது) முதலில் தயக்கமாக இருந்தது. ஒரு முறை ருசித்துவிட்டால் விரும்புவோம். அடுத்து இஸ்லாமியமக்கள் விரும்பி எடுக்கும் பதப்படுத்தப்பட்ட ஆலிவ் (கறுப்பு, பச்சை, சாம்பல் வண்ணமென்று பல வகைகளில் மசாலா கலந்தும், கலவாமலும் கிடைக்கிறது) தக்காளி, வெள்ளரி துண்டுகள் மேற்கத்தியர்களைபோலவே  தேன்; பாற்கட்டி, முட்டை, தயிர் இவற்றுடன் பிற இஸ்லாமியா நாடுகளிலுள்ள ஓட்டல்களில் பார்க்க  வியலாத பன்றி சாசேஜ்களுமிருந்தன.

காலையில் அண்ட்டால்யா (Antalya) நகரின் அருகிலுள்ள ஒரு சரித்திரபுகழ்வாய்ந்த அரங்கொன்றையும் பிற்பகலில் மனவ்கா( Manavgat) நதியில் படகுச்சவாரியென்றும் எங்கள் பயணத்திட்டத்திலிருந்தது. முதல் நாள் கண்ட மூன்று இடங்களைக்குறித்து எழுதுவதற்கு முன்பாக அண்ட்டால்யாவைப் பற்றி சில தகவல்கள்:

அண்டால்யா துருக்கிக்கு தென்பகுதியிலுள்ள பிரதேசம். பிரதேசத்தின் பெயரையே தலை நகரத்திற்கும் வைத்துள்ளார்கள். நீர்வளம் நிலவளமும் என்று நம்முடைய பழம் நூல்களில் எழுதுவார்கள். அதுபோன்று நீர்வளமும் நிலவளமும் சேர்ந்து அமைந்ததால் சில ஆண்டுகள் வரை விவசாயம் இப்பிரதேசத்தின் பிரதான வருமானமாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் சுற்றுலா தொழிலில் ஆக்ரமிப்பிற்குத் தப்பிய இடங்களில் ஆலிவ், அப்ரிகாட், ஆரஞ்சு, திராட்சையைக் காணமுடிகிறது. அண்டல்யாவின் வரலாற்று எச்சமும் [ பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உதுமானியர்கள் (Ottomans)கீழ் வருவதற்கு முன்பாக இப்பகுதி ரோமானியர்கள், கிரேக்கர்கள் வசம் இருந்திருக்கிறது] நீலப்பச்சையில் பகற்பொழுதில் ஜொலிக்கும் மத்தியதரைகடலும், இயற்கை உளிகொண்டு கடற்கரையில் அது புரிந்துள்ளவிந்தையும் இப்பிரதேசத்தை ஒரு சுற்றுலா தலமாக அண்மைக்காலத்தில் மாற்றியுள்ளது.

பேருந்தில் சென்றபொழுதே பிரதேசத்தின் வளத்தை உணரமுடிந்தது. முதல்நாள் தொடங்கி இறுதிநாள்வரை சுற்றுலா அண்டல்யா வில் மும்முரமாக செயல்படுவதற்கான காரணிகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி ஐரோப்பியர்கள் உதவியுடன் துருக்கியர்கள் ஜெயித்திருக்கிறார்கள். இந்தியாவில் மத்திய தொல்பொருள் இலாக்காவின் பராமரிப்புலுள்ள இடங்கள் எந்த இலட்சனத்தில்லிருக்கின்றனவென ஐரோப்பியர்களுடன் ஒப்பிடவேண்டாம் துருக்கிபோன்ற நாடுகளோடு ஒப்பிட்டாலேபோதும்.

காலையில் சுமார் பத்து பத்தரை மணி அளவில் எங்கள் ஓட்டலிலிருந்து சுமார் நாற்பது கி.மீட்டத் தூரத்திலிருந்த அஸ்பெண்டோஸ் என்னும் இடத்திற்குச் சென்றோம். சுற்றுலா தலத்தில் பொதுவாக நாம் பார்க்கிற காட்சிகளை இங்கேயும் பார்க்கமுடிந்தது. நாங்கள் பயணித்த ஒருவாரமும் மக்கள் உபயோகத்தில் ஒட்டகங்கள் இல்லையென்றாலும் இதுபோன்ற இடங்களில் அலங்கரித்த ஒட்டகங்களை சுற்றுலா பயணிகளில் நிழற்படங்களுக்காக காத்திருந்தன. பிறகு சுவெனிர் கடைகள். குளிர்பானங்கள், தேனீர், 1யூரோவுக்கு நல்ல தண்ணீர் கலவாத ஆரஞ்சு பழச்சாறுகளும் (அதிகமாக விளைவதால்)  கிடைக்கின்றன.

அஸ்பெண்டோஸ்( Aspendos). பண்டைய கிரேக்கர்களின் செல்வாக்கு மிகுந்த நகரமாக இருந்திருக்கிறது. நகரத்தின் சிதிலங்கள் ஆங்காங்கே பராமரிப்புடனிருந்தன. இந்நகரத்து குதிரைகள் அவ்வள்வு பிரசித்தமாம். இதனை நான்காம் நூற்றாண்டில் கைப்பற்றிய அலெக்ஸாண்டர் தமக்குத் திரைப்பணமாக குதிரைகளைத் தரவேண்டுமென நிர்ப்பந்தப்படுத்தியதாக வழிகாட்டி கூறினார். இந்த வழிகாட்டிகள் கூறுபவை பல நேரங்களில் புனைவுகளாக இருக்கக்கூடும். இங்கே நாங்கள் பார்த்தவற்றுள் காலத்தின் அரிப்பினால்  அதிகம்  பாதிக்கப்படாததாக  ரோமானியர்கள் இந்நகரை ஆண்டபொழுது உபயோகித்திருந்த திறந்தவெளி நாடக அரங்கமிருந்தது. மார்க் ஒரேல் என்ற ரோமானிய மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் செனோன் என்கிற உள்ளூர் கட்டிடகலைஞரால் உருவாக்கப்பட்ட அரங்கம். அப்போதே நடிப்பவர்களுக்கு உயரமான மேடை, அலங்கரிந்துக்கொள்ள தனி அறைகள், எதிரே பார்வையாளர்களுக்கு  சமூக வாழ்நிலை அடுக்கிற்கு ஏற்ப இருக்கைகள். சூரிய ஒளியிடமிருந்து பகற்பொழுதில் நடிகர்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் பார்வையாளர்களின் இருக்கை, பேசும் வசனங்கள் பழுதின்றி  பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஓசை தடுப்புகள் என இருபது நூற்றாண்டுகளுக்குமுன்னரே ரோமானியர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் கலைக்குக் கொடுத்திருந்த முக்கியத்துவம் தெரிந்தது.

பிறகு அருகிலேயே சுண்ணாம்பு படிமங்களுடன் பயணிக்கும்  மனவ்காட் (Manavgat) நதியோடு பயணித்து பல இடங்களில் பேருந்தை நிறுத்தி அதன் அழகைப் பருகினோம். வெள்ளி திரவமாக பிரவாகமெடுத்ததுபோலவிருந்த வெயிற்பொழுதிற் மரகதப்பச்சையில் விரித்திருந்த நீர்ப்பரப்பின் அழகைக்குறித்து எழுத பாரதியோ பாரதிதாசனோ தேவை. பகல் ஒரு மணிக்கு எங்களுக்குப் படகுகுசவாரி. இரண்டு அடுக்கு கொண்ட படகில் மேல் தளத்தில் பயணிப்பதை தவிர்த்து முதற்தளத்தில் அமர்ந்தோம். பிரான்சு நாட்டு அரசியல், இந்தியாவின் வளர்ச்சி, ஐரோப்பாவின் நெருக்கடியென பலவற்றை விவாதிக்க முடிந்தது. மருத்துவரைக் காட்டிலும் அவரது சகோதரி அதிகம் அரசியல் பேசினார்.  வலது சாரிகளை வெறுப்பதாகத் தோன்றியது. அப்போது பிரான்சில் முதல் சுற்றுக்காக அதிபர் தேர்தலுக்கு தீவிர பிரச்சாரம் நடந்துகொண்டிருந்த நேரம். அதிலும் டாக்டர் பெண்மணி தீவி இடதுசாரி வேட்பாளரை ஆதரித்து பேசியதும் என்னையும் அந்தவேட்பாளருக்கே வாக்களிக்குமாறு வற்புறுத்தியதும் வியப்பளித்தியது. வெயில் கடுமையாக இருந்தது. நான்கைந்து கி.மீட்டரில் கடற்கரை ஓரமாகவே நதி நீள்கிறது. பிறகு ஒரு தீவு போன்ற இடத்தில் படகை நிறுத்தி எங்களுக்கு உணவை வழங்கினார்கள். நல்ல சாலட், ரொட்டி, புதிதாகப்பிடித்த ட்ரௌட் (Trout)இளஞ்சூட்டில் சுவையாக அவித்து தருகிறார்கள்.  ஆசிய ஐரோப்பா பறவைகள் பலவற்றை இங்கே காணமுடிந்தது. பிற்பகல் நான்கரை மணிக்கு நதிப்பயணம் நாங்கள் வந்த வழியே திரும்ப முடிவுற்றது.

மாலை ஐந்து மணி அளவில்  அண்டல்யாவின் புறநகர் பகுதியில் மனவ்காட் நதிக்கு வெகு அண்மையில் செலிமியெ (Selimiye)வில் இஸ்டான்புல்லின் நீலமசூதியை வடிவிலும் அழகிலும் ஒத்திருந்த ஓரு மசூதியைக் காண்பித்தார்கள். இஸ்டான்புல் மசூதிதைப்பார்த்தது இல்லை. ஆனால் இதைப்பார்த்தபொழுது அதையும் பார்க்கவேண்டுமென்றிருக்கிறது. மசூதியில் நான்கு மினாரேக்கள் இருந்தன. மசூதியின் வாயிலுக்கு எதிரில் கால்கைகளை சுத்திசெய்வதற்கான இடம் பால்நிரபளிங்கு கற்களால் கட்டப்பட்டிருந்தது. நீல நிறம் மசூதியை பெரிதும் ஆக்ரமித்திருந்தது. உள்ளேயும் நுணுக்கமான கலைவேலைப்பாடுகள். பளிங்குகற்களில் சித்திரங்கள் பதித்த  பட்டிகள், வண்ணகண்ணாடி சில்லுகளால் அலங்கரிக்கபட்ட சன்னல்கள், கூண்டுகள், தொழுகைக்ககான இரத்தினக் கம்பளம், மிருதுவாய் தொட்டுணரக்கூடிய ஒளி. அனுமதி தந்த இமாமுக்கு நன்றி சொல்லவேண்டும்.

மாலை ஏழு மணிக்கு ஓட்டல் திரும்பினோம். நேற்று வழங்காத காக்டெய்லை சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் வழங்கினார்கள்; அது காக்டெய்ல் என்றபெயரில் கொடுப்பட்ட  அமெச்சூர்தனமான ஒரு பானம், வாயைக்கெடுத்தது. அறைக்குத் திருப்பியதும் ஒரு குளியல். ஒருமணிநேரம் ஓய்வெடுத்துவிட்டு இரவு எட்டு மணிக்கு சாப்பிட இறங்கினோம். மீண்டும் பு·பே உணவு. எல்லாமிருந்தது. இரவில் கடுமையாக உண்பதில்லை என்ற வழக்கப்படி நான் சூப்பும் சாலட்டென்று முடித்துக்கொண்டோம். மறுநாள் காலை ஆறுமணிக்கு புறப்படும் வேண்டுமென்றதால் அரைமணிநேரம் லாபியில் உட்கார்ந்து டாகடர் தம்பதிகளுடன்உரையாடிவிட்டு  அறைக்குத் திரும்பினோம். .

(தொடரும்)

மொழிவது சுகம்:- மே 15

பிரான்சு நாட்டின் புதிய அதிபர்: பிரான்சுவா ஒலாந்து

எதிர்பார்த்ததுபோலவே சோஷலிஸ்டு கட்சியின் வேட்பாளர் பிரான்சுவா ஒலாந்து வெற்றிபெற்றிருக்கிறார். இந்த ஒலாந்து என்ற சொல்லை ஆனந்தரங்க பிள்ளையின் நாட்குறிப்பில் கண்டேன். ஆனந்தரங்கபிள்ளைக்கும், இன்றைய பிரெஞ்சு பிரதமருக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? எதையாவது எழுதலாம். கற்பனையிருப்பின் முடிச்சுகளா இல்லை. ஆனந்தரங்கபிள்ளை நாட்குறிப்பில் வருகிறவர்கள் டச்சுகாரர்களென்று நாமழைத்த  ஓலாந்துகாரர்கள்.

பிரான்சுவா ஓலாந்து அதிபர் தேர்தலுக்கு நின்றபோது, ஆட்சியிலிருந்த வலதுசாரி கட்சியும் அவர்களது அனுதாபிகளும் கடுமையாக விமர்சித்தார்கள். அவர் தேர்தலில் நின்று ஜெயித்தும் ஆயிற்று. அங்கொன்றும் இங்கொன்றுமாக புலம்பலும் தொடர்கிறது.

“வளர்ச்சியைப் புறக்கணித்து செலவினைக் குறைக்கவேண்டும்” என்று ஐரோப்பிய கூட்டமைப்பு எடுத்திருந்த முடிவை பிரான்சுவாஸ் ஒலாந்து மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்த சொல்கிறார். ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த பலரும் வலதுசாரி பின்புலத்திலிருந்துவந்தவர்களென்பதால், பசியேப்பக்காரகளின்  சஞ்சலத்தைக்காட்டிலும் புளிஏப்பக் காரர்களின் சங்கடங்கள் அவர்களுக்கு முக்கியமாகபட்டன. ஒலாந்துக்கு பசிஏப்பக் காரர்களின் சஞ்சலங்கள் முக்கியம். அவரது தேர்தல் வாக்குறுதிகள் தெளிவாக இருக்கின்றன. அவருக்கெதிராக கட்சிகட்டிகொண்டிருந்த ஐரோப்பிய வலதுசாரிகள், இறங்கிவந்திருக்கிறார்கள். பொருளியல் நிபுணர்களின் விமர்சன தொனியிலும் இறக்கமிருக்கிறது. நேற்றுவரை ஆட்சியிலிருந்த வலதுசாரி நடந்ததனைத்திற்கும் தாங்கள் பொறுப்பல்ல, அதற்கு உலகத்தில் ஏற்பட்ட நெருக்கடியே காரணம் என்றார்கள். புதிய அதிபரின் வாக்குறுதிகளை நம்பத் தயாரில்லை என்கிற சர்க்கோசி அனுதாபிகளுக்கு,  தங்கள் சர்க்கோசி சென்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததில் வருத்தங்களில்லை. பிரான்சிலேற்பட்ட நெருக்கடிக்கு சர்க்கோசியும் அவரது சகாக்களும் பொறுப்பல்ல என்றும் உலகம் திணித்ததாகவும் கூற அவர்களுக்கு தயக்கமில்லை.

இந்த உலகம் எங்கிருந்து வந்தது, யார்கையில் இருக்கிறது? தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு நாட்டிலும் கைவிரல் எண்ணிக்கையிலிருக்கிற மனிதர்களிடம் உலகப்பொருளாதாரம் இருக்கிறது. உலகத்தின் தலைவிதியை இந்தச் சிறுகூட்டமே கைவலிக்காமல் எழுதுகிறது. அதை எழுதியதில் சர்க்கோசிகளுக்கும் பங்குண்டு. இன்றைய முதலாளியியத்திற்கு சில செப்படிவித்தைகள் தெரியும். சீனாவில் மாவோயிஸம்; பொதுவுடமைகாரர்களுக்கு சோஷலிஸம், மார்க்ஸிஸம்; அமெரிக்காவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் முதலாளியியம்; இந்தியாவுக்கு ஜனநாயக சோஷலிஸமென மேடைக்கும் எதிரிலிருக்கும் ரசிகர்களைபொறுத்தும் எந்த வேடமும் முதலாளித்துவம் தரிக்கும். நேற்றுவரை பிரான்சு சர்க்கோசி முத்திரைகுத்திரையிருந்தது. இன்று ஒலாந்து முத்திரை. பீடித்துள்ள நோய்க்கு இதுதான் மருந்து என்று அறியாதபோது புதிய மருந்தையும் முயற்சிக்க வேண்டியதுதான். தற்போதைக்கு புதிய மருத்துவரின் கைராசிபற்றி கருத்து கூற உடனடியாக எதுவுமில்லை என்கிறபோதும் அவருடைய ஒலாந்து முகராசியை பலரும் நம்புகிறார்கள்.

அம்பேத்காரும் இவர்களும்:

ஏற்கனவே பிரசுரமான கேலிசித்திரம், இந்திய தேசிய நிறுவனமொன்றால் மறு பிரசுரத்திற்கு உள்ளாகியவகையில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி பாராளுமன்றம் அமளி துமளிபட்டது. நிறுவனத்தில் உறுப்பினர்களாக இருந்த கல்விமான்கள் இருவரின் அலுவலங்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன. பாராளுமன்றத்தில் பத்து விழுக்காடு உத்தமர்கள் தேறலாம். 90 விழுக்காடு பிரதிநிதிகளுக்கு நாணயம், நேர்மை ஒழுக்கம் என்பது குறித்த உணர்வு இல்லாதவர்கள். பிரான்சில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் தீவிர இடதுசாரி வேட்பாளர்கள் இருவர் மாத ஊதியதாரர்கள். எல்லோரும் இந்நாட்டு மன்னரென சொல்லிக்கொண்டாலும் பாரதத்தில் இப்படி தொழிலாளிகள் அதிபர் தேர்தலில் நிற்க வாய்ப்புண்டா தெரியவில்லை.    பாராளுமன்ற உறுப்பினர்களின் தராதரங்களை தினசரிகளில் வாசிக்கிறோம். இவர்கள் எதிர்ப்பும் ஆதரவும் எப்படியிருக்குமென உரசிப்பார்க்க அவசியமில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் மாயாவதி  ஐம்பதுகோடி ( அறுபதுகோடி?) முதலீட்டில் பொதுசொத்தையும் வளைத்துப்போட்டு தமது அரண்மனையை கட்டிக்கொண்டதாக ‘இந்து’ இதழில் வாசித்தேன்.     இவர்தானென்று இல்லை இந்தியாவில் பெருவாரியான பிற்பட்ட மற்றும் தலித் பிரிவினர் தலைவர்களின் நிலமை இது.  நான் ஒரு பிற்பட்ட வகுப்பைச் சார்ந்தவன் என்ற வகையில்  இதைச்சொல்ல உரிமை இருக்கிறதென நினைக்கிறேன். அம்பேத்காருக்கும், பெரியாருக்கும் சிலைவைத்து நினைவு நாள்கொண்டாடுவதைத் தவிர அல்லது அவர்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்வதைத்தவிர கடந்தகால தலைவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?  அம்பேத்கார் இன்றிருந்தால் கார்ட்டூனை அனுமதித்திருப்பார் என்பது உண்மை. ஏனெனில் அவர் இவர்களல்ல. .

அ;மார்க்ஸ்

பேராசிரியர் அ;மார்க்ஸ் வலைப்பூ அண்மையில் புதுச்சேரிமாநிலத்தில் உருவையாறு என்ற கிராமத்தில் போலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு எதிரான கண்டன ஆர்பாட்டம் பற்றிபேசுகிறது. குற்றவாளிகளும் காவல்துறையில் சிலரும் இணைந்து செயல்படுவதையும், அப்பாவி மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அலசுகிறது. பேராசிரியர் கல்யாணி, கொ.சுகுமாரன் போன்றவர்களின் நீண்டநாள் உழைப்பும் நினைவு கூரப்பட்டுள்ளது. சமூகத்தின் மீது அக்கறைகொண்டவர்கள் வாசிக்கவேண்டிய பத்தி.

http://amarx.org/?p=468

அ.ராமசாமி:

சரஸ்வதி சம்மாண் விருதுபெற்ற பேராசிரியர் அ.மணவாளன் குறித்து பேராசிரியர் அ.ராமசாமி அவர்கள் எழுதிய கட்டுரை அம்ருதாவில் ஏற்லனவே வாசித்தது. அதனை அவரது தலத்திலும்  இட்டிருக்கிறார்.  விமரிசிகர்களும் ஆய்வாளர்களும், தமிழ் படைப்பிலக்கிய உலகில் கண்டுகொள்ளப்படவில்லையென்கிற ஆதங்கத்தோடு, நவீன இலக்கியத்திற்கு வருகிறவர்கள் மரபு இலக்கியத்தில் அக்கறைகொள்ளவேண்டிய அவசியத்தையும் கட்டுரை ஆசிரியர் வற்புறுத்துகிறார்.  தமிழ்ப்பேராசிரியர்களுக்கு நவீன இலக்கியத்திலுள்ள ஞானத்தினும் பார்க்க நவீன இலக்கியவாதிகளுக்கு கூடுதலாக தொன்ம இலக்கியங்களைப் பற்றிய புரிதலிருக்கிறதென்பது எனது கருத்து.  ஒன்றிரண்டு விழுக்காடுகள் இதற்கு மாறாகவும் இருக்கலாம். ஏனெனில் எனக்குத் தெரிந்த  தமிழ்பேராசிரியர்கள் சிலர் நவீன இலக்கியத்தின் தீவிர வாசகர்களாக இருக்கிறார்கள், அனைவருமறிந்த தமிழவன்,  தில்லி பல்கலைகழக பேராசிரியர்கள் நாச்சிமுத்து, சந்திரசேகரன், புதுவைச்சேர்ந்த நண்பர் தேவமைந்தன் என்கிற பசுபதி என உதராணங்களைசொல்லலாம். பேராசிரியர் மணவாளனை அறிந்துகொள்ளவும், வழக்கம்போல பேராசிரியர் அ.ராமசாமி அவர்களின் மொழிக்காகவும் வாசிக்கவேண்டிய கட்டுரை.

http://ramasamywritings.blogspot.fr/2012/05/blog-post.html#more

——–

———————————

துருக்கி பயணம்-1

அண்ட்டால்யா – கொன்யா -துருக்கி       
மார்ச்-26

[துருக்கியைப்பற்றிய சிறுகுறிப்பு: 1923ம் ஆண்டிலிருந்து முஸ்தபா கேமால் ஒட்டொமான் பிடியிலிருந்து மீட்டு சுதந்திர துருக்கியை உருவாக்கினார். 1982ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் திருத்தி எழுதப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 550. ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை மக்களால் நேரடியான வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இஸ்லாம் பெரும்பானமை மக்களின் மதம். கிறித்துவம், யூதம் போன்றவற்றுள் நம்பிக்கைகொண்ட மக்களும் நாட்டிலுண்டு. பல மொழிகள் பேசப்படினும் பெரும்பான்மையினரின் மொழி துருக்கி. நவீன துருக்கியின் தந்தையெனக் கருதப்படும் முஸ்தபா கேமால்  மொழி சீர்திருத்தத்தையும் கொண்டுவந்தார், அவரால் அறிமுகப்படுத்தபட்ட இன்றைய துருக்கிமொழி அராபியமொழியை விலக்கிக்கொண்டு இலத்தீன் வடிவத்தைபெற்றுள்ளது. துருக்கிமக்கள் அரபு மொழியை முற்றுமுதலாக மறந்தவர்கள் அல்லது அதன் தேவையின்றி வாழப்பழகியவர்கள்; குர்-ஆன் கூட துருக்கிமொழியில் எழுதப்பட்டு (மொழி பெயர்க்கப்பட்டு அல்ல) வாசிக்கப்படுகிறது.]

எங்கள் துருக்கிப்பயணம் மார்ச் 26ந்தேதி என திட்டமிடப்படிருந்தது. இப்பயணத்தில் மனைவியும் நானும் பங்குபெற்றோமென்றாலும், இரண்டு நாட்கள் முன்னதாக பாரீஸில் நான் இருக்கவேண்டியிருந்தது. நண்பர் காலச்சுவடு கண்ணன் பாரீஸ் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தார். துருக்கி யணப்படுவதற்கு முன்னால் அவரைச் சந்திக்க திட்டமிட்டிருந்தேன். என்ன புரிந்துகொண்டேனோ அல்லது எப்படி புரிந்துகொண்டேனோ, பாரீஸில் 26ந்தேதிவரை கண்ணன் இருப்பதாக  நினைத்துக்கொண்டிருந்தேன். அவரிடமிருந்து கிடைத்த மின்னஞ்சல் 23ந்தேதியன்றே பிற்பகல் மாலை 5.30க்குப் பாரீஸிலிருந்து புறப்பட்டு இலண்டன் செல்வதாக தெரிவித்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. 23ந்தேதி மாலை 4.30க்கு பாரீஸை அடைகிறேன் என்றாலும், இலண்டன் செல்லவிருந்த அவருடைய பயண இரயில் பத்து நிமிட தூரத்தில் இருந்ததால் சந்தித்து ஒரு முப்பது நிமிடம் அவருடன் உரையாடமுடியுமென்றாலும் போகிறபோக்கில் அவரை சந்திப்பது நாகரீகமல்ல என்பதால் 23ந்தேதியென்றிருந்த எனது முன்பதிவை ரத்துசெய்து ஒரு நாள் முன்கூட்டியே பாரீஸ் செல்ல முடிவுசெய்தேன். பாரீஸ் பிரான்சுவா மித்தரான் தேசிய நூலகத்தில், செஞ்சி நாவல் தொடர்பாக சில தகவல்களை பெறவேண்டியிருந்ததால் இத்தேதிமாற்றம் உதவக்கூடுமென  நினைத்தேன்.

எனவே 22 மார்ச் அன்று பிற்பகல் இரண்டேகால்மணிக்கு TGV பிடித்து நான்கரை மணிக்கெல்லாம் பாரீஸ் கிழக்கு திசை பயண இரயில்நிலையமான Gare de l’estக்கு வந்தாயிற்று. சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஸ்ட்ராஸ்பூர் – பாரீஸ் இரயில் பயணத்திற்கு( சுமார் 500 கி.மீட்டர் தூரம்) நான்கு அல்லது நான்கரை மணிநேரத்தை நாங்கள் ஒதுக்கவேண்டும். அது பாதியாக குறைக்கப்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் ஒன்றே முக்கால் மணி நேரம் என்கிறார்கள். நேரத்தை மிச்சப்படுத்துவது உபயோகமான காரியம். 22ந்தேதி பிற்பகல் நான்கரைமணிக்கு Gare de l’estல் இறங்கினேன். அங்கிருந்து பத்துநிமிடத்திற்கு குறைவான தூரத்தில் பிரான்சு நாட்டின் வடபகுதிகளுக்குச் செல்லக்கூடிய இரயில் நிலையம் (Gare du Nord)இருக்கிறது- கண்ணன் மறுநாள் இலண்டன் செல்ல இந்த நிலையத்திற்குதான் போகவேண்டும். இப்பகுதி தமிழர் கடைகள் அதிகமாக குவிந்துள்ள இடம். தொடக்ககாலங்களில் இந்தியர் கடைகள் விரல் விட்டு எண்ணகூடிய அளவில் ஒன்றிரண்டு அங்கிருந்தன. பின்னர் இலங்கைத் தமிழர்கள் வரத்தொடங்கியபிறகு குறிப்பாக 90களில் புற்றீசல்கள்போல தமிழ்க்கடைகள் முளைத்தன. மளிகைக்கடைகள், குறுந்தட்டு, இசைதட்டு கடைகள், ஆடை ஆபரணக்கடைகள் எண்ணிக்கையில் அதிகமிருப்பினும், இவற்றுக்கிடையில் அறிவாலயம், தமிழாலயம் அத்தியும் பூத்திருக்கிறது. இரண்டும் பாரீஸிலிருக்கும் புத்தகக்கடைகள்.

ஐந்துமணிக்கெல்லாம் பெட்டியை இழுத்துக்கொண்டு அறிவாலயம் வந்துவிட்டேன். நண்பர் கண்ணனை அழைத்துக்கொண்டு பாண்டிச்சேரி ரெஸ்டாரெண்ட்டிற்குச் சென்று இருவருமாக தேனிர் அருந்தினோம். பாரீஸில் அவரது சந்திப்புகள் எப்படியிருந்தனவென கேட்டேன். பிரெஞ்சு பதிப்பாளர்கள் தமிழிலிருந்து படைப்புகளை பிரெஞ்சில் கொண்டுவர ஆர்வமாக இருப்பதாகவும் ஆனால் அக்காரியத்தை பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே செய்யவேண்டுமென்டுமென எதிர்பார்க்கிறார்களென்றார். “அவர்கள் சொல்வதும் நியாயமே நான் எந்தவொரு பிரெஞ்சுக்காரரும் தமிழில் செய்கிறேனென முன்வந்தால் ஏற்றுக்கொள்ளமாட்டேனென்று, பிரெஞ்சு பதிப்பாளர்களின் கூற்றை நியாயப்படுத்தவும் செய்தார்.

பாரீஸ் நகரில் தமிழ்வாணி என்கிற ஓர் அமைப்பை ஏற்படுத்தி வருடம்தோறும் உழைப்பையும் பணத்தையும் தனி ஒருவராக அளித்து இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் ஜெயராமன் என்ற நண்பர். எதிர்வரும் ஜூலைமாதம் தமிழிலக்கிய மாநாடு என்ற ஒன்றை கவிஞர் இந்திரனின் உதவியுடன் நடத்த இருக்கிறார்.  அவர் அவ்வபோது விழா தொடர்பான ஏற்பாடுகள் சிலவற்றை பகிர்ந்துகொள்ளவும் செய்கிறார். இவ்விடயத்தில் எனக்கு அதிக ஆர்வமில்லை என்பதற்குப் பலகாரணங்கள் இருக்கின்றன. எனினும் ஜெயராமனைப்போன்றவர்கள் பிழைப்புக்காக மொழியை கையில் எடுப்பவர்களல்ல, மொழியின் பிழைப்புக்காக தங்கள் கையிலிருப்பதை கொடுக்கிறவர்கள் என்ற வகையில் அவரை மதிக்கிறேன். இந்த நண்பர் ஜெயராமனும், வொரெயால் தமிழ்ச் சங்க தலைவரும் நண்பருமான இலங்கைவேந்தனும் காலச்சுவடு கண்ணனை சந்திக்க விரும்பினர். அறிமுகப்படுத்தினேன். கண்ணனிடம் நாளை சந்திப்பதாக கூறி விடைபெற்றுக்கொண்டு அன்றிரவு மகன் வீட்டில் சென்று தங்கினேன்.  23 -3-2012 காலை பிரான்சுவா மித்தரான் நூலகத்திற்கு சென்றுவிட்டு கண்ணனுடன் மதிய உணவிற்கு திட்டமிட்டிருந்தபடி பன்னிரண்டரைக்கெல்லாம் மீண்டும் அறிவாலயம் வந்துவிட்டேன். கண்ணன் தயவில் பாரீஸில் தீவிர இலக்கியசார்ந்து இயங்கவும், சிற்றிதழ்களை வாசிக்கவும் செய்கிற நண்பர்களை சந்திக்க முடிந்தது. மாலை நான்கு மணிவரை உரையாடிமுடித்து கண்ணனை அழைத்துக்கொண்டுபோய் இலண்டனுக்கு இரயிலேற்றிவிட்டு இரவு எட்டுமணிக்கு பாரீசில் வசிக்கும் மகன் வீடுதிரும்பினேன்.

24-3-2012 காலை மீண்டும் பிரான்சுவா மித்தரான் நூலகம் போகவேண்டியிருந்தது. மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருந்த பாதரெ பிமெண்ட்டா போர்ச்சுகீசிய மொழியில் எழுதிய நாட்குறிப்பின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு அங்கு கிடைத்தது. இந்நூல்நிலையம்பற்றி முடிந்தால் தனியாக ஒரு கட்டுரை எழுதவேண்டும். பிற்பகல் கைவசமிருந்த சாண்ட்விச்சை நூலகத்திலேயே முடித்துவிட்டு ஸ்ட்ராஸ்பூரிலிருந்து ரயிலில் வந்திருந்த மனைவியை எதிர்பார்த்து மீண்டும் பிற்பகல் Gare de l’est பின்னர் மகன் வீடென்றானது. 25.-3-2012 ஞாயிற்றுகிழமையும் 26 -3-2012 திங்கட்கிழமை நான்கு மணிவரை நடந்தவைக்கும் துருக்கி பயணத்திற்கும்(மீண்டும் ஒருமுறை பெட்டிகளை சரிபார்த்து சுமையைக் குறைத்து அவரவர் தேவைக்குரியவை இருக்கிறதாவென எனது மனைவி திருப்திபட்டதைத் தவிர்த்து)  பெரிதாய் சம்பந்தமில்லை. திங்கட்கிழமை மாலை நான்குமணிக்கு கால் மணி தூரத்திலிலிருந்த இரயில் நிலையத்திற்குச்சென்றோம்.  RER B வழித்தடமது. அங்கிருந்து Charles -De-Gaulle விமானதளத்திற்குச் செல்ல நாற்பது நிமிடம் தேவைப்படுகிறது விமான தளமென்றால் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். விமான தள வரியை இரயில் பயணச்சீட்டில் சேர்த்திருந்தார்கள். விமான பயணச்சீட்டில் ஏற்கனவே அவ்வரியை அதை செலுத்தியிருக்கிறபோது இரண்டாவது முறையாக இரயிலிலும் விமான தள வரியை கேட்பது நியாயமா என்று இரயில் பயணச்சீட்டு விற்பனைசெய்த பெண்மணியிடம் கேட்டேன். “சொல்வது நியாயம்தான், என்ன செய்வது உங்கள் கோரிக்கையை வருகிற அதிபராவது பரிசீலிக்கிறாராவென்று பார்ப்போம், என்றாள், அப்பெண்மணி. மறுபேச்சின்றி அவள் கொடுத்த பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு நாற்பது நிமிடத்திற்குப்பிறகு சார்ல் தெகோல் விமானநிலையத்தில் இரண்டாவ்து முனையத்தில் இறங்கிக்கொண்டோம்.

நாங்கள் செல்லவேண்டிய விமானம் மூன்றாவது முனையத்திலிருந்து புறப்படுகிறது. 200 அல்லது 300 மீட்டர் தூரம் பெட்டிகளை இழுத்துக்கொண்டு நடந்திருப்போமென நிற்கிறேன். மூன்றாவது முனையத்தை ஒட்டுமொத்தமாக சுற்றுலா அமைப்பாளர்கள் வசம் ஒப்படைத்திருந்தார்கள். சுற்றுலா நிறுவனங்களின் பெயர்களை வழி நெடுகிலும் பார்க்க முடிந்தது. எதிர்பட்ட தடுப்புகளையும் கணிணி விளம்பர பலகையும் கடந்துவந்து பார்த்தபோது நான்கு முனையங்களிலும், எங்களைப்போலவே துருக்கி சுற்றுலாவிற்கு பதிவுசெய்திருந்தவர்கள் எட்டுவரிசைகளில் காத்திருந்தார்கள். வரிசையில் எங்களுக்குப்பிறகு வந்து நின்ற மூவரும் அடுத்துவந்த நாட்களில் தொடர்ந்து நட்பு பாராட்டுவார்களென தோன்றவில்லை. நாங்கள் பயணம் செய்த தருணம் பிரான்சில் அதிபர் தேர்தல் பிரச்சாரம் உச்சத்திலிருந்த நேரம், தீவிரவாத தாக்குதலில் நான்கு ராணுவீரர்களும், பள்ளி மாணவர்களும் சுடப்பட்டிருந்தனர்.  பாதுகாப்பு கெடுபிடி வழக்கத்தைக்காட்டிலும் அதிகமாக இருந்தது. அன்று வரிசையிலிருந்த பயணிகளில் ஒரு ஆப்ரிக்க குடும்பத்தை அடுத்து நானும் எனது மனைவியும் நிறத்தால் வேறுபட்டவர்கள். ஆப்ரிக்க மக்களுக்கும் சப்பை மூக்கு சீனருக்கும் பிரச்சினையில்லை. ஆனால் இந்தியத் துணைக்கண்டமென்றால் பிரச்சினை கூடைகூடையாக  வரும், அன்றும் வந்தது. நம்முடைய முகங்களில் அப்படியென்ன எழுதப்பட்டிருக்கிறதோ. விதிமுறைகளை நமக்கென்றால் கூடுதலாக எழுதிவைத்திருப்பார்களென நினைக்கிறேன். ஆனானப்பட்ட அப்துல் கலாம், ஷாருக்கான் போன்றவர்களுக்கே சனிதிசை என்கிறபொழுது நம்மைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது. படுக்கவைத்து ஸ்கேனின் வருடலுக்கு அனுப்பவில்லையே தவிர மற்ற சடங்குகளெல்லாம் நடந்தேறியது.

விமானம் புறப்படும்போது இரவு 10.30.மணி. விமானத்தில் சேவை குறித்த பெரிய எதிர்பார்ப்புகள் வேண்டாமென மகனும் மருமகளும் எச்சரித்திருந்தார்கள். விமானம் புறப்பட்டு பறந்துகொண்டிருந்த நேரத்தில், சேவையென்று தொடங்கியதுமே தள்ளுவண்டியில் கொண்டுவந்த பானங்களையும் கொறிப்பான்களையும் பயணிகளிடம் விற்பதில் ஆர்வமாக இருந்தார்கள். அதிபர்களுக்கு அரசாங்கத்தின் கஜானா இருக்கிறது, இந்திய அதிபரெனில் உற்றார் உறவினர் பேரன் பேத்திகளுக்கெல்லாங்கூட மக்கள் வரிப்பணம் உதவக்கூடும். நாம் அப்படியா எண்ணிபார்த்துதான் செலவிடவேண்டியிருக்கிறது.  இரவு உணவென்று எதுவும் விமானத்தில் கிடைக்காதென்கிற ஐயம் எங்களுடன் பயணம்செய்த பலருக்கும் இருந்திருக்கும்மென நினைக்கிறேன். ஒவ்வொரு பயணியும் ஐந்து யூரோவாவது செலவிட்டிருப்பார்கள். தோராயமாக  900 யூரோ சுற்றுலா ஏற்பாட்டாளருக்கு கிடைத்திருக்குமென மன ஸ்லேட்டில் கணக்கைப் போட்டேன். . எங்களை சமாதானப்படுத்தவென்று இரவு பதினொன்றரை மணியளவில் (உறங்கியவர்களை எழுப்பி) சாண்ட்விச் கொடுத்தார்கள். நள்ளிரவு ஒரு மணி அளவில் மத்திய தரைகடலில் உள்ள அண்ட்டல்யா துறைமுகத்தை நெருங்கும்போது வானிலிருந்து பார்க்க லாஸ்வேகாஸ் நினைவுக்கு வந்தது. முழுமுழுக்க சுற்றுலாவாசிகளை நம்பி அண்டல்யாவின் தற்போதைய பொருளாதாரம் இருப்பதாக அறிந்தேன். விமானத்தை விட்டு வெளியே வந்ததும் பயண ஏற்பாட்டாளர் எங்களுரிய பேருந்துக்கு அழைத்து போனார். 30 சுற்றுலாபயணிகளுக்கு ஒரு பேருந்தென ஒதுக்கியிருந்தார்கள்.  பேருந்தில் அமர்ந்ததும் வழிகாட்டி தம்மையும் பேருந்து ஓட்டுனரையும் அறிமுகப்படுத்திக்கொண்டார். நிகழ்ச்சியில் சிறிய மாற்றம் நாளைக்கு கல்வடோஸ் பயணிப்பதற்கு பதிலாக இறுதிநாள் நிகழ்வை வைத்துக்கொள்ளலாமா என்றார். ஏற்கனவே அவர்கள் தீர்மானித்திருந்ததை தகவலுக்காக தெரிவிப்பவர்போல பேசினார். எனினும் வழிகாட்டிகளுக்கே உரிய நாவன்மை அவரிடமிருந்தது. பிரெஞ்சுமொழியை மிக நன்றாக பேசினார். எங்களுக்காகாவே துருக்கியில் பிறந்து பிரெஞ்சு மொழி பயின்று வழிகாட்டி தொழிலுக்கு வந்ததுபோல இருந்தது ஆசாமின் பேச்சு. 30நிமிட பயணத்தில் எங்கள் ஓட்டல் வந்தது. ஓட்டலைப்பற்றி எந்தகுறையும் சொல்வதற்கில்லை. முதல் நாள் ஆரம்பித்து இறுதிநாள்வரை ஓட்டல், உணவு பயணம் அனைத்தும் இனிமையாகவே கழிந்தது. உங்களோடு பகிர்ந்துகொள்வதற்கு துருக்கியில் வேறு அனுபவங்கள் இருக்கின்றன, சொல்கிறேன்.

(தொடரும்)

பிரான்சு நாட்டின் அதிபர் தேர்தலும் மாப்பசானும்

மாப்பசான் கதைகளில் மொரென் என்பவனின் கதை சுவாரசியமானது. இந்த மொரென் நடுத்தர வயது வியாபாரி தையற் தொழிலுக்கு வேண்டிய பொருள்களையும் உபகரணங்களையும் விற்பது தொழில். கடைக்கு சரக்கு பிடிப்பதற்காக பாரீஸ¤க்குச் செல்லவேண்டும். உண்மையில் பாரீஸ¤க்கு செல்வதற்கெனவே கடைக்குச் சரக்குகள் பிடிக்க என்ற காரணத்தைக் கண்டுபிடிக்கிறார். வெளி மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு பாரீஸ் நகரத்தில் பதினைந்துநாள் தங்குவதற்கான வாய்ப்பெனில் சொர்க்கத்தை திறந்துவைத்திருப்பதுபோல, அதிலும் எத்தனைவிதமான பெண்கள்: இறுக்கமான உடையணிந்த நாட்டியக்காரிகள், திறந்த மார்புடன் வலம்வரும் நடிகைகள்; அழகிய கால்களுக்குச் சொந்தக்காரிகள், என மாப்பசான் நீளமாக எழுதிக்கொண்டுபோகிறார். கொஞ்சம் தில்லுள்ள ஆசாமியெனில் தொட்டுப்பார்க்கலாம் என்பதுபோல கைக்கெட்டும் தூரத்தில் கிடைப்பார்கள்.  ஆக பாரிஸ¤க்கு இரயில் பிடித்தபோது எல்லா மனிதர்களையும்போல நம்ம ஆசாமிக்கும் அப்படி இப்படியென்கிற கொஞ்சம் சபலமிருந்ததில் தவறில்லை, ஆனால் சாமர்த்தியம்தான் போதுமானதாக இல்லை. யாரிடம் தமது சரக்கு விலைபோகுமென முகம்பார்த்து தமது வாடிக்கையாளரை அடையாளப்படுத்தத் தெரிந்தவர், உடன் ரயிலில்வந்த பெண்ணைப் புரிந்துகொள்ள தவறிவிட்டார். போதாதற்கு அவரது அசட்டுத்தனமும் தோற்றமும் கூடுதலாக துரோகமிழைக்கின்றன. ஆமாம் இரயிலில் ஓர் இரவுமுழுக்க பெண்ணொருத்தியுடன் பயணம் செய்கிற மொரென், இப்பபடி யொரு வாய்ப்புகிடைத்தும் தவறவிட்டால் தம்மைவிட ஓர் அசடனிருக்கமுடியாது என்று முடிவெடுத்து ஒரு வேகத்தில் அவளைக் கட்டி அணைத்து முத்தமிட்டுவிடுகிறார். காமம் சிலநேரங்களில் இப்படித்தான் வாழ்க்கையையே திசைதிருப்பிவிடும். இவரது எல்லைமீறல் காவல் துறையின் தலையீடு, வழக்குப்பதிவு என்று நீள, வீடு திரும்பினால் ஏற்கனவே ஒன்றுமில்லாத விஷயத்திற்கெல்லாம் ஆர்ப்பரிக்கிற இவரது மனைவி பத்ரகாளியாக மாறியிருப்பாள். வெளியில் தலைகாட்ட முடியாத நிலை. காலில் விழாத குறையாக தமது பத்திரிகையாள நண்பனை பெண்ணின் குடும்பத்திடம் தூது அனுப்பி வழக்கை வாபஸ் பெற வைக்கிறார். அதற்கு அவர் கொடுத்த விலை வாழ்நாள் சேமிப்பு. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொரென் இறக்கவும் செய்கிறார். தூதுபோன பத்திரிகையாளன் வேறுரகம்.  தந்திரப்பேச்சால் அப் பெண்ணோடு படுக்கையைப் பகிர்ந்து கொள்ளவும் எதிர்காலத்தில் அவள் உதவியால் அரசியல் படிக்கட்டுகளைத் இரண்டிரண்டாக தாவிச்செல்லவும் அவனுக்கு முடிகிறது. ஆக இருவேறுமானிதர்கள் இருவேறு அணுகுமுறைகள், இருவேறு முடிவுகள். இடறிவிழுந்தால் அதுவும் ஒரு வித்தையென்று சொல்லத்தெரியாதவர்கள் எங்கேயும் ஜெயிப்பதில்லை. டொமினிக் ஸ்ட் ரோஸ்கான் முன்னாள் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைவர், நடக்கவிருக்கும் பிரான்சு அதிபர் தேர்தலில் நின்று ஜெயித்து அதிபராகியிருக்க வேண்டியவர்.  சோஷலிஸ்டுகட்சியின் அதிகார பூர்வமான அதிபர் வேட்பாளாராக தம்மை அறிவித்துக்கொள்ள பாரீஸ¤க்கு திரும்ப இருந்த அன்று நியூயார்க்கில் ஒரு நட்சத்திர ஓட்டலில் பணிப்பெண்ணிடம் பாலியல்வன்முறையில் இறங்கியதற்காக கைதுசெய்யப்பட்டார்.  பின்னர் அக்குற்றத்தித்திலிருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பினும், ஆசாமியின் அன்றையதின அத்துமீறலை யாரும் மறுக்கவில்லை. காத்திருந்ததுபோல அடுத்தடுத்து அவர்மீது பாலியல் குற்றசாட்டுகள். அரசியல் எதிரிகளின் சூட்சியென்ற வதந்தியும் உண்டு. ஆசாமிக்குப் பெண்களிடத்திலுள்ள பலவீனத்தை அறியவந்த உலகம் வதந்திகளை கணக்கில் கொள்ளவில்லை. மாப்பசானின் கதைநாயகன் மொரென் மனைவிக்கு மாறாக சீண்டுவாரின்றி தனித்திருக்கும் இந்த சோஷலிஸ்டுகட்சியின் பிரமுகருக்குள்ள ஒரே ஆதரவு பத்திரிகையாளரான அவரது மனைவிதான். இந்த டொமினிக் ஸ்ட்ரோஸ்கான் இடத்தில் மாற்றுவேட்பாளாக சோஷலிஸ்டு கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் பிரான்சுவா ஹொலந்து அடுத்த அதிபர் என்பதாகக் தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் சொல்கின்றன. இப்பத்தியை நான் எழுதுகிறபோது பிரான்சு நாட்டின் அதிபர் தேர்தல் முடிந்திருக்கவில்லை.

 

இரண்டு சுற்றுகளாக நடைபெறுகின்ற பிரெஞ்சு அதிபர் தேர்தலின் முதல் சுற்று ஏப்ரல் 22 நடைபெறும். முதல் சுற்றில் களத்தில் பத்து வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் முதல் இரண்டு இடங்களைப்பிடிக்கிற வேட்பாளர்களுக்கிடையே இரண்டாவது சுற்று தேர்தல் இருக்கிறது. நடைபெறும் தேதி மே 6. அன்றிரவே பிரான்சின் புதிய அதிபர் யாரென்று தெரிந்துவிடும். 1965லிருந்து இந்திய அதிபர் போலன்றி பிரெஞ்சு அதிபர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இரண்டு சுற்றுகளாக தேர்தல் நடைபெறுகிறது. எழு ஆண்டுகளாகவிருந்த பிரெஞ்சு அதிபரின் பதவிக்காலம்  கடந்த 2000த்திலிருந்து ஐந்தாண்டுகள். பிரான்சுநாட்டில் பொதுவான கட்சிகளை தீவிர இடதுசாரிகள், இடதுசாரிகள், நடுவர்கள், வலதுசாரிகள், தீவிர வலதுசாரிகள் என்று பிரித்துவிடலாம். இப்பிரிவினை கூட முதல் சுற்றில்தான். இரண்டாம் சுற்றில் வலதுசாரி கட்சியான UMPயின் வேட்பாளர் நிக்கோலா சர்க்கோஸிக்கும் இடதுசாரி கட்சியான சோஷலிஸ்டு வேட்பாளர் பிராசுவா ஹொலந்துக்கும் நேரடி போட்டியாக இருக்கும்.  ஆளுங்கட்சி சார்பில் போட்டியிடும் சர்க்கோஸி இரண்டாம் முறையாக போட்டியிடுகிறார். தம்மால் மட்டுமே நாட்டினை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க முடியுமென்கிறார். துணிச்சலான ஆசாமியென பெயரெடுத்தவர். ஆனால் பெருவாரியான மக்களின் வெறுப்பினை சம்பாதித்துக்கொண்டிருப்பவர். தீவிர வலதுசாரிகளின் ஓட்டுகளுக்காக அவர் வெளிநாட்டினர்மீது காட்டும் வெறுப்பு, சென்ற தேரதலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, கராச்சி நீர்மூழ்கி கப்பல் ஊழல், இறுதியாக வழக்கம்போல அதிகாரத்திலுள்ளவர்களுக்கு எதிரான மக்கள் மனநிலை இவருக்குப் பாதகமாக உள்ள காரணிகள். இவருக்கு எதிராக இடதுசாரிக கட்சிகளில் சோஷலிஸ்டு கட்சியின் வேட்பாளர் பிரான்சுவா ஹொலாந்து என்பவர் நிற்கிறார். இவரிடமுள்ள குறைபாடுகள், அனுபவமின்மை, மெத்தனம், துணிச்சல் போதாது போன்ற குற்றசாட்டுகள். கருத்துக்கணிப்புகள் அனைத்தும் சோஷலிஸ்டு வேட்பாளருக்கே சாதகமாக உள்ளன. கருத்து கணிப்பு உண்மையாக இருப்பின் அவரை பற்றி அடுத்தமாதம் எழுதுகிறேன்.

இசைவானதொரு இந்தியப்பயணம்-15

பிப்ரவரி-15

முதல்நாள் பலமுறை எழுத்தாளர் சின்னப்ப பாரதியின் நண்பர் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தொலைபேசியில் அழைத்திருந்தார். ஜவஹர்லால் நேரு பல்கலைகழக ஆய்வு மாணவர் ஜெகதீசனும் அழைத்திருந்தார். பதினைந்தாம் தேதியன்று தில்லி பல்கலைகழகத்தில் பல்வேறு மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதில் ஆர்வமும் அத்துறையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வும் மேற்கொண்டிருக்கும் மாணவர்களுடன் ஓரு கலந்துரையாடலையும்  தில்லி பல்கலைகழக தமிழ்துறை ஏற்பாடு செய்திருந்தது.

காலை பத்துமணி அளவில் ஜெகதீசன் வாகனத்துடன் வந்திருந்தார். அவ்வாகனத்திலேயே தில்லி
பல்கலைகழகத்திற்கு சென்றோம். என்னுடன் பிரெஞ்சு நண்பர் சவியெ தெபெல், புதுச்சேரி காஞ்சிமாமுனி பட்டமேற்படிப்பு கல்லூரியின் பிரெஞ்சு பேராசிரியர் நாயகர் வந்திருந்தனர். தில்லி பல்கலைகழக தமிழ்துறை தலைவர் பேராசிரியர் நாச்சிமுத்து, உடன் பணியாற்றும் பேராசிரியர் சந்திரசேகரன் ஆகியோருடனான சந்திப்புகள் எதிர்பாராதது. பேராசியர் நாச்சிமுத்தையும் சந்திசேகரனையும் பற்றி எழுதும் முன்பாக, தமிழ் பேராசிரியர்களை எனது பார்வைவரம்பிற்குள் மூன்று இனமாக தென்படுகின்றனர் என்பதைச் சுருக்கமாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

அ. தமிழின் தொன்ம இலக்கியங்களில் உண்மையாக ஆர்வமுற்று, தங்கள் நுண்மான் நுழைபுலத்தை அதற்கெனவே அளித்து கண்துஞ்சாமல் ஆரவாரமின்றி தமிழுக்காக உழைப்பவர்கள் முதல்வகை.

ஆ. இரண்டாம்வகையினரின் தொன்ம இலக்கியபற்றுதலை குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது. அதேநேரம்  இவர்கள், தமிழென்பது தொன்மம் நவீனம் இரண்டும் சார்ந்ததென்ற கருத்தியத்தின் உடமையாளர்கள்.

இ. இம்மூன்றாம் வகையினர், அசப்பில் முதலாம் வகையினரைப்போல தோற்றம்கொண்டவர்கள். பழகினால் வெகு எளிதில் பித்தளையென தெரியவரும். இவர்களைத் தமிழ்க்கூத்தர்கள் எனலாம். கிராமங்களில் நடக்கும் தெருகூத்துகளில் வருகிற ராஜாக்கள் இவர்கள். கட்டியக்காரனிடம், அவனி அம்பத்தாறு ராஜாக்களும் எனது திருமுகம் காணவந்திருக்கிறார்கள்வென கேட்கும் கூட்டம்.

மூன்றாவது கூட்டத்தை நான் மதிப்பதில்லை, முதலாவது அணியினரிடம் தொடர்புகளில்லை.  எனக்கு விருப்பமான தமிழ் பேராசியர்கள் இரண்டாவது இனம். தொன்மம், நவீனம் இரண்டிற்கும் பாலமாக இருப்பவர்கள். இவர்களைப்போன்றவர்களிடம் பயிலும் மாணவர்களே எதிர்கால தமிழின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்களென்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. இவர்களுடைய தமிழ்தேசிய உணர்வு பொருளுடையது. கணத்தில் நினைவைத் தட்டுகிற பெயர்கள் ம.லெ. தங்கப்பா, தமிழவன் ஆகியோர். அண்மையில் தில்லியில் சந்திக்க நேர்ந்த பேராசிரியர்கள் நாச்சிமுத்து, சந்திரசேகரன் ஆகியோரும் இப்பட்டியலுக்குள் வருகின்றனர்.

பேராசிரியர் நாச்சிமுத்தும் சந்திரசேகரனும் நவீன இலக்கியவாதிகளை போற்றுகிறவர்கள். இன்றைய படைப்புகள் பலவற்றை உடனுக்குடன் வாசிக்கிறார்கள் என்பதை அவர்களோடு அளவளாவி புரிந்துகொண்டேன். அண்மையில் நாஞ்சில் நாடன் குறிப்பிட்டதுபோன்றே தமிழில் ஏராளமாக சொற்கள் இருந்தும் இன்றைய எழுத்தாளர்கள் அதை பயன்படுத்துவதில்லையேவென்ற தங்கள் ஆதங்கத்தை வெளிபடுத்தினார்கள்; தமிழல்லாத பிறசொற்களை நீங்கள் தவிர்க்கவேண்டுமென வற்புறுத்தினார்கள். ‘என்ன செய்வது எங்களால் முடிந்தது அது, நிறைய சொற்கள் தெரிந்த நீங்கள் எழுதமாட்டேனென இருக்கிறீர்களே’ எனக் கூறியபோது, பேராசிரியர் நாச்சிமுத்து முகத்தில் எவ்வித மாற்றமில்லை. அதைச்சிரித்துக்கொண்டே தலையாட்டிவிட்டு உரையாடலைத் தொடர்ந்தார். அவரது கருத்து நியாயமானதென்பதை பிற்பாடு உணர்ந்தேன். நாஞ்சில் நாடன் துபாயில் தெரிவித்திருந்த கருத்தும் அதை ஒட்டியே இருந்தது. ஒரு மூத்த பேராசிரியர் -நவீன இலக்கியத்தில் பற்றுதலுள்ள ஒருவர் அக்கறையுடன் சுட்டிக்காட்டிய இக்குறையை முடிந்த அளவு தவிர்க்கவேண்டுமென அன்று சபதமெடுத்துக்கொண்டேன்.

காலைமுடியும் தருவாயில் நடந்தேறிய கலந்துரையாடலில் தமிழ் மொழிபெயர்ப்பில் அக்கறைகொண்ட மாணவர்கள், பேராசிரியர் நாச்சிமுத்து, பேராசிரியர் சந்திரசேகரன்,  நாயகர், நான், நண்பர் தெபெல் ஆகியோர்கலந்துகொண்டோம். அன்றைக்கு எனக்கு மகிழ்ச்சி அளித்த சம்பவம் பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் சம்பந்தமாக நூல்களை ஆய்வுசெய்திருந்த மாணவர் ஜெகதீசன் எனது படைப்புகளையும் மையப்பொருளாக  எடுத்துக்கொண்டு ஆய்வு செய்திருக்கிறாரென்ற செய்தி.

உரையாடலில் மொழி பெயர்ப்புதொடர்பான எனது பார்வைகள், அனுபவங்கள் கையாளும் முறைகளென்கிற  கேள்விகளுக்கு பதிலளித்தேன். உடன் வந்திருந்த பிரெஞ்சு நண்பர் கவிதையொன்றை அண்மையில் மொழிபெயர்த்திருந்தேன் நான் மொழிபெயர்த்திருந்த கவிதை அவரது கவிதையோடு பொருந்துகிறதா எனத் தெரிந்துகொள்ளவிரும்பியவர்கள்போல அவரிடம் பேராசிரியர்கள் இருவரும் தமிழில் கேட்ட கேள்விகளுக்கு  தமது கவிதை உருவான சூழல், அக்கவிதை இடம்பெறும் கிராமப்புறம், தமது இறை நம்பிக்கை என்று விளக்கமளித்தார்.  ஒருகட்டத்தில் என்னை சோதனைபோடுவதுபோல அவர்கள் வினாக்களிருந்தன, நானும் எரிச்சலுற்றேன் என்பதை மறுக்கவில்லை. நண்பர் சவியேவிற்கு தமது கவிதைபற்றி இத்தனை அக்கறையெடுத்து விளக்கமளிக்க சொல்கிறார்களே என்ற மகிழ்ச்சி. பிறகு நாயக்கரும் மொழிபெயர்ப்பாளரென்ற வகையில் தமது அனுபங்களை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் பல்கலைகழக உணவு விடுதிக்குச்சென்றோம். அங்கே பிரெஞ்சுதுறை பேராசிரியர் அஜித் என்பவர் அறிமுகம் கிடைத்தது. பரமக்குடிகாரரான இவரொரு தி.க விசுவாசி. ஒரு மொழிபெயர்ப்பு நூலையும் கொடுத்தார். பொதுவான கருத்துகளை பகிர்ந்துகொண்டு வெளியில் வந்தபோது மணி 3 ஆனது. ஏற்கனவே எடுத்திருந்த வாகனம் சிறியதாக இருந்ததால் மூவரின் பெட்டிகளை வைக்க போதாதென்று தீர்மானித்து வேறுவாகனத்தை கொண்டுவர பேராசிரியர் சந்திரசேகரன் ஏற்பாடு செய்தார். பேராசிரியர் சந்திசேகரனிடம் விடைபெறுகிறபோது ‘சரித்திர சறுக்கல்கள்’ என்ற கவிதைத் தொகுப்பை பரிசாக அளித்தார். படித்துபார்த்தேன் நல்ல பல கவிதைகள் தொகுப்பில் இருக்கின்றன. பின்னர் ஒருமுறை அவற்றைகுறித்து எழுதுகிறேன். பல்கலைகழக நண்பர்கள் சற்று பெரியதொரு வாகனத்தை இம்முறை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  அங்கிருந்து விடைபெற்று வாகனத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் புதுச்சேரி அரசாங்கத்தின் விருந்தினர் மாளிகைக்குச் சென்று பெட்டிகளை எடுத்துக்கொண்டு பிரெஞ்சு தூதரகத்தில் திருமதி ஜூடித் ஒரியோல் என்பருடனான எங்கள் சந்திப்பை முடித்துக்கொண்டு அங்கிருந்து நேராக தில்லி தமிழ்ச்சங்கம் காவற்கோட்டம் நாவலுக்கு சாகித்ய அகாதமியின் பரிசினினை வென்றிருந்த சு. வெங்கிடேசனுக்கு பாராட்டுவிழா என்றார்கள் அதையும் முடித்துவிட்டு  விமானநிலையம் செல்லத் திட்டம்.

13ந்தேதி அன்று பிரெஞ்சு தூதரகத்திற்கு அல்லியான்ஸ் பிரான்ஸேஸ் முகவரி தேடி சென்றிருந்ததால் மீண்டும் தூதரகத்தைக் கண்டுபிடிப்பதில் சிரமங்களில்லை. ஆனால் தூதரகத்திற்கு சென்று அலுவலக காவலதிகாரிகளை விசாரித்தபோதுதான் திருமதி ஜூடித் அலுவலகம் ஔவரங்கசீப் சாலையில் இருக்கிறதென தெரியவந்தது.  தூதரக கலைபண்பாட்டுத் துறை அதிகாரி திருமதி ஜூடித் ஒரியோலிடம் பிரான்சிலிருக்கிறபோதே  சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கச்சொல்லி கேட்டிருந்தேன். பிற்பகல் மூன்றரை மணி அளவில் தூதரகத்தில் அவரது அலுபலகத்தில் சுருக்கமான எங்கள் அறிமுகத்திற்குப் பிறகு பிரச்சினைகள் குறித்து பேசபட்டன. பிரெஞ்சு நூல்களை மொழிபெயர்ப்பு சம்பந்தமாக தாம் உதவ முடியுமெனவும், தமிழிலிருந்து பிரெஞ்சில்கொண்டுபோக தம்மால் எதுவும் செய்யலாகாதெனவும் தெரிவித்தார். உண்மையில் தில்லி பிரெஞ்சு தூதரக அதிகாரியின் சந்திப்பில் பெரிய பயன்பாடுகளென்று எதுவுமில்லை.

தில்லி அல்லியான்ஸ் பிரான்சேஸ் இயக்குனரை முடிந்தால் சந்திக்கலாமென்பது  எனது பிரெஞ்சு நண்பர் தெபெல்லின் விருப்பம். 13ந்தேதி தில்லியில் காந்தி சமாதியை பார்த்துமுடித்துவிட்டு சாந்தி பாத்திலிருந்த பிரெஞ்சு தூதரகத்தில் முகவரியை வாங்கிக்கொண்டு லோடிஎஸ்டேட்டிலிருந்த  அல்லியான்ஸ் பிரான்சேஸை தேடிப்போனபோதுதான்  தில்லியில் இஸ்ரேலிய தூதரக அதிகாரி ஒருவர்மீது தாக்குதல் நடத்தியிருக்கக் கண்டோம். இரவு தொலைகாட்சி செய்தியை பார்த்தபோதுதான் நடந்த விபரீதத்தை விளங்கிக்கொள்ள முடிந்தது. அன்றைய தினம் சம்பவத்தின் வீச்சை முழுமையாக உணரத் தவறியதாலோ என்னவோ அதை 13ந்தேதி நிகழ்வில் பதிவு செய்யவும் தவறியிருக்கிறேன்.

தில்லி அல்லியான்ஸ் பிரான்சேய்ஸ்லிருந்து தில்லி தமிழ்ச்சங்கம், காவற்கோட்டம் சு.தமிழ்செல்வனுக்கு சாகித்ய அகாதமி பரிசினை வென்றமைக்காக ஏற்பாடு செய்திருந்த விழாவிற்கு நண்பர்கள் அனைவரும் சென்றோம். அங்கே வடக்கு வாசல் ஆசிரியர் நண்பர் பென்னேஸ்வரனை சந்தித்தேன்.  நண்பர் பி.எ.கிருஷ்னனும் வந்திருந்தார். அவரோடு உரையாட நிகழ்ச்சி வாய்ப்பு ஏற்படுத்தித் தந்ததென சொல்லவேண்டும். நிகழ்ச்சி முடியுமுன்பே புறப்பட்டு அருகிலிருந்த தமிழர் ஒருவர் நடத்திய மெஸ்சில் தட்டைக் கையில் ஏந்தியபடி  இரவு உணவை முடித்துக்கொண்டு விமானதளத்திற்கு வந்தோம். நண்பர் நாயகரும் ஜெகதீசனும் என்னையும் எனது பிரெஞ்சு நண்பரையும் விமான தளத்தில் இறக்கியபின் புறப்பட்டு சென்றார்கள். புதுதில்லி பயணம் நன்கமைந்ததற்கு நாயகருக்கு நன்றி சொல்லவேண்டும் அவர் இல்லையென்றால் பயணம் சோர்வைத் தந்திருக்கலாம். தில்லி பயணத்தில் தம்பி ஜெகதீசனின் பங்கையும் அவரை அறிமுகப்படுத்தி உதவவைத்த பேராசிரியர்கள் சந்திரசேகர், நாச்சிமுத்து ஆகியோரையும் அவர்களைசந்திக்க காரணமாகவிருந்த பேராசிரியர் பாலசுப்பிரமணியையும், எழுத்தாளர் கு. சின்னபாரதியையும் மறக்கவியலாது.
————————————–

Chassé-Croisé:France-Inde

அன்புடையீர்,

 ஏற்கனவே தங்களுக்கு எழுதியதுபோன்று இந்திய நவீன இலக்கியத்தை குறிப்பாக தமிழ்படைப்புகளை பிரெஞ்சு மட்டுமே அறிந்த நண்பர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டுமென்ற வகையிலும், எதிர்காலத்தில் இயலுமாயின் சிறந்த சில படைப்புகளை பிரெஞ்சுமொழியில் கொண்டுவரவேண்டுமென்ற ஆதங்கத்துடன் ஒரு பிரெஞ்சு வலைத்தளத்தை: http://franceindechassecroise.wordpress.com நண்பர் பாவண்ணன் சிறுகதையுடன் தொடங்கியுள்ளோம். மொழிபெயர்ப்பு செய்தவர் நண்பரும் பேராசிரியருமான வேங்கட சுப்புராய நாயக்கர். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் புதுச்சேரியில் தெரிவித்த யோசனையின் படி மாதம் ஒரு சிறுகதையை எழுத்தாளர்கள் சம்மதத்துடன் வெளியிடுவதென்று திட்டம். இறுதியில் அத்தொகுப்பை பிரெஞ்சு பதிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம். பதிப்பிக்கும் முடிவு அவர்கள் விருப்பத்தைச் சார்ந்தது:

 எனது அமைப்பு மூலம் தொகுப்பை வெளியிட இயலாது. இந்தியப்புத்தகங்களை வெளியிட பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்கவேண்டாமென அவர்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். சொந்தமாக வெளியிட நிதி ஆதாரமில்லை. தவிர அப்படி வெளியிட்டாலும் நண்பர்களுக்கு இலவசாமக கொடுப்பதன்றி வேறு பயன்களை எதிர்பார்க்கமுடியாது. எனவே பிரெஞ்சு பதிப்புலகத்தையன்றி வேறு உருப்படியான வழிகள் தற்போதைக்கு இல்லை.

 அவர்களும் தேர்விற்கும்:சில தகுதிகளை நிர்ணயித்திருக்கிறார்கள்.

 – பிற நாடுகளைபோலன்றி மொழிபெயர்ப்பாளர்கள் தாய்மொழி பிரெஞ்சாக இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.

-, உலகின் பிற பகுதிகளைப்போலவே மொழி பெயர்ப்பு தேர்வுக்குழுவினரின் எதிர்பார்ப்புக்கு உகந்ததாக இருக்கவேண்டும்.

 இவ்வ்வளவு சிக்கல்கள் இருக்கிறபொழுது எதற்காக செய்கிறேனென  நீங்கள் முனுமுனுப்பதும் காதில் விழுகிறது.

 வாழ்க்கைப்பயணத்தை உழைப்பும் நம்பிக்கையுமென்ற இருகால்களைக்கொண்டே தொடங்கியவன். பாவண்ணன் சிறுகதை மரம் வளர்ப்பதை பற்றி பேசுகிறது. மரம் நட்டவர்களெல்லாம் நடுமுன் யோசித்திருந்தால் நிழல் என்ற சொல்லே இல்லாதொழிந்திருக்கும். ஒன்றிரண்டாவது துளிர்க்குமென நம்பியே நடுவோம்.

 எனது வாடா நம்பிக்கையேகூட   ‘உலகமே நம்பிக்கைகொண்டோரால் உயிர்த்திருக்கிறது’ என்பதுதான்.

 மீண்டும் தங்கள் கவனத்திற்காக: http://franceindechassecroise.wordpress.com

 நா.கிருஷ்ணா