Monthly Archives: பிப்ரவரி 2017

பிரான்சு நாடு நிஜமும் நிழலும் -II :

கலையும் இலக்கியமும்

கலையும் இலக்கியமும் ஓர் இனத்தின் கல்வியறிவு, சிந்தனை, பண்பாடு சார்ந்த விடயம். இன்பத்தை உடல்சார்ந்த உயிர்சார்ந்தெனப் பிரித்து வகைப்படுத்த முடியுமெனில் கலையும் இலக்கியமும்  உயிர்சார்ந்தவை. மனித உயிர்களுக்கென்று வாய்த்த பிற உயிர்களுக்கு அமையாத அனுபவம். மனிதன் மட்டுமே தான் என்னவாக பிறந்தானோ, அல்லது என்னவாக இருக்கிறானோ  அப்படி இருக்கமுடியாதென மறுக்கக்கூடிய உயிரி.  அம்மறுப்பை கலை இலக்கிய வழிமுறைகளால் வெளிப்படுத்துவதென்பது ஒர் உபாயம் அல்லது உத்தி. வாழ்வின் நோக்கம் உண்பதும் உறங்குவதும், இனவிருத்தியோடு திருப்தியடைவதும் என முடித்துக்கொள்கிற  விலங்குகள்போலன்றி , அதற்கும் அப்பால் என்பதை உணர்ந்த மனித ஆற்றலின் வெளிப்பாடு. என்னவாக இருக்கிறோமோ, என்னவாக காண்கிறோமோ அந்த இயற்கை உண்மையை, இயல்பு நிலையை  அவன்  விரும்பும் வகையில், சகமனிதனின் ஒப்புதல் வேண்டி திருத்த முற்படுவதுதான் கலையும் இலக்கியமும்.   அவை  ஆன்மாவின் பலம், அறிவின் பலம்.

கலை இலக்கிய படைப்பாளிகள் ஐயன் வள்ளுவன் கூறுவதைப்போல  அவைக்கு அஞ்சாதோர், சொல்லின் தொகையறிந்த தூய்மையவர்.   « கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும், வேட்ப மொழிவதாம் சொல் » என்ற இலக்கணத்திற்குப் பொருந்த தொழில்படுபவர்கள். மனித  வாழ்க்கையின் மகிழ்ச்சிகள், அவலங்கள், மேடு பள்ளங்கள், குறைநிறைகள், அழகுகள், கோரங்கள் ஆகியவற்றை கலைபடுத்தும் வல்லுனர்கள்.. தன்னுடைய சொந்த அல்லது தான் சாட்சியாகவிருந்த சகமனிதரின் வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்துதலும், அதேவேளை அவ்வனுபவம் எவ்வகையில் தனித்துவம்பெறுகிறதென்பதை என்பித்தலும் கலை இலக்கியவாதிகளின் கடப்பாடு.

 

எனவேதான் ஒருநாட்டைக்குறித்து, ஓர் இனத்தைக் குறித்து விவாதிக்கிறபோது இலக்கியமென்கிற எடைக்கல்லையும் தராசையும் கையிலெடுப்பது தவிர்க்க முடியாததாகிறது.  பிரெஞ்சு,  தமிழ்போல கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்தகுடிகளின் மொழியல்ல. இலத்தீன் மொழியிலிருந்து திரிந்த அடித்தட்டு மக்கள் மொழியாக , கீழ்மக்கள் மொழியாகத்தான் தொடக்க காலத்தில் இருந்தது.  பதின்மூன்று பதினான்காம் நூற்றாண்டுகளில்தான் தன்னை இன்னாரென்று உணர்ந்துகொண்ட மொழி.   இருந்தும்,  உலகின் முக்கிய மொழிகளில் இன்றைக்கு பிரெஞ்சும் ஒன்று. பிரான்சு நாட்டில் மட்டுமின்றி பெல்ஜியம், கனடா, லக்ஸம்பர்க், சுவிட்ஸர்லாந்து, தவிர உலகில் 51 நாடுகளில் வழக்கிலுள்ள  மொழி, குறிப்பாக ஆங்கிலத்தைப் போலவே, பிரான்சுநாட்டின் காலனி நாடுகள் அனைத்திலும் சாபம்போல ஆயுள் முழுக்க விலக்க முடியாமல் தொடரும் மொழி.  உலகமெங்கும் பரவலாக உபயோகத்திலிருக்கிற பிரெஞ்சு மொழியின் இலக்கியம்,  பிரெஞ்சு மக்களால் மட்டுமே படைக்கப்பட்டதல்ல, அதிலும் நவீன பிரெஞ்சு இலக்கியம், உலகில் எங்கெல்லாம் பிரெஞ்சுமொழி பயன்பாட்டில்  உள்ளதோ அந்நாடுகளின் பங்களிப்பினாலும் ஊட்டம் பெற்றுள்ளதென்பதை நாம் மறந்துவிடமுடியாது.

பிரான்சு நாட்டின் தனித்தன்மை

மொழி அளவில் ஆங்கில மொழிக்கு இரண்டாம் இடத்தில் பிரெஞ்சு மொழி இருப்பினும்,  இலக்கியம் தத்துவம் ஆகிய துறைகளில்  உலகச் சிந்தனையில் பிரெஞ்சு மொழியின் பங்களிப்பை உதாசீனப்படுத்து தல் இயலாது. இவ்வெற்றிக்கு அடிப்படையில் உள்ள வலுவான காரணங்கள் பல. நூற்றாண்டுகளைக்கடந்து இன்றுவரை பொறுப்புடனும் அக்கறையுடனும் ஆட்சியாளர்களின் குறுக்கீடின்றி செயல்படும் பிரெஞ்சுமொழி நிறுவனம்,அதனை வழிநடத்தும் மொழி அறிஞர்கள் ; உறுதுணையாக இருந்துவரும் அரசின் கலை இலக்கிய பண்பாட்டுத் துறை ;  படைப்பாளிகளை, இலக்கிய ஆளுமைகளைப் போற்றும் அரசாங்கம்ம ;  தரம் வாய்ந்த நூலகங்கள், பதிப்பகங்கள், படைப்புத்துறையின் பல்வேறு பங்குதாரர்களிடையே  பாலமாக இயங்கும் ஊடகங்கள், நாட்டின் கண்ணியமும் பெருமையும் பொருளியல் வளர்ச்சியில் மட்டுமல்ல கலை இலக்கியத்தையும் உள்ளடக்கியதென நம்பும் பெருவாரியான மக்கள் என வரிசைப்படுத்த முடியும். அவற்றில் ஒன்றிரண்டை அடிக்கோடிட்டும் சொல்லவும் வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியில் அறிமுகப்படுத்தப் பட்ட ழூல்ஸ்ஃபெரி  சட்டம் அனைத்துச் சிறார்களுக்கும் கல்வியை இலவசமென உரைப்பதும், அதைக் கட்டாயமென வற்புறுத்துவதும் ஏட்டுச்சுரக்காய் மொழியில் அல்ல, இன்றுவரை இம்மி அளவும் பிசகாது அரசு, அதனை ஓர் தார்மீக க் கடமையாக நிறைவேற்றிவருகிறது. நாட்டின் வரவு செலவுத் திட்ட த்தில் 22 விழுக்காடு, கலை மற்றும் பண்பாட்டுத் துறைக்கென ஒதுக்கி சடங்காக அன்றி முறையாக அதனை பயன்படுத்தவும் செய்கிறது.. அனைத்திற்கும் மேலாக கலை, இலக்கிய துறை அமைச்சு இங்கு காலம் காலமாக அத்துறைசார்ந்த மனிதர்களிடத்தில், வல்லுனர்களிடத்தில் ஒப்படைக்கபடுகிறது.

இயல்பாகவே விடுதலை மனங்கொண்ட பிரெஞ்சு மக்கள்,  கலை இலக்கியத்திலும் அம்மதிரியான உணர்வுகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். இம்முயற்சிகளை ஓவியம், சிற்பம், இசை யென பல துறைகளிலும் காண்கிறோம். இலக்கிய தேவதச்சர்களும் பரிட்சார்த்த முயற்சிகளுக்குத் தாங்கள் விதிவிலக்கானவர்களல்ல என்பதைக் காலந்தோறும் தங்கள் படைப்பின் ஊடாக நிரூபித்துவருகிறார்கள். இவ்விலக்கிய கட்டுமானங்கள்  படைத்தவனின் மனப்புரிதலுக்கேற்ப பெயர்களைச் சூட்டிக்கொண்டன. ஏற்றலும் நிராகரித்தலும் பிரெஞ்சு படைப்புலகில் புதியவை முளைவிடவும், வளர்ந்து தழைக்கவும் காரணமாயின. கடந்த காலத்தை நிகழ்காலம் நிராகரித்துள்ளது,  என இதனை விமர்சிக்க முடியுமா என்றால், அப்படி விமர்சிக்க கூடாது என்பதுதான் உண்மை. ஒரு வீட்டின் நிர்வாகத்திற்கு அந்தந்த காலத்திற்கேற்ப பொறுப்பேற்கிறவர்கள், அவரவர் சூழலுக்கேற்றக் கொள்கையைக் கடைபிடிக்கின்றனர். பாட்டன், தந்தை, மகன் என் நிர்வாகப்பொறுப்பேற்பவர்கள்  காலத்திற்கும்,  சூழலுக்கும், திறனுக்கும் ஏற்ப நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தலாம். வழிமுறை எதுவாயினும் குடும்பத்தின் பாரம்பர்யபெருமையை தக்கவைப்பதும், முன்னோக்கிக் கொண்டு செல்வதும் மட்டுமே அவர்களின் இலக்கு. அதை பிரெஞ்சுக்காரர்கள் சரியாகச் செய்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். நிறைய இஸங்களை பிரெஞ்சு இலக்கியத்தில் சந்திக்கிறோம், அவற்றை நாம் இத்தொடரில் காணலாம். பட்டியல் நீளமானது, இச்சோதனை முயற்சிகளின் பொதுவானப் பலன் பிரெஞ்சு இலக்கியத்திற்கும் கலைக்கும் பெருமை சேர்த்திருக்கிறதென்கிற இன்றைய உண்மை.

இடைக்காலத்திய படைப்பிலக்கியவாதி பிரான்சுவா லியோன் ஆகட்டும், மானுடவியல் வழிவந்த கவிஞர் பிரான்சுவ ரபெலெ ஆகட்டும், பதினேழாம் நூற்ராண்டின் சமயம், சமூக நெறிமுறைகளில் அத்துமீறலைப் போற்றிய போகிகள் ஆகட்டும், உயர்ந்த கோட்பாடு, மேட்டுக்குடுடி மக்களின் வாழ்வியல் , தேர்ந்தமொழி தொன்மவியல் கோட்பாட்டாளர்கள் ஆகட்டும், பின்னர்வந்த பகுத்தறிவுவாதிகளாகட்டும்  இப்படி அனைவரையும் நாம் தெரிந்துகொள்ள்வேண்டியவர்களாக இருக்கிறோம்.இன்றைய பின்-பின் நவீனத்துவம் வரை முக்கிய இலக்கியவாதங்களையும் அவற்றை முன்னெடுத்தவர்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான் இத்தொடரின் நோக்கம்.

(தொடரும் )

ஒரு கேள்விக்கு இரு பதில்கள் : அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளை முன்வைத்து 

amuthu                 « பல வருடங்கள் சென்ற பிறகுதான் ஒரு கேள்விக்கு ஒரு பதில் கணக்கு சரியல்ல என்பது புரிந்தது. சில கேள்விகளுக்குப் பல விடைகள் இருந்தன. எதற்காக சிறுகதைகள்  எழுதுகிறேன் என்ற கேள்விக்கும் அப்படியே. பல சமயங்களில் நான் எங்கே எழுதுகிறேன் . கதை பிரவகித்து வரும்போது  அதைத் தடுக்காமல் தள்ளி நிற்கிறேன்  வேறு என்ன செய்கிறேன் என்ற எண்ணம் தோன்றும் » என அ. முத்துலிங்கம் தம்முடையசிறுகதைகள்  தொகுப்பு முன்னுரையில்  அல்லது அத்தொகுப்பு பற்றிய கருத்தாகத் தெரிவித்திருக்கிறார். அக்கருத்துரையிலேயே ஒரு சில வரிகளுக்கு அப்பால் « கம்ப்யூட்டரில் வந்து இறங்கும் மின்னஞ்சல்களைக்  கலம்  நிறைந்ததும் அவ்வப்போது காலி செய்வது போல எனக்குள் நேரும் வார்த்தைகளை நான் அப்புறபடுத்துகிறேன்  » என அவருக்கே உரித்தான மொழியில் தமது கதைமூல இரகசியத்தையும் போட்டுடைக்கிறார். அவர் பெயருக்கு முன்னால் இருக்கும் ‘அ’ என்ற உயிர் எழுத்திற்கு   அப்படியொரு விளக்கமும் உண்டென்பது ஆச்சரியமான செய்திதான். அவரை எழுதவைக்கிற காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்துபோகட்டும் ஆனால் அதனாற் கிடைக்க க் கூடிய பலன்,  அக்கேள்விக்குக் கிடைக்கும் விடையைப் போலவே ஒன்றுக்கு மேற்பட்டவை  என்பது மட்டும் தெளிவு.  சொல்வனம் இணைய இதழ் பொறுப்பாளர்களில் ஒருவர்  எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் சிறப்பு இதழுக்காக கட்டுரையொன்றை கேட்க  அவரது சிறுகதைத் தொகுப்பை (தமிழினி வெளியீடு)  மீண்டும் ஒருமுறை வாசித்தேன். அத்தொகுப்பை எனது பார்வையில் சிறுகதைகள், கதைகள், கட்டுரைகள் என வகைப்படுத்தி வைத்திருக்கிறேன். இன்றைய தமிழ்ப் படைப்பாளிகளில் மூத்த சிறுகதை எழுத்தாளர்களின் பெயர்களை நினைவுகூர்கிறபொழுது, விடுபடமுடியாத முடியாத பெயராக  அ. முத்துலிங்கம் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் படைப்புகள்.  எழுத்தில்  ஒட்டுமொத்த வாசகர்களின்  ஏகோபித்த பாராட்டுதலை பெறுதலென்பதும், அப்புகழுக்குப் பங்கமின்றி தொடர்ந்து அனைவராலும் விரும்பி வாசிக்கப்படும் முன்னணி எழுத்தாளராக இருப்பதும் எளிதான காரியமல்ல.

 ஐந்துவிரல்களுக்குள் அடக்கிவிடக்கூடிய கதைமாந்தர் எண்ணிக்கை, ஒன்றிரண்டு சம்பவங்கள், செறிவான மொழி இவைகளெல்லாம் கூடிவந்தால் சிறுகதை. இன்றைய படைப்பிலக்கியம் பின் நவீனத்துவம், பின்-பின் நவீனத்துவம்(Post-postmodernism) எனப் புதிய புதிய அவதாரங்களை எடுத்தபின்னும், மேலேகண்ட பொதுப்பண்புகளை அவசியமாகின்றன.  அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளை ஒரு வாசகனாக என்னை நிறுத்தி ‘ ஏன் நேசிக்கிறேன் ?’ என்று என்னை நானே கேட்டுக்கொண்டபோது, எனக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட பதில்கள்  கிடைத்தன.

ஒரு நல்ல சிறுகதை என்பது தேர்ந்த கவிதையின் உரைநடை வடிவம், பாலும் பழத்துடன்முதல் இரவன்று கணவனை (இங்கு வாசகன்) தேடிவரும் மணப்பெண்ணிற்குச் சமம். இந்த இலட்சணங்களுடன், தெறிப்பானச் சொற்கள் ; கூரான குறுவாளை தடவிப்பார்க்கிற அனுபவம் ; கவிஞர் மோகனரங்கன் வியந்து பாராட்டுவதுபோல « விரைவுப் புகைவண்டியொன்றில் பயணிக்கையில் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்   சாளரக் காட்சிகள் » ; துறட்டுக்கோலைப்(கொக்கைத் தடி ?) போல வாசகரின் மனதைப் பறிக்க முயலும் தொடக்க வரிகள் ; அத்தொடக்கவரிகளின் துணையுடன் ஜல் ஜல்லென்று சவாரி செய்யும் கதை பின்னல் ; கூத்துக்கலையை வார்த்தையாக்குகிறாரோவென   புருவங்களை உயர்த்தவைக்கும்  சொல்லாடல் ; எள்ளலும், பகடியுமாக சுவாரஸ்யத்தையும் விநோதத்தையும் சரிசமமாகக் கலந்து, பக்குவத்துடன் சமைக்கவும் விருந்தோம்பவும் செய்கிற எழுத்தாற்றல் ஆக  இவற்றையெல்லாம் முதழ்லிரவு மணப்பெண்ணின் கவர்ச்சிகரமான உருப்படிகள் எனவைத்துக்கொண்டால் – அது அ. முத்துலிங்கத்தின் சிறுகதை.  யாழ்ப்பாணக் கைப்பக்குவம் என்பதால் சிற்சில நேரங்களில் மாசிச் சம்பல் போல காரம் தூக்கலாக இருக்கிறது, நான் அதிகம் சொதிக்குப் பழக்கப்பட்டவன்.

இங்கே அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளை மூன்று பொருளில் அணுக நினைக்கிறேன் :

  1. கதையாசிரியர் கதைசொல்லியா? கதைமாந்தர்களில் ஒருவரா?
  2. எழுத்தில் குறுக்கிடும் குறும்புகள்

3  அவர் கதைகளில் காணும் பொதுப் பண்புகள்

 

  1. கதையாசிரியர் கதைசொல்லியா கதைமாந்தரா?

‘தன்மையில் சொல்லப்படும்’,  ‘வாசகரை முன்வைத்து உரையாடும்’ அவரது சிறுகதைகள் பலவும் இச்சந்தேகத்தை எனக்கு எழுப்புவதுண்டு.  அப்படி எழும்போதெல்லாம்« கண்ணாடே,கரையாரே, காக்கணவம் பூச்சியாரே,  வரட்டோ !  » என ஆசிரியர் குரல் அப்போதெல்லாம் நமது காதுகளில் ஒலிக்கவே செய்கிறது. அதுவேகூட ஒரு வகையில் ஆசிரியருடைய கதைசொல்லும் ஆற்றலுக்கான சான்றாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். மேற்கு ஆப்ரிக்கா, கனடா, பாகிஸ்தான் என்ற களன்களின் அனுபவங்களாக, கட்டுரையோ என சந்தேகிக்கின்றவகையில் சொல்லப்படும் கதைகளிலெல்லாம் இப்படியொரு சிக்கலுக்குள் சிக்கித் தவிப்பது தவிர்க்க முடியாததாகிறது. அது  ‘அனுலா’ என்ற சிங்கள இளம்பெண்ணின் காதலுடன் விளையாடும்  போஸ்டாபீஸ் ஊழியனாக வரும்போதும் ; கடைசிக் கைங்கரியம் தணிகாசலத்தின் மனச்சாட்சியாக « அடி கமலா, நீ நினைத்ததில் எள்ளளவும் பிழையில்லை. முற்றிலும் சரி. நான் தான் துரோகி, பெரிய துரோகி ! » எனக் குற்ற உணர்வுடன் மனைவியின் பிணத்தருகே குமுறும் கணவனாக உருமாறும் போதும் ; « அக்கா வந்து முழுசுவார்க்கக் கூப்பிட்டா , « பேந்து வாறன் » எண்டு சொன்னன் ; அக்கா அப்பிடியே ’அறுநாக் கொடியில்’ பிடித்துகொற கொற எண்டு இழுத்துக்கொண்டுபோனா. நான் அழவே இல்லை. எனக்கு அக்கா எண்டால் விருப்பம் » என அக்கா அக்காவென்று உருகும் சிறுவனாகட்டும் ; « நான் அப்போது உலகவங்கிக்காக மேற்கு ஆப்ரிக்காவில் வேலை செய்துகொண்டிருந்தேன். அங்கேதான் எனக்கு முதன் முதலில் கட்டிங்கிராசுடன் பரிச்சயமேற்பட்ட து » எனக்கூறும் உலகவங்கி ஊழியராக அறிமுகப்படுத்திக் கொள்கிறபோதும்  கதைமாந்தராக அவதாரமெடுக்கும் கதைசொல்லி ஆசிரியர்தானோ ? என்கிற கேள்விக்கும்,  கிடைக்கும்  பதில்கள் ஒன்றுக்கு மேற்பட்டவைதான்.

 

  1. எழுத்தில் குறுக்கிடும் குறும்புகள்

அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் எனில் குறும்பான சொல்லாடல்கள் இல்லையெனில் எப்படி ? எழுத்தில் நகைச்சுவையை வலிந்து புகுத்தாமல் ஓர் இயல்பாய் இழையோடச்செய்வது எல்லோருக்கும் ஆகிவந்த கலையல்ல. துக்கவீட்டில் கூட சூழலுக்குப் பொருத்தமாக ‘வருவதும் போவதும் தெரியாது’ என பழைய பாடலொன்றில் வருவதுபோல அவை வந்துபோகின்றன. « இந்த உலகத்திலேயே சிவப்பு ஒரு கறுவம் வைத்திருந்தார். கைகளைப் பின்னுக்குக் கட்டியபடி ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டுதான் நடப்பார். சிறு நீர் பாயும் தூரத்துக்குக் கூட அவரை நம்புவதற்கு  அந்த ஊரில் ஆள்கிடையாது »(வடக்கு வீதி) ; «  குறைந்தது நாலு பிழையுடன், விலாசதாருக்கு கிடைக்காத வகையில், ஆங்கிலத்தில் தந்தி எழுதும் அளவிற்கு, அவர்களுக்கு அமோகமான கல்வி அறிவு இருக்கிறது »(கோடைமழை) ; « இப்படியாக எங்கள் வீட்டு நாயின் எதிர்காலத்தை  நாயை ஒரு வார்த்தைக்கூடக் கேட்காமல் தீர்மானித்தது எனக்குத் தர்மமாகப் படவில்லை » (எலுமிச்சை) ; « கிணற்றடியில் தினம் நடத்தும் அப்பாவின் அனுட்டாங்கள் முக்கியமானவை. வலக்கையின் இரண்டு விரல்களை வாய்க்குள் விட்டு ஓவென்று ஓங்களிப்பார். நாலு அங்குல நீளமான தொண்டைக்குள் இவரால் ஆறு அங்குலம் நீளமான விரல்களை நுழைக்க முடியும். »(பூமத்தியரேகை). « மனிதர்களுடைய வாயை இவ்வளவு குளோசப்பில் அவள் பார்த்த தில்லை . பெருவிரலில் எக்கி நின்று என் வாயைப் புகுந்து பார்த்தாள் »(எந்த நிமிடத்திலும் பறி போகும் வேலை) . இதுபோன்ற உதாரணங்களை இன்னும் இருபது பக்கங்களுக்கு நீட்டிக்கொண்டு போகலாம். அ. முத்துலிங்கத்தின் வெற்றிக்கு இதுதான் தீர்க்கமான காரணமாக இருக்கமுடியுமென்று நம்மில் எவராவது நம்பினோமென்றால் தோற்பது நாமாகத்தான் இருக்கமுடியும்.  ஏனெனில் இதுமட்டுமே காரணமில்லை, அவர் வெற்றிக்கு நுணுக்கமாக பல காரணங்கள் உண்டு, அவற்றில் ஒன்று இக்கடுரையின் இறுதியிலும் சொல்லப்பட்டுள்ளது.

  1. இவரது கதைகளில் காணும் பொதுபண்புகள்

இவரது கதைகளில் உள்ள  பொதுவான சில சிறப்பு அம்சங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது நல்லதென நினைக்கிறேன்.  அழைப்பு, ஒரு சிறுவனின் கதை, சங்கல்ப நிராகரணம், கடைசிக் கைங்கர்யம், பக்குவம்,  பீனிக்ஸ்பறவை, எலுமிச்சை…… தளுக்கு என நீளும், எனக்குப் பிடித்தமான பட்டியலில் , ‘அழைப்பு’ என்ற சிறுகதையை எடுத்துக்கொண்டு அ.முத்துலிங்கம் என்ற கதைசொல்லியின் கைப்பக்குவத்தை ஓரளவு புரிந்துகொள்ள முயன்றிருக்கிறேன்.

‘அழைப்பு’ நான் மிகவும் ரசித்து பலமுறை திரும்பத் திரும்ப வாசித்த கதைளில் ஒன்றென்பதும் எனது தேர்வுக்கான கூடுதல் காரணம்.  சிறுகதையின் தொடக்கம், அதை முன்னெடுத்துச் செல்லும் விதம், அதன் பரிணாமம், பின்னர் முடிவு என இதன் வாசிப்பு படி நிலைகள். இக்கதையை முதன்முறையாக நான் வாசிக்க நேர்ந்தபோது –  என்னவோ நாம்தான் கந்தப்பு ஆக வாழ்ந்தோமா ? என்ற ஐயத்திலிருந்து மீள சிலகணங்கள் தேவைப்படுகின்றன.  மீண்ட தும், வாசகனென்ற  உணர்வுபெற்று, கந்தப்பு ‘ஒழுங்கை’ வரை கசைசொல்லி நம்மை அழைத்துவந்திருக்கிறார் என்ற உண்மைமட்டுமே எதார்த்தம்,  என்கிற இருத்தல் உணரப்படும்போது  அந்த அனுபவத்தைச் சொல்ல வார்த்தைகள் போதா. தொடக்கம் முதல் முடிவுவரை   படிப்படிப்படியாக ஒரு நிலையிலிருந்து மற்றொன்றிற்கு வாசகரை ஒரு கதைசொல்லியாக  அவர் அழைத்துசெல்கிறபோது, அலுப்பற்ற பயண அனுபவம் நமக்கு வாய்க்கிறது.

அழைப்பு சிறுகதை ‘கந்தப்பு’ என்ற மனிதரின் மனப்புழுக்கம், உடற் புழுக்கம் என்கிற இரண்டு இடிபாடுகளையும், அந்த இடிபாடுகள் அவரை இறுதியில் எங்குகொண்டுபோய் நிறுத்துகின்றன என்பதையும் சொல்லும் கதை.  « ஊதல் காற்று உடலைக் கிழித்தது, விறுக் விறுக்கென்று கைகளை வீசியபடி வேகமாக நடந்துகொண்டிருந்தார் கந்தப்பு » என்று கதையைத் தொடங்குகிறார் கதைசொல்லி. நடக்கத் தொடங்க,  பாதை விரிந்து  நீள்வதுபோல கதையின் பாதையை,  கதையின் அடுத்தடுத்த நிகழ்வுகளைக் குறிப்பால் இந்த ஆரம்ப வரிகள் உணர்த்துகின்றன. கந்தப்பு என்ற கதை மாந்தர், புராணப்படங்களில் திடீரென்று தோன்றும் தெய்வங்கள் போல முதல்வரியை வாசித்த கணத்தில் தோன்றி கைகளை ஆட்டி ஆட்டி நம் முன்னே நடக்கிறார்.  விதிக்கப்பட்ட « நெருக்கடி ஒழுங்கையை » கைவீசி கடந்திட நினைக்கும் பாவப்பட்ட அம்மனிதரின் முனைப்பையும், அவர் கிழிபடும் பரிதாபத்தையும் கதையின் முதல்வரி நன்றாகவே  சித்தரிக்கிறது. தவிர கதையினைச் சிக்கலின்றி சொல்லிக்கொண்டு தொடர துணையாகவும் இருக்கிறது. « இண்டைக்காவது முதலாளி கணக்குத் தீர்த்தாரெண்டால் …உந்தச் சில்லறைக்கடன்களை ஒரு மாதிரிசரிகட்டலாம். சுப்பையாவின்ரை கடைக்காசை இண்டைக்குக் குடுத்திடவேணும். அவன் வீட்டிலே பழி கிடப்பன்.. இப்ப நாலு நாளாய் விரதம்.. அவள் பொடிச்சியைத் தனியகடன்காரருக்கு வகை சொல்ல விட்டிட்டு நான் என்ரைபாடு… சீ என்ன புழைப்பு.. »ஏனப்புலம்பும் கந்தப்பு அந்நியரல்ல அது நாமாக க் கூட இருக்கலாம், அல்லது நாம் அலுவலுக்கோ வேறெங்கோ போய்க்கொண்டிருக்கிறபோது அரைக்கண்மூடி, இறுகிய முகமும், கசங்கிய சட்டையுமாக, காரணமின்றி வேட்டியின் முகப்பை உயர்த்திப்பிடிப்பதும்  தோள் துண்டினால் முகத்தைத் துடைப்பதுமாக  நம்மைக் கடக்கின்ற மனிதராகவும் அவர் இருக்கலாம். கந்தப்பு போன்ற மனிதர்களுக்கென்றே பிரச்சினைகள் வரிசையில் காத்திருக்கின்றன. பிரச்சினைகளுக்குத் தம்மிட த்தில் தீர்வு இல்லை, தம்மைச் சூழ்ந்துள்ள சகமனிதர்களிடமும் தீர்வுகள் இல்லை, கண்ணுக்குப் பலனாகாத தொலைதூரத்தில் இருக்கிற பரம்பொருள் பாரத்தைக் குறைக்கக்கூடும் என நம்புகிற கோடிக்கணக்கான வெகுளிகளில் அவரும் ஒருவர். கதை சொல்லி அவர்(கந்தப்பு) வாயிலாக உதிர்க்கும் « அப்பனே முனியப்பா » அதைத்தான் நமக்குச் சொல்கிறது. பெருங்கதையுடன் ஒப்பீட்டளவில், சிறுகதை கதை, «  மாந்தர் எண்ணிக்கையில் », « நிகழும் சம்பவங்களில் » சிறியதாக இருக்கலாம் ஆனால் பெருங்கதையைப்போல சிறுகதையிலும் வில்லில் அம்பினை ஏற்றி நாணை இழுக்கிறபோது, நாண்படும் அவஸ்தையைக் கதையில் முடிவுக்கு முன்பாக கந்தப்புவும் சந்திக்கிறார்.  பணிசெய்யும் சுருட்டு கொட்டிலில் ‘கொஞ்சம் வேலை தெரிந்த’ வெட்டுக்காரப் பொடியனால்  அவருடைய பணி கேலிக்குள்ளாகிறது. போதாகுறைக்கு முதலாளியின் நக்கலான பேச்சுவேறு. « மானங்கெட்ட சீவியம் ! » எனக் முனகிக்கொண்டு பசியுடன் வீடு திரும்பும் கந்தப்பு கோபத்தை வேளிப்படுத்தும் காட்சி கதையின் உச்சம். தேர்ந்தப் புகைப்படக்லைஞரைப்போல அ. முத்துலிங்கம் காட்சிபடுத்தும் அழகு, குறிப்பாக தொகுப்பில் 33ம், ,34ம் கல்வெட்டில் பதிவுசெய்யவேண்டிய பக்கங்கள். சிறுகதை எழதுகிற வளரும் தலைமுறையினர் கவனத்திற்கொள்ள வேண்டிய பகுதி.

கதைசொல்லியின் நீண்ட நெடிய பரந்துபட்ட வாழ்க்கை, மனிதர்களைப் பற்றிய கூர்மையான அவதானிப்புகளுடன் இணைந்து தேர்ந்தெடுத்த சொற்களில் கதையை அசைபோட்டிருக்கிறது. முகம் தெரியாத பல கந்தப்புகளுக்காக வாடிய கதைசொல்லியின் உள்ளம் அது. வாசிக்கிறபோது தரித்திர கந்தப்புடன் நாமும் பரிதவிக்கிறோம், கண்கள் கலங்குகிறோம்.

இறுதியாக அவரது அ.முத்துகிலிங்கத்தை இரசிக்க இதுபோன்ற வரிகளும் பெரிதும் உதவும் :

« அக்கா மூக்குத்திப் போட்டிருப்பாள் ; முகப்பருவும் போட்டிருப்பாள். »

« சிவப்புக்கூந்தல் தேனிக்கூட்டம் போல பின்னால் பறக்க ரோட்டில் அவள் ஸ்கூட்டர் ஓட்டிப்போகும்போது அடிக்கடிப் பார்த்திருக்கிறார்கள். »

« மரவள்ளி கிழங்குக்காரி ஒருத்தி சந்தியடியில் வந்துகொண்டிருந்தாள். ‘அவளுக்குத் தெரியவா போகிறது’ என்று ந ந்தாவில் தோட்ட த்து மதகடியின் பக்கலில் குந்தினார் »

—————————————————————————————–

எதிர்பார்த்தது நடந்துவிட்டது.  எது நடக்கக் கூடாதோ அதவும் நடந்துவிட்டது.  

 

வருடத்தில் ஒரு முறைதான் இந்தியா வருகிறேன், அப்படி வருகிறபோது அதிகப்பட்சமாக ஒருமாதம் பிறந்தமண்ணில் தங்க நேரிடுகிறது.  அதிலும் 90 விழுக்காடு தமிழ்நாடு அரசிற்கு சம்பந்த மற்ற புதுச்சேரியில்  நாட்களைக் கழிக்கிறபோது ( எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர், அவர் பெயர்என்ன,  தெரிந்துகொள்ள  முயன்றதில்லை) தமிழ்நாட்டில் ராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என இருக்கத்தான் ஆசை. உண்மையில் பெரும்பாலான தமிழர்கள் அப்படித்தானே இருக்கிறோம்  பாமரமக்களை விடுங்கள், படித்தவர்களும் ( அறச்சீற்றம் தான் எனது மூச்சென கட்டுரையிலும் கவிதையிலும் மறக்காமல் எழுதும் நமது எழுத்தாளர்கள் உட்பட) அப்படித்தானே இருக்கிறார்கள்.  பத்துவிழுக்காடு மக்கள் கிளர்ச்சியோ, கலகமோ செய்து என்ன ஆகிவிடும் என்ற கவலையும்  எழாமலில்லை.

 

பினாமி அரசு

 

பினாமி அரசுக்கு உரிமைகோரியவர்கள் சாதித்திருக்கிறார்கள். சாதித்தது தமிழ்நாட்டின் பிரச்சினைகளெல்லாம் முடங்கிக் கிடக்கிறதே என்பதற்காகவே அல்ல. அம்மையாரை(காவிரியை அல்ல) பெங்களூரிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரவேண்டும், எம். எல். ஏக்களை பட்டியிலிருந்து விடுவித்திருந்தாலும்,  குறைநாளுக்கும் அவர்களுக்குக் கொள்ளும் தண்ணீரும் காட்டவேண்டும். அடுத்த தேர்தலில் மீண்டும் வாக்காளர்களுக்கு கடந்த தேர்தலைக் காட்டிலும் கூடுதலாக மொய் எழுதவேண்டும், அவர்கள் ஆரத்தித் தட்டுகளில் இனி 500 ரூபாய் செல்லாதென்கிறபோது 2000 ரூபாயாவது போடவேண்டும், கூட்டணிக் கட்சிகளைக் கவனிக்க வேண்டும். என பல கடமைகள் காத்திருக்கின்றன.

 

ஆட்சியைப் பிடிக்கப் போட்டியிட்டவர்களில் ஓர் ஆணியினர் அதிஷ்ட்த்தையும் தீபாவையும் நம்பினார்கள்.  ஆனால் மற்றக் கூட்டத்திற்கு இது வாழ்வா சாவா என்ற பிரச்சினை. இந்நிலையில் அதிகாரத்தைக் கைப்பற்ற தானம் தரும ம், தண்டம் என எதையும் முயன்று பார்க்கவேண்டிய நிலமை.

 

பினாமி அமைச்சரவை ஆதரித்த சட்டசபை உறுப்பினர்களின் மன நிலையையும் பார்க்கவேண்டும். சட்டசபை கலைக்கப்பட்டால் திரும்ப ஜெயிப்பதென்பது இம்முறை எளிதல்ல, தவிர  ஏற்கனவே எதன் தயவால் வாக்கை அள்ளமுடிந்த தென்பதும் அவர்களுக்குத் தெரியும். இந்நிலையில் எதை நம்பி ஓ.பி.எஸ் பின்னால் அணி திரளுவது ? அவர்களுக்குரிய  தற்போதையை விலையைக் கொடுக்க அவர் தயாரில்லை, மடியில் தகுந்த பணமும், உரிய தரகருமின்றிச் சந்தைக்கு வரலாமா ? ஆக பினாமி ஆட்சியில் அவ்வப்போது சிறிய ஊடலுடன் (பெரிய ஊடல் ஆபத்தில் முடியும்)  முடிந்த வரை கறந்து சட்டசபை  ஆயுளை நீட்டுவது தான் பிழைக்கத் தெரிந்த தமிழர்களுக்குள்ள புத்திசாலித்தனம், அதைச் செய்திருக்கிறார்கள்.

 

எதிர்கட்சிகளின் நிலமை

 

இன்றைய தேதியில் திருநாவுக்கரசர் காங்கிரஸ் உட்பட அனைவருக்கும் தி.மு.க எதிரி. சசிகலா முதல்வர் என்றாலும் பரவாயில்லை ஆனால் திமுக பலனைந்துவிடக்கூடாது. இதில் பா.ம.க, மக்கள் நலக்கூட்டணி  அனைவருக்கும் ஒரே எதிரி தி.முக. தான் மன்னார்குடி அதிமுக இல்லை. தே.தி.முக எதிர்காலத்தில் தி.முக.வுடன் இணைந்து தேர்தலில் நிற்கலாம், காங்கிரஸும் திருநாவுக்கரசு வேளியேற்றப்பட்டால் திமுகவுடன் கூட்டணியில் இருக்கலாம். விடுதலை சிறுத்தைகளும் இடதுசாரிகளும்  தினகரன் ஊழல்வாதியல்ல எனக்கூறி அவரை முன்னிறுத்தி கைகோர்ப்பார்கள். பல காரணங்கள் இருப்பினும்  திமுகவைக் காட்டிலும் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப்பெற சசிகலா அணியினரின் அதிமுகவில் வாய்ப்புண்டு. எப்போதும் விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரணியில் இருப்பதென்கிற முடிவெடுத்த பா.ம.க, பஜக வோடோ அல்லது வழக்கம்போல தனி அணியாக நிற்கலாம்.

 

தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் தர்ம ம் மறுபடி வெல்லும் என்கிறார்களே ?. நாம் குற்றவாளி என கைகாட்டுகிற கூட்டமும் அதைத்தான் சொல்கிறது. என்ன செய்யலாம் ? இன்னொரு ஜல்லிகட்டு வழிமுறையிலான அறப்போராட்டம் மட்டுமே தமிழர் மானத்தை மீட்டெடுக்க உதவும்.

————————————————————-

இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் அவர்கள் நண்பர்களுக்கும்

இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் அவர்கள் நண்பர்களுக்கும்

இருமாதத்திற்கு ஒருமுறை எங்கள் பிரெஞ்சு இளைய தளத்தில் ஒரு தமிழ்ச் சிறுகதையை மொழிபெயர்த்து வெளியிட த்திட்டம். கடந்த இருமாதங்களில் சிற்றிதழ்களில், தமிழ் இணைய தளங்களில் வெளிவந்த இளம் படைப்பாளியின் ஒரு சிறுகதையைத் தேர்வுசெய்து , ஏன் பிடித்திருக்கிறது என்பதை திறனாய்வு அடிப்படையில் பதினைந்து வரிகளுக்கு மிகாமல் உங்கள் கருத்தையும் எழுதினால் , உங்கள் தேர்வுக்குட்பட்ட கதைகளில் ஒன்றை நண்பர்களுடன் கலந்தாலோசித்து பிரசுரிக்கப்படும்.

விதிமுறைகள்

1. எழுத்தாளர் 45 வயதிற்குட்பட்ட இளைய தலைமுறையி னராக இருத்தல் வேண்டும்

2. ஒரு எழுத்தாளரின் ஒரு கதைதான் அனுப்பப் படவேண்டும்

3. அதிகம் வட்டார வழக்கு சொற்களை கையாண்டுள்ள கதைகள் வேண்டாம்

3. ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கதையாசிரியரின் வேறுபடைப்புகள் மறுமுறை மொழிபெயர்ப்புக்கு உரியவை அல்ல

4. ஒவ்வொரு மாதமும் ஐந்து தேதிக்குள் நீங்கள் தேர்வுசெய்த முந்தையை இரண்டு மாதங்களின் கதையொன்றை மின்னஞ்சலில் அ்னுப்பிவையுங்கள்

5. சிறுகதைகள் 3 அல்லது 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

ஒவ்வொரு வருடமும் பிரசுரமான கதைகளில் இரண்டைத் தேர்வு செய்து மறுவருடம் ஏப்ரல் மாத த்தில் மூவாயிரம் ரூபாய், மற்றும் இரண்டாயிரம் ரூபாய்க்கு பெறுமான நூல்கள் வழங்கப்படும்.

அந்நூல்களை விரும்பிய பதிப்பகத்தில் விரும்பிய நூல்களாக பெற்றுக்கொள்ளலாம்.

முதல் தேர்வாக ஜனவரி 2017, பிப்ரவரி 2017 சிற்றிதழ்களில், இணைய தளங்களில் வெளிவந்த சிறுகதைகளில் ஒன்றைத் தேர்வுசெய்து 05 -03-2017 க்குள் அனுப்பிவைக்கவும்

அனுப்பவேண்டிய முகவரி
Nakrishna@live.fr

அன்புடன்
நா. கிருஷ்ணா

எஜமானடிமைகள்

காலச்சுவடு பதிப்பகத்திற்காக அல்பெர் கமுய்யுடைய(Albert Camus) ‘l’homme révolté’ என்ற நூலை ‘புரட்சியாளன்’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன். 1951ல் வெளிவந்த நூல் என்ற போதும்,  தமிழில் இது போன்ற நூலின் வரவு அவசியம் எனக்கருதி மொழிபெயர்க்கப்பட்டது.  அந்நூலை மொழிபெயர்த்தபோது, எனக்குத் தோன்றியதுதான் இந்த ‘எஜமானடிமை’ என்ற சொல்.    ‘எஜமான் – அடிமை தொழில் நுட்பம்’  (Master – slave technology) கணினி சார்ந்த சொல்லும் கூட. ஆனால் இங்கும் ஒரு நுண்பொருளின்  பயன்பாடு எஜமான்-அடிமை உறவின் அடிப்படையில் நுண்பொருள் -செயலிகள் உறவு தீர்மானிக்கப்படுகிறது.  அல்பெர் கமுய் மனிதர்கூட்டத்தை எஜமான் அடிமையெனப்பிரித்து  புரட்சிக்கான காரணங்களை அடுக்குகிறார். ஆனால்  எஜமானடிமைகள் எஜமானுமல்ல அடிமையுமல்ல.  எஜமானாகப் புறத்திலும் அடிமையாக நிஜத்திலும் வாழ்பவர்கள். எஜமான்போல வேடம் தரித்திருப்பவர்கள்.  இப்படி வேடம் தரித்த எஜமான்கள் இருப்பதைப்போலவே  வேடம் தரித்த அடிமைகளும் இருக்கிறார்கள். இவ்வடிமைகள் அடிமைகள்போல பாவனைசெய்பவர்கள், உரிமைகள் குறித்த உணர்வைக்காட்டிலும் தேவைகள், ஆசைககள் மீதான பற்றுதல் இவர்களுக்கு அதிகம். உரிமைவிழிக்கிறபோது ஆறுதல் தாலாட்டுப்பாடி அவ்வுரிமையை உறங்கவைப்பவர்கள்.

 

மார்க்ஸ் கனவுகண்ட உலகத் தொழிலாளர் ஒற்றுமை தோற்றதற்கும், இன்று அதிகாரத்திற்கெதிரான கலகம், கிளர்ச்சிகள் போன்றவை (அதாவது புரட்சி  தன் பூர்வாங்க நிலையிலேயே) தோல்வியைத் தழுவுவதற்கும் ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்ல முடியும். அது ஒவ்வொரு மனிதனும் முதலாளி தொழிலாளியென்ற இருகுணங்களையும் தன்னுள் ஒளித்திருப்பதைப்போலவே, அவன் எஜமான்  அடிமை இருபண்புகளுடனும் இன்றைக்கு வாழ்கிறான் அல்லது எஜமானடிமையாக இருக்கிறான் என்கிற உண்மைநிலை.நவீன மனிதன் பிறரை எஜமானாகவும் பார்ப்பதில்லை தன்னை அடிமையாகவும் உணர்வதில்லை. புரட்சி ‘உடன்படுதல் – மறுத்தல்’ என்ற இரு பண்புகளை மனிதரிடத்தில் காண்கிறது. கட்டளைக்கு அடிபணிந்த மனம், அதை மறுத்து புரட்சி அவதாரம் எடுப்பதாக அல்பெர் கமுய் தெரிவிக்கிறார். அதாவது கிளர்ச்சியாளன் கட்டளையை மறுத்து தனது உரிமைக்குப் போராடுகிறவன்,  இன்று நிலமை வேறு, இழைக்கப்படும் அநீதிக்கு சமாதானம் செய்துகொள்ளும் போக்கைக் காண்கிறோம்.   நிகழ்கால மறுப்பாளி உரிமைக்காக அல்ல அதிகாரத்திற்காக போராடுகிறான். முடிவில் எஜமானை அடிமையாக நடத்தவேண்டும் என்பது மட்டுமே அவன்  அவா. அவன் இறுதி நோக்கம் அடிமைகளுக்கு உரிமையை மீட்டுத் தருவது அல்ல,  தனக்கும் ஆயிரம் அடிமைகள் வேண்டும் என்ற உந்துதல் பாற்பட்ட து,  இந்த நோக்கில்தான் எஜமானடிமை முக்கியத்துவம் பெறுகிறது.

 

அதிகாரம்

 

எஜமானடிமைகளை புரிந்துகொள்ளும் முன்பு அதிகாரம் என்ற சொல்லை விளங்கிக் கொள்ளவேண்டும். ஆங்கிலத்தில் authority மற்றும் Power என்று இரண்டு சொற்கள் அதிகாரத்தின் தரப்பில் வழக்கில் உள்ளன.   « நான் இன்னவாக இருக்கிறேன் அதனால் எனக்கு சில அதிகாரம் செலுத்தும் உரிமைஉள்ளது » என்பதால் பிறப்பது . இந்த அதிகாரத்தைக் கடந்த காலத்தில் முடிமன்னர்கள் ‘தெய்வீக உரிமை’ (Divine right)  என அழைத்தார்கள், அத்தெய்வீக உரிமை சராசரி மனிதனுக்கு வாய்க்காத பிறப்புரிமை. இந்திய மரபின் வழி பொருள்கொள்வதெனில் கடவுள் விதித்தது. கடவுள் « எங்களுக்கு ஆளுகின்ற உரிமையை வழங்கியிருக்கிறார் » அல்லது « உங்களை ஆள எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது, நீங்கள் அதனை ஏற்கவேண்டும். எங்களை கேள்விகேட்கின்ற உரிமை உங்களுக்கில்லை » என்பது அதற்குப் பொருள். இந்த அதிகாரத்தை வேறுவகையிலும் பெறலாம். ஒரு கூட்டம் முன்வந்து தங்களை வழிநட த்த ஒருவர் வேண்டும் எனத் தீர்மானித்து அதிகாரத்தை ஒருவர்வசம் ஒப்படைக்கலாம். அதற்குப் பல காரணங்கள் : அந்நபரின் ஆளுமை காரணமாக இருக்கலாம், பலம் காரணமாக இருக்கலாம், அந்தக் கூட்டத்தை வழி நடத்தும் பொறுப்பை வேறொருவரிடம்அளித்தால் பிறர் இணக்கத்தைப் பெறுவது சாத்தியமில்லை என்ற நிலையிருக்கலாம். இப்படி அதிகரத்திற்கு வந்தபின்பு இருக்கின்ற சட்டங்களைக்கொண்டோ அல்லது புதிய சட்டங்களைக் கொண்டோ, அல்லது வேறுவகையிலோ( பணம், படைபலம், காவல்துறை இவற்றைக்கொண்டு) தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வது அல்லது தொடர்ந்து அதிகாரத்தைச் செலுத்துவதை இயக்குத் திறன் ( Power)  எனக் கருதலாம்.

இந்த அதிகாரம் கேள்விகளை அனுமதிக்காத எஜமான்களை உருவாக்குகிறதென்பது உண்மைதான் ஆனால் அவர்களே சோர்வுறுகிறபோது, பலவீனப்படுகிறபோது எஜமானடிமையாக உருமாருகிறார்கள்.

 

எஜமானடிமைகள்

அநாமதேயம் முழுமையானச் சுதந்திரத்தை அனுபவிக்க உதவும். நான்குபேர் நம்மை அறியத் தொடங்குகிறபோது அந்த நான்குபேர் எதிர்பார்ப்புகளுக்காக நமது சுதந்திரத்தை இழக்கச் சம்மதிக்கிறோம். நான்கு பேர் நாற்பதாயிரம்பேராக அல்லது நாட்டின் பெரும்பாலோரால் அறியப்படுகிறபொழுது தமது சுதந்திரத்தை முற்றாக இழக்கிறார்.இழந்தவற்றை மீட்க மன்ன ன், முதலாளி, தலைவன், எஜமான்  என்ற ‘இன்னவாக இருக்கிறேன்’ வழங்கும் அதிகார உரிமையைத் தெரிவிக்க பிரயோகிக்க தனித்து முடியாது என்கிறபோது  சமயகுருவாக அமைச்சர்களாக, ஆலோசர்களாக உள்ளே நுழைகிறவர்கள்,இவர்களை  வழி நடத்துகிறார்கள், முடிவில் எஜமானாக இருப்பவர்கள் எஜமானடிமைகளாக மாறுகிறார்கள்.

 

முடியாட்சியும் எஜமானடிமையும்

 

முடியாட்சியில், எதேச்சாதிகார நிர்வாகத்தில், நவீன மக்களாட்சியில் என வரலாறெங்கும் எஜமானடிமைகள் இருக்கவே செய்கிறார்கள். வானளாவிய அதிகாரமென்பது உண்மையிலில்லை. தெய்வீக உரிமை கொண்ட மன்னர்களை கேள்விகேட்கின்ற உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு எனக் கருதியதாலோ என்னவோ அக்கடவுளின் பிரதிநிதிகளாக அறியப்பட்ட சமயகுருக்களுக்கு அடிமைகளாக வாழ்ந்தார்கள். பின்னாளில் மக்களாட்சிமுறை உள்ளே நுழைந்தபொழுது பிரிட்டிஷ் கோமகன்களும் கோமகள்களும் சமயகுருக்களுக்கு மட்டுமின்றி, தஙளுக்குப் படி அளக்கும் பாராளுமன்றத்திற்கும் அடிமைகளாக வாழ்ந்தார்கள், வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். காதலித்தவனை அல்லது காதலித்தவளை மணமுடிக்க முடியாமல், விரும்பியதை உண்ணமுடியாமல், உடுத்தமுடியாமல், அணியமுடியாமல், விரும்பிய முடிவை எடுக்க முடியாமல்  சடங்கிற்கும், சம்பிரதாயத்திற்கும், பாராளுமன்றத்திற்கும்` பணியும்  எஜமான்களாக வாழும் நெருக்கடி.

 

மக்களாட்சியும் எஜமானடிமையும்

 

மக்களாட்சியில் வேறுவகையான எஜமானடிமைகள். இங்கே தமது அதிகாரம் நிரந்தமற்றதென்கிற அச்சம்  தலைவர்களை நிழல்போல தொடர்கிறது, அந்த அதிகாரத்தை நிரந்தரமாக்கிக்கொள்ள, உபாயங்களைத் தேடுகிறார்கள். மீண்டும் தலைமைப்பொறுப்பேற்பதென்பது பணமின்றி நடவாது, வாக்காளர்கள் அவர்களின் வாக்குறுதியைக் காட்டிலும் பிரச்சாரத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களென்பது அவர்களுக்குத் தெரியும், பெரும் பணத்தை வாரி இறைக்கவேண்டும், அந்தப்பணத்தை எப்படியாவது பெற்றாகவேண்டும். பெரும் பணக்கார்களின் கொடையாக இருக்கலாம், ஊழல் பணமாக இருக்கலாம். இதைச் தனியே செய்ய முடியாதென்கிறபோது இதற்கு ஏற்பாடு செய்கிற, வழிவகுக்கிற  மனிதர்களின் துணைவேண்டும்,ஆலோசகர்கள் வேண்டும். ஜனநாயகத்தில் எஜமானடிமைகள் உருவாகும் இரகசியமிது.

 

நவீன அரசியல் எஜமானர்கள் Divine right ல் வருபவர்களல்ல, அரசியல் சட்டம், நிவாகச் சட்டம், இவற்றின் விதிமுறைகளைப் பூர்த்திசெய்து அதிகாரத்திற்கு வருகிற அரசாங்க அதிகாரிகளுமல்ல. பின் வாசல் வழியாக நுழைகிறவர்கள். அண்ணே என்றும், தலைவரே என்றும், ஐயா, அம்மா வென்றும் தங்கள் எஜமானை அல்லது எஜமானியை அழைத்து உள்ளே நுழைந்து அப்படி அழைக்கப்பட்டவரின் அதிகாரத்தைக் கைப்பற்றும் தந்திரசாலிகள். பல அரசியல் எஜமானர்கள் அடிமைகளாக இருந்து எஜமானர்களாக உத்தியோக உயர்வு பெற்றவர்கள். அதனால்  இப்படி எஜமான் ஆகிறவர்கள் காலப்போக்கில் சோர்வுறுகிறார்கள். « ஐயா உங்களுக்காகத்தான் செய்தேன் », « அக்கா உங்களுக்காத்தான் அதைச் செய்யச்சொன்னேன் » என்கிற மனிதர்களிடத்தில் உண்மையில் இந்த எஜமான்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள். தங்கள் அதிகாரத்தில் குறுக்கிடுறவர்களை, குறுக்கிடக்கூடியவர்களை  களையெடுத்து அலுத்து, தங்கள் துதிபாடிகளுக்கு எளிதில் அடிமையாக இருப்பது இவர்களுடைய  எஜமான் வாழ்க்கையின் உச்சத்தில் நிகழும் அவலம்.  இது  எஜமான் – அடிமை  சூத்திரத்தால் பெற்ற விடை அல்ல. குரு – சிஷ்யன், தலைவன்-தொண்டன், தலைவி-தோழி என்ற உறவின் பரிணாமத்தால் நேரும் விபரீதம்.

பல முடிமன்னர்கள் தங்கள் ராஜகுருக்களுக்கு அடிமைகளாக இருந்திருக்கிறார்கள். கத்தோலிக்க குருமார்களின் கட்டளைகள் நிர்வாகத்தில் மட்டுமல்ல, சொந்தவாழ்க்கையிலும் மேற்குலக அரசாங்கங்கங்களின் வேதவாக்காக இருந்துள்ளன. சோஷலிஸ அரசுகளின் எஜமானர்கள் அனைவருமே ஓர் ஆலோசகரிடமோ அல்லது ஆலோசனைக்குழுவினரிடமோ இறுதிக்காலத்தில் அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள் தான். அலெக்ஸாந்த்ரோவுக்கு ஸ்டாலின் அடிமை, கொயெபெல்ஸுக்கு உண்மையில்  ஹிட்லர் அடிமை, சகுனிக்கு துரியோதன ன் அடிமை, மனோன்மணீய குடிலனுக்கு பாண்டியன் சீவகன் அடிமை, இப்படி சான்றுகளை அடுக்கிக்கொண்டு போகலாம்.

தன்னைச் சுற்றியுள்ள எதையும் சந்தேகத்துடன் பார்க்கப் பழகி இறுதியில் தங்கள் நிழலைக் கண்டும் அஞ்சுகின்ற இம்மனிதர்களைப் புரிந்துகொண்டுள்ள, இவர்களை நிழலாகத்தொடர்கிற மனிதர்களுக்கு  தங்கள் பலவீனமான எஜமான்களை அடிமைப்படுத்துவது எளிது. தவிர இந்த எஜமான்கள் ஒருகாலத்தில் அடிமைகளாக இருந்தவர்கள் என்றால் மிகமிக எளிது.  அடிமைகளாக வாழ்க்கையைத் தொடங்கி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், எந்தத் தெய்வீக உரிமையினாலும் ( Divine Right ) அதிகாரத்தைப் பெற்றவர்களில்லை என்ற உண்மையை இவர்களை அண்டியிருக்கிற அடிமைகள் நன்கறிந்திருக்கிறார்கள். எஜமான், அடிமை என்ற இருநிலையிலும் இல்லாது, இரண்டும் கெட்டானாக அல்லது கெட்டாளாக வாழ்ந்து தொடுவானத்தில் கண்களை நிறுத்தி இறுதி மூச்சை விடுவது கொடுமைதான்.

(குறிப்பு : அண்மையில் மலைகள் இணைய இதழுக்கென எழுதி வெளிவந்த கட்டுரை சில திருத்தங்களுடன் – மலைகள் இணைய இதழுக்கு நன்றி)

————————————————————————————-