Monthly Archives: ஜூன் 2017

மொழிவது சுகம் ஜூன் 24 2017

அ.  அறிவுடையார் ஆவதறிவார்

 

அறிதலுக்கு அவதானிப்பு மட்டுமே போதுமா ?

Pour connaître, suffit-il de bien observer ?

பிரான்சு நாட்டில் பள்ளி இறுதிவகுப்பு மாணவர்களுக்கு விருப்ப ப் பாடம் எதுவென்றாலும்  தத்துவம் கட்டாயப் பாடம். இவ்வருடம் இலக்கியத்தை  முதன்மைப்பாடமாக எடுத்திருந்த மாணவர்களுக்குப் பொதுத் தேர்வில் சில தினங்களுக்கு  முன்பு கேட்டிருந்த  இரண்டுகேள்விகளில் ஒன்றையே  மேலே காண்கிறீர்கள்.

இக்கேள்வியில் இரண்டு முக்கியமான சொற்கள். : ஒன்று அறிதல், மற்றறொன்று அவதானிப்பு. இரண்டுமே  வினைச்சொற்கள். எனினும் அறிதலுக்கு அவதானிப்பு முக்கியமா என வினாவைத்திருப்பதிலிருந்து , அறிதலுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்றாகிறது. இந்த அறிதலின் நோக்கம் ஒரு பெருளைப் பற்றிய அறிவை – இயற்கைப் பண்பை- உண்மையின் நிர்வாணத்தை பகுத்தறிதல். ஆக அவதானித்தல் –> அறிதல்  –> தெளிதல். (மெய்ப்பொருள் காண்பது அறிவு-வள்ளுவன்)

அவதானிப்பு அறிதலுக்கு  தோழமை வினை. இத்தோழமை நம்பகமானதா, இறுதிவரை துணைக்கு நிற்குமா என்பது நம்முன் னே நிறுத்தப்பட்டுள்ள கேள்வி.  பிரெஞ்சு மொழியில் அவதானித்தல் என்ற சொல்லை  ‘observer’ என்கிறார்கள். அதாவது ‘regarder attentivement’ எனும் பொருளில் , தமிழில் உற்று நோக்கல் என்றாகிறது. கண் புலன் சார்ந்த வினைச்சொற்களாக தமிழில்  பார்த்தல், பார்வையிடல், காணல், கவனித்தல், காணல், நுணுகிக் காணல், நோக்குதல் உற்று நோக்குதல், படித்தல், சந்தி த்தல் , தேடல்  எனப்பலச்சொற்கள் உள்ளன. இவை அனைத்துமே அறிதலில் பின்னர் தெளிதலில் முடிவதில்லை. பார்த்தலும், பார்வையிடலும், காணலும், கவனித்தலும் அறிதலுக்கு உதவலாம் தெளிதலுக்கு உதவுமா ? முற்று முழுமையான உண்மையை கண்டறிய உதவுமா ? ஆக வெறும் பார்வை போதா து, ஆழாமன, நுட்பமான  ஆய்வாளர் பார்வை அதன்  அடிப்படைத்தேவை . ஆனால் இந்த அவதானிப்பு கூட சிற்சில நேரங்களில் பொய்யான முடிவுகளை, பாசாங்கு உண்மைகளை கண்டறிவதில் முடியலாம்.

அவதானிப்பு ஒரு கட்டாயத்தேவை.

அவதானிப்பு என்பது அறிதலுக்குத் துணை  நிற்கும் முதற்காரணி, இதனுடன்  பிற புலன்களில் பண்புகளும் வேதியல் பொருட்களாக பகுத்தாய்தலுக்கு கட்டாயமாகின்றன. பார்த்தல், கேட்டல், தொட்டுணர்தல் சுவைத்தல்  என அனைத்துமே  நம்மைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப இசைந்தோ, முரண்பட்டோ   நம்மைச் செயல்பட வைக்கின்றன, அதன் மூலம் நமது உயிர்  வாழ்க்கையை முனெடுத்துச் செல்கிறோம்.  அவதானிப்பு என்றசொல் பார்த்தல், பார்வையிடல், கவனித்தல் என்பது போல மேலோட்டமான சொல் அல்ல அவதானிப்பு பார்வையுடன் பிறபுலன்களின் குணங்களையும் இணைத்துக்கொள்ளும்  செயல். அவதானிப்பிற்குள், கேட்டல், தொட்டுண்ர்தல், சுவைத்தல் அனைத்தும் கைகோர்த்து ஒரு பொருளை, அல்லது கிடைத்தத் தகவலைப்  புடைத்து, பதர் நீக்கி , தெறிப்பான உண்மையை அறியும் சாத்தியத்தைத் தருகின்றன.  ஆனால் இந்த அவதானிப்புத் திறன் மனிதருக்கு மனிதர் வேறு படக்கூடும். வயது, கல்வி, அனுபவம், சமூகம் போன்றவை அத்திறனின் எடையைக் கூட்டவோ குறைக்கவோ  செய்கின்றன.   «  நான் பிறந்த தில் இருந்து சூரியன் கிழக்கில் உதிக்கிறது, எனவே  நாளையும் சூரியன்  கிழக்கில் உதிக்கும் » என்றெனக்குத் தெரிவந்த உண்மையும்  அவதானிப்பில் கிடைத்த  நன்மைதான்..

 

அவதானிப்பில் தவறுகள்.

அவதானிப்பு மட்டுமே உண்மையை கண்டெடுக்க உதவுமா ?. சூரியன் தின மும் கிழக்கில் உதிக்கிறது நாளையும் கிழக்கில் உதிக்கும் என்ற முடிவு சரியானதாக இருக்கலாம். « ஆனால் பத்துவருடமாக அவரை பார்க்கிறேன் அவர் திருந்தவேமாட்டார்  »என்கிற அவதானிப்பு தரும் உண்மை அந்த மனிதரின் பதினோராவது வருட த்தில் வேறாக இருக்கலாமில்லையா.  திரையில்  நல்லவராகவும்  வல்லவராகவும் இருக்கிற மனிதன்  நாளை முதலமைச்சர் ஆகிறபோதும் அப்படித்தான் இருப்பார்  என்கிற அவதானிப்பில் எத்தனை விழுக்காடு உண்மைகள் தேறும். தவிர அவதானிப்பில் உள்ள இன்னொரு சிக்கல் அவதானிக்கின்ற நபர் ? அவர் வயது,  கல்வி, அனுபவம் , சீர்தூக்கி பார்க்கும் திறன் இவற்றையெல்லாம் பொறுத்தே அவரது ‘அவதானிப்பு உண்மை’ மதிப்பு பெறும்.  அதாவது அவதானிப்பிற்குப்பின் கண்டறிந்த உண்மையை பல்வேறு கூறுகளின் அடிப்படையில் ஆய்ந்து முடிவுக்கு வருவது மட்டுமே சரியானதாக இருக்க முடியும். ஆக அவதானிப்பு மட்டுமே அறிதலுக்கு உதவாதென்பதில் உண்மை இல்லாமலில்லை.

அவதானிப்பிற்கு நடுவுநிலைமையும்  ஒரு தகுதி, குலம் கோத்திரம் ரிஷிமூலம் பார்த்தும் முடிவெடுப்பதல்ல :

«  மனுஷி கவிதையை வாசித்திருக்கிறேன், அதி ல் ஒன்றுமே இல்லை, எப்படி பரிசு கிடைத்த தென்று தெரியவில்லை » என ஒருவர் கருத்துத்  தெரிவித்திருந்தார்.. இன்னொருவர் « நம்ம பிள்ளைக்குத்தான் கிடை த்த து, அதனால் பிரச்சினை இல்லை » என்ற வகையில் எதிர்வினையாற்றியிருந்தார்.  இவருடைய பதிலும் மனுஷியின் கவிதைகளுக்கு அதற்கான தகுதி இல்லையென்பதுதான். மனுஷியின் படைப்புகளுக்கு  அல்லாது அவர் பரிசுக்குழுவினருக்கு  வேண்டியவர் என்பதால் தான் பரிசு  என்றால் அதுவும் நியாயமற்றதுதான். இவர்கள அனைவருக்கும் பிரான்சு நாட்டு மருத்துவரும், உடலியல் நிபுணருமான குளோது பெர்னார்ட் (Claude Bernard)  கூறும் அறிவுரை  «தூய்மையான மனதுடன் அவதானித்தல் வேண்டும் ».

ஆ.  பிரான்சு பாராளுமன்றத் தேர்தல் ஜூன் 2017

எதிர்  பார்த்த தைப் போலவே, அதிபர் மக்ரோனுடைய (Macron) புதிய கட்சி  ‘Le Parti en marche’ நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்றது. எனினும் இத்தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 42.6% சதவீத த்தினரே  வாக்களித்திருந்தனர்.. வாக்களிக்காத 57,4 விழுக்காடு மக்களில் நானும் ஒருவன். முதல் சு ற்றுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு அதிபரின் புதிய கட்சி 400லிருந்து 450 உறுப்பினர்களைப்பெறும் எனத் தெரிவித்த து இந்த ராட்சத பலத்தை அதிபருக்குத் தர அவருக்கு ஆதரவாக அதிபர் தேர்தலில் வாக்களித்தவர்களே மறுத்தார்கள். இது ஜனநாயகத்திற்கு உகந்த து அல்ல என்பது பெரும்பான்மையோரின் எண்ணமாக இருந்த து. எனவே வாக்களிக்கச் செல்லவில்லை .  கடந்த நான்கைந்து தேர்தல்களாகவே, குறிப்பாக பாராளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலுகளுக்கு வாக்களிக்காதோர் விழுக்காடு பிரான்சு நாட்டில் குறைந்து வருகிறது என்கிறபோதும் இந்த முறை மிகவும் அதிகம்.  எனினும் அதிபர் கட்சி  577 உறுப்பினர்கள் கொண்ட அவையில் 450 உறுப்பினர்களை ப் பெற்றுள்ளது. அதிபர் கட்சி கணிசமான உறுப்பினர்களைப் பெறும் என  எதிர்பார்த்த து போலவே, நாட்டை இதுநாள்வரை மாறி மாறி ஆண்ட வலது சாரி கட்சிக்கும் இடதுசாரி கட்சியான சோஷலிஸ்டுகளுக்கும் இழப்பு அதிகம். அதிலும் சோஷலிஸ்டு கட்சி க்கு இனி எதிர்காலமில்லை என்கிறார்கள். இருந்தும் அக்கட்சி புத்தியிர் பெறவேடும் என்பதுதான் என்னைப்போன்றவர்களின் கனவு. இதேவேளை தீவிர இடதுசாரியான  மெலான்ஷோன் என்பவரின் கட்சியும் தீவிர வலதுசாரியான மரின் லெப்பென் கட்சியும் தலா 17, 8 உறுப்பினர்களை பெற்றிருக்கிறார்கள். மெலான்ஷோன் கனவு நாயகர். . வயிற்றெரிச்சல் ஆசாமி, வாயும் அதிகம். அதிபர் கனவு, பிரதமர் கனவு எல்லாமிருந்தன. பிரெஞ்சு மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆட்டின் வாலை அளந்துவைப்பார்கள் . இப்புதிய அவையில் வரலாறு காணாத அளவிற்கு பெண்களின் எண்ணிக்கை அதிகம், ( 244 பெண்கள்).. அவ்வாறே முதன் முதலாக பலதுறைகளில் சாதி த்த வல்லுனர்கள் உறுப்பினர்கள் அதாவது 432பேர் பாராளுமன்றத்திற்குப் புதியவர்கள், அரசியல் அனுபவம் இல்லாதவர்கள். அதிபர் கட்சியின் 30 பேர்கொண்ட அமைச்சவரையில் 15 பெண் அமைச்சர்கள். குற்றச்ச்சாட்டிற்கு  உள்ளானவர்களை வெளியேற்றியும் இருக்கிறார்கள். நிறைய எதிர்பார்ப்பு மக்களிடத்தில் இருக்கிறது. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 

—————————————————————————————————————–

 

வானம் வசப்படும், நீலக்கடல்-ரா.கிரிதரன்

வானம்nilakadal

பிரெஞ்சு இந்திய காலனி இலக்கியம் – பாகம் 2

“அறிவியலும் வரலாறும் இறந்தவற்றை ஆராய்வதன் மூலம் நம் மூதாதையர்களை நமக்கு அறிமுகம் செய்யலாம். ஆனால் கலை மட்டுமே அவர்களை உயிர்ப்போடுநமக்கு அறிமுகப்படுத்தமுடியும்”

ஹிலாரி மேண்டல்

 

கடந்த வாரம் ஹிலார் மேண்டல் பேசிய ரெயித் நீளுரை மேற்சொன்ன வாக்கியத்தோடு அமர்க்களமாகத் தொடங்கியது. வரலாற்றுநாவலாசியராக உருவான சித்திரத்தை அவர் பேசத்தொடங்கியபோது வரலாற்று நாவல்களைப் பற்றி சடங்காகக் கேட்கப்படும் அனைத்தும் நேர்கோட்டில்சேர்ந்துகொண்டன. “வரலாற்று நாவல் என்றால் நடந்த சரித்திர நிகழ்வுகள் மட்டுமா?”, “நாவலில் வரும் நிகழ்வுகளை வரலாற்று நூலில் தேடி அடைய முடியுமா?”, “வரலாற்று நாவல் உண்மையைத் தொகுக்கும் முயற்சியா?”, “உண்மை என்றால் என்ன”, என விதவிதமானக் கேள்விகளை வாசகர்கள் கேட்டிருந்த அனுபவத்திலிருந்துஇந்த உரையை நிகழ்த்தியுள்ளார். அதில் அவர் சொல்லும் ஒரு வரி இந்தக் கட்டுரைக்கு மட்டுமல்லாது வரலாற்றுப் புனைவைப் பற்றி எல்லாவிவாதத்தில் அடிப்படைவிதியாக ஏற்றுக்கொள்ளவேண்டும். “வரலாற்று என்பது நம் பண்டையகதைகள் அல்ல. அது பழைய வாழ்வின் அறியாமையை நிரப்பும் ஒரு வழிமுறை மட்டுமே. நாம்அதை முழுவதுமாகப் பூர்த்தி செய்யும் சாத்தியமே இல்லை. செய்யும்தோறும் அறியாமையின் நிகழ்தகவு அதிகமாகிக்கொண்டே போகும்”. நாம் இதைஏற்றுக்கொண்டால் வரலாற்றுப் புனைவின் ஒரு அடிப்படையை அறிந்தவராகியிருப்போம்.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் “நீலக்கடல்” நாவலில் ஒரு நிகழ்வு. பிரெஞ்சு கும்பனியரின் மொர்ரீஸியஸ் தீவுப்பணிக்காக பல அடிமைகளை வாங்கி விற்கும் பழக்கம்கொண்டவர்கள் என்பது வரலாறு. காலனியவாழ்வின் அதிமுக்கியமான பணம் ஈட்டும் வழியாக இது இருந்துள்ளது. பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலேயர்கள், ஜப்பானியர்கள்என அனைவரும் அடிமைகளை வாங்கிவிற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். எந்த ஊரில் அடக்குமுறையை அவிழ்க்கிறார்களோ அந்த ஊர் மக்கள் அனைவரும்அடிமைகள் தான். சாவதைக் காட்டிலும் அடிமையாக அடிபட்டு வாழ்வதில் சில நூற்றாண்டுகள் கழிந்தன. அப்படி அடிமைகளை வாங்கிவிற்பதற்கு கும்பனியர்நேரடியாகத் தடைபோட்டபோதும் அவர்களது சம்மதத்தில் பேரில் மறைமுகமாக அது நடந்துதான் வந்துள்ளது. புதுச்சேரியில் அப்படி அடிமைகள் கிடைக்காத வறட்சிகாலத்தில் கடத்தல்கள் நடப்பதும் உண்டு. குழந்தை பெரியவர்கள் எனப்பார்க்காது தனியாக சுற்றுபவர்களைக் கடத்தி ஒரு இருண்ட வீட்டில் பதுக்கிவைத்து சமயம்கிடைக்கும்போது வெளிநாட்டுக்கப்பல்களில் ஏற்றிவிடுவதைத் தொழிலாகச் செய்துவந்த இந்தியர்களும் வணிகர்களும் உண்டு. துய்ப்பளே காலத்திலும் அவரதுமதாமுக்குத் தெரிந்தே இது நடந்துவந்தது என்பதைவிட பெருவணிகர்களான கனகசுப்புராயர், முதலியார், ஆனந்தரங்கப்பிள்ளை போன்றவர்கள் கூட இதை எதிர்த்துஒன்றும் செய்யவில்லை என்பதே வரலாறு. கிடைத்த நாட்குறிப்பிலும் அதைப் பற்றிய நிகழ்வுகள் எதுவும் பதிவாகவில்லை எனும்போது அவர்கள் கண்டித்தனர் என்பதைநம்பமுடியாது. ஆதாரம் இல்லாததால் ஆனந்தங்கப்பிள்ளை ஹிந்துக்களுக்கு ஆதரவு தரும்விதமாக கும்பனியாரிடம் இதை முறையிட்டார் என எழுதுவதுசரித்திரப்பிழை. அவர் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் விருப்பமிக்க துபாஷியாக வளம் வந்திருக்கிறார் எனும்பொழுது அவர்களது அட்டூழியங்களை எதிர்த்தார் எனநம்பமுடியாது. இதுவே ஒரு மறைமுகமான சாட்சிதான். ஆனால், இந்த நிகழ்வு தரும் இடைவெளி ஒன்று உண்டு. நாகரத்தினம் கிருஷ்ணா காலனிய ஆட்சியின்கீழ்மையாக இதைக் காண்கிறார். அடிமை வாழ்வின் நீண்ட வரலாற்றுக்குத் தன் இனம் படும் துயர் காணாமல் இருந்ததுபோலிருந்த மேலை ஹிந்துக்களின்பாராமுகத்தை நேரடியாகச் சாடுகிறார். அவரது கதையில் ஆள்பவர்கள் ஆளப்படுபவர்கள் எனும் பிரிவினர்கள் மட்டுமல்ல, மனித சுதந்திரத்தை தேடிச் செல்லும்மானுடர்களின் வாழ்வும் உள்ளது. உச்சகட்ட கட்டுப்பாடும் விலக்கலும் உள்ள சமூகத்தின் கைதிகள் அவர்கள். பிரெஞ்சுக்காரனான பெர்னார் குளோதனாகக் கூடஇருக்கலாம். இப்படிப்பட்ட எதிரெதிர் ஓட்டங்களைப் பதிவு செய்வதினால் ஹிலாரி குறிப்பிடும் அறியாத இடைவெளிகளின் மீது நமக்குக் கொஞ்சம் வெளிச்சம்விழுவதுபோலிருக்கிறது.

அடிமை வணிகத்தைப் பற்றி விரிவான வரலாற்றைத் தந்திருப்பதன் மூலம் இந்தியப்பெருங்கடல் நிலங்களின் வணிக மூலதனங்களையும், கரும்பு, வெல்லம், பனங்கட்டி, மலாட்டை போன்ற உற்பத்தி பொருட்களின் சந்தையும், உபரிகளின் மூலம் வணிக வளர்ச்சிக்குத் தேவையான நகர்ப்புற கட்டுமானப்பெருக்கங்களையும் ஒருகுறுக்குவெட்டுத் தோற்றத்தில் புனைவினூடாக நமக்குக் கிடைக்கிறது. இதன் ஊடாட்டம் மக்களின் வாழ்க்கையிலும், அவர்களது திரளான பயணம் மூலம்வளர்ச்சியடையும் நிலங்களின் வளமையிலும் நடத்தும் நாடகம் உயிர்ப்போடு காணப்படுகிறது. ஒரு கதவைத் திறந்து அடுத்த அறைக்குச் செல்லும் தூரத்தில் அந்த நிலம்இருக்கிறது. கற்பனை பாத்திரங்களும் வரலாற்று மாந்தர்களைப் போல ரத்தமும் சதையுமாக வளர்கிறார்கள், தேய்கிறார்கள், மறைகிறார்கள். இன்றைக்குத்தகவல்களும் சான்றுகளும் இல்லாமல் வரலாறு தடுமாறும் இடங்களில் எல்லாம் கற்பனைகொண்டு எழுதப்படும் புனைவு மிக இயல்பாக உட்கார்ந்துகொள்கிறது. கட்டற்ற கற்பனையாக அமையாமல் புனைவின் விதிகளுக்கு ஏற்ப கட்டுப்பாட்டுக்குள் வரும் கற்பனை வரலாற்றுப் புனைவின் சாத்தியங்களை உபயோகித்து நாம்அறியாத இடைவெளிகளை நிரப்புகிறது. உடல் வணிகம் மற்றும் காலனிய அடிமை முறை பற்றி தகவலாகக் கிடைக்கும் போது இல்லாத சமூக சித்திரம் புனைவாகவாசிக்கும் போது தொடுகையும் வாசனையும் இணைந்ததாகக் கிடைப்பதே அதை உயிர்ப்பாக மாற்றுகிறது. ‘வானம் வசப்படும்’ நாவலில் இதன் சாத்தியம் முழுவதுமாகநமக்குக் கிடைக்காததுக்குக் காரணம் அதில் ஆனந்தரங்கப்பிள்ளையின் வரலாற்றில் இருந்த இடைவெளிகளை நிரப்ப முற்படாததே எனத் தோன்றுகிறது. நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கு அந்த வாய்ப்பு மொர்ரீஸியஸ் தமிழர் வரலாற்றைச் சொல்வதினால் கிடைக்கும் குறுக்குத் தகவல்களைக் கொண்டு இந்திய பிரெஞ்சுகாலனி காலத்தின் நிகழ்வுகளையும் அலச முடிந்திருக்கிறது. பிரெஞ்சு வரலாற்றாசிரியர்களின் நாட்குறிப்புகளும் பண்டைய விவரங்களும் அவருக்குத் தகவல்களைஅளித்திருப்பதாக நாவலில் அடிக்குறிப்புகள் சொன்னாலும் ஆசிய நிலப்பகுதியின் பதியப்படாத சமுக அசைவுகளை இருவித நாடுகளின் பொருளிய மாற்றங்களின்மூலம் கற்பனையால் இணைக்க முடிந்திருக்கிறது.

நவீன நாவலின் ஒரு இன்றியமையாத பண்பு என்பதை உலகளாவிய வரலாற்று நிகழ்வுகளால் உண்டாகும் இரண்டாம்கட்ட பாதிப்புகளைச் செரித்துக்கொள்ளும்பாங்கில் உள்ளது. எந்த ஒரு நிகழ்வும் தனித்து இயங்குவதில்லை. அதன் தொடக்கமும் முடிவும் பிறிதொரு நிகழ்வின் நிழலாட்டமாக அமைந்துவிடும். பா.சிங்காரம்எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’ அதன் முழு சாத்தியங்களைப் பயன்படுத்திய முதல் வரலாற்றுப் புனைவு எனலாம். இரண்டாம் நூற்றாண்டு உலகப்போர் சமயத்தில்தெற்காசிய தீவுகளில் பிழைப்புக்காகச் சென்ற செட்டியார்களும் அவர்களிடமிருந்து தேசிய விடுதலை உணர்வு பெற்ற பாண்டியன் போன்றவர்கள் நேதாஜியின்படையில் சேர்ந்து செயல்படுவதன் பின்புலத்தைப் பற்றிய நூல். முதல் வரியிலிருந்தே நாம் அறிந்த தமிழ் மண்ணிலிருந்து மேலெழுந்து உலக அரசியலில் நிகழ்கிறது. அயல் மண்ணில் நடக்கும் இந்தியர்களின் வாழ்க்கை. அதே சமயம் பா.சிங்காரம் தமிழ்மொழியின் சங்கமொழியின் உருவகச் சாத்தியங்களைக் கொண்டு தனது புனைவுமொழியை உருவாக்கியுள்ளார். யதார்த்தபாணியிலும் சிறு துண்டுகளான வசனங்களுக்கு இடையே தமிழ் கற்பனாவாத அழகியல் சாத்தியங்களை ஏற்றிருப்பதால்அவரது நாவல் ஒரு செவ்வியல் தளத்தை எட்டிவிடுகிறது. நீலக்கடல் தனது மொழியின் யதார்த்தத்தளத்தை எங்கும் மீறவில்லை. அதன் அழகியல் சமநிலையானமொழியில் ஒரு வரலாற்றுக்காலத்தை நம் கண்முன்கொண்டு வந்து நிறுத்துவதில் அமைந்திருக்கிறது. அதற்கு உதவிய சுட்டுநூல்களை நாவலின் அடிக்குறிப்புகளாகக்கொடுத்திருப்பதினால் இது வரலாற்றின் ஆவணக்குறிப்புகளின் சாத்தியத்தையும் ஆசிரியரின் வரலாற்றுப்பார்வை கொடுக்கும் கற்பனையையும் இணைத்துவிடுகிறது. வானம் வசப்படும் இதில் ஆவணக்குறிப்புகளை மட்டும் கொண்டு எழுதப்பட்டிருப்பதையும், நீலக்கடல் எட்டிப்பிடித்திருக்கும் நவீன உலகவரலாற்றின் ஒரு துளியையும்ஒப்பிட்டுப்பார்த்து இதை நாம் புரிந்துகொள்ளலாம். ஜெயமோகன் எழுதிய பின் தொடரும் நிழலின் குரல் இதுபோன்று இருகுதிரைச் சவாரி செய்திருப்பதையும் நாம்கல்லுக்குள் ஈரம் அல்லது மாலனின் ஜனகனமண போன்ற நாவல்களின் கற்பனையற்ற நடையோட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

நன்றி: சொல்வனம் இதழ் 172 18-6-2017

பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 3 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி)

 

GettyImages-520718981-Eபிரான்சு நாட்டின் பதினேழாம் நூற்றாண்டு பதினான்காம் லூயியின் நூற்றாண்டு என்றால் மிகையில்லை. 1638 தொடங்கி 1715 வரை அவர் ஆட்சி செய்த தாக வரலாறு சொல்கிறது. ஏற்கனவே கூறியிருந்ததைப் போல அவர் பட்டத்திற்கு வந்தபோது  வயது ஐந்து.  பதின்மூன்றாம் லூயியைப்போலவே தொடக்கத்தில் பிரதிநிதித்துவ ஆட்சி. இங்கும் மகனுக்குப் பதிலாக தாயின் ஆட்சி, ஆலோசகர் கார்டினல் மஸாரன். மஸாரன் வரிவிதிப்புமுறை கடுமையான எதிர்ப்பையும் சந்தித்த து, அதன்காரணமாக தாயும் மகனும் தங்கள் இருப்பிடத்தை பாரீஸ் வெர்ஸாய் பகுதிக்கு பாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. பதினான்காம் லூயி உண்மையில்  பட்டத்திற்கு வந்து  23 ஆண்டுகள்  கழித்தே அரசு பொறுப்பேற்றார்., அதாவது மஸாரன் இறப்பிற்குப் பின்னர்.  காலம் கடந்து அரசு பொறுப்பேற்றபோதும் ஆட்சி அதிகாரம் இரண்டிலும் தம் அடையாளத்தைப் பதிக்க அனைத்துவகையிலும் செயல்பட்டார். பிரான்சு நாட்டின் ஆட்சி பரப்பு ஐரோப்பாவில் மட்டுமின்றி, காலனி ஆதிக்கத்தின் மூலம் பிறநாடுகளிலும் காலூன்ற ஆரம்பித்தது. இந்தியாவில் பிரெஞ்சுக் காலனி ஆதிக்கம் உருவானதும் இவர் ஆட்சியின்போதுதான். உள்நாட்டிலும் ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராக களையெடுப்பை நடத்தினார்.. அவருடைய அன்னையின் பிரதிநிதித்துவ ஆட்சியில் செல்வாக்குடனிருந்த நிதி அமைச்சர் ஃபூக்கே என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தார். இவர் காலத்தில் பிரெஞ்சுக் கலயும் இலக்கியமும் கடந்த காலத்தினும் பார்க்க பெரும் பாய்ச்சலைக்கண்டன.

பதினேழாம் நூற்றாண்டு கலை இலைக்கிய போக்கை முற்காலம் பிற்காலம் என இருவகையாகப் பிரிக்கலாம் . இவ்விரண்டு பிரிவிலும் தடம் பதித்த ஆளுமைகள் என்கிறபோது ரெனே தெக்கார்த், பிலேஸ் பஸ்க்கால், லா ஃபோந்த்தேன், மொலியேர், புவாலோ, ராசீன் என பல  பெயர்களை நினைவுகூறமுடியும். அனைவருமே உலகப் புகழ்பெற்றவர்கள். இவர்களைத் தவிர இந்த நூற்றாண்டில் வழக்கிற்கு வந்த வரம்பற்ற சுதந்திரம்(Libertinage), தொன்மம்(le Classicisme), ழான்ழெனிஸம் (le Jansenisme) எனும் தீவிர சமயநம்பிக்கை,.போன்ற சொற்களையும் புரிந்து கொள்ளவேண்டும்.

 

கலைச்சொற்கள்

. கிளாஸிஸம் (Le Classicisme) என்ற சொல்லை  ‘antique’  என்ற சொல்லோடு இணைத்து தொன்மம் எனப் பார்க்கும் வழக்கம்  தமிழில் மட்டுமல்ல ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளிலும் உள்ளது. ஆனால் கிளாசிஸம் சொல் முக்கியத்துவம் பெற்ற பதினேழாம் நூற்றாண்டில் அதில் ஓரளவிற்குத்தான் , நியாயமுண்டு. முதலாவதாக ‘Classicus’ என்ற இலத்தீன் சொல்லுக்கு ‘மேட்டுக்குடியினருக்குச் சொந்தமானது’ எனப் பொருளாம். சமூகத்தில் மேன்மக்களின் நன்மதிப்பை பெறவேண்டி ஒரு வித அழகியல் நெறியை  தங்கள் படைப்புகளில் படைப்பாளர்களில் ஒரு சிலர் கடைபிடிக்கின்றனர். அந்த அழகியலின் பண்புகளாக  இக்கிளாசிஸ்டுகள்  தங்கள் கலை இலக்கிய படைப்புகளில் முன்னெடுத்தவை :’ஒழுங்கு மற்றும் இசைவு’,  ‘மேன்மை மற்றும் எளிமை’, ‘தெளிந்த சிந்தனை’ மற்றும்  பாரம்பர்ய பண்பாட்டை உயர்த்திபிடித்தல். தவிர இப்பிரிவினர் தங்கள் முன்மாதிரியாக  இலத்தீன் மற்றும் கிரேக்க படைப்பாளிகளையும் அவர்களின் படைப்புக்களையும் எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் மிகச்சிறந்த படைப்புகளைக் கிளாசிக்  என அழைத்தனர்.

கிளாசிஸத்தை வரையறுக்க முயன்றவர் புவாலோ(Boileau) அவருடைய கவிதைக் கலை(Art poétique) கிளாசிஸத்தைக் கீழ்க்கண்டவகையில் அடையாளப்படுத்துகிறது :

– இலக்கியகலை என்பது மனிதர் இயல்பின் சாயல்.

–  சீர்மை என்பது உண்மை. உண்மையைக் கலை இலக்கியத்தில் கையாளுவதே மகிழ்ச்சி அளிக்க வல்லது.

– நியாயமென்று உண்மையை ஏற்பது அது நம்பகத்திற்கு உரியதாக இருக்கிறபோதுதான்.

 

. ழான்ழெனிஸம்(le Jansenisme) 1640 ல் கொர்னேலியுஸ் ஜான்ஸன் (Cornelius Janson) என்ற சமயகுரு(இலத்தீன் மொழியில் ழான்செனியுஸ் (Jansénius)), புனித அகுஸ்த்தின் பெயரால் (Saint Augustin) அகுஸ்த்த்னிஸ் (Augustinus)  என்ற நூலை எழுதினார். நூல் முழுக்க புனித அகுஸ்த்தின் போதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் அடியொற்றி உருவானதே ழான்ஸெனிஸம். இவ்வியக்கத்தினர் போர்-ரொயாலை (Port-Royal) தலைமைப் பீடமாக அமைத்துக்கொண்டு  செயல்பட்டனர் .  பதினாறாம் நூற்றாண்டில் புரோட்டஸ்டண்ட்  என்கிற சமய சீர்திருத்தம் கிறித்துவ மரபுக்கு எதிராகப்  புதிய சிந்தனைக்கு வித்திட்டதைத் தொடர்ந்து அவ்வப்போது கத்தோலிக்க மதத்திற்குள்ளும் புணரமைப்புக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன. புரோட்டஸ்டண்ட்களைத் தீவிரமாக எதிர்த்த பதினேழாம் நூற்றாண்டில் செல்வாக்குடனிருந்த வரம்பற்ற சுதந்திர அபிமானிகளின் போக்கைக் கண்டித்த, மதச் சீர்திருத்தச் சிந்தனைகளை அனுமதிக்க விரும்பாத  எதிர் சீர்திருத்த கருத்தியங்களில் (Contre-Réforme)ஒன்றாக ஜான்ழெனிஸத்தைக் கருதவேண்டும். மனிதர்கள் இயல்பிலேயேஅறநெறி பிறழ்ந்தவர்கள்  எனவே தேவனின் கருணையின்றி இரட்சிக்கப்பட சாத்தியமில்லை என ழான்ழெனிஸம் கூறியது. இப்போதனை மனிதர்களுக்கு நம்பிக்கை அளித்த இயேசு சபையினரின் கொள்கைக்கு எதிராக இருந்தது, இதனால் அப்போதையை பிரெஞ்சு அரசின் விரோதத்தையும் சம்பாதித்துக்கொண்டது. பாரீஸ் நகரம் முதலான முக்கிய பேராயர்களின் ஆதரவு இவ்வியக்கத்திற்குக் கிடைத்ததால்  கத்தோலிக்க மதத்திற்குள் ஒரு சிறு பிரிவினரின் இயக்கமாக கருதவும் கூடாது. பதினேழாம் நூற்றாண்டில் பிரெஞ்சு அரசாங்கத்தை வழி நடத்திய கார்டினல் ரிஷ்லியெ(Richelieu), அவர் இறப்பிற்குப்பின்னர் கார்டினல் மஸாரன்(Mazarin) ஆகியோரின் பகைமையைச் சம்பாதித்துக்கொண்ட இயக்கம், எனவே அப்போதைய முடியாட்சியின் சமய கொள்கைக்கு  எதிரானதொரு அரசியல் அமைப்பென்றும் இவ்வியக்கத்தினரைக் கருதலாம். .

. வரம்பற்ற சுதந்திர அபிமானிகள்(Libertins) : சமூதயாத்தின் பெருவாரியான மக்கள்  அறம், ஒழுங்கு என்று கொண்டிருந்த நம்பிக்கைக்கு மாறாக  சிந்தனை, செயல், புலன்கள் அனைத்திலும் வரம்பு மீறலை நெறியாகக் கொண்டிருந்த  அமைப்பினர். இதன் உச்சமாக பதினெட்டாம் நூற்றாண்டு பாலுறவுகளில் கண்மூடித்தனமான அத்துமீறல்களுடன் முடிவுற்றது. Libertinage என்ற சொல்லுக்கு சமயம் மற்றும் சமூகமரபிலிருந்து விடுதலை அல்லது அதற்கான உரிம ம் (Licence de l’esprit en matière de pensée religieuse et mœurs) என்று பொருள். பதினெட்டாம் நூற்றாண்டிலும் இக்கோட்பாடு செல்வாக்கினைப் பெற்றிருந்தபோதிலும், பதினேழாம் நூற்றாண்டு இதன் ஆரம்பம். மனிதர்களின் இயற்கைப் பண்பை தத்துவமாக கட்டமைக்க நடந்த முயற்சி. குறிப்பாக 1620ல் மேட்டுக்குடி இளைஞர்களைப்பெரிதும் கவர்ந்த  இச்சிந்தனைகளை இலக்கியவெளிக்கு அழைத்துபோனவர் தெயோஃபில் தெவியோ(Théophile de vieu). சமயத்திற்கு எதிரான கிளர்ச்சி, சமூக நெறி மீறல் இச்சுதந்திர சிந்தனையை வளர்த்தெடுக்க உதவின. தவிர பதின்மூன்றாம் மற்றும் பதினான்காம் லூலிகளின் தொடக்க கால பிரதிநிதித்துவ அரசியல் சூழலும் பிரபுக்கள் குடும்ப இளைஞர்களின் வரம்பற்ற போக்கிற்குக் காரணமாயின. இம்மனநிலை இலக்கியம், நாடகம் ஆகியவற்றிலும் எதிரொலித்தது வரம்பற்ற சுதந்திர அபிமானிகளில் தவிர்க்கமுடியாதபெயர் பதினெட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த மார்க்கிஸ் தெ சாத்(Marquis de Sade) என உலகம் அறிந்த  பிரான்சுவா தெ சாத்.

.பிரெஸியஸ் (Précieuse) அல்லது பெருந்தகைப் பெண்கள் :பதினேழாம் நூற்றாண்டில் ராம் பூய்யே விடுதி அல்லது Hôtel de Rembouillet வில் இலக்கிய உரையாடலுக்கென கூடும் மரபு உருவானது. அறிவு பூர்வமான இவ்வுரையாடலில் இலக்கியம், பண்பாடு, கலை முதலான விடயங்கள் விவாதிக்கப்பட்டன. மேட்டுக்குடிபெண்கள், கல்விமான்கள், கலை இலக்கிய அபிமானிகள் பங்கேற்றனர். இப்பெண்களே  ‘Précieuse’ என அழைக்கப்பட்ட னர். நாகரிகமாக, நாசூக்காக, இன்னாததைத் தவிர்த்து, இனியதைச் சொற்களிலும் உரை பொருளிலும் தேர்வு செய்தவர்கள். உயர்ந்த உள்ளமும் நல்லறிவும் கொண்ட ரம்பூய்யெ சீமாட்டி , நான்காம் ஹாரியின் அவையில் சில பிரபுக்களின் இழி நடத்தையில்  வெறுப்புற்று அவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட இதனை ஆரம்பித்து வைத்ததாகக் கூறப்படுகிறது.  தமிழில் இடக்கரடக்கல்  என்றொரு வழக்குண்டு. பொதுவிடத்தில், சபைகளில், பலர் முன்னிலையில் பேசும்பொழுது  சிலசொற்களை வெளிப்படையாக கூறுவது நாகரீகமல்ல என்று கருதி மாற்று சொற்களை உபயோகிக்கும் மரபு. இப்பெண்மணிகளும் அவ்வாறே அநாகரீகம் எனக் கருதும் சொற்களுக்கு மாற்றுச் சொற்களை தங்கள் உரையாடலில் கையாண்டனர்.

 

கலை இலக்கியம் :

நாடகம்

Opéra dijjonபிரான்சு நாட்டில் இன்று  சின்னசிறு நகரங்களில்கூட ஒபேரா அரங்கு,, நாடக அரங்கு, கலை நிகழ்ச்சி அரங்கு என உள்ளன. வாரம் தோறும் நிகழ்சிகள் இருக்கின்றன. பெரிய  நகரங்களில் இவ்வரங்குகளின் எண்ணிக்கையும் அதிகம். தொழில் முறை நாடக க் கலைஞர்களைத் தவிர்த்து, திரைப்பட நடிகர்களும் அவ்வப்போது  நாடகங்களில் நடித்து வருகின்றனர். தங்கள் வாழ்நாளில் மேடையேறாத பிரெஞ்சு நடிகர் நடிகையை பிரெஞ்சு திரைப்பட உலகில் காண்பது அரிது.

தொடக்கத்தில் நாடகக்கலை உயர்மக்களுக்கான தல்ல என்ற கருத்து  பிரெஞ்சு சமூகத்தில்  இருந்தது. பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை நாடகங்களை நடத்தியவர்கள் நாடோடி மக்கள். இவற்றின் பார்வையாளர்களாக இருந்தவர்கள்  அடித்தட்டுமக்கள், போதிய கல்வி அறிவு பெறாதவர்கள்.  எனவே இநாடகப் படைப்புகள் மோசமான வசன ங்கள், கீழ்த்தரமான உடல்மொழிகள் என்றிருந்தன.  இந்நிலமை பதினேழாம் நூற்றாண்டின்  பிற்பகுதியில்  மாறிற்று. கல்வியாளர்கள், அரசர் உட்பட பிரபுக்கள், அரசவையிலிருந்த மூத்த குடிமக்கள் , கலை இலக்கிய அபிமானிகள் பார்வையாளர்கள் ஆனார்கள்., இன்றளவும் நிலைமையில் மாற்றமில்லை.

வெகுகாலம் தொட்டே  பிரெஞ்சு சமூகம் ஒழுக்கம், புதிர், மடமை, எள்ளல் ஆகியவற்றை மையப்பொருளாகக் கொண்ட விடயங்களை ஆராதிப்பதில்  சோர்வுறாமல் இயங்கியவர்கள். மன்னர் அவைகளில் ஒரு பிரிவினரை, வருத்தப் படாத மனிதர்கள் என்ற பொருளில் ‘Les enfants sans souci’ என்றே அழைத்தனர். இவர்களுடன் பேரார்வலர்கள் என்ற அமைப்பினர், தொழிலாளர்கள், குட்டி பூர்ஷ்வாக்கள்,தொழில்முறை சாரா நடிகர்கள் ஆகியோரும் இணைந்துகொண்டனர்.  சமூக ஒழுக்கம், மரபு இவற்றைக் கேலி செய்யும் அங்கத நாட கங்களில் இதற்கு முந்தைய நூற்றாண்டுகளுக்கு அனுபவங்கள் உண்டென்கிறபோதும், தீவிரமான நாடக ங்கள் குறிப்பாக துன்பவியல் நாடகங்கள் அரங்கேறியதும், அரசு மற்றும் பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்றதும் பதினேழாம் நூற்றாண்டே.  மொலியேர், பிலாந்த்ரூ போன்றவர்கள் தங்களுக்கென நாடக க் குழுவும் வைத்திருந்தனர். அரசு இவர்கள் நாடகங்களுக்குப் பயிற்றுப் பட்டறைகளையையும்  உள்ளரங்கங்களையும் தானமாக அளித்தது.   எனினும் கிறித்துவமத த்தினர், (சீர்திருத்த சபையினர் உட்பட) நாடக த்துறையினரைச் சமூகத்திற்கு எதிரானவர்களாகப் பார்த்தனர். அவற்றை சமயம் மற்றும் சமூக நெறிகளுக்கு முரண்பட்டவையென கருதி , நாடகத்துறை சார்ந்தவர்களுக்கு சமய ச் சடங்குகள் மறுக்கப்பட்டன. கல்லறையின் கதவைக்கூட அடைத்தார்கள், பாதிக்கப்பட்டவர்களில் மொலியேரும் ஒருவர்.

அ. பியர் கொர்னெய் (Pierre Corneille) 1606 -1684

Pierre Corneilleஇலக்கிய அபிமானிகளால் அங்கீகரிக்கப்பட்டிராத மேடை நாடகங்களுக்கு முதன்முதலாக கலை வடிவம் தந்தவர் பியர் கொர்னெய். பிரெஞ்சுத் துன்பவியல் நாடகங்களின் தந்தையும் கூட. முதல் நாடகம் 1629ல் மேடையேற்றப்பட்டது. 16ம் நூற்றாண்டைச்சேர்ந்த  அலெக்ஸாண்டர் ஹார்டிக்கு(Alexanre Hardy) இதை அர்ப்பணித்தார். கொர்னெய் என்றதும் நம் நினைவுக்கு வரக்கூடிய முதற்படைப்பு ‘Cid’ அடுத்தது’Pompée’.

1637 ல் ‘ le Cid ‘ மேடைக்கு வந்தது. இந்நாடகம்  ருவான்(Rouen) பிரபுஅவையைச் சேர்ந்த  ஸ்பானிய வம்சாவழியினரான  ரோட்ரிக் தெ ஷலோன்(Rodrigue de chalon)பிரபு , ஸ்பெய்ன் நாட்டைச்சேர்ந்த கிய்யென் தெ காஸ்த்ரோ (Guillén de Castro) ஸ்பானிய மொழியில்  எழுதிய  இந்நாடகத்தை கொர்னெய்க்கு  அறிமுகப்படுத்தியதாகவும்,  எனவேதான் கொர்னெய் பிரெஞ்சில் இந்தக் கவிதை நாடகத்தை எழுத முடிந்தது என்ற கதையுமுண்டு.  ரொட்ரிக்  தெ ஷலோன் அறிமுகப்படுத்தியது குறித்துச் சான்றுகள் இல்லை என்கிறார்கள். ஆனால்  ஸ்பெய்ன் நாடக ஆசிரியர் கொர்னெய் தமது நாடகத்தைத் திருடியதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இப்பிரச்சினை தவிர, மெரே (Mairet) போன்ற நாடகத்துறை சார்ந்த சிலர்  நாடகக் கலைக்கென  உள்ள சிறப்பு அம்சங்களை கொர்னெய் பின்பற்றவில்லையென தூற்றவும் செய்தனர். . பதின்மூன்றாம் லூயி அரசின் செல்வாக்குமிக்க கார்டினல் ரிஷ்லியெவின் ஆதரவும் கொர்னெய் எதிரிகளுக்கு ஆரம்பத்தில் கிடைத்தது. இப்பிரச்சினையால் மூன்றாண்டுகாலம் சோர்வுற்றிருந்த கொர்னெய் 1740 ல் புத்துணர்வுபெற்றவராய் மீண்டும் நாடக உலகிற்கு வருகிறார்.  தொடர்ந்து  இரண்டு ஆண்டுகள், எழுதப்பட்ட நாடகங்கள் அனைத்திற்கும் வெற்றியும் புகழும் பெருமளவிற்குக் குவிந்தன. இதற்கிடையில்  பிரெஞ்சு அகாதெமிக்கு உறுப்பினராகவும் ஆனார். எனினும் 1650ல் எழுதப்பட்ட நாடகம் தோல்வியைத் தழுவ, மொழிபெயர்ப்பொன்றில் கவனம் செலுத்துகிறார்.  பின்னர்  பிரெஞ்சு நாடகத்துறையில் ராசின் (Racine) என்ற இளைஞரின் வரவு அவரது புகழை மங்கச் செய்த து எனலாம்.  கொர்னெய்யுடைய சமகாலத்தவரான லா ப்ருய்யேர்(La Bruère),  « மனிதர்கள் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி அவர்களைப் படைத்தவர் »  என கொர்னெய்பற்றிக் கூறுகிறார்.

 

. ராசின் (Jean Racine) -1639-1699

ழான் ராசின் என்கிற ராசின் இந்த நூற்றாண்டின் மற்றுமொரு புகழ்பெற்ற நாடக ஆசிரியர். மிகவும் இளையவயதில் பெற்றோர்களை இழந்தவர்.தொடக்கத்தில் கவிதைகளை மட்டுமே எழுதிவந்தவர். இவருடைய முதல் துன்பவியல் படைப்பு La Thébaïde. இந்நாடகத்தில் மொலியேர் நடித்துள்ளார்.மொலியேருக்கும் இவருக்குமான ஆரம்பகால நட்பு பின்னர்  கசந்த து. ராசின் எழுதிய இரண்டாவது நாடகம் மகா அலெக்சாந்தர் . இநாடகத்தை மொலியேர் நாடக க்குழு மேடையேற்ற சம்மதம் பெற்றது. ஆனால் அதனை அவர்கள் சரியாகச் செய்யவில்லை என்று ராசினுக்கு வருத்தம். இக்கோபம் இருவர் விரிசலுக்கும் காரணமாயிற்று. ராசினுக்குப் புகழ் தேடித்தந்த நாடகம் Phèdre. கி.பி 1667லிருந்து தொடர்ந்து  பத்தாண்டுகள் ராசின் எழுதிய நாடகங்கள் அவருக்குப் புகழைத் தந்தன. பிரெஞ்சு அகாதெமி உறுப்பினர் ஆகும் வாய்ப்பு இவருக்கும் அமைந்த து. இவருடையநாடகங்களில் முக்கியமானவை : Andrmaque, Britannicus  Bérénice , Bajazet  முதலியன.: « மனிதர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படி படைக்கிறவர் » என ராசினை புருய்யேர் மதிப்பிட்டுள்ளார்.

 

இ. மொலியேர் ((1622-1673)

Molière  மொலியேர் (Molière )என அழைக்கபட்ட  ழான் பப்திஸ்த்  பொக்லியன் (Jean-Baptiste Poquelin), பிரெஞ்சு நாடக உலகில் முக்கியமானவர். இன்றளவும் பிரெஞ்சு நாடக க் கலை விருதுகள் இவர் பெயராலேயே வழங்கப்படுகின்றன. எழுத்து இயக்கம் நடிப்பு என நாடகத்தின் அச்சாணியாக செயல்பட்டவர். நாடகத்திற்காக க் கடன்பட்டு அதனை அடைக்க முடியாது சிறையிலிருந்த அனுபவமும் அவருக்குண்டு. புகழ்சேர்த்த முதல் நாடகம் Les Précieuses ridicules (1659). இவரது நாடகங்களுக்கு நாட்டின் பெருவாரியான மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவைக்கண்ட அரசர் இரண்டு நாடக அரங்குகளை  நன்கொடையாக அளித்தார். இவ்வரங்கங்களில் மேடையேற்றப்பட்ட நாடகங்கள் தொடர்ந்து  வெற்றியை அளித்தன. எனினும் 1664ல் மேடையேறிய ‘Tartuffe’ம் 1665ல்  மேடைகண்ட ‘Don Juan ‘  ம் அரசாங்கத்தின் விரோதத்தைச் சம்பாதித்துக்கொடுத்தன. எனினும் அரசர் தனிப்பட்டவகையில் மொலியேரின் நாடகங்களுக்கு தமது ஆதரவைத் தந்தார். கி.பி 1673 ஆம் ஆண்டு காசநோயினால் இறக்குவரை நாடங்கள் எழுதுவதையும் அவற்றில் நடிப்பதையும் நிறுத்தியவரல்ல. நகை முரணாக அவர் மேடையேறிய  இறுதி நாடகத்தின் பெயர் Le Malade imaginaire (பாசாங்கு  நோயாளி  ). மனைவியை இழந்த கணவன், இரண்டாவது  மணம் புரிந்துகொள்கிறான். ஆர்ரோக்கியமாக இருக்கிறபோதும்  தானொரு நோயாளி என சந்தேகித்து வாழ்பவன். பணிப்பெண் யோசனையின் பேரில்  இறந்த தாக நடிக்கும்போதுதான் இரண்டாம் மனைவியைப் புரிந்துகொள்ள முடிகிறது. மருத்துவர்களை எள்ளலுடன்  கண்டிக்கும்  நாடகம்.

 

(தொடரும்)

வாகீசமும் வயிற்றுப் பாடும்! நாஞ்சில்நாடன்

Nanjil Nadan

சாதிச் சங்கங்கள்

தத்தெடுக்கின்றன

தம் படைப்பாளரை

முற்போக்கு முகாமெலாம்

தத்தம் உறுப்பையே

முன்மொழிகின்றன

மதவாத எழுத்தும்

மதங்களின் அரணில்

மகிமைப்படுவன

நட்புக் குழாம் எலாம்

தன்னினம் பார்த்தே பல்லக்கு சுமக்கும்

உன்னத மானுடப் பண்பெலாம் பேசி

கட்சித் தலைவர் காலடி மண்ணை

நெற்றியில் நீறென நீளப் பூசுவர்

இச்சகம் உரைக்கும் பங்குதாரரை

வாராது வந்த மாமணி என்னும்

வானத்து அமரன் வந்தான் என்றும்

சொந்த இதழில் பரப்புரை செய்வர்

கண்கள் நீலோற்பலம்

காலத்தைத் திருப்பி உதைப்பார்

பின்நவீனத்துவக் கடைசி ரயிலின்

இறுதி இருக்கை

மனையை இனத்தை மதத்தைத்

துறந்து

அடிமைச் சங்கிலி தெறித்த மகத்துவர்

எனப்பல ஆங்கு

குழாய்த் தண்ணீரில் வெண்ணெய் கடைந்து

புத்துருக்கு நெய்யும் எடுப்பர்

நல்ல படைப்பு

வயிற்றுத் தீக்கு மெய்ப்பு படிக்கும்

காய்கறி விக்கும் வாகனம் ஓட்டும்

அடுமனை அடுப்படி பாத்திரம் விளக்கும்

உதிரிப் பாகம் உரசிக் கழுவும்

செங்கல் சுமக்கும் செருப்பு தைக்கும்

நின்று கிடக்கும் இலவச வரிசையில்

நாற்சந்தியை நடந்து கடக்கும்

நாதியொன்று இன்மையால்!

உயிர் எழுத்து ஏப்ரல் 2017

நீலக்கடல் – பிரெஞ்சு இந்தியக் காலனி – மொர்ரீஸியஸ் – ரா.கிரிதரன்

IMG_4504(சிற்றிதழ்களைப்போலவே இணைய இதழ்களும் சிறந்த தமிழ்ப்பணி ஆற்றிவருகின்றன என்பது நாமறிந்ததுதான்.  அவற்றில் ஒன்றான சொல்வனம் இதழ்  தொடக்க காலம் முதலே தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. இதழை வாசிக்கிறவர்களுக்கு ர.கிரிதரன் என்ற பெயர்  மிகவும் பரிச்சயமானது. கட்டுரைகள்,  சிறுகதைகள் என்று தொடர்ந்து தீவிரமாக எழுதிவருகிறார். வாசிப்பின் அடிப்படையில் ஒரு படைப்பை அணுகும் குணமிருப்பின் உங்கள் புத்தக அலமாரியில் எதிர்காலத்தில் அவர்  இடம்பெறக்கூடியவர்.    விரைவில் சிறுகதைதொகுப்பொன்று வரவிருக்கிறது.

ர.கிரிதரன் இலண்டனில்  ஐ.டி துறையில்  பணியாற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த  இளைஞர், ஆங்கிலம் தமிழ்  இரண்டிலும் எழுதக்கூடியத் திறமை, பிரெஞ்சும் ஓரளவு  படித்திருக்கிறார் .  புதுச்சேரி எழுத்தாளர்கள் பற்றிய ஒரு சிறப்பிதழை கொண்டுவர இருப்பதாக கூறியிருக்கிறார். தற்போது பிரெஞ்சு –  இந்திய நாவல்கள் என்ற தொடரை சொல்வனத்தில் ஆரம்பித்திருக்கிறார். முதல் கட்டுரை நீலக்கடல் நாவல் பற்றியது. நீலக்க்டல் குறித்து  திருவாளர்கள் பிரபஞ்சன், அ.பசுபதி, ந.முருகேசபாண்டியன்  அண்மையில் மறைந்த , நான் என்றென்றும் நினைவில் நிறுத்தவேண்டிய வே. சபாநாயகம், ரெ.கார்த்திகேசு  ஆகியோரும் எழுதியுள்ளார்கள்.  ர.கிரிதரன் பார்வை ஆழமானது.)

 

நீலக்கடல் – பிரெஞ்சு இந்தியக் காலனி – மொர்ரீஸியஸ்

ரா.கிரிதரன்

நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல்’ – ஒரு நெடிய கனவைப்பற்றிய புனைவுக்கதை. கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளாக ஆண்டு வந்த துருக்கியர்கள், பிரெஞ்சு, போர்ச்சுகீசியர்கள், ஆங்கிலேயர்கள் என அனைத்தையும் தொட்டுச் செல்லும் கனவுக்கதை. கிழக்காசிய நாடுகளின் வரலாற்றைப் பின்னிப்பிணைக்கும் கதை.  காரண காரியங்களை ஆராயப்புறப்பட்டால் யதார்த்தமும் சிக்கலான நூல்கண்டுதான் என்றாலும் அது பல நேரங்களில் நேரடியான அர்த்தங்களைக் கொண்டது. ஆனால் கனவு எட்டமுடியாத ஆழம் கொண்டது. நாம் அறியாத எல்லைகளுக்குச் சென்று புலப்படாத ஒரு வலைப்பின்னலை உருவாக்கும் வெளி அது. வரலாற்றின் நானூறு ஆண்டுகள் கனவு வழியாக ஊடுருவி அல்லற்படும் ஆளுமைகளைப்பற்றியது இக்கதை. பிரெஞ்சுத் தீவும், புதுச்சேரி, சந்திரநாகூர் பகுதியின் கும்பனியரசின் வரலாற்றை சொல்வதோடு மட்டுமல்லாது அந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களின் இரக்கமற்ற சூறாவெளியாக அலைக்கழிந்த அடிமை வாழ்வையும் அதனூடாக வாழ்வின் ஒளிமிக்க தருணங்களையும் ஒருசேரக்காட்டும் படைப்பாகிறது. பிரெஞ்சு காலனிய நகரங்களான புதுச்சேரி, சந்திரநாகூர், காரைக்கால், மாஹே மக்களின் வரலாற்றை எழுதிய பிரபஞ்சனின் வானம் வசப்படும், மானுடம் வெல்லும், கண்ணீரைக் காப்போம் போன்ற புதினங்களின் மீது ஏறி நின்று அவற்றையும் விஞ்சும் ஒரு வரலாற்று நாவலை நாகரத்தினம் கிருஷ்ணா உருவாக்கியுள்ளார்.

 

பதினெட்டாம் நூற்றாண்டின் பிரெஞ்சிந்தியத் தமிழனின் வரலாறும், புதுச்சேரியின் வரலாறும் இணைந்த ஒன்று என்பதுபோல இந்தியப்பெருங்கடல் தீவுகளான மொர்ரீஸியஸ், ரெயூனியன் போன்றவற்றின் வரலாறு பரெஞ்சிந்திய வரலாற்றோடு இணைந்த ஒன்று தான். உலக நாடுகளை வரைந்தவன் எஞ்சிய கடைசி சொட்டில் உதரிய சிறுதுளியாக ஆப்பிரிக்க கண்டத்துக்கருகே உள்ள மொர்ரீஸியஸ் ஆப்பிரிக்கர், சீனர், இந்தியர் மற்றும் ஐரோப்பியர்கள் சேர்ந்து வாழும் தீவு. இந்தப்பட்டியலில் இருக்கும் ஒவ்வொருவரின் வலசைப்பயணத்தைத் தொகுத்து எழுதப்புறப்பட்டால்  ஆசியத்தீவின் கடந்த ஐநூறு ஆண்டுகளின் குறுக்குவெட்டு வரலாற்றுச் சித்திரம் கிடைத்துவிடும். கடலாடித்தள்ளிய இந்தியப் பெருங்கடல் பயணங்கள் மிக அற்புதமான வரலாற்றுக்கு இடம் கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சரடைக்கொண்டு கூலிக்காகச் சென்றவர்களான தமிழர்களின் கதையை ஒரு வரலாற்று நாவலாக மாற்றியுள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா

வெளிவந்த கடந்த பன்னிரெண்டு வருடங்களில் தமிழ் இலக்கிய சூழலில் இந்த நாவலுக்கான வரவேற்பு சொல்லிக்கொள்ளும் விதமாக இல்லை. அதற்குப் பல காரணங்களை நாம் சொல்லமுடியும் என்றாலும் அவை எதுவும் நாவலின் உள் இயங்குமுறையில் தேடமுடியாது என்பது இங்கு முக்கியமானது! வாழ்வாதாரத்தைத் தேடி பயணங்கள் மேற்கொண்டு புது நிலத்தையும் நவயுக கலாச்சாரங்களையும் தைரியமாகச் சந்தித்து அகதியாக அலைந்து திரிந்த வாழ்வைக் கூறும் முதன்மையான இடப்பெயர்வு நாவலாக நாம் நீலக்கடலைப் பார்க்கலாம். உலக இலக்கிய வரலாற்றில் எக்ஸோடஸ் வகை நாவல்களின் வரிசையில் தைரியமாக வைக்கக்கூடிய தமிழ் படைப்பு இது.

பெர்னார் குளோதன் – எனும் பிரெஞ்சுக்காரனின் – பல வாழ்வுகளோடு பின்னிப்பிணைந்த ஒரு காதலும், தேடலும் நிரம்பிய சரடில் கதை தொடங்குகிறது. நாவல் என்பது காலத்தோடு விளையாடும் ஆட்டம். அதை நீட்டியும் குறைத்தும் செலுத்தப்படும் பல கண்ணிகள் நாவலில் உண்டு. இதில், புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடிடூட்டில் இந்தியவியல் ஆராய்ச்சிக்காக பழைய ஓலைச்சுவடுகள், சித்தர் பாடல்கள் ஆய்வில் இருபதாம் நூற்றாண்டில் ஈடுபடும் பெர்னார் குளோதன் ஒருவன். கனவில் அவனை அலைக்கழிய விடும் பெண் உருவத்தைப் பிந்தொடர்ந்து அவன் சென்று சேரும் இடம் பதினெட்டாம் நூற்றாண்டு மொர்ரீஸியஸ். பதினெட்டாம் நூற்றாண்டு பெர்னார் குளோதன் தனது கும்பனியாரின் வெறுப்பையும் மீறி மலபாரிப்பெண்ணான தெய்வானையைக் காதலிக்கிறான். இக்காதல் கனியக்கூடாது என பிரெஞ்சு கவர்னரும் அவரது கூட்டாளிகளும் தடைவிதிப்பது போலவே அவளது தாயார் தன் பெண்ணைப் பற்றிய ஒரு ரகசியத்தைப் பாதுகாப்பதற்காக காதலுக்குத் தடைவிதிக்கிறார்.

இக்கதையின் நுனியைப் பிடித்து இறங்கும் பெர்னார் ஒரு பக்கம் உள்நுழைந்து கதையின் மையப்பாத்திரமாகவும் வலம் வருகிறார். லாபொர்தனே, துய்ப்ப்ளே, ஆனந்தரங்கப்பிள்ளை, பெத்ரோ கனகராய முதலியார் எனப் பல உண்மையான கதாபாத்திரங்கள் கதையில் வருகிறார்கள். பிரபஞ்சனின் வரலாற்று நாவல்களிலும் இவர்களது வருகை இருந்தாலும் மிக முக்கியமான வித்தியாசம் நாகரத்தினம் கிருஷ்ணா முன்வைக்கும் சமரசமற்றப் பார்வை. இக்கதையில் ஆனந்தரங்கப்பிள்ளையும் காலனியாதிக்கத்திற்கு சலாம் போட்டு லாபம் அடைபவராக வருகிறார். அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கும், தனிப்பட்ட சொத்துகளைச் சேர்ப்பதற்கும் எவ்விதமான கீழ்மைக்கும் இறங்கத் தயாராக இருக்கும் அந்நியர் ஆட்சிக்குக் கைகொடுத்து உதவியர்களின் பங்கினால் நமது கைகளிலும் ரத்தம் படிந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை.

நீண்ட நெடிய அந்நியர் ஆளுமைக்கு உட்பட்டு நிலவளமும், மக்கள் வளமும், சகோதரத்துவ பிணைப்பும், பண்பாட்டு சின்னம், கலாச்சார பெருமிதம் என அனைத்தையும் இழந்து நின்ற ஐநூறு வருட கால வரலாற்றைக் காட்டுகிறது இந்த நாவல். விஜயநகர ஆட்சியின் முடிவில் முழுமுற்றாக மத்திய மற்றும் தென்னிந்திய நிலம் துலுக்க ஆட்சி தொடங்கி டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்குக் கைமாறிய சித்திரமும் அதன் சமூக அவலங்களின் நீட்சியும் ஆசிரியர் முன்வைக்கும் முக்கியமான பார்வை. இதனாலேயே இது காலனிய நாட்களைப் பற்றி எழுதப்பட்ட தமிழின் முன்னணிப்படைப்பாக அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட பிரபஞ்சனின் தோளில் ஏறிப்பார்த்ததோடு மட்டுமல்லாது வரலாற்றின் மாறுபோக்குகளை மேலும் நுணுகி ஆராய்ந்து இந்த நாவலை எழுதியுள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. பிரெஞ்சு மொழியில் படித்து எழுதுபவராகவும் இருப்பதால் அவரால் பல காலனிய பிரெஞ்சு ஆவணங்களைத் தேடி வரலாற்றின் இருண்ட பக்கங்கள் மீது மேலதிக வெளிச்சத்தை அளிக்க முடிந்திருக்கிறது. பல சொற்றொடர்கள் பிரெஞ்சிலும் தமிழிலும் கொடுத்திருக்கிறார். அதில் பல தேதியிட்ட வரலாற்று நிகழ்வுகளாகவும் உள்ளன.

நவாப்புகளின் ஆக்கிரமிப்பு முயற்சி மற்றும் மராத்தா மன்னர்களின் ஆட்சியின் போது வகித்த அரசியல் நிலைமையின் பின்புலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் வட ஆற்காட்டு நிலத்தின் மாறும் நிலைமையைக் காட்டியுள்ளார். செஞ்சி, புதுவை, மதராஸ், சந்திரநாகூர், மாஹே, காரைக்கால் எனப் பயணம் செய்தபடி கதை இருந்தாலும் காலனி ஆதிக்கத்தின் கோர முகத்தின் தொடக்கங்கள் பலவற்றுக்கான ஊற்றுமுகத்தை இக்கதையில் நம்மால் பார்க்க முடிந்திருக்கிறது. ஆங்கிலேயர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது பிரெஞ்சு அரசர்கள் கனிவானவர்கள் என்பதை உடைத்துக் காட்டிய பிரபஞ்சனின் வழியில் பல குவர்னர்களின் பதவி மற்றும் பண மோகத்தினால் ஏற்பட்ட சமூக மாறுதல்களைக் காட்டியுள்ளார். சூழ்ச்சி, தந்திரம், பேராசை, மக்கள் நலம் பற்றிய அக்கறையின்மை என அனைத்தும் ஒரு கரிய புகை போல நாவல் முழுவதும் படர்ந்துள்ளது.

00Ooo

கடந்த நானூறு ஆண்டுகளாக பலவகையான அந்நியர் ஆதிக்கத்தினிடையே உருவாகி வளர்ந்த புதுச்சேரி நகரத்தில் இந்தியாவின் பிற பகுதிகளின் பாதிப்பு குறைவே. டச்சு, பிரெஞ்சு, வங்க கலாச்சாரங்கள் பிரதானமாக பாதிப்பை செலுத்தியது எனலாம். பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் டச்சு மற்றும் பிரெஞ்சும் இருபதாம் நூற்றாண்டில் வங்கமும் புதுவையின் தனித்துவத்தை நிறுவியதில் முதன்மையானதாக விளங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டில் செஞ்சி மற்றும் சோழ தேசப்பகுதிகளை ஆண்ட முகலாய அரசுகள் எதிர்மறைவான விளைவுகளை ஏற்படுத்தின. மராத்தியர்களின் ஆட்சியின்போது கலை மற்றும் கலாச்சார தாக்கத்தினால் தஞ்சை மண்ணின் ரசனை விரிவடைந்ததைப் போல பிரெஞ்சு கலாச்சாரம் புதுவை மண்ணுக்கு உரம் சேர்த்தது. இருவித கலாச்சாரங்கள் மோதும்போது ஏற்படும் எதிர்மறையான வீழ்ச்சிகளையும் மீது புதுவை மக்களின் உலகப்பார்வை விசாலமடைந்ததுக்கு இதுவும் ஒரு காரணம். வணிகத்துக்காகக் கால் பதித்த பிரெஞ்சு கும்பனியாரின் அடக்குமுறையும் பேராசையும் ஆங்கிலேய அரசுக்கு எவ்விதத்திலும் குறைவானதில்லை என்றாலும் துய்ப்ப்ளேவைப் போன்ற தலைவர்கள் மக்களின் பண்பாட்டுச் செல்வங்களின் மீது பிடிப்பு செலுத்தி அவர்களது வாழ்வின் தரத்தை முன்னேற்றும் முயற்சிகள் பல செய்தனர். பிரெஞ்சு ஆட்சி ஆங்கிலேயர்களது கொள்ளை ஆட்சியைவிட மனித விரோதத்தன்மை நிறைந்தது என பிரபஞ்சன் தனது முன்னுரையில் எழுதியிருப்பார். அல்ஜீரியா, மொர்ரீஸியஸ் நாடுகளில் பிரெஞ்சு ஆட்சியின் அவலங்களைக் கேள்விப்படும்போது நீதித்துறையின் மீது அவர்களது அலட்சியமும், அடிமை மனிதர்களது மீது கட்டற்ற வன்முறையை அவிழ்த்துவிடுமளவு பேராசையும் அரக்க குணமும் கொண்டவரகள் என்பதை நம்மால் உணர முடியும். காலனிய ஆட்சியாளர்களின் ஒட்டுமொத்த சித்திரம் என்பதால் நாம் ஒருவரை விட மற்றொருவரது ஆட்சி சிறப்பானது என எவ்விதம் சான்றிதழ் அளிக்க முடியும்? உலகம் முழுவதும் நிலவி வந்த அடிமை முறையும், பேராசையின் விளைவால் சக மனிதரைப் புழுவென மதிக்கும் அவலமும், நீதி என்பதே வல்லானின் சட்டம் எனும் நிர்வாக முறையும் எவ்விதத்திலும் ஒப்பீட்டுக்கு உகந்தவை அல்ல. ஆனாலும் காலனியாட்சி காலத்தின் வரலாற்றை ஆராயும் ஆய்வாளர்கள் இன்றும் புதிது புதிதாகப் பல கீழ்மைகளின் சாட்சியங்களை வெளிக்கொண்டுவந்தபடி இருக்கின்றனர் என்றாலும் ஒட்டுமொத்தமாக மானுட வாழ்வுக்கு மேன்மை தரும் சில விஷயங்களுக்கு காலனியாதிக்கம் மறைமுகமாகக் காரணமாக அமைந்திருப்பதைக் கொண்டு நாம் சிலதெளிவுகளை அடைய முடியும்.

கலைஞர்களும் வரலாற்றாசியர்களும் வரலாற்றை காலந்தோறும் வெவ்வேறு வழிகளில் அணுகி வருகின்றனர். பதினெட்டாம் நூற்றாண்டு வரலாற்றிசியர்களின் வரலாற்றுப் பார்வை கொண்ட விழுமியங்களை நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டிலோ இருபதாம் நூற்றாண்டிலோ போட்டுப் பார்க்க முடியாது. தங்கள் வரலாற்றுப் பார்வைக்குத் தகுந்தாற்போன்ற வரலாற்றுணர்வை கலைஞர்கள் மேற்கொள்வர். நீலக்கடல் மற்றும் பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’ ஆகிய இரு வரலாற்று நாவல்களையும் நாம் அணுகி ஆராயும்போது இந்த உண்மை மேலும் பலமடங்கு விரிவடையும்.

நாட்குறிப்பு எழுதி தன் எழுத்தின் மூலம் புதுவை பிரஞ்சு ஆட்சிக்கு நீங்காத இடம் தந்த துய்ப்பளேயின் துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளை பாத்திரத்தை இரு எழுத்தாளர்களும் வெவ்வேறு வரலாற்றுப் பார்வையில் அணுகியுள்ளனர். மானுடம் வெல்லும் பிரபஞ்சன் ஆனந்தரங்கப்பிள்ளையை தனது காலத்தின் விதிகளுக்கேற்ப பிரெஞ்சு கவர்னரிடம் விசுவாசமாக நடந்துகொள்பவராக மட்டுமல்லாது புதுவை ஹிந்துக்கள் மீது பரிவு கொண்டவராகவும் சித்திரிக்கிறார். நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடலைப் பொருத்தவரை ஆனந்தரங்கப்பிள்ளை பிரெஞ்சு அராஜகத்துக்கு ஊமைச்சாட்சியாக நின்ற மற்றொரு உயர்மட்ட ஹிந்துவாக சித்திரிக்கிறார். பிள்ளை ஒரு நேரடியான கதாபாத்திரமாக வராவிட்டாலும், மொர்ரீஸியஸ் தீவிலுள்ள தமிழரின் நிலையையும் அடிமை வாழ்வையும் ஆட்டிவைக்கும் பாவைகளாக விளங்கும் பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் அச்சாணியாக உயர்மட்ட வணிகர்களைக் குறிப்பிடுகிறார். லாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள் அந்நிய ஆதிக்கத்தின் அட்டூழியங்களைக் கண்டும் காணாதிருந்தது அந்த கோர வரலாற்றின் கறையைப் பூசியவர்களாகிறார்கள். இந்த வரலாற்றுப்பார்வையை முன்வைக்கும் நாகரத்தினம் கிருஷ்ணா காலனியாதிக்கத்தின் கோர முகத்தின் மற்றொரு பக்கத்தை ஆழமாகப் பதிந்தவர் ஆகிறார். மானுடம் வெல்லும் நாவலும் காலனியாதிக்க நோயைக் காட்டியது என்றாலும் அந்நியர் ஆட்சியின் பண்முக விளைவுகளை (சாதகமும் உண்டு) அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதில் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடல் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்தியக்கடல் பகுதி கடந்த பத்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக உலகத்தின் மிக முக்கியமான வணிகவழியாக இருந்துள்ளது. ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தின் விதியை மட்டுமல்லாது தொழிற்வளர்ச்சி கண்ட ஐரோப்பிய நகரங்களின் விதியையும் இந்த கடல்பகுதி தீர்மானித்து வந்திருக்கிறது. மனித  வளர்ச்சியில் உறைபனிக்காலம் முதல் மக்கள் கூட்டம் இடப்பெயர்ப்பு நடத்திய முக்கியமான பகுதியும் இதுதான். ஆப்பிரிக்காவும் ஆசியாவும் ஒன்றாக இருந்த நிலப்பகுதி பிரிந்தபின்னர் ஐரோப்பாவின் உறைபனிகாலத்தில் மக்கள் கூட்டமாக இடம் மாறிய காலம் முதல் காலனியாதிக்கக் காலம் வரை தொடர்ந்த நகரும் நாகரிகமாக இது இருந்துவந்துள்ளது. மொர்ரீஸியஸ், ரெயூனியன் எனும் சிறு தீவுகள் ஐரோப்பாவிலிருந்து வரும் பெரு வணிகக்கப்பல்களாலேயே வளர்ச்சியடைந்த பகுதிகள் எனலாம். புயலிலிருந்து தப்பிக்கவும், கடற்கொள்ளையர்களிடம் சிக்காமல் தஞ்சம் பெறவும் இச்சிறு தீவுகள் காலனிய சக்திகளுக்கு உதவியுள்ளது. சூயஸ் கால்வாய் கட்டி முடிக்கப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நன்முனைப் புள்ளியிலிருந்து காற்றின் விசைக்கேற்ப இந்தியாவை அடைவதற்கு முன்னர் இயல்பாக கப்பல்கள் சென்றடையும் தீவு இது. உலக வரைபடத்தில் சிறுபுள்ளியான இத்தீவின் மீது டச்சும்,பிரான்சும், இங்கிலாந்தும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தியதில் மிகச் செழிப்பானது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்து கேமரூன் பகுதியிலிருந்தும் வந்த கூலிகளாலும் அடிமைகளாலும் வளம் பெற்றது மொர்ரீஸியஸ். அங்கு விளைந்த கரும்பு, பருத்தி தோட்டங்களினால் காலனிகளும் செழித்தன. புதுவையிலிருந்தும் தெலங்கானா, வங்கம் பகுதியிலிருந்து வந்த மக்களால் உருவான இவ்வளர்ச்சியின் சித்திரம் நீலக்கடல் நாவலில் மிகச்சிறப்பானப் பகுதிகளாகும். தமிழில் இந்திய தமிழர்களின் Exodus அதாவது இடப்பெயர்வு பற்றிய முதல் நாவலாக அமைந்துள்ளது. காலனியாதிக்கம் எனும் வரலாற்றியலின் மிக முக்கியமான பண்பாட்டு வரலாற்றாவனமாகவும் இது உள்ளது.

இந்திய மக்களின் உலகலாவிய இடப்பெயர்வு என்பது பதியப்படாத இலக்கியம். இலங்கைத் தமிழரின் அகதி வாழ்வு பலவகையில் புனைவுகளாவும், அபுனைவுகளாகவும், வரலாற்று ஆவணங்களாகவும் நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. மிகச் சிறத்த நாவல்களாகவும் அவ்வாழ்கை நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் இந்திய மக்களின் இடப்பெயர்வு பற்றி மிகச் சொற்பமான பதிவுகளே உள்ளன. ப.சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் நாவல்கள் இரண்டாம் உலகப்போர் பின்னணியில் தெற்காசியா தீவுகளில் செட்டியார் கடைகளில் வணிகம் செய்யவந்து இந்திய சுதந்திரப்போரில் நேதாஜியுடன் தோள்கொடுத்து நின்ற தமிழர்களைப் பற்றி ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை நமக்கு அளிக்கிறது. நவீன நாவலுக்கு உரிய இலக்கணத்துடன் அமைந்திருந்ததால் வரலாற்றின் ஊடுபாவுகளுக்குளும் வரலாற்றுப்பார்வை மாறும் விதங்களையும் பண்பாட்டு வீழ்ச்சிகளையும் முழுவதுமாக காட்டவில்லை.

(தொடரும்)

 நன்றி  : சொல்வனம்

http://solvanam.com/?p=49282

வருந்துகிறேன்

0001

ஈரோடு பல்லவி பதிப்பகம் மற்றும் Kongunadu Publications Pvt.Ltd. இணைந்து தேசிய ஆசிரியர் தின நூல் வெளியீட்டுத் திட்டம் – 2017 என்ற  பொருளின் கீழ் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்த இருப்பதாக  ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அக்கருத்தரங்கத் தலைமைக் குழுவில் எனது பெயரும் இடம்பெற்றிருந்தது. இதில் பிரச்சினை என்னவெனில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்னதாக இப்படியொரு கருத்தரங்கம் குறித்தோ, இதில் கலந்துகொள்ள இயலுமாவென்றோ என்னைக் கேட்டவர்களில்லை.

2015ல்  நடந்த ஒரு நிகழ்ச்சி : திருச்சியில் பேராசிரியர்களும் நண்பர்களுமான  பசும்பொன்,  விஜயராணி இருவரும் உலகத் தமிழ்ச் சங்கம்  சார்பில் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர் . அவ்விழாவில் பேராசிரிய நண்பர் உதயசூரியன்,    தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகம் சார்பில் ஏற்பாடு செய்துள்ள  பொங்கல் விழாவில் கலந்துகொள்ள இயலுமா எனக்கேட்டார்,  பிறகு தொலைபேசியிலும் தொடர்புகொண்டு வற்புறுத்த சம்மதித்துச் சென்றேன். நடந்த நிகழ்ச்சி ஆளும் கட்சியின் மாவட்ட மாநாடு போலவிருக்க, எனது பெயரை குறிப்பிட்டு அழைத்தபோது,  மேடையில் ஏறாமல் பக்கத்திலிருந்த ஒருவரிடம் பேராசியர் நண்பர் உதயசூரியனிடம் மன்னித்துக்கொள்ளச் சொல்லும்படி கூறிவிட்டு அரங்கத்தை விட்டுவெளியேறினேன். அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல வெளி நாட்டுச் சாதனையாளர்களை இக்கூட்டத்திலும் பார்க்கிறேன், அவர்கள் சாதித்தது என்ன என்பதுதான் புரியாத புதிர் ? நாம்  சாதித்தவர்கள் அல்லது சாதிக்கின்றவர்கள் என்று நினைக்கிற  அசலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சாதனையாளர்கள்  பெயர்கள் ஏதேனும் இருக்கின்றனவா எனப்பார்த்தேன்.  மருந்துக்குக் கூட ஒரு பெயருமில்லை ஏமாற்றமே மிஞ்சியது.  எனவே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமில்லையென ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். ஐயோ தமிழினமே !

நா.கிருஷ்ணா

The Great History of French India – Nagarathinam Krishna’s “Neela Kadal” (Blue Sea) – Ra. Giritharan

 

Giri(The author is a young writer, hailed from Pondichery who has written recently this synopsis  as an introductory note about Neelakadal to the  Cambridge Tamil Chair, as per their request)

 

Noted Writer Nagarathinam Krishna’s novel “Neela Kadal” (Blue Sea) –originally published in Tamil in 2005 – is compelling, convincing history of the Tamil diaspora in the last 600 years of Asian history. It runs to more than 500 pages and spans the history of the last five centuries. Being a historical novel, it is also long sighted and global in its theme. It cannot be categorised as a propaganda novel and serves its purpose in giving a cross sectional view of not only the history of the Tamils but also the nature of the colonial force across Asia and the British Isles from the 15th century till early 20th century.

nilakadalThe delightful title of the novel “Neelak Kadal” though rhetoric, brings in perspective the great ocean and its people who have crossed it in search of Power, Wealth and Livelihood. In this aspect, the novel spanning from the 15th century AD to the 20th century enlivens the monumental tale of oppression & morality. This is a thinly veiled account of the French colonies of India from Pondicherry, Mahe, Chandranagore to the French-British Isles of Mauritius & Reunion. Nagarathinam Krishna skilfully intervenes the elements of traditional mythological storytelling and the realms of modern physiology.

The novel is a story of a crumbled dynasty of Madurai Nayakas and their attempt to capture their kingdom amidst all the colonial forces trying to have their share of land. This is told with a historicity of fiercely Islamic rule in its dying age paving way to European colonial forces and how attempts to survive leads to more catastrophe among the Indian kings. Slavery, which was abolished by the British in the initial days of the 19th century, was one of the flourishing trades during the beginning of 18th century.

The novel deals with the life of the Tamils who migrated to Mauritius during the French colonisation of Pondicherry. Many of them were forcefully kidnapped and had to resort to their fate in the small island. All of them are the forefathers of the Tamil community that is currently lively in Mauritius. They were the builders of the island and the main reason for the growth of the capital city, Port Louis. At the same time, these people were the most dominated and subjugated population of Asia. Most of them lived so near to death each day, yet survived to build a vibrant community in the Island.

It is pleasure to read a novel that is philosophical, deals with metaphysical world and at the same time is embroiled with rich characters that span across multiple centuries. Many times it is the good old history repeats itself in its theme, but due to the transcendental nature of the vice it reaches new depths.

Nagarathinam Krishna does not deal with any stereotypical treatment of his characters. Most of his characters are life like and are picked from the lifeline of French-India history. This novel deals with the cultural colonisation of the last four centuries in Asia. This is the beginning of Indian writing on colonisation and its effects, especially in Tamil.1

Nagarathinam Krishna hails from a village in Pondicherry, India. He currently lives in Strasbourg, France. He is a bilingual writer and has authored more than 20 books in Tamil. Some of his popular writing ranges from introducing French Literature in Tamil, Mata Hari history and history of Pondicherry & Gingee. He has also translated many French writers into Tamil and vice versa. His website is:- https://nagarathinamkrishna.com/mukappu/

Neela Kadal

Published by Sandhya Publication, Chennai.

Published Year 2005 https://nagarathinamkrishna.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81

—————————————