இரண்டாம் உரையாடல்
(மாத்தா ஹரி நாவலை முன்வைத்து)
பேராசிரியர் பா. ரவிக்குமார்,
தமிழில் எழுதப்படும் பெரும்பாலான நாவல்கள், யதார்த்ததிற்கு உட்பட்ட நேர்கோட்டு நாவல்களாக இருக்கின்றன. தமிழ் வாசகர்கள் இத்தகைய நாவல்களை வாசிப்பதற்கு என்று பழக்கப்பட்டு விட்டார்கள். ஒருவகையில் தமிழர்களின் வாழ்க்கையேகூட பழக்கப்பட்ட வாழ்க்கைதான். இது ஏன்? இது எதற்கு? இது எப்படி என்பதையெல்லாம் அவர்கள் பெரும்பாலும் சிந்திப்பதில்லை. இந்தக் கூற்று, பெரும்பாலும் எல்லோருக்கும் பொருந்தும். விதிவிலக்குகள் இருக்கலாம். விதிவிலக்குகள் விதிகள் அல்ல. பழக்கப்பட்ட வாழ்க்கை, வாழ்வதற்கு எளிதாக இருக்கிறது. வசதியாக இருக்கிறது. ஏன் இந்த எளிமையும், வசதியும் என்றால் வாழ்க்கையில் நடைபெறும் பல சம்பவங்களை நாம் மறந்துவிடுகிறோம்; அல்லது பலவற்றை மறந்துவிட வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், வாழ்க்கை அதன் தன்மையில் புதிர்கள் நிறைந்தது. அதனாலேயே அழகானது. ரகசியங்கள் நிறைந்தது. ஒரு பள்ளத்தாக்கின் மௌனம் போன்றது.
எந்தக் கதையைச் சொன்னாலும், நாகரத்தினம் கிருஷ்ணா, இந்தப் புதிர்களையும், அழகையும், ஆபத்துகளையும் தன் எழுத்தில் கொண்டுவர நினைக்கிறார்.
‘மாத்தா ஹரி’ தமிழில் எழுதப்பட்ட நேர்கோட்டு நாவல் அல்ல; ஆனால், நேர்கோட்டு நாவலைப் படிக்கின்ற அனுபவத்தைத் தரக்கூடிய நாவல். அண்மைக்காலங்களில் (கடந்த பத்தாண்டுகளில்) தமிழில் எழுதப்பட்ட வித்தியாசமான நாவல்.
நாகரத்தினம் கிருஷ்ணாவின் எழுத்துகளைப் புகழவேண்டும் என்பதற்காக இக் கூற்றைக் கூறவில்லை. தமிழில் எழுதும் எல்லோருமே புகழ்ச்சியை விரும்புகிறார்கள். நாகரத்தினம் கிருஷ்ணா எப்படியோ, எனக்குத் தெரியாது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் எழுத்துகளைக் கவனப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இதைக் கூறுகிறேன்.
இந்த நாவலின் கதை இது; இது இதைச் சொல்கிறது……. அதைச் சொல்லவில்லை என்றெல்லாம் இந்த நாவலைப் பற்றி எதையும் கூறப் போவதில்லை. ஒரு முத்திரைக்குள் இந்த நாவலை அடக்கிவிடலாம் என்றால், அது நாவலாசிரியருக்குச் செய்யும் துரோகமாகிவிடும்.
மாத்தா ஹரி, பவானி, ஹரினி, என்கிற மூன்று பெண்களின் கதையை இந்த நாவலில் சொல்லிச் செல்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா. உண்மையில் கதை சொல்லல் மூலமாக, வாழ்க்கை குறித்து ஒரு விசாரனையை மிக இயல்பாக நடத்தியுள்ளார்.
நாவல் என்பது வெறும் கதையல்ல என்பதை நாம் அறிவோம். கதையின் மூலமாகவும், கதை மாந்தர்களின் மூலமாகவும் வாழ்க்கை பற்றிய பார்வையை நாவலாசிரியரின் முன்வைக்கிறான். சுவாரஸ்யமான கதை சொல்லலின்மூலம், நாகரத்தினம் கிருஷ்ணா வாசகர்களுடன் இணைந்து, வாழ்க்கை குறித்த தேடலை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்.
1917 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட நடனப் பெண்மணியான மாத்தா ஹரியைப் பற்றிய புனைவாகவும், புதுச்சேரியிலிருந்து புறப்பட்டுச் சென்ற பவானி என்ற பெண்ணைப் பற்றிய புனைவாகவும், அவளுடைய வளர்ப்பு மகள் ஹரினியைப் பற்றிய புனைவாகவும் இந்த நாவல் விரிகிறது. இடையில் நிறைய கதைமாந்தர்கள். மாத்தா ஹரியைத் திருமணம் செய்துகொண்ட ராணுவ அதிகாரி ருடோல்ப், மாத்தா ஹரியை நேசித்த அல்லது அவள் அழகில் மயங்கிய ஆண்கள், பவானியைத் திருமணம் செய்து கொண்ட தேவசகாயம், ஹரினியுடன் உறவு கொண்ட சிரில், அரவிந்தன், பவானியின் தந்தை, பாட்டி, தோழி பத்மா, தேவசகாயத்திடம் உறவு வைத்துக் கொண்ட எலிஸபெத், மாத்தா ஹரியின் மண்டையோட்டைத் தேடும் குளோத், பவானியை நேசிக்கும் பிலிப், நாவலின் இறுதியில் வரும் பஸ்கால் என்று ஏராளமான கதைமாந்தர்கள்.
ஆனால் மாத்தா ஹரி, பவானி, ஹரினி ஆகிய மூன்று கதை மாந்தர்களை மையமிட்டுதான் நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குள் நிறைய ஒற்றுமைகள். மாத்தா ஹரி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவள். கணவனால் வஞ்சிக்கப்பட்டவள். தான் தேர்ந்தெடுத்துக்கொண்ட வாழ்க்கையின் காரணமாக, சமூகத்தாலும் வஞ்சிக்கப்பட்டவள். ஜெர்மனியின் உளவாளி என்று குற்றஞ்சாட்டப்பட்டு, பிரான்ஸ்தேச அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டவள். ஹாலந்தில் பிறந்து, இந்தோனேஷியாவில் துன்பங்களை அனுபவித்து, பின்னர் விபச்சார வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டு, மரண தண்டனை என்ற பெயரில் கொலை செய்யப்பட்டவள். பேரழகி.
காலமும், இடமும் வேறு என்றாலும், கிட்டத்தட்ட பவானியும் மாத்தா ஹரியைப் போன்றவள். சுயசிந்தனைவாதி. பவானியும் தண் கணவன் தேவசகாயத்தால் வஞ்சிக்கப்படுகிறாள். இத்தனைக்கும் மிகத் தெளிவான பெண். திருமணமும், காதலும் வேண்டாம் என நினைத்தவள். ஒரு கட்டத்தில் பவானி இப்படி நினைக்கிறாள்:-
“நடுத்தர வர்க்கத்து பெண்ணாய்ப் பிறந்தவள், ஒரு குபயோக சுபதினத்தில், காதலித்தோ அல்லது காதலிக்காமலேயோ, கல்லுடனோ, புல்லுடனோ, குறைந்தபட்சம் மாலை மாற்றிக் கொள்ள வேண்டும். அடுத்து, எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் தான் மலடி அல்லவென்று நிரூபித்தாக வேண்டும். கல்லுக்கும் புல்லுக்கும் பிடித்ததைச் சமைக்கவேண்டும், அவனது விருப்பத்திற்கென்று சினிமாவுக்குப் போகவேண்டும், அவனது விருப்பத்திற்கு நண்பர்களை உபசரிக்க வேண்டும், அவனது விருப்பத்திற்குப் படுக்க வேண்டும். நல்ல வேளை அவனுடைய விருப்பத்தைக் கேட்டுத்தான் மனைவியானவள் டாய்லெட் போகவேண்டுமென்ற கட்டாயம் எதுவுமில்லை” (ப.111)
இப்படி நினைக்கும் பவானிதான், சூழலின் காரணமாகத் தேவசகாயத்தைத் திருமணம் செய்துகொண்டு பிரான்ஸில் துன்புறுகிறாள். தற்கொலை செய்துகொள்கிறாள்; அல்லது கொலை செய்யப்படுகிறாள்.
தன் தாயின் இறப்பிற்குக் காரணத்தைக் கண்டுபிடிக்கத் துடிக்கும் ஹரினி, இருபத்தோராம் நூற்றாண்டைச் சேர்ந்தவள். சிரில், அரவிந்தன் போன்ற இளைஞர்களிடம் மிக இயல்பாக உடலுறவு வைத்துக் கொள்பவள். வாசகர்கள் அதிர்ச்சியுறும் வண்ணம் நாவலின் இறுதியில் காணாமல் போகிறாள்.
“எனினும், அவர்களின் மூவரும் வாழ்க்கையும் முன்னர் சொன்னதுபோல ஒரு நிறம். ஒரு வாசனை. ஒரு பயணம். இதன் பொருள், எல்லாப் பெண்களும் ஏதோ ஒரு வகையான நுகத்தடிகளைச் சுமக்கிறார்கள் என்று சொல்லி, இதைப் பெண்ணிய நாவல் என்று ஒரு சிமிழுக்குள் அடக்கிவிடமுடியுமா என்றால் முடியாது.” (ப.6) என்று மிகச் சரியாகவே, வாசகர்களையும் விமர்சகர்களையும் எச்சரிக்கை செய்துள்ளார் பிரபஞ்சன். வாழ்க்கை ஒரு வரையறைக்குள் அடங்குவதில்லை. இந்த நாவலையும் அப்படித்தான் கருத வேண்டியுள்ளது.
மாத்தா ஹரி, பவானி, ஹரினி ஆகிய மூன்று பெண்கிளன் கதைகையும் நேர்கோட்டில் கூறாமல், நாகரத்தினம் கிருஸ்ணா முன் பின்னாக, சௌகரியமாகக் கதையை மாற்றிக் கூறுகிறார்.
நாவலை எழுகும் நாகரத்தினம் கிருஸ்ணாவிடமே பவானி பேசுதல், நாவலின் இறுதியில் நாகரத்தினம் கிருஷ்ணா பவானியிடம் பேசுவதன்மூலம் வாசகர்களிடம் பேசுதல் முதலிய உத்திகள் வாசகர்களுக்குப் புதுமையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
வாசகர்கள் அவரவர்களுக்குத் தேவையானதை இந்த நாவலின்மூலம் உணரலாம். பேரிலக்கியத்தின் தன்மை, வாசகர்களுடன் எப்போதும் உரையாடிக் கொண்டிருப்பதுதான். எது உண்மை? எது புனைவு? என்பதைப் பிரித்தறியாத வண்ணம், உண்மையும் புனைவும் கலந்த இலக்கியமாக இந்த நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, ஸ்டராஸ்போ, இந்தோனேஷியா போன்ற பல நகரங்களைக் களமாகக் கொண்டு இந்த நாவலை எழுதியிருப்பதன்மூலம், பல்வேறு கலாச்சாரங்களின் தன்மையை மிக நுட்பமாகச் சித்தரித்துள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. பிற தமிழ் நாவலாசிரியர்களிடமிருந்து நாகரத்தினம் கிருஷ்ணா வேறுபடும் இடம் இது. பல உலக நாவல்களை வாசித்த அனுபவம், கிருஷ்ணாவிற்கு அற்புதமாகக் கைகொடுத்துள்ளது.
நாகரத்தினம் கிருஷ்ணாவின் மொழிநடையைத் தனியே கூறவேண்டும். நேர்கோடல்லாத நாவல்களில் வாசிப்புத் தன்மை (Readability) குறைந்துவிடுவதற்கான வாய்ப்பிருக்கிறது. நாவலின் எந்த இடத்திலும் இத்தன்மை குறையவில்லை. ஒரு நூற்றணாடு வாழ்ந்த அனுபவத்தையம், பல நாடுகளைப் பார்த்த அனுபவத்தையும் வாசகர்கள் ஒருங்கே பெறுவார்கள் என்பதை நிச்சயமாகக் கூறமுடியும்.
வாழ்க்கை என்பதை ஒரு சாத்தியக்கூறு (Probability) என்று பார்க்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா. ஹரினி என்னவானாள்? பவானியின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதெல்லாம் பிரச்சனையில்லை. ஒரு துப்பறியும் நாவலாக இந்த நாவலை யாரும் கருதிவிடக்கூடாது. துப்பறியும் நாவலுக்குரிய சுவாரஸ்யம் இருக்கிறதே தவிர, உண்மையில், இது துப்பறியும் நாவலில்லை.
“வாழ்க்கை முழுதும் இரண்டு உரையாடல்களைத் தொடர்ந்து நடத்துகிறோம். இரண்டாவது உரையாடல், பொய் கலவாதது. அந்தரங்கமானது. நாமே நமக்கென்று நடத்தும் உரையாடல். இங்கே பரஸ்பர புரிதல்களில் சிக்கல்கள் இருப்பதில்லை, மறுப்புகள் இடம்பெறுவதில்லை” (ப.285) என்று நாவலின் இறுதியில் கூறுகிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.
நாவலின் இறுதி என்று கூறுவதும் ஒரு வசதி கருதிதான் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
உண்மையில், இந்தப் பிரதி முதலும் முடிவும் அற்றதாக நீள்கிறது.
நாவல் முடியும் இடத்தில் வாழ்க்கை தொடங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?
வாழ்க்கைக்கும்கூட முதல் ஏது? முடிவு ஏது?
இந்த அனுபவத்தைத் தந்த கிருஷ்ணாவிற்குத் தமிழ் வாசகர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள்.
தமிழ் நாவலின் வரலாற்றை நாகரத்தினம் கிருஷ்ணா, தன் தத்துவப் பார்வையால் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றுள்ளார் என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்.
– பா. இரவிக்குமார்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...