பிலிப் பெர்:
கடந்த வியாழனன்று பிரான்சுநாட்டு குற்றவியல் நீதிமன்றம் பிலிப் பெர் என்ற பிரெஞ்சுக்காரருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் நட்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்துள்ளது.
பிலிப்பெர் என்ற மனிதருக்கு பலமுகங்கள் உண்டு. இந்த பிலிப்பேர் முகத்தை பார்க்கிறவர் எவரும் சந்தேகித்துவிடமுடியாது, தேவரனையர் கயவர் ரகம். நம்மில் ஒருவரென்ற நம்பிக்கையை வெகுச் சுலபமாகப் பெற்று விடுவார். அவரதுவெற்றி இச்சாமர்த்தியத்தில் தானிருக்கிறது. இம்மனிதர்களை இனம் பிரிக்கத் தனித் திறமை வேண்டும். தமிழில் இவர்களுக்கு ஏமாற்று பேர்வழி, சூழ்ச்சிகாரர், பித்தலாட்டக்காரர், முழுப்பாய் சுருட்டி என்கிறோம். வெகுசன தமிழ் தினசரிகள் இவர்களை ‘பலே ஆசாமி’கள் என்கின்றன. பிரெஞ்சில் நானறிந்தவகையில் ஒரு சொல்தான் ‘Escroc’.
2010 மார்ச் மாதம் பிரான்சுநாட்டின் தென் பகுதியில் வீசிய சூறைக்காற்றில் பல கிராமங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. அவ்வாறு பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஷரோனுமொன்று. இந்த ஷரோன் கிராமத்திற்கு பிலிப்பேர், பிரான்சுநாட்டின் விவசாயத்துறை செயலர் போல தமது பரிவாரங்களுடன் வந்தார். கிராமத்தலைவர் ஓடோடிவந்து வரவேற்றார். செயலருக்கென தனி அலுவலகம் திறக்கப்பட்டது. தொலைபேசிவசதிகள் செய்துகொடுக்கப்பட்டன. விடாமல் போனில் பேசினார். கட்டளைகளை பிறப்பித்தார். எந்திரங்களும் கருவிகளும் வந்து குவிந்தன. நிறுவனங்களும் விவசாயத்துறை செயலர் கேட்கிறாரென்று வேண்டிய வாகனங்களையும் எந்திரங்களையும் அனுப்பி வைத்தன. டெண்டர் விடாமல் அரசாங்க ஒப்பந்தம் கிடைக்கிறதென்றால் சும்மாவா? அதே கிராமத்தில் இன்னொரு பக்கம் அசலாக அரசாங்கத்தால் அனுப்பிவைக்கப் பட்டிருந்தவ்ர்களால் புயல் நிவாரணப்பணிகள் நடந்தன. அங்கே வேலைகள் மெத்தனமாக நடந்திருக்கிறது. ஒரு நாள் இரு நாள் அல்ல ஒருவாரம் கிராமத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒப்பந்தம் கிடைத்த சந்தோஷத்தில் நிறுவனங்களும் புயல் நிவாரணத்தை இத்தனை விரைவாகவும் சிறப்பாகவும் நடத்துகிறாரேயென்று கிராம மேயரும் பிலிப்பேரை கவனித்துக்கொண்டார்கள். எல்லோருமா எல்லா இடத்திலும் ஏமாறுகிறார்கள். அங்கேயும் ஒரு புத்திசாலி சந்தேகிக்கிறான். சம்பந்தப்பட்டவ்ர்களிடம் சொல்ல விலங்கிடப்பட்டு அழைத்துபோய் சிறைவைத்தார்கள், வழக்கு முடிந்து நேற்று தண்டனை கிடைத்திருக்கிறது. இதுதான் முதன் முறையல்ல, இத்தொழிலை பலமுறை செய்து 20 முறை தண்டனை அடைந்திருக்கிறார். பிலிபேரின் வழக்கறிஞர் அவரை அதிகம் தண்டிக்கவேண்டாமென்று வாதாடியிருக்கிறார். அவர் சொல்லுங்காரணம்: இதனால் பெரிதாக எதையும் அவர் சம்பாதித்துவிடவில்லை. அவருடைய முதல் குற்றம் 29 வயதில் ஆரம்பித்ததாம். விவாகரத்து காரணம் என்கிறார்கள் தொடக்ககாலத்தில் சிறு சிறுகுற்றங்களென ஆரம்பித்து அண்மையில், அதிவேகச்சாலை போடுகிறேனென வேறொரு பகுதியில் தள்வாடங்களுடன் இறங்கியதுவரை அடங்கும். இவரது வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு திரைப்படமொன்றும் வந்திருக்கிறது. இதை அடிப்படையாகக்கொண்டு வேறொரு கட்டுரையும் எழுதினேன். கிடைத்தால் போடுகிறேன்.
எனக்குத் தெரிந்து இந்தியர் ஒருவர் இருந்தார், இந்த ஊரில் வசித்தார், இப்போது எங்கே வசிக்கிறாரென தெரியாது. அதிகம் படித்தவரல்ல ஆனாலும் தொழில் நுட்பத்தில் தேர்ந்தவர். இந்த அபார ஞானத்தால் தொழில் நுட்பகல்வி முடித்து அதில் சான்றிதழும் பெற்றார். ஓரளவு நல்ல வேலையும் கிடைத்தது. ஆனால் அவருக்குச் சட்டத்தை மீறவேண்டும். அப்படி மீறவில்லையெனில், ஞானத்தை தவறான காரியத்தில் பயன்படுத்தவில்லையெனில் தூக்கம் வராதோ என்னவோ அகப்பட்டுக்கொண்டு சிறை செல்வார். கணினி வல்லுனர்களில் சிலர் கடனட்டை வழக்குகளில் சிக்குவதைப் பார்க்கிறோம். தன்னை தலைவனாக வரித்துக்கொள்ளும் தகுதியிருந்தும் ஈன புத்தியினால் சாக்கடையில் விழும் மனிதர்களை அரசியலில் பார்க்கிறோம். நான்கு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கில்லாடி. நாற்பது லட்சம் மோசடி செய்த பலே ஆசாமி. நாலாயிரம்கோடியைக் கொள்ளையடித்த சாணக்யர் என்றெல்லாம் கொடுக்கப்படுகிற அடைமொழிகளுக்குச் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். செய்யும் காரியத்தைக்காட்டிலும் இந்த அடைமொழிகள் அவர்களை வசீகரிக்கின்றன. இதற்கு என்ன காரணம்? இம்மனிதர்களுக்கென்று பிரத்தியேகமாக ஏதேனும் ஜீன்கள் இருக்குமா? அப்படி செய்யத் தூண்டுவது எது? தங்கள் ஞானத்தில் நம்பிக்கையற்று, குறுக்கு வழியில் தமது இருப்பை நிலைநிறுத்தவும் பிழைப்பிற்கு அதொன்றுதான் வழியெனவும் மூளையில் ஏதோ ஒரு நரம்பு அவர்களுக்குக் கட்டளையிடும்போலும். தம்மைச் சாமர்த்தியசாலிகளாகக் கட்டமைத்துக்கொள்ள ‘இந்த பலே ஆசாமிகளுக்கு’ கிடைக்கும் சந்தர்ப்பங்கள் ‘மது, மரியுவானா போல ஒருவித போதைக்கு அவர்களைஅடிமைகளாக்குகின்றன. சீரியல் கில்லர்களைப்போலவே சமூகத்திற்கு எங்கே என்னை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று சவால் விடுகிறார்கள். மனைவிக்குத் தெரியாமல் குடிக்க ஆரம்பித்து, செய்யுங்காரியம் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியவந்தவுடன் குடித்துவிட்டு சாக்கடையோரத்தில் புரளவும் தயங்காத மனிதர்களின் மனோபாவம் இவர்களுக்கும் ஒரு கட்டத்தில் வந்துவிடும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும் என்போக்கை மாற்றிக்கொள்ளமுடியாது என்பதுபோல. ஓர் அறிவியல் கட்டுரையில் ஏனைய நோய்களைபோலவே இதுவும் ஒருவித மனநோய் என்றும் குணப்படுத்த வியலாதென்றும் கூறுகிறார்கள்.
—-