Monthly Archives: ஒக்ரோபர் 2011

கதையல்ல வரலாறு1-2

 ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் ?

                   தொடர்ச்சி                                                           

ஹாமில்டன் பிரபு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்.  ராயல் ஏர் ·போர்ஸ் என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் விமானப் படைபிரிவில் மூத்த ராணுவ அதிகாரியுங்கூட. சம்பவம் நடந்த அன்று அதாவது 1941ம் ஆண்டு மே மாதம் 10ந்தேதி இரவு டர்ன்ஹௌஸ்லிருந்த அவரது அலுவலகத்திற்கு அவசரமாக ஒரு தொலைபேசி அழைப்பு. ஜெர்மானிய விமானப்படைக்குச் சொந்தமான மெஸெர்ஷ்மிட் 110 ரக விமானமொன்று இரவு பத்துமணி எட்டு நிமிட அளவில் பிரிட்டிஷாருக்குச் சொந்தமான நார்தம்பர்லேண்ட் கடற்கரைப் பகுதியில் காணநேர்ந்ததாக தகவல் தெரிவிக்கிறார்கள். ஹாமில்டனுக்குச் சந்தேகம், தகவல் தவறானதாக இருக்குமோவென்ற ஐயம். விமானப்படையில் பொறுப்பினை வகித்த அளவில் மெஸெர்ஸ்மிட் 110 ரக விமானத்தின் பயண தூரத்தின் தகுதி எனவென்று அவருக்குத் தெரியும். பிரிட்டிஷாரின் எல்லையைக் கடந்து தனது பறக்கும் தூரத்தை அதிகரித்து ஆபத்தை தேடிக்கொள்வதற்கான முகாந்திரமில்லை என்பதை அவரது விமாநங்களைப் பற்றிய அறிவு தெளிவுபடுத்தியது.

– அப்படியே முடிந்தாலும் ஜெர்மனிக்குத் திரும்ப அதற்கு எரிசக்தி போதாதே,  என்று சொல்லிக்கொண்டார்.

சில நொடிகளுக்குப்பிறகு இரண்டாவது முறையாக தொலைபேசி ஒலிக்கிறது. கையிலெடுத்து தகவலை உள் வாங்கிக்கொண்ட ஹாமில்டனின் முகம் இறுகிப்போனது. வான் குடை உதவியுடன் குதிந்திருந்த ஜெர்மன் ஆசாமி தனது பெயர் ஆல்·ப்ரெட் ஹொர்ன் என்று தெரிவித்துக்கொண்டதாகவும், அவரைச் உடனே சந்திக்க விரும்புவதாகவும் இம்முறை தொலைபேசியின் மறுமுனையிலிருந்தவர்கள் கீறியிருந்தார்கள். ஒருமுறைக்கு இருமுறை அப்பெயரை தனக்குள் அவர் முனுமுனுத்துக்கொண்டபோதிலும் அப்போதைக்கு எந்த முடிவிற்கும் அவரால் வர இயலவில்லை. அப்படியொரு பெயரை இதற்கு முன்பு கேட்டிருந்த ஞாபகமில்லை. யுத்த மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் எதிரிமுகாமைச் சேர்ந்த ஒருவன் தன்னைச் சந்திக்க விழைவது வியப்பினை தந்தது. மறுநாள்காலை கிளாஸ்கோவுக்கு நேரில் செல்வதென்று தீர்மானித்தார். விடிந்தது. திட்டமிட்டதுபோல மறுநாள் கிளாஸ்கோ மருத்துவமனையொன்றில் பிரிட்டிஷ் படைப்பிரிவொன்றின் பலத்தக் காவலுடன் சேர்க்கப்பட்டிருந்த ஜெர்மானிய விமானியை சந்திக்கவும் செய்தார். ஆனால் ஜெர்மன் ஆசாமி அப்படியொரு வார்த்தை வெடியைக் கொளுத்திபோடுவானென அவர் கிஞ்சித்தும் நினைத்து பார்த்தவரல்ல.

பரஸ்பரம் முகமனுக்குப் பிறகு, ஜெர்மன் ஆசாமி பேசினான்.

– நான் ருடோல்ப் ஹெஸ், என் பெயரை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீங்க

– ருடோல்ப் ஹெஸ்?

– ம்… மனிதாபிமான அடிப்படையில் உங்களுக்குதவ வந்திருக்கேன்.

உண்மைதான், ஹாமில்டன் பிரபுவிடம் ஹெஸ்ஸைப் பற்றிய கேள்விஞானங்கள் ஏராளம். ஆனால்  இப்படி இரத்தமும் தசையுமாக  அந்த மனிதரை அதுவும் பிரிட்டிஷ் மண்ணில் சந்திக்க நேருமென கனவு கண்டவரல்ல. எனினும் கண்முன்னே நடப்பதை நம்புவதா? கூடாதா என்ற குழப்பம். வந்திருப்பவன் ஒருவேளை பைத்தியக்கார ஆசாமியாக இருப்பானோ? நாம்தான் தீர யோசிக்காமல் வந்துவிட்டோமோ? என்றெல்லாம் கேள்விகள்கேட்டு தலையிலடித்து கொள்ளாத குறை.

 

ஹாமில்டன் தன் கண்களையே நம்பமுடியவில்லை. ருடோல்ப் ஹெஸ் ஜெர்மானிய அதிகார வரிசையில் முக்கியமான நபரென்று அவருக்கு நன்றாகவே தெரியும், ஆனால் அந்நபரை இப்படி யுத்த காலத்தில் பிரிட்டன் எல்லைக்குகுள் சந்திக்கநேருமென்றோ, எதிரெதிரே அமர்ந்து உரையாடமுடியுமென்றோ நினைத்துப்பார்த்ததில்லை. இவைகளெல்லாம் கேலிகூத்தென்று மனதிற் தோன்றியது. இருதரப்பிலும் ஒருவர்கூட இதை நம்பமாட்டார்களென்ற அப்போதைய அவரது தீர்மானத்தை பின்னாளில் வரலாற்றாசிரியர்கள் பலரும் அப்படியொரு முடிவுக்குத்தான் எவரும் வரமுடியுமென்று எழுதினார்கள். ஹாமில்டன் குழப்பத்திலிருக்க நமது ஜெர்மானிய கதாநாயகனுக்குப் பொறுப்புகள் கூடின. தம்மைப் யாரென்று நிரூபிப்பது அவசியமென்று உணர்ந்தார்.

– மிஸ்டர் ஹாமில்டன் உங்களுக்கு ஹௌஸ்ஷோபரைத் தெரியுமில்லையா? அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். உங்கள் தரப்பில் எனது விருப்பங்களை, யுத்தத்தைப் பற்றிய எனது கருத்துக்களை புரிந்துகொள்ளகூடிய ஒரே நபர் நீங்கள்தான் என்று அடித்துக்கூறினார். நாமிருவரும் சந்திக்க வேண்டுமென்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் 23ந்தேதி, உங்களுக்கு கடிதங்கூட போட்டிருந்தாரே, மறந்து விட்டீர்களா என்ன?

– இல்லை. ஆனால் உங்களைச் சந்திப்பதுபற்றிய யோசனை எதையும் அக்கடிதம் தெரிவிக்கவில்லையே!

– கடந்த டிசம்பருக்குப் பிறகு இங்கே வருவதற்கு மூன்றுமுறை முயன்றுவிட்டேன். நான்காவது முறைதான் முடிந்தது. கடந்தகால முயற்சிகளின் போது ஒவ்வொரு முறையும் கைவிட நேர்ந்ததற்கு மோசமான வானிலைதான் காரணம். மோசமாக இருந்ததால் திரும்பிப்போக நேர்ந்தது. அடுத்து லிபியா போரில் நீங்கள் வெற்றிபெற்றிருந்த நேரத்தில் உங்களுடன் போர் நிறுத்தம் பற்றி பேசுவதும் சரியல்ல. ஜெர்மானியர்களான நாங்கள் பயந்துவிட்டோம் அதனாற்தான் சமாதானம் பேசவந்திருக்கிறோமென நீங்கள் நினைத்திருக்கக்கூடும். இப்போது வடக்கு ஆப்ரிக்காவில் எங்கள் கை மேலோங்கி இருப்பதுடன், கிரேக்க நாட்டையும் எங்கள் வசம் கொண்டுவந்திருக்கிறோம். ஆக உங்களுடன் சமாதானம் பேச இதுதான் நல்ல தருணம். ஜெர்மானிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான நான் நேரில் வந்திருப்பதைவைத்து அமைதியை நிலைநாட்டுவதில் எனக்குள்ள அக்கறையையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமென எதிர்பார்க்கிறேன். ·ப்யூரெர்(இட்லர்), யுத்தத்தில் இறுதி வெற்றி எங்களுக்குத்தான் என்பதில் உறுதியாய் இருக்கிறார். போரில் இறுதிவெற்றியைத்தான் கணக்கில்கொள்ளவேண்டும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வரலாறு எங்கள் வெற்றியை உறுதிசெய்யும். எனினும் ய்நாம் யோசிக்கவேண்டும். தேவையின்றி உயிரிழப்பு எதற்கு. இருதரப்பிலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு நாம் ஏன் காரணமாக வேண்டும்.

ஹாமில்டன் பிரபுவுக்கு குழப்பம் நீங்கியிருந்தது. எதிரே உட்கார்ந்திருப்பவனை நம்பத்தான் வேண்டும். கார்ல் ஹௌஷோபெர் என்ற மந்திரச் சொல் அவர் நினைவுப்பெட்டகத்தைச் சட்டென்று திறந்தது. கடந்த கால காட்சி கண்முன்னே விரிந்தது. 1940ம் ஆண்டு டிசம்பர் மாதம், உண்மையாகவே அவர் பெயருக்குப் பிரத்தியேக கடிதமொன்று வந்திருந்து.  ஹௌஷோபெர் என்ற ஜெர்மானிய ராணுவ ஜெனரல் சந்திக்க வேண்டுமெனக் கேட்டு எழுதிய ஞாபகம், வேறு குறிப்பிட்டுச்சொல்லுபடி அக்கடிதத்தில் எதுவுமில்லை. ஆமில்டன் ஹௌஷோபெர் மகனை 1936ம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் விளையாட்டில்¢ல் சந்தித்திருந்தார். அக்கடிதத்தை தனக்கு மேலே உள்ளவர்களிடம் அனுப்பிவைத்தார். அத்துடன் எல்லாம் முடிந்தது. அச்சம்பவத்தைச் சுத்தமாக அதன்பின்  மறந்திருந்தார். ஆக ஹெஸ் வந்திருப்பற்கு காரணமிருக்கிறது, நம்பத்தான் வேண்டும். அதிலும் இது ஹௌஷோபெர் சம்பந்தப்பட்ட விஷயம். மனிதர் சாதாரண ஆளல்ல ”Lebensraum” (வாழ்வாதாரம்),1 என்ற கோட்பாட்டுக்குச் சொந்தக்காரர், பின்னாளில்  இட்லரின் அபிமானத்தைப் பெற்று நாஜிப்படையினர் பிற நாடுகள்மீது படையெடுக்க வழிவகுத்தக் கொள்கை. ஹௌஷோபெர் அறிவு ஜீவியுங்கூட. வெர்சாய் உடன்படிக்கைக்கு மாறாக ஜெர்மானிய எல்லைகளை விரிவுபடுத்த இட்லர் தீர்மானித்தபோது கார்ல் ஹௌஷோபெர் சிந்தனைதான் காரணமென்று சொல்லப்பட்டது. ஹௌஷோபெர் தகவலோடு வந்திருப்பது உண்மையாவென்று அறிவதற்குமுன்னால், ஏதிரே அமர்ந்திருக்கும் நபர் ஜெர்மானிய ராணுவ அதிகாரி ருடோல்ப் ஹெஸ்தானா என்று நீருபிக்கப்படவேண்டும். இருவருக்குமான உரையாடல் தொடர்ந்தது. வந்திருந்த ஆசாயின் பேச்சில் அதிகாரத்தின் வாள்வீச்சுகளை நிறையவே ஆமில்டன் உணர்ந்தார்.

– அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் முக்கிய பொறுப்புவகிப்பவர்களிடம் கலந்து ஆலோசித்து, அமைதியை திரும்பக்கொண்டுவருவது குறித்த யோசனைக்குத் தக்க பதிலை நீங்கள் சொல்லவேண்டும்.

– போர் தொடங்கியதிலிருந்து இங்கே இவர்தான் அவர்தானில்லை, பலர் முன் வரிசையில் இருக்கிறார்கள்.

– இனி நம் இரு நாடுகளுக்கிடையிலும் யுத்தமென்று ஒன்று வரக்கூடாது என்பதுதான் இட்லரின் எதிர்பார்ப்பு. அதற்கு சில நிபந்தனைகளையும் வைத்திருக்கிறார்.

– எப்படி?

– முதலாவது ஐரோப்பிய நாடுகளில் வலிமையான நாடென்று தலையெடுக்கும் எந்த நாட்டையும் எதிர்ப்பதென்கிற தமது புளித்துப்போன கொள்கையை பிரிட்டன் கைகழுவவேண்டும்.

– இப்போது சமாதானமாகப் போனாலும், வருங்காலத்திலும் நாம் சமாதானமாக வாழ்வோம் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

– ஏன்? எதற்காக நமக்குள்ள யுத்தம் வருமென்று சந்தேகிக்கறீங்க?

– இதை முன்பே உணர்ந்திருக்கவேண்டும். நமக்குள் பகமையை வளர்த்தாயிற்று. அமைதியை விரும்பிய எங்கள் மீது போர் திணிக்கப்பட்டதற்கு நீங்கள்தான் காரணம், இந்த நிலையில் எந்தவிதமான ஒப்பந்தம் இனி உடனடியாக அமைதியை நிலைநாட்ட உதவுமென நினைக்கிறீங்க.

ஹெஸ் யோசிப்பதுபோல இருந்தது அல்லது ஆமில்ட்டனின் ஆங்கிலம் விளங்கியதாவென்று தெரியவில்லை. தாம் சொல்லவந்ததை எதிராளிக்குப் புரியவைக்கும் அளவிற்கு இருந்த ஜெர்மானிய அதிகாரி, பிரிட்டிஷ்காரரின் ஆங்கிலத்தை புரிந்துகொள்ளத் தடுமாறினார். அவசியமென்றால் மொழிபெயர்ப்பாளரொருவரை ஏற்பாடு செய்யட்டுமாவென்று ஹாமில்டன் கேட்க, செய்யுங்கள் என்பதுபோல தலையாட்டினார். ஏற்பாடு செய்யப்பட்டது.

– தவிர, இவ் விஷயத்தில் அதற்கு முன்பாக நீங்கள் செய்ய வேண்டியவைகளென சில உள்ளன. ஆயுதமெதுமின்றி, தன்னிச்சையாக நான் வந்திருப்பதை பிரிட்டிஷ் மன்னர் ஏற்கும்படி உணர்த்தவேண்டும், அடுத்து ஜூரிச்சிலிருக்கும் எனது குடும்ப முகவரிக்கு நான் பத்திரமாக வந்து சேர்ந்திருக்கிறேன் என்ற தகவலை தெரிவிக்கவேண்டும். தவிர பத்திரிகையாளர்களுக்கு எனது வருகைக் குறித்து எவ்வித தகவலும் இப்போதைக்குக் கசியக்கூடாது.

– மன்னிக்கவேண்டும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பாக எந்தவித வாக்குறுதியையும் உங்களுக்கு அளிக்க இயலாது. அதற்கான அதிகாரம் என்னிடமில்லை, என்பதைப் பொறுமையுடன் விளக்கிய பின்னர் காலதமதமின்றி தமது அலுவலகத்திற்கு ஹாமில்டன் பிரபு திரும்பினார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரென அவர் அறியப்பட்டிருந்தாலும், யுத்த பிரச்சினையில் சிக்கியிருந்த பிரிட்டனில் அவருக்குப் பெரிய அளவில் செல்வாக்குகளில்லை. வெளி விவகாரத்துறை அமைச்சகத்தின் துணை செயலராகவிருந்த சர் அலெக்ஸாண்டர் கடொகார் என்பரிடம் தகவலைக் கொண்டுபோக நினைத்தார். பலதடவை முயற்சி செய்து கடைசியில் அலெக்ஸாண்டரின் தனிச்செயலர் கிடைத்தார். அவரிடம் மிக முக்கியமானதும் அவசரமானதுமான ஒரு பிரச்சினைக்கு அலெக்ஸாண்டரிடம் பேசவேண்டுமென்ற வேண்டுகோள் வைக்கப்பட்டது. அவருடைய வேண்டுதலை ஒருவரும் மதிக்கவில்லை. முக்கிய பணிகளன்றி வேறு காரணங்களுக்காக வெளிவிவகாரதுறை துணை செயலரிடம் பேசவியலாதென்று அமைச்சகத்தின் தனிச் செயலர் கறாராகக் கூறிவிட்டார். வேண்டுமானால் பத்து நாளைக்குப் பிறகு ஏற்பாடு செய்யலாம். அதற்கு முன்பு அவரைச் சந்திக்க இயலாது என்பது அவரது பதில்.

ஹாமில்டனுக்குப் பொறுமையில்லை. அங்கே இங்கேயென்று தொடர்புகொண்டு பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து பொறுமையாக விளக்கி ஒருவழியாக வின்ஸ்டன் சர்ச்சில் அலுவலகத்தை நெருங்க முடிந்தது. பிரச்சினையின் தீவிரத்தைப் பிரதமர் அலுவலகம் புரிந்துகொண்டிருக்கவேண்டும்; பிரதமரைச் சந்திக்க அனுமதி கிடைத்தது. தமது அலுவலகத்திலிருந்து உடனே புறப்பட்டு பிறபகல் நார்த்ஹோ¡ல்ட் என்ற இடத்தை அடைந்தார். அங்கே அவரிடம் அதிகாரி கொடுத்த முத்திரையிட்ட ரகசிய உறையில் ஆக்ஸ்போர்டிலிருந்து ஒரு சில மைல்கள் தொலைவிலிருக்கும் கிட்லிங்க்டன் வருமாறு சொல்லப்பட்டிருந்தது. தமது வார இறுதியைக் கழிப்பதற்கென்று பிரிட்டிஷ் பிரதமர் டிஷ்லிபார்க்கை சேர்ந்த மாளிகைக்கு வந்திருந்தார். ஆகக் கிட்லிங்டனிலிருந்து வேறொரு காரில் டிஷ்லி பார்க்கிற்கு ஆமில்டன் அழைத்துச் செல்லப்பட்டார். டிஷ்லிபார்க்கைக் கார் அடைந்தது. இரண்டாயிரம் ஹெக்டார் கொண்ட நிலப்பரப்பு. பிரமுகர்களை வரவேற்பதற்கென்று மாத்திரம் ஏழு விசாலமான கூடங்கள். இருபத்து நான்கு படுக்கை அறைகள். பத்து குளியல் அறைகள், 30 காட்டேஜ்களென்று வால்ட்டர் ஸ்காட்டால் வர்ணிக்கபட்ட பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பெரிய மாளிகை.

உள்ளே நுழைந்ததுமிருந்த கூடத்திற் பொறுப்பிலிருந்த பெண்செயலாளர் தொலைபேசியில் தெரிவித்துக்கொண்டிருந்த செய்தி, நாடு இதுவரை காணாத போர்த்தாக்குதலை சந்தித்துக்கொண்டிருக்கிறதென்பதை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக லண்டன் மாநகரம் முழுவதும் குண்டுவீச்சில் சின்னாபின்னமாகிக்கொண்டிருந்தது. பலியானவர்கள் எண்ணிக்கையைக் கணக்கிடகூட இயலாத நிலை. தீயை அணைப்பதற்குப் போதுமான தண்ணீருக்கும் ஆட்களுக்கும் பற்றாகுறை. ஒரே நேரத்தில் பல முனை தாக்குதகள். ஹாமில்டனை சர்ச்சிலிடம் அழைத்துபோனபோது, இரவு உணவை முடித்திருந்தார்.

– சொல்லுங்க, இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையில் உங்களுக்கென்ன என்னைச் சந்திக்கவேண்டுமென்கிற அப்படியென்ன தலைபோகிற அவசரம்.

– மிஸ்டர் பிரைம் மினிஸ்ட்டர்- அதை நான் உங்கள் உதவியாளர்களை வைத்துக்கொண்டு சொல்ல முடியாது. நாமிருவரும் தனியே பேசவேண்டிய தகவல்.

சர்ச்சில் சுற்றியிருந்த மனிதர்களைப்பார்த்தார், புரிந்துகொண்டவர்களைபோல அவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். வான் வெளியைக் கவனித்துக்கொண்ட சர் ஆர்ச்சி பால்ட் சென்கிளேரை உரையாடலில் கலந்துகொள்ள அனுமதித்தார்கள். ஹாமில்டன் நடந்ததனைத்தையும் விளக்காமாக பிரதமரிடம் தெரிவித்தார். கடைசியில், ஜெர்மனிய விமான அதிகாரியின் புகைப்படமொன்றையும் பிரதமரிடம் காணபித்தார். உண்மைதான் வந்திருக்கிற ஆள் சாதாரண நபரல்ல, இட்லருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஜெர்மன் அதிகாரக் கட்டிலில் இருக்கும் ஹெஸ் என்பவர்தான், சந்தேகமில்லை. இப்பிரச்சினையில் தனது கருத்தென்று எதையும் சொல்லாதது ஆமில்டனுக்கு ஆச்சரியம். பின்னர் ஒரு முறை இது பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆமில்டன், ‘ ஏதோ நான் உளறுகிறேன் என்பதைப் போல அன்றைய தினம் சர்ச்சிலுடைய பார்வை இருந்தது.’ என்று கூறுகிறார்.

– நல்லது, ஹெஸ் பற்றிய பிரச்சினையை இப்போதைக்கு எடுக்கவேண்டாம். மார்க்ஸ் சகோதரர்கள்(2) பார்க்க போகணும்.

சர்ச்சில் குணத்தை அறிந்தவர்களுக்கு, அவரது நடத்தையில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. படம் திரையிடப்படவிருந்த கூடத்திற்கு சர்ச்சிலும் ஆமில்டனும் பிறரும் வந்தார்கள். இருக்கையில் உட்கார்ந்த மறுகணம் ஆமில்டனுக்கு நல்ல உறக்கம். விழித்தபோது நல்லிரவு கடந்திருந்தது. திரைப்படமும் முடிந்திருந்தது. திரைப்படம் சர்ச்சிலுக்கு அன்றைய பிரச்சினைகளிடமிருந்து சற்றுநேரம் விடுபட உதவியிருக்கவேண்டும். சற்று முன்புவரை அவரிடமிருந்த சோர்வுகள் இப்போதில்லை. ஹாமில்டனிடம், ஜெர்மானிய அதிகாரி ஹெஸ்குறித்து இரண்டு மணிநேர உரையாடலை சர்ச்சில் நடத்தினார். இன்னதென்றில்லை பல கேள்விகள், கற்பனைக்கெட்டாத கேள்விகள். அவ்வளவிற்கும் பொறுமையாக முடிந்த அளவு தமக்குத் தெரிந்த தகவல்களைப் பதிலாக ஆமில்டன் கூறினார். அடுத்து சர்ச்சில் இப்பிரச்சினையில் ஹாமில்டன் கருத்தென்ன என்பதையும் அக்கறையுடன் கேட்டார்.

– ஹெஸ்தானா? நன்றாகத் தெரியுமா?

 

– அப்படித்தான் நினைக்கவேண்டியிருக்கிறது. இல்லையெனில் ஹௌஷோபெர் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

-ம் அப்போ பழத்தில் புழு வந்து சேர்ந்ததுபோல- சர்ச்சில் முனுமுனுக்கிறார்.

மறுசாள் காலை சர்ச்சில், ஹாமில்டன் பிரபு, அதிகாரிகளென்று ஒரு சிறுகுழு இலண்டன் புறப்பட்டது. பத்துமணிக்கெல்லாம் 10, டௌனிங் தெருவிற்கு வந்து சேர்ந்தார்கள். உடனே வெளிவிவகாரத்துறை அமைச்சருக்குத் தகவல் போயிற்று. நண்பகல் சர் அலெக்ஸாண்டர் கடோகர், இவான் கிர்க்பட்றிக்கை தொலைபேசியில் பிடித்தார், உடனடியாக வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திற்கு வரும்படி கட்டளை பிறந்தது. கிர்க்பட்றிக் பி.பி.சி.யில் ஐரோப்பிய இயக்குனராக பணியாற்றியபோது 1933லிருந்து 1938 வரை பெர்லினின் இருந்திருக்கிறார். நாஜி அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் தமது பணிக்காரணமாக சந்திக்க நேர்ந்திருக்கிறது. ஆக அவருக்கு ‘ஹெஸ்’ ஸ¤ம் அறிமுகமாகியிருந்தார். ஹெஸ்ஸை சந்திக்குபடி கிர்க்பட்றிக் கேட்டுக்கொள்ளபட்டார்.

– உங்களால ஹெஸ்ஸை அடையாளப்படுத்த முடியுமில்லையா?

– நிச்சயமா, -கிர்க்பட்றிக்.

கிர்க் பட்றிக்கிற்கும், ஹாமில்டனுக்குமாக விமானமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு ஓன்பது மணி இருபது நிமிட அளவில் டர்ன்ஹௌஸை அடைந்தபோது இருவருமே களைத்திருந்தார்கள். வந்தவர்கள் உட்காரகூடநேரமில்லை. தொலைபேசி மணி, மறுமுனை குரல்

– ஜெர்மன் வானொலியில் ஹெஸ் காணவில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். அவரை உடனடியாக நீங்கள் இருவரும் சென்று பார்க்கவேண்டும்.

– அவர் மருத்துவமனையில் இருக்கிறார். மருத்துவமனை பக்கத்திலில்லை.

– என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ, உடனடியாக உங்கள் அறிக்கை எங்கள் கைக்கு வந்தாக வேண்டும்.

ஆமில்டனும் கிர்க் பட்றிக்கும் ஹெஸ் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையை அடைந்தபோது நல்லிரவுக்கும் மேல் ஆகியிருந்தது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிற எல்லா நோயாளிகளையும் போலவே பைஜாமாவுடன் இரும்பு கட்டிலொன்றில் ருடோல்ப் ஹெஸ் படுத்திருந்தார். கிர்க்பாட்றிக்கை பொறுத்தவரை ருடோல்ப் ஹெஸ்போன்றவர்களை எப்பொழுதுமே ஆடம்பரமும் அதிகாரமும் கலந்த சூழலில் பார்த்து பழகியிருந்தார். “ஹெஸ்ஸ¤டன் பொருந்தாத எளிமையும் அமைதியும் நிலவிய மருத்துவமனையின் சூழலை ஏற்றுக்கொள்ள தடுமாறினேன்”, பின்னர் தெரிவித்திருந்தார்.  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோதிலும் ஜெர்மன் நாட்டு அதிகார மையத்தின் ஆளுமை தற்போதைக்கு இங்கிலாந்தில் கைதி. “உறக்கத்திலிருந்த அந்த மனிதர் எழுப்பப்பட்டதுமே என்னை யாரென்று புரிந்துகொண்டார்” என்றார் கிர்க்பட்றிக்.

ஆமில்டனுக்கும், கிர்க்பட்றிக் இருவருக்கும் நாற்காலிகள் கொண்டுவரப்பட்டன. கைதியருகே அமர்ந்தார்கள். ஹெஸ் பத்திரமாக தம்வசம் வைத்திருந்த ஒரு சிறிய குறிப்பேட்டை எடுத்துவைத்துக்கொண்டார். எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டிருப்பாரென நினைக்கிறீர்கள் 90 நிமிடம், ஒன்றரை மணிநேரம் இட்லர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதெல்லாம் வருத்தங்கள். ஆமில்டனோ, கிர்க்பட்றிக்கோ இடையில் குறுக்கிடவில்லை. அமைதியாக தங்கள் வியப்பினைமுகத்தில் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக கேட்டபடி  இருந்ததனர். இடையில் அவசரமாக தொலைபேசி. கிர்க் பத்ரிக்கை அழைப்பதாக செய்தி.

– என்ன நடக்கிறது சந்தித்தீர்களா இல்லையா?

– சந்தித்தோம். மனிதர் ஹெஸ் என்பது உறுதி. சந்தேகமேயில்லை

– அவர் முடிவாக என்னதான் சொல்லவருகிறார்?

– கடந்த ஒன்றரை மணிநேரமா நாங்க அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம், ஆனாலும் இன்னும் முடிவை எட்டவில்லை.

மீண்டும் கிர்க்பத்ரிக் ஹெஸ் இருந்த அறைக்குத் திரும்பினார். இம்முறை ஹெஸ் நேரடியாக விஷயத்திற்கு வந்தார். ஏழாம் எட்வர்டை பற்றிய நூலொன்றை சில மாதங்களுக்கு முன்பு தற்செயலாக வாசித்ததாகவும், நேர்மையாக சார்பற்று எழுதப்பட்டிருந்த அந்நூல் அவரது மனமாற்றத்திற்குக் காரணமென்றும் கூறினார். அடுத்தடுத்து இங்கிலாந்து செய்யும் தவறுகளே ஐரோப்பிய பிரச்சினைகள்அனைத்துக்கும் காரணமென்றார்: 1904லிருந்தே இங்கிலாந்து பிரான்சுடன் சேர்ந்துகொண்டு ஜெர்மனுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்தது. 1914ல் தொடங்கிய யுத்தத்திற்கு இங்கிலாந்துதான் காரணம், ஜெர்மனல்ல. 1939ம் ஆண்டு இங்கிலாந்து மாத்திரம் போலந்து நாட்டை ஜெர்மனுக்கு எதிராக தூண்டாடாமல் இருந்தால், அவர்கள் தங்கள் நிபந்தனைகளுக்குக் கட்டுபட்டிருப்பார்கள். எனவே இரண்டு யுத்தங்களுக்குமே இங்கிலாந்துதான் காரணமென்று இட்லர் நினைப்பதாக ஹெஸ் கூறினார்.

பிரிட்டிஸ் அரசாங்கம் யுத்தத்தில் தோற்பது நிச்சயம். எங்கள் வசமிருக்கிற விமானங்களின் தரத்தையும் எண்ணிக்கையும் அமெரிக்கா, இங்கிலாந்து என சேர்ந்துவந்தாலும் ஈடு செய்யமுடியாது. எங்களிடமுள்ள பயிற்சிபெற்ற விமானிகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகம். இப்போதைக்கு விமானப் படை பலத்தில் எங்களை வெல்லும் நிலையில் நீங்களில்லை. எனினும் இட்லர் பொறுமை காத்தார். 1940ல் ஜெர்மன் எல்லைக்குள் நீங்கள் விமானப்படை தாக்குதலைத் தொடங்கியபொழுது ஓரிரு நாட்களில் நிறுத்திக் கொள்வீர்களென நினைத்தார். தவிரவும் இட்லருக்கு பிரிட்டிஷ் புராதன மற்றும் கலாச்சாரச்சின்னங்களை மீது பற்றுதலுண்டு. பதில்தாக்குதலைத் தொடுக்க பல வாரங்கள் நாங்கள் காத்திருந்ததையும் நீங்கள் மறந்துவிடக்கூடாது. எங்கள் கப்பல் படை வலிமையும் இளப்பமானதல்ல. நூற்றுக்கணக்கான நீர்மூழ்கிக்கப்பல்கள் ஜெர்மன் கப்பல் கட்டுந்தளங்களில் தயாராகிக்கொண்டிருக்கின்றன. ஓரிரு நாட்களில் உங்கள் நாட்டிற்கான அனைத்து கடல்வழிகளும் அடைக்கப்படும். என்ன செய்யபோகிறீர்கள். ஆனால் ஜெர்மனில் நிலைமைவேறு. உணவுப் பொருள்களென்றாலும், அத்தியாவசியப் பொருள்களென்றாலும் கணிசமாக சேமிப்பில் இருக்கின்றன. உள்நாட்டில் திட்டமிட்டு உற்பத்தியிருப்பதோடு, எங்கள் ஆக்ரமிப்பில் உள்ள நாடுகளிலிருந்தும் கொண்டுவரபட்ட பொருள்கள் கையிருப்பில் உள்ளன. அடுத்து ஜெர்மன் மக்களும் தங்கள் தலைவனை முழுமையாக நம்புகிறார்கள். ஆக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எங்கள் கை ஓங்கியிருக்கிறது.

– பிறகு எதற்காக இங்கே வந்தீர்கள்.

– சொல்கிறேன். போரினால் என்ன லாபம் சொல்லுகுங்கள். பல்லாயிரக் கணக்கான உயிர்பலியையும், எளிதில் சீரமைப்பபடமுடியாத அழிவுகளையும் தவிர்த்து வேறென்ன காணப்போகிறோம். நான் இங்கே வந்திருப்பது எங்கள் ·ப்யூரெருக்குத் தெரியாது. தன்னிச்சையாகத்தான் வந்தேன். போரில் வெல்வதென்பது உங்களுக்குச் சாத்தியமே இல்லையென்ற நிலையில், சமாதானமாக போவதுதான் புத்திசாலித்தனமென்று அறிவுறுத்த வந்தேன். தவிர இட்லருக்கும் எனக்குமான நட்பு மிக நெருக்கமானது. ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகளாக அவரோடு பழக்கம். அவருக்கு உண்மையில் இங்கிலாந்துமீது எவ்வித தப்பான எண்ணமுமில்லை. உலகமனைத்தையும் ஜெர்மன் கீழ் கொண்டுவரவேண்டுமென்ற எண்ணமெல்லாம் பலரும் நினைப்பதுபோல எங்களுக்கில்லை. எங்கள் ஆர்வமனைத்தும் ஜெர்மன் மற்றும் ஐரோப்பாவின் நலன்களன்றி வேறு கனவுகளில்லை. குறிப்பாக நாளை பிரிட்டிஷ் முடியாட்சிக்கு வீழ்ச்சியெனில் முதலில் வருந்துவது அவராகத்தானிருக்கும்.

(தொடரும்)

 

—————————————————————

1. http://en.wikipedia.org/wiki/Lebensraum

 

2. Marx Brothers –  – ஐம்பதுகளில் புகழ்பெற்றிருந்த அமெரிக்க சகோதர்கள் நடிப்பில் வெளிவந்த திரைபடங்கள் நகைச்சுவைக்குப் பெயர்பெற்றவை.

 

 

 

கதையல்ல வரலாறு 1-1

“வரலாற்றிற்கு முடிவுமில்லை, ஆரம்பமுமில்லை” லூயி பிலாங்,  -பிரெஞ்சு வரலாற்றாசிரியர்

வரலாறென்பது இறந்தகால முக்கிய நிகழ்வு. ஓர் இனத்தின் அல்லது நாட்டின் நிர்வாகம், சமூக அமைப்பு, பண்பாடு, பொருளியல் தலைவிதியைத் தீர்மானிப்பதாக அந்நிகழ்வு அமைந்திருக்கவேண்டும். வரலாறு முழுமைபெற நிகழ்வுக்கான காரணங்களும் நிகழ்வின் விளைவுகளும் முன்பின்னாக சேர்க்கப்படுகின்றன. வரலாற்றை எழுத சான்றுகளும் சாட்சியங்களும் போதும், படைப்புதிறன்குறித்த கேள்விகள் அங்கில்லை. வரலாற்றாசிரியர்கள் அரிச்சந்திரர்களாக இருக்க கடமைப்பட்டவர்கள். சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு உண்மையை பேசுபவர்களென்ற நம்பிக்கையை அவர்கள்மீது வைத்திருக்கிறோம், அதாவது கணவன் மனைவி மீது நம்பிக்கைக்கொள்வதுபோல அல்லது மனைவி தன் கணவன்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஒப்பானது அது. சந்தேகித்தால் வரலாற்றையும் மூக்கைப்பிடித்துகொண்டு வாசிக்கவேண்டியிருக்கும். தவிர இன்னொன்றையும் மறந்துவிடமுடியாது, எதையும் அறிவுகொண்டு தீர்மானிக்கும் இனம் மனித இனமென்றாலும், அந்த அறிவையும் புலன்களே பெரும்பாலும் வழி நடத்துகின்றன. அறிவு ஜீவிக்கவேண்டுமெனில் புலன்களின் அவாக்களை பூர்த்திசெய்யும் நிர்ப்பந்தமுமிருக்கிறது, எனவே வரலாற்று உண்மைகள் என எழுதபட்டபோதிலும் வரலாறெல்லாம் உண்மைகளா என்றால் இல்லை. ஒன்றிரண்டு விழுக்காடுகள் திரித்தும், உண்மையை மறைத்தும் வரலாறுகள் சொல்லப்படுகின்றன. செஞ்சியைப் பற்றி நாவலொன்று எழுதுவதற்கான தகவல்களை கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக தேடிச் சேகரித்து வருகிறேன். கடந்தவருடம் அதன் ஓர் அங்கமாக பாரீஸிலுள்ள புகழ்பெற்ற தேசிய நூலகத்திற்கு சென்றபோது அந்த ஒன்றிரண்டு விழுக்காடுகளை எதிர்கொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்தது. நண்பரொருவரின் புதிய இதழொன்றில் இத்தொடரை எழுதவும் விரும்பினேன். என்ன காரணத்தாலோ அவ்விதழ் முதல் இதழிலேயே முடங்கிப்போனது. பல மாதங்களுக்குப் பின்னர் செஞ்சியைப்பற்றிய நாவலை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் மீண்டும் அத்தொடரை எழுத விரும்பினேன்.

நாகரத்தினம் கிருஷ்ணா

 1. ருடல்·ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன்

 11-5- 1941. தேதியைக்கொண்டு இச்சம்பவத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஜெர்மனியின் தென் கிழக்குப்பகுதி. பெஷ்ட்ஸ்காடன் ஆல்ப்ஸ்மலையின் மார்பில் வாய்திறந்திருந்த ஓர் அழகு சிற்றூர். வசந்தகாலத்திற்கென்றே பிரத்தியேக கவனமெடுத்து தகிக்கும்  சூரியனால் பொன்முலாம் பூசப்பட்ட ஆல்ப்ஸ் ஜொலிக்கிறது. நமக்கு ஆல்ப்ஸ் மலையோ, அதன் அழகோ முக்கியத்துவமல்ல புனைகதையெனில் ஓர் அரைபக்கத்தை ஆல்ப்ஸ் மலைக்காக மட்டுமே ஒதுக்க முடியும்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும்  அவ்விடம் அசாதாரணமானது. அன்றைய தேதியில் காற்றுகூட அனுமதியின்றி உள்ளே நுழைந்துவிடமுடியாது.  பெரிய கூடம். ஐரோப்பாவின் மத்தியிலுள்ள பிற பிரதேசங்களைப்போலவே மரங்களின் அவ்வளவு உபயோகத்தையும் செவ்வனே பயன்படுத்திக்கொண்டிருக்கும் விசாலமான கூடம்; விலையுயர்ந்த சிவப்பு நிற சலவைக் கற்கள் பதித்த தரை; அதற்கு அழகு சேர்த்ததுபோல சாதுவாக தரையிற் கிடந்த விலைமதிப்பற்ற இரத்தின கம்பளம். ஆகஅந்தக் கூடமும், அதன் எழிலங்காரமும், விலை மதிப்பற்ற இரத்தின கம்பளமும் இடத்தின் சொந்தந்தக்காரர்களையும் புழங்கும் மனிதர்களையும் அவர்களின் தராதரத்தையும் தீர்மானிக்க உங்களுக்கு உதவலாம் .  உங்கள் ஊகத்தை உறுதிபடுத்த மேலும் சிலபொருட்கள்: நீள்சதுர மேசையொன்று அதன் மீது அவ்வப்போது அந்நபரின் கைபட்டு சுழலும் பூகோள உருண்டை.. நாற்காலியில் உட்கார்ந்திருப்பவரை தெரிகிறதா? உலகனைத்தையும் கட்டி ஆளவேண்டுமென கனவுகண்ட ·பூரெர்: தலைவன், வழிநடத்துபவன் –  தேவ பாஷையில் சொல்லவேண்டுமெனில் அசுரன். அடோல்ப் இட்லர்

உறையிலிருந்த கண்ணாடியை எடுத்தணிந்த அடோல்·ப் இட்லர் உறையிலிருந்த கடிதத்தை எடுத்த வாசிக்கலானார். எதிரில் எந்த நேரமும் தமது உயிருக்கு எதுவும் நேரலாம் என்கிற குலை நடுக்கத்தில் ருடல்·ப் ஹெஸ்ஸின் முதன்மைப் பாதுகாவலனான கார்ல்ஹைன்ஸ் பிண்ச் (Karlheinz Pintsch). ருடல்·ப் ஹெஸ்(Rudolf Hess). நாசிஸ ஜெர்மனியின் மூன்றாவது முக்கிய பிரதிநிதி. அடோல்·ப் இ¢ட்லரின் உயிர்த் தோழன். நம்மவர்களை கேட்டால் விதிப்படிதான் நடக்குமென்பார்கள், அதற்கான சாத்தியங்கள் பிறருக்கு எப்படியோ. ருடோல்ப் ஹெஸ்ஸை அறிந்தவர்கள் விதி வலியதென துண்டைப்போட்டு தாண்டுவார்கள். இரண்டாவது உலகப்போரை நிறுத்துவதற்காக தமது சுயமான முடிவின்படி இங்கிலாந்திற்கு யுத்த விமான மொன்றில் பறந்துசென்றுள்ளதாக தெரிவித்துக்கொண்ட அக்கடிதம், “எனது இம்முயற்சி வெற்றி பெறுவதற்கான  சாத்தியங்கள் குறைவு, பலனில்லாமலும் போகலாம் என்பதை அறிந்தே இருக்கிறேன், விதி எனக்கெதிராக ஒருவேளை இருந்தால் அதன் விளைவுகள் ஜெர்மன் நாட்டுக்கோ, உங்களுக்கோ பாதகமாக இருக்ககூடாது என்பதை மனதிற்கொண்டு இத்திட்டத்திற்கும் உங்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்று மறுக்கவோ அல்லது என்னை ஒரு பைத்தியக்காரனென விமர்சனம் செய்யவோ…”  தொடர்ந்து கடிதத்தில் சொல்லப்பட்டிருந்த வரிகளை முழுவதுமாக இறுக்கமான முகத்துடன் இட்லர் வாசித்து முடித்தார்.

சோவியத் ரஷ்யாவுடன் தாக்குதல் நடத்த ஜெர்மன் திட்டமிட்டிருந்த நிலையில் தமது வலதுகைபோலிருந்த ஹெஸ், பிரிட்டனுடன் சமாதானம் பேசலாம் என்று சென்றிருப்பதை அறிந்த இட்லரின் உண்மையான மனநிலையை விளங்கிகொள்வதில் நாஜி அரசாங்கத்தின் பிற தலைவர்களுக்கே மிகவும் கடினமாக இருந்தது. மேசையிலிருந்த அழைப்பு மணியை பலம்கொண்டமட்டும் தட்டினார், அடுத்த ஐந்து நிமிடங்கள் அவரது அலுவலகம் களேபரத்தில் மூழ்கியது. ரைஷ்மார்ஷல் (Reichmarschall)- தலைமைத் ராணுவ தளபதி- கோரிங் (Goering) என்பவரையும், வெளிவிவகார அமைச்சர் யோவாரின் வொன் ரீபந்த்ரோப்பையும் (Joachin von Ribbentrop) உடனே தம்மை வந்து பார்க்க ஏற்பாடு செய்யும்படி தமது பாதுகாவலர் ஒருவரிடம் ஆணை பிறப்பித்தார். இத்தனை களேபரத்திற்கிடையிலும், அடோல்ப் இட்லர் கோபமின்றி அமைதியாக இயங்கியது ஹெஸ் பாதுகாவலனான கார்ல்ஹைன்ஸை வியப்பிலாழ்த்தியது. உடனடியாக தனது தலைக்கு ஆபத்தில்லை என்று எண்ணிக்கொண்டார். இட்லரின் ஒருசில கேள்விகளுக்கு அவரிடம் பதில்களிருந்தன. முதல் நாள் மாலை ஆறுமணி பத்து நிமிட அளவில் அவுஸ்பூர் என்ற ஊரிலிருந்து ஸ்காட்லாந்திற்கு அவர் பறந்து சென்றதையும், அங்கு ஆமில்ட்டன் பிரபுவை சந்திப்பதென்ற அவரது நோக்கத்தையும் கார்ல்ஹைன்ஸின் சுருக்கமான பதிலிருந்து ·பூரெர் பெற முடிந்த தகவல்கள்.

அன்றையதினம் அடுத்துவந்த சந்தர்ப்பங்களில் அடோல்ப் இட்லரின் குணம் வேறாக இருந்தது. செய்தியை அறிந்தபோது இருந்த இட்லர் வேறு என்பதற்கொப்ப  பிற சம்பவங்கள் அமைந்தன. தளபதி கேத்தெல் (Keitel) என்பவரிடம் இட்லர், ஹெஸ்ஸின் நடவடிக்கைகளை முற்றாக மறுத்தார், அது பற்றி தமக்கு எதுவுமே தெரியாதென்றார். 1946ம் ஆண்டு நூராம்பெர்க் நீதிமன்றத்தில் நாஜி குற்றவாளிகளைக்குறித்த வழக்கு விசாரணையின்போது சம்பவத்தை நினௌகூர்ந்த கேத்தெல், “அன்றைக்கு ·பூரெரை அவருடைய மிகப்பெரிய குடியிருப்பில் சந்தித்தது நினைவிருக்கிறது, கால்களை எட்டிவைத்து நடந்தபடியிருந்தார். அவரது சுட்டுவிரல்முனை நெற்றிப்பொட்டிலிருந்தது. இப்படியொரு காரியத்தைச் செய்ய அந்த ஆளுக்கு(‘ஹெஸ்ஸ¤க்கு) பைத்தியம் பிடித்திருக்கவேண்டும். அவரது மூளைக்கு என்னவோ நேர்ந்திருக்கிறது. தனது நடவடிக்கைக் குறித்து நமக்குத் தெரிவித்திருக்கும் கடிதத்தினைவைத்து அப்படியொரு முடிவிற்குதான் என்னால் வரமுடிகிறது என்று சொன்னதை இன்னமும் நான் மறக்கவில்லை”, என்றார்.

இரண்டாம் உலகப்போரின்போது நடந்த சம்பங்களில் இன்றளவும் விளங்கிக்கொள்ளமுடியாத புதிர் நாஜி ஜெர்மனியின் தலைமை பீடத்தைச் சேர்ந்த ஒருவர் இப்படி பின்வாசல்வழியாக எதிரி நாட்டில் இறங்கியது. அப்படிச்சென்றவர் ஏதோ நாஜி ஜெர்மனியின் கெஸ்ட்டாப்போவால் தேடிக் கைதுசெய்யப்படவேண்டியவர்களில் ஒருவருமல்ல. கடிதத்தை முதலில் பார்த்தபோது இட்லர் நடந்துகொண்டவிதத்திற்கும் பின்னர் அவர் நடந்துகொண்ட முறைக்கும் உள்ள வேறுபாடுகளை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அடோல்·ப் இட்லரின் நெருங்கிய சகாக்களில் ஒருவர், போர் மும்முரமாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் இப்படி தன்னிச்சையாக ஆங்கிலேயரோடு சமாதானம் செய்துவருகிறேன் எனப் புறப்பட்டுப்போகமுடியுமா என்ற கேள்வி எழுகிறது. நடந்ததெதுவும் எனக்குத் தெரியாதென்ற இட்லரின் சொற்களை எந்த அளவிற்கு நம்புவது? பதிலை ஓரிரு வார்த்தைகளில் விளக்குவது கடினம். ஓரளவு ருடால்ப் ஹெஸ் பயணத் திட்டத்தையும், அப்பயணத்திற்கு பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த மரியாதை என்ன என்பதையும், இரண்டாம் உலகபோரின் முடிவுகள் என்ன சொல்லவருகின்றன என்பதையெல்லாம்  நினைவிற்குக் கொண்டுவரவேண்டும். நூராம்பெர்க் நீதிமன்றத்தில் வழக்குவிசாரனையில் சில உண்மைகள் வெளிவந்தன என்றபோதும், ருடோல்ப் ஹெஸ்ஸென்ற ஆடு பலிகிடாவாக உபயோகமானதில் இட்லரின் பங்கென்ன என்பது இன்றளவும் புதிராகவே இருக்கிறது. ருடோல்ப் ஹெஸ் இப்பயணத்தைப் பற்றி சொல்லவருவதென்ன?அவர் மனைவி என்ன சொல்கிறார்? ·பூரெர் சுற்றியிருந்தவர்களில் குறிப்பாக கேப்டன் பிண்ச், பேராசிரியர் கார்ல் ஹௌஸ்ஷோ·பர் அவரது மகன், ஹெஸ் பயணித்த மெஸ்ஸெர்ஷ்மித் விமானத்தை உருவாக்கியவர் ஆகியோரின் கருத்து இறுதியில் ஆங்கிலேயர்கள் பங்களிப்பென்று அனைத்தையும் சார்பற்று பார்க்கவேண்டியிருக்கிறது.

*                                  *                                  *                                       *

டேவிட் மக் லீன் என்ற விவசாயிக்கு அன்றையதினம் வரலாற்றில் தனது பெயரும் போகிறபோக்கிலே குறிப்பிடப் படுவதற்கான வாய்ப்பு அமையப்போகிறது என்பதை உணராமலேயே வழக்கம்போல உறங்குவதற்காக தனது அறைக்குத் திரும்பும் நேரம். விமானமொன்றின் எந்திர சத்தம் வெகு அண்மையில்கேட்கவே திகைத்து நின்றான். காரைபூசிய ஆவனது வீடு பூகம்பத்திற்கு உள்ளானதுபோல அதிருகிறது. அதிர்ச்சியிருந்து மீளாமலேயே யுத்தகால வழக்கின்படி முன்னெச்சரிக்கையாக விளக்கினை அணைத்துவிட்டு மெல்ல நடந்து சென்று சன்னல் திரையை விலக்குகிறான். மூர்ச்சையாகாத குறை. பாராசூட்டுடன் ராணுவ அதிகாரிபோலிருந்த ஒருவன் குதிப்பதை முதன்முதலாகப் பார்க்க அவனுக்கு அதிசயமாகவும் இருக்கிறது அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அடுத்த நொடி சுய நினைவுக்குத் திரும்பிய மக் லீன் அவசர அவசரமாக உடையை அணிந்துகொண்டு, தமது தாய் படுத்திருந்த அறைக்காய் குரல்கொடுத்துவிட்டு அவசரமாய் வெளியில் வந்தான்.

பாராசூட்டிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள அதிகாரி முயன்றுகொண்டிருப்பது தெரிந்தது.

– யார் நீ?- மாக் லீன்

பாராசூட்டிலிருந்து விடுபட்ட மனிதன், முகத்தில் வலியால் துடிப்பதற்கான அறிகுறிகள். காலெடுத்துவைக்கையில் தடுமாறினான், இலேசாகத் தாங்கி நடக்கிறான். மெல்ல அடியெடுத்து வைத்து இவனிடம் நெருங்கி வந்தவன் நிதானமாக யோசித்துப் பேசிய ஆங்கிலத்தில்:

– நான் ஜெர்மனியிலிருந்து வருகிறேன். எனதுபெயர் அவுட்மன் ஆல்·ப்ரெட் ஓர்ன். டங்காவெல் அவுஸ் வரை செல்லவேண்டும், ஆமில்டன் பிரபுக்கென்று முக்கியமான செய்தியுடன் வந்திருக்கிறேன். – என்றான்.

இரண்டாவது உலகபோர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் ஜெர்மானியன் ஒருவன் கிரேட் பிரிட்டனுக்குள் வந்திருக்கிறானென்பதை நம்புவதற்கு பிரிட்டிஷ் விவசாயி தயாராக இல்லை. விமான இரைச்சலைக்கேட்டு அதிர்ந்துபோய் அதற்குள் மற்றுமொரு விவசாயியும் வந்து சேர்ந்திருந்தான் பெயர் கிரேக். இப்படியான சிக்கலை இதற்கு முன்பு சாதாரணக் குடியானவர்களான மாக்லீனும், கிரேக்கும் சந்திக்க நேர்ந்ததில்லை. இருவருமாக கலந்தாலோசித்தார்கள். மாக்லீ, ஜெர்மானியனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பத்திரமாக பாதுகாப்பதென்றும், கிரேக் அவர்கள் வீட்டுக்கு வெகு அருகில் முகாமிட்டிருந்த பிரிட்டிஷ் படையின் வான் சமிக்ஞைப் பிரிவுக்குத் தகவல் தெரிவிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த சில விநாடிகளில், பிரிட்டிஷ் அரசின் ராயல் சிக்னல் படைப்பிரிவின் வீரர்கள் மாக் லீன் வீட்டுக்குள் குவிந்துவிட்டார்கள். அவர்களின் தலைவனான வில்லியம்ஸன் அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் நன்கு குடித்திருந்தான். எனினும் ஜெர்மன் அதிகாரியை முதுகில் துப்பாக்கியை முனையை அழுத்திப்பிடித்தபடி அழைத்துச்செல்ல போதுமான நிதானத்துடன் இருந்தான். அவந் கீழிருந்த ராணுவ அதிகாரிகள் ஜெர்மானிய உயரதிகாரி குதிகால் வலியால் துடிப்பதை அறிந்து அருகாமையிலிருந்த மரிஹில்ஸ் பாரெக்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனர்.

ஜெர்மானிய கைதி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட, அங்கிருந்த அதிகாரிகளில் ஒருவன் அருகிருலிருந்த சகாவிடம் தனக்கேற்பட்ட சந்தேகத்தைப் பகிர்ந்துகொண்டான்.

– இந்த ஆளை எங்கோ பார்த்தஞாபகம். சண்டைக்கு முன்பாக ஜெர்மனியில் உண்மையில் பார்த்திருக்கிறேன். அநேகமாக அவர் ருடோல்ப் ஹெஸ்ஸாகத்தான் இருக்கக்கூடும், இட்லருக்கு மிகவும் நெருக்கமான நபர்.

அடுத்த கணம் அங்கிருந்த பிறஅதிகாரிகள் வாய்விட்டு சிரித்தனர். “ஆனாலும் உனக்கு கற்பனை அதிகம் ஐயா”, என்றனர்.

(தொடரும்)

 

 

 

 

 

 

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -10

 கொன்க்கூர் இலக்கிய பரிசு:

எட்மண்ட் டெ கொன்க்கூர் (Edmond Huot de Goncourt)  என்பவரின் மரணத்திற்கு பின்பு அவரது உயிலின் அடிப்படையில் அவரது சகோதரர் ழூய்ல் கொன்க்கூர் (Jules Huot de Goncourt) பெயரில் 1900 ம் ஆண்டில் ஏற்படுத்தபட்டதே கொன்க்கூர் இலக்கிய பரிசு. சகோதரர்கள் இருவருமே எழுத்தாளர்கள். இணைந்தும் தனித்தனியாகவும் இவர்களுடைய படைப்புகள் பிரெஞ்சில் உள்ளன. இவ்வமைப்பு கவிதைகள், கட்டுரைகள் என்று பிற படைப்புகளுக்கு பரிசுகளை வழங்குகிறபோதிலும் புனவுகளுக்கு வழங்கப்படும் பரிசே முக்கியத்துவம் வாய்ந்தது. பிரெஞ்சில் இன்றுவரை பல இலக்கிய பரிசுகள் இருப்பினும், கொன்க்கூர் இலக்கிய பரிசு என்பது ஓர் எழுத்தாளனை சிறந்த படைப்பாளியாகவும் பரிசுபெற்ற படைப்பின் விற்பனையை அதிகரிக்கவும் துணைநிற்கிறது. பிரெஞ்சு மொழியில் பரிசுக்கான ஆண்டில் வெளிவந்த நாவல்களைக் கணக்கிற்கொண்டு தேர்வு செய்கிறார்கள். போட்டியில் கலந்துகொள்வதற்கான நுழைவுத் தகுதி போட்டிக்கான ஆண்டில் ‘உரைநடையில் வெளிவந்த மிகச்சிறந்த புனைவு’ (‘le meilleur ouvrage d’imagination en prose, paru dans l’annளூe’). போட்டியை நடத்துபவர்களே – (l’Acadளூmie Goncourt) தேர்வுக்குரிய நூல்களைத் தேர்வு செய்கிறார்கள். படைப்பாளரோ, பதிப்பகமோ தங்கள் நூல்களை அனுப்பவேண்டியதில்லை, அனுப்பவுங்கூடாது. ஒருமுறை பரிசுபெற்றவரை மறுமுறை தேர்வுசெய்வதில்லை.

நான்கு கட்டமாக தேர்வுகள் நடைபெறுகின்றன. முதற் கட்டத் தேர்வில் (செப்டம்பர் முதல் வாரம்) 15 நூல்கள், இரண்டாம் கட்டத் தேர்வில் 8 நூல்கள் ( அக்டோபர் முதல்வாரம்) மூன்றாம் கட்டத் தேர்வில் நான்கு நூல்கள் (அக்டோபர் இறுதிவாரத்தில்) என முடிவு செய்கிறார்கள் ஆக நேற்று அறிவிக்கப்பட்ட முடிவில் (அக்.25) 2011 நவம்பர் மாதம் 2ந்தேதி அறிவிக்கப்படவுள்ள இறுதித் தேர்வுக்குத் தகுதியானவையென நான்கு படைப்புகளை தெரிவு செய்துள்ளனர்.

1. Sorj Chalandon –  Retour தூ Killybegs – Grasset
2. Alexis Jenni –  L’Art franவூais de la guerre – Gallimard
3. Carole Martinez –  Du Domaine des Murmures – Gallimard
4. Lyonel Trouillot – La belle amour humaine – Actes Sud

1. Retour à Killybegs – கில்லிபெக்கிற்கு திரும்புதல்  என்ற நூல் அயர்லாந்து விடுதலைப்படை (IRA)- என்ற தீவிர தேசிய அமைப்பில் பங்குபெற்று பின்னர் அந்த அமைப்புக்கு எதிராக அரசுடன் சேர்ந்து செயல்பட்ட  Tyrone Meehan என்பவரின் செயபாட்டில் உள்ள அரசியலையும், மனித குணபண்பையும் இந்த மனிதனின் ஊடாக  ஆசிரியர் சாற்பற்ற விவாதத்தை எழுப்புகிறார். இலங்கை நண்பர்கள் இப்படியொரு நாவலை கருணாவை மையமாகக்கொண்டு எழுதலாம் ஆனால் சார்பற்று சொல்லப்படவேண்டும். வெறும் அரசியல் சார்ந்து சொல்லாமல் மனித மனங்கள் முரண்களை பற்றுவதற்கான கணங்களில் எப்படிச் செயல்படுகின்றன என்பதைச் சொல்ல உளவியல் அடிப்படையிலான கண்ணோட்டம் அவசியம். Sorj Chalandon: நூலின் ஆசிரிரியர். Liberation தினசரியில் பத்திரிகையாளர். இவரது 4வது நாவலே மேலேகுறிப்பிடப்பட்டது. இதற்கு முன்பு  மூன்று நாவல்கள் வந்துள்ளன. மூன்றுமே இலக்கிய பரிசுகளை ஏற்கனவே பெற்றுள்ளன. இந்நாவல் கடந்த செப்டம்பர்மாதம் வெளிவந்தது.

2-L’Art français de la guerre -(பிரெஞ்சுக்காரர்களின் ராணுவக் கலை) என்ற இந்த புனைவு Alexis Jenni என்பவரால் எழுதப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ தளபதி தனது அனுபவங்களை, நிரந்தர வேலையின்றி ஊர்ச்சுற்றிக்கொண்டு காதல், மரியுவானா இரவு விடுதிகளென அலையும் ஓர் இளஞனிடம் பகிர்ந்துகொள்வதாகப் புனையப்பட்டுள்லது. அலெக்ஸிஸ் ஜெனி என்கிற உயிரியல் ஆசிரியருக்கு இது முதல் புனைவு.

3.- முனகலின் வெளி (Du Domaine des Murmures). இடைக்காலத்தைப்பற்றி பேசும் புனைவில் உண்மை புனைவு இரண்டுமுண்டு. பன்னிரண்டாம் நூற்ராண்டுக்கு வாசகர்களை அழைத்துச்செல்கிறகதை. முழுக்க முழுக்க புனைவை வடிப்பதைக்காட்டிலும், உண்மை வரலாற்றை புனைவிற்கொண்டுவருவதற்கு உழைப்பு வேண்டும். உரிய சான்றுகள் வேண்டும் அதை உண்மையா என பலமுறை ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும், காலத்தை வரையறுப்பதிலும் வரிசையிடலிலும் கவனம் வேண்டும். செஞ்சியைப்பற்றி எனது நாவலில் சீர்காழியில் நடைபெறும் முலைப்பால் உற்சவத்தின் மாதமும், கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கும் கால வரிசையில் பிறழ்ந்து இருப்பதைக் கவனித்து திரும்பவும் எழுதவேண்டியிருந்தது. ஒரு பெண்ணுக்கு இரட்டைசடை என எழுதி பின்னர் அதைத் தைத் திருத்த வேண்டியிருந்தது. இதுபோன்று சின்ன சின்ன அவதானிப்புகள் தேவையாகின்றன. அதற்கான மொழிகள் வேறு உடை, உணவுமூறை, வைத்திய மென்று இன்றுள்ள சித்த ஆயுர்வேதத்தை போகிற போக்கில் மறுபதிவுசெய்யலாமா? அவற்றை எவைகளெல்லாம் உண்மையிலிருந்தன. என்கிற கேள்விகள் வரலாம். பன்னிரண்டாம் நூற்றாண்டை முன்வைத்துசொல்லப்பட்டுள்ள இந்நாவல் இரண்டு நாட்களுக்கு முன் வாங்கினேன். இதற்குப் பரிசு கிடைக்கவேண்டும் என்பதென் விருப்பம்.

ஓர் இளம்பெண் – Esclarmonde- மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்” என்கிற நமது ஆண்டாள் வழிவந்தவள். பெற்றோர் தீர்மானிக்கும் திருமணத்தை மறுக்கிறாள். ஆழ்வார் ஆண்டாளை அரங்கனோடு சேர்த்துவைக்கிறார். இங்கே Esclarmonde  கோட்டையொன்றில் சிறைவைக்கப்படுகிறாள். அவளுக்கு வெளியுலக்தொடர்பு என்பது ஒரு சிறிய சன்னல். அவளுடைய சிறை அவளுக்குக் கட்டப்படுள்ள சமாதியென்று தெரியாமலே அங்கிருக்கிறாள்;  இப்புதிய தனிமைக்கும் அவள் நேசித்த தனிமைக்கு பாரிய இடைவெளிகொண்டதென்கிற உணரத்தொடங்குகிறபோது, செத்த உயிர்களோடு கைகோர்க்க நேரிடுகிறது தான் உயிருள்ள ஜென்மமா, இறந்த ஜென்மமா எனத் தெரியாமல் தடுமாறுகிறாள். தந்தையின் அதிகாரம் கழுத்தை நெரிக்கிறபோது அவளுடைய சுதந்திரக்குரல் அல்லது ஈனஸ்வரம் அவளுடைய எம்பிரான் வாழும் புனிதஸ்தலத்தில் (இஸ்ரேல்)எதிரொலிக்கிறது. இநாவல் குறித்து தனிக்கட்டுரை எழுதவேண்டும். Carole Martinez என்ற பெண்நாவலாசிரியருக்கு இது இரண்டாவது நாவல். அவரது முதல் Le Cஞூur cousu, Paris, னditions Gallimard மூன்று பரிசுகளை வென்ற நாவல்.

4. ஓர் இனிய மானுடக் காதல் -( La belle amour humaine)  Lyonel TROUILLOT என்கிற ஹைத்திநாட்டைச்சேர்ந்த படைப்பாளியின் கதை. மேற்கிந்திய தீவு ஒன்றிர்க்கு தனது தந்தையைத் தேடிவரும் மேற்கத்திய இளைஞனின் உளவியல் தேடலை விவரிக்கும் புனைவில் இன்றைய உலகவாழ்க்கைக்கு மனிதனின் எந்த அவதாரம் உகந்ததென்கிற கேள்விக்கு விடைதேடுகிறது. நாவலாசிரியருக்கு இது மூன்றாவது நாவல். .

——————————————————

இரசனையில் நேர்ந்த தவறு – ஓர் இளம்பெண்ணின் முதல் நாவல்.

ஆயிரம்பேர் வலியுடன் வந்தால்  ஐந்துபேரைகூட அனுமதிப்பதில்லை என்கிற விதிமுறையைக் கறாராகப் பின்பற்றுகிறவர்கள் மேற்குலக பதிப்பகங்கள். எழுத்தாளர்கள் நல்ல செய்திவராதா என காத்திருக்கிறார்கள். அனுமதித்து சுகப்பிரசவம் என்ற செய்திக்கிடைக்கிறது. தாயும் சேயும் நலமென்கிறார்கள். அடுத்து வேறொருவர் வருகிறார். இவருக்கு விமர்சகர் என்று பெயர். பிறந்த குழந்தையின் எடை, உயரம், ஆரோக்கியம் ஆகியவற்றைப்பற்றிய பாரபட்சமற்ற குறிப்பை எழுதுகிறார். இவர்கள் கணிப்பு பெரும்பாலும் தவறுவதில்லை. ஆரோக்கியமான குழந்தை மரிப்பதில்லை. தாய்க்கும் சந்தோஷம். ஒரு புதிய எழுத்தாளனுக்கு இலக்கிய இதழ்தரும் ஆதரவென்பது அவனது முதல் நூலுக்கு விமர்சகர்கள் தரும் மதிப்பெண்களை பொறுத்தது. இந்த புண்ணியவன்கள் கொண்டாடவும் தெரிந்தவர்கள், காலில்போட்டு மிதிக்கவும் அறிந்தவர்கள்.  ஒரு புதிய எழுத்தாளனை, எந்த வரிசையில் நிறுத்தலாம், அவன் யாரைபோல எழுதுகிறான், எதிர்கால இலக்கிய உலகில் அவன் பங்கு என்ன? என்றெல்லாம் தீர்மானிப்பவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். பிரான்சை பொறுத்தவரை 99 விழுக்காடு விமர்சகர்கள் எழுத்தாளர்களல்ல. எனவே சார்பற்ற அவர்களின் மதிப்பீடுகளுக்கு மரியாதை இருக்கின்றன.

புதிய புத்தகங்கள் இங்கே செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் வெளிவருகின்றன. பிரசுர வாய்ப்பிற்கும் உழைத்து; இலக்கிய விமர்சகர்களின் நன்மதிப்பை பெற்றாகவேண்டிய நெருக்கடிக்கும் புதியவர்கள் உள்ளாவதால் இவ்விளைஞர்கள் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது. தனித்தன்மையை நிறுவவேண்டியிருக்கிறது. இன்றைய பிரசினைகளை மையப்படுத்திய எழுத்துகளாகவே அவை இருக்குமென்ற எதிர்பார்ப்பும் வாசகர்களிடமிருக்கிறது. இணையதளம், சமூக உறவுகளில் வலைத்தலங்களின் பங்கு, பொருளாதார நெருக்கடி, அரபு நாடுகளில் எதேச்சதிகாரங்களுக்கெதிராக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு போன்றவை உலகம் இதுவரை காணாத அளவில் அண்மையில் நடந்துள்ளன. எனவே புதிய இலக்கியங்கள் இக்கருப்பொருளை மையமாகக்கொண்டே எழுதப்பட்டிருக்குமென பரவலாக நம்பப்பட்டது. இதுபோன்றதொரு பொதுவான எதிர்பார்ப்பை நிராகரித்து, தீவிர படைப்பென்பது பொதுநீரோட்டத்தோடு கலப்பதல்ல என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்துவதுபோல இந்நாவல்கள் உள்ளன. குடும்பம், இயற்கை, ஒப்பீட்டளவில் தமது மூதாதைகளிடமிருந்து நினைவுகள், அடையாளங்கள் ஆகியவற்றில் அவர்களுக்குள்ள விலகல் இடைவெளி ஆகியவற்றைபற்றி இப்புதியதலைமுறை படைப்புகள் பேசுகின்றன. சுயகதைகள், தன்முனைப்புடன் கூடிய பயணம் ஆகியவற்றை எழுதுபொருளாகக்கொண்டு கடந்த பத்தாண்டுகளில் நாவல்களின் பெயரைமட்டுமே நவீனப்படுத்திவந்த மூத்த பிரெஞ்சு எழுத்தாளர்களின் படைப்புகள் அவர்களுக்கு அலுப்பைத் தந்திருக்கலாம்.

La faute de goût (இரசனையில் நேர்ந்த தவறு) என்ற நாவல், பிரெஞ்சில் அண்மையில் வந்துள்ள ஒரு புனைவு. ஆசிரியர் ஓர் இளம் பெண்படைப்பாளி, முதல் நாவலுங்கூட. பெயர் கரோலின் லுனுவார். புனைவின் நாயகி மத்தில்து. அவள் மேட்டுக்குடியைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர். தற்கால இளம்பெண்ணுக்குரிய தேவைகளுக்கும் கடமைகளுக்கும் நேரத்தை ஒதுக்கியதுபோக அவ்வப்போது எப்படி போக்குவதென்று தெரியாமல் சில பொழுதுகளும் அவருக்குக் கிடைக்கின்றன – (எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருமுறை கொஞ்சம் நேரம் கிடைத்தது அண்ணா ஹஸாரே உண்ணாவிரதத்திற்காக மெழுகுத்திரியை ஏற்றினேன், என்றார்) இப்பெண்ணுக்கும் அதுபோல நேரம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஆகஸ்டுமாதம் 15ந்தேதி கிடைத்த வாரவிடுமுறையை குடும்பத்தினருடன் கழிப்பதென்று வந்திருக்கிறாள். செல்வாக்கான அக்குடும்பத்தைச்சேர்ந்த பலரும் கூடியிருந்த அம்மாளிகை குடுபத்தின் மூத்த உறுப்பினரான பாட்டி மற்றும் அவளுடைய சகோதரிகளின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறது. இடைக்கால பிரபுத்துவ மன நிலையில் இருபத்தோராம் நூற்றாண்டிலும் வாழ்வை நகர்த்தும் குடும்பம். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர ஏவலாட்கள், பணிப்பெண்கள், பணியாட்கள், தோட்டக்காரர், சமையல்காரரென ஒரு பட்டாளமே வீட்டிலிருக்கிறது.

மாளிகையின் நீச்சல் குளத்தில் குளிக்க வருகிறவளுக்கு புத்தனுக்கு உதித்ததுபோல ஞானோதயம். புத்தியில் ஏதோ உரைக்கின்றது. உலக நடப்புகளில் அக்கறையின்றிருக்கும் தனது வாழ்க்கை குறித்து கேள்வி எழுகிறது. ஓய்வு கிடைக்கிறபொழுது இவளுக்கும் எதையாவது எதிர்த்துபோராடலாம், கலகக்குரல் கொடுக்கலாம் என்ற எண்ணம் துளிர்விடுகிறது. ஆனால் எதற்கு எதிராக பேராடுவதென்ற கேள்வி எழுகிறபோது பதிலின்றி தடுமாறுகிறாள். இன்றைய இளைஞர் அல்லது இளம்பெண்களின் போராட்டம் எதற்காக இருக்கக்கூடும்? உறங்கும் நம் உணர்வுகளை உசுப்பக்கூடிய பிரச்சினைகள் எவை? தனது குடும்பம் தனது சுற்றமென்று செல்லரித்த குறியீடுகளிலன்றி பிறவற்றில் நாட்டமின்றியிருக்கும் பெண்ணொருத்தியின் இலட்சியத்தை வளர்த்தெடுப்பது எப்படி? ‘பதினான்காம் லூயிகாலத்து ஒரு ஜோடி நாற்காலிகள் (அவற்றை சொந்தமாக்கிக்கொள்ள நடத்திய யுத்தங்கள்), ஒரு நிலைக்கடிகாராம், இளமைமாறாதிருக்கும் ஒரு நிழற்படமென்று உருமாறிப்போன பாட்டியின் வழித்தடத்தில் இவளும் பயணிக்கபோகிறாளா?  என்ற கேள்விகள் அடுக்கடுக்காக வருகின்றன. ஆசிரியர் குறிக்கோளின்றியும் உயிர்ப்பின்றியும் வாழ்க்கையை நகர்த்தும் சக வயதினரை அங்கதத்துடன் விளாசுகிறார். முதல் நூலென்றாலும் சுருங்கக்கூறி விளங்கவைப்பதென்கிற முடிவை எடுத்திருக்கவேண்டும். கதைக்களன்,  மாளிகையை விட்டு வெளியிவரவில்லை, எதைச்சொல்லவேண்டுமோ அதைசொல்லியிருக்கிறார். பொதுவாக முதல் நாவல் எழுதுகிறபோது படித்தனைத்தையும் சொல்லிவிடத் துடிப்போம். சொந்தத் தொழிலுக்காக சட்டம்பயின்றதை தவிர நாவலில் ஆசிரியரின் வேறு ஞானங்களை சந்தியில் நிறுத்தும் முயற்சிகளில்லை. எண்ணி நூறே நூறுபக்கங்கள். போதுமா? போதும். பக்கங்களில் என்ன இருக்கின்றது. சொல்வதில் இருக்கிறது சொல்லப்படும் பொருளில் இருக்கிறது. ஓடும் நீரில் துரும்புபோல மீள முடியாத தனதுவாழ்க்கைதேர்வுகுறித்த மத்தில்து பெண்ணின் கவலையை நாமும் புரிந்துகொள்கிறோம் அவள் கையாலாதத்தனத்தைக்குறித்து எரிச்சல் அடையவோ பரிதாபப் படவோ எந்தத் தகுதியும் நமக்கில்லையென்றுதான் சொல்லவேண்டும்.

இப்புனைகதைக்கு பிரான்சின் தெற்கு பகுதியில் செல்வந்தர்கள் வாழும் குடியிருப்பொன்றில் நிகழ்ந்த சம்பவமும் அதை தினசரியில் வாசிக்க நேர்ந்ததும் காரணமென ஒரு பேட்டியில் நாவலாசிரியர் தெரிவிக்கிறார்.  அச்செய்தியின் படி காலனிவாசியொருவர் குடியிருந்தவர்களுக்குப் பொதுவான நீச்சல் குளத்தில், காவல் பெண்மணியொருத்தியை குளிக்க அனுமதிக்கப்போக பிற காலனிவாசிகள் அதை எதிர்த்து உடனடியாக செயற்குழுவைக்கூட்டி கண்டிக்கிறார்கள். இச்சம்பவம் தன்னிடத்தில் ஏற்படுத்திய ஏன்? எதற்காக? என்ற கேள்விகளுக்கான விடை தேடலே நாவலுக்கு மூலமென்பது அவர் தரும் விளக்கம்.

பொதுவாக நடுத்தர ஏழைவர்க்கத்தைசேர்ந்த குடும்பங்களில் இளம்வயதினருக்குள்ள இடம் செல்வந்தர் குடும்பங்களில் இருப்பதில்லை. அபரிதமான செல்வமும் அதைச் சம்பாதித்த அல்லது கட்டிக்காத்த வகைமையும் பெற்றோர்களுக்கு அடங்கிய பிள்ளையாக பெண்ணாக இருப்பதே  உகந்தவாழ்க்கை என்ற அடிமைச்சிந்தனைக்கு செல்வந்தர் பிள்ளைகள் தங்களை ஒப்படைத்துவிடுகிறார்கள். இத்தகைய ஒரு குடும்பத்தின் தலைமுறையாக, கதாநாயகியை நிறுத்தி கலகக்குரல் எழுப்பப்பட்டிருக்கிறது.

இறந்தகாலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு ஒன்றை எடுத்துச்செல்வதில் நேர்கிற உணர்வு சிக்கல்களிலிருந்து விடுபடுவது எப்படி? இணங்கிப்போவதா முரண்படுவதா? மனிதம் எட்டிய உயர்வு இணங்கியதால் நேர்ந்ததல்ல முரண்களால் உற்றது. மரபு -நவீனம்; பழமை -புதுமை இவற்றினை எதிரெதிர் நிலையிலிருந்து ஆதரிப்பதைத்  தவிர்த்து, வெற்றி பெற்றவனாக உலாவர இவை இரண்டிற்குமிடையிலுள்ள தடத்தின் மேடுபள்ளங்களை அறிந்து நடக்கத்தெரிந்த சாதுர்யம் மட்டுமே போதுமா? இவற்றையெல்லாம் இயற்கை எழுதிய விதியென சொல்லிவிட்டு உண்பது, உறங்குவதென்று காலத்தைத் தள்ளலாமா? என்பதுபோன்ற வினாக்களுக்கு செக்குமாட்டின் வாழ்க்கையை பற்றிய உண்மைகளை கதைப்படுத்தி ஆசிரியர் விடைதேடுகிறார்.

——————————————————

மொழிவது சுகம்-Oct.15

லக அழகித் தேர்வும் ஓர் உண்மையும்..

அமெரிக்க தூதரகத்தின் சென்னைக்கிளையின் தூதுவர், பல்கலைகழகமொன்றில் ஆற்றிய உரையில், சுமார் இருபது ஆண்டுகளுக்குமுன்பு ஒரு மாணவியாக இந்தியா வந்திருந்தபோது தமது பயண அனுபவமொன்றை கோடிட்டுக் காட்டுகிறார். இந்தியர்களின் சினேகித மனப்பாங்கையும் பரிவையும் கண்டு வியந்தோதியவர் உரையின் எச்சமாக நெடிய இரயில்பயணத்தின் இறுதியில் தம்முடைய தோல் தமிழர்களைப்போல அழுக்காகவும் கருப்பாகவும் மாறிவிட்டதென குறிப்பிடுகிறார். மயிர் நீக்கின் வாழா கவரிமான் அன்னார் இனத்தினை சேர்ந்தவர்கள் என்பதால் உடனே நமக்கு கோபம் பிறந்து எதிர்ப்பைத் தெரிவித்தோம். தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழனை அழுக்கானவர் கருப்பானவர்களென்று தவறியுங்கூட உச்சரிப்பதென்றால்  அப்பெண்மணிக்கு வாய்க்கொழுப்பின்றி வேறில்லை. வெள்ளையர்களின் இத்தகு மனப்போக்கு கண்டனத்திகுரியதென்பதில் மாற்று கருத்தில்லை.

எனினும் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன. சில தெளிவுகள் தேவைப்படுகின்றன. அப்பெண்மணியை கண்டிக்கிறபோது தமிழர்கள் அழுக்கானவர்கள் என்றதற்காக கண்டிக்கிறோமா கறுப்பானவர்கள் என்றதற்காக கண்டிக்கிறோமா அல்லது இரண்டிற்குமேவா என்று யாரேனும் தெளிவு படுத்தினால் நல்லது. நாம் அழுக்கானவர்கள் எனக் கூறப்படுவதை எதிர்க்கலாம். ஆனால் நம்மை கறுப்பர்களென்று கூறுவதை எதற்காக கண்டிக்கவேண்டும்? என்பது எனக்குப் புரியவில்லை. நமது நிறம் கறுப்புத்தானே இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? அமெரிக்க கறுப்பரினத்து மக்கள் தாங்கள் கறுப்பர்கள் என்பதைப் பெருமையாக கம்பீரத்தோடு சொல்லிக்கொள்கிறார்கள்.

நம்முடைய சான்றிதழ்களிலும் பிற அத்தாட்சிகளிலும் தோலின் நிறம் கறுப்பெனக் குறிப்பிடப்பட்டால் கூடாதென்போமா? எப்படி சொல்லலாமென்று  கொடி பிடிப்போமா?  அதையொரு அமெரிக்கர் கூறக்கூடாதெனில் இந்தியாவுக்குள் வரும் வெளிநாட்டினரை அமெரிக்கனென்றோ இத்தாலியனென்றோ, இங்கிலீஷ்காரனென்றோ சொல்லாமல் ‘வெள்ளையர்’ என நாம் உச்சரிக்கும்போது அதுவும்தானே நிறவெறியாகும்.   கறுப்பு நிறத்தின்மீது நம்மிடத்திலுள்ள துவேஷத்திற்கு யாரிடம் நியாயம் கேட்பது. பெண் சிவப்பாய் இல்லையென நிராகரிக்கிற தமிழன் தமக்குள்ள நிறவெறியை உணர்வதுண்டா? பதினாறு வயதினிலே மயிலு கூட வெள்ளைத்தோலுடன் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கும் பாரதிராஜாவும், திராவிடத்தை குஷ்புவிடம் அடகுவைத்திருக்கும் நமது இனமானமும் எதைச்சொல்கிறது?. சினிமாக்களிலிருந்து சீரியல்கள்வரை கறுப்பு தமிழச்சிகளை வேண்டாமென்கிறோமே, தன்மானத் தமிழர்கள் இவற்றையெல்லாம் யோசிப்பதுண்டா? ஒருவேளை அவர்கள் இலக்கணத்தில் தமிழன் வேறு தமிழச்சி வேறா?

உலகஅழகியாக அண்மையில் அங்கோலா நாட்டைச்சேர்ந்த ஒரு கறுப்பரினபெண்ணை தேர்வுசெய்திருக்கிறார்கள். உலக அழகிதேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த பலர் இவ்வளவிற்கும் கறுப்பர்களில்லை வெள்ளையர்கள். நம்மால் ஒரு கறுப்பு தமிழச்சியை குறைந்த பட்சம் தொலைகாட்சியில் செய்தி வாசிப்பவராகவாவது அனுமதிப்போமா?

——————

பிரெஞ்சு சினிமா:  குற்றமிழைத்ததாக நம்பப்படுபவர்களும் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்படுவர்களும்

அண்மையில் திரைக்கு வந்துள்ள ஒரு பிரெஞ்சு படம் L’Affaire Outreau – Présumé coupable – ஓர் உண்மைக் கதை. ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில்  காவல் துறையும் நீதித்துறையும் விளைவித்த பெருஞ்சேதத்தை திரைப்படத் துறையின் அத்தனை உன்னதங்களையும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு பிரெஞ்சு நீதித்துறையின் அவலங்களை இப்படத்தில் தோலுறுத்தி காட்டியிருக்கிறார்கள். அலென் மரேசோ  நீதித்துறையில் அமீனா வாக பணிபுரிந்தவர். 2001ம் ஆண்டு அவர் செய்யாத ஒரு குற்றத்துக்காக 23 மாதங்கள் சிறையில் இருந்தார். அவர் குடும்பவாழ்க்கை சிதறுகிறது. மனைவி பிரிந்துபோகிறாள். அவரது பிள்ளைகள் தங்கள் உறவைத் துண்டித்துகொள்கின்றனர். அவரது அலவலகம் மூடப்படுகின்றது. அதனைப்பின்னர் ஒரு நூலாக கொண்டுவருகிறார். அதுவே L’Affaire Outreau.

நடந்தது இதுதான். ஊத்ரோ என்ற ஊரைசேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்கள் பெற்றோர்களின் நண்பர்களில் சிலர் தங்களிடத்தில் பாலியியல் குற்றங்களை இழைத்ததாக குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களின் பெற்றோர்களும் சிறுவர்களின் குற்றச்சாட்டை உறுதிபடுத்துகிறார்கள் அதன் விளைவாக பலர் கைது செய்யப்படுகின்றனர். சிறுவர் மீது இழைக்கப்படும் பாலியல் வன்முறைகளை பிரெஞ்சு சட்டம் மிகக் கடுமையாகத் தண்டிக்கிறது. கைதுசெய்யப்பட்டவர்களில் சிறுவர்களின் பெற்றோர்களும் அடங்குவர். குற்றத்தின் தீவிரம் கருதி கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணையின் அடிப்படையில் விடுதலை மறுக்கப்படுகிறது. வழக்கு விசார¨ணைக்கு வருவதற்கு முன்பே மூன்றாண்டுகாலம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சிறையிலேயே இறக்கிறார்.  2004ம் ஆண்டு முதல் தீர்ப்பு வழங்கப்பட்டது குற்றம் சாட்டப்பட்ட பதினேழுபேரில் பதின்மூன்றுபேர் தொடக்கத்திலிருந்தே தாங்கள் நிரபராதிகள் என்றார்கள். அரசு வழக்கறிஞர் தவறுதலாக சிலரை வழக்கில் சேர்த்தாகச்சொல்லி  தங்களை நிரபராதிகள் என்று சொல்லிவந்த அப்பதின்மூன்றுபேரில் ஏழுபேரை விடுதலைசெய்தார். நான்குபேர்கள், ஏற்கனவே சிறையிலிருந்த காலத்தை அவர்களுடைய தண்டனைக்காலமாகக் கணக்கிற்கொண்டு விடுதலை செய்யப்பட்டனர். இரண்டுபேர் தொடர்ந்து சிறைதண்டனை அனுபவிக்க நேர்ந்து பின்னர் விடுதலை செய்யப்படுகிறார்கள். தண்டிக்கப்பட்ட மேற்கண்ட ஆறுபேரும் மேல் முறையீடு செய்கிறார்கள்.

தொடக்கத்திலிருந்து தங்கள் குற்றத்தை ஒப்புகொண்டுவந்த நான்குபேருக்கும் அவர்களுடைய குற்றங்களின் அடிப்படையில் 15 – 20 -5- 6 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்படுகிறது. தங்களை நிரபராதிகளென வாதிட்டுவந்த ஆறுபேரின் மேல் முறையீடு பாரீஸ் நீதிமன்றத்தில் நடபெற்றது. முதல் நாளே ஓர் உண்மை தெரியவந்தது. குற்ற்வாளிகளென தீர்மானிக்கபட்டுத் தொடர்ந்து தண்டனைபெற்ற மேற்கண்ட நான்குபேரில் ஒரு பெண்மணி தாம் பொய்யாக மற்ற்வர்களை இவ்வழக்கில் சேர்த்தாக சொல்ல,  நிரபராதிகளென ஆரம்பம் முதல் கூறிவந்தவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள் எனக் கருதப்பட்டு விடுதலை செய்யப்படுகின்றனர்

குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரின் குற்றங்கள் நிரூபணம் ஆகாதவரை அவர் குற்றவாளியல்ல. ஆனால் நடைமுறை உண்மை என்பது வேறு. காவல்துறையும், செய்தித் தாள்களும் கூட்டணி அமைத்துக்கொண்டு சமூகத்தின் முன்னால் ஒருவனை குற்றவாளியாக நிறுத்தமுடியும்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த பெண்மணியென தினசரியில் செய்தியாக ஒருவர் இடம்பெறுகிறாரென்று வைத்துக்கொள்வோம் அவர் மீதுள்ள குற்றங்கள் நீதிமன்றத்தில் உரிய சாட்சியங்களைக்கொண்டு நிரூபிக்கப்படாதவரை சட்டத்தின் முன் அவர் குற்றவாளியல்ல, அவர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது. நீதிபதி தண்டிப்பதற்கு முன்பே ஆளாளுக்கு ஒரு கொலைவாளினை வைத்துக்கொண்டு அவளை தேடி அலைகிறார்கள். பெண்மணியின் படத்தைபோட்டு  கீழே பெயரை எழுதி – அருகிலேயே ஒரு நடிகையின் திருமண செய்தி இருக்கலாம்- நீங்கள் அதையும் இதையும் சேர்த்து குழப்பிக்கொள்ள கூடாதுபாருங்கள் அதற்காக. அவள் ஏழையாகவோ, நடுத்தரகுடும்பத்தை சேர்ந்தவளாகவோ இருக்கும் தகுதியொன்று போதும். செய்தித்தாளில் ஆரம்பித்து வரிசையாக பலரும் ஈவிரக்கமின்றி தண்டிக்க தயார். அப்பெண்மணியின் பின்னே ஒரு குடும்பம், பிள்ளைகள், வாழ்க்கை, உறவுகள் இருக்கிறதென்ற பிரக்ஞையின்றி அவளை கால்வேறு கைவேறாக கிழித்துப்போடுவார்கள்.

செல்வாக்கு உடைவன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் -குற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டாலுங்கூட –  அவனைத் தண்டிப்பதற்கு பலமுறை யோசிக்கிற சட்டம் சராசரி மனிதனென்றால் அவசரம் காட்டுகிறது.  குற்றவாளிகளை தாராளமாக தண்டிக்கட்டும் அல்லது ஏதோ காரணங்களால் விடுதலை கூட செய்யட்டும் ஆனால் நிரபராதி ஒருவனை தண்டிக்கிறபோது புலம்ப வேண்டியிருக்கிறது.

இந்திய எழுத்துகளுக்கான இடம்?

பாரீஸ் நகரிலுள்ள புகழ்பெற்ற நவீனகலை அருங்காட்சியகமான Centre Pompidou வில் ‘Paris-Bombay-Delhi’ என்ற பொருளுளில் கடந்த ஆறுமாதகாலமாக கண்காட்சியொன்று நடபெற்று வருகிறது. பிரான்சு மற்றும் இந்தியாவைச்சேர்ந்த நவீனக் கலைஞர்களின் கலைபடைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி செப்டம்பர் 19 அன்று முடிவுற்றது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் எழுத்தாளர்கள் “மொழிபெயர்ப்பாளர்களின் பார்வையில் இந்தியா” என்கிற இரண்டுநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் சந்தர்ப்பம் வாய்க்கிறபோது கலந்துகொள்வதுண்டு. ஆனால் இம்முறை கூடுதலான ஆர்வத்துடன் நிகழ்ச்சிக்கு செல்ல காரணமிருந்தது. கடந்த ஆறுமாதத்திற்கு முன்பு இங்கே “Echanges et Partages Franco-Indiens என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினேன். என்னோடு சில பிரெஞ்சு நண்பர்கள் அமைப்பில் வேறு பொறுப்புகளில் இருக்கிறார்கள். எங்கள் அமைப்பில் முக்கிய நோக்கங்களென்று எடுத்துக்கொண்டால் ஆங்கிலத்திலல்லாத பிற இந்திய மொழி படைப்புகளை பிரெஞ்சில் கொண்டுவர முயற்சி எடுப்பது, இந்திய எழுத்தாளர்களையும் பிரெஞ்சு எழுத்தாளர்களையும் வருடத்திற்கொரு முறை இந்தியாவிலோ அல்லது பிரான்சிலோ சந்திக்க ஏற்பாடு செய்வது. எனது இக் கனவை நண்பர் இந்திரனிடம் தெரிவித்தபோது மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றார், பல அரிய யோசனைகளை வழங்கினார், வழங்கியும் வருகிறார். எனவே பாரீஸில் செப்டம்பர் 16 -17 ஏற்பாடு செய்யப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் பார்வையில் இந்தியா என்ற கருத்தரங்கு வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக எனது அக்கறையைப் பெற்றிருந்தது. தவிர நிகழ்ச்சிக்கான அறிவிப்பில் திருமதி  Dominique Vitalyos என்ற பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் பெயரிருந்தது. நான் நேரடியாக சந்தித்ததில்லை. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பதில் கூடுதல் அக்கறையுடனும், மலையாளத்திருந்தும் மொழிபெயர்ப்பு செய்துவருகிறார். ஆக அவரை சந்திக்கவும் வாய்ப்பு என்று கலந்துகொண்டேன். கேரளத்திலிருந்து வைக்கம் முகம்மது பஷீருடன் இணைந்து அவர் மொழிபெயத்திருந்த பஷீரின் படைப்பினைத் தவிர்த்து அவர் அறிமுகப்படுத்தியுள்ள கேரள எழுத்துகள் ஆங்கிலத்திலிருந்தே வந்திருக்கவேண்டும். ஆக அப்பெண்மணி இந்திய திறமைசாலிகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி வருவதாக தெரிவித்துக்கொண்டார். இந்தத் திறமைசாலிகளுக்கு அவரது பார்வையில் என்னபொருளென்று விளங்கிக்கொள்ளவும் ஆவல் இருந்தது.

முதல் நாள் நிகழ்ச்சியில் இந்திய எழுத்தாளர்களென்று நான்குபேரை அறிமுகப்படுத்தினார்கள்: Manil suri, Sudhir Kakar, Preeta Samarasan et Kunal Basu. இவர்கள் நால்வரையும் அறிமுகப்படுத்திய Dominique Vitalyos இந்தியாவில் பன்முகத் தன்மையை மேற்கண்ட எழுத்தாளர்கள் வெளிபடுத்துவதாகவும், இன்றைய இந்தியாவின் படைப்புலகை இவர்களூடாக விளங்கிக்கொள்ள முடியுமெனக் கூறி புளகாங்கிதமடைந்தார். இந் நால்வரின் படைப்புகளை இயலுமெனில் வாசித்துப்பாருங்கள். அவற்றின் தகுதரம் குறித்து விவாதிக்க ஒன்றுமில்லை. இதில் பிரீதா சமரசன் என்ற பெண் மலேசியாவைசேர்ந்தவர். தானொரு தமிழ்ப்பெண் என்பதைத் தவிர்த்து இந்தியாவுக்கும் தனக்கும் எந்தத் தொடர்புமில்லை என ஒத்துக்கொண்டார். மற்ற மூவரும் பிரீதா சமரசன் போலவே தாங்கள் தாய்மொழியை வீட்டில் கூட உபயோகிப்பதில்லையென்றும்  இந்தியாவுக்குபோவது கூட அரிதாக நிகழ்கிறதென்றும் ஆனால் இந்தியாவில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்துவருவதாகவும் தெரிவித்தார்கள். அவர்கள் கூற்றுப்படி இந்தியாவில் பிறந்ததைத் தவிர்த்து அவர்கள் மொழி அளவிலும் பண்பாட்டளவிலும் விலகி வெகு நாளாகின்றது என்பது புரிந்தது?  மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் தங்கள் படைப்புகள் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டத்தில்லை எனவும் ஆனால் ஆங்கிலத்தில் தங்கள் படைப்புகள் கிடைக்கிறபோது இந்தியவாசகனுக்கு பிறமொழிகளில் அவற்றைக் கொண்டுசெல்வது அவசியமில்லையெனவும் வாதிட்டார்கள்.

கேள்வி நேரத்தின்போது நான் அவர்களிடத்தில் கேட்டது இதுதான். வந்திருந்த பார்வையாளர்கள் இதுபோன்ற கேள்வியை நான் தவிர்த்திருக்கலாமென்று ‘உச்சு’கொட்டினார்கள். சிலர் எழுந்துவந்தபோது உங்கள் கேள்வி நியாயமானதென்றார்கள்.

” உங்கள் எழுத்தை நான் மதிக்கிறேன். என்னுடைய கேள்வி உங்கள் படைப்பு பற்றியதல்ல மாறாக நீங்களே உங்களை வெளிநாடு வாழ் இந்தியர்களென்று தெரிவித்திருந்திருந்தீர்கள். அப்படி இருக்கையில் உங்களை வெளிவாடுவாழ் இந்தியர்களை பிரதிநிதித்துவ படுத்தும் எழுத்தாளர்கள் (Indian diaspora writers) என்று சொல்வதுதானே நியாயம்? இந்திய எழுத்தாளர்களென்று (Indian writers) எப்படி  அழைத்துக்கொள்ளலாம் எனக்கேட்டேன், தொடர்ந்து அப்படிச்சொல்லிக்கொள்வதில் உங்களுக்கு கூச்சமிருப்பதில்லையா? ” – என்பது எனது கேள்வி.

அவர்கள் பதில் என்னவாக இருக்குமென்று உங்கள் ஊகத்திற்கு விட்டுவிடுகிறேன். உண்மைதான் அது அவர்கள் குற்றமல்ல. வந்திருந்த எழுத்தாளர்களில் ஒருவர் மட்டும் பிரதேசமொழிகளில் எங்களைபோல எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள் என பெருந்தன்மையுடன் (?) கூறினார்.  மற்றவர்கள் ஒரு படி மேலே போய் நல்ல எழுத்தாளர்கள் பிரதேசமொழிகளிலும் உண்டு என்றார். ஒருவர் இது பிரதேச மொழி எழுத்தாளர்களின் பொறாமைக் குரல் என்றார், பிறகு நக்கலாக நீங்களேகூட ஓர் இயக்கத்தைப் பிரான்சில் தொடங்கலாமென்றார். அவர்களுக்குள்ள உரிமையை ஏற்றுகொண்டாலுங்கூட, பிரதேசமொழிகளில் எழுதுகின்ற இந்திய எழுத்தாளர்களை அழைத்திருக்கவேண்டாமா? என்பதென் கேள்வி. இன்னமும் காலனிய சிந்தனையிலிருந்து விடுபடாமல் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிற இந்த மேட்டுக்குடிமக்களின் எழுத்துமட்டுமே இந்திய எழுத்தாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சாரம் செய்யப்படுகிறதென்பது எனக்குள்ள வருத்தம். அவர்களைக்குற்றம் சொல்வதில் நியாயமில்லை. இந்திய அரசாங்கமும், இலக்கிய மைப்புகளும் என்னசெய்துகொண்டிருக்கின்றன என்ற கேள்விகள் இருக்கின்றன. உடனுக்குடன் ஆங்கிலத்திலிருந்து  தமிழுக்குப் படைப்புகள் வருகின்றன, ஆனால் அது ஒருவழிப்பாதையாக இருப்பதுதான் சோகம்.

மறு நாள் மொழி பெயர்ப்பென்ற தளத்தில் நடந்த விவாதத்தையும் நவீன தமிழிலக்கியத்தினை பிறமொழிகளிற் கொண்டுசெல்ல முனைகிறபோது எதிர்கொள்ளவிருக்கிற சிக்கல்களையும் அடுத்த இதழில் தெரிவிக்கிறேன்.

———-

கவனத்திற்கொள்ள வேண்டிய பதிவுகள் -அக்.11.

வளவு

திரு இராம.கி. எனும் திரு இராமகிருஷ்ணன் என்பவரது வலைத்தலம் ‘வளவு’. இராயர் காப்பி கிளப்பென்ற யாஹ¤ குழுமத்தில் பல தமிழ் ஆர்வலர்களின் பெயர்கள் அறிமுகமாயின. அவற்றுள் திரு இராம.கி பெயருமொன்று. இராயர் காப்பி கிளப் குறித்து தனியாக எழுதவேண்டும். திரு. இராம.கி. பொறியாளர். தமிழில் தீராத காதல்கொண்டு விளம்பரங்களின்றி ஓயாமல் எழுதிக்கொண்டிருப்பவர். தமிழ் வேர்சொற்களை அலசி ஆய்ந்து முன்நிறுத்துபவர். போகிறபோக்கில் தமிழ் என்ற சொல்லேகூட தமிழில்லை என சொல்லிவிடுவாரோ என்ற அச்சம் இடைக்கிடை வருவதுண்டு.  நான் எழுதியிருக்கிற  இந்த பத்து வரிகளில் எத்தனை சொற்கள் தமிழல்லாத சொற்கள் இருக்கிறதோ? அவர்தான் அறிவார். எனக்கு இருக்கின்ற தமிழையே குறையின்றி கொண்டு சேர்த்தால் போதும். எனினும் அவரது வலைத்தலம் நான் விரும்பி படிக்கும் தளம், காரணம் பல நேரங்களில் நல்ல தமிழ்ச் சொற்களின்றி அவதிப்படுகிறபோதேல்லாம் அவரது வலைத்தலம்தான் எனக்கு உதவுகிறது, தவிர அவரது தமிழ் தேசியமும் பாசாங்கற்றது, கட்டுரைகள் அவ்வளவும் போற்றிபாதுகாக்கப்படவேண்டியவை. கடந்த மூன்றுமாதமாக அவர் மாணிக்கவாசகர் காலம் என்ற தொடரை எழுதிவருகிறார். பொறுமையோடு படித்தால், தெரிந்துகொள்ள வழக்கம்போல செறிவான தகவல்கள்.

வலைத்தள முகவரி: http://valavu.blogspot.com/2011/09/1.html

தேவமைந்தன்

நண்பர் தேவமைந்தன் அவருடைய பெயரிலேயே உள்ள வலைத்தலத்தில், திண்ணையில் ஏற்கனவே வெளிவந்த அவரது கட்டுரை ஒன்றை மறுபதிவு செய்திருக்கிறார். திண்ணையில் வாசித்திருக்க சந்தர்ப்பம் இல்லாவர்கள், அமையாதவர்கள் வாசிக்கவேண்டிய ஒன்று. மறுபடியும் வாசித்தாலும் தவறில்லை. ரேங்கே (Ringuet -Philippe Panneton) என்ற கனடா எழுத்தாளரின் ‘முப்பது ஏக்கர்’ புதினம் குறித்தது கட்டுரை. நாவலாசிரியர், நாவல், கருப்பொருள், நாவலின் நாயகன் அவன் எழுச்சி, வீழ்ச்சி எனகட்டுரை ஆழமாக படைப்பட்டிருக்கிறது. தேவமைந்தன் எதை எழுதினாலுலும் மிக கவனமாக சிரத்தை எடுத்துக்கொண்டு எழுதுவார். கிட்டதட்ட எண்பது ஆண்டுகளுக்கு முன்புவந்த நாவலை தேடிப்பிடித்து நண்பர் பாராட்டுகிறபோது, படிக்கின்ற எவருக்கும் அப்படைப்பை ஒருமுறையாவது வாசிக்க வேண்டும் என்கிற உந்துதலைத் தரக்கூடும். வெகு நாட்களுக்கு திண்ணையில் படித்தது என்றாலும் தேவமைந்தன் எழுத்துக்காகவும் மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய கட்டுரை. மறக்காமல் சந்தர்ப்பம் அமைந்தால் ‘முப்பது ஏக்கர்களையும்’ தேடிப்படியுங்கள்.

தேவமைந்தன் வலைப்பூ: http://httpdevamaindhan.blogspot.com/:

அ.ராமசாமி

திரு அ.ராமசாமி வலைப்பூவில் இம்முறை ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு நூலைப்பற்றி மதிப்புரை நோக்கில் ஒரு கட்டுரை. அ.ரமசாமியின் எழுத்துக்களுக்கு எப்போதும் என்னிடம் மரியாதை உண்டு. கட்டுரையில் ஆசிரியர் வணிக எழுத்து இலக்கிய எழுத்தென கட்டமைக்கபட்ட இருபிரிவினருக்கிடையே நடந்த சகோதரச்சண்டையை கோடிட்டு காட்டிவிட்டு கட்டுரை ஆசிரியர் இவ்விரண்டிற்கும் பொதுவானவராக அடையாளப்படுத்திக்கொண்ட  ஹெப்சிபாதாசன் படைப்புகள் பற்றிபேசுகிறார். புத்தம்வீடு என்ற நாவலும் அதன் தொடர்ச்சியாக வெளிவந்த பிற இரண்டு நாவல்களைக்குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. ஹெப்சிபா எப்படி தமது பாத்திரங்களூடாக பிற பழமைவாதிடகளிடமிருந்து வேறுபட்டிருக்கிறார் என்பதை வழக்கம்போல கறாரான தமது வாக்கியங்களின் துணைகொண்டு நிறுவ முயன்றிருக்கிறார். வாசிக்க வேண்டிய பதிவு

அ.ராமசாமி: http://ramasamywritings.blogspot.com/2011/10/blog-post_11.html#more

அசதா

இவரது வலைத்தலத்தில்  யுவான் ருல்போவின் எரியும் சமவெளி  அவலத்துயரின் அழகியல் என்றுள்ள – அண்மையில் இப்பதிவாளர் நாகர்கோவில் நிகழ்வின்றில் நிகழ்த்திய உரையின் – மறுபதிவுவை நண்பர்கள் வாசிக்க வேண்டும்:  தென் அமெரிக்க எழுத்தாளர் யுவான் ருல்·போவின் பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை குறித்தது. சில கதைகளை ஆழமாகவும், சிலவற்றை போகிறபோக்கில் ஒன்றிரண்டு வரிகளிலும் சொல்லியிருக்கிறார். யுவான் ருல்போவின் கதைகள் எப்படியிருந்தாலும் இந்த நண்பரின் எழுத்துக்கள் அந்த எழுத்தாளருக்கு கூடுதல் மதிப்பீட்டத் தந்திருக்கின்றன என்பது வெளிப்படை.

அசதா: http://mugaiyurasadha.blogspot.com/

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -9

பாகிஸ்தானையும் இந்தியாவையும் போலவே இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் அரசியல் மற்றும் பண்பாட்டு ரீதியாக இணக்கமிருப்பதில்லை. அவர்கள் இடம் போனால் இவர்கள் வலம் போவார்கள். அது உண்மையுங்கூட. இங்கிலாந்தில் வாகனங்கள் சாலையில் இடப்புறம் செல்லும் பிரான்சில் வலப்புறம் செல்லவேண்டும். உலகமெங்கும் இதுதான் நடைமுறை காமன்வெல்த் நாடுகளைத் தவிர்த்து. மெட்ரிக் முறையை பெரும்பான்மையான நாடுகள் ஏற்றுக்கொண்டாலும் ஆங்கிலேயருக்கு பவுண்டும், அவுன்சும் விடக்கூடாதவை. ருக்பி(Rugby)யை ஏற்றுக்கொண்ட பிரெஞ்சுக்கார்கள் கிரிக்கெட் எனில் முகம் சுளிப்பார்கள்.

இந்தியா பாகிஸ்தான் மனக்கசப்பென்பது 1947 பிரிவினைக்குப்பிறகு வலுப்பெற்றதெனில் இங்கிலாந்து பிரான்சு மனக்கசப்பென்பது பதினோறாம் நூற்றாண்டில் நொர்மாண்டி பிரதேச பிரெஞ்சுமக்கள் (The Normans) ஹேஸ்ட்டிங்ஸ் சண்டையில் (the Battle of Hastings-1066AD) ஆங்கிலேயர்களை தோற்கடித்ததில் தொடங்கி நூறாண்டுபோராக பின்னர் ஊதி பெருத்தது. ஹேஸ்ட்டிங்ஸ் சண்டையில் இழந்த மானத்தை ஆங்கிலேயர்கள் வாட்டர் லூ சண்டையில் மீட்டெடெடுக்க வேண்டியிருந்தது. இரு நாடுகளுக்கிடையேயான காலனி யுத்தங்களை வரலாறு தெரிவிக்கிறது. இருவரின் சண்டையில் காலனிநாடுகள் பாதித்த சரித்திரத்திற்கு நாமே சாட்சி. வரலாற்று சம்பவங்கள் இங்கிலாந்தின் கை ஓங்கி இருந்ததாகச் சொல்கின்றன. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கும்(English East India Company,-1600) பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனிக்கும் (Compagnie des Indes orientales-1664 (France) இந்தியாவுக்குள் நுழைந்த வகையில் 64 ஆண்டுகள் வித்தியாசம், அன்றைய தாமதம் இன்றும் பிரெஞ்சுக்காரர்களிடம் எல்லாவற்றிலுமுண்டு.  இரண்டாம் உலகப்போரின்போது பிரெஞ்சு ராணுவத்தின் ஜெனரலாகயிருந்த தெகோல் (Charles de Gaulle) ஜெர்மன் ஆக்ரமிப்பின்போது, இங்கிலாந்திற்குத் தப்பியோடி அங்கிருந்து ஜெர்மன் ஆக்ரமிப்பிற்கு எதிராக சுதந்திரப்போரை தொடங்கவேண்டியிருந்தது. எந்த நொர்மாண்டி பிரதேசம் முதன்முதலாக ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுகாரர்களுக்கும் கசப்பினை ஏற்படுத்தித் தந்ததோ அதே நொர்மாண்டியில் வந்திறங்கிய அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து வீரர்கள்தான் பிரெஞ்சுக்காரகளை ஜெர்மனியரிடமிருந்து காப்பாற்ற வேண்டியிருந்தது நகை முரண்.

காலனி ஆட்சியின்போது காலனிமக்களை இரு தரப்பினருமே சுரண்டினாலும், இந்தியாவை பொறுத்தவரை பிரிட்டிஷ் ஆட்சி கல்வி, தகவல் தொடர்பு ஆகியவற்றில் ஓரளவு அக்கறைகொண்டு செயல்பட்டதென்பதை மறுக்க முடியாது. ஆனால் பிரெஞ்சு காலனி நாடுகளில் சுரண்டியது அதிகம். அல்ஜீரியா நாட்டிற்கு சுதந்திரம் வழங்கியபொழுது அந்நாட்டை சேர்ந்தவரென்று ஒரு மருத்துவர்கூட இல்லையென்கிறார்கள். அவர்கள் அதிகபட்சமாக அங்கே உருவாக்கியது கல்விக்கூடமென்று ஒரு உயர்நிலைப்பள்ளி அவ்வளவுதான். பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்த எல்லா காலனிகளுக்கும் இது பொருந்தும். இருவருமே எஜமான வக்கிரத்தில் திளைப்பவர்களென்றாலும் பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் சேவகனுக்குள்ள கற்பூர அறிவைக் கண்டுபிடித்து கணக்கனாக உத்தியோக உயர்வு கொடுக்கத் தெரிந்தவர்கள். பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் காலனிமக்களை கடைசிவரை எடுபிடிகளாக மட்டுமே பார்ப்பவர்கள்.  இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகளில் சிலவற்றை தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கும் பிரான்சு நாடு இன்றளவும் காலனியக்கொள்கையையே அம்மக்களுக்கு எதிராக கடைபிடித்து வருவதற்கு அண்மை உதாரணம் மய்யோத். கடந்த சில நாட்களாக கருப்பரின மக்கள் அங்கே போராடிவருகிறார்கள். சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வாய்கிழிய பேசும் பிரெஞ்சு அரசாங்கம் அதுபற்றி வாய் திறப்பதில்லை. தொலைகாட்சிகளும் பிரெஞ்சு இதழியல்களும் இருட்டடிப்பு செய்கின்றன. அவர்களுக்கு உள்ளூர் சோஷலிஸ்டு கட்சியின் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் முதல் சுற்று முக்கியம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, இங்குள்ள அரசு பிரெஞ்சு குடியுரிமை பெறும் வெளிநாட்டினர் இனி பிரெஞ்சு மொழியில் டிப்ளமா பெற்றிருக்கவேண்டுமென்று குடியுரிமைக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்திருக்கிறது. அது அவர்கள் உரிமை. ஆனால் மனித உரிமையாளர்கள் எழுப்பும் கேள்வி இரண்டாம் உலக யுத்தத்தில் காலனிய நாடுகளிலிருந்து யுத்தத்திற்கு ஆள்பிடித்தீர்களே அப்போது அவர்கள் டிப்ளோமா வைத்திருக்கிறார்களா என்று பார்த்தீர்களா? அல்லது உள்ளூரில் படிப்பறிவற்ற பிரெஞ்சுகாரர்களின் குடியுரிமையை பறித்து நாடுகடத்துவீர்களா என்பதாகும். உண்மையில் பிரெஞ்சு ராணுவ ஜெனரல் தெகோல் பிரிட்டிஷாரின் தயவில், வானொலியில் ஜெர்மனுக்கு எதிராக யுத்தத்திற்கு அழைப்பு விடுத்தபோது காலனிநாடுகளிலிருந்து – புதுச்சேரி உட்பட-  சமூகம் மற்று பொருளாதாரக் காரணங்களால் நலிந்திருந்த காலனிய மக்கள் பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்தார்கள். அவர்களில் 99 சதவீதம் எழுத்தறிவற்றவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை, மிச்சமுள்ள ஒரு சதவீதத்தினர் பள்ளி இறுதிவகுப்புவரை படித்திருக்கலாம். அவர்கள் சொல்தாக்கள் அல்ல சரியாகசொல்வதெனில் எஜமான விசுவாசத்துடன் இடம்பெயர்ந்த கூலிப்படை.
——————————————————

மொழிவது சுகம் -Oct.12

தலைவர்களும் மனிதர்களும்

இப்போதெல்லாம் இந்தியாவில் குறிப்பாக தமிழத்திற்கு வந்தால் தலைவர் என்ற சொல் சர்வசாதாரணமாக காதில் விழுகிறது. குடும்பத்தில், வீதியில், பேருந்தில், நண்பர்கள் வட்டத்தில், அரசியலில், அலுவலகத்தில், இருவர் சந்தித்தால், நான்குபேர் கூடிப்பேசினால், பத்துபேர் திரண்டால் இப்படி அன்றாட வாழ்க்கையில் யாரோ, எவரையோ, செயற்கையாக, அழைப்புக்குறிய மனிதரிடமிருந்து பெறும் பலன்களின் அடிப்படையில்- அஞ்சலகத்தில் பேனாவை இரவல் கேட்பதில் ஆரம்பித்து – ‘ஐயம் இட்டு  ஊழலை உண்ணும்’ பெருச்சாளிகளைப் போற்றும் சங்கேதப் பொருளாக உபயோகிப்பதுவரை என எங்கும் ‘தலைவரே!’ என்ற குரலைக் கேட்க முடிகிறது. அதில் உள்ள போலித்தன்மையையும் புரிந்துகொள்ளவேண்டும். அரசியல்வாதிகள் அறிவார்கள், பிறர் குறைவாகவே அறிவார்கள். ‘தலைவர்’ என்று அழைக்கிற ஒன்றிரண்டு முகங்களை நினைவுபடுத்தி பார்க்கிறேன், கண்கள் இரண்டொருமுறை படபடக்கின்றன, மூக்கோடு கூடிய மேல்தாள் உயர்ந்துகொள்ள, முப்பது பாகைமானி அளவில் வாய்பிளந்து நிற்பார்கள், சம்பந்தப்பட்ட நபரால் கிடைக்கும் பலனுக்கு எடை அதிகமென்றால் கைகள் இயல்பாகக் கும்பிடு போடும் இல்லையெனில் உடலோடு ஒட்டி கிடக்கும், நுணி பற்களைத் நாக்கு ஒருமுறை தொட்டு அடங்கும். ‘தலைவர்’ என்ற சொல்லுக்கான பொருளை இதுதானென்று அகராதிபடுத்திவிட முடியாது. இடம், பொருள், காலம் எல்லாம் சார்ந்தது; அதற்குமேலாக அழைக்கிற நபரும் அழைக்கப்படும் நபரும் அறிந்த உண்மையென்று ஒன்றுண்டு. தலைவர் என்று அழைக்கப்படும்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எனினும் அச்சொல்லை நெஞ்சத்திலிருந்து மேலே கொண்டுவரும் எண்ணமிருக்கிரதில்லையா அதில் சூதுண்டு. அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என நான்கும் தலைவரென்று அழைக்கிற சூதுடன் கலந்தவை. அவை அவற்றுக்கான தருணங்களுக்கென காத்துக்கிடக்கின்றன. தலைமை பீடத்திற்கான கவர்ச்சிக்கு வரலாறுகள் பதிவு செய்திருக்கிற ‘அதிகாரம்’ மட்டும் காரணமல்ல, ‘எத்தனைபேர்கள் என்னைக்கொண்டாடுகிறார்கள்’, என்பதற்கான விடையையும் அது பொறுத்தது.  அதிகாரத்தின் பாய்ச்சலைக்காட்டிலும், புகழின் வீச்சுக்குக் கிடைக்கும் நிலப்பரப்பு அதிகமென்று சம்பந்தப்பட்டவர்கள் அறிவார்கள். தலைமை எடுக்கும் புகழ்ரூபம் வயிற்றெரிச்சலுக்கு காரணமாகின்றன. வரலாற்றில் திருப்பங்களாக நாம் வாசிப்பதனைத்தும், பிறர் புகழ் கண்டு காழ்ப்புறுவதால் உண்டகிற குடற்புண்களே. ஒரு தலைவர் மற்றொருவரை தலைவராக கனவில் பொய்தோற்றமாகக்கூட  கற்பனை செய்வதில்லை. ‘பெரியார்’ ‘அண்ணா’ என உரிமையோடு அழைத்ததெல்லாம் சம்பந்தப்பட்ட மனிதர்களின் தலைமையை மறுப்பதற்கு உபயோகித்த தந்திர வார்த்தைகளென்று நினைக்கிறேன். எனக்கு மேலே இன்னொரு தலைவனா என்ற அசூயையின் வெளிப்பாடுகளே அவைகள். தலைவர்கள் வானத்திலிருந்து குதித்துவிடுவதில்லை, நம்மிலிருந்து வருபவர்கள். அன்று நம்மிலும் மேன்மக்கள் தலைமையேற்றார்கள், இன்று நம்மிலும் கீழ்மக்கள் தலைமை ஏற்கிறார்கள் என்பது அடிப்படையில் காணும் வேறுபாடு, விளைவு காவிரி பிரச்சினை தொடங்கி, காஷ்மீர் பிரச்சினைவரை அரசியல்வாதிகளின் கையாலாகதக்தன்மைக்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன,

மூத்திரம் பேய்ந்தாலும் முழுபக்க விளம்பரம்கொடுக்கும் நமது அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், விளம்பரமின்றி ஓசையின்றி இந்தியாவிற்காக  நம்பிக்கை தரும் வகையில் உழைக்கும் மனிதர்களும் இல்லாமலில்லை. இந்தியப்பொருளாதாரமென்பது ரிலையன்ஸ், டாட்டா, இன்போசிஸ், விப்ரோ போன்ற அமெரிக்க முதலாளித்துவ சிந்தனையை அடிப்படையாகக்கொண்டவர்களை மட்டும் கொண்டதல்ல என்பது சற்று ஆறுதலானசெய்தி. அண்மையில் அமெரிக்காவின் மேலாண்மை இதாழான Academy of Management perspectives வெளியிட்டிருந்த “The Indian way: Lessons for the U.S.” என்கிற கட்டுரைபற்றிய செய்தியொன்றை பிரெஞ்சு தினசரியில் படிக்க நேர்ந்தது. இந்திய நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வொன்று தெரிவிக்கும் தகவலின்படி இந்தியாவிலுள்ள சிற்சில நிறுவனங்களின் அதிபர்களுக்கு, முதலீட்டாளர்களிடம் பொதுவில் காண்கிற ‘உபரி-மதிப்பு'(இலாப வீதம்) மீதான மோகம் குறைவு என்று தெரிவவந்திருக்கிறது. முதலீடு என்கிறபோது இலாபமின்றி இயங்குவது எப்படி? வேண்டும் எனினும் அவர்களுடைய தலையாய கவனம் இந்தியாவின் சமூக நலன் பற்றியதாக இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுவது, ஏழ்மைக்கு எதிராக வினையாற்றுவது, இந்தியத் தகவல் மற்றும் போக்குவரத்தின் வளர்ச்சிக்கு உதவுவது என்று அப்படியல் உள்ளது. இவை வெறும் வார்த்தை அலங்காரங்களல்ல. அடுத்த தேர்தலை குறிவைத்துவைத்து மக்கள் வரிபணத்தில் கொடைவள்ளல்களாக காட்டிகொள்ளும்  அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளல்ல. தங்கள் சொந்தமுதலீட்டில் கிடைக்கும் உபரி-மதிப்பில் கணிசமான பகுதியை தொழிலார்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறார்கள். இதனால் தங்கள் தொழிலாளர்களுடன் நெருக்கமான உறவை பேணமுடிவதாகக் கூறுகிறார்கள். ‘எங்களுக்குத் தொழிலாளர் நலனே முதலாவது, வாடிக்கையாளர் நலன் இரண்டாவது’ என்கிறார் HCL Tecnologies அதிபர். இக்குரலை  கடந்தகால முதலாளித்துவத்தில் கேட்டிருக்க சாத்தியமில்லை. தவிர இந்நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் கல்விக்காகாவும், பயிற்சிக்காகவும் காட்டுகின்ற அக்கறையினால், அவர்களுடைய உழைக்கும் திறன் அமெரிக்க நிறுவனங்களோடு ஒப்பீடு செய்கிறபோது ஏறக்குறைய மூன்றுமடங்காக இருக்கிறதெனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நிறுவனங்களின் வெற்றிக்கு தாங்கள் மட்டுமே காரணமல்ல என்பதை வெளிப்படையாகவே இந்திய முதலீட்டார்கள் ஒப்புகொள்கிறார்களென அமெரிக்க மேலாண்மை சஞ்சிகை புகழ்கிறது. அமெரிக்க அதிபர்கள் போலன்றி இவர்கள் கட்டமைப்பு, ஒருமுகப்படுத்துதல், ஒத்துழைப்பு என ஒவ்வொரு கட்டத்திலும் தொழிலாளர்களோடு இணைந்து செயல்படுகிறார்கள். இந்திய முதலாளிகளிடம் பாடம் கற்கவேண்டுமென அமெரிக்க முதலாளிகளுக்கு அறிவுறுத்துகிற  ஆங்கிலக் கட்டுரை இறுதியாக பங்கு உரிமையாளர்களை அலட்சியம் செய்து முதலீட்டை வளர்ப்பது எப்படி? என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

முதலாளித்துவ நோக்கில்  அமெரிக்க மேலாண்மை இதழியல் கட்டுரையை வெளியிட்டிருப்பினும், இதுபோன்ற நல்ல விடயங்களும் இந்தியாவில் நடக்கின்றன எனகோடிட்டுக்காட்டத்தான் எழுதவேண்டியதாயிற்று. எந்திரனுக்கு கொடிபிடித்து ஊர்வலம்போகிற மந்தைகளுக்கிடையே, தெருகூத்தும், பொம்மலாட்டமும், பாரம்பர்யகலைகளும் உயிர்ப்பெறவேண்டுமென தங்களை வதைத்துக்கொள்கிற மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

——————————–

The Prague Cemetery

பொதுவாக பிரெஞ்சில் உள்ளூர் படைப்புகளை தவிர்த்து அந்நிய மொழிகளிலிருந்தும் வருடம் தோறும் விற்பனையில் சாதனை படைக்கும் எழுத்துக்களும், உலகமறிந்த எழுத்தாளர்களின் படைப்புகளும், உலகில் நன்கறியப்பட்ட பதிப்பகங்களின் வெளியீடுகளும் உடனுக்குடன் கிடைக்கின்றன. மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டில் பிரெஞ்சு இலக்கிய உலகம் மிகக் கூடுதலாகவே அக்கறைகொண்டு செயல்படுகிறதெனலாம். அண்மையில் பிரான்சுநாட்டில் விற்பனையில் சாதனைப்படைத்தவர் பலரும் அறிந்த இத்தாலி படைப்பாளியான உம்பெர்ட்டோ எக்கோ. அவருடைய Cimetière de Prague (The Prague Cemetery) என்ற மொழிபெயர்ப்பு வெளிவந்த நான்குநாட்களில் 15000 பிரதிகள் விற்று தீர்ந்ததாக பிரெஞ்சு தினசரிகள் எழுதுகின்றன.

Cimetière de Prague (The Prague Cemetery) நாவலுக்கும் அவரது முதல் நாவலான The name of the Rose க்கும் இடையில் 30 ஆண்டுகள். அதாவது இத்தாலி மொழியில் அவரது முதல் நாவல் வந்த ஆண்டை 1980 என்று கணக்கிட்டால். இடையில் சராசரியாக ஐந்தாண்டுகளுக்கு ஒன்றென அவரது நாவல்கள் வந்துள்ளன. பொதுவாக எக்கோவின் நாவலை வாசிப்பவர்களுக்கு ஒவ்வொரு நாவலுக்கும் அவர் தந்திருக்கும் உழைப்பினை விளங்கிக்கொள்ளமுடியும். எழுதுவது வரலாற்றின் அடிப்படையிலென்பதால் மிகக் கவனமாக சான்றுகளில் கவனம் செலுத்தியிருப்பார், எடுத்தாளும் பொருளிலும் அவருக்குள்ள ஞானம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். உண்மையையும் புனைவையும் மிகச்சரியான அளவில் கலந்து,  வாசகனை அடுத்ததடுத்து பக்கங்களை புரட்டவைக்கும் அவரது ஆற்றல் பிரம்மிப்புகுரியது. வழக்கம்போல உம்பெர்ட்டோ எக்கோவின் இந்நாவலும் சமயம்- அதன் தகிடுதத்தங்கள், மெய்யியல், புதிர் – மர்மமென பின்னப்பட்டு வாசகனை வெருட்டும் கலையில் தேர்ந்துள்ளது.

அகஸ்ட்டின் பருவலென்ற பிரெஞ்சு சேசுசபையைசேர்ந்த மதகுருவிற்கு ஆகஸ்டு மாதம் 1806ம் ஆண்டு, இத்தாலி படைதளபதி ஜான் பப்திஸ்த் சிமோனினி என்பவனிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அக்கடிதத்தில் அவன் அகஸ்ட்டினின் நூல் (Memoires illustrating the history of Jacobinism) தமக்களித்த உத்வேகத்தை பாராட்டி எழுதுகிறான். – இந்நூல் உலகமனைத்தும் யூதர்களின் அதிகாரத்தின் கீழ் வரவேண்டுமென்ற யூதர்களின் சதிபற்றி பேசுகிறது. உம்பர்ட்டோ எக்கோவின் The Prague Cemetery இந்த உண்மையின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு.  19ம் நூற்றாண்டின் ஐரோப்பிய சம்பவங்களையும் இடைக்கிடை ஆசிரியர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். The Name of the Rose நாவலில் அபெட் வலே என்பவரால் கையளிக்கப்பட்ட நூலினை நினைவுகூர்வதாக கதை தொடங்கும்  அந்த நூல் டாம் அட்சன் என்பவருடைய கையெழுத்து பிரதியின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு. இந் நாவலும் 1897-98 ம் ஆண்டில் மேலே குறிப்பிட்ட சிமோனினியின் நாட்குறிப்புடன் தொடங்குகிறது. இந்த சிமோனினி ஒரு எதிர் தலைவன் மட்டுமல்ல  ஒரு alter-Egoவுங்கூட, தனக்குள் வேறொரு மனிதனையும் உணருகிறான். அவனை புரிந்துகொண்டால் நாவலும் உங்களுக்கு வசமாகும். அதற்கு முன்பாக கொஞ்சமாக ஐரோப்பிய வரலாறு, கொஞ்சம் கூடுதலாக  பிரெஞ்சு வரலாறு குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டு, Masonic conspiracy theories, அகஸ்டின், சிமோனினி இவர்க¨ளை பற்றி தெரிந்துகொண்டு வாசிப்பது நல்லது.
———————————-

பிரான்சை தெரிந்து கொள்ளுங்கள் -8

அழகு

ஒருவர் மற்றவரை கடந்து செல்கிறபோது, இருவரில் ஒருவர்  தமது பார்வை நேரத்தில் கூடுதலாக ஓரிரு விநாடிகள் செலவிட நேரிடுகிறது. எதிராளிடமிருந்து பெறுகிற இக் கூடுதல் நேரத்தில்தான் அதைத் சாதுர்யமாக தமக்குச்சாதகமாக பயன்படுத்திகொள்வதில்தான் வெற்றி தோல்விகளிருக்கின்றன. உடை, தோற்றம், பேச்சு, உபயோகிக்கும் சொற்கள், கால நேரம் என்று அவற்றின் பட்டியலில் இதுபோன்ற பலவும் உண்டு. இது தவிர வீடு, நண்பர்கள், படிக்கும் புத்தகங்களென உங்களை சுற்றியுள்ளவையும் உங்கள் அழகைத் தீர்மானிக்க உதவுகின்றன.  அழகென்பது நம்மைப் பார்க்கின்றவர்களின் பார்வையைப் பொருத்தது மட்டுமல்ல அப் பார்வைக்கு உகந்தவர்களாய் நம்மை மாற்றிக்கொள்வதிலும் உள்ளது.

அழகென்பது அவரவர் பார்வையிலிருக்கிறதென்பது பொதுவாக சொல்லும் வார்த்தை. எனினும் பார்வைக்கு விருந்தாக்கிக் கொள்ளும் பொறுப்பு அப்பொருளுக்குமுண்டு. பிரான்சு நாட்டில் அதற்கான முயற்சிகள் அதிகம்.  அழகை உங்கள் பார்வை தீர்மானிப்பது  உண்மைதானென்றாலும் அந்த உண்மையைத் தீர்மானிப்பது பார்வையாளர்கள் அல்ல பார்க்கப்படும் பொருளென்பதில் பிடிவாதமாக இருப்பவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். பிரெஞ்சு கிராமங்களையோ நகரங்களையோ பார்க்கசெல்கிறபோது தங்கள் சொந்த நகரம் அல்லது கிராமத்தைப் பற்றிய பிரம்மிப்பை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்திதரவேண்டுமென்பதில் அவர்களுக்குள்ள அக்கறையைக் குறைத்துமதிப்பிட முடியாது.

அவ்வகையில் பிரான்சு நாட்டில் இருவகை போட்டிகள் நடைபெறுகின்றன.

முதலாவது நகரங்கள் மற்றும் பெருநகரங்களுகிடையிலான போட்டி:

1959 ஆம் ஆண்டிலிருந்து ‘நகரெங்கும்  மலர்கள்’ என்ற போட்டியை வசந்தகாலங்களில் பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களுக்கிடையில்  நடத்தி விடுதிகளுக்கு நட்சத்திர தகுதியை வழங்குவதுபோல இவற்றுக்கு – அதாவது நகரங்களுக்கும் பெரு நகரங்களுக்கும் ஒரு பூ, இரண்டுபூக்கள் என நான்கு பூக்கள் வரை வழங்கி அவற்றின் அழகு தகுதியை நிர்ணயம் செய்கிறார்கள். அந்நகரங்களில் பச்சைபசேலென்றிருக்கிற நிலவெளிகளின்  எண்ணிக்கைக் கூடுதலாகதாகவும், இயற்கையை போற்றுவதில் அவர்களிடத்தில் இருக்கும் அக்கறையையும்  பொறுத்ததென்பது ஒரு பக்க மெனில் மேம்பாடான உயிர்வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்கக்கூடிய காரணிகளில் கவனம்கொண்டு நாகராட்சியும் மாநகராட்சியும் உழைத்திருக்கவேண்டும், பிற பகுதிமக்கள் அந்நகரின் அழகுக்கென வருவது அதிகரித்திருக்க வேண்டும். அவ்வகையில் பிரான்சு நாட்டில் ஒவ்வொருவருடமும் பன்னிரண்டாயிரம் நகரங்கள், பெருநகரங்கள் அத்தகுதிக்காக வருடா வருடம் போட்டியிடுகின்றன. http://www.cnvvf.fr/le_palmares-5.html.

இரண்டாவது போட்டி கிராமங்களுக்கிடையிலான போட்டி.

பிரான்சு நாட்டில் அழகான கிராமங்களென வெளியிடப்படும் பட்டியலில் இடம்பெற வருடாவருடம் 32000 கிராமங்கள் பங்குபெறுகின்றன. பிரான்சில் கிராமங்கள் என்பது அதிகபட்சமாக இரண்டாயிரம் பேர் வசிக்கின்ற பகுதி. இப்போட்டியில் கலந்துகொள்ளும் கிராமங்களிலிருந்து எதிர்பார்க்கப்படுபவை: கிராமத்தை பூச்செடிகளை வளர்த்து அழகுபடுத்துவது மாத்திரமல்ல அப்பகுதிக்கேயுரிய கட்டிடக்கலையைப் போற்றுதல், கிராமத்தின் சுற்றுசூழல், பாரம்பர்ய கலைப்பெருமை, பாரம்பர்ய உணவு பொருட்கள் என்பது போன்ற குணங்கள்.
———————-