Monthly Archives: ஜூலை 2012

மொழிவது சுகம்-ஜூலை 29

1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்

கைகுலுக்கல் – Se serrer la main

பிரெஞ்சு பண்பாட்டில் கைகுலுக்குவதென்பது முன்பின் தெரியாத ஒருவரை முதன் முறையாக சந்திக்கிறபோதும் விடைபெறுகிறபோதும் இடம்பெறும் குறிப்பாக அச்சந்திப்பு வியாபாரம், அலுவலகம் அல்லது பொதுவிடங்களில் நிகழ்கிறபோது கைகுலுக்கிக்கொள்வதென்பது மரபு. முதன் முறையாக உருவாகும் இந்த அறிமுகம் வியாபாரம் அல்லது அலுவல் நிமித்தமாக எத்தனைமுறை சந்திக்க நேர்ந்தாலும் கைகுலுக்கலே தொடரும். அதாவது அவர்கள் சந்திப்பு அலுவல் எல்லையைக் கடந்த நெருங்கிய நட்பு அல்லது உறவு என்ற வட்டத்திற்குள் பிரவேசிக்காதவரை. (ஏற்கனவே குறிப்பிட்டதைபோன்று அவர்களுக்குள் நெருங்கிய நட்போ உறவோ ஏற்படுமாயின் கன்னத்தோடு கன்னம் கன்னம் ஒட்டி உதடுபடாமல் காற்றில் உச்சுகொட்டுவார்கள் அந்நட்பு காதலன் காதலி என்கிற போக்கில் அமையுமானால் உதட்டில்). பிரெஞ்சு வழக்கில் கைகுலுக்கல் நளினமானது, சில நொடிகளே நீடிப்பது. ஆங்கிலேயரைப்போல இறுகப்பிடித்து (எதிலிருப்பவர் தயிர்வடை தேசிகனாக இருந்தால்) ஆளையே பிடித்து உலுக்குவதுபோல கைகுலுக்கும் பண்பாடு பிரெஞ்சுக்காரர்களிடமில்லை. கைகளிரண்டும் அழுக்காகவோ, ஈரமாகவோ இருந்தால். பிரெஞ்சுக்காரர்கள் தோளை காண்பிப்பார்கள். நீங்கள் தொட்டு சந்திப்பை தொடரலாம் அல்லது விடைபெறலாம். வேறு சிலர் ஏதேனுமொரு விரலை நீட்டுவார்கள். அதற்கும் மேற்குறிப்பிட்ட சடங்குதான்.

2.பிரெஞ்சு எழுத்தாளர் வரிசை- 1.

மிஷெல் ஊல்பெக் (Michel Houellebecq)

1956ல் பிறந்த ஊல்பெக், இன்றைய பிரெஞ்சு எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர். எழுத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கென ஓர் அணுகுமுறை இருக்கிறது. படைப்பின் அழகியல் எழுத்தின் கட்டற்ற சுதந்திரத்தில் இருக்கிறதென நம்புபவர்கள் அவர்கள். இவரும் அதற்கு விதிவிலக்கல்ல. இவருக்கொரு நோபல் பரிசு காத்திருக்கிறதென பல ஆண்டுகளாக நம்பிகொண்டிருக்கிறேன். அடுத்தவருடமே கூட நிகழலாம். சுஜாதா சொல்வதுப்போல அவர் எழுத்தை வாசிக்கிறபோதெல்லாம் பட்சி சொல்ல கேட்டிருக்கிறேன். கவிஞர், கட்டுரையாளர், நாவலாசிரியர், இயக்குனர். பிரெஞ்சு நாவலாசிரியர்களில் சிலரைத்தவிர பெரும்பாலானோர் தங்கள் படத்தை தாங்களே இயக்கவேண்டுமென பிடிவாதமாக இருப்பவர்கள். ஊல்பெக்கும் அக்கூட்டத்தைச் சேர்ந்தவர். நவீன பிரெஞ்சு எழுத்தாளர்களில் உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட படைப்பாளி. Extension du domaine de la lutte, Les Particules élémentaires (Atomised), La Carte et le Territoire (The Map and the Territory), ஆகியவை அவரது முக்கிய நாவல்கள்.

3. அண்மையில் வாசித்த பதிவுகள்

அ. மலைகள்.காம்

நண்பர் சிபிச்செல்வனின் உழைப்பால் வெளிவரும் இணைய இதழ். தீவிர இலக்கியத்தில் கவனம் செலுத்துகிறது. புதிய படைப்பாளிகளில் குறிப்பாக இளைஞர்களில் திறமை சாலிகளை தேர்வுசெய்து ஊக்குவிக்கிறது.  இவ்விதழில் பெருமாள் முருகனின் கவிதைகள், அ.ராமசாமியின் முதல் சென்னைப்பயணம் கட்டுரை, பொதுலேர் கவிதைகள் குறித்த கட்டுரை, மகுடேசுவரன் கவிதைகள், ஹாருகி மிகராமியின் மொழிபெயர்ப்பு கட்டுரையென தீவிர வாசகர்கள் படிக்க நிறைய இருக்கின்றன.

பெருமாள் முருகன் கவிதையில் மொழி நன்றாக இருந்தது. அ.ராமசாமின் முதல் சென்னைப்பயணம் சுவாரஸ்யமான அனுபவம். கூறிப்பாக பீடா அனுபவம். பொதுலேர் கவிதைகள் குறித்த விரிவான கட்டுரை உள்ளது. அநேகரை இக்கட்டுரை கவரக்கூடும். மீக ஆழமாக விரித்து சொல்லப்பட்டிருக்கிறது. பிறவற்றை படிக்கவில்லை. அவற்றை படித்ததும் முழுமையாகவே மலைகள். காம் இதழில் பிரசுரமான படைப்புகள் குறித்து எழுதுகிறேன்.

இலக்கியத்திற்குமட்டுமே தம் இணையம் என்பதில் சிபிச்செல்வன் தெளிவாக இருக்கிறார். பிரசுரித்துள்ள ஆக்கங்கள் உறுதிசெய்கின்றன.

http://malaigal.wordpress.com/

ஆ. சில கவிதைகளின் எளிமையும் சொற்தேர்வும் சட்டென்று நம்மைக் கவர்ந்துவிடும், வாசித்ததும் மனதில் உட்கார்ந்துவிடும். இக்கவிதையை ஆபிதின் பக்கங்களில் வாசிக்க நேர்ந்தது.  இஜட். ஜபருல்லாஹ் என்பவரின் கவிதை.

நீ கொடுத்தது. – இஜட். ஜபருல்லாஹ்

இறைவா!
இருட்டும்  வெளிச்சமும்
எங்களுக்கு
தந்தவன் நீ!

அதோடு விடாது
இருட்டில் வெளிச்சமும்
வெளிச்சத்துக்குள்
இருட்டையும் புகுத்தி வைத்த
காரணக்காரன் நீ!

வெயில்
மழை
மாறி மாறி
எங்களுக்கு தந்தாய்.!

வெயிலின் சூட்டிலும்
மழையின் குளிரிலும்
தவிக்கிறோம்!
என்றாலும்

“சரியான வெயில்”
“நல்ல மழை”
என்றுதான் நாங்கள்
சொல்கிறோம்!

ஏன்..?
நீ கொடுத்தது
அல்லவா?

***
http://abedheen.wordpress.com

—————————————————–

நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு

மனிதத்தைப்போலவே சிறுகதை அருகிவருகிறது.

சிறுகதை கவிதையின் உரைநடை வடிவமென்பதை ஒப்புக்கொண்டால், இன்றைய படைப்புலகில் சிறுகதைகளின் இடமென்ன அதன் தலைவிதி எப்படி என்பதுபோன்ற கேள்விகளுக்கு அவசியமில்லை. பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் புதிய சிறுகதை தொகுப்புகள் வருவதில்லை அல்லது கவனம் பெறும் அளவிற்கு இல்லை.

வாலிப வயதும், மனதிற்கொஞ்சம் காதலும், தனக்குக் மொழி கொஞ்சம் வளைந்து கொடுக்கிறதென்று கண்மூடித்தனமாக நம்பவும் செய்தால் கவிதை எழுத ஆரம்பித்துவிடலாமென நினைத்து எழுதுபவர்கள் பலரும் தாங்கள் அங்கே இங்கேயென்று நகலெடுத்த எழுத்து உதவத் தயங்குகிறபோது ஓடிவிடுவார்கள். உலகளந்த நாயகிக்கு, கைப்பிடிக்கும் நம்பிக்கு, உயிர் நீத்த உத்தமனுக்கு என்றெல்லாம் கவிதைபடித்தவர்களை அறிவேன். இவர்கள் மற்ற நேரங்களில் எழுதுவதில்லை. எழுத்தை விட்டு இவர்கள் ஓடவில்லை, இவர்களிடமிருந்து தம்மைக்காப்பாற்றிக்கொள்ள எழுத்து ஓடி இருக்கிறது. காதற்கவிதையிலிருந்து கொஞ்சம் விடுபட்டு சிறுகதை வடிவத்தைக் கையிலெடுக்கிறவர்களுமுண்டு.

வெகுசன புரிதலில் கவிதை எழுதுவதும் சிறுகதை எழுதுவதும் எளிதென்று நம்பப்படுவதே இவற்றுக்கெல்லாம் முதன்மையானக் காரணம். உண்மையில் படைப்புத்துறையில் மிகமிகக் கடினமாதொரு வடிவங்களென்று சொன்னால் அது கவிதைகளும் சிறுகதைகளும். இவற்றில் ஜெயிப்பதற்கு கூடுதலாக திறன்கள் வேண்டப்படுகின்றன. அத்திறன் நிச்சயமாக பெயருக்கு முன்னால் தம்மைத்தாமே வியந்தோதிகொண்டு எழுதுகிறவர்களிடமில்லை என்பதால்தான் பட்டுக்குஞ்சலங்களின் உபயோகத்தை புரிந்து விலக்கவும் அசலான கவிஞனை, எழுத்தாளனை அடையாளப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மனித வாழ்க்கையென்பது கூடிவாழ்தலென்ற புரிந்துணர்வு என்றைக்குப் பிறந்ததோ அன்றே வாய்மொழிகதைகள் தோன்றின. இயல்பிலேயே மனிதன் இட்டுக்கட்டிச் சொல்வதிலும், ஒன்றைப் பலவாக திரித்துக்கூறுவதிலும் தேர்ந்தவன். ஆனால் வரி வடிவில் கதைசொல்வதென்று இடைக்காலத்தில் முயன்றபோது அவற்றில் கட்டாயம் உண்மையும் இருக்கவேண்டுமென நினைத்திருக்கிறார்கள்.

சிறுகதைகள் குறித்து மூத்த படைப்பாளிகள் தெரிவித்திருந்த அபிப்ராயங்கள் பலவும் திரு. வே. சபாநாயகம் தயவால் ‘திண்ணை’யில் நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும்.

எனக்கு, « ஒற்றைக்கருவை மையமாகக்கொண்டு சுருக்கமாகவும், செறிவாகவும்; வாசிக்கத்தொடங்கிய வேகத்தில் முடித்து, எல்லைக்கோட்டைத் தொட்டவன் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முனையும் மனநிலைக்கு நம்மை ஆளாக்கும் எந்தப்படைப்பும் நல்ல சிறுகதைதான் ». தர்க்கங்கள், விவாதங்கள், நீளமான வர்ணனைகள் நாவல்களுக்கு உகந்தவையாக இருக்கலாம், ஆனால் சிறுகதைகளுக்கு உதவாது. இதுதவிர ஒரு நல்ல சிறுகதைக்கு அடையாளம், நீங்களும் நானும் உண்மையென மனப்பூர்வமாக நம்புவதை நியாயப்படுத்த வேண்டும். பிறகு சொல்லும் உத்தியும் தேர்வு செய்யும் சொற்களும் அவரவர் சாமர்த்தியம்.

‘நீர்மேல் எழுத்து’ ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை தொகுப்பு. தமிழில் படைப்புலகில் எவரையும் குருவாக வரித்துக்கொள்ளாது, பெயருக்காக அல்ல எழுத்துக்காக எனத் தீர்மானித்து வாசிப்பவர்களுக்கு அவர் நன்கு பரிச்சயமானவர். திண்ணை இணைய இதழை தொடர்ந்து வாசித்துவருபவர்களுக்கு தோழமையான பெயர். ஆறேழு வருடங்களுக்கு முன்பு இணையத்தில் இராயர் காப்பி கிளப், மரத்தடி போன்ற மடலாடுகுழுக்கள் இருந்தன. இரா.முருகன், பா.ராகவன், மாலன், இராம.கி. ஆர்.வெங்கிடேஷ், நா.கண்ணண், ஹரிஹரன் என்று பலரை அப்போதுதான் அறியவந்தேன். எவர் மனதையும் புண்படுத்தாது எழுதும் மென்மையான ரெ.காவின் எழுத்தோடும், படைப்புகளோடும் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டது அப்போதுதான்.

ரெ.கார்த்திகேசு பினாங்கு (மலேசியா) நகரைச் சேர்ந்தவர். மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் தகவல் சாதனைத்துறையில் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். மலேசிய வானொலி, தொலைக்காட்சியின் முன்னாள் அலுவலர்.  சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர். அனைத்துலக நாடுகள் பலவற்றில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்த பெருமைக்கும் உரியவர். கற்றகல்வியையும் பெற்ற அனுபவத்தையும் தங்கள் படைப்புகளில் முறையாக – பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் தமிழ்படைப்புலகில் குறைவாகத்தான் இருக்கவேண்டும். சுஜாதா, இரா.முருகனைத் தவிர வேறு பெயர்களை எனக்குத் தெரியாது. எனவே ரெ. கார்த்திகேசு பற்றிய இச்சிறு குறிப்பு அவசியமாகிறது. அறிமுகம் சற்று மிகையாகத்தோன்றினாலும் இச்சிறுகதைதொகுப்பிலுள்ள படைப்புகளை வாசிக்கிறவர்களுக்கு அறிவியல், சமூகமென்ற இரு குதிரைகளிலும் சவாரி செய்யும் ரெ.கார்த்திகேசுவின் ஆற்றலை புரிந்துகொள்ள உதவக்கூடும்.

நீர் மேல் எழுத்து என்ற இச்சிறுகதைதொகுப்பில்  நூலின் பெயரிலேயே அமைந்த ஒரு சிறுகதையோடு மேலும் இரண்டு அறிவியல் புனைகதைகள் இருக்கின்றன. பிறவற்றுள் மல்லி என்கிற சிறுமியை மையமாகக்கொண்ட நான்கு கதைகள் உளவியல் சார்ந்தவை, எஞ்சியுள்ள பிறகதைகள் நமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை ஆய்பவை. எல்லாவற்றிலும் தொடக்கத்தில் நான் கூறியிருப்பதுபோன்று உண்மை இருக்கிறது. கதைகளில் இடம்பெறுகிறவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல: நானும் நீங்களும், அல்லது நமது அண்டை மனிதர்கள். இதுவே ரெ.கார்த்திகேசுவின் கதைகளுக்கு ஒரு கனத்த வாசிப்பை ஏற்படுத்தித் தருகின்றன.

ஆக்கலும் அழித்தலும், மல்லியும் மழையும், என் வயிற்றில் ஓர் எலி , அமீருக்கு இரண்டு கேக் என்ற நான்கு கதைகளும் மல்லி என்ற சிறுமியின் உலகத்தைக் கண்டு பிரம்மித்து உடல் சிலிர்க்கும் அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொள்பவை.

பொதுவாக கதைகளில் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவு, அன்பு போன்ற சொற்களை விரித்து எழுத கணவன் மனைவி, காதலன் காதலி என்றிருக்கவேண்டுமென்ற விதியை கதை சொல்லி எளிதாக தகர்க்கிறார். இக்கதைகள் நான்கிலும் கதைசொல்லியும், கதை சொல்லியின் பேர்த்தியும் பிரதான பாத்திரங்கள். மல்லி மீதூறும் அன்பும் பரிவும், அவர் நெஞ்சக்குழியிலுள்ள வெறுமையை நிரப்ப உதவுகிறது. மழலைசெல்வத்தின் பெருமைகளை குறள்கள் மூலமாக அறிந்திருக்கிறோம். வள்ளுவன் தெரிவிக்கும் அன்புகூட ஒருவழிபோக்கானதே தவிர இருதரப்பு பரிவர்த்தனைகள்குறித்து பேசுவதில்லை. எனக்கென்னவோ வாசித்தபோது வள்ளுவனைக்காட்டிலும் குமரகுருபரும், மீனாட்சியும் நினைவுக்கு வந்தார்கள்.

‘என்னம்மா இப்படி பண்ணிட்டே’

‘ஆ’ னா எழுதினேன் தாத்தா’

‘ஐயோ மல்லி, என்னம்மா செய்ற?’

‘இது ‘ஆ’வன்னா தாத்தா’

(-ஆக்கலும் அழித்தலும்)

‘மல்லி, நேத்து கோழிதானே சாப்பிட்டீங்க? நல்லா இருக்குன்னு சொன்னீங்களே!”

நேத்து நல்லா இருந்துச்சி தாத்தா, இன்னைக்கு  நல்லா இல்லை!’

(மல்லியும் மழையும்)

குழந்தை மல்லிக்கும் கதைசொல்லிக்குமான உரையாடலில் இருதரப்பிலும் அவரவர் வயதுகேற்ப அன்பின் விசையும், நுட்பமும் மெல்லிய இழைகளாக வெளிப்படுகின்றன. இக்கதைகள் புனைவு அற்ற உரையாடலுக்கு நம்மை அழைத்து செல்கின்றன எனலாம்.

மல்லி கட்டமைக்கும் உலகை தம்முடைய வயதும் அனுபவமும் கொண்டு மதிப்பீடுசெய்வதும் அம்மதிப்பீட்டில் தாம் தோற்பதும், அப்படி தோற்பதற்காகவே மல்லியின் அக உலகை அடிக்கடித் தட்டி திறப்பதும், ஏற்கனவே நான் குறிப்பிட்டதுபோன்று கதை சொல்லி தமக்கு தேவையான அன்பு, உடமை, உணர்வுதேவைகளை மீட்டெடுக்கும் முயற்சி. புனைவிற்கும் அபுனைவுக்குமிடையேயான இந்த உரையாடல் யுத்தத்தில் வழக்கம்போல உண்மையே ஜெயிக்கிறது.

அறிவியல் கதைகள் பட்டியலில்: எதிர்காலம் என்று ஒன்று, நீர்மேல், எழுத்து மண்சமைத்தல் என மூன்றுகதைகள் இருக்கின்றன. ‘எதிர்காலம் என்று ஒன்று’, கதையைக் குறித்து சொல்ல எதுவுமில்லை. ‘சுஜாதா’வை நடுவராகக்கொண்டு ‘திண்ணை’யும் மரத்தடியும் நடத்திய அறிவியல் புனைகதைபோட்டியில், இரண்டாம் பரிசுபெற்ற கதை. தேர்வு செய்தவர் சுஜாதா. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் எல்லோருக்கும் வாய்க்காது. ரெ.கார்த்திகேசுவிற்கு வாய்த்தது. இத்தொகுப்பிலுள்ள பிறகதைகளும் திண்னையில் வந்தவை என்பதால் அவற்றை நண்பர்களின் மதிப்பீட்டிற்கு ஒதுக்கிவிட்டு பிறகதைகள் குறித்து பகிர்ந்துகொள்கிறேன்.

அன்றாடம் சந்திக்கும் சமூகப்பிரச்சினைகளை மையமாகக்கொண்ட கதைகளில் உண்மை அறிந்தவர், கொஞ்சம் மனிதன், மௌனமாய் என்ற மூன்று கதைகளும் வாசகனுக்கு அப்பால் என்னிடத்தில் ஓர் எழுத்தாளனும் இருக்கிறா¡ன் என்பதால் மனதிற் சிறிது பொறாமையுடன் வாசிக்க வைத்தவை.

மௌனமாய் என்கிறை கதையைப்பற்றிய என்கருத்தை பதிவு செய்ய மறந்தாலும், உண்மை அறிந்தவர்.. கொஞ்சம் மனிதன் என்ற இருகதைகளைப்பற்றி எழுதியே ஆகவேண்டும்.  இக்கதைகளுக்கான தலைப்பை எள்ளலோடு ஆசிரியர் தேர்வு செய்திருக்கவேண்டும்.

முதல் கதையின் நாயகன் படித்த நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி. இரண்டாவது கதை நாயகன் விளிம்பு மனிதன். முன்னவர் தம்மைச்சுற்றி என்ன நடக்கிறதென்கிற பிரக்ஞையற்ற புத்தி ஜீவி யெனில், இரண்டாவது ஆசாமி தன்னைச்சுற்றி என்ன நடக்கிறதென்பதை அறிவதாலேயே  பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறான்.

புத்திஜீவியை அறிமுகப்படுத்தும் முன் ஆசிரியர் அவர் வீட்டைப்பற்றிய முகவரியைக்கொடுக்கிறார்.

“வீட்டின் முன்பக்க இரும்பு கேட்  துருபிடித்துக்கிடந்தது. மெல்ல தள்ளினாள் சிவகாமி. மெதுவாக கிறீச்சிட்டுத் திறந்துகொண்டது. நாதாங்கி பொருத்தப் பட்டிருக்கவில்லை. பூட்டு ஒன்று தொங்கிக்கொண்டிருந்தாலும் பூட்டப்படாமல் ‘ஓ’ என்று திருகிக்கொண்டு கிடந்தது.”

கணினிமுன் வேர் பிடித்துபோன புத்திஜீவிகள் நம்மிடையே நிறையபேருண்டு. வெளிஉலகில் என்ன நடக்கிறதென்று அறியாமல் கணிணி ஏற்படுத்திய மூளைவிபத்துகளால் முடங்கிப்போனவர்கள்.

இவரை விட்டுப்பிரிந்து இலண்டனில் இன்னொரு கணவருடன் வாழும் சிவகாமி தமது மகளின் திருமனத்திற்கு, அம்மகளின் தகப்பனான கணிணி பைத்தியத்தை அழைக்கவந்திருக்கிறாள். மேற்கத்திய உலகில் சர்வசாதாரணமாக காதில் விழும் உரையாடல்தான். ஆனால் ரெ. கார்த்திகேசுவின் சொற்களைக்கொண்டு வரிவடிவம் பெறுகிறபோது சுடுகிறது.

– இப்ப எல்லாம் ஷேவ் பண்றதே இல்லியா?

– வேஸ்ட் ஓ·ப் டைம்

– அப்படியென்ன கடுமையான நெருக்கடி உங்களுக்கு

– இதோ பாரு சிவா, இவரு ஹைடல்பர்க் யூனிவஸ்ட்டி பேராசிரியர். ஜெர்மனியிலிருந்து எங்கிட்ட ஒரு சந்தேகம் எழுப்பியிருக்காரு;

– உங்களுக்குத் தெரிஞ்சவரா?

– நோ நோ நெட்லவந்த தொடர்புதான்

அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. என் நண்பர் ஒருவர் தமக்கு Face book எண்ணூறு நண்பர்களுக்குமேல் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தில் உள்ளூர் நண்பர்களை மறந்துபோனார். அவர் வீடு காலி செய்தபோது உதவி செய்ததென்னவோ அவர் மறந்துபோன அந்த உள்ளூர் நண்பர்கள்தான். விரல் நுனியில் உலக நடப்புகளை அறிந்திருக்கும் நமக்கு சொந்தவீட்டில் என்ன நடக்கிறதென்ற பிரக்ஞையின்றி கணினி முன் உட்கார்ந்திருக்கிறோம்.

‘கொஞ்சம் மனிதன்’ கந்தசாமி வேறு இனம். விளிம்புநிலை மனிதன். படித்தவர்களையே உணர்ச்சி எளிதில் வெல்கிறபோது, படிக்காத கந்தசாமி என்னசெய்வான். ஜெயிலுக்குப்போன நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு கொண்டிருக்கிறான். ஜெயில் ஆசாமி ஒரு நாள் வெளியில் வரத்தானே வேண்டும் வருகிறான். தகவல் கந்தசாமிக்கு கிடைக்கிறது. நேற்றுவரை உணர்ச்சியை மேயவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அறிவு, விடுதலையான ஆசைநாயகியின் கணவனால் ஆபத்தென்றதும் புலம்புகிறது. மனித மனம் விசித்திரமானது. கழுத்தில் கத்தி இறங்கும்போதுகூட ஏதாவது நடந்து கத்தி இரண்டாக உடையுமென்று மனதார நம்பும்.

” ஒருவேளை அவன் மாறியிருக்கக்கூடும்….. ரெண்டுவருஷம் ஜெயிலிருந்து வந்திருக்கிறான். நிறைய உதை வாங்கியிருப்பான். பலவீனமாயிருப்பான். திருந்தியிருப்பான் ஆகவே நான் சொல்லுவதைப் புரிந்துகொள்வான்”

ஜெயிலிருந்து வெளிவந்த ஆசாமி தண்டிப்பதற்கு முன்பாக ஆசிரியர் ‘நெஞ்சோடு கிளத்தல்’ என்கிற உத்தியைக்கொண்டு கந்தசாமியைக் கூடுதலாகவே தண்டிக்கிறார். இவனை தண்டிக்க வரும் நண்பனுக்கு வேறு நோக்கங்கள் இருக்கின்றன. இங்கே அதைச் சொன்னால் கதையின் சுவாரஸ்யம் கெட்டுவிடும். ஒரு நல்ல சிறுகதைக்கான அத்தனை இலட்சனங்களும் கொண்டகதை.

இத்தொகுப்பில் மௌனமாய்  என்ற சிறுகதையும் முக்கியமானதொன்று. பிறகதைகள் ரெ.கார்த்திகேசு மனம் தோய்ந்து எழுதியகதைகளல்ல என்பதுபோலிருந்தன. குறிப்பாக சுந்தரராமசாமியின் கதையொன்றிர்க்கு  எதிர்பாட்டுபோல எழுதியிருந்த கதையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எனினும் கதையில் உணரமுடிந்த இயல்பான கோபமே ரெ. கார்த்திகேசு ஓர் தேர்ந்த படைப்பாளி என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள போதுமானதாக இருந்தது.

——-

நீர்மேல் எழுத்து

விலை RM25.00

ஆசிரியர்: ரெ. கார்த்திகேசு

உமா பதிப்பகம்

85 CP, Jalan Perhention, Sentful,

51100 Kualo Lumpur, Malaysia

Fax 03 4044 0441

e.mail: umapublications@gmail.com

———————————-

 

 

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-17

சம்பிரதாயமும் – பாவனைகளும்

Faire le Bise – முத்த பரிமாற்றம்

முத்தபரிமாற்றத்தை விளக்குமுன் பிரெஞ்சில்  உள்ள ‘Tutoient’ என்கிற சொல்லைக்குறித்து சொல்லவேண்டும்.  Tutoient’ என்றால் ஒருமையில் அழைப்பது. இதற்கும் முத்தங்களுக்கும் தொடர்பு உண்டு. தமிழைபோலவே பிரெஞ்சில் ‘நீ'(tu) என்று ஒருமையிலும், நீங்கள்(Vous) என பன்மையிலும் அழைக்கும் வகையில் சொற்கள் உள்ளன.

பொதுவாக தமிழில் முன்னிலை சொற்களில் ஒருமை பன்மை என்ற வேறுபாட்டினை  பெரியவர் சிறியவர் என்ற புரிதலின் அடிப்படையில் உபயோகித்தால் போதும்.

பிரெஞ்சில் அப்படியில்லை. உதாரணமாக Tu (‘நீ’)யென்று யாரை அழைக்கலாம் பாருங்கள்:

– நண்பர்கள்.
– உடன் பணியாற்றுகிறவர்கள்
– உறவினர்கள்.
– குழந்தைகள்.
– செல்லப்பிராணிகள்.

நன்கு கவனியுங்கள் மேற்கண்ட தகுதிமட்டுமே அடிப்படை. வயதோ, கல்வியோ, சமூக அந்தஸ்தோ, ஆண் பெண்பேதமோ பொருட்டல்ல. ஆக மனைவி கணவனையும், பிள்ளைகள் பெற்றோர்களையுங்கூட ‘நீ’ போட்டு அழைக்கலாம்..

‘Vous’ (நீங்கள்) என யாரை அழைக்கவேண்டும்:

– நன்கு பரிச்சயமில்லாத ஒருவர்
– உறவினரல்லாத வயதான மனிதர்
– அதிகாரி, சமூகத்தில் உயர்ந்த மனிதர்
– உண்மையில் மரியாதை செலுத்த வேண்டுமென நினைக்கிற நபர். (இது மிகவும் அரிதாக நடக்கிற விஷயம்)

ஒரு தொலைகாட்சி நேர்காணல் நிகட்சியின்போது, பிரான்சு அதிபரை நீங்கள் போட்டு அழைத்த பத்திரிகையாளர், முறைசாரா உரையாடலின்போது நீ யென்று ஒருமையில் அழைத்தார். அண்மையில் இரண்டு மாத அறிமுகத்தில் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் பெண்மணி ஒருவர் ‘கிருஷ்ணா’ உன்னை நீயென அழைக்க அனுமதிப்பாயா, இல்லையெனில் நம்மிருவருக்குமிடையில் அந்நியம் இருப்பதைபோல  உணர்கிறேன் என எழுத, இருவரும் தற்போது ஒருமையில் அழைத்துக்கொள்கிறோம். பல வருடங்களாக அறிந்திருந்தும், நண்பர் நாயக்கரும் நானும் நீங்கள் போட்டே அழைத்துகொள்கிறோம். நமது கலாச்சாரத்திலிருந்து இன்னமும் விடுபடமுடியாமல்  தவிப்பது காரணமாக இருக்கலாம்.

மீண்டும் முத்தங்களுக்கு வருகிறேன்.

காதலன் காதலி, கணவன் மனைவி ஆகியோரன்றி நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடையேயும் முகமன் கூறவும் ஒருவர் மற்றவரிடம் தமக்குள்ள அன்பையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்திக்கொள்ளும் வகையிலும் முத்தமிட்டுக்கொள்வது பொதுவாக மேற்கத்திய நாடுகளில்  சம்பிரதாயமெனில் பிரான்சுநாட்டில் கூடுதலாக கவனம் பெறுகிறது.

Bise அல்லது  Bisu எனப்பொதுவாகச் சொல்வார்கள். இரண்டுமே முத்தத்தைக் குறிக்கும் சொல்.

காதலன் காதலி, கணவன் மனைவிக்கிடைய இடம்பெறும் முத்த பரிமாற்றம் உதடுகளை மையமாகக் கொண்டது. ஆனால் உறவுகள் நட்புகளை – (முன் பின் தெரியாதவர்களை அல்ல) சந்திக்க செல்கிறபோதும் அவர்களிடம் விடைபெறுகிறபோதும் முத்தமிடும் இடம் கன்னங்கள்.

இரண்டு நண்பர்கள் சந்திக்கிறபோது தன்னோடு இருக்கிற மூன்றாவது நபரை அறிமுகப்படுத்துகிறபோதும் முத்தமிடலாம்- அதாவது கன்னத்தில். குறிப்பாக அவர்கள் சிறுவர் சிறுமியராகவோ வயதில் மூத்தவராகவோ இருப்பின் முத்தமிட தயங்கவேண்டியதில்லை.

முத்தமிடுவதா அல்லது கைகுலுக்கல்போதுமா என்பதை இரு நபர்களுக்கிடையேயான உறவு அல்லது நட்பின் அளவுகள், பாலினம் ஆகியவைப் பொதுவாக தீர்மானிக்கின்றன ( பல நேரங்களில் அவர்களின் முகங்கள்). சிநேகிதிகள் இருவர் அதாவது அவர்கள் ஒருவரையொருவர் நீ போட்டுக்கொள்ளும் அளவிற்கு நெருக்கமிருப்பின், சந்திக்கிறபோதும், புறப்படும்போதும் கன்னத்தில் முத்தமிட்டுக்கொள்ளலாம். எதிர் பாலினத்தைச்சேர்ந்த இருவர்கூட அவ்வாறு செய்யலாம். ஆனால் அவ்விருவரில் ஒருவரான பெண் அதை விரும்பாவிடில் ( அவர்கள் விலகி நின்று கை நீட்டுவார்கள் -கை குலுக்குவதற்காக) தவிர்ப்பது நாகரீகம். அவ்வாறே இருவர் சந்திக்கிறபோதும் பிரிந்து செல்கிறபோதும் முத்தமிடுவது தவிர்க்கபடுவதற்கு காரணங்களிருக்குமெனில் நிச்சயம் கைகுலுக்கவேண்டும். கை குலுக்கும் முறை குறித்து பிறகு எழுதுகிறேன்.

கன்னத்தில் முத்தமிடும் சம்பிரதாயத்தில் சில விதிமுறைகள் இருக்கின்றன.

1. இருவர் கன்னங்களும் மற்றவரின் கன்னத்தில் பாதி அளவைத் தாண்டக்கூடாது.

2. கன்னத்தில் உதடுகளை பதிக்காமல் முத்தமிடவேண்டும் கன்னத்தில் உதடுகள் பதிந்தால் அதற்கு வேறுபொருள்.

3. எண்ணிக்கை:

–  கன்னத்தில் மாறிமாறி இரண்டு முறை முத்தமிட்டுக்கொள்வதென்பது பிரான்சு முழுக்க மேற்கண்ட காரனங்களின் அடிப்படையில்(நட்பு, நெருங்கிய உறவுகள்…) பொது வழக்காக இருக்கிறது.

– Provence என்ற பகுதியில் மூன்று முறை முத்தமிட்டுக்கொள்கிறார்களாம். சில நேரங்களில்  சந்திப்பைத் தொடங்குகிறபோது மூன்று முத்தமென்றும் புறப்படும்போது இரண்டு முத்தமென்றுங்கூட சில பகுதிகளில் வழக்க முண்டாம்.

– நான் இருக்கிற பகுதிகளில் இரண்டும் இருக்கிறது நான்கும் இருக்கிறது.

எனது அனுபவம் வேறு.  முகத்திற்காக முத்தமிட நெருங்கி, அவர்களின் வாய் வீச்சத்தால் அவதிபட்டிருக்கிறேன். வெள்ளையர்களிடம் கைகுலுக்குவதே உத்தமம்.

——

மொழிவது சுகம் – ஜூலை-17

 அவ்வைக்கு 75

வணக்கத்திற்குரிய அவ்வைக்கு 75 வயதென்று தகவல் கிடைத்தது. கடந்த ஜூலை பதினைந்து அன்று சிறப்பாக விழா எடுத்து விமரிசையாக கொண்டாடியிருக்கிறார்கள். தொடக்க காலத்தில் எனது நூல்களுக்கு அவர் முன்னுரை எழுதியிருக்கிறார். அண்ணா நகரில், அவரது இல்லத்திற்கு வருபவர்களிடமெல்லாம் என்னை ஏதோ ஒரு பெரிய கவிஞர்போல அறிமுகப்படுத்துவார். கூச்சத்தில் தலை தாழ்ந்து அமர்ந்திருப்பேன். அவரை சுற்றியிருந்தவர்களின் இலக்கிய இரசனை வேறாக இருந்தது. எனவே ஒதுங்கிக்கொண்டேன். இருந்த போதிலும் பழகுவதற்கு எளியவர், குழந்தை மனம். சுவைஞர். நல்ல தமிழை எங்கே கண்டாலும் தயக்கமின்றி பாராட்டுவார். அவரைக்குறித்து பல்வேறுவிதமான விமர்சங்களை என்காதுபட சிற்றிதழுலகில் கேள்விபட்டேன். அவை தவறா சரியா என எனக்குத் தெரியவும் தெரியாது. நான் எப்போதுமே எனது அனுபவங்களின் அடிப்படையில் மனிதர்களை எடைபோடுவேன், என்வரையில் உயர்ந்த மனிதர். இலக்கியத்தில்  அவருக்குள்ள பரந்த ஞானத்தையும், இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா என கேட்பவர்களை வசீகரிக்கும் அவரது நாவன்மையையும்  பாராட்ட எத்தனை விழாவேண்டுமென்றாலும் எடுக்கலாம்.

வாழ்க நீ எம்மான்.

காதலும் காதல் சார்ந்த இடமும்

ஒரு பொருள் அல்லது உயிரியொன்றின்மீது உணர்ச்சியின்பாற்பட்ட அன்பு சுரப்பதால், அப்பொருளை அல்லது உயிரியை உடல், மனம் சார்ந்து அடைய எத்தனிக்கிறோம். அந்நிலையில் வெளிப்படும் பாவங்கள்,  சேட்டைகள் அனைத்துமே ‘காதல்’ என்ற சொல்லை புரிந்துகொள்ள உதவுபவை. ‘காதல்’ மற்றொரு நபர் மீது செலுத்தும் ஆழமான நேசமென்று பொதுபுத்தியில் உணர்ந்துகொள்ளபட்டுள்ளது. காதலின் பொருளை தெரிந்துகொள்ள பிரயாசைப்படின் அக்காதலுக்குள் உட்பிரிவுகள் இருப்பதும் அவற்றுக்கு நாமே சாட்சியாக இருப்பதும் தெளிவு. உடலிச்சையை (சிற்றின்பத்தை?) அடிநாதமாகக்கொண்ட தீவிர காதலில் ஆரம்பித்து, அதனைத் தவிர்த்த நெருக்கத்தை மட்டுமே மையமாகக்கொண்ட அல்லது ‘நீ அருகிலிருந்தால் போதும்’ என அமைதிகொள்கிற குடும்பம், நட்பு, அறிவியல், கலை, பக்தி, பரிவு, இரக்கம்… ஆகியவற்றின் அடிப்படையிலான மென்மையான காதல்வரை பல வரன்முறைகள் அதிலிருக்கின்றன.

காதல் ஒன்று:

1912ம் ஆண்டிற்கான கான் உலகத் திரைப்படவிழாவில் தங்க ஓலை (Palm d’or) விருதை வென்றிருப்பது காதல் (Amour) எனும் திரைப்படம். இயக்குனர்  மிஷாயில் ஹானிக்க ஆஸ்த்திரியாவைச் சேர்ந்தவர். இயக்குனரின் திரைப்படங்கள் The Piano Teacher, The White Ribbon ஆகிய இரண்டும் ஏற்கனவே கான் திரைப்படவிழாவில் மிகச்சிறந்த படத்திற்கான தங்க ஓலை விருதை வென்றவை. இன்றைய தேதியில் மேற்கத்திய இயக்குனர்களில் முக்கியத்துவம் பெற்றவர். அவரது திரைப்படங்கள் அனைத்துமே  கருத்திற்கொள்ளவேண்டியவை. அவரது பெற்றோர்கள்  திரைத்துறையைச் சேர்ந்தவர்கள். வீயன்னா பல்கலைகழகத்தில் தத்துவம், உளவியல், நாடகம் மூன்றையும் பயின்றவர். திரைப்பட விமர்சகராக ஆரம்பக்காலங்களில் பணியாற்றிருக்கிறார், தம்மை தேர்ந்ததொரு இயக்குனராக உருவாக்கியது விமர்சகர் தொழிலே என்கிறார்.  ‘எண்பது வயதைக் கடந்த அறிவார்ந்த தம்பதிகளுக்கிடையே நிலவும் காதலை இத்திரைப்படம் சொல்கிறது. ஆன், கணவர் ஜார்ஜ் இருவரும் இசைக் கலைஞர்கள். ஆனால் இவைகளெல்லாம் கடந்த காலத்தியவை, தற்போது பணி ஓய்விலிருப்பவர்கள். அவர்களுடைய மகளும்  இசைக்கலைஞர் (இவர் இயக்குனரின் The Piano Teacher படத்தின் கதாநாயகி) குடும்பத்துடன்  வெளிநாட்டிலிருக்கிறாள். ஒரு நாள் முதிர்ந்த வயதினர் பலருக்கும் நிகழ்கிற பக்கவாத விபத்து ‘ஆன்’னுக்கும் நேருகிறது. பக்கவாத நோயை, அல்லது ஏற்பட்டிருக்கும் சோதனையை மூதாட்டியும் கிழவரும் எப்படிச் சந்திக்கிறார்களென்பதை பார்வையாளர்களுக்கு அலுப்பின்றி சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் மிஷாயில் ஹானிக்க (Michael Haneke).

எனக்குத் தெரிந்த சென்னையைச் சேர்ந்த ஒருவர் தமது சுவிஸ் கணவருடன் இங்கே (Strasbourg) வசிக்கிறார். அவரது பெற்றோர்கள் இங்கே வந்திருந்தபோது, அப்பெண்மணியின் தந்தை The Hindu வுக்கு எழுதுவதுபோல எங்கள் ஊர் மாநகராட்சி வெளியிடும் மாதச் சஞ்சிகையின் ஆசிரியருக்குத் தவறாமல் புகார்கள் எழுதுவார். ஒரு நாள் உள்ளூர் மேயர் அவரை அழைத்து கடிதங்களுக்கு நன்றி தெரிவித்ததோடு,  குறிப்பிட்டிருந்த  குறைகளையெல்லாம் நிவர்த்திசெய்திருக்கிறோம் சென்று பாருங்களென அவரை மாநகராட்சி அதிகாரியுடன் அனுப்பியும் வைத்தார். அப்பெரியவரை சென்னை வந்தபோது சென்று பார்க்க நேர்ந்தது, ‘காதல்’ திரைப்படத்தில் வருகிற கணவன் மனைவிபோல அவர்கள் வாழ்ந்தார்கள். ஆக இதுபோன்ற காதல் கதைகள் சென்னையிலும் கிடைக்கின்றன.

 காதல் இரண்டு

இது நிழற்படக் காதலல்ல, நிஜவாழ்க்கைக் காதல். தம்பதிகளுடையேயான அன்னியோன்னிய காதலைப்பற்றிய ஓர் உண்மைச்சம்பவம். .  அண்மையில் பிரெஞ்சு அதிபர் தேர்தலில் சோஷலிஸ்டு கட்சியின் பிரான்சுவா ஒலாந்து வெற்றி பெற்றதைப் பற்றி எழுதியிருந்தேன். உண்மையில் அக்கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டு ஜெயித்திருக்கவேண்டியவர் தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் (Domonique Strauskan). இவர் பொருளாதார நிபுணர், பிரெஞ்சு அரசாங்கத்தின் முன்னாள் நிதி அமைச்சர். பிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கு முன்பாக மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில்  பெருவாரியான மக்கள் ஆதரவுடன் அதிபர் தேர்தலில் வெல்லக்கூடுமென்று தெரியவந்தது. இரண்டாவது முறையும் அதிபராகவேண்டுமென்ற நினைத்த அப்போதைய அதிபர் சர்க்கோசி, அதிபர் தேர்தலில் கடுமையான போட்டியைத் தவிர்க்க பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைவராக தொமினிக் ஸ்ட்ரோஸ்கானை நியமனம் செய்தார். சர்க்கோசிக்கு தொமினிக் ஸ்ட்ரோஸ்கானுடைய பொருளாதார நிபுணத்துவமென்கிற புறவாழ்க்கையைக்காட்டிலும், அன்னாரது கீழ்மையான அகவாழ்க்கைமீது நம்பிக்கை. பிரெஞ்சு அதிபர் தேர்தலை முன்னிட்டு சோஷலிஸ்டு கட்சிக்குள் வேட்பாளரை தேர்வுசெய்யும் முதற்கட்ட வாக்கெடுப்பில் தமது பெயரை பிரேரிப்பதற்காக  பன்னாட்டு நிதிநிறுவனத் தலைவர் பாரீஸ் வருவதற்கு முன்பாக நியுயார்க் ஓட்டலொன்றில் தங்குகிறார். ஓட்டல்,  அதிபர் சர்க்கோஸியின் நண்பருடையது. ஓட்டலில் பணியாற்றிய கறுப்பரின பெண்ணிடம் வல்லுறவு கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு பாரீஸ் புறப்படுவதற்கு முன்பாக தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் கைதுசெய்யப்பட்டார். குற்றம் சாட்டிய பெண்ணின் கடந்தக்காலத்தை தோண்டிய அமெரிக்க போலீஸார், பெண்மணியின் நடத்தையில் சந்தேகத்தை விதைத்து பன்னாட்டு நிதி நிறுவன அதிபரை விடுவித்திருந்தாலும் வழக்கு முடியவில்லை. சம்பவத்தைத் தொடர்ந்து பிரான்சிலும் குப்பை கிளறப்பட்டது. அவருக்கெதிராக இங்கும் பாலியல் குற்றசாட்டுகள். பெண்பத்திரிகையாளர்கள், நட்சத்திர விடுதிகளில் வலம் வரும் வேசிப்பெண்களென பலரும் இதிலடக்கம். பலவற்றில் உண்மையில்லாமில்லை. அதிபராக வேண்டியவர் நம் ஊரில் சொல்வதுபோது கழுநீர் பானையில் விழுந்தார். இங்கே சொல்லவந்தது தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் பற்றியல்ல. அவர் மனைவி ஆன் சாங்க்ளேர் கணவரிடத்தின் கொண்டிருந்த காதல் குறித்து. மேற்கண்ட சம்மபவங்களுக்குப்பிறகு அடுத்தடுத்து பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகி தமது மனைவியிடம் அவர் உண்மையாக நடந்துகொள்ளவில்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மனைவி ‘ஆன் சேங்க்ளேர்’ அதை எதிர்கொண்டவிதம் வியப்பில் ஆழ்த்தியது. சம்பாதித்த பணத்தைமட்டுமல்ல தமது பெற்றோர் பணத்தையும்  பாலியல் வழக்குகளுக்குகளிற் சிக்கித் தவிக்கும் கணவருக்காக செலவிடுகிறார். தொமினிக்கின் அரசியல் நண்பர்கள், நெருங்கிய பிற துறை நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் கைவிட்ட பிறகும் ஆன் சேங்க்ளேர்’ அவருடன் இருக்கிறார். இது போன்ற நெருக்கடியான நேரத்தில் பிரிவது நியாயமில்லை என்கிறார். நாம் இருப்பது 21ம் நூற்றாண்டு. ஆன் சேங்க்ளேர் வாழ்வது மேற்கத்திய நாடொன்றில், பிரான்சு நாட்டில். இங்கே பெண்ணுரிமை, பெண்விடுதலை போன்ற சொற்கள் இந்தியாபோன்ற மரபுகளில் மூழ்கிய கீழைநாடுகளைக்காட்டிலும் உயிர்ப்பானவை, வீரியம் மிக்கவை. வியப்புக்குரிய விடயம் அவரொரு பத்திரிகையாளர், தொலைகாட்சி அலைவரிசயின் நட்சத்திர பெண்மணி, பெண்விடுதலையாளர்.

வலெரி திரெர்விலெர் – செகொலன் ரொயால்:

இவ்விரு பெண்மணிகளும் தற்போதையை பிரான்சு அதிபர் பிரான்சுவா ஒலாந்தோடு தொடர்புடையவர்கள். இங்கேயும் காதல்தான் மையப்பொருள். செகொலன் ரொயால், அரசியல்வாதி. 2007ல் சோஷலிஸ்டுக்கட்சியின் வேட்பாளராக அதிபர் தேர்தலுக்கு நின்று சர்க்கோசியிடம் தோற்றவர். செகொலன் ரொயால் தற்போதைய பிரான்சு அதிபர் ஒலாந்துவோடு பிரெஞ்சு நிர்வாக அகாதெமியில் உடன் பயின்றவர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தாம்பத்யதிற்கு சாட்சியாக பிள்ளைகள் இருக்கிறார்கள். 2006ல் ஒலாந்து, வலெரி தெரிர்விலெர் என்கிற விதவையை சினேகிதம் கொள்ள ஒலாந்து செகொலன் விவாகரத்து செய்துகொள்கிறார்கள். சோஷலிஸ்டு அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய அனுபவமும் செகொலனுக்குண்டு. அதிகார பூர்வமாக ‘வலெரி தெரிர்வலெரை’ ஒலாந்து மணம் முடிக்காததால் அதிபர் மாளிகையில் வலெரிக்கு இடமில்லை. தற்போதைக்கு வலெரிக்கு மணமுடித்துக்கொள்ள விருப்பமுமில்லை. டொமினிக் மனைவி ஆன் சேங்க்ளேர் போல புதிய அதிபர் ஒலாந்துவின் தற்போதைய தோழி வலேரியுமொரு பத்திரிகையாளர், பெண்ணுரிமையில் நம்பிக்கைக்கொண்டவர்.

அதிபர் ஓலாந்தும் செகொலனும் விவாகரத்து பெற்றுக்கொண்டாலும் அவர்கள் பிள்ளைகள் ஒலாந்து அதிபர் தேர்தலில் நின்றபோது உதவியிருக்கிறார்கள். செகொலன் சோஷலிஸ்டுகட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர், எனவே சோஷலிஸ்டுகட்சியின் பிற  தலைவர்களை நடத்துவதைப்போலவே அவரையும் நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் முன்னாள் கணவரும் இந்நாள் அதிபருமான ஒலாந்துவிற்கு இருக்கிறது. இந்நிலையில் சட்டசபை தேர்தல் வந்தது. சோஷலிஸ்டு கட்சியின் தலைவர்களில் சிலர் தாங்கள் ஜெயிப்பதற்கு வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வுசெய்து அங்கே நிற்க விரும்பினார்கள், கட்சி மேலிடமும் ஆதரித்தது. செகொலன் நிற்கிற தொகுதி அவர் பிறந்த மாவட்டத்தில் வருகிறபோதும் அவர்கள் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர் கட்சியின் தலமைக்கு எதிராக செகொலனை எதிர்த்து நிற்கிறார். செகொலனை அவரது கட்சியும் அவரது அதிபரும் ஆதரிக்கிறார்கள். ஜெயித்தால் பாராளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்படுவாரென்று நம்பப்பட்டது. இந்நிலையில் சக்களத்தி சண்டை அரங்கேறியிருக்கிறது. அதிபரின் புதிய சினேகிதிக்கு அதிபர் தமது முன்னாள் மனைவியிடம் அரசியல் ரீதியாக நட்பு பாராட்டுவது பிடிக்கவில்லை. அதிபரிடம் இப்புதிய சினேகிதி எச்சரித்ததாகவும் அதனைமீறி செகொலனுக்கு அவர் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விளைவு வலெரி பகிரங்கமாக ட்வீட்டரில் செகொலனுக்கு எதிராக நிற்கும் மற்றொரு வேட்பாளரை ஆதரித்து அறிக்கை விட்டிருக்கிறார். பெருவாரியான மக்களின் வெறுப்பிற்கும், பத்திரிகைகளின் கண்டனத்திற்கும் வலெரி ஆளாகியிருக்கிறார். ஒலாந்துவிற்கு நிர்வாகதிறமை போதாது, மென்மையான அணுகுமுறைக்குச்சொந்தக்காரர் என்கிற விமர்சனங்களை, சொந்தக் கட்சி தலைவர்களே வைத்திருந்தார்கள். புதிய சினேகிதையின் அடாவடிப்போக்கு அவற்றை உறுதிபடுத்தியிருக்கின்றன. செகொலன் மீது கொண்டிருக்கும் பொறாமையால் இது நிகழ்ந்ததென்று பொதுவில் பலரும் குற்றம்சாட்ட, மறுக்கும் வலெரி தெரிர்வில்லர் தமது நடத்தைக்கு ஒலாந்திடம் தமக்குள்ள காதலேயன்றி, செகொலன் மீதான பொறாமையல்ல என்கிறார். அவருக்குக் காதலென்ற பேரில் சினேகிதர் முகத்தில் கரியைப்பூசினாலும் பரவாயில்லை, சுதந்திரம் பவித்ரமானது.

காதல் மூன்று:

‘எதிர்க்கரை’ (The Edge of Heaven). 2007ம் ஆண்டு கான் திரைப்படவிழாவில் சிறந்த திரைக்கதைக்கான பரிசினை வென்ற படம். இங்கே வேறுவகையான காதல் சொல்லப்படுகிறது. இப்படத்தை பிரெஞ்சு தொலைகாட்சியான Arte அலைவரிசையில் கடந்தவாரம் பார்த்தேன். ‘படத்தின் இயக்குனர் பாத் அக்கின் (Fath Akin), பெற்றோர்கள் துருக்கியர். எதிர்க்கரை என்று மொழிபெயர்த்திருப்பது படத்தின் பிரெஞ்சு பெயரை கருத்திற்கொண்டு. திரைப்படத்தைப் பார்க்க நேரந்தால் பிரெஞ்சு பெயரே பொருத்தம் என்பீர்கள். ஐரோப்பிய நாடுகளில் துருக்கிமக்கள் வெகுகாலந்தொட்டு வசித்து வருகிறார்கள். கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையையும் கணக்கிட்டால் பெரும்பான்மையினர் துருக்கி வம்சாவளியினராக இருப்பார்கள். பிரான்சுநாட்டில் மாத்திரம் ஐந்து இலட்சம் துருக்கிமக்கள் வாழ்கிறார்கள். ஜெர்மனியில் இரண்டுமில்லியன் துருக்கியர்கள். ஆக ஜெர்மன் நாட்கள் துருக்கி மக்கள் வாழ்க்கையாலும் எழுதப்பட்டவை. ‘எதிர்க்கரை’படம் உருவானதற்கு இதைக்காட்டிலும் வேறுகாரணங்கள் இருக்கமுடியாது. திரைப்படமென்பது ஏனைய கலைகளைப்போலவே ஒரு வாழ்வியல் கிளிஷே. மனித வாழ்க்கையின் ஒரு துண்டு காட்சி. உறைந்துபோன காலத்தையும் கட்டிப்போன படிமத்தையும் உயிர்ப்பித்து நம்மை நாமே எதிர்கொள்வது. ‘எதிர்க்கரை’ திரைப்படம் இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த மூன்று குடும்பங்களைப் பற்றிய வித்தியாசமான காதல் கதை( கோலிவுட் ‘வித்தியாசமல்ல அசலானது).

தந்தை மகனென்று ஒரு குடும்பம், தாய் மகளென்று இரண்டு குடும்பங்கள். ஒருதாயும் அவர் மகளும் ஜெர்மானியர், மற்ற நால்வரும் துருக்கியர். இந்த ஆறுபேரும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் மற்றவர்களை எங்கேனும் எதற்கேனும் சந்திக்கவேண்டிவருமென்றோ சில கி.மீட்டர்தூரம் அந்தப் பிறருடன்  ஒன்றாகப் பயணிக்கவேண்டிவருமென்றோ அல்லது ஒருவர்க்கொருவர் உதவவேண்டிவருமென்றோ நினைத்துபார்த்தவர்கள் அல்ல.  இருந்தாலும் அவர்களுக்கென்று அமைந்த வாழ்க்கைத் திடீர் சந்திப்பை ஏற்படுத்தித் தருகிறது, சந்தோஷத்தை நிரப்புகிறது, எதிர்பாராமல் ஏற்பட்ட உடைப்பில் சந்தோஷம் நிரம்பிய வேகத்தில் வற்றிப்போகிறது. புழுக்கமும் இறுக்கமும் வெக்கைநாட்களுக்கென்று யார் சொல்வது, மழைக்காலத்திலும், பனி நாட்களிலுங்கூட அவை  நம்மை தொட்டுப்பார்க்கலாம், எல்லாம் மனம்சார்ந்தவை. நல்ல தமிழில் புழுதிக்கால் என்ற சொல்லுண்டு – உழுது காய்ந்த நிலம். வாழ்க்கையும் ஓர் புழுதிக்கால்தான். தண்ணீர் விட்டு விரைத்து நாற்றைப்பார்க்க எத்தனைபேருக்கு காலம் உதவுகிறது?

கதை ஜெர்மனுக்கும் துருக்கிக்குமாக போக வர இருக்கிறது:

பாரெம் நகரில் பணி ஓய்விலிருக்கும் அலி தாம் அடிக்கடிச்செல்லும் வேசியிடம், தனித்திருக்கும் தமக்குத் துணை தேவைப்படுவதாகவும் அவள் சம்பாதிக்கும் தொகையை தம்மால் மாதந்தோறும் கொடுக்கமுடியுமென்றும் கூறி அழைக்கிறார். எதிர்பாராமல் டிராம் பயனத்தின் போது அவள் இரு துருக்கியர்களால் மிரட்டப்படுகிறாள். நடுத்தர வயதைக் கடந்திருந்த அவளுக்கு அலி மட்டுமே வாடிக்கையாளர் என்ற நிலையில் அலியின் அழைப்புக்கிணங்க அவர் வீட்டிற்கு வருகிறாள். நெசட்,  அலியின் ஒரே மகன், ஹாம்பர்கில் பல்கலைக் கழகமொன்றில் ஜெர்மன் மொழி இலக்கியம் பயிற்றுவிக்கும் பேராசிரியன். மகனுக்கு தந்தைமீது நிறைய மரியாதை உண்டு. மகன் தந்தையைப்பார்க்க பாரெம் வருகிறான். அவனிடம் வேசியைத் தந்தை அறிமுகப்படுத்துகிறார்.  அலியின் மகனும் வேசிப்பெண்மணியும் உரையாடுகிறார்கள். உரையாடலின்போது அலியின் மகன் தமது ஜெர்மன் மொழி பேராசிரியர் பணிபற்றிக் கூற, அவள் தாம் வேசித் தொழில் புரிவதாகச் சொல்கிறாள்.   அவளுக்கு பிள்ளைகள் யாருமில்லையா என்று விசாரித்தபொழுது அவள் துருக்கியில் படிப்பதாகவும்,  அவளுக்கு ஒரு ஜோடி ஷ¥க்கள் அனுப்பபோவதாகவும், அவனைப்போலவே தம்மகளையும் பேராசிரியையாக பார்க்கவேண்டுமென்கிற தமது ஆசையையும் தெரிவிக்கிறாள்.  பெண்மணிக்குத் தம்மகள் அங்குள்ள குர்தின மக்களின் புரட்சி இயக்கத்திற் சேர்ந்து துருக்கி அரசாங்கற்கு எதிராக போராடுகிறாளென்றோ,  தலைமறைவு வாழ்க்கை வாழ்வதோ தெரியாது. மாரடைப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அலி வீட்டிற்குத் திரும்பியதும், குடிவெறியில் தம்மகனை வேசிப்பெண்மணியோடு சம்பந்தப்படுத்தி கன்னத்தில் அறைய அவள் இறக்கிறாள். அலி  சிறையில் அடைக்கப்டுகிறார்.

அலியின் மகன் தந்தை செய்த பாவத்திற்குப் பிராயசித்தமாக  வேசியின் மகளைத்தேடி (அய்ட்டன்) ஹாம்பர்க்கிலிருந்து (ஜெர்மன்)  இஸ்டான்புல்செல்கிறான்.  துருக்கி போலிஸாரால் தேடப்படும் வேசியின் மகள் உரிய கடவுச்சீட்டின்றி இஸ்டான்புல்லிலிருந்து ஹாம்பர்க் வருகிறாள். பசியுடன் தெருவில் வாடும் அவளுக்கு கல்லூரி மாணவியொருத்தி (லோத்) அவள் தாய் எதிர்ப்பை அலட்சியம் செய்து அடைக்கலம் கொடுக்கிறாள். இருபெண்களுக்கிடையே ஒருபாலின உறவு ஏற்படுகிறது. வேசியின் மகள் சரியான உரிமங்களின்றி ஜெர்மனுக்குள் இருக்கிறாள் என்பதை அறிந்த  ஜெர்மன் அரசாங்கம் அவளை கைது செய்து துருக்கிக்குத் திருப்பி அனுப்புகிறது. துருக்கி அரசாங்கம் இஸ்டான்புல்லில் அவளை  சிறையிலடைக்கிறது.

இஸ்டான்புல்லில் அலியின் மகன் நெசட் வேசியின் மகளைத்தேடி அலைகிறான். முதலில் அவள் படித்த கல்லூரியில் விசாரிக்கிறான். அவளைப்பற்றிய தகவலைத் தந்த ஒருபெண்ணொருத்தி அவள் தங்கியிருந்த இடத்தின் முகவரியையும் தருகிறாள்.  அங்கே தேடிப்பார்த்துவிட்டு காணாததால் ஏமாற்றத்துடன் இஸ்டான்புல்லிலேயே தங்குவதென தீர்மானித்து அருகிலேயே ஒரு புத்தககடையை எடுத்து நடத்துகிறான். வேசிப்பெண்ணின் படத்தை ஆங்காங்கே ஒட்டி அவளைத்தேடும் முயற்சியில் இறங்கவும் செய்கிறான். வேசியின் மகளைத்தேடி லோத் என்பவளும் இஸ்டான் புல்வருகிறாள். நெசட் டின் புத்தககடைக்குவருபவள், அவனுடைய வீட்டில் ஒரு பகுதியை வாடகைக்கு விடும் அறிவிப்பொன்றை புத்தகக்கடையிற்கண்டு அங்கே தங்கவும் செய்கிறாள். லோத் சிறையிற்சென்று வேசியின் மகளைப்பார்க்கிறாள். சிறையில் ஒரு துண்டுக்காகிதமொன்றை வேசியின் மகள் தருகிறாள். அதில் ஒருவீட்டின் முகவரிகொடுத்து அங்கே பார்க்கும்படி சொல்லப்பட்டிருக்கிறது. அம்முகவரியில் துப்பாக்கியொன்றை தருகிறார்கள். பெற்றுக்கொண்டு திரும்புகிறபொழுது அவள் பையைத் திருடும்முயற்சியில் துப்பாக்கியைக் கையிலெடுத்த சிறுவன் அவளைச்சுட இறக்கிறாள். லோத் இறந்தசெய்தியை அவளின் தாய்க்குத் தெரிவிக்கப்பட ஜெர்மனியிலிருந்து வந்தவள், அலியின் மகன் நெசட் வீட்டில் மகள் இருந்த அறையில் சிறிது நாட்கள் தங்கிக்கொள்ள அனுமதிகேட்கிறாள். அவன் புத்தகககடையில் வேசியின் மகளை அவன் தேடுவது குறித்த அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தும் மகளைபோலவே அவளும் கவனிக்கத் தவறுகிறாள். ஜெர்மன் பெண்மணி சிறைக்குசென்று வேசியின் மகளைப்பார்த்து அவளை வெளியிற்கொண்டுவர அவள் மகளெடுத்த முயற்சிகளை தொடரப்போவதாக வாக்குறுதி அளிக்கிறாள். சிறைவாசத்திற்குப்பிறகு தந்தை இஸ்டான்புல்லுக்கு ஜெர்மன் அரசாங்கத்தால் அனுப்பட்டச் செய்தி மகனுக்குக் கிடைக்கிறது. அவர் கடலோர கிராமமொன்றில் இருக்கிறார் என்று அவரைத் தேடி செல்கிறான். அவர் மீன்பிடிக்கச் சென்றிருக்கும் செய்தியறிந்து அவருக்காக எதிர்கரையை பார்த்துக் காத்திருக்க படம் முடிகிறது.

இம்மனிதர்களிடை தளிர்க்கும் பின்னர் வாடும் அந்த உறவிற்கு நியாயங்கள் எதுவேண்டுமானாலும் இருக்கட்டும், அதில் இலை நரம்புகளாக தொழிற்படுகிற உணர்விற்கு என்ன பெயரிட்டு அழைக்கலாம் சொல்லுங்கள்.

——————–

நாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள்-2

ர்ர்.. கீச்..கீச்…

கதை பிறந்த கதை:

புதுச்சேரியிலிருந்து பிரான்சுக்குப் புலம் பெயர்ந்து வந்தவர்களில் மெத்தப்படித்தவர்கள் என்பவர்கள் மிகவும் சொற்பம். ஓர் ஐந்து விழுக்காட்டினர் பல்கலைக் கழகங்களிலும் வேறு முக்கிய அரசு பணிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் தமிழர்களென்கிற பொது நீரோட்டத்தில் அதிகம் கலப்பதில்லை. பெண்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். 1985ல் பிரான்சுக்கு நான் வந்தபோது பெண்கள் அநேகரின் அதிகபட்ச படிப்பு பள்ளி இறுதிவகுப்பாக இருந்தது. அத்தி பூத்தாற்போல கல்லூரிக்குள் நுழைந்து இளங்கலை பட்டத்துடன் வெளிவந்த பெண்கள் ஒன்றிரண்டுபேர் எதிர்ப்படுவார்கள். இவர்களுக்கும் வெளிநாட்டுவாழ்க்கை சிறைவாழ்க்கையாகத்தான் முடிந்தது. பெரும்பாலானாவர்கள் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டிருப்பார்கள். சென்னை விமான நிலையம் தெரியும். ஏர் இந்தியாவின் புண்ணியத்தினால் பாம்பே, டில்லி விமான தளங்களில் காத்திருந்திருப்பார்கள். வேறு விமானங்களில் பயணம் செய்ய நேர்ந்தால் அதுவும் வாய்க்காது. அங்கிருந்து நேராக பிரான்சுநாட்டிற்கு வந்ததும் தங்கள் குடியிருப்பில் போய் அடைந்துவிடுவார்கள்.

முதல் ஒருவாரம் இந்தியாவில் பிறபெண்களுக்கு அமையாத வாழ்க்கை கிடைத்த சந்தோஷத்தில் தூக்கமின்றி அலைவார்கள், பெற்றோருக்கு போன் போட்டு மகிழ்வார்கள். இதற்குள் ஒன்றிரண்டு பிரெஞ்சு வார்த்தைகள் பழகியிருக்கும், அவர் இல்லை இப்பதான் கூர்ஸ் பண்ண போயிருக்கிறார்’, என்பார்கள். எல்லாம் இரண்டு வாரகாலம். பிறகு சமைத்துவிட்டு ஓய்ந்த நேரங்களில் தலைணையில் விழுந்து மாலை வரை அழுதுகொண்டிருப்பார்கள், அதாவது இப்புதிய சிறைக்குப் பழகிக்கொள்ளும் வரை. இவர்களுக்கு பொழுதுபோக்கு, வாகன வசதிகள் உள்ள குடும்பங்களில் கணவர் பிள்ளைகளோடு கடைகளுக்குப் போய் (மாதத்திற்கு ஒரு முறை) வீட்டிற்கு வேண்டிய சாமான்களை வாங்கிவருவது, கணவருக்குப் பிடித்த சமையலை இவரும் சாப்பிடுவதில் ஆரம்பித்து, அவருக்குப்பிடித்த நடிகர்களுக்கு இவரும் ரசிகையாவது; அவருக்கு வேண்டிய நண்பர்களை இவரும் உபசரிப்பது, அவர் சொல்லும் அசட்டு ஜோக்கை இவரும் ரசிப்பதென தொடரும். அவரவர் வசதிக்கேற்ப பரோலில் இந்தியா சென்று வர வாய்ப்பு அமையும். மீண்டும் விமான தளங்களுக்கிடையே பயணம், பெற்றோர்கள், பிரிவுகள் -சிறைவாசமென்கிற தொடர் சுற்றோட்டம் . இப்பெண்களைச் சந்திக்கிறபோதெல்லாம் இறக்கைகளை உதறி க்றீச் க்றீச்செனும் கூண்டில் அடைபட்ட கிளிகள் நினைவுக்கு வந்தன, எழுதினேன். குமுதம் -07-12-2000. இதழில் பிரசுரமானது.
———————————————————————————————————-

ர்ர்.. கீச்..கீச்…

வரவேற்பறையில் அந்தக் கிளி தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. ரஞ்சனி மூன்றாவது முறையாக அதனை அடக்கிவிட்டுவந்தாள். அவளின் குரல்போக்கில் ஏற்பட்டிருந்த இந்த திடீர்மாற்றத்தைக் கிளி உணர்ந்திருக்கவேண்டும். சத்தம் போடுவதை நிறுத்திக் கொண்டது. இதுவரை இப்படியில்லை. இன்றைக்குத்தான் இப்படி. ஏன்.. ? விடை தேட நேரமில்லை. சமயலறைக்குள் நுழைந்துவிட்டாள். காலையில் வேலைக்குச் சென்ற முரளிக்குக் காபியை கலந்து கொடுத்தவள், மறுபடியும் படுக்கைக்குச் சென்று, எழுந்திருக்க மனமில்லாமல், அந்தக் கிளியப் போலவே பிரான்சு வாழ்க்கையில் சோர்ந்தது நிஜம். ஆனால் கிளியைப் போல கிரீச்சிட முடியுமா என்ன ?

ர்ர்.. கீச் மறுபடியும் கிளியின் சத்தம். அவளுக்கு அது பரிச்சயமான குரல்தான். முரளிக்குப் பிறகு தினமும் கேட்டு கேட்டு அட்சரம் பிசகாமல் அவளோடு ஒட்டிக்கொண்ட குரல். இன்றைக்கு மட்டும் ஏன் இப்படி உடைந்து உருமாறி, சன்னமாய் அவளைச் சுற்றிவந்து அபயம் கேட்கிறது.

‘பசியோ ?.. ‘

வழக்கமாக இந்த நேரத்தில் எதுவும் கொடுத்துப் பழக்கமில்லை. வறவேற்பறையின் விளக்கைப் போட்டுவிட்டுக் கூண்டைப் பார்த்தாள். இவளைப் பார்த்ததும் என்ன நினைத்துக் கொண்டதோ ? இருமுறை சிறகை உயர்த்திப் படபடவென உதறிக் கொண்டது. தலையை வளைத்து அலகினால் பாந்தமாக அடிவயிற்றைச் சொறிந்துவிட்டு இவளைப் பார்த்தது. இரண்டு கைகளையும் குவித்துக் கைகளில் வாங்கிக் கொண்டாள்.

சமயலறையில் இருந்த வாழைப்பழத்தின் சரிபாதியை உரித்து விள்ளலாக எடுத்து அலகைப் பிரித்துத் திணித்திடமுயல, கிளி முகத்தைத் திருப்பிக் கொண்டது, வேண்டாம் என்பது போல.

‘இங்க பாரு.. என்னால ஒங்கிட்ட மல்லு கட்ட முடியாது நாகமணி! சொன்னாக் கேட்டுக்கணும். இன்றைக்கு என்ன வந்தது உனக்கு ? சொல்லுடா.. ‘

உண்மையிலே நாகமணி-அவளது அந்தக் கிளி என்ன நினைத்ததோ ? ரஞ்சனியின் கைகளைவிட்டு இறங்கமாட்டேன் என்று அடம் பிடிக்க, அவள் வலுக்கட்டாயமாகக் கூண்டினுள் திணித்துவிட்டு மூடிவிட்டு வந்தாள்.

‘ர்ர்.. கீச் ‘ மறுபடியும் முனகல். அவளது உள்ளத்தை ரணப்படுத்துகின்றவகையில். அப்படியும் இருக்குமோ ? இந்தியாவிலிருந்து நிறையக் கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் விமானித்து இறங்கியவளுக்கு அனைத்துமே இவ்வளவு சீக்கிரம் கோடை மழையாய்ச் சோவென்று அடித்து ஓய்ந்துவிட்டது குறித்து அதிருப்தி. இந்த இரண்டு மாதத்தில் நாகமணியைப் போன்று அவளும் அந்த அப்பார்ட்மெண்டில் குறுக்கும் நெடுக்குமாக வலம் வரப் பழகிக் கொண்டாள்.

ஜனவரிமாதம் என்பதால் வீட்டில் ஹீட்டரால் கதகதப்பு அதிகமாக்கப்பட்டிருந்தது. அவளது மனநிலையில் ஜன்னல்களைத் திறந்துவைத்து அப்படியே உறைந்துபோக நினைத்தாள்.

மார்கழி மாதத்தில், காலையில் எழுந்து வாசலில் தண்ணீர் தெளிக்க, தளும்பத் தளும்ப வாளியிற் தண்ணீரை எடுத்து, நைட்டியை நனைத்துக்கொண்டு வாசலுக்குக் வரும்போது,

‘ஏண்டி..! இன்னும் கொஞ்சம் விடியட்டும்னு காத்திருக்கக்கூடாதா ? என்ன அவசரம் ? அம்மா கேட்பாள். அவளுக்கு அவசரம்தான். பின்னே அவளது எதிர் வீட்டுத் தோழி நாகமணிக்கு முன்னால், எழுந்து கோலம் போட வேண்டாமா ? அதைபற்றிக் கல்லூரியில் அவளிடம் வன்பு செய்ய வேண்டாமா ?

எல்லாமே மளமளவென்று முடிந்தது. என்றைக்கும் போல அன்றைக்குப் புதுவை சென்று திரும்பிய அப்பா, காலைக் கழுவிக் கொண்டு கூடத்தில் உட்கார்ந்தவர், ஏதோ முகங்கொள்ளா சந்தோஷத்தில் இருப்பதாகப் பட்டது.

‘பார்வதி.. நம்ம ரஞ்சனிக்கு மாப்பிள்ளை பார்த்துட்டேன். நாளைக்கு மாப்பிள்ளை வீட்டார் வர்ராங்க. பையன் பிரான்சுல இருக்கான். ஏர் பிரான்சுல, ட்ரா·பிக் அஸிஸ்டெண்ட்டாம். நல்ல சம்பளம் அவங்க பெருசா எதுவும் எதிர்பார்க்கலை. பொண்ணு லட்சணமா, படிச்சவளா இருந்தாப் போதுமாம் ‘. அவர் சொல்லிக் கொண்டே போனார்.

வீட்டில் எவரும் எதுவும் பேசவில்லை, ரஞ்சனி உட்பட. பேசுவதற்கு என்ன இருக்கிறது ? இதோ இதோ.. என்று அந்த இதோவும் வந்துவிட்டது. இருபத்து நான்கு மணி நேரமும் இவளுக்கு வந்த வாழ்வுபற்றிதான் வீடு முழுக்கப் பேச்சு. தம்பி சரவணனில் தொடங்கி .. அப்பாவரை ஆளாளுக்கு உசுப்பேத்தி அப்போதே விமானத்தில் ஏற்றி அவளைப் பறக்க விட்டார்கள். அம்மா, அப்பா தம்பி சரவணன், தோழி நாகமணி, மொட்டை மாடி, முக்குட்டுப் பிள்ளையார், செவலைப்பசு, உறித் தயிர் என எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் செல்லனும்ணா.. அவளை என்னவோ செய்தது. இவளை வழி அனுப்புவதற்கு எல்லோருமே தயார் நிலையில். இதுதான் ‘நிஜம் ‘ என்று அறிய வந்தபோது, முதன் முறையாக ரஞ்சனி கதவை அடைத்துக் கொண்டு அழுதாள்.

மறுநாள் தோழி நாகமணி அவளைத் தேடிவந்தபோது, கையோடு அவள் வளர்த்தக் கிளியையும் கூண்டோடு கொண்டுவந்தாள்.

‘ரஞ்சனி என்னை மறந்துடாதடி. உனக்காகத்தான் இதனைக் கொண்டுவந்தேன். இதுக்குப் பேர் என்ன தெரியுமா ? நாமணின்னு வச்சுக்கோ. அப்பத்தான் என்னை மறக்கமாட்ட.. ‘

ரஞ்சனி ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில் தன் தோழியைக் கட்டிக் கொண்டாள். கூண்டினைப் பார்த்தாள். உள்ளே பவள மூக்கும், குறுகுறு கண்களுமாய் அவளைப் பார்த்து கிளி சந்தோஷப்பட்டது.

அதற்குப் பிறகு சிரமமெல்லாம் அவளது புதிய கணவன் முரளிக்குத்தான். டிராவல் ஏஜென்சியைப்பார்த்துக் கிளிக்கும் பயண ஏற்பாடுகள் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

இதோ பிரான்சுக்கு வந்து இரண்டு மாதங்கள் கரைந்து போயிருந்தன. கேட்ட, சொல்லப்பட்ட, வளர்த்துக் கொண்ட கனவுகள் அனைத்தும் அரிதாரத்தைக் கலைத்துக் கொண்டன. காலை ஆறுமணிக்குச் சென்று மாலை ஆறு மணிக்குத் திரும்பும் முரளியைத் தவிர்த்து, கிளியைப் போலவே சுகங்கள் ஊட்டபட்டு, சிறகினை வெட்டி என்ன வாழ்விது ? அலுப்பாகத்தானிருந்தது. வண்ண வண்ணமாயுடுத்தி இந்தியாவில் வலம் வந்ததுபோக, ஓவர் கோட்டில், எப்போதாவது இந்தியக்கடைகளுக்கும், சூப்பர் மார்க்கட்டுகளுக்கும் காரில் போய் வருவதும், அழைப்பின் பேரில் முரளியின் நண்பர்கள் வீடுகளுக்குச் செல்வதையும் தவிர்த்து வேறு என்ன கண்டாள் ? முரளியின் அன்பைக்கூட வாழைப்பழ விள்ளல்களாக அங்கீகரித்து, கொஞ்ச கொஞ்சமாக கூண்டு வாழ்க்கையை மனம் ஏற்றுக் கொண்டது.

ர்ர்..கீச்.கீச்..

நாகமணி மற்படியும் கீச்சிட்டது. அந்த அபயக் குரலின் பொருள் ரஞ்சனிக்குப் புரிந்தது. தீர்மானித்துவிட்டாள். ‘முரளி வரட்டும் ‘ அவள் சொல்வதை மறுக்கமாட்டான் என்பதால் மனதில் சந்தோஷம்.

‘நாகமணி.. ! நீயாவது கூடிய சீக்கிரம் நம்ம காத்த சுவாசிச்சு, நம்ம தண்ணிய குடிடா..! ‘

நாகமணிக்கு என்ன புரிந்ததோ, சந்தோஷமாக சிறகினைத் தூக்கி மறுபடியும் ‘ர்ர்ர்ர்…கீச்..கீச் ‘

***

பூசாரிகளுக்கு அல்ல மார்க்ஸிய அபிமானிகளுக்காக மொழிபெயர்க்கப்பட்டது.

அண்மையில் எதிர்பாராதவிதமாக மார்க்ஸின் கொடுங்கனவு என்ற நூலைப்பற்றிய விமர்சனமென்ற பெயரில் வசைதொகையறாவொன்றை வாசிக்க நேர்ந்தது. அதற்கு எனது எதிர்வினை.

நண்பர்களுக்காக:

http://74.208.102.131/index.php?option=com_content&view=article&id=19836:2012-05-22-11-28-07&catid=1475:2012&Itemid=718

தமிழில் நூல் விமரிசகர்கள் என்ற பிரிவினர் இல்லை. விமரிசனம் எழுதுபவர்களில் நடுநிலையாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அ. ராமசாமி, தமிழவன், பாவண்ணன், ந. முருகேசபாண்டியன், போன்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் விமரிசனம் எத்தகையதென்றாலும் நான் ஏற்பேன். அவர்கள் எழுத்தூடாக தெரியவந்த உண்மை அது. மிச்சமுள்ள 99 விழுக்காட்டினர் கலவையை பிரித்தெடுப்பது சுலபம்: அவர்கள் இரண்டே இரண்டு பிரிவினர்: துதிபாடிகள், வசைபாடிகள். முன்னவர்கள் ஒருபிரிவினர் விமர்சனமென்ற பெயரில் நூலையும், நூல் சம்பந்தப்பட்டவர்களையும் இனியில்லையென்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள். பின்னவர்கள் சம்பந்தப்பட்ட நூலை இழிவுபடுத்துவதற்கு முகாந்திரங்களென்ன என யோசித்தே எழுதத் தொடங்குவார்கள். இரண்டிற்கும் பின்னே ‘அரசியல்’ இருக்கிறது, இது ஊரறிந்த இரகசியம்.

இரண்டாவது கூட்டத்தைச்சேர்ந்த ஒரு நபருக்கு அண்மையில் கிடைத்த நூல் ‘மார்க்ஸின் கொடுங்கனவுகள்’. நியாயமான விமரிசினமென்றால் ஏற்கத்தான் வேண்டும், ஆனால் இதொரு வசைபாடியின் விமரிசனமென்பதால் எனது தரப்பை முன்வைக்க வேண்டியிருக்கிறது.  ரிக்கார்டு டான்ஸைக் கலையென நம்பி தமிழககிராமங்களில் இப்போதெல்லாம் ‘எழவு விழுந்தால்கூட’ ஏற்பாடு செய்கிறார்கள்.  அந்நிலை நாம் பெரிதாய் நம்பிக்கொண்டிருக்கும் படைப்புலகத்திற்கும் நேர்ந்துவிடக்கூடதென்பதால் பதில் சொல்ல வேண்டியதாயிற்று.

‘மார்க்ஸின் கொடுங்கனவுகளை’ எழுதிய டெனிஸ் கொலன் அவர்களின் அபிமானிகளை குறிவைத்தே எழுதியவர் இதில் எந்தக்குற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். மார்க்ஸின் கொடுங்கனவு பிரெஞ்சு மூலத்திற்கு ஊடகங்கள், சஞ்சிகைகளில் (இடது சாரி பத்திரிகைகளும் அடக்கம்) வெளிவந்த விமர்சனங்கள் இருக்கின்றன. இப்பிரெஞ்சு விமர்சனங்கள் மார்க்ஸ் தாசர்களால் எழுதப்பட்டதல்ல துறைசார்ந்த வல்லுனர்களால் எழுதப்பட்டது. ‘மார்க்ஸின் கொடுங்கனவை’ விமர்சனம் செய்ய தமக்குகுள்ள தகுதிகள் என்பதைச் சொல்லாமல் சொல்ல,  தமிழில்  எட்டாம் வகுப்பு வாசகர்களை மிரட்டவென்று பலரும் எடுக்கும் ஆயுதத்தை நண்பரும் எடுத்திருக்கிறார். அவர்கள் வேறுயாருமல்ல தெரிதா, ரொலான் பாத், போன்றவர்கள்  அவர்களைப் பற்றி ‘மார்க்ஸின் கொடுங்கனவை’ மொழிபெயர்த்த எனக்கும், என்னைக்காட்டிலும் கூடுதலாக டெனிஸ் கொலனும் அறிவார். டெனிஸ் கொலன் நூலை பிரெஞ்சில் விமரிசனம் செய்தவர்களும் நன்கறிவார்கள்.

மார்க்ஸின் கொடுங்கனவை யார்வேண்டுமானாலும் படிக்கலாம், ஆனால் அதன்மீது பாரபட்சமற்ற ஒரு விமரிசனத்தை வைக்க வறட்டு உணச்சிக்கொப்பளிப்பு போதாது, பொருளியல் அறிவும், மூலதனத்தின் முக்கியமான பகுதிகளையாவது விளங்கிக்கொண்டும் இறங்கவேண்டும். அப்படி தமிழ்நாட்டில் இல்லாமலில்லை. ஆனால்  தற்போது அவர்கள் இங்கே அதனைச்செய்வதில்லை என்பதுதான் படைப்புலகிற்கு நேர்ந்துள்ள சோகம்.

1. இந்த விமரிசினத்தின் திசை:

“தன்னுடைய காலத்திலேயே இந்த நாட்டில் ஒரு சோசலிச சமுதாயம் மலர்வதைக் கண்ணால் கண்டுவிடுவோம் என்ற திடமான நம்பிக்கையில் போராடிய ஆர். நல்லகண்ணு, பாலன், என். சங்கரைய்யா, டி.ஆர்.எஸ். போன்ற அன்றைய இளைய தலைமுறையினர் முதல் அவ்வாறில்லாத இன்றைய இளைய தலைமுறை வரை விடை தேடும் சிக்கல் ஒன்றிற்கு விடை சொல்ல முன்வரும் எந்தப் பிரதியும் உற்சாகமூட்டக்கூடியதுதானே!

முதலாளித்துவக் கொடுமைக்கும், இன்னும் தொடரும் நிலவுடைமை, சாதிய, பெண்ணடிமை மனோபாவங்களும் மடிந்து, என்று விடியும் எமது வாழ்வு?’ என்று ஏங்கும் நிலையில் கோடிக்கணக் கான ஜீவன்கள் இந்த மண்ணில் உள்ளன.

மனிதர்கள் மனிதர்களாக வாழும் ஒரு சமூகமாக இந்தச் சமூகத்தை மாற்ற முடியும்’ என்ற நம்பிக்கையுடன் அதற்கான மார்க்கத்தையும் முன் வைக்கும் தத்துவமாக மார்க்ஸியம் அல்லாது வேறொரு தத்துவம் இதுவரை நமக்குக் கிடைக்க வில்லை. இந்த அமைப்பிலேயே ஏதாவது சிறிது மேம்படுத்திக்கொள்ள சில நலத்திட்டங்களை மட்டும் சொல்லும் தத்துவங்கள் வேண்டுமானால் ஏராளம் உள்ளன. ‘வள்ளுவனும் கம்பனும் கனவாக முன்வைத்த பொதுவுடைமையை நனவாக்கவும் முடியும்’ என்று தெளிந்த பாரதியின் நம்பிக்கையைத் தொடர மனித குலத்திற்கு மார்க்ஸியத்தைத் தவிர வேறொரு தத்துவம் இதுவரை கிடைக்கவில்லை.”

கட்டுரையாளர் இத்தனை பில்டப்  எதற்காகக் கொடுக்கிறாரென்று கேட்கறீர்களா?

“ஒரு மார்க்ஸியவாதியின் நிலையிலிருந்து முன் வைக்கப்படும் விமரிசனம் அல்ல. அதாவது, நூலாசிரியர் டெனிஸ்கொலன் முன்வைக்கும் கருத்துக்கள் மீதான ஒரு மார்க்ஸிய வாதியின் எதிர்வினையாக இது அமைக்கப்படவில்லை” என்று அவர் சத்தியம் செய்வதற்காக.

இதைத்தான் தமிழில்
“கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.” என்பார்கள்.

2. முதல் நெருடல்:

மார்க்ஸின் கொடுங்கனவு புத்தகத்தின் பின் அட்டையில் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதென சொல்லப்பட்டிருப்பதாகவும் புத்தகத்தின் உள்ளே பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாக சொல்லப்பட்டிருப்பதாகவும், இந்த அரிய உண்மையை நண்பர் கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதென புத்தகத்தின் பின் அட்டையில் உண்மையில் போடவேண்டுமென நோக்கமிருப்பின், புத்தகத்தின் உள்ளே பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டதென்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. காலச் சுவடு எதனையும் கவனத்துடன் செய்பவர்கள், ஆனைக்கும் அடிச்சறுக்குமென்பதுபோல அத்ததவறு நிகழ்ந்துவிட்டது. புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் பிரதிகள் கைக்குக் கிடைத்ததும் அதனைச் சுட்டிக்காட்டினேன். காலம் கடந்துவிட்டது, அதை பெரிதுபடுத்தவில்லை. அவ்வளவுதான்.  இதில் எந்த வியாபார தந்திரமுமில்லை.

கட்டுரையாளர் பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்ததென்று சொல்லப்படுவதை “மூல பாஷையான எபிரேயு பாஷையிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டது என்பதுபோல” என நக்கலடிக்கிறார். இதில் கொஞ்சநஞ்சமெல்ல எனக்கு நிறைய பெருமை இருக்கிறது. கட்டுரையாளருக்கு எபிரேயு பாஷையிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கும் ஆற்றல் இருக்கலாம், கிரேக்கம், இலத்தீன் மொழிகூட அறிந்திருக்கலாம். எனக்குத்தெரிந்தது தமிழும், ஆங்கிலமும், பிரெஞ்சும் மட்டுமே. இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. மாறாக நிரம்ப மகிழ்ச்சி. காரணம்  பிரெஞ்சு நூல்களுக்கு மொழிபெயர்ப்புரிமையை அதிகார பூர்வமாக பெறவேண்டுமானால், மூல நூலான பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கவேண்டுமென்பது பிரெஞ்சு அரசாங்கம் கலை இலக்கிய பண்பாட்டுத்துறை முன் வைக்கும் நிபந்தனை. அந்நிபந்தனையை  படைப்புதுறையில் அரிதாக நிறைவேற்றுகிற ஒரு சிலரில் இந்திய அளவில் நானுமொருவன். எனது இடத்தில் எவரிருந்தாலும் சொல்லத்தான் செய்வார்கள். அரசியல்வாதிகளையும் விஞ்சி விளம்பரம் தேடும் படைப்புலககில், எனக்கிருக்கும் உண்மையான தகுதியை பெருமையாகச்சொல்லிக்கொல்வதில் தவறேதுமில்லை

தமிழில் என்ன நடக்கிறதென தெரியாது. மேற்கத்தியர்கள் மொழிபெயர்ப்புக்கென சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். மிகவும் அரிதான சூழல்களைத் தவிர்த்து அவற்றில் கறாராக இருக்கவும் செய்கிறார்கள்.

1. உதாரணமாக பிரான்சு நாட்டில் பிற மொழிகளிலிருந்து பிரெஞ்சுக்குக் கொண்டுவரவேண்டுமெனில் மொழிபெயர்ப்பாளரின் தாய்மொழி பிரெஞ்சாக இருக்கவேண்டும்.

2. நூலின் மூலமொழியிலிருந்து நேரடியாக அவை மொழிபெயர்க்கப்படவேண்டும்.

அவ்வாறே தங்கள் மொழியிலிருந்து வேற்று மொழிக்குப்போகும்போதும் பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். இந்த அடிப்படை விதிமுறைகளோடு சில உட்பிரிவுகளையும் பிரெஞ்சு மொழிபெயர்ப்புலகில் திருப்திசெய்யவேண்டும்.

உதாரணமாக பிரெஞ்சில் அமெரிக்கன் இங்கிலிஷ், பிரிட்டிஷ் இங்கிலிஷ், இந்தியன் இங்கிலிஷ் என்றெல்லாம் வகைப்படுத்தபடுத்தப்பட்ட பிரெஞ்சைத் தாய்மொழியாகக்கொண்ட மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் அந்தந்த நாடுகளின் மொழிபெயர்ப்பைமட்டுமே கையிலெடுக்கிறார்கள்.  இன்னும் சொல்லப்போனால் பிரான்சு நாட்டில் மொழி பெயர்ப்பாளர் பெயரை பார்த்தவுடனே மூல நூலசிரியர் யாரென்று சொல்லிவிடலாம். காரணம் அவர் மொழிபெயர்ப்பது அனைத்துமே அந்த மூல ஆசிரியரின் படப்புகளாக இருக்கக்கூடும்.  இம்மொழிபெயர்ப்பாளர்கள் சம்பந்தப்பட்ட நாடுகளில் தொடர்ந்து பல ஆண்டுகள் தங்கியிருப்பார்கள்.  படைப்பாளியை மட்டுமல்ல படைப்பாளியின் மக்களையும் படைப்பாளியின் உலகையும் நன்கு உள்வாங்கிக்கொண்டே மொழிபெயர்க்க உட்காருவார்கள். தமிழ் படைப்புலகில் அத்தகைய வாய்ப்புகள் குறைவு. அதற்குப்பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் காலச்சுவடின் மொழிபெயர்பாளர்களுக்கு பதிப்பாளர் அத்தகைய வாய்ப்புகளை வழங்கிவருகிறார்.

ஆங்கிலத்திலிருந்து தமிழ் படுத்துவதைக்கூட அமெரிக்காவிலிருக்கும் தமிழரோ இங்கிலாந்திலிருக்கும் தமிழரோ அந்தந்தநாடுகளின் மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்தினால் தமிழுக்குக் கூடுதலாக நன்மைகள் பிறக்குமென்பது எனதுக் கருத்து. மொழிபெயர்ப்பு என்பது மொழியைப் பெயர்ப்பதல்ல, பண்பாட்டை பெயர்ப்பது, முதல்நூலின் படைப்பாளியை புலம்பெயரவைப்பது. இதிலுள்ள உண்மையை சார்பற்று கண்டறியவேண்டும். ஆக பிரான்சிலிருந்துகொண்டு பிரெஞ்சில் மொழிபெயர்க்கும் எனக்கு நியாயமான கர்வங்கள் இருக்கின்றன.

மார்க்ஸின் கொடுங்கனவு’

” சிந்தனைக்கு நாங்கள் ஏகபோக உரிமையாளர்களெனச் சொல்லிக்கொள்கிறவர்கள் கார்ல் மார்க்ஸ் சவப்பெட்டியின் என்ச்ஜிய ஆணிகளை இறுக அடித்துக்கொண்டிருக்கிற காலமிது. புதைத்த ஆண்டைக் கணக்கிற்கொண்டால் அவரது மரணம் உறுதிசெய்யப்பட்டவொன்று. ஆனாலும் சிற்சில சமயங்களில் அசைந்துகொடுக்கிறது. நான் இறக்கவில்லை என்கிறது. இன்றளவும் அவரைத் துரத்துகிற ஏச்சும் பேச்சும் அல்லது  இனி அவரை நினைத்து என்ன ஆகப்போகிறதென்கிற பாசாங்குகளும் மார்க்ஸ் இறப்பை நம்ப மறுப்பதற்கான சான்றுகள்.

” இச்சூழல் மிக மோசமான முரண்களைக் கொண்டுள்ளது. உண்மையில் காலாவதியான  மார்க்ஸியத்தின் தந்தையாக மார்க்ஸ் இருப்பாரெனில்  சமூக அறிவியல் மற்றும் வரலாற்று புலத்தின் எதிர்காலத்தை அதாவது இன்றைய உலகைக்குறித்து மிகுந்த தீர்க்க தரிசனத்துடன் சரியாகத் தெரிவித்த சிந்தனையாளராக அவர் இருந்திருப்பாரா என்பதை யோசிக்கவேண்டும்.”

டெனிஸ்கொலனை அறிந்தவர்களுக்கு, (பரமார்த்த குருவின் சீடர்களுக்கல்ல) அல்லது இந்நூலை முற்றுமுதலாக ஆழ வாசித்தவர்களுக்கு என்ன சொல்லவருகிறார் என்று புரிந்திருக்கும். மார்க்ஸியம் பற்றிய டெனிஸ்கொலன் விமரிசன  நூலை தமிழ் படைப்புலக பெரும்பாலோரின் விமரிசனப் சூத்திரத்துடன்அணுகக்கூடாது. நம்மில் பலருக்குப் பூச்சொரியவும், புழுதிவாரி தூற்றவும் மட்டுமே தெரியும். மார்க்ஸின் கொடுங்கனவு நூலை விமரிசனம் செய்தவர் தாம் மார்க்சியவாதி அல்லவென அழுகுணி ஆட்டம் ஆடுவதைத் தொடக்கத்தில் எழுதியிருந்தேன். மார்க்ஸியம் பற்றிய விமரிசின நூலில் மொத்தப்பக்கங்கள் 270லும் மார்க்ஸ்பற்றிய துதிகளாக இருக்கவேண்டுமென அவர் நினைக்கிறார். மன்னிக்கவும் அதற்கு சாத்தியமில்லை.    விமரிசனமென்பது  நிறை குறைகளை பேசுவது. கொலன் அதனைச் சரியாகவே செய்திருக்கிறார். புத்தகத்தில் முழுக்க முழுக்க மார்க்ஸியத்தில் தெளிந்தவராக, இறுதிவரை மார்ஸ்சியத்தின் ஆதரவாளராக செயல்படும் டெனிஸ் கொலன் வேண்டிய இடத்தில் அவரை கண்டிக்கவும் தவறவில்லை. ஏனெனில் அவர் மார்க்ஸின் பக்தன், கட்டுரையாளரைபோல மார்க்ஸை வைத்து பிழைப்பு நடத்தும் பூசாரிகள் கூட்டமல்ல. கீதையையும் காண்டீபனையும் வலிய மார்க்ஸ¤டம் ஒப்பிட்டுப்பேசிய அவலத்தால் இப்படி எழுதவேண்டியதாயிற்று- நவீன மார்க்ஸியவாதிகள் மார்க்ஸைக் காப்பாற்ற கண்ணனை அழைப்பார்கள் போலிருக்கிறது.

நான் உண்மையில் எதிர்பார்த்தது முதலாளிய வர்க்கத்தினரின் கண்டனக்குரலை. பல இடங்களில் முதாளியத்தைக்குறித்த எள்ளல்களும் மார்க்ஸியம் குறித்த துதிபாடல்களும் இந்நூலில் நிறைய இடம்பெறுவதும் இறுதியில் மார்க்ஸியத்தின் சார்பாக தர்க்கத்தை முடிப்பதும் காரணங்கள். இந்நூலில் அடிநாதமாக மூன்று விஷயங்கள் இருக்கின்றன. மார்க்ஸியம் எங்கே பொய்த்தது, எங்கே வெற்றிபெற்றது என்பதொன்று, மார்க்ஸியவாதிகளென்கிற பூசாரிகள் இழைத்த தவறுகளென்ன, எங்கே போய்கொண்டிருக்கிறார்கள்? என்பது இரண்டாவது. பிறப்பு முதற்கொண்டு முதலாளியியம் எப்படி சாதுர்யத்துடன செயல்பட்டுவருகிறது என்பது மூன்றாவது. இறுதியில் தம் பங்கிற்கு சில மாற்று யோசனைகளை வைக்கிறார். இங்கே அவற்றை பட்டியலிட்டால், தமிழ் தொலைக்காட்சிகளில் சினிமா விமரிசனம் என்ற பெயரில் காட்சிகளை பிய்த்து போடுவதுபோல ஆகிவிடும்.  விருப்பமுள்ளவர்கள் படியுங்கள். கேள்விகளிருப்பின் எழுதுங்கள். கேள்விகள் நூலில் பேசப்படும் விஷயங்கள் பற்றியதாக இருக்கவேண்டும்.

டெனிஸ் கொலன் நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையே நூல் சொல்ல வருவதென்ன என்பதைக் கோடிட்டுக்காட்டிவிடுகிறது. மார்க்ஸியம்பற்றிய பகுப்பாய்வு என்ற வகையில் மார்க்ஸ் தவறுகள் சுட்டிக்காட்டப்படவேண்டும். அப்படிச்சொல்லபடவில்லையெனில் அதுபகுப்பாய்வு நூல் அல்ல. இன்றைய உண்மைகள் தெளிவாக இருக்கின்றன. இதற்கெல்லாம் டெனிஸ்கொலனை குறைசொல்ல ஒன்றுமில்லை. இல்லையில்லையென்றால் யார் தடுத்தது. உங்கள் கனவு காணும் உரிமையை யார் பறித்தது. மார்க்ஸியத்தின் மீது உண்மையில் நம்பிக்கைவைத்து ஆக்கபூர்வமாக முதலாளியியத்தை எதிர்கொள்ளும் வழியை சிந்திப்ப்பவர்க்கு டெனிஸ்கொலன் எழுதியிருக்கிறார். சோஷலிஸத்திற்கேற்பட்ட சரிவினை மிகத் துல்லியமாக முன் வைக்கிற டெனிஸ் கொலன், அதில் முதலாளியியத்தின் பங்கினையும் சுட்டத் தவறுவதில்லை. மார்க்ஸின் முக்கிய கருத்தியங்களெல்லாம் விசாரணைக்கு உட்படுத்துகிறார். கொஞ்சம் சகிப்புத் தன்மையோடு,  அவற்றை வாசித்து மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறவர்கள் எழுந்திருக்க முயற்சிக்கவேண்டும். விரும்பியோ விரும்பாமலோ சமூகத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் முதலாளியாகவே இருக்க நினைக்கிறான். இந்த அடிப்படை உண்மையை விளங்கிக்கொள்ளாமல் அடம் பிடிப்பது அடாவடித்தனம். முதலாளியியத்தின் தந்திரங்களையும், உபாயங்களையும்; மூலதன இயங்கியல், நுகர்வோர் சமுதாயமும் சுரண்டலும், உழைப்பின் மீதான சுரண்டல் அதிகரிப்பு என முதலாளித்துவ உற்பத்தி கூறுகளின் நிரந்தரமாக்கப்பட்ட விதிகள் பலவும் நம் எல்லோரிடமும் இருக்கிறது. என்ன செய்வது ஸ்டாலின் தொடங்கி கேரள காம்ரேட்டுகள் வரை மார்க்ஸை புரிந்துகொண்டிருக்கும் விதத்தை பார்க்கிறபோது, கொலன் சொல்வதுபோல மார்க்ஸின் சவப்பெட்டியின் எஞ்சிய  ஆணிகளை முதலாளியியத்தோடு சேர்ந்து இறுக அடித்துவிட்டுத்தான் கட்டுரையாளர் கூட்டம் ஓயும் போலும். இத்தனை களேபரத்திற்குமிடையில் மார்க்ஸியத்தை மீட்கவேண்டுமென நினைப்பவர்கள் ஒன்றிரண்டு பேர் இருக்கக்கூடும் நீங்கள் சொல்லுகிற தோழர் நல்லகண்ணுவும் அதிலொருவர். இது தவிர தமிழ்நாட்டில் மார்க்ஸியத்தில் தேர்ந்தவர்களெல்லாம் இருக்கிறார்கள், நிச்சயமாக வாசிப்பார்கள்.   பொத்தாம் பொதுவாக முன் முடிவுகளின் அடிப்படையில் புழுதிவாரி இறைக்கமாட்டார்களென்பது நம்பிக்கை.

மொழி பெயர்ப்பு குறித்து.

எல்லா மொழிபெயர்ப்புகளுமே நூறு விழுக்காடுகள் சரியென்று எந்த கொம்பனும் சொல்லமாட்டான்.

மார்க்ஸ் ஒரு சொல் ஒருமொழியில் கறாராக இருந்தார் என்கிறார். அப்படி எப்போதும் இருந்ததில்லை என்பதுதான் என் அனுபவம். எனக்கு யோசனை கூறும் முன்பு தோழர் முனுசாமி தோழர் கந்தசாமியென விளிப்பதை அல்லது எழுதுவதைத் தவிர்த்து காம்ரேட் கந்தசாமியென்றோ காம்ரேட் முனுசாமியென்றோ அழைத்துக்கொள்வதுதான் மார்க்ஸ்சின் ஒரு சொல் ஒரு மொழிக்குப்பொருந்தும்மென மார்க்சியவாதிகளுக்கு முடிந்தால் அறிவுரைகூறுங்கள்.

சோஷலிசத்தையும் பொதுவுடமையையும் பிரித்துணர்வதில் எந்தக்குழப்பமுமில்லை. பிரெஞ்சு தெரிந்த தமிழும் அறிந்த நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பார்கள் அவர்களிடம் கொஞ்சம் ஒப்பிட்டுப்பார்க்கச்சொல்லவும். Dialectical Materialism – பொருள் முதல்வாத உரையாடல் என்மொழிபெயர்க்கப்பட்டதில் எவ்வித தவறுமில்லை. சொல்லப்போனால் அதுதான் சரியான அதற்குகந்த மொழிபெயர்ப்பு, அவ்வாறே பூக்கோவின்
Order of things என்பதையும் தேவையில்லாமல் போகிறபோக்கில் தட்டடையாக பொருள்கொள்வது சரியாகாது.

இந்த எதிர்வினையின் ஆரம்பத்தில் கூறியதை மீண்டும் நினைவு கூர்கிறேன்:

மொழிபெயர்ப்பு என்பது மொழியைப் பெயர்ப்பதல்ல, குயிலாபாளையத்தில் குதிரையை குர்ரமென்று எழுதுவோம் நீயும் அப்படி எழுதென்றுசொல்ல நண்பர் எந்த அதிகாரத்தின்கீழ் இதுபோன்ற  எதிர்பார்ப்பினை வைக்கிறாரென்று புரியவில்லை. பூக்கோவை உங்களைவிட கூடுதலாக அறிவேன். மொழிசார்ந்து அல்ல பண்பாடு சார்ந்து. எனவே அதனடிப்படையில் மிகச்சரியாகவே ஒவ்வொரு சொல்லையும் பலமுறை யோசித்து விவாதித்தே மொழிபெயர்க்கிறேன்,எழுதுகிறேன். தமிழில் கலைசொற்களுக்கென்று முறையான அகராதிகளில்லை. மேற்கத்திய உலகில் வருடத்திற்கொருமுறை மொழியின் வளர்ச்சிக்கேற்ப சொற்களின் வருகைக்கேற்ப அகராதிகளும் தம்மை புதுப்பித்துக்கொண்டுவருகின்றன. இங்கே நாட்டாமையாக இரண்டுபேர் எழுதிவிட்டால் அதுசரியோ தப்போ மற்றவர்களும் அதையே கடைபிடிக்கவேண்டுமென்பதுதான் அபத்தம்.

தமிழில் எனக்குக்கிடைத்த மூலதன நூலைவாசித்தேன். அதிலுள்ள குறைகளை இங்கே சொல்வது நியாயமாகாது. மொழிபெயர்ப்பென்றால் ஒன்றிரண்டு தவறுகள் நேரலாம். ஆனால் சரியான மொழிபெயர்ப்பையே தவறென்று வாதிடும் நண்பர்கள் பொருள் மயக்கம்தரும் குறைகளைத் தவிர்க்க கொஞ்சம் அக்கறை எடுக்கவேண்டும். அவற்றைத் திருத்தி நல்லபதிப்பாக கொண்டுவருவது மார்க்ஸியவாதிகளுக்கு அவசியம். நண்பர் தியாகுவின் உழைப்பை பார்க்கிறபோது அது கடினமான காரியமல்ல. தோழர்கள் சீரியஸாக கவனிக்கவேண்டிய பிரச்சினை இது.

நூலை விமர்சிப்பதற்கு முன்பு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல மார்க்ஸியத்தின் மீதுள்ள தீவிர அபிமானத்தைத் தெரிவித்துவிட்டு நூலைத் தவிர நூலாசிரியன் வரலாற்றையே அறிந்ததுபோல டெனிஸ் கொலன் மீதான விமர்சனம் கட்டுரையாளர் மொழியில் சொல்வதெனில் மன்னிக்க முடியாதக்குற்றம்.

1. டெனிஸ்கொலன் மார்க்ஸியவாதியென்று இங்கே யார்சொன்னார்கள். அவர் மார்க்ஸியவாதியே அல்ல. காலச்சுவடு பதிப்பகமோ மொழிபெயர்ப்பாளனாகிய நானோ எந்த இடத்திலும் அவரை மார்க்ஸியவாதியாக சித்தரிக்கவில்லை. அவரை மார்க்ஸிய சிந்தனாவாதியென்றே பிரெஞ்சு படைப்புலகம் அறியும், அதைத்தான் நாங்களும் பதிவுசெய்தோம். ‘மார்க்ஸியவாதிக்கும்’ ‘மார்க்ஸிய சிந்தனாவாதிக்குமுள்ள’ பேதத்தைக்கூட அறியாமல் இந்த நூலைப்பற்றிய விமர்சனம்செய்யும் துணிச்சல் எதனால் வந்தது. அநேகமாக உங்கள் பார்வையில் புரிதல் தரும் குழப்பம் காரணமாக இருக்குமா அல்லது தமிழ் வாசகர்கள் பொருளற்ற வம்புகளை விரும்பிபடிப்பவர்கள் நம்பிக்கை காரணமா? இதே அணுகுமுறைதான் மொழிபெயர்ப்பிலும் வந்திருக்குமோ?

2. விமர்சிக்க வந்த நூலைக்காட்டிலும் கட்டுரையாளர் காலச்சுவடிடம் காட்டும் அக்கறையும் யோசனைகளும், மொழிபெயர்ப்பாளர் வணிகர் என்ற கண்டுபிடிப்பும், என்ன பெரிதாக பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்துவிட்டாய் என்கிறதொனியும் கட்டுரையாளருக்கு வலி வேறெங்கோவென்று விளங்கிகொள்கிறோம்.
வணிகன் என்கிற தகுதி கார்ல் மார்க்ஸை பற்றிய நூலை மொழிபெயர்க்க தகுதியற்றவனாக ஆக்கிவிடுமா? நான் அம்பானியோ, டாட்டாவோ அல்ல ஒரு மளிகைகடை நடத்தி வருகிறேன் அவ்வளவுதான். எங்கேயேனும் மளிகைகடைக்காரன் கார்ல்மார்க்ஸை தொடக்கூடாது கூலித்தொழிலாளிதான் செய்யவேண்டுமென்று விதியிருக்கிறதா. புரட்சியை பாட்டாளிவர்க்கம் நடத்தியதாக சரித்திரமில்லை.  புரட்சிக்கு பூர்ஷ்வாக்களைத்தான் நம்பவேண்டியிருந்தது. பிரான்சிலும், ரஷ்யாவிலும் நடந்தது அதுதான். பூர்ஷ்வாக்களை வழி நடத்த அனுமதித்த பாட்டாளிவர்க்கம் மளிகைகடைகாரனுக்குக் கதவைச் சாத்திவிடுமா என்ன?

இதுபோன்ற காரணங்களை முன்வைத்து விமர்சிப்பதைப்பதைத் தவிர்த்து, பதிப்பகத்தின் பெயரையோ எழுத்தாளன் மொழிபெயர்ப்பாளன் பெயர்களையோ நினைவு கூராமல் நேரமிருந்தால் ஒருமுறை முழுவதும் பொறுமையோடு படித்துப்பாருங்கள்.

நன்றி.

அன்புடையீர்

கீழ்க்கண்ட இரு அமைப்புகளும் எங்களுடன் பிரெஞ்சில் நடத்திய செவ்வி ஒன்றை தங்கள்
இதழிலும் வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்,
அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெவித்துக்கொள்வதோடு, பிரெஞ்சு தெரிந்த
நண்பர்களின் பார்வைக்காகவும் அவர்களின் வலைத்தல இணைப்பைக்
கொடுத்துள்ளோம்.

http://www.larevuedelinde.com/itwNKrishna.htm

மொழிவது சுகம்- ஜூலை 5

பயணமும் படைப்பும்

படைப்பாளிகள் எஸ். ராமகிருஷ்ணனும், ஜெயமோகனும் எழுத்தில் விஞ்சி நிற்பதற்கு நியாயங்கள் எதுவேண்டுமானாலும் இருக்கட்டும், என்னைக்கேட்டால் அதற்கான சூட்சமம் அவர்கள் ஓயாமல் சுற்றிய ஊர்களிளும், சந்தித்த உயிர்களிலும்; கால் நனைத்த புழுதியிலுமிருக்கிறது.

நண்பர் V.S. நாயகர் எங்கள் பிரெஞ்சு வலைத்தளத்திற்காக ஜாம்பவான் ஜெயகாந்தனுடைய பாரீசுக்குப்போ நாவலைக் குறித்து கட்டுரையொன்று எழுதியிருந்தார். அக்கட்டுரையில் வெகு நாட்களுக்குப்பிறகு ‘Imagologie’ என்ற சொல்லை சந்திக்க நேர்ந்தது. ஆங்கிலத்தில் Imagology. அந்நிய தேசத்துடன் எழுத்தாளனுக்குள்ள உறவை அவனைப்போன்ற உணர்வுகொண்ட வேறொருவனுடன் ஒப்பிட்டு பேசுவது. இக்கட்டுரையை வாசித்தபோது அண்மையில் நோபெல் பரிசுபெற்ற கிளேஸியோவை நினைவு கூர்ந்தேன். இவர் தமது ஒவ்வொரு நாவலிலும் இந்தியாவை அல்ல
து அதன் பண்பாட்டை ஒன்றிரண்டுபக்கங்களிலேனும் தொடாது போனால் தமது படைப்பு முழுமைபெறாதென நினைப்பவர். இந்தியா இல்லாமல் தமது எழுத்தில்லையென நினைக்கிற மேற்கத்தியர்களில் ஒரு பத்துபேரை சிறுபிள்ளைபோல விரல்விட்டுச் சொல்லமுடியும். இந்தியாவும் மேற்குலக படைப்பாளிகளுமென்றே தனிக்கட்டுரையொன்று எழுதலாம். சிந்தனையை அதன் போக்கில் செல்லவிட்டு மூக்கனாங்கயிறை கையில் பிடித்தபோதுதான் இவர்கள் அனைவருமே தேசாந்திரிகள் என்கிற உண்மை பிடறியில் விழுந்தது.விலங்குகளில் மீன் போன்ற இவர்கள் அகத்திலும், புறத்திலும் ஓயாமல் அலைபவர்கள்.

புராணங்களை நம்புபவர்களுக்கு நாரதர் முதல் தேச சஞ்சாரி. அவர் சஞ்சாரம் நன்மையில் முடிகிற கலகத்திற்கு உதவியதாம். பாதிக்கப்பட்ட  அசுரர்தரப்பு பதிவுகள் ஏதுமில்லாததால் ஒருதலைபட்சமாக இக்கருத்தை ஆதரிக்கவேண்டியிருக்கிறது.எங்கள் கிராமத்தில் திடீரென்று குஞ்சு குளுவான்களுடன், தங்கள் உடமைகளை முதுகில் சுமந்துகொண்டு நரிகுறவர்கள் வந்து கூடாரம் அடித்துக்கொண்டு பத்து நாட்களோ பதினைந்து நாட்களோ தங்கியிருப்பார்கள். கிராமத்தில் தங்கியிருக்கிற அவ்வளவு நாட்களும் அவர்கள் மீது பிரம்மிப்பை வரித்துக்கொண்டு சுற்றிவருவோம். வாஸ்கோடாகாமையும், கொலம்பஸையும் பள்ளி பாடத்தில் நிழற்படமாகப் பார்த்திருந்த எங்களுக்கு, இவர்கள் நிஜவாழ்க்கையின் ஆச்சர்யம். உலகத்தையே முதுகில் சுமந்து வந்து ஊர் புளியமரத்தடிகளில் இறக்கியதாக நினைத்து கொசுக்கள் போல அவர்கள் விரட்ட விரட்ட இருட்டும்வரை கண்கள் விரிய அவ்விடத்தை விட்டு அகலாமல் மொய்த்துக்கொண்டிருப்போம். கிராமத்தில் சிலர்  அவர்களனுபவங்களை விசாரிப்பதும்,  அவ்வனுபவங்கள் அவர்கள் மொழி, அவர்கள் உடையை அணிந்து எங்கள் முன்னே உயிர்ப்பிப்பதும் அழகு.

ஒரு கலைஞன் அவன் புகைப்படக்காரனோ, ஓவியனோ கவிஞனோ கதாசரியனோ பயணத்தின் முடிவில் பகிர்ந்துகொள்வது வேறு; அது நீங்களும் நானும்பார்த்த உலகமோ விளங்கிக்கொண்ட பேச்சோ அல்ல, வேறு உலகம், வேறு மொழி, அவர்கள் மற்றவர்களாகவும் இருக்கலாம் அந்நியர்களெனவும் கருதலாம். .ஹாரி மிஷோ என்ற பிரெஞ்சுபடைப்பாளியும் ஒரு நாடோடி, ‘உத்தமமான மனிதனை நான் சந்தித்ததில்லை’ என்பவரின் கூற்றைவத்து அவர் உலகம் சுற்றியதற்கு என்ன காரணமென்று புரிந்துகொள்கிறோம்.

நானோ எனது வாழ்க்கையோ துணை எதற்கு
நீ புறப்படு
காற்றாய் நீ பறக்கிறாய்
எடுத்துவைக்கவேண்டிய
ஓரடிக்குக்கூட -இன்னமும்
யோசித்துக்கொண்டிருக்கிறேன்

தமது வாழ்க்கையிடம் கவிஞர் நடத்திய உரையாடல். பதில் கிடைத்திருக்கவேண்டும். பின்தொடர்ந்து ஓடிய  சொந்த வாழ்க்கை கை விரித்துவிட வெற்றிடத்தை நிரப்ப புதியபூமி, புதியகாற்று, புதிய மனிதர்கள் உன்மத்தம் பிடித்து அலைகிறார், தேடலுக்கு முடிவில்லை.

நிக்கோலா பூவியே என்ற மற்றொரு எழுத்தாளருக்கு  அண்டைமனிதர்களை அதிகம் நேசித்ததாலேயே பயணம் கட்டாயமாகிறது. பயணமே ஒரு கலை, அக்கலைக்கு பாம்பு சட்டையைக் கழற்றுவதுபோல அத்தனையையும் உதிர்த்துவிட்டு அருவமாக நிற்கிறார். நிக்கோலா பூவியேயின் கால்கள் இந்தியாவில் கால்பதிக்காத இடமில்லை.

காதலையும், சாகஸத்தையும் மையமாக்கொண்டு படைப்புகள் உருவான காலத்தில்  ஜார்ஜ் சாண் என்கிற பிரெஞ்சு பெண்மணி முன்னணி எழுத்தாளர். இவருமொரு ஒர் தேசாந்திரி.  பார்த்த தேசங்களையும், கிடைத்த அனுபங்களையும் தமது நாவல்களிலும், சுயசரிதையிலும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். மார்கெரித் துராஸ் நாவல்களும்  வியட்நாம் இந்தியாவென பயணம் செய்வன. பத்ரிக் டெவில் என்ற மற்றொருஎழுத்தாளரும் இதே இனம்.
———————————————————————————

துருக்கி பயணம்-8 – இறுதிப் பகுதி

 அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

ஏப்ரல் ஒன்றாம் தேதி பிற்பகல்  அண்ட்டல்யாவின் பழைய நகரத்தோடு கழிந்தது. ஒரு தேசத்தைப்போலவே    ஊர் அல்லது நகரத்திற்கும் நெடிய வரலாறுகளுண்டு. இலக்கியம் போன்று பாடல் போன்று இசைபோன்று கடந்த காலத்திய நீங்காத நினைவுகளை மீட்கவென்று ஊரின் ஒரு தோப்போ, குளமோ நகரத்தின் கோபுரமோ, கோட்டை மதிற்சுவரோ காலக் கறையானுக்கு இரையாகமல் நிற்கலாம். இம்மகிழ்ச்சியும், களிப்பும் அந்தி நேரக் காற்றுபோல மனதோடு சலசலப்பவை கல்வெட்டுபோல காலத்தை எதிர்கொள்ளும் எச்சங்கள்  அவை வரலாற்றின் குறியீடுகள்.

ஐரோப்பிய நாடுகளில் எங்கு சென்றாலும் பழமையானக் கட்டடங்களை பராமரிப்பதில் அவர்கள் காட்டும் அக்கறை நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஒரு நகரத்தின் அழகு வானளாவ எனப்புகழப்படும் மீட்டர் அளவுகளிலில்லை, அந்நகரத்தில் பழைய நகரம் எங்கே இருக்கிறதென விசாரித்து சென்று பாருங்கள். ஒரு தேசத்தின் பெருமையும் கம்பீரமும் அங்கேதான் ஒளிந்திருக்கும். ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளை கடந்த இல்லங்களும், மண்டபங்களும், தேவாலயங்களும், தேசிய சொத்துகள். துருக்கி நாட்டின் அண்ட்டல்யாவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளைபோலவே பழைய அண்ட்டல்யாவை கம்பீரத்துடன் நெஞ்சில் சுமந்திருந்தது.

எங்கள் பேருந்து துருக்கி விடுதலைப்படையினர் சிலைக்கருகே (சென்னை உழைப்பாளர் சிலையை நினைவூட்டும்) மத்திய தரைக்கடலையொட்டி இறக்கிவிட்டது. வழிகாட்டி அங்கு சற்று தூரத்தில் தெரிந்த  மினாரைக் காட்டி நான்கு மணிக்கு வந்துவிடவேண்டுமென்றார். பழைய அண்ட்டல்யா என்பது கோட்டைச்சுவர்போன்ற மதிற்சுவர் ஒருபுறம் புதிய நகரின் இரண்டு நீண்டவீதிகள் மற்றொரு புறமென்று  இரண்டிற்குமிடையில் தொட்டிற்குழந்தைபோல கிடந்தது. குறுகலான நீண்ட வீதிகள், அவற்றை வீதிகள் என்பதைக்காட்டிலும் சற்று அகலமான நடைபாதைகஎன கூற வேண்டும். ஒட்டோமான் காலத்து வீடுகள் வரிசைகட்டி நின்றன. பெரும்பாலும் மரத்தாலானவை. வெள்ளை அடித்த முகப்புகளும் போர்டிகோவில் படர்ந்த்திருக்கும் மல்லிகையும்  காலனியத்துவ கால இல்லங்களை நினைவூட்டுபவை. ஒட்டோமான் காலத்தில் இதொரு மிகப்பெரிய கிராமமென்று வழிகாட்டி கூறினார். கண்முன்னே விரிந்த திரையில் கிராமம் அசைந்து கொடுத்தது. பெரும்பாலான இல்லங்கள் இன்றைக்கு உணவு விடுதிகளாகவோ, தங்கும் விடுதிகளாகவோ இருக்கின்றன. மேசைகள் நாற்காலிகளும் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து மேற்கத்திய மொழிகளில் கிடைக்கும் உணவையும் ஒயினையும் பட்டியலிட்டுக் காத்திருக்கின்றன. ஆர்வக்கோளாறினால் எங்கள் குழுவைச்சேர்ந்த ஒருவர் இல்லத்தின் கதவைத் திறக்க நாங்கள் அவரைத் தொடர்ந்தோம், இல்லத்துக்குச் சொந்தக்காரர்கள் பொதுவாக அனுமதிக்கிறார்கள். அநேகமாக சற்று முந்தைய வரியில் குறிப்பிட்டிருந்ததுபோன்று உணவு விடுதிகளாக மாற்றப்பட்டிருந்தது காரணமாக இருக்கலாம். ஏராளமான செடிகொடிகள், பாக்கு மரங்கள், விசிறிவாழை கூண்டில் அடைத்த பஞ்சவர்ணக் கிளிகள், சிறியதொரு நீச்சல் குளம்த்துடன் கூடிய விசாலமான முற்றம். புதுச்சேரியிலும் நீச்சல் குளம் தவிர்த்து இதுபோன்ற வீடுகள் வெள்ளையர் பகுதியில் இருக்கின்றன. பழைய அண்டல்யாவில் தீக்கிரையான பத்தொன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்த சிதிலமடைந்த பள்ளிவாசலொன்றையும் காணமுடிந்தது.

வழிகாட்டி கூறியபடி நான்கு மணிக்கு அவர் கைகாட்டிய மினார் திசைக்கு வந்து சேர்ந்தோம். பதினெட்டாம் நூற்றாண்டைசேர்ந்த பள்ளிவாசல் அதன் மினார் எங்கிருந்து பார்த்தாலும் கலங்கரை விளக்கம் போல தெரிகிறது. நல்ல உயரமாக இருக்கவேண்டும். பிறகு அங்கிருந்து அத்ரியன் துறமுகம். நகரின் சுவரைகுடைந்து உருவாக்கியதுபோலவிருந்த இத்துறைமுகம் ரோமாபுரிமன்னன் அத்ரியன் என்பவனால் கி.பி 130 ல் ஏற்படுத்தப்பட்டது. இந்த அத்ரியனை மையமாக வைத்து மார்கரித் யூர்சினார் என்பர் பிரெஞ்சில்  எழுதிய அத்ரியன் நினைவுகள் ( Memoires d’Hadrien) உலக இலக்கியங்களில் மிக முக்கியமானது. சுமார் 7 வருடங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட 20பக்கம் மொழிபெயர்த்து பிறகு தொடரவில்லை. சென்னைக்கு வருகிறபோதெல்லாம் கடந்த நான்கு வருடங்களாக கி.அ. சச்சிதானந்தம் முடிக்கவேண்டுமென வற்புறுத்துவார். அவருக்கும் அலுத்திருக்கவேண்டும் தற்போது சொல்வதில்லை. அத்ரியன் துறைமுகத்திலிருந்து மத்திய தரைகடல் வளைகுடாபகுதியை பார்த்தீர்ளெனில் பிரிந்துவரமாட்டீர்கள்.

இரவு வேறொரு ஓட்டலில் தங்கவைக்கப்பட்டோம். பிரெஞ்சு நண்பர்களில் பலர் ஓட்டலில் இருந்த  ஹமாம் குளியலுக்குச்சென்றார்கள், கட்டணம் 50யூரோ. நாங்கள் எங்கள் அறைகளிலேயே குளியலை முடித்துவிட்டு நிம்மதியாக டின்னரை முடித்துக்கொண்டு படுத்தோம்.

ஏப்ரல் 2 ந்தேதி

காலை ஓட்டலிலிருந்து விடைபெற்றுக்கொண்டு மீண்டும் பேருந்து. காலை ஒன்பது மணிக்கு ஒரு தோலாடை நிறுவனத்தை பார்வையிடல். ஏற்கனவே சுற்றுலாவில் இதுபோன்ற நிறுவனங்களின் பங்களிப்புகுறித்து சற்று அலுப்போடு எழுதியிருக்கிறேன். இங்கே கிழக்கு ஐரோப்பிய இளம் பெண்களை தோலாடை அணிவித்து பூனை நடை போடவைத்தார்கள். பிறகு வழக்கம்போல ஏமாந்த சுற்றுலா பயணிகளின் தலையில் அவற்றை கட்டுவதற்கான முயற்சிகள். பன்னிரண்டு மணிக்கு வெளியில் வந்திருப்போம். அங்கிருந்து நேராக செலால் என்ற வனப்பகுதியிலிருந்த நீர்வீழ்ச்சி. பிற்பகல் ஒன்று அல்லது ஒன்றரை மணிக்கு துருக்கியில் புகழ் பெற்ற உணவு விடுதியென்று ஒன்றிர்க்குக் கூட்டிசென்றார்கள். அங்கே கெபாப் புகழ் பெற்றதாம். அக்கட்டணம் இங்கள் சுற்றுலாக் கட்டணத்தில் அடங்காது. நான் இருக்கிற Strasbourg நகரில் துருக்கியர் அல்லது கிரேக்கர்கள் நடத்தும் உணவு விடுதியில் 8 யூரோவுக்கு நல்ல கெபாப்புடன் கூடிய டின்னர் கிடைக்கும். அங்கே அதற்கு எங்களிடம் 20 யூரோவை வாங்கிக்கொண்டார்கள். வந்திருந்த அத்தனைபேரும் புலம்பினாலும் வாயை மூடிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு நான்கு மணிக்குப் புறப்பட்டு விமான நிலையம் வந்தோம். விமான நிலையமே சுற்றுலா பயணிகளுக்காக இயங்கிறதோ என்பதுபோல வேறு பயணிகளில்லை. முதல் நாள் எங்கள் விமானத்தில் வந்த பலரும் வரிசையில் நிற்பதைப்பார்த்தேன். நாங்கள் வரிசையில் நிற்கிறபொழுது தட்டச்சு செய்யப்பட பெயர்களை வைத்துக்கொண்டு வரிசையில் நின்ற பயணிகளை விமான ஊழியர்கள் தேடினார்கள். எங்களைக்கூப்பிடவில்லை. முதலில் புரியவில்லை. எதற்காக கூப்பிட்டிருப்பார்கள் என்று மண்டையைகுடைந்துகொண்டிருந்தேன். நானும் எனது மனைவியும் ஏதேதோ கற்பனை செய்துக்கொண்டோம். எங்களுடனிருந்த டாக்டரின் தம்பதி புலம்பிகொண்டு வந்து சேர்ந்தார். என்ன நடந்ததென விசாரித்தேன். தரைவிரிப்பு, நகை தொழிற்சாலை, தோலாடை என்றெல்லாம் பார்வையிட்டோமில்லையா, அங்கே பொருட்களை வாங்கியவர்களின் பெயர் பட்டியல் துருக்கி சுங்கத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட அவர்கள் கணிசமானதொரு தொகையை சுங்கவரியாக இவர்களிடம் வசூலித்திருக்கிறார்கள். பலர் முகத்தைத் தொங்கப்போட்டபடி விமானத்தில் பயணிப்பதை காணமுடிந்தது.

முடிக்கு முன்பாக ஒரு கொசுறுச் செய்தி: ஐரோப்பிய நாடுகளுக்கு விலக்காக துருக்கியில் கடனட்டையை விரும்புவதில்லை. துருக்கி நாட்டில் ரஷ்யாவைப்போலவே சுற்றுலாவும் பெரும் வணிகமும் மபியாக்கள் வசம் இருக்கவேண்டுமென்பதென் யூகம், யூகம் மட்டுமே.  இரவு ஒன்பது மணிக்கெல்லாம் பாரீஸ் திரும்பிவிட்டோம்.

தொடரை வாசித்த அனைவருக்கும் நன்றி

-நிறைவுபெறுகிறது-