சூரியக் கதிர் தமிழ் ( நவம்பர்-20 15)இதழிற்கென கவிஞர் மதுமிதாவிற்கு அளித்திருந்த பேட்டி

1.பாண்டிச்சேரியிலிருந்து பிரான்ஸ் ஸ்ட்ராஸ்பூருக்குச் சென்றிருக்கிறீர்கள். இந்த 25 வருட வாழ்க்கையில் பாண்டிச்சேரிக்கும் இந்த நகருக்குமான பிணைப்பு குறித்து சொல்லுங்கள்?
புதுச்சேரிக்கு அருகில் பத்து கி.மீதூரத்தில் தமிழ்நாட்டைச்சேர்ந்த கொழுவாரி என்ற கிராமம்தான் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் இருந்ததெல்லாம் ஓர் ஆரம்பப் பள்ளிதான். எனவே கல்வி, பணி, திருமணமென வாழ்க்கை புதுச்சேரியோடு என்றானது. தமிழ் நாட்டின் பிறபகுதிகளிலிருந்து வேறுபட்ட புதுச்சேரிக்கென ஓர் அழகு இருந்தது. புதுச்சேரியை பாரதி தேடிவர பிரெஞ்சு நிருவாகத்தின் அரசியல் கவர்ச்சி ஒரு காரணம் எனில், அம் மகாகவியைத் தொடர்ந்து தன் மடியில் கிடத்திக்கொள்ள ஆயிரமாயிரம் அழகுக் காரணங்களைப் புதுச்சேரி வைத்திருந்தது. பிரெஞ்சுக் கலையும் பண்பாடும், வைகறைத்தொடக்கம் இருள்கவியும்வரை புதுச்சேரி வாழ்வோடு இணைத்திருந்த மென்மையான சிலிர்ப்பு அவற்றுள் ஒன்று. புதுச்சேரி அளித்த பொன்முட்டை வாழ்க்கையில் அமைதியுறாமல், பேராசைகொண்ட மனம் பிரான்சுக்குப் போ என்றது. மனைவியின் மூலம் கிடைத்த பிரெஞ்சுக்குடியுரிமையும் ஒரு காரணம். ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg)? தேர்வு தற்செயலாக நிகழ்ந்தது. ஒரு பேச்சுக்கு சென்னையை பாரீஸ் என வைத்துக்கொண்டால்; சென்னையை நிராகரித்து புதுச்சேரியைத் தேர்வுசெய்ய மனம் சொல்லும் நியாயங்களை, பாரீஸைத் தவிர்த்து ஸ்ட்ராஸ்பூரை தேர்வு செய்ததற்கும் சொல்லமுடியும். 1985ல் இங்குவந்தேன். வருடம் தோறும் புதுச்சேரிக்கு வருகிறேன், இரண்டுவாரங்கள் தங்குகிறேன். பல நண்பர்களை, உறவுகளை காலம் தின்று செரித்துவிட்டது. புதுச்சேரியில் காண்கிற என் முகம் அதிகம் சிதைந்திருப்பதுபோல தெரிகிறது. சிலிர்ப்பு தற்போது நடுக்கமாக மாறியுள்ளது. புதுச்சேரி என்னிடம் புலம்பவும் செய்யும், எனக்கும் புலம்பல்கள் இருக்கின்றன. இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்கிறோம். எனது கதைகளிலும் நாவல்களிலும் புதுச்சேரியும் -ஸ்ட்ராஸ்பூரும் தொடர்ந்து இடம்பெற்று அவற்றிடையேயான பிணைப்பை உறுதிசெய்வதாகவே நினைக்கிறேன்.
2.பணிகளுக்கிடையில் இலக்கிய வாசிப்பு எழுத்தை இடைவிடாமல் செய்வதற்கான சூழலை எப்படிப் பெற்றீர்கள்?

எழுத்து உபதொழில்தான், இந்தியப் பொருள் அங்காடி ஒன்றும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமொன்றும் இருக்கிறது. இரண்டுமே சிறிய நிறுவனங்கள் என்கிறபோதும் சுமைகள் இருக்கவே செய்கின்றன. எனினும் இளம்வயதிலிருந்தே வாசிப்பும் எழுத்தும் என்னுடன் இணைந்து பயணித்துவந்திருக்கின்றன. பள்ளி, கல்லூரி, பணி என வாழ்க்கைப் படிகளில் ஏறிக்கொண்டிருந்தபோது ஆசுவாசப்படுத்திக் கொள்ள எழுத்து உதவியது. எதையாவது வாசிக்காமலோ, குறைந்தது ஒருபக்கமோ எழுதாமல் இருக்கமுடிவதில்லை. பிரான்சுக்குவந்த புதிதில் என்னை நிலை நிறுத்திக்கொள்ளவேண்டி வாணிபத்தில் கவனம் செலுத்தவேண்ட்டியிருந்தது. குடும்பமென்று ஒன்றிருக்கிறதில்லையா? இருந்தபோதிலும் இலங்கை நண்பர்களுடன் இணைந்து ஸ்ட்ராஸ் பூர் தமிழ் முரசு, பிறகு தனியொருவனாக ‘நிலா’ என்ற இதழ் என்றெல்லாம் ஆசிரியனாக இருந்து நடத்தினேன். சொந்த எழுத்தில் கவனம் செலுத்த முடியாததும்; வாகர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப இறங்கிப்போகவேண்டியிருந்ததும்; ஓசியில் இதழ்களை எதிர்பார்க்கிற கூட்டம் பெருகியதும், பொருளாதார நட்டத்தைச் சுமக்க நான் தயாராக இல்லை என்பதும் அவை நின்றுபோகக் காரணம். எழுத்தின் மீதான காதல் அதிகரித்தது.. வியாபாரத்திலோ, பணத்தினாலோ பெறமுடியாததை எழுத்தில் பெற முடியுமென்று தோன்றியது. கடையை விரிவாக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன். எடுத்த முடிவில் தவறில்லையெனவே தோன்றுகிறது. பெற்றோர்காட்டிய பெண்ணை திருமணம் செய்வதென எடுத்த முடிவு, அரசுவேலையை உதறிவிட்டு, பிரான்சுக்கு வரத் தீர்மானித்த முடிவு, வியாபாரம்போதும் எழுத்துதான் முக்கியமென பத்து ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவு அனைத்துமே எனக்குத் தவறானதாக இருக்கவில்லை. நேரம் கிடைக்கிறபோதெல்லாம் வாசிக்கிறேன். எழுதுவதற்கென காலை நேரத்தை ஒதுக்கியிருக்கிறேன். நேரடியாக கணினியில் தட்டுவது வழக்கமில்லை. ஒரு தாளில் மை பேனாவினால் குறைந்தது ஒரு சிலவரிகளாவது எழுதவேண்டும், எழுதும் பொருளின் தரிசனம் கிடைத்துவிடும், மூளையில் இக்கதகதப்பு உணரப்பட்ட மறுகணம் விசைப்பலகையில் எஞ்சியதைத் தொடர்ந்து எழுதுவேன். சில நேரங்களில் வீட்டின் பின்புறமிருக்கிற அரசாங்க பூங்காவில் நேரத்தை அமைதியாகச் செலவிடுவதும் நல்லபடைப்பிற்கு உந்துதலாக இருந்திருக்கிறது.
3.மாத்தாஹரி குறித்து எழுதுவதற்கான விதை எப்போது போடப்பட்டது. உண்மைக்கும் புனைவுக்குமான பிணைப்பினை எவ்விதம் கையாள்கிறீர்கள்?

‘மாத்தா ஹரி’ நாவல் எழுதுவதற்கான விதை எப்போது போடப்பட்டது. தெளிவாகச் சொல்ல முடியவில்லை. இந்நாவலில் வரும் ‘பவானி’ என் உறவுக்காரபெண். பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததும், புதுச்சேரி கல்லூரியில் புகுமுக வகுப்பு சேர்வதற்கான விண்ணப்பத்தினை வாங்கிகொண்டு அதை நிரப்புவதற்காக அப்பெண்ணின் வீட்டிற்குச்சென்றேன். அவருடைய சகோதரர் புதுச்சேரி தாகூர்கலைக்கல்லூரியில் பி.எ படித்துக்கொண்டிருந்தார். இதற்கு முன்பும் அப்பெண்ணைப் பார்த்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன் என்றால் பாவாடை சட்டை போட்டவராக. கொஞ்சம் வளர்ந்தவராக பாவடை தாவணியில் அன்றுதான் பார்த்தேன். அந்த நாட்களில் பல வீடுகளில் பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் அந்த வீட்டிலும் இருந்தன. அதிகபட்சமாக ஒரு நிமிடம் பேசியிருப்பேன் அதுகூட அப்பெண்ண்ணின் சகோதரரை பார்த்து கல்லூரியில் எந்த குரூப் சேரலாம் எனக் கேட்கவந்தேன் என்று அவளிடம் தெரிவித்த சேதி. அதற்குள் அப்பெண்ணின் தகப்பனார் வந்துவிட்டார். பெண்ணை மிரட்டி உள்ளேபோகும்படி கூறியவர் என்னிடம் கதவைத் தட்டிவிட்டு வரவேண்டும் என்ற இங்கிதம் று தெரியாதா? எனக் கோபத்துடன் கேட்டார். தன்னுடைய மகனை அழைக்கப் பின்னர் அவரும் வந்தார். பி.யூ.சி. அப்ளிகேஷனை நிரப்ப உதவிசெய்தார். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே அப்பெண்ணுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதன் பின் இதுநாள்வரை அவரைப் பார்த்ததில்லை, பார்க்க முயற்சித்ததுமில்லை. அவரைப்பற்றி நான் அறிந்தவையெல்லாம் கேட்டறிந்த தகவல்கள்தாம். அவள்மீது திணிக்கப்பட்ட வாழ்க்கைக்கு நானும் பொறுப்பென்பதுபோல காரணமற்ற ஒருவித குற்ற உணர்வு இருந்தது. பவானியை தூர இருந்து அவதானிப்பது, அவர்பற்றிய தகவல்களை பிறரிடம் கேட்டுபெறுவது என்றிருந்தேன். ஏன் எதற்காக? பின் நாளில் மாத்தா ஹரி என்றொரு நாவலை அப்பெண்ணை மையமாகவைத்து எழுதவேண்டிவரும் என்பதாலா? தெரியாது. பிரான்சுக்கு வந்த பிறகு ஒரு புதுச்சேரி பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டதை பிரெஞ்சு தினசரியில் படித்தபோதும் விபத்துக்குள்ளான பெண்ணை பவானியாகப் பார்த்தேன். முதலில் தன்மை கதை சொல்லலில் பவானிபற்றி எழுதுவதான் திட்டம், மாத்தா ஹரியை பற்றி ஏற்கனவே படித்திருந்தேன், அநேக விடயங்களில் இருவர் வாழ்க்கையிலும் ஒற்றுமை இருந்தது. எழுத்தில்கூட பவானிக்கு இனி எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதுபோல அத்துன்பங்களைச் சுமக்க மாத்தாஹரியை உபயோகித்துக்கொள்வது எனக்கு மன ஆறுதலைத் தந்தது. ‘உண்மை இல்லாத புனைவு எது?’ என மாத்தாஹரி நாவலில் ஒரு கேள்வி வரும். நம் ஒவ்வொருவரிடமும் நாமும் பங்குபெற்ற அல்லது நாம் அறியவந்த சம்பவங்களின் கோர்வைகள் ஏதோ ஒரு உண்மையை மையமாகவைத்து அல்லது அடிப்படையாககொண்டு எண்ணிக்கையற்று உள்ளன. அவை பெரிதும் புலன்களோடு இணைந்தவை. அவற்றைப் புற உலகுக்குக்கொண்டுக் கொண்டுசெல்லும் வழிமுறையாகவே எழுத்தென்ற கலைவடிவைப் பார்க்கிறேன். உண்மை பொய்போல அத்தனைக் கவர்ச்சியானதல்ல, எனவே சுவாரஸ்யமாகசொல்ல அருவருப்பூட்டாத அலங்காரம் தேவை. அதற்குப் பொய் கைகொடுக்கிறது. ஒரு நல்ல புனைகதை உண்மையும் உண்மையைப்போலத் தோற்றங்கொண்ட பொய்களும் சேர்ந்தது. இதுதான் உண்மையைப் புனைவாகச்சொல்ல நான் கையாளும் தந்திரம்.
4.சிமொன் தே பொவ்வார் ஆளுமை குறித்து தமிழுக்கு முழுமையான படைப்பினை கொடுத்திருக்கிறீங்க. சிமொன் தனக்கு அல்கிரென் அளித்த மோதிரத்தை இறுதித் தூக்கம் வரையிலும் அணிந்திருந்ததும், சார்த்தருக்கான முழு சுதந்திரத்தை அவர் அளித்திருந்ததையும் வாசிக்கையில் இன்னொரு பரிமாணத்தில் மனித உறவுகளின் மேன்மையை உணர முடிந்தது. இன்றும் அங்கே சிமொனின் இலக்கிய சமூக சிறப்புகள் பேசப்படுகின்றனவா?
சிமோன் தெ பொவார் படைப்புலகிற்குள் வந்தபோது உலகின் பிற பகுதிகளைப்போலவே பிரான்சிலும் பெண்களின் நிலமை மிகவும் மோசமாக இருந்தது. அவருடைய செயல்பாடுகள், கடப்பாடுகள், எழுத்தூடாக அவர் மொழிந்தவை, செய்தப் பிரச்சாரங்கள், அறிவித்த பிரகடனங்கள் அனைத்துமே தன் ‘இருத்தலை’ உறுதி செய்ய என்பதைக்காட்டிலும் ‘பெண்’ என்ற பாலினத்தின் இருத்தலை உலகிறகுத் தெரிவிக்க முனைந்தவை. இதைப் பிரெஞ்சு பெண்ணினம் மறக்கவில்லை. அவரது ‘இராண்டாம் பாலினம்’- பெண்ணினத்தின் மறை நூல் எனப்புகழப்பட்டது. இன்றளவும் அதற்கீடான நூல் எழுதப்படவில்லை. இரண்டாம் பாலினம் பிரெஞ்சிலிருந்து முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு வரவேண்டும் என்பது மூத்த இலக்கியவாதி கி. அ, சச்சிதான்ந்தத்தின் கனவு, கன்னடத்திலும் மலையாளத்திலும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது, ஆங்கில மொழிபெயர்ப்பென்று வந்தவை மூலத்தின் பல பக்கங்களைத் தவிர்த்துவிட்டு மொழிபெயர்க்கப்பட்டவை, அதற்கான காரணத்தை மொழிபெயர்ப்பாளர்கள் சொல்லவில்லை. மூலமொழியிலிருந்து மொழிபெயர்க்க மேற்ககுலகு ஆர்வம் காட்டுவது இதுபோன்ற காரணத்தினால்தான். இரண்டாம் பாலினம் பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்படவேண்டும். நீங்கள் எதிர்பார்ப்பதைப்போலவே பிரெஞ்சு மக்கள் அவரை நினைவு கூர்கின்றனர். கடந்த ஆகஸ்டு மாதத்தில் ‘France Culture’ என்ற பிரெஞ்சு வானொலி நிலையம் சிமொன் தெ பொவ்வார் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியொன்றை ஒருவாரத்திற்கு நடத்தினார்கள். அதுபோலவே ‘Arte’ என்ற பிரெஞ்சு தொலைக்காட்சி சேனலும் அண்மையில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. வருடம் முழுக்க ஏதாவதொரு இதழில் அவரை முன்வைத்து கட்டுரைகள் வரவேசெய்கின்றன. அவருடைய இரண்டாம் பாலினம் இன்றளவும் தொடர்ந்து விற்பனை ஆகிறது. அவரைப்பற்றி பிறர் எழுதிய நூல்களும், குறும்படங்களும், ஆவணப்படங்களும் வந்துகொண்டிருக்கின்றன. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களிடத்தில் காணும் பொதுப்பண்பு அவர்கள் ஒட்டுமொத்த மானுடம் சார்ந்த பிரச்சினை கையிலெடுத்துக்கொண்டு, அதன்மீது தங்கள் சொந்த சிந்தனையைக் கட்டமைப்பவர்கள். தங்கள் பூகோளப் பரப்பைக்கடந்து அவர்கள் வெற்றி பெறுவதற்கு இதனை முக்கிய காரனமாகப் பார்க்கிறேன்.
5.வணக்கம் துயரமே பிரெஞ்ச் நாவல் வாசித்து அந்த கலாச்சார பாதிப்பின் துயர உணர்வுகளின் தாக்கத்திலிருந்து வெளிவர மூன்று நாட்கள் ஆனது. பிரான்சுவாஸ் சகாங் அந்த ஒரு நாவல் தான் எழுதியுள்ளாரா?
வணக்கம் துயரமே பிரான்சுவாஸ் சகானுடைய (Françoise Sagan) முதல் நாவல், 1954ம் ஆண்டு வெளிவந்ததபோது அவருக்கு வயது பதினெட்டு. அதற்குப்பின்பு பதினைந்துக்கு மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். சிறுகதைகளும் நிறைய வந்துள்ளன. திரைப்படங்களிலும் பாங்காற்றி இருக்கிறார். எனினும் அவர் முதல் நாவல்தான் இன்றளவும் கொண்டாடப்படுகிறது
6.அம்பையின் சிறுகதைகளை பிரெஞ்சுக்கு அளித்திருக்கிறீர்கள். அங்கே நம் தமிழ் படைப்புகளுக்கான வாசக வரவேற்பு எப்படி இருக்கின்றது?

இது நான் தனியே செய்ததல்ல. டொமினிக் வித்தாலியோ (Dominique Vitalyos) என்ற பிரெஞ்சு பெண்மணியுடன் இணைந்து செய்தது. அவர் மலையாளத்திலிருந்து நேரடியாகப் பிரெஞ்சில் மொழிபெயர்ப்பவர். வருடத்தில் சிலமாதங்கள் கேரளாவில் தங்கியிருப்பவர். அவர் நினைத்திருந்தால் தமிழறிந்த ஒரு மலையாளியை வைத்துக்கொண்டு ஒப்பேற்றியிருக்கக்கூடும். நாமென்றால் அதைத்தான் செய்வோம். நமக்கு நம்முடைய நாவல் இன்னொரு மொழியில் வந்தாலே போதும் பூரித்து போவோம். நாவல் எப்படி மொழிபெயர்க்கப்படுகிறது என்பதைப்பற்றிய பிரச்சினைகளெல்லாம் அடுத்தக் கட்டம். தவிர டொமினிக் வித்தாலியோ இந்திய நாவல்களை ஆங்கிலத்திலிருந்தும் பிரெஞ்சில் மொழிபெயர்ப்பவர், இருந்தபோதிலும் மூல மொழியிலிருந்தே நேரடியாக மொழிபெயர்க்கப்படவேண்டும் என்ற பிரெஞ்சு பதிப்பாளர்களின் மொழிபெயர்ப்பு கொள்கைகளுக்கேற்ப தமிழிலிருந்து அம்பையின் சிறுகதைகளை நேரடியாக மொழிபெயர்ப்பதென்று அவர்கள் தீர்மானித்தார்கள். பதிப்பகம் என்னைத் தொடர்புகொண்டு பிரெஞ்சுப் பெண்மணியுடன் இணைந்து பணியாற்ற முடியுமா எனக்கேட்டார்கள், சம்மதித்தேன். சில பக்கங்களைப் பிரெஞ்சில் மொழி பெயர்த்து அனுப்பினேன், பதிப்பாளர் குழுவிற்குத் திருப்தியாக இருந்தது, டொமினிக்கும் ஓகே என்றார். இருவரும் பல முறை விவாதித்து, நானும் ஒரு எழுத்தாள்னாக இருப்பதால், சக எழுத்தாளரின் படைப்பில் குறையின்றி போய்ச்சேரவேண்டும் என உழைத்தேன். மொழிபெயர்ப்பாளர்கள் பெயர்வரிசையில் என் பெயரை முதலில் பதிப்பாளர்கள் போட்டிருந்தார்கள். டொமினிக் கும் அதுபிரச்சினையே இல்லை கிருஷ்ணா என்றார், எனக்கு நியாயமாகப் படவில்லை ஆட்சேபித்தேன். பதிப்பாளர்கள் பின்னர் திருத்தம் செய்தார்கள். நீங்கள் இணைய தளத்தில் அம்பை அல்லது மொழிபெயர்ப்பாளகளில் ஒருவரின் பெயரையோ தட்டிப்பார்த்தீர்களென்றால் ‘Zulma’ என்ற பிரெஞ்ச்சுபதிப்பகம் வெளியிட்டுள்ள ‘De haute lutte’க்கு வாசகர்கள் அபிப்ராயங்க்களை வைத்து அதற்கு எத்தகைய வரவேற்பிருக்கிறது என்று அறிவீர்கள். தமிழ் நூல்களுக்கு பெரும் வாசக வரவேற்பென்று தற்போதைக்கு எதுவுமில்லை. முதலில் தமிழ் படைப்புகள் சக மாநிலங்களில் எத்தகைய வரவேற்பினைப் பெற்றிருக்கின்றன எனப் பார்க்கவேண்டும் அதன் பிறகு மேற்குலகு வரவேற்பை பற்றி பேசலாம்.
7.தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் படைப்புகளை மொழிபெயர்த்து அளிக்கிறீர்கள். இரண்டுக்குமான பிணைப்பை இன்னும் வலுப்படுத்த முக்கியமாக என்ன செய்யவேண்டும். இருமொழியாளர்கள் இணைந்து ஏதும் செய்து வருகிறீர்களா?

இது தனிமனிதனாக் செய்யும் விஷயமல்ல. பிரெஞ்சு படைப்புலகை பொறுத்தவரை அவற்றை உலகின் எந்தப்பகுதிக்கும் கொண்டு செல்லவேண்டுமென அக்கறைகொண்டு செயல்படுகிறார்கள். பதிப்பகங்களும், அரசாங்கமும் அவரவர் வழிமுறைகளில் தனித்தும் தேவையெனில் இணைந்தும் செயல்படுகின்றனர். தமிழில் அல்பெர் கமுய்யோ, லெ கிளேஸியோவோ வாசிக்கப்பட்டால்தான் தங்கள் படைப்பிலக்கியம் உலகில் அங்கீகாரிக்கப்பட்டதாகபொருள் என்கிற கனவெல்லாம் அவர்களிடத்தில் இல்லை. இருந்தபோதும் தில்லியிலுள்ள பிரெஞ்சு தூதரகம் இதனைக் கடமையாகக்கொண்டு புத்தகத்தின் பதிபுரிமை, மொழிபெயர்ப்புக்கான ஊக்கத்தொகையென அளித்து வெளிவரவேண்டுமென துடிக்கிறார்கள். இத்துடிப்பு நம்மவர்களிடத்திலும் வேண்டும். பிரெஞ்சு பதிப்பகங்கள் மூலத்திலிருந்து மொழிபெயர்ப்பவர்கள். ஆங்கிலத்தில் எழுதுகிற இந்திய எழுத்தாளர்கள் கவனம் பெற்ற அளவிற்கு பிறமொழி இந்திய எழுத்தாளர்கள் கவனம் பெறுவதில்லை. நல்ல எழுத்துகள் சிபாரிசு அற்று பிரெஞ்சுப் பதிப்பகங்களிடம் போய்ச்சேரவேண்டும், பிரெஞ்சு பதிப்பகங்கள் வைத்திருக்கிற தேர்வுக்குழுவினருக்கு அவை திருப்தி அளிக்கவேண்டும்
8.பிரெஞ்ச் சிறுகதைகளையும் நாவல்களையும் தமிழாக்கம் செய்திருக்கிறீர்கள். பண்டைய காலத்து படைப்புக்கும் தற்கால படைப்புக்கும் இடையில் இருக்கும் நூதன வளர்ச்சியின் சிறப்பைக் காண்கிறீர்களா?
பொதுவில் பிரெஞ்சு படைப்பிலக்கியத்துறையை பண்டையகாலத்து படைப்பு தற்கால படைப்பென குறுக்கிவிட முடியாது. இந்தத் தற்கால படைப்பு பல படிகளைக் கடந்து பெறப்பட்டது. ஒவ்வொரு படிநிலையும் அவற்றை முன் எடுத்தவர்களால் உரிய வாதங்களின் அடிப்படையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டவை. மாற்றத்தை மூச்சாகக்கொண்டவர்கள் மேகுலகினர், மறுப்பு அவர்கள் இரத்தத்தோடு ஊறியது. ‘இருத்தல்’ என்பது இயக்கத்தால் நிரூபணமாவது, முடங்கிக் கிடப்பதல்ல. பிரெஞ்சு மொழியும் இலக்கியமும் தமிழ்மொழிபோல நெடிய வரலாற்றக்கொண்டதல்ல என்றபோதிலும் அதன் தொடக்ககாலத்திலிருந்தே ஏனைய பிறதுறைகளைபோலவே பல மாற்றங்களை சந்தித்தது. பிரான்சு நாட்டின் வரலாற்றில் அரசியலில் ஏற்பட்ட தாக்கங்கள் எல்லாம் கலை இலக்கியத்திலும் எதிரொலித்தன. முதல் இரு உலகப்போர்கள், பாசிஸத்தின் ஆதிக்கம், சமூகத்திலிருந்த ஏற்ற தாழ்வுகள், ஆட்சியில் சமயங்களுக்கிருந்த செல்வாக்கின் சரிவு, மொழியறிஞர்களால் திறனாய்வில் ஏற்பட்ட முன்னேற்றம் இவை அனைத்திற்கும் மேற்குலகின் கலை இலக்கிய நூதன வளர்ச்சியில் பங்குண்டு, அது இன்றளவும் தொடர்கிறது.
9. பிரெஞ்சில் பின் நவீனத்துவத்தின் தற்போதைய நிலையென்ன – உங்கள் நாவல்கள் பின் நவீனத்துவம் சார்ந்த எழுத்தா?
அதுபோன்ற எந்த லேபிலையும் ஒட்டிக்கொள்ள விருப்பமில்லை. இன்றைக்கு மேற்குலகில் படைப்பாளி எவரும் தனது படைப்பு பின்நவீனத்துவம் என அறிவித்து எழுத உட்காருவதில்லை. அவரவர் படைப்பு சார்ந்து எடுத்துரைப்பில் உத்தியையும் வழிமுறையையும் கையாண்டு எழுதுகிறார்கள். எனக்குத் தெரிந்து பிரெஞ்சு படைப்புலகம் மிகச்சிறந்த எழுத்தாளர்களென்று ஏற்றுக்கொண்டிருக்கிற – அண்மைக்காலத்தில் நோபெல் பரிசுபெற்ற லெ கிளேஸியோ, பத்ரிக் மோதியானோ உட்பட தங்கள் எழுத்தைப் பின் நவீனத்துவமென்று சொல்லிக்கொண்டிருப்பதில்லை. பின் நவீனத்துவத்தை மேற்குலகம் கடந்து, ஆண்டுகள் பல ஆகின்றன. உலகின் பிற பகுதிகளைக் காட்டிலும் அமெரிக்கர்களிடம் அதிகம் புழங்கிய ஒரு முன்னொட்டு சொல் ‘பின்'(Post). அவர்கள் அமைப்பியல்(structuralism), பெண்ணியல் (feminism), காலனியத்துவம் (colonialism) போன்ற பலவற்றுடன் ‘Post’ஐச் சேர்த்திதிருக்கிறார்கள். ‘பின்’ என்ற சொல்லைக்கொண்டு சம்பந்தப்பட்டக் கோட்பாட்டை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச்சென்றார்கள் -குறிப்பாக அதற்கு முந்தைய கட்டத்தின் வீழ்ச்சியை வற்புறுத்திச்சொல்ல. இவற்றுள் பின் அமைப்பியல் வாதம், பின் பெண்ணியவாதம், பின் காலனியத்துவம் என்கிறபோது அதில் நியாயம் இருப்பதுபோல தெரிகிறது. ஏனெனில் அவைகளெல்லாம் ஒரு கருத்தியத்தியத்தின் கால அளவைக் குறிப்பிடுபவை. மாறாக பின்நவீனம் அல்லது பின்நவீனத்துவம் அத்தகைய நியாயத்துடன் ஒலிப்பதில்லை. இலக்கியத்தில் நவீனத்துவத்தின் அடுத்தக்கட்டம் பின் நவீனத்துவம் எனில்? நவீனத்துவத்தின் காலம் முடிந்துபோனதா? பின் நவீனத்துவத்தைக் கோட்பாடாக வரையறுக்க முயன்ற ழான் பிரான்சுவா லியோத்தார் (Jean François Lyotard), ழாக் தெரிதா (Jacques Derrida) ழான் பொதுரிய்யார் (Jean Beaudrillard) மூன்று பிரெஞ்சுக்காரர்களுமே மெய்யியலாளர்கள், மொழியின் கூறுகளை ஆய்ந்து சில உண்மைகளை முன்வைத்தார்கள். ஆனால் அவர்கள் இலக்கியவாதிகளா என்றால் இல்லை. மொழியின் உபயோகம், சொற்களை வெட்டுதல், கூறுபோடுதல், சல்லடைகொண்டு சலித்தெடுத்தல் போன்ற, சோதனைச்சாலை ஆய்வு முடிவுகளெல்லாம் திறனாய்வாளர்களுக்கு உதவலாம் அல்லது பல்கலைக்கழகச் சுவர்களுக்குள் எடுபடக்கூடியவை. இலக்கியமென்பது அறிவைமட்டும் சார்ந்த விஷயமல்ல, புலன்களும் சேர்ந்தது. பின் நவீனத்துவவாதிகள் எனக்கூறிக்கொண்ட படைப்பிலக்கிய வாதிகளேகூட அவர்களுக்குத் தூண்டுதலாக இருந்தவை எவை என்ற கேள்விக்கு கைகாட்டுவது, பதினேழாம் நூற்றாண்டைச்சேர்ந்த டான் க்ய்க்ஸ்டோட்(Don Quichotte) நூலையும் கர்ணபரம்பரைக் கதையாக அறியப்பட்ட இந்திய மற்றும் பாரசீக இலக்கியங்களில் பிறந்த ஆயிரத்தொரு இரவுகள் (Les Mille et Une Nuits) நூலையும், அது போன்றவற்றையும். ஆக பின் நவீனத்துவத்தை ஏற்றுக்கொண்டாலுங்கூட உந்துதலுக்கு அவர்கள் வழியிலேயே (ஆயிரத்தொரு இரவுகள் வழியில்) நாம் மகாபாரதத்தையோ? கருட புராணத்தையோ தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம்; அறுபதுகளில் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையை படித்து இருக்கிறேன், பின் நவீனத்துக்கு அது கூட நல்ல உதாரணம். அதன்றி கடந்த பதினைந்து ஆண்டுகளாக பின் நவீனத்துவத்தை மறுத்த ‘ பின்-பின் நவீனத்துவம்’ (Post -Postmodernism) குரல்கள் கேட்கின்றன. எத்தனை பின் வேண்டுமானாலும் அவரவர் சாமர்த்தியத்திற்கேற்ப போட்டுக்கொள்ளலாம், நமக்கு வாசிக்கும்படி இருக்கவேண்டும்.
10. .இன்றைய தலைமுறையினரினிடையே பிரெஞ்ச் படைப்புகளை வாசிக்கும் வழக்கம் உள்ளதா?
பிரான்சு நாட்டிலும் வாசிக்கின்ற மனநிலை குறைந்துவிட்டதென்கிறார்கள். எனினும் அறிமுக எழுத்தாளர் என்றால்கூட குறைந்தது 5000 பிரதிகள் என்று அச்சிடுகிறார்கள். எழுத்தாளர்கள் எழுத்தன்றி வேறு பணிவேண்டாம். பெரிய எழுத்தாள்ர் எனில் ஐந்தாண்டுக்கு ஒரு நூலைக்கொண்டுவந்தால் கூட அவரால் நன்கு ஜீவிக்க முடியும்.
11. தற்கால பிரெஞ்ச் படைப்பாளிகளின் சிறந்த படைப்பு சிறந்த எழுத்தாளர் என நீங்கள் கருதுபவர்களைக் குறித்து சொல்லுங்களேன்
இதற்கு முன்பு கூறியதுபோல பிரெஞ்சு இலக்கியத்திற்கு தற்போதைக்கு நவீனமென்றோ, பின்நவீனத்துவமென்றோ முத்திரைகளில்லை, அதொரு கட்டுபாடற்ற குதிரை திசையின்றி ஓடலாம். எப்பொருளையும் கதை நாயகனாக்கலாம் (La Carte et le Territoire – Houellebecq), சொந்த வாழ்க்கையை எழுதி புனைவிலக்கியம் எனலாம் (Salam Ouessant -Azouz Begag). இன்று பிரெஞ்சு மொழியில் எழுதிப் பணம் சம்பாதிக்கிற முதல் பத்து எழுத்தாளர்களில் ‘இவர் எழுத்தை எதில் சேர்ப்பது? வெகு சன எழுத்தா- இலக்கியமா?’ என விமரிசகர்கள் சந்தேகிக்கிற பெல்ஜிய பிரெஞ்சு எழுத்தாளர் அமெலி நொத்தோம் (Amélie Nothomb) பத்தாவது இடத்திலிருக்கிறார். பிற ஒன்பது எழுத்தாளர்களும் வெகுசன எழுத்தாளர்கள். பிரெஞ்சுப் புனைவுலகத்திலும் ஆங்கிலத்திலுள்ளதைப்போலவே குற்ற புனைவுகள், அறிவியல் புனைவுகள், வெகுசன எழுத்துக்கள், தீவிர எழுத்துக்களென்று பிரிவுகளுண்டு. வெகுசன எழுத்தாளர்கள் போலன்றி தீவிர எழுத்தாளர்களுடைய நூல்களின் விற்பனையும் எழுத்தாளர் வரிசையும் நிரந்தரமானதல்ல. நூல்களுக்குக் கிடைக்கும் விருதுகள், விமர்சனங்களைப் பொறுத்தது அது. இன்று பிரெஞ்சு இலக்கியத்திற்குத் தீவிரமாக பங்களிப்பவர்களென: லெ கிளேசியோ (Le Clézio) பத்ரிக் மொதியானோ(Patrick Modiano), மிஷெல் ஹூல்பெக் (Michel Houelbeque) ழில் லெருவா (Gilles Leroy), ழெரோம் பெராரி (Jérôme Ferrari), அலெக்ஸி ழெனி (Alexis Jenni), ழாக்-பியெர் அமெத் (Jacques-Pierre Amette), பஸ்க்கால் கிஞ்ஞார் (Pascal Guignard), எரிக் ஒர்செனா(Erik Orsenna), அமெலி நொத்தோம் (Amélie Nothomp), ஒலிவியே அதாம் (Olivier Adam), ழான் கிரிஸ்டோப் ருஃபன் (Jean-Christophe Rufin) நினைவுபடுத்த முடிந்த சிலர்.
13. ஆங்கில படைப்புகளில் நீங்கள் இந்த வருடம் விரும்பி வாசித்த 5 புத்தகங்கள் என்னென்ன?
இவ்வருடம் ஆங்கில படைப்புகளென்று வாசித்தது குறைவு. தாமஸ் பின்ச்சன் (Thomas Pynchon) எழுதிய “The Crying of Lot 49” நாவலை வெகுகாலமாய் வாசிக்க நினைத்து, அண்மையில் அமெரிக்கா போயிருந்தபோது வாங்கிவந்திருந்தேன். அடுத்தது கிரண்தேசாய் எழுதியிருந்த The Inheritance of Loss என்ற நாவல். இந்த இரண்டு ஆங்கில நாவல்கள்தான் இந்த வருடத்தில் நான் வாசித்தவை. இரண்டுமே வருட ஆரம்பத்தில் வாசிக்கப்பட்டவை. காலச் சுவடுக்காக Albert Camus யுடைய L’homme révolté என்ற நூலை மொழிபெயர்க்கிறேன் நேரம் சரியாக இருக்கிறது, திரும்பத் திரும்பப் பலமுறைவாசித்துப் புரிந்துகொள்ள வேண்டியிருப்பதால், பிற வாசிப்புகள் குறைவு .
14. நீலக்கடலுக்கான தமிழ் நாடு அரசின் விருது பெற்றிருக்கிறீர்கள். தொடர்ந்து பெற்றுவரும் விருதுகள் படைப்புக்கான ஊக்கத்தை அளிப்பதாக உணர்கிறீர்களா?
2014ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான படைப்பிலக்கிய விருது ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்ற மற்றொரு நாவலுக்கும் கிடத்திருக்கிறது. இரண்டும் பின்வாசல் அணுகுமுறையால் பெறப்பட்டதல்ல என்பதால் உண்மையில் பெருமை. இதுபோன்ற அங்கீகாரங்கள் நம்மை உற்சாகப்படுத்தக்கூடியவைதான். ஆனாலும் ஒரு சிறந்த படைப்பாளியை விருதைக்கொண்டு அடையாளப்படுத்த முடியாது. உண்மையைசொல்லட்டுமா சுஜாதாவும் சுந்தர ராமசாமியும் இருவேறு துருவங்கள் என்கிறபோதும் அவர்கள் விருதுகளால் அடையாளம் பெற்றவர்கள் அல்ல. பிரான்சு நாட்டிலும் நிறையபேரை சொல்ல முடியும். நல்ல எழுத்துக்களை அடையாளம் காணும் வாசக நண்பர்கள் நடு நிலை திறனாய்வாளர்கள் தமிழிலும் இருக்கிறார்கள். தமிழ்ப் படைப்புலகில் எனக்குக் கிடைத்த கூரை அவர்கள் வேய்ந்ததுதான்.
15. இந்த வருட புத்தகக்கண்காட்சிக்கு வெளிவரும் தங்களின் படைப்புகள் என்னென்ன?
காலச்சுவடுக்காக ஒரு மொழிபெயர்ப்பு – அல்பெர் கமுய்யுடையது, பிறகு நண்பரும் திறனாய்வாளருமான க.பஞ்சாங்கத்தைக்குறித்து இலங்கு நூல் செயல்வலர் என்றொரு புத்தகம் என்ற இரண்டு நூல்களும்.
நன்றி. , மதுமிதா , சூரியகதிர்
———————————————————————————————————-
Like this:
Like ஏற்றப்படுகின்றது...