Monthly Archives: மே 2024

தமிழில் தலித் இலக்கியம்

      இலக்கியத்தை, மனிதர்  அடிப்படையில் இன வாரியாக, மதவாரியாக; கொள்கை அடிப்படையில், கோட்பாட்டின் அடிப்படையில்; பிரித்து அணுக முடியுமா?  அது முறையா ? இருந்தும், ‘முடியும்’ அல்லது ‘முடிந்திருக்கிறது’ என்பதுதான் எதார்த்தமாக இருந்து வருகிறது. மனிதர்களை அவர்தம்  உணர்வுகளைக் கலையாகவோ இலக்கியமாகவோ வெளிப்படுத்துகிற பொழுது அவரவர் நாடு சார்ந்த மண் சார்ந்த வாழ்க்கையின் சில பிரத்தியேக கூறுகளை அதிலும்  குறிப்பாக புறவாழ்வை முன்வைத்தே அதிகம் சொல்லப்பட்டுள்ளன.

« மனித சமூகத்தின் மேமைக்கான வடிவங்களாகப் பார்க்கப்பட்ட இலக்கியங்கள், ஒரு கட்டத்தில் சமூகத்தின் சமத்துவமின்மையை சுட்டிக்காட்டத் தொடங்கின » என்கிற வரிகளோடு நூலாசிரியர் பயணிக்கிறார். அறத்தை வற்புறுத்த எழுதபட்ட ஆரம்பகால இலக்கியங்கள் அதைச் சமூகத்தின் மேல் தட்டு மக்களின்  பிரச்சினைகளூடாக போதிக்க முயன்றனவேயன்றி அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளூடாக அல்ல. உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களையும் மனிதர்களாக ஏற்கத் தொடங்கியது அண்மைக்கால நிகழ்வென்பதால், இலக்கியத்தில் தலித்தியத்தின் வருகையில் ஏற்மட்ட்ட தாமதத்தை விளங்கிக்கொள்கிறோம். ஒருவனை மேடையேற்றிக் கொண்டாடும் வழக்கும், இன்னொருவனை ஒதுக்கித் தண்டிக்கும் போக்கும், அவனுடைய சொந்த வாழ்க்கை நெறியின் உத்தம குணங்கள் அடிப்படையில் விதிக்கப்பட்டதல்ல, பதிலாக அவன் தன் பிழைப்புக்காக செய்யும் தொழிலைச் சாட்சியமாகக்  கொண்டு சமூகம் வழங்கும் தண்டனை என்கிறபோது, ஏன் ? எதற்காக ? என்ற கேள்வி மானுடத்தின் நலனில், மேன்மையில் அக்கறைகொண்ட எந்தவொரு மனிதரிடத்திலும் எழுவது இயல்பு. வெம்மையைப் போக்கி குளிர்ச்சியைக் கொடுக்க மழை அருளி  மண்ணுயிரைக் காப்பதாக நம்பப்படும் மாரி, அவசியமெனில் காளியாக, கொற்றவையாக அவதாரமெடுக்கிறாள். தன் பிள்ளைகளிடையே இச்சமூகம் பாரபட்சம் காட்டுவதை கலை இலக்கிய மாரிமட்டும் எங்ஙனம் சகித்துக்கொள்வாள் ? ஆக பெண் இலக்கியம், தலித் இலக்கியம் போன்ற கொற்றவை அவதாரங்கள், தீய சக்திகளை கொன்றொழிக்க தேவைப்படுகின்றன.

.   ‘தமிழில் தலித்தியம்’ என்ற நூல் 2023 திறனாய்வு நூலுக்கான பஞ்சு பரிசிலினை வென்ற நூல். நூலாசிரியர் சுப்பிரமணி இரமேஷ்  என்ற இளைஞர், கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழில் தலித்தியம், என ஆசிரியர் நூலுக்கு பெயரிட்டிருந்தாலும், நூலாசிரியர் தமிழ் இலக்கிய வெளிக்குள் தன்னுடைய எழுதுபொருளைச் சுருக்கிக் கொள்ளாமல், இந்தியச் சமூகமெங்கும் பயணித்து, தமிழ்ச் சமூகத்திற்குள் வருகிறார். காரணம் பலரும் அறிந்ததுதான். ‘தலித்’ என்கிற சொல் தமிழ்ச்சொல் அல்ல. நாம் இரவல் பெற்ற ஒரு சொல். விதை ஊன்றப்பட்டதும், அது முளைத்து வளர்ந்ததும் மராட்டிய மண். காதலையும் வீரத்தையும் போற்றும் தமிழ்மண்ணுக்கு, சுதந்திரக் குரலை முதற்குரலாக ஒலிக்கத் வழக்கம்போல தயக்கம். ஆக மராட்டிய சேவல்கள் கூவட்டுமென நம்மவர்கள் காத்திருந்திருக்கிறார்கள். ஏதோ அங்கு நல்லது நடந்திருக்கிறது, நாடெங்கும் அடித்தட்டுமக்கள் அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழ, தங்கள் உரிமைக் குரல்ழுப்ப மாகாராஷ்டிர மாநிலம் காரணமாக இருந்துள்ளது. தலித் மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மானுடமும் அம்மேன்மக்களுக்கு தலைவணங்கவேண்டும். கத்தியின்றி இரத்தமின்றி மாபெரும் புரட்சியை முன்னெடுத்த பெருமை தலித்தியம் என்ற மந்திரச்சொல்லைச் சேரும்.   

‘தமிழில் தலித்தியம்’ நூலாசிரியர் பதினைந்துக்கு மேற்பட்ட தலைப்புகளில் ஆழமாகவும், உரிய சான்றுகளுடனும் தலித்தியம் சொல்லின் பிறப்பு, அச்சொல்லை முன்னெடுத்த மனிதர்கள்,அதற்கான காரணங்கள், இந்திய மாநிலங்களில் தலித்தியத்தின் வளர்ச்சி, அதன் பின்புலத்தில் இருந்த அமைப்புகள், அதற்குழைத்த தலைவர்கள்  இலக்கியவெளியில் இந்தியாவின் முக்கிய மொழிகளில் தலித்தியம் ஏற்படுத்திய தாக்கமென நுட்பமாக அணுகியுள்ளார். தலித்தியம் பற்றிய சுருக்கமான வரலாற்றுடன் நூல் தொடங்குகிறது இந்தியக் குடியரசில் அம்பேத்கர் என்கிற மூதறிஞருடைய இடமென்ன என்பதை நாம் அறிவோம், எனவே தலித்தியத்தின் பிறப்பிடம் மகாரஷ்டிரமாக இருந்ததில் வியப்பில்லை. இத்தேசத் தலைவருடன்  தலித் என்கிற சொல்லின் பிறப்புக்கு  காரணமானவரென நாம் அறியவரும் மற்றொரு பெயர் ஜோதிராவ் புலே. மகாராஷ்ட்டிரத்தில் சூத்திரர்களில் ஒரு பிரிவினரான மாலி இனத்தவர். எனவே பிறப்பால் உயர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்ட பிற சாதி மக்களால் இவரும் இவரைச் சார்ந்தவர்களும் தினசரி வாழ்க்கையில் அவமதிப்பிற்கு உள்ளாக வேண்டியிருந்தது. விளைவாக,  புலே 1873 ஆம் ஆண்டு நண்பர்களுடன் இணைந்து « சத்ய சோதக் சமாஜ் » எனும் அமைப்பைத்தொடங்கியுள்ளார். அதனூடாகச்  சாதிய ஏற்றத் தாழ்வை நீக்கி, சமத்துவத்தை நிலை நாட்டுவதும், தாழ்tத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களைச் சாதியக் கொடுமைகளிலிருந்து மீட்பதும் அவரது நோக்கம். அதாவது தீண்டாமை உள்ளிட்ட எண்ணற்ற ஒடுக்குமுறைகளை  எதிர்கொண்ட  பட்டியல் சாதி மக்களை ஒன்றிணைக்க « தலித் » என்னும் சொல்லை ஜோதிராவ் புலே உருவாக்கினார்.(பக்கம் 21) என்பது தலித் சொல்லாடல் குறித்து நமக்குக் கிடைக்கும் தகவல்.

ஒடுக்கப்பட்டவர்கள் என்ற பொருளில் மராட்டிய மண்ணில் இச்சொல்லைப் ‘புலே’ உபயோகித்திருப்பினும், இந்தியாவெங்கும் (மகாராஷ்ட்டிர மாநிலம் உட்பட) இவார்த்தை  ஒடுக்கபட்ட மனிதர்களிலும் ஒருபிரிவினரை மட்டுமே அடையாளப்படுத்தும் சாதியச் சொல்லாக  வழக்கில் இருப்பதால், தமிழ் மண்ணில் சாதிகள் உண்டா என்கிற தேடலோடு நூல் தொடங்குகிறது. அந்தணர், வேந்தர், மறவர், வணிகர், உழவர், கொல்லர், தச்சர், பாணர், புலையர், சேவைக்குடியினர், இழிசனர் என தொழில்சார்ந்த சாதியப் பாகுபாடுகள் நம்மிடையே இருந்ந்திருக்கின்றன என்கிற உண்மையை சங்க நூல்களின் துணைகொண்டு ஆசிரியர் உறுதிபடுத்துகிறார். தலித் இயக்கங்களைப் பற்றி பேசுகிறபோது தமிழகத்தில் 1891ல் உருவான திராவிட மகாஜன சபையின் அயோத்திதாசர் மற்றும் பறையர் மகாஜனசபையின் இரட்டைமலை சீனிவாசன் இருவரும் சாதி அரசியல் தலைவர்கள் போல இல்லாமல்  எங்ஙனம் சொல்லால் செயலால் தங்கள் மக்களின் உயர்வுக்காக உண்மைச் சேவகர்களாக உழைத்திருக்கிறார்கள் என்றறிகிறோம்.

நூலில் 17 தலைப்புகள் தலித்தியம் பற்றிய ஒளிக்கதிர்களாக குறுக்கிடுகின்றன : அவை இதற்கு முந்தைய பத்தியொன்றில் தெரிவித்தது போல தலித்திய வரலாற்றில் ஆரம்பித்து தலித்திய இயக்கங்கள் ; மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா தலித் இலக்கியங்கள் ; தலித்திய தன்வரலாற்று நூல்கள் ; தலித்திய அரசியல் ; தலித்திய சிந்தனைகளென்று பயணித்து இறுதியாக தமிழ் தலித்தியம் குறித்து இந்நூல் சற்று  விரிவாகவே அலசுகிறது. தலித்திய இலக்கியத்தின் பண்புகளென இடம்பெறும் குறிப்புகள் முக்கியமானவை. உதாரணத்திற்கு ;

  • « கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்  மக்களுக்கு முக்கியத்துவம் தருகிறது »
  • « வைதீக மரபுக்கும் ஆதிக்க சாதிகளின் பண்பாட்டுக்கும் எதிரானதாகத் தலித் இலக்கியம் படைக்கப்பட்டுள்ளது »
  • « அதிகாரத்தை நேரடியாக கேள்விகேட்கிறது »

      என நிறைகளைப் பட்டியலிடும் அதே நேரத்தில்,

  • « சமூக நீதிகள் அல்லது அடக்குமுறைகள் மீதான சிறுகதைகளை ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் என்ற பேரால் எழுதுவதற்கு மிகவும் முரட்டுத்தனமான, கரடுமுரடான வலிந்து தாக்கும் ஒரு மொழி நடையைப் பயன்படுத்துகிறது ; கவிதையில் இது மிகவும் கூடுதலாகவே இருக்கிறது » எஅன

தலித்திய இலக்கியத்தில் காணும் குறைகளையும் சுட்டத் தவறுவதில்லை.

  • « படித்து பொருளாதாரத்தில் முன்னேறிய தலித் இளைஞர்கள் தங்களை உயர்சாதி மனோபாவத்துடன் கட்டமைத்துக்கொண்டனர்  »

என்கிற விமர்சனத்தையும் காய்த்தல் உவத்தலின்றி திறனாய்வு நூலுக்கான அறத்துடன் முன்வைக்கிறது. ஆகப்பிரச்சினை சாதியத்தில் மட்டுமில்லை, மனிதர் வர்க்கம் சமனிதரிடையே ஏற்றத்தாழ்வைக் கற்பிக்க தம்முடைய சமூகச்  சூழலையொத்து ஏதேனும் ஒரு காரணத்தைத் தேடுகிறதென்பது நமது வாழ்க்கை, காலம் காலமாக உணர்த்தும் உண்மை.  சமத்துவமின்மையின் அடிப்படையில் சூத்திரர்கள், சூத்திரர்கள் அல்லாதோரென பிரித்துணரப்பட்ட இதே இந்தியச் சமூகத்தில் சூத்திரர்களிடையேகூட ஏற்றத்தாழ்வை முன்வைத்து உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுவதையும், அவ்வாறே ஓரிடத்தில் தங்களை உயர்சாதியினராக நினைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களேகூட பிரிதோரிடத்தில் சூத்திரர்களாக நடத்தப்பட்ட  உதாரணங்களும் இருக்கின்றன. பாரிஸ்ட்டர் பட்டம்பெற்ற காந்தியேகூட முதல் வகுப்பில் வெள்ளையர்களுடன் பயணிக்க உரிமையில்லையென மறுக்கப்பட்ட கதை நாம் அறிந்ததுதான்.  அவ்வாறே இந்திய மண்ணில் உயர்சாதியினராக இருந்தாலுங்கூட ஓர் இனவாத ஐரோப்பியனுக்கு, நாம் அனைவருமே தீண்டத்தகாதவர் என்கிற எதார்த்தத்தை உணருவோமேயானால், சக மனிதரிடையே  பேதங்கள் பார்க்கமாட்டோம். ஆக புற உலகில் மட்டுமல்ல மனிதர்களின் அக உலகிலும் மாற்றங்கள் நிகழ்ந்தாலொழிய இதற்கு விமோசனமில்லை,  அதற்காக ஒடுக்கபட்ட மனிதர்கள் அமைதிகாத்திட வேண்டுமென்பதில்லை, பொறுத்தது போதும் பொங்கியெழு என உள்ளம் கட்டளையிடுகிறபோது சொரணையுள்ளவனுக்கு கோபம் வருவது இயற்கை, தலித்திய இலக்கியக்குரலை அப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும்.

      தமிழில் தலித்தியம் நூலாசிரியர், தமது பங்கிற்கு ஒடுக்கப்படும் மனிதர்களுக்கு ஆதரவாக தமது குரலை பதிவுசெய்ய விரும்பி அதனைக் குறையின்றி நிறைவேற்றியும் உள்ளார் எனபதுதான் இந்நூலின் சிறப்பு.

 ———————————————————————————————————————